Wednesday, March 02, 2011

சோனியா காங்கிரஸ் - தமிழ்நாட்டில் கவிழும் தருணம

தேர்தல் என்பது இப்போது ஒரு வகையில் திருவிழாக் கொண்டாட்டம் போல் ஆகிவிட்டது.  ஊடகங்களுக்கு திகட்ட திகட்ட தீனி.  பணத்தை பெட்டி பெட்டியாக சேர்த்து வைத்துள்ளவர்களுக்கு கரைக்க வேண்டிய அவஸ்யமான நேரமிது. கட்சிகளுக்கு சீட்டு கணக்கு. பார்வையாளர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய நோட்டு கணக்கு.  

எந்த வகையில் பார்த்தாலும் ஜனநாயகம் என்ற உலுத்துப் போன வார்த்தையால் ஏமாறப் போவது திருவாளர் பொதுஜனமே?


ஆனால் இப்போது உச்ச பதவியில் இருக்கும் அதிகாரவர்க்கத்தினர் உசாராகி எந்த கட்சி ஜெயிக்கும் என்பதை மனதில் கொண்டு ஆளுங்கட்சி சிபாரிகளை புறந்தள்ளுவது முதல், பெயர் மாற்றி பிறந்த நாளுக்கு பூங்கொத்து அனுப்பி நாங்கள் எப்போதும் உங்கள் அனுதாபி என்பது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.  மொத்தத்தில் ஒவ்வொரு தேர்தல்களும் அதிகாரத்தை வைத்து சம்பாரித்த பலருக்கு தோல்வி பயத்தை தந்து கொண்டு இருப்பதைப் போல இந்த முறையாவது ஜெயித்து பல தலைமுறைகளுக்கு தேவையானதை சம்பாரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி முதலீடு செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது.

உத்திர பிரதேசத்தில் ராகுலின் அரசியல் கணக்கு வென்றவுடன் புதிய புதிய பட்டங்கள் சூட்டி அழகு பார்த்தனர்.  ராஜதந்திரி என்றனர். அனாதைகளை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று அவரவர்களும் வார்த்தைகளால் அழகு சூட்டி பார்த்தனர். ஆனால்?

பீகார் கொடுத்த பாடத்தில் பீச்சாங்கை போதாது என்று இப்போது சோத்துக் கையிலும் கழுவியாக வேண்டிய சூழ்நிலை.  இப்போது ஓட்டுக்காக காட்ட வேண்டிய கைகூட அழுக்குடன் உள்ளது.  நாட்டுக்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னம் கூட இப்போது நாத்தம் புடுச்ச கையாக மாறியுள்ளது. காரணம் இப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பது கணினி மயமாக்கப்பட்டது.  அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். எப்படிச் சேர்கிறார்கள்? எப்படி சேர்த்தார்கள் போன்ற கணக்கெல்லாம் கேட்கக்கூடாது.  ஒருவர் பாதயாத்திரை போகிறார்.  மற்றும் சிலர் பல்லாக்கு தூக்கியாக டப்பிங் வாய்ஸ் மனிதனதாக இருக்க மிரட்டிப் பார்க்கும் கட்சியாக இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.  யார் கொடுத்த தைரியம்?  வினையை விதைத்தால் எது கிடைக்கும்?  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்த காங்கிரஸ் வரலாறு முக்கியம் என்பதை போல் இப்போது காங்கிரஸ் ஆசைப்படும் 90 சீட்டுகள் பார்த்து யாரும் வாயால் சிரிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்பது எங்கே இருக்கிறது என்பதைப் போல இந்த கட்சியில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அடி(ம)பட்ட தொண்டர்களுக்கும் தெரியாத ரகஸ்யம். காரணம் இப்போது காங்கிரஸ் என்றால் கார்ப்ரேட் காங்கிரஸ்.  காந்தி விரும்பிய காங்கிரஸ் எல்லாம் புதை பொருளாகி எப்போதே மாறிவிட்டது.


