Friday, January 27, 2017

அடிச்சுவடுகளை அங்கங்கே பதிக்கவும்

பழைய குப்பைகள் மதிப்புரை 

‘வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முறை வைத்துக் கூட்டிப் பெருக்கிக் கொண்டே இருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில் வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில்குப்பைகள் இருந்து கொண்டே இருக்கும்’ என்று சொல்லும் ஜோதிஜிதன் மனதில் தேங்கிக் கிடக்கும் பழைய குப்பைகளை வெளியே கொட்ட முயன்றிருக்கிறார் இந்த மின்னூல் மூலம்.

அவரது பல கட்டுரைகளை, சில மின்புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.அவரது எழுத்துக்கள் எந்தவிதப் பாராபட்சமுமின்றி அகப்பட்டவர்களை எல்லாம் ‘சுருக் சுருக்’ என்று ஊசியாய் குத்தும். ‘நறுக் நறுக்’ என்று கேள்விகள் கேட்கும். உண்மைகளை அப்பட்டமாய் போட்டு உடைக்கும்.இந்தப் பழைய குப்பைகளில் ‘சுருக் சுருக்’, ‘நறுக் நறுக்’ சற்றுக் குறைவு.ஏனெனில் இது அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிய சுயஅலசல். கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்ததால் தான் இவரும் இப்படி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.நடுநடுவே இதுவரை வெளிக்காட்டாத தனது மென்மையான பகுதியை இந்தப்‘பழைய குப்பைகள்’ மூலம் வெளிக் காட்டியுள்ளார் என்று சொல்லலாம்.

தனது தொழில் நிமித்தம் தான் வாழும் வாழ்க்கையைவிட இவர் மிகவும் ரசிப்பது தனது எழுத்துலக வாழ்க்கையைத் தான். என்னவென்று தெரியாமல் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தவர்,பல்லாயிரக்கணக்கான வாசிப்பாளர்களை, ரசிகர்களைப் பெற்றுத் தந்த தமிழ் இணையத்தை நினைவு கூர்கிறார்,இந்தப் பழைய குப்பையில்.‘ஏதோ ஒரு காலத்தில் நிச்சயம் இறந்துவிடத்தான் போகிறோம். நாம் விட்டுச் செல்வது குடும்பத்திற்கான நலன் என்பதோடு, சமூகத்திற்கான பங்களிப்பு; நாம் இல்லாதபோதும் நம்மைப்பற்றி நம் எழுத்துக்கள் புரிய வைக்கும். வலைப்பதிவு எழுத்தென்பது உணர்ந்தவர்களுக்கு வாழ்நாள் பொக்கிஷம்’என்கிறார்.

எழுத்தின் மூலம் நண்பர்கள் ஆனவர்களிடமிருந்தும், விமரிசனம் என்ற போர்வையில் ‘நீ இப்படித்தான்’ என்று ஒரு முத்திரை பதித்து ஓரம் கட்டப்பார்ப்பவர்களிடமிருந்தும்இவர் கற்றதும், பெற்றதும்இவரைஅடுத்த நிலைக்கு நகர வைத்திருக்கிறது. சமூகம் பற்றிய ஆழமான கட்டுரைகளை எழுத இவருக்குஆவல் பிறந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

‘புதிதாக வலைத்தளங்களில் எழுத ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் எதைப்பற்றி எழுத வருகிறதோ,அதை எழுதலாம். ஆனால் படிப்படியான மாறுதல் இந்த எழுத்துக்களத்தில் நிச்சயம் தேவை. நீங்கள் ரசித்து எழுதும் ஒருவிஷயம் படிப்பவர்களைக் கவராமல் போகலாம். நீங்கள் மேம்போக்காக எழுதுவது மிகுந்த வரவேற்பைப் பெறலாம். இதற்குக் காரணம் படிப்பவனின் வாழ்க்கையை எழுதுபவனால் யூகிக்க இயலாமல்போவதுதான்’ என்று சொல்லும் ஜோதிஜி, சமூகம் சார்ந்து எழுதும்போதுதான் நமது எழுத்துத் தகுதிகள் நமக்குப் புரிய வரும் என்கிறார்.தான் கடந்து வந்த ஒவ்வொரு நிலையையும் பதிவு செய்யும் போதே அப்போதைய சமூகநிலை பற்றிய தனது எண்ணங்களையும் எழுதி வருகிறார்.பல வலைப்பதிவாளர்கள் இதைச் செய்வதில்லை என்பதையும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

வேர்ட்ப்ரஸ் தளத்தில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தவர் முதலில் எழுதியது தனது தந்தையைப் பற்றித்தான். எந்தத் தந்தை தனது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக நினைத்தாரோ அவரைப் பற்றிய எண்ணங்கள் தனது மகள்கள் பிறந்ததும் மாறியதை, ‘கால் நூற்றாண்டு காலம் அவரை வெறுத்துக்கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடித் தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் மீது முதன் முறையாக மரியாதை உருவானது’ என்றுகுறிப்பிடுகிறார்.தனது எழுத்திற்கு மூலகாரணமாக தன் அப்பா வாங்கிப்படித்த ‘தினமணி’யில் வந்த கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளையும், துணுக்குச் செய்திகளையும் சேகரித்து வைத்த தனது வழக்கத்தையும், தனது புத்தகம் வாங்கும் பழக்கத்தையும் சொல்லுகிறார்.ஆறாம் வகுப்பில் ஆரம்பித்த தனது வாசிக்கும் பழக்கம் படிப்படியாக மாறி வந்ததையும் சொல்லுகிறார்.

திருமணமும், தொடர்ந்து பிறந்த இரட்டையர்களும் தனது காட்டாற்று வாழ்க்கையை நதியாக மாற்றியதை சொல்லும்போது நாம் இதுவரை அறிந்திராத மென்மையான மனம் படைத்த ஜோதிஜி நம் முன் தோன்றுகிறார்.அதேமென்மை மாறாமல் தனது சொந்த ஊர் பற்றிச் சொல்லுகிறார். அந்தக் காலத்தில் தன் மனதை நிறைத்த முதல் காதலையும்,‘அவளது’ பெயரையும், தனது பெயரையும் செதுக்கி வைத்த ஆசை மரத்தைப் பற்றியும்ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறார்.

(இன்னொரு புத்தகத்திற்கென்று சேமித்து வைத்திருக்கிறாரோ?)

மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்த தன் அம்மா தனது அமைதியான நடவடிக்கை மூலமே தனது அப்பாவின் முரட்டுத்தனத்திற்கு ஈடு கொடுத்ததைச்சொல்லுகிறார்.அதே அம்மாவிற்கும் தனது குழந்தைகளுக்கும் இடையே நிற்கும் தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிறார். தன் குழந்தைகளின்வாழ்க்கையை தினமும் ரசிக்கும் ஒரு அப்பாவாக தனது நிலையை வெகு சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார். நடுவேஇன்றைய கல்வியின் தரம் பற்றியும் தனது ஆதங்கத்தை வெளியிடத் தவறவில்லை.(தற்போதைய கல்வியின் பலன் –அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று கேட்கும் குழந்தைகள்)

உலகத்தை உணர வைத்த காலங்களை ஒவ்வொன்றாக நினைவிற்குக் கொண்டு வந்து சொல்லிக்கொண்டே போகிறார்.தான் பிறந்த செட்டிநாடு, அதன்மக்கள் என்று ஆரம்பித்து வள்ளல் அழகப்பருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறார்.

தான் செய்த ரயில் பயணம் தன் ஊர் ரயில்வே ஸ்டேஷனை, அதன் நீண்ட நடைமேடையை(‘அதுதான்என்போதிமரம்’) நினைவுபடுத்த அதைப்பற்றியும் சொல்லுகிறார். ஒவ்வொரு  இடமும் காலப்போக்கில்  உருமாறியிருந்த போதிலும் இவரது நினைவுகள் அங்கங்கே நிலைத்திருப்பதை நாம் உணரமுடிகிறது.

அரசியல், விளம்பரங்கள் என்று தன் பாணியில் வெளுத்து வாங்குபவர் சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை என்று களம் புகுகிறார். 2 களங்களில் தான் கண்டதை, கேட்டதை எழுதியவர், மூன்றாவதாக தன் குழந்தைகளுடன் சாதி, மதம் பற்றிய தனது உரையாடல்களை குறிப்பிடுகிறார். தனது கருத்துக்களுடன் தலைவர்கள் சாதிப் பெயரில் விளையாடும் விளையாட்டுக்களையும் தோலுரித்துக் காட்டுகிறார். அங்கெல்லாம் நமக்குத் தெரிவது ஏற்கனவே நாம் அவரது வலைத்தளங்களில் பார்த்த ஜோதிஜி தான்.

