Friday, November 15, 2013

கழுகுக்கூட்டங்கள்

நான் இருபது வயது வரைக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்றதே இல்லை. ஊரில் இருந்த ஒரே சிறிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் பெரும்பாலும் வயதானவர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். எப்போதும் போல அதே வெள்ளை மாத்திரை. ஊதா நிற களிம்பு. அங்குப் பணியிலிருந்தவர் தனியாகக் கிளினிக் வைத்திருந்தார். அவர் வரும் ராஜ்தூத் வண்டி இன்னமும் நினைவில் உள்ளது. 

ஆனால் சித்த மருத்துவம் படித்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் வைத்திருந்த பத்துக்குப் பத்து அறையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நான் மட்டுமல்ல. குடும்பத்தில் எவருக்கும் அடிக்கடி மருத்துவமனைகள் பக்கம் செல்லும் நிலையில் இருந்ததே இல்லை. காரணம் செமத்தியான சாப்பாடு. அதற்குச் சமமான உழைப்பு. வீட்டில் வேலையாட்கள் அதிகளவு இருந்த காரணத்தால் வீட்டு விறகடுப்பு திருவண்ணாமலை தீபம் போலவே எப்போதும் எறிந்து கொண்டேயிருக்கும். 

நொறுக்குத் தீனி வகையாறாக்களோ, கடைகளில் விற்கும் நொந்து போன பலகாரங்களையோ தின்றதில்லை என்பதை விட அதற்கு வாய்ப்பும் அமைந்ததும் இல்லை. 

ஊருக்குள் நிரம்பியிருந்த குளங்களிலும், வழிந்து நிற்கும் கண்மாயிலும், காட்டுச் சிவன் கோவில் பகுதியில் இருந்த தாமரைக்குளமும், ஒட்டியிருந்த பெரிய கிணற்றில் நீச்சலே தெரியாமல் குதித்து வெளியே வந்த போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜல்பு (ஜலதோஷம்) பிடித்ததே இல்லை. இராமநாதபுர மாவட்டத்தின் வெயிலின் தாக்கம் மட்டும் வருடந்தோறும் மறக்காமல் உடம்பில் வேணல்கட்டியை கொண்டு வந்து விடும். முகம் முழுக்கக் கட்டி பெரிதாக வரும். வீட்டில் எப்போதும் போல மஞ்சளை அறைத்து போட அடுத்தச் சில வாரங்களில் காணாமல் போய்விடும். 

திருப்பூர் வந்த போது மாறிய பழக்கவழக்கங்கள், நேரந் தவறிய உணவுகள், உணவக சாப்பாடுகள், இரவு நேர தொடர் உழைப்பு என்று மூன்று வருடங்கள் கொடுத்தப் பலனால் டைபாய்டு வருடந்தோறும் வந்த போது சற்று முழித்துக் கொண்டேன். திருமணம் ஆகும் வரையிலும் ஒல்லி உடம்பில் ஓராயிரம் நம்பிக்கைகள் இருந்த காரணத்தால் அதுவே பல சமயங்களில் எதிர்ப்பு சக்தியாக இருந்து உதவி கொண்டிருந்தது. 

குழந்தைகள் வந்த பிறகு தான் ஆங்கில மருத்துவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய போராட்டமே தொடங்கியது. 

முதன் முதலாக நண்பர் சொல்லி பல்லடம் சாலையில் இருந்த தமிழ்நாடு திரையரங்கம் இருந்த அந்தப் பெண் மருத்துவரை சந்தித்தோம். பத்துக்குப் பத்து அறையில் தான் இருந்தார். பரிசோதனைகள் முடிந்த பிறகு "உங்களுக்கு இரட்டைக்குழந்தை" என்று அவர் சொன்ன போது "தப்பா எடுத்துக்காதீங்க " என்று சொல்லி விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்கமலேயே அவர் கையை வலிக்கும் வரையிலும் குலுக்கிய போது என்னை வினோதமாகப் பார்த்தார். 

