இந்தியாவில் (மட்டும்) நீங்கள் கவனிக்கும், ஆச்சரியப்படும், அதிசியத்தக்க நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
டெல்லியில் நிர்பயா என்ற புனைப்பெயர் ஒரு புயலைத் தொடங்கி வைத்தது. இப்போது தெலுங்கானா வரைக்கும் வந்து நின்றுள்ளது.
கொடுமை. கொடூரம். கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வுகள் இன்னமும் நின்றபாடில்லை. சூறைக்காற்று, சுனாமி போல பெண்களுக்கு எதிரான வன்முறை அதன் கோரத்தாண்டவத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறது.
இன்னமும் வேலைக்குச் செல்லும், இரவில் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்புக்குரிய அம்சங்கள் இந்தியாவில் உருவாகவில்லை. ஆட்சியாளர்களுக்கு, சட்டத்துறைக்கு, நீதிமன்றங்களுக்கு அது குறித்த அக்கறையும் இல்லை. பொது விவாதங்களில் அதனைப் பற்றி மட்டும் பேசு பொருளாக எடுத்துக் கொள்ள எந்த ஊடகமும் விரும்புவதும் இல்லை.
பத்திரிக்கைகளில் வருவது எண்ணிக்கையில் குறைவு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் நாள்தோறும் இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை முறைப்படி பதிவு செய்தால் அரசாங்கம் தனியாக ஒரு துறை நடத்த வேண்டும். இத்துப் போன, சாகக்கிடக்கும் விஐபி களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து செக்யூரிட்டி ஏஜென்சிகளையும், அதில் பணிபுரிபவர்களையும் இந்தத் துறைக்கு மாற்ற வேண்டியதாக இருக்கும்.
நடக்க வாய்ப்புள்ளதா?
நீதி மன்றங்கள் புதிதாக 500 திறக்க வேண்டியதாக இருக்கும். அப்படி நடந்தால் பெண்களுக்குத் எதிராக நடக்கும் அனைத்து வன்முறைகளும் கட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியும். கயவர்களுக்கு 100 நாட்களுக்குள் சட்டப்படி தண்டனை வழங்கி விட முடியும்.
ஆனால் இதைத் தவிர அரசாங்கம் மற்ற அனைத்தையும் செய்யும். தலைமை நீதிபதி அவர் பங்குக்கு நீதியை மட்டும் நம்ப வேண்டும் என்று மக்களுக்கு வகுப்பு எடுப்பார்.
எதைச் செய்ய வேண்டுமோ அதனை (மட்டும்) செய்யாமல் கூடிக் கும்மியடிப்பது தான் இந்த நாட்டின் ஆகப் பெரிய சாபக்கேடு.
என்னவொன்று ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்து விடுகின்றது. அறிக்கை விட்டு தன்னை நாள்தோறும் லைம் லைட்டில் வைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு தினமும் இது போன்ற ஏதாவது ஒரு செய்தி கிடைத்து விடுகின்றது.
பாதிக்கப்படும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அவர்கள் குடும்பத்துக்கு?
அட போங்க சார்.......
தர்மம் ஒரு நாள் வெல்லும்.
நம்பிக்கை தான் வாழ்க்கை. இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் சோறு இல்லை என்று சொல்லியுள்ளார்கள். நமக்குச் சோறு தான் முக்கியம் என்று நானும் நம்பிவிட்டேன்.
இப்போது எல்லாமே வெறும் செய்தியாக மட்டுமே எனக்குத் தெரிகின்றது. என் வீட்டில் நடக்கும் போது தான் வலியும், வேதனையும் எனக்குப் புரியும்.
()()()()()()()
தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பெண்மணிக்கு நடந்த பாலியல் வல்லுறவு குறித்து, அதன் கொடுமையை வைத்துக் கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சி இதனை வைத்து அரசியல் (இந்தியா கற்பழிப்பு தலைநகரம்) செய்கின்றதே? இதனை எப்படிப் பார்க்க வேண்டும்?
