Sunday, December 16, 2012

காரைக்குடி உணவகம் - ருசியா சாப்பிட்டு பழகுங்க


எனக்கு ருசியா சாப்பிடத்தான் பிடிக்குமென்பவர்கள் மட்டும் இந்த பக்கம் வந்து நில்லுங்க?

என்ன எல்லோருமே மொத்தமாக வந்தாச்சா? 

அப்ப எல்லாருமே என்னைப் போல தீனி திங்ற குரூப் தான் போல. சரித்தான்.  

இந்த நாக்கு ருசிக்கு அலைந்து அலைந்து பர்ஸ் கனம் குறைந்தாலும் கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிறு கதறினாலும் பாழும் மனசு கேட்டால் தானே என்கிறார்களா?  

வாங்க இன்றைய ருசியைப் பற்றி ருசிகரமாக பேசுவோம். .

தொடக்கத்தில் காட்டில் கிடைத்ததை, கண்டதை பிடித்து பச்சையாகவே தின்றார்கள். பிறகு சுட்டுத்தின்றார்கள், அப்புறம் வேக வைத்தார்கள். கடைசியாக பல கலவைகளை சேர்க்கத் தொடங்கிய போது தான் ருசி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்து அதன் பின்னே அலைய ஆரம்பித்தார்கள். 

இன்று ஒரு கோழி தான். ஆனால் இந்த கோழியில் ஆயிரெத்தெட்டு சுவை.  

ஆனால் இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்து நாகரிகம் வளர்ந்து நாம் பலவகையில் முன்னேறி விட்டோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுங்க. அது தான் சத்தானது என்கிற நிலைக்கு வந்து விட்டோம். 

ஆனால் நாம் தான் எம்பூட்டு மாறிவிட்டோம் கித்தாய்ப்பாய் அலைகின்றோம்.

ருசி உணவா? இல்லை பசிக்காக உணவா என்று இன்று பட்டிமன்றம் முதல் பாட்டுமன்றம் வரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ருசியை தொடர்ந்து விரும்பினால் கூடிய சீக்கிரம் உனக்கு பசியே எடுக்காத அளவுக்கு குடல் கெட்டு விடும் என்று பயமுறுத்துகிறார்கள். 

ஒரு தட்டு நிறைய கஞ்சி. ஒரே ஒரு பச்சை மிளகாய். 

வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களின் கையை தொட்டுப் பார்த்தால் இரும்பு போல இருக்கும். எப்படி?

நோய்களுக்கு காரணம் இந்த ருசியா?

முதலில் நோய்க்கு காரணம் மனம். 

குழப்பமாக இருக்கின்றதா?

சாப்பாட்டில் நாம் பார்க்கும் சோறு, குழம்பு, காய், பொரியல், கூட்டு, மோர், ஊறுகாய் போல நம் பழக்கவழக்கங்களில் உள்ள விசயங்கள் எந்த அளவுக்கு நம்மை பாதிக்கின்றது? நாம் சாகின்ற வரைக்கும் விரும்பி சாப்பிட நினைக்கும் அளவை எப்படி குறைக்கின்றது என்பதை பார்க்கலாம்.

இப்போதைய வாழ்க்கையில் சோறு தான் கவலை. 

எல்லோருமே இதைத்தான் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.  இன்று கவலை இல்லாத மனிதனே இல்லை.  அடுத்த வேளை சோற்றுக்கு அலைபவன் முதல் ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு அதை காப்பாற்ற, அதற்கு மேலும் சாம்பாரிக்க அலைவர்கள் வரைக்கும் இந்த கவலை தான் படாய் படுத்துகின்றது.  

இந்த கவலை எண்ணங்கள தான் முதலில் வயிற்றை தாக்குகின்றது.  

ஒரு விசயத்தைக் குறித்து நீண்ட நேரம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்து பாருங்கள். உங்கள்  உடம்பில் மாறுதல்களை உங்களால் உணர முடியும். இப்போது சங்கடப்பட்டாலும் குடி சந்தோஷம் வந்தாலும் குடி என்பது போல எதற்குத் தான் கவலைப்படுவது என்கிற விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்த போதிலும் கவலைப்படுகின்றார்கள் என்பது தான் ஆச்சரியம். 

