Sunday, September 15, 2019

அச்சு ஊடகம் 2019

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் குடும்பத்தினர் திட்டும் அளவிற்கு வார இதழ்களுக்கு செலவளிக்கும் தொகை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் ஆசையுடன் விருப்பத்துடன் செலவளித்தேன். புதிய படம் பார்க்க ஆர்வமாகச் செல்பவர்கள் போலப் புதிதாக ஏதாவது ஒரு இதழ் வந்தால் வாங்கி ஆசிரியர் குழு முதல் மற்ற அனைத்தையும் ஆராய்ச்சி செய்வதுண்டு. ஒரே செலவு அதுவும் அதிக செலவு என்பது வார இதழ்களுக்காகவே இருந்தது.

வீட்டுக்கு வரும் தினசரிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், வாரந்தோறும் வந்து கொண்டிருக்கும் சகலவிதமான வார இதழ்கள், தோன்றும் போது ஆங்கில தமிழ் தினசரி, இது தவிர மற்ற புத்தகங்கள் என்று வாங்கிக் கொண்டிருந்தேன். என் பொறுமை எல்லை மீறிக் கொண்டே வந்தது. எவரைத் திட்ட முடியும்?

ஒவ்வொரு முறையும் படித்து முடிக்கும் போது இந்த காகிதத்தை மலம் துடைக்கப் பயன்படுத்தக்கூடக் கூடாது என்பதாகத் தோன்றியது. காரணம் ஒரு சிறிய துணுக்கு செய்தியைக் கவர் ஸ்டோரியாக மாற்றுவது, அப்பட்டமாக மிரட்டல் ஜர்னலிசம், ஒரு எழுத்தாளர் தங்களுக்குப் பேட்டி அளிக்க மறுத்து விட்டார் என்பதற்காக அவர் சிக்கலில் மாட்டிய போது அடுத்தடுத்த இதழ்களில் அவரைப் பற்றிக் கவர் ஸ்டோரி வெளியிட்டும் செல்ப் எடுக்காத கேவலம், கல்வித்துறையில் உள்ள ஊழல்களைப் பற்றிப் பேச மறுத்து சூரப்பா எந்த ஊரிலிருந்து வந்தார்? என்ற ஆராய்ச்சிக் கட்டுரை என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் விபச்சாரத்னமாகவே மாறிய கொடுமையை உணர்ந்து மொத்தமாகவே நிறுத்தும் சூழல் உருவானது. கிட்டத்தட்ட மூச்சு அதன் பிறகே இயல்பாகச் சுவாசிக்க முடிந்தது.

தமிழ்த்திரைப்பட உலகம் அழிந்தால் அந்தத் துறையில் இருப்பவர்கள் வருத்தப்படுவதை விட பிரபல்யமான வார இதழ்கள் தான் வருத்தப்படும் அளவிற்கு சினிமா சினிமா என்று தொடக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் சினிமா ஜர்னலிசமாக மாறிய கொடுமையும் இப்போது உள்ளது.

இதில் கட்சி ஆதரவு, மத ஆதரவு என்ற கொள்கையின் அடிப்படையில் படிப்பவர்கள் மனிதர்களே அல்ல என்ற நோக்கத்திலும் தினசரியில் உள்ள ஆசிரியர்கள் அறம் என்றால் கிலோ என்ன விலை? என்கிற நிலைக்கும் வந்து சேர்ந்து குப்பைகளை வீட்டுக்குள் தினமும் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

சில மாதங்களுக்கு வார இதழ்களில் ஆசிரியராக பணியாற்றுபவர்களின் மாறுதல்கள் நடந்தது. கொஞ்சமாவது இவர் ஏதாவது ஒரு கட்டுரை எழுதியிருப்பார்? அதற்காகவாவது வாங்கலாம் என்ற எண்ணமும் அதன் பிறகு தவிடுபொடியானது.

குழந்தைகள் எழுதும் நான் முதல்வரானால்? என்கிற இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் சூடுபிடிக்கத் தொடங்கியது. எழுத்துப் பிழைகள்? இது தமிழா? என்று நாம் யோசிக்க வேண்டிய கட்டுரைகள் என்று தமிழனைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கின்றது.

மொத்தத்தில் நான் எழுதுவது தமிழ். நீ வாசிப்பது உன் தலையெழுத்து? நான் கொடுப்பது தான் செய்தி? உனக்குப் புரிந்தால் என்ன? புரியாவிட்டால் என்ன? என்ற நோக்கத்தில் தான் ஒவ்வொரு நிர்வாகமும் என் கடன் பிணி செய்து கிடப்பதே என்று மாறத் தொடங்கியது.

ஆதாரம் தேவையில்லை. அவசரம் தான் முக்கியம் என்ற நோக்கத்தில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செய்திகளுக்கும் பின்னால் உள்ள உளவியல் தாக்குதல்களைத் தமிழர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதனை விட இவர்களின் வியாபாரம் எப்படி உள்ளது? என்பதனை ஒவ்வொரு முறையும் எப்போதும் வாங்கும் பெட்டிக் கடைக்காரரிடம் தவறாமல் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.

நாங்கள் முன்னிலை. நாங்கள் நம்பர் 1 என்ற கட்டியம் கூறி அலறும் வார இதழ்கள் பாதிக்குப் பாதி என்கிற நிலைக்கு வந்துள்ளது. 50 இதழ்கள் எப்போதும் விற்கும்? இப்போது 20 கூட போகமாட்டுது என்கிறார்கள். ஆனால் பெருமை பீத்தலுக்கு இங்கே குறைவில்லை.

அதாவது நாங்கள் திருந்த மாட்டோம். நீங்கள் திருந்தக்கூடாது தான் எங்கள் முதன்மையாக நோக்கம் என்பதாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது.

இது பராம்பரியமான இதழ், 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் சந்தையில் வெற்றிகரமாக இருக்கின்றோம் என்பது உண்மை தான்.

விபச்சாரம் என் தொழில்? அதில் என்ன தவறு உள்ளது? என்று யாராவது பொது வெளியில் உரக்கச் சொன்னால் உங்கள் பார்வை எப்படியிருக்கும்? அவர்களைப் பற்றி உங்கள் நினைப்பு எப்படியிருக்கும்?

வாசிக்க

கடைசி எழுத்து