Thursday, October 11, 2012

தண்ணீரில் விளையாடிய நாடுடா இது?



திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தான் நான் பார்த்த காட்சிகள் ஆச்சரியமளித்தது.  தண்ணீர் பாட்டிலை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது. பேரூந்தோ அல்லது ரயிலோ பெருநகரங்களை தாண்டும் போதே ஒவ்வொரு விசயத்திலும் சில மாறுதல்களை கூர்மையாக கவனிக்கும் போது புரிந்து கொள்ள முடியும். இந்தப் பக்கம் உள்ள மக்கள் வீட்டில் இருந்து தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வந்து விடுகின்றனர். நான் பார்த்த எவர் கையிலும் 'பிராண்ட்' பொறித்த தண்ணீர் பாட்டில் இல்லை.

நகர்புறங்களில் வாழும் மனிதர்களிடத்தில், இரண்டு கைகளைப் போல வேறு இரண்டு சமாச்சாரமும் கட்டாயம் இருக்கிறது. ஒரு கையில் கைப்பேசி மற்றொரு கையில் தண்ணீர் பாட்டில். ஓட்டாமல் பிறந்த இரட்டையர்கள் போலவே இவையிரண்டும் தற்போதைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக இருக்கிறது.  

கொறிக்க... சுவைக்க... என்பது போல பேச... குடிக்க... என்பது தான் தற்போதைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. .சிறு நகரங்களில் பெப்ஸி, கோக் என்பதும் இன்னும் அதிக அளவு ஊடுருவ இல்லை.  மனிதர்களின் மனோபாவம் என்பது மாறிக் கொண்டுருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் செலவழிக்கும் பணத்தை கணக்கு பார்த்து தான் செலவழிக்கிறார்கள். அவசரம், அவசியம், அத்யாவஸ்யம் போன்ற வித்யாசங்களை உணர்ந்தே வாழ்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படியோ? தமிழ்நாட்டில் தண்ணீர் என்பது இன்று லாபம் கொழிக்கும் வியாபாரம். சென்னையில் மட்டும் ஒரு நடுத்தர வர்க்கம் வாழ்வதற்காக மாதம் தோறும் தண்ணீருக்கு மட்டும் செலவழிக்கும் தொகை 3,500 ரூபாய். காரணம் குடும்பமே விலைக்கு வாங்கித் தான் தங்கள் குடிதண்ணீர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நான் பார்த்த கடையில் இரண்டே இரண்டு சமாச்சாரங்கள் தான் அதிக அளவு இருந்தது.  அதுவே தான் அந்த ஒரு மணி நேரம் முழுக்க அதிக அளவு விற்பனையும் ஆனது.

சிப்ஸ் வகைகள் மற்றும் விதவிதமான தண்ணீர் பாட்டில்கள்.அதுவொன்று இதுவொன்று என்று அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.

வினோதமான காலசக்கரத்தில் நாம் பயணித்துக் கொண்டுருக்கின்றோம்.  .எது தேவையோ அது முக்கியத்துவம் இல்லாமல் தெருவுக்கு வந்து கிடக்கிறது.  எது வாழ்க்கைக்கு தேவையில்லையோ அதுக்கு தான் விளம்பரங்கள் மூலம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆசைகளுக்கு மேலும் மெருகேற்றப்படுகின்றது. அவசியமான விசயங்கள் விவாத பொருளாக மாற்றப்படுகின்றது. தங்கம் விலையை செய்திக்குப் பின்னே சொல்லும் ஊடகம் அரிசி விலையைப் பேசுகின்றதா? 


நாம் உண்ணும் உணவுக்கு முக்கியத் தேவை அரிசி.  ஆனால் அது இன்று விலையில்லா அரிசி என்ற பெயரில் கேவலமாக பார்க்கப்படுகின்றது. அதன் அருமையை உணராமல் கோழிக்கு பயன்படுத்த போய்க் கொண்டுருக்கிறது. தக்காளிக்கு விலையில்லை என்று மயானத்தில் போய் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று இதே தாக்காளி ஜிவ்வென்று பறக்கும். ரசம் வைப்பதை மற்நது விடுவோம்.  

அப்போதைக்கு உண்டான பிரச்சனை.  அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்ந்து போய்விடுவதால் எதுவும் எளிதில் நம்மை பாதிப்பதில்லை.

சென்னையில் நண்பருடன் பேசிக்கொண்டுருந்தேன்.  அவர் தந்தைக்கு இதய நோய் பிரச்சனை.  வயதான காலத்தில் பெரிய அளவுக்கு சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?  ரேசன் அரசியை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.  

வினோதமாக இருக்கிறதா?  உண்மைதான்.  

நாம் வாங்கும் அரசியில் உள்ள அத்தனை சத்துக்களையும் பாலீஷ் செய்து பளபளப்பு என்பதற்காக அரைத்து ரகம் என்ற பெயரில் விற்கிறார்கள். கடைசியில் எந்த சத்தும் இல்லாத சக்கையைத்தான் அரிசி என்ற பெயரில் உண்ணுகின்றோம்.  மருத்துவர் சொன்னபடி நண்பரின் தந்தை மட்டுமல்ல குடும்பமே இன்று ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்களாம்.  இதயப் பிரச்சனையில் உள்ள தந்தையும் நலமாகத்தான் இருக்கிறார்.

