Showing posts with label காடுகள் தொடர். Show all posts
Showing posts with label காடுகள் தொடர். Show all posts

Saturday, September 21, 2013

மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று..........

இன்று படித்தவர்கள் முதல் பலரும் நாம் இனிமேலும் பழங்கதைகளைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. பிழைப்பதற்கான வழிகளைப் பற்றியே நாம் பேச வேண்டும். காரணம் இங்கே வெள்ளையர்கள் வந்த பிறகே தொழில் நுட்ப வசதிகளும், முன்னேற்றப் பாதைகளும் நமக்கு கிடைத்தன. இன்றும் கூட அவர்கள் மூலம் கிடைக்கும் உலகளாவிய வாய்ப்புகள் மூலம் தான் நாம் வளர்ந்து கொண்டு இருக்கின்றோம்.

குறைகள் சொல்லி புண்ணியமில்லை. நாம் வாழ்வதற்கான வழிகளை தேடிக் கொள்ள வேண்டும். வாழ உதவும் மொழியும், வசதிகளை உருவாக்கும் தொழிலும் தான் நமக்குத் தேவை. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வராமல் இருந்தால் இன்னமும் நாம் இருண்ட காலத்திற்குள் தான் இருந்திருப்போம் என்பதே.

இன்று இந்தியாவில் விவசாயம் என்பது லாபம் இல்லாத தொழில். மேலும் வருடந்தோறும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த போது, இங்குள்ள விவசாயம் எப்படியிருந்தது?

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த ஜான் அகஸ்டஸ் என்ற வெள்ளையர் அன்று ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த அறிக்கை.

தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்வது எங்கும் உள்ளதுதான்.  இந்தியாவில் செய்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மிகப்பெரிய அறிவுபூர்வமான செயல்பாடு இது. அதுபோலவே ஏராளமான மக்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது.

பல்வேறுபட்ட உயிர் சூழலமைப்புகள் நிலவுகின்றன. இவற்றுக்கு ஏற்ப நீர்பாசன அமைப்புகளை ஏற்படுத்தி இருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. மாபெரும் ஏரிகள், மிகப்பெரும் அணைகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் இப்படி அவர்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கி இருந்தார்கள். அவற்றுக்குப் பெயரும் வைத்துள்ளார்கள்.

மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வித்தியாசமாகச் செய்திருந்தார்கள். கற்பாறைகளை அடுக்கி கால்வாய் அமைத்தார்கள். சில இடங்களில் புவிஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தியுள்ளார்கள்.  ஏரி, குளங்கள் சின்னதும் பெரியதுமாக இருந்தாலும் மிகச்சிறிய ஏரி மூலம் குறைந்தது 50 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ந்தது.  நடுத்தட்டுக் குளங்களில் இருந்து 100 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்தது.

மிகப்பெரிய ஏரி நீரைக் கொண்டு 500 ஏக்கர் வரை பயிர் வைக்க முடிந்தது.  ஏரி குளங்களை ஏற்படுத்த எப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்தார்கள்?

இரண்டு குன்றுகள் கூடுகின்ற இடத்தில் ஏரி ஒன்றை அமைத்தார்கள்.  அந்த குன்றுகள் மீதும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெய்யும் மழைநீர் முழுவதும் ஏரியில் வந்து தேங்குகிறது. மலையடிவாரத்தில் மட்டுமல்லாது ஆறுகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளிலும் ஏரிகளை அமைத்தார்கள்.

அது மட்டுமல்ல, தண்ணீர் இல்லாத வட்டாரத்தில் ஏரிகளையும், குளங்களையும் வெட்டினார்கள்,  கால்வாய்களை வெட்டி இந்த ஏரி குளங்களை ஆற்றோடும் பெரிய நதியோடும் இணைத்தார்கள்.  கல்லும் முள்ளும் நிறைந்த இடங்கள் நெல்லும், மணியும் விளையும் நிலங்களாக மாற்றப்பட்டன.

ஒரு ஏரியை அமைப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகாலம் பிடித்தது.  மக்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்தார்கள். வெட்டுவதற்கு 100 வண்டிகளில் கருங்கற்களை ஏற்றி சென்றார்கள்.  வேலைகளை மேற்பார்வை செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  வேலைகளைச் செய்து முடிப்பதற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டது.

உழைத்த மக்கள் அடைந்த பயன் என்ன?

ஏரி குளங்களை ஏற்படுத்துவதில் ஈடுபட்ட மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இறையிலி நிலம் வழங்கப்பட்டது.

அதாவது பொதுப்பணிகளில் ஈடுபடுவோருக்கு நிலவரி செலுத்தாமல் பயிர் வைக்கும் உரிமை வழங்கப்பட்டது.  ஏரி வெட்டுவதில் ஈடுபட்டவர்களுக்கு அந்த ஏரி நீர்ப்பாசன நிலம் கட்டுக் குத்தகைக்கு விடப்பட்டது.  விளைச்சலில் நாலில்  ஒரு பங்கை நில உரிமையாளரும், மூன்று பங்கை உழுதவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக்கால ஆங்கிலேயர் ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாகப் பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்ததைப் பதிவு செய்துள்ளன.

தென்னிந்தியாவில் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகைகள் வளம் மிகுந்தவை. இவை போன்று செங்கற்பட்டு மாவட்டம் வளம் மிகுந்த பகுதி அல்ல.  ஆனால் இங்கு கூட உழவர்கள் உயர்ந்த அளவு விளைச்சல் பெற்று வந்தனர்.

1910 கிராமங்களுக்குள் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் கிடைத்துள்ளன. 1500 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொரு வருடத்திற்கு சராசரியாக 5 டன் (5000 கிலோ) உணவு தானியம் பெற்றது.  65 கிராமங்கள் ஒரு வருடத்திற்குச் சராசரியாக 5000 கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து வந்தன. (ஒரு கலம் என்பது 125 கிலோ கிராம்) நெல் உயர் விளைச்சல் தரும் கிராமங்களின் சராசரி விளைதிறன் மாநிலத்தின் சராசரி விளை திறனைப் போல இரு மடங்காகும்.

இந்த 65 கிராமங்களுக்கு சிலவற்றின் சராசரி விளைதிறன் மிக அதிகமாக இருந்துள்ளது.  அதாவது காணிக்கு 35 கலம் வரை விளைந்துள்ளது.  இந்த விளைச்சல் எக்டருக்கு 9 டன் ( ஏக்கருக்கு 3600 கிலோ) 1 ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( 75 கிலோ மூட்டை) விளைச்சல் ஆகும்.

சிங்கப்பெருமாள் கோயிலையும், ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டு ஆவணங்களின்படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில்  சிறப்புற்று உயர்விளைச்சல் கண்டது.

1764 இல் வடக்குப்பட்டி கிராமத்தில் 368 எக்டர் நிலப்பரப்பில் (920 ஏக்கர்) 1500 டன் உணவு உற்பத்தியானது.  1762 முதல் 1766 வரையான 5 வருடங்களில் வடக்குப்பட்டின் சராசரி விளை திறன் எக்டருக்கு 4 டன் ( ஏக்கருக்கு 1600 கிலோ).

பார்னார்டு என்பவர் 1774 ஆம் வருடம் நவம்பர்  எழுதிய தனது கடிதத்தில் 1772ல்தான் இது போன்று  கிராமக் கணக்கு ஆவணங்களைத் தாம் சேகரிக்கத் தொடங்கி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

1100 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800 கிலோ விளைந்ததாக கல்வெட்டு கூறுகிறது.

1325 ஆம் ஆண்டு ராமநாதபுரத்திற்கு ஏக்கருக்கு 8000 கிலோ விளைந்ததாக கல்வெட்டு கூறுகிறது. 1807 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200 கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கின்றது.

(அடுத்த பதிவோடு இந்த தொடர் முடிவடைகின்றது. எழுத உதவிய புத்தகங்கள் குறித்து விரிவாக பேசுவோம்)

தொடர்புடைய பதிவுகள்

அட்சய பாத்திரம் -- இங்கே விற்பனைக்கு உண்டு

                                                                                                         

Wednesday, September 18, 2013

அட்சய பாத்திரம் -- இங்கே விற்பனைக்கு உண்டு

வர்த்தக ஒப்பந்தகங்களிலிருந்து உணவு தானியங்கள் விலக்கி வைக்கப்பட்ட சகாப்தத்தை 1986ல் டெல்லியில் நடைபெற்ற உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.  அதைத் தொடர்ந்து 1994, 1995 களில் ஏற்பட்ட விவசாய ஒப்பந்தம் விவசாய விளை பொருட்களுக்காக சுதந்திர சந்தையை தீவிரமாக்கின.  இதன் உச்சக்கட்டமாக 1996ல் உலக உணவு உச்சி மாநாடு (WORLD FOOD SUMMIT ) ரோமில் நடைபெற்றது.  

இதில் கலந்து கொண்ட அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அதிலும் சுதந்திர வர்த்தகம் அவசியம் என வலியுறுத்தின.  அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து இதை ஏற்க வைத்தன.

உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அடிப்படை என்பதை நாங்கள் ஏற்கிறோம். எங்களது உற்பத்தியாளர்களும், நுகர்வாளர்களும் பொருளாதார ரீதியில் பலமுடைய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் நாங்கள் உணவு வர்த்தகத்தையும் இதர வர்த்தக கொள்கைகளையும் கடைப்பிடிப்போம் என்று சொல்லிக் கொண்டு கையழுத்திட்டனர்.,  

ஆனால் உணவு பாதுகாப்பிற்காக கூடி மாநாடு அதற்கான தீர்மானத்தை இயற்றியதுடன், உணவு நெருக்கடிக்கும் விலையேற்றத்திற்குமான வழி வகையுமே துரதிர்ஷடவசமாக உருவாக்கி விட்டது.  

எனவே உணவு பாதுகாப்பிற்காக உள்நாட்டில் இருந்த தடைகளும், நாடுகளுக்கு இடையேயான தடைகளும் உடனடியாக நீக்கப்பட்டன.

இன்றைய உணவுச் சந்தையை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தான் கட்டுப்படுத்துகின்றன.  இவர்களின் இளைய கூட்டாளிகளாக ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகள் உள்ளன.  இந்நாடுகளின் பெரும் நிறுவனங்கள் இச்சந்தைகளில் கோலோசசுகின்றன.  இந்த நாடுகள் இருவகைகளில் உலக சந்தையை கைப்பற்றுகின்றன.  

