Showing posts with label டாலர் நகரம். Show all posts
Showing posts with label டாலர் நகரம். Show all posts

Tuesday, February 11, 2014

வல்லமை விமர்சனம்

மதிப்பு​ரை – ரஞ்சனி நாராயணன்

(மூன்றாவது பரிசு வாங்கிய விமர்சனம். அது குறித்து அடுத்த பதிவில்)

டாலர் நகரம்

எழுதியவர்: ஜோதிஜி

பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

விலை: ரூ. 190

பக்கங்கள் : 247

வெளியான ஆண்டு: 2013

Dollar Nagaram

ஆசிரியர் குறிப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள் சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 10,000 + தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

புத்தகம்: டாலர் நகரம்

டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்?  இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.

26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். 

ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?



மின் நூல்


Monday, October 28, 2013

வவ்வால் - தெரியாத உண்மைகள்

மொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே? இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. நம் வலையுலகில் மொய் என்பது பிரசித்தமானது.

சென்ற வாரத்தில் நம் "வீக்கிபீடியா புகழ்" பதிவர் வவ்வால் அவர்கள் என் டாலர் நகரம் புத்தகத்திற்கு ஒரு இலவச விளம்பரத்தை கொடுத்து இருந்தார். அவர் வெளியிட்ட சிறிது நேரத்தில் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் பார்வையில் பட்டு அந்த புத்தகத்திற்கான கிராக்கி பல மடங்கு அதிகரித்தது என்று விகடன் குழுமம் என்னிடம் நடு ராத்திரியில் அழைத்து தெரிவித்தார்கள்.

சமூக வலைதளங்களில் அவர் எழுதிய அந்த விபரத்தினை எடுத்துப் போட்டபிறகு என் புகழ் வானத்தின் எல்லையை தொடப்பார்த்து அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு திருப்பூருக்கே திரும்பி வந்ததை என் தொடர்பில் இருக்கும் அத்தனை நண்பர்களும் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

நமக்கு வரலாறுச் சம்பவங்கள் முக்கியம் தானே?

இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட விபரங்களை இந்த இடத்தில் எழுதி வைப்பது முக்கியமானது என்பதற்காக மட்டுமே சுய (பீத்தல்) புராணம்.

# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க, பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய " என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது,

திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி" எழுதிய டாலர் நகரம் தான் ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!

முழுமையாக விபரம் படிக்க

•••••••••••••••••••••••••••••••••••••••••
இதற்கு என்ன கைமாறு செய்வது என்று யோசித்துக் கொண்டு கடந்த சில நாட்களாக புரண்டு படுத்து தூக்கம் தவிர்த்து, துயரமாய் யோசித்து வவ்வால் குறித்து தேடியலைந்த போது தமிழகத்தின் உண்மையான விக்கிபீடியாவாக இருந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய இந்த விபரங்களை வலைபதிவின் அறிவுச்சுடருக்கு  சமர்பிக்கின்றேன். 

இந்த படம் எடுக்க நடிகை அசின் அவர்களிடம் கால்ஷீட் கேட்ட போது அவர் மறுத்த காரணத்தால் திருப்பூருக்கு வந்த வெளிநாட்டு அம்மிணியை வைத்து எடுத்தோம்.


வௌவால் ஒரு பறவையல்ல. அதுவொரு ராத்திரி மிருகம்.  அப்போது தான் அதற்கு தேவைப்படும் உணவான பூச்சி மற்றும் கொசுக்கள் கிடைக்கின்றன. பகல் நேரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தூங்கும்.  குட்டி போட்டுப் பால் தரும்.  இரண்டு மாதங்கள் வரை குட்டிக்கு அம்மாதன் ஏரோப்ளேன். வௌவாலுக்குக் கண் உண்டு.  ஆனால் கண் பார்வை அதற்கு அதிகம் தேவையில்லை.  இந்த திறமைமிக்க ஜந்து சவுண்ட் ரேஜ்சிங் என்னும் ஒரு முறைப்படி இருட்டில் அமர்ந்து கொள்ளாமல் தன் இஷ்டத்துக்குப் பற்க்கிறது. இதற்கு உதவுவது அல்ட்ரா சவுண்ட்,

அப்படி என்றால்?

மனிதர்களால் ஒலி அலைகளைச் சுமார் என்பது சைக்கிளிருந்து பதினையாயிரம் அல்லது இருபதாயிரம் சைக்கிள்கள் வரை தான் உணர முடியும். (நம்ம ரெண்டு சக்கர சைக்கிள் அல்ல.  மீட்டர், கிலோ மாதிரி ஒலிகளுக்கான அளவு).  பாடகி எஸ்.ஜானகி தன் அதி கீச்சுக்குரலில் பாடினால் சுமார் ஆயிரம், அது கணக்கீடு அளவில் நூறு சைக்கிள் இருக்கலாம்.  எனவே இருபதாயிரத்துக்கு அப்புறம் நம்மால் உணர முடியாது.  ஒரு வௌவாலின் தொண்டை ஒரு விசில் போல. ப்ஹா என்று இயங்கும் போது ஒரு லட்சத்து ஐமதபதாயிரம் சைக்ளி கீச்சில் சவுண்டு வெளிப்படுகிற்து.

நமக்கெல்லாம் கேட்கவே கேட்காது.  தொடர்ந்து அதால் இந்த லட்சத்து சொச்சத்தை ஊதிக் கொண்டிருக்க முடியாது.  அவ்வப்போது விட்டு விட்டு தான் கீறீச்சிட்டுக் கொண்டிருக்கும்.  இதற்காக காற்றழுத்த தேவையைக் கணக்கிட்டுப் பார்த்திருக்கின்றார்கள். தொண்டையில் ஒரு நீராவி பாய்லருக்கு உண்டான அழுத்தமாம்.

பரவாயில்லையல்லவா?

இந்த மாதிரி சின்ன துடிப்பலைகளாக செகண்டு அஞ்சிலிருந்து அறுபது வரை, சில வகை வௌவால்கள் இருநூறு வரை கூட வெளியிடுகிற்து. ஒவ்வொரு துடிப்பும் மிகக் குறைந்த கால அளவே நீடிக்கும்.  ஒரு செகண்டில் ஐயாயிரம் பாகம்.

இப்போது பதினேழு மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால் வௌவால் வெளிப்படுத்தும் அல்ட்ரா ஒளி அதைப் போல அடைந்து திரும்புவதற்குச் சுமார் ஒரு செகண்டில் பத்து பாகம் ஆகும்.  சவுண்டுக்கும் உள்ள நேர வித்தியாசத்திலிருந்து அந்தப் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.  இது தான் வவ்வாலின் சமார்த்தியம்.

ஒரு வவ்வால் சுவரை நோக்கி வேகமாக பறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  முதலில் ஒரு ஒலித் துடிப்பை அனுப்பும்.  சுவரில் பட்டு எதிரொலித்து அதன் காதில் விழுந்தததும் அடுத்த துடிப்புகளின் எண்ணிக்யும் ஜாஸ்தி பண்ணிக் கொண்டே போக்கும்.  ரொம்ப கிட்டத்தில் வந்துவிட்டால் துடிப்பை அனுப்பின மாத்திரத்தில் பதிலும் வந்துவிடும்.  உடனே டேஞ்சர் என்று சட்டென்று பறக்கும் திசையை வெவ்வால் மாற்றிக் கொண்டு விடும்.

ஆகவே வவ்வாலுக்கு காதுதான் கண்

இதை முதலில் கண்டுபிடித்த லாஸரோஸ் பாஸ்லான்ஸானி என்னும் விஞ்ஞானி.  வௌவாலின் இரண்டு காதுகளையும் துணியால் கட்டிப் பறக்கவிட்டார்.அவர்.  தூண் கதவு சுவர் மேலேலெல்லாம் டங்கு டக் கென்று மோதிக் கொண்டு தொப்பென்று விழுந்து விட்டது வவ்வால். 

மிக மிக விந்தையான மிருகம் இது.

ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான ஒல்லியான கம்பிகளைக் குறுக்கும் நெடுக்கும் ஒரு அறையில் கட்டி இருட்டில் அதை விட்டுப் பாருங்கள்.  கம்பி மேல் படாமல் அழகாக ஊடே பறக்கும். வவ்வாலின் ஒலித்துடிப்புகள் ஒரு கொசு (எடை ,002 கிராம்) அது வந்து விட்டால் போதும்.  அது எங்கே போனாலும் கும்மிருட்டிலும் துரத்திச் சாப்பிட்டு விடும். இப்படிப் பறந்து கொண்டே நிமிஷத்துக்கு பத்து கொசுக்கள் பிடிக்கும்.

மீன் சாப்பிடுகிற, பழம் சாப்பிடுகிற, தேன் சாப்பிடுகிற என்ற சமத்து வெவால்களை தவிர ரத்தம் சாப்பிடுகிற வெவாலும் உண்டு. டிராகூலாகவுக்கு ஐடியா கொடுத்தவர் இவர்.

தென் அமெரிக்காவில் உள்ள இந்த வவ்வால் தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவரைக் கடி,த்தால் கடிபட்டவர் துளிக்கூட வலி தெரியாமல் தொடர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருப்பார்.  ரத்தத்தை இது காபி கூல்டிரிங்ஸ் சாப்பிடுவது போல உறிஞ்சிக் குடிப்பதில்லை.  பாயசம் ஸ்டைல்தான். பல்லால் ஒரு சின்னகட்.  பிறகு நாக்கினால் குடிக்க வேண்டியது.  ரத்தம் கெட்டிப்பட்டு விடுமே என்பீர்கள்.  நோ ப்ளிஸ்.  வெவாலின் எச்சிலுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தியுண்டு. தொடர்ச்சியாக ரத்தம் உறையாமல் வந்து கொண்டே இருக்கும்.

