Wednesday, October 31, 2012

காரைக்குடி உணவகம்



ங்க பக்கம் இப்ப மழை பெய்யுதா? என்று நண்பர் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  காரணம் தொடக்கத்தில் மழை என்றால் ஒரு ஊருக்குள் எல்லா பகுதிகளிலும் வெளுத்துக்கட்டும்.  ஆனால் திருப்பூருக்குள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இந்த மழை இப்போது பெய்து ஊரை சுத்தப்படுத்திக் கொண்டுருக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கு சற்று நேரம் கழித்து செல்லாம் என்றால் அந்த பக்கம் அப்போது தான் மழையின் சாரல் தொடங்குகின்றது. 

வினோதமாக இருந்தாலும், அவசர கடமைகளை மீறி நனைந்து செல்வது வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உதவுகின்றதோ இல்லையோ முறையற்ற, அனுமதி பெறாமல் இயங்கிக் கொண்டுருக்கும் சாயப்பட்டறைகளுக்கு பம்பர் லாட்டரி.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாமல் (தெரிந்தும்?) தங்கள் பகுதியில் பள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கும் சாய நீரை எளிதாக இந்த தண்ணீரோடு சேர்த்து கலந்து விட்டு விடலாம் அல்லவா.

ஏற்கனவே திருப்பூர் முக்கால் வாசி மூழ்கிப் போய்விட்டது.  இன்னமும் மீதி இருப்பதால் பலரும் இதற்காகவே உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்லது நடக்க வேண்டும் என்றால் சில அழிவுகளை நாம் கண்ணால் காண வேண்டும் என்பார்கள்.  பார்க்கலாம்.  பாதிப் பேர்கள் சொத்துக்களை விற்று தங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  மீதிப் பேர்கள் மனம் திருந்த மார்க்கம் இல்லாத வழியில் பயணித்துக் கொண்டுருக்கிறார்கள்.

அனுபங்கள் ஆசிரியராக பொறுமையாக பாடம் கற்பிக்கும். பாடத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு பாடங்கள் பாம்பாக மாறி கற்பிக்கும்.
                                                                •••••••••••••••••••••••••••••••••••

நொய்யல் நதியை காப்போம் என்று திருப்பூரில் உள்ள நண்பர்கள் முகப்பு நூல் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்.  

அதில் முகப்பு படமாக உள்ள தற்போதைய நொய்யல் ஆற்றின் படம் இது. படத்தை சொடுக்கினால் நண்பர்கள் உருவாக்கியுள்ள முகப்பு நூலுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மழையை ரசிப்பதும் அதில் நினைவதும்  சுகமே.  பெய்த மழையில் அடித்துச் செல்லும் கழிவுகளைப் போல பல சமயம் அடித்தட்டு மக்களின்  இயல்பான வாழ்வாதாரத்தையும் மாற்றி விடுகின்றது.
                                                                      •••••••••••••••••••••••••

ண்பருடன் பேசிக் கொண்டுருந்த போது நீங்க கூட தற்போதைய மின்வெட்டு பற்றி தெளிவாக எழுதவில்லை.  உங்களுக்கு அம்மையார் குறித்த பயமா? என்றார். 

கூகுள் ப்ளஸ் ல் இது விவாதமாக வரும் போது கூட கடைசியில் இது கலைஞர் செய்த முந்தைய தவறு என்றும், இல்லை இது இந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடு.  எவரும் பேசப் பயப்படுகிறார்கள். பயந்தாங்கோலி பக்கோடாக்கள் என்கிற ரீதியில் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. 

தம்பியண்ணன் அப்துல்லா கூட உயர்வு நவிற்சி அணியில் என்னைப் பற்றி விமர்சித்து இருந்தார்.

கூகுள் ப்ளஸ் ல் சொல்ல முடியாத, நண்பர் ராஜமாணிக்கம் தமிழ் ஹிந்துவில் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கு அப்பாற்பட்டு இது குறித்து எழுத வேண்டும் என்று மனதில் வைத்து இருந்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு நண்பர் சென்னையில் இருந்த போது கொடுதத புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடிந்தது.


மின்சாரம் -- பயன்படுத்த அல்ல. புரிந்துகொள்ள மட்டும்  

என்ற தலைப்பில் சில பதிவுகளாக எழுத நினைத்துள்ளேன். முழுக்க முழுக்க புள்ளி விபரங்களை பல வித ஆதாரங்களோடு மிகத் தெளிவாக சா. காந்தி அவர்கள் எழுதி உள்ளார்.

சென்னையில் இருந்த போது நண்பர் என்னிடம் கொடுத்த புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்த போது தலைசுற்றாத குறை தான்.  காரணம் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்களின் அமைப்பின் தலைவரான சா. காந்தி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் 

தமிழகத்தில் மின்வெட்டும் மின் கட்டண உயர்வும் -- காரணமும் தீர்வும். 

ஏறக்குறைய நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் சுய பரிசோதனை செய்து கொண்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு இந்த புத்தகத்தில் சா. காந்தி அவர்கள் தகவல்களை ஆணித்தரமாக கொடுத்துள்ளார். 

கட்சி சார்பற்று, மொத்தமாக நம்முடைய மின்சார வாரியங்கள் கடந்து வந்த பாதை, இந்தியாவில் உள்ள மொத்த மினசாரத்தடத்தின் கதை என்று எல்லா பக்கமும் உள்ள நிறை குறைகளை அலசி துவைத்து காயப்போட்டு உள்ளது. 

இந்த புத்தகத்தை மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் சேர்ந்து ஆழிப்பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்கள்.  நண்பரிடம் அனுமதி பெற்ற காரணத்தால் இதில் உள்ள முக்கிய தகவல்களை வலைபதிவில் எழுதி வைக்க விரும்புகின்றேன்.

அதற்கு முன்னால் பொதுவான சில விசயங்களைப் பார்த்து விடலாம்.

சென்ற ஆட்சியில் மின் தட்டுப்பாடு காரணமாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியைப் பற்றி செய்திதாள்களிலும், தளங்களிலும் வந்த நக்கல் விமர்சனங்களை நாம் எவரும் மறந்து விடமுடியாது.  அதே நிலைமையில் இன்றைய காலகட்டத்தில் இன்றைய மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன்.  

நன்றாக விபரம் தெரிந்தவர்கள் மின்சாரத் துறைக்கு அமைச்சராக வருபவர்களை கழிவிரக்கத்தோடு தான் பார்ப்பார்கள். காரணம் தற்போதைய நிலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது வழங்கும் மின்சாரத்திற்கு வசூல் செய்வது மட்டும் தான் ஒரே வேலை.  மற்றபடி எந்த அதிகாரமும் இல்லாத துறை. மாநிலத்தின் முதலமைச்சர் கூட ஒன்றும் செய்யமுடியாது என்கிற நிலைமை தான் எதார்த்தம்.

குழப்பாக இருக்கிறதா?

மேற்கொண்டு படிக்கக் காத்திருக்கவும்.

அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு இரண்டு முக்கிய பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது.  ஒன்று தண்ணீர் மற்றொன்று மின்சாரம்.
                                                                                  ••••••••••••••••••••••••••

சில நாட்களுக்கு முன் குழந்தைகளுடன் ரசித்து பார்த்த படம் சமீபத்தில் வெளிவந்த சாட்டை.  


நண்பர்களின் கருத்துப்படி இது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் வெளிவந்த படம் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அம்மணமாக இருக்கும் ஊரில் கோவணம் கட்டியிருந்தால் கூட அவமானம் தான்.  படங்களில் இரண்டு பேர்கள் சேர்ந்து மது அருந்தும் காட்சி வந்தால் மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று மிகச் சிறிய எழுதுக்ககளில் கீழே வரும்.  அதைப் போலவே புகை பழக்கத்திற்கும்.  

ஆனால் இந்த சிறிய எழுத்துக்களை எவர் கண்டு கொள்வார்கள்? திருந்துவார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை.  

தவறான பழக்கம் என்பது இயல்பானதாக மாறிவிட்ட சமூகம் இது.  

ஆனால் கிராமத்து பள்ளிக்கூடங்களில் இன்றும் கந்து வட்டி ஆசிரியர்கள், சாதி வெறி பிடித்த ஆசிரியர்கள், வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிக்கு கூட பயம் இல்லாமல் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள், கிராமம் என்றால் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மாற்றலாகி நகர்ப்புறத்திற்கு வருகின்ற ஆசிரியர்கள், அடிப்படை வசதியற்ற கிராமத்து பள்ளிக்கூடங்கள், மாணவர்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் ஆசிரியர்கள் என்று பலவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் நாம் ஏற்றுக் கொள்ள விருமபுவதில்லை.  

நாமும் அதே போலத்தான் அந்த தடங்களைத் தாண்டித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருந்தால் கூட இப்ப பழைய நிலைமைக்கு மோசம் இல்லை என்று சொல்லிக் கொண்டு நம் குழந்தைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

திரைப்படம் என்பது வியாபாரம்.  போட்ட முதலீட்டை எடுத்தே ஆக வேண்டும்.  ஆனால் அதற்கு அப்பாலும் படம் எடுப்பவர்களுக்கும், இயக்குநர்களுக்கும் சில அடிப்படை கடமைகள் இருக்கிறது.  

அதைப்பற்றி பேசும் போது தான் எதார்த்தம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுகின்றது.

என் மூத்த சகோதரி கண்டிப்புக்கு பெயர் போனவர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது ஆசிரியை பணியைத் தொடங்கினார். கல்லூரியில் பணிபுரிய  வாய்ப்பு வந்த போது எங்கள் குடும்பத்தில் அனுமதிக்கவில்லை.

மாறுதல் வாங்க மனமில்லாமல் நீண்ட வருடங்கள் அங்கேயே இருந்தார். பத்தாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய கிராமத்திற்கு குறிப்பாக போலூர் பக்கம் உள்ளே சென்றால் அது ஒரு தனி உலகமாக இருக்கும்.

பணியில் இருந்த போது பல முறை மிரட்டலுக்கு ஆளானவர்.  ஆனால் விடாமுயற்சியில் பணிபுரிந்த 12 வருடங்களில் அந்த அரசு பள்ளிக்கூடத்தை முன்னேற்றிக் காட்டினார்.  துனை தலைமையாசிரியாக இருந்தவருக்கு தலைமையாசிரியர் பொறுப்பு வந்த போது, காத்துக் கொண்டு இருந்தவர்கள் கோவில்பட்டிக்கு அருகே தூக்கியடித்தனர். அங்கும் பல பிரச்சனைகள் உருவானது. இரண்டு குழந்தைகளையும் அரசாங்க பள்ளியில் தான் படிக்க வைத்து மாவட்ட அளவில் சிறப்பாக தேர்ச்சி பெற்றனர்.  நீண்ட வருடங்களாக ஊருக்கு வெகு தூரத்தில் இருந்து விட்டோம். கடைசி காலத்தில் ஊருக்கு அருகே இருப்போம் என்று தற்போது தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு வருகிறார்.

 ஏற்கனவே இந்த பகுதியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு (சாதிப் பிரச்சனை) முழு பின்புலமும் தெரியும். ஒவ்வொரு வாரமும் அவருடன் அழைத்துப் பேசும் போது அவருடைய புலம்பல்களை பொறுமையாக கேட்டுக் கொள்வதுண்டு., இன்றைய கல்வியின் குறிப்பாக அரசாங்கப் பள்ளியின் தரத்தை மாணவர்களின் சிந்தனைகளை, சுயநலமிகளின் போக்கை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இதையும் தாண்டி சில நல்ல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றது.

திருப்பூர் மாவட்டத்தில் பல பள்ளிக்கூடங்கள் வெகு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது.  சிவகங்ககை மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி நடத்தும் கூட்டத்தில் இங்குள்ள அரசாங்க பள்ளிகளைப் பற்றி  குறிப்பிட்டு  சொல்லும் அளவிற்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்க.

காரணம் மனதிர்களும் அவர்களின் மனசும் தான் காரண்ம்.

மனிதர்களுக்கு பணம் மட்டும் தேவை எனில் பல தொழில்கள் இருக்கின்றது. பேரூந்து நிலையத்தில் மூத்திரம் போக இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு ஓப்பந்தகாரர்களாக, அதில் பணிபுரிபவர்களாக வாழ்க்கை நடத்துபவர்கள் வரைக்கும் இந்த உலகத்தில் பலரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தினந்தோறும் பணம் தான் கிடைக்கின்றது. இதுவரைக்கும் இலைமறை காயாக நடந்து கொண்டுருந்த விசயங்கள் தற்போது நவீனமாக சமீப காலமாக திருப்பூர் நட்சத்திர ஹோட்டலில் வளர்ந்து கொண்டு இருக்கும் விபச்சாரம் வரைக்கும் பணம் சம்பாரிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றது.

சமீபத்தில் ருக்மாங்கதன் (தற்போது செக்ஸ் படங்கள் எடுத்துக் கொண்டுருப்பவர்) போல அப்பட்டமாக எடுத்து ஆமாடா நான் இப்படித்தான்.  நீங்க பெரிய ஒழுக்கமா? என்று கேட்டு விடலாம் 

அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டியிலும் தைரியமாக இப்படித்தான் பேசியுள்ளார்.

அவர் சொல்லியுள்ள எதார்த்தம் முற்றிலும் உண்மை.

பாராட்டத் தோன்றுகின்றது.

முடிந்தால் குழந்தைகளுடன் சாட்டை படம் பாருங்கள். 

அன்பே சிவம் எடுத்த பிறகு இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி எனது திரைப்பட வாழ்க்கையில் இது போன்ற ஒரு படமும் எடுத்துள்ளேன் என்பதே எனக்கு பெரிய திருப்தி என்று சொன்னது போல சமுத்திரகனியும், இயக்குநர் அன்பழகனுக்கும் இது முக்கிய படம்.