ஒன்று உணவு தானியங்களுக்கு கூடுதலான மானியங்கள் கொடுப்பது மூலம் ஏழைநாடுகளை போட்டிலிருந்து வெளியேற்றுகின்றனர். இரண்டாவது தொழில் மயமான இறைச்சி உற்பத்தி முறையால் சுதந்திரமான மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் அழியும் நிலையை உருவாக்கி விடுகின்றனர்.

அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் மாட்டிறைச்சிக்கு கூடுதல் மானியம் வழங்கி உலகச் சந்தைக்கு கொண்டு வந்ததால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இறைச்சி வணிகம் துடைத்தெறியப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிகமானிய உதவியுடன் ஏற்றுமதி செய்ததால் கானா நாட்டில் 90 சதவிதமும், செனகல் நாட்டில் 70 சதவீதமும் கோழிப்பண்ணை தொழில் அழிந்தது.  

இதே காரணத்திற்க்காக இங்கு பருத்தி வளர்ப்போர்களின் சாகுபடி வீழ்ந்து, பருத்தி விவசாயத்திலிருந்து பலர் விரட்டப்பட்டனர்.

இறைச்சி உணவு தயாரிப்பில் நவீனத் தொழில்மய முறைகளை பெரும் நிறுவனங்கள் புகுத்துகின்றன.  இதற்கான கால்நடை வளர்ப்பு இதர வசதிகளை அருகாமையில் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  அமெரிக்காவில் உள்ள நான்கு பெரும் நிறுவனங்கள் 2005ம் ஆண்டில் மாட்டிறைச்சியை 83.5 சதவீதம் கட்டுப்படுத்தின.

டைசன் (TYSON)  நிறுவனம் நாளைக்கு 36000 மாடுகளை வெட்டுகின்றது. இதே போல கார்கில் (CARGILLS) 28300 மாடுகளையும் ஸ்விப்ட் அண்ட் கோ (SWIFT & CO.)   16759 மாடுகளையும் நேஷனர் பீப் பேக்கர்ஸ் (NATIONAL BEEF PACKERS & CO.) 13000 மாடுகளையும் வெட்டுகின்றன.  

பன்றி இச்சியில் ஸ்மித்பீல்ட் (SMITHFIELD FOODS)  என்ற அமெரிக்க நிறுவனம் ஏகபோகமாக உள்ளது.  ஒரு நாளைக்கு இரு நிறுவனங்களும் 102900 பன்றித் தலைகளை வெட்டுகின்றன. இதனுடன் டைசன், கார்கில், ஸ்விப்ட் சேர்த்து 64 சதவீதம் சந்தையை கட்டுப்படுத்துகின்றன. 

இதனால் அமெரிககாவிலேயே சிறிய இறைச்சி உற்பத்தியாளர்கள் சந்தையிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்னனர்.  ஸ்மீபீல்ட்    என்ற அமெரிக்க நிறுவனம் கிழக்க ஐரோப்பிய நாடுகளுக்கு தனது திட்டத்தை விரிவுபடுத்தியது.  அங்கு பெரும் இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டதால் ருமேனிய  நாட்டின் 90 சதவீதமும், போலந்து நாட்டின் 56 சதவீதமும் உற்பத்தியாளர்கள் பன்றி, மாடு, கோழி தொழிலிருந்து விரப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்மீத்பீல்ட் நிறுவனம் போலந்து அரசிடமிருந்து ஏற்றுமதி மானியத்தை பெற்றுக் கொண்டு பன்றிக்கறிகளை லைபீரியா, கினியா, ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர் விலையை விட சரிபாதி குறைத்து கொடுக்கிறது.  இதனால் அந்நாட்டு தொழில்கள் படுத்து விட்டன.

இந்த சுதந்திர வணிகத்தால் 90ம் ஆண்டுகளில் மெக்சிகோ விவசாயிகள் 15 கோடி பேர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சுதந்திர வணிகத்தால் கடந்த பல ஆண்டுகளில் மூன்று கோடி விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்.

இந்த உலகச் சந்தையில் வளரும் நாடுகள் வளர்ந்து நாடுகளுடன் சமமமாக போட்டியிட முடியுமா?  அனைத்து வளரும் நாடுகளிலும் வளர்ந்து நாடுகளின் பெரும் நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட் மூலமாக ஊடுருவி வருகின்றன. உலகில் சூப்பர் மார்க்கெட் மூலம் விற்பனையாகும் பலசரக்குகளில் 50 சதவீதத்தை ஐந்து நிறுவனங்கள் வைத்துள்ளன.  

இதில் வால்மார்ட் பிரதானமானது.  உலக சில்லரை வர்த்தகத்தை பத்துக் கம்பெனிகள் வைத்துள்ளன.

அதிலும் குறிப்பாக வால்மார்ட், குரேகர் (KROGER)  பிரெஞ்சு கம்பெனி கேரிபோர் (CARREFOUR) பிரிட்டிஷ் கம்பெனி டெஸ்கோ ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம்.

உலகில் விதை விற்பனையில் 47 சதவீத விதைகளின் உரிமை மன்சேட்ட, டுபான்ட், சைசென்டா கம்பெனிகளுக்கு சொந்தமானது.  

2007ம் ஆண்டு நெஸ்ட்லே(NESLTLE)உணவு கம்பெனியின் லாபம் 9.7 பில்லியன் டாலர் ஆகும்.  இது 65 ஏழைநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட    அதிகம்.  

2009 ஜனவரி 31 முடிய வால்மாட் கம்பெனியின் லாபம் 13.3 பில்லியன் (1 பில்லியன் 100 கோடி) டாலராகும்.  இது 88 ஏழைநாடுகளின் (உலகில் சரிபாதி நாடுகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட (GDP)அதிகம்.  

இந்த நிலைமையில் உலகச் சந்தையில் ஏழைநாடுகள் எப்படி போட்டியிட முடியும்?

வளர்ந்த நாடுகளும் அதன் ஏகபோக நிறுவனங்களும், வளரும் நாடுகளின் சந்தையை கைப்பற்றி கொள்ளை லாபமடித்து, உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் எற்படுத்துகின்றன.  இதே காலத்தில் நீண்ட கால நோக்குடன் வளரும் நாடுகளின் உணவு முறையை தங்களது உற்பத்திகளை உண்ணும் உணவு பழக்கத்திற்கு மாற்றி அமைத்திடும் காரியங்களையும் இந்நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன.

விலை உயர்வுக்கும் உணவு நெருக்கடிக்கும் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது உயிரியியல் எரிசக்தி தயாரிப்பாகும்.  உணவு கணிசமான அளவு தானியங்களை எத்தனால் மற்றும் பயோ டீசல் தயாரிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் திருப்பிவிட்டன.

2007ம் ஆண்டு அமெரிக்கா தனது நாடாளுமன்றத்தில் எரிசக்தி சட்டத்தை   (ENERGY INDEPENDENCE AND SECURITY ACT) நிறைவேற்றியது.  எதிர்காலத்தில் 20 சதம் எரிசக்தியை இந்தி உயிரியில் எரிசக்தியிலிருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தது.

2008ம் ஆண்டு மட்டும் சோள உற்பத்தியில் 30 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கீடு செய்தது.  சுமார் 135 க்கும் மேற்பட்ட உயிரியியல் எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.  மேலும் 74 ஆலைகள் உடனடியாக அமைக்கப்பட்டு வருகின்றன.  ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் எண்ணெய் வித்துக்களை உயிரியியல் எரிசக்தி தயாரிக்க திருப்பிவிட்டுள்ளன. பிரேசில் தனது கரும்பு உற்பத்தியில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க பய்னபடுத்துகின்றது.

இதற்காக கரும்பு விளைச்சலை அதிகப்படுத்த அமேசான்காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

உயிரியில் எரிசக்திக்கு உணவு தானியங்களை திருப்பிவிட்டது.  கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தியது.  இதை முதலில் அமெரிக்கா மூடிமறைத்தது. அமெரிக்கா இதனால் விலை உயர்வு முப்பது சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது.  ஐஎம்எப் 20 முதல் 30 சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது.  ஆனால் உலக வங்கியின் இரகசிய அறிக்கை மூலம் 141 சதவீதம் விலை உயர்வில், அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த எரிசக்தி திட்டத்தால் மூன்றில் ஒரு பகுதி விலை ஏற்றம் ஏற்பட்டது என்று அம்பலப்பட்டது.

வளர்ந்த நாடுகளின் இந்தப் போக்கு எதிர்காலத்தில் வளரும் நாட்டு மக்களை பட்டினிக்குத் தள்ளிவிடும்.  ஏற்கனவே அமெரிக்காவில் எக்சான்மொபில் (EXXON MOBIL)  ஆர்ச்சர் டேனியல் மிட்லேன்ட்(ADM)  கார்கில் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளத்தை பயிரிட்டு உயிரி எரிசக்திக்கு வழங்குகின்றன.  தற்போது வளரும் ஏழைநாடுகளின் நிலங்களை எல்லம் வளைத்துப் போடும் (LAND LEASE SYSTEM OF RIGHT PURCHASE)  தொழில் வேகமாக பரவி உள்ளது.  2006ம் ஆண்டு முதல் இதுவரை 2 கோடி ஹெக்டேர் நிலங்கள் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் விற்பனை ஆகியுள்ளது.

இது ஜெர்மனியின் மொத்த விவசாய நிலத்தைவிட இருமடங்கு அதிகமாகும். தென்கொரியாவின் தேவூ என்ற நிறுவனம் ஆப்பிரிக்காவின் மடகாகஸ் நாட்டில் 99 வருட வாடகைக்கு 30 லட்சம் ஏக்கர் வாங்கியது.  இதில் உயிரி எரிசக்திக்கான பயிர்களை பயிரிட திட்டமிட்டு, தற்போது அந்நாட்டு மக்களின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்படுள்ளது.

ஐக்கிய அரபு எமிரட்ஸ் மற்றும் பிலிப்பைன்சில் ஒரு லட்சம் ஏக்கம் நிலத்தை வாங்கியுள்ளது.  எகிப்து மற்றும் உகாண்டாவில் 20 லட்சம் ஏக்கரில் சோளம், கோதுமை விளைவிக்க நிலம் வாங்கி உள்ளது.  இந்தியாவின் 80 முதலாளிகள் எத்தியோப்பியாவில் 75 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வாங்கி உணவு தானியத்தை பயிட்டு பல நாடுகளில் விற்கின்றனர்.