••••••••••••••••••••••••••••••

2013தீபாவளி (02.11.2013) பண்டிகையை முன்னிட்டு நம் தமிழ்நாடு அரசு தாயுள்ளத்தோடு எடுத்த இரண்டு நடவடிக்கைகள்.

முதல் படம் சென்னையில் ஷாப்பிங் மாலில் திறக்கப்பட்ட புதிய மதுக்கடையின் படம். இரண்டாவது படத்திற்கு விளக்கம் தேவையில்லை.



ஜனநாயகத்தை போற்றுவோம். வளர்ச்சியை பாராட்டுவோம்.  

Wednesday, February 20, 2013

திரு. ஞாநியின் தகுதிகள் ?



என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தில் வரக்கூடிய ஒரு அத்தியாயத்தின் பெயர் நம்பி கை வை.

காரணம் திரு. ஞாநி அவர்களின் மேல் அந்த அளவுக்கு நான் நம்பிக்கை கொண்டவன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் மீண்டும் நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.  ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் தற்கால சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை ஞாநி அவர்களின் ஓ... பக்கங்கள் தான் எனக்கு பல புரிதல்களை உருவாக்கியது.  மனதளவில் சோர்ந்து போய்க் கிடக்கும் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு அருமருந்தாக உதவியது.

இவர் காட்டிய பாதையைத் தான்  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. இவர் மட்டுமல்ல ஞாநி அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டிய 49 ஓ  (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பல கட்சிகளுக்கும் பல சமயங்களில் உதவியது. பல சமயங்களில் பீதியையும் தந்தது.  இன்று வரையிலும் தந்து கொண்டிருக்கின்றது.

எழுத்துலக பயணத்தில் தொடக்கத்தில் இருக்கும் நான் வலைதளத்தில் இன்று அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வளர்ந்தமைக்கு முக்கிய காரணமே திரு. ஞாநி அவர்களின் ஓ பக்கங்கள் தந்த பாதிப்பு தான்.

ஞாநி என்றால் பலருக்கும் கசப்பு என்றே அர்த்தம் கொள்ளும் அளவிற்கு தனது விமர்சனத்தால் இதயத் துடிப்பை எகிற வைப்பவர். இவர் தளத்தை மட்டும் சரியான முறையில் பராமரிக்க நபர்கள் அமைந்தார்கள் எனில் நிச்சயம் இன்னமும் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும். இவரது விமர்சனங்களைக் கண்டு அரசியல்வாதிகளை விட பத்திரிக்கைகள் தான் அதிக அளவு பயப்படுகின்றது. ஆனால் தனது கொள்கையில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல இவரது எழுத்துப் பயணம் பல பத்திரிக்கைகள் தாண்டி இன்று கல்கியில் ஓ.... பக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றது.

வலையுலகில் நமது சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஏதோவொரு வகையில் சுட்டிக்காட்டி விடும் வினவு தளம் போல எழுத்தாளர்களில் வெகுஜன பத்திரிக்கையுலகில் முக்கிய நிகழ்வுகளை தனது கட்டுரையின் மூலம் தனது எண்ணங்களை எடுத்து வைப்பதில் இவரே முதல் இடத்தில் இருக்கின்றார். படிப்பவருக்கு நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்று மனதிற்குள் எத்தனை தோன்றினாலும் இன்று வரையிலும் எழுத்தில் அறம் சார்ந்த கொள்கையை கடைபிடிப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றார்.

திரு. ஞாநி குறித்த பல விமர்சனங்களை வலையுலகில் நான் படித்து வந்த போதிலும் அதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் அவரை முழுமையாக புரிந்து கொண்டால் நிச்சயம் எழுதுபவர் எண்ணம் மாறக்கூடும்.

ஒரு வட்டத்திற்குள் சிக்காத மனிதர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக எழுத்தின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். ஏராளமான விமர்சனங்கள் எளிதாக கடந்து வந்தவர்.

முழுக்க முழுக்க தனது மனோபலத்தினால் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். 

சொல்லும் செயலும் வெவ்வேறாக வாழும் தற்போதைய சமூகத்தில் தன் மனதில் என்ன தோன்றுகின்றதோஅதையே தனது வாழ்வியல் கொள்கையாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அது மற்றவர்களுக்கு பாதிப்பு தருகின்றது என்பதற்காக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதவர்.  நிச்சயம் ஆதரவு என்ற பெயரில் தனது சுயத்தை தொலைத்து இன்று வரையிலும் நிர்வாணமாக நிற்காதவர்.

திருப்பூரில் தமிழ் இணையத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும், எனது ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை சார்ந்த தொழில் துறை நண்பர்களுக்கு ஞாநியின் வருகை அதிக ஆச்சரியம் அளித்தது.  எனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை கொண்டு போய் கொடுத்த போது தொடக்கத்தில் கிண்டல் அடித்தார்கள். அவராவது உங்கள் விழாவிற்கு வருவதாவது என்றார்கள். விழா மேடையில் ஞாநியைக் கண்ட போது ஆச்சரியப்பட்டார்கள்.

தொழில் வாழ்க்கையில் சூறாவளி போல செயல்படும் அளவிற்கு இதிலும் உன் உழைப்பை காட்டிவிட்டாய் என்று இன்று வரைக்கும் ஆச்சரியத்துடன் பாராட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். . .

காரணம் என் தகுதி எனக்குத் தெரியும். அவர் நிச்சயம் என் எழுத்துக்காக வந்துருக்காவிட்டாலும் பையன் ஏங்கிப் போய்விடுவான். வளரவேண்டிய பையன் என்று மனதில் யோசித்து இருக்கக்கூடும்.  

காரணம் எனக்கு தெரிந்த தெரியாத துறை எதுவென்றாலும் துணிந்து இறங்கி அது குறித்து முடிந்தவரைக்கும் கற்றுக் கொள்ளும் பழக்கம் இன்று வரைக்கும் என்னிடம் உள்ளது.  

என் வலையுலக எழுத்துப் பயணத்தில் புத்தகம் என்ற எண்ணம் உருவாக காரணமாக இருந்தவர் மற்றும் அதன் வழிப்பாதையை எனக்கு உணர்த்திக் காட்டியவர் திருமதி. துளசி கோபால்

மூன்று வருடங்களுக்கு முன்னால் புத்தகம் வடிவில் நமது எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது முதல் நான் அடைந்த ஏமாற்றங்களும், ஏக்க எண்ணங்களை மற்றவர்களை விட அதிகம் உணர்ந்தவர் திருமதி துளசிகோபால் அவர்களே.

எனது வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் எனது முயற்சிகளையும் அவர் நன்றாக உணர்ந்தவர். ஆறுதல் படுத்தி அமைதி வார்த்தைகளால் என்னை வழி நடத்தியவர்.

டாலர் நகரம் வெளி வரப் போகின்றது என்ற முதல் தகவல் அறிக்கை என்ற மின் அஞ்சல் பார்த்து அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி என்பது  எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.

சில கருத்துக்கள் நம்மை ஆறுதல்படுத்தும். பல சமயம் சிலரின் எழுத்துக்கள் நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இழந்து போன ஆற்றலை மேம்படுத்தும்.  அந்த வகையில் ஞாநி அவர்களின் எழுத்துப் பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம்.

இன்று இது போன்ற ஒரு விழாவை நண்பர்கள் ஒத்துழைப்புடன் நான் நடத்த முடியும் என்கிற வரையில் உயர்ந்துள்ளேன். வேண்டாத வேலை என்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தனி மனித முயற்சி என்பதாகவும் இதைப் பார்க்கலாம்.

இதன் மூலம் நான் சார்ந்திருக்கும் தொழிலுக்கு அப்பாற்பட்ட பல விசயங்களை கற்றுள்ளேன். இன்னமும் எனக்கு புரிபடாத ஆச்சரியமான பல விசயங்கள் உள்ளது.  

நிச்சயம் அது குறித்து எழுதுவேன்.

இந்த விழாவில் திரு. ஞாநி அவர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் விழா திட்டமிடத் தொடங்கிய போதே எனக்குள் ஒரு விதமான வேகம் உள்ளுற உருவாகிக் கொண்டேயிருந்தது. அவருடன் உரிமையுடன் பழகும் வாய்ப்பு அமையப் பெற்ற காரணத்தால் அவரைச் சந்திக்க சென்னை  சென்று அழைப்பு விடுத்து அணிந்துரை வேண்டுமென்று கேட்டேன். தல அதியமானும் உடனிருந்தார். .

எழுத்தாளர்கள் பல சமயம் சிந்தனையாளர்களாக இருப்பதில்லை அல்லது இருக்க விரும்புவதில்லை. தனது கடமை என்பதோடு அதை காசாக்கும் கலையில் கவனமாக இருப்பதால் படிப்பவனுக்கு எந்த நம்பகத்தன்மையும் தருவதில்லை. காலப்போக்கில் அது போன்ற எழுத்துக்கள் வெறும் காகிதமாகத்தான் மாறிவிடுகின்றது. ஆனால் ஞாநி அவர்களின் ஒவ்வொரு கட்டுரையும் படிப்பவருக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு திராவக எரிச்சலை உருவாக்கும்.

இயல்பான ஆரோக்கியத்தை பெற்ற மனத்திற்கு இது இயல்பானதாக இருக்கும். ஆமாம் உண்மைத்தானே சொல்லியிருக்கிறார் என்றும் சரியான எண்ணம் தானே? என்று ஏற்றுக் கொள்ள வைக்கும். ஆனால் மனம் முழுக்க வக்ரத்தை சுமந்து கொண்டு வாழ்பவர்களுக்கு கேலியும் கிண்டலும் அவர் குறித்த தனிப்பட்ட விசயங்களை ஆராய்ச்சி செய்து அழுகல் மணத்தை சுவைக்கத் தோன்றுவதாக இருக்கும்.

