Saturday, December 13, 2014

கடைசி அத்தியாயம்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..... 

அத்தியாயம் 20 

துணிவே துணை 

"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன். பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள், அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள், அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன். 

சில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன். அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன். இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது. 

பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன். என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல. இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும். ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே? ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை. நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை. ஏன்? 

இங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை. முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது. மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது. அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது



"பயத்தோடு வாழப் பழகிக் கொள்"  புதிய மின் நூலை தரவிறக்கம் செய்ய

Wednesday, December 10, 2014

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள், நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக “பயத்தோடு வாழ பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன். 

ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன். அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும். 

சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும்.


நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம். 

எத்தனை சமூகம் சார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம். இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம். 

"பயத்தோடு வாழப் பழகிக் கொள்" எனது ஐந்தாவது புதிய மின் நூலை இலவசமாக தரவிறக்கம் செய்ய சொடுக்க

Friday, December 05, 2014

பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்.

"சார் உங்க மாதிரி ஆட்களிடம் எங்கள மாதிரி ஆட்கள் வேலை செய்வதே பாவம் சார். இதற்கு மேலே நான் ஏதாவது பேசினால் ரொம்பச் சங்கடமாகப் போயிடும். எனக்குக் கணக்கு முடிச்சு குடுங்க. நான் போயிடுறேன்" 

ராஜாவுக்கும் எனக்கும் ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேர உரையாடல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. 

ராஜா என்பவன் பல விதங்களில் ராஜா தான். அகத்தியர் உயரத்தில் தான் இருப்பான். ஆனால் செயலாக்கத்தில் கம்பீரமானவன். மற்றவர்களை விட எதையும் தனித்தன்மையுடன் செய்யக் கூடியவன். அவனின் வயது இருபத்தி மூன்றே தவிர அகாயச் சூரன். காசு விசயத்தில் கெட்டி. அதே சமயத்தில் உழைப்பில் வீரன். தனக்குச் சேர வேண்டிய ஒரு ரூபாயைக்கூட அடுத்தவன் எடுக்க அனுமதிக்க மாட்டான். அதே சமயத்தில் அடுத்தவரின் ஒரு பைசாவை அபகரிக்க வேண்டும் என்று எண்ணத்தில் கூட நினைக்க மாட்டான். 

அவனிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டு நாம் நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம். ஆனால் அவன் எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் பெரிய பதவியில் இருந்தாலும் நேருக்கு நேராக நின்று கிழித்துத் தோரணம் கட்டி விட்டு தான் நகர்வான். நான் இருந்த நிறுவனத்தில் FINISHING DEPARTMENTல் ஒப்பந்தக்காரராக இருந்தான். 

இந்தத் துறையில் வந்த பிறகு தான் தைத்த ஆடைகள் தரம் வாரியக பிரிக்கப்பட்டு முழு வடிவம் பெறுகின்றது. வெளிநாட்டுக்காரர்கள் எதிர்பார்க்கும் ஆயத்த ஆடைகள் அழகு வடிவம் பெறுகின்றது. ராஜாவுக்குக் கீழே ஒரு படை பட்டாளம் உண்டு. இவனுக்குக் கீழே பணிபுரிபவர்கள் அதனைத் தேய்த்து, பாலிபேக்கிங் செய்து ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். 



+++++++++++++++++++++


வருகின்ற 09 டிசம்பர் அன்று எனது ஐந்தாவது மின் நூல் வெளியாகின்றது. முதல் வருடம் மிகச் சிறப்பாக மின் நூல் தளத்தை வழிநடத்திய இளையர் பட்டாளத்திற்கு இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன்.

மின நூல் தளத்திற்கு தங்களை அர்ப்பணித்துள்ள இளையர் குழுவினர் பற்றி அறிந்து கொள்ள (அடுத்த பதிவில்)


இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள் 

1. ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்

ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர்.  


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26,924

வெளியிட்ட தினம் 19.12.2013

2. வெள்ளை அடிமைகள்

இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர் 


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458

வெளியிட்ட தினம் 29.01.2014

3. தமிழர் தேசம்

தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி, நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர்.


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7,631

வெளியிட்ட தினம் 28.02.2014

4. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர்.  மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன். 

முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன்.


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928

வெளியிட்ட தினம் 27.03.2014



Friday, November 28, 2014

பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்

அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும். இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை. இவரை மேலும் இங்கே வைத்திருந்தால் இவரை வைத்து பலரும் பரமபதம் விளையாட பலரும் காத்திருப்பார்கள்.

ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களும் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் முதலாளி வர்க்கம் நம் செயல்பாடுகளை உளவு பார்க்க அவர்களுக்கென்று படை பட்டாளங்களை ஒவ்வொரு இடத்திலும் வைத்திருப்பார்கள்.

ஆடு, புலி ஆட்டம் போலத்தான் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். எவர் நம்மை வெட்டுவார்கள்? எந்த இடத்தில் நாம் வெட்டப்படுவோம்? என்று காத்திருப்பதை விட வெட்டக் காத்திருப்பவர்களை நாம் வெட்டி விட்டு நகர்ந்து முன்னேற வேண்டும். இறைச்சிக் கடையில் நின்று கொண்டு கருணை, காருண்யத்தைப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது தொழில் வாழ்க்கை. அதுவும் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழில். கோடிகள் புழங்கும் எந்தத் தொழிலும் மேம்பட்ட பதவியில் இருப்பவர்களும், முதலாளிகளும் அடிப்படையில் கேடிகளாகத் தான் இருப்பார்கள். சிலர் அதனை வெளியே தெரியாதாவாறு மறைத்து வாழ கற்று இருப்பார்கள். வெளியே முலாம் பூசம்பபட்ட தங்க நகை போலத்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் அவரவருக்குண்டான தர்மநியாயங்கள் தான் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை நகர்த்தும். எண்ணங்கள் முழுக்க வக்கிரத்தை சுமந்தவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லாப் பெண்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகத்தான் தெரிவார்கள். வயது வித்தியாசமோ, உறவு சார்ந்த உறுத்தல்களோ தோன்றாது. பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களுக்கப் பிணத்தைக் கூட விலை பேசத்தான் தோன்றும்.


