Thursday, September 30, 2010

ஏணிப்படிகளின் தொடக்கம்

முத்து முருகேசன் தன்னுடைய பத்திரிக்கை வாழ்க்கையை தொடங்கிய ஆண்டு 1973, கலைஞரின் தமிழ்முரசு  பத்திரிக்கையில் ரிப்போர்டர் வேலை.

கலைஞரின் கையெழுத்துப் பற்றி தெரியாதவர் எவருமே இருக்கமாட்டார்கள்.  அடித்தல் திருத்தல் இருக்காது.  வினோதமான நெளி போல வளைந்து போய்க் கொண்டுருக்கும்.

வாக்கியங்கள் வார்த்தைகள் மாறும் போது அதை சமய சந்தர்ப்பத்திற்கேற்ற அப்படியே கோர்ப்பதில் வல்லவர். அடித்தல் திருத்தல் இன்றி அப்படியே கோர்த்து முடித்து விடுவார். இந்த இடத்தில் இப்படி மாறி  வர வேண்டுமே என்று எவராலும் எண்ணத் தோன்றாது. அவரைப் போலவே இவரின் கையெழுத்தும் எத்தனை பக்கங்கள் தொடச்சியாக எழுதிக் கொண்டே இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய கல்வெட்டு போலவே இருக்கும். இன்று வரைக்கும் சேகரித்த அத்தனை தாள்களையும் பொக்கிஷம் போலவே பாதுகாத்துக் கொண்டுருக்கிறார்.

அப்போது மதுரையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டுருந்த பத்திரிக்கைகள் தினந்தந்தி, தினமணி. அந்த 3000 பிரதிகளை இவரின் தனிப்பட்ட சமூக கட்டுரைகள் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு மேடேறி ஓட ஆரம்பித்தது.  இவருடைய மற்ற ஆராய்ச்சிகள் எப்போதும் போல ஓடிக் கொண்டே இருந்தது. இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பல தரப்பட்ட மக்களின் பிரச்சனைகள், காரண காரியங்கள், பிரபலங்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் கோடு கிழித்துப் பார்க்க பழக ஒவ்வொன்றாக புரிபட ஆரம்பித்தது.

முமு எவருடனும் அதிகம் பேசுவதில்லை.  எவர் குறித்தும் மற்றவர்களிடம் உரையாடுவதும் இல்லை.  செய்திகள் சேகரிக்கச் செல்லும் போது அடித்தட்டு மக்களிடம் முதலில் பேச்சை ஆரம்பித்து கடைசியில் தான் பொதுக்கூட்ட மேடைக்கு செல்லக்கூடியவர். குறிப்பிட்ட தலைவர்கள் இவரிடம் மக்களின் நாடி எப்படி உள்ளது என்று கேட்டதெல்லாம் உண்டு. இதைப் போலவே தனக்குத் தெரிந்து ஒருவரின் அந்தரங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை.  கோடு கிழித்துக் கொண்டு ஒரே மாதிரியான வாழ்க்கை. இன்று வரைக்கும் அப்படித்தான்.

இவருடைய நிர்ப்பந்தம் தாங்க முடியாமல் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் வீட்டுக்குள் இருக்கும் சாமி படங்களை பார்த்து கையை உயர தூக்கி சப்தமாக " அப்பா பாத்துக்கப்பா.............." என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக நகர்ந்து போய் விடுவதுண்டு. ஆனால் விட மாட்டார். பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். அவருடைய வாழ்வில் அதிகபட்சமாக பேசிய ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன்.  சிந்திப்பது, எழுதுவது கொஞ்சம் யாரும் கேள்வி கேட்காமல் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டீ குடித்துக் கொண்டேயிருப்பது.  இது தான் முக்கியப் பிரச்சனையே.

இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா சட்டம் கலைஞரின் தமிழ்முரசு பத்திரிக்கையை மூட வைக்க மறுபடியும் இவரின் வாழ்க்கை முட்டுச் சந்தில் போய் நின்றது.

மறுபடியும் இன்றைய உரத்துறை அமைச்சருக்காகவே (?) மதுரையில் (1980) முரசொலி ஆரம்பிக்க கலைஞர் முதலில் தேடிய ஆள் எங்கே முமுகடந்த கால அத்தனை அனுபவங்களையும் மொத்தமாக தீவிர கட்டுரைகளாக எழுதித் தள்ள முரசொலி முன்னேறத் தொடங்கியது.  விதி சும்மா விடுமாஇவர் எந்த இடத்திற்கும் நேரிடையாகவே சென்று செய்திகள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்.  இன்றைய " இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம்" என்பதை அன்றே ஆரம்பித்தவர்.

ஒரு அரசு போக்குவரத்து நிறுவன ஊழல் சம்மந்தமான விசயத்தில் தலையிட்டு சேகரித்த செய்திகள் மிகுந்த களேபரத்தை உருவாகத் தொடங்கியது. அசைக்க முடியாத ஆதாரங்கள் அத்தனையும் இவரின் கைகளுக்கு வந்து விட அதுவே கட்டுரையாக மாறி பிரிண்டர் வரைக்கும் வந்து விட்டது. அஞ்சா நெஞ்சன் அதை வெளியிட வேண்டாம் என்று சொல்ல உருவான பனிப்போரில் இவர் தலை உருளத் தொடங்கியது. 

இவரிடம் இரண்டு கொள்கைகள் எப்போதுமே உண்டு.  எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்யக்கூடாது.  எக்காரணம் கொண்டும் அந்த கட்டுரைகள் பதிப்புக்கு போகாமல் இருக்கக்கூடாது. மிகப் பெரிய ஆச்சரியம் கலைஞர் அவர்கள் இவரின் எழுத்துக்கு கொடுத்த மகத்தான அங்கீகாரம்.  கலைஞர் டெல்லியில் இருந்தாலும் காலையில் அவர் கேட்பது முமு கட்டுரை என்னாச்சு?

காரணம் கலைஞருக்குப் பிறகு பெயர் போட்டு வரும் அளவிற்கு இவரின் கட்டுரைகள் அப்போது பிரசித்தம்.

அஞ்சா நெஞ்சன் அவர்களுடன் உருவான் மனக்கசப்பில் வெளியேறி விட்டார்.  வெளியேறும் போது மற்றொன்றையும் செய்து விட்டே வெளியே வந்தார்.  என்ன நடந்தது? ஏன் நடந்தது? போன்ற பின்னால் உள்ள விவகாரங்களை கடிதமாக கலைஞருக்கு எழுதி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து விட கலைஞர் செய்த உடனடி காரியம் மதுரை முரசொலியை ஒரு மே தினத்தில் மூடவைத்தது.  

கண்டிப்பு, கறார், உண்மை, உழைப்பு, அசாத்தியமான திறமை போன்ற அத்தனையும் ஒரு மனிதருக்கு இருந்தால் இந்த உலகம் எப்படி வாழவைக்கும்? எப்படி தூற்றும்? என்ன மாதிரியான விமர்சனங்கள் வரும்? போன்ற கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த நபர் முத்து முருகேசன். 

நான் பார்க்காமல் படித்த வாயிலாக உணர்ந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 

இவர்கள் இருவருமே இரண்டு துருவங்கள். 

இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது..

ஊரும் வாழ்வும்

என்னுடைய வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் எத்தனை ஆச்சரியங்கள் தந்ததோ அந்த அளவிற்கு தினந்தோறும் சந்தித்துக் கொண்டுருககும் மனிதர்கள் எப்போதுமே ஏராளமான ஆச்சரியங்களை தந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  நான் இருக்கும் ஏற்றுமதித் துறையில் புழங்கிக் கொண்டுருக்கும் யூரோ, அமெரிக்கன் டாலர், பிரிட்டன் பவுண்ட் இது போக மற்ற நாட்டு பண பரிவர்த்தனைகள் அத்தனையும் கையாண்டு கொண்டுருப்பது எவரும் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல.  பெரும்பாலும் ஒவ்வொருவரும் அவர்களின் சிறு வயதில் திருவிழாக்களில் விரும்பிய டாலர் செயின் கூட வாங்க முடியாமல் தவித்தவர்கள் தான்.  

ஒவ்வொரு நாளின் காலை முதல் இரவு வரைக்கும் உள்ளூர் தொடர்புகளும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் சர்வதேச தொடர்புகளுமாய் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கை என்பது மிக அழகானது.  டென்ஷன், கோபம், எரிச்சல், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, குரோதம் என்று எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் இவை அத்தனையும் தினமும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போதும் ஊருக்குச் செல்லும் போது அங்கே உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் இருப்பிடம், உறக்கம், உணவு இது மூன்றுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.  ஆனால் 300 கிமீ தொலைவில் எத்தனை எத்தனை மாற்றங்கள்?. மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஏராளமான அனுபவங்களை உள்வாங்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

தன்னம்பிக்கை, உழைப்பு, தொடங்கி அதிர்ஷடம்,ஜோதிடம், எண்கணிதம்,கைரேகை போன்ற பல கண்களுக்கு தெரியாத சக்திகளை நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை அனுபவம் மூலமாக உணர்த்திக் கொண்டுருக்கிறார்கள். .

நண்பர் சொன்னது போல "ஏதோ ஒன்று". ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் இன்று பலருக்கும் முதலீடு போடச் தேவையில்லாத லாபம் கொழிக்கும் தொழில்.  இன்று நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தலைநகர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டுருப்பவர்கள் முதல் கலைஞர் குடும்பம் முதல் வளர்ந்து கொண்டுருக்கும் கஞ்சா கருப்பு வரைக்கும் இத்தனையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை வெகு ஜனம் அறியாத ஒன்று. எல்லோருமே இறுதியில் சொல்லும் ஒரே வார்த்தை "உழையுங்கள் முன்னேறலாம்.", ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  அவரவர்களுக்கு தெரிந்தவகையில். ஆனால் நான் இருக்கும் ஊரில் தன்னுடைய குழந்தைகளுக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழ் வாங்க பல வாரம் காத்து இருக்க வேண்டிய கொடுமையும் உண்டு. தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் வரையிலும் நாம் அடைந்து கொண்டு இருக்கும் துன்பம் அளவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது.  அது போன்ற சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு இறுதியில் இந்த நம்பிக்கைகள் தான் வாழ்க்கையின் வழித்துணையாக மாறிவிடுகின்றது.


