Wednesday, October 17, 2012

விலை நிலத்தில் முளைக்கும் பயிர்கள்புதுக்கோட்டைக்கும் திருப்பத்தூருக்கும் இடையே உள்ள ஒரு கிராமத்தில் அந்த கல்லூரி இருந்தது.  சுற்றிலும் வயல்வெளிகள். அந்த பகுதிக்கு பொருந்தாமல் பிரமாண்ட கட்டிடமாய் அங்கே நின்று கொண்டுருந்தது. 

ஒவ்வொரு முறையும் திருச்சியைத் தாண்டி ஊருக்குள் செல்லும் வழியில் நான் பார்க்கும் காட்சிகள் ஆச்சரியத்தைத் தரும். பத்து கிலோ மீட்டருக்குள் ஏதோவொரு கல்லூரியின் பெயர் பலகையை பார்ப்பேன்.. வயல்வெளிகளும், பொட்டல் காடுகளுமாய் இருந்த இடத்தில் கல்லூரி முளைத்திருக்கும். உருவான கல்லூரியைச் சுற்றிலும் ஒரு குட்டி நகர் உருவாகியிருக்கும்.  சற்று பிரபலமான கல்லூரி என்றால் ஏதோவொரு வங்கியின் ஏடிஎம் சேவை மையம் கூட அங்கே இருக்கும்.  ஆனால் அத்தனை கல்லூரியிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு தான் இருக்கிறது.

நண்பர் பணியில் இருந்த அந்த கல்லூரி விளைநிலத்தில் பிரமாண்டமாய் இருந்தது. முக்கால்வாசி வேலைகள் முடிந்து இன்னமும் பல பக்கங்களில் வேலைகள் நடந்து கொண்டுருந்தது. சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் அனைத்தும் சீந்துவாரற்று கிடக்க குறுக்கு வெட்டு தோற்றம் போல அங்கங்கே ப்ளாட் போடும் முயற்சியில் சிலர் தங்கள் உழைப்பை காட்டியிருந்தனர். நான் பார்த்த ஒரு பலகையில் வாஷிடங்டன் நகர் என்று போட்டுருந்தது.

எனக்கு விபரம் தெரிந்து ஒரே ஒரு முறை நண்பர் ஒருவரைப் பார்க்க இந்தப் பக்கம் வந்துள்ளேன். பாதி இடங்கள் எனக்கு அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருந்தது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப் படுத்தியவர்கள் வாழ்ந்த பூமியிது. தொடக்கத்தில் பொறம்போக்கு என்று அடையாளப் படுத்திய இந்த நிலங்கள் படிப்படியாக பல தரப்பு மக்களும் குடிபுக இன்று நகர் போலவே வளர்ந்துள்ளது. இந்த பகுதியில் இருந்தவர்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளை பயன்படுத்தி மேலே வந்தவர்களைப் போல பள்ளிப்படிப்புக்கு வசதியில்லாதவர்கள், முறையாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் அனைவரும் வெளிநாட்டு சம்பளத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

என்ன விலை வேண்டுமானாலும் வைத்துக்கொள். என்னை உன்னால் திருத்திவிட முடியுமா? என்றவர்கள் மட்டும் இன்றும் மைனர் காளைகளாக வலம் வந்து கொண்டுருக்கின்றனர்.

கல்லூரிக்கு உள்ளே சென்று கொண்டுருந்த போது பல வித எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டுருந்தது. 

குறிப்பாக தற்போதைய கல்வியைப் பற்றி அதிகம் யோசிக்க வைத்தது. மாறிய சூழலும் மனதில் இருந்த மாறாத எண்ணங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை உணர முடிந்தது. 

