Sunday, August 25, 2013

ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்


ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களை தனியாக எடுத்து வைப்பேன்.

இந்தமுறை எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான, தான் நினைத்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றி  தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்  இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நாலுமுழ வேஷ்டி அணிந்து  ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும்  ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார். 

ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும்  தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை நான் தோற்றுக் கொண்டே இருந்தேன் என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே  இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும்  கூறுகிறார்.

எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளை சுரண்டும் இடைத் தரகர்கள்  என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிகையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின்  விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் - வாழ்க்கைப்பயணம்  இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள்.

தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு  அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாக கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான்.

திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபட குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை.

அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் டாலர் நகரத்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் கருணா என்னும் கூலி என்ற  அத்தியாயத்தைப் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும்.

மனத்தை கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை. 

ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே!

நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு (அத்தியாயம் நம்பி கை வை)

அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும். நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை?

வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு, உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை.

திருப்பூருக்குள்  இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டு தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன.

இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?

இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி.

திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த  மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு  நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா?

இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்?

அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன். 

இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுத கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாக திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமரிசிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான்

ரஞ்சனி நாராயணன். பெங்களூர்

ஜுனியர் விகடன் விமர்சனம்
தினமலர் விமர்சனம்
தி ஹிண்டு விமர்சனம்

நூல் வெளியீடு: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

புத்தகம் பெற்ற அமேசான் காம்

திருப்பூரில் மகேஸ்வரி புத்தக நிலையம்.

நண்பர்களின் விமர்சனங்கள் படிக்க

தமிழ் இளங்கோ

கவிப்ரியன் 1

கவிப்ரியன்

சுரேஷ்குமார்   

காசி ஆறுமுகம்  

சீனு  

சுடுதண்ணி  

சம்பத்  

வெட்டிக்காடு ரவி 

சௌம்யன்

அகலிகன்

உஷாராணி

அபிஅப்பா

மெட்ராஸ்பவன் சிவகுமார்

17 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... ரஞ்ஜனி சொன்னதுக்கு மேலே அப்பீலே இல்லை!

கணிப்பு அத்தனையும் ரொம்பச் சரி!

தி.தமிழ் இளங்கோ said...

// திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம். //

சகோதரி ரஞ்சனி நாராயணனின் எழுத்துக்களைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நகைச்சுவையோடு சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். நீங்கள் எழுதிய “டாலர் நகரம்” பற்றிய அவரது நூல் விமர்சனம் பல டாலர்கள் மதிப்பு உடையது.

அவரது இந்த விமர்சனம் உள்ள தளத்தின் இணைப்பினைத் தரவும்.

இராஜராஜேஸ்வரி said...

உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக ‘இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும்’ என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

சிறப்பான விமர்சனம் ..!

raamraam said...

indru dinamalaril tiruppurai patri oru seidhi mikavum varuththiyathu kadantha or4u maathaththil sila nooru kuzhanthikal maatru thiranaaLikalaaga piranthirukiraarkal enpathey athu saayakzhavukal innum enge poi kondu vita pokiratho???

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம்... சிறப்பு...!

ஜோதிஜி said...

அடுத்த பதிவு பாருங்கள். அது குறித்து எழுதியுள்ளேன்.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்

ஜோதிஜி said...

விடியலை நோக்கித்தான் ஒவ்வொருவரும் இங்கே ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் அவரவர் எண்ணங்கள் தான் வித்தியாசமாக உள்ளது. அடுத்த பதிவில் சிலவற்றை எழுதியுள்ளேன்.

ஜோதிஜி said...

அவர் தளத்தில் இன்னமும் வெளியிட வில்லை.

ஜோதிஜி said...

குறுகிய காலத்தில் நான் பார்த்த அசாத்தியமான திறமைசாலி. கூடிய சீக்கிரம் சிகரம் தொடுவார் பாருங்களேன்.

Ranjani Narayanan said...

இப்போதுதான் வெளியிட்டேன் ஜோதிஜி.
இதோ இணைப்பு: http://wp.me/p244Wx-zq

எனது எண்ணங்களை வெளியிட்டதற்கு நன்றி. இப்போதுதான் இதுவரை வெளியான மற்ற விமர்சனங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

மறுபடியும் நன்றி!

'பரிவை' சே.குமார் said...

அண்ணா... இன்னும் தங்கள் புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை... இருந்தும் இந்த விமர்சனம் படிக்கும்போது புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது... அருமையான விமர்சனம்... சொல்லவந்ததை அழகாக சொல்லியிருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துக்கள்.

saidaiazeez.blogspot.in said...

முன் பின் பார்த்து பழகாத ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாக ஒரு மூன்று மணி நேரம் பேசியது உங்களிடம் மட்டுமே! அருமையான ஒரு சந்திப்பு. என்னை சந்திப்பதற்காக அறை நாள் வேலைக்கு விடுப்பு எடுத்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமைக்காக... உங்களை மீண்டும் சந்திப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன், பதிவர் சந்திப்பில்.
அம்மாவின் விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது.
(சட்டியில் இருப்பதால்தான் அகப்பயில் வருகிறது)

ஜோதிஜி said...

இந்த வயதிலும் அழகாக(?) அம்சமாக இருப்பதால் உங்கள் கவர்ச்சி என்னை கட்டிப்போட்டு தொடர்ந்து பேச வைத்து விட்டது என்பதை இங்கே எழுதி வைக்க கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி தலைவரே.

Unknown said...

அன்பின் ஜோதிஜி, தங்களின் டாலர் நகரம் நூல் பற்றிய விமர்சனம் ”ஒரு இல்லத்தரசியின் பார்வையில் டாலர் நகரம்” மிக அருமையாக இருந்தது.

\\விடியலை நோக்கித்தான் ஒவ்வொருவரும் இங்கே
ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் அவரவர்
எண்ணங்கள் தான் வித்தியாசமாக உள்ளது.//

அவர்களின் வித்தியாசமான எண்ணங்கள் ஒரு நல்ல விடியலைக் காண
தங்களின் இந்த நூல் வடிவ முயற்சி வெகு சீக்கிறமே விடிந்திட இறவனை
வேண்டுகிறவர்களில் நானும் ஒருவன்.

ஜோதிஜி said...

நன்றி ரவி.

எம்.ஞானசேகரன் said...

விமர்சனம் மிக அருமை!