இந்த தேர்தலில் எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதைக் கேட்டு இதுவொரு அதீத ஆசை என்று நகர்ந்து போய்விடக்கூடாது. பொதுத் திட்டம் என்று ஒன்று வேண்டும்.  ஒவ்வொன்றுக்கும் கூட்டணி தர்மத்தின்படி ஒப்புதல் கொண்டு ஆட்சியை நடத்த வேண்டும் என்று இன்று பஞ்சபாண்டவர் குழு கேட்கும் ஒவ்வொரு வெடிகுண்டுகளையும் நமுத்துப் போகச் செய்யக்கூடியவர் கலைஞர்.  

ஒரு இனத்தையே கதறடிக்க காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணி அமைத்து இருந்த கலைஞர் இந்த முறை அந்த பாவத்தை கழுவ ஒரு நல்ல சந்தர்ப்பம் இயல்பாகவே அமைந்துள்ளது.


கலைஞர் பார்க்காத தலைவர்கள் இல்லை.  வாங்காத திட்டுக்கள் இல்லை. இது குறித்து சந்திக்க வேண்டிய அத்தனை அவதூறுகளையும் சந்தித்து விட்டவர்.  அத்தனைக்கும் அவருக்கு உண்டான வரவுகளுக்கும் குறைவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் பிடறியை சிலிப்பிக் கொண்டு சிலிர்த்து வந்தவர். 'அடப் போங்கப்பா இந்தாளு உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்மால் குறுக்குசால் ஓட்ட முடியாது' என்று புலம்பும் தலைவர்களைப் போல இவரின் ராஜதந்திரம் அத்தனையும் வெகுஜன ஊடகங்கள் கொண்டு வராத விசயங்களாகும்.

அறிஞர் அண்ணா வாயால் சொன்ன ஒரு ரூபாய் அரிசியை செயலாக்கியவர் கலைஞர்.  அண்ணா அன்றைய உண்மையான காங்கிரஸ் சகாப்தத்தை முடித்து வைத்து தமிழ்நாட்டில் புதிய பாதையை உருவாக்கியதைப் போல இப்போது கலைஞரின் இறுதிக்காலத்திலாவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாமாதி கட்டினால் எதிர்கால சந்ததிகள் கொஞ்சம் சந்தோஷப்படும். சங்கடங்களை தந்து கொண்டிருக்கும் இந்த அல்லக்கை ஐந்து முகங்களை அனாதை ஆக்க வேண்டிய தருணம் இது.  கலைஞர் செய்வாரா? என்பதை விட அவர் செய்து தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


காரணம் குஜராத்தில் ஆண்டு கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஆட்சியை சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று ஐபிஎன் ஊடகம் பாராட்டி இருப்பதைப் போல நமக்கு துடிப்பான பிரதமர் எதிர்காலத்தில் தேவை. கலைஞரின் சுயநலம் அணைவரும் அறிந்ததே.  அந்த சுயநலத்தில் பொதுநலமாய் இப்போது கலைஞர் இந்த காங்கிரஸை கழட்டி விட்டால் கூட செய்த பாவங்களுக்கு கொஞ்சம் பரிகாரம் தேடிக் கொண்டது போல இருக்கும்.  எப்போதும் போல கடந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் இராஜகண்ணப்பனை இன்றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் அழுகுணி ஆட்டத்தின்படி ஜெயித்து வந்தது போல் காங்கிரஸ் வெள்ளூடை வேந்தர்களில் ஒன்று இரண்டு பேர்களுக்காவது கட்டிய டெபாஸிட் தொகை கிடைக்குமா என்று நாம் வேடிக்கை பார்க்க உதவும். 

அய்யா கழட்டிவிட ஆத்தா காப்பாத்தினா?

வாழ்நாள் முழுக்க காங்கிரஸ் தலையில் 'பகவான்' உட்கார்ந்து விட்டான் என்று அர்த்தம்.

குழும மின் அஞ்சலில் இந்த படங்களை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.

35 comments:

தமிழ்மலர் said...

காங்கிரசை கழட்டி விடுவதில் திமுகவுக்கு பிரச்சனை இல்லாமல் இல்லை. தற்போது கழட்டி விட்டால் உடனடியாக ஆட்சி கவிழும். இரண்டு மாதமே இருந்தாலும் இடையில் ஆட்சி கவிழ்வதை கருணாநிதி துளியும் விரும்பவில்லை. அதே போல ஆட்சி கவிழ்ந்தால் ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் தேர்தலை சந்திக்க முடியாது. மேலும் அலைகற்றை உட்பட வழக்குகளில் கனிமொழி, ராசாத்தியம்மாள் வரை கைது செய்யப்படலாம். இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.

