Thursday, August 29, 2013

விதைகள் உறங்குவதில்லை

கடந்த 20 ஆண்டுகளில் வணிகம் என்பதன் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக 10 ஆண்டுகளில் வணிகம் என்பதே விளம்பரங்களின் அடிப்படையில் மட்டுமே என்கிற ரீதியில் தான் உருவாகியுள்ளது.  இன்று பொருளின் தரம் பின்னுக்குப் போய் அதை விளம்பரப்படுத்தும் விதம் தான் வெற்றிக்கு சாட்சியாக உள்ளது.

காய், கனிகள் முதல் வீட்டுக்குத் தேவைப்படும் விளக்குமாறு வரைக்கும் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கூவிக்கூவி வந்தது. வாரந்தோறும் சந்தையில் வாங்கிக் கொள்ள முடிந்தது.  ஆனால் நகரமயமாக்கல் இதை அத்தனையையும் அடித்து ஒடுக்கி விட்டது. இன்று வரையிலும் நம் வீட்டுக்கருகே தெருக்கடைகள் இருந்தாலும் மக்களின் ஆதரவு என்பது பெரிய கடைகளுக்குச் சென்று வாங்குவதே தரமானது என்ற எண்ணம் மேலோங்க இந்த வர்க்க பேதம் என்பது வசதிகளின் அடிப்படையில் உருவாகிவிட்டது.

தெருவில் வரும் காய்கறிகள் முதல் பழங்கள் வரைக்கும் கொண்டு வருபவர்களுக்கு எப்போதும் நான் ஆதரவளிப்பதுண்டு. இரண்டு காரணங்கள். ஒன்று அன்றைக்கு தேவைப்படுவதை மட்டும் வாங்கிக் கொள்ள முடியும். மற்றொன்று அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு நம் உதவிகளும் ஒத்துழைப்பும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.

ஆனால் சமீப காலமாக வரக்கூடிய காய்கள், பழங்கள் அனைத்தும் பலவிதங்களில் மாற்றம் பெற்றுள்ளதை கவனித்தால் நன்றாக புரியும். ஆப்பிள் என்ற பெயரில் பேரிக்காய் சுவையும், பேரிக்காய் என்ற ரூபத்தில் வினோதமான சுவையும் இருப்பதால் எது உண்மையான பழங்கள் என்பதை கண்டறிவது மிகவும் சவாலாகவே உள்ளது.  ஊரில் பார்த்த நாவல்பழ சுவையென்பதும் தற்போது விற்பனையில் உள்ள மிகப் பெரிய நாவல்பழத்தின் சுவையும் சம்மந்தம் இல்லாதது.

கிராமங்களில் காலையில் வீடு தேடி வரும் கீரைகளில் சில வகைகள் இருந்தன. அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை என்று விதவிதமாக இருந்தது.  அந்த கீரையின் இலையும், சிவப்பான தண்டும் கீரையை மூக்கின் அருகே கொண்டு சென்றால் ஒரு கவுச்சி வாடை வரும்.  அதுவே நல்ல கீரையின் அடையாளமாக கருதப்பட்டது.  ஆனால் தற்போது கீரைகளின் தன்மையும் ரூபமும் முற்றிலும் மாறி சமைத்தபிறகு கீரை என்ற பெயரில் ஏதோவொன்றாக உள்ளது.

கத்திரிக்காயில் இரண்டு வகை மட்டுமே இருந்தது.  நாட்டுக்கத்திரிக்காய் மற்றும் மூட்டைக்கத்திரிக்காய் என்பார்கள்.  இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மூட்டைக்கத்திரிக்காயை நறுக்கிப்பார்த்தால் விதைகள் அதிகமாகவும் பெரிதாகவும் இருக்கும்.  சுவை வேறுபட்டதாக இருக்கும். முன்பு நாட்டுத்தக்காளியின் சுவை என்பது ஒரு பழத்தை ரசத்தில் போட்டால் போதுமானதாக இருந்தது.  இன்று வந்து கொண்டிருக்கின்ற குண்டுத் தக்காளியை எத்தனை நறுக்கிப் போட்டாலும் எந்த பலனும் இருப்பதில்லை.

இயல்பான முருங்கைகாய் தற்போது கொடி முருங்கை என்ற பெயரில் நீளமாக மாறியுள்ளது. சமீபத்தில் நான் சாப்பிட்ட இது போன்ற ஒரு வகையான முருங்கை வயிற்றுப் போக்கை உருவாக்கியது.

இங்கிலிஷ் காய்கறிகள் மட்டும் குறைவான மாறுதல்களுடன் உள்ளது. 70 சதவிகித காய் கனிகள் அனைத்தும் மாற்றம் பெற்று விட்டது? மொத்தத்தில் நம்மைச் சுற்றிலும் உள்ள தாவரங்களின் அடிப்படைத்தன்மைகள் அனைத்தும் மாறிவிட்டது.