ஆனால் தற்போதைய நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமே சுவை தான். அதுவும் பளபளப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளிலும் விதவிதமான சுவைகளைத்தவிர நமக்கு வேறெதும் முக்கியமில்லை.

வந்து கொண்டுருக்கும் அத்தனை விளம்பரங்களையும் உற்று கவனித்துப் பாருங்கள். இரண்டு விசயங்களை முன்னிறுத்துவார்கள்.
  


கிருமியில்லா வாழ்க்கை.  சுத்தமான வாழ்க்கை.  
இது அவர்கள் பாணியில் ஆரோக்கிய வாழ்க்கை.  

இந்த சோப்பை,, பற்பசையை, வாய கொப்புளிக்க  வாங்குங்க என்று சொன்னால் கூட பரவாயில்லை.  வாங்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?  என்று பயங்காட்ட கிராபிக்ஸ் கிருமிகளை காட்டுவார்கள்.

வாயில் கொஞ்சமாவது கிருமியிருக்க வேண்டும்.  வயிற்றில் சிறிய அளவிலாவது குறிப்பிட்ட புழுக்கள் இருக்க வேண்டும்.  உடம்பில் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக துடைத்து கழுவி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்குப் பெயர் உடம்பல்ல. வேறு பெயரைத் தான் சூட்ட வேண்டும்.

ஊரில் உறவினர் வீட்டில் குழாய் நீரைத்தான் அப்படியே பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள். பயத்தோடு கேட்டேன்.  சுருக்கமாகச் சொன்னார்கள்.

"பயம் தான்டா எல்லா நோய்க்கும் காரணம்."

உண்மைதான்.  பயம், கோபம், பொறாமை, சுயகௌரவம், தற்பெருமை இந்த பஞ்சபாணடவர்களைப் பற்றித் தெரியுமா?

இதய நோய் எந்த ஏழைக்கும் வருவதில்லை. மன அழுத்தம் அடித்தட்டு மக்களுக்கு வருவதில்லை, விளிம்பு நிலை மனிதர்கள் பொறாமை படுவதில்லை. 

அன்றாடங்காச்சிகளுக்கு சுய கௌரவம் பற்றித் தெரிவதில்லை.    பணம் குறைவாகத்தான் இருக்கும்.  ஆனால் மனம் முழுக்க எப்போதுமே மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.  

தெருவில் வாழ்ந்து தெருவிலே புரண்டு கிடக்கும் எந்த குழந்தைக்கும் ஏன் பெரிய நோய்கள் தாக்குவதில்லை.  காரணம் எதிர்ப்பு சக்தி உள்ளூற வலுவாக இருப்பதால் எப்போதும் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.  நாம் தான் அத்தனை எதிர்ப்பு சக்திகளையும் சுத்தமாக துடைத்து வா... வா.. என்று அத்தனை நோய்களையும் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறத்தானே செய்கின்றோம்.

தென்னக ரயில்வே ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு வைத்திருக்கும் விலை 8.50. விற்க வேண்டிய விலையின் அளவு 12 ரூபாய்.  ஆனால் இது எப்படி மாறுகின்றது தெரியுமா?  

அவசரம் இல்லாமல் நிதானமாக வந்து கேட்டால் 12 ரூபாய்.  சற்று அவசரமாய் வந்து கேட்கும் போது 15 ரூபாய்.  ரயில் நடைமேடையில் இருந்து நகரப்போகின்றது என்கிற நிலையில் போய் கேட்கும் போது 20 ரூபாய்.  நம் அவசரம் தான் கடைக்காரருக்கு முக்கியம்.  நமக்கோ குறிப்பிட்ட அந்த பிராண்ட் மட்டும் தான் முக்கியம்.  

விலையென்பது ஒரு பொருட்டே அல்ல.  உள்ளேயிருக்கும் தண்ணீருக்குப் பெயர் மினரல் வாட்டர்.  ஆனால் உண்மையிலேயே வைக்க வேண்டிய பெயர் மைனஸ் வாட்டர் என்று தான் வர வேண்டும்.

நாம் சாப்பிடும் அரிசி மற்றும் தண்ணீரைப் பற்றி எப்பொழுதாவது யோசித்து இருக்கீங்களா? 

அம்மாவிடம் இனிமேலாவது சாப்பாத்தி சாப்பிடு என்றால் கொலவெறியோடு என்னைப் பார்க்கிறார். "ஒரு வாய் கஞ்சி போதும்டா.. உன்னோட சாப்பாத்திய நீயும் உன்னோட பிள்ளைகளும் தின்னுங்க" என்பார், 


அம்மாவுக்கு அறிவுரை சொல்லும் எனக்கு சாதம் இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறுகிறது. குழந்தைகள் விதவித ருசிகளை விரும்பினாலும் சாதம் என்பது சாகாவரம் போலத்தான் அவர்களுக்கும் இருக்கிறது. 

இன்று உருப்படியான அரிசியின் விலை 40 ரூபாய். இதுவே ஒரு வருடம் பழையது. 6 மாதம் பழையது என்ற பெயரில் தான் சந்தைக்கு வருகின்றது. ஆனால் மாதம் மாதம் விலையேறிக் கொண்டுருக்கின்றேதே என்று வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்.  