மேலும் காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் சிக்கல் தான். எந்த நேரத்திலும் காங்கிரசு 360வது பிரிவை பயன்படுத்தலாம். அதற்கு அதிமுக முழு துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உறுதியான காரணங்களுக்காகவே தகுதிக்கு மீறி ஆட்டம் போடும் காங்கிரசை திமுக சகித்துக்கொண்டுள்ளது.

இந்த மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்துவது. 48 தொகுதிகள் கொடுப்பது. வேண்டாம் என்றால் கழட்டி விடுவது. தனித்து போட்டியிடும் காங்கிரசை தமிழகத்தை விட்டே கருவறுப்பது. இது தான் திமுகவின் அதிரடி திட்டம்.

கூட்டணி அமைந்தாலும் காங்கிரசை தோற்கடிக்க திமுக என்றோ முடிவெடித்துவிட்டது என்கின்றனர் திமுக அடிமட்ட தொண்டர்கள்.

vinthaimanithan said...

காங்கிரஸ் மட்டுல்ல! அனைத்து இந்திய அரசியல் கட்சிகளுமே- இடதுசாரிகள் தவிர- கார்ப்பரேட் கட்சிகள்தான். காங்கிரஸைக் கருவறுக்க வெஎண்டும் என்பதுதான் உணர்வுள்ள தமிழனின் ஆசை. பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று.

குறைந்தபட்சம் ஒருவாரமாவது வரப்போகும் தேர்தலில் காங்கிரஸுக்கு சவக்குழி தோண்டும் திருப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

மதுரை சரவணன் said...

oolal peruththa dmk eppadi aiyaa kalatti vidum...?

Anonymous said...

அனைத்து பழசுகளும் ( கட்சிகளும் தலைவர்களும் ) கழிய புதுசுகள் ( இளைஞ்சர்களும் சுயேட்சைகளும் ) நுழைய இத்தேர்தல் வழிக் வகுக்க வேண்டும்...

bandhu said...

என்னமோ கருணாநிதி உத்தமர் மாதிரியும், ஈழம் படுகொலைகளுக்கு சம்பந்தம் இல்லாதவர் மாதிரியும், காங்கிரஸ் ஐ கழட்டிவிட்டால் உத்தமர் ஆகிவிடுவார் என்பது போலவும்.... கொஞ்சம் ஓவரோ?

ராஜ நடராஜன் said...

அரசியல்வாதிகள் மனிதம் இழந்த பேராசை பித்தர்கள் என்பதுடன் எனது சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.

Chitra said...

மக்கள் நலனுக்கு என்று உண்மையான மனசாட்சியுடன் செயல்படும் அரசியல்வாதிகள் வரவே மாட்டார்களா?

ராஜ நடராஜன் said...

முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் என்று நெஞ்சுக்குள் ஐஸ்கிரிம் சாப்பிட்ட மாதிரி உணர்வாளர்கள் ஈழம் என்ற ஒற்றைச் சொல்லையும் மறுதட்டில் வைத்து எடை போடுவதே தராசின் சரியான எடையைக் காட்டும்.

Bibiliobibuli said...

சீமானின் பேச்சை கேட்ட ஓர் திருப்தி முன்பாதியில்.

நரேந்திர மோடி, குஜராத் என்றவுடன் எனக்கு அருந்ததி ராய் எழுத்து தான் கண்முன்னே தோன்றுகிறது. :(

நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதோர் அரசியல் பதிவு, ஜோதிஜி. நன்றி.

Bibiliobibuli said...

ராஜ நடராஜன் நீங்க இவ்வளவு சின்னதா 'சிற்றுரையை' முடிப்பதை ஒப்புக்கொள்ள முடியாது.

Unknown said...

காங்கிரஸ்ஸை தோற்கடிப்பது சரிதான், ஆனால் அதுக்காக திமுக வை சப்போர்ட் செய்ய முடியுமா சார்?

சக்தி கல்வி மையம் said...