முக்கியமாக தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பிரபு சாலமன் அவர்களையும் பாராட்டத் தோன்றுகின்றது.  

தம்பி ராமையா மிகச் சிறந்த நடிகர் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம். இந்த படத்திலும் சமுத்திர கனிக்கு போட்டி போட்டு நடித்துள்ளார். வலைதளத்தில் பெரும்பாலும் நல்ல விதமாகத்தான் இந்த படம் குறித்து எழுதி உள்ளனர். 

இது போன்ற படங்களுக்கு குறைந்த பட்சம் அரசாங்கம் வரிவிலக்கு கொடுக்க வேண்டும்.

காசுக்காக அலைந்தோம். காசுக்காகவே அலைகின்றோம்.  காசுக்காகவே எல்லாவற்றையும் இழந்து கொண்டும் இருக்கின்றோம்.

Tuesday, October 30, 2012

இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு?



மானியங்கள் இல்லாவிட்டால் நம் நாடு சிறப்பாக வந்து விடும்.

இது இயல்பாகவே இந்தியாவில் படித்தவர்கள் எப்போதும் உச்சரிக்கும் வார்த்தைகள். ஆனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தன் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு மானியங்கள் மூலம் அவர்களை காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை.  

உலகளாவிய பொருளாதாரம் என்ற வார்த்தை இந்தியாவிற்குள் வந்த பிறகு உலகில் உள்ள பன்னாடு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது ஒரு அற்புதமான சந்தையாக மாறியுள்ளது. 

தவறில்லை.

தரமான பெருட்கள் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும். உள்ளே பழமைவாத சிந்தனைகளில் ஊறிக் கொண்டுருப்பவர்கள் மாறியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகும்.  படித்தவர்கள் வெளிநாடு செல்ல தேவையில்லை. ஆனால் வருகின்ற ஒவ்வொரு நிறுவனங்களும் புறவாசல் வழியாகவே வருகின்றது. எந்த ஒப்பந்தங்களும் வெளிப்படையாக இருப்பதில்லை. 

அது குறித்து எவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்டால் கூட ஆயுட்காலம் முடிவதற்குள் முழுமையான விபரங்கள் கிடைத்தால் ஆச்சரியமே.

அந்நிய முதலீடு என்பது இந்தியாவிற்கு தேவை என்பது எத்தனை முக்கியமோ அதே போல் உள்ளே இருக்கும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் இருப்பதும் முக்கியம் தானே.?

ஓராயிரம் உள்நாட்டு தொழிலை அழித்து ஒரு பன்னாட்டு நிறுவனம் வளர்க்க நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த அளவுக்கு ஆர்வம் இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும்?

தேசப்பற்று என்று நீங்கள் சொன்னால் உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வேறுவிதமான கற்பிதம் செய்து கொண்டால் அது உங்கள் சிந்தனையின் தவறாகவே இருக்கும்.

உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்க.

இந்தியாவில் உள்ள பகாசுர நிறுவனங்களின் முழுமையான செயல்பாடுகளும் நமக்குத் தெரிய சில காலம் பிடிக்கும்.  தெரிய வரும் போது எதிர்க்க முடியாது.  எதிர்ப்பை அடக்க அத்தனை அரசு எந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து செயல்படும்.  இது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் உண்மை. 

தற்போது இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் அற்புதமான அறிவாளித்தனமான மற்றொரு திட்டத்தையும் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்று இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தப் போவதாக சொல்லியுள்ளார்.  அந்த பொதுத்துறை நிறுவனம் லாபகரமாக இருந்தாலும் கூட அது குறித்து கவலைப்படப் போவதில்லை.  

மொத்தத்தில் தாங்கள் நினைத்தபடி, தாங்கள் விரும்பிய ஆட்களுக்க தற்போது லாபம் ஈட்டிக் கொண்டுருக்கும் நிறுவன பங்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை தாரை வார்த்து விடுவது.  

பிறகென்ன?

மெதுமெதுவாக அந்த நிறுவனமே தனியார்களின் கைக்கு வந்துவிடும். ஆனால் தொடங்கும் போது மெதுவாகத் தான் தொடங்குவார்கள்.  

இதைப் போன்ற ஒரு திட்டம் தான் தற்போது ஒன்று உருவாகிக் கொண்டுருக்கிறது.  

இங்கு பேசவிருக்கும் மொத்த திட்டத்தையும் பார்க்கும் போது தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமா? இல்லை அருகில் உள்ள நாடா? என்று யோசிக்க வைத்துவிடும் போல.  அந்த அளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகளுடன் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது ஆண்டு கொண்டுருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு வேறு விதமாகவும் தங்கள் நல்ல செயல்களை திட்டமிட்டு செய்து கொண்டு வருகிறார்கள். 

முதல் முறையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் கொள்கையின் மேல் களங்கம் கற்பித்து நீதிமன்றத்தை நாடுவது இது தான் முதல் முறையாக இருக்கக்கூடும்.

டெல்லிக்கு தேவையில்லாத மின்சாரத்தைக் கூட தமிழ்நாட்டுக்கு தர மனமில்லாத அளவுக்க காங்கிரஸ் அரசாங்கம் புத்திசாலிகளால் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

முடிந்தவரைக்கும் மின்சாரம் முதல் ரயில்வே திட்டங்கள் முதல் அத்தனை விசயங்களிலும் தற்போதைய மத்திய அரசாங்கம் புகுந்து விளையாடிக் கொண்டுருக்கிறது.


படத்தை நன்றாக பார்த்துவிட்டு மேலே படிக்கத் தொடங்கலாம்.

இந்திய அரசின் நிறுவனமான கெயில் Gas Authority of India Limited's (GAIL) ஒரு திட்டத்தை வடிவமைத்து உள்ளது. அதாவது கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் வரைக்கும் பைப்லைன் மூலமாக எரிவாயு (கேஸ்) எடுத்துச் செல்லும் திட்டம்.  liquefied natural gas (LNG) இந்த திட்டத்தின் மூலம் பதிக்கப்பட்ட குழாய் மூலம் நாள்தோறும் 16 MMSCMD (million metric standard cubic metre கொண்டு செல்ல முடியும். 

871 கிலோ மீட்டருக்கு கோவை, திருப்பூர்,நாமக்கல்,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக விவசாய நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக கியாஸ் பைப்லைன் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கெயில் நிறுவனம்  விவசாயிகளிடமிருந்து  நில அனுபவ உரிமையை எடுத்துக் கொள்ளுவதுடன் நிலத்தில் மதிப்பீட்டில் பத்து சதவீதத்தை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்கும். பைப் லைன் பதிக்க எடுக்கப்படும் நிலத்தின் இரண்டு பக்கங்களிலும் தலா 10 மீட்டருக்கு இடம் தேவை.பைப்புகள் 5 அடி ஆழத்திற்கு பதிக்கப்படுகின்றன. பைப்பில் விட்டம் 2 அடி ஆகும். பைப் லைன் அமைக்கப்படும் பகுதியின் மீது பயிரிடுவது, வீடுகள் கட்டுவது, மரம் நடுவது, ஆழ்குழாய் கிணறு தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆழமாக வேரோடும் பயிர்களை கியாஸ் பைப் லைன் செல்லும் பகுதிகளில் பயிரிடக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் கியாஸ் பைப் லைன் சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாம்.கியாஸ் பைப் லைன் அமைக்க உருவாக்கப்பட்டுள்ள  புதிய சட்ட மசோதா படி பைப் லைன் அமைக்க நிலத்தை ஒப்படைக்கும் விவசாயிகளே கியாஸ் பைப் லைன் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமாம்.

பொறுப்பற்ற தன்மையா? இல்லை எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்கள் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டார்களோ என்பது தெரியவில்லை.  மூக்கைத் தொட தலையைச் சுற்றி கையை கொண்டு வருவது போல இதன் திட்ட வரைபடங்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றது.  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிகளும் அந்த அளவுக்கு நொந்து போய் உள்ளார்கள். 

இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? 

இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! 

இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். 

அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

இந்த திட்டத்தில் மூன்று மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளது. விற்பனையின் மூலம் வருவாய் கேரளாவுக்கு, எரிவாயு சென்றடையும் மாநிலம்  கர்நாடகா. ஆனால் இந்த குழாய்கள் பதிக்கப்படுவது பெரும்பாலும் தமிழ்நாட்டு பகுதிகளில்.

குறிப்பாக திருப்பூர் சார்ந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குத் தான் அதிக அளவு பாதிப்பு உருவாக்கும். 

310 கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்லப்படும் இந்த பைப் லைன்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 126 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக அமைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 15 கிராமங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 22 கிராமங்களும், ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 9 கிராமங்களும், சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 27 கிராமங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களிலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்த கிராமங்களில் விவசாயிகள் தென்னை, பனை, மரங்களை வளர்க்க முடியாது, பணப்பயிர்களை சாகுபடி செய்ய முடியாது, வீடு,கட்டிடம் கட்ட முடியாது, கனரக வாகனங்களை இயக்க முடியாது.

இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார உரிமை பறிபோகும் ஆபத்து எழுந்துள்ளது. விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுவதற்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூரிலும் கடந்த 5 மாதங்களாக விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

காங்கயம  தாலுகாவில் கத்தாங்கன்ணி, அவிநாசி தாலுகா சர்க்கார் கத்தாங்கன்னி, ஊத்துக்குளி, பொங்கலூர் அருகே  உள்ள பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும  நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக இப்பகுதியில் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலங்களை துண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது எரிவாயு குழாய் அமைக்கும் பணி காரணமாக ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நிலங்கள் துண்டாடப்படும் சூழல் உருவாகி, விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் பதிக்கப்பட்ட நிலத்தில் 60 அடிக்கு எந்த பணிகளையும் செய்ய கூடாது என நிபந்தனை உள்ளது.

இத்திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நெடுஞ்சாலை ஓரம், ரயில  பாதை ஓரம் அல்லது ஆற்றங்கரை ஓரத்தில் இந்த குழாய்களை கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.

வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகியவையும் பாதிப்படைகிறது, இதற்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயிகள  நலன் குறித்து எண்ணிப்பார்க்காமல், குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  கூடங்குளம் போல இது விஸ்பரூபம் எடுக்குமா? இல்லை பிணந்தின்னி கழுகுகள் போல கொடுப்பதை வாங்கிக் கொண்டு நம்முடைய அரசியல் சேகவர்கள் அமைதி காப்பார்களா? என்று தெரியவில்லை. .

இதைப் போலவே மற்றொரு திட்டமும் உருவாகிக் கொண்டுருக்கிறது. 

சென்னை தூத்துக்குடி இடையே நிலத்திற்கு அடியில் ‌பைப் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணி நடைபெற உள்ளது. மதுரை, திருவண்ணாமலை, சென்‌னை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த திட்டம் சுமார் 640 கி.மீ., தூரம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்‌கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக செயற்கைக்கோள் மூலம் பைப்லைன் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டது.இந்த திட்டம் செயல்படுத்தும் போது, பைப்லைன் செல்லும் பகுதியில் 100 அ‌டி தூரத்திற்கு கட்டுமானப்பணிகள், போர்வெல் பணிகள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்படும்/

இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரியாஜிஸ்டிக் இன்பர்ஸ்டிரக்சர் லிமிடட் நிறுவனம் செய்து வருகிறது. 

தற்போது மத்திய அரசாங்கம் வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ள ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் என்பது பல்லாயிரக்கணக்கான நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாழ்க்கையில் இடியாக விழுந்துள்ளது. 

ஆடம்பரம் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வருடத்திற்கு 8 கேஸ் சிலிண்டர் தேவைப்படும்.  வருடந்தோறும் ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் மானிய விலையிலும் அதற்கு மேல் தேவைப்படுவ்தை மானியம் இல்லாத விலையிலும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் (மானிய விலையில்) ரூபாய் 400.  மானியம் இல்லாமல் வாங்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகும்.  இதில் மற்றொரு கொடுமையும் உண்டு.  நாம் எப்போது இந்த கேஸ் சிலிண்டர் வாங்குகின்றோமோ அப்போது சந்தை நிலவரப்படி விலை ஏற்ற இறக்கம் இருக்கும்.

தற்போது மத்திய அரசாங்கத்தில் மாற்றப்பட்ட பெட்ரோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூட ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியுடன் மோதல் போக்கை கடைபிடித்த காரணத்தினால் தான் என்று பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.  

ஒரு பக்கம் அரசாங்க பொதுத்துறை நிறுவனம் மூலமும் அம்பானி நிறுவனங்கள் மூலம் இந்த எரிவாயு குழாய் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து விட்டால் வீடுகளுக்கு தனியார் மூலமாக தேவைப்படும் எரிவாயு எளிதாக வழங்கப்பட்டு விடலாம்.

பன்னாட்டு நிறுவனங்களின் வளத்திற்காக விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் அத்தனை பேர்களும் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்பது கேலிக்குறியாகவே இருக்கின்றது. 

இதனால் தான் இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுலாலியா தண்ணீரை விற்பனை செய்யும் போது தான் அதனை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கவனம் உருவாகும் என்று போகிற போக்கில் தத்துவங்களை உதிர்த்துவிட்டு செல்கின்றார். 

சுட்டிகள்



Monday, October 29, 2012

காதோடு பேசலாம் வாங்க.


"போராடுவோம்... போராடுவோம்.  இறுதி வரை போராடுவோம்."