அடுத்ததாக இவர் ஆன்மிகம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார். திருவாவடுதுறை ஆசானுடன் தான் செய்த பயணம்; பயணத்தின் முடிவில் வந்து சேர்ந்த மடம்; அதன் பூர்வீக வரலாறு (இங்கும் இன்னொரு புத்தகம் தேறும்!) இப்போதைய அதன் நிலைமை, எதிர்கால நிலைமை எல்லாவற்றையும் சொல்லுகிறார். இதன் தொடர்ச்சியாக ஆன்மீகத்தைப் பற்றி இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்களும் உண்டு. முதல் சில அத்தியாயங்களில் இருந்த மென்மை இங்கு அடியோடு மாறி தடாலடியாகப் பேச ஆரம்பிக்கிறார் ஜோதிஜி.

கடைசி பகுதி கேள்வி-பதிலாக அமைந்திருக்கிறது.

மொத்தப் பழைய குப்பைகளையும் கிளறிப் பார்த்த பின் – மன்னிக்கவும் – படித்துப் பார்த்தபின் மனதில் வந்த எண்ணங்கள்:

1. கரடுமுரடர் என்ற பட்டம் வாங்கிய ஜோதிஜிக்கு மென்மையான பக்கமும் உண்டு.

2. எங்கு போனாலும் அங்கிருக்கும் மனிதர்களையும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் கூர்ந்து கவனித்து எழுதும் எழுத்தாளராக தன்னை இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இவரது சமூக அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது.

3. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போகும்போது தான் கற்றுக் கொண்டு போவதுடன் தன் அடிச்சுவடுகளை அங்கங்கே பதிக்கவும் தவறுவதில்லை.

4. தான் நிறைய சிந்திப்பதுடன், நம்மையும் அதிகமாகச் சிந்திக்க வைப்பது இவரது சிறப்பு என்று சொல்லலாம்.

5. எத்தனை உயர்ந்த நிலைக்குப் போனாலும் தனது முதலடியை மறக்காத மனிதராக இருப்பதால் தான் இப்படி எல்லாவற்றையும் பற்றி சமமாக எழுத முடிகிறது என்று தோன்றுகிறது.

திரு ஜோதிஜிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

திருமதி ரஞ்சனி நாராயணன்
பெங்களூர்.







பழைய குப்பைகள் (மின் நூல்)


இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்


ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்  (51.356)

தமிழர் தேசம்  (16.652)

காரைக்குடி உணவகம் (23.713)

பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)

வெள்ளை அடிமைகள்  (16. 943)



Tuesday, January 24, 2017

குப்பைகள் வாழ்வளிக்கும்

அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையற்றது என்ற வகையில் பலவற்றைக் குப்பையில் கொண்டு போய் கொட்டுகிறோம். அதிலும் சூழலியல் ஆர்வலர்கள் மக்கும் பொருட்களைத் தனியாக, நெகிழி பொருட்களைத் தனியாகப் போடுங்கள் எனப் பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே கொட்டுகிறோம். அத்தகைய குப்பைகளிலிருந்து நெகிழி பொருட்களை, உலோகச் சிதிலங்களை, பாட்டில்களை எனப் பொருட்களைப் பொறுக்கிச் சென்று காசாக்குகின்றனர். ஆகக் குப்பை கூடப் பலருக்கு வாழ்வளிக்கிறது. 

ஆனால் அனுபவ பாடங்களைத் தொகுப்பாகப் பழைய குப்பைகள் என நண்பர் ஜோதிஜி ஏன் வகைப்படுத்தினார் என்று புரியவில்லை. அந்தக் குப்பைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல ரத்தினங்கள், மதிப்புமிக்க ஆலோசனைகள், வாழ்வியல் கருத்துக்கள் ஏராளமாக இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். 

ஏறக்குறைய 7 ஆண்டுகளில் 700 பதிவுகளைக் கடந்து நிற்கின்றார் நண்பர். முன்னுரையிலும் முதல் அத்தியாயத்திலும் ஒரு மாய எண்ணைக் குறிப்பிடுகின்றார். 

அரசியல் அரங்கில் அனைவராலும் மறக்க முடியாத எண் அது. 1,70,000 + பார்வையாளர்களை மின்னூல் வாயிலாகத் தனது கருத்துக்கள் சென்றடைந்துள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளார். நிச்சயமாக இந்த எண் சாதனையின் உச்சம் என்பதில் ஐயமில்லை. 

யார் ஒருவர் தனது குடும்பத்தை, உறவுகளை நேசிக்கிறாரோ அவர் வாழ்வில் வரும் சங்கடங்கள், சோதனைகள் இதுவும் கடந்து போம் என்ற வகையில் பறந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. 

3 பெண் குழந்தைகளுக்குத் தந்தை நண்பர் ஜோதிஜி, அந்தத் தேவியரோடு இல்லத்துணையையும் சேர்த்து தேவியர் இல்லம் எனத் தனது வலைத்தளத்திற்குப் பெயரிட்டுப் பதிவுகள் மேற்கொண்டு வருபவர். 

செட்டிநாட்டு நகரமாம் காரைக்குடிக்கு அருகிலிருந்து விரைவு நகரமாம் திருப்பூருக்குப் புலம் பெயர்ந்தது, 

அந்தச் சூழலோடு ஒட்டியும், ஒட்டாமலும் வந்து சென்ற தாய், தந்தை அவர்களின் அருமை பெருமைகள், 

படிக்கப் படிக்கத் தேடல் விரிவடைந்தது, 

தாய் தமிழ்ப் பள்ளி, புதுக்கோட்டை ஞானாலயா புத்தகச் சுரங்கம், 

வலைச்சர ஆசிரியராய் பணியாற்றிய வாரத்தில் அறிமுகப்படுத்திய தளங்கள், 

வலைச்சரம் வாயிலாக விரிவடைந்த நட்பெல்லை, 
வந்த வேகத்தில் காணாமல் போகும் வலைப்பதிவர்கள், 
ஒழுக்கம், நேர்மை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை, 
பள்ளி ஆசிரியர்கள், படித்த ஊர், வாழும் ஊரில் உள்ள நட்புகள் 

இப்படி ஏராளமான செய்திகளை நேர்த்தியாகத் தொடுத்த பூச்சரம் போல் சொல்லிக் கொண்டு போகிறார். மாமனாரைப் பாராட்ட ஒரு மனது வேண்டும். அந்த வகையிலும் நண்பர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார். 

தந்தைக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் போல் ஒரு தடுப்பு இருப்பதாகவும், சற்று விலகியிருத்தல்தான் பெரும்பாலான இடங்களில் நிகழ்கிறது என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். அந்த இடத்தில் மட்டும்தான் நான் சற்று மாறுபடுகிறேன். தந்தை மகன் உறவில் பலர் மிக நெருக்கமாகவும், உள்ளுக்குள் நூறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் வெளியில் ஒருவரைப் பற்றி மற்றவர் உயர்வாகப் பேசுவதைத்தான் பெரும்பாலும் காண்கிறோம். 

ஜோதியும் தன் தந்தையைப் பற்றி எந்த வரியிலும் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக இன்னும் சற்று நெருக்கமாக இருந்திருக்கலாமோ என்கிற ஏக்கமாகத்தான் அதை உணர முடிகிறது. 

நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் பழைய குப்பைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவரவருக்குத் தேவையான பல செய்திகள், அனுபவங்கள் அதிலே பொதிந்து கிடக்கிறது. நண்பருக்கு விரையில் தனது தொழில் சார்ந்து அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், நிச்சயமாக நம்மைப் போன்ற வாசகர்களுக்கு அருமையான ஒரு பயணச் சரிதம் மின்னூலாகக் கிடைக்கும். மேலும் மேலும் சிகரங்கள் தொட உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன் 
ஸம்பத் ஸ்ரீனிவாசன் 
மதுரை



Tuesday, January 17, 2017

கவர்ச்சி என்னும் ஜிகினா


எழுத்து...

அது ஒரு வரம்... அந்த வரம் எல்லாருக்கும் அமைவதில்லை என்று இப்போது சொல்வதற்கில்லை. இன்று நாம் பார்க்கும்... ரசிக்கும்... கேட்கும்... எதையும் நம் மனதில் தோன்றும் விதத்தில் அழகான பகிர்வாக்க முடியும். பத்திரிக்கைகள் எல்லாமே சிலருக்கு மட்டுமே சாமரம் வீசிய காலத்தில் தன்னுடைய எழுத்துக்குப் பத்திரிக்கையில் அங்கீகாரம் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமே இணையம்... இணையம் எழுத்தாளர்களை அதிகம் பிரசவிக்கத் தொடங்கிய ஆண்டு 2009. 

கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆன்மீகம், நகைச்சுவை, தொழில் சார்ந்த பதிவுகள் எனப் பலரையும் களமிறக்கிய ஆண்டு அது. படிக்கும் காலத்தில் பத்திரிக்கைகளில் எழுதி இருந்தாலும் இணையத்தில் நமக்கென ஒரு தளம் அமைத்து எழுத முடியும் என என்னை அழைத்து வந்தவன் நண்பன். நம் பகிர்வுகளைப் பலரிடம் கொண்டு சேர்க்கும் பணியை இணையத் திரட்டிகள் செய்ய, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆகா நம் எழுத்தை வாசிக்கவும் ஆள் இருக்கு எனச் சந்தோஷித்த இணைய எழுத்தாளர்களின் உலகம் விரிய ஆரம்பித்தது. 

