நான் யார்?

"வாழ்க்கை என்பது ரசனையாகப் பார்க்க வேண்டியது. குறுகிய காலத்திற்குள் வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு சம்பவம்" என்று யாராவது உங்களிடம் வந்து சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? வாழ்க்கையை அனுபவிக்கப் பணம் வேண்டுமே? பணம் என்ற காகிதத்தால் கட்டப்படும் வீடு தான் வாழ்க்கை என்பதாக மாறியுள்ளது.

விபரம் தெரிந்த நாட்கள் முதல் அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை, வறுமை, துன்பம் போன்ற எதையும் வாழ்க்கையில் இதுவரையில் பார்த்ததில்லை. பணம் குறித்த வெறித்தனமும் மனதில் தோன்றவும் இல்லை. மக்கள் பெரும்பான்மையாக நம்பும் இந்தப் பணம் சார்ந்த கொள்கையைப் புறக்கணித்தே வந்த காரணத்தால் இன்று வரையிலும் நான் பிறந்த குடும்பமும் சரி, மனைவி வழி சொந்தங்களின் பார்வையிலும் இன்று வரையிலும் "அந்நியன்" போலவே தெரிகின்றேன்.

தொழில் சார்ந்த விசயங்களில் அதிர்ஷ்டம் என்ற தேவதை தூரத்தில் இருந்தபடியே தான் கவனிக்கும். ஆனாலும் தேவையான ஒவ்வொன்றும் அந்தந்த சமயங்களில் கிடைத்துவிடும். வீட்டில் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் கேள்வி கேட்கும் வாழ்க்கை வாழ்ந்தாலும் என்னைக் கேலியாகப் பார்க்கும் வாழ்க்கை அமையாமல் இருந்தது தான் என் அதிர்ஷ்டம்.

நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்தவர்கள், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் 90 சதவிகித மனிதர்கள் எவருமே வெற்றியாளர்களாக வாழ்ந்தது இல்லை. இங்கு நான் வெற்றி என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது அவரவர் அடிப்படைத் தேவைகளைப் போராட்டமின்றி இயல்பாகப் பெறுதல். இதற்கு மேலாகத் தாங்கள் உழைத்த உழைப்புக்கு உண்மையிலேயே கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம். ஆனால் இவை இரண்டுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் 10 சதவிகித மக்களுக்குக் கிடைத்து இருந்தால் கூட அது ஆச்சரியமாக உள்ளது. ஏன் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சூழ்நிலைகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இங்கு தான் "என் கதை" என்ற வார்த்தைகளும், "என்னைப் பற்றி" என்ற சுயதேடலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இங்கு எவரும் தன்னைப் பற்றி முழுமையாக எழுத விரும்புவதில்லை. இதன் காரணமாக முக்கியப் பிரபல்யங்கள் எவருமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த  விரும்புவது இல்லை. ஆனால் தம்பி குமார் என்னிடம் கோரிக்கை வைத்த "அண்ணா உங்களைப் பற்றி எழுதுங்கள் " என்ற வாசகம் அடங்கிய மின் அஞ்சலை வாசித்த போது நேர்மையாக நம்மால் எழுத முடியுமா? என்று யோசித்தே பல வாரங்கள் கடந்து விட்டது.

கடந்த பத்தாண்டுகளாக எழுதும் ஆர்வம் வந்த பிறகே எங்கள் குடும்பப் பின்னணி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன தான் நான் வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டினாலும் ஒவ்வொரு இடத்திலும் என் குணாதிசியங்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதனை மறுக்க முடியாது. இதன் காரணமாகவே என் முந்தைய தலைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
உறவினர்களை ஒவ்வொரு விசேட நிகழ்ச்சியில் சந்திக்கும் போதெல்லாம் நான் பல கேள்விகள் எழுப்புவதுண்டு. ஆனால் எவரும் முழுமையான தகவல்களைப் பரிமாறத் தயாராக இல்லை. காரணம் அவர்களுக்கு அது குறித்த ஆர்வமும் இல்லை. 

