இதுவரையில் இந்த தளத்தில் எல்லாவிசயங்களையும் பற்றியும் எழுதியுள்ளேன். இதுவரையிலும் எழுதாமல் இருந்தது வள்ளல் அழகப்பர் பற்றியே.
நீண்டதொரு ஆராய்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உரியவர் அழகப்பச் செட்டியார் அவர்கள். நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் செய்தவர். இந்த சமயத்தில் காரைக்குடி மக்கள் மனற்ம் தங்களது முகநூலில் வெளியிட்டுள்ள அவரைப் பற்றிய விபரங்களை இந்த பதிவில் அவர் நினைவு நாள் நினைவாக இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.
கோடி கொடுத்த கொடைஞன்
குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!"
என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நினைவு நாள் MARCH 5
காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.
அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பர்
வள்ளலின் வரலாறு சில வரிகளில்:
1909-ல் செட்டி நாட்டின் முக்கியமான பகுதியாக விளங்கும் கோட்டையூரில் பிறந்தார் அழகப்ப செட்டியார். அவர் தந்தையார் ராமநாதன் செட்டியார், மலேசியாவில் ரப்பர் தோட்டம் வைத்திருந்தார். மகன் அழகப்பன் வளர்ந்து பெரியவனாகி இந்த ரப்பர் தோட்டத்தை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதுதான் தந்தையின் ஆசை. ஆனால் மகனுக்கோ, பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தபிறகு லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர்-அட்-லா படிக்க வேண்டும் என்று ஆசை.
தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல், மலேசியாவுக்கு கப்பல் ஏறினார் அழகப்பன். அப்போது அவருக்கு அடித்த காய்ச்சலைக் கண்டு கப்பலிலிருந்து இறக்கிவிட்டு விட்டார் கப்பல் அதிகாரி. உயர்படிப்பு படிக்கிற ஆசையை தன் பெரியப்பாவிடம் எடுத்துச் சொல்ல, 'கவலைப்படாதே, நான் உன்னை படிக்க வைக்கிறேன்’ என்றார் அவர். ஆனால், அவரும் அடுத்த சில மாதங்களிலேயே இறந்துவிட, அழகப்பன் நிலைகுலைந்து போனார். மகனின் ஆர்வத்தை உணர்ந்த தந்தை, அழகப்பனை லண்டனுக்கு அனுப்பி பார்-அட்-லா படிக்க வைத்தார். அழகப்பர் இலண்டனில் படித்துக்கொண்டே சார்ட்டர்டு பாங்கில் வேலை பார்த்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்தினார்.
இதற்கிடையில் அவர் விமானம் ஓட்டும் தொழிலிலும் பயிற்சி பெறத் தொடங்கி இரண்டாண்டில் சிறந்த விமானியாகவும் ஆனார். இங்கிலாந்தில் கல்வி கற்று மூன்றாண்டுகளுக்குப் பிறகு விமானி, பாங்குத் தொழிலாளி, வழங்கறிஞர் என்ற பல சிறப்புகளுடன் அழகப்பர் தாய்நாடு திரும்பினார்.
லண்டனில் சட்டப் படிப்பை படித்தபிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார். சில ஆண்டு காலம் வழக்கறிஞர் வேலையை வெற்றிகரமாகச் செய்து வந்தார் எனினும், அதையே தொடர்ந்து செய்ய அவருக்கு இஷ்டமில்லை. காரணம், அவர் உடம்பில் ஓடியது பிஸினஸ் ரத்தம். அவர் படித்தது ஆங்கில இலக்கியமும் சட்டமும் என்றாலும் நிதி நிர்வாகத்தை ஏறக்குறைய கரைத்துக் குடித்திருந்தார். சட்டப் பணியை விட்டுவிட்டு, பிஸினஸ் உலகில் இறங்கினார்.
அழகப்ப செட்டியார் முதல் முயற்சியாக கேரள மாநிலம் திருச்சூருக்குப் பக்கத்தில் ஒரு நூற்பாலையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்குக் கொஞ்சம் இழப்பையே தந்தது அந்த நூற்பாலை. எந்த பிஸினஸையும் கொஞ்சம் காலஅவகாசத்தில் கரை கண்டுவிடுகிற திறமை அவருக்கு உண்டு. எனவே, நஷ்டத்தில் இருந்த ஆலையை லாபத்திற்குக் கொண்டு வந்தார். அந்த ஆலையில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டித் தந்தார். அந்த பகுதி இன்றும் அழகப்பா நகர் என்கிற பெயரிலேயே இருக்கிறது.