எழுத்து... நம்மைச் செம்மைப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.... எழுத எழுத நாமும் எழுத்தைச் செம்மைப்படுத்தி ஆளுமையாவோம் என்பதும் உண்மை. நான் இப்படித்தான்... என்னோட எழுத்துக்கள் இப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் பேசும் பிரபலங்களுக்கு மத்தியில் தொழில் சார்ந்த, மண் மனம் சார்ந்த, சமூகம் சார்ந்த, வாழ்வில் கடந்தவை முதலான எதையும் வாசிப்பவனுக்குச் சுவாரஸ்யமாய்க் கொடுக்க என்னால் முடியும் என ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை விதையை இணையம் விதைக்க. இன்று பலர் முளை விட்டு... கிளை பரப்பி ஊடகங்களிலும் சினிமாவிலும் வேர் ஊன்றி வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். 

வாழ்க்கை நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாய் ஒன்றைப் பெற, நிறைய இழந்து கொண்டிருக்கிறோம். நமக்கு முந்திய தலைமுறை வயலும் வயல் சார்ந்தும் வாழ்ந்த நிறைவான வாழ்க்கையை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாமல் பணம் துரத்தும் வாழ்க்கைக்குள் தஞ்சமாகிவிட்டோம்.

கொஞ்சமேனும் அந்த வாழ்க்கை கிடைத்ததே என்ற சந்தோஷ சாரலுடன்... ஆனாலு நமக்குப் பின்னான தலைமுறைக்கு அந்த வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையும் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய தலைமுறையோ கைப்பேசிக்குள் விவசாயம் செய்து விளையாடுகிறது. விவசாயம் மட்டுமின்றி இன்னும் எத்தனை எத்தனையோ இழந்துவிட்டோம். எத்தனை விளையாட்டுக்கள்... எவ்வளவு ஆனந்தம்... சந்தோஷமாய் அனுபவித்த அந்த ஆனந்தங்களை இன்று நினைத்து நினைத்து தேன் மிட்டாயாய் உள்ளத்துக்குள் நிரப்பிக் கொள்கிறோம். 

இன்றைய தலைமுறை இணையத்துக்குள்ளும் செல்போனுக்குள்ளும் சிதைந்து கிடப்பதால் சிறார் காலத்து ஆனந்தத்தை அடியோடு மறந்துவிட்டார்கள். இந்த வாழ்க்கையில் என்ன சாதித்து விட்டுப் போகப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற கிராமத்து வழக்குக்குள் நாமும் ஏன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். எனக்குப் பின்னும் நான் பேசப்பட வேண்டும். என் தலைமுறை இப்படித்தான் இருந்தது என்பதை வரும் தலைமுறை அறிய வேண்டும் என்ற நினைப்போடு பயணிப்போமே... அப்படியான பயணத்தில் கிடைப்பவற்றைப் பதிந்து வைக்கத்தான் இணையம் என்னும் இன்பவலை நமக்குக் கிடைத்திருக்கிறதே. 

பார்த்த. கேட்ட, ரசித்த எல்லாம் எழுத்தாகும் போது அதில் நாமும் சமூகமும் வாழ்ந்து கொண்டிருப்போம். இந்தத் தொகுப்பில் நானில் ஆரம்பித்துக் கேள்விகளில் முடியும் 21 கட்டுரைகளிலும் கடந்து வந்தவற்றைத் தாங்கி நிற்கும் எழுத்தை வாசிக்கும் அந்த இடத்தில் நானிருந்ததைப் போல் சந்தோஷம் ஜோதிஜி அண்ணாவின் எதார்த்த எழுத்தில் கிடைத்தது. 

என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு முயன்றால் பத்திரிக்கை என்றில்லை இணையத்திலும் நல்ல எழுத்தைக் கொடுக்க முடியும். தொழில் சார்ந்த கட்டுரைகளால் நம்மை எல்லாம் இன்று ஆட்கொண்டு வருபவர் .

தனது முதல் கட்டுரையில் படிப்பவர்களுக்குப் புரிய, எளிய நடை அமைய 40 கட்டுரைகளுக்கு மேல் ஆனது என்று சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் எழுத ஆரம்பிக்கும் போது வட்டார வழக்குக்குள்தான் நம்மால் பயணிக்க முடியும். எல்லாரும் வாசிக்கும் பொது நடைக்குள் மாறி வர நிறையப் பதிவுகள் தேவைப்படும். எழுத ஆரம்பித்து விட்டால் அது நம்மைச் சுற்றுப்புறத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும். நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் எழுத்தாகும். எழுத... எழுத... அனுபவங்கள் கற்றுத் தரும் பாடம் வாழ்க்கையை ரசிக்கவும் அனுபவித்து வாழவும் கற்றுக் கொடுக்கும். 

சின்ன வயதில் இருந்து பத்திரிக்கைச் செய்திகளைக் கிழித்து எடுத்துத் துறை வாரியாகச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருந்தது என்பதையும் அந்தப் பழங்குப்பைகளை எப்போதேனும் எடுத்து வாசிக்கும் போது அதில் நமக்கு ஆத்ம திருப்தியும் சில முரண்களும் கிடைக்கும் என்பதையும் வீடு சுத்தம் செய்தாலும் பழங்குப்பைகளைத் தூக்கிப் போட மனமின்றி மீண்டும் அதனதன் இடத்தில் வைத்து விடுவேன் என்று சொல்வது என் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுதான். 

எவ்வளவுக் குப்பைகள் சேர்ந்தாலும் பரணில் இன்னும் பக்குவமாய்தான் வைத்திருக்கிறோம்... ஏனோ எடுத்துப் போட மனம் வருவதில்லை. சின்னச் சின்னப் பேப்பர்களாய் சேகரித்து வைத்து தூக்கிப் போடாமல் வீட்டில் திட்டு வாங்கும் அனுபவம் இன்றும் என்றும் உண்டு. மாற்றம் ஒன்றுதான் மாறாதது அல்லவா..? 

சின்ன வயது நண்பர்கள் இன்றைய நிலையில் அன்று போல் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கை ஒட்டத்தில்தான் அவரவர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்... மணிக்கணக்கில் கண்மாய்க்கரையிலும் மடையிலும் அமர்ந்து பேசிய நண்பனை இன்று வாடா காலாற நடந்துவிட்டு வருவோம் என்றால் ‘நீ போ... எனக்கு வேலை இருக்கு’ என்று ஒதுங்கிக் கொள்கிறான். அதுவும் அவன் ஊரிலும் நாம் வெளியிடத்திலும் இருந்தால் சொல்லவே வேண்டாம் எங்கிருந்தோ சின்ன மரியாதை வேறு வந்து ஒட்டிக் கொள்கிறது. அன்று இருந்த அந்த நட்பு எங்கே போனது...? 

வாடா, போடாவிற்குள் இருந்த அந்நியோன்யம் என்ன ஆனது..? என்பதையும் சின்ன வயதில் படிக்க என்று வயல்வெளிக்கோ, ஊருக்கு ஒதுக்குப்புறமான கோவிலுக்கோ, கம்மாய்க்கரைக்கோ செல்வது அன்று பலரின் வழக்கம் அப்படிப் படிக்கச் சென்ற இரயில்வே நடைமேடை, அந்த ஆள் அதிகமில்லாத ரயில்வே நிலையம், ஒற்றை மரமென எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். 

குழந்தைகள் அமைவது வரம்.. அதுவும் தேவதைகளாய் அமைந்துவிட்டால் சொல்லவா வேண்டும். அந்தத் தேவதைகளின் பேச்சுக்கள்... சண்டைகள்... இந்தச் சண்டை எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான் தினம் தினம் நான் இரவு ஸ்கைப்பில் பேசும் போது பெரும்பாலான நேரத்தைக் குழந்தைகளின் சண்டைக்குக் கத்துவதில்தான் செலவிடுகிறேன். அவர்களின் கேள்விகள், அதற்கான விடைதேடல் எல்லாமே நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும். தனது குழந்தைகளுக்கு இன்னும் சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பதைச் சொல்லி, சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை என்னும் கட்டுரையில் மூன்று களங்களாய் மூன்று நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். 

இன்று சாதி என்பது வளர்ந்து உயர்ந்து நம்மை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. சாதிக் கொலைகள் இங்கே தவறாமல் நிகழ்கின்றன. சாதிக்க வேண்டிய வயதில் காதலும் காமமும் சாதிக் கொலைக்குள் தள்ளிவிடுகின்றன. 