ஆனால் ஞாநி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட நான் பார்த்த கேட்ட பழகிய வரைக்கும் திறந்த புத்தகம் போலத்தான் இருக்கின்றது. எவருக்கும் உரிமை உண்டு. அவர் நடத்தும் கேணி கூட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். எது குறித்து வேண்டுமானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். வயது வித்தியாசமில்லாது அனைவரையும் அரவணைக்கும் பாங்கு இங்கே சிலருக்குத் தான் இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அந்த வட்டத்திற்குள் சிலருக்கு மட்டுமே அனுமதி.  வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியேறினால் மீண்டும் உள்ளே வரமுடியாது.

புகழ் மயக்கத்தில் தன்னை தன் ரூபத்தை இழந்து தனனுடைய போலியான அடையாளத்தை பதிய வைப்பதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  எழுத்து துறை மட்டுமல்ல. நீங்கள் காணும் எல்லாத்துறையிலும் இப்படித்தான் இருக்கின்றது.

ஆனால் ஞாநிக்கென்று எந்த பாதையும் இல்லை. எல்லா சாலையும் ரோம் நகரத்தை நோக்கி என்பது போல தனது சிந்தனைகள் அனைத்தும் சமூக மாறுதல் குறித்தே இருக்கின்றது என்பதைத்தான் தனது ஒவ்வொரு கட்டுரை வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார்.

வளர்ந்த, பிரபல எழுத்தாளர்கள் கூட முகநூல், வலையுலகம் என்பதை எட்டிக்காய் போல எட்டி நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இல்லாது நவீன தொழில் நுட்பத்தையும் தனது இந்த வயதில் கூட தளராது பயன்படுத்திக் கொண்டு தன்னளவில் தோன்று சிந்தனைகளை நாள் தோறும் இங்கே விதைத்துக் கொண்டு இருக்கின்றார்.

இந்தியாவிற்குள் ஜனநாயகம் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயம் இவரிடம் உண்டு. இவர் முகநூலைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்..

ஞாநி அவர்களிடம் டாலர் நகரம் புத்தகத்திற்கு அணிந்துரை வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கோப்பை அவருக்கு அனுப்பி கேட்ட போது நிச்சயம் தருகின்றேன் என்றார்.  ஆனால் அப்போது புத்தகமாக வர வாய்ப்பில்லாது போய்விட்டது. மூன்று மாதங்களுக்கு முன் புத்தகம் உறுதியாக வெளி வரப் போகின்றது என்று சொல்லி அவருக்கும் மீண்டும் கோப்பு வடிவில் அனுப்பி வைத்து விட்டு காகித வடிவில் அவர் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தேன்.

ஒருவரிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அல்லது அந்த வேலை முடியாத போது தொடர் நினைவூட்டல் மூலம் அந்த காரியம் முடியும் வரைக்கும் அவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பது என் வழக்கம்.   இது திருப்பூரில் உள்ள தொழில் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பழக்கம்.

ஒரு வேளை காரியம் செய்து முடிக்க வேண்டியவர்களின் சூழ்நிலை இடம் தராத போது நானே இந்த வேலையை எடுத்து முடித்து விடுவது என் வாடிக்கை.  ஆனால் திரு. ஞாநி அவர்களிடம் நினைவூட்டலோ, தொடர் துரத்தல் எதுவும் இல்லாது வழக்கத்திற்கு மாறாக அவர் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைதி காத்தேன்.

சென்னை புத்தக கண்காட்சி, அவர் புத்தகங்களை அவரே அவரது சொந்த பதிப்பகத்தில் வெளியிடும் தன்மை, அது குறித்த தொடர் பணிகள், பத்திரிக்கைகளுக்கு அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள், இதற்கு மேலாக அவர் ஆரோக்கியம் திருச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அவரின் தனிப்பட்ட பயணத்திட்டம் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டதோடு கண்களில் ஒரு கனவை சுமந்து கொண்டு தான்  நம்பிக்கையோடு இருந்தேன்.

மனதளவில் நம்பிக்கையை தளரவிடாத ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

நான் கேட்ட அணிந்துரை வந்தபாடில்லை.  லே அவுட் முடியும் அந்த இறுதிக் கட்டம் தீ போல நேரம் என்னைச்சுற்றிலும் பரவி உடம்பே தகித்துக் கொண்டிருந்தது.

எனக்குத் தெரிந்து விட்டது.

அப்போது தான் அவர் குறுஞ்செய்தி வந்தது.  நிச்சயம் நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லியிருந்தார். 

எனக்கு புரிந்துவிட்டது.  

அவர் ஏன் அணிந்துரை தரவில்லை என்பதை இந்த காணொளியில் நீங்க கேட்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

நான் ஏற்கனவே எழுதிய ஈழம் சார்ந்த விவகாரங்களில், அதைப் போல திருப்பூர் தொழில் சார்ந்த விசயங்களில் எனக்கு நேரெதிர் கருத்து கொண்டவர். ஆனாலும் அவரவர் கருத்துக்களுக்கு சுதந்திரம் அளிப்பவர்.  திருப்பூர் குறித்து ஞாநி அவர்களின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சுற்றுச் சூழலை கெடுக்கும் முக்கிய நகரங்களில் முதன்மையான ஊர் திருப்பூர்.

அவர் எழுத்துலக அனுபவத்தை ஒப்பிடும் போது நான் எழுவதெல்லாம் அவருக்கு மிகச் சாதாரண அரிச்சுவடி சமாச்சாரம் தான். ஆனாலும் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது தான் நான் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்பதற்கு உதாரணமாகும்..  

ஆனால் என் தந்தை தாய் போல வாயார மனதார தன் மனதில் வைத்திருந்த என் எழுத்து குறித்து அப்பட்டமாக கூட்டத்தில் பேசி பெருமை சேர்த்த விதம் நான் இறக்கும் தருவாயில் கூட மறக்க இயலாது.

கமல் ஹாசன் விழாவில் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசிய போது அந்த மேடையில் அப்பொழுதே அதைப்பற்றி ஒரு வார்த்தை கமல்ஹாசன் சொன்னார்.

வேறு எவருக்கு இப்படி மனம் வரும் என்றார்.

இது அதிகப்படியான உதாரணமாக உங்களுக்குத் தோன்றும்.  காரணம் இந்த விழா நடக்கும் அந்த நேரம் வரைக்கும் சில காரணங்களால் அதிக மன உளைச்சலோடு இருந்தேன். காரணம் புகழ் என்ற போதை ஒருவரை எப்படி எல்லாம் செயல்பட வைக்கும் என்பதை உணர நடந்த பல சம்பவங்கள் எனக்கு பல பாடங்களை உணர்த்திக் காட்டியது.

ஞாநி என் எழுத்தை பாராட்டிப் பேசிய போது எனக்கும் அந்த சமயத்தில் அப்படித்தான் தோன்றியது.

வேறு எவருக்கும் இது போன்ற வாய்ப்பு அமையுமா? என்று எனக்குத் தெரியவில்லை

 திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டு வரும் திரு. தங்கராசு அவர்கள் (அலைபேசி எண் 98 43 94 40 44 ) வீட்டில் விழா அழைப்பிதழை கொடுக்க நேரிடையாகச் சென்ற போது ஞாநி கலந்து கொள்கின்றரா? என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே ஒருவர் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு மேடையிலேயே வெளுத்து வாங்கியதைச் சொல்லி சிரித்தார்.

நிச்சயம் ஞாநி கலந்து கொண்டால்(?) உங்களின் உண்மையான தகுதி வெளியே தெரியும் என்றார்.

அவர் சொன்னபடிதான் கடைசியில் நடந்தது.

பிரபல்யங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ள நான் ஒரு முக்கிய பிரபல்யத்தை விழாவிற்கு அழைத்து வைத்து என் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளேன். 

என் அக்கா, மாமனார், மனைவி, சகலை, பள்ளிக்கூட நண்பர்கள், வந்திருந்த பார்வையாளர்கள் அத்தனை பேர்களும் திரு. ஞாநி அவர்களின் பேச்சை குறித்து தான் என்னிடம் சிலாகித்துப் பேசினார்கள். சிலர் முரண்டுபட்டு நின்றார்கள். நானும் ஞாநியைப் போல கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவன் . மெட்ராஸ் பவன் சிவகுமார் திருப்பூரில் கலந்து கொண்ட விழாவில் தமிழ்மொழி பற்று குறித்து அவர் கொண்ட மாற்று சிந்தனைகளை தைரியமாக பேசு என்று தான் அவரை வழிமொழிந்தேன். அதே போல ஞாநி எனக்கு குட்டு வைத்ததை ரசிக்கவே செய்தேன்.

குறிப்பாக என் மனைவிக்கு அவர் ஆதரவு தெரிவித்து என்னை ஞாநி ஓங்கி தலையில் குட்டாமல் குட்டு வைத்த விதத்தை மனைவியிடம் வந்து சொன்ன போது நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியார் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம். 

அவர் சொன்ன வாசகம்.