அது தான் அவருடனான முதல் சந்திப்பு. 

இனிதாகத் தான் தொடங்கியது. ஆனால் சில மாதத்திற்குப் பின்பு எங்கள் இருவருக்கும் கைகலப்பு என்கிற ரீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. 

முதல் மாதம் சென்ற போது பரிசோதனைகள் முடிந்து அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை அவர் கிளினிக்கிற்கு வெளியே இருந்த மருந்துக் கடையில் வாங்கிய போது நான் அவசரத்தில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அடுத்த மாதம் அவர் கிறுக்கலாக எழுதிய வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டே குழப்பத்துடன் மருந்துக் கடையில் கொடுத்த மாத்திரைகளை எழுதப்பட்ட சீட்டில் உள்ள முதல் எழுத்தை வைத்து உத்தேசமாக வைத்துக் கொண்டு "என்னங்க மாறியிருக்கே?" என்ற போது தான் அவர் எதார்த்தமாக "இரண்டுமே ஒரே கம்பெனி" என்றார். 

மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். 

ஒவ்வொரு மாதமும் மருந்தும் மாத்திரையும் மாறிக் கொண்டேயிருந்தது. செலவும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. அடுத்த மாதம் அவர் புதிததாக எழுதிய போது தைரியமாகக் கேட்டேன். 

"கொஞ்சம் புரியும்படியா எழுதலாமே?" என்றேன். 

"உங்களுக்குப் புரிஞ்சு என்ன ஆகப்போகுது? நான் எழுதிக் கொடுப்பதை வாங்கிக் கொடுங்க. வேற எந்த ஆராய்ச்சியும் செய்யாதீங்க " என்றார். 

இடையிடையே அவர் கேட்ட ஸ்கேன் ரிப்போர்ட் முதல் அவர் தனியாக வேலை செய்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு வரச் சொல்லி அங்கே சோதிப்பது வரைக்கும் நடந்து கொண்டிருந்தது. 

அடுத்த மாதம் ஒரு முடிவோடுதான் சென்றேன். 

மருந்துச்சீட்டு எழுதியவுடன் "எங்க சொந்தக்காரர் கடை வைத்திருக்கின்றார். நான் அங்கே வாங்கிக் கொள்கின்றேன்" என்றவுடன் வந்ததே கோபம். 

பொறிந்து தள்ளிவிட்டார். 

அதுவரைக்கும் அவர் எழுதிய மாத்திரை மருந்துகளின் விலையை மற்றக் கடைகளில் ஒப்பிட்ட போது விலையோ மலைக்கும் மடுவுக்கும் இருந்தது. இது தவிர அந்தக் குறிப்பிட்ட மருந்துகள் அந்தக் கடையைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைக்காது. 

நண்பர் வைத்திருந்த மருந்துக் கடையில் ஒவ்வொன்றையும் அவரிடம் விலாவாரியாகக் கேட்ட போது அவர் எழுதிக் கொடுத்த எதுவும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதையும் மனதில் குறித்துக் கொண்டு அவரிடம் செல்வதை நிறுத்தி விட்டோம். 

அதன் பிறகே என்ன ஆனாலும் பராவாயில்லை என்று காய்கறிகள், பழங்கள் என்று எங்களுக்குத் தெரிந்த வகையில் மாத்திரை மருந்துக்களைத் தவிர்த்து துணிவோடு இறங்கினேன். 

இன்று அவர் நகர்புறத்தில் மூன்று மாடிகள் உள்ள சொந்த கட்டிடத்தில் இருந்து கொண்டு மருத்துவச் சேவை செய்து கொண்டிருக்கின்றார். 

குழந்தைகள் வந்த பிறகு அடுத்தப் போராட்டம் தொடங்கியது. 