கவலைப்படுவதை விட அதை கணக்காக பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்க. 

சிலசமயம் உடனடி தீர்வு கிடைக்கும். சிலவற்றுக்கு பொறுமையாகத்தான் இருக்க வேண்டியிருக்கும். புள்ளைங்க படிக்க மாட்டேன் என்கிறது என்று கவலைப்படுவதை விட அந்த குழந்தை ஆர்வமாக படிக்க என்ன தடை? என்பதை உணர்ந்தாலே பாதி கவலைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். நாம் டிவி பார்க்கனும். ஆனால் பிள்ளைகள் படிக்கனும் என்றால் ஆயுள் முழுக்க இது கவலையாகத்தான் இருக்கும்.

கவலைகள் நம்மை என்ன செய்யும்? எங்கே அழைத்துச் செல்லும்? 

வயிறு பிசைகின்றதே என்பது போல தொடங்கும். வயிறு உருள்கின்றதே என்பதாக மாறும்.  அது தொடர்ந்து கொண்டே இருந்தால் வயிற்றுக்குள் அமிலம் சுரக்கும். அது வயிற்றுப் புண்ணாக மாறும். இரத்தம் குதியாட்டம் போட்டு பங்காளிங்களா வாங்க வாங்க என்று உடம்பில் உள்ள உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு அனுப்ப அடுத்தடுத்து கடிதாசி போடாமலேயே செய்திகள் கடத்தப்படும்.    கல்லீரல், மண்ணீரல், கனையம் என்று தொடங்கிய இந்த கடிதாசி பயணம் கடைசியில் நுரையீரல் போய்ச் சென்று ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கும். 

கடைசியில் இருதயம் வரைக்கும் போய்ச சேர்ந்து வாங்க பழகலாம் என்று சேர்ந்து ஆஞ்சியோகிராம் என்ற காதலியை அறிமுகப்படுத்தும். 

அது அலுத்துப் போனவுடன் தேசிய நெடுஞ்சாலை அதாங்க பை பாஸ் பயணத்தில் கொண்டு போய் விடும். . 

நேத்து தான் பார்த்து விட்டு வந்தேன்.  காலையிலே செத்துட்டாருன்னு வந்து சொல்றாங்கப்பா என்கிற சாவுச் செய்திகளை இப்போது சர்வசாதரணமாக கேட்க காரணமே இந்த திருவாளர் கவலை தான்.   

காரணம் அவருக்குள்ளே எத்தனை பிரச்சனைகள்? எத்தனை கவலைகள்?அணிவகுத்து நின்றதோ? எத்தனை நாட்கள் உள்ளே வைத்துக் கொண்டு தடுமாறினாரோ? 

எவருக்குத் தெரியும். தாங்க முடியாத போது இறுதிப் பயணத்திற்கு அழைப்பு வந்துவிடுகின்றது.

உணவு என்பது உயிர்வாழ்வதற்கு மட்டுமல்ல. அது உங்களை மகிழ்ச்சியடைய வைக்க, உங்கள் வாழ்க்கையை திருப்தி படுத்த, திரும்ப பெற முடியாத நேரங்களை நாம் அனுபவித்து வாழ்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த என்று இது போன்ற ஆயிரம் வழிகள் மூலம் நாம் நம் வாழ்க்கை அனுபவிக்க முடியும். 

அய்யோ இதைச் சாப்பிட்டால் ஒத்துக்காது.  அந்தப் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டே ஏக்கத்தை சுமந்து கொண்டேயிருப்பவர்களின் வாழ்க்கையைப் பாருங்க.  