இது போன்ற கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு.  இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு.

தொடக்கத்தில் எதையும் கவனிக்கத் தேவையில்லாமல் காலங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. காரணம் வறுமையில்லாத இளமைப் பருவம்., அதுவே வாழ்ந்து கொண்டு இருந்த சமூக அனுபவங்களை கவனிக்கத் தெரியாமல் கடந்து வந்தாகி விட்டது. 


என்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள அவசரமாய் கடக்க வேண்டியதாய் இருந்தது. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை, 


விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் மிக ஆழமாக உள்வாங்கும் இந்த சூழ்நிலையில் மனதில் இருக்கும் வியப்பு மாறாமல் தான் இருக்கிறது.

முதல் இருபது வருடங்களில் குடும்பத்தினர் என் மேல் வைத்திருந்த பல கவலைகளில் என்னுடைய இறை மறுப்புக் கொள்கை.  அது வெறும் கொள்கையாக இருந்தாலும் கூட பராவாயில்லை.  இறை கொலையாக இருந்த காரணத்தால் நான் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் குடும்பத்தினரின் சமூக அந்தஸ்து மிகவும் பாதிக்கப்பட்டது. 

வந்து சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேர்களும் கொண்டு வரக்கூடிய முக்கிய குற்றச்சாட்டு கூட்டாளி நாதாரிகளுடன் சேர்ந்து கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காய் எடுத்து தின்று கொண்டு இருக்கின்றான். 

அவர்களைப் பொறுத்தவரையிலும் அது தோஷம் கழித்த ஒரு நிகழ்வு.  அதுவே என்னுடைய பார்வையில் தின்று தீர்க்க வேண்டிய ஒன்று.  என்னுடன் இருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான் திக்கு தெரியாமல் திரிந்தோம். ஊருக்குள் இருக்கும் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தோம்.   கொள்கை கொண்ட அத்தனை பேர்களும் இன்று மாறிவிட்டார்கள். தாமதமாக என்றாலும் நானும் கூட மாறித்தான் போயுள்ளேன். காரணம் அனுபவங்கள். 

சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை விட, கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட இந்த அனுபவங்கள் தான் ஒருவரை தலைவராக மற்றொருவரை தறுதலையாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. 

ஆனால் ஆரம்பம் முதல் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோவிந்த ராஜன் இன்று தென்னக ரயில்வேயில் உயர்பதவியில் இருந்தாலும் தான் வைத்திருந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அவன் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.  அவன் பத்தாவது படிக்கும் போது சொன்ன தத்துவம் இன்றும் கூட மனதில் பசுமையாக நிற்கிறது.

" உன்னை கடவுள் என்பவர் ஏதாவது கேட்டாராஉன்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாரா? வந்து படையல் வை என்று வீட்டுக்குள் வந்து கேட்டாரா? போடா....... போய் வேலையைப் பாருங்கடா................"

அறிவுரை யாருக்கும் சொல்ல மாட்டான்.  ஏன்யாரிடமும் அளவுக்கு அதிகமாகக்கூட பேசமாட்டான்.  அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சடங்ககுகளில் கூட கடமைக்கு என்று நின்று கொண்டு இருப்பான்.  திருநீறு பூசி விட்டு எப்போதும் போல அவன் இயல்பான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டுருப்பான்.  இறை குறித்து எந்த வாக்கு வாதமும் செய்து பார்த்தது இல்லை.  அவர்கள் குடும்பத்தினர் கவலைப்பட்டாலும் தொந்தரவு இல்லாத அவன் கொள்கை இன்று வரையிலும் தடுமாறாமல் நல்ல உயர்ந்த பதவியில் இருக்கின்றான். அவன் தான் எங்கள் செட்டில் கடைசியாக திருமணம் செய்து கொண்டவன். 

40 வயதில் கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் எந்த தவறும் செய்யாமல் அல்லது விரும்பாமல் இன்று வரைக்கும் எனக்கு அதிக ஆச்சரியத்தை தந்து கொண்டு இருப்பவன். பத்தாவதுக்குப் பிறகு தொழில் நுட்ப கல்லூரி முடித்து சென்னையில் உறவினர் வீட்டீல் அவமானத்துடன் தங்கியவன். எதையும் பொருட்படுத்தாமல் தங்கியிருந்த இடத்தில் இருந்து சைக்கிள் ரயில் மீண்டும் சைக்கிள் மூலமாக பயணம் செய்து தொடக்கத்தில் 350 ரூபாய்க்கு ரெட்ஹில்ஸ்லில் வேலை செய்தவன். ரயில்வே பரிட்சை எழுதி ஒவ்வொரு படியாக உயர்ந்து வந்தவன். திருமணம் குறித்து கவலைப்படாமல் இருந்தவனைப் பார்த்து குடும்பத்தினர் தான் தேடி அலைந்து கடைசியாக விசாகபட்டினத்தில் இருந்து பெண் பார்த்து திருமணம் முடித்தார்கள்.

நான் முன்னோடிகளாக வைத்து இருப்பவர்களில் அவனுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. ரயில்வே துறையில் ஐ ஆர் எஸ் என்ற உயர் பதவிக்கு பரிட்சை எழுத அவனுக்கு முக்கிய தகுதிகள் அத்தனையும் உண்டு.  அவன் எழுதினால் கூட ஒரே தடவையில் தேர்ச்சி பெற்று வரக்கூடியவன்.  செய்ய மாட்டான்.  காரணம் இந்த பகுதியில் இடையே பார்க்கலாம்.

திரு. முத்து முருகேசன்.(MUTHU MURUGESON), எப்போதுமே தன்னுடைய பெயரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். இந்த பெயர் தான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பிய பெயர்,

2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் தங்கியிருந்த அறைக்கு உள்ளே வந்தவர் அறிமுகப்படுத்திய நபர்.  அப்போது இவர் மதுரையில் திருநகரில் தன்னுடைய வீட்டில் வாழ்ந்து கொண்டுருந்தார்.  நம்பிக்கைகளுக்கும் உழைப்புக்கும் இடையே போராடிக் கொண்டுருந்த என்னுடைய அன்றைய திருப்பூர் வாழ்வில் எதிர்பாரா திடீர் திருப்பமாக இவருடைய அறிமுகம் கிடைத்தது.

" உங்கள் மனக்குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இவரைப் போய்ப் பாருங்கள் " என்று நண்பர் ஒரு முகவரியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.  கல்லூரி சமயத்தில் ஒரே ஒரு சமயம் தொலைந்து போன பரிட்சைத் தாளை தேடி வந்த மதுரைக்கு இப்போது இரண்டாவது முறையாக திருப்பூரில் இருந்து பயணம்.  முகவரி கண்டு பிடித்து வீட்டுக்குள் நுழைந்த போது கதர் ஜிப்பா மற்றும் நாலு முழ வேட்டி அணிந்துருநத அந்த ஒல்லியான உருவம் என்னை வரவேற்றது. வீடு முழுக்க புத்தக குவியல் தான் அதிகம் தெரிந்தது. அவர் மனைவி காபி கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார்.

திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டிக் கொண்டுருந்தவர்களை மீற முடியாமலும் என்னுடைய லட்சியங்கள் பாதி அளவில் இருந்த காரணத்தாலும் ஒரு வழிகாட்டல் தேவையாய் இருந்தது. ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களும், இந்த உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு இருந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். மூன்று முறை தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணங்கள் தட்டிப் போய்விட், மூதலிடு போட்டு உட்கார வைத்து அழகு பார்க்க காத்துருந்தவர் தடுமாறி நின்று விட் இதே போல் அடுத்தடுத்து சூறைக் காற்றும் சூறாவளியும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருக்க யோசித்த தருணங்கள் அது.

அவரின் வழிகாட்டல் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கத் தொடங்கியது.

அவருடன் பேசி முடித்து விட்டு, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் கொடுத்த நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு வந்த என்னை எப்போதும் போல திருப்பூர் வாழ்க்கை மறக்கடித்து விட்டது.   திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து பெயர் வைக்கும் சூழ்நிலையில் தான் மறுபடியும் அழைத்தேன். எவர் அழைத்தாலும் அத்தனை சீக்கிரம் வெளியே சென்று விடாத மனுஷன், மறு நாள் திருப்பூருக்கே வருகின்றேன் என்று வீட்டுக்குள் வந்தவர் என்னுடைய மறுமலர்ச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பககங்களை எழுதத் தொடங்கினார்.

அப்போது தான் அவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது. ஓய்வு கிடைத்த ஒரு சனி ஞாயிறு முழுக்க உரையாடலில் தான் கழிந்தது...அவர் கற்று வைத்திருந்த வித்தைகளை விட அவர் பேசி மடக்கி அவர் வழியில் கொண்டு செலுத்த ஆரம்பித்தார்.  என்னுடைய அறிவியல் கருத்துக்கள் சற்று மூச்ச வாங்க ஆரம்பிக்க வாழ்க்கை ஆணிவேரின் பிடிமான்ம் அன்று முதல் தான் ஆழமாய் ஊன்றத் தொடங்கியது. அரசியல் இரும்புகளையே கரைத்துப் பார்த்தவர். என்னைக் கரைக்க அதிக நாள் எடுத்துக் கொள்ளவில்லை.