நீங்கள் இதனைப் படிக்கவும். நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள்.
Venugopalan R
சர்வதேச சமூகம் இந்தியாவை ’கற்பழிப்பு தலைநகரம்,’ என்று ஏளனம் செய்வதாக, தனது வயநாடு தொகுதி விஜயத்தின்போது சொற்பொழிவாற்றியுள்ளார் பப்பு. நமக்குத் தெரிந்து வயநாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயநாட்டிலிருந்தும் இப்படியொரு பழிச்சொல் வந்ததாகத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் வாயிலிருந்து உண்மையை எதிர்பார்ப்பது, அறிவாலயத்திலிருந்து மூலப்பத்திரம் வருமென்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும் என்றாலும், கொஞ்சம் பின்னோக்கிப் போனால், காங்கிரஸின் யோக்யதை எப்பேர்ப்பட்டது என்பதையாவது புரிந்து கொள்ளலாம் என்பதாலேயே இப்பதிவு.
ஹைதராபாத் கொடூரம் நிகழ்ந்தபிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ராஜஸ்தானில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் என்ன கூறினார் தெரியுமா?
”சிறார்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்கள் கருணைமனு அளிக்க அனுமதிக்கக் கூடாது” இந்தச் செய்தி எல்லா ஊடகங்களிலும் பரவலாக பரப்பப்பட்டுள்ளதால் சுட்டி தரவேண்டிய நிர்ப்பந்தமில்லை.
சரி, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இப்படி; காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் எப்படியென்பதையும் சற்றுப் பார்ப்போமா?
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பண்ட்டூ…
6 வயது சிறுமியை நாசமாக்கிக் கொன்ற சதீஷ்..
10 வயது சிறுமியைக் கூட்டு வன்புணர்ச்சியில் சிதைத்துக் கொன்ற மோலாய் ராம் மற்றும் சந்தோஷ் யாதவ்…
சிறுமியைக் கெடுக்கிற முயற்சியில் அவளது குடும்பத்தையே கொன்று குவித்த தர்மேந்திர சிங் மற்றும் நரேந்திர யாதவ்…
மேற்கூறிய காமக்கொடூரர்களின் கருணை மனுவைப் பரிசீலித்த புண்ணியம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, காங்கிரஸால் நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீலுக்கு உண்டு.
(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா-20-டிசம்பர்-2012-search: Presidential pardon saved rapists the noose)
அது மட்டுமா?
மறைந்த ஷீலா தீட்சித் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது, தில்லியில் சௌம்யா விஸ்வநாதன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டபோது, ‘அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் ஒரு பெண் தனியாக வெளியே வரலாமா?’ என்று கேட்டவர்தான் ஷீலா தீட்சித். அப்போது, பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். நடந்து கொண்டிருந்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி.
நிர்பயா கொடூர சம்பவம் நினைவிருக்கிறதா? தில்லியையும், இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிப்போட்ட அந்தக் கோர நிகழ்வுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சொன்னது என்ன தெரியுமா?
”ஒப்புக்கொள்கிறேன். உண்மையிலேயே டெல்லிதான் கற்பழிப்புத் தலைநகரம்.”
(ஆதாரம்:இந்தியா டுடே; 21 டிசம்பர் 2012 –search: Sheila Dikshit admits Delhi is rape capital, says 'no courage to meet the gangrape victim, I am ashamed')
ஆனால், பின்னாளில் ‘நிர்பயா சம்பவத்தை ஊதிப் பெரிது படுத்தி விட்டார்கள்,’ என்று சொன்னவரும் இவர்தான். (ஆதாரம்: டைம்ஸ் நௌ-5-மே-2019-search: '2012 Gang-rape was blown out of proportion by media', Former Delhi CM Sheila Dikshit)
பின்னாளில் இதே ஷீலா தீட்சித் ’டெல்லியில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று என் மகளே கருதுகிறாள்’ என்று என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
(ஆதாரம்: என்.டி.டிவி 08-மார்ச்-2013-search: My daughter feels insecure in Delhi: Sheila Dikshit to NDTV)
இந்த லட்சணத்தில்தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இருந்து வந்தது. இவனுகளுக்கெல்லாம் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்றுதான் புரியவில்லை.