தமிழ்நாட்டில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் கல்வித் துறை வளர்ந்த விதம் பிரமிப்பாய் இருக்கிறது.  வளர்ந்து இருக்கிறது. ஆனால்..... என்று சொல்லிவிட்டு ராகம் போட்டு இழுக்கத் தோன்றுகின்றது.  வளர்ச்சி என்பதற்கும் வீக்கம் என்பதற்கும் உண்டான வித்யாசங்கள் வேறு.  தற்போதைய கல்வி என்பது நமக்கு பொருந்தாமல் இருக்கும் வீக்கமாகத்தான் இருக்கிறது.  விலைபேசி கூறு போட்டு விற்கும் கல்வியின் தரத்தை எவரும் கண்டு கொள்ளத் தயாராய் இல்லை.  தெருவில் இருக்கும் கடைகளில் கூட திடிரென்று அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அதன் தரத்தை சோதிக்கின்றனர். 

நன்றி வினவு தளம்

ஆனால் வருடந்தோறும் ஒவ்வொரு கல்லூரியின் தரத்தை சோதித்து இருந்தால் இன்று கல்லூரியை விட்டு வெளியே வந்து தகுதியில்லாத படிப்பை முடித்து தரமான வாழ்க்கை வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பல லட்ச மாணவர்களின் வாழ்க்கை நன்றாக இருந்துருக்கும்.

விருப்பப்பட்டவர்கள் சொடுக்கி பார்க்கலாம்.  கல்லூரிகள் குறித்த அனைத்து விபரங்களும் இந்த தளத்தில் உள்ளது.

ஏறக்குறைய கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக், பி.ஈ. என்று சொல்லப்படுகின்ற தொழில் நுட்ப இளங்கலை படிப்புகள் என்று தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் 500 கல்லூரிகள் அளவில் இருக்கின்றது. பெரும்பாலும் தனியார் நடத்தும் கல்லூரிகள் தான் அதிகமாக இருக்கின்றது. உத்தேச கணக்காக வைத்துக் கொண்டாலும் கூட ஒவ்வொரு துறையிலும் 1.50 லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் படித்து முடித்து வெளியே வருகின்றார்கள்.  இது தவிர மற்ற துறை சார்ந்த படிப்புகள் என்று தனியாக ஒரு பட்டியல் உள்ளது. ஆனால் கல்வி தரும் விளைவுகள் தான் பயம் காட்டுவதாக இருக்கிறது.  

அதைத் தான் நணபரும் சொன்னார்.

வசதியற்ற குடும்பத்தில் பிறந்த நண்பரும் தனது கல்லூரி படிப்பை கஷ்டப்பட்டு தான் முடித்தார். தட்டுத்தடுமாறி மாலை நேர வகுப்பு மூலம் பி.ஈ என்ற படிப்பை முடித்து விட்டு அருகே இருந்த பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். தனியார் கல்லூரி என்பதால் மிக குறைவான சம்பளம்.  ஆனால் அவரின் உறுதியான உள்ளம் அங்கிருந்தபடியே எம்.ஈ படிக்க வைத்தது. கல்வியை காசாக்கும் நிர்வாகத்தின் முறைகேடுகளை தட்டிக் கேட்ட காரணத்தால் மூன்று கல்லூரிக்கு மாற வேண்டிய சூழ்நிலையில் கூட விடாமல் தனது மேற்கொண்டு பி.ஹெச்டி என்ற ஆராய்ச்சி படிப்பையும் தொடர முடிந்தது. 

கல்லூரியில் உதவி பேராசியர் பதவி தேடி வந்த போது கூட அங்கே நடந்து கொண்டுருக்கும் முறைகேடுகளினால் இந்த கல்லூரியின் முதல்வர் என்ற வாய்ப்பு வந்த போது தனது கொள்கைகளை சொல்லிவிட்டே உள்ளே வந்தார்.

தொடக்கத்தில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் படுத்திய பாடுகளை மென்மையாக புரியவைத்து இந்த கல்லூரியை ஒருநிலைப் படுத்த ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆனது. .  