கிடைத்த அனுபவங்களின் பலனாக இயற்கையான சத்து மாவுச் சமாச்சாரங்கள் என்று இரட்டையருக்கு கொடுத்து இந்த மருத்து மாத்திரைகளைத் தவிர்த்த போதிலும் எதிர்பாராமல் வரும் சளித் தொந்தரவில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு மருத்துவர் அறிமுகம் ஆனால் அவர் சரியானவர் சரியில்லை என்று உடனே முடிவுக்கு வந்து விடுவதில்லை. 

அவர் சொல்லும் அத்தனை விசயங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்ட போதிலும் அடுத்த நான்கு மாதத்தில் அதே போலப் பிரச்சனை வரும் மாத்திரை மாறும். அதன் வீரியம் கூடும். செலவு அதிகமாகும். பல சமயம் இந்த வீர்யம் தாங்காமல் குழந்தைகளின் நாக்கு உதட்டிலும் புண் வரும் 

எந்த மருத்துவரும் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் எழுதிக் கொடுக்கும் எந்த மருந்து மாத்திரையும் அவர்கள் குறிப்பிட்ட மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைப்பதே இல்லை. நள்ளிரவில் பல சமயம் கொடுமையான சிக்கலில் மாட்டிய கதையெல்லாம் உண்டு. 

குழந்தைகளுக்குப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் இது குறித்துக் கேட்ட போது அவர் சிரிக்காமல் சொன்ன பதில். 

"ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தானே" என்றார். 

நான் போட்டிருந்த செருப்பு வெளியே கழட்டி வைத்து விட்டு வந்த காரணத்தால் அமைதியாகத் திரும்பி வந்து விட்டேன். 

திருப்பூரில் உள்ள தண்ணீரில் மற்றொரு பிரச்சனையும் உண்டு. 

வீட்டுக்கு வரும் தண்ணீரும், குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் இருந்து வரும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாகப் பல சமயம் லாரியில் வரும் நீரின் தன்மை என்று வெவ்வேறாக இருக்க இதன் பாதிப்பு உடனடியாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கண்கூடாகத் தெரியும். 

சளியில் தொடங்கி வைக்கும். காய்ச்சலில் கொண்டு போய் விடும். சில சமயம் சளி கோழையாக நெஞ்சில் தங்கி விடும். வாங்கி வரும் மாத்திரையும், மருந்தும் அந்த நேரத்தில் கேட்கும். அதன் எதிர்விளைவுகளும் உடனடியாகத் தெரியும். வேறு வழியே இல்லை என்கிற போது பார்த்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும். 

கடந்த பத்து வருடங்களில் ஏறக்குறைய ஆறு குழந்தைகள் மருத்துவராவது பார்த்திருப்பேன். ஒன்று வீர்யத்தின் அளவைக் கூட்டி உடனடி நிவாரணத்தில் இறங்கி விடுகின்றார்கள்.அல்லது விற்காத பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத கண்ட மருந்துகளை நம் தலையில் கட்டுவதைக் குறியாக இருக்கின்றார்கள். 

தற்போது ஒவ்வொரு மருத்துவரும் அவர்களின் மருத்துவமனையிலேயே மருந்துக்கடைகளையும் வைத்துள்ளார்கள். 

ஒவ்வொரு சமயமும் உடனடியாக மருத்துவரை மாற்றக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பலரையும் கேட்டு கேட்டு ஒவ்வொருவரிடமும் சென்றாலும் இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே. 

குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கும் வெங்கடாச்சலம் என்பவரை சில வருடத்திற்கு முன்பு சந்தித்தேன். 

நான் சந்தித்த போதே அவரின் வயது 70 இருக்கக்கூடும். 

அந்த ஒரு வருடமும் எந்தப் பிரச்சனையும் பெரிய அளவில் சந்திக்கவில்லை. அவரின் சிகிச்சை செய்யும் விதமும் வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விபரங்களைக் கேட்டு விட்டு நம்மை வெளியே அனுப்பி வைத்து விடுவார். அவர் மேஜையில் எப்போதும் கடலை மிட்டாய் வைத்திருப்பார். ஒன்றை எடுத்து முதலில் குழந்தைகளிடம் கொடுத்து விட்டுப் படிப்படியாகப் பேசத் தெரிந்த குழந்தைகளிடம் பேசிக் கொண்டே ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வருவார். 