சாதீயம் பேசும் பலரும் தம் சாதிக்குள் இருக்கும் உட்பிரிவை சரியாகப் பயன்படுத்தி அரசு சலுகைகளைச் சுவைத்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு வேலைக்கான படிப்பை படித்து அதில் என்னால் முடியும் என்றாலும் கூடச் சாதியை வைத்தே அதைச் செய்ய முடியுமா முடியாதா என்பதை இந்தச் சமூகம் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கப்பட்ட ஒருவன் குடும்பம் நடத்த இறந்தவர்களுக்குக் காரியம் பார்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான். 

இன்று அவனின் குடும்பத்து ஒவ்வொரு நேரச் சாப்பாட்டுக்கும் ‘யார் சாவார்?’ என்ற எதிர்பார்ப்பில் என்று சொல்லும் போது இந்தச் சாதீயத்தின் தாக்கம் எப்படிப்படிப்படட்து என்பதை உணர முடிகிறது. 

எல்லாவற்றுக்கும் இறைவன் மீது பழி போடும் மனிதர்கள் குறித்தான பார்வையும் மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்ப்பதையும் மடாலயங்களுக்கு உரித்தான சொத்துக்களைச் சுரண்டித் தின்பதையும் அவற்றிற்கு வரவேண்டிய வருமானத்தில் இருபதில் ஒரு பங்கு கூட வராததையும் இன்னும் இரண்டு வருடத்தில் மடாலயங்கள் எல்லாம் மறைந்து போகும் என்பதையும் சொல்லிச் செல்லும் ஆன்மீகம் என்பது யாதெனில் கட்டுரைகளும்... தன் காதலின் சின்னமாய்த் தன் பெயரோடு காதலியின் பெயரையும் பொறித்த மரத்தில் காதல் காணாமல் போனது போல் காதலியின் பெயரும் மறைந்து போய் இருப்பதைத் தடவிப் பார்க்கும் தருணத்தில் மகள்கள் தன் பெயருக்குக் கீழே அவர்கள் பெயரைப் பொறித்து வைப்பதை ஆசை மரம் என்னும் கட்டுரையிலும் சென்னையில் இருந்து இரயில் பயணிக்கும் போது கிடைத்த அனுபவத்தைப் பயணமும் எண்ணமும் என்னும் கட்டுரையிலும் இன்று நல்லதோ கெட்டதோ எல்லாவற்றிற்கும் போதையே முக்கியமாகப் போய்விட்ட காலமிது என்பதை விழா தரும் போதையிலும் சொல்லியிருப்பது போல் எல்லாக் கட்டுரைகளும் அன்றாடம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை... மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 

ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நம் வாழ்வின் நிகழ்வுகளோடு இணைத்துப் பார்த்து இன்னும் இன்னுமாய் நிறைய ரசித்துப் பயணிக்கத் தோன்றும்… எழுத்து என்பது அதன் நடையால் மட்டும் நம்மை ஈர்ப்பதில்லை… வாழ்வின் ரசனையோடு எழுதும் போது அதன் போக்கில் நம்மைப் பயணிக்க வைத்து நாமும் இவற்றையெல்லாம் கடந்து வந்தோமே… ரசித்து வந்தோமே… என்று எண்ண வைப்பதாலும் நம்மை ஈர்க்கும். என்ன ஒரு ரசனையான எழுத்து இப்படியான ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் எழுத்து அமையப் பெறுவதுதான் உண்மையான வரம் என்று வாசிப்பவருக்குள் தோன்ற வைத்தால் நாம் பயணிக்கும் எழுத்து என்ற பாதையில் மிகச் சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரலாம். அதை உணர வைத்த வாழ்க்கைக் கட்டுரைகள் இவை. 

மகரந்தப் பூக்களாக மலர்ந்திருக்கும் கட்டுரைகள் நமது அறியாமையை ஆங்காங்கே சுட்டிக்காட்டத் தவறவில்லை. உண்மை பேசும் கட்டுரைகள் எழுதுவது என்பது அரிது. இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாசிப்புக்காகக் கவர்ச்சி என்னும் ஜிகினா பூசாமல் எதார்த்தத்தை மிக அழகாக எடுத்து இயம்புகின்றன. 

வாசித்து... மீண்டும் வாசித்து ஒவ்வொரு கட்டுரையிலும் அவரிடத்தில் என்னை நிறுத்திப் பார்த்து அந்தச் சுகந்தத்தை அனுபவித்தேன். ‘எண்ணம் போல் வாழ்வு’, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை விளக்கமாய்ச் சொல்லும் கட்டுரைகள். ஜோதிஜி அண்ணா இன்னும் இன்னுமாய் நிறைய வாழ்வியல் கட்டுரைகள் கொடுக்க வேண்டும் நாம் (சு)வாசிப்பதற்காக…. 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். 

Monday, January 16, 2017

கருப்புக்குதிரை


கருப்புக்குதிரை நூல் விமர்சனம் மற்றும் சில பார்வைகள் 

சென்ற வாரத்தில் என் நெருங்கிய நண்பர் என்னை அலைபேசியில் அழைத்திருந்தார். என் எழுத்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று ஆசைப்படுபவர். என் மின் நூல்கள் மற்றும் பதிவுகளைப் பாரபட்சமின்றி விமர்சிப்பவர். அவருக்கு நரேன் ராஜகோபாலன் எழுதிய "கருப்புக்குதிரை" கிடைக்கப்பெற அதனைப் படித்துக் கொண்டிருந்த போதே என்னை அழைத்துப் பேசினார். புத்தகத்தில் உள்ளக் கருத்துக்களுக்கு எதிரணியில் இருப்பவர்கள் பாராட்டுவது என்பது மிகச் சிறந்த அங்கீகாரம். மனதார பாராட்டினார். எப்படி எழுத வேண்டும்? என்பதற்கும் எந்தவொரு விசயமாக இருந்தாலும் எழுதுபவனின் திறமை பொறுத்து எப்படி எழுத முடியும் என்பதற்கும் இந்த நூல் உதாரணம் என்றார். 

அவர் தான் ரசித்துப் படித்த புத்தகம் முக்கியமானவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று அவர் கொடுத்திருந்த குறிப்பிட்ட நண்பர்களின் பட்டியலின் அடிப்படையில் சென்னையில் இருந்து எனக்கும் இந்நூல் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.  நண்பருக்கு நன்றி.

பார்வை 1 

மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்த அணிந்துரை வார்த்தைகள் என்பது இன்னமும் எனக்கு மனப்பாடமாக உள்ளது. "இந்தப் புத்தகம் போலப் பள்ளிக்கூடங்களில் வரலாற்றுப் பாடங்கள் இருந்திருந்தால் நான் இன்னமும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்" என்று எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்திற்கும் அந்த வார்த்தைகளை அப்படியே பொருத்தி விடலாம். பொருளாதாரம் சார்ந்த விசயங்களை இப்படியொரு நடையில், இது போன்ற எளிமையில் நான் வாசிப்பது இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு ஆச்சரியம், பிரமிப்பும் கலந்து கட்டியுள்ளது. 

பார்வை 2 

வரலாறு, பொருளாதாரம் சார்ந்த துறைகள் என்பது கல்லில் நார் உறிக்கும் சமாச்சாரம். காலப்போக்கில் வரலாறு பின்னோக்கிப் போய்விட்டது. அதற்குப் பதிலாகத் தற்பொழுது பொருளாதாரம் சார்ந்த துறைகள் முன்நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இணையம் அறிமுகமான பின்பு புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் இளையர் பட்டாளம் மிகச் சரியாகக் கையாள்கின்றார்கள். எதனையும் சொல்கின்ற விதத்தில் சொன்னால் சுவராசியப்படுத்த முடியும் என்கிற அளவில் பல பேர்கள் இத்துறையில் கவன ஈர்ப்பு பெறுகின்றார்கள். தற்போது நட்சத்திரமாக மாறியிருப்பவர் நரேன் ராஜகோபாலன். 

பார்வை 3 

நான் பிறந்த குடும்பம் என்பது பொருளாதாரத்தில் அதிகக் கவனம் செலுத்தும் வாழ்க்கையை வாழ்ந்த, வாழும் குடும்ப அமைப்புக் கொண்டது. ஆனால் என் பாதை மட்டும் தொடக்கம் முதலே தப்பித் தவறி வேறுபாதையில் பயணிக்கத் தொடங்கியதால் பொருளாதாரம் குறித்துப் பள்ளிக்கூடப் பாடங்களிலும் கவனம் செலுத்தவில்லை. அதன் பாதிப்பு வாழ்க்கையிலும் இன்று வரையிலும் எதிரொலிக்கின்றது. ஆனால் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தவுடன் பணம் சார்ந்த ஆசைகளே போய்விட்டது. பண ரீதியாக உச்சத்தை அடைந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் பின்னால் உள்ள எச்சங்களை அப்படியே தோலுரித்துக் காட்டுகின்றது. அத்துடன் எப்படியெல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதமாக மாற்றிக் கொண்டு பணம் சம்பாரிக்கும் குறுக்கு வழிப்பாதைகளைப் படம் வரைந்து பாகம் குறித்தும் காட்டுகின்றது. 