அனுபவிக்க முடியாத வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு நரக எண்ணங்களை சுமந்து கொண்டு தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நான் வாழ்ந்த தொடக்க 20 வருட கிராமத்தில் கோழி என்பதை பார்த்ததே இல்லை. அப்பாவுக்கு பிடிக்காது. திருவிழா சமயங்களில் தான் உள்ளே திரியும் கோழிகள் குழம்பாக மாறும்.  ஆனால் ஆடும் கடல் உணவில் உள்ள அத்தனை சமாச்சாரங்கயையும் வகைதொகையில்லாமல் ரவுண்டு கட்டி அடித்தேன். தீனி என்றால் கொஞ்சநஞ்சமல்ல. குழம்பு என்றால் ரெண்டு தடவை. எலும்புக் குழம்பு என்றால் அதுவும் ரெண்டு தடவை. தெறக்கி வைத்த கறியை தெவிட்டாமல் தினற் அந்த காலத்தின் சுவை இன்னமும் நெஞ்சில் இருக்கிறது.

அடுத்து வந்த பத்தாண்டுகளில் முழுக்கோழியை நானே செய்து ஒரு நாளில் ஒரே மூச்சில் அப்படியே விழுங்க முடிந்தது. திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை அசைவ உணவக வளர்ச்சியிலும் அய்யாவின் பங்களிப்பும் இருந்தது. 

அடுத்த பத்தாண்டில் எல்லாவற்றையும் பொட்டி கட்டி வைத்து விட்டு புள்ளப்பூச்சி போல மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. தற்போது குழந்தைகள் சுவைக்காக தோன்றும் போது அவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைக்கின்றேன்.  

ஆசையை அளவு கடந்து அனுபவித்து விட்டு வெளியே வந்து விட வேண்டும்.  அனுபவிக்க தெரிவது போல அடக்கத் தெரியவும் வேண்டும். 

அவசரம் இல்லாத நேரத்தில் இந்த தளத்தின் உள்ளே செல்லுங்க.  


மருத்துவ உலகில் இவரைத் தெரியாதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். ஆனால் இவரை முட்டாள் என்று அழைத்தார்கள்.இதன் காரணமாகவே முட்டாள் எப்படி மருத்துவத்தை சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை சேவை போல செய்து கொண்டிருக்கிறார். 

காரணம் மருத்துவம் என்பது மக்களுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். அது மனிதர்களிடம் கொள்ளையடிக்கத் தான் இருக்கின்றது என்பதை சொல்ல மருத்துவ உலகில் ஏராளமான எதிர்ப்புகள் தொடங்கியது. ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வந்தார். இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர் என்று ஒவ்வொன்றாக கடந்து நோய்களுக்கு அடிப்படைக் காரணமே மனம் தான் என்று மருந்தில்லா மருத்துவம், இறைவழி மருத்துவம் என்று மக்களுக்கு தன் பாணியில் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். .

பிறப்பால் இஸ்லாமியராக பிறந்தாலும் இன்று மதங்களைத் தாண்டி வந்து சமூகத்திற்காகவே உழைக்கும் மகான் போல முடிந்தவரைக்கும் இந்த மருத்துவம் குறித்து, ஆங்கில மருத்துவத்திற்குப் பின்னால் உள்ள பித்தலாட்டங்களைப்பற்றி பேசி, எழுதி, கூட்டம் நடத்தி வருகின்றார். இவர் எழுதியுள்ள புத்தகங்களை வாசித்துப் பார்த்தேன்.  ஒவ்வொரு நோயும் எப்படி உருவாகின்றது என்பது முதல் படிப்படியாக அவர் நமக்கு புரிய வைப்பதை நீங்கள் வாசித்துப் பார்த்தால் தான் அந்த அனுபவத்தை உணர முடியும். இவரின் வலைதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.கோவையில் தொடர்ச்சியாக கூட்டம் நடக்கின்றது.. 

குறிப்பாக மனம் சார்ந்த விசயங்கள் எப்படி மனிதர்களை மாற்றுகின்றது. நோய்களை எப்படி உருவாக்குகின்றது என்பதை இந்த காணொளி காட்சிகள் மூலம் விளக்குகின்றார். முக்கியமாக நம்மிடம் உள்ள பழக்கவழக்கங்கள் தான் உருவாகும் நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார்.