சட்டையை முழுமையாகக் கழட்டச் சொல்லி அமைதியாகப் பரிசோதனை எல்லாம் முடித்த பிறகு கடைசியாக நம்மை அழைத்துச் சில பொட்டலங்களில் வைத்துள்ள பொடி போன்ற வஸ்துவை கொடுப்பார். சில மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுப்பார். 

மிக மிக அவசியம் என்றாலொழிய ஊசி போட மாட்டார். 

எட்டு வருடங்கள் கடந்து வந்து நின்ற போது குழந்தைகளின் ஆரோக்கியமென்பது நான் நினைத்த அளவிற்கு இல்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. ஒவ்வொரு முறையும் பேய்க்கு பயந்து பிசாசுக்களிடம் சிக்குவது போலவே இருந்தது. 

அப்போது தான் அவரைச் சந்தித்தேன். 

சித்த மருத்துவத்தில் இருந்தவர் அதனை விட்டு வெளியே வந்து வீட்டு புரோக்கர் தொழிலில் இருந்தார்.

ஆங்கில மருத்துவம் (மட்டும்) சிறப்பானதா?

மீதி அடுத்தப் பதிவில் 

32 comments:

அரவிந்தன் said...

ஜோதிஜி..சென்னை மற்றும் பெங்களுரில் இதுபோன்ற பிரச்சினை அதிகமாக இல்லையென்று நினைக்கிறேன், என் மகளை மூன்று வயதிலிருந்து 13 வயது வரை ஒரே மருத்துவரிடம்தான் அழைத்து செல்வோம்.இந்த அதிப்படியான மாத்திரைகள் எழுதி தருவது போன்ற பிரச்சினைகளை இதுவரை சந்தித்து கிடையாது

kamalakkannan said...

சித்த மருத்துவர்கள் என்றாலே லேகியம் விற்பவர்கள் என தவறாக முத்திரை குத்தப்பட்டு உள்ளனர் , போலி சித்தமருத்துவர்கள் வார இதழ்களில் தரும் கடைசி பக்க விளம்பரங்கள் சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையினை கேள்விக்குள்ளகிறது ? :(

துளசி கோபால் said...

அருமை. மருத்துவம் ஒரு வியாபாரமாகி வருசங்கள் பல ஆச்சு(

Avargal Unmaigal said...

நோயை குணமாக்க அல்ல பணமாக்க மருத்துவம் படித்தவர்களிடம் நீங்கள் சென்று இருக்கிறீர்கள்

கோவை நேரம் said...

கோடிக்கணக்குல பணம் கொடுத்து சீட் வாங்கி படிக்கிற ஆளுங்க இருக்கிற வரைக்கும் இந்நிலைமை மாறாது...

நம்பள்கி said...

நல்ல இடுகை! நம் மருத்துவர்கள் செய்யும் "தொழிலை" அப்படியே நூற்றுக்கு நூறு உண்மையாக எழுதி உள்ளீர்கள்!

அதே சமயம், துளசி கோபால் சொன்னது மாதிரி இப்போ வியாபாரமாகி என்று சொல்வது முழுவதும் சரியல்ல; நம் மருத்துவர்கள் என்றோ வியாபரத்தில் இருந்து வெளிவந்து அப்பட்டமான மொள்ளை மாரித்தனத்தில் இறங்கி விட்டார்கள் என்பதே உண்மை!

தமிழ்மணம் வோட்டு பட்டை இருந்தால் உங்களுக்கு பிளஸ் + 1 வோட்டு!

Anonymous said...