என்னை அவருக்குப் பிடித்ததை விட நான் எப்போதும் விரும்பும் அரசியல் துறை ஆசானாக அமைந்த காரணத்தால் வந்தவரை ஒரு வாரம் தங்க வைக்க மனைவி என்னை வினோதமாக பார்த்தார்.  நட்பு வட்டாரம் என்பது முழுவதும் நின்று குழந்தைகள் மட்டுமே உலகமாக வாழ்ந்து கொண்டுருந்த வனுக்கு அவர் மேல் நான் காட்டிய அக்கறையும் மரியாதையும் அவளை ஆச்சரியப் படுத்தியது.

இரட்டைக்குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டுருந்தவளுக்கு இவர் அடிக்கடி விரும்பும் தேநீர் பழக்கம் எரிச்சலைத்தந்தாலும் என்னை சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுருந்தவளுக்கு இவரையும் சகித்தே ஆக வேண்டிய சூழ்நிலை., காரணம் எனக்கும் அதே பழக்கம்.

அதுவரைக்கும் அத்தனை அரசியல் விசயங்களையும் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்துக் கொண்டு ஒரு விதமான உத்தேச கொள்கையோடு வாழ்ந்து கொண்டுருந்த எனக்கு இவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளராக இருந்த காரணத்தால் என்னை அவரிடம் மிக நெருக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

அப்போது தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் வேலை முடித்து சோர்வோடு வந்த பொழுதெல்லாம் முழு ராத்திரி முழுக்க இவருடன் பேசி விட்டு மறுநாள் தூங்காமலேயே அலுவலகத்திற்கு சென்று விடும் பழக்கமும் உருவாகத் தொடங்கியது.  .

அக்மார்க் காந்தியவாதி.  இன்று வரையிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு தமிழ் திரைப்படத்திற்கு தேவைப்படும் அத்தனை சுவாரஸ்யங்களும் திடீர் திருப்பங்களும் இவரது வாழ்க்கையில் உண்டு. இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு தனி மனித ஆளுமையால் மொத்த வாழ்க்கையும் மாறிப்போய் 1990க்குப் பிறகு தான் நேசித்த பத்திரிக்கை உலகத்தை மொத்தமாக கை கழுவி விட்டு இன்று திருப்பூரில் மகன் வீட்டில் வசித்துக் கொண்டுருக்கிறார்.

இவரால் உயர்ந்தவர்களும், இவர் நெருக்கமாக சந்தித்த இந்திரா காந்தி,எம்.ஜீ.ஆர்,கலைஞர் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு.  ஆனால் அத்தனையும் விட  ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை இயக்கம் சார்ந்த நபர்களும் அடங்குவர். ஈழத்தின் 1970 க்குப் பிறகு சிறிது பெரிதுமாக அடுத்த ஏழு ஆண்டு ஏறக்குறைய 36 இயக்கங்கள் உண்டு என்பதை படித்தவர்களும் களத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் தெரியும். அதில் பல இயக்கங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இடம் கிடைக்காமல் மூழ்கிப் போனவர்களும் உண்டு.  அதில் பல பேர்கள் இவரின் எழுத்துக்கு ஆதரவாளர்.  சிறீ சபாரெத்தினம், பாலகுமார்,உமா மகேஸ்வரன் போன்றவர்கள் இவருடன் மதுரையில் இரண்டு நாட்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தங்கியிருந்தவர்கள்.

இதுவரைக்கும் ஈழம் குறித்து எழுதிய 70 சதவிகித எழுத்தாளர்கள்கள் பெரும்பாலும் புத்தக அறிவு மூலமாகத்தான் தங்களது படைப்புகளை எழுதியிருப்பர்.

ஆனால் இவர் எழுதிய "இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை" என்ற கட்டுரைகள் (1988) அன்றைய தினத்தில் விளம்பரம் இல்லாமல் விற்றுத் தீர்த்த பத்திரிக்கையின் செல்வாக்கு பழைய பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியக்கூடும். எந்த வித புத்தக அறிவும் இல்லாமல் அத்தனையும் சந்தித்த நபர்களின் வாக்குமூலங்களை வைத்தே உருவாக்கியவர். இவரை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கையில் இருந்து வந்தவர்கள் அநேகம் பேர்கள். அதிலும் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தொடக்கத்தில் உருவான சர்ச்சை நிறைந்த ஆளுமையின் காரணமாக பல நூறு முஸ்லீம் மக்கள் தினமும் இவரை வந்து சந்திப்பது அன்றாட வாடிக்கை.

ஒரு நாட்டின் வராலாற்றுப் புத்தகத்தை படித்தால் அந்த நாட்டில் வாழ்ந்து கழித்த அனுபவத்தை படிப்பவர்களுக்கு தரக்கூடும். அதைப் போலவே இவரின் மொத்த வாழ்க்கையையும் தெரிந்து கொள்பவர்களுக்கு வேறு சில அனுபவங்களைத் தரக்கூடும்.

Wednesday, September 29, 2010

உண்டு உறங்கி விடு. செரித்துவிடும்.

அவர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருப்பவர். தொழிலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமே நல்ல புரிந்துணர்வு உண்டு.. நான் திருப்பூரில் இதுவரைக்கும் சந்திக்காத ஒரு ஆபூர்வ நபர்.  தனிமனித ஓழுக்கம் அதற்கு மேல் வெளிநாட்டில் இருப்பவருக்குச் சொந்தமான நூறு கோடி சொத்தை தனது நம்பிக்கை ஒன்றின் மூலம் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பவர். பல ஆச்சரியங்களை எனக்குள் அன்றாடம் தந்து கொண்டுருப்பவர்.

குறுகிய காலத்தில் அவரின் உள் வட்டத்தில் என்னை சேர்த்துருந்தார்.  என்னுடைய தனிப்பட்ட திறமைகளை விட அவருக்கு காரைக்குடி என்ற ஊரும் அதன் கலாச்சாரமும் ரொம்பவே பிடித்தமானதாக இருந்தது.  வேறொரு காரணமும் உண்டு.,  செட்டிநாட்டு சமையல்.

அவர் கோபியில் பிறந்து கோவையில் வாழ்ந்து கொண்டுருந்தாலும் தொழிலுக்கு அப்பாற்பட்டு பேசும் பேச்சில் கடைசியாக வந்து நிற்பது இந்த அசைவ உணவு சமாச்சாரமே.  நான் தொடக்கத்தில் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் அவரின் தீராத சாப்பாடு வெறியை தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இத்தனைக்கும் அவர் மனைவியும் நன்றாக அசைவ உணவு சமைப்பவர்.

அதனையும் மீறி அவருக்குள் இருந்த ஆர்வத்தை போக்கும் பொருட்டு அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்த சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன்.


சிறிய ஓட்டு வீடு.  உள்ளே பத்து பேர்கள் தான் அமர முடியும்.  அடுத்த வரிசை வருவதற்குள் காத்துருப்பவர்கள் ஓடிப் போய் தான் இடம் பிடிக்க வேண்டும். நாக்குச் சொட்டச் சொட்ட அவர்கள் கொடுக்கும் பக்குவமான அசைவ சமாச்சாரங்கள் விபரம் தெரிந்தவர்களை பல மைல்கள் கடந்து வந்து சாப்பிட வைத்துக் கொண்டுருக்கிறது. அங்கு நண்பர் அமர்ந்து சாப்பிட்ட வேகத்தை பார்த்த போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது.

ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை கூட்டுக்குடித்தனம் என்பதால் பந்தி போலத்தான் வரிசையாக அமர்ந்து பறிமாறிக் கொண்டுருப்பார்கள். ஒவ்வொரு நாளும் திருவிழா போலவே இருக்கும். நான் பார்த்தவரைக்கும அம்மா சமைத்தே இடுப்பு ஒடிந்து போயிருப்பார். வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களும் எடுபுடி வேலைக்கு உதவிக் கொண்டுருப்பார்கள். அடுப்பு என்பது அணையா விளக்கு போல் எறிந்துகொண்டுருக்கும்.
நான் அழைத்துச் சென்ற கடையில் வெற்றிகரமாக இடம் பிடித்து புன்னகையுடன் உட்கார்ந்த நண்பர் சாப்பிட்ட வேகத்தை பார்த்தது திகைத்துப் போய் விட்டேன். அப்படியொரு சந்தோஷத்தை அதற்கு முன் அவரிடம் நான் பார்த்து இல்லை. "மற்றதெல்லாம் அப்புறம் நாம் பேசிக் கொள்வோம்" என்று விளாச ஆரம்பித்து விட்டார். அந்த குறுகிய அறையில் இருந்த மின் விசிறி பெயருக்கென்று ஓடிக்கொண்டு இருந்தது.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைக்க மனமில்லாமல் துண்டுகளை கொண்டாடிக் கொண்டுருந்தார்.

ஊர் வட்டார வழக்கில் சொல்லப்படும் "கொளம்பு" என்பதை கையில் ஊற்றிக் கொண்டு தன்னை மறந்து சுவைத்துக் கொண்டுருந்தார்.  காரணம் சேர்க்க வேண்டிய மசாலா சமாச்சாரத்தை சரியான முறையில் அளவில் சேர்த்தால் இந்த அசைவ சமாச்சாரங்கள் என்பது உங்கள் சொத்துக்களை எழுதிக் கேட்டால் கூட கொடுக்க வைத்து விடும்.