சாட்டையடி பதிவு..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

http://rajavani.blogspot.com/ said...

நல்லபதிவு அன்பின் ஜோதிஜி. நீங்க வெளியில வந்து பார்வையை செலுத்தியதால் வரவேண்டியவங்களெல்லாம் வந்துட்டாங்க பாத்தீங்களா..

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு.

//காங்கிரஸ்ஸை தோற்கடிப்பது சரிதான், ஆனால் அதுக்காக திமுக வை சப்போர்ட் செய்ய முடியுமா சார்?//

Athaney...

மாயாவி said...

அன்பின் ஜோதிஜி,

வரலாறு வெகு சொற்பமாகத்தான் வாய்ப்புக்களை தருகிறது. அதுவும் இந்த முறை காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க உணர்வுள்ள ஒரு கூட்டம் (சீமான் போன்றோர்) தயாராக உள்ளது. காங்கிரஸ் 1967 பிறகு தன் முழு பலத்தை அறிந்து கொள்ள முனைந்தது இல்லை. அதற்கு நல்ல வாய்ப்பாக பெரியவர் கையில் இன்று உள்ளது. அவர் மட்டும் கழட்டி விட்டால் கண்டிப்பாக அந்த கட்சிக்கு ஏற்படும் தோல்வி அந்த கட்சியில் உள்ள 108 கோஷ்டிகளையும் கரைத்துவிடும். ஆனால் மறு பக்கம் தன் துணைவியும் மகளும் கைது செய்யபடுவார்கள். ராகுலுக்கும் தெரியும் இந்த திராவிட கட்சிகள் அனைத்தும் இருக்கும் வரை தன்னால் இங்கு ஒன்றையும் புடுங்க முடியாது என்று. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

நிகழ்காலத்தில்... said...

திருடனுக்கு ஒரு காரணம் இருக்கும். பொறுத்துக்கொள்ளலாம். அதற்கு துணை போன நம்ம வீட்டு நபரை பொறுத்துக்கொள்ள முடியுமா?

செய்தது காங்கிரஸாக இருந்தாலும், தடுக்க வாய்ப்பு இருந்தும் சுயநல ஆட்சிக்காக கலைஞர் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

NAGA INTHU said...

தமிழினம் அழிவதற்கு காரணமான காங்.ம்,துணை போன திமுக.வும்,இந்த முறை அதற்கான கடுமையான தண்டனையை தமிழகவாக்காளர்கள் நிச்சயம் வாக்குசீட்டு மூலம் கொடுப்பார்கள்.
இது சத்தியமான உண்மை.
அரவரசன்.

கோவி.கண்ணன் said...

ஒரு ரூபாய் அரிசித் திட்டம் சிறப்புன்னு சொல்கிறீர்கள், ஒரு லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டுக்கு ஏறி இருப்பதை விட்டுவிட்டீர்கள். யாரோ கட்டுவார்கள் என்று கடன் வாங்கி யாருக்கும் இலவசமாக எதையும் கொடுக்கமுடியும். உண்மையில் இந்த யாரோ யார் ? எல்லாவற்றிற்கும் வரி கட்டிச் சரி செய்யப் போகின்றவர்கள் யார் ?

Unknown said...

பா.ம.க வின் போஸ்ட்டர் செம காமெடி...

ராம்தாசுக்கும் ஈழத்தமிழனுக்கும் என்னங்க சம்பந்தம்...

இராஜராஜேஸ்வரி said...

எந்த வகையில் பார்த்தாலும் ஜனநாயகம் என்ற உலுத்துப் போன வார்த்தையால் ஏமாறப் போவது திருவாளர் பொதுஜனமே?
very true.

Saminathan said...

வரிக்கு வரி வழிமொழிகிறேன்..

Unknown said...

போர போக்கை பார்த்தால் காங்கிரஸ், தி.மு.க ரெண்டையும் எதிர்காலதில் மியுசியத்தில் தான் பார்கவேண்டும் போல..

ஜோதிஜி said...

வினோத் கலைஞர் இறப்புக்கு பிறகு நிறைய சுவராஸ்யங்கள் தமிழ்நாட்டு அரசியலில் உண்டு. அன்று தெரியும் பலரின் உண்மையான முகங்கள். குறிப்பாக அஞ்சா நெஞ்சனின் குணாதிசியம்.