இதன்பிறகு மும்பை பங்குச் சந்தையில் ஈடுபட ஆரம்பித்தார். மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் அவர் விரலசைவுக்கு கட்டுப்பட்டு நிற்பதைக் கண்டு மனம் புழுங்கிப் போனார்கள் அங்கிருந்த பல பெரும் டிரேடர்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அழகப்ப செட்டியாருக்கு எதிராக ரகசியத் திட்டம் போட, சில நாட்களிலேயே நாற்பது லட்ச ரூபாய்க்குமேல் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. 1940-களில் நாற்பது லட்ச ரூபாய் என்பது கொஞ்சநஞ்சமல்ல.
நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கை நிறைய பணம், மலேசியாவில் ரப்பர் தோட்டம், பர்மாவில் டின் சுரங்கம், கேரளாவில் நூற்பாலை, கொல்கத்தாவில் இன்ஷூரன்ஸ் பிஸினஸ், சென்னையில் விமான சர்வீஸ் நிறுவனம் என லாபத்தை அள்ளித்தர பலவிதமான தொழில்கள் இருந்தபோதும், அவர் மனம் தனது சொந்த மக்களுக்கு நன்மை செய்வதிலேயே முனைப்பாக இருந்தது.
1940-களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் மதுரைக்கோ,திருச்சிக்கோதான் போக வேண்டியிருந்தது. இதனாலேயே பலரும் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை. இதற்கொரு தீர்வாக, காரைக்குடியில் பல கல்வி நிலையங்களை அமைத்தார்.
1947-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அழகப்பர் சென்னை அடையாற்றில் நடந்த அன்னிபெசண்ட் அம்மையார் நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், அழகப்பரின் சிறந்த நண்பருமாகிய, திரு. இலட்சுமணசாமி முதலியார; தலைமை வகித்தார். அவர் தமது தலைமையுரையில், தமிழகத்தின் கல்வித்தேக்கம் பற்றிக் குறிப்பிட்டு, செல்வர்கள் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட முன்வரவேண்டும் என்றும், கல்லூரிகளை ஏற்படுத்த ஒத்துழைக்க வெண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளைக் கேட்ட அழகப்பர் உடனே மேடைக்குச் சென்று, காரைக்குடியில் தான் ஒரு கல்லூரி ஏற்படுத்த முன்வருவதாக அறிவித்தார்.
இதனை அங்கு வந்திருந்த அனைவரும் வரவேற்றனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்ற முறையில் திரு. இலட்சுமணசாமி முதலியார் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு மேடையிலேயே அனுமதி வழங்கினார். மறுநாள் காரைக்குடிக்கு வந்த அழகப்பர் காரைக்குடி நகர்மன்றத்திற்குச் சொந்தமான, காந்தி மாளிகையை வாடகைக்குப் பெற்று, பேராசிரியர்கள் பலரை அதிகச் சம்பளம் கொடுத்து அழைத்து வந்து 15.8.1947 இந்தியா சுதந்திரம் பெற்ற நாளன்று அழகப்பா கல்லூரியைத் தொடங்கினார். இதனையடுத்து அங்கு பல கல்வி நிலையங்கள் தோன்றின.
காரைக்குடியில் அழகப்பர் நிறுவிய ‘‘மின்-இரசாயன ஆராய்ச்சிக்கூடமே அவரின் மேலான சாதனையாகும்.
இவ்வாராய்ச்சிக் கூடத்தைக் காரைக்குடியில் நிறுவுவதற்காக வள்ளல் அழகப்பர் 15 இலட்சம் ரூபாயும், 300 ஏக்கர் நிலமும் கொடுத்து, 1948-ஆம் ஆண்டு அதற்குரிய அடித்தளக்கல்லினை, முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு நாட்டச் செய்தார். அதன்பின் அதனை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் உயர்நிலைப்பள்ளி, தொழில் நுணுக்கப்பள்ளி உள்ளிட்டவற்றை நிறுவியதுடன் பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் ஏராளமாகப் பணத்தை வாரி வழங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தார் கிண்டியில் அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியை நிறுவுவதற்கு 5,00,000 ரூபாயும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் கல்லூரி தொடங்குவதற்கு 5,00,000 ரூபாயும், கொடுத்தார்.
காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும் ஆவன செய்தார். இங்ஙனம் தமிழக்த்தின் பொறியியற் கல்வி வரலாற்றில் மூன்று பொறியியற் கல்லூரிகள் முதலில் தோன்றுவதற்கு வித்தூன்றியவர் அழகப்பர் ஆவார். 1948-ஆம் ஆண்டு கணிதமேதை இராமாநுசத்தின் பெயரால் சென்னையில் பெரும் பொருட்செலவில் அழகப்பர் கணித அறிவுக்கூடத்தைத் தொடங்கினார். டெல்லியில் உள்ள தென்னிந்தியக் கல்விக் கழகத்திற்கும், மதுரை லேடிடோக் கல்லூரிக்கும் நன்கொடைகள் வழங்கினார்.
அழகப்பர், தமது மகளிர் கல்லூரிக்குத் தாம் குடியிருந்த சொந்த மாளிகையையே மனமுவந்து கொடுத்தார்.
காரைக்குடி மக்கள் மன்றம் தமக்கு ஆண் குழந்தை இல்லாதததை அழகப்பர் குறையாகக் கருதியதே இல்லை. எனினும் அவரது உறவினர்கள் சில சமயம், ‘‘உங்களுக்கு ஆண் வாரிசு வேண்டாமா? யாராவது ஒரு பையனைத் தத்து எடுத்துக் கொள்ளுங்களேன்’’ என்று வலியுறுத்துவா.
அதற்கு அழகப்பர்,
‘இதோ.கல்லூரியில் கல்வி கற்றுச் செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் என் வாரிசுகள் தானே. இவர்கள் இத்தனைபேர் இருக்கும்பொழுது நான் ஏன் குறிப்பிட்ட ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்க்கவேண்டும். அது தேவையில்லை. என் சொத்து எல்லோருக்கும் பயன்படட்டும்’’ என்றாராம். அனைத்துக் குழந்தைகளையும் தமது குழந்தையாகக் கருதிய அழகப்பர் உள்ளம் போற்றுதற்குரியது.
5 comments:
எத்தனை தொழில்கள்...?...ம்... பெருமூச்சு தான் வருகிறது...
வள்ளலின் நினைவு நாளில் அவரைப் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி...
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன, தமிழ் வெளி ஒரு நல்ல பயனுள்ள வலைத்தளம் ... தமிழ் வெளி நன்றி....
எமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்
எம் மண்ணின் மைந்தரை பற்றிய நல்ல பல விசயங்களை தெரிந்து கொண்டேன் . ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன் .
ஒருமுறை அழகப்பா செட்டியார் உணவருந்திகொண்டிருந்த போது, உதவி கேட்டு ஒருவர் வந்திருந்தாராம் , பாதி சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே எழுந்து போய் கை கழுவி விட்டு , வந்தவருக்கு வேண்டிய உதவியை செய்து அனுப்பிவிட்டபிறகே மீண்டும் சாப்பிட வந்தமர்ந்தாராம்.சாப்பிட்டு முடித்த பிறகு போயிருக்கலாமே என்று கேட்டதற்கு , சாப்பிட்டு முடித்த பின் மனம் மாறி விடும் வாய்ப்பிருக்கிறது . எப்பவுமே உதவியையோ, நல்ல விஷயங்களையோ ஒத்திபோடவே கூடாது , உடனுக்குடன் செய்துவிடவேண்டும் என்றாராம் .
வாட் எ மேன்......! வாட் எ கிரேட் ஹியூமன் பீயிங் ......!
பதிவிற்கும் , பகிர்விற்கும் மிக்க நன்றி அண்ணா ...!
அவர் கல்லூரியில் படித்தவன் என்பதில் பெருமை அடைகிறேன். அந்த வகையில் கல்வி தந்த வள்ளலுக்கு நானும் ஒரு ஆண் வாரிசுதான்.
வாரிசுகளுக்கும் வணங்க சொல்லித்தர வேண்டிய மனிதர்கள் .மீன் கொடுப்பதை விட அதை பிடிக்க கற்று கொடுப்பது இவர்கள் செய்த வேலை .
Post a Comment