ஒரு முதலாளி யோக்கியவானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கோடிக்கணக்கான முதலீடு போட்டவனின் வலியென்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனின் இழப்புகளை எவரும் பங்கு போட்டுக் கொள்ள வர மாட்டார்கள். 

ஆனால் குறைந்த பட்சம் நாணயமானவனாகத்தான் வாழ்ந்தாக வேண்டிய அவசியமுண்டு. நா நயம் என்பது ஒரு கட்டம் வரைக்கும் நகர்த்தும். வாழ்க்கை முழுக்க வாயால் கப்பல் ஓட்டுபவர்களுக்குக் கலங்கரை விளக்கம் என்பது கடைசி வரைக்கும் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடும். 


Saturday, November 22, 2014

அவள் பெயர் ரம்யா

எந்தத்துறை என்றாலும் பயிற்சி முக்கியம். இங்கே எல்லோரிடமும் அளவிட முடியாத ஏதோவொரு திறமை இருக்கக்தான் செய்கின்றது. சிலரால் அதனை இயல்பான பழக்க வழக்கத்தில் வெளிக்கொண்டுவர முடிகின்றது. பலருக்கும் தன்னிடம் என்ன திறமை உள்ளது? என்பதை அறியாமலேயே "கண்டதே காட்சி வாழ்வதே வாழ்க்கை" என்று வாழ்ந்து முடித்து இறந்து போய் விடுகின்றார்கள். 

வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் என்பது தனக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுகின்றார்கள். சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர். எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. என் குடும்பம் சரியில்லை. 

என்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை. என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று எத்தனையோ காரணங்களைத் தங்களின் தோல்விக்காகச் சுட்டிக் காட்டுகின்றார்களோ ஒழிய தன் திறமை தன் உழைப்பு குறித்து எவரும் யோசிப்பதே இல்லை. 

சிலருக்கு கிடைக்கக்கூடிய அறிமுகம் தான் அவர்களின் வாழ்க்கையின் புதிய பாதையை உருவாக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. அதன் பிறகே மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகின்றது. இந்தப் பெண்ணை முதல் முறையாகச் சந்தித்த போது இவர் குறித்து எவ்வித தனிப்பட்ட அபிப்ராயங்கள் எதுவும் எனக்கில்லை. ஆனால் ஒருவரிடமிருக்கும் நிறை குறைகளை அலசி அவரை எந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். இவரை மட்டுமல்ல இவரைப் போன்ற உள்ளே பணிபுரிந்த ஒவ்வொருவர் மேல் தனிக்கவனம் செலுத்தினேன். 

இவரின் தனிப்பட்ட ஆர்வமும் உழைப்பும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. என்னருகே கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல.  

அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. 

சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல. அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும். 

பெருமையும் சிறுமையும் கடைசியில் சம்மந்தப்பட்டவர்களுக்கே வந்து சேர்கின்றது. பெரிய நிறுவனங்களில் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் மூளையாகப் பலரும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே அவர் சரியான நிர்வாகி என்ற பெயர் எடுக்க முடிகின்றது. எனக்கும் அப்பேற்பட்ட பெருமை பல இடங்களில் கிடைத்தது. 

அப்படிக் கிடைக்கக் காரணம் இது போன்ற பெண்களும் ஆண்களும் பலவிதங்களில் உதவியுள்ளனர். என் வெறுப்பு விருப்புகளைப் புரிந்து நடந்துள்ளனர். பல பலவீனங்களை அனுசரித்து நடந்துள்ளனர். நான் விரும்பிய ஒழுக்க விதிகளை அலுவலகத்திற்குள் கடைபிடித்துள்ளனர். அவர்கள் கேட்ட வசதிகளை விருப்பங்களை மறுக்காமல் செய்து கொடுத்துள்ளேன். 




Friday, November 14, 2014

எந்திர மனிதர்கள்

ஆய்த்த ஆடைத் துறை மட்டுமல்ல நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் அலுவலக நடைமுறைகள் என்பதும் தொழிற்சாலை என்பதும் முற்றிலும் வேறாக இருக்கும். வெவ்வேறு முகங்கள் கொண்ட இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தேன். அதிகப் படியான மனஉளைச்சல் இருந்தது. ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது. கற்றதன் வழியே பல பாடங்கள் புரியத் தொடங்கியது. 

பணம் படைத்தவர்களின் திருவிளையாடல் ஒரு பக்கம். அன்றாடங் காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கை ஒரு பக்கம். இரண்டும் வெவ்வேறு கோணங்கள். ஒன்றில் மனிதாபிமானம் என்பதே இருக்காது. மற்றதில் மனிதாபிமானம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும். ஒன்றில் அந்தஸ்து என்பதற்காக எவ்வித கேவலத்தைப் பொருட்படுத்த தேவையிருக்காது. மற்றொன்றில் மானம் பெரிதென வாழும் கூட்டமாக இருக்கும்.  

இந்த இரண்டு பிரிவைப் போல அலுவலக பணியாளர்களும் தொழிற் சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உலகமும் வெவ்வேறாக இருக்கும்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பேசப் பழக நிறைய வாய்ப்புண்டு. பல சமயம் சிந்திக்க நேரம் இருப்பதுண்டு. ஆனால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இயந்திரங்களுடன் தான் தினந்தோறும் உறவாட வேண்டும். மனிதத் தொடர்பு என்பது  குறுகிய நேரம் மட்டுமே. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தாக வேண்டும். தங்களது எண்ணம், ஏக்கம், சோகம் அனைத்தையும் உள்ளுக்குள்ளே பூட்டி வைத்திருக்கப் பழகியிருக்க வேண்டும்.  