என்ன காரணம்?

தொடக்கத்தில் விதைகள் என்பது நம்மிடம் இருந்தது.  இன்று விதைகள் என்பது யாரோ ஒருவரிடம் இருக்கின்றது.  இந்த உண்மைகளும், இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றி எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இன்று உண்மையான சுவையுள்ள ஆப்பிளின் விலை கிலோ ரூபாய் 160. அதுவும் ஏற்றுமதியாகும் தரத்தில் இருக்குமா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  டீத்தூள் முதல் பழங்கள் வரை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் நாம் உண்பது அனைத்தும் மிச்சமும் சொச்சமும்.  இது குறித்து கவலைப்பட இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை.  காரணம் இங்கே மூன்று வேளை உணவுக்கே பலரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதால் இது போன்ற தேவையற்ற ஆராய்ச்சியில் பொதுஜனம் இறங்குவதில்லை.

அமெரிக்காவின் எண்ணெய் அரசியலைப் போல அடுத்து அந்த நாட்டின் நிறுவனங்கள் கையில் எடுத்திருப்பது இந்த விதை அரசியலையே.

ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இது போன்ற விபரங்கள் விஸ்தாரமாக வெளிவந்த போதிலும் தமிழர்களின் கேளிக்கை மனோநிலையில் காரணமாக தமிழ் பத்திரிக்கைகளுக்கு இந்த செய்திகள் சரியாக இருக்காது என்ற காரணத்தினால் தானோ என்னவோ தமிழர்களுக்கு இந்த விதை அரசியலின் முழு ரூபமும் இன்னும் புரிபடவில்லை.

என்னை விட வயதில் பல மடங்கு மூத்த, பல துறைகளில் உள்ள, சமூக அக்கறை கொண்டு பல நண்பர்கள் என் எழுத்தின் மூலம் அறிமுகமாகி அவர்களின் குழும மின் அஞ்சலில் என்னையும் ஒரு நபராக வைத்துள்ளனர். தினந்தோறும் இவர்கள் மூலம் பல தகவல்கள், படங்கள், கருத்துக்கள், படித்த முக்கியமான பத்திரிக்கை செய்திகள் என் மின் அஞ்சலுக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றது.  பல சமயம் குறிப்பிட்ட சிலவற்றை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து கொள்வதுண்டு.  

குறிப்பாக தற்போது ஒரிஸ்ஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் சேலத்தில் உள்ள லெஷ்மணன் அவர்கள் மூலம் நான் அறிந்த தகவல்கள் கணக்கில் அடங்கா.  இதற்கு மேலும் இவர்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளை அந்த துறை சார்ந்த நபர்களுக்கு, அதிகாரிகளுக்கு தினந்தோறும் மின் அஞ்சல் வழியே அனுப்பிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

எப்போதும் போல இந்திய அதிகாரவர்க்கத்தினருக்கு இவற்றைப் பார்க்க நேரம் இருக்காது என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

அடாது மழை பெய்தாலும் விடாது தினந்தோறும் செயல்பட்டுக் கொண்டு இருப்பதால் இவர்கள் மூலம் நான் பெற்ற ஒரு தகவல் மரபணு மாற்ற விதைகள் அதற்குப் பின்னால் உள்ள அரசியல். 

இந்த கோப்பு எனக்கு வந்து பல வாரங்கள் ஆன போதிலும் அதை ஒழுங்கு படுத்துவதில் உண்டான சவாலின் காரணமாகவும், அதை சரியான விதத்தில் பதிவாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த காடுகள் மற்றும் இயற்கை குறித்து ஒரு சிறிய தொடராக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  இதன் காரணமாக பல புத்தகங்களை வாசிக்க முடிந்தது.

இப்போது இந்த தொடரின் நீட்சியாக நான் பெற்ற கோப்பின் மூலம் உள்ள விபரங்களை ஐந்து பதிவுகளாக தொடர்ந்து வெளியிடுகின்றேன்.

இதை ஆவணமாக்கியவர் குறித்த விபரங்கள் 

நண்பர்களே,

இணைப்பில் பிராய் சட்ட வரைவு குறித்த தொகுப்பு உள்ளது. பிராய் குறித்த விமர்சனமாக மட்டுமில்லாது, அதன் பின்புலம், அதற்கான நெருக்குதல்கள் உள்ளிட்ட பலவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உடன்  ஆதார தரவுகளின் இணைப்புகளும் சேர்க்கப்படுள்ளது.