தெருமுனைகளில், அடுத்த சந்தில், அரசு அலுவக வாசலில் என்று இந்த வார்த்தைகளை ஏதோவொரு இடத்தில் கேட்டு நகர்ந்து வந்து இருப்போம். 
இன்று வரைக்கும் போராட்டத்தின் வீச்சு குறையவில்லை.  ஆனால் வடிவங்கள் தான் மாறியுள்ளது. போராட அழைப்பவர்களின் நோக்கமும் மாறியுள்ளது.

சாலையில் போக்குவரத்து கூட்ட நெரிசலில் நாம் முந்திக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது பக்கவாட்டில் கூட்டமாக நின்று கொண்டு சப்தம் போட்டு உரக்க தங்கள் கோரிக்கைகளை கத்திக் கொண்டு இருப்பவர்களை  கவனித்துருக்கிறீர்களா?  

நடந்து சென்று கொண்டுருக்கும் உங்கள் கையில் எவரோ கொண்டு வந்து திணிக்கும் கோரிக்கைகள் அடங்கிய அந்த தாளை வாசித்து பார்த்து இருக்கிறீர்களா?  

கூட்டத்திற்குள் புகுந்து வெளியே வந்து உண்டியல் ஏந்தி வந்தவர்கள் உங்கள் முகத்திற்கு முன்னால் ஜில்ஜில் என்று குலுக்கி உங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றியிருக்கும்? 

அவர்களை நிதானமாக ஏறிட்டு பார்த்து இருக்கிறீர்களா?

"இவனுகளுக்கு வேற பொழப்பே இல்லப்பா. ஆ...ஊன்னா தெருவுக்கு வந்து நம்மள வதைக்கிறானுங்கப்பா...."

அலுத்துக் கொண்டே எரிச்சலை துப்புவோம்.

குடிதண்ணீர் இருபது நாளாக வரவில்லை. எங்களுக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று கேட்ட கோரிக்கைகள் தீர்வு வராமல் போக தெருவுக்கு பெண்கள் பானையுடன் வந்து நிற்கும் போது அரசு நிர்வாகம் வேகமாக செயலில் இறங்கும்.  சாலை போக்குவரத்து பாதிக்க,  போராடிக் கொண்டுருக்கும் அந்த பெண்கள் கூட்டத்தை அவசரமாய் பயணிக்கும் பெண்கள் திட்டுவதை பார்க்கின்றோம்.

எந்த பிரசச்னையும் நம்மை தாக்காத வரைக்கும் அது பிரச்சனை அல்ல. அடுத்த சந்தில் தீப்பிடித்து எரிந்தால் அது அடுத்த நாள் செய்தி தாளில் வரப்போகின்ற செய்தி.  நம் வீட்டில் நடந்தால் அதுவொரு கண்ணீர் காவியம்.

போராட்த்தின் வடிவம் இன்று இணையம் வரைக்கும் பலவிதங்களிலும் மாறியுள்ளது. தெருவுக்கு வந்து போராடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அவரவர் சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கே இங்கே நேரம் இருப்பதில்லை. பொது நலம் என்பது இன்று அரசியல் கட்சிகளால் உச்சரிக்கப்படும் வார்த்தை மட்டுமே. அதுவே செயலாக்கம் பெறும் போது சுயநலமாகத்தான் போய்விடுகின்றது. 

இன்றைய சமூகத்தின் போராட்டங்கள் என்பது செய்திதாள்களுக்குத் தேவைப்படும் அன்றாட செய்திகளில் ஒன்று. அதற்கு பின்னால் உள்ள அவலத்தையும், அதில் பங்கெடுத்தவர்களின் அவஸ்த்தைகளும் நமக்கு முக்கியமல்ல. 

காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு எதற்கும் நேரம் இருப்பதில்லை.  கடந்து சென்றுவிடவே விரும்புகின்றோம். 

ஒவ்வொரு நாளும் யாரோ எவரோ எதற்காகவோ தெருவில் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  விலைவாசி உயர்வு, சம்பள பிரச்சனை, நீதி கேட்டு, அதிகாரப்பூர்வமற்ற மின் வெட்டுக்காக உண்ணாவிரதம் என்று தெருமுனையில், பேரூந்து நிலையத்தில் இந்த போராட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. 

"சரியானமுறையில் சிகிச்சை அளித்திருந்தால் என் பிள்ளை இறந்து போயிருக்காது.  நான் பிணத்தை வாங்க மாட்டேன்"  என்று ஒப்பாறி வைத்து அழும் பெண்ணின் முகத்தை தொலைக்காட்சியில் நெருக்கமாய் பார்க்கும் போது உள்ளே ஒரு கழிவிரக்கம் உருவாகும். சிலசமயம் நம் கண்ணில் ஒரு முத்து போல கண்ணீர் கோர்த்து விடும் என்ற சூழ்நிலையில் ரிமோட் ல் கைவைக்க தாண்டிச் சென்று விடுகின்றோம். 

ஆனால் ரிமோட்டில் பட்டனைத் தட்டி அடுத்த சேனலில் நடிகை பேசும்  கொஞ்சு தமிழ் நமக்கு ரசிக்கக்கூடியதாய் மாறிவிடும். மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் பலவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம்.

பந்தல் அமைத்து நிழலில் நின்று போராடுபவர்கள் தொடங்கி தெருவில் அடக்கு முறையை எதிர்த்து சாலை மறியல் என்பது வரைக்கும் என் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஏராளமான காரணங்கள். 

ஆயுதமேந்தி போராட முடியாது. அடக்குமுறையில் ஒடுக்கப்பட்டு விடும். 


நக்ஸலைட்,தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள் என்று பெயர் சூட்டி வாழ்க்கை மொத்தத்தையும் இழக்க நேரிடும். 

ஒவ்வொரு முறையும் அஹிம்சை மட்டும் தான் இன்றைய போராட்டத்திற்கு அளவு கோலாக இருக்கிறது.  

போராடலாம். ஜனநாயகத்தில் உனக்கு அந்த உரிமை இருக்கிறது. 

ஆனால் நீ இப்படித்தான் உன் போராட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு மாதிரியை ஆளும் சமூகம் உருவாக்கியுள்ளது. 

ஆனால் தீர்வு ஏதும் கிடைத்ததா? என்றால் அது மௌனசாட்சியாகவே இருக்கிறது.

நமக்கு எந்த காரணங்களும் தேவையில்லை. ஆதரிக்க நேரமும் இருப்பதில்லை. ஆனால் எப்போதும் எல்லாவற்றையும் விமர்சிக்க மட்டுமே விரும்புகின்றோம். 

பொதுப்புத்தி என்பது எளிதாக இருப்பதால் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை. பத்து பேர்களும் ஒன்றாக யோசிக்கும் போது புதிதாக எதையும் யோசிக்கத் தேவையில்லை. மாற்றிப் பேசினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவனாக மாறிவிடுவீர்கள். 

பொதுஜனம் என்பதற்கான வரையறை என்பதே இதிலிருந்து தான் தொடங்குகின்றது.  

நான் உழைத்தேன். உழைக்க தயாராக இருக்கின்றேன். நான் நிச்சயம் ஜெயித்து வந்து விடுவேன் என்ற ஒற்றை நம்பிக்கை தான் ஏதோவொரு இலக்கை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டே செல்கின்றது.  நமது இலக்கைத் தவிர வேறு எதுவுமே நமக்கு பெரிதாக தெரிவதில்லை. 

விலைவாசி உயர்வா? விரும்பிய வசதியான இடத்தை அடைந்து விட்டால் இந்த பிரச்சனை நமக்கு உருவாகாது. வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க நன்றாக படி. வெளிநாடு சென்று விடு. உன் வாழ்க்கையை நீ நினைத்த மாதிரி அமைத்துக் கொண்டு விடலாம்.

சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும் நம்மை உருவாக்குகின்றது.  

வாழவே தகுதியில்லை.  இந்தியாவிற்குள் வரவே மனசில்லை. எப்படி இந்த நெரிசலில் வாழ முடியும் என்ற காரணங்கள் தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கும், அங்கிருந்து வர விரும்பாதவர்களும் சொல்லும் முக்கிய காரணமாக இருக்கிறது. 

ஆனால் இந்த நெரிசலுக்குள் நாமும் உழன்று தான் உருவானோம் என்பதை எளிதாக மறந்து விடுகின்றோம். வசதிகள் வரும் வரைக்கும் போராடத் தோன்றுகின்றது. ஆனால் விரும்பிய வசதியகள் வந்ததும் உடம்பும் மனசும் அசதியாகி விடுகின்றது. பலவற்றை மறக்கவே விரும்புகின்றோம்.

மறதி தான் மிகச் சிறந்த வரப்பிரசாதம். 

எது தேவையோ அதை மட்டுமே நினைத்துக் கொண்டால் மீதி அத்தனையும் அவசியமற்றதாக மாறி விடுகின்றது.  

ஒவ்வொரு போராட்டக்காரர்களும் களத்தில் நின்று போராடிக் கொண்டுருப்பது அவர்களுக்கான உரிமைகள் என்பதோடு அது மறைமுகமாக மொத்த சமூகத்தையும் சார்ந்தது. 

போரடிக் கொண்டுருப்பவர்களுக்கு ஏதோவொரு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பாதிப்பு என்பது மொத்த சமூகத்திற்கும் தான் என்பதை எளிதாக மறந்து போய்விடுகின்றோம். 

மூடப்பட்ட மில்லில் நம் குடும்பத்தில் எவரோ ஒருவர் பணிபுரிந்தவராக இருக்கலாம். திடீரென்று வாழ்க்கை சூறாவளியில் சிக்கியிருக்கக்கூடும். பாதிப்புகள் இன்று வரையிலும் மனதில் நிற்கும்.  அப்போதும் யாரோ பலர் நீதி கேட்டு போராடியிருக்கக்கூடும்.  காயம்பட்ட வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் கூட அடுத்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க விரும்புவதில்லை.

விலைவாசி உயர்வுக்கு எதிர்த்து போராடக்கூடியவர்களுக்கு அவர்கள் வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களுக்கு மட்டும் தான் போராடுகிறார்களா? ஒரு நிறுவனம் காரணம் இல்லாமல் இழுத்து மூடப்படும் போது அதை கேட்டு தெருவுக்கு வந்து நின்று போராடுபவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனை.  அதுவே  நாடு தழுவிய பிரச்சனையாக மாறும் போது அதன் முகமே வேறு விதமாக மாறி விடுகின்றது.

போராட எவருக்கும் துணிவில்லை என்பதை விட எவருக்கும் போராட்வே தோன்றவில்லை என்பது தான் இன்றைய எதார்த்தம்.

அரசாங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும்?

ஆள்,அம்பு,சேனை,படை,பட்டாளங்கள், நெருக்குதல் என்று எல்லா திசைகளிலும் வந்து சேரும் நிலைகுலைந்து போகும் மனிதர்களைப் பார்த்து பார்த்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றோம்.  இது தான் ஆள்பவர்களுக்கும், அரசை இயக்கிக் கொண்டுருப்பவர்களுக்கும் வசதியாக போய்விடுகின்றது.

பயமுறுத்து, பயத்தில் வைத்திரு. 

இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்றைய இந்தியாவின் ஜனநாயகத்தை கட்டி காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஆனாலும் இதற்கு அப்பாலும் பல காரணங்கள் இருக்கிறது. நம்மால் வாழ முடிந்த அளவுக்கு நமக்கு வசதிகள் கிடைக்கும் போது வாழ்க்கை என்பது அழகாகத்தான் இருக்கிறது.  வசதிகளை விட வாழ்க்கையை வாழவே முடியாதவர்களின் அவலங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் முகம் திருப்பிக் கொள்ளவே விரும்புகின்றோம். 

அடுத்த இலக்கு என்று ஒன்று நம் மனதில் இருக்கும். அதை நோக்கி நகர்ந்து கொண்டுருப்போம். குறைந்தபட்சம் நம்மிடம் இருக்கும் வசதிகளை தக்க வைக்க போராடிக் கொண்டுருப்போம்.

திருப்பூரில் சாயப்பட்டறை பிரச்சனை உச்சத்தில் இருந்த போது அதிசயமாக
சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்கள் அத்தனை பேர்களும் ஒன்று சேர்த்து தெருவில் இறங்கி தங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். குளுகுளு வசதியில் இருந்தவர்களால் நெருப்பு வெயில் புதிதாக இருக்க புழுக்கத்தில் தவித்தார்கள்.  

நம் காவல் துறைக்கு சொல்லித் தரவும் வேண்டுமா? 

உள்ளே பிடித்துப் போட்டால் வெளியே வர மாதக்கணக்கு ஆகும் என்று கொளுத்தி போட்ட வெடியில் மொத்த போராட்டமும் புஸ்வானம் ஆகிப்போனது. 

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு எத்தனையோ லட்ச மக்கள் போராடினார்கள்.  தலைவர்கள் பெயர்களைத் தவிர வேறு எவரின் பெயரும் நமக்கு இன்று வரையிலும் தெரியாது. உண்மையான அடக்கு முறையின் அர்த்தத்தை பிரிட்டிஷார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். 

ஆனால் அந்த போராட்டத்தின் வலிமையை குறைக்க முடியவில்லை.  போராடியவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.  காரணம் உள்ளே எறிந்து கொண்டுருந்த கனல்.  கங்காக மாறி நெருப்பாக கொளுந்து விட்டு எறிந்து ஊர் முழுக்க பரவி நாடு முழுக்க பரவியது.  

காரணம் அன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்பது தேவையாய் இருந்தது. இப்போது நமக்கான தேவைகள் மாறியுள்ளது. சக்திக்கும் புத்திக்கும் உள்ள சண்டையில் பல சமயங்களில் நாம் சமாதானமாகி நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொண்டு விடுகின்றோம்.