வாழ்ந்து மறைந்தவர்கள் எவருமே சிறப்பான செயல்களைச் செய்தவர்களாகவும் இல்லை. இதற்கு மேலாக நம்மவர்களுக்கு வரலாறு என்பது பிடித்தமானதாக இல்லை. கசப்புகள் என்பதனை மறக்கவே விரும்புகின்றார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுக்கப் போராட்டத்துடன் தான் வாழ்ந்து முடித்து மறைந்துள்ளார்கள்.

நவீனங்கள் ஆட்சி செய்யும் தற்காலத்தில் கூட வாசிப்பு ஆர்வம் என்பதே 90 சதவிகித மக்களுக்கு இல்லை என்பதோடு இதெல்லாம் தெரிந்து உனக்கு என்ன ஆகப் போகுகிறது? பிழைக்கிற வழியைப் பார்? என்ற ஒரு பதிலைத்தான் அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற் போலச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றார்கள். 

சரி, நாம் தான் தவறான விதமாக யோசிக்கின்றோம்? இவர்கள் பணம் சார்ந்த விசயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் நினைத்த வசதிகளை அடைந்துள்ளார்களா? என்று கேள்வி கேட்டால் அதிலும் முழுமையான தோல்வியைத் தான் தழுவியுள்ளார்கள். ஆக மொத்தத்தில் பணத்தைப் பற்றி மட்டும் யோசித்து, அதன் பின்னாலே அலைந்து அத்தனை பேர்களும் நிராசையுடன் தான் மறைந்துள்ளார்கள்.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே என்னைப் பற்றி யோசித்த போது என் தலைமுறைகளைப் பற்றி நான் அறிந்த தகவல்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். அதன் பிறகே என் சமகால வாழ்க்கையைக் கோர்த்து வைக்க முடியும் என்று நம்புகின்றேன்.

தாத்தாவின் அப்பா பெயர் ரெங்கசாமி. அவரைப் பற்றி எந்தத் தகவலையும் என்னால் திரட்ட முடியவில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்பட்டேன். அவர் பெயரோ, அவர் பின்புலம் குறித்தே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை என்பதில் இருந்து குடும்பச் சங்கிலி தொடங்குகின்றது. இவர்கள் முந்தைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கீழ் உள்ள மடத்துப்பட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ளார்கள். 

அடிப்படை விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். தாத்தாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரியுடன் மடத்துப்பட்டியில் வாழ்ந்து வந்தாலும் பஞ்சம் பிழைப்பது போல நான் பிறந்த புதுவயல் கிராமத்திற்குத் தாத்தா மட்டும் தன் மனைவியுடன் இடம் பெயர்ந்துள்ளார். இந்தக் கிராமம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. இப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய ஊர் காரைக்குடி.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்து விட்டார். இவருடன் ஒரு வருடம் நெருங்கிப் பழகியுள்ளேன். ஆனால் இவர் எவருடனும் ஒட்ட மாட்டார். இவர் பெயர் சுப்பையா. இவர் என்னுடன் பழகியதற்கு முக்கியக் காரணம் பள்ளிவிட்டு வந்ததும் இவருக்கும் தினந்தோறும் மாலை சிற்றுண்டி கொண்டு போய்க் கொடுக்கச் செல்வேன். அப்போது அவரைத் தவிர மற்ற அத்தனை பேர்களையும் பற்றியும் குற்றச்சாட்டாக வைக்கும் பல விசயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட இனிப்புப் பட்சணத்தை வாங்கித் தின்று விட்டு வந்து விடுவதுண்டு. அப்போது இவர் யார்? இவர் பின்புலம் என்ன? என்பதெல்லாம் கேள்வி கேட்கத் தெரிந்ததில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாம் இல்லை.