பார்வை 4 

இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும், அதிகப் பணம் சம்பாரிக்கும் வாழ்க்கையைக் கொண்டவர்கள், அந்தப் பணத்தை எப்படியெல்லாம் சம்பாரிக்க முடியும் போன்ற குறுக்கு நெடுக்கு வெட்டுத் தோற்றத்தை தோலுரித்துக் காட்டுகின்றது. திருப்பூரில் கோடிகள் என்கிற விதத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு வியப்பாகத் தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தில் குறைந்தபட்சமே அமெரிக்கன் டாலரில் மில்லியனில் இருந்து தான் தொடங்குகின்றது. நமக்குப் பில்லியன், ட்ரில்லியன் போன்றவற்றைத் தாண்டிச் செல்லும் கணக்கு வாத்தியார் பாடம் நடத்தும் போது வந்த கொட்டாவி போல வாயைப் பிளக்க வைக்கின்றது. 

பார்வை 5 

கருப்புப்பணம் என்று ஒற்றை வார்த்தையில் அதற்குப் பின்னால் உள்ள கிரகசாரங்களை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருட் ஜோதியை விலாவாரியாக விஸ்தாரமாக விவரித்துக் கொண்டே சென்றாலும் என் மனதில் தோன்றியது ஒரே விசயம் தான். இப்படியெல்லாம் எளிமையாக எழுத முடியுமா? என்பது தான். 

அத்துடன் வாழ்க்கை முழுக்க எழுத்தே தன் பணி என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்குக்கூட இப்படிப்பட்ட வாக்கிய அமைப்பு கைகூடுமா? பொருளாதாரத்தைப் பற்றிப் படிக்கின்றோமா? அல்லது துப்பறியும் கதையை நாம் படிக்கின்றோமா? என்று யோசிக்க வைத்த நடையில் அமைந்த புத்தகமிது. 

பார்வை 6 

வலைப்பதிவுகள் உருவாக்கிய மாயவித்தையிது. எழுத்தே தன் வாழ்க்கை. எழுத்துலகம் தன் ஆதாரம் என்று வாழ்நாள் முழுக்க வாழ்ந்த எழுத்தாளர்கள் என்று கீரிடம் சுமந்து ஒளிவட்டம் காட்டிக் கொண்டிருந்தவர்களை இணைய உலகம் பல மாயப் பிம்பங்களை உடைத்து சுக்குநூறாக உடைத்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். 

எவ்வித எழுத்துப் பயிற்சியும் இல்லாத சாதாரணமானவர்கள் எங்களாலும் எந்தத் துறை குறித்தும் தெளிவாக அழகாகச் சுவராசியமாக எழுத முடியும் என்று சொன்னதோடு மட்டுமல்லாது செயல்படுத்தியும் காட்டியுள்ளதற்கு இந்தப் புத்தகம் முக்கிய உதாரணம். நரேன் சொல்லியுள்ள பிரதமர் மோடி கொடுத்த துல்லிய தாக்குதலை விட இவர் கொடுத்துள்ள வார்த்தை பிரயோக தாக்குதல் என்பது வாசிக்கும் ஒவ்வொருக்கும் பிரமிப்பைத் தரும். 

பார்வை 7 

பத்திரிக்கையில் வணிகச் செய்திகளை வாசிப்பவர்கள் தமிழக வாசக பரப்பில் நூற்றில் ஐந்து பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். மேலும் வணிகம் சார்ந்த ஆங்கிலப் பத்திரிக்கைகள் படிப்பதென்பது மிக மிகக் குறுகிய வட்டமாகவே இருக்க முடியும். ஆனால் வணிகம் அதற்குப் பின்னால் உள்ள தில்லாலங்கடி வேலைகள், ஷேர் மார்க்கெட் என்ற மாயமந்திரங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கும் கண்கட்டி வித்தைகள், ஹவாலா தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் அல்வா கிண்டும் பெருந்தனக்காரர்களைப் போற போக்கில் தோலுரித்துக் காட்டிக் கொண்டே செல்கின்றார். ஆனால் இவை அனைத்தும் அரசாங்க சட்டதிட்டத்தின் படி நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் கற்பனையில் வைத்துள்ள பல கோடீஸ்வரர்கள் எப்படிச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தும் புத்தகமிது. 

பார்வை 8 

இன்னமும் வியப்பாக உள்ளது. பள்ளி, கல்லூரி சமயங்களில் வேதியியல், இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் போன்றவற்றை நினைத்தாலே காய்ச்சல் வந்த காலகட்டத்தை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். ஒன்றுக்குப் பயந்து மற்றொன்று மாறி, அதையும் தாக்குப் பிடிக்க முடியாமல் கடைசியில் தாவரவியல் படித்துக் கல்லூரியை கடனே என்று முடித்து வந்தவனுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது ஒரே ஒரு விசயம் தான். 

தவறு என் மேல் இல்லை. நரேன் போன்றவர்களைப் பாடப்புத்தகங்களை எழுத அனுமதித்து இருந்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கக்கூடும். உங்கள் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு முடித்து மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் இருந்தால் அதிலும் குறிப்பாக வணிகவியல் சார்ந்த படிப்புகள் படித்துக் கொண்டிருப்பவர்கள் எவராக இருந்தாலும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசாகக் கொடுங்கள். ஒன்று பாடப்புத்தகம் என்பதனை எந்த அளவுக்குச் சுமையாக மாற்றியுள்ளார்கள் என்பதனை உணர முடியும். ஒரு துறையை எப்படியெல்லாம் எளிமையாகச் சொல்ல முடியும் என்பதனையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். 

பார்வை 9 

புத்தகத்தின் பிற்பகுதியில் பிரதமர் மோடி உருவாக்கிய பணமதிப்பு இழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை நரேன் விஸ்தாரமாக விவரிக்கின்றார். குறிப்பாகக் காங்கிரஸ் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றார். பல புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிக்கின்றார். பல இடங்களில் நரேனுக்குச் "செலக்ட்டீவ் அம்னிசீயா" வேறு வந்துவிடுகின்றது. காங்கிரஸ் அரசாங்கத்தில் பாலும் தேனும் இந்தியா முழுக்க ஓடியதாகக் கதைவிடுகின்றார். 

சோனியா, ராகுல், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் இவர்களையெல்லாம் நினைத்தாலே, மனதிற்குள் கொலைவெறி வந்து போகின்றது. எப்படியோ நாடு தப்பித்தாகி விட்டது என்று தான் தோன்றுகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த அலேங்கோலங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மோடி உருவாக்கியது இழப்பு அல்ல. மாற்றத்திற்கான முதல்படி. நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலும் வந்தமர்ந்த பிரதமர்கள் எவரும் தனக்கான ஆதாயம், தான் விரும்பியவர்களுக்கான ஆதாயம் என்பதிலேயே தங்கள் பதவிக் காலத்தைக் கழித்தவர்கள். 

பொருளாதாரப்புலி என்றழைக்கப்படும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களுக்குப் பின்னால் இரண்டு விசயங்கள் இருந்தன. ஒன்று எவ்வித அறநெறியும் தேவைப்படாமல் நாட்டை அப்படியே மற்றவர்களுக்கு விற்பது. ஆதாயம் பெற காத்திருந்தவர்களுக்குத் தனது கள்ள மௌனத்தின் மூலம் ஆதரவு அளித்தது. சிறுபான்மை உரிமை என்ற பெயரில் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் இங்கே அனுமதிக்காமல் இருந்தது. வெளிப்படைத்தன்மையை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் தான் சார்ந்த, தாங்கள் விரும்பும் நபர்கள் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஊழல் என்பது தேசிய வார்த்தையாக மாறியிருந்தது. 

எந்த அரசியல்வாதியும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் தானே மீண்டும் மீண்டும் அந்தப் பதவியில் சாகும் வரையிலும் இருக்க வேண்டும் என்று தான் இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் விரும்பும் சூழ்நிலையில் பிரதமர் மோடி தனது பதவிக்கான சுருக்குக்கயிற்றைத் தானே உருவாக்கியுள்ளார். தன்னால் மீண்டு வர முடியுமா? அல்லது மீண்டும் பிரதமர் பதவி கிடைக்குமா? போன்றவற்றைப் பற்றிச் சிறிது கூடக் கவலைப்படாமல் ஒரு புதிய பாதையை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். உச்சக்கட்டமாய்த் தன் பதவிக்கான அத்தனை ஆதாரங்களை அழிக்கவல்ல அஸ்திரங்களைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டவர் பிரதமர் மோடி. 