அசைவ உணவு சமாச்சரத்தில் முக்கிய இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று சுத்தம் செய்தல்.மற்றொன்று மசாலா சேர்மான அளவு. மீனோ ஆட்டுக்கறியோ தண்ணீர் விட்டு அலசுவதைப் போலவே அதனை சுத்தம் செய்தல் அதிமுக்கியமானது. தேவையில்லாத கழிவுகளை கழித்து விட வேண்டும். வாங்கும் மீன்களின் வாயைத் திறந்து பார்த்தாலே உள்ளே தெரியும் நிறம் வைத்து நல்லதா இல்லை நாறிப் போனதா என்று. விபரம் தெரிந்தவர்களால் கண்டு கொள்ள முடியும். நீங்கள் சாப்பிடும் எந்த உணவகத்திலும் வீடு போல சுத்தம் செய்தா படைத்துக் கொண்டுருக்கிறார்கள் , செய்யவே மாட்டார்கள். மேலும் உணவகத்திற்கென்றே ஒவ்வொரு இடத்திலும் தனியாக வைத்து இருப்பார்கள்.  கெட்டது, நொந்து போனது, கழிவு போன்ற சமாச்சரங்கள் தான் கடைசியில் பொன் நிற வறுவலாக உங்கள் காசை பறித்துக் கொண்டுருக்கும்.

அலசி, கழுவி முடித்து மஞ்சள் பொடியை அளவாகச் சேர்க்கும் போது மீதியுள்ள கெட்ட வாடை அகன்று விடும். எஞ்சியுள்ள மஞ்சள் தண்ணீர் கரைசலை வெளியேற்றி தனியாக வைத்து விட்டாலே பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.

மற்றொன்று சமைத்துக் கொண்டு இருக்கும் போது கொதி நிலையில் கவனமாக பார்த்துக் கொண்டுருக்க வேண்டும். மண்பாத்திரங்கள் என்றால் அதற்குண்டான மரியாதையும் தனியாக இருக்கும். கொதிக்க தொடங்கும் போதே சேர்த்த தண்ணீரின் அளவு பாத்திரத்தில் இறங்கத் தொடங்கும். கரண்டியில் எடுத்து மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்க்கும் போது அதன் கெட்டித்தன்மையும் உள்ளே வெந்து கொண்டுருக்கும் சமாச்சாரத்தின் சுவையும் புரிய ஆரம்பிக்கும்.

நாக்கில் ஒரு சொட்டு விட்டு பார்க்கும் போது அதன் திரைக்கதை முழுமையும் தெரிந்து விடும். சுவை கூடி வரும் போது முடிவுக்கு கொண்டு வந்தால் பந்தி சாப்பாட்டு சடுதியாக முடியும்.  இல்லாவிட்டால் சமைத்தவர் அடிவாங்கிய பந்தியாக மாறி விடும். .

வெந்து கொண்டுருக்கும் போது நேரம் கடத்துவதோ, அளவு தெரியாமல் மஞ்சள் பொடியை அள்ளிக் கொட்டுவதோ கடைசியில் சாப்பிடுபவர்கள் அட அக்கிரமமே என்று திட்ட வைத்து விடும்.
திருப்பூருக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டுருக்கும். செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்பலகையில் தான் இருக்கும்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இருக்காது. பணத்தாசை அந்த அளவிற்கு கேவலமாக மாற்றி வைத்து இருக்கும். திருப்பூர் மக்களின் அசைவ வெறி கலாச்சாரத்தை எனக்கு தெரிந்த ஒருவரின் சொத்தை பத்து வருடங்க ளில் 60 கோடியாக மாற்றியுள்ளது.  அத்தனையும் ஊரில் இடமாக அரிசி ஆலையாக மாற்ற உதவியுள்ளது.

அப்பாவோ சித்தப்பாக்களோ தொடக்கத்திலேயே சொல்லி விடுவார்கள். " கவுச்சி வாடை வந்து விடக்கூடாது"  என்று கட்டளை போலத்தான் சொல்வார்கள். அதிலும் அண்ணாமலை சித்தப்பா பொண்டுகசெட்டி போலவே சமைத்து முடிக்கும் வரையிலும் காத்துக் கொண்டுருப்பார். ரெண்டு துண்டு உள்ளே போனால் தான் அடுத்த வேலைக்கு நகர்வார். ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அம்மா முதல் சின்னம்மாக்கள் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.. கறிக்கொளம்பு, எலும்புக்கொளம்பு, இரத்தப் பொறியல், இது போக தெரக்கி எடுத்த கறிக்கூட்டு.

எப்போதுமே வெங்காய பச்சடி தனியாக அனாதையாக இலையின் ஒரு ஓரத்தில் கிடக்கும்.

மொத்த நபர்களும் சாப்பிட்டு எந்திரிக்கும் போது கூட்டி முடித்து விட்டு தண்ணீர் போட்டு துடைத்து விட்டு காத்திருக்கும் பெண்கள் பந்தியில் அமர்வார்கள். நான் பார்த்தவரைக்கும் அக்கா அம்மாக்கள் வெறும் எலும்புகளை தின்று கடித்துக் கொண்டுருப்பார்கள்.

இதற்கிடையே வேலையாட்கள் வேறு தனியாக வந்து போய்க் கொண்டுருப்பார்கள். 

வருமானமும் வசதிகளும் பிரச்சனையில்லாத வரைக்கும் அசைவம் என்பது ஊரில் அத்தனை வீடுகளிலும் சைவ சாப்பாடு போலவே இயல்பாக இருந்து கொண்டுருக்கும். நான் அசைவத்தை விட்டொழித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது.  வீட்டில் இயல்பாகவே அந்த பழக்கம் இல்லை.  குழந்தைகள் கூட உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் போது தான் ஒரு கட்டு கட்டுவார்கள்.

தாத்தா முதல அப்பா சித்தப்பாக்கள் மற்றும் தொடர் வாரிகள் அத்தனை பேர்களுமே இந்த அசைவத்திற்கு அடிமை சாசனமே எழுதித் தந்தவர்கள் போலத்தான் வாழ்ந்தார்கள்.  வயல் மற்றும் கடையில் பணிபுரியும் வேலையாட்கள் முதல் வீட்டில் வரும் உறவினர்கள் வரைக்கும் இந்த உயிர்ப்பலியை ரசித்து ருசிப்பவர்கள்.  நானும் அப்படித்தான் வாழ்ந்தேன் வளர்ந்தேன். முதல் இருபது வருட வாழ்க்கையில் தின்று பழகிய நாக்கின் சுவை அடுத்த பத்து வருடங்கள் திருப்பூரின் நான்கு மூலைக்குள் இருக்கும் பொந்து சந்துக்குள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலைய வைத்தது.  செட்டி நாட்டு உணவகம் என்ற தொங்கும் அட்டையைப் பார்த்தால் வண்டி இயல்பாகவே நின்று விடும்.  மூன்று நேரத்திலும் விடாமல் தின்று மொத்தமாக குடல் அறுந்து விழுந்துப் போகின்றது என்று மருத்துவர் எச்சரித்த போது தான சுவாதீனமே வந்தது.

குடல் சார்ந்த அத்தனை நோய்களும் திருமணத்திற்கு முன்பே இந்த தேடி அலைந்து சாப்பிட்ட சாப்பாட்டால் வரத்தொடங்க. திடீர் என்று ஆன்மீக ஞானமும் வந்து சேர இனி ஒவ்வொன்றாக தொலைக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். முதல் பலி இந்த உயிர்ப்பலி.

மூத்த அண்ணி கூட முதலில் கிண்டலடித்தார். நீங்களாவது?நான் நம்பவே மாட்டேன் என்று கேள்விக்குறியாய் பார்த்தவருக்கு வீட்டுக்காரம்மா ஆமோதித்து செர்ன்னபோது அவர்களின் ஆச்சரியம் இன்றும் என் கண் முன் நிற்கிறது.  காரணம் அசைவ வெறியனாகத்தான் வாழ்ந்தேன்,

ஊரில் இரண்டு உணவகம் பிரபல்யமானது. ஒன்று விடத்தையா விலாஸ். இரவு 7 மணி தொடங்கி நடுசாமம் வரைக்கும் தண்ணீர் மக்களால் தடுமாறிக் கொண்டுருக்கும்.  அருகில் கல்லூர் என்ற ஊரில் உள்ள சாராயக் கடை ஆறு போல் ஓடிக் கொண்டுருந்தது. பாட்டிலில் கொண்டு வந்து இங்கு நுழைவதற்கு முன்பு ஊற்றிக் கொண்டு உள்ளே நுழைவார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நண்பர்களுடன் முழித்து படிக்க வேண்டும் என்று ஜல்லியடித்து உருண்டு புரண்டு அனுமதி பெற்று எப்போதும் போல சாலையில் உள்ள பாலத்தில் வந்து அமர்ந்துருந்த போது தான் ராஜு வந்தான்.  எங்களுக்கு ஒரு வருடம் பின்னால் படித்துக் கொண்டுருந்தவன். அவன் அம்மா ஊருக்குள் இருந்த ஒரே அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டுருந்தார். அவன் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவிசயங்களிலும் ஜெகஜால கில்லாடி. அந்த ராத்திரி நேரத்தில் என்னுடன் இருந்த நாலு பேர்களையும் பார்த்து விட்டு அவன் கேட்ட முதல் கேள்வியே என்னப்பா அதிசியமா ராத்திரி நேரத்தில் இங்கு வந்து இருக்கீங்க?

நான் தான் அவனிடம் மெதுவாகக் கேட்டேன்.  எப்படியாவது விடத்தையா விலாஸில் ரெண்டு புரோட்டா வாங்கி தருவாயா? அவனுக்கு லஞ்சமாக ஒரு புரோட்டாவுக்குரிய காசையும் கொடுத்து விட்டு நாங்கள் அருகில் இருந்த மளிகைக் கடையில் ஒளிந்து கொண்டோம்.  எவரோ ஒருவர் மறுநாள் ஓம் மகனை இங்கே பார்த்தேனே? என்று நீட்டி முழங்கி விடுவார்கள். உணவகத்தின் முன்னால் மிகப் பெரிய விலைப்பட்டியல் தொங்கிக் கொண்டுருந்தது.. தலைக்கறி, குடல்கறி, மூளை என்று ஏதேதோ போட்டுருப்பார்கள்.  புலிநகம் போன்ற ஏதோ ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலைபின்னல் பனியனும் சிலோன் கைலியுமாய் மைனர் போல் ஒருவர் வெகு சிரத்தையாக கொத்திக் கொண்டுருப்பார். கடையை கடந்து செல்லும் பெண்களை பார்த்ததும் அவர் கொத்தும் விதம் சற்று மாறுபடும்.