கிராம பின்புலத்தைக் கொண்டு வளரும் சிறுவர்களுக்கு என்ன தான் பத்திரிக்கைகள் வாசித்தாலும் வெளியுலகத்திற்கும் அவர்களின் அடிப்படைச் சிந்தனைகளுக்கும் எப்போது ஒரு பெரிய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். அப்படித்தான் என் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரைக்கும் எனக்கும் இருந்தது. நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நெறிப்படுத்த எவரும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல் வாசிப்பு என்பது வெறித்தனமான ஆர்வமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்து முடித்துப் புதிய புத்தகங்கள் எப்போது வரும்? என்று நூலகரிடம் கேட்கும் அளவிற்கு வாசிப்பு என்பது உயிர்மூச்சு போல என்னுள் இருந்தது.

கல்லூரி சென்ற போதும், சென்னையில் ஒரு வருடம் வாழ்ந்து பின்னர்த் திருப்பூர் வந்து சேர்ந்து 25 வருடங்கள் முடிந்த போதும் இன்னமும் அடிப்படைச் சிந்தனைகள் கிராமத்துவாசியாக உள்ளது. இந்த இடத்தில் தான் அவரவர் வாழ்ந்த குடும்பத்தின் தாக்கம் பங்கு பெறுகின்றது.

காரணம் என் இன்றைய குணாதிசியங்கள் எங்கே இருந்து தொடங்கியது என்றால் அடிப்படையில் தாத்தாவின் மரபணுவில் தொடங்கி அப்பாவின் மரபணு ஆழப்பதிந்து இன்று உன்னால் இதற்கு மேல் உன் சுபாவத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்கிற வரைக்கும் வந்து நிற்கின்றது.

தாத்தா புதுவயல் கிராமத்தில் வந்து சேர்ந்து கையில் வைத்திருந்திருந்த பணத்தை வைத்து சிறிய சிறிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். என் பாட்டியைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கு முக்கியக் காரணம் உண்டு. அவர் வாழ்வில் நடந்த சில ஆச்சரியமான சம்பவங்கள். என் தாத்தாவிற்கு அவரின் கடுமையான முயற்சியின் பலனாகப் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளது. 

ஆனால் கடைசியில் மூன்று ஆண் குழந்தைகள் மட்டும் மிஞ்சியது. அதிலும் ஒரு சுவராசியம் என்னவென்றால் முதலாவது, இரண்டாவது குழந்தைகள் குறுகிய காலத்தில் இறந்து விட மூன்றாவதாக இவர்கள் ராமேஸ்வரத்தில் கடலில் நின்று மடிப்பிச்சை ஏந்தி இந்தக் குழந்தை தங்க வேண்டும். உன் பெயரை வைக்கின்றோம் என்று சொல்லி பிறந்தவர் இராமநாதன். இவர் தான் என் அப்பா. அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடக் காசியில் போய் வேண்டு கொள் வைத்துப் பிறந்தவர் சித்தப்பா காசி விஸ்வநான். அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடத் திருவண்ணாமலை போய் வேண்டுகோள் வைத்துப் பிறந்தவர் கடைசிச் சித்தப்பா அண்ணாமலை. மூன்று பேர்களும் கடைசி வரைக்கும் ஆரோக்கியமாக இருந்தார்கள். மூன்று பேர்களும் இப்போது இல்லை.

இந்தச் சுவராசியத்தை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த போது வேறு சில தகவல்கள் கிடைத்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர்கள். பத்து வயதில் ஒரு பெண் குழந்தை இறந்து விட்டது. ஆறு ஆண்கள். ஆறு பெண்கள். இயற்கை சரியாக அதன் வேலையைச் செய்துள்ளது?

அதே போலக் கடைசிச் சித்தப்பாவுக்குப் பத்துக் குழந்தைகள். இவர்கள் இருவரும் தன் அம்மா சொன்ன வாக்கின்படி எக்காரணம் கொண்டு "கருத்தடை மட்டும் செய்யக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் அயராது பாடுபட்டு ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கினார்கள். நடுவில் உள்ள சித்தப்பா மட்டும் "போங்கடா நீங்களும் உங்க சபதமும் " என்று வேறுபக்கம் ஒதுங்கி விட இரண்டு ஆண் குழந்தைகளுடன் தப்பித்து விட்டார்.