அடுத்த ஒரு வாரத்தில் இவரின் காணொளி காட்சிகளை ஒவ்வொன்றாக பார்த்து வந்தால் உங்கள் வாழ்க்கை குறித்த உண்மையான புரிதல்கள் கிடைக்கக்கூடும்.   உங்களுக்கு கிடைக்கும் நம்பகத் தன்மை உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.       

என்ன பிடிக்குதோ சாப்பிடலாம்.  ஆனால் உங்கள் மனம் விரும்பும் உணவாக இருக்க வேண்டும்.  கலவை சரி இல்லை என்றால் வரும் எச்சரிக்கையை உணர்ந்து கொள்ள வேண்டும்.  மீறுதல் கூடாது. உணர்ச்சி குவியலாய் இருப்பவர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறவில்லை என்றால் அவர்களின் அத்தனை எழுச்சியும் படுத்து விடும் என்று அர்த்தம். 

ருசி மட்டுமே வாழ்க்கை என்று பார்த்து சாப்பிட்டவர்களின் வாழ்க்கை பசியின் அருமையை உணராது.  

பசித்த பின் உண. எப்போதும் பசியோடு இரு என்பதை அன்று முதல் இன்று முதல் சொல்லியிருப்பதன் காரணமே குடல் என்பது ஒரு சின்ன சந்து.  பத்து பேர் நிற்கினற இடத்தில் நூறு பேரை கொண்டு போய் அடைத்தால் என்ன ஆகும்?. 

கப்பு வாடை தூக்கத்தானே செய்யும்.  கடைசியில் நம்மை நான்கு பேர்கள் தூக்கிக் கொண்டு செல்லத்தான் உதவும். 

சாப்பிடுங்க. சாப்பிடுங்க. சாப்பிட்டுக் கொண்டேயிருங்க.  இரண்டு பேர் போய் உணவகத்தில் 500 ரூபாய் கொடுத்து அவர்கள் கொடுக்கும் கொஞ்சூண்டு ருசியை தின்று விட்டு ஏக்கத்தோடு வருவதை விட அந்த காசுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் போது வாழ்வில் என்ன மாறுதல் உருவாகும்?.

ருசியான அளவில்லா சாப்பாட்டுடன் அருமை மனைவியுடன் காதலிக்கவும் நேரம் கிடைக்கும். சமையலின் போது தக்காளி வெங்காயத்தை நறுக்கிக் கொடுத்து நானும் உதவுகின்றேன் என்று சொல்லி நைஸ் செய்வது எப்படின்னு சொல்லித் தரவும் வேண்டுமோ?

நான் எழுதும் அரசியல் பதிவுகளுக்குத்தான் ருசியான சாப்பாடு போல மக்கள் அதிக அளவு உள்ளே வருவார்கள். ஆனால் இந்த காரைக்குடி உணவகத்திற்கு ஞாயிறு அன்று வலைதளங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்ற பொது கருத்தையும் மீறி மக்கள் கொடுத்த ஆதரவு வியக்க வைக்கின்றது. 

ஆக மொத்தம் நாம் எல்லாருமே சாப்பாடு ராமனுங்க தானே.? 

ஒவ்வொரு பதிவும் குறைந்தபச்டம் 1500 பேர்களுக்கு சென்றடைகின்றது என்பதை விட சென்ற வாரம் எழுதிய இஞ்சித்தேன் பலரின் வாழ்க்கையில் அறிமுகமாகி நாங்களும் பின்பற்ற தொடங்கி விட்டோம் என்று அழைத்துச் சொன்ன போது எழுதியதன் திருப்தி கிடைத்தது.  நன்றி நண்பர்களே. 

நல்லாச் சாப்பிடுங்க. ருசியா சாப்பிடுங்க. 

ஆனால் வயிற்றில் எதையும் தங்க விடாதீங்க.  

தங்கினால் அந்த பக்கம் சென்று விடாதீங்க. 

அடுத்த ஞாயிறு சந்திப்போம்..  

28 comments:

P.S.Narayanan said...

