எந்தத்துறை என்றாலும் பயிற்சி முக்கியம். இங்கே எல்லோரிடமும் அளவிட முடியாத ஏதோவொரு திறமை இருக்கக்தான் செய்கின்றது. சிலரால் அதனை இயல்பான பழக்க வழக்கத்தில் வெளிக்கொண்டுவர முடிகின்றது. பலருக்கும் தன்னிடம் என்ன திறமை உள்ளது? என்பதை அறியாமலேயே "கண்டதே காட்சி வாழ்வதே வாழ்க்கை" என்று வாழ்ந்து முடித்து இறந்து போய் விடுகின்றார்கள்.
வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் என்பது தனக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுகின்றார்கள். சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர். எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. என் குடும்பம் சரியில்லை.
என்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை. என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று எத்தனையோ காரணங்களைத் தங்களின் தோல்விக்காகச் சுட்டிக் காட்டுகின்றார்களோ ஒழிய தன் திறமை தன் உழைப்பு குறித்து எவரும் யோசிப்பதே இல்லை.
சிலருக்கு கிடைக்கக்கூடிய அறிமுகம் தான் அவர்களின் வாழ்க்கையின் புதிய பாதையை உருவாக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. அதன் பிறகே மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகின்றது. இந்தப் பெண்ணை முதல் முறையாகச் சந்தித்த போது இவர் குறித்து எவ்வித தனிப்பட்ட அபிப்ராயங்கள் எதுவும் எனக்கில்லை. ஆனால் ஒருவரிடமிருக்கும் நிறை குறைகளை அலசி அவரை எந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். இவரை மட்டுமல்ல இவரைப் போன்ற உள்ளே பணிபுரிந்த ஒவ்வொருவர் மேல் தனிக்கவனம் செலுத்தினேன்.
இவரின் தனிப்பட்ட ஆர்வமும் உழைப்பும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. என்னருகே கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல.
அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி.
சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல. அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும்.
பெருமையும் சிறுமையும் கடைசியில் சம்மந்தப்பட்டவர்களுக்கே வந்து சேர்கின்றது. பெரிய நிறுவனங்களில் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் மூளையாகப் பலரும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே அவர் சரியான நிர்வாகி என்ற பெயர் எடுக்க முடிகின்றது. எனக்கும் அப்பேற்பட்ட பெருமை பல இடங்களில் கிடைத்தது.
அப்படிக் கிடைக்கக் காரணம் இது போன்ற பெண்களும் ஆண்களும் பலவிதங்களில் உதவியுள்ளனர். என் வெறுப்பு விருப்புகளைப் புரிந்து நடந்துள்ளனர். பல பலவீனங்களை அனுசரித்து நடந்துள்ளனர். நான் விரும்பிய ஒழுக்க விதிகளை அலுவலகத்திற்குள் கடைபிடித்துள்ளனர். அவர்கள் கேட்ட வசதிகளை விருப்பங்களை மறுக்காமல் செய்து கொடுத்துள்ளேன்.
5 comments:
உங்கள் இந்தத் தொடர் பதுதியிலிருந்து அறிந்தது, பெண்களுக்கு இன்னும் இந்தச் சமூகம் விடுதலை அளிக்கவில்லை என்பதையே. பெண் எப்போதும் வக்கிரமமாகத்தான் பார்க்கப்படுகின்றாள். அவர்களுக்கு முழுமையான விடிவு காலம் இன்னும் வரவில்லை போலும்...இறுதியில் இப்படி சஸ்பென்ஸ் வைத்து முடித்து அடுத்தப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். அருமையான தொடர். தொடர்கின்றோம்.
தேவியல் இல்லம் - அவள் பெயர் ரம்யா = சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல. அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும்.- ஜோதிஜி. = தொழிற்சாலையைப் பற்றி, அதன் நிர்வாகம்,ஏற்படும் சிக்கல்கள் பற்றி அற்புதமான பதிவு. இவையெல்லாம் புத்தகமாக்கப் பட வேண்டும். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
வெற்றி என்பது கூட்டு முயற்சி என்கிறீர்கள்:) மிச்சத்தை அங்கே போய் படிக்கிறேன்!
பெண்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
தகவல்கள் நிறையத் தருகிறீர்கள்... புத்தகமாகக் கொண்டு வாருங்கள் அண்ணா....
தனிமரம் தோப்பாகாது...!
Post a Comment