ஒரு நூற்றாண்டின் நான்கில் ஒரு பகுதியை அனுபவத்திற்கு செலவழித்துள்ளேன் என்பதை வாசிக்கும் போது சற்று மிரட்சியாக இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகள் என்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் தானே? இந்த 25 ஆண்டுக்குள் உருவான சமூக மாறுதல்களும், மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நவீன தொழில் நுட்ப வசதிகளும் ஒவ்வொரு தனி மனிதர்களையும் நிறைய மாற்றம் அடையச் செய்து உள்ளது. நானும் மாறியுள்ளேன். நான் விரும்பாவிட்டாலும் நான் மாறியாக வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கின்றேன்.
நம்மிடம் இன்று பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயணம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அதற்கான தேவைகளும் உள்ளது. நெருக்கடிகள் நம்மை உந்தித் தள்ளுகின்றது. இன்று எவராலும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகின்றது.
இன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்களால் மட்டுமல்ல, பணிபுரிகின்ற பணிச்சூழலில் நினைத்த நேரத்தில் கண்டங்களைக் கூடக் கணப் பொழுதில் கடந்து விட முடிகின்றது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்திற்குள்ளே இருக்கும் அடுத்த ஊருக்குள் செல்ல முடியாமல், அந்த ஊரைப் பற்றி அறிந்திருக்காமலேயே வாழ்ந்து முடித்தவர்கள் அநேகம் பேர்கள். என் மாவட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்குக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் பள்ளிச்சுற்றுலா என்ற பெயரில் ஒரே ஒரு முறை தான் நான் சென்றுள்ளேன். இன்று நான் தமிழ்நாட்டுக்குள் இன்னமும் முழுமையாக செல்ல வாய்ப்பு அமையாத மாவட்டங்கள் மூன்று உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்யாகுமரி.
அடை மழை பெய்தால் கண்மாய் மீன். அளவான மழை என்றால் கடல் மீன். இது தவிர அன்றாட உணவில் ஆட்டுக்கறி. கோவில் திருவிழா என்றால் கோழிக்கறி. வீட்டு விசேடங்கள் என்றால் காய்கறிகளின் அணிவகுப்பு விருந்து தான் வாழ்க்கை. உணவு தான் முக்கியம். உணவே தான் மருந்து என்று வாழ்ந்த வாழ்க்கை. இன்று எப்போது தான் உங்கள் நாக்கை அடக்கப் போறீங்களோ? என்று மனைவி கேட்ட காலம் மாறி மகள்கள் கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்துள்ளது.
மார்கழி மாதம் குளிர் பொறுத்து, சில சமயம் சுடுதண்ணீர், பல சமயம் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நான்கு சந்துகள் தாண்டி இருந்த பெருமாள் கோவிலுக்கு ஓட்டமும் நடையுமாக அக்காக்களுடன் ஓடியுள்ளேன். பொழுது விடியாத நிலையில் இருட்டுக்குள் தடவி பயந்து ஓடி கோவிலை அடைந்து பூஜை முடிந்து பெற்ற வெண் பொங்கல், சுண்டல் சமாச்சாரத்தைச் சூடு பொறுக்க முடியாமல் தின்று முடிக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அடுத்த நாளும் அதே கோவிலுக்குச் செல்ல வைத்தது. இன்று கோவில்களில் கூடும் கூட்டமும், இதற்கென தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் எனக்கு வேடிக்கைப் பொருளாக மாறியுள்ளனர்.
வீட்டுக்கருகே இருந்த கோவில் குளக்கரையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அன்று பேசப் போகின்ற அரசியல்வாதியின் பழையைப் பேச்சை கேட்டுக் கொண்டே கடந்த போதும், இரவில் பாதித் தூக்கத்தில் தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது அறைகுறையாக அன்றைய அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கேட்டபடியே அவற்றை மறந்து போனதுண்டு. "இங்கே அரசியல் பேசாதீர்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை எந்த இடத்திலும் பார்க்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக 24 மணி நேரமும் ஒவ்வொரு இடத்திலும் தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் தீவிர அரசியல் கொள்கைகள் மாறி திருகுதாள அரசியல் அங்கீகாரம் பெற்று விட்டது.
ஆறாம் வகுப்புப் படித்த போது படக்கதைகள் அடங்கிய புத்தகத்திற்காக அலைந்த பொழுதுகள், பத்திரிக்கைகளில் வந்த நடிகர் மற்றும் நடிகைகளில் கிசுகிசுகளைப் படிக்க அலைந்த தருணங்கள், விடுமுறை தினங்களில் அருகே இருந்த நூலகத்தில் குடியிருந்த நேரங்கள் எனக் கழித்த பொழுதுகள். ஆனால் இன்று வாரப்பத்திரிக்கைகள் தவிர்த்து பெரிய கட்டுரைகள் அனைத்தையும் டேப்லெட் கணினி வழியாகப் படிப்பது தான் வசதியாக உள்ளது.