டி டி கே சாலையில் ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்துக்கு எதிரில் உள்ள காரைக்குடி ரெஸ்டாரென்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்குள்ள சீ புட் ரெஸ்டாரென்ட் அதைவிட பிடித்தம்.

இங்கு நுழைந்தால், நீங்கள் கூறிய கட்டுப்பாடுகள் காணாமல்போய்விடும்.

ஈரோடு குப்பண்ணாவில் (பஸ் நிலையம் அருகில் - காலேஜ் ஹவ்ஸ் பக்கம்) பிரியாணி சாப்பிட்டதுண்டா? முட்டை போனஸ் தருவது கொஞ்சம் உதறல்.

யு கே எஸ் துளி:

கூடை நிறையா கத்திரிக்காய்
குப்பண்ணாவில் பிரியாணி

ப.கந்தசாமி said...

என்னங்க இது அக்கிரமம். திருப்பூர்ல ஏதோ புதுசா உணவகம் தொறந்திருக்காங்களாக்கும்னு ஓடி வந்த என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே. உங்களுக்கு பசி என்றும் தீராமல் இருக்க சாபமிடுகிறேன்.

தாராபுரத்தான் said...

நல்ல ருசிங்க..ருசித்தேன்.

தாராபுரத்தான் said...

நல்ல ருசிங்க..ருசித்தேன்.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி - அருமையான பதிவு - சாப்பிடுவது எப்படி - நீங்கள் புத்தகமே எழுதலாம் - அவ்வளவு செய்திகள் - சமையலறையில் காதல் - வெங்காயம் தக்காளி நறுக்கிக் கொடே காதல் - தூள் கெளப்புறீங்க போங்க - காணக் கிடைக்காத படங்கள் - தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள் - அட்டகாசம் - திருப்பூரில் உள்ள அத்தனை அசைவ உணவகங்களையும் ஆதரிப்ப்து தாங்கள் தானா ?

ஆசையை அளவு கடந்து அனுபவித்து விட்டு வெளியே வந்து விட வேண்டும். அனுபவிக்க தெரிவது போல அடக்கத் தெரியவும் வேண்டும். - நல்லதொரு அறிவுரை.

அத்தளத்தின் உள்ளே சென்று பார்க்கிறேன் - காணொளிக் காட்சிகளையும் பார்க்கிறேன்.

நன்கு சாப்பிட நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

கோவை நேரம் said...

கோவை மெஸ் போன்று நம்மள மாதிரி இவரும் காரைக்குடி உணவகம் வச்சி இருக்காருன்னு வந்து பார்த்தா..ஒரே கவலையா இருக்கு...சரி..சரி...சாப்பாட்டு கவலை தான்....
பதிவுகள் அருமை.....

ஜோதிஜி said...

எனக்கு கற்றுக் கொடுத்ததே நீங்க தானே? உங்க அழகின் ரகசியத்தை நானும் பொறாமையோடு ரசித் தேன் என்பதை இங்கே பதிவு செய்து வைத்து விடுகின்றேன்.

ஜோதிஜி said...

அடேங்கப்பா.... எழுதியதை ரசித்த உங்கள் விமர்சனத்தை ரசித் தேன்.

ஜோதிஜி said...

தினந்தோறும் தேனையும் ருசித் தேன் என்று சொல்லுங்க. பாதி நோய்கள் காணாமல் போய்விடும். நன்றிங்க. உங்களையும் பழனிச்சாமி அய்யா அவர்களையும் நிச்சயம் இந்த நேரத்தில் எதிர்பார்பேன். கரிகட்டா ஆஜர் ஆகிவிடுறீங்க.

ஜோதிஜி said...

நீங்க ஏற்கனவே வாட்டசாட்டமா இருக்குறீங்க. காரைக்குடி போல கோவை வட்டாரத்தில் சோற்றுக்கு மரியாதை இல்லை.இயற்கை உணவு கூழ் போன்ற சமாச்சாரங்களைத்தான் நான் அதிகம் தொடக்கத்தில் பார்த்துள்ளேன். இப்போது இந்த தலைமுறை நிறைய மாறியுள்ளது. நான் பார்த்த முதல் தலைமுறை மக்கள் அத்தனை பேர்களும் உங்களைப் போல கிண் என்று தான் இருக்கிறார்கள். காரணம் கடுமையான உழைப்பாளிகள்.