இதே போல அம்மாவின் குடும்பத்திலும் மற்றொரு சுவராசியம் உண்டு. அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள். ஆனால் மற்ற அத்தனை பேர்களும் குறுகிய காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டனர். அம்மா ஒருவர் மட்டுமே பிழைத்துள்ளார். பாட்டி (அம்மாவின் அம்மா) பயந்து கொண்டு 16 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் மூத்த அண்ணன் பிறந்த போது அம்மாவின் வயது 18.

இன்று வரையிலும் அம்மாவிடம் (அப்பாவின் அம்மா) பாட்டியைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் பூரிப்போடு பலவற்றைச் சொல்வார். ஆனால் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவர் பற்கள் நறநறக்கும். காரணம் அப்படிப்பட்டவர் தாத்தா?

இன்று சாதி என்ற வார்த்தைகளை வெறுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் இந்தச் சாதி என்ற கட்டமைப்பு பல குணாதிசியங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் செய்யும் தொழில், அவர்கள் சார்ந்த உறவு முறைகளின் பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாய வழிபாட்டு முறைகள் எனக் கலந்து கட்டி குறிப்பிட்ட குணாதிசியங்களை உருவாக்கியதாக இருக்கும். 

இது சரி? தவறு? என்ற வாதத்திற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் செட்டியார் என்ற சமூகம் என்பது எதிலும் முரட்டுத்தனம் காட்டாத அமைதி வாழ்க்கையை விரும்பக்கூடிய சமூகத்தைக் கொண்டவர்கள் கொண்ட வாழும் அமைப்பு. ஆனால் தாத்தாவின் குணம் நேர்மாறானது. அப்பட்டமான முரடன். அதுவும் நான் நினைப்பது நடக்காவிட்டால் திரைப்படங்களில் பார்ப்பது போலக் குறிப்பாகப் பெண்கள் மேல் அதீத வன்முறை பிரயோகம் தான். அடித்தவர் மயக்கம் வந்து சாய்ந்தபிறகே அவர் சாமியாட்டம் நிற்கும். மூன்று பையன்களையும் அப்படித்தான் வளர்த்தார். 

அதற்கு மேலாகத் தன் மனைவியையும் அப்படித்தான் வைத்திருந்தார். இவருக்கு இந்தக் குணாதிசியம் உருவாகக்காரணம் என்ன? என்று அம்மாவிடம் கேட்ட போது "அந்த முரடனைப் பற்றிக் கேட்டு மேலும் மேலும் என் கோபத்தைக் கிளறாதே?" என்று முடித்து விட்டார். தாத்தாவின் முரட்டுத்தனம் எந்த அளவுக்கு நீண்டு இருந்தது தெரியுமா? என் பாட்டி இறப்பதற்கு முன்னால் வாழ்ந்த கடைசி ஐந்து வருடங்கள் மனநலம் பிறழ்ந்து இறக்கும் தருவாயில் தான் இருந்துள்ளார்.

அவர் மனநலம் பிசகி இருந்த போது நான் இரண்டு வருடக்குழந்தை. அம்மா கொல்லைப்புறத்தில் வேறேதோ வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாட்டி என்னைத் தூக்கிக் கொண்டு அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடுவில் என்னைப் படுக்க வைத்துக் கொண்டு ரயில் வந்தவுடன் உனக்குக் காட்டுகின்றேன் என்கிற அளவுக்கு இருந்துள்ளது. அந்தப் பக்கமாக ஆடு மேய்க்க வந்தவர்கள் பாட்டியை இழுத்துக் கொண்டு என்னையும் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துள்ளார்.

இதனையும் தாண்டி பாட்டி கடைசி வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்குக் காரணம் என் அம்மா வரிசையாகப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள். பேரக்குழந்தைகள் மேல் அலாதியான ஈடுபாடு. கணவரிடம் கிடைக்காத அத்தனை பிரியங்களையும் ஒவ்வொரு குழந்தைகள் மேல் திகட்ட திகட்டப் பகிர்ந்துள்ளார். இதே போல அம்மாவின் அம்மாவிற்கும் தனது பேரக்குழந்தைகள் மேல் அதிக ஈடுபாடு. காரணம் இரண்டு பாட்டிகளும் குழந்தைகள் என்பதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுக்கப் பணயம் வைத்திருந்த அபாக்கியசாலிகள்.