எந்தவொரு தனியார் நிர்வாகத்திலும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் குறைந்த அளவில் தான் வாசித்திருக்க முடியும்.  ஆனால் செய்தித்தாளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அன்றாட செய்தியாகவே வந்து கொண்டிருக்கும். காரணம் தொழிலாளர்களின் மன உளைச்சல் என்பது எழுத்தில் எழுதி புரிய வைக்க முடியாத ஒன்று.  திடீரென வெடித்துக் கிளம்பும் போது அது அடங்க நேரம் காலமாகும். 




Saturday, November 08, 2014

பணக்காரன் சொல்வதெல்லாம் தத்துவமே

கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களுடன் நாம் பழகும் போது பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும். எந்த நொடியிலும் நாம் நம்மை இழந்து விடக்கூடாது. எந்தச் சமயத்திலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் தாக்க அது மன வலிமையைக் குறைப்பதோடு அதன் தாக்கம் உடலில் பரவும் போது நாம் சேர்த்து வைத்துள்ள மனோபலத்தைப் பாதியாகக் குறைத்து விடக்கூடிய ஆபத்துள்ளது. 

நாம் வாழும் சமூகம் என்பது நாடகதாரிகளால் சூழப்பட்டது. கள்ளத்தனம் தான் தங்கள் கொள்கை என்ற எண்ணம் கொண்ட பெரும்பான்மையினர் மத்தியில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். 

இது சரி, இது தவறு என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாகத் தான் வாழ்கின்றார்கள். இவற்றை எந்தப் புத்தக அறிவும் நமக்குத் தந்து விடாது. மனிதர்களுடன் பழகும் போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நாம் தான் ஒவ்வொரு சமயத்திலும் புரிந்து கொள்ள வேண்டும். 

சிரிப்பு மற்றும் அழுகை இந்த இரண்டும் மனிதனுக்கும் மட்டுமே உரிய சிறப்பம்சம். விலங்குகளில் அதிகப் பாரம் சுமக்கும் போது அவைகள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை அவற்றின் செயல்பாடுகளில் இருந்து கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும். சில சமயம் அவற்றின் கண்ணீர் நமக்கு அடையாளம் காட்டும்.  

அடக்க முடியாத ஆற்றாமையில் மதம் பிடிக்கும் யானைகளின் செயல்பாடுகளை அதன் பிளிறல் சப்தத்தில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஆனால் விலங்குகளின் மகிழ்ச்சியென்பது அதன் சப்த ஒலிகளில் மட்டுமே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். வினோத மொழியில் விதவிதமான சந்தோஷங்களை அவைகள் வெளிக்காட்டிக் கொள்கின்றன. பசி இல்லா மிருகம் தன் எதிரே வரும் எந்த விலங்கினங்களையும் எந்த நிலையிலும் தொந்தரவு செய்வதில்லை. விலங்குகளின் காமப்பசிக்கு குறிப்பிட்ட பருவம் மட்டுமே. ஆனால் மனித இனத்தில் மட்டும் இவை எதுவுமே செல்லுபடியாகாத பல வினோதங்கள் உண்டு. 

கிராம வாழ்க்கையில் நம் வெளிப்படைத் தன்மை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்பட்டு விடும். பரஸ்பரம் அதற்குரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும் போது அது இயல்பான பழக்கமாகவே இருக்கும். அதுவே அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணமாக மாறிவிடும். ஆனால் நகர்புற வாழ்க்கையில் பல சமயம் நாடக நடிகர் போலவே ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது.


Friday, October 31, 2014

வண்ணங்களே வாழ்க்கை

என்ன வேண்டுமானாலும் பெறலாம். எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது. மொத்தத்தில் முதலீடு செய்யப் பணம் இருந்தால் போதும். உலகளாவிய வணிக ஒப்பந்தத்தம் உருவாக்கிய செயல்பாட்டின் காரணமாக எந்த உயர் ரகத் தொழில் நுட்பத்தையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருப்பூருக்குள் கொண்டு வந்து விடலாம். 

அந்நிய முதலீடு என்பது நம் நாட்டிற்குத் தேவையில்லை என்ற கருத்து முழுமையாகச் செல்லுபடியாகாத ஒரே ஊர் என்றால் அது திருப்பூர் மட்டுமே. காரணம் இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள பல வித நவீன ரக எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே. ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரைக்கும் பலதரப்பட்ட எந்திரங்கள் தான் இங்கே ஆட்சி செய்கின்றது. 

ஆனால் வருடந்தோறும் லட்சணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இங்கே எந்தக் கண்டுபிடிப்பும் உருவாக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளின் தொடக்கம் கூட இங்கே உருவாக்கப் படவில்லை. 

அது குறித்து இங்கே எந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவும் இல்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். நாம் 66 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் யாருக்கோ அடிமையாகத் தான் இருந்து அடக்கமாக வாழ்ந்து பழகியிருந்தோம். 


இன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை. 

சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றோம். ஆனால் நம்மை ஏதோவொரு சர்வதேச நிறுவனம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலே பணம் துரத்தும் பறவையாக மாறி நாமும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். 





Friday, October 24, 2014

வேலையைக்காதலி

நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும். நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்கு சோர்வு வருவதில்லை. 

அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது  நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும். அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும். அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது. 

உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது.  அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். வேலையில்லாதவர்களுக்கும், வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போல செயல்படும். பழிவாங்குதல், கடமைகளில் இருந்து தப்பித்தல், காரணம் சொல்லுதல், காரணங்களை தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கி தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும்.  


ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும். 

நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது.  இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது. அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது. ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன். அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். 



Saturday, October 18, 2014

கொள்ளையடிப்பது தனிக்கலை

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. அதற்கு மனதை தயார் படுத்தியிருக்க வேண்டும். சவால்களோ? சங்கடங்களோ எதிர் கொள்ளத் தெரிய வேண்டும்? நாம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று அங்கலாய்ப்பட்டுக் கொள்ளாமல் புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். 

இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள். 

வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மிகப் பெரிய பலவீனமே பற்றாக்குறை பட்ஜெட் தான். இதன் காரணமாகத்தான் இங்கே உரிமைக்கான எந்தப் பெரிய போராட்டமும் நிகழ்வதில்லை. நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள். ஒரு நாள் பொழுது என்பதைத் தங்கள் பொருளாதாரம் சார்ந்து சிந்திப்பதால் வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. 

இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது. சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும். அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களில் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை.




Friday, October 10, 2014

காற்றில் பறக்கும் கௌரவம்

காலம் செய்யும் கோலத்தை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. 

'என்னை மிஞ்சியவர்கள் இந்த உலகில் யாருமில்லை' என்று கருதிய மாமன்னர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கைத் தடங்களின் அடையாளங்களில் எதுவும் மிஞ்சவில்லை. சம்மந்தப்பட்டவர்களின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்களா? எப்படி இறந்தார்கள்? என்பது கூட அறியாத அளவுக்குக் கொடுமையான காலம் அனைத்தையும் கரைத்து விட்டது. 

பதவியைப் போதையைப் போல ரசித்து ருசித்தவர்களின் அந்திம வாழ்க்கை சொல்லும் கதை அனைத்தும் அந்தோ பரிதாபம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இனி மிச்சம் ஏதும் இருக்கக்கூடாது என்று உச்சமாய் அதிகாரத்தைச் சுவைத்து வாழ்ந்த அதிகாரவரக்கத்தினர் பலரின் வயோதிக வாழ்க்கை என்பது அனாதை விடுதியில் தான் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. 

சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட நிலைகளைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழில் நிறுவனங்களின் கதையும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாகச் சொல்கின்றது. 

பெயர்ப் பொருத்தம் பார்த்து வைத்த நிறுவனங்கள், ஜாதகத்தில் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாஸ்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் போன்ற சிறப்பம்சம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை தலைமுறைகள் தொடர்கின்றது? 



Sunday, October 05, 2014

தமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா


தமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது.  வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிக்கூடம் எட்டாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடையடைப்பு, உண்ணாவிரதம், மௌன போராட்டம், பால்குடம் ஏந்தி பிரார்த்தனை என்று எல்லா பக்கங்களிலும் செலவு பிடிக்கும் சமாச்சாரமாக நடந்து கொண்டேயிருகின்றது.

யாரோ சிலர் இத்தனை செலவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார் என்றால் வந்த வருமானத்திற்கு அல்லது வரப் போகின்ற வருமானத்திற்காக தங்கள் விசுவாசத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம். கண்ணீர் விடும் எவரும் எனக்கு பதவி வேண்டாம் என்று ஒதுங்கவில்லை.

மொத்தத்தில் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக பார்க்கும் அண்டை மாநிலங்களில் கூட நடத்தப்படும் கூத்துக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது முடங்கிப் போன தமிழ்நாட்டு நிர்வாகம் என்பது இப்போது இல்லாமலேயே போய்விட்டது.  ஒரு வேளை கலைஞருக்கு இது போல ஒரு சம்பவம் நடந்து இருக்கும் பட்சத்தில் இந்நேரம் திமுகவில் அடிதடி, வெட்டுக்குத்து என்று தொடங்கி இந்நேரம் பல கொலைகள் கூட விழுந்துருக்கும்.  பதவியை கைப்பற்றும் போராட்டத்தில் பல தலைகள் உருண்டிருக்கும்.

ஆனால் அதிமுகவில் மயான அமைதியும் இன்னமும் பயத்துடன் தான் பம்முகின்றார்கள்.  இது தான் ஜெயலலிதாவின் வெற்றிக்குக் காரணம். இதுவே தான் இந்த தோல்வியைக் கொண்டு வந்து நிறுத்தியதற்கும் காரணமாகவும் உள்ளது.

••••••••••••

இந்தியாவில் இதைப் போல சில சமயம் நடந்து விடுகின்றது. யாரோ ஒரு தனி நபர் மூலம் பல கோடி மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் ஏதோவொன்று நடந்து விடுகின்றது. 

27 செப்டம்பர் 2014. பரப்பன அக்ரஹாரா 

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த பெயரும் இடமும் இந்தியாவில் உள்ள மக்கள் மனதில் பதிந்ததோ இல்லையோ இங்கே உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் பீதியைக் கிளப்பியிருக்கும். இனிமேல் மிக மிக கவனமாக திருட வேண்டும் என்று முயற்சிப்பார்கள்.

சொடுக்கி படிக்க 


•••••••••

ஜெயலலிதாவுக்கென்று ஒரு தனியான கொள்கையுண்டு.

"இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலையுண்டு".

அவர் ஆட்சிக்காலம் முழுக்க இந்த விலைப்பட்டியலில் சிக்காதவர்கள் யாருமே இல்லை என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு தனி நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

"உங்கள் பணத்ததால் என்னை விலைக்கு வாங்க முடியாது" என்று நிரூபித்தவர்.

••••••••••

ஜெயலலிதாவின் வாழ்க்கை எங்கு தொடங்கியதோ அதே மாநிலத்தில் (அரசியல்) முடிவடைந்து விட்டது. அடுத்த பத்து வருடங்கள் என்பது அரசியலில் அனாதை ஆனதற்குச் சமம்.  இதற்குப் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை விட இவர் உருவாக்கிக் கொண்டதே அதிகம். அடிமைக் கூட்டத்தை வளர்த்து வந்தவர் தனக்கு ஆலோசனை சொல்லும் கூட்டத்தை வளர்க்காமல் இருந்தது யாருடைய குற்றம்?

ஆனால் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் இவருக்கு உண்டான அவப்பெயர் மட்டும் என்றுமே மாறாது. மறையாது. இவரின் உழைப்பு, திறமைக்கு அப்பாற்பட்டு கிடைத்த அனைத்து விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன் தனிப்பட்ட குணாதிசியத்தால் இன்று கொட்டிக் கவிழ்த்து விட்டார். 