ஆனால் வாங்கிய சுதந்திரத்தின் வசதியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு விதமாக அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம். ஆனால் வசதியுள்ளர்வகள் தொலைக்காட்சியில் ரசனையை வளர்த்துக் கொண்டுருக்க மீதி உள்ளவர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு உழைத்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆவலாய் ஓடிக் கொண்டுருக்கிறார்கள். 

இன்று நாம் வாழும் வாழ்க்கை, அடைந்த வசதிகள் ஒவ்வொன்றும் யாரோ, எவரோ, ஏதோவொரு இடத்தில் உருவாக்கிய போராட்டத்தினால் வந்தது தான் என்பதை எளிதாக மறந்து அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

போட்டிகள் அதிகமான உலகில் போராட்டத்தின் தன்மை மாறிவிட போராடி ஜெயித்தவர்களை இங்கே சாதனையாளர்கள் என்று கொண்டாடுகின்றோம். அந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வேதனைகளும், பலர் சிந்திக் கொண்டுருக்கும் கண்ணீரும் நமக்கு முக்கியமல்ல. 

கப்பல் கரைக்கு வந்து விட்டதா? அது தான் இங்கே முக்கியம்.

அரசியல் அதிகாரம் பயத்தை உருவாக்கு

Sunday, October 21, 2012

அத்தனைக்கும் ஆசைப்படு



கல்லூரிக்கு வெளியே சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.  மாலை நான்கு மணி.   கல்லூரியில் வகுப்புகள் முடிந்து பெரும்பாலான மாணவர்கள் வெளியே சென்று விட்டனர்.  ஒரு வசதியான வாகனத்தில் வந்திருந்த ஒரு பெரியவருடன் ஒரு மாணவர் நின்று கொண்டுருந்தார்.

நணபர் அவர்களுடன் உரையாடிவிட்டு என்னை அனுப்ப மற்றொருவரை ஏற்பாடு செய்து இருந்தார்.  கல்லூரியை விட்டு வெளியே நடந்து வரும் போது அவர்கள் பேசிக் கொண்டுருந்ததை மனதில் அசைபோட்டுக் கொண்டே வந்தேன்.

அங்கே இருந்தவர் நண்பரிடம் உறுதியாகச் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும். அதிர்ச்சியாகவும் இருந்தது.

“இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது.  மகனை தொடர்ந்து கல்லூரிக்கு வர அனுமதியுங்கள்.  அவர் பாடங்களில் தேர்ச்சியடைந்து வருவதை விட கல்லூரியில் மூன்று வருடங்கள் படித்தான் எனபது தான் எங்களுக்கு முக்கியம். எங்கள் தொழிலைப் பார்த்தாலே போதுமானது” என்றார்

நண்பரோ விடாப்பிடியாக இருந்தார்.

“இவன் ஒருவனே இங்கிருக்கும் அத்தனை பேர்களையும் கெடுத்து விடுவான்.  உங்கள் வசதியும் பணமும் இவனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட கல்லூரியில் எந்த அளவுக்கு சீர்கேட்டை உருவாக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உருவாக்கிக் கொண்டுருக்கின்றான். இவனை மேற்கொண்டு இங்கே வைத்திருப்பது எங்கள் கல்லூரிக்குத்தான் பிரசச்னை.  நல்லபடியாக இவனின் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்று விடுங்க”. என்றார்.

பிரச்சனையின் மொத்த ரூபமும் புரிந்தது.

எப்போதும் போல பணக்கார வீட்டு மாணவர்கள் செய்யும் சில்மிஷ விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தவனால் உருவான பிரச்சனை இது.

இன்றைய இந்தியாவில் திடீர் பணக்காரர்கள் நிறைய பேர்கள் உருவாகி உள்ளனர். எப்படி இவர் குறுகிய காலத்திற்குள் சம்பாரித்தார் என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை. ஆனால் அவர் வசதியாகி வாழ்க்கை சிறப்பாக வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்ற அங்கீகாரம் தான் தேவையாக இருக்கிறது. அதற்குத் தான் ஒவ்வொருவரும் முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு தேவைப்படும் வசதிகள் என்பது இன்றைய சூழ்நிலையில் இயல்பானதாகி விட்டது.

இன்றைய சமூகத்தில் ஏழை என்பதன் அர்த்தமும் வேறு விதமாக உள்ளது.

50 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஏழை என்பவன் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி  எவர் தயவிலோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தவன். அவனால் சுயமாக யோசிக்க முடியாத அளவுக்கு அவன் மேல் பல பாராங்கள் சுமத்தப்பட்டு இருந்தது.  ஆனால் இன்று அடிமை என்பது சற்று மாறுதலாகி உள்ளது.  ஆசைகள் தான் இன்றைய வாழ்க்கையில்  உங்களை அடிமையாக வைத்துள்ளது. உங்களுக்கு ஆசை அளவானதாக இருந்தால் நீங்கள் யாருக்கும் அடிமையில்லை.  அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.

ஒப்பீட்டளவில் இன்று அடிமைகளின் தன்மை மாறியுள்ளது. வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சமூக வாழ்க்கை சற்று மேம்பட்டுத்தான் இருக்கிறது.  அவரவர் பார்வையில் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முடியும்.

இன்றும் தமிழ்நாட்டில் செங்கல் சூளை போன்ற இடங்களில் கொத்தடிமை முறை இருந்த போதிலும் அது நீடித்து செயல்பட முடிவதில்லை. பலரின் பயத்தின் தன்மையில் தான் இந்த அடிமைகளை உருவாக்க முடிகின்றது. தவிர்க்க முடியாத பொருளாதார நிர்ப்பந்தம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் உழைக்கத் தயாராக இருந்தால் எந்த இடத்திலும் பிழைப்பதற்கான வழி கொட்டிக் கிடக்கின்றது. பழைய காலத்தில் நடந்த பஞ்சங்கள் எதுவும் இன்றைய சூழ்நிலையில் இல்லை. எளிதாக மீண்டு வந்து முடிகின்றது.  வீணாகிக் கொண்டு இருக்கும் தானியங்களை சேமித்தாலே போதுமானதாக இருக்கின்றது.  ஊழல் என்பது தேவைக்காக என்பதைத் தாண்டி அதுவொரு கௌரவம் சார்ந்தாக மாறியுள்ளது.

முறையற்ற செயல்பாடுகள் எதுவும் இப்போது சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட முடிவதில்லை. அவரவர் வளைத்தாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுருந்தாலும் ஏதோவொரு சமயத்தில் செல்வாக்கு இழந்து விடுகின்றனர். காரணம் ஊடகம். இன்று உள்ள நவீன   வசதிகளால் கிடைத்த ஊடகமென்பது  ஒவ்வொரு நொடியும் உங்களை கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது.

உங்களின் தேவைகளை புரிந்து கொள்கின்றது. தேவைகளை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்துகின்றது. கனவு காணுங்கள் என்று சொல்கின்றது. ஆசைகளை அதிகமாக்கி உங்களை ஆவலாய் பறக்க வைக்கின்றது. அடைகாக்கும் கனவுகளை குஞ்சாக மாறுவதற்குள் அதை நஞ்சாக்கவும் மாற்றுகின்றது.

இங்கு எதுவும் சாத்தியம். ஒரு வகையில் தவறு செய்பவர்களை  ஆதரிப்பது முதல் அவர்களை யோசிக்க வைப்பதும் வரைக்கும் அத்தனையும் சாத்தியம். அவர்களை கடைசியாக தலை குப்புற கவிழ வைத்துக் கொண்டுருப்பதும் இன்றைய ஊடக சுதந்திரமே..

ஊடகங்கள் தான் இன்று நல்லதுக்கும் கெட்டதுக்கும் உண்டான அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு வினாடியும் நம் முன்னால் துப்பிக் கொண்டே இருக்கின்றது. வீட்டில் இருக்கும் வசதிகள் ஒவ்வொருவரின்  மனதையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அவரவர் எல்லைகளை விரிந்தும் சுருங்கியும் போய் விடுகின்றது. தப்பில்லை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற தைரியத்தை தருகின்றது.

தைரியங்கள் அங்கீகாரத்தை பெறும் போது அதுவே மற்றவர்களுக்கு வழியைக் காட்டி விடுகின்றது.


பெற்றோர்களுக்கு சவால்கள் தான் வாழ்க்கையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஓயாத போராட்டத்தை உருவாக்கும் நாளாக இருக்கின்றது. வறுமையைத் துரத்த வேண்டும் என்பதை விட வாழ்க்கைக்கு தேவைப்படும் வசதிகளை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருக்கின்றது. செய்து கொண்டுருக்கும் வேலைகளுடன் வேறு சில தொழிலையும் செய்ய வைக்கின்றது.

தொழிலை கவனிக்கும் நேரத்தில் தங்களின் வாரிசுகளின் செயல்பாடுகளை கவனிக்க மறந்து விடுகிறார்கள். புற்றுநோயைப் போல வளர்ந்த மனம் நிலைகொள்ளாமல் தவிக்கத் தொடங்குகின்றது. கேள்விகள் அதிகமாக ஒவ்வொரு பழக்கமாக கற்றுக் கொண்டு அடுத்தடுத்து என்று தாவத் தொடங்கி விடுகின்றது.  மிக விரைவில் படிப்பைத் தவிர அத்தனையும் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

பேசிப்பழக நேரம் இருப்பதில்லை.  பேசினாலும் முடிவு தெரிவதில்லை.  தலைமுறை இடைவெளி என்பது நாளுக்கு நாள் அதிகமாக ஒவ்வொருவரின் மனமும் தனித்தீவாக வாழத் தொடங்கி அதுவே இறுதிவரையிலும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் போய் நின்று விடுகின்றது.

குடும்ப அக்கறை என்பது குடும்ப கௌரவம் என்பதாக மாறி பணத்தின் மீது உள்ள வெறி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.  பணம் இருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற எண்ணம் உருவாக அதைத் தவிர வேறு எது குறித்தும் சிந்திக்க நேரம் இருப்பதில்லை.

பணமே கதி பணமே குறி பணமே வாழ்க்கை என்ற வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் உரிய அங்கீகாரத்தை பெற்று விட முடிகின்றது.

தவறுகளின் அளவுகோல் என்பது அவரவர் வைத்துள்ள வசதிகளை வைத்தே இங்கே தீர்மானிக்கப்படுகின்றது.

அது பெரிய இடத்து சமாச்சாரம் என்று பூசி முழுகப்படுகின்றது. இது தான் இன்றைய மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றது.

வாழ்க்கைக்கு தேவைப்படும் கல்வி என்பது மாறி கல்விக்குண்டான வாழ்க்கை என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம்.  இது படித்தால் இப்படி ஆகலாம் என்ற கனவுகள் வளர்க்கப்பட்டு அதன் பாதையில் தான் பெரும்பாலனோரின் பயணம் இருக்கிறது. அளவோடு ஆசைப்படு என்பது மாறி அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக தத்துவம் புகட்டப்படுகின்றது.

அளவற்ற திறமையில் உள்ள நம்பிக்கை சுற்றியுள்ளவர்கள் மேல் கவனம் வைக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை மாறிவிடுகின்றது.

இதுவே பலசமயம் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்குகின்றது.  ஒவ்வொரு நெருக்கடிகளும் ஓயாத மனப்போராட்டங்களை உருவாக்குகின்றது.  ஆனால் இதை அடைய இப்படி வாழலாம் என்பதை இயல்பாக எடுத்துக் கொண்டாகி விட்டது.

நண்பருடன் பேசிக் கொண்டுருந்தேன்.

"எப்படி உங்க குழந்தைகளை இங்கே படிக்க வைக்கீறீங்க?  வேற பள்ளியில் சேர்க்கலாமே?" என்றார்,

ஏன்?  என்றேன்.

"என்னத்த சொல்றது.  நாலு வருஷம் படிக்கிறார்கள். இன்னமும் தெளிவாக இங்கீலீஷ் பேச தெரியல."

சிரித்துக் கொண்டேன்.

சொன்னவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதை விட வாசிக்கக் கூட தெரியாது.  ஆனால் வசதிகளை எப்படியே பெருக்கிக் கொண்டார்.  கையில் பணம் இருப்பதால் குழந்தைகளின் கல்வி என்பதை தன்னுடைய கௌரவமாக பார்க்கின்றார்.

வேறு பள்ளிக்கு மாற்றினார்.

கடைசியாக சந்தித்த போது....

"இரண்டு குழந்தைகளையும் ஏற்காடு கொடைக்கானல் பக்கம் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்றார்.

அவரே காரணத்தையும் சொன்னார்..

"மனைவிக்கு படிப்பறிவு இல்லை.  வீட்டில் அவர்களால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்க சிரமாக இருக்கிறது.  ஹாஸ்டல் என்றால் அங்கேயே பார்த்துக் கொண்டு விடுவார்கள்" என்றார்.

குழந்தைகளின் மேல் நாம் வைக்கும் பாசம் என்பது இப்போது அக்கறை என்பதாக மாறியுள்ளது.  அந்த அக்கறைக்குப் பின்னால் உள்ளதை கூர்ந்து கவனித்தால் அது அறியைமை என்று கூட சொல்லலாம்.

இது தான் இன்றைய சமூகம்

"என்னோட பையன் ஏற்காடு காண்வெண்ட்டில் படிக்கிறான்.  உங்க பையன் இங்கே தான் படிக்கிறானா? " என்று கேள்விக் குறியோடு கேட்க வைக்கின்றது.

வாழ்க்கையில் ஏக்கமும், பெருமூச்சும் இருக்கும் போது மனதில் இருக்கும் கனவுகளுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இயல்பாகவே தோன்றுகின்றது.

உழைக்க விரும்பாத மனங்களுக்கு குறுக்குப்புத்தியும் உருவாகத் தொடங்கி விடுகின்றது.