இரண்டு மாதம் தொடர்ந்து அந்த மூட்டையைப் பிரித்து வெயிலில் காய் வைக்காமல் இருந்தால் கெட்டுப் போன அரிசியின் நிறமும் தரமும் மாறியிருக்கும்.  காரணம் அந்த லட்சணத்தில் தான் இன்றைய அரிசி இருக்கிறது.

உரத்தை கொட்டி கொட்டி நமக்கான ஆரோக்கியத்தை இன்றைய விவசாயம் தந்து கொண்டுருக்கிறது.  இந்த அரிசி தான் பாலீஷ் செய்து செய்து பளபளப்பாக உங்கள் கண்களை பறித்து இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கேட்டு வாங்கித் தின்னத் தோன்றுகின்றது. அரிசியில் இருக்கும் மொத்த சத்துக்களையும் அரைத்து மில்காரர்கள் தவிடாக மாற்றி விட்டு கடைசியாக அரிசி என்ற பெயரில் ஒரு உருவத்தை கொடுக்க நாமும் மாட்டைப்போல விதி வந்தால் சாகலாம் என்று தின்று முடிக்கின்றோம்.

வெற்றிகரமாக மன்மோகன் சிங் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியாவுக்கு மானியம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளார். உரத்தின் விலை ஏறி விடும். ஆனால் விவசாயிகள் பாதிக்கபடக்கூடாதாம். ஆகவே மானியம் என்பதை விவசாயிகளுக்கு நேரிடையாக வழங்கி விடுகிறார்களாம். 

அதாவது நீ உரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மறைமுக கட்டளை. பயன்படுத்தாமல் இருந்தாலும் பிரச்சனையில்லை. காரணம் அந்த நிலத்தில் எதுவும் முளைக்காது. ஏற்கனவே மலடாக இருக்கும் நிலத்தில் ஏதேவொரு உரத்தை கொட்டினால் மட்டும் தான் பயிரின் பச்சை என்பதையே பார்க்க முடியும். இந்தியாவின் இயற்கை விவசாயத்தை வளர்த்தால் என்னவாகும். பன்னாட்டு எஜமான்கள் மன் மோகனை பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.  அவரவர் பாடு அவரவருக்கு.

இப்படித்தான் இப்போதுள்ள மினரல் வாட்டர் கதையும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பழைய கஞ்சியை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்.  மணிக்கணக்கான வைத்து சாப்பிடுவ்து முதல் சில நாட்கள் வைத்து சாப்பிடும் கஞ்சி வரைக்கும் அதன் மருத்துவ குணத்தை பிரித்துள்ளார்கள்.  அவர்கள் சொன்னது இப்போதுள்ள அரிசியின் அடிப்படையில் அல்ல. கடற்கரையில் விற்கப்படும் சுண்டக்கஞ்சி என்பது கூட இன்னும் கூடுதலாக சில நாட்கள் வைத்திருந்தால் அதுவே விஷம். 


இதைப் போலத்தான் நாம் அருந்தும் தண்ணீரும்.  மருந்துகளுக்கெல்லாம் தாத்தா ஒன்று உண்டு என்றால் அது தண்ணீர் மட்டும் தான்.  தண்ணீரில் இல்லாத மருத்துவ குணமே இல்லை. மனித உடம்புக்கு நீரே ஆதாரம்.

மினரல் என்று சொல்லக்கூடிய அத்தனை தாதுப் பொருட்களும் ஒரு சேர இருப்பது இந்த தண்ணீர் ஒன்றில் மட்டும் தான். ஆனால் நாம் வாங்கும் தண்ணீரில் உள்ள அத்தனை சத்துக்களையும் சுத்தம் என்ற பெயரில் எடுத்து விட்டு தான் அதை பாட்டிலில் அடைத்து தருகிறார்கள். 

தண்ணீரின் எந்த குணமும் இருக்காது.  குடித்தால் தாகம் கூட அடங்குவதில்லை. இந்த தண்ணீருக்குத் தான்  தமிழ்நாடு தற்போது பாடுபட்டுக் கொண்டுருப்பதைப் பார்க்கும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது.  நன்றாக வாசிக்கவும். வருத்தமாக இல்லை.  காரணம் நாம் செய்த செய்து கொண்டுருக்கும் விளைவுகளைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வியாதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை எதிரியாக பாவித்து முடிந்தவரைக்கும் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டுருக்கிறார்கள்.  

ஆனால் இந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்து தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையைப் போல இங்குள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் சர்வநிச்சயம்.  நம்மவர்கள் சாவு வீட்டில் கூட காசு பார்ப்பவர்கள். மாயனத்தில் ஊழல் செய்து காசு பார்க்கும் நம் அரசியல்வாதிகளிடம் நீங்கள் எது சொன்னாலும் எடுபடாது.. 

எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சராக இருந்து கொண்டு அவர் மாநிலத்திற்கு சாதகமாக இப்படி சொல்லிட்டாரே?  என்று அங்கலாய்த்துக் கொள்கின்றோம்.  அப்படி அவர் சொல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்குள் அவர் அடி எடுத்து வைக்க முடியாது.  காரணம் எதிர் கருத்து பேசி விட்டு உள்ளே நுழைய முடியாது. இடி போல விழும் ஒவ்வொரு அடியும்.  அவர்கள் வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்காக கூத்துக் கட்டி ஆடிக் கொண்டுருக்கிறார்கள் என்றாலும் நாம் காவேரி நீரை எப்படி பாதுகாக்கின்றோம் தெரியுமா?