நம் தேசத்தில் மருத்துவத் துறைகளில் உள்ள பெரும் சிக்கல்கள் தனி மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் கூடவே மாறி வரும் வாழ்வியல், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் மக்களின் பகுத்தறிவின்மை. இங்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோ இவ் ஐந்தும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள். இவற்றை வைத்துக் கொண்டு ஏய்த்து ஏமாற்றும் மருத்துவர்களும் உண்டு, நல்ல முறையில் வைத்தியம் செய்வோரும் உண்டு. சென்னை மற்றும் புதுவையில் நல்ல மருத்துவர்கள் நிறையவே உள்ளனர். குடும்ப மருத்துவர் ஒருவரை வைத்திருப்பது நல்லது, நம்பகமான மருத்துவரை கண்டறிவது பகீரத பிரயத்தனமே என்ற போதும், நல்ல மருத்துவர்கள் உண்டு. அத்தோடு சித்தா, ஆயுர்வேத போன்றவற்றில் கூட போலிகள் மற்றும் பிராடுகள் உண்டு. முறைப்படி கல்வி கற்று பயிற்சி எடுத்தோரைத் தான் அங்கும் அணுக வேண்டும். மற்றது மருந்துகள் மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வும் மிக அவசியம். அலோபதி வைத்தியம் பலரால் ஏற்கப்படுவதன் காரணம் அதன் குணமாக்கும் சதவீதம் மிகுதி மற்றும் அவசர சிகிச்சை மற்றும் ஆபத்தான சிகிச்சைகளுக்கு அவையே உதவும். பாரம்பரிய மருத்துவங்களை வாழ்வியலோடு இணைத்து நோய் தடுப்பு முறைகளுக்கும், சிக்கலற்ற அவசரமற்ற சிகிச்சை முறைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

Business - 100% True...

ஸ்ரீராம். said...

அப்பட்டமான வியாபாரமாகிப் போனாலும் நல்ல வேளையாக அந்தந்த நோய்க்கு சம்பந்தப் பட்ட மருந்துகளைத்தான் இதுவரை தந்து வருகிறார்கள் என்பது ஒரு ஆறுதல்! :)))

உஷா அன்பரசு said...

அவசரத்திற்கு மட்டும் ஆங்கில மருத்துவம் பார்க்கலாம்... அதுவும் ஒரே மருத்துவராக பழகி கொண்டால் நல்லது. இருமாதம் முன் என் அப்பாவிற்கு காய்ச்சல் வந்த போது குடும்ப மருத்துவர் ஊரில் இல்லை என்று புதிதாக ஒரு மருத்துவரிடம் செல்ல... அவர் தந்த வீரியமிக்க மாத்திரை, ஊசியில் என்ன பின்-விளைவோ தெரியவில்லை...அப்பாவிற்கு தொடர் விக்கல் ஏற்பட்டு விட்டது... திரும்பவும் அவர்களிடம் இரண்டு நாள் போய் எதுவும் கேட்கவில்லை... இன்னும் பெரிய மருத்துவமனைக்கு சென்று எதேதோ பரிசோதனை என நீண்டு கொண்டு போனதே தவிர, தொடர்ந்து ஒரு வாரமாய் இடைவிடாமல் விக்கல் ... இப்படி தொடர்ந்து வரக்கூடாது என்று மற்றவர்களின் பயமுறுத்தல் வேறு... கடைசியாக ஹோமியோபதி சென்று சிகிச்சை எடுத்து கொண்டதில் இரண்டு நாட்களிலேயே குணமானது. ஹோமியோபதி மருத்துவர் மருந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு டாக்டராக சொல்ல கூடாது இருந்தாலும் சொல்கிறேன், " மயிலிறகை சுட்டு பஸ்பமாக்கி அதை தேனில் குழைத்து நாக்கில் தடவுவது முன்னோர்கள் வைத்தியம்... அதையும் செய்து பாருங்கள்..." என்றார். நானும் இணைய பக்கமெல்லாம் தேடியதில் தொடர் விக்கலுக்கு இந்த வைத்தியமும் போட்டிருந்தது. மயிலிறகை சுட்டு பஸ்பமாக்கி தேனில் குழைத்து தந்ததும் மறு நாளே பாதி குறைந்தது. ஹோமியோபதி மாத்திரைகள் ஒரு வாரம் எடுத்து கொண்ட பின் முழுதும் சரியானது. இதை விட்டு ஆங்கில மருத்துவம் தொடர்ந்திருந்தால்... இன்னும் பரிசோதனை செய்தே அலைக்கழித்து கொண்டிருப்பார்கள். ஹோமியோபதி, சித்தா எதுவானாலும் நல்ல மருத்துவராக தேர்ந்தெடுப்பது சிறந்தது. நான் அனாடமிக் தெரபி என்ற ஒரு மின்- நூலை படித்தேன்...அதில் தும்மல், சளி எல்லாம் நம் உடல் பார்த்து கொள்ளும் வைத்தியம் அதை control செய்வதன் மூலம் என்னவெல்லாம் நிகழ்கிறது என்று நிறைய விஷயங்கள்... வித்தியாசமாய் சிந்திக்கும் படி இருக்கிறது. 320 பக்கம் பொறுமையாக வாசித்தால் நமக்குள் கேள்வி எழுகிறது ஆங்கில மருத்துவம் பற்றி... அந்த மின் நூலை வாசிக்க விரும்பினால் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்..

