Friday, September 26, 2014

பாறைகளைப் பிளக்கும் விதைகள்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......... 

அத்தியாயம் 9 

பாறைகளைப் பிளக்கும் விதைகள் 

"உனக்குத் தேவையில்லாத விசயங்களில் தலையிடாதே? முதலாளி இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்ததும் நீ என்ன பெரிய ஆள்ன்னு நினைப்போ? உனக்கு என்ன வேலை கொடுத்து இருக்கின்றார்களோ அதை மட்டும் பார்? 

நான் இங்கே பத்து வருசமா இருக்கேன். உன்னை மாதிரி மாதம் ஐந்து பேர்கள் வந்து போய்க் கொண்டு இருக்கானுங்க. நீ இங்கே எத்தனை நாளைக்குத் தாக்கு பிடித்து நிற்பாய்? என்று எனக்குத் தெரியும்? நோண்டற வேலையை விட்டு விடு?புரியுதா?" என்றார். 


மரியாதைக்காக என்றார் என்று எழுதி இருக்கின்றேனே தவிர மிரட்டினான் என்று தான் எழுத வேண்டும். காரணம் எங்கள் இருவருக்கும் நடந்த அரைமணி நேர வாக்குவாதத்தின் இறுதியில் இப்படியான மிரட்டலை அவன் என்னிடம் சொன்னான். 

முதல் முதலாக அவனுடன் அறிமுகமான நாள் என்பது என் வாழ்வின் மிக முக்கியமான நாளாகும். காரணம் என் பொறுமையின் எல்லை என்பதை அன்று தான் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான் அன்று அவனிடம் அமைதியான முறையில் தான் எதிர் கொண்டேன். 'நம் மீது தவறேதும் இல்லாத போது நாம் ஏன் கோபப்பட வேண்டும்?' என்ற என் கொள்கையின் காரணமாக அவன் தொடர்ந்து என்னைக் கோபப்படுத்திக் கொண்டே இருந்த போதிலும் சிரித்துக் கொண்டே நிற்க அவனுக்கு மேலும் ஆத்திரம் அதிகமாகி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தான். 

"கடமையே கண்" போல நான் தொடர்ந்து கேள்வியாகக் கேட்க அவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினான். 

அவனைச் சுற்றிலும் ஏராளமான பேர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். மேலும் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அத்தனை பேர்களுக்கும் அவன் தேவதூதனாகத் தெரிந்தான். அங்கே வந்திருந்த சிலர் அவன் எப்போது தங்களிடம் பேசுவான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பவ்யமாக நின்ற கொண்டிருந்தார்கள். 

ஆனால் அவன் என் பார்வையில் அக்மார்க் பொறுக்கியாகத் தெரிந்தான். அவன் இருந்த பதவியின் காரணமாக அவனுக்கு அங்கே ஒரு ராஜாங்கம் அமைந்து இருந்தது. 

அரசியல்வாதிகளுக்கும் மத்திய தணிக்கை துறைக்கும் எப்போதும் ஏழரை தான் என்பதை நாம் பத்திரிக்கையின் படித்துருப்போம் தானே? 


என்னையும் அப்படித்தான் அவன் பார்த்தான். நேற்று வந்தவன் இவன் ஏன் நம்மைக் கேள்வி கேட்க வேண்டும்? என்ற எண்ணம் தான் அவன் மனதில் மேலோங்கி நின்றது. நான் கேட்ட ஆவணங்களை அவனால் கொடுக்க வாய்ப்பிருந்த போதும் அதைத் தவிர்க்கவே முயற்சித்தான். இது குறித்து நான் கேட்ட போதெல்லாம் ஏளனப்படுத்தினான். 

அவன் அங்கே அமர்ந்திருந்த விதமே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. தன்னுடைய கனத்த உருவத்தைக் கஷ்டப்பட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் திணித்து அமர்ந்து இருந்தான். அவனைச் சுற்றி ஏராளமான ஜால்ரா கோஷ்டிகள் இருந்தது. அவன் பேச்சை நிறுத்தும் போது அவர்களும் கூடவே சேர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர். 


4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம்தான் என்பதை தங்களின் ஒவ்வொரு வரியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது ஐயா

'பரிவை' சே.குமார் said...

வாழ்க்கையில் நல்ல நிலை எப்போது.. எப்படி வரும் என்பதை நாம் அறிய முடியாது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்... அருமை அண்ணா... அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்க்கைப் போராட்டத்தை... கொலை மிரட்டல் வரை... திக்... திக்... அண்ணா....

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. தனியார் துறையில் இருக்கும் அவலம். நன்றி.