காவேரி தலைக்காவிரியில் உருவாகின்றது என்பது அணைவருக்கும் தெரிந்ததே.  ஆனால் கர்நாடக அரசாங்கம் இந்த காவேரி நீர் வரும் பாதையில் எந்த தொழிற்சாலைகளையும்  செயல்பட அனுமதிக்கவே இல்லை. ஏறக்குறைய ஓகேனக்கல் வரைக்க்கும் இப்படித்தான். இந்த பகுதியில் ஓடி வரும் காவேரி நீரை பன்னீர் என்று சொல்லலாம். நீரில் பார்த்தால் நம் முகம் தெரியும். ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்து விட்டால் இந்த காவேரியை நம்மவர்கள் கற்பழித்து கதற அடிக்கின்றார்கள். இந்த வார்த்தை எழுத வருத்தபடவில்லை.  

காரணம் ஈரோடு பக்கம் வருவ்தற்குள் இந்த தண்ணீர்படும் பாடு இருக்கிறதே?

உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் என்று திருப்பூரும் ஈரோடும் போட்டிக் போட்டுக் கொண்டு வாழ முடியாத நகரமாக மாறிக் கொண்டுருக்கிறது.  சுற்றியுள்ள அத்தனை பகுதிகளுக்கும் இந்த விஷம் பரவிக் கொண்டுருக்கின்றது. 

காவேரி வரும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினம், நஞ்சன்கோடு, திருமுக்கூடல் நரசிபுரம் போன்ற சிறு நகரங்களாக இருக்கட்டும், அல்லது பாதைகளில் உள்ள மற்ற சிறு ஊர்களாக இருக்கட்டும்.  எந்த கழிவையும் இந்த தண்ணீரில் திறந்து விட முடியாது.  கர்நாடக மாநிலத்தின் சட்டம் தன் கடமையைச் செய்து விடும்.  ஆனால் திருப்பூருக்குள் இருக்கும் கொடுமையும், மழை பெய்து விட்டால் சாயப்பட்டறை முதலாளிகள் கொண்டாடும் சந்தோஷத்தையும் காண கண்கள் கோடி வேண்டும்.

அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தில் அத்தனை சாய நீரையும் திறந்து விட்டு விடலாம் அல்லவா?  அது தான் இங்கே நடந்து கொண்டுருக்கிறது. இதைப் போலத்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள ஆற்றின் நிலவரம் இருக்கிறது. கழிவுகளைக் கொட்ட, கழிவுகளைக் கொண்டு போய்ச் சேர்க்க என்று மாறி மாறி ஒவ்வொரு ஆற்றின் சுகாதாரத்தையும் நாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டுருக்கின்றோம். .

ஊரில் பார்த்த கண்மாயில் நீர் இல்லை. வறண்டு போய் கட்டாந்தரை போல இருக்கிறது.  சும்மா இருப்பார்களா? அருகே ப்ளாட் போட முயற்சித்துக் கொண்டுருக்கிறார்கள்.  முடிந்த வரை களி மண் தாண்டி கட்டாந்தரை வரைக்கும் மண் எடுத்து விற்பனை கண ஜோராக நடந்து கொண்டுருக்கிறது.  விவசாய நிலங்களை ப்ளாட் போட்டு விற்பதில் மற்ற மாநிலங்களை தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கும் போல.

காவேரி நீர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் நில நீர் ஆதாரத்தை எப்படி வைத்துள்ளார்கள் தெரியுமா?  மணல் மாஃபியா என்பது என்று பல்லாயிரக்கணக்கான கோடிகளை தந்து கொண்டுருக்கும் காமதேனு பசுவாக உள்ளது.  இதன் காரணமாகத்தான் காவேரி உள்ளே வந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வறண்டு போய்விடுகின்றது.  வறண்டு போன நிலங்களைத் தாண்டி இந்த காவேரி உள்ளே வருவதற்குள் படாதபாடு பட்டுத்தான் வருகின்றது. நாமும் அடிப்படை ஆதாரங்களை காக்க விரும்புவதில்லை. அது குறித்து கவலைப்பட நமக்கு நேரமும் இருப்பதில்லை.  காசு கொடுத்தால் தண்ணீர் வரும் போது ஆறென்ன குளமென்ன காவேரியென்ன?

காவேரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள் வரும் போதே ரூபம் மாறத் தொடங்குகின்றது.  கேரளா எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் கொட்டும் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கலக்கப்படுகின்றது. ஆனால் வளர்க்கப்படும் கோழிகளும் முட்டைகளும் கேரளாவுக்கு செல்கின்றது.  இதனைத் தொடர்ந்து மால்கோ, கெம்ப்ளாஸ்ட், போன்ற தொழிற்சாலைகளைத் தொடர்ந்து அனல் மின்நிலையம் வரைக்கும் அத்தனை நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவை சுமந்து வருவது தான் இந்த காவேரி தான்.