ஜோதிஜி said...

உண்மையான கடல் உணவுகளை நான் கண்டது சிங்கப்பூரில் தான். ஒவ்வொரு சீனர்களும் அவர்கள் குடும்பத்தோடு ஒரு பெரிய மேஜையை குத்தகை எடுத்துக் கொண்டு உண்பதை தூரத்தில் இருந்து பார்க்கும் போதும், அவர்கள் சாப்பாட்டில் காட்டும் நேர்த்தி, வகைவகையாக உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது, சாப்பிட்டுக் கொண்டே கலந்துரையாடல் என்றுஅத்தனையும் ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் அந்த மேஜையைப் பார்த்தால் ஒரு போர்க்களம் முடிந்த இடத்தின் சாட்சியாக இருக்கும்.

நீங்க சொன்ன ஈரோடு உணவகத்திற்கு சென்றுள்ளேன். அழைத்துச் சென்றவர் அடுத்த முறை உங்களைஇங்கே அழைத்து வர மாட்டேன் என்கிற சொல்கிற அளவுக்கு அதிக அக்கறை காட்டி சற்று நேரம் அமர்ந்து விட்டு வரும்படி ஆகிவிட்டது.

கடைசி வரிகளை கோடம்பாக்கம் திருடிவிடப் போகின்றது.

Unknown said...

அற்புதமான படைப்பு.. அருமை.

எம்.ஞானசேகரன் said...

எல்லாமே பயனுள்ள செய்திகள். இயற்கை வைத்தியம் என்றாலே ஒரு முறை அதை படித்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுவேன். உங்கள் பதிவுகளைத்தான் பொறுமையாக படித்தேன். இஞ்சித்தேன் தழார் செய்துவிட்டேன். இன்னும் சாப்பிடத் தொடங்கவில்லை.நீரிழிவு நோய்க்கான அறிகுறி இருக்கிறது. முதலில் சென்று பரிசொதனை செய்துகொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னதிலிருந்தே கவலை தொற்றிக்கொண்டது. கவலைப்படாம எப்படி பாஸ் வாழறது??

எம்.ஞானசேகரன் said...

எல்லாமே பயனுள்ள செய்திகள். இயற்கை வைத்தியம் என்றாலே ஒரு முறை அதை படித்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுவேன். உங்கள் பதிவுகளைத்தான் பொறுமையாக படித்தேன். இஞ்சித்தேன் தழார் செய்துவிட்டேன். இன்னும் சாப்பிடத் தொடங்கவில்லை.நீரிழிவு நோய்க்கான அறிகுறி இருக்கிறது. முதலில் சென்று பரிசொதனை செய்துகொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னதிலிருந்தே கவலை தொற்றிக்கொண்டது. கவலைப்படாம எப்படி பாஸ் வாழறது??

எம்.ஞானசேகரன் said...

வேகமாக தட்டச்சு செய்யும்போது எப்படியோ பிழை நேர்ந்துவிடுகிறது. பின்னூட்டத்தில் 'தயார்' என்பதுற்குப் பதிலாக தழார் என்றும், 'பரிசோதனை' என்பதற்குப் பதிலாக பரிசொதனை என்றும் வந்துவிட்டது. தவறுக்கு வருந்துகிறேன். இனி படித்துப்பார்த்து பின்னர் அனுப்ப முயற்சிக்கிறேன்.

ஜோதிஜி said...

இது இயல்பானது தான். சில நண்பர்களுக்கு பெரிதாக எழுதி விட்டு திடீரென்று புடுங்கிக் கொண்டு விடும். மறுபடியும் எழுத அந்த ப்ளோ கிடைக்காது. பொதுவாக வேர்ட் ல் அடித்து விட்டு பிறகே விமர்சனத்தில் பொருத்த வேண்டும். நன்றி. ஏன் கவலைப்படுறீங்க? அடுத்த பதிவில் உங்க நீரழிவை துவைத்து காயப் போட்டு விடலாம். விடுஙக. நான் சொன்னபடி அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அது தான் பெரிய பிரச்சனை.

saidaiazeez.blogspot.in said...