"அதிகாரம் என்பது உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தும். ஆனால் எச்சமாய் மாற்றி விடும்" என்பதை இப்போது கிடைத்த தனிமையில் உணர்வாரா?

•••••••••••

ஒவ்வொரு முறையும் நான் ஒரு தொடர் எழுதத் தொடங்கும் போதும், அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது அரசியலில் ஏற்படும் திடீர் மாற்றங்களைப் பற்றி எழுத முடியாமல் போய்விடும்.   

கடந்த பத்து வாரங்களாக செய்தித்தாள்கள், வார இதழ்கள் எதையும் வாசிக்க முடியாத நெருக்கடியான பணிச்சூழல் இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பணியான ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளுக்காக குறிப்பிட்ட நாளை ஒதுக்கி என்னை நானே  ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது.  

கடந்த நாலைந்து நாட்களாக ஜெயலலிதா குறித்த விசயங்களை பதிவு செய்ய முடியாமல் போய் விட்டதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

இந்த சமயத்தில் இதை பதிவாக மாற்றி வைக்கவிட்டால் இது குறித்து தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இதன் முழுமையான விபரங்கள் தெரியாமல் போய் விடக்கூடும் என்பதற்காக இந்தப் பதிவு.

தற்போதைய சூழ்நிலையில் ஜெ. வுக்கு யார் கடிதம் எழுதினாலும் அவர் இருக்கும் பரப்பன அக்கிரஹாரத்திற்குள் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று விடும். 

படிக்க சொடுக்க

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்.

*************

அவர் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருந்த அதிகப்படியான வசதிகள், எடுபிடி, ஏவலாளி, அதிகாரம், பந்தா, ஆணவம், அகங்காரம், பிடிவாதம்,   தான் தோன்றித்தனமான செயல்பாடுகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறையின்மை, சக மனிதர்களை உயிரற்ற ஜடமாய் பார்க்கும் மனோபாவம், போன்ற அனைத்துக்கும் மொத்தமாய் சேர்த்து ஒரு நபர் 1136 பக்க தீர்ப்பின் வாயிலாக படிப்பினையைத் தந்துள்ளார்.  


**********

ஜெயலலிதா கடந்த கால வாழ்க்கையில் பெற்ற "மனோரீதியான தாக்கதில்" இருந்து வெளி வராமல் வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருந்தவர், இது ஆணாதிக்க சமூகம். இதிலும் வென்று போராடி மேலே வந்தவர். கலைஞர் போன்ற ஆட்களை தமிழ்நாட்டில் சமாளித்து மேலே வருவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால் அனைத்தையும் வென்று வந்தவர் மனிதர்களை மதிக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதும் அவரின் தனிப்பட்ட கொள்கையாகவே இருந்தது.

சக மனிதர்களை விட வேள்வி, யாகம், தெய்வம், சாஸ்திரங்கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவருக்கு அவர் வணங்கிய தெய்வங்களே  இன்று சிறப்பான முடிவைத் தந்துள்ளது.

இப்போது நீதி உருவாக்கிய வேலி தான் "காலம்" அவருக்குத் தந்த பரிசாக மாறியுள்ளது. 

•••••••••••••••••••

இது குறித்து நான் படித்த, கேட்ட, அறிந்து கொண்ட தகவல்களை நாலைந்து பதிவுகளாக எழுத முடியும். நீங்கள் படிக்கும் செய்திகள் 90 சதவிகிதம் அவரவருக்கு தோன்றிய வகையில் கதை, கற்பனையுடன் கலந்து கட்டி ஆடுகின்றார்கள். சிறைவிதிகளை உடைக்கவும் முடிகின்றது. ஒப்பந்தப்படி உல்லாசமாக இருக்கவும் முடிகின்றது.

ஆனால் தமிழர்கள் காலந்தோறும் யாரோ ஒருவரிடம் அடிமையாக இருப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டாலும் இன்று வரையிலும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் என்னை விட வேறு திறமையான அடிமையை வேறெங்கும் நீங்கள் கண்டுவிட முடியாது என்பதற்கு உதாரணமாக அதிமுக தொண்டர் படையினர் என்ற பெயரில் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தங்களுக்குத் தெரிந்த வகையில் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் தங்கள் கலைத்திறைமையை தமிழ்நாடு தவிர கர்நாடகா வரைக்கும் ப்ளக்ஸ் பேனர் மூலம் வெளிக் காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.  

இது குறித்து கடந்த ஒரு வாரமாக தமிழ் இணையத்தில் நான் கண்ட ரசித்த படங்களில் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன். 

படிக்க சொடுக்க


இந்த பதிவில் உள்ள மொத்த இணைப்புகளையும் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள். அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சில புரிதல்கள் உங்களுக்கு உருவாகக்கூடும்.  

ஆனால் கடைசியாக சில வார்த்தைகள்,

இணையப் பெருவெளியில் கலைஞர் என்றாலே கபடி விளையாடுவது போல விளையாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  அந்த புகழை தற்பொழுது ஜெயலலிதா எடுத்துக் கொண்டார்.  முதல் முறையாக ஜெ. சம்மந்தப்பட்ட அனைத்து கண்ணீர் காட்சியையும் படிப்பவர்கள் பரிகாசம் செய்வது ஜெ. அரசியல் வாழ்க்கையில் இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். 

ஈழத்தமிழர்கள் பிரச்சனையாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரி எல்லாமே தனக்கு உதவும் விளம்பர சுவரொட்டி போல பாவித்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு கடைசியில் பலதரப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் தான் இன்று பரிசாக கிடைத்துள்ளது. வெளிச்சத்தில் வாழ்ந்து, வெளிச்சத்தையே மட்டும் விரும்பியவருக்கு இன்று வெளியுலகம் தொடர்பு இல்லாத இடமே பரிசாக கிடைத்துள்ளது.