பல நாடுகளில் இந்த நிலத்தை வாங்கினாலும் இதில் குறிப்பாக பெரும் பங்குதாரர்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே உள்ளன.

SUNLAM OIVATE EUITY (USA)  நிறுவனம், சவுதி  MUA ZEPHYR FUND   நிறுவனமும், பிரிட்டனின்  CDC நிறுவனமும் முக்கிய பங்குதாரர்களாகும். இந்த நிலம் வாங்கும் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்துவது  EMERGENT ASSETS MANAGEMENT என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் நிறுவனம் தான்.

ஆப்பிரிக்காவில் வாங்கியுள்ள நிலத்தில் எரிசக்தி தயாரிக்க தேவையான தாவர எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளனர்.  ஆப்பிரிக்காவில் அதிக குறைவான விலையில் நிலமும் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள், போக்குவரத்திற்கு சுலபமான கடல் மார்க்கம் என்பதால் தான் அங்கு இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் நிலைத்தை பெருமளவில் வாங்குகின்றன.

எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா முதல் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அனைத்தும் மேலும் பட்டினியால் சாகும். அமெரிக்கா ஐரோப்பா எரிசக்தி உபரியில் மிதக்கும்.

(எழுத உதவிய ஆதாரப்புத்தகங்கள் குறித்து இந்த தொடரின் கடைசி பதிவில் வெளியிடப்படும்)

தொடர்புடைய பதிவுகள்

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 5



Friday, September 13, 2013

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 5

பிடி தொழில் நுட்பம் பன்னாட்டு விதை நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது. இந்திய விதை நிறுவனங்கள் அவர்களிடம் காப்புரிமை கப்பம் கட்டியே அவற்றைப் பயன்படுத்துகின்றன. இதை மாற்ற இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் (ஐசிஏஆர்) வழிகாட்டுதலின் படி  தார்வாட் பல்கலையில் பி.ட் பிகனேரி என்ற பெயரில் பிடி பருத்தி உருவாக்கும் வேலையில் இறங்கியது. 

ஆனால் அது முடிவடையும் நிலையில் உள்ளே வைக்கப்பட்ட மரபணுக்களில் ஒன்று தன்னுடைய காப்புரிமைப் பெற்ற மரபணு என்று மான்சான்டோ எதிர்ப்பு தெரிவிக்க உடனே அந்த த்திட்டம் இழுத்து மூடப்பட்டது. 

செர்பாய் தலைமையில் விசாரணைக்கமிசன் அமைக்கப்பட்டு ஊழல்கள் மூடி மறைக்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயிகள் பயிர் இரகங்கள் பாதுகாப்புச்ட்டத்தின்படி மான்சான்டோ இப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியாது அப்படி தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு செல்லுபடியாகாது. இருப்பினும் பிடி பிகனேரி திட்டம் வெறும் கனவாக முடித்து வைக்கப்பட்டது. சில பல விஞ்ஞானிகள்  பலன் பெற்றனர்.

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 22 அன்று இந்த சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்ட போது நடந்த விவாதம்

மதிப்பிற்குறிய அவைத்தலைவர் அவர்களே, 

நவீன உயிரித்தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையைப் பயன்படுத்தவும், உயிரித்தொழில்நுட்ப ஆணையம் உருவாக்கி உயிரித்தொழில் நுட்பத்தை ஒருங்குபடுத்தும் வரையைறைகள் சிறப்பாக திறமையாக செயல்படுத்தப்படவும், அதன்மூலம் நவீன உயிரித்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் உயிரினங்களை, பொருட்களை ஆராய்தல், எடுத்துச் செல்லல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய வேலைகள் அணைத்தையும் ஒருங்குபடுத்துவதற்காக....

பாசுதேவ் ஆச்சார்யா- மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே நான் உயிரித்தொழில்நுட்ப ஆணையத்திற்கான சட்ட வரைவு-2013 ஐ அறிமுகப்படுத்துவதை கீழ்கண்ட காரணங்களால் எதிர்க்கிறேன் என்று பேசத் தொடங்கியதும் பல குறுக்கீடுகள் எழுந்தது.

மதிப்பிற்குறிய அவையைத்தலைவர் அவர்களே உயிரித்தொழில் நுட்பத்தை வளர்க்கும் துறையே எப்படி அதைக்கட்டுப்படுத்தும் துறையாக இருக்க முடியும். அண்மையில் வேளாண்மைக்கான நிலைக்குழு தனது மரபணு மாற்றுப்பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்த அறிக்கையில் சுதந்திரமான, சார்பு நிலையில்லாத (Conflict of Interest) ஒருங்குமுறை ஆணையம் தேவை என்று பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை நிறைவேற்றாமல், இப்போது பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு உதவிட அரசு இந்த வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. 

விதை நிறுவனங்களுக்கு ஆதரவான ஒன்றாக இல்லாமல் உயிரித்தொழில்நுட்ப ஒருங்காற்று ஆணையம் உயிரிப்பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் (உயிர் பன்மயம்) மனிதர்களின் ஆரோக்கியம், கால்நடைகளின் ஆரோக்கியம் ஆகியவைகளுக்கான முழுமையான ஒன்றாக இருக்கவேண்டும், 

ஆகவே இதை சுற்றுச்சூழம் ஆமைச்சகம் அல்லது மக்கள் நலன் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் வேளாண் அமைச்சகம் ஆகியவை இணைந்து...(குறுக்கீடுகள்) உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட வரைவு பல்லுயிர் பெருக்க சட்டம் மற்றும் விவசாயிகளின் பயிர்உரகங்கள் உரிமைகாப்புச் சட்டத்திற்கு இணக்கமாக இல்லை. 

இந்தச் சட்ட வரைவு இந்தியா கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ள பல சஞர்வ தேச ஒப்பந்தங்கள், உயிரிப்பாதுகாப்பு மாநாட்டு ஒப்பந்தம், பல்லுயிர்பெருக்கம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள்,உள்ளிட்ட பலவற்றுடன் உசைவாக இல்லை. (குறுக்கீடுகள்) அமைச்சர் - திரு.பாசுதேப் ஆச்சார்யா எழுப்பிய வினாக்கள ஏற்கத்தக்கதல்ல. நாடாளுமன்றம் இத்தகு சட்டத்தை இயற்ற தகுதியுள்ளது தான்

மற்றொரு பக்கம் மரபணு மாற்று தொழில் நுட்ப ஆதரவாளர்கள் இந்திய இயற்கை வளங்களை சட்டரீதியிலும், அறிவியல் அமைப்பு ரீதியிலும் காப்பதற்காக உருவாக்கிய அமைப்புகளை கைவசப்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள தாவர வளங்கள். அவற்றின் பயன்பாடுகளை பதிவது ,பாதுகாப்பது போன்ற வேலைகளுடன் அன்னிய நிறுவனங்கள் இந்திய தாவர வளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கல் போன்ற பணிகளை செய்ய தேசிய தாவர, மரபியல் வள பெட்டகத்தின் (National Bureau of Plant Genetic Resources (NBPGR) என்ற அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. 

தேசிய தாவர மரபியல் வள பெட்டகம் என்பது இந்தியாவின் தாவர உயிரினங்களின் மரபியல் பெட்டகம் போன்றது. அவைகளின் வகைபாடு, பயன்பாடு உள்ளிட்ட அணைத்துவிவரங்களையும் தொகுத்தும் பாதுகாத்தும் வரும் அமைப்பு. சுருங்கக் கூறின் இந்திய தாவர வகையினங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பகம் எனலாம்.

இது இந்தியாவில் உள்ள எல்லா தாவர, நுண்ணுயிர் வளங்களைப் பற்றிய பதிவு, அவைகளின் விதைகள், மாதிரிகளைச் சேகரித்து பாதுகாத்து வருகிறது. அன்னிய அமைப்புகள் இவற்றைப் பயன்படுத்துவதாக இருப்பின் இதன் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும். ஆனால் இத்தகு அனுமதியின்றி தான் இந்திய கத்திரிக்காய் இரகங்கள் மரபணு மாற்றுக் கத்தரியாக உருவாக்கப்பட்டது. 

இது பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின் படி (Biodiversity act) தவறானது என்பதால் பிரச்சனைகள் கிளப்பப்பட்டது. வழக்கு நடத்தப்பட்டது. இந்திய அரசு மான்சான்டோ-மகிஹோவிற்கு ஆதரவாக தனது முடிவை தெரிவித்தது.

இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தாவர, மரபியல் வள பெட்டகத்தின் (National Bureau of Plant Genetic Resources (NBPGR)) இயக்குனராக முனை.கே.சி.பன்சால் நியமிக்கப்படுகிறார். இவர் நிலக்கரி வழக்கு பன்சால் அல்ல.. அவர் நிலக்கரி வளமையை கொள்ளையடிக்க அனுமதிப்பவர், இந்தியத் தாவர வளங்களை கொள்ளை கொண்டு போவதற்கான அனுமதி வழங்க நியமிக்கப்பட்டவர் என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இவரின் பின்புலம் அத்தகையகது..

இவரை இப்பொறுப்பில் நியமித்த போதே, ’’அடுத்தவர் ஆராய்ச்சியை தனது என்று கூறி காப்புரிமை பெற்று  விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் மதிப்பு மிக்க விருதான ‘ரஃபி அகமது கித்வாய் விருதை’ 2009ல் பெற்றுள்ளார்,’’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

வேற்று உயிரின் மரபணுவை கத்தரியில் புகுத்துவதில் புதிய முறையை பிறிதொரு விஞ்ஞானி உருவாக்கிட அதைத் தன் பெயரில் காப்புரிமை பெற்றவர். 

மேலும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வுக் குழுவின் விதிகளின் படி மேல் மட்ட பணிகளின் தேர்விற்கும், பதவி உயர்வுகளுக்கும் இரகசியப் பணிக்குறிப்பு சமர்பிக்கப்படுவது அவசியம். இவரது பணி இரகசியக் குறிப்பு 2004ல் இருந்தே அளிக்கப்படவில்லை. இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்வுக்குழு இரண்டு முறை உருவாக்கப்பட்டதும் நடந்துள்ளது. 

