Monday, December 30, 2019

கற்றதும் பெற்றதும் 2019


1. தியான வகுப்பு அறிமுகம் ஆனது. ஏழெட்டு மாதங்கள் தொடர்ந்து சென்றேன். இப்போது மகள்களுக்கு அதுவே பழக்கமாகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

2. நடைப்பயிற்சி என்பது ஒரு பழக்கமாக உருவானது. முழு உடல் பரிசோதனை என்பது எடுக்க வேண்டியது அவசியம் என்பதனையும் இந்த ஆண்டு உணர்த்தியது.

3. ஆழ்மனதின் ஆற்றல் என்பதனையும், அதன் முழுப்பலன்கள் என்னவென்பதையும் இந்த ஆண்டு தான் பல புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.  இதில் ஆழ்மனதின் அற்புத சக்திகள் என்ற புத்தகத்தைப் பரிந்துரைப்பேன்.


4. குடும்பத்தில் எனக்குப் பின்னால் உள்ள அடுத்த தலைமுறையில் அக்கா மகள்கள் மூவரின் திருமணம், மனைவி அக்கா மகள் திருமணம் என்று அடுத்த தலைமுறை தங்கள் வாழ்க்கையைத் துவங்கியுள்ளனர். நீண்ட நாள் மகள்களின், மனைவியின் கனவாக இருந்து "சென்னையை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும்" என்ற கனவை நிறைவேற்ற முடிந்தது. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியின் அக்கா மகள் சொன்ன வாசகம் இது.  "நான் இங்கு வந்து சில வருடங்கள் முடியப் போகின்றது.  நீங்கள் அத்தனை பேர்களும் குறுக்கும் நெடுக்கும் மொத்தமாக நான்கு நாட்களுக்குள் பார்த்துவிட்டீர்களே?" என்றாராம். 

5. கிண்டில் வாசிப்பு அறிமுகமானது. மொத்தம் 50 புத்தகங்களுக்கு மேல் வாசித்து இருப்பேன்.  குட் ரீட்ஸ் GOOD READS என்ற தளம் நாம் வாசிக்கும் புத்தகங்களைக் கவனமாகச் சேர்த்துக் கொள்கின்றது. பலரின் பார்வைக்கும் கொண்டு செல்கின்றது.

6. கிண்டில் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. ஒரு மணி நேரம் கூட வீணாக்காமல் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டேயிருந்தது.

7. வருடத்தின் இறுதி நாட்கள் எழுத்து என்பது என்னை வேகமாக இயக்கியது. தூக்கம் குறைந்தது. எழுத நினைத்த அனைத்து விசயங்களையும் எழுத முடிந்தது.

8. மதுரை திருமதி ரவி அவர்களின் மரணம் மனதளவில் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கியது.

9. நான் படித்த பள்ளியில் நூற்றாண்டு விழா தொடக்கச் சொற்பொழிவு ஆற்ற வாய்ப்பு கிடைத்ததுள்ளது.

10. பொருளாதார ரீதியாக ஒரு பெரிய கடன் சுமையைத் தீர்க்க முடிந்தது.

11. பத்தாவது படிக்கும் இரண்டு மகள்களில் ஒருவர் டாப்பர் லிஸ்ட் ல் தொடர்ந்து இருக்கின்றார்.  சென்ற ஆண்டு ஒருவர் 97 சதவிகிதம் பெற்றார்.  2020 ஆம் ஆண்டு இவரும் பெறுவார் என்ற நம்பிக்கையுள்ளது.

12. மனைவியுடன் ஒரு நாள் கூடச் சண்டை போடவில்லை. அவரே நம்ப முடியாமல் கலாய்க்கின்றார். மகள் ஒருவர் பெரிய அளவு உள்ள புத்தக வாசிப்பை அனாயசமாக வாசித்து முடித்து விடுகின்றார். என் எழுத்து அவருக்குப் பிடித்துள்ளது. அங்கீகாரம் தந்துள்ளார்.

13. உணவு ருசியை மாற்ற முடியவில்லை. மாற்ற முயலவில்லை.

14. பத்து வருடங்களுக்குப் பின்பு பில்டர் காபி அறிமுகம் ஆனது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன்.  

15. 20 வருடங்களுக்குப் பின்பு பிறந்த ஊரில் முழுமையாக 3 நாட்கள் முழுமையாக இருந்துள்ளேன்.  அம்மாவை இந்த முறை தீபாவளி அன்று திருப்தி செய்துள்ளேன்.