ஒரு நாள் கூடத் தவறாமல் சென்ற பள்ளிக்கூட வாழ்க்கை. பயம் கலந்த மரியாதையோடு ஆசிரியரைக் கண்டு ஒளிந்து திரிந்த வாழ்க்கை. கல்வி தான் நம் வாழ்க்கை. ஒழுக்கம் மட்டுமே நமக்கு உயர்வைத் தரும் என்ற அறிவுரைகள். கல்லூரி வந்த போதிலும் எதிர்காலம் குறித்த எவ்வித அவநம்பிக்கைகளையும் சுமக்காத நம்பிக்கைப் பொழுதுகள். இந்த உலகமே அழகானது என்று நினைத்து வாழ்ந்த காலங்கள். நாம் வாசித்த புத்தகங்களில் படித்த, பாதித்த சாதனையாளர்களைப் போல நாமும் ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்வான நிலைக்கு வந்து விடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்த வாழ்க்கை என் அனைத்தும் கடந்த 25 ஆண்டு பயணத்தில் மாறியுள்ளதை இந்த மின் நூல் வழியாகப் பேசியுள்ளேன்.
பள்ளிக்கூடத்தில் மக்குப் பையனுக்கும் சராசரி மாணவனுக்கு இடையே உள்ள ஒரு இடத்தை ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து இருந்தார்கள். காரணம் பாராட்டிவிட்டால் பாம்பு படம் எடுத்து ஆடி விடும் என்ற நம்பிக்கையில்.
"உன் அக்கா, அண்ணன் பெயரைக் கெடுப்பதற்காகவே நீ எங்களிடம் வந்து சேர்த்துள்ளாய்" என்ற பொதுப் பாராட்டு அவ்வப்போது கிடைக்கும். பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் முத்துச் சாமி வழங்கிய ஆசிர்வாதம் இன்னமும் என் நினைவில் உள்ளது. "இந்த வருடம் நீ தேர்ச்சி பெற மாட்டாய். கணக்கில் பத்து மதிப்பெண்கள் எடுத்தாலே ஆச்சரியம்" என்றார். அவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு 84 மதிப்பெண்கள் எடுத்தேன். தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தை கையாளத் தெரியாதவனாக இன்னமும் இருப்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் வாரந்தோறும் ஐம்பது லட்சத்தைக் கையாள வேண்டிய பொறுப்பை வாழ்க்கை எனக்கு வழங்கியுள்ளது. பணம் கைக்கு வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்த கணக்குகளை ஒப்படைத்து விடுவதால் "அவர் கணக்கு விசயத்தில் புலி" என்று பாராட்டும் அளவிற்கு நிறுவன நிர்வாக விசயங்களில் திறமையைக் காட்ட முடிகின்றது. எனக்குப் பின்னால் எவர் என் பதவியில் வந்து அமர்ந்தாலும் நான் உருவாக்கிக் கொடுத்த "வழிகாட்டலை"த்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்வாகம் சொல்லுகின்ற அளவிற்கு ஒவ்வொன்றிலும் எளிமை மற்றும் நேர்மையை உருவாக்க வாழ்க்கை கற்றுத் தந்துள்ளது.
நகைமுரண் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று போல.
மாற்றம் என்பது மட்டும் மாறாதது. மாற்றங்கள் தான் உங்களை வழி நடத்துகின்றது. மாற்றமே உங்களை உருவாக்குகின்றது. மாற்றத்தை உங்களால் உள்வாங்க முடியாத பட்சத்தில் தேங்கிக் கிடக்கும் குளத்தைப் போல உங்கள் வாழ்க்கை நாற்றம் எடுத்து விடும் என்று அர்த்தம். நான் மாறினேன். என்னை இந்தச் சமூகம் மாற்றியது. மாற்றத்தை உள் வாங்கினேன். தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டேன்.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டேயிருந்தால் இருட்டறையில் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க விரும்புகின்றோம் என்று அர்த்தம். பல சமயம் திடீரென வெளிச்சம் நம் மீது பரவும் போது நம் வளர்த்துக் கொண்டுள்ள குறுகிய எண்ணங்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக வாழ்க்கையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். என்றாவது ஒரு நாள் மற்றவர்களின் பார்வைக்குப் படத்தான் செய்யும்.
வெளிப்படைத்தன்மை எல்லா இடத்திலும் தேவையில்லை என்றாலும் உங்கள் மனசு விடாமல் துரத்தும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே தானே ஆக வேண்டும்? நான் என்னையே கேள்வியாக்கிக் கொண்டதுண்டு. என்னையே கேலிப் பொருளாக மாற்றிக் கொண்டதும். மற்றவர்களின் கேலிகளைக் கவனித்ததுண்டு. மொத்தத்தில் ஒவ்வொரு நாளையும் பள்ளிக்கூடத் தினம் போலப் பார்ப்பதுண்டு. காரணம் இங்கே ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்கள். நாம் மாணவர்களாக வாழும் பட்சத்தில்.
உணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றையும் பற்றி இந்த மின் நூலில் பேசியுள்ளேன். கடந்த 14 மாத மின் நூல் உலகில் என் முந்தைய ஆறு மின் நூல் வழியாக 66000+ நபர்களைச் சென்றடைந்துள்ளேன். "வாழ்க்கையில் இலக்கு தேவை" என்கிறார்கள். நிச்சயம் ஒரு லட்சம் என்ற இலக்கு நோக்கி இந்தப் பயணம் சென்று சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இந்த மின் நூலை நண்பர் ராஜராஜனுக்கு சமர்பித்துள்ளேன். அட்டைப்படம் உருவாக்கிக் கொடுத்த நண்பர் மனோஜ் மற்றும் என் மின் நூல்களுக்குச் சிறப்பான வகையில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றி.
ஏதோவொரு தருணத்தில், யாரோ ஒருவர், உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு என் எழுத்தை வாசித்துக் கொண்டிருப்பார் என்பதே யான் பெற்ற இன்பம்.