காலை நான்கு மணிக்கு எழுப்பி ஒரு சட்டி நிறைய இட்லி, சாம்பாரை கொடுத்து விட எப்படி மனம் வந்தது. ஏன் வெளியே சாப்பிட மாட்டோமா? என்றார். எனக்கு அவர் உடல் நலம் முக்கியம். அவருக்கு பெண்களுக்கு சுதந்திரம் முக்கியம்.  ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்பது என் பாணி. ஆனால் நான் சொன்ன கருத்தை ஏற்காது விழா முடிந்தும் கூட என்னை துவைத்து எடுத்தார். மனைவியை ரொம்ப பாடுபடுத்தாதே. மூன்று தேவியர்களும் வளர்ந்து உன்னை உண்டு இல்லை என்று படுத்தப் போகின்றார்கள் என்றார்.

ஒரே ஒரு டாலர் நகரம் புத்தகத்தை அவருக்கு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் அவருக்கு நான் பெரிதாக செய்துவிடவில்லை.

எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வாழப் பழகிய அவர் வாழ்க்கையில் எந்த பெரிதான் விருதுகளும் இன்று வரையிலும் அவரைத் தேடி வரவில்லை.

இவரும் தேடிச் செல்லும் நபரும் இல்லை.

விருதுகள் பலவும் இன்று எருதுகள் சுமக்கும் நிலையில் இருப்பதால் சலனமற்ற நதி போல அவர் பயணம் எந்த எதிர்பார்ப்பின்றி போய்க் கொண்டே இருக்கின்றார். .

Sunday, February 17, 2013

டாலர் நகரம் புத்தக விமர்சனம் - மதுரை சம்பத்


நண்பர் ஜோதி கணேசன் அவர்களின் அனுபவ சிதறல்களின் தொகுப்பான "டாலர் நகரம்" புத்தகத்தின் மீதான விமர்சனத்தை பதிவு செய்வதற்கு முன்பாக இதை எழுத இத்தனை நாட்களா என நண்பரின் அன்பு கலந்த கோபத்தை எதிர்பார்த்து முதலில் வணக்கம் சொல்லி பேச துவங்குவது போல் மன்னிக்கவும் என்ற சொல்லோடு எழுத விழைகிறேன்.

ஒரு பேச்சாளரின் வெற்றி என்பது எதிரே அமர்ந்திருப்பவர்களை கவரும் வண்ணம் தடங்கலின்றி பேசுவதோடு இன்னும் சிறிது பேசமாட்டாரா என்று எண்ணும் வண்ணம் விரைவாக முடிப்பதில் இருக்கிறது.  

அதே போல் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது வாசிக்க துவங்கியவுடன் ஒரு சில அத்தியாயங்களையாவது வாசித்துவிட்டு பின்னர்தான் கீழே வைக்கும் வண்ணம் அந்த புத்தகம் அமைவதுதான்.


அந்த வகையில் ஜோதிஜியின் எழுத்து நடை என்பது நிச்சயமாக வாசிப்பவரை சலிப்படையாமல் தன்னோடு பயணிக்க வைத்திருக்கிறது. 

திருப்பூர் எனது சொந்த ஊர்- காரைக்குடி நான் (பழிவாங்கும்) ஊர்மாற்றமாக மாற்றப்பட்டு பாச்சுலர் வாழ்க்கையில் 2 வருடம் பணிபுரிந்த ஊர்.  

இரண்டு ஊர்களும் அதில் தெரிவித்துள்ள பல இடங்களும் அறிமுகமானவை என்பதால், புத்தக நடையோடு பயணிக்க ஒரு ஈர்ப்பை அளித்தது.

உண்மை சுடும் என்ற போதிலும், யதார்த்தங்களை அப்படியே சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும்.  

இன்றும் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிற திருப்பூரில் கால் ஊன்றி வெற்றி பெறுவதற்காக கடந்து வந்த அனுபவங்களை வரிசையாக தொகுத்திருக்கிறார் நண்பர். 

பணம் நிறைய இருந்தும் முறையான திட்டமிடல் இன்மையால் சரிந்து கொண்டிருந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் தாம் பொறுப்பேற்று, தொய்விற்கு காரணமாக இருந்தவர்கள் முதலாளியின் சொந்தங்கள் என்ற போதிலும் அவர்களை அகற்றிவிட்டு லாபத்தை நோக்கி, வெற்றியை நோக்கி இட்டுச் சென்றவுடன் முதலாளியின் மனைவியின் தலையீடு- அதனை தொடர்ந்து தான் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற நேர்ந்தது - என்பதெல்லாம் இன்றளவிலும் பல உழைப்பாளிகளுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.  

இருப்பினும் அவற்றை எழுத்து வடிவில் காட்சிப் படுத்தியிருந்த விதம் தொழிலாளர்களுக்கு பாடம் கற்றுத் தருவது போல் பல முதலாளிகளையும் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வைக்கும்.  

நிச்சயமாக அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி.

எழுத்தாளர் சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்தும் என்ற தலைப்பை முன்னிறுத்தி அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள்- பருத்தி மற்றும் நூல்களின் சந்தையை எப்படி புரட்டிப் போட்டுள்ளது என்பதையும் அது உள்ளாடை தொழிலை எப்படி நெருக்கடிக்குள்ளாக்கி யிருக்கிறது என்பதும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

சாயப்பட்டறைகளின் மீது நீதிமன்ற நெருக்கடி காரணமாக டேப்ரிக்கார்டரில் pause பட்டனை அழுத்தியது போல் தற்காலிகமாக திருப்பூரின் இயக்கங்கள் நின்றுள்ளது என்ற போதிலும், பல்லாண்டு காலமாக முதலாளிகள்- அரசியல்வாதிகள், சாயக் கழிவுகளை வெளியேற்றுவதில், அவற்றை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்து இரசாயன கடுமையை குறைக்க காண்பித்து வந்த அலட்சிய போக்கே இந்த நிலைக்கு காரணம் என்ற சாடலை சரியாக முன்வைத்துள்ளார்.  

திருப்பூரில் உள்ளாடை தொழிலில் இருப்பவர்களைப் பொறுத்தவரை அந்த நகரினிலேயே சாயமேற்றல் நடைபெற்றால்தான் தொழில் தடங்கலின்றி தொடரும் என்கிற சுயநலம் இயல்பாக மேலோங்கி நிற்கும்.  ஆனால் மாறாக ஜோதிஜி அந்த தொழிலை வழிநடத்தும் பணியில் இருந்த போதும் சமூக அக்கறை மேலோங்கி விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்களின் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கும் உணர்வு நிச்சயமாக பாராட்டுக்குரியதே.

திருப்பூரில் 80களில் 90களில் தொழிற்சங்க இயக்கங்கள் பலவற்றை நான் கண்டிருக்கிறேன்.  முறைசார்ந்த தொழில், முறை சாரா தொழில் எதுவாக இருப்பினும் உரிமைக்கு குரல் எழுப்புவது என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.  

அவற்றைப்பற்றி ஜோதிஜி ஒன்றும் எழுதவில்லையே என்பது எனக்கு சற்று குறையாக தெரிந்தது.

மேலும் தொழிலை சார்ந்த, நகரை சார்ந்த தொடர் கட்டுரைக்கு நடுவே குழந்தைகளை ஆங்கில பள்ளிகள் கையாண்ட விதம் பற்றி எழுதியிருந்தது இந்த கட்டுரை தொடரில் சற்று ஒட்டாமல் இருக்கிறதோ என முதலில் எனக்கு தோன்றியது.  

ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் தொழிலாளியாக, சிறு முதலாளியாக, அரசு மற்றும் அரசுத் துறை பணியாளராக யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டம் என்பது குழந்தைகளுக்கு நல்ல கல்வி பயிற்றுவித்து அவர்களை தன்னை விட மேம்படுத்த வேண்டும் என்பதுதான் வாழ்க்கை ஓட்டத்தில் அனைவரின் முக்கிய குறிக்கோள் ஆகும்.  

அந்த வகையில் தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்து, அவற்றை பயன்படுத்தும் போது ஏற்படும் உறவுகளின் நெருக்கம் குறித்து, இன்று பலர் ஆங்கில கல்விக்கு சென்று பெற்றவர்களும் குழந்தைகளும் பிரிந்து நின்று மின்னஞ்சல் தொடர்போடு நின்றுவிடுவதையும் பளிச்சென்று சுட்டிக்காண்பித்திருப்பதால், அது இந்த வாழ்க்கையோடு இணைந்த தொடரில் அவசியமான ஒன்றே என நிறைவாக இருந்தது.

மொத்தத்தில்

                                                          நம்பி கை வைத்து
                                                      நாணயமாய் நடந்து
                                       உண்மையாய் உழைத்தால்
                                உயர்வும் வெற்றியும் நிச்சயம்

என்பதை இந்த அனுபவ தொடர் நிறைவாக சொல்லியிருக்கிறது.  

பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு சந்தைப்படுத்துகிற பிரசுரங்கள் பலவற்றின் நடுவே துணிவோடு இதை பிரசுரமாக கொணர முடிவெடுத்த திரு மலைநாடன், 4தமிழ்மீடியா குழுமத்திற்கு கண்டிப்பாக பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். 

சிறப்பான புத்தக வடிவமைப்பு, தேவையான புகைப்படங்கள் ஆகியவை நன்றாக இருந்தது.  நண்பர் ஜோதி கணேசனின் எழுத்துக்கள் இன்னும் பல வெளிவர வாழ்த்துக்களுடன்

தோழமையுள்ள
ஸ்ரீ.சம்பத்
மதுரை.

டாலர் நகரம் மற்ற புத்தக விமர்சனங்கள்.

(தமிழ்மணம் திரட்டியை உருவாக்கியவர்.)



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் வெட்டிக்காடு ரவி பேசிய 

Tuesday, January 29, 2013

டாலர் நகரம் விழா - நன்றியை காணிக்கையாக்குகின்றேன்


"ஒரு அடியாவது எடுத்து வை."

இது மகாத்மா காந்தியின் பிரபல்யமான வாசகம். 