இவரின் மூத்த அதிகாரியாகவும் விஞ்ஞானியாகவும் தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்த முனை. ஆனந்தகுமார் (இவரும் மரபணு மாற்று வித்தகரே!!!) முனை.பன்சால் தனது தக்காளி, கடுகு, கோதுமை உள்ளிட்ட 8 மரபணு மாற்று ஆய்விற்காகப் பெற்ற ஆய்வு விதைகள் உள்ளிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் ஒப்படைக்கக் கேட்ட கடிதத்திற்கு  பதில் கூட அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

இத்தகையவரையே இந்திய தாவர வகைகளைக் காப்பதற்கான பெட்டகத்தின் இயக்குனராக நியமிக்கட்டுள்ளார். 

இந்த விவரங்களை எல்லாமே பத்திரிக்கைகளிலும் வந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

available online at


சில அண்மைக்கால சர்வதேச நிகழ்வுகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு ஏற்கெனவே விதித்திருந்த 10 ஆண்டுகள் தடையை பெரு நாடு மீண்டும் மே மாதத்தின் கடைசியில் உறுதி செய்தது. அதற்கு அடுத்த சில நாட்களுக்குள் பிலிப்பைன்ஸ் நாட்டு உச்சநீதி மன்றம் அந்த நாட்டு அரசு அனுமதியளித்திருந்த பி.டி கத்தரிக்குத் தடை விதித்தது. 

தாங்கள் வாங்கும் பண்டங்களில் மரபணு மாற்று விளைபொருட்கள் கலந்துள்ளதா என்பதை நுகர்வோர் அறிந்திட வேண்டும். அதற்கு பண்டங்களின் பொட்டலத்தில் அடையாளம் (லேபிள்) வேண்டும் என 90 விழுக்காடு அமெரிக்கர்கள் கேட்டும் போராடியும் வருகிறார்கள். 

ஆனால் அமெரிக்க ஐக்கிய அரசு அதை ஏற்கவில்லை, 

மான்சான்டோ அடையாளமிடல் என்ற கருத்தையே கடுமையாக எதிர்க்கிறது.. சில மாதங்களுக்கு முன் கலிபோர்னியா மாநில அரசு மக்களின் வற்புறுத்தலையடுத்து நடத்திய பொது வாக்கெடுப்பு நடத்தியது. மான்சாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள்.வழக்கின் இறுதி முயற்சி என்பது நம்பமுடியாத அளவிற்கு மில்லியன் டாலர்களில் விளம்பரங்கள் செய்து மிக மெல்லிய இடைவெளியில் அடையாளம் தேவை என்ற வாக்கெடுப்பை தோற்கடித்தன 

ஆனால் வெர்மாண்ட் மாநிலம் தன் மாநிலத்தில் இத்தகு அடையாளம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாய்னே-வும் இத்தகு விதியை உருவாக்கியுள்ளது.

கடந்த மாதம் உலகின் பல்வேறு நாடுகளில் 10 இலட்சத்திற்கும் அதிமான மக்கள் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான உணர்வை ‘மான்சான்டோவிற்கு எதிரான ஊர்வலமாக’நடந்தனர், ஆர்பாட்டம் நடத்தினர். 

ஐரோப்பிய மக்களின் தொடர் எதிர்ப்பு, புறக்கணிப்பின் காரணமாகவும், மக்களிடம் தங்களின் வாதங்கள் பலிக்கவில்லை, நம்ப வைக்கமுடியவில்லை என்பதாலும் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வந்த ஆய்வகங்களை மான்சான்டோ உள்ளிட்ட அனைத்தநு மரபணு மாற்று விதை நிறுவனங்களும் மூடிவிட்டன. இனி ஐரோப்பாவில் இவைகள் இருப்பதில் பயன் ஏதுமில்லை என்றும் அறிவித்துவிட்டன. 

ஹங்கேரியில் பயிரிடப்பட்டிருந்த 500 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மரபணு மாற்று மக்காச்சோள பயிரை அரசே எரித்து அழித்தது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில் மரபணு  மாற்றம் செய்யப்பட்ட கோதுமை கலந்திருப்பதைக் ஜப்பான் கண்டறிய அமெரிக்க கோதுமையை திருப்பி அனுப்பியது. பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் தத்தமது துறைமுகங்களில் இத்தகு கலப்படத்தைக் கண்டறிய கண்காணிப்பை அதிகரித்துள்ளன. 

அமெரிக்க கோதுமை விவசாயிகள் மான்சான்டோ நிறுவனத்திற்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து வருகின்றனர். இவையனைத்தும் மே மாத நிகழ்வுகள். ஜூன் மாத்தில் மனித மரபணுக்களை காப்புரிமை செய்வது செல்லாது எனத் தீர்ப்பு வழங்கி இன்னுமொரு குண்டைப் போட்டுவிட்டது அமெரிக்க நீதிமன்றம்.

அனைத்தும் மான்சான்டோ தலைமையிலான மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் விதை நிறுவனங்களுக்கும் அவைகளின் காப்புரிமை வெறிக்கும் எதிரான உலக உணர்வுகள். ‘விதைகளைத் தங்களின் சொத்தாக்கும்’ மான்சான்டோக்களின் கனவு கலைக்கப்பட்டு வருகிறது.. உலக உணர்வு இப்படியாக இருக்க மான்சான்டோக்கள் விதைகளின் மீதான தங்களது பிடி நழுவாதிருக்க சட்ட சந்துபொந்துகளை உருவாக்குவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியா என்ன செய்யவேண்டும்?

இந்தியாவிற்கு இ.உ.தொ.ஆணையத்திற்கு மாற்றாக உயிரிப்பாதுகாப்பிற்கான சட்டம் தான் உடனடித் தேவை.

எந்த மரபணு மாற்று உயிரினங்கள் எந்த வகையினதாயினும்அதை ஒருங்குபடுத்தும் அமைப்பின் முதன்மைப்பணி நவீன உயிரித் தொழில் நுட்பம் தரக்கூடிய ஆபத்துக்களிடமிருந்துமக்களையும் இயற்கைச்சூழலையும் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும்.உலகலெங்கிலும் பெரும்பான்மையான மக்களும், நிறைய அரசுகளும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை நிராகரித்துவரும் வேளையில் அதைத் தொங்கிக் கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

எந்த வகைச் சட்டமாயினும் இதன்அடிப்படையில் கீழ்கண்டவைகள் அடங்கியதாக இருக்கவேண்டும்.

முன்பாதுகாப்பு கொள்கையே (Precautionary Principle) மைய நிலையாக இருக்கவேண்டும்.

மாற்று வழிகளில் பயிர் பிரச்சனையை சரிசெய்யவழியில்லை என்கிற சூழ்நிலையில் தான் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை எடுக்கவேண்டும்.

மரபணுக்கள் வெளியேறா வண்ணம் பாதுகாக்ப்பட்ட வகையில் நடக்கும் சோதனைகள் மற்றும் வெளிச்சூழலில் வளர்த்தல் ஆகிய சோதனைகள் வரிசைக்கிரமமாக நடத்துதல் மற்றும் இவ்விரண்டிற்குமான அவையவைகளுக்கான தனித்தனி ஒருங்கமைப்பு, கண்காணிப்பு முறைகள் தேவை.

முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் சார்பு நிலையற்றவர்களாக சுதந்திரமானவர்களாக இருக்கவேண்டும்.

பொதுமக்களிடம் எதையும் மறைக்காத வெளிப்படையாக செயல்பாடு தேவை, 

சுதந்திரமான அலசி ஆராய்தல் தேவை

பொதுமக்கள் பங்கேற்பு கொண்ட ஜனநாயகமான செயல்பாடுகள் தேவை.

ஆபத்து மதிப்பிடல்-  

(அ) முழுமையான, சரியாக அறிவியல்ரீதியில் சரியாக வடிவமைக்கப்பட்ட சோதனைகளை பரிந்துரைத்து அவைகளை மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்குபவர்களைக் கடைபிடிக்கச் செய்யவேண்டும் மேலும் அந்த நிறுவனங்கள் அளிக்கும் ஆய்வறிக்கைகளை தனித்த சுதந்திரமான ஆய்வாளர்கள் கொண்டு பரிசீலிக்கப்படவேண்டும்

 (ஆ)எல்லா ஆய்வுகளையும் செய்யக்கூடிய, தேவையான எல்லா கட்டமைப்பு வசதிகளும் கொண்ட ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் சுதந்திரமாக அந்த ஆய்வறிக்கைகளை அலசி ஆராயவேண்டும்

தொடர் கண்காணிப்பு, மதிப்பீடுகள் தொடர்ந்து செய்தல் மற்றும் ஆபத்துகள் அறியப்பட்டால் அனுமதியை திரும்பப் பெறல் ஆகியன ஆபத்துக்கள மேலாண்மை செயலெபாட்டில் தேவை.

தவறு நேர்ந்தால் பொறுப்பேற்கும் வழிமுறையும் அந்தத்தவறுகளுக்கான தண்டனைகள், நட்டஈடு, தவறுகளை சரிசெய்தல்உள்ளிட்ட வழிமுறைகள் வேண்டும். மேலும் அவற்றிற்கு அந்தப் பயிர்களை உருவாக்கியவர்களை மட்டுமின்றி தவறிழைக்கும் ஆணையத்தவர்களையும் இந்த பொறுப்பேற்றலில் சேர்க்க வேண்டும்.

வாங்குவோர் விவரங்கள் அறிந்து வாங்கிப் பயன்படுத்தும் வகையில் இறக்குமதி உள்ளிட்ட எல்லா மரபணு மாற்றுப் பயிர் விளைபொருட்கலும்’’மரபணு மாற்று விளைபொருட்கள் கொண்டது’’ என்ற லேபிள் இருக்கவேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் முறையிடும் வகையில் எளிமையான முறையீட்டு முறைகளும், பொது நலன் கருதி எவர் வேண்டுமானாலும் முறையீடு செய்யும் வகையிலும் கால வரை நிர்ணயம் இல்லாத வகையிலும் முறையீடு செய்யும் முறை இருக்க வேண்டும்.