16. அமேசான் கிண்டில் தளத்தில் 21வது புத்தகம் வெளியிட்டுள்ளேன்.  இந்தப் புத்தகம் படிப்பவர்களுக்கு நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருக்கும் என்பது வாசிப்பைப் பிடிக்காத விரும்பாத நண்பர் பிழை திருத்திக் கொடுத்த போது ஆச்சரியமாக இனி நான் தொடர்ந்து வாசிப்பேன் என்ற உறுதியையும் வழங்கியுள்ளார். இந்தப் புத்தகத்தை இரண்டு நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். உங்களுக்குத் தெரிந்தவர் தான். புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கிண்டில் அன் லிமிட் ல் இருப்பவர்கள் இப்போது படிக்க முடியும்.  இலவசமாக படிக்க விரும்புகிறேன் என்பவர்கள் டிசம்பர் 31 மதியம் முதல் ஜனவரி 5 முதல் படிக்க முடியும்.


17. தேவியர் இல்லம் வலைதளத்தில் 950 பதிவுகள் எழுதி முடித்து விட்டேன்.

18. சந்தன மரம் வீரப்பன் தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் எழுதிய புத்தகத்தைக் காசு கொடுத்து  வாங்கினேன்.  ஒவ்வொரு பக்கமும் ஓராயிரம் பொய்கள்.

19. தம்பி குமார் எழுதிய எதிர்சேவை என்ற சிறுகதைத் தொகுப்பைக் காசு கொடுத்து சென்னையிலிருந்து வாங்கினேன். சிறப்பாக குமார் எழுதியதில் சிறப்பான சிறுகதைகளை தொகுத்துள்ளார். ரூபாய் 100.  அனைவரும் ஆதரிக்க வேண்டும்.  பல தளங்களில் எழுதி பரிசு பெற்ற கதைகளும் இதில் உள்ளது. புத்தகத்தில் மொத்த தொகுப்பாக வாசிப்பதே அதன் சுகம் அலாதி தான். 

20. இந்த வருடம் ஃபேஸ்புக்கில் FACE BOOK முழுமையாகச் செயல்பட்டேன். ஆதரவு கிடைத்தது.

21.  கூகுள் ப்ளஸ் GOOGLE PLUS இந்த ஆண்டு மூடப்பட்டது.

22. ஹாட் ஸ்டார் HOT STAR வருடச் சந்தா கட்டி சேர்ந்தேன்.  நிறையப் படங்கள் பார்த்தேன்.

23. நெட்ப்ளிக்ஸ் NETFLIX  மாதா சந்தா கட்டி சேர்ந்தேன். மாதம் 675 ரூபாய் என்றாலும் வியந்து போனேன்.  என்னவொரு தொழில் நுட்பம்.  திரையரங்கம் சென்று பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.  துல்லியம் என்றால் ஆயிரம் மடங்கு ஒளி ஒலி துல்லியம். இந்த வருடம் பல இடங்களில் பலரும் பலவிதங்களில் சொன்ன படம் ஹிந்தியில் ஆர்ட்டிகிள் 15. தமிழிலில் மெட்ரோ (இந்தப் படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது). கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆடம்பர செலவுக்காக தாய்மாய்களின் செயின் அறுக்கும் கும்பலாக மாறுவது)  இரண்டுமே அற்புதம்.

24. 97 சதவிகிதம் தனியார்ப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் வாங்கிய மகளை இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் சேர்த்தேன். இங்கே அதே 97 சதவிகிதம் வாங்கிக் கொண்டிருக்கின்றார். தற்போதைய சமூக வாழ்க்கையை இப்போது தான் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார். தன் ஆளுமையை உணர்ந்துள்ளார். என் கவலை தீர்ந்தது.

25. பத்தாண்டுகளுக்கு முன்பே அக்காவின் மகள்கள் மூலம் தாத்தா ஆகி விட்டேன். இந்த வருடம் மூத்த அக்கா மகள் புதுக்கோட்டை மகாராணியைப் பெற்றுள்ளார்.  ரோஜா இதழ் போலக் குழந்தை இருந்தது.

26. 2014 ஆம் ஆண்டு முதல் என் தளத்தின் அதிதீவிர வாசகியாக இருக்கும் விஜிராம் இப்போது பணிபுரியும் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விடுமுறைக்காகக் கணவருடன் திருப்பூர் வந்து இருந்தார். சந்தித்தேன்.  மகிழ்ச்சி. நான் சமீபகாலத்தில் பார்த்து வியந்த கணவன் மனைவி என்றால் இவர்கள் தான். என்னவொரு பாசம். அந்நியோன்யம்.  புறநானூறு தலைவன் தலைவி பாடல் வரிகள் என் நினைவுக்கு வந்தது.  கணவரும் இப்போது வாசிக்கத் துவங்கியுள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  மகிழ்ச்சி.