அவரை பலமுறை முந்திரிக்காட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்லும் போது பார்த்தது உண்டு. அவர் ஸ்டைலாக பேசிக் கொண்டே செய்யும் கொத்து புரோட்டா சத்தம் ஊர் அடங்கிய வேலையில் தூரத்தில் இருப்பவர்களுக்குக் கூட நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டுருக்கும்

அன்று தொடங்கியது தான் ராஜுவின் பழக்கம்.

இப்போது மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு திரைப்பட இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முதல் பட வேலையில் இறங்கி இருக்கின்றான்.

அப்போது அவன் அறிமுகப்படுத்தியது தான் அருகே இருந்த கண்ணகி உணவகம்.  பர்மா மலேசியாவில் உள்ள பெரிய வீடுகளில் சமையல்காரராக பணிபுரிந்து விட்டு கடைசி காலத்தில் வந்து கடை போட்டுருந்தார். குடிப்பழக்கம் இல்லாத அத்தனை மக்களுக்கும் இந்தக் கடை தான் வேடந்தாங்கல். நான் பார்த்தவரைக்கும் அம்மியில் அரைத்த மசாலா சமாச்சாரங்களைத்தான் கடைசி வரைக்கும் பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள்.
ஊரின் மற்றொருபுறத்தில் முஸ்லீம் மக்கள் வாழும் சந்தில் தான் கறிக் கடைகளும் மீன் கடைகளும் இருந்தது. பெரிய சில்வர் தூக்கு வாளி மற்றும் வேறு இரண்டு மூடியுள்ள சட்டியுமாய் அப்பா பின்னால் சென்று அங்கு அமைதியாய் நிற்க வேண்டும். அங்கு கடைபோட்டுள்ள முஸ்லீம் மக்கள் அத்தனை பேர்களும் வருகின்ற நபர்களை அழைப்பது மாமா மாப்பிள்ளை பங்களாளி போன்ற வார்த்தைகளால் மட்டுமே.

இப்போது மாறிப் போன வெறிகலாச்சாரம் எதையும் நான் பார்த்தது இல்லை. இன்று கூட உள்ளடங்கிய கிராமங்களில் இப்படித்தான் பழகிக் கொண்டுருக்கிறார்கள். அப்பா, அணைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை.  மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டுருப்பார்கள்.  அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்து தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பது.  காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஓட்டி வைத்து இருப்பார்கள்.

எலும்பு சதை இரத்தம் ஈரல் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக அதற்கான பாத்திரங்களில் அடைக்கப்பட்டு கடைக்காரர்களே வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் ஒரே வரிசை யாக அமர வைத்து சாப்பிடும் பழக்கம். எந்த வேலையிருந்தாலும் குறிப்பட்ட நேரத்தில் ஆஜர் ஆகிவிட வேண்டும். எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான உபசரிப்பு.  நண்பர்கள் இடையில் எவராது தேடிவந்தால் செத்தார்கள்.  சாப்பிட்டு விட்டு தான் செல்லமுடியும்.  நேரம் பார்த்து உள்ளே வரும் கோபிநாதன் போல் குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜன் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டான்.

இப்போதுள்ள நகர்புற கோழி கலாச்சாரத்தை நான் ஊரில் பெரிதாக பார்த்தது இலலை. உடம்புக்குச் சூடு என்று எளிதாக ஒதுக்கி விடுவார்கள். உள்ளடங்கிய கிராமங்களில் நாட்டுக்கோழிக்கு மட்டும் விருந்தினர் வருகையின் போது மரியாதை உண்டு. ஆனால் ஊருக்கு மிக அருகில் இருந்த தொண்டி, மீமிசல்,கோட்டைப்பட்டினம் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்கும் இருந்த காரணத்தால் மீனும் நண்டும் தினமும் ஊருக்குள் மாலை வேலைகளில் குவிந்து கொண்டுருக்கும். வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அத்தனையும் காணாமல் போய்விடும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

ஆனால் புதன் கிழமை சந்தையின் போது கிராமத்து பெரியவர்கள் கொண்டு வரும் அயிரை,கெண்டை,கௌங்கை, போன்ற சிறிய ரக மீன்களுக்கு எப்போதுமே தனி மரியாதை. ஈரமான துணியை தரையில் விரித்து அதில் மண்ணுடன் கலந்து வைத்துள்ள அயிரையும் மற்ற மீன்களையும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கூறு போல் மண்ணுடன் கலந்து வைத்துருப்பார்கள்.  நிறைய மீன்கள் இருக்கும் என்று நம்பி வாங்கி வரும் கூறுகளை தண்ணிர் விட்டு அலசி கூறாக்கி பார்த்தால் கையில் அடக்கி விடும் அளவுக்குத் தான் தேறும்.  அம்பானி மார்க்கெட்டிங் போல கிராம மக்களின் தந்திரம் அது.

கெளுத்தி,திருக்கை, தொடங்கி பெரிதான நண்டுகள் வரைக்கும் ஏதோ ஒன்று தினமும் மாலை வேலையில் அம்மா சுததம் செய்து கொண்டுருப்பார்.  பள்ளி விட்டு வந்தவுடன் சுடச்சுட இறக்கிக் கொண்டு அலைந்து திரிந்த இனிய நாட்கள் அது.

பள்ளி விடுமுறைகளின் போது சாப்பிட்டு முடித்து விட்டால் கட்டாயம் உடனே தூங்க வேண்டும்.  அப்பாவின் பல கட்டளைகளில் இதுவும் ஒன்று.  காரணம் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்ட வேண்டும் என்பார்.


விஞ்ஞான அறிவைப் பற்றி யோசிக்க நேரமில்லாத காரணத்தால் அவர் சொல்வதை எதிர்த்து பேசத் தெரியாமல் அப்படித் தான் வளர்ந்தோம்.  சமீபத்தில் மூத்தவளிடம் இதையே தான் கேட்டேன்.

" அப்பா....... சாப்பிடவுடன் தூங்கினால் நல்லது இல்லை.  கொஞ்ச நேரமாவது வெளியே உட்கார்ந்து இருக்க வேண்டும்.  எங்க மிஸ் சொல்லியிருக்காங்க " .

என்ன பதில் என்னால் சொல்லமுடியும்?

ஈக்கள் மொய்க்கும் உலகம்

குடும்பத்தின் கூட்டு குடித்தன வாழ்க்கை முடிவுக்கு வந்த போது ஒன்பதாம் வகுப்பு அறிமுகமாயிருந்தது.  வரவு செலவுகள் ஒன்றாகவும் வாழும் இடம் தனியாகவும் பேசி முடிவு செய்துருந்தார்கள். அந்த பெரிய கடைத் தெருவில் குறிப்பாக பேரூந்து நிலையத்திற்கு அருகே பெரிய வீட்டு வாழ்க்கை எனக்கு பல விதங்களில் உதவியாய் இருந்தது. .

வீட்டுக்கு அடுத்த வாசல் தட்டெழுத்துப் பயிலகம். இதற்குப் பின்னால் ரொட்டிக் கடை..  சாயங்காலம் என்றால் ரொட்டிக்கடையில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டுருக்கும். அருகே உள்ள சிறிய பாலத்தில் கூட்டணி அமைத்த நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு வருகிற போகிற மக்களை அளவெடுப்பதோடு ரொட்டிக்கடையில் அனைவரும் சேர்ந்து வாங்கிய வெஜிடபிள் பப்ஸ் தினறு திருப்தியாய் நகர்ந்து விடுவதுண்டு. பேரூந்து நிலையம். அருகில் உள்ள காரணத்தால் வந்து இறங்கும் அத்தனை பேர்களும் பாலத்தில் அமர்ந்துருக்கும் எங்களை தாண்டித்தான் செல்ல வேண்டும். பலரின் திட்டுக்களும் பாவாடை தாவணிகளின் தரிசனமும் இங்கிருந்து தான் தொடங்கியது.

பெயர் தான் பேரூந்து நிலையமே தவிர ஊரில் உள்ள பிச்சைகாரர்கள் கூடும் இடம்.  ஒரே ஒரு தகர டப்பா கூரை.  அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் தானமாக கொடுத்த இடம். யூ வடிவ ஒரு குட்டிச் சுவரை சுற்றி வந்து ஒவ்வொரு பேரூந்தும் சற்று நேரம் நின்று விட்டு நகரும்.,  இந்தக் குட்டிச் சுவருக்குள் சுற்றி வர சோம்பேறி பட்டுக்கொண்டு மேட்டுக்கடை பக்கமாக திருப்பிக் கொண்டு தனியார் பேரூந்துகள் நகர்ந்துவிடும். இதனால் பலரும் எப்போதும் மேட்டுக்கடை அருகே வந்து நின்றுவிடுவார்கள்.