டிபிஆர்.ஜோசப் said...

நீங்கள் சொல்வது உண்மைதான். வயதான மருத்துவர்களிடம் பலரும் செல்ல தயங்குகின்றனர். ஆனால் என்னுடைய அனுபவத்தில் அவர்கள்தான் சிறந்தவர்கள். அனுபவம் மட்டுமில்லாமல் வியாபார நோக்கம் அவர்களுக்கு இருப்பதில்லை. என்னுடைய தாய் மாமன் ஒருவருக்கு எண்பது வயதாகப்போகிறது. ஆனால் இப்போதும் அவர் தன்னுடைய பால்ய நண்பனான மருத்துவரிடம்தான் செல்வார். முப்பது கிமீ தூரம் பயணித்தாலும் அவரிடம் சென்றால்தான் அவருக்கு குணமாகும். கடந்த சில வருடங்களாக நானும் அவரிடம்தான் செல்கிறேன். தேவையற்ற பரிசோதனைகள் செய்ய சொல்ல மாட்டார். Trial and Error முறையில் மருந்துகளை எழுதிக்கொடுக்கும் வழக்கமே இல்லாதவர். வயதானாலும் சமீபத்தில் வெளியாகியுள்ள மருந்துகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி. கையெழுத்தும் மணி, மணியாய் இருக்கும். சொந்தத்தில் மருந்துகடை வைத்திருந்தாலும் அங்குதான் வாங்க வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்க மாட்டார். வீட்டுக்கு பக்கத்துலருக்கற கடையிலேயே வாங்கிக்குங்க என்பார்.

ஜோதிஜி said...

வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.

ஜோதிஜி said...

உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அவசியம் அந்த மின் நூலை அனுப்பி வைங்க. கடைசி பதிவு எழுதி வைத்த பிறகு சில குழப்பங்கள் மனதிற்குள் இருந்தது. உங்கள் பதிலைப் பார்த்ததும் மிகவும் உத்வேகமாக இருந்தது.

உங்களுக்கு ஓய்வு இருக்கும் நேரத்தில் இந்த பகுதியைப் பாருங்க. மின் நூல்கள் முழுக்க ஒரே இடத்தில் சேகரிக்கும் இடம்.

https://plus.google.com/u/0/communities/110777562963060602691

ஜோதிஜி said...

பலமுறை படித்து சிரித்துக் கொண்டேயிருந்தேன் ராம்.

ஜோதிஜி said...

என்னாச்சு, பிடிக்கவே முடியல?

ஜோதிஜி said...

தெளிவான விமர்சனம்.