இறுதியான என் பார்வை 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி முதல் பெரிய எதிர்ப்பும் மிகப் பெரிய சுனாமி போன்ற மக்கள் திரளுமாக மோடி அரசாங்கத்திற்கு எதிராகத் திரள்வார்கள் என்று அநேகம் பேர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஏமாற்றமடைந்தது தான் மோடிக்குக் கிடைத்த வெற்றி. எந்த அரசியல்வாதியும் பணமதிப்பு விவகாரத்தை வைத்து பெரிய அளவுக்கு எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்க முடியாத அளவுக்கு அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அவரவர் சேர்த்து வைத்துள்ள ஊழல் பணங்களை மாற்ற வேண்டிய அவசியம். திருடனுக்குத் தோள் கொட்டியது போல அவஸ்தையான காலக் கட்டமிது. பணமதிப்பு விவகாரத்தால் மக்கள் அடைந்த துன்பங்களை விட அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும் கற்றதும் பெற்றதும் ஏராளம். என்னவொன்று அவையெல்லாம் ஊடகங்களில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு வெறும் வாய்ச்சவடால்களாக நின்று விட்டது. 

இட ஒதுக்கீடு, மானியம், சிறுபான்மை நலன், போன்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல்வாதிகளின் வாழ்க்கையை வட்டத்திற்குள் சிக்க வைத்த பெருமை மோடிக்கு வந்து சேர்ந்துள்ளது. முதல் முறையாகச் செயல்படும் பிரதமர் அலுவலகமாக மாறியுள்ளது. 

இனி வரும் காலங்களில் முறைப்படியான கணக்கு மூலம் மட்டுமே வியாபாரங்கள் செய்ய முடியும் என்பதற்கான தொடங்க புள்ளியை இந்த மாற்றங்கள் உருவாக்கும். அதிகப்படியாகச் சேர்க்கும் பண ஆசையில் ஒரு நிதானம் வந்து சேரும். முறையற்ற வழியில் சேரும் பணத்தில் ஒரு பயம் நிரந்தரமாக இருக்கக்கூடும். 

திருப்பூரில் உள்நாட்டு வியாபாரத்தில் வாரம் நூறு கோடி வியாபாரம் செய்பவர்கள் துண்டுச்சீட்டு வழியாகவே வர்த்தகம் செய்கின்றார்கள். ஏற்றுமதி வியாபாரத்தில் செய்யப்படும் தந்திரங்கள் மூலம் தனியாக வந்து சேரும் அத்தனை பணமும் படுக்கை அறையில் மெத்தையில் அடுக்கி வைக்கப்பட்டுப் பூதம் போலக் காவல் காக்கப்படுகின்றது. ஒரு நாளில் தான் பெறும் லட்சக்கணக்கான பணத்தை மருத்துவர்கள் முதல் பல துறையில் உள்ளவர்கள் எவ்வித கணக்கு வழக்கும் காட்ட அவசியமில்லாமல் அடுத்தடுத்து பண ஆசையில் மேலும் மேலும் பணத்தை முடக்கி வைத்துக் கொண்டே செல்கின்றார்கள் . எது தேவை? எது தேவையில்லை? என்பதெல்லாம் மாறி நுகர்வு என்பது பெரும் கலாச்சாரமாக மாறியுள்ளது. பணத்தை தவிர இங்கு வேறெதும் தேவையில்லை என்கிற புதிய வாழ்க்கை முறை உருவாகி பல ஆண்டுகள் ஆனதால் எல்லாத் தவறுகளும் இங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.

ஏக்கர் ஆயிரம் ரூபாய் மதிப்பில்லாத அத்தனை நிலங்களும் லட்சத்திற்குத் தாவி சராசரி மனிதனின் வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு ஏற்றத்தாழ்வு என்பது எட்ட முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உருவான தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு தனி மனிதனின் வாழ்க்கையில் பணம் என்பது அகோர பிசாசு போலக் கோர தாண்டவம் ஆடும் தற்போதைய சூழலில் பணம் என்பது வெறும் காகிதமாக மாறிய சூழலை இந்தப் பணமதிப்பு விவாகாரம் என் பார்வையில் மனமதிப்பு நிலை பெற உதவி செய்யக்கூடியதாகவே இருக்கும் என்று நம்புகின்றேன் . 

மனம் முழுக்கக் கார்ப்பரேட் வாழ்க்கையை விரும்பும் நடுத்தர வர்க்க மனிதர்கள். தகுதியானவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை, மானியங்களைத் தாங்களும் தங்கள் குடும்ப வாரிகளுமே பெறுகின்றோம் என்ற கூச்ச உணர்வு இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு மோடி உருவாக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளுமே துல்லிய தாக்குதல்களாகத்தான் தெரியும். உருவாகும் மாற்றங்களைக் கண்டு பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கை கொண்ட நம் சமூகத்தில் இது போன்ற துல்லிய தாக்குதல் என்பது அவசியம் தேவையே. 

உங்களின் பணம் சார்ந்த எண்ணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அரசாங்கங்கள் அவவ்போது கொண்டு வரும் திட்டங்கள் யாருக்கு பயன் தந்து கொண்டிருக்கின்றது? உங்களைச் சுற்றியுள்ள பணம் படைத்தவர்களின் வாழ்க்கையை, அவர்கள் பணம் ஈட்டும் முறைகளை, அதற்கு நமது அரசாங்கம் எப்படியெல்லாம் உதவுகின்றது என்பதனையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு புரியவைக்கக்கூடும். .

இது போன்ற விஸ்தாரமான விளக்கங்கள் உங்களுக்கு புரியும் சமயத்தில் மோடி உருவாக்கியுள்ள பணமதிப்பு விவகாரம் குறித்து நீங்களே உங்களுக்குள் ஒரு முடிவு தேடிக் கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவக்கூடும்.

கருப்புக்குதிரை புத்தகம் பெற

நவி பதிப்பகம்.
விலை ரூபாய் , 150./

திரு. அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி

Face Book   https://www.facebook.com/aravindan.krishnamoorthy

வாட்ஸ் அப் எண்  81 05 88 20 22

ஆன் லைன் வாயிலாக பெற 


Thursday, January 12, 2017

திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து......


இந்நூல் டாலர் நகரத்தைத் தொடர்ந்து ஜோதிகணேசன் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை தொகுப்பாக வெளிவந்துள்ளது. டாலர் நகரத்தைப் போலவே இந்நூலும் ஒரு தன் வரலாறு நூலாக ஆரம்பித்தாலும் மெல்ல மெல்லத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப்பதிவாகப் பரிணமிக்கிறது. அந்தவிதத்தில் தமிழுக்கு அவர் பெரும் தொண்டு செய்திருக்கிறார். தமிழால் பயனடைந்த நான் அதற்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறேன். 

தன்னுடைய மூன்று மகள்களின் பெயரின் விகுதியை தன்னுடைய வலைப்பூவின் (தேவியர் இல்லம்) முகவரியாக வைத்துக் கொண்டு அதில் எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலைப் படிக்கும் போது ஜோதிகணேசனின் எழுத்தில் (அதாவது அவரின் வாழ்க்கையில்) அவரது மகள்கள் மட்டுமில்லாமல், அம்மாவும், மனைவியும் காரணிகளாக இருப்பதை உணரமுடிகிறது. இவரது அப்பாவும் அவர் மூலம் உண்டான தினமணியின் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கமும் இவரது எழுத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது. இந்நூலுக்காக இவர்களுக்கும் நன்றி சொல்ல நான்(ம்) கடன் பட்டிருக்கிறேன்(றோம்). 

தன் வரலாறு நூலாகத் தன்னைச் சுற்றியுள்ளவர்களால் (மற்றும் இருந்தவர்களால்) தனக்கேற்பட்ட அனுபவங்களையும், அவர்களின் வாழ்க்கையையும் ஒரு காணொளி கேமரா போலப் பதிவு செய்திருக்கிற அதே வேளையில் தகுந்த சமயங்களில் அறச் சீற்றத்துடன் தன்னுடைய விமர்சனத்தையும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகச் சாதி, மத, இன உணர்வுகளை நேர்மையாக விமர்சிக்கும் போது தன் வரலாறு நூலாக இல்லாமல் சமூகச் சிந்தனைகளின் பதிவாக மாறிவிடுகிறது. "திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கலாமே?" என்ற கேள்வியை எழுப்பி அவ்வாறு செய்தால் "இருவரின் தலையும் அவர்கள் உடம்பில் இருக்காது" என்கிறார். "எனது திருப்பூர் நிறுவன அனுபவங்களில் இங்குள்ள எந்த நிறுவனமும் இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்வதில்லை." என்று பலரும் எழுதத் தயங்கும் யதார்த்தத்தைப் பதிவு செய்கிறார். 