27. பொள்ளாச்சியில் ஜமீன் பரம்பரையில் பிறந்து உச்சக்கட்டக் கல்வித் தகுதியை அடைந்தது, கொங்கு மாவட்டத்தில் முக்கியமான பெரும்புள்ளிகளும் சொந்தமாக இருக்கும் குடும்பம். அமெரிக்கா சென்று முனைவர் பட்டம் வாங்கி, தற்போது நாசா வில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அய்யா நா. கணேசன் அவர்களைச் சந்தித்தேன். 1983 ஆம் ஆண்டு முதல் சீனியர் விஞ்ஞானியாக நாசாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். என் எழுத்தின் வாசகர்.  மகிழ்ச்சி.

28. புதிய வீட்டுக்கு மாறி வந்தோம். பாரதி சொன்ன கனவு கண்ட அனைத்து வசதிகளும் உள்ளது.  தினமும் குருவிகள், புறா, மயில்களுக்கு உணவு கொடுப்பது, வேடிக்கை பார்ப்பது, எழுத சிந்தனைகளை உசுப்புவது என்று அதிக மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

29. தமிழகத்தின் பத்தாம் வகுப்பு, குறிப்பாகத் தனியார்ப் பள்ளிகள் அரசுத் தேர்வுக்காக மாணவர்கள் தயார்ப் படுத்தும் நெருக்கடியான சூழலை என் குழந்தைகளை மையமாக வைத்து தற்போதைய தமிழகக் கல்விச்சூழலை, நடுத்தர வர்க்க பெற்றோர்கள் படும் பாடுகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

30. 5 முதலாளிகளின் கதையை இலவசமாகக் கொடுத்ததும் இன்று உலக அளவில் 27வது இடத்தில் வந்து நிற்கின்றது. இந்த தளத்தில் நாம் வென்றுள்ளோம் என்பதே இப்போதைக்கு திருப்தியாக உள்ளது.  இதன் பைரசி நகல் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. அதனை மீறி இந்தச் சாதனை நடந்துள்ளது.

வாழ்த்துகள். மகிழ்ச்சி.




தொடர்ந்து வாசிக்க முடியாதவர்களின் பார்வைக்கு.


படைப்புகளில் நல்லது கெட்டது என்று வித்தியாசம் உள்ளதா?

தலைமுறை இடைவெளி என்றால் என்ன?


திருமதி ரவி - கண்ணீர் அஞ்சலி


ஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி?


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிடைத்துள்ள அங்கீகாரம் தான் பெரிய வெற்றி...!

'பரிவை' சே.குமார் said...

இந்த அங்கீகாரமே மிகப் பெரிய வெற்றி அண்ணா.
அம்மாவுடன் இருக்கும் போட்டோ அழகு பிரேம் பண்ணி வையுங்கள்.
என் சிறுகதை தொகுப்பு குறித்து சொன்னமைக்கு நன்றி.
நல்லதொரு தொகுப்பு 2019
அருமை அண்ணா.

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் , நல்ல தொகுப்பு...அம்மா , ஆரம்பப்பள்ளி , புது வீடு, மகள்களின் படிப்பு, ....இதைவிடவும் 2020 ல் , மேன் மேலும் , வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் .

கிருஷ்ண மூர்த்தி S said...

மகள்களுடைய வாசிப்பு அங்கீகாரம் என்பது ஆயிரம் யானைகளுடைய பலம். மகள்கள் கொண்டாடும் எழுத்துக்கு வாழ்த்துகள் ஜோதி ஜி!

raajsree lkcmb said...

எதிர்வரும் ஆண்டில், மேன் மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான 2019! வரும் வருடங்கள் இன்னும் சிறப்பாக அமையட்டும்....

ஒன்று, இரண்டு என முப்பது வரை - நடுவில் நான்கை (4) காணோம் என்பதை வேறு யாரும் இதுவரை சொல்லவில்லை! :)

ஜோதிஜி said...

அருமை வெங்கட். சேர்த்து விட்டேன்.

ஜோதிஜி said...

உங்கள் தொடர் வாசிப்பு எனக்குப் பெருமையானது. 2020 உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் ஆண்டாக மலர வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

என் எழுத்துப் பணிக்கு மொத்த குடும்பமும் ஏதோவொரு வகையில் உதவுகின்றார்கள். நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் ஆசிர்வாதம். நன்றி சுந்தர்,

ஜோதிஜி said...

எழுத்துப் பணி மூலம் உயர உயர வாழ்த்துகள் குமார். கதைகள் மிக சிறப்பாக வந்துள்ளது.

ஜோதிஜி said...

இதுவும் கடந்து போகும் தனபாலன்.

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்