குடும்ப மருத்துவர் இருப்பதை விட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களுக்கும் தனித்தனியான பெரிய பெரிய கோப்புகள் தான் வீட்டில் உள்ளது. ஒன்றைத் திறந்தாலே பத்து வருட விபரங்கள் அதில் உள்ளது.

ஜோதிஜி said...

நன்றிங்க. நல்லவர்களும் இருக்கின்றார்கள் நண்பா. எண்ணிகையளவில் மிக மிக குறைவு என்பது மட்டும் தான் இங்கே பிரச்சனை.

ஜோதிஜி said...

அப்ப எதிர்காலத்தில் நாமெல்லாம் சோதனைச் சாலை எலிகளா?

ஜோதிஜி said...

உண்மையும் கூட

ஜோதிஜி said...

அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுதியுள்ளேன் டீச்சர்.

ஜோதிஜி said...

நீங்க கொடுத்த வச்சு ஆளுங்க அரவிந்தன். இங்கே சந்துக்கொன்று ஆட்கள் இருப்பதால் எங்களைப் போன்ற ஆட்களை வைத்து சிந்து பாடுகின்றார்கள். என்ன செய்யவது. நீங்க சொல்வது போல நல்லவர்களும் இருக்கின்றார்கள். இதில் எழுதியுள்ளேன்.

http://deviyar-illam.blogspot.in/2012/12/blog-post_6.html

ஜோதிஜி said...

உங்களின் விமர்சனம் எனது கடைசி பதிவுக்கு உதவியது. நன்றி கண்ணன்.

ஜீவன் சுப்பு said...

//எந்த மருத்துவரும் பேச அனுமதிப்பதில்லை. // பேசுவதும் இல்லை :)

பூமித்தாயை புல்லட்டில் இருந்து முத்தமிட்ட காரணத்தினால் போன மாசம் டாலர் நகரத்தின் பிரபல எலும்பு முறிவு டாக்டரை சந்திக்க வேண்டிய கட்டாயம் . மூன்று மணி நேர தவத்திற்குப்பின் சொர்க்கவாசல் திறந்தது . வணக்கம் சொன்னவனுக்கு கை காட்டப்பட்டது இருக்கை . மேல் புருவத்தை உயர்த்தினார் ...! (பிரச்சினையை சொல்லுங்க என்பதற்கான குறியீடு )விஷயத்தை சொல்லிக்கொண்டிருந்தேன் முடிப்பதற்கு முன்பே டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கச்சொல்லி துண்டு சீட்டு கைகளில் திணிக்கப்பட்டது .

உள்ளேயே எக்ஸ்ரே- அஞ்சு நூறு . மீண்டும் தவம் . "நத்திங் டு வொர்ரி" . மீண்டும் ஒரு சீட்டு இம்முறை பெரியதாக . உள்ளேயே மருந்தகம் - மூன்று நூறு + ஐயாவுக்கு இரண்டு நூறு .

ஆக மொத்தம் பத்து நூறு கதம் ..கதம்.கதம் ... மேற்கொண்டு பிசியோ சிபாரிசு . அதுவும் உள்ளேயே ... அதற்கு முறைக்கு நூறாம் . இதற்க்கு மேல் உருவிக்கொடுக்க ஒன்றுமில்லை என்ற காரணத்தால் வேண்டாங்க நான் வெந்நீர் ஒத்தடமே கொடுத்துக்குறேன் ன்னு சொல்லி ஓடியாந்துட்டேன் .

ஜீவன் சுப்பு said...

டிஸ்கி :) - எக்ஸ்ரே டிப்பார்ட்மென்ட் ஊழியர் , நர்சிடம் சொன்னது ....!

நர்ஸ் இப்பவே ( மதியம் மணி மூன்று ) ஐம்பது முடிஞ்சுச்சு . டார்க்கெட் அச்சீவ்டு ...! போதும்பா ....!

ஜோதிஜி said...

அற்புதமான குறுங்கதை போலவே இருந்தது ஜீவன். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங் ஜிங்ன்னு ஆடுச்சாம்,

அகலிக‌ன் said...