நாசிக், சூரத் போன்ற ஊர்கள் கூட பின்னுக்குப் போய்விட்டது.  நம்ம மேட்டூர் தான் இந்தியாவில் மாசடைந்த நகரில் முதலிடத்தில் இருக்கிறது. சுற்றுப்புற பாதுகாப்புக்கு விருது வாங்கிய காகித ஆலையின் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கொட்டப்படுகின்றது.

திருப்பூரில் உள்ள சாய்ப்பட்டறை முதலைகள் உருவாக்கிய பல சாயப்பட்டறைகள் அத்தனையும் காவேரி வழித்தடத்தில் தான் இருக்கிறது.  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க காசு.  நாம் எதையும் யோசிக்காமல் இருக்க தொலைக்காட்சி. 


கோவில்களை விட கழிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்ன போது பொங்கித் தீர்க்கும் நமக்கு என்ன அருகதை இருக்கிறது?   கோவில்களைக் கூட நாம் சுத்தமாகவா வைத்திருக்கின்றோம்.?

நம்முடைய உண்மையான வாழ்க்கை என்பதை அமைச்சர் உணர்ந்து தான் பேசியுள்ளார்.

நாம் தான் நாம் வாழும் அத்தனை இடங்களையும் கழிப்பறையாகத்தானே வைத்துள்ளோம். பாவத்தை செய்து கொண்டே பாவத்தை கரைக்க ஒவ்வொரு கோவிலுக்கும் படையெடுக்கின்றோம். கோவிலுக்குள் உள்ளே இருக்கும் ஆண்டவனும் அமைதியாக சிரித்தபடியே நம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்..

வீதி முதல் ஆறு வரைக்கும் அத்தனையையும் நாம் கழிவு கொட்டத்தானே பயன்படுத்துகின்றோம். கழிப்பறையில் வாழ விரும்பும் நாம் கையில் பாட்டிலை சுமந்து தானே ஆக வேண்டும்.

இதை விட மகிழ்ச்சி வேண்டுமா?   

39 comments:

bandhu said...

உண்மை. சுடுகிறது.

Anonymous said...

An Excellent article giving a snapshot of the state our state is in.

Anonymous said...

100% true - we are spoiling our mother earth.
Building houses and Plots in lakes, but asking water in neighbour state is immoral.
- Bodinayakanur Karthikeyan from Phoenix Arizona

ப.கந்தசாமி said...

படித்து ரசித்தேன். எப்படி இவ்வளவு பெரிய பதிவுகள் போடுகிறீர்கள்? யாரையாச்சும் சம்பளத்திற்கு வைத்திருக்கிறீர்களா? என்னால் செத்தாலும் முடியாது?

Avargal Unmaigal said...

பல விஷ்யங்களை ஒரே பதிவில் போட்டு தாக்குதாக்கு என்று தாக்கிவிட்டீர்கள். இதை 2 பதிவுகளாக போட்டு இருக்கலாம் என்பது என் கருத்து

ஜோதிஜி said...

சம்பளம் கொடுக்க இப்போது திருப்பூரில் யாருக்கும் வசதியில்லை. மனதில் தோன்றியவை ஒரு மட்டுக்கு வந்துஅடங்கும் வரை இந்த வேகம் இருந்து கொண்டே தான் இருக்க வேண்டும். எழுதுவது எளிது. அதை பிழை பார்த்து மின் தடையில் பதிவேற்றுவது தான் கடினமாக உள்ளத.

நானும் ரெண்டு பதிவாக போடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த பதிவு 400 வது பதிவாக வருகிறது என்பதை மனதில் குறித்துக் கொண்டு மொத்தமாக கொட்டி விட்டேன்.

மற்றவர்களின் விமர்சனங்களை விட சொல்ல வந்த விசயங்கள் கோர்வையாக வருகின்றதா நீண்டதாக இருந்தாலும் என்பதை என்னளவில் பார்த்துக் கொள்கின்றேன்.

bandhu said...

நானூறுக்கு வாழ்த்துக்கள்! அசுர உழைப்பு!

ஜோதிஜி said...

பந்து

ரொம்பவே அக்கறையுடன் நெருங்கி வரும் உங்களுக்கு என் நன்றிங்க. திருப்பூர் வாழ்க்கையில் உழைப்பு அசுர உழைப்பு என்பது சர்வசாதாரணம். கவனித்துப் பார்த்தால் திடீர் என்று இரண்டு மாதங்கள் வலை பக்கம் வரவே மாட்டேன். குறிப்பிட்ட வேலை முடிந்ததும் அதன் கவனம் முழுக்க அதில் இருந்து விலக வாய்ப்பு அமைந்ததும்,, அதன் பிறகே எழுத வருவேன்.

எதில் இறங்கினால் அதில் ஆழ அகல பார்த்து விடுவது என் வழக்கம். பலனை எதிர்பார்ப்பதே இல்லை. என் பதிவுகளுக்கு விமர்சனப் பார்வையில் சற்று கடினம் தான். முழுமையாக படித்தால் தான் சற்று விமர்சனத்தில் மற்றவர்களை கவர வைக்க முடியும். முழுமையாக படிக்க முடியாவிட்டால் கூட அவரவர் ஓய்வு நேரத்தில் ஏதோவொரு சமயத்தில் ஏதோவொரு காலத்தில் இந்த தளம் உதவக்கூடும்.

அதுவே தான் என் நோக்கமும்.

ஜோதிஜி said...