தாத்தாவின் குணாதிசியம் அவர் பெற்ற பையன்களில் இரண்டு பேருக்கு வந்து விட்டது. அப்பாவும், இரண்டாவது சித்தப்பாவும் அக்மார்க் முரடன்கள். அவரவர் மனைவிகள் பட்ட பாடுகள் அதுவொரு தனிக்கதை. குறிப்பாக என் அம்மா மூத்த மருமகள் என்ற பெயரில் அவர் உழைத்த உழைப்பு என்பது இன்றைய பெண்கள் உழைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் பத்துப் பெண்கள் செய்ய வேண்டிய வேலைக்குச் சமமாகவே இருக்கும்.

தாத்தா என் கணக்குப்படி அடிப்படைக் கல்வி அதாவது எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருப்பார் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் அப்போது பள்ளி இல்லாத காரணத்தால் அருகே உள்ள கண்டனூரில் தான் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் படித்துள்ளார்கள். மூன்று பேர்களுமே படிப்பில் சுமார் ரகம் தான். பத்தாம் வகுப்பை முடித்து விட்டு ஆளை விட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டார்கள். 

ஆனால் அப்பா தலையெடுத்தபிறகு தான் கடைகள், வயல்கள், சொத்துக்கள் என்று விரிவாக்கம் நடந்ததுள்ளது. 200 மடங்கு உழைப்பாளி. அதே சமயத்தில் தாத்தா போல முரட்டுத்தனம். எடுத்தவுடன் கை வைப்பது தான் அவர் கொள்கை. நான் பள்ளிக்கூடம் முடிக்கும் வரையிலும் பசுமாடு, காளைமாடு, ஆடு என்று பிராணிக்கூட்டம் ஒரு பக்கம், இவர்களைக் கவனிக்க வேலையாட்கள் மற்றொரு பக்கம், இதைத்தவிர வயல்வேலைகளுக்கு ஒரு கூட்டம், கடை வேலைகளுக்கு என்று வேலையாட்கள் கூட்டம். 

இது தவிர வருடந்தோறும் வந்து கொண்டிருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை. கூட்டுக்குடித்தனம். இப்போது யோசித்துப் பார்த்தாலும் அம்மா எப்படி இத்தனைக்கூட்டத்தையும் சமாளித்தார் என்று வியப்பாகவே உள்ளது. காலை, மதியம், இரவு மூன்று வேலையும் குறைந்தபட்சம் 40 பேர்களுக்காவது அடுப்பு எறிந்து கொண்டேயிருக்கும். வெள்ளிக்கிழமை தவிர அத்தனை நாட்களும் அசைவம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தது.

பக்தி, ஒழுக்கம், உழைப்பு இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த கூட்டத்தில் நான் இவர்களின் குணாதிசியத்தில் இருந்து வெளிவர 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. என்னுடன் பிறந்து ஆறு சகோதரிகளும் இன்று வரையிலும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கூடப்பிறந்த ஐந்து சகோதரர்களும் தெளிவான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அடிப்படைப் பிரச்சனைகள் எதுவுமில்லை. அதிகப்படியான ஆசைகளையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை. பட்டதாரிகள், முதுநிலைக்கல்வி என்று அப்பா தன் அடிப்படைக்கடமைகளைத் தெளிவாகவே செய்துள்ளார். 

எங்கள் குடும்பத்தில் மூன்று பேர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் என்னைத் தவிர வேறு எவருமே வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள். வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் என்று பயணப்பட்டதில்லை. உள்ளுருக்குள் தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொண்டவர்கள். வெளிநாடுகள் வரைக்கும் அலைந்து திரிந்த எனக்கு அவர்களின் எண்ணங்கள் ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கே என்னைப் பார்க்கும் போது ஆதங்கமாகத் தெரியும்.