காரணம் இந்த பகுதிகளில் சாதி என்ற பிரச்சனை இன்னமும் இருக்கிறது என்பதோடு அதையே மாணவர்கள் ஆயுதமாக்கி அட்டகாசம் செய்வதும் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  

தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிக்கசாதியினர் என்ற பிரிவினைகள் தீராத தலைவலியை உருவாக்க பொறுத்துப் பார்த்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து கட்டையைத் தூக்கி குறிப்பிட்ட மாணவர்களை துரத்த வேண்டிய சூழ்நிலையும் உருவானது. 

நிர்வாகத்தில் இருந்தவர்கள் பயத்தில் ஆடிப்போக கல்லூரியில் முதலீடு போட்ட ஒரு பங்குதாரர் பயம் பிடித்து ஒதுங்கி விட்டார். ஆனால் இவரின் நல்ல நேரம் மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க இன்று ஆட்டம் போட்ட எவரும் இல்லை. படிக்க விரும்பும் மாணவர்களும், தங்களது பையன்களை நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களுக்கும் நண்பர் பணிபுரியும் கல்லூரி தான் முன் உதாரணமாக இருக்கிறது. . 

நான் அவருடன் அவர் அறையில் பேசிக் கொண்டுருந்த போது ஒரு கிராமத்து வயதான பெற்றோரை கூட்டிக் கொண்டு ஒரு மாணவர் பயந்து கொண்டே உள்ளே வந்தான்.  என்னுடன் பேசிக் கொண்டுருந்த நண்பர் பேச்சை நிறுத்தி விட்டு அவனை நோக்கி ஒரு பார்வை பார்த்தாரே பார்க்கலாம். 

அதற்குள் அந்த வயதான பெரியவர் இனிமேல் இந்த தப்பு செய்யமாட்டான் அய்யா.  நாங்க ஜவாப்தாரி என்று சொல்லிவிட அலுவலரை அழைத்து வகுப்புக்குச் செல்ல அனுமதித்தார்.

பிரச்சனை வேறொன்றுமில்லை.  

இவர் இந்த கல்லூரிக்கு வருவதற்கு முன்  சுற்றுச்சுவர் என்று ஒன்று இல்லை. வகுப்பறையில் இருந்து அப்படியே நகர்ந்து அருகே இருக்கும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு மக்கள் உல்லாசப்பயணம் செல்வது வாடிக்கையாம்.  இவர் வந்தவுடன் முதல்முறையாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 

அத்துடன் உள்ளே வரும் மாணவர்கள் வருகை பதிவேட்டை உறுதி செய்யும் பொருட்டு ஒரு சிறிய எந்திரத்தில் தனது அடையாள அட்டையை தேய்த்து விட்டு தான் வகுப்புறைக்குள் செல்ல வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டது.  கண்டிப்பாக ஒருவர் மூலம் அதை கண்காணிக்கப்பட்டது.

ஒரு மாணவர் தனது அடையாள அட்டையை தேய்க்காமல் இருந்தால் அந்த சிறிய எந்திரம் அந்த மாணவரின் தந்தைக்கு அல்லது குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக போய்விடும். 

மாணவர் ஏமாற்ற முடியாது.  தொடக்கத்தில் இதையும் கெடுத்து வைக்க பலரும் முயற்சிக்க இதற்கும் காவல் போட்டு ஆய்பு வைக்கப்பட்டது.  

இடையிடையே நிர்வாகம் கொடுத்த அழுத்தம் என்பது தனியொரு கதை. ஒவ்வொரு வருட இறுதியின் முடிவிலும் பார்த்து முடித்த லாப நட்டக் கணக்கு ஏகப்பட்ட புகைச்சலை பங்குதாரர்களிடம் உருவாக்கியது. இவர் வருவதற்கு முன்பு நிர்வாகம் பணத்திற்காக உருவாக்கிய பல தகிடுதிட்டங்கள் அனைத்தையும் நண்பர் நிறுத்திவிட்டார்.

அதாவது மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் அதற்கு தண்டனையாக ஒரு குறிப்பிட்ட பணம் வசூலித்து விடுவது. 