பூந்தளிர்.

உங்கள் வரியை இப்போது தான் பார்த்தேன். இன்று நண்பர் பத்து சதவிகிதம் வரியைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார். மொத்தத்தில் இந்த தலைகள் உள்நாட்டு உற்பத்தி இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள் போல.

நன்றி இராஜராஜேஸ்வரி. தொடர்ந்து வந்துகிட்டே இருக்கீங்க.

செந்தில் என்ன இப்படி கேட்டுட்டீங்க? பொழப்பு ஓட இந்த ஈழம் தானே பாசமுள்ள மகன் கட்சிக்குத் தேவை.

நிலவு உங்கள் வருகையை குறித்துக் கொண்டேன்.

ஜோதிஜி said...

கண்ணன்

ஆயிரம் விமர்சனங்கள் கோபங்கள் வெறுப்புகள் கலைஞர் மேல் உண்டு. அதுவும் டாஸ்மார்க் என்பது மூலம் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு செயல்படமுடியாத ஒரு ஊனமான இளையர்களை உருவாக்கிய பெருமை இந்த கலைஞருக்கே உண்டு. ஆனால் கண் எதிரே வேலை இழந்து, நிறுவனத்தை மூடி, அலையும் பலருக்கும் இந்த ஒரு ரூபாய் அரிசி மிகப் பெரிய வரபிரசாதம். பேராசிரியர் அன்பழகன் சொன்னது நினைவுக்கு வருகின்றது.

கடன் வாங்க தகுதி உண்டு. கடனை அடைக்கவும் தமிழ்நாட்டில் வாய்ப்பும் உண்டு.

ஜோதிஜி said...

நாகா இந்து

உங்களைப் போல நானும் உணர்ச்சி வசப்பட்டு பேசத்தான் ஆசை. ஆனால் எதார்த்தம் என்பது வேறு. ஆனால் ஈழமோ இழவோ இந்த முறை மிகப் பெரிய பிரச்சனைகளுக்கிடையேதான் இந்த தேர்தல் முடிவு வந்து சேரும் என்பது மட்டும் உண்மை.

நிகழ்காலத்தில்

வரிக்கு வரி வழிமொழிகின்றேன். மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கலாம். என்றுமே கலைஞர் வாழ்வில் கறை நல்லது என்ற கதை தான். ஆனால் திட்டமிட்ட ஈழம் போர் என்பது நிச்சயம் நடந்தே தான் இருக்கும். அது சர்வதேச அரசியல் சம்மந்தப்பட்டது. புத்தகத்தில் பேசலாம்.

ஜோதிஜி said...

மூகமூடி

கனிமொழி குறித்து நிறைய எழுதலாம். இப்போது எல்லாபாதையும் ரோம் நோக்கி என்பதைப் போல எல்லோர் பார்வையும் கனிமொழி நோக்கியே.

ராகுல்?

ம்ம்ம்ம்....

பேசலாம்......பேசுவோம்.....

ஜோதிஜி said...

தவறு

அரசியல் பதிவுகள் தான் பரவலாக இந்த இல்லத்தில் மேலேறுகின்றது. கண்ணன் சொன்னது போல இது வெறும் எழுத்ததாகவே நின்று போய்விடுகின்றது. செய்தித்தாள்கள் படிப்பதே வீண் என்று நினைக்கும் தமிழர்களிடம் வலைபதிவுகள் சென்று சேர இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.

குமார் இரவு வானம்

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்லது என்பதை இப்போது பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டு வாக்காளர்களிடத்தில் உள்ளது.

வருக வேடந்தாங்கல்.

ரதி நம்ம நடராஜன் கலைஞர் வரிகளை படிக்கும் போது கொல வெறியோடு கடந்து போனதால் சிற்றுரையாக முடித்துவிட்டார்.

ஆமாம் நரேந்திரே மோடியைக்குறித்து அருந்ததி ராய் என்ன சொல்லி இருக்கிறார். இந்த பின்னோட்டத்தில் அவஸ்யம் எழுதுங்க. காரணம் உண்டு.

ஜோதிஜி said...