அவர் தன்னுடைய வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்து நுணுக்கமான விஷயங்களை எழுதியிருப்பதைப் படிக்கும் போது வாசகனையும் தனக்கேற்பட்ட ஒத்த அனுபவங்களை அசை போடவைக்கிறார். எடுத்துக்காட்டாக, தன்னுடைய மகள்கள் காலையில் குளிப்பதற்கு போடும் சண்டையைப் பற்றியும், இரவில் பேச்சு முடிவதற்குள் கை நீண்டு விடுவதையும் படிக்கும் போது எங்கள் வீட்டில் பையன்களிருவரும் இதையே செய்வதை எண்ணிப்பார்க்கும் போதும், "இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு வாடகைக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் வேறு நாம் வேறு - என்று என் பெற்றோர் சொன்னதை எண்ணிப்பார்க்கும் போதும், தினமணியின் கட்டுரைகள் என்னைச் செதுக்கியதை எண்ணிப்பார்க்கும் போதும், இந்நூல் ஜோதிகணேசனின் வாழ்க்கையை மட்டும் பதிவு செய்யவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 

குறிப்பாக "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்" என்ற கட்டுரையைப் படிக்கும் போது இதையெல்லாம் நான் ஜோதிகணேசனிடம் சொல்லவேயில்லையே, எப்படி நம் வீட்டில் நடந்ததைப் பார்த்த மாதிரி எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்படவைக்கிறார். இது மாதிரி படிக்கும் ஒவ்வொருவருக்கும் பல ஆச்சரியங்களை இந்நூல் தரும்.

மோகன்
அமெரிக்கா
https://www.facebook.com/udoitmohan?fref=ts



பழைய குப்பைகள் (மின் நூல்)



இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்





Monday, January 09, 2017

தரமற்றதுதான் பேயாட்சி நடத்தும்


அன்புச்சகோதரர் ஜோதிஜியிடம் இன்னும் டாலர் நகரம் நூல் போல இன்னும் பத்து பாகங்கள் வரை எழுதச் சரக்கு இருக்கும்பொழுது ஏன் அதற்குள் பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பித்தார் என்று முதலில் எனக்குப் புரியவில்லை. 

ஒருவேளைத் தனது கடந்தகாலத் தனது எழுத்து அனுபவங்களுக்குள் சென்று வருவதன் மூலம் சுகமான பழைய ஞாபகங்களை அசை போடுவதற்காக இருந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது பழசு சுகம் என்ற வார்த்தை என் ஞாபகத்திற்கு வந்தது. 

சிலகாலம் எழுதாமல் இருந்து பழைய குப்பைகளைக் கிளறி தனக்குள் கனன்று கொண்டிருந்த தீயைப் போல ஒவ்வொருவரின் மனதில் உள்ள உள்ளக் கிளர்ச்சியை கிளறிவிட்டிருக்கலாம் என்று எண்ண வைத்துவிட்டார். 

மனதில் தோன்றுவதை எழுத்தில் கொண்டு வருவதென்பது எளிதில் வசப்படும் விடயமல்ல. 

ஆனால் வார்த்தைகளை வசப்படுத்தியதால் இதுவரை 700 பதிவுகளுக்கு மேல் எழுதி 7 மின் நூல்களை எழுதி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தையே வலையுலகில் ஏற்படுத்தி இருக்கிறார். 

வாசித்துக் கொண்டிருப்பவனை நகரவிடாமல் இழுத்துச் செல்லும் சூத்திரத்தைப் புரிந்து எழுதுவதைக் கண்டிப்பாகப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

சரி. அவர் கிளறிய பழைய குப்பைகளை நாமும் நம் பங்கிற்குக் கொஞ்சம் கிளறுவோமா? 

தனது பதிவுலக எழுத்து அனுபவங்களையும் தனது புதுவயல் வாழ்க்கையில் ஆரம்பித்துத் திருப்பூர் வாழ்க்கையில் நேர மேலாண்மை வரை தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பல்வேறு விடயங்களைப் பற்றிய தனது பார்வையையும் எண்ணங்களையும் சேர்த்து 25 அத்தியாயங்களில் தொகுத்தளித்திருக்கிறார். அருமை என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை. 

ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் வெட்டி ஒட்டிப் பதிவு என்ற பெயரில் எதைப்பற்றியாவது எழுதிக் கொண்டிருப்பவர்கள் நடுவில் கவர்ச்சிக்கும் கருத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எப்போதும் கவர்ச்சி முன்னால் நிற்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு தான் சொல்ல வந்த கருத்துக்களையும் வெகு அழகாக முன் வைக்கும்போது நம்மால் கவர்ச்சியை வெகு விரைவாகக் கடந்து செல்ல முடிகிறது. 

அவருடைய கருத்துக்கள் ஒரு நிமிடமாவது நின்று மனதில் அசை போட வைத்துவிடுகிறது. அதுதான் அவரின் வெற்றியின் ரகசியம் என்று நான் நினைக்கிறேன்). 

நாம் எப்படி ஒன்றைப்பார்க்கிறோம் எப்படி அதனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி எழுத்தில் காட்டுகிறோம் என்பதன் சூட்சுமத்தை புரிந்து விட்டதால் வார்த்தைகள் தானாக வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. 
நாற்பது வயது என்பது வாழ்க்கையின் நடுப்பகுதி. 

அதைத் தாண்டும்பொழுதுதான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் மீதப்பகுதி பற்றிய எண்ணம் பயம் ஏற்படுகிறது. சகோதரர் அதைத் தாண்டுவதை அதன் மன ஓட்டங்களை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். 

கண்டிப்பான தந்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு இன்று தான் தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்தவுடன் அவருடைய செயல்களனைத்தும் சரி என்ற புரிதலை காலம் ஏற்படுத்தும்பொழுது அவரைக் காலன் கொண்டு சென்றிருப்பான். அப்பொழுதுதான் அவரது அருமையை நாம் உணர முடிகிறது என்ற உண்மையை அனுபவித்து எழுதியிருக்கிறார். 

அன்புச்சகோதரர் அப்துல்ஹமீத் யாரைப் பேட்டி கண்டாலும் அவரது முதல் கேள்வி தங்களது பிறந்த ஊர் என்ன? என்பதுதான். உலகமெல்லாம் சுற்றினாலும் தான் பிறந்த ஊர் கிராமமாக இருந்தாலும் அதுதான் ஒருவனுக்குச் சொர்க்கம். அதுவும் தொழில் நிமித்தம் வேறு ஊரில் வாழ்க்கையைக் கடத்திவிட்டு தனது குழந்தைகளுக்குத் தான் பிறந்து வளர்ந்து சுற்றிய இடங்களையும் இளமைக்கால நண்பர்களையும் அறிமுகம் செய்யும்பொழுது நமது குழந்தைப் பருவத்துக்கே சென்று விடுவோம். 

ஜோதிஜியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். 

தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியபொழுது அவர்களது நடவடிக்கைகளை ஒரு தந்தையாக அனுபவித்து எழுதும்பொழுது இன்றைய கல்வி நிலையைப் பற்றியும் அதன் விளைவைக் கேள்விக்குள்ளாக்கி நம்மையும் கவலை அடையச்செய்துவிட்டார். 

சென்ற தலைமுறையின் அம்மாக்கள் வீடே உலகம் என்று வாழ்ந்தவர்கள். இன்றைய குழந்தைகள் உலகமே வீடு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஜோதிஜியின் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நடந்த நிகழ்வுகள் நம் வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகள்தான். அதிலும் வெளிநாடு வாழ் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். ருசிப்புத்தன்மை இருந்தால் இனிக்கும். தலைமுறை இடைவெளியை இவ்வளவு இனிமையாகப் பதிவு செய்து வாசிப்பவர்களையும் ரசிக்க வைத்துவிட்டார் . 

ஒரு ரயில்வே ஸ்டேசனில் நாம் நுழைந்தால் ஏற வேண்டிய ரயிலைப் பற்றிச் சிந்திப்போம். ஆனால் சகோதரர் சிந்தனை ரயில் ஏறிச் சுருக்கமாகப் பேசு என்ற பதிவின் மூலம் சமுதாய நிகழ்வுகளில் நம்மையும் விலாவாரியாகச் சிந்திக்கப் பயணிக்க வைத்துவிட்டார். 

தினந்தோறும் மலரும் பூக்கள் என்ற பதிவில் நாம் பணி நிமித்தம் ஓடும் ஓட்டத்தில் அனுபவிக்கத்தவறும் அன்றாடக் காலைப்பொழுதில் இவ்வளவு இனிய விடயங்கள் இருக்கிறதா என்று எண்ண வைத்து நம்பிக்கையையும் விதைத்து வைக்கிறார்., 

ஊரில் ஒரு திருவிழா வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சி என்றால் அதன் மூலம் நமக்கும் மக்களுக்கும் எவ்வளவு சந்தோசம் என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் 13.25 லட்சம் ரூபாய் சம்பாதித்த கேவலமான நிகழ்வு தனது வீட்டுச் சுப நிகழ்ச்சியை இவ்வளவு தரங்கெட்டதனமாக நடத்த முடியுமா என்று சிந்திக்க வைத்துவிட்டது. விழா தரும் போதை பதிவில் விழாக்களின் சந்தோசங்களை நுகர்வு கலாச்சாரம் எவ்வாறு சமுதாயச் சீர்கேடாக்கிவிட்டது என்பதைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது. 