ஆனால் நான் திருப்பூருக்குள் சந்தித்து உரையாடிய சலூன் கடை முதல் பல தரப்பட்ட தொழிலாளர்கள், அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் வரைக்கும் ஜெயலலிதா மேல் கொண்டுள்ள அபிமானம் இன்று வரைக்கும் மாறவில்லை என்பது முதல் ஆச்சரியம்.  ஒரு அரசியல் தலைவரின் தோல்வியின் போது அடுத்த நபர் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும்.  இது தான் பொதுவான விதி.  ஆனால் மொத்த தமிழ்நாட்டு அரசியலிலும் வெற்றிடம் தான் நிலவுகின்றது.  இது தமிழ்நாட்டு அரசியலில் இதுவரையிலும் நிகழாத ஆச்சரியமான நிகழ்வாகும்.

ஜெ. வின் சிறைத்தண்டனை குறித்து நான் சந்தித்து உரையாடிய ஒவ்வொருவரும்  அவரவர் பாணியில் வெவ்வேறு விதமாகச் சொன்னாலும் மொத்தமாக "அவர் செய்த தவறுக்கு மக்கள் ஏற்கனவே தண்டனை கொடுத்து விட்டார்கள்" என்று தான் முடிக்கின்றார்கள்.  தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலும் தங்களது அடிப்படை அரசியல் அறிவில் எந்தப் பெரிதான மாற்றங்களையும் உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதே கண்கூடு.  

தங்களது அடிப்படை வாழ்வாதாரம் சரியாக இருந்தால் போதும் என்கிற நிலையில் தான் இருக்கின்றார்கள்.  மேல் மட்ட ஊழல், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எதிர்காலம் குறித்த அக்கறை போன்ற எதிலும் அவர்களால் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு இருக்கின்றார்கள்.  இன்னும் கொஞ்சம் அதிகமாக இது குறித்து கேட்டால் "இங்கு யார் தான் யோக்கியவான்?" என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து நம்மை நிறுத்துகின்றார்கள்

இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைகளாலும் மனதார இந்தத் தீர்ப்பை வரவேற்க முடியாத சூழ்நிலை தான் இங்கே நிலவுகின்றது. 

ஒவ்வொருவர் முதுகிலும் ஓரு வண்டி அழுக்கு இருப்பதால் அடுத்தவர் அழுக்கு குறித்து பேச முடியாத நிலையில் இருக்கின்றார்கள். 

கலைஞரால் கூட தன் சொந்த வார்த்தைகளில் இந்த தீர்ப்பு குறித்து சொல்ல முடியாத அளவுக்குத் தான் அவரின் நம்பகத்தன்மை உள்ளது. 

இந்த அளவுக்குத்தான்  தமிழ்நாட்டில் அரசியல் உள்ளது.  

சரி விடுங்க. 

இதுவும் கடந்து போகும்.  

கீழே உள்ள பாசக்கார பயபுள்ளைங்க கலைத்திறமையை ரசித்து விடுங்க. 


















தொடர்புடைய பதிவுகள்

காசு, பணம், மணி, துட்டு.

பிரபல்யம் எனப்படுவது யாதெனில்

பிரபல்யங்களின் சாவு

சாராயத்தமிழன்

சொம்புத்தூக்கிகள்


அரசியல் விரும்பாதவர்களுக்கு (மட்டும்)

திருப்பூரில் உள்ள பின்னலாடைத் தொழில் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சார்ந்த சமூக வாழ்க்கையை அனுபவங்களின் வாயிலாக அலசும் தொடர் இது.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

Saturday, October 04, 2014

நேர்மையே உன் விலை என்ன?

மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நள்ளிரவு வரைக்கும் அலைபேசியில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டேயிருந்தது. புதிய எண்கள். புதிய குரல்கள். ஆனால் சொல்லி வைத்தாற் போல் வசைமாறி பொழிந்து தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். 

நீங்கள் மிரட்டப்பட்டவரா? அல்லது மிரட்டியவரா? இரண்டு இடத்திலும் கொஞ்சம் தான் வித்தியாயம் இருக்கும். 


ஒவ்வொரு இடத்திலும் மிரட்டுபவரை கவனித்துப் பாருங்கள். மனதளவில் கோழையாக, தன் உழைப்பை நம்பாமல், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு போட்டி போட முடியாமல், விரும்பாமல், போட்டிக்கான தன் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அத்தனை பேர்களும் மிரட்டும் நபர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் திறமைசாலிகள் அத்தனை பேர்களும் எதிரிகளாகத் தான் தெரிவார்கள். 

இது தான் சமூக நியதியாக உள்ளது. 

வாழ்க்கையென்பது "இப்படித்தான் வாழ வேண்டும்" என்று கட்டுப்பெட்டி தனத்திற்குள் உங்களைப் பொறுத்தியிருந்தால் இது போன்ற சமயங்களில் உங்கள் நிலைமை  திண்டாட்டமாகத்தான் இருக்கும். அல்லது "என் வாழ்க்கை இப்படித்தான். ஆனால் 'எதையும் தாங்கும் இதயம்' எனக்குண்டு" என்பவராயின் இன்னும் கொஞ்சம் மேலே வந்து படபடப்பு குறைந்து பக்குவமாக அணுக முடியும். 

இதற்கு அடுத்த நிலை ஒன்றுண்டு. எப்பேற்பட்ட மோசமான குணாதிசியங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச் சூழ்நிலையிலும் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருத்தல். நான் பலபடிகளைக் கடந்து இந்த நிலைக்குத் தான் இந்தச் சமயத்தில் வந்து சேர்ந்து இருந்தேன். 




Friday, September 26, 2014

பாறைகளைப் பிளக்கும் விதைகள்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......... 

அத்தியாயம் 9 

பாறைகளைப் பிளக்கும் விதைகள் 

"உனக்குத் தேவையில்லாத விசயங்களில் தலையிடாதே? முதலாளி இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்ததும் நீ என்ன பெரிய ஆள்ன்னு நினைப்போ? உனக்கு என்ன வேலை கொடுத்து இருக்கின்றார்களோ அதை மட்டும் பார்? 