அடிக்கடி நானே எனக்குச் சொல்லிக் கொள்ளும் வாசகமும் கூட.  

27.1.2013 திருப்பூரில் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா இனிதாக நடந்து முடிந்தது.

இந்த விழா மூலம் நான் நினைத்து வைத்திருந்த அத்தனை விசயங்களும் சிறப்பாக நடந்தது. இது குறித்து விரைவில் விரிவாக எழுதுகின்றேன்..

இந்த பதிவில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. மலைநாடன்
4 tamilmedia.com நிறுவனர் ஆசிரியர்.

நான் வலைதளத்தில் எழுத வந்தது (2007 மே) ஒரு எதிர்பாரத நிகழ்வு.  ஒரு மிகப்பெரிய தோல்வியில் இருந்து மீண்டு வர அப்போது மனதிற்கு மாறுதல் தேவைப்பட்டது.

தமிழ் தட்டெழுத்துப் பயிற்சியென்பது பள்ளி முதல் இன்று வரையிலும் மிக நன்றாக தெரிந்த காரணத்தால் இணைய எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இன்று வரைக்கும் தொடர்கின்றது. 

வருகின்ற 2013 ஜுலை மாதம் ஐந்தாம் ஆண்டு முடியப்போகின்றது.  ஐந்து வயது முடியும் போது முதல் வகுப்பில் அடி எடுத்து வைப்பது போல நானும் டாலர் நகரம் என்ற புத்தகம் எழுதி 4 தமிழ் மீடியா குழுமம் வெளியிட்டுள்ளது.

எழுத்துலகில் என்னைப் பொறுத்தவரையிலும் இது முதல் ஆண்டு.

எனக்கு ஆசிரியராக வாய்த்தவர் திரு. மலைநாடன்.  கண்டிப்பு வாத்தியார்.  இவர் அகராதியில் சமரசம் என்ற வார்த்தையே இல்லை.  தரம் மட்டுமே குறிக்கோள். ஆனால் எப்போதும் வேகத்திலேயே பயணித்துக் கொண்டு இருப்பவனை எதற்கும் அடங்காதவனை தன் வார்த்தைகளால் வசமாக்கி என்னையும் அவர் 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியிடும் மனமே வசப்படு என்பது போல மாற்றியவர். இலக்கணத்திற்குள் அடங்காத என் வார்த்தைகளை, எழுத்துக்களை, வாசிக்க உகந்ததாக மாற்றியவர். 

இன்று நானும் திருப்பூரில் உள்ள தொழில் துறை சார்ந்த நண்பர்களிடம் வேறொரு வகையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றேன் என்பதற்கு இந்த வாத்தியரே காரணம். 

இவரைப் பற்றி இவருடன் உண்டான தொடர்பு குறித்து தனியாக எழுதுகின்றேன்.

கற்றுக் கொண்ட பாடம்  

உழைப்புக்குண்டான பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. ராஜராஜன். சென்னை.

ஈழம் தொடர்பான பதிவுகள் எழுதத் தொடங்கிய போது எனக்கு மின் அஞ்சல் வாயிலாக அறிமுகம் ஆனவர்.  ஈழம் தொடர்பாக எழுதிய முதல் தலைப்பின் போது உருவான அறிமுகம் இன்று வரை நல்ல புரிந்துணர்வோடு தொடர்கின்றது.. அப்போது இவர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது சென்னையில் இருக்கின்றார். 

இவர் குடும்பத்திற்கு சென்னையில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால் மிரண்டு போய்விடுவீர்கள். அது என் அப்பா சம்பாரித்த சொத்து.  என்னுடையது அல்ல என்பார். 

எது குறித்தும் எவரிடமும் சொல்ல மாட்டார்.  தனது கொள்கை ரீதியான சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கின்றார்.  ஆனால் ஆயிரம் மடங்கு நம்பமுடியாத கொள்கை பிடிப்பாளர். கடந்த நான்கு வருடங்களாக கடவுள் என்ற வார்த்தையை விட மனிதன் என்ற வார்த்தையை நாம் அதிகம் நம்புகின்றேன். மிக முக்கிய காரணம் இவர் தான். 

மனிதர்களிடத்தில் எத்தனை குறைகள் இருந்தாலும் நான் சந்திக்கும், பழகும் ஒவ்வொரு மனிதரையும் கடவுளாகத் தான் பார்க்கின்றேன். காரணம் இவர்கள் தான் எனக்கு கற்றுக் கொடுக்கும் கடவுளாக இருக்கின்றார்கள். பல சமயம் சோர்ந்து போன சமயங்களில் என்னை தூக்கி சுமந்து கொண்டு செல்லும் கடவுளாக இருக்கின்றார்கள்.

நான் வலையுலகில் வெற்றியடைந்துள்ளேன் என்பதற்கு இவர் என் மேல் வைத்துள்ள மரியாதை, அக்கறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. தேவியர் இல்லம்  இவருக்கு நிறைய கடமைப்பட்டுள்ளது. நான் இன்று இந்த அளவுக்கு தொழில் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்கு, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றார்.

இவரின் நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்று முயற்சிகளை எடுப்பேன்.  ஆனால் கட்டை போட்டு தடுத்து விட்டு ஒரு நக்கல் சிரிப்பை உதிர்ப்பார்.

நாங்கள் இருவரும் எல்லாவிதங்களிலும் நேரெதிர் கருத்து கொண்டவர்கள்.  சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் இரட்டையர் போல ஏதோவொரு புள்ளியில் ஒவ்வொரு முறையும் இணைந்து கொண்டே இருக்கின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர் எனக்கு செய்த உதவிகளை பட்டியலிட்டால் எவராலும் நம்ப முடியாது. 

டாலர் நகரம் புத்தகம் அச்சாகி திருப்பூர் கொண்டு வந்து சேர்ந்தது வரை, திருப்பூருக்குள் பலருக்கும் கொண்டு சேர்த்தது வரைக்கும் இவரின் உழைப்பு பற்றி வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. டாலர் நகரம் விழாவுக்கென்று சென்னையில் இருந்து கிளம்பி வந்து இந்த விழாவுக்காக உழைத்து விட்டு சென்றவர். 

நான் இவரைப்பற்றி முழுமையாக எழுதினால் சென்னையில் திருப்பூருக்கு வந்து என்னை அடிக்ககூடிய உரிமையுள்ளவர். 

தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்து விட்டு எனக்காக திருப்பூர் வந்தவர்.  

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவை திரு. ராஜராஜனுக்கு காணிக்கையாக்குகின்றேன்.

கற்றுக் கொண்ட பாடம் 

மனிதர்கள் தான் கடவுள் உருவத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வீடு சுரேஷ் குமார்

திருப்பூரில் ஒரு சொந்தமான வடிவமைப்பு (யுவா கிராபிக்ஸ்) என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அசாத்தியமான திறமைசாலி, படைப்பாளி.

விழா அழைப்பிதழ் முதல் வடிவமைப்பு சார்ந்த அத்தனை வேலைகளுடன் மற்றும் விழா மலர் உருவாக்கம் வரைக்கும் உழைத்தவர் தம்பி வீடு சுரேஷ் குமார். 

நாங்கள் உருவாக்கிய விழா மலர் அவசரத்தில் உருவாக்கியது. காரணம் என்னால் இரவு நேரங்களில் மட்டுமே இந்த வேலைகளில் ஈடுபட முடிந்தது. (தனியாக எழுத வேண்டிய விசயங்கள் உள்ளது) விழா மலர் அச்சு வடிவத்தில் உருவாக்கிய பிறகு உருவான சில பிழைகளைக் கூட எங்களுக்கு மாற்ற நேரம்  கிடைக்கவில்லை. யோசிக்கக்கூட அவகாசம் இல்லாது ஓடிக் கொண்டேயிருந்தோம்.

டாலர் நகரம் சிறப்பு விழா மலரை பிடிஎஃப் கோப்பாக மாற்றி இணையத்தில் ஏற்றும் போது அந்த தவறுகளை முடிந்தவரைக்கும் மாற்ற முயற்சித்துள்ளோம். 

வீடு சுரேஷ் குமார் இன்று (29 1 2013) தருகின்றேன் என்று சொல்லி உள்ளார். இவர் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்ற போதிலும் தனது ஆடைத்தொழில் வடிவமைப்பு பணிகளுக்குகிடையே பல நாட்கள் நள்ளிரவு வரை என்னோடு ஒத்துழைத்து இந்த விழாவின் கடைசி நிகழ்வு வரைக்கும் மனம் நோகாமல் காட்டிய ஈடுபாடு என்பது மகத்தானது.

கற்றுக் கொண்ட பாடம்.

வடிமைப்பு சார்ந்த பெரும்பாலான விசயங்களை, மற்றும் கிரியேட்டிவிட்டி என்பதன் முழு அர்த்தத்தையும் நான் கற்றுக் கொண்டேன். ஏற்றுமதி துறை தவிர மற்றொரு புதிய தொழில் என் கைவசம் இருக்கிறது என்ற நம்பிக்கை இன்று எனக்கு உருவாகியுள்ளது.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செண்பகம் மக்கள் சந்தை நிறுவனர் திரு. ஈஸ்வரன் சீனிவாசன்.

இவர் நிறுவனத்தில் பணிபுரிபவர் தம்பி அருண். 

தனது சுய முயற்சியால் ஒட்டி என்ற திரட்டியை உருவாக்கும் அளவிற்கு தொழில் நுட்பத்தில் முன்னேறி வந்து ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றார்.

பல சாதனைகளை சப்தம் இல்லாது செய்து கொண்டு இருக்கின்றார். தம்பி அருண் வாழ்வில் பல உயரங்களை தொடுவார் என்று நம்புகின்றேன்.

