Monday, November 18, 2013

நாம் எழுதுவது சரியா?

கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவுலகில் பல பெரியவர்கள் என் கண்களுக்குத் தெரிகின்றார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் தனக்கென்று ஒரு அடையாளத்தை நிறுவ முற்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். 

அவர்களின் ஓய்வுப் பொழுது என்பது எவருக்கும் தொந்தரவு இல்லாமலும் இது வரையிலும் அவர்களுக்குக் கிடைக்காத சுதந்திரமும் கிடைக்கின்றது. எழுதும் பதிவுகள் மூலம் அங்கீகாரமும் கிடைக்கின்றது. 

இந்தச் சமயத்தில் தமிழ் எழுத்துக்கள் கணினி வரை வராமல், வளராமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துக் கொள்வதுண்டு!. 

"உங்களால் மறக்க முடியாத நாள்"? என்று ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் போது நம்மிடம் உள்ள சுக, துக்க நாள் ஏதோவொன்று நம் நினைவுக்கு வரும். 

நான் ஆறேழு வருடத்திற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த போது ஏதோவொரு தேடலில் என் கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிந்த போது நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. எந்த நாள் என்று கூடத் துல்லியமாக நினைவில்லை. இன்றும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. 

கடந்த நான்கு வருடங்களில் என் எழுத்துக்கள் அச்சு ஊடகங்கள், புத்தக வடிவம் என்ற எத்தனையோ கடந்து வந்த போதிலும் கூகுள் தேடலில் தமிழ் மொழி வார்த்தைகள் வைத்து இன்று எதைப்பற்றி வேண்டுமானாலும் தேட முடியும் என்கிற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதைப் பார்க்கும் இதற்காக உழைத்தவர்களை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. 

என் தேடல் தொடங்கியது....... 

பலவிதமான தளங்கள் என் பார்வையில் பட்ட போதிலும் சில வாரங்களுக்கு முன் பார்த்த படித்த தளம் ஒன்று முக்கியமானது. 

நான் வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய பிறகு ஆச்சரியங்கள் மாறி இயல்பான நிலைக்கு வந்த பின்பு தமிழ் மொழி குறித்த உண்மையான ஆர்வமே எனக்குள் உருவானது. 

எழுதத் தொடங்கிய முதல் மூன்று மாதத்தில் என்னைப் போலவே எழுதிக் கொண்டிருக்கும் உள்ளூர் நண்பர் உங்கள் எழுத்து நடையைப் பார்த்து நானும் மொழியின் தன்மையை மாற்றியுள்ளேன். அழகான தமிழ்வார்த்தைகளை நானும் அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கின்றேன் என்றார். 

அப்போது அவரின் பாராட்டு எனக்குப் பெரிய அங்கீகாரமாகவே தெரிந்தது. 

ஆனால் எழுதும் போது அவசரத்தில் வரும் பிழைகள், தெரிந்தாலும் பணிச்சூழல் காரணமாகவும், பொறுமையின்மையினாலும் அதைக் கண்டும் காணாமல் நகர்த்திய சூழ்நிலைகள் என்று கடந்து வந்த இந்த ஐந்தாம் ஆண்டில் திடீரென்று ஒரு நாள் இந்தத் தளம் என் கண்ணில் பட்டது. 

ஏற்கனவே இந்தத் தளத்தைப் பார்த்து இருந்த போதிலும் இவர் உருவாக்கிய இந்த மென்பொருள் தான் அதிக அதிர்ச்சியைத் தந்தது.

காரணம் இதில் என் பழைய பதிவுகளைத் தூக்கிப் போட்டுச் சோதித்த போது தமிழ் மொழியைப் பற்றி நீ பேசத் தகுதியான ஆளா? என்று கேட்பது போல இருந்தது. 

நம் நாட்டில் உள்ள சாதிப்பிரிவினைகளை எதிர்காலத்தில் பொருளாதரக் காரணிகள் மாற்றி விடும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

சாதி ரீதியான பாகுபாடுகளைப் போலப் பணக்காரன், நடுத்தரவர்க்கம், ஏழை, பரமஏழை என்ற நான்கு வட்டத்திற்குள் நின்றே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது என் தனிப்பட்ட கருத்து. 

ஆனால் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வரும் ஒவ்வொரு துறை சார்ந்த தொழில் நுட்பமும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதை எவராலும் இறுதியிட்டு கூற முடியாத நிலையில் தான் இருக்கின்றோம். இந்த மாத அறிமுகமென்பது அடுத்த மாதம் புதிதாக வந்த ஒரு தொழில் நுட்பம் அதைக் காணாமல் போக்கி விடுகின்றது. 

சமீபத்தில் நான் ரசித்த பிரிவினைகளை உடைத்த தொழில்நுட்ப காணொளி காட்சியும் இதைத்தான் எனக்கு உணர்த்தியது. 