நான் இங்கே பத்து வருசமா இருக்கேன். உன்னை மாதிரி மாதம் ஐந்து பேர்கள் வந்து போய்க் கொண்டு இருக்கானுங்க. நீ இங்கே எத்தனை நாளைக்குத் தாக்கு பிடித்து நிற்பாய்? என்று எனக்குத் தெரியும்? நோண்டற வேலையை விட்டு விடு?புரியுதா?" என்றார். 


மரியாதைக்காக என்றார் என்று எழுதி இருக்கின்றேனே தவிர மிரட்டினான் என்று தான் எழுத வேண்டும். காரணம் எங்கள் இருவருக்கும் நடந்த அரைமணி நேர வாக்குவாதத்தின் இறுதியில் இப்படியான மிரட்டலை அவன் என்னிடம் சொன்னான். 

முதல் முதலாக அவனுடன் அறிமுகமான நாள் என்பது என் வாழ்வின் மிக முக்கியமான நாளாகும். காரணம் என் பொறுமையின் எல்லை என்பதை அன்று தான் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான் அன்று அவனிடம் அமைதியான முறையில் தான் எதிர் கொண்டேன். 'நம் மீது தவறேதும் இல்லாத போது நாம் ஏன் கோபப்பட வேண்டும்?' என்ற என் கொள்கையின் காரணமாக அவன் தொடர்ந்து என்னைக் கோபப்படுத்திக் கொண்டே இருந்த போதிலும் சிரித்துக் கொண்டே நிற்க அவனுக்கு மேலும் ஆத்திரம் அதிகமாகி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தான். 

"கடமையே கண்" போல நான் தொடர்ந்து கேள்வியாகக் கேட்க அவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினான். 

அவனைச் சுற்றிலும் ஏராளமான பேர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். மேலும் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அத்தனை பேர்களுக்கும் அவன் தேவதூதனாகத் தெரிந்தான். அங்கே வந்திருந்த சிலர் அவன் எப்போது தங்களிடம் பேசுவான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பவ்யமாக நின்ற கொண்டிருந்தார்கள். 

ஆனால் அவன் என் பார்வையில் அக்மார்க் பொறுக்கியாகத் தெரிந்தான். அவன் இருந்த பதவியின் காரணமாக அவனுக்கு அங்கே ஒரு ராஜாங்கம் அமைந்து இருந்தது. 

அரசியல்வாதிகளுக்கும் மத்திய தணிக்கை துறைக்கும் எப்போதும் ஏழரை தான் என்பதை நாம் பத்திரிக்கையின் படித்துருப்போம் தானே? 


என்னையும் அப்படித்தான் அவன் பார்த்தான். நேற்று வந்தவன் இவன் ஏன் நம்மைக் கேள்வி கேட்க வேண்டும்? என்ற எண்ணம் தான் அவன் மனதில் மேலோங்கி நின்றது. நான் கேட்ட ஆவணங்களை அவனால் கொடுக்க வாய்ப்பிருந்த போதும் அதைத் தவிர்க்கவே முயற்சித்தான். இது குறித்து நான் கேட்ட போதெல்லாம் ஏளனப்படுத்தினான். 

அவன் அங்கே அமர்ந்திருந்த விதமே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. தன்னுடைய கனத்த உருவத்தைக் கஷ்டப்பட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் திணித்து அமர்ந்து இருந்தான். அவனைச் சுற்றி ஏராளமான ஜால்ரா கோஷ்டிகள் இருந்தது. அவன் பேச்சை நிறுத்தும் போது அவர்களும் கூடவே சேர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர். 


Saturday, September 20, 2014

பலி கொடுத்து விடு!


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்...... எட்டாவது அத்தியாயம்.

பலி கொடுத்து விடு!

ஒவ்வொரு துறையிலும் மாடசாமிகள் போல உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்த பிறவிகள் உண்டு. இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்க பிறருக்காகவே தங்களை அர்ப்பணித்து விட்டு தனக்கென்று எதையும் பார்த்துக் கொள்ள விரும்பாமல் மடிந்தும் போய்விடுகின்றார்கள். 

ஆனால் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் வரம் தரும் சாமியான முதலாளிகளைக் காலி செய்யக்கூடிய ஆசாமிகளைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.


இவனைப் பலிகொடுத்தால் தான் நாம் இனி பிழைக்க முடியும்? என்று யோசிக்க வைக்கக் கூடிய மோசமான நபர்களும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கத்தானே செய்கின்றார்கள்? திருப்பூர் போன்ற கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஊர்களில் ஒவ்வொரு இடத்திலும் திருட்டுத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தத்திற்குப் போடப்படுகின்ற விலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஐந்து சதவிகிதம் என்று தனியாகக் கட்டம் கட்டி வைத்து விடுவார்.

மேலும் படிக்க : http://goo.gl/socQC0


தொடரை முழுமையாக வாசிக்க

Friday, September 12, 2014

உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே!

பணம் தான் ஒவ்வொருவரையும் இயக்குகின்றது. பணம் தான் வாழ வேண்டும் என்ற ஆசையையும் வளர்க்கின்றது. பணம் இருந்தால் எல்லாமே கிடைத்து விடும் என்ற எண்ணத்திற்குச் சமூகம் மாறி வெகு நாளாகிவிட்டது. மற்ற அனைத்தும் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது.

தொழில் சமூகம் என்பதன் கொடூரமான உலகத்தில் ரசனைகள் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியாது. அப்படி ரசனையுடன் வாழ விரும்புவர்களைத் தயவு தாட்சண்மின்றி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடும் என்பதால் அவரவர் சுயபாதுகாப்பு கருதி முகமூடிகளைப் போட்டுக் கொண்டு தான் வாழ விரும்புகின்றார்கள்.
இவனுடன் ஏன் பேச வேண்டும்? இவன் எதற்கு நம்மை அழைக்கின்றான்? என்று அலைபேசியில் எண் வரும் பொழுதே பார்த்து எடுக்காமல் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும். "உனக்குப் பணம் என்பது தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு அது தான் முக்கியத் தேவையாக இருக்கின்றது. உன் எண்ணம் என்னிடம் வந்தாலும் அந்தப் பணம் வந்து என்னிடம் சேராது" என்று முகத்திற்கு நேராகச் சொன்னவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். 
பணம் என்பதை வாசலில் மாக்கோலம் போட்டு பந்தல் கட்டி வரவேற்க காத்திருப்பவர்கள் போலத்தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 


Saturday, September 06, 2014

என் பெயர் மாடசாமி.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..........