சமீபத்தில் பல்லடத்திற்கு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியை செய்திதாளில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எம்.பி,ஏ படித்த இரண்டு மாணவர்கள் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார்கள். சென்னையில் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்துள்ளனர்.  ஒவ்வொரு இடமாகச் சென்று அந்த நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

குறிப்பிட்ட கடைகளில் அந்த பொருட்களைப் பற்றி விவரித்து சொல்லி அதற்கான ஒப்பந்தங்களை பெற்று விட்டால் வேறொரு குழுவினர் வந்து அந்த பொருட்களை அந்த குறிப்பிட்ட கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.

ஆனால் இவர்களால் அலைய முடியவில்லை.  மனம் குறுக்கே திரும்பியது.

வேலையை விட்டு வெளியே வந்தனர்.  வந்ததோடு மட்டுமல்லாது அந்தகுறிப்பிட்ட நிறுவனத்தின வண்டி எந்தப் பாதையில் வரும்? எப்போது வரும் என்பதை கணக்கில் வைத்துக் கொண்டு கொள்ளையடித்து அந்த பொருட்களை தாங்கள் திட்டமிட்டு வைத்துள்ள இடத்திற்கு கொண்டு வர நினைத்தனர்.

மாட்டிக் கொண்டனர்.

இன்றைய கல்வி மட்டும் இது போன்ற வாழ்க்கையை கற்றுக் கொடுக்கவில்லை. இது தான் சரியான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுருக்கும் நாமும் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றோம்.

குடிப்பழக்கத்தில்  மாட்டிக்கொள்ளும் இளையர்களும், அடிப்படை சமூக அக்கறையில்லாமல், வாழ்க்கைக்கு அறம் என்பது தேவையில்லை என்பதாக வளர்த்தெடுக்கும் கல்வியும் உள்ள மாணவர்களை நம்பி எதிர்கால இந்தியா வல்லரசாக மாறப் போகின்றது. இந்த மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவை வடிவமைக்கப் போகின்றார்கள்.

நாம் கற்றுக் கொள்ளப் போகும் பாடங்கள் நம் முன்னால் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றது?

Wednesday, October 17, 2012

விலை நிலத்தில் முளைக்கும் பயிர்கள்



புதுக்கோட்டைக்கும் திருப்பத்தூருக்கும் இடையே உள்ள ஒரு கிராமத்தில் அந்த கல்லூரி இருந்தது.  சுற்றிலும் வயல்வெளிகள். அந்த பகுதிக்கு பொருந்தாமல் பிரமாண்ட கட்டிடமாய் அங்கே நின்று கொண்டுருந்தது. 

ஒவ்வொரு முறையும் திருச்சியைத் தாண்டி ஊருக்குள் செல்லும் வழியில் நான் பார்க்கும் காட்சிகள் ஆச்சரியத்தைத் தரும். பத்து கிலோ மீட்டருக்குள் ஏதோவொரு கல்லூரியின் பெயர் பலகையை பார்ப்பேன்.. வயல்வெளிகளும், பொட்டல் காடுகளுமாய் இருந்த இடத்தில் கல்லூரி முளைத்திருக்கும். உருவான கல்லூரியைச் சுற்றிலும் ஒரு குட்டி நகர் உருவாகியிருக்கும்.  சற்று பிரபலமான கல்லூரி என்றால் ஏதோவொரு வங்கியின் ஏடிஎம் சேவை மையம் கூட அங்கே இருக்கும்.  ஆனால் அத்தனை கல்லூரியிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு தான் இருக்கிறது.

நண்பர் பணியில் இருந்த அந்த கல்லூரி விளைநிலத்தில் பிரமாண்டமாய் இருந்தது. முக்கால்வாசி வேலைகள் முடிந்து இன்னமும் பல பக்கங்களில் வேலைகள் நடந்து கொண்டுருந்தது. சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் அனைத்தும் சீந்துவாரற்று கிடக்க குறுக்கு வெட்டு தோற்றம் போல அங்கங்கே ப்ளாட் போடும் முயற்சியில் சிலர் தங்கள் உழைப்பை காட்டியிருந்தனர். நான் பார்த்த ஒரு பலகையில் வாஷிடங்டன் நகர் என்று போட்டுருந்தது.

எனக்கு விபரம் தெரிந்து ஒரே ஒரு முறை நண்பர் ஒருவரைப் பார்க்க இந்தப் பக்கம் வந்துள்ளேன். பாதி இடங்கள் எனக்கு அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருந்தது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப் படுத்தியவர்கள் வாழ்ந்த பூமியிது. தொடக்கத்தில் பொறம்போக்கு என்று அடையாளப் படுத்திய இந்த நிலங்கள் படிப்படியாக பல தரப்பு மக்களும் குடிபுக இன்று நகர் போலவே வளர்ந்துள்ளது. இந்த பகுதியில் இருந்தவர்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளை பயன்படுத்தி மேலே வந்தவர்களைப் போல பள்ளிப்படிப்புக்கு வசதியில்லாதவர்கள், முறையாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் அனைவரும் வெளிநாட்டு சம்பளத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

என்ன விலை வேண்டுமானாலும் வைத்துக்கொள். என்னை உன்னால் திருத்திவிட முடியுமா? என்றவர்கள் மட்டும் இன்றும் மைனர் காளைகளாக வலம் வந்து கொண்டுருக்கின்றனர்.

கல்லூரிக்கு உள்ளே சென்று கொண்டுருந்த போது பல வித எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டுருந்தது. 

குறிப்பாக தற்போதைய கல்வியைப் பற்றி அதிகம் யோசிக்க வைத்தது. மாறிய சூழலும் மனதில் இருந்த மாறாத எண்ணங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை உணர முடிந்தது. 

தமிழ்நாட்டில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் கல்வித் துறை வளர்ந்த விதம் பிரமிப்பாய் இருக்கிறது.  வளர்ந்து இருக்கிறது. ஆனால்..... என்று சொல்லிவிட்டு ராகம் போட்டு இழுக்கத் தோன்றுகின்றது.  வளர்ச்சி என்பதற்கும் வீக்கம் என்பதற்கும் உண்டான வித்யாசங்கள் வேறு.  தற்போதைய கல்வி என்பது நமக்கு பொருந்தாமல் இருக்கும் வீக்கமாகத்தான் இருக்கிறது.  விலைபேசி கூறு போட்டு விற்கும் கல்வியின் தரத்தை எவரும் கண்டு கொள்ளத் தயாராய் இல்லை.  தெருவில் இருக்கும் கடைகளில் கூட திடிரென்று அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அதன் தரத்தை சோதிக்கின்றனர். 

நன்றி வினவு தளம்

ஆனால் வருடந்தோறும் ஒவ்வொரு கல்லூரியின் தரத்தை சோதித்து இருந்தால் இன்று கல்லூரியை விட்டு வெளியே வந்து தகுதியில்லாத படிப்பை முடித்து தரமான வாழ்க்கை வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பல லட்ச மாணவர்களின் வாழ்க்கை நன்றாக இருந்துருக்கும்.

விருப்பப்பட்டவர்கள் சொடுக்கி பார்க்கலாம்.  கல்லூரிகள் குறித்த அனைத்து விபரங்களும் இந்த தளத்தில் உள்ளது.

ஏறக்குறைய கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக், பி.ஈ. என்று சொல்லப்படுகின்ற தொழில் நுட்ப இளங்கலை படிப்புகள் என்று தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் 500 கல்லூரிகள் அளவில் இருக்கின்றது. பெரும்பாலும் தனியார் நடத்தும் கல்லூரிகள் தான் அதிகமாக இருக்கின்றது. உத்தேச கணக்காக வைத்துக் கொண்டாலும் கூட ஒவ்வொரு துறையிலும் 1.50 லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் படித்து முடித்து வெளியே வருகின்றார்கள்.  இது தவிர மற்ற துறை சார்ந்த படிப்புகள் என்று தனியாக ஒரு பட்டியல் உள்ளது. ஆனால் கல்வி தரும் விளைவுகள் தான் பயம் காட்டுவதாக இருக்கிறது.  

அதைத் தான் நணபரும் சொன்னார்.

வசதியற்ற குடும்பத்தில் பிறந்த நண்பரும் தனது கல்லூரி படிப்பை கஷ்டப்பட்டு தான் முடித்தார். தட்டுத்தடுமாறி மாலை நேர வகுப்பு மூலம் பி.ஈ என்ற படிப்பை முடித்து விட்டு அருகே இருந்த பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். தனியார் கல்லூரி என்பதால் மிக குறைவான சம்பளம்.  ஆனால் அவரின் உறுதியான உள்ளம் அங்கிருந்தபடியே எம்.ஈ படிக்க வைத்தது. கல்வியை காசாக்கும் நிர்வாகத்தின் முறைகேடுகளை தட்டிக் கேட்ட காரணத்தால் மூன்று கல்லூரிக்கு மாற வேண்டிய சூழ்நிலையில் கூட விடாமல் தனது மேற்கொண்டு பி.ஹெச்டி என்ற ஆராய்ச்சி படிப்பையும் தொடர முடிந்தது. 

கல்லூரியில் உதவி பேராசியர் பதவி தேடி வந்த போது கூட அங்கே நடந்து கொண்டுருக்கும் முறைகேடுகளினால் இந்த கல்லூரியின் முதல்வர் என்ற வாய்ப்பு வந்த போது தனது கொள்கைகளை சொல்லிவிட்டே உள்ளே வந்தார்.

தொடக்கத்தில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் படுத்திய பாடுகளை மென்மையாக புரியவைத்து இந்த கல்லூரியை ஒருநிலைப் படுத்த ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆனது. .  

காரணம் இந்த பகுதிகளில் சாதி என்ற பிரச்சனை இன்னமும் இருக்கிறது என்பதோடு அதையே மாணவர்கள் ஆயுதமாக்கி அட்டகாசம் செய்வதும் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  

தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிக்கசாதியினர் என்ற பிரிவினைகள் தீராத தலைவலியை உருவாக்க பொறுத்துப் பார்த்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து கட்டையைத் தூக்கி குறிப்பிட்ட மாணவர்களை துரத்த வேண்டிய சூழ்நிலையும் உருவானது. 

நிர்வாகத்தில் இருந்தவர்கள் பயத்தில் ஆடிப்போக கல்லூரியில் முதலீடு போட்ட ஒரு பங்குதாரர் பயம் பிடித்து ஒதுங்கி விட்டார். ஆனால் இவரின் நல்ல நேரம் மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க இன்று ஆட்டம் போட்ட எவரும் இல்லை. படிக்க விரும்பும் மாணவர்களும், தங்களது பையன்களை நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களுக்கும் நண்பர் பணிபுரியும் கல்லூரி தான் முன் உதாரணமாக இருக்கிறது. . 

நான் அவருடன் அவர் அறையில் பேசிக் கொண்டுருந்த போது ஒரு கிராமத்து வயதான பெற்றோரை கூட்டிக் கொண்டு ஒரு மாணவர் பயந்து கொண்டே உள்ளே வந்தான்.  என்னுடன் பேசிக் கொண்டுருந்த நண்பர் பேச்சை நிறுத்தி விட்டு அவனை நோக்கி ஒரு பார்வை பார்த்தாரே பார்க்கலாம். 

அதற்குள் அந்த வயதான பெரியவர் இனிமேல் இந்த தப்பு செய்யமாட்டான் அய்யா.  நாங்க ஜவாப்தாரி என்று சொல்லிவிட அலுவலரை அழைத்து வகுப்புக்குச் செல்ல அனுமதித்தார்.

பிரச்சனை வேறொன்றுமில்லை.  

இவர் இந்த கல்லூரிக்கு வருவதற்கு முன்  சுற்றுச்சுவர் என்று ஒன்று இல்லை. வகுப்பறையில் இருந்து அப்படியே நகர்ந்து அருகே இருக்கும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு மக்கள் உல்லாசப்பயணம் செல்வது வாடிக்கையாம்.  இவர் வந்தவுடன் முதல்முறையாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 

அத்துடன் உள்ளே வரும் மாணவர்கள் வருகை பதிவேட்டை உறுதி செய்யும் பொருட்டு ஒரு சிறிய எந்திரத்தில் தனது அடையாள அட்டையை தேய்த்து விட்டு தான் வகுப்புறைக்குள் செல்ல வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டது.  கண்டிப்பாக ஒருவர் மூலம் அதை கண்காணிக்கப்பட்டது.

ஒரு மாணவர் தனது அடையாள அட்டையை தேய்க்காமல் இருந்தால் அந்த சிறிய எந்திரம் அந்த மாணவரின் தந்தைக்கு அல்லது குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக போய்விடும். 

மாணவர் ஏமாற்ற முடியாது.  தொடக்கத்தில் இதையும் கெடுத்து வைக்க பலரும் முயற்சிக்க இதற்கும் காவல் போட்டு ஆய்பு வைக்கப்பட்டது.  

இடையிடையே நிர்வாகம் கொடுத்த அழுத்தம் என்பது தனியொரு கதை. ஒவ்வொரு வருட இறுதியின் முடிவிலும் பார்த்து முடித்த லாப நட்டக் கணக்கு ஏகப்பட்ட புகைச்சலை பங்குதாரர்களிடம் உருவாக்கியது. இவர் வருவதற்கு முன்பு நிர்வாகம் பணத்திற்காக உருவாக்கிய பல தகிடுதிட்டங்கள் அனைத்தையும் நண்பர் நிறுத்திவிட்டார்.

அதாவது மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் அதற்கு தண்டனையாக ஒரு குறிப்பிட்ட பணம் வசூலித்து விடுவது. 

வருகை பதிவேடு குறிப்பிட்ட அளவு இல்லை என்பது முதல் பலவிதமான சீர்கேடுகளை வளர்க்க உதவியதே இந்த பண சமாச்சாரமே.