அனாடமிக் தெரபி தான் மொத்த வாழ்க்கைக்குமான எளிய மருத்துவம். இதைப்பற்றிதான் ஹீலர் பாஸ்கர் என்பவர் தொடந்து பேசிக்கொண்டிருக்கிறார். DVD க்களும் கிடைக்கிறது. முயற்சித்துப்பாருங்கள் நம் உடல் பற்றியும் நோய்கள் பற்றியும் புதிய கதவுகள் திறக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

மருத்துவ தொழிலை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்! பல நல்ல மருத்துவர்கள் இது போன்ற வியாபாரிகளால் காணாமலும் போய்விட்டார்கள்! அருமையான பதிவு! நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சில இடங்களில் மருந்துக் கடைக்காரர்களே டாக்டருக்கு பக்கத்திலேயே இடம் பிடித்து வாடகை கொடுப்பதும் கொண்டு. மேலும் மெடிகல் ரெப் கள் டாக்டரை அடிக்கடி சந்தித்து தங்கள் பொருட்களுக்கு தாராளமாக ஆஃப்பர் கொடுப்பார்கள். அதன் பின்னரே மெடிக்கல் ஷாப்பில் அந்த மருந்துகளை வாங்கி வைப்பார்கள். மெடிகல் ஷாப்பில் நல்ல லாபம் உண்டு .
இன்னொரு தவறும் நம் மக்கள் செய்கிறார்கள் வாங்கும் மருந்துக்கு பில்கேட்டு வாங்குவதில்லை . பில் போட்டால் டேக்ஸ் போடுவார்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. உண்மையில் பில் போட்டால் பில் இல்லாமல் வாங்கும் தொகையை விட குறைவாகவே இருக்கும். பில் இல்லாவிட்டாலும் வர சேர்த்தே வாங்குவார்கள். குறைந்தபட்சம் இருபது ரூபாய்க்கு மேல் போனால் பில் கட்டாயம் கேட்டு வாங்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் போட்டி அதிகம் இருப்பதால் விலை குறைவாகவும் விற்பது உண்டு. நாமாக டாக்டரின் பரிந்துரை இன்றி காய்ச்சலுக்கு,தலைவலிக்கு, வயிற்று வலிக்கு என்று கேட்டு வாங்கும் மாத்திரைகளின் விலை அதில் குறிப்பிட்டதை விட அதிக மாகவே இருக்கும்.
மருத்துவ விதிப்படி மருந்து கம்பெனிகளுடனும்,பரிசோதனை நிலையங்களுடனும் டீல் வைத்துக் கொள்வது தவறு. ஆனாலும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜோதிஜி said...

உடல் ஆரோக்கியத்திற்கு நான் எப்போதும் பரிந்துரைக்கும் முக்கிய விசயம்

கவலைகளை உள்ளே அனுப்பாதே
சாப்பாட்டில் குறை வைக்காதே
செரிக்காமல் உண்ணாதே
தூக்கத்தை தூங்கி அனுபவி

வேறென்ன வேண்டும்?

ஜோதிஜி said...

பல நல்ல மருத்துவர்கள் இது போன்ற வியாபாரிகளால் காணாமலும் போய்விட்டார்கள்!

முற்றிலும் உண்மை.

ஜோதிஜி said...

இன்று பல இடங்களில் போட்டியின் காரணமாக 20 சதவிகித கழிவு என்கிற அளவுக்கெல்லாம் மருந்துக் கடைகளில் வியாபாரம் நெருக்கடியில் இருக்கின்றது. ஆனால் முக்கால்வாசி கடைகளில் முடிந்தவரைக்கும் லாபம் என்று தான் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய கடைகளில் நடக்கும்வியாபாரத்தை உத்தேசமாக கணக்குப் போட்டுப் பார்த்தால் பாதிக்கு பாதி லாபம்.

உஷா அன்பரசு said...

நன்றி அவசியம் பார்க்கிறேன்...!