மக்கள் சந்தை.காம், ஒட்டி என்ற திரட்டி, உறவோடு,  தொழிற்களம் போன்ற அத்தனையும் திரு சீனிவாசன் அவர்களின் ஆதரவோடு தம்பி அருண் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.   

திருப்பூர் போன்ற ஊரில் ஒரு வணிக (மளிகைப் பொருட்கள் முதல் மற்ற அத்தனை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ள பிரமாண்டமான நிறுவனம் தான் செண்பகம் மக்கள் சந்தை) நிறுவனத்தின் முதலாளி தமிழ் இணையத்தில் கவனம் செலுத்தியதோடு பல நல்ல சமூக காரியங்களை சப்தம் போடாமல் செய்து கொண்டு இருக்கின்றார்.  திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த் தமிழ் பள்ளி என்பது இவர்கள் மூலம் தான் எனக்கு அறிமுகம் ஆனது.

இதைப்பற்றி விரிவாக விரைவில் எழுதுகின்றேன். 

திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் செண்பகம் மக்கள் சந்தை நிறுவனம் வைத்துள்ள (என் புத்தகம் குறித்த) ப்ளெக்ஸ் போர்டு என்பது ஒரு பெரிய பிரபல்யமான எழுத்தாளருக்கு உரிய மரியாதையைப்  போல உருவாக்கியதோடு, டாலர் நகரம் விழா முடியும் வரைக்கும் பல உதவிகளை செய்து இது எங்கள் நிறுவனத்தின் விழா என்று சொல்லி எனக்கு பல உதவிகளை செய்து கொடுத்தார். 

திரு. சீனிவாசன் அவர்களின் துணைவியார் கூட விழாவில் கொடுத்த பழச்சாறு என்பதை தனது நேரிடையான கவனத்தில் எடுத்துக் கொண்டு செய்து கொடுத்து அனுப்பினார் என்பதை கேட்ட போது  மகிழ்ச்சியாக இருந்தது. தனது நிறுவனத்தில் எனது புத்தகத்திற்காக தனியாக ஒரு நபரை போட்டு அவர் மூலம் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

திரு. அருண் அலைபேசி எண் 95 66 66 12 14

திரு. ஈஸ்வரன் சீனிவாசன் அலைபேசி எண் 98 94 86 76 43

கற்றுக் கொண்ட பாடம்.  

மனிதர்களை நேசிக்க கற்றுக் கொண்டால் ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான். செண்பகம் மக்கள் சந்தை நிறுவனத்திற்கு நான் தனிப்பட்ட முறையில் எந்த உதவிகளையும் பெரிய அளவில் செய்து விட வில்லை.  என்னை என் ஆலோசனைகளை பல விதங்களிலும் தம்பி அருணும்திரு. சீனிவாசன் அவர்களும் கேட்பார்கள் என்பது மட்டுமே நான் செய்த உதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நிகழ்காலததில் சிவா.

சொந்தமாக ஒரு ஏற்றுமதி நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இவரும் பல ஆண்டுகளுக்கு முன் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு துறையில் பணியாற்றினோம். ஆனால் அப்போது பெரிய அளவில் தொடர்பு இல்லை.  ஆனால் இணையம் மூலம் எனக்கு அறிமுகம் ஆனது முதல் இன்று வரையிலும் என்னை என் வேகத்தை, என் சிந்தனைகளை, என் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டவர்.  பல சமயங்களில் வேகத்தடையை போடுவதோடு உரிமையோடு தன் மனதில் பட்டதை அப்பட்டமாக எடுத்து வைத்து இவர் தளத்தில் எழுதும் மனம் சார்ந்த கருத்துக்களைப் போல எடுத்துச் சொல்லி என்னை எனக்கே புரியவைப்பார். 

தேவியர் இல்லத்தின் குடும்ப அங்கத்தினர். 

டாலர் நகரம் புத்தக உருவாகத்தின் தொடக்கம் முதல் விழா முடிந்து நண்பர்கள் அறை காலி செய்து சென்றது வரைக்கும் தொடர்ந்து தனது அசுரத்தனமாக உழைப்பை காட்டியவர். டாலர் நகரம் புத்தகத்தில் வந்துள்ள ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த படங்கள் அனைத்தும் இவரின் சொந்த நிறுவனத்தில் எடுத்தது. மிகச் சிறந்த படைப்பாளி. இவரின் அணிந்துரை டாலர் நகரம் புத்தகத்தில் வந்துள்ளது. ஆனால் இவரின் முழுத் திறமையை இவர் இன்னமும் உணரவில்லை என்று அடிக்கடி இவரிடம் கோவித்துக் கொள்வதுண்டு. 

தற்போதுள்ள தொழில் சூறாவளி வாழ்க்கையின் காரணமாக இவரின் உண்மையான பல திறமைகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையிலும் என் பார்வையில் தெளிவான உண்மையான சிந்தனை உள்ள நண்பர்.

கற்றுக் கொண்ட பாடம். 

இவருக்கு நான் செய்ய வேண்டிய நன்றி என்பது கடனாக இருக்கின்றது. 
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இரவு வானம்  தம்பி சுரேஷ். 

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் மனித வளத்துறையில் உயர் பொறுப்பில் இருக்கின்றார்.

அலுவலகம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளின் காரணமாக  விழா நடக்க இருந்த கடைசி இரண்டு நாளில் தான் இவரால் டாலர் நகரம் விழாவில் கவனம் செலுத்த முடிந்தது.  அப்போதும் கூட குடும்பம் சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் இருந்த போதிலும் அதனை ஒத்தி வைத்து விட்டு நான் பார்த்துக் கொள்கின்றேன். நீங்க ஓய்வெடுங்க என்று உரிமையோடு கண்டித்து என்னை வீட்டில் உட்கார வைத்தவர். 

இரண்டு மாதமாக தொடர்ந்து புத்தகத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கடைசி மூன்று நாளில் உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. என் ஆரோக்கிய நிலையின் காரணமாக என்னால் நகர முடியாத சூழ்நிலையில்  தம்பி சுரேஷ் மொத்த வேலைகளையும் தானே எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றினார். 

விழா நடக்க இருந்த கடைசி அந்த இரண்டு நாளிலும் தேங்கிக் கிடந்த மொத்த வேலைகளையும் சூறாவளி போல செயல்பட்டு உழைத்து விழாவின் இறுதி வடிவமைப்புக்கு கொண்டு வந்து முக்கிய பங்காற்றினார். என்னை முழுமையாக புரிந்து கொண்டவர்.  தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினர்.

கற்றுக் கொண்ட பாடம்  

இளைஞர்களை வழிநடத்துவதை விட வழி காட்டி விட்டு ஒதுங்கினால் போதுமானது. அவர்களின் அளப்பறிய திறமையை நாம் கண்டு கொள்ள முடியும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

வெயிலான் ரமேஷ்
தலைவர். சேர்தளம். 

திருப்பூரில் வலைபதிவர்களுக்கு ஒரு அமைப்பை முதன் முதலாக உருவாக்கியவர் வெயிலான் ரமேஷ்.  இவர் முயற்சியால் சேர்தளம் என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.

ஏறக்குறைய தமிழ் இணையத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக எல்லோராலும் அறியப்பட்டவர். நான் வேர்ட்ப்ரஸ் (2007) எழுதத் தொடங்கிய போது என்னை தொடர்பு கொண்டார்.  அப்போது நான் எழுதிய அவசரங்களைக் கூட அசராமல் பாராட்டியவர். திருப்பூரில் இவர் நடத்திய பல விழாக்களுக்கு, நிகழ்வுகளுக்கு எனக்கு அழைப்பு விடுப்பார்.  என்னுடைய சூழ்நிலை என்பது அப்போது எனக்கு சாதகமாக இல்லை. ஒரு முறை ஒரு ஹோட்டலில் நடக்க இருந்த முக்கிய விழா ஒன்றிக்கு நடக்கத் தொடங்கும் அந்த நேரத்தில் கூட என்னை அழைத்து கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று முயற்சித்தவர்.  ஆனால் நான் புறக்கணித்து விட்ட கொடுமையெல்லாம் உண்டு. 

பல முறை இது போன்ற விசயங்களை மனதிற்குள் அசைபோட்டு இவரை படுத்தி எடுத்தியிருக்கிறாம் என்று மனம் வருந்தியது உண்டு. டாலர் நகரம் விழாவின் தொகுப்புரைக்கு இவரைத் தவிர வேறு எவரையும் போட்டு இருந்தால் நிச்சயம் அது சொதப்பலாகத்தான் முடிந்து போயிருக்கும். 

ஆனால் விழா நடக்க இருந்த முதல் நாள் நள்ளிரவு வரைக்கும் நான் பலரையும் வேலை வாங்கியது போல என்னையும் இவர் எழுப்பி இணையத்தில் உட்கார வைத்து வேலை வாங்கியவர். இருவரும் சம வயது என்றாலும் என் மரியாதைக்குரியவர். 

வலையில் அத்தனை சீக்கிரம் எழுத மாட்டார். எழுதினால் அதில் நாம் கற்றுக் கொள்ள ஏதோவொன்றை விட்டு வைத்திருப்பார். ஆனால் தமிழ் இணையத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் அமைதியாக அசராமல் கவனித்துக் கொண்டு இருப்பார்.  இவரிடம் இருந்து இன்று வரை நான் பத்து சதவிகிதம் தான் கற்றுள்ளேன்.

நண்பர்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றபோது மனைவி கொடுத்த விருந்து ஏதும் இல்லாத எங்களுக்கான இயல்பான சாப்பாட்டையே 
பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.