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்று அன்றே ஞானத்தந்தை கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஆனால் எல்லா விளம்பரங்களும் வீட்டிற்குள் வந்தபிறகு புத்தியை அடகு வைத்துவிட்டு புதிதாய் வாங்க கற்றுக் கொண்டிருக்கிறோம். நுகர்வு கலாச்சாரம் நம்மை விளம்பரங்களின் மூலம் அடிமைகளாக்கியதன் விளைவை இன்னும் உணராமல் இருப்பதைச் சமுதாயச் சிந்தனையுடன் பதிவு செய்திருக்கிறார் . 

ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் சமுதாயத்தில் நிகழும் கூத்துக்களையும் விவரித்து ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தாமதமானால் தரமற்றதுதான் பேயாட்சி நடத்தும் என்று போட்டு உடைத்துவிட்டார். 

பொதுவாக வலைத்தளங்களில் எழுதுபவர்களும் உலவுபவர்களும் எளிதான விடயங்களையே விரும்புவார்கள். ஆனால் அன்புச்சகோதரர் ஜோதிஜி தனது ஒவ்வொரு பதிவிலும் சமுதாயத்தில் நிகழ்பவற்றிலிருந்து தான் கற்றவற்றையும் பெற்றவற்றையும் தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் தனது வலைத்தளத்தின் மூலமாகப் பொது வெளியில் தனது பாணியில் பதிவு செய்து வருகின்றார். 

அவரிடமிருந்து இன்னும் நிறைய வரவேண்டியதிருக்கிறது. நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம். 

அன்பான வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும். 

மா.ரவீந்திரன் 
மதுரை.


Friday, January 06, 2017

கோடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை’


ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய பழைய குப்பைகள் – எனது பார்வை 

காணாமலே நட்பு என்ற வகையில், வலையுலகில் எனக்கு அறிமுகமானவர் நண்பர் திரு ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள். அவருடைய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவருடைய தேவியர் இல்லம் என்ற வலைத்தளத்தில் வெளியாகும் அருமையான கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். புதுக்கோட்டையில் (2015) மிகவும் சிறப்பாக நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில் ஒருமுறை நேரில் அவரைச் சந்தித்ததுதான். 

ஜோதிஜியின் படைப்புகள்: 

அவருடைய மின்னூல்கள் பலவற்றை எங்கள் வீட்டுக் கணினியில் உள்ள மின்னூலகத்தில் தரவிறக்கம் செய்ததோடு, ரசித்துப் படித்தும் இருக்கிறேன். அச்சு நூல் வடிவில் வெளியான அவருடைய ‘டாலர் நகரம்’ - திருப்பூர் வரலாற்றில் ஒரு முக்கியமான நூல் ஆகும். எனது வலைப்பதிவினில் இந்த நூலினுக்கும், மற்றும் இவரது ‘தமிழர் தேசம்’ என்ற மின்னூலினுக்கும் நூல் விமர்சனக் கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன். 

பழைய குப்பைகள்: 

ஜோதிஜி (திருப்பூர்) அவர்களின் கட்டுரைகள் யாவும் எதார்த்தமானவை; வாழ்வியல் சிந்தனைகளை அனுபவ வரிகளாகக் கொண்டவை. அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள ’பழைய குப்பைகள்’ என்ற நூலும் சிறப்பான ஒன்று. ’நான்’ என்ற முன்னுரைப் பக்கம் தொடங்கி, அங்கீகாரமும் அவஸ்தைகளும் என்ற ஆறாவது கட்டுரை வரை, எழுத்தாளர் ஜோதிஜி அவர்களின் எழுத்துலக, குறிப்பாக வலைப்பக்க அனுபவங்களைக் காண முடிகிறது. 

// நாம் ஒன்றை அனுபவித்து ரசித்து எழுதியிருப்போம். ஆனால் அது சிந்துவாரற்று கிடக்கும்.  சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேம்போக்காக எழுத அது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு இருக்கும்.  காரணம் படிப்பவனின் வாழ்க்கை என்பது எழுதுபவனால் யூகிக்க முடியாத ஒன்று.  எழுத்தும் வாசிப்பும் சில சமயம் பொருந்தி போய்விடும். பல சமயம் அந்த வாய்ப்பில்லாமல் போய்விடும்.  கவலைப்படத் தேவையில்லை. எழுதிக் கொண்டே இருக்கும் போது தான் அந்தச் சூட்சமத்தை உணர முடிகின்றது //._ (மசாலா தூவினால்தான் மரியாதையா?)  

// மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது. // - (நாலும் புரிந்த நாய் வயசு) 

என்று தான் இன்னமும் எழுதி வருவதன் சூட்சுமத்தைச் சொல்லுகிறார் ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள். 

ஆசை மரம் – என்ற தலைப்பில், படிக்கப் படிக்கக் கூடவே எனது பழைய நினைவுகளும் பின்னோக்கி சென்றன. நீங்கள் இந்தக் கட்டுரையில் சொல்வது போல ‘வெறுமைதான்’ மனதில் வந்து, ஏதோ ஒன்றை இழந்ததை, ஆனால் இன்னதென்று உணர முடியாமல், நெருடலைத் தந்தது 

பெரும்பாலும் புத்தகக் காதலர்கள் யாவரும் செய்யும் ஒரு காரியம், தாங்கள் படிக்கும் புத்தகங்களை வாங்கி வாங்கிச் சேர்ப்பதுதான்.

ஆனால் மற்றவர்களுக்கு இவை பழைய குப்பைகள். இந்தப் புத்தகக் காதல் பற்றி ’பழைய குப்பைகள்’ என்ற தலைப்பினில் ஆசிரியர் சொல்லி, இருக்கிறார். 

சுருக்கமாகப் பேசு என்ற கட்டுரையைப் படிக்கத் தொடங்கியவுடன், நான் எனது சின்ன வயதினில், ரெயில் பயணமாகத் திருச்சியிலிருந்து முதன்முதலாகச் சென்னைக்குச் சென்றபோது, இடைப்பட்ட செங்கல்பட்டு தொடங்கி மதுராந்தகம் ஏரியைத் தாண்டும் வரை உண்டான அந்தக் குளிர்ச்சியை, முதன் முதலாக அந்தக் கால மெட்ராஸுக்குள் ’பட்டணப் பிரவேசம்’ செய்த அந்த நாளை நினைத்து, எனக்குள் மனம் பரிதவித்தது. இவற்றுள் வரும் உங்களது நடைமேடை (ரெயில் நிலையம்) உங்களுக்கென்று அமைந்த அருமையான சிந்தனை மேடை. 

இன்று ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என்றவுடன், எங்கே பணம் என்று பலரும் அலையக் காண்கிறோம். பணம் பற்றிய ஆசிரியரின் அருமையான சித்தாந்தம் கீழே. 

// பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாகப் பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும், அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும்,  பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்துச் சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்கப் பொம்மையாய் காட்சிகளைக் கண்டு நகர்ந்து விடுவது உத்தமம், // (நீயும் பொம்மை நானும் பொம்மை) 

’சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை’ – என்ற கட்டுரையில் களம்.1 களம்.2 களம்.3 என்று அமைத்து போலியான சாதி ஒழிப்பாளர்களைப் பற்றியும், குழந்தைகள் மனதில் ஜாதி, மதம் உண்டாக்கும் நெருடல்களைப் பற்றியும், இசுலாமியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப் படுவது பற்றியும் வெளிப்படையாக நடுவுநிலையோடு சொல்லி இருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர். 

இன்னும் அரசியல் குறித்தும், பயணம் பற்றியும், விழா தரும் போதை பற்றியும், விளம்பரம் படுத்தும் பாடு பற்றியும், ஆன்மீகத் தேடலில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றியும்., தமிழ்த் தேசியம் பற்றியும், மதம் மற்றும் சாதீயம் பற்றிய தனது பார்வையையும் - மேலும் அங்கங்கே ஆசிரியரின் சுவாரஸ்யமான மலரும் நினைவுகளையும் இந்த நூலில் சொல்லி இருக்கிறார். 

ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள், தான் சார்ந்து இருக்கும் ஏற்றுமதித் தொழிலின் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையிலும் வாசகர்களை இழுக்கும் நடையில் பல கட்டுரைகளையும் எழுதி வருவது இவருக்குள் இருக்கும் எழுத்தின் மீதான ஆர்வத்தையும், இவரது வாசகர் வட்டத்தின் வரவேற்பையும் வெளிப்படுத்தும். குப்பை என்பதற்குத் தமிழில் செல்வம் என்ற பொருளும் உண்டு. 

இவர் எழுதிய இந்த ’பழைய குப்பைகள்’ என்ற நூல், வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய ஒரு பொக்கிஷம்; சிலப்பதிகாரம் சொல்வதைப் போல ’கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை’ – என்றே சொல்லலாம். 

அன்புடன் – தி.தமிழ் இளங்கோ       
திருச்சி,                              
                         
வலைப்பதிவு - எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com      



பழைய குப்பைகள் (மின் நூல்)


இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்


ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்  (51.356)

தமிழர் தேசம்  (16.652)

காரைக்குடி உணவகம் (23.713)

பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)

வெள்ளை அடிமைகள்  (16. 943)