இது நிர்வாகத்திற்கு பண ரீதியாக லாபத்தைக் கொடுத்தாலும் கல்லூரியில் உருவான் அத்தனை பெரிய பிரச்சனைகளுக்கும் இதுவே முக்கிய காரண காரியமாக இருந்தது.  நண்பர் இதை நிறுத்தியவுடன் பணம் படைத்த பாதி மாணவர்களுக்கு தலையில் இடி விழுந்தது போலவே இருந்தது.  


நணபர் ஏறக்குறைய இரட்டை வேட மனிதர் போலத்தான்.

ஒரு பக்கம் ரசனையான நபர்.  மற்றொரு பக்கம் அடிதடிக்கு அஞ்சாத நபர்.  

காரணம் இளம் பருவத்தில் வறுமையினால் பெற்ற பலவிதமான காயங்கள் இன்னமும் மனதிற்குள் இருக்க வசதியற்ற மாணவர்களின் வாழ்க்கையில் முடிந்தவரைக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை தனது கடமையாகவே வைத்துள்ளார்.

படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்து கொண்டுருப்பவர்.  ஆனால் அமைதியான சூழ்நிலையை கெடுக்கும் எந்த மாணவருக்கும் மன்னிப்பு என்பதே இல்லை என்பதை தனது உறுதிபாடாகவே வைத்துள்ளார்.

நிர்வாகம் புரிந்து கொண்டது.

.
இவர் வருவதற்கு முன்பு வாரத்தில் மூன்று நாட்கள் பங்குதாரர்களின் எவராவது ஒருவர் கல்லூரியில் வந்து உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்.

ஏற்கனவே இந்த கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்தவர் ஒரு டம்மி போலவே வைத்துக் கொண்டு முடிந்தவரைக்கும் நிர்வாகம் பல வகையிலும் பணம் கறக்கும் விதங்களை கண்டு பிடித்து கறந்து கொண்டுருந்தனர். ஆனால் இவரின் கெடுபிடிகளைப் பார்த்து பயந்து மெதுமெதுவாக ஒதுங்கி விட்டனர். 

700 மாணவர்கள் படித்துக் கொண்டுருந்த கல்லூரியில் இன்று ஏறக்குறைய 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டுருக்கிறார்கள்.

நண்பரின் முயற்சியினால் இதே இடத்தில் பி.ஈ படிப்பும் தொடங்கும் வேலைகளும் நடந்து கொண்டுருக்கிறது.

அந்த கல்லூரியை அவருடன் சுற்றிப்பார்த்து வந்து கொண்டுருந்த போது நான் கண்ட காட்சிகள்.............................

மீதி அடுத்த பதிவில் 

Tuesday, October 16, 2012

புத்தகங்களை நேசிக்காதீர்



இந்த முறை புதுக்கோட்டைக்கு சென்ற போது எனக்காக பல கடமைகள் வரிசையாக காத்திருந்தது. உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய கடமைகள், காலாண்டு விடுமுறையைக் கொண்டாட வந்தவர்களை அழைத்து வர வேண்டியது என்று சொந்த விசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு இரண்டு முக்கிய கடமைகள் இருந்தது.  25 வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பரை சந்திக்க மற்றும் ஒரு சிற்பபான தனியார் நிர்வகிக்கும் நூலகத்தை பார்க்க வேண்டிய ஆவல்.

ஊரில் பழக்கமான ஒத்த வயது உள்ள நான் கல்லூரிக்குச் சென்ற போது தொழில் நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) படித்துக் கொண்டுருந்த நண்பர் தற்போது குன்றக்குடி அருகே உள்ள ஒரு தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியில் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பு தெரிந்தது.  பள்ளி கல்லூரியில் என்னுடன் படித்த, மற்றும் அறிமுகமான மற்றவர்களின் தற்போதைய நிலைப்பாடுகளை எழுத வந்த பிறகு அதிகம் கவனித்துப் பார்க்கின்றேன். 


ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு வேறொரு நண்பணிடம் அவரின் அலைபேசி எண் வாங்கி அழைத்த போது ஆச்சரியப்பட்டு போனார். என் நண்பனுக்கு நண்பன். எனக்கு நண்பர். மாலை நேரங்களில் எங்களுடன் படிக்க வரும் போது ஒன்றாக பார்த்து உருவாகிய நட்பு. ஒத்த கருத்து உள்ளவர். தனது கொள்கையில் உறுதிபாட்டுடன் இருந்தவர். எங்களுக்கு விபரம் தெரியாத அப்பொழுதே இறை மறுப்பு கொள்கையில் மிக ஆர்வமாக இருந்தவர். நான் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளேன் என்று அவர் காட்டிய கவிதை கடிதத்தை படித்த போதே எனக்கு பயம் வந்தது. இரண்டு நாட்கள் இவர்கள் பக்கம் தலைவைத்துப் படுக்கவே இல்லை.

காலம் உருவாக்கும் மாற்றங்கள் ஆச்சரியமானது. 

பத்தாவது வரைக்கும் படு மக்காக இருந்தவர் பனிரெண்டாம் வகுப்பில் பட்டையை கிளப்பி ஆச்சரியம் தந்துருக்கிறார். பனிரெண்டு வரைக்கும் நொண்டியடித்தவர் கல்லூரி படிப்பில் கலங்கரை விளக்கம் போல இருந்து அதிர்ச்சியளித்துள்ளார். 

இது போல பலரையும் பார்த்து ஆச்சரியப்பட்டுருக்கேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பனிரெண்டாம் வகுப்பு கணக்கு பாடத்தை அட்டகாசமாக நடத்திக் காட்டிய நண்பன் ஒருவன் இருந்தான்.  ஆனால் விதி செய்த கோலம் அவனால் கல்லூரி வரைக்கும் வர முடியாமல் நெல் அறவை மில்லுக்கு தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தான். கல்லூரி செல்லும் எங்களை வேதனையுடன் பார்த்துச் சென்ற காட்சி இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது.

இவர்கள் அனைவரும் நம்மைவிட சூரப்புலியாக கல்லூரிப்பாடங்களில் கலக்குவார்கள் என்று நம்பியவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிக்கு வந்த பிறகு கலக்கினார்கள். பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு சோடா சேர்த்து கலக்கினார்கள்.

ஏன் பெற்றோர்கள் பயத்தை உருவாக்கி அதையே ஆயுதமாக்கி வளர்த்தார்கள் என்பதை தற்போது உணர முடிகின்றது. கூடவே தலைமுறை இடைவெளி என்பதும், குழந்தைகள் நம் வாழ்க்கையில் வந்த பிறகு உருவாகும் மாறுதல்களையும் தற்போது உணர முடிகின்றது. 

சுதந்திரம் என்பது கத்தியைப் போன்றது.  கவனமாக கையாள வேண்டும்.

கல்லூரியில் கிடைத்த சுதந்திரம் என்பதன் முழு அருமையை உணராமல் கலக்கியவர்கள் குறுகிய காலத்தில் அழிந்தும் போனார்கள். ஆனால் இதிலும் சில விதிவிலக்குகளை பார்க்க முடிந்தது.  பாடங்களைத் தவிர மற்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொண்டவர் சென்றமுறை காரைக்குடி நகராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆட்சி மாறியது. வாங்கிப் போட்ட சொத்துக்களுடன் இன்று கௌரவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார். இன்று வரையிலும் கல்லூரிப் படிப்பில் வைத்திருந்த பாடங்களை எழுதி தேர்ச்சியடையவில்லை. வாழ்வில் சமூகம் எதிர்பார்க்கும் பணத்தில் தேர்ச்சி பெற்று 20 லட்சம் வாகனத்தில் பயணிக்கின்றார். 

இவரைப் போல மற்றொருவர் சாதி அரசியலில் ஆர்வமாக இருந்தார். வளர்ந்தார்.  அதிமுகவில் உள்ள சாதி லாபி இவரையும் வளர்த்தது.  இன்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  கோடிக்கணக்கான மனைவியின் சொத்துக்களை இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

கல்லூரிக்கு வந்தவன் பாடத்தை படிக்காமல் படிக்க வந்தவர்களை மதம் மாற்றும் வேலையில் இறங்க அத்தனை பேர்களும் அவனைக் கண்டாலே ஓட்டம் பிடித்த கதையும் உண்டு. கடைசியாக அவனை சந்தித்த போது மதவாதிகளால் பாதிக்கப்பட்ட அவன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டான். அவன் பார்த்த கர்த்தர் வேறு. ஆனால் கர்த்தர் எனக்கு காட்டிய மனிதர்கள் வேறு என்பவனிடம் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.

வாழ்க்கை அழகானது. அதே சமயத்தில் கொடுமையானதும் கூட. நாம் அணுகும் விதத்தில் தான் அதன் உண்மையான ரூபங்களை புரிந்து கொள்ள முடியும். 

இது விதிக்கப்பட்ட விதியா?  இல்லை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன நகலா? போன்ற ஆயிரம் கேள்விகளை இன்று வரையிலும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.

கல்லூரியில் நான் கண்ட கேண்டீன் எனக்கு ஆச்சரியமான விசயமாகும்.  உணவகம் என்பது எனது தொடக்க அன்றாட வாழ்க்கையில் சம்மந்தம் இல்லாத ஒன்று.  வீட்டுச்சாப்பாட்டைத் தவிர அவசியமில்லாத வாழ்க்கை வாழ்ந்த எனக்கு கல்லூரியில் இருந்த கேண்டீனும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  அதைப் போலவே கல்லூரிக்குள் இருந்த நூலகமும்.

ஊருக்குள் நாங்கள் படிக்கும் நூலகத்திற்கும் கல்லூரியில் பார்த்த நூலகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்தது. அழகும், நேர்த்தியும், துறை வாரியான புத்தகங்களும், நூலகம் இருந்த சூழ்நிலையும், இதுவரையிலும் பார்த்தேயிராத பல்வகை தனிப்பட்ட வார, மாத ஆங்கில இதழ்கள் என்று முதல் இரண்டு நாளும் தடவி சுகம் கண்டு வந்து விடுவேன். இது தவிர ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான நூலகமும் இருந்தது.  

எங்கு திரும்பினாலும் புத்தகங்கள்.  எது குறித்தும் புத்தகங்கள் வாங்க முடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் பாடங்களுக்குரிய புத்தகங்கள் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்ற வாழ்க்கை மாறி ஒரு விசயத்திற்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக எழுதியிருப்பார்கள் என்பதையே தொடக்கத்தில் நம்பமுடியவில்லை. மனப்பாடம் செய்வது மறந்து மகத்தான் உண்மைகள் ஒவ்வொன்றாக புரியத் தொடங்கியது.

தலையணை அளவு உள்ள அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு பேரூந்தில் ஊருக்கு வரும் போது ஒலிம்பிக்கில் ஜெயித்து தங்கப்பதக்கம் வாங்கி வரும் பெருமை போல இருந்தது. நம் கையில் இருக்கும் அந்த பெரிய ஆங்கில புத்தகங்களை பார்ப்பவர்களின் பார்வை கூட வித்தியாசமாக இருப்பதாக முதல் வருடம் தோன்றியது.  ஆனால் அதற்குள் முழ்கிய போது நாம் எந்த அளவுக்கு சுருங்கிய நத்தையாகவே பள்ளிப்படிப்பில் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  

கல்லூரி செல்வதற்கு முன் படித்த புத்தகங்கள் அத்தனையும் கதைகள் சார்ந்த புத்தகமாக இருந்த காரணத்தால் கல்லூரியில் இருந்து எடுத்து வரும் புத்தகங்கள் அனைத்தும் தூக்கத்தைத் தான் கொண்டு வந்து சேர்ந்தது. ஆனால் கனவுகள் நம்மை துரத்த அதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கியது.

இது போன்ற பல எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு நண்பரை அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரின் வியப்பு எனக்குப் புரிந்தது. வரச் சொல்லியிருந்தார். வருவதாக உறுதியளித்து இருந்தேன். இந்த சமயத்தில் அவரையும் பார்த்து விட வேண்டும் என்பதோடு தற்போதைய கல்வியின் சூழ்நிலையை அருகே சென்று பார்க்கும் ஆவலும் உருவானது. காரணம் நான் படிக்கும் போது பாலிடெக்னிக் என்ற படிப்பு தேவதூதர்கள் படிக்கும் படிப்பாக உயரத்தில் இருந்தது. 

400 மதிப்பெண்கள் வாங்கினால் தான் நினைத்தே பார்க்க முடியும். பத்தாம் வகுப்பில் ஒரு வருடத்தில் நாலைந்து பேர்கள் தான் 400 மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் தற்போது பாதிக்குப் பாதி பேர்கள் 400 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.  வீதிக்கு ஒன்றாக பாலிடெக்னிக் மற்றும் பி.ஈ. படிப்புகள் வந்து விட்டது.  மனதில் பல விசயங்களை அலைமோதிக் கொண்டுருக்க முதலில் உறவுகளுடன் உறவாடச் சென்றேன்.

உறவுகள் என்பது தற்போது அலைபேசி உறவுகளாகத்தான் இருக்கிறது. அக்கா, தங்கை, அம்மா என்ற பாரபட்சம் எதுவுமில்லை. நினைத்தால் அழைக்கலாம். பேசலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே பழைய நினைவுகளை அசைபோட்டு அலசி காயபோட்டு சண்டை போட்டு விரும்பியதை கேட்டு வாங்கி தினறு ஊரில் நடந்த நடக்கும் கிசுகிசு சமாச்சாரங்களைக் கேட்பது என்பது ஒரு தனிசுகம்.  