கற்றுக் கொண்ட பாடம். பெருந்தன்மை. 

டாலர் நகரம் விழா அழைப்பிதழை இவருக்கு நேரிடையாக கொண்டுப் போய் சேர்க்காமல் மின் அஞ்சல் வழியே அனுப்பிய போதிலும். இவரும் சேர்தளம் நண்பர்கள் அத்தனை பேர்களும் அதனை பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டு ஒத்துழைத்த விதம் மறக்க முடியாத ஒன்று. பரிசல்காரன் கிருஷ்ணகுமார் சொன்னபடியே விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தையும் (பணம் கொடுத்து) வாங்கிக் கொண்டு என்னை பெருமைபடுத்தினார்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. வரதராஜன் மற்றும் திரு பூபதி.

இவர்கள் இருவரும் என் துறையான ஏற்றுமதி தொழில் சார்ந்த நணபர்கள். ஒரு பெரிய அச்சு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்கள். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் மூலம் திருப்பூரில் நான் இருக்கும் அவினாசி சாலை பக்கம் உள்ள வீடுகளுக்கு புத்தகம் பற்றிய சுவரொட்டிகளை அடித்துக் கொடுத்து உதவினார்கள். இவர்களும் வாய் வழியே டாலர் நகரம் புத்தகம் குறித்துச் சொல்லி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு நான் எழுதுவது தெரியாது. நம்ப மாட்டேன் என்றார்கள்.  இணையத்தில் உள்ள என் தளத்தை திறந்து காட்டிய போது அதன் பிறகே இருவரும் பல விதங்களிலும் பம்பரமாக (மின் தடை கொடுமையைத் தாண்டி) செயல்பட்டு உதவி புரிந்தார்கள். 

புத்தக விற்பனையை தாங்களாகவே எடுத்துக் கொண்டார்கள். எனது சொந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் இவர்களது பங்கு முக்கியமானது.  இன்று வரையிலும் இவர்களின் தொடர்பு என்பது பணத்திற்கு அப்பாற்பட்ட என் வளர்ச்சி சார்ந்த அத்தனை விசயங்களிலும் ஆர்வத்தோடு தங்களால் முடிந்த பங்களிப்பை காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெருமாநல்லூர் சாலையில் 60 அடி சாலை பிரியும் இடத்தில் கரூர் வைஸ்யா வங்கி பின்புறம் இவர்களது நிறுவனம் உள்ளது.

கற்றுக் கொண்ட பாடம்.  

பத்துவருடங்களுக்கு மேல் பல நிறுவனங்கள் நான் மாறிய போதும் நம்மிடம் உள்ள நேர்மையான எண்ணங்கள், குணாதிசியங்கள் நிச்சயம் நல்ல மனிதர்களை நம்மிடம் தக்க வைக்கும்.

திரு. வரதராஜன் அலைபேசி எண்  98 422 08 330

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. விஜய்
(www.techmedia.in) 
நான் முதன் முதலாக கணினி வாங்கியது (12 வருடங்களுக்கு முன்) முதல் இன்று வரை என்னுடைய மிக நல்ல நட்பு ரீதியான தொடர்பில் இருப்பவர்.

இவரின் இயல்பான வளர்ச்சி இன்று டெக் மீடியா என்ற பெரிய ஆலமரம் போன்ற ஒரு கணினி சார்ந்த விற்பனை நிறுவனத்தை உருவாக்க முடிந்துள்ளது. விழாவில் காட்சிகளை நேரிலையாக கொண்டு வந்தவர். (இதில் உள்ள குழப்பங்களைப் பற்றி தனியாக எழுதுகின்றேன்) 

யூ டியூப் ல் காணொளி காட்சியாக கொண்டு வர தற்போது உழைத்துக் கொண்டிருக்கின்றார்.  விரைவில் வெளியிடப்படும். 

திரு. மலைநாடன் இவரைச் சந்தித்து விட்டு சென்ற போது நான் தமிழ்நாட்டில் சந்தித்த மிக நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் என்று என்னிடம் பாராட்டிவிட்டுச் சென்றார்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. முத்து.
பிரகாஷ் நியூஸ் எஜென்ஸி,
பெரியார் காலணி, திருப்பூர்.

இவர் முகத்தை கூட நான் மறந்து விட்டேன். என் மனைவிக்குத்தான் இவரைத் தெரியும். காரணம் நான் இதற்கு முன்னால் இருந்த இரண்டு வீட்டிற்கு செய்தி தாள்களை கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.  அவர் அலைபேசி எண் மட்டும் வைத்திருந்தேன். புத்தகத்தை சந்தைப்படுத்துதல் என்ற நோக்கத்தை பலரையும் அழைத்துப் பேசி விட இவரையும் அழைத்தேன். என்னை மறந்திருப்பார் என்று நினைத்து முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  

இரட்டைக்குழந்தையின் அப்பாதானே? என்று தானே என் ஜாகத்தையே சொல்லி நேரே வரச் சொன்னார். நயா பைசா எதிர்பார்க்காமல், பல விசயங்களை செய்தார். செய்து கொண்டு இருக்கின்றார்.

அவினாசி சாலை பெரியார் காலணி பெட்ரோல் பங்க் அருகே உள்ள சந்தில் இவரின் பிரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி இருக்கிறது. புத்தகங்களை இவர் தொடர்பில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நேரிடையாக கொண்டு போய் சேர்த்துக் கொண்டு இருக்கின்றார்.

அலைபேசி எண்  97 89 477 979

கற்றுக் கொண்ட பாடம்.  

வாழ்வில் எத்தனை பண ரீதியான பிரச்சனைகள் இருந்த போதிலும் 1ந் தேதி முதல் 10ந் தேதிக்குள் முந்தைய மாதம் கொடுக்க வேண்டிய பணத்தை சம்மந்தப்பட்ட அத்தனை பேர்களையும் அழைத்து கொடுத்து விடுவதுண்டு. அல்லது நேரில் கொண்டு போய் கொடுத்து விடுவதுண்டு.  நம்முடைய நேர்மை தான் பல ஆண்டுகள் கழிந்தாலும் பலரின் மனதிலும் நம்மை நிலை நிறுத்தி வைக்கும்.

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. ராஜேஷ்
சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ஆர். ஏ. டவர்ஸ்,
மேட்டுப்பாளையம் பேரூந்து நிறுத்தம், திருப்பூர்.

நான் வாழ்ந்த கூட்டுக்குடித்தன வாழ்க்கையைப் போல சாப்ளின் வாட்ச் ஹவுஸ் என்று டைட்டான் ஷோரூம் நிறுவனத்தை அண்ணன் தம்பி இருவர் நடத்தி வருகின்றனர். இதில் தம்பி ராஜேஷ் என்னுடன் நெருக்கமாய் பழகிக் கொண்டிருப்பவர். 

வேறொரு நண்பர் மூலம் பத்து வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனார்கள்.  இன்று வரையிலும் என் வீழ்ச்சி வளர்ச்சி அனைத்தையும் பார்த்தவர்கள். புத்தகம் குறித்து சொன்ன போது பல உதவிகள் செய்தார்கள். இவர்களுக்கு நான் எழுதுவது சமீப காலமாகத்தான் தெரியும். விழாவில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு இவர்களின் நிறுவனம் வழங்கியது. புத்தக விற்பனையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திரு. ராஜேஷ் அலைபேசி எண்  98 94 777 278

கற்றுக் கொண்ட பாடம்.  

நட்பு என்பது ஒரு முறை கிடைத்துவிட்டால் அதை கடைசி வரைக்கும் காப்பாற்றிக் கொள்வது நமது நடத்தையின் அடிப்படையிலேயே உள்ளது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திருப்பூரில் சேர்தளம், தமிழ்ச்செடி, உறவோடு, தொழிற்களம் போன்ற அமைப்புகளைப் போல இணையத்தில் கழுகு என்றொரு அமைப்பு உள்ளது. அதில் உள்ள தம்பி தேவா இணையத்தில் டாலர் நகரம் விழா குறித்து பரப்புரையை தனது கடமையாக வைத்திருந்தார். ஞானாலயாவிற்காக தனது பங்களிப்பை காட்டிக் கொண்டு இருப்பவர்களின் இவர் முக்கியமானவர்.

தம்பி தேவா அவர்கள் என் முகம் பார்க்காமல் பல உதவிகள் தொடக்கம் முதல் செய்து கொண்டு இருக்கின்றார். ஞானாலயா வலைதளத்தை வெகு ஜனத்திற்கு கொண்டு செலுத்த உதவிய கழுகு குழும நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் என் சார்பாகவும் நிகழ்காலத்தில் சிவா சார்பாகவும் தேவாவுக்கு நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.

கற்றுக் கொண்ட பாடம்  

முகம் தெரியாது, பழக்கம் இருக்காது. நம்மைப் பற்றி முழுமையாகக்கூட தெரியாது. ஆனால் இணக்கமான நட்பு உருவாகும். அது தான் தமிழ் இணையம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

வெட்டிக்காடு ரவி.