முந்தைய தலைமுறைகள் போலத் தங்கள் உலகம் என்பது தாங்கள் வாழும் பகுதிக்குள்ளேயே முடிந்து விடும் என்று இன்றுவரையிலும் ஆழமாக நம்பிக் கொண்டு இருப்பவர்கள். இந்த ஒரு குணாதிசியமே இவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய அகழியை உருவாக்கிப் பிரித்து வைத்துள்ளது. நான் எவருடனும் நான் அதிகம் ஒட்டுவதில்லை. அதே சமயத்தில் விலகி நிற்பதுமில்லை. தேவைப்படும் சமயங்களில் தலையைக் காட்டிவிட்டு நகர்ந்து வந்து விடுவதுண்டு. எனக்கு முன்னால் என்னைப் பற்றி எவரும் பேசவே பயப்படுவார்கள். காரணம் தாத்தா, அப்பாவிடம் எனக்கு மட்டும் வந்து சேர்ந்த அந்த முரட்டுத்தன ஜீன் மூலக்கூறு.

தாத்தா, அப்பாவைப் பற்றிப் பேசிய போல இரண்டு பாட்டிகள் மற்றும் என் அம்மாவைப் பற்றிச் சொல்ல சில வார்த்தைகள் சில உண்டு. மூன்று பெண்களுமே அக்மார்க் உச்சகட்ட பிடிவாதம் கொண்டவர்கள். கணவன் என்பவன் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவன் என்ற அவர்களின் அடிப்படைக் கொள்கை அடிவாங்க அவர்களின் மாற்ற முடியாத பிடிவாதங்களை ஆண்வர்க்கம் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி உள்ளனர். இயற்கையிலேயே தாய்வழி சமூகமாக இருந்த அமைப்பு இன்று தந்தைவழி ஆதிக்கச் சமூகமாக மாறினாலும் இன்று என் மனைவி வரைக்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவே விரும்புகின்றார்கள்.

மேலே சொன்ன இரண்டு தலைமுறைகளின் மொத்த குணாதிசியங்கள் என்னிடமும் இருந்தது. இவர்கள் தங்கள் ஆளுமையை வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம் மட்டும் தான் காட்டியுள்ளனர். நான் பள்ளி முதல் திருப்பூர் வாழ்க்கையின் முதல் பத்து வருடங்கள் வரைக்கும் வெளி இடங்களிலும் எதற்கும் அஞ்சாத கலகக்காரனாகவே இருந்துள்ளேன். திருப்பூர் வாழ்க்கையில் தொடக்கக் காலத்தில் என் குடும்பத்தைச் சம்மந்தப்படுத்தித் தவறாகப் பேசிய முதலாளியைத் துணி வெட்டப் பயன்படுத்தும் கத்திரி மூலம் குத்தப் பாய்ந்துள்ளேன். உடன் பணிபுரிந்தவர்கள் தாங்கள் செய்த தவறுகளை என் மேல் சுமத்தி தப்பிக்கப் பார்த்த போது வெளுத்து வாங்கியுள்ளேன். நேர்மைக்கு மதிப்பு இல்லாத தொழில் நகர வாழ்க்கையில் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அத்தனை அழுத்தங்களும் உள்ளே வன்முறையாக மறைந்து இருந்ததை உணர்ந்து என்னை மாற்றிக் கொள்ள நிறையவே பிரயாசைப்பட்டுள்ளேன்.

இதன் காரணமாகவே குடும்பம் என்பதும், பெண்களை நமக்குக் கையாளாத் தெரியாது? என்ற பயத்தின் காரணமாகவே திருமணம் என்பது கூட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். அப்பா இறப்பும், குடும்பத்தினர் என்னால் படக்கூடிய துயரங்களும் மனதில் வலியை உருவாக்க 33 வயதில் குடும்பத்தினர் பார்த்து வைத்திருந்த வசதியான அழகான பெண்களைப் புறந்தள்ளி இயல்பான என் குணாதிசியத்தை மாமனாரிடம் தெரியப்படுத்தித் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தேன். என் நான்காவது அக்கா மூலம் பார்த்த வரன் இது. குடும்பத்தினர் இன்னும் சிறப்பான வசதிகளைக் குறிப்பாக அரசு பதவியில் உள்ள பெண்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். அவர்கள் விருப்பங்களை மீறியே செயல்பட்டேன்.