முண்டாசு சொன்ன ரௌத்திரம் பழகு இதுதான்!!!!

'இங்கெல்லாம் இப்படித்தாங்க' வுலே மட்டும் போயிடாதீங்க:(

நானூறுக்கு இனிய பாராட்டுகள்.

ஆயிரங்களாக வளரட்டும். வாழ்த்துகின்றேன்

துளசி கோபால் பின்னூட்ட பெட்டி வேலை செய்கின்றதே.

உங்கள் அக்கறைக்கு நன்றி டீச்சர்.

Unknown said...

goodluck and keep up good work.
what we(I) can't draft in words but think alike.
-surya

கரிகாலன் said...

நல்லதொரு பதிவு சகோதரா

சாத்தியமாக என்னால் இவ்வளவு நீளம் எழுத முடியாது.
கோவில்களை விட கழிப்பறைகள் மிகவும் அவசியமே
ஆனால் யார் புரிந்து கொள்வார்கள் .

கரிகாலன்

அகலிக‌ன் said...

கோன் எவ்வழி குடி அவ்வழி. இந்தியாவின் நீராதார மையங்கள் எல்லாம் அதன் தேவையும் பய‌னும் அறிந்த அரசுகளாலேயே பாதுகாக்கப்படாமலும் பராமறிக்கப்படாமலும் கிடக்கின்ற நிலையிலும், விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் கர்நாடகாவோடும் நீதிமன்றத்தோடும் ஒவ்வொரு ஆண்டும் மல்லுக்கு நிற்கவேண்டிய சூழ்நிலையிலும்தான் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மற்றும் பல நிறுவனங்களுக்கும் பலகன லிட்டர் தண்ணீரை 10 பைசாவிற்கும் அதைவிட குறைவான விலைக்கும் நம் ஆறுகளை திறந்துவிட்டிருக்கிறோம் என்பது வெட்க்கக்கேடு. சென்னை வேளச்சேரி அருகே ஆசியாவிலேயே மிகவளமான பாதுகாக்கப்படவேண்டிய நீராதார சதுப்புநிலத்தின் மிகச்சரியான‌குறுக்கே 100அடி சாலை அமைத்திருப்பதை எங்கே சொல்லி முட்டிக்கொள்வது. போதாதற்கு மானகராட்சியும் சிங்காரச்சென்னையின் எழில் காக்க எல்லா குப்பைகளையும் அந்த நிலத்திலேயே கொட்டி மேடேற்றுகிறது.அத்தியாவசிய தேவையான தண்ணீரை தனியாருக்கு தாரைவார்த்த அரசு டாஸ்மாக் கடைகளை தனதாக்கிக்கொண்டது.

Unknown said...

அசாத்தியமான உழைப்பு. பாராட்டுக்கள்!

chandrasekaran said...

சத்தியமான வார்த்தைகள். ஆனால் மக்கள் என்று உணர்வார்கள், நம்பிக்கையே இல்லை.

Unknown said...

மிக நல்ல பதிவு! பாராட்டுக்கள்!

Robert said...

மிகவும் அவசியமான பதிவுதான். படிக்கும் போதே ஆதங்கமும் கோபமும் குமுறிக் கொண்டுதான் வருகிறது. அடுத்த தலைமுறை நலமுடன் வாழ்வதற்கான அனைத்து வாழ்வாதாரங்களையும் கெடுத்து விட்டோம். எல்லாவற்றையும் போல இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையுடன் நாமும் இருக்கிறோம். நமது அசட்டையான, பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கு, வருங்கால சந்ததியினர் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம் வேதனையுடன் ....

ஜோதிஜி said...

சென்னை வேளச்சேரி அருகே ஆசியாவிலேயே மிகவளமான பாதுகாக்கப்படவேண்டிய நீராதார சதுப்புநிலத்தின் மிகச்சரியான‌குறுக்கே 100அடி சாலை அமைத்திருப்பதை எங்கே சொல்லி முட்டிக்கொள்வது. போதாதற்கு மானகராட்சியும் சிங்காரச்சென்னையின் எழில் காக்க எல்லா குப்பைகளையும் அந்த நிலத்திலேயே கொட்டி மேடேற்றுகிறது.அத்தியாவசிய தேவையான தண்ணீரை தனியாருக்கு தாரைவார்த்த அரசு டாஸ்மாக் கடைகளை தனதாக்கிக்கொண்டது.

தண்ணீ தண்ணீர் ரெண்டுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். அது தான் அரசாங்கம் தெளிவாக தள்ளாட்டம் இல்லாத முடிவு எடுத்துருக்கும் போல

Vetirmagal said...

படிப்பதற்கு வருத்தமாக இருந்தது. எல்லா நகரங்களையும் நரகம் ஆக்கும் முனைப்பு தான். யார் சீர் செய்ய முடியும் , யார் தட்டி கேட்பார்கள்?

ஜோதிஜி said...

இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையுடன் நாமும் இருக்கிறோம். நமது அசட்டையான, பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கு, வருங்கால சந்ததியினர் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம்

தண்ணீருக்காக அடித்துக் கொண்டு சாகப்போகும் மக்களை பார்க்க நாம் இருக்க மாட்டோம்.

கிரி said...