இந்திய கூட்டாட்சி அமைப்பு முறையில் உள்ளது. அரசியல் சாசனம் விவசாயத்தை மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் வைத்துள்ளது. ஆகவே மாநிலங்கள் தம் பங்கிற்கு தனக்கான கட்டுப்பாட்டு முறைகளையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்வதற்குரிய சரத்துகள் உள்ளதாக இருக்க வேண்டும். 

மேலும் அரசியல் சாசனம் அளித்துள்ள பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் கிராம சபைகளுக்கு உரிய தனது இயற்கை வளம் மற்றும் மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் உள்ள அதிகாரத்தை பறிக்கும் படியாகவும் இருக்க வேண்டும்.

Precatuionary Principle – முன்னெச்சரிக்கை கொள்கை – 

இது பல்லுயிர் பெருக்கம் மாநாட்டில் (Convention on Biodiversity-CBD) எடுக்கப்பட்ட கொள்கை. இந்திய அரசால் ஏற்கப்பட்ட கொள்கையாகும். இதன்படி எந்த வகையான தொழில் நுட்பமாயினும் அல்லது அதன் நடவடிக்கைகளாயினும் பாதிப்புகள் ஏற்படுத்தலாம் என்பதற்கான அறிகுறிகள் இருந்தால், அது முழுமையாக பாதுகாப்பானது என்று உத்திரவாதம் அளிக்க இயலாத போது, முன்னெச்சரிக்கை அடிப்படையில் அதை கைக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லது தடை செய்யலாம்.

Risk assessment 

மரபணு மாற்றுப் பயிர்கள் மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு, பிற உயிரினங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, இயற்கைக்கு பயிராக, விதையாக, கால்நடைத்தீவனமாக, உணவாக இன்னும் வேறு எந்த வடிவத்திதலாயினும் பாதிப்பு அளிக்குமா என்பது குறித்த ஆய்வுகள், நீண்டகாலத்தில் ஏற்படும் பாதிப்புகள், தொடர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் (Long term cumulative effect) உள்ளிட்டவைகளை மதிப்பீடுகள் ஆகியனவே ஆபத்து மதிப்பீடு எனப்படுகிறது.

Biosafety

மனிதர்கள் , பிற உயிரினங்கள் மற்றும் இயற்கைச் சூழலின் பாதுகாப்பை இது குறிக்கிறது. மாற்றி வைக்கப்பட்ட மரபணுக்கள் பிற தாவர, பயிர் வகைகளுடன் கலந்து மரபணுக் கலப்படமாதல், மரபணு மாற்றுப் யிர்களின் விளை பொருட்கள், பண்டங்கள் உணவு மூலம் பாதிப்பை உருவாக்கமல் இருப்பது உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.

(முற்றும்)
.

Monday, September 09, 2013

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 4


நீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மகாராஷ்டிர அரசு 29 விதைக் கம்பெனிகள் மகாராஷ்டிரத்தில் வயல்வெளி பரிசோதனைள் செய்ய சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற சான்று வழங்குவது பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுக்க அணுசக்தி கமிசனின் உறுப்பினரான முனைவர்.அனில் கக்கோட்கர் தலைமையில் குழு அமைத்தது. 

இவருக்கும் மரபணு மாற்றுப்பயிர்கள் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம். 

இங்கு தான் அணு உலை பாதுகாப்பு பற்றி ஆராய ஏவுகணை விஞ்ஞானி போவார், 

காட்டு வளம் காப்பது குறித்து இயற்பியல் விஞ்ஞானி குழுவில் சேர்க்கப்படுவார், 

மரபணு மாற்றுப் பயிர் பற்றி ஆராய அணு விஞ்ஞானி வருவார். 

முனைவர் அனில் கக்கோட்கர் தலைமையிலான குழு மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகத்திற்குச் சத்தமின்றிச் சென்று ஆலோசனை நடத்தியது. இருப்பினும் அதன் விவரங்களை அந்தக் குழுவோ, அரசோ தெரிவிக்க மறுத்துவிட்டது.

உயிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் சங்கத்தின் (Association of Biotech Led Enterprises - Agriculture Group (ABLE-AG) ) விவசாயப்பிரிவு ஐம்பதுக்கும் மேலான வயல்வெளிச் சோதனைகள் ஒவ்வொன்றும் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.  அவைகளுக்கான அனுமதியை விரைவில் அளிக்கவேண்டும் இந்தப் பருவம் தாண்டிவிட்டால் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்று அழுத்தம கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இவ்விரண்டும் ஒன்றையடுத்து மற்றொன்றாக நடக்கிறது..

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிடி கத்தரிக்கு விதித்த தடை, உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி விதிகள், மற்றம் வல்லுனர் குழுவின் 10 ஆண்டுகால தடை என்ற பரிந்துரை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் தடை பரிந்துரை, வயல்வெளி சோதனைகளுக்கு அனுமதி மறுப்பு, மிக அண்மை நிகழ்வாக மரபணுமாற்று அங்கீகாரக்குழு வயல்வெளி சோதனைகளுக்கு அளித்த அனுமதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிறுத்தி வைத்தது 

மறுபுறமோ மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை வளர்க்க, அவ்வகைப் பயிர்களை உருவாக்க அரசின் அமைப்புகளான இந்திய வேளாண்மைக்கழகம், தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம், தேசிய தாவர வளப் பெட்டகம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளை மரபணு மாற்று வேலைகளுக்கு ஏதுவான அதன் தலைமைப் பொறுப்புகளுக்கு மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கியவர்களையே, மான்சான்டோ சார்பு விஞ்ஞானிகளை தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப்படுதல் போன்றவைகளும் நடந்தேறுகிறது. 

இது மான்சான்டோவின் பாணி. 

கீழே உள்ள படம் அமெரிக்காவில் அது எப்படி அரச முடிவுகளை எடுக்கிறது என்பதை விளக்கும். தனது ஆளை அரசின் உயர் பொறுப்பில் அமர வைக்கும். பின் மிக எளிதாக அவர் மூலம் சாதகமான முடிவுகளை எடுக்க வைக்கும். 

இது அதன் நீண்டகால பாணி.


இதே அமெரிக்க பாணியை மான்சான்டோ இந்திய விவசாயச் சூழலை வளைக்க கடைபிடிக்கிறது. வலுவான வலை அரசாங்கத்தின் உதவியோடு பின்னப்படுகிறது.  இதன் உச்சகட்ட வெளிப்பாடு தான் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிராய் சட்ட வரைவாகும்.

பிராய் சட்டவரைவைத் தாக்கல் செய்யும் போதே வேளாண்மைக்கான நிலைக்குழுவின் தலைவரான பாசுதேப் ஆச்சார்யா அவர்கள் கடுமையாக எதிர்த்தார். 

அப்போது நாடாளுமன்றத்தில் நடந்தவை (தனியாக).

அவரின் எதிர்ப்பை மீறி வரைவு தாக்கல் செய்யப்பட்டதும் பொறுத்தமில்லாத அமைச்சகம் இந்த சட்ட வரைவை உருவாக்கி தாக்கல் செய்துள்ளது சரியல்ல. திரும்பப் பெறவேண்டும் என 4 கட்சிகளின் அவைத் தலைவர்கள் உள்ளிட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஜெயபால் ரெட்டிக்கு கடிதம் எழுதினர். மதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலரும் தனித்தனியே கடிதம் எழுதினர். தி.மு.க வின் மக்களவை உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் வேளாண்மையில் உள்ள சிக்கல்கள் பற்றி நடந்த விவாதத்தின் போது பிராய் தேவையில்லை எனக் கூறினார். 

மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லாத இந்தியாவிற்கான அமைப்பினர் உள்ளிட்ட பல மக்கள் அமைப்புகள் அமைச்சர் அவர்களைச் சந்தித்து தங்களின் அச்சத்தைத் தெரிவித்ததுடன் சட்ட வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தினர். 

அவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் கொண்ட கூட்டுக்குழுவிற்கு அனுப்பிடலாம் என சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். ஆனால் சபாநாயகர் சட்ட வரைவைத் தாக்கல் செய்த அமைச்சரின் பரிந்துரையை ஒதுக்கி விட்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுப்பிராமி ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான நிலைக்குழுவிற்கு அனுப்பினார்.

இந்த நிலைக்குழு கடந்த மாதம் பத்திரிக்கை விளம்பரங்கள் மூலம் ஜுலை 10 தேதிக்குள் சட்ட வரைவு மீதான கருத்துக்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. 

121 கோடி மக்கள் மீதும், இனிவரவுள்ள பல நூறு எதிர்காலத் தலைமுறைகள் மீதும் திரும்பச் சரி செய்யவியலாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட அமைப்பின் மீது அனைத்துத் தரப்பினரும் கருத்துத் தெரிவிக்க வழியில்லாத வகையில் சட்டம் திணிக்கப்படுகிறது. பிடி கத்தரி உள்ளிட்டவைகள் நம் மீது திணிக்கும் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் இந்த ஆணையச் சட்ட வரைவகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் பல அறிவுரைகள், உச்சநீதிமன்றத்தின் தொழில் நுட்ப வல்லுனர் குழுவின் கருத்துக்கள், வேளாண்மைக்கான நிலைக்குழுவின் பரிந்துரைகள், அறிவுரைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஆணையம் அமைக்க முயல்கிறது பிரதமரின் அலுவலகம். 

பிரதமர் அறிவியல் ஆலோசகர்கள் குழு இந்தப் பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளது. இந்த குழு தான் முன்பு பலத்த எதிர்ப்பைப் பெற்ற அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் காட்டியது.    

ஆனால் பிரதமர் அலுவலகத்தின் இந்த முயற்சிகளை முறியடித்து நம் விவசாயத்தை, உணவை பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் பங்கேற்ற பிராய் சட்ட வரைவை எதிர்த்தும், உயிரிப் பாதுகாப்பு சட்டத்தை வலியுறுத்தியும் தேசிய அளவிலான இயக்கதின் தொடக்கமாக தில்லியில் மாபெரும் ஆர்பாட்டம் கடந்த ஜூன் 25ம் தேதி நடந்தது. 

அந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் கலந்து இப்பிரச்சனையில் தங்களது ஒன்றுபட்ட ஆதரவை வெளிப்படுத்தினர். பி.ஜே.பியின் தலைவர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தி வாழ்த்து மற்றும் ஆதரவுக் கடிதம் அளித்திருந்தார். 