கனத்த மழையென்றால் ஜனங்கள் முழங்கால் தண்ணீரில் சந்தையில் வாங்கிய நண்டு மீன்களுடன் கப்பு வாடையை கடத்திக் கொண்டுருப்பார்கள். டவுன் பஸ் வரும் போதே ஓட்டிக் கொண்டு வரும் ஓட்டுநர் ஒரு வினோதமான ஒலியை தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே வருவார். அதற்குள் அங்கு கூடியிருக்கும் மொத்த கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தயாராய் இருப்பார்கள். உள்ளே நுழையும் போதே பாதிப்பேர்கள் ஓடும் வண்டியில் ஏற் முயற்சிக்க ஓரே களேபரமாக இருக்கும். பேரூந்து நின்றதும் பலரும் டயர் வழியே கால் வைத்து ஏறிக் கொண்டுருப்பார்கள். உள்ளே வடிவேல் பட சிரிப்பு போல் பார்க்க சுவராஸ்யமாக இருக்கும்,

அருகில் உள்ள அத்தனை கிராம மக்களுக்கும் குறிப்பிட்ட இந்த பேரூந்துக்களை விட்டால் வேறு வழியில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை நடக்கும்.  தொடக்கத்தில் கடைத்தெருவுக்குள் இருந்த சந்தை பிறகு விலலுடையார் பொட்டலுக்கு மாற்றினார்கள். இந்த பொட்டல் என்பது கருவேலக்காடும் காலையில் மலஜலம் கழிப்பவர்கள் வந்து கூடுமிடம். ஒரு ஓரமாக இருந்த மைதானத்தில் அவசரமாக கீற்று கொட்டைகளை உருவாக்கி சந்தை என்று உருவாக்கியிருந்தார்கள். 

அன்று தான் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களும் ஒன்றாக வந்து கூடுவார்கள். அன்று மட்டும் இந்த பேரூந்தில் எள் போட்டால் எண்ணெய் போல் வழிந்து ஓடும் போலிருக்கும்.  தொத்தித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு வயிறு பெருத்த கர்ப்பிணி போல் அந்த டவுன் பஸ் நகரும் போது பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்த காலம் அது. நடத்துனரை விட்டு நகர்ந்த பேரூந்தில் கூரையில் அமர்ந்து இருந்த மக்கள் பின்னால் உள்ள ஏணிப்படி கம்பிகள் வழியாக கை கொடுத்து காப்பாற்றி அழைத்த சம்பவங்களும் உண்டு.

எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டுருந்த சரஸ்வதி வித்யா சாலை படிப்பு முடிவுக்கு வந்து அந்தப் பள்ளியும் பெண்கள் உயர்நிலை பள்ளி யாக மாறிப் போனது. எட்டாம் வகுப்பு முடிவுக்கு வந்த போது பள்ளி ஆண்டு விழாவில் லேனா தமிழ்வாணன் பேச்சைக் கேட்டதும் அவர் மேடை யில் பேசியது ஒன்றும் புரியாமல் இவர் ஏன் பகலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கிறார்? என்று யோசித்தது நினைவுக்கு வருகிறது.

ஊரில் இருந்த இரண்டு பள்ளிகளுமே தனியாருக்குச் சொந்தமானது தான்.  வீட்டில் எவருக்கும் படிப்புக்கென்று பெரிதான செலவுகள் ஏதும் செய்ததாக நினைவில்லை.  பெரும்பாலும் பள்ளியில் படித்த அணைவருமே நடுத்தர வர்க்கம் என்பதோடு பெரிதான சண்டை சச்சரவு இல்லாமல் படிப்பை தவமாக மாற்றிய ஆசிரியர்கள் தான் பணியாற்றிக் கொண்டுருந்தார்கள்.  கிராமத்து மாணவர்கள் சைக்கிளில் வந்துவிட முடியாதவர்கள் டவுன் பஸ்ஸில் தான் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். எவரும் எந்த தவறும் செய்து விட்டு தப்ப முடியாது.  ஒவ்வொருவரின் குடும்ப பின்புலமும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றாகவேத் தெரியும்.  " நாளைக்கு உன் அப்பாவை கூட்டிக்கொண்டு வா " என்றாலே அழுகையுடன் மூத்திரம் பொத்துக் கொண்டு வந்து டவுசரை நனைத்து விடும். அதற்கு தனியாக ரெண்டு அடியும் ஒரு வாளி தண்ணீரும் சுமந்து வர வேண்டும்.

ஊரின் கடைசியில் தொடக்கத்தில் இருந்த வீட்டுக்குப் பின்னால் மிகப் பெரிய தோட்டமும் மிகப் பெரிய சிமெண்ட் தளமும் இருந்தது. வந்து சேர்ந்த புதிய வீட்டில் எந்த மரங்களுமே இல்லை.  ஒரே ஒரு முருங்கை மரம் மட்டும் விற்று விட்டு சென்றவர்கள் வைத்துருந்தார்கள். பழைய வீட்டில் இருந்த கொய்யா மா மரங்கள் எதுவும் இல்லை.  புதிய வீட்டில் கொடுக்காப் புளி மரம் கூட இல்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லும் போது டவுசர் பையில் கொண்டு போகும் எந்த சமாச்சரத்தையும் கொண்டு போக முடியவில்லை. பள்ளியில் பண்ட மாற்று முறையாக பரிமாறிக் கொள்ளும் பென்சில் வியாபாரத்தைக்கூட நிறுத்த வேண்டியதாகி விட்டது.

ஆனால் மற்றொரு வகையில் எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்தது.  இங்கு கூட்டாளிக் கூட்டம் அதிகமானது. என் லொட லொட பேச்சை கேட்பதற்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.  அப்போது எங்கள் கூட்டத்திற்குள் இறுதியில் வந்தவன் பெயர் சண்முக சுந்தரம். அவன் அப்பா பக்கத்து கிராமத்து பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டுருந்தார்..

புதிய வீட்டுக்கு அருகே பஞ்சாயத்து போர்டு அலுவலகம்.,  சனி ஞாயிறு ஒரு காக்கா குருவி கூட உள்ளே வராது.  இரண்டு நாட்களும் பெரும்பாலும் பள்ளி விடுமுறையாகத்தான் இருக்கும். உட்கார, அரட்டை அடிக்க, அத்தனை அக்கிரமும் செய்ய தோதான மறைவு இடங்கள் உண்டு.  புகைப்பவர்களும், அடிப்பவர்களும் வந்து போய்க் கொண்டுருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர்களும் எங்களுக்கு வேடிக்கை மக்கள்.  கூட்டாளி கூட்டத்தில் இருக்கும் எவனுக்கும் எந்த தைரியமும் இருக்காது.  உயரமும், சதைகளும் இருக்கும் குண்டு மக்கள் கூட சோப்ளாங்கியாய் தான் இருப்பபார்கள். அவன வன் வாயாலே ஊதிக்கொண்டு ஊத்திக் கொண்டு படம் காட்டுவதோடு சரி.  நாள் முழுக்க திருப்தியாய் அளந்து விட்டுக் கொண்டு அன்று பத்திரிக்கையில் வந்த நடிகையை பேச்சு மூலமே கற்பழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் சண்முகம் கூட்டத்திற்குள் வந்தால் பேசவே மாட்டான். காரணம் அவனின் தம்பியும் உள்ளே இருக்க சற்று நேரம் இருந்து விட்டு வெளியேறி விடுவான்.  போகும் போது எப்போதும் போல தம்பியைப் பார்த்து " சீக்கிரம் வீட்டுக்கு வாடா " ன்னு கத்தலாக சொல்லிவிட்டு சென்று விடுவான். எங்களை பார்த்துவிட்டு வெளியே போகும் போது அவன் வயிறு உப்பலாகவே இருக்கும்.  தொடக்கத்தில் எனக்குப் புரியாததை மாதவன் ஒரு நாள் சொன்ன போது தான் புரிந்தது.

யார் யார் இங்கு கூடியிருக்கிறார்கள்? என்று பார்த்து விட்டு அவன் மெதுவாக நகர்ந்து பக்கத்தில் உள்ள புளிமர தோப்புக்குள் சென்று விடுவான்.  பெரிய தூர் பகுதியாக பார்த்து உள்ளே மறைவு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான்.  மறுபடியும் நான்கு புறமும் பார்த்துவிட்டு வயிற்றுப் பகுதியில் ஒளித்து வைத்த பாடப்புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்குவான்.  ஒரு நாள் ஒளிந்து கொண்டு அவனைப் பார்த்த போது மண்டையில் ஏறாத ஆங்கிலப்பாடத்துடன் பெரிய சண்டையே போட்டுக் கொண்டு யார் யாரையோ திட்டிக் கொண்டு நெஞ்சில் குத்திக் கொண்டு போராடிக் கொண்டுருந்தான்.

அவன் படிப்பதை யாரும் கவனித்து விடக்கூடாது.  கவனித்தவர்களும் படிக்கத் தொடங்கிவிட்டால் அவன் மதிப்பெண்கள் வாங்க முடியாது.  ஆனால் ஒரு நாள் மொத்த கூட்டத்தையும் மாதவன் கலைத்து பூனை போல் நகர்ந்து அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்த புளிய மர தூர் பகுதியை காட்டி விட்டு ஒதுங்கி விட்டான். அப்போது தான் மொத்த கூட்டமும் சேர்ந்து அவனுக்கு புதிய பெயர் வைத்தார்கள்.  கிறுக்குச் சண்முகத்தின் சுருக்கமாக கீனா சானா.  கடைசிவரைக்கும் அவனை வெறுப்பேத்த இப்படித்தான் அனைவருமே அழைத்தார்கள்.

கவனித்த எங்கள் கூட்டத்தைக் கண்டு மேல்நிலைப்பள்ளிக்கு பின்னால் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள முந்திரித் தோப்புக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டான். அதற்குப் பிறகு அவனைத் தொடர முடியவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர அத்தனையிலும் தேர்ச்சியில்லை என்ற போது அவன் அப்பா அடித்த அடியில் எங்கள் கூட்டத்தில் வந்து முதன் முறையாக மனம் விட்டு பேசினான். அன்று கடைசியாக பார்த்த அவன் இப்போது எதிரே வந்து கொண்டுருந்தான்.

சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தவன் என்னை அடையாளம் கண்டு மெதுவாக சிரித்தான். அவன் அருகே வந்தவர் அவன் மனைவியாக இருக்க வேண்டும். எலும்பும் தோலுமாய் கன்னம் ஓட்டி ஒரு மாதிரியாக புடவையை உடம்பில் சுற்றியிருந்தார். சைக்கிளில் முன்னாலும் பின்னாலும் மூன்று குழந்தைகள் உட்கார்ந்து இருக்க தள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான் அவர்கள் முகத்தைப் பார்க்கும் போதும் உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. சிரித்துக் கொண்டே பேசிய போது " குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை. நான் டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டுருக்கின்றேன். பிறகு பேசலாம் " என்று நகர்ந்து விட்டான்.

அது வரைக்கும் அவன் என்ன செய்து கொண்டு இருக்கின்றான் என்பதும் தெரியாமல் இருந்தது, ஆனால் அம்மாவிடம் இரவு வந்து பேசிய போது தான் முழுமையாக புரிந்தது.

தொடக்கத்தில் ஊரில் சுப்பையா டாக்டர் என்ற பெயரில் பிரபல்ய டாக்டர் ஒருவர் இருந்தார்..  மருத்துவப் படிப்பு எதும் படிக்காமல் யாரிடமோ ஒரு வருடம் இருந்து குப்பை கொட்டிவிட்டு மிகத் தைரியமாய் ஆர்எம்பி என்ற படிப்பை போட்டுக்கொண்டு டாக்டர் சுப்பையா என்று தொழிலை தொடங்கி விட்டார்.  

அது என்னமோ தெரியவில்லை.  உள்ளே இருந்த ஒரே ஒரு அரசாங்க மருத்துவமனை, அதில் பணிபுரிந்த எம்பிபிஎஸ் டாக்டர் போட்டுருந்த கிளினிக்கை விட இவரிடம் தான் சுற்றியுள்ள அத்தனை கிராமத்து மக்கள் குவிந்து கொண்டுருந்தார்கள்.

உள்ளூர் கிளினிக் போலவே சுப்பையா டாக்டர் பக்கத்து கிராமங்களுக்கும் தான் வைத்து இருந்த ஸ்கூட்டர் மூலம் நடமாடும் கிளினிக் மூலம் பட்டையை கிளப்பிக் கொண்டுருந்தார். ஐந்து அல்லது பத்து ரூபாய் மட்டுமே வாங்குவார். கடன் சொல்பவர்களும் உண்டு. காளை மாடு கன்று போடாத பிரச்சனைகளை யும் கொண்டு வருபவர்களுக்கும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நகர்த்தி விடுவார்..  " ஏஞ்சாமி எங்கையில காசு இல்லை " என்று கூட சொல்லிவிட்டு நடையை கட்டிவிடுவார்கள். அவருக்கு நன்றாகவே தெரியும். இது காந்தி கணக்கு என்று. பெரிதாக கோபப்படாமல் செல்லமாக திட்டி விட்டு காத்துக் கொண்டுருக்கும் அடுத்தவரை உள்ளே வரச் சொல்லுவார்.

வருகின்ற 90 சதவிகித கூட்டத்திற்கு கட்டாய்ம் ஊசி போட்டு விடுவார். ரெடிமேடு மாத்திரைகள் தயாராக இருக்கும்.  பேச்சில் தேனும் பாலும் கலந்து அடித்து வருபவர்களை தைரியப்படுத்துவார்.  சாகக்கிடப்பவர்கள் கூட நான் சுப்பையா டாக்டரிடம் தான் போவேன் என்று அடம்பிடித்து தூக்கிக் கொண்டு வந்த பலரையும் பார்த்ததுண்டு.  ஆனால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை அவரின் வேலைப்பளூவே காவு கொண்டுவிட்டது.

அவரிடம் பணிபுரிந்த நம்ம கிறுக்குச் சண்முகம் சைக்கிளில் ஒவ்வொரு கிராமமாக மருத்துவ சேவையை செய்து கொண்டுருக்கின்றான். மூன்றே வகையான மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும். அதுவும் காசு கொடுத்து வாங்க மாட்டானாம். அவன் தம்பி பணிபுரியும் மெடிக்கல் கடையில் தேத்தி கொண்டு வந்துவிடுவான்.  உடல்வலி, காய்ச்சல், சளி.  அவ்வளவுதான்.

சுப்பையா டாக்டர் போல் இனிமையாக பேசுவானா என்பது தெரியவில்லை.?  ஆனால் பராவாயில்லை.  இப்போது பிழைத்துக் கொள்வான் போலிருக்கு.  காரணம் நல்ல டாக்டராக பார்த்து குடும்பத்தை கூட்டிக் கொண்டு செல்கிறானே...................

என்னைக் கடந்து சென்ற போது அவனின் குரல் மனைவியை நோக்கி பாயந்தது.

என்னை யாரென்று கேட்டுருப்பாரோ?

" புள்ள மேல ஈ மொய்க்குது துண்டைப் போடு " என்று கத்திக் கொண்டுருந்தான்.  அவனின் சொல்ல விரும்பாத ஆதங்கத்தை வந்து மொய்த்த ஈக்கள் தான் எனக்கு அடையாளம் காட்டியது.

Tuesday, September 28, 2010

இனிய நினைவுகள்

பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை.

மரங்களும் அருகே தெரிந்த பொட்டல்காடுகளும் வேறொரு உலகத்தை பார்த்தது போல் இருந்துருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டுருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளை படபடக்க வைத்தது.
பூங்காவை ஓட்டியிருந்த நண்பன் முருகேசனின் வீட்டின் முன்புறம் அவனின் தங்கை வெளியே நின்று கொண்டு எவருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது தெரிந்தது. என்னை கவனித்தால் கடத்தப்படும் செய்தி மூலம் அவனின் அம்மா வீட்டுக்குள் வர அழைப்பு விடுப்பார்.  மொத்தமும் மாறிவிடும்.

பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டுருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்க குழந்தைகளை பிரித்து வண்டிக்குள் அடைத்து பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு. நடுநாயகமாக குளம் அருகே ஆலமரம். எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை.  ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்த சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறைய பேர்கள் இருப்பார்கள்.

ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும்.. நடுவீதி, நடராஜபுரம்,கீழப் பெருமாள் கோவில், மேலப்பெருமாள் கோவில், யெமு வீதி இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும்.  ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம்.  அடுத்த தெருவுக்கு பிரிக்கும் பாதைகள் எனபது ஒரு முழு வீட்டின் அளவு.  மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியும் போது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்கு தொடக்கமாக இருக்கும். முழுவீட்டையும் சந்தின் வழியே நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும..

குழந்தைகள் அருகே கட்டி வைக்கப் பட்டுருநத கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள்.பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள். என் பார்வையில் பட்டது எதிரே இருந்த வள்ளிக்கண்ணு வீடு.  என்னுடைய பள்ளித் தோழி.  அறிமுகம் இல்லாதவர்கள் பார்க்கும் முதல் பார்வையில் இவள் மனநலம் குன்றியவளோ? என்று தோன்றக் கூடும்.  எப்போதும் எதையாவது தின்று கொண்டு இருக்கும் வள்ளிக்கண்ணு.ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போதே மாவு அரைக்கும் எந்திரம் போல அவள் மட்டும் கமுக்கமாக தின்று கொண்டுருப்பாள். . 

வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 26 வயதுக்குள் வரிசையாக பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார். மிகப் பெரிய கோட்டை போன்ற வீட்டில் அவளும் குழந்தைகளும் கூட ஒரு வயதான வேலைக்கார பாட்டி உடன் சத்துணவு பணியாளராக வாழ்க்கையை குழந்தைகளுக்காக கடத்திக் கொண்டுருக்கிறார்..  ஏழு மணி இருட்டு என்பது வீட்டின் கடைசி வரைக்கும் சென்று வரமுடியாத பயத்தை தரும் அளவிற்கு விஸ்தாரமான வீடு.

படிப்பு மண்டையில் ஏறாது என்று உணர்ந்த அவளின் பாட்டி சேர்த்து வைத்து இருந்த நகைகளைக் காட்டி எவனோ ஒருவனின் தலையில் கட்டி வைத்து விட்டார். கட்டியவனின் கல்லீரல் கழுதை போல் சுமந்து ஒரு நாள் ரத்தமாக துப்பியது, . அன்று தான் அந்த மொடாக்குடியனின் மற்ற வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது.

வள்ளிக்கண்ணுவின் அப்பா பர்மாவில் மற்றொரு குடும்பத்துடன் இருக்க,  காத்து இருந்த அம்மா கண்கலங்கிக் கொண்டே போயும் சேர்ந்துவிட பாட்டி தான் வள்ளிகண்ணுவை வளர்க்க வேண்டியதாகி விட்டது. ஜாதி, சமூகம், இனம் என்பதற்கெல்லாம் மேலானது பணம் என்ற வஸ்து.  பங்களாளி சண்டையில் பெரிய வீடு இப்போது நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டுருக்கிறது. சொத்தில் சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியுடன்  முகப்பில் மட்டும் இருந்து கொள்ள வள்ளிக்கண்ணுவுக்கு அனுமதி கிடைத்து நண்டு சிண்டுகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கிறார். கைநிறைய காசு இருந்தால் அவர் நம்மவர்.  இல்லாவிட்டால் யார் அவர்?

அம்மா இல்லாத குறை போக்க அதிக செல்லம் கொடுத்து வளர்ந்த வள்ளிக்கணணுக்கு வெகுளித்தனம் அதிகம்.ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போது "டேய் கணேசா கடலை அச்சு வேண்டுமாடா?" என்று கேட்டவளை எப்படி மறக்க முடியும்?.

சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் இது போன்ற பிரமாண்ட வீடுகள் தான்..

முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து வெளியே எங்குமே சென்றது இல்லை. நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம். 