Very important issue which has to be solved. Yes each and every point has the value and to be changed & followed by every individual to revamp our society and ensure to give certain fertile resource to our next generation, otherwise we are not suppose to consider as Modern Civilian. Good Work Sir, Plz. keep it up

Unknown said...

Arumaiyana Article. karnataka karnatakamaga illamal sirappagave cauveryyai paraamarikirargal enbathu nalla seithi. nammavargal katrugollavendiyathu niraiya thanneer mattum alla.

கையேடு said...

//தெருவில் வாழ்ந்து தெருவிலே புரண்டு கிடக்கும் எந்த குழந்தைக்கும் ஏன் பெரிய நோய்கள் தாக்குவதில்லை.//
இதில் சற்று மாறுபடுகிறேன்.. கிராமங்களின் புழுதிகளில் வேண்டுமானால் நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கலாம், ஆனால், நகரங்களில் சாக்கடைகளின் அருகில் புழுதிகளில் புரளும் குழந்தைகளுக்கு இது பொருந்தாது..

மேலும், புழுதிக்காடுகளில் விளையாடும் குழந்தைகள் பார்ப்பதற்கு உடல் நலக்கோளாறு இல்லாமல் இருப்பது போல் தெரியலாம், ஆனால், அவர்களில் பெரும்பாலானோர், "Mal-nourished " குழந்தைகளே..

வடுவூர் குமார் said...

சிங்கப்பூரில் இருந்து குடி நீரை வாங்கும் காலம் இன்னும் கொஞ்ச தூரத்தில் தான் இருக்கிறது.
எண்ணங்களை கோர்வையாக எழுத முடியாத ஆனால் அதே தார்மீக கோபங்களுடன் வாழும் சிலருக்கு உங்கள் எழுத்து தான் வடிகால்.
400 வது பதிப்புக்கு வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

what we(I) can't draft in words but think alike.

வணக்கம் சூரிய நாராயணன்.

உங்களுடன் உரையாடிய போது, நீங்கள் அனுப்பிய விபரங்கள் தான் இந்த ஆக்கம் உருவாக காரணமாகவே இருந்தது.

குமார் உங்களைப் போல எனக்கும் உள்ளே இருக்கும் கோபங்களை இந்த எழுத்து மட்டுமே தீர்த்து வைக்கின்றது. நான் இடுகையில் தான் எழுதுகின்றேன். மேலே நான் பதில் அளித்த திரு சூரிய நாரயணன் அவர்கள் ஒடிஷாவில் இருந்து கொண்டு இந்தியாவில் உள்ள அத்தனை நிர்வாக சீர்கேட்டுக்குப் பின்னால் உள்ளவர்களிடம் மின் அஞ்சல் வாயிலாக கேள்விகளை தொடுப்பவர்.

விடாது முயற்சி செய்து கொண்டுருப்பவர். குறிப்பாக ஈரோடு திருப்பூர் பக்கம் நடந்து கொண்டுருக்கும் அத்தனை அக்கிரம செயல்களை அங்கிருந்தபடியே கவனிப்பதோடு அதற்கு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை, செய்ய வேண்டியதை தன்னளவில் செய்து கொண்டுருப்பவர். அவருக்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இதனால் என்ன பிரயோஜனம் என்றால் கெட்டு சீரழிந்து மறுபடியும் மீண்டு வரும் போது கெட்டழிந்த கதை எப்படி இருந்தது என்பதை நமக்கு நமக்கு பின்னால் வருபவர்களுக்கு படிக்க உதவும் என்பதே எனது குறிகோள்.

ஜோதிஜி said...

மேலும், புழுதிக்காடுகளில் விளையாடும் குழந்தைகள் பார்ப்பதற்கு உடல் நலக்கோளாறு இல்லாமல் இருப்பது போல் தெரியலாம், ஆனால், அவர்களில் பெரும்பாலானோர், "Mal-nourished " குழந்தைகளே..

இதனைப் பற்றி சற்று விபரமாக கூற முடியுமா? தெரிந்து கொள்ளும் பொருட்டு.

ஜோதிஜி said...

CHINNAIAH KARUNANIDHI Karunanidhi said...

வாங்க கருணாநிதி. உண்மை தான். அண்டை மாநிலத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கினறது. குறிப்பாக அவர்களிடம் அனுப்பி வைத்து விடலாம்.

ஜோதிஜி said...

GIRI

நன்றி. நாம் மார்டன் சிவிலிசேஷன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அதற்கான தகுதிகள் நமக்கு இருக்கின்றதா? என்பதை நாம் தான் ஆராய்நது பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அடுத்த சந்தில் இருப்பவர்களைப் பற்றியே நமக்கு கவலைப்பட நேரமில்லை. பிறகெங்கே நாம் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கப் போகின்றோம்.

ஜோதிஜி said...

படிப்பதற்கு வருத்தமாக இருந்தது. எல்லா நகரங்களையும் நரகம் ஆக்கும் முனைப்பு தான். யார் சீர் செய்ய முடியும் , யார் தட்டி கேட்பார்கள்?