சி.பி.ஐ யின் திரு.வாக்னே, சி.பி.எம்-ன் திரு.யெச்சுரி,

’’அனைத்து ஆணையங்களுமே மக்கள் விரோதமானவை. அவை சட்ட மன்றங்களையும், நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தும் அதிக அதிகாரம் கொண்டவைகளாகவும் உள்ளன. அனைத்து ஆணையங்களையும் இன்று வணிக நிறுவனங்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டன,’’ என்று கூறி வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு. அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள், பல கட்சிகளின் விவசாய பிரிவுகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

‘கரங்கள் இணைவோம்’ என்ற கோஷத்தை முன் வைத்து தொடங்கப்பட்ட இந்த தேசிய இயக்கத்தில் பல கட்சிகளும் தங்களை இணைத்துக் கொண்ட நிகழ்வாக தில்லி நிகழ்வு நடந்தேறியது.

மறுநாள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்ட வரைவு மீது கருத்துக்கள் தெரிவிக்க குறைந்தது 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கக் கேட்டல், கருத்துக்களை தத்தமது தாய்மொழியில் தெரிவிக்க அனுமதித்தல் மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் பொது கருத்து கேட்பு நடத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி நிலைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வலியுறுத்திடக் கேட்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சட்ட வரைவின் மீது கருத்துக்களை ஆங்கிலத்தில் மற்றும் தமது தாய்மொழியில் பதிவு செய்திட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

90 நாட்கள் அவகாசம் தேவை என்ற வேண்டுகோள் ஒரளவு ஏற்கப்பட்டு கூடுதல் 45 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் தாய்மொழியில் தெரிவிக்க அனுமதி நிலைக்குழுவால் மறுக்கப்பட்டுள்ளது. வரைவை மொழிபெயர்ப்பது அமைச்சகம் செய்ய வேண்டிய வேலை என்று தெரிவித்ததாகத் தகவல் வந்துள்ளது.

உயிரித்தொழில்நுட்ப ஒருங்காற்று ஆணைய சட்ட வரைவு 2013-ல் என்ன தவறுகள் உள்ளன.            

1.உயிரித்தொழில் நுட்பத்தை வளர்ப்பது அதை ஒருங்குபடுத்துவது ஆகாது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் திரு.ஜெய்பால் ரெட்டி 

இந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில், ‘உயிரித் தொழில் நுட்பத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக,’ என்ற அறிமுகத்துடன் தான் சட்டவரைவைத் தாக்கல் செய்தார். உயிரித் தொழில் நுட்பத்தை வளர்க்க உருவாகும் சட்டம், ஆணையம் எப்படி அதை ஒருங்குபடுத்தும்? 

உயிர் பாதுகாப்பு-‘Biosafety protection’தான் இந்த சட்டத்தின் மையமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் ஆணைய வரைவில் அதற்கானதாக இல்லை. 

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1989 உயிர்பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த ஆணையம் ஏன் இதற்கு மாறாக இருக்கவேண்டும்.

2.பொருத்தமில்லாத அமைச்சகம் வரைவை உருவாக்கித் தாக்கல் செய்கிறது. ஆணைய வரைவின் முன்னுரையில் ஐ.நா பல்லுயிர் பன்மயம் மாநாட்டு முடிவுகளையும், கார்ட ஜென்னா உயிரிப்பாதுகாப்பு நடைமுறைகளையும் சுட்டிக்காட்டி அதன்படி இந்த வரைவு சட்டம் தேவை எனக் கூறுகிறது. 

மேற்குறித்த இரு நடைமுறைகளையும் வரையறைகளையும் செயல்படுத்துவது சுற்றுச்சூழல் அமைச்சகம். அறிவியல் மற்ற உம் தொழில்நுட்ப அமைச்ச்சகம் கோடிக்கணக்கில் நிதி அளித்து உயிரித் தொழில்நுட்பத்தை வளர்க்கிறது.

வளர்க்கும் அமைச்சகமே எப்படி கட்டுப்படுத்தும் ஆமைப்பை நடத்த முடியும்.

3.அரசியல் சாசனச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறிக்கும் சரத்துகளை இந்த வரைவு கொண்டுள்ளது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகும்.

4.குறுகிய, மையப்படுத்தப்பட்ட அதிகார மையம்- மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு பல அமைச்சகங்களின் பிரதிநிதிகள் உள்ள குழுவாக இயங்குகிறது. பிடி கத்தரியை அந்தக்குழு அனுமதித்த போது 31 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த 31 உறுப்பினர்கள் கொண்ட குழுவே தவறாக முடிவெடுத்ததை பின்னர் பல அறிவியல் ஆய்வாளர்களின் அறிக்கையைப் பெற்ற பின் தெரியவந்து பி.டி கத்தரிக்குத் தடை விதிக்கப்படது அனைவரும் அறிந்த ஒன்றே. 31 உறுப்பினர்கள் இருந்த போதே தவறு நிகழ்ந்தது. 

ஆனால் இந்த ஆணையம் 3 முழுநேர உறுப்பினர்கள் 2 பகுதி நேர உறுப்பினர்கள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. மேலும் ஓரிரு உறுப்பினர்கள் இடம் காலியாக இருந்தாலும் இந்தக் குழுவின் முடிவை யாரும் மறுக்கமுடியாது.(பிரிவு-13)

5. தகவல் அறியும் உரிமைச்சட்டம் வளைக்கப்படுகறது-

உயிரிப்பாதுகாப்பு ஆய்வுகள், சோதனைகள் ரகசியமானவைகளாகக் கருத முடியாது என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் இச்சட்ட வரைவு பிரிவு  28ல் 1 ன் படி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களைத் தரத் தேவையில்லை. இரகசிய வணிகத் தகவல்கள் இவை என மறுக்கலாம் என்கிறது.

6.வேளாண் உயிரித்தொழில் நுட்ப சிறப்புக் குழுவின் (Task Force on Agricultural Biotechnology) பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன-

தற்போது சமர்ப்பிக்கப்படுள்ள பிராய்  (BRAI – Biotechnology Regulatory Authority of India) சட்ட முன் வரைவு வேளாண் உயிரித்தொழில் நுட்ப சிறப்புக் குழு 2004ல் சமர்பித்த தனது பரிந்துரையில் தெரிவித்த அடிப்படை கருத்திற்கு சிறிதும் பொருத்தமாக இல்லை. 

அந்தக்குழு தனது அறிக்கையில் உருவாக்கப்படும் ஒருங்குபடுத்தும் அமைப்பானது, ‘சுற்றுச்சூழலின் பாதுகாப்பு. விவசாயக் குடும்பங்களின் நலன், விவசாயத்தின் இயற்கைச்சூழல் மற்றும் அதன் பொருளாதார நிலைத்த தன்மை, உண்போரின் உடல்நலன் மற்றும் ஊட்ட உணவு உத்தரவாதம், உள்நாட்டு, வெளி வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும்நாட்டின் உயிரிப்பாதுகாப்பு,’ ஆகியவற்றை அடி நாதமாகக் கொண்டே அமைக்கவேண்டும்.

7.ஒருங்கைப்பு மிகவும் குறுகியதாக, தொழில் நுட்பம் என்ற அளவில், உள்ளது

ஆணையம் மிகக் குறுகிய அளவில் உயிரிப் பாதுகாப்பைப் பார்க்கிறது. மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மரபணு மாற்று உயிரினங்கள் என்றளவில் மட்டுமே உள்ளது. விவசாயிகளின் நலன்கள், அவர்களின் வணிக நலன்கள், அறிவுச் சொத்துரிமை, ஊரக வாழ்வாதரம் உள்ளிட்ட பல பகுதிகளை ஒதுக்கிவிட்டது. இது தற்போதுள்ள மரபணு மாற்று மதிப்பீட்டுக்குழுவை விட மிகவும் பிற்பட்டதாகும்.

8.பல்லில்லாத சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு

ஆணையச் சட்டம் 26 ன் படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு உருவாக்கப்படும் என்கிறது. ஆனால் இதன் இன்னொரு விதி 27(4) இந்தக் குழுவை வெறும் சடங்கிற்கான பெயரவிலான குழுவாக அமைத்துள்ளது. இந்தச் சடங்கிற்கான குழுவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பின் காரணமாக அமைக்கப்பட்டுள்ளது,  பல்லில்லாத குழுவாக.

9.சுதந்திரமான நீண்ட கால சோதனைகள் இல்லாமை பிடி கத்தரிக்கு விதிக்கப்பட்ட தடையில் நீண்டகால சோதனைகள் இல்லாமை சுட்டிக் காட்டப்பட்டது. இது போன்ற நீண்ட கால சோதனைகள் குறுகிய கால சோதனைகள் காட்டிய முடிவுகளுக்கு நேர் மாறாக இருந்துள்ளதை அண்மைமையில் வெளியான நீண்ட கால சோதனைகள் காட்டியுள்ளது. இருப்பினும் இந்த ஆணையம் நீண்ட கால சோதனைகளை கட்டாயமாகுவது பற்றியோ, அந்தச் சோதனைகளைக் கண்காணிப்பது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

10.ஜனநாயகத் தன்மை இல்லாத செயல்முறை

மரபணு மாற்றுப் பயிர்கள் அனுமதியில் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தவேண்டும் என்கிறது கார்ட்டஜென்னா நடைமுறைகள்.

இந்த நடைமுறைகளை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும் அதற்கு நேர்மாறாக பொது மக்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு  சட்ட வரைவில் எந்த வழி வகைகளும் இல்லை.

11.பஞ்சாயத்து சபைகள், உயிர் பன்மயம் (பல்லுயிர் பெருக்கம்)  ஆணையம் ஆகியவற்றிற்கு அங்கீகாரமின்மை

அரசியல் சாசன சட்டத்தின் படி அதிகாரமுள்ள மூன்றாம் அரசாங்கமான பஞ்சாயத்து அரசுகள், அவைகளின் இதயமான கிராம சபைகளுக்கு உள்ளூர் இயற்கை வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அது போலவே உயிரினப் பன்மயத்தைக் (பல்லுயிர் பெருக்கம்) காப்பதற்கான சட்டத்தின்படி அமைக்கப்பட்டது உயிர் பன்மய ஆணையம். இவ்இரு சட்டபூர்வமான அமைப்புகளுக்கும் இந்த ஆணையத்தின் முடிவெடுத்தலில் பங்கு இல்லை.