சித்ரா

நிச்சயம் வருவார்கள். தங்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு.

பந்து

நீங்க சொன்னதை மற்றொரு நண்பரும் இது தான் என் கருத்தும் என்று உரையாடும் போது சொன்னார்.

இக்பால் செல்வன்

என்னுடைய கருத்தும் இதே தான். ஆனால் இது போல நடக்கும் போது செத்துப் போயிருப்போம்.

விந்தை மனிதன்

.......... ?????

ஜோதிஜி said...

சரவணன்

இந்த முறை கழட்டிவிட்டுத்தான் ஆகனும். இல்லாவிட்டால் சுருக்கு சுருக்கிவிடும். பார்க்கலாம்?

தமிழ்மலர்

பத்திரிக்கை துறையில் இருக்கியளோ? பலரும் உங்கள் விமர்சனம் போலத்தான் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

Anonymous said...

திறமையான சரியான வாதங்கள் நல்ல அலசல் பதிவு

Anonymous said...

காங்கிரசை தமிழகத்தில் இல்லாமல் செய்வதும் திராவிட கட்சிகள் ஒழிவதுமே தமிழ்கத்தின் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரே வழி

Anonymous said...

காரணம் குஜராத்தில் ஆண்டு கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஆட்சியை சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று ஐபிஎன் ஊடகம் பாராட்டி இருப்பதைப் போல நமக்கு துடிப்பான பிரதமர் எதிர்காலத்தில் தேவை.//
நிச்சயமாக

Anonymous said...

கலைஞரை ஓரங்கட்ட காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று அதனால்தான் கொங்கு கட்சிக்கும் பா.ம்.கவுக்கும் சீட்டுகளை அள்ளித்தந்தார் கலைஞர்

Unknown said...

//..படிப்பதே வீண் என்று நினைக்கும் தமிழர்களிடம் வலைபதிவுகள் சென்று சேர இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்...?//

பேப்பர் படிப்பது வீண்னு நினைகிறமாதிரி தெரியல...
வீண் செலவுன்னு வேண்ண நினைக்கலாம்.
ஒவ்வொரு பிளாக் ஆரம்பிக்க நடத்த, பிளாகை படிக்க எல்லத்துக்கும் பணம் கட்டணும்னு இருந்த எத்தனை பேர் எழுதுவாங்க.. இல்ல படிப்பாங்கனு நினைகிறிங்க..?

நான் பார்த்தவரை.. மக்கள் கூடும், கல்யாணம் , இழவு போன்ற இடங்களில்...ஜீ.வீ, நக்கீரன், மாதிரி புத்தகங்கள்
இல்லை பேப்பர்கள்... யாராவது வாங்கிவந்தால் அங்குள்ள அனைவரும் குறிப்பாக பெண்கள் ..படித்து முடித்து விடுகின்றன.. தயக்கம் காசு கொடுத்து வாங்க மட்டும் தான்.

வலையுலகம் இன்னும் விரியும்போது..

வலைபூக்களை செல்போனில் இலவசமாக படிக்க முடியும்.

கணினி இல்லாமல் செல்போனில் எழுத படிக்க வசதி வரும்போது .. கோடிக்கனக்கான வாசகர்கள் புதிதாக வலைக்குள் வருவார்கள்...அப்போதே அச்சு இதழ்கள் அனைத்துக்கும் மூடு விழா நடக்கும்.

இதற்கு 50 ஆண்டுகள் தேவை இல்லை. அதிகபட்சம் 5 ஆன்டுகள்... கடந்த 10ஆண்டுகளில் செல்போன் பரவிய வேகத்தைவிட கூடுதலான வேகத்தில் வலை பரவும்..

அப்போது...தமிழின் தலை சிறந்த, கோடிக்கணக்கன வாசகர்க்ளால் அறியப்பட்ட முன்னனி எழுத்தாளர்களில் ஒருவராக நீங்களும் இருப்பீர்கள். (சுக்கிரதசை ஆரம்பித்து நடக்கும்)

அப்போதும் நான் உங்களுக்கு கமொண்ட் போடுவேன்..

michaelswamyarokiaraj said...

congress,dmk,thiruma,ramadass all are shados of sins in india