மாற்றங்கள் என்பது தனி மனிதர்களிடம் இருந்து உருவாவது. நாம் நம் அளவில் சரியாக இருந்து விட்டாலே அல்லது குறைந்தபட்சம் நம் தேவைகளின் அளவீடுகளை முறைப்படுத்தி வாழ்ந்தாலே நாம் சமூகத்திற்கு செய்யும் பெரிய சேவை தானே. உங்கள் வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையுடன் நாமும் இருக்கிறோம். நமது அசட்டையான, பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கு, வருங்கால சந்ததியினர் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம் வேதனையுடன் ....

ராபர்ட் அடுத்த சந்ததியைப் பற்றி யோசிக்க வேண்டாம். நாம் வாழ்வதற்குள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் தான் என் கண் முன் தெரிகின்றது. நிச்சயம் தண்ணீருக்காக ஒரு பெரிய கலவரம் உருவாகி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் என்பதை எவரும் உணராமல் இருப்பது தான் மகத்தான் சோகம்.

ஜோதிஜி said...

சத்தியமான வார்த்தைகள். ஆனால் மக்கள் என்று உணர்வார்கள், நம்பிக்கையே இல்லை.

மிக சரியாக எழுதி இருக்கீங்க. தூங்குபவர்களை எழுப்ப முடியும். நடிப்பவர்களை எந்த காலத்திலும் ,,,,,,,,,,,,,,,,முடியாது.

ஜோதிஜி said...

கரிகாலன்

நீளம் என்பது பெரிதல்ல. நாம் காணப்போகும் தண்ணீர் சார்ந்த பிரச்சனைகளும் இதை விட நீளமாகத் தான் வரப்போகின்றது. எனது எழுத்துப் பயணம் என்பது ஒவ்வொரு இடுகைக்கும் அதிகபட்சம் ஒரு மணி நேர உழைப்பு தான். அதிகமில்லை.

ஜோதிஜி said...

ஞானசேகரன்

வாங்க வாங்க. நீண்ட நாளைக்குப் பிறகு.

நன்றி சுப்ரமணி.

ஜோதிஜி said...

இந்த வருடத்தில் மொத்தமே எழுதியது ஏறக்குறைய 20 தலைப்புகள் தான். இப்போது தான் சற்று மூச்சு விட முடிகின்றது. பயணங்கள் உருவாக்கிய தாக்கங்கள் ஒவ்வொன்றாக எழுத முடிகின்றது. மறுபடியும் ஒரு இடைவெளி உருவாகி விடும்.

ஆனால் இந்த ஒரு தலைப்பு ஒரே நாளில் அத்தனை பார்வையாளர்களையும் உள்ளே கொண்டு வந்து விட்டது. வாசித்த, வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி.

கையேடு said...

//With over 240 million children under the age of five, India contributes 25 percent of the world’s child deaths. It is evident that a major turnaround in India will ensure a significant impact globally!// - http://www.unicef.org/india/health_491.htm

//Forty three per cent of Indian children under five years are underweight and 48 per cent (i.e. 61 million children) are stunted due to chronic undernutrition, India accounts for more than 3 out of every 10 stunted children in the world.//

//Forty three per cent of Indian children under five years are underweight and 48 per cent (i.e. 61 million children) are stunted due to chronic undernutrition, India accounts for more than 3 out of every 10 stunted children in the world.//

http://www.unicef.org/india/nutrition_188.htm

சுட்டியை மட்டும் கொடுத்துவிட்டு உரையாடாமல் செல்வதற்கு மன்னிக்கனும்..
தேவையான புள்ளிவிபரம் இரண்டாவது சுட்டியில் கிடைக்கும்.

கையேடு said...

மேலும் ஒரு முக்கியப்புள்ளி.. - Undernutrition is substantially higher in rural than in urban areas. Short birth intervals are associated with higher levels of undernutrition.

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் நிதானமாக வாசித்துப் பார்க்கின்றேன்.

ssk said...

எல்லாம் கடவுள் பார்த்து கொள்வார் என்று ஏமாற்றி விட்டோரிடம் பழகி விட்டது சமுகம்.
மனிதனால் மட்டுமே வேண்டும் மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.
மன மாற்றமும் மனித சக்தியும் எதையும் சாதித்து காட்டும். இங்கு இரண்டையும் முடமாக்கி வைத்துள்ளனர்

arivalagan said...

கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்

நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.

நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.

மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன். ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது.

பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது.

சும்மா சொல்லக்கூடாது?

அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே? எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார். ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.

விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது. ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.

வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்.




AllInAllGoodPosts said...

niraiyaemailaccounts.com

@NiraiyaEmailAct

#NiraiyaEmailAct #passwordmanager
#emails #emailmanager #emailpasswordmanager #freemiumfreedom #niraiyaemailaccounts #emailmarketing #InternetMarketing #AffiliateMarketing #emailcheker #emailavailabilitychecker


@NiraiyaEmailAct @passwordmanager #NiraiyaEmailAct
@emails @emailmanager @emailpasswordmanager @freemiumfreedom @niraiyaemailaccounts @emailmarketing @InternetMarketing @AffiliateMarketing @emailcheker @emailavailabilitychecker



Niraiya Email Accounts, Niraiya , Niraya,private password manager, Multi-Account secure, Freemium Websites, password manager, Niraya Email Accounts

Youtube

www.niraiyaemailaccounts.com

Check out Niraiya Email Accounts an Internet Marketing tool
Multi-Account secure and private password manager for manage your emails accounts and its linked social media accounts .