என் விருப்பப்படி, என் கட்டளைப்படி தான் மனைவி இருக்க வேண்டும் என்ற முரட்டுத்தனம் எனக்குப் பல இழப்புகளைத் தனிப்பட்ட பொருளாதார வாழ்க்கையில் உருவாக்கினாலும் இன்று மூன்று குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து விசயங்களும் மற்ற குடும்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எதிர்பார்த்தற்கு மேலே நிறைவாக மனைவி மூலம் கிடைத்துள்ளது.

மனைவியைப் பற்றி எல்லாக் கணவர்களும் அவர் இறந்த பின்பு தான் பிரிவு சோகம் தாங்காமல் எழுத்துலகில் பகிர்கின்றனர். ஆனால் என் மனைவி ஒரு வகையில் பரிதாபப்பட வேண்டிய ஜீவன். காரணம் கடைசிக் குழந்தையாக அவர்கள் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் எது குறித்த அக்கறையும், கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர். என்னுடன் வாழத் தொடங்கியதும், அடுத்தடுத்துக் குழந்தைகள் வந்து சேர உழைக்க வேண்டிய உழைப்பும், அவருக்குள் இருக்கும் இயல்பான சோம்பேறித்தனமும் ஒன்றை ஒன்று கேள்விக் கேட்கத் தொடங்கி விட்டது?

என் மனைவியும் நான் பிறந்த குடும்பத்தைப் போலவே சில விசயங்களில் வாழ விரும்புவர். வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்பவர். உலக நியதிகளை மீறி வாழ விரும்புவனுடன் வாழ்க்கைத் துணையாக இருந்தால் என்ன நடக்கும்? அது தான் திருமணமான தொடக்கத்தில் நடந்தது.

ஆனால் இரட்டைக்குழந்தைகள் மற்றும் அடுத்த வருடமே அடுத்தக் குழந்தை என்று வந்ததும் நிறையவே தடுமாறிவிட அத்தனை இடங்களிலும் நானே தாயுமானவன் போல இருந்தேன். அவரால் சமாளிக்க முடியவில்லை என்ற போதும் அத்தனை பாரங்களையும் நானே சுமந்தேன்.

காரணம் தொழில் வாழ்க்கை அழுத்தங்கள், நேர்மைக்குக் கிடைக்காத மரியாதை, தொழில் நகர மனிதர்கள் உருவாக்கிய வெவ்வேறு விதமான குணாதிசியங்கள் என்று அனைத்தும் என்னை அழுத்திக் கொண்டே இருக்க அனைத்தையும் இனம் பிரிக்கத் தெரியாமல் தோல்விகளையும், இழப்புகளையும் அவர் மேல் காட்ட முட்டல், மோதல் என்று வாழ்க்கை ரணகளமாக மாறியது. குழந்தைகள் வளர வளர என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். இன்று நம்பமுடியாத அதீத திறமைகள் கொண்ட குழந்தைகள் கொடுக்கும் அடியையும், வார்த்தைகளுக்கும் பயந்து கொண்டு அப்பா என்ற என் பதவியைக் காப்பாற்ற அப்பாவியாக மாறிப் போனது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.

கடந்த பத்தாண்டுகளாக முதலாளிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி மற்றும் அதற்கேற்ற வசதிகள். ஆனால் நான் முதலாளியாக மாற முயற்சிக்கவே இல்லை. காரணம் முதல் தலைமுறை அல்லது இரண்டாவது தலைமுறை என்று எவராக இருந்தாலும் தொழிலதிபர் என்பது எளிதானது அல்ல. பணம் சார்ந்த எண்ணங்களில் உள்ள தீவிரம் தான் உங்களை வேலைக்காரனாக அல்லது முதலாளியாக மாற்றுகின்றது என்று உறுதியாக நம்புகின்றேன். நமக்கு எத்தனை ஆசை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இயற்கையான சுபாவம் பலவற்றுக்கு ஒத்துழைக்காது. எனக்குக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதற்குப் பின்னால் உள்ள நிதர்னம் புரிந்தது,