தமிழ் எழுத்துருவை கணினி மொழியில் உருவாக்கியவர்கள், உருவாக்க காரணமாக இருந்தவர்கள், அதனைப் பல வகையில் மேம்படுத்தியவர்கள், மேற்கொண்டு வளர்த்தவர்கள், பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள், எளிமைப்படுத்தியவர்களைப் பற்றிய தேடல் கடந்த ஒரு மாதமாக மனதில் ஓட நான் பார்த்த படித்த தளங்களைப் பற்றித் தனியாக எழுதுகின்றேன். 

ஆனால் இவர் உருவாக்கிய நாவி என்ற இந்த மென்பொருள் என்னைப் போன்ற அவசர மனிதர்களுக்கும்,தொடர்ந்து பதிவு எழுதிக் கொண்டு இருப்பவர்களுக்கும் முக்கியமாக உதவக்கூடியது. மொழிக் குழப்பம், எழுத்துப்பிழைகளை இனம் கண்டு பிடிக்கத் தெரியாமல் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் மிக மிகப் பயன் உள்ளதாக இருக்கும்.  நான் எழுதிய கடந்த நாலைந்து பதிவுகளை எழுதி முடித்த பிறகு இந்த நாவியில் போட்டு பரிசோதித்த பிறகே வலையில் ஏற்றுகின்றேன்.

இந்த மென்பொருள் வளரும் நிலையில் இருந்தாலும் கூட இப்போது அளிக்கும் சேவை என்பதே பல வகைகளில் பலன் உள்ளதாக உள்ளது.

மற்றொரு ஆச்சரியம், 

இன்று தமிழ் எழுத்துரு குறித்துத் தீவிரமாக இணையத் தளத்தில் (மட்டும்) விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தமிழ்மொழியின் காலத்தை 2500 வருடங்கள் என்று உத்தேசமாகக் கணக்கிடுகின்றார்கள். 

ஆனால் இன்று வரையிலும் இந்த மொழியின் தோற்றுவாய் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் நம்மிடம் இல்லை. காரணம் எந்த ஆவணமும் நம்மிடமும் இல்லை. 

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா அவர்களின் முயற்சியில் தொடங்கி இன்று வரையிலும் தமிழ் மொழிக்காகத் தனிப்பட்ட நபர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மொழி வளர காரணமாக இருந்துருக்கின்றார்கள். 

இதே போல நீச்சல்காரன் தனக்குப் பெயர் வைத்துக் கொண்டுள்ள இந்த நண்பரும் தமிழ் மொழிக்காகத் தொழில் நுட்ப ரீதியாகப் பல அற்புதமான வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வியாபாரிகள், பிழைப்புவாதிகள் என இரண்டு கூட்டத்திடமும் சிக்கியிருந்த இந்த மொழியை எவரோ ஒருவர் தன்னலமற்றுத் தங்கள் வாழ்க்கையை இழந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாகக் கணினியில் தமிழ் மொழி வளர்ந்த வரலாற்றிலும் நான் படித்த கட்டுரைகள் வாயிலாக இதைத் தான் கவனித்தேன். 

ஆனால் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் எவரும் தங்கள் வாழ்க்கையை இழக்காமல் தாங்கள் பணிபுரியும் சூழலுக்கிடையே இதிலும் ஆர்வம் செலுத்தி தமிழ் மொழியைக் கணினி மொழியாக மாற்றியுள்ளனர்.

அதிகப்படியான நண்பர்கள் கணினித்துறைக்கு அப்பாற்பட்டு வேறு துறையில் இருந்து கொண்டு தங்கள் சுய ஆர்வத்தின் மூலமே இந்த தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் உருவான போட்டித் சூழலில் அவரவருக்குத் தெரிந்த வகையில் பல விதமான எழுத்துருக்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கி இன்று "வலிமையானது வெல்லும்" என்கிற ரீதியில் இன்று எவர் வேண்டுமானாலும் தனக்கு வசதியான மென்பொருள் மூலம் தமிழ்மொழியில் கணினி வழியே, கைபேசி மூலம் உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் உரையாட முடியும் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளோம். 

இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. 

நாங்கள் மொழி 'இனக் காவலர்கள்' என்று சொல்லியவர்களும், 'தமிழே என் மூச்சு'என்றவர்களும் எவருமே இது போன்ற பணிகளில் தங்கள் சுண்டுவிரலைக்கூட நகர்த்தவில்லை.