இனி கவலையேபடக்கூடாது என்று கவலை வந்துவிட்டது ஜோதிஜி.

//அப்ப எல்லாருமே என்னைப் போல தீனி திங்ற குரூப் தான் போல. சரித்தான். ... //

உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு "காகிதம்". ஆனால் இப்போதோ காடு அழிகிறது.
அடுத்த சிறந்த கண்டுபிடிப்பு "சுவை". இப்போது ஆரோக்கியம் அழிகிறது.
"தின்னே கெட்டான் துலுக்கன்" என்று ஒரு பழமொழி உள்ளது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா! இது அனைவருக்கும் பொருந்தும்.
so, நாவடக்கம் ரொம்ப முக்கியம்.
இல்லையென்றால் ரொம்ப "முக்க"வேண்டியிருக்கும்.

Raja said...

தங்களின் ஒவ்வொரு அறிமுகமும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் இவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளதை விட , அதை மற்றவர்களுக்காக பகிர்ந்து கொள்ள நினைப்பதே, தங்களின் மீதான மரியாதையை அதிகமாக்குகிறது. வாழ்த்துக்கள்

நன்றி ஜோதிஜி

ராஜா

ஜோதிஜி said...

இத்தனை வார்த்தைகள் கோர்த்து எழுதியதை உங்கள் விமர்சனம் முழுங்கி தின்று விட்டது. மகிழ்ச்சியாகவே இருக்கிறது. என் பள்ளிக்கூட நண்பனின் அப்பாவை நானும் அத்தா என்று அழைப்பேன். அவனோ தீனி விசயங்களில் மலை முழுங்கி மகாதேவன். அப்ப அத்தா நீங்க சொல்ற மாதிரி என் எதிரே அவனை திட்டி தீர்ப்பார். நினைவுக்கு வந்தது. நன்றி அஜீஸ்.

ஜோதிஜி said...

வாங்க ராஜன். பகிர்தலும் நன்றே தானே. அது தான் முறையும் கூட.

Unknown said...

இதோ வந்துவிட்டேன் எனக்கும் எடுத்துவையுங்கள்!!!!

சேலம் தேவா said...

உணவே மருந்து என்பதை வலியுறுத்தும் இன்னொருவர்.

Rathnavel Natarajan said...

திரு ஜோதிஜி அவர்களின் அருமையான உடல் நலம் பற்றிய, உணவுப் பழக்கம் பற்றிய பதிவு. ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

நன்றி தேவா

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

கட்டுச் சோறு கட்டி அனுப்பட்டா?

Unknown said...

என் பெரியம்மா திங்கட்கிழமைதோறும் அந்தியூர் சந்தை மாட்டு வண்டியில் போய்வருவதற்குள் (சுமார் 4 மணி நேரம்) என் பெரியப்பா ஒரு நாட்டுக்கோழியை அவரே சமைத்து முழுசாய்ச் சாப்பிட்டு விடுவார். என் பெரியம்மா சந்தையிலிருந்து திரும்பியதுமே கோழிகளின் எண்ணிக்கையைத்தான் பார்ப்பார்... என் பெரியப்பா கடுமையாய் உழைக்கும் விவசாயி. 88 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். அவர் காலமான அன்றுகூட மாலைவரை உழவு வேலை மேற்பார்வை மற்றும் உழவோட்டிகளுக்கு ஒத்தாசை செய்தார்... நாங்க 1 கிலோ கறி வாங்கி 5 பேர் 2 வேளைக்குச் சாப்பிடறோம்... என்னத்தைச் சொல்ல...

Unknown said...

அந்தக் கோழியை அவர் சமைப்பதே ரொம்ப எளிமையா இருக்கும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு இவ்வளவுதான் சேர்ப்பார்.

சிவா,
தெற்கு சூடான்,
ஆஃப்ரிக்கா...

nirmalshiva1968@gmail.com