திருப்பூரில் உள்ள அத்தனை முதலாளிகளும் முதல் தலைமுறை தொழிலதிபர்கள். அவர்கள் தலைமுறையில் பணம் ,வசதி வாய்ப்புகள் என்பதனையே இந்தத் தலைமுறையில் தான் பார்க்கின்றனர். ஒரு தொழில் விரிவாக்கத்திற்கு இரண்டு முக்கிய விசயங்கள் தேவை. ஒன்று போட்டியில் வெல்லும் அளவிற்கு நிர்வாகத்திறமை மற்றும் குழுவினர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு. இரண்டாவது தனக்குச் சமமாக எவரையும் வளர விடாமல் தடுப்பது. இரண்டாவது தான் திருப்பூர் தொழிலில் நடந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் கூட இங்கே நேர்மையான முறையில் தொழில் செய்து வளர்ந்தவர்கள் இல்லை. தொழில் கொள்கைகள் என்பது மனித இரத்தங்களைச் சுவைக்கும் மனப்பான்மைக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று புரியத் தொடங்கிய போது என் பண வேகம் குறைந்து மன வேகத்தை என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன்.

மேலும் என் தொழில் வாழ்க்கையில் நிர்வாகம் சார்ந்த விசயங்களில் எதற்குமே அஞ்சாத குணமென்பது ஒவ்வொரு சமயத்திலும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியுள்ளது.

பத்துப் பேர்கள் எதிரியாக மாறி என் வீழ்ச்சிக்கா செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் யாரோ ஒருவர் என்னிடம் உள்ள நேர்மையான குணாதிசியத்தைக் கண்டு உதவியுள்ளனர். அது நம்பமுடியாத அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவியுள்ளது. என்னுடன் பணிபுரிந்தவர்களில் 90 சதவிகித பேர்கள் இப்போது எவருமே திருப்பூரில் இல்லை. அவர்கள் அத்தனை பேர்களும் சமய சந்தர்ப்பங்களை அப்போதைய சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள். ஆனால் சூழ்நிலையை விட ஒழுக்கத்தையும், நேர்மையையும் நம்பிப் பயணப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் காயம்பட்டு வளர்ந்தேன். இது இன்றைய என் அமைதியான வாழ்க்கைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

ஒவ்வொரு சமயத்திலும் ஆயிரம் பேர் கொண்ட தொழிலாளர்கள் கொண்ட அமைப்பை கண்ணசைவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. வாழ்வின் தொடக்கம் முதல் என்னைச் சுற்றி சகோதரிகள் அதிகம் இருந்த காரணத்தால் திருப்பூரில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னுடன் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மேல் மயக்கம் உருவானது இல்லை. இயல்பாகவே பெண்கள் என்னிடம் நெருங்க முடியாத நபராக என் குணாதிசியம் இருந்த காரணத்தால் ஒழுக்கம் சார்ந்த விசயங்கள் என் வளர்ச்சிக்கு உதவியது. காரணம் திருப்பூரில் பெண்கள் என்பது எளிதான விசயமாகும்.

ஆனாலும் நான் எவருடனும் அதிகம் ஒட்டுவதில்லை. காரணம் என் அம்மா என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லும் வாசகத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். "நான் பெற்ற 12 லேயும் அதிகப்படியான திறமைசாலி நீ தாண்டா? வீணாய்ப் போன புத்திசாலி நீ மட்டும் தாண்டா?"

என் அம்மாவுக்கு வாழ்க்கை என்பது நான் சேர்த்து வைத்துள்ள சொத்தில் அடங்கியுள்ளது. ஆனால் எனக்கோ என் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. காரணம் எனக்குப் பின்னால் பிறந்தவர்கள் கூடப் பலவிதமான நோய்களில் தடுமாறுகின்றார்கள். எனக்கே என் பசியை அடக்க முடியாமல் மனைவியின் திட்டுதலை (தற்போது குழந்தைகளின் மிரட்டலை) பொருட்படுத்தாமல் ருசியான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வாழ்கிறேன்.
No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.