வருகை பதிவேடு குறிப்பிட்ட அளவு இல்லை என்பது முதல் பலவிதமான சீர்கேடுகளை வளர்க்க உதவியதே இந்த பண சமாச்சாரமே.

இது நிர்வாகத்திற்கு பண ரீதியாக லாபத்தைக் கொடுத்தாலும் கல்லூரியில் உருவான் அத்தனை பெரிய பிரச்சனைகளுக்கும் இதுவே முக்கிய காரண காரியமாக இருந்தது.  நண்பர் இதை நிறுத்தியவுடன் பணம் படைத்த பாதி மாணவர்களுக்கு தலையில் இடி விழுந்தது போலவே இருந்தது.  


நணபர் ஏறக்குறைய இரட்டை வேட மனிதர் போலத்தான்.

ஒரு பக்கம் ரசனையான நபர்.  மற்றொரு பக்கம் அடிதடிக்கு அஞ்சாத நபர்.  

காரணம் இளம் பருவத்தில் வறுமையினால் பெற்ற பலவிதமான காயங்கள் இன்னமும் மனதிற்குள் இருக்க வசதியற்ற மாணவர்களின் வாழ்க்கையில் முடிந்தவரைக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை தனது கடமையாகவே வைத்துள்ளார்.

படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்து கொண்டுருப்பவர்.  ஆனால் அமைதியான சூழ்நிலையை கெடுக்கும் எந்த மாணவருக்கும் மன்னிப்பு என்பதே இல்லை என்பதை தனது உறுதிபாடாகவே வைத்துள்ளார்.

நிர்வாகம் புரிந்து கொண்டது.

.
இவர் வருவதற்கு முன்பு வாரத்தில் மூன்று நாட்கள் பங்குதாரர்களின் எவராவது ஒருவர் கல்லூரியில் வந்து உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்.

ஏற்கனவே இந்த கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்தவர் ஒரு டம்மி போலவே வைத்துக் கொண்டு முடிந்தவரைக்கும் நிர்வாகம் பல வகையிலும் பணம் கறக்கும் விதங்களை கண்டு பிடித்து கறந்து கொண்டுருந்தனர். ஆனால் இவரின் கெடுபிடிகளைப் பார்த்து பயந்து மெதுமெதுவாக ஒதுங்கி விட்டனர். 

700 மாணவர்கள் படித்துக் கொண்டுருந்த கல்லூரியில் இன்று ஏறக்குறைய 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டுருக்கிறார்கள்.

நண்பரின் முயற்சியினால் இதே இடத்தில் பி.ஈ படிப்பும் தொடங்கும் வேலைகளும் நடந்து கொண்டுருக்கிறது.

அந்த கல்லூரியை அவருடன் சுற்றிப்பார்த்து வந்து கொண்டுருந்த போது நான் கண்ட காட்சிகள்.............................

மீதி அடுத்த பதிவில் 

9 comments:

வடுவூர் குமார் said...

ஐயோடா என்று இருந்தாலும் உங்கள் நண்பரின் பணி கொஞ்சம் நம்பிக்கையை கொண்டு வருகிறது.அவருக்கு என் வாழ்த்துகள்.

வவ்வால் said...

ஜோதிஜி,

உங்க நண்பர் நேர்மையாக நடக்க விரும்புகிறார் என்பது ஆறுதலான விஷயமே.

ஆனால் நன்கொடையாக ஒரு தொகை வாங்காமல் கல்லூரியே நடத்தமுடியாது. அதில் முதலிட்டுக்கு லாபம் என சேர்ந்து அரசு நிர்ணயத்த கட்டணம் போல இரண்டு மடங்கு வாங்கியாக வேண்டிய நிலை.