(ராகுல் காந்தி மீதே உ.பியில் கூட்டு வன்புணர்ச்சி குற்றச்சாட்டு இருக்கிறது என்பது கூடுதலான செய்தி!)
காந்தியைப் பெயரில் சேர்த்துக்கொண்டிருக்கும் ராகுல் போன்றவர்களெல்லாம், பிரிவினை சமயத்திலும், நவகாளி சமயத்திலும், அஸாம் கலவரத்தின்போதும், நெருக்கடி நிலையின்போதும், சீக்கியர் கலவரத்தின் போதும் எத்தனை பெண்கள் சூறையாடப்பட்டனர் என்ற வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவது, மிச்சம் மீதமிருக்கிற அவர்களது மானத்துக்கு நல்லது.
டாலர் நகரம் (DOLLAR NAGARAM)
(டாலர் நகரம் புத்தகத்திற்கு நண்பர்கள் எழுதிய விமர்சனங்கள் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. சோதித்துப் பார்த்துக் கொள்ளவும். விட்டுப் போயிருந்தால் தகவல் தரவும்)
6 comments:
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் இது போன்ற குற்றங்களை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறார்களே தவிர தீர்வுகளை தருவதில்லை. நிறைய மாற்றங்கள் வேண்டும். சில சட்டங்களில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும் என்பது போன்ற குறிப்புகள் உண்டு என்றாலும் பெரும்பாலும் அதைத் தவிர்க்கவும் அதே சட்டங்களில் ஓட்டைகளுடன் தான் சட்டமே உருவாக்கப்படுகிறது என்பதும் கொடுமை.
என்று தீரும் இந்த கொடுமைகள்? வேதனை.
லோக்பால் எங்கே இருக்கிறது பல் பிடுங்கப்பட்ட பாம்பா பாம்புக்கு பல் பிடுங்கி இருந்தாலும் சீறலாம் பெண்களைபோகப்பொருளாக கருதி வரும் நம்சமுதாயத்தில்இது சாதாரணம் எனும் மனப்பான்மையே நிலவுகிறது ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் ஊடகங்களும் அரசியல் வியாதிகளும் கூக்குரல் எழுப்புவதும்சகஜமாய் போயிற்று திரௌபதி துகில் உரியப்பட்டபோதே வாளாவிருந்தவர்கள்தானே நம் இதிகாச புருஷர்கள் எத்தனை கோடி மக்கள் இருக்கிறா ர்களோ அததனைகோடி அபிப்பிராயங்கள் இருக்கும் எந்த சமானியனும் ந்நிதி வளாகட்தை அணுக பயப்படுவான் ஒரு கேசை இழுத்தடிப்பதில்வல்லவர்கள் நம் நீதித்துறை
கொடுமையை தொடர்ந்து மேம்படுத்துவதில் ஆரம்பம்... இதுவா முடிவு...?
ஆமாம் தர்மம் என்றால் என்ன...?
எதுவும் மாறும். மாறியே ஆக வேண்டும் என்ற சூழல் விரைவில் வரும். மாற்றம் ஒன்றே மாறாதது.
நீதித்துறையின் சிறப்பு என்ன தெரியுமா? நீங்களும் நானும் அவர்களின் நடைமுறைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வைத்திருப்பது. அதுவும் சரியென்று இன்னமும் அப்படியே வைத்திருப்பது.
தர்மம் என்பது யாதெனில் அவர் இறப்புக்குப் பின்னால் பேசக்கூடிய வார்த்தைகள் தான் நமக்கு உணர்த்தும்.
Post a Comment