குறிப்பாக நாக்கை சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் சாப்பாடு மேல் ஒரு தீராத காதல் உண்டு.  அந்த காதலை இந்த முறை நின்று நிதானமாகவே அனுபவிக்க முடிந்தது.  கொறிக்க ஏகப்பட்ட கிசுகிசுக்களும் கிடைத்தது. சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் தற்போதைய நிலவரம் முதல் செத்துப் போன பல் ஆத்மாக்களைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

வெட்டப்பட்ட மரங்களை, வெகு தூரத்தில் உள்ள உறவுகளை, குழந்தைக்கு தவமிருப்பவர்களை, பெற்ற குழந்தைகளை கவனிக்காமல் பொருந்தா காதலில் குறியாக இருப்பவர்கள் என்று பலதரப்பு மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அலசி பேசி விவாதம் பண்ண முடிந்தது. சட்டி பாத்திரம் போல அந்த சின்ன அறைக்குள் பல சங்கதிகளை உருட்டி விளையாட முடிந்தது.

உடன் பிறந்தவர்கள் என்றாலும் வாழும் இடமும், வாழ்க்கைச் சூழலும் அவர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்து விடுகின்றது.  வளராத மனமும், தெரிந்து கொள்ள விரும்பாத உலக நடப்புகளும் ஒன்று சோர்ந்து நமக்கு புதிய உருவத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது.

உனக்கு ஏன்டா தேவையில்லாத இந்த வேலை? என்று கேள்விகள் நம்மை வரும் போதே நாமும் பல கேள்விகளை கேட்டு விட முடியும்.  ஆனால் அது போன்ற சமயங்களில் அமைதி காப்பதே நாம் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமாக இருப்பதால் அத்தனைக்கும் பொறுமை காத்து விடு மனமே என்று கட்டளையுடன் உறவாட முடிந்தது.

ஆனால் நகர வாழ்க்கை என்பது அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாகவும் கிராமம் சார்ந்த நகர வாழ்க்கை என்பது அளவோடு ஆசைப்படு என்பதாக இரு வேறு தளங்களில் இயங்குவதாக என் கண்களுக்கு தெரிகின்றது.

வீட்டில் அப்பா அம்மா புத்தகங்கள் எதுவும் படிப்பவர்கள் இல்லை.  அப்பா நான் பார்த்த கடைசி காலம் வரைக்கும் தினமணி தவிர வேறு எதையும் தொட்டுப் பார்த்ததே இல்லை.  ஆனால் நானும் சரி உடன்பிறந்தவர்களும் சரி ஒரு துண்டு பேப்பரைக்கூட விட்டு வைப்பதில்லை.  பொட்டலம் மடித்து வரும் அழுக்கு காகிதம் கூட எங்களுக்கு வாசிக்க உதவிய தாள்கள் தான். 

இந்த விசயத்தில் தான் வீட்டில் அணைவரும் ஒரே மாதிரியாக இன்று வரைக்கும் இருக்கின்றோம். படிப்பதில் மட்டும் ஆர்வம் குறையவே இல்லை.  ஆனால் படித்த விசயங்களை அசைபோடுவது முதல் ஆழ்ந்து யோசிப்பது வரைக்கும் பலவிதங்களில் மாறுதல்கள் தெரிகின்றது.

படிப்பது என்பது படங்கள் பார்ப்பது போல பொழுதுபோக்கு என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  அதுவொரு தொடர் வேலையல்ல.  பொழுதே போகாத சமயங்களில் படிக்க வேண்டிய புத்தகக்ஙள என்பதாகத்தான் இந்த வாசிப்பு அனுபவத்தை குறிப்பிடுகிறார்கள்.

நண்பர் அறிமுகப்படுத்திய ஒரு எழுத்தாளர் அலைபேசியில் என்னிடம் பேசிய வார்த்தைகள் இன்னமும் மனதில் நெருஞ்சி முள் போலவே குத்திக் கொண்டே இருக்கிறது.

"வீட்டில் 30,000 புத்தகத்திற்கு மேல் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் புத்தகமாகத்தான் இருக்கும்.  பெரும்பாலும் வெளியே கிடைக்காத குறிப்புகள் எடுப்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்கள் அது.  ஆனால் என் மனைவிக்கு அது குறித்த புரிதல்கள் இல்லை.  எவராவது வந்து பேசும் போது என் கணவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் இது தான் என்று புலம்புவார்.  இதை வைத்து அடுப்பு கூட எறிக்க முடியாது என்று தனது ஆத்திரத்தை கொட்டுவார்.  அமைதியாகவே இருந்து விடுவேன் " என்றார்.

புத்தகங்களை நேசிப்பவர்களின் வாழ்க்கை சொல்லும் அனுபவங்கள் பல. நான்  சந்திக்க சென்ற நண்பரும் புத்தகங்களை நேசித்தவர் தான்.

அவர் தன்னுடைய மாணவர்களுக்கு தன்னுடைய புத்தக நேசிப்பை எப்படி புரியவைத்துள்ளார் என்பதை பார்க்கும் ஆவல் இருந்தது.  குன்றக்குடிக்கு பயணித்தேன்.

மீதி அடுத்த பதிவில்..........

Thursday, October 11, 2012

தண்ணீரில் விளையாடிய நாடுடா இது?



திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தான் நான் பார்த்த காட்சிகள் ஆச்சரியமளித்தது.  தண்ணீர் பாட்டிலை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது. பேரூந்தோ அல்லது ரயிலோ பெருநகரங்களை தாண்டும் போதே ஒவ்வொரு விசயத்திலும் சில மாறுதல்களை கூர்மையாக கவனிக்கும் போது புரிந்து கொள்ள முடியும். இந்தப் பக்கம் உள்ள மக்கள் வீட்டில் இருந்து தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வந்து விடுகின்றனர். நான் பார்த்த எவர் கையிலும் 'பிராண்ட்' பொறித்த தண்ணீர் பாட்டில் இல்லை.

நகர்புறங்களில் வாழும் மனிதர்களிடத்தில், இரண்டு கைகளைப் போல வேறு இரண்டு சமாச்சாரமும் கட்டாயம் இருக்கிறது. ஒரு கையில் கைப்பேசி மற்றொரு கையில் தண்ணீர் பாட்டில். ஓட்டாமல் பிறந்த இரட்டையர்கள் போலவே இவையிரண்டும் தற்போதைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக இருக்கிறது.  

கொறிக்க... சுவைக்க... என்பது போல பேச... குடிக்க... என்பது தான் தற்போதைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. .சிறு நகரங்களில் பெப்ஸி, கோக் என்பதும் இன்னும் அதிக அளவு ஊடுருவ இல்லை.  மனிதர்களின் மனோபாவம் என்பது மாறிக் கொண்டுருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் செலவழிக்கும் பணத்தை கணக்கு பார்த்து தான் செலவழிக்கிறார்கள். அவசரம், அவசியம், அத்யாவஸ்யம் போன்ற வித்யாசங்களை உணர்ந்தே வாழ்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படியோ? தமிழ்நாட்டில் தண்ணீர் என்பது இன்று லாபம் கொழிக்கும் வியாபாரம். சென்னையில் மட்டும் ஒரு நடுத்தர வர்க்கம் வாழ்வதற்காக மாதம் தோறும் தண்ணீருக்கு மட்டும் செலவழிக்கும் தொகை 3,500 ரூபாய். காரணம் குடும்பமே விலைக்கு வாங்கித் தான் தங்கள் குடிதண்ணீர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நான் பார்த்த கடையில் இரண்டே இரண்டு சமாச்சாரங்கள் தான் அதிக அளவு இருந்தது.  அதுவே தான் அந்த ஒரு மணி நேரம் முழுக்க அதிக அளவு விற்பனையும் ஆனது.

சிப்ஸ் வகைகள் மற்றும் விதவிதமான தண்ணீர் பாட்டில்கள்.அதுவொன்று இதுவொன்று என்று அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.

வினோதமான காலசக்கரத்தில் நாம் பயணித்துக் கொண்டுருக்கின்றோம்.  .எது தேவையோ அது முக்கியத்துவம் இல்லாமல் தெருவுக்கு வந்து கிடக்கிறது.  எது வாழ்க்கைக்கு தேவையில்லையோ அதுக்கு தான் விளம்பரங்கள் மூலம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆசைகளுக்கு மேலும் மெருகேற்றப்படுகின்றது. அவசியமான விசயங்கள் விவாத பொருளாக மாற்றப்படுகின்றது. தங்கம் விலையை செய்திக்குப் பின்னே சொல்லும் ஊடகம் அரிசி விலையைப் பேசுகின்றதா? 


நாம் உண்ணும் உணவுக்கு முக்கியத் தேவை அரிசி.  ஆனால் அது இன்று விலையில்லா அரிசி என்ற பெயரில் கேவலமாக பார்க்கப்படுகின்றது. அதன் அருமையை உணராமல் கோழிக்கு பயன்படுத்த போய்க் கொண்டுருக்கிறது. தக்காளிக்கு விலையில்லை என்று மயானத்தில் போய் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று இதே தாக்காளி ஜிவ்வென்று பறக்கும். ரசம் வைப்பதை மற்நது விடுவோம்.  

அப்போதைக்கு உண்டான பிரச்சனை.  அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்ந்து போய்விடுவதால் எதுவும் எளிதில் நம்மை பாதிப்பதில்லை.

சென்னையில் நண்பருடன் பேசிக்கொண்டுருந்தேன்.  அவர் தந்தைக்கு இதய நோய் பிரச்சனை.  வயதான காலத்தில் பெரிய அளவுக்கு சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?  ரேசன் அரசியை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.  

வினோதமாக இருக்கிறதா?  உண்மைதான்.  

நாம் வாங்கும் அரசியில் உள்ள அத்தனை சத்துக்களையும் பாலீஷ் செய்து பளபளப்பு என்பதற்காக அரைத்து ரகம் என்ற பெயரில் விற்கிறார்கள். கடைசியில் எந்த சத்தும் இல்லாத சக்கையைத்தான் அரிசி என்ற பெயரில் உண்ணுகின்றோம்.  மருத்துவர் சொன்னபடி நண்பரின் தந்தை மட்டுமல்ல குடும்பமே இன்று ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்களாம்.  இதயப் பிரச்சனையில் உள்ள தந்தையும் நலமாகத்தான் இருக்கிறார்.

ஆனால் தற்போதைய நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமே சுவை தான். அதுவும் பளபளப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளிலும் விதவிதமான சுவைகளைத்தவிர நமக்கு வேறெதும் முக்கியமில்லை.

வந்து கொண்டுருக்கும் அத்தனை விளம்பரங்களையும் உற்று கவனித்துப் பாருங்கள். இரண்டு விசயங்களை முன்னிறுத்துவார்கள்.
  


கிருமியில்லா வாழ்க்கை.  சுத்தமான வாழ்க்கை.  
இது அவர்கள் பாணியில் ஆரோக்கிய வாழ்க்கை.  

இந்த சோப்பை,, பற்பசையை, வாய கொப்புளிக்க  வாங்குங்க என்று சொன்னால் கூட பரவாயில்லை.  வாங்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?  என்று பயங்காட்ட கிராபிக்ஸ் கிருமிகளை காட்டுவார்கள்.

வாயில் கொஞ்சமாவது கிருமியிருக்க வேண்டும்.  வயிற்றில் சிறிய அளவிலாவது குறிப்பிட்ட புழுக்கள் இருக்க வேண்டும்.  உடம்பில் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக துடைத்து கழுவி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்குப் பெயர் உடம்பல்ல. வேறு பெயரைத் தான் சூட்ட வேண்டும்.

ஊரில் உறவினர் வீட்டில் குழாய் நீரைத்தான் அப்படியே பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள். பயத்தோடு கேட்டேன்.  சுருக்கமாகச் சொன்னார்கள்.

"பயம் தான்டா எல்லா நோய்க்கும் காரணம்."

உண்மைதான்.  பயம், கோபம், பொறாமை, சுயகௌரவம், தற்பெருமை இந்த பஞ்சபாணடவர்களைப் பற்றித் தெரியுமா?

இதய நோய் எந்த ஏழைக்கும் வருவதில்லை. மன அழுத்தம் அடித்தட்டு மக்களுக்கு வருவதில்லை, விளிம்பு நிலை மனிதர்கள் பொறாமை படுவதில்லை. 

அன்றாடங்காச்சிகளுக்கு சுய கௌரவம் பற்றித் தெரிவதில்லை.    பணம் குறைவாகத்தான் இருக்கும்.  ஆனால் மனம் முழுக்க எப்போதுமே மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.  

தெருவில் வாழ்ந்து தெருவிலே புரண்டு கிடக்கும் எந்த குழந்தைக்கும் ஏன் பெரிய நோய்கள் தாக்குவதில்லை.  காரணம் எதிர்ப்பு சக்தி உள்ளூற வலுவாக இருப்பதால் எப்போதும் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.  நாம் தான் அத்தனை எதிர்ப்பு சக்திகளையும் சுத்தமாக துடைத்து வா... வா.. என்று அத்தனை நோய்களையும் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறத்தானே செய்கின்றோம்.

தென்னக ரயில்வே ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு வைத்திருக்கும் விலை 8.50. விற்க வேண்டிய விலையின் அளவு 12 ரூபாய்.  ஆனால் இது எப்படி மாறுகின்றது தெரியுமா?  

அவசரம் இல்லாமல் நிதானமாக வந்து கேட்டால் 12 ரூபாய்.  சற்று அவசரமாய் வந்து கேட்கும் போது 15 ரூபாய்.  ரயில் நடைமேடையில் இருந்து நகரப்போகின்றது என்கிற நிலையில் போய் கேட்கும் போது 20 ரூபாய்.  நம் அவசரம் தான் கடைக்காரருக்கு முக்கியம்.  நமக்கோ குறிப்பிட்ட அந்த பிராண்ட் மட்டும் தான் முக்கியம்.  