நான் இவரின் தளத்தின் தீவிர வாசகன்.  மண்ணின் மைந்தன் என்றே இவருக்கு பெயர் வைத்துள்ளேன்.  சீனா பற்றிய தொடர் எழுதிய போது நான் நினைத்தபடியே அவரின் உண்மையான எழுத்து திறமை வெளியே வரத் தொடங்கியது.  ஒரு சராசரி வாசகனாக அறிமுகம் ஆனேன். வலைச்சரத்தில் இவரை சென்ற முறை அறிமுகம் செய்து வைத்தேன்.  ஆனால் படிப்படியாக இருவரின் நட்பும் ஒரு நல்ல புரிந்துண்ர்வோடு தொடர்ந்து கொண்டே இருந்தது. அலைபேசி பேச்சு மட்டும் தான்.  விழாவில் தான் சந்தித்துக் கொண்டோம். அதன் பிறகு விழா முடிந்த மாலையில் ஹோட்டல் அறையில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இருவரும் சம வயது. நிச்சயம் இவரைப் போன்ற இளைஞர்களால் எதிர்கால இந்தியாவிற்குத் தேவைப்படும் இளம் தொழில் முனைவோர்களை அதிக அளவு உருவாக்க முடியும் என்பது என் எண்ணம். அசாத்தியமான திறமைசாலி. அளவு கடந்த பொறுமைசாலி.  என் விழாவிற்காக பெங்களூரில் இருந்தபடியே நிறைய உதவிகள் வழிகாட்டுதலை செய்துள்ளார்.  

திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் . பின்னல், மகேஸ்வரி புத்தக நிலையத்தில் டாலர் நகரம் கிடைக்கின்றது நானும் ரவியும் புத்தக கண்காட்சி சென்ற போது அங்கு இவரின் நண்பரின் நிறுவனமான நூல் உலகம் (ஜீவா புத்தகாலயம்) என்ற கண்காட்சி கடையில் அங்கிருந்தே நண்பரிடம் பேசி புரிந்துணர்வை உருவாக்கி அந்த கடையில் என் புத்தகத்தை இடம் பெறச் செய்தார்.

அதற்கு மேலாக நான் இந்த விழாவின் மூலம் செய்ய நினைத்த இரண்டு முக்கிய காரியங்களுக்கு தொடக்க விதையை ஊன்றியுள்ளார்.  நிச்சயம் மரமாகும் என்ற நம்பிக்கை உண்டு.  காரணம் கல்விக்கு அப்பாற்பட்டு, பதவிக்கு அப்பாற்பட்டு மனம் முழுக்க சமூகம் சார்ந்த மனிதர்கள் மேல் கொண்ட அக்கறை கொண்ட அதிக சிந்தனைகள் இருப்பதால் அந்த காரியங்கள் ஜெயிக்கும் என்று நம்புகின்றேன்.  

நூறு சதவிகிதம் நேர்மையான மனிதராக இருக்கின்றார்.

நிச்சயம் இவர் குடும்பம் எந்நாளும் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். புதுக்கோட்டை சென்றதும் ஞானாலயா திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் இவரைப் பற்றி பேசிய போது ஒரு வாசகம் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது. 

உங்கள் முகம் கூட தெரியாமல் எத்தனை பெரிய பதவிகளில் இருந்தவர்களை உங்கள் எழுத்துக்கு வாசகராக கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அத்தனை பேர்களும் வந்து கலந்து கொண்டது நிச்சயம் உங்கள் மேல் உள்ள மரியாதையை எனக்கு அதிகமாக்கியது என்றார்.

கற்றுக் கொண்ட பாடம்.  

உன் நண்பர்கள் வழியே உன்னைப் பற்றி அறிய முடியும். உன் எழுத்துக்கள் வழியே உன் நோக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. சங்கர நாராயண்ன். ஒரிஸ்ஸா 
(சொந்த ஊர் திண்டல் ஈரோடு)

இவர் அனுப்பும் படங்களைத்தான் கூகுள் பளஸ் ல் பகிர்ந்து கொண்டு வருகின்றேன். இவரைப்பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டும்.  

ஒடிஷா (தற்போதைய பெயர்) வில் இருந்து கொண்டே எனக்கு வழிகாட்டுதல் போன்ற பல உதவிகளை செய்தவர். 

குறிப்பாக டாக்டர் ஜெ. ஜீவானந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இவர் ஒடிஷா வில் ஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராக இருக்கினறார். என் மேல் அதிக அக்கறை கொண்டவர்.  ஒரே ஒரு முறை மட்டும் இவரை சந்தித்துள்ளேன்.  

கடைசி வரைக்கும் விழா குறித்த அக்கறையை அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தார். விழாவிற்கு முக்கியமான சிலரை வரவழைத்து கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல், தொழில் அதிபர்கள்  சமூக ஆர்வலர்கள், பெரிய இயக்கங்களின் தலைவர்கள் என்று அத்தனை பேர்களுக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். இவர் மூலம் தான் தி ஹிண்டு வில் என்னைப் பற்றி விபரமான விளக்கமான டாலர் நகரம் புத்தகம் குறித்த தகவல் வந்தது.

கற்றுக் கொண்ட பாடம்.  

மனிதர்களின் உண்மையான ஆர்வம் சார்ந்த அன்பு கொண்ட அக்கறை என்பதற்கு வயது என்பது பொருட்டல்ல.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

திரு. கிருஷ்ணகுமார்

விழா மலர் கொண்டு வந்ததில் இவரின் அக்கறை முக்கியமானது. திருப்பூரில் ஒரு நிறுவனத்தின் பங்குதாராக இருக்கின்றார். தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவர். நான் எழுதிய சாயப்பட்டறை சம்மந்தப்பட்ட அத்தனை விசயங்களும் அதன் பலன் அனைத்தும் முறைப்படி இவருக்கே போய்ச் சேர வேண்டும்.  

அத்துடன் டாலர் நகரம் மொத்த புத்தகங்களையும் பெற்று மொத்தமான சந்தைபடுத்தும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருப்பவர்.  பல்லடம் சாலை வித்யாலயம் பேரூந்து நிறுத்தம் அருகே இவர்களது நிறுவனம் உள்ளது.  அங்கேயிருந்தபடியே இவர்கள் தொடர்பில் உள்ள அத்தனை பேர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்து கொண்டிருக்கின்றார்.

இவருடன் பணியாற்றும் திரு. மகேஷ் செய்து கொண்டிருப்பது மகத்தான் உதவி. முகம் சுழிக்காமல் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சொல்லும் நபர்களுக்கு தனது வேலைக்கிடையே கொண்டு போய் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

திரு கிருஷ்ணகுமார் அலைபேசி எண்  944 26 39 703
திரு. மகேஷ்குமார் அலைபேசி எண்  97 89 311 666

கற்றுக் கொண்ட பாடம்.  

பணத்தை தேடும் உலகில் மனத்தை தேடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ராமச்சந்திரன்


இவருக்கு திரு என்று போட்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அது தேவையில்லை என்பதாக வெறுமனே ராமச்சந்திரன் என்று எழுதியுள்ளேன்.  காரணம் இவரும் தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினர். வளைகுடா நாடுகளில் நீண்ட காலம் பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவளத் துறையில் உயர் பதவியில் இருந்தவர். தற்போது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தன் முனைப்பு முகாம் நடத்திக் கொண்டு இருக்கின்றார். இருவரும் சமவயது. தேவியர் இல்லத்தின் நீண்ட நாள் வாசகர். நான் எழுதியது மட்டுமல்ல. வலையில் வந்த முக்கியமான ஆக்கபூர்வமான அத்தனை கட்டுரைகளையும் படித்து விடுவார். வலைதளத்தில் எழுதுவதை விட தற்போது கூகுள் கூட்டலில் மட்டும் அவ்வப்போது வந்து களேபரத்தை உருவாக்கி விட்டுச் செல்வார். 

இவரை பங்காளிங்க அத்தனை பேர்களும் பிகேஆர் என்றும் காக்கி டவுசர் என்றும் அழைப்பார்கள். ஆனால் படத்தில் உள்ளதைப் போல ஒரு புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார். நான் வலையில் எழுதிய பல அரசியல் ரீதியான சமூகம் சந்தப்பட்ட பல கட்டுரைகளுக்கு பின்புலமாக இருந்தவர். அற்புதமான நினைவாற்றல். ஆங்கிலத்தில் ஷார்ப் என்று சொல்லும் வார்த்தைக்கு இவரைத்தான் என்னால் உதாரணம் காட்ட முடியும். புத்தகப்புழு. சங்க இலக்கியம் முதல் சங்கட இலக்கியங்கள் வரைக்கும் மனிதர் பேசத் தொடங்கினால் புள்ளி விபரத்தோடு பொளந்து காட்டுவார்.  

வலையுலகில் ஆலமரத்தின் அத்தனை விழுதுகளுக்கும் இவரை நன்றாகவே தெரியும். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்மைகளை, அவர்களின் நலன்களை, கடந்து வந்த பாதையை, எதிர்மறை நேர்மறை சிந்தனைகளை, பின்புலமாக இருந்து சுயநலத்தோடு இருப்பவர்களை எனக்கு அடையாளம் காட்டி தனது ஆக்கபூர்வமான அறிவை பல சமயங்களில் எனக்கு கடனாக தந்து உதவிக் கொண்டிருப்பவர்.

டாலர் நகரம் என்ற நூலை உருவாக்கியவர் திரு.மலைநாடன். ஆனால் அதை உருவமாக மாற்றியவர் இவர். இன்று பலரின் கைகளில் கொண்டு சேர்க்க பின்புலமாக இருந்தவர் ராமு. 

இவரின் செல்வாக்கு சொல்வாக்கு பற்றி பலருக்கும் தெரியாது. எதையும் வெளியே காட்டிக் கொள்வதில்லை என்பது தான் இன்று வரையிலும் எனக்குள் இருக்கும் தீராத ஆச்சரியம்.

இவர் செய்த உதவி என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது ஒன்று. இதை படித்தவுடன் அழைத்து திட்டுவார். பரவாயில்லை. விழாவிற்கு வேட்டியில் வந்திருந்தார். எனக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வந்துருப்பாங்க போலிருக்கு என்று பயத்தோடு அவர் அழகை சைட் அடித்தேன்.

மீதி அடுத்த பதிவில்,,,,,,,,,