12.அவசியம் தேவை என்பதை மதிப்பீடு செய்வதையும் மற்றும் மாற்று வழிகளை மதிப்பீடு செய்வதையும உள்ளடக்கவில்லை

மனுக்களை பரிசீலிக்கும் முன் அந்தக் குறிப்பிட்ட மரபணு மாற்றம் தேவை தான் என்பதை மதிப்பீடு செய்வதற்கோ, அது போலவே அந்தத்தேவைக்கு மாற்றுவழிஉள்ளதா என்பதை அறிந்திடவோ அதை மதிப்பீடு செய்வதற்கோ .ஆணைய வரைவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. 

இத்தனைக்கும் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட வேளாண் உயிரித் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு செயல்குழு- Agri Biotech Task Force- இவைகளையெல்லாம் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சிறப்பு செயல் குழு குறிப்பிட்ட மரபணு மாற்றுப் பயிர்களை சில சிறப்புப் பகுதிகளில் பயிரிடாமல் இருக்க, பரிசோதனை செய்யாமல் இருக்க வழிமுறைகள் வேண்டும் (எ-கா- பாசுமதி நெல் பயிரிடப்படும் பகுதிகளில் மரபணு மாற்று நெல் கூடாது) எனவும் வலியுறுத்தியது. ஆனால் இந்த வரைவு சட்டத்தில் இதற்கான எதுவுமேயில்லை.

13.இடர் மேலாண்மைக்கான திட்டங்கள் இல்லை-

மரபணு மாற்றுப்பயிர்கள் அணு உலைகள் உருவாக்கும் பிரச்சனைகள் போலவே விளைவுகள் பெரிதாகவும், நீடித்தத் தாக்கம் உள்ளதுமாகும். வெளியேறி இயற்கையில் மரபணுவை மீண்டும் திரும்பப் பெற எடுக்க இயற்கையில் வழியில்லை. இந்த நிலையில் இத்தகு ஆபத்து நேராதிருக்க செய்ய வேண்டியவைகள் பற்றியோ நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்கான வழிகள் இல்லை.

14.பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையில்லை-

மரபணு மாற்றுப் பயிர்களாளோ, வயல் வழி சோதனைப் பயிர்களாலோ பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கான தண்டனை என்பது ஏறத்தாழ ஏதுமில்லை.

15.அப்பீல் செய்வதற்கான வழிகள் மிகவும் சிக்கலானவைகள்-

உருவாகக்கூடிய பிரச்சனைகள் பலவாக இருப்பினும் அதன் விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளோ, நிவாரணம் பெறுவதற்கான வழிகளோ எளிதானதாக இல்லை.

நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழு மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து சுமார் ஆண்டுகள் இப்பிரச்சனை பற்றி விவாக அலசி, இந்திய அரசு உத்தேசித்துள்ள ஒருங்காற்று ஆணையம் குறித்த சட்ட வரைவு மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களையும் ஆராய்ந்து இந்தியாவின் தேவை இ.உ.தொ.ஆணையமல்ல 
ஆனால் உயிரிப்பாதுகாப்பிற்கான பாதுகாப்பு ஆணையம் என ஒருமனதான 2012 ஆகஸ்டில் அறிக்கை சமர்ப்பித்தது.



Friday, September 06, 2013

மரபணு மாற்ற விதைகள் - பயங்கரத்தின் கதை 3

உச்ச நீதிமன்றத்தின் வல்லுனர் குழு பலதரப்பினருடனும் கலந்தாலோசித்து, உள்நாட்டு, பன்னாட்டு விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளை விவாதித்து தனது இடைகால அறிக்கையை 2012 அக்டோபர் 7ம் தேதி அளித்தது.

இருபத்தி நாலு பக்க இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட கருத்துக்களில் முக்கியமானவைகள்

மரபணு விதைகள்- பயங்கரத்தின் கதை 1

மரபணு விதைகள்- பயங்கரத்தின் கதை 2

இந்தியாவில் தற்சமயம் உள்ள கண்காணிப்பு அமைப்புகளான GEAC மற்றும் RCGM ளில் தகுதி வாய்ந்த உயிரிப் பாதுகாப்பு (Biosafety) வல்லுனர்கள், ஆய்வாளர்கள் இல்லை. மேலும் தற்போதுள்ள இவ்விரு அமைப்புகளிலும் உள்ள 60 பேரில் முழு நேர உறுப்பினர்கள் எவருமில்லை. வேறு பணிகளை முதன்மையாக் கொண்ட இவர்களால் சமர்ப்பிக்கப்படும் (ஆயிரக்கணக்கான பக்க) ஆய்வறிக்கைகளை தீவிரமாகவும், நுணுக்கமாகவும் அலசி ஆராயும் வேலையை செய்ய இயலாது.

(இந்திய அரசால்) அனுமதி அளிக்கப்பட்ட ஒரேயொரு மரபணு மாற்றுப் பயிரான பிடி பருத்தி அனுமதிக்காக செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பல ஆய்வுகள் செய்யப்படாமல் உள்ளது. பல ஆய்வுகள் பிடி பருத்தியில் பிரச்சனை உள்ளதாகத் தெரிவிப்பினும் அவை கவனத்தில் கொள்ளப்படவேயில்லை.

இரத்த அணுக்கள், உடல் நலன், பால் சுரத்தல் உள்ளிட்ட பல வகை சோதனைகளில் இயல்பான நிலைக்கு மாறான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல தெரிந்தும் கண்டு கொள்ளப்படவில்லை.பிடி பருத்தியை அனுமதித்ததிலிருந்து தொடர் கண்காணிப்பு நடத்தியிருக்க வேண்டும் ஆனால் நடக்கவேயில்லை.

உயிரிப்பாதுகாப்பு என்பது தனி சிறப்புத் துறை. இத்துறையில் வல்லுனர்கள் இந்தியாவில் இல்லை என்பதை உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற வல்லுனர் குழு  வயல்வெளி சோதனைகள் நடத்துமிடத்தை தேர்வு செய்வதும், அவற்றைச் செய்ய உள் ஒப்பந்தம் மூலம் செய்வதும் உயிரிப் பாதுகாப்புத் தேவைகளின் படி சரியானதல்ல. அவற்றை விதை நிறுவனங்களே செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தனர்.

மரபணு மாற்றுப் பயிர்களை சிறு பாலூட்டிகளுக்குக் கொடுத்து செய்யும் ஆய்வுகளை 90 நாட்கள் ஆய்வாகச் செய்யாமல் இந்த ஆய்வு விலங்கின் பல தலைமுறைகளுக்கும் (Multi Generational Tests) நடத்த வேண்டும். அப்போது தான் இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளில் பாதிப்பு உள்ளதா என்பதை அறியமுடியும்.

கூடுதல் நச்சியல் ஆய்வுகள் (Toxicological)  நடத்தப்பட வேண்டும். மேலும் இந்திய உயிரினப் பன்மயம் (Biodiversity) மரபணுக் கலப்படத்தால் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். 

பிடி பருத்தி அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல பாதிப்புள்ள அம்சங்களையும், கவனிக்காமல் விடப்பட்ட அம்சங்களையும், மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் செய்யாமல் விடப்பட்ட ஆய்வுகளையும் செய்ய வேண்டும். தேவைப்படின் சர்வதேச வல்லுனர்களின் உதவியையும் பெறவேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள பிடி பருத்தியையும் நீண்ட கால ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வாமை பாதிப்புகள் (Allergenity Tests) உள்ளிட்ட பல சோதனைகள் முழுமையாக நடத்தி அதில் பிரச்சனையேதுமில்லை என்பது தெரிந்த பின்னரே வயல்வெளி சோதனைகள் நடத்த அனுமதிக்க வேண்டும். வயல்வெளி சோதனைக்களுக்காக நிரந்தமான பகுதி ஒதுக்கப்பட வேண்டும். ஆய்விற்காக அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களின் வயல்வெளி சோதனைகளை இப்பகுதிகளில் மட்டுமே நடத்த வேண்டும். விவசாயிகளின் நிலத்தில் எவ்வித சோதனைகளையும் நடத்தக் கூடாது.

கண்காணிப்பு அமைப்புகளிலும், அங்கீகாரமளிக்கும் அமைப்புகளிலும் உள்ளவர்கள் சார்பு நிலை (Conflict of interest) உள்ளாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் மரபணு மாற்றுப் பயிரை வேளாண் பொருளாதார வல்லுனர்கள், சமூக அறிவியல் வல்லுனர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுவும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு அம்சங்கள் (மரபணுக்கள் இடம் மாறுதல் மற்றும் மரபணுக் கலப்படம் குறித்த) மதிப்பீட்டை கணக்கில் கொண்ட தொழில் நுட்ப வல்லுனர் குழு இந்தியாவில் வயல் வெளி சோதனைகளுக்கு பத்தாண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 

இந்தியாவில் உரிய ஆய்வகங்கள், தேவையான தகுதிகள் உள்ள வல்லுனர்கள் வளர்த்தெடுக்கப்பட இந்த பத்தாண்டுகள் போதுமானதாக இருக்கும். ஆக அது வரை (பத்தாண்டுகளுக்கு) வயல்வெளி சோதனைகளைத் தடை செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்றது.

உச்சநீதி மன்றத்தின் வல்லுனர் குழு வயல்வெளி சோதனைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அறிக்கை மரபணு மாற்று ஆதரவாளர்களுக்கு விழிந்த மூன்றாவது அடியாக இருந்தது. 

எதிர் பார்த்தபடியே வேளாண் அமைச்சகம் ஏற்க முடியாது என்றதுடன் வல்லுனர் குழுவில் சேர மறுத்த முனைவர். சோப்ராவின் இடத்தில் முனைவர். பரோடா வை நியமிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் வேண்டியது. 

இந்த வழக்கில் வேளாண் அமைச்சகம் நேரடியாக எவ்விதத்திலும் தொடர்பில்லாமல் இருந்ததாக காட்டிக் கொண்டபோதிலும் இந்த விசயத்தில் முனைவர். பரோடா வை பரிந்துரைத்தது. ஏற்கெனவே சார்பு நில் உள்ளவர்கள் எவ்விதக் குழுவிலும் இருக்கக் கூடாது  என்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதும் வேளாண் அமைச்சகம்

அவரைப்  பற்றி முழு உண்மைகளை மறைத்து பரிந்துரைத்தது. அவரைப் பற்றிய விவரங்கள் 


நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழு மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து ஆராய்ந்தது. பல வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட இந்தக்குழு பல தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டது. 