கல்லூரி நடத்துபவர்கள் லாபம் குறைவாக வந்தால் போதும் என நினைக்காவிட்டால் சாத்தியமே இல்லை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
இப்போதுதான் வயல்வெளிகளெல்லாம் கல்லூரிகள் முளைத்து விட்டனவே... எங்கு பார்த்தாலும் இஞ்சினியரிங் கல்லூரிகள்தான் அதிகம்... சம்பாதிக்க சுலபமான வழியில்ல...

ராமச்சந்திராவுல உறவினர் பையனை எம்.பி.பி.எஸ் சேர்க்க 85 லகரம் கொடுத்திருக்கிறார்கள்....

Anonymous said...

Capitiation fee figures are outdated...now more than doubled... Thanks to Kalvi Thanthai's of Tamilnadu - Bodinayakanur Karthikeyan from Phoenix Arizona

Anonymous said...

Failing Agriculture, Mismanagement of Fertile Lands, Unneccessary Increase of Educational Institutes for Money's Sake, Caste based Society, Money Minded Lifestyle all will lead to a disasterous future . Feeling So Sad, :(

ஜோதிஜி said...

ராமச்சந்திராவுல உறவினர் பையனை எம்.பி.பி.எஸ் சேர்க்க 85 லகரம் கொடுத்திருக்கிறார்கள்....

சேர்க்க 85
நான்கு வருடம் படிக்க வைக்க குறைந்த பட்சம் 20
ஆனால் இந்த படிப்பு இத்துடன் முடியாது. மேற்கொண்டு எம்.டி அல்லது எம்.எஸ் என்று ஏதோவொன்று படிக்க வேண்டும். சீட்டுக்கு காசு கொடுக்காமல் அதுவும் சேர முடியாது. அந்தப்பக்கம் ஒரு 50. ஆக மொத்தம் எல்லாச் செலவுகளை கூட்டி கழித்துப் பார்த்தால் அவர் ஒரு மருத்துவராக வெளியே வர 2 கோடி ரூபாய் வேண்டும்.

இதற்கும் முழுமையாக ஏழு வருடங்கள்.

வங்கி வட்டி என்றாலும் மாதம் இரண்டு லட்சம்.

அவர் வெளியே வந்து அத்தனையும் சேர்த்து சம்பாரிக்க வேண்டும். மருத்துவராக உருவாக்கம் பெறுவாரா? சம்பாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிலை தொடங்குவாரா? இந்த சூழ்நிலையை தான் கொடுமையானது.

ஜோதிஜி said...

கல்லூரி நடத்துபவர்கள் லாபம் குறைவாக வந்தால் போதும் என நினைக்காவிட்டால் சாத்தியமே இல்லை.


உண்மைதான் வவ்வுஜி. நண்பரும் அதைத்தான் சொன்னார். தற்போது மூன்று வருடம் பாலிடெக்னிக் படிப்பு முடிக்க 1 லட்சம் ஆகின்றதாம்.

Unknown said...

அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பதால் வரும் விளைவு ; சாராயம் விற்கவே நேரம் போதலே------!?!?!?

அகலிக‌ன் said...

நான் வெறும் 3000 ரூபாயில் முடித்த BA அதே கல்லூரியில் இன்று 60000 ரூ காரணம் காமராஜருக்கும் M G R க்கும் பிறகு அரசு பள்ளிகளோ கல்லூரிகலோ கட்டப்படவிலை (என்பது என் எண்ணம் அதுபற்றிய சரியான தகவல் தெரியவிலை. ஆனால் சென்னையில் நிச்சயமாக புதிய அரசு பள்ளிகள் கல்லூரிகள் துவங்கப்படவில்லை.) தனியார் சேவைசெய்யவேண்டி கல்லூரிகளும் பள்ளிகளும் துவங்குவதில்லை. நல்ல மனம் இருக்கும் உங்கள் நண்பரிடம் முதலீடில்லை முதலீட்டாளார்களுக்கு லாபநோக்கம் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு இருப்பது லாப வெறி என்ன செய்ய. இருந்தாலும் நண்பரின் நேர்மையான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.