ஆறாவது அத்தியாயம்.

என் பெயர் மாடசாமி.

மாடசாமியை முதல்முறையாக சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது.  ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன். 

அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம். சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது. இது போன்ற நிறுவனங்களை திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள். 


இது போல திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது. இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும். இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  

மனித வாழ்க்கை மட்டுமல்ல.  தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதை கூர்மையாக கவனித்தால் தெரியும். ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக  இருக்கும். 



அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது. 



Saturday, August 30, 2014

யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு!

4. து.மு  -  து.பி

என் அறையை விட்டு வெளியே வந்தேன். 25000  சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக  இருந்தன.  பல எந்திரங்களில் தொழிலாளர்கள்  (TAILORS)இல்லை. 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  

தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த  உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது. எந்திரங்களின் சப்தமும்,  தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. 

STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது. 

மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன.  SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது. அங்கிருந்த சிலர் என்னை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர். 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை.

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது. அந்த நாட்டிற்கு ஒரு மன்னர், ஒரு மந்திரி, ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும். அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள். அவற்றை நாம் படிப்படியாக பார்க்கலாம்


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.......

அத்தியாயம் 5  யோசிக்காதே?  ஓடிக் கொண்டேயிரு!

அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.


தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர். 

ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே.  கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது.  

இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


Sunday, August 17, 2014

தொட்டுப் பார்த்து விடவும்

மரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை. இலைகள் அசைந்தபடியே தான் இருக்கும். இதுவே தான் எழுதிக் கொண்டிருப்பவர்களும் நடக்கும் போல. கடந்த மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை இங்கே அதன் சுருக்கத்தையும், வெளியான தளத்தையும் இங்கே தந்து விடுகின்றேன். வேலைப்பளூ, கடினமான பணிச்சூழல் என்று எத்தனை காரணங்கள் சொன்னாலும் எழுதிய பின்பு கிடைக்கும் அங்கீகாரம் நம் சோர்வை துரத்தி விடுகின்றது.  

அப்படித்தான் எழுத்துலகம் இன்று வரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது.  வாசிக்க விரும்புவர்கள் இணைப்பை தொட்டு பார்த்து விடவும்.

வலைத்தமிழில் தற்பொழுது  நான் தொடராக எழுதிக் கொண்டிருக்கும் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.............."


1. பஞ்சபாண்டவர்கள் 

“சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்” 

என் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன். 

இருபது வயதுக்குரிய இளமையும், அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம். அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன். 
“சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள். இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார். 

வாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை? என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா?” என்று சைகையால் கேட்டேன். அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே?“ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா?” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார். 

“பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம்.   தொடர்ந்து வாசிக்க


2. என் கேள்விக்கு என்ன பதில்?

"அத்துவானக்காடு. ஆள்நடமாட்டம் கூட அதிகமாக இருக்காது. அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களை நாம் பார்க்கும் போது சுடுகாடு போலவே தெரியும். அந்தப் பகுதியில் அந்த நிறுவனத்தின் கட்டிடம் மட்டும் தனியாகத் தெரியும். ஊருக்குள் இருந்த கட்டிடத்தில் இருந்து மாறி இரண்டு வருடத்திற்கு முன் தான் அங்கே மாறியிருக்கின்றார்கள். ஒரு இறக்குமதியாளர் (BUYER) எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளும் உள்ளே உள்ளது. அந்த நிறுவனத்தின் பக்கத்தில் வீடுகள் கூட எதுவும் கிடையாது. இப்போது தான் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றது. தூரத்தில் சாலையில் இருந்து நாம் பார்த்தால் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள வடிவம் மட்டும் தெரியும். அந்த கூரை வடிவம் பச்சை நிறத்தில் இருக்கும். காரணம் இயற்கைக்கு தொந்தரவு இல்லாத அமைப்பில் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அந்த நிறுவனத்தை அமைத்துள்ளனர்"

என் நண்பர் எனக்கு முதல்முறையாக பஞ்சபாண்டவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்த போது அந்த நிறுவனத்தைப் பற்றி அடையாளம் என்று இப்படித்தான் சொன்னார். அப்பொழுது திருப்பூருக்குள் இப்படிப்பட்ட நிறுவனமும் உள்ளதா? என்ற ஆச்சரியம் என் மனதில் உருவானது. 



3. பணமே பயம் போக்கும் மருந்து

"நீங்கள் தொழிலாளர்கள் நலன் குறித்துச் சிந்திப்பது இருக்கட்டும். முதலில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றதா?"

நான் இப்படியொரு கேள்வியைக் கேட்பேன் என்று அந்த அறையில் இருந்த பாஞ்ச் கூட்டம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வேலை தேடி வந்தவன் வேலை கொடுப்பவர்களிடமே தைரியமாகவே கேட்டு விட்ட போதிலும் எனக்குள் சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது.

அதையும் மீறியும் கேட்கக் காரணம் ஒரு நிறுவனத்தின் நிர்வாக முறைகள் பாராட்டத்தக்கதாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் என்பது பணம் மட்டுமே. காசு தான் கடவுள். பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. வாரச்சம்பளம், மாதச்சம்பளம், துணை மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு அந்தந்த சமயத்தில் கொடுக்க வேண்டியது என ஒவ்வொன்றும் சரியாக இல்லாவிட்டால் இரத்தம் இல்லாத உடம்பு போலக் களையிழந்து ஜீவனற்று இருக்கும். 

கோமா நிலையில் இருப்பவரை வைத்து என்ன செய்ய முடியும்? பலருக்கும் சுமையாகத்தான் தெரியும்.