மான்சான்டோ உள்ளிட்ட விதை நிறுவனங்களும் தத்தமது கருத்துக்களை அளித்தன. பிடி பருத்தி விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நடந்த விதர்பா பகுதியில் சென்று விவசாயிகளிடம் நேரில் விவரங்களைக் கேட்டறிந்தது. இந்தியா செய்து கொண்ட சர்வதேச ஒப்பந்தங்கள்,பிற நாடுகளில் உள்ள கண்காணிப்பு முறைகள் என எல்லாப் பக்கங்களையும் ஆராய்ந்தது நாடாளுமன்ற நிலைக்குழு.

இரண்டரை ஆண்டுகளாக கருத்துக் கேட்பு, விதர்பா பகுதியின் யவத்மாலில் பொதுமக்கள் கருத்து கேட்பு, கள விசாரணைகள் என விவாக அலசி ஆராய்ந்த பின் நாடாளுமன்ற நிலைக்குழு 2012 ஆகஸ்டு 9 ல் மரபணு மாற்றுப் பயிர்கள் மீதான தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

அறிக்கை பெற 


அந்த அறிக்கை மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், அவை சார்ந்த பரிசோதனைகளுக்கும் மேலுமொரு இடியாக விழுந்தது. இக் குழுவின் அறிக்கையில் உள்ள சில முக்கிய பரிந்துரைகள்-

‘பி.டி கத்தரியின் தொடக்கம் முதல் மரபணு மாற்று அங்கீகாரக்குழு அனுமதித்து பின் 2010 பிப்ரவரி 9ம் தேதி அமைச்சகத்தால் தடை விதித்தது வரையுள்ள எல்லாவற்றையும் தனித்த சுதந்திரமான தகுதி வாய்ந்த விஞ்ஞானிகளால் முழுமையாக ஆராயப்படவேண்டும்.”

“மரபணு மாற்று அங்கீகாரக்குழு மற்றும் மரபணு மாற்றங்கள் குறித்த மதிப்பீட்டுக் கமிட்டி இரண்டின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பரிசீலித்து தேவைப்படும் மாற்றங்களை உருவாக்கவேண்டும்.”

“மரபணு மாற்று அங்கீகாரக்குழுவின் முடிவெடுத்தலில் சார்பு நிலை உள்ளவர்கள், ஆதரவானவர்கள் தலையீட்டை நிறுத்த வேண்டும்”.

“பி.டி பருத்தியை உண்டதால் இறந்த செம்மறி ஆடுகள் பிரச்சனையைத் தனி வல்லுனர்கள்  குழு அமைத்து மீண்டும் ஆராயவேண்டும்”.

“மரபணு மாற்று உயிரினங்களை கண்காணிக்கும் அமைப்புகள் மீதான விமர்சனங்கள், புகார்கள் அளவைப் பார்க்கும் போது அந்த அமைப்புகள் சரியாக இயங்கவில்லை என்று தெரிகிறது. அந்த அமைப்புகளைச் சரி செய்யவேண்டும்”.

@“மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் மற்றும் அவ்வுயிரினங்களை கண்காணிக்கும் தற்போதுள்ள அமைப்புகளுக்குப் பதிலாக அரசு தேசிய பல்லுயிர் பெருக்கத்திற்கான ஆணையம்  (National Biodiversity Authority) மற்றும் உயிரிப்பாதுகாப்பு ஆணையம் இரண்டையும் இணைத்த ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும்”.

@“இந்திய பல்லுயிர் பெருக்கத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க ஆணையம் பாரம்பரிய கத்தரி விதையை அனுமதியில்லாமல் மகிஹோ-மான்சான்டோவிற்கு வழங்கிய பிரச்சனையை சரியாகக் கையாளாததற்குக் காரணம் மரபணு மாற்று அங்கீகாரக்குழுவுன் தலைவரே பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவராகவும் இருந்ததே>” என நிலைக்குழு அறிக்கையில் பதிவு செய்தது.

“அரசு சில ஆண்டுகளாகவே உயிரித்தொழில் நுட்ப ஆணையம் அமைப்பது என்ற கருத்தை கூறிவருகிறது. உயிரித் தொழில் நுட்ப  பிரச்சனைக்குள் உயிரினப்பன்மயம், சுற்றுச்சூழல் மனித, கால்நடைகளின் ஆரோக்கியம், இயற்கைச்சூழல் எனப் பல படிமங்கள் உள்ளன. 

இத்தகு நுட்பத்தை ஒருங்கு முறைப்படுத்தல் செய்ய மரபணு மாற்றுப் பயிர்கள் என்ற நிலையோடு மட்டும் பார்ப்பது போதுமானதாக இருக்காது,” என்றும் இதற்கு மாறாக, “உயிரிப் பாதுகாப்பு ஆணையம் (Biosafety Authority) அமைப்பதே பொறுத்தமானதாக இருக்கும்,” எனப் பரிந்துரைத்தது.

@“விதைக் கம்பெனிகளின், உயிரித் தொழில் நுட்பக்காரர்களின் வார்த்தைகளை அரசு கிளிப்பிள்ளை போல திருப்பிக்கூறாமல் அறிவியல் அடிப்படையில், பொதுமக்களின் நலன்களுக்காக நிற்க வேண்டும்”.

@“பிடி பருத்தி இந்தியப் பருத்தி விவசாயிகளின் சமூகப்பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. உண்மையைக்கூற வேண்டுமானால் பிடி மானாவாரிப் பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது”.

@“வயல்வெளி சோதனைகளை நடத்துவதில் மாநில அரசுகளின் முடிவு அவசியம் என்றதுடன் வயல்வெளி சோதனைகளைக் கைவிட வேண்டும்”.

பாசுதேப் ஆச்சார்யா தலைமையிலான வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில்,

‘நமது உணவு, விவசாயம், நல்வாழ்வு, சுற்றுச்சூழல் மீது மரபணு மாற்றுப் பயிர்களின் தாக்கம் குறித்த (மக்களின்) அச்ச உணர்வுகள் சரியானவையே,’ என்றும், ‘இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வாகாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு கருதுகிறது,’ என்றது’.

இந்த நிலைக்குழுவில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முக்கியப் பிரமுகருமான சத்யவர்த் சதுர்வேதி உள்ளிட்ட 10 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சியின் உறுப்பினர்கள் என 31 உறுப்பினர்களும் சிறிய  கருத்து பேதம் கூடத் தெரிவிக்காது ஒரு மனதாக இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்களாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான தங்கவேலு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன் மற்றும் திமுகவின் மக்களவை உறுப்பினர் தங்கவேலு ஆகியோரும் இருந்தனர். ஆயினும் அரசு இந்த அறிக்கை மீது இன்று வரை விவாதம் நடத்தக்கூட .மனமற்று, உதாசீனப்படுத்தி வருகிறது.

தன்னிடம் அறிக்கையாகவும் பிற வடிவத்திலும் கருத்துத் தெரிவித்தவர்கள் பட்டியலில் விதை நிறுவனங்களின் அமைப்பைச் சேர்ந்த பலர் கருத்துகள் பெற்றது வல்லுனர் குழு. 

மான்சான்டோ-மகிஹோ நிறுவனமும் கருத்து தெரிவித்திருக்கிறது. இருப்பினும் உச்சநீதி மன்றத்தின் வல்லுனர் குழுவின் அறிக்கை வெளியானதும் எதிர்பார்த்தபடியே விதை நிறுவனங்கள் கடும் விமர்சனங்களை வைத்தன, தங்களைக் கலத்தாலோசிக்கவில்லை என்றது. இந்திய வேளாண்மை அமைச்சகமும் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று கூறியதுடன் உச்சநீதி மன்றத்தின் வல்லுனர் குழுவிற்கு சோப்பாரவின் இடத்திற்கு முனைவர். ஆர்.எஸ்.பரோடா-வை சேர்க்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்திடம் வேண்டியது,

உச்சநீதி மன்றம் 2012 நவம்பரில் வேளாண் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று முனைவர். பரோடா அவர்களை தொழில்நுட்ப வல்லுனர் குழுவில் ஆறாவது உறுப்பினராக நியமித்தது. 

சார்பு நிலை இல்லாத சுதந்திரமாக இயங்கக் கூடியவர்களே எல்லா குழுவிலும் இருக்க வேண்டும் என்றும்  மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்குபவர்களாக, மரபணு மாற்று விதை உருவாக்கும் நிறுவனங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்காளக இருக்கக்கூடாது

உச்ச நீதி ம்ன்றமும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையும், உச்ச நீதி மன்றத்தின் தொழில் நுட்ப வல்லுனர் குழுவின் இடைகால அறிக்கையும், பி.ட்டி கத்தரிக்கு தடை விதித்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்திரவும் என்று தெரிவிக்கிறது. உச்சநீதி மன்றமே இதை பல முறை கூறியிருப்பினும் தனக்கு ஆலோசனைக்கூறக்கூடிய குழுவில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சார்பு நிலையில்லாதவரா என்பதை ஏன் கவனிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஆறாவது உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.பரோடா தனது பணிக்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரபணு மாற்று விதை நிறுவனங்களுடன்  தொடர்பில் இருந்திருக்கிறார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.

இவர் வேளாண்மை அறிவியலை முன்னெடுப்பதற்கான அறக்கட்டளை தலைவராகவும், ஆசியா பசுபிக் வேளாண்மை ஆய்ச்சி நிறுவனங்களின் சங்கம் என்ற அமைப்பின் நிர்வாகச் செயலராக இருந்திருக்கிறார்.

இவ்விரு அமைப்புகளும் மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று வருபவை. மேலும் இவர் மான்சான்டோவின் உலகளாவிய ஆலோசனைக்குழுவிலும் இருந்திருக்கிறார். 

இந்த உண்மைகளை அவரை பரிந்துரைத்த வேளாண் அமைச்சகமோ பரோடா அவர்களோ உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கவில்லை,

இன்று வரை இவர் உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவில் இருக்கிறார்.