விலையென்பது ஒரு பொருட்டே அல்ல.  உள்ளேயிருக்கும் தண்ணீருக்குப் பெயர் மினரல் வாட்டர்.  ஆனால் உண்மையிலேயே வைக்க வேண்டிய பெயர் மைனஸ் வாட்டர் என்று தான் வர வேண்டும்.

நாம் சாப்பிடும் அரிசி மற்றும் தண்ணீரைப் பற்றி எப்பொழுதாவது யோசித்து இருக்கீங்களா? 

அம்மாவிடம் இனிமேலாவது சாப்பாத்தி சாப்பிடு என்றால் கொலவெறியோடு என்னைப் பார்க்கிறார். "ஒரு வாய் கஞ்சி போதும்டா.. உன்னோட சாப்பாத்திய நீயும் உன்னோட பிள்ளைகளும் தின்னுங்க" என்பார், 


அம்மாவுக்கு அறிவுரை சொல்லும் எனக்கு சாதம் இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறுகிறது. குழந்தைகள் விதவித ருசிகளை விரும்பினாலும் சாதம் என்பது சாகாவரம் போலத்தான் அவர்களுக்கும் இருக்கிறது. 

இன்று உருப்படியான அரிசியின் விலை 40 ரூபாய். இதுவே ஒரு வருடம் பழையது. 6 மாதம் பழையது என்ற பெயரில் தான் சந்தைக்கு வருகின்றது. ஆனால் மாதம் மாதம் விலையேறிக் கொண்டுருக்கின்றேதே என்று வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்.  

இரண்டு மாதம் தொடர்ந்து அந்த மூட்டையைப் பிரித்து வெயிலில் காய் வைக்காமல் இருந்தால் கெட்டுப் போன அரிசியின் நிறமும் தரமும் மாறியிருக்கும்.  காரணம் அந்த லட்சணத்தில் தான் இன்றைய அரிசி இருக்கிறது.

உரத்தை கொட்டி கொட்டி நமக்கான ஆரோக்கியத்தை இன்றைய விவசாயம் தந்து கொண்டுருக்கிறது.  இந்த அரிசி தான் பாலீஷ் செய்து செய்து பளபளப்பாக உங்கள் கண்களை பறித்து இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கேட்டு வாங்கித் தின்னத் தோன்றுகின்றது. அரிசியில் இருக்கும் மொத்த சத்துக்களையும் அரைத்து மில்காரர்கள் தவிடாக மாற்றி விட்டு கடைசியாக அரிசி என்ற பெயரில் ஒரு உருவத்தை கொடுக்க நாமும் மாட்டைப்போல விதி வந்தால் சாகலாம் என்று தின்று முடிக்கின்றோம்.

வெற்றிகரமாக மன்மோகன் சிங் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியாவுக்கு மானியம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளார். உரத்தின் விலை ஏறி விடும். ஆனால் விவசாயிகள் பாதிக்கபடக்கூடாதாம். ஆகவே மானியம் என்பதை விவசாயிகளுக்கு நேரிடையாக வழங்கி விடுகிறார்களாம். 

அதாவது நீ உரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மறைமுக கட்டளை. பயன்படுத்தாமல் இருந்தாலும் பிரச்சனையில்லை. காரணம் அந்த நிலத்தில் எதுவும் முளைக்காது. ஏற்கனவே மலடாக இருக்கும் நிலத்தில் ஏதேவொரு உரத்தை கொட்டினால் மட்டும் தான் பயிரின் பச்சை என்பதையே பார்க்க முடியும். இந்தியாவின் இயற்கை விவசாயத்தை வளர்த்தால் என்னவாகும். பன்னாட்டு எஜமான்கள் மன் மோகனை பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.  அவரவர் பாடு அவரவருக்கு.

இப்படித்தான் இப்போதுள்ள மினரல் வாட்டர் கதையும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பழைய கஞ்சியை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்.  மணிக்கணக்கான வைத்து சாப்பிடுவ்து முதல் சில நாட்கள் வைத்து சாப்பிடும் கஞ்சி வரைக்கும் அதன் மருத்துவ குணத்தை பிரித்துள்ளார்கள்.  அவர்கள் சொன்னது இப்போதுள்ள அரிசியின் அடிப்படையில் அல்ல. கடற்கரையில் விற்கப்படும் சுண்டக்கஞ்சி என்பது கூட இன்னும் கூடுதலாக சில நாட்கள் வைத்திருந்தால் அதுவே விஷம். 


இதைப் போலத்தான் நாம் அருந்தும் தண்ணீரும்.  மருந்துகளுக்கெல்லாம் தாத்தா ஒன்று உண்டு என்றால் அது தண்ணீர் மட்டும் தான்.  தண்ணீரில் இல்லாத மருத்துவ குணமே இல்லை. மனித உடம்புக்கு நீரே ஆதாரம்.

மினரல் என்று சொல்லக்கூடிய அத்தனை தாதுப் பொருட்களும் ஒரு சேர இருப்பது இந்த தண்ணீர் ஒன்றில் மட்டும் தான். ஆனால் நாம் வாங்கும் தண்ணீரில் உள்ள அத்தனை சத்துக்களையும் சுத்தம் என்ற பெயரில் எடுத்து விட்டு தான் அதை பாட்டிலில் அடைத்து தருகிறார்கள். 

தண்ணீரின் எந்த குணமும் இருக்காது.  குடித்தால் தாகம் கூட அடங்குவதில்லை. இந்த தண்ணீருக்குத் தான்  தமிழ்நாடு தற்போது பாடுபட்டுக் கொண்டுருப்பதைப் பார்க்கும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது.  நன்றாக வாசிக்கவும். வருத்தமாக இல்லை.  காரணம் நாம் செய்த செய்து கொண்டுருக்கும் விளைவுகளைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வியாதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை எதிரியாக பாவித்து முடிந்தவரைக்கும் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டுருக்கிறார்கள்.  

ஆனால் இந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்து தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையைப் போல இங்குள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் சர்வநிச்சயம்.  நம்மவர்கள் சாவு வீட்டில் கூட காசு பார்ப்பவர்கள். மாயனத்தில் ஊழல் செய்து காசு பார்க்கும் நம் அரசியல்வாதிகளிடம் நீங்கள் எது சொன்னாலும் எடுபடாது.. 

எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சராக இருந்து கொண்டு அவர் மாநிலத்திற்கு சாதகமாக இப்படி சொல்லிட்டாரே?  என்று அங்கலாய்த்துக் கொள்கின்றோம்.  அப்படி அவர் சொல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்குள் அவர் அடி எடுத்து வைக்க முடியாது.  காரணம் எதிர் கருத்து பேசி விட்டு உள்ளே நுழைய முடியாது. இடி போல விழும் ஒவ்வொரு அடியும்.  அவர்கள் வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்காக கூத்துக் கட்டி ஆடிக் கொண்டுருக்கிறார்கள் என்றாலும் நாம் காவேரி நீரை எப்படி பாதுகாக்கின்றோம் தெரியுமா?

காவேரி தலைக்காவிரியில் உருவாகின்றது என்பது அணைவருக்கும் தெரிந்ததே.  ஆனால் கர்நாடக அரசாங்கம் இந்த காவேரி நீர் வரும் பாதையில் எந்த தொழிற்சாலைகளையும்  செயல்பட அனுமதிக்கவே இல்லை. ஏறக்குறைய ஓகேனக்கல் வரைக்க்கும் இப்படித்தான். இந்த பகுதியில் ஓடி வரும் காவேரி நீரை பன்னீர் என்று சொல்லலாம். நீரில் பார்த்தால் நம் முகம் தெரியும். ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்து விட்டால் இந்த காவேரியை நம்மவர்கள் கற்பழித்து கதற அடிக்கின்றார்கள். இந்த வார்த்தை எழுத வருத்தபடவில்லை.  

காரணம் ஈரோடு பக்கம் வருவ்தற்குள் இந்த தண்ணீர்படும் பாடு இருக்கிறதே?

உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் என்று திருப்பூரும் ஈரோடும் போட்டிக் போட்டுக் கொண்டு வாழ முடியாத நகரமாக மாறிக் கொண்டுருக்கிறது.  சுற்றியுள்ள அத்தனை பகுதிகளுக்கும் இந்த விஷம் பரவிக் கொண்டுருக்கின்றது. 

காவேரி வரும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினம், நஞ்சன்கோடு, திருமுக்கூடல் நரசிபுரம் போன்ற சிறு நகரங்களாக இருக்கட்டும், அல்லது பாதைகளில் உள்ள மற்ற சிறு ஊர்களாக இருக்கட்டும்.  எந்த கழிவையும் இந்த தண்ணீரில் திறந்து விட முடியாது.  கர்நாடக மாநிலத்தின் சட்டம் தன் கடமையைச் செய்து விடும்.  ஆனால் திருப்பூருக்குள் இருக்கும் கொடுமையும், மழை பெய்து விட்டால் சாயப்பட்டறை முதலாளிகள் கொண்டாடும் சந்தோஷத்தையும் காண கண்கள் கோடி வேண்டும்.

அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தில் அத்தனை சாய நீரையும் திறந்து விட்டு விடலாம் அல்லவா?  அது தான் இங்கே நடந்து கொண்டுருக்கிறது. இதைப் போலத்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள ஆற்றின் நிலவரம் இருக்கிறது. கழிவுகளைக் கொட்ட, கழிவுகளைக் கொண்டு போய்ச் சேர்க்க என்று மாறி மாறி ஒவ்வொரு ஆற்றின் சுகாதாரத்தையும் நாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டுருக்கின்றோம். .

ஊரில் பார்த்த கண்மாயில் நீர் இல்லை. வறண்டு போய் கட்டாந்தரை போல இருக்கிறது.  சும்மா இருப்பார்களா? அருகே ப்ளாட் போட முயற்சித்துக் கொண்டுருக்கிறார்கள்.  முடிந்த வரை களி மண் தாண்டி கட்டாந்தரை வரைக்கும் மண் எடுத்து விற்பனை கண ஜோராக நடந்து கொண்டுருக்கிறது.  விவசாய நிலங்களை ப்ளாட் போட்டு விற்பதில் மற்ற மாநிலங்களை தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கும் போல.

காவேரி நீர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் நில நீர் ஆதாரத்தை எப்படி வைத்துள்ளார்கள் தெரியுமா?  மணல் மாஃபியா என்பது என்று பல்லாயிரக்கணக்கான கோடிகளை தந்து கொண்டுருக்கும் காமதேனு பசுவாக உள்ளது.  இதன் காரணமாகத்தான் காவேரி உள்ளே வந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வறண்டு போய்விடுகின்றது.  வறண்டு போன நிலங்களைத் தாண்டி இந்த காவேரி உள்ளே வருவதற்குள் படாதபாடு பட்டுத்தான் வருகின்றது. நாமும் அடிப்படை ஆதாரங்களை காக்க விரும்புவதில்லை. அது குறித்து கவலைப்பட நமக்கு நேரமும் இருப்பதில்லை.  காசு கொடுத்தால் தண்ணீர் வரும் போது ஆறென்ன குளமென்ன காவேரியென்ன?

காவேரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள் வரும் போதே ரூபம் மாறத் தொடங்குகின்றது.  கேரளா எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் கொட்டும் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கலக்கப்படுகின்றது. ஆனால் வளர்க்கப்படும் கோழிகளும் முட்டைகளும் கேரளாவுக்கு செல்கின்றது.  இதனைத் தொடர்ந்து மால்கோ, கெம்ப்ளாஸ்ட், போன்ற தொழிற்சாலைகளைத் தொடர்ந்து அனல் மின்நிலையம் வரைக்கும் அத்தனை நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவை சுமந்து வருவது தான் இந்த காவேரி தான்.

நாசிக், சூரத் போன்ற ஊர்கள் கூட பின்னுக்குப் போய்விட்டது.  நம்ம மேட்டூர் தான் இந்தியாவில் மாசடைந்த நகரில் முதலிடத்தில் இருக்கிறது. சுற்றுப்புற பாதுகாப்புக்கு விருது வாங்கிய காகித ஆலையின் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கொட்டப்படுகின்றது.

திருப்பூரில் உள்ள சாய்ப்பட்டறை முதலைகள் உருவாக்கிய பல சாயப்பட்டறைகள் அத்தனையும் காவேரி வழித்தடத்தில் தான் இருக்கிறது.  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க காசு.  நாம் எதையும் யோசிக்காமல் இருக்க தொலைக்காட்சி. 


கோவில்களை விட கழிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்ன போது பொங்கித் தீர்க்கும் நமக்கு என்ன அருகதை இருக்கிறது?   கோவில்களைக் கூட நாம் சுத்தமாகவா வைத்திருக்கின்றோம்.?

நம்முடைய உண்மையான வாழ்க்கை என்பதை அமைச்சர் உணர்ந்து தான் பேசியுள்ளார்.

நாம் தான் நாம் வாழும் அத்தனை இடங்களையும் கழிப்பறையாகத்தானே வைத்துள்ளோம். பாவத்தை செய்து கொண்டே பாவத்தை கரைக்க ஒவ்வொரு கோவிலுக்கும் படையெடுக்கின்றோம். கோவிலுக்குள் உள்ளே இருக்கும் ஆண்டவனும் அமைதியாக சிரித்தபடியே நம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்..

வீதி முதல் ஆறு வரைக்கும் அத்தனையையும் நாம் கழிவு கொட்டத்தானே பயன்படுத்துகின்றோம். கழிப்பறையில் வாழ விரும்பும் நாம் கையில் பாட்டிலை சுமந்து தானே ஆக வேண்டும்.

இதை விட மகிழ்ச்சி வேண்டுமா?