கண்டணூர்,கோட்டையூர்,காரைக்குடி,தேவகோட்டை,,ஆர் எஸ் மங்கலம், திருவாடனை, பிள்ளையார்பட்டி,திருப்பத்தூர்,கல்லல், கோனாபட்டு கண்டரமாணிக்கம் கீழச்சீவல்பட்டி கீழப்பூங்குடி கானாடுகாத்தான் பள்ளத்தூர்,கோட்டையூர் என்று எண்ணிக்கைகளுக்குள் அடக்கி விடலாம். அரசாங்க ஊழியர்களுக்கு தண்டணைப்பகுதி என்று சொல்லப்பட்ட பிரிக்கப் படாத இராமநாதபுர மாவட்டத்தில் தான் பிறந்தேன்.  பசும்பொன் என்று மாறி இன்று சிவகங்கை மாவட்டம் என்று வந்து நின்றுள்ளது. 


பெயர்கள் மாறியதே நான் பார்த்தவரைக்கும் மிகப் பெரிய மாறுதல்கள் கால் நூற்றாண்டு காலத்தில் ஒன்றுமே நிகழவில்லை. துணை ,இணை அமைச்சராகி வர்த்தகம் நிதியாக மாறியது.  இன்று உள்துறை வரைக்கும் வளர்ந்த போதும் எப்போதும் மக்கள் சொல்லும் "கெட்டி"யாகத் தான் சீனாதானா மயிரிழையில் தப்பித்து மானங்கெட்ட வெற்றியில் மேலே கோலோச்சுக் கொண்டுருக்கிறார்.

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்த சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது. காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங் களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர். இன்று பொதுப் பெயராக மொத்தமாக செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது புதுக்கோட்டை, சிவகங்கை,இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும். வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உழுத்துப் போன சமாச்சாரங்கள் இங்கு தேவையில்லை. மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இதில் மகத்தான் ஆச்சரியம் ஒன்று உண்டு.

தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவான சாதிகள் கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகள் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாக சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டுருந்தது.  இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றும் பலரையும் படுத்தி எடுத்துக் கொண்டுருக்கிறது.

மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்த செட்டி என்ற சொல்லாக வந்துருக்க வேண்டும். இதில் உள்ள பல கிளைநதிகளை முதன் முதலாக திருப்பூருக்குள் வந்த போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

24 மனை, தெலுங்கு, கன்னடம்,வளையல்கார என்று பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நண்பன் சொக்கலிக்கத்தின் மகள் ”எனக்கு ஏன் மீனாள் என்று பெயர் வைத்தீர்கள்? நான் அனுஷ்கா என்று மாற்றிக் கொள்ளப் போகிறேன்” என்று அடம் பிடித்துக் கொண்டுருக்கிறாள்,  என்ன செய்ய முடியும்? காலமாற்றம் என்று கழிசடை எண்ணங்களையும் சேர்த்து தானே வளர்க்கும்.

ஏறக்குறைய 60 நகரத்தார் கிராமங்கள். 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலைபெற்று உருவான சமூக மக்கள்.  ஒவ்வொரு விதமான பாரம்பரியம். 

சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்த சிறிய கல்வெட்டை உற்று கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும்.  அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மை திகைப்படைய வைக்கும். பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம் ,

இது எந்த அளவிற்கு இருந்தது தெரியுமா?  

ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.   அன்றைய காலகட்டத்தில இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது.  உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்கு பயன்படுத்திய நாடு இலங்கை.

தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்கு கொண்டு செல்ல தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.

இன்று அத்தனை வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றது. தேக்கு மர கதவுகளும், பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது.  150 ஆண்டுகள் கடந்ததும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலை பார்த்தது இல்லை. முட்டைச் சாற்றை குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எதையோ தேடி எங்கேயோ வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 


வாழ்வின் கடைசி கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 

வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கும். கவிஞர் கண்ணதாசன் இல்லையென்றால் வாய் உச்சரித்துக் கொண்டு இருக்கும் தமிழ் வார்த்தைகள் பாமரனுக்கு போய்ச் சேர்ந்துருக்குமா?  இல்லை நடிகரைத் தான் நாடாள வைத்துருக்குமா?  சமூக காவல்ர்களை நினைத்துக் கொண்டுருந்த போது எதிரே கீனா சானா என்றழைக்கப்பட்ட கிறுக்கு சண்முகம் வந்து கொண்டுருந்தான்.................பள்ளித் தோழன். பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன் .  இப்போது பார்த்துக் கொண்டுருக்கும் வேலை கிராமத்து டாக்டர்.

ஆசை மரம்.

" இவனை நம்மால் அடக்கமுடியாது " என்று குடும்பத்தினர் ஓதுங்கியிருந்த போது தான் அக்கா மூலமாக மாமனார் என்ற தெய்வரூபம் என்னைத் தேடி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார். என்னுடைய கொள்கைகள், நோக்கங்கள் அத்தனையும் புரிந்து கொண்டு மற்றொரு அப்பாவாக மாறினார். ஏற்கனவே நண்பர் சுட்டிக்காட்டியிருந்தபடி திருமணமும் திரைப்பட காட்சிகளைப் போலவே நடந்து முடிந்தது.

முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது. ஏன் எதற்கு அழுகை? எப்போது இவர்களுக்கு பசிக்கும்? ஒருவருக்கு கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்கு கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது. இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்த சின்ன உருவங்கள் என்னுடைய அத்தனை மாய பிம்பங்களையும் கலைத்துப் போட்டது.

சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது. காட்டாறு போல் ஓடிக்கொண்டுருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர்.  முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்ரமித்து இருந்தனர். மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்து கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது.  அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டுருந்தனர்.

தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்க பேரூந்தில் பயணித்து கண் எரிச்சலோடு அந்த அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன். அரை குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி.......

வாடா........ எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே?  

காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம்.  அப்பா உடனே ஒத்து ஊதுவார். உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். காரணம் மறுபடியும் பூதத்தை பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன்.  இன்று இருக்க எண்ணம் இருக்கிறது. இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது. 

காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம். உள்துறை அமைச்சரின் ஊரைத்தாண்டி உள்ளே நுழைந்தால் உங்களை இனிதே வரவேற்கும். பாலத்தை தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன். பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்த பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிகிறது. 

அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர். சுற்றிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு கடைத்தெரு உள்ள ஒரு ஊர்.  அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது. உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொணடே நடந்து செல்வேன்,. ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு. சட்டைக்குள் கைவிட்டு எடுக்க காத்திருககும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும்.

ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க,  பழகிய எவரையும் இன்று காணவில்லை.

கற்பக விநாயகர் திருக்கோயில்.  எதிரே குளம்.  சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள்.  ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு. மீன்கடை, இறைச்சிக்கடை.  தொட்டு தொடங்கி மூச்சுப் பிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை,   பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம். ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையும் இப்போது அமைதியாய் இருக்கிறது.

தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில். சிறிய கோவிலைத்தாண்டி குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன். கோவில். பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளில் இரைச்சல். இருட்டுக்குள் நடந்து வந்தால் சுத்தம் செய்யாத முடை நாற்றம். 

உடன் படித்தவன் ஐயராக இருக்க முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம். அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம்.  புரியாமல் குழந்தைகளுடன் ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன். குழந்தைகளுக்கு கிடைத்த சுதந்திரத்தில் ஓ......வென்ற இரைச்சல் அந்த கோவில் முழுக்க நிரம்பி வழிகின்றது. கூட்டம் இல்லாமல், வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கிரகாரத்தை சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டுருக்கிறார்கள்.  

மழை வரும் போல் இருக்கிறது.  மண் வாசனை நாசியை நெருடுகிறது. கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்த பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.  பக்கத்தில் உள்ள அத்தனை கிராமங்களும் குடிநீர் எடுக்க கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது.
படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர்.  பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று கஞ்சி ஊத்தாத மருகளை அண்டிக் கொண்டு அடங்கி வாழ்ந்து கொண்டுருப்ப்தை கண்ணீருடன் பேசினார். குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு சமாளித்து கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன்.

தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டு சிருங்காரமாய் நிற்கிறது. தடவிப் பார்த்துக் கொண்டுருக்கின்றேன். டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும், போட்டுருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது. வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது. நான் பார்த்த பல வருட திருவிழாக்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகின்றது. வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும், வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர்க் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையை தடவிப் பார்க்கின்றேன்.  தொடர்ச்சியாக குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது.  மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது.


ஊரின் மற்றொருபுறம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தை கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள். மேட்டை கடக்க ரயில் தண்டாவளத்தை ஓட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூட போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது. இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயல்காடுகள் குடியிருப்புக்கு அளந்து கொண்டுருக்கிறார்கள்.  அருகே ரயில் நிலையம்.  மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காக சில பேர்கள் காத்துக் கொண்டுருக்கிறார்கள். பழகிய சில பெரியவர்களின் வாயில் இருந்து அளவான் புன்னகை.. ஆனால் பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ்.  எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம்.  

இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்து கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம்.  மாதவன், கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது.  அவர்கள் தொழில் நுடபகல்லூரிக்குள் நுழைய் தடமும் மாறிவிட்டது. 

ரயில் நடைமேடைகளைக் கடந்து நெஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாக கால்கள் வைத்து வேலி தாண்டிய வெள்ளாடு போல் வந்தால் அருகே உள்ள பூங்காவிற்குள் நுழையலாம்.  பழைய தகரங்களைக் கோர்த்து உள்ள நடுநாயக நடைமேடைகளும், எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு.  குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தை தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன்.  கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம் அதில் இருக்க ஆசையுடன் பார்த்தேன்.

தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது.  என் பெயர் மட்டும் மெலிதாக தெரிந்தது.  அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருக்கிறார்கள்...