மான்சான்டோ இந்தியாவில் இருக்கும் வரை  பி.டி கத்தரி, பிராய் நம் தலை மேல் தொஙகும் கத்தி தான்..

செல்வம்

Ramasamy Selvam <organicerode@gmail.com>
R.Selvam,
Co-ordinator,
Tamil Nadu Organic Farmers Federation
Pudu Nilavu Food Forest,
Thalavu Malai,Arachalur,
Erode District,Tamil nadu,638 101
09443663562

இந்த தொடரில் ஏராளமான ஆவணங்கள் உள்ளது. பெரும்பாலும் ஆங்கில பத்திரிக்கையில் வந்த தகவல்களின் இணைப்புகள்.  தமிழ் பத்திரிக்கைகளில் இது குறித்த விபரங்களை நான் பார்த்தது இல்லை.

மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் சக்திகளை, இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை நான் ஏற்கனவே ஒரு தொடராக எழுதியிருப்பதை படித்து விட்டு தொடர்ந்தால் உங்களுக்கு இதற்கு பின்னால் உள்ள விபரீதங்களை புரிந்து கொள்ள முடியும்.   

இந்த தொடரின் முந்தைய பதிவுகள்


தரையில் இறங்கும் விமானங்கள்


கூடங்குளம் பிரச்சனை எப்படி இன்று விஸ்வரும் எடுத்து நம் முன்னால் நிற்கின்றதோ அதைப் போலவே இந்த மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் மூலம் விரைவில் இந்திய விவசாயம் என்பது குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே இருக்கும் என்பதால் நிச்சயம் பலருக்கும் இந்த தொடர் பலன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்த பதிவில்............

10 comments:

ராஜி said...

பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை அறிந்தே மேலை நாடுகளுக்கு தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோம். ஊழலும், தெளிவில்லாத ஆட்சியாளர்களும், நமக்கென்ன வந்துச்சு என்ற எதிர் கட்சி மற்றும் மக்களின் போக்கே இத்தகைய நிலைக்கு காரணம்!!

Siva said...

நல்ல பதிவு. ஜனநாயக நாட்டில் மக்கள், மக்கள் மன்றங்கள், அறிவு சார் அமைப்புக்கள், கல்வியாளர்கள் தான் முடிவுகளை எடுக்கவேண்டும். அதிகார வர்க்கத்தினர் மக்கள் முடிவை செயல்படுத்துபவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். ஆனால் இங்கு அதிகார வர்க்கத்தினர் முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கின்றனர். மக்களும் ஜனநாயக அடிப்படைகள் தெரியாமல் காலனிய மனோபாவத்தில் அதிகாரவர்கதினரைதான் படித்தவர்களாக நினைக்கின்றனர்.

அதிகார வர்கத்தினரோ பன்னாட்டு கம்பனிகள், மேற்கத்திய அனுமுறைகளை ஆதரிப்பவர்களாக (பழைய பிரிட்டிஷ் எஜமான வாசனை போலும் ) , சொந்த கலாசாரத்தையே அழிக்கும் எட்டப்பர்களாக (எட்டப்பர்களை கொண்டு தானே வெள்ளையர்கள் இந்த அமைப்பை எருவாக்கினார்கள்?!) இருக்கிறார்கள்.

யாரை சொல்லியும் குற்றம் இல்லை. உண்மையான ஜனநாயக புரட்சி, அறிவு புரட்சி மலர வேண்டும்.

அன்புடன்,
சிவா
சென்னை

Unknown said...

நிர்வாகச் சீர்கேடு காரணமாக இந்த அவல நிலை

ஜோதிஜி said...

என் முக நூலில் இதை பகிர்ந்துள்ளேன் சிவா. நன்றி.

ஜோதிஜி said...

நிர்வாக சீர்கேடுகளுடன் இன்னும் பல காரணங்கள் உள்ளது. தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். நன்றி மாணிக்கம்.

ஜோதிஜி said...

முற்றிலும் உண்மை ராஜி. நன்றி.

அகலிக‌ன் said...

மக்கள் நலன்மேல் அக்கறையின்மை, 100 சதவீத சுயநலம் இரண்டும் சேர்ந்து நம் அடுத்த தலைமுறைக்கு சோறும் தண்ணீரும் இல்லாமல் செய்கிறார்கள்.

SNR.தேவதாஸ் said...

புடலைக் காயை விட்டுவிட்டீர்களே.
நமது முன்னோர்களின் ஆரோக்கியமும் ஆயுளும் இன்று நமக்கு இல்லையே.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

ஜோதிஜி said...

உண்மைதான்.

ஜோதிஜி said...

அடுத்த தலைமுறை அல்ல. நாம் வாழ்வதற்கே இங்கே பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி விடும் என்றே நினைக்கின்றேன்.