அரசு சார்ந்து செயல்பட்ட மொழித்துறை அமைப்புகளும், இதற்கென உருவாக்கப்பட்ட குழுவினர்களின் செயல்பாடுகளும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான செயல்பாடுகளையே சாதித்துக் காட்டியுள்ளனர்.  இன்று வரையிலும் முழுமையாக கலைச்சொல் அகராதியை உருவாக்க முடியாமல் இருப்பதே இதற்கு சான்று. அருகே உள்ள கர்நாடகா நம்மை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இது போன்ற அமைப்புகள் தனிப்பட்ட நபர்களின் புகழைப் பரப்பவும், துதிபாடிகளை வளர்க்கவும், ஒதுக்கிய பணத்தை சுருட்டவும் மட்டுமே உதவியது.

இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

சுய ஆர்வமுள்ள தொழில் நுட்ப வாதிகளால் மட்டுமே இன்று "தமிழ் காலம் கடந்தும் வெல்லும்" என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளது. 

தமிழ் எழுத்துரு உருவாக்கம் என்பது தேவைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தமிழிலில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கூட அவர்கள் தேர்ந்தெடுக்க நிறைய (மென்பொருட்கள்) வாய்ப்புகள் உள்ளது. 

மீதி இருப்பது இரண்டே இரண்டு வேலைகள் மட்டுமே. 

ஒன்று மொழி மாற்றி. மற்றொன்று ஓசிஆர் மென்பொருள். 

தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றுவதும் உண்டான தொழில் நுட்பத்தில் நாம் தொடக்க நிலையில் தான் இருக்கின்றோம் என்றே நினைக்கின்றேன். கூகுள் வழங்கும் சேவை என்பது ஜுனுன் தமிழ் என்றே அழைக்கப்படுகின்றது. 

ஒவ்வொருவரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும் சர்வதேச ஆங்கில மொழிக்கு உண்டான மரியாதையைப் போல ஒரு மாநில மொழி அடைவது கடினம் என்றாலும் உலகமெங்கும் பரவியிருக்கக்கூடிய ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு இந்தச் சரியான மொழி மாற்றி மென்பொருள் வரும்பட்சத்தில் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ள எல்லைக்கோடு அழிக்கப்படும் என்றே நம்புகின்றேன். 

இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. 

ஓசிஆர் என்பதன் வளர்ச்சி தமிழ் மொழியில் சோதனை முயற்சியில் தான் உள்ளது. மேம்பட்டு வளரும் போது அத்தனை ஆவணங்களும் அழியாமல் பாதுகாக்கப்படமுடியும். 

கணினி சார்ந்த துறையில் வல்லுநராக இருப்பவர்கள் இரண்டு ரகமாக உள்ளனர். 

ஒன்று பணிபுரியும் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்கள். தமிழர்களாக இருந்தாலும் பணிபுரியும் சூழல் தந்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாகத் தங்களைக் கணவானாக மாற்றிக் கொண்டவர்கள். 

ஆனால் தமிழ் மொழியின் சூட்சமம் குறித்து அறியாமல், தான் கற்று வைத்துள்ள அறிவியல் படிப்புகளோடு இயல்பாக வளர்த்துக் கொண்ட தொழில் நுட்ப அறிவின் காரணமாகப் பலரும் இந்த மொழியின் வளர்ச்சியில் பிரமிக்கத் தக்க பங்களிப்பை செய்துள்ளனர். 

அனுபவ படிப்பு மூலம் கற்றுக் கொண்ட கணினி சார்ந்த அறிவையும் வைத்து இன்று தன்னை மொழி ஆர்வலாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர் நீச்சல்காரனனுக்கு என் வாழ்த்துகள். 

நீச்சல்காரன் தமிழ்மொழி குறித்த தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகள், அவரின் ஈடுபாடு, அவர் கற்ற தொழில்நுட்பத்தை இந்த மொழிக்காகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அவரின் உழைப்புக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு இந்த மென்பொருளை பரவலாக்கம் செய்ய உதவலாமே? தொடர்புடைய பதிவுகள்

இதற்குத் தானே ஆசைப்பட்டாய்?

50 comments:

சிவக்குமார் said...

நன்றி தகவலுக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

நீச்சல்காரன் - யாரும் இந்த தளத்தில் நீச்சல் அடிக்க தயாராக இல்லை... அனைவரும் சேர்த்து நீச்சல் அடித்தால் தான் பல தொழிற்நுட்பங்கள் அறிந்து கொள்ள முடியுமென்பதால் நானும் தனியாக நீச்சல் அடிக்க விருப்பமும் இல்லை... ஆனால் அதற்குரிய காலமும் வரும்... அப்போது இந்த தளத்தின் சிறப்புகளை பகிர்ந்து கொள்வேன்....

அபயாஅருணா said...

நன்றி தகவலுக்கு.
நாம் எழுதியதை NAVI ல் கட் பேஸ்ட் பண்ணிப் போட்டு
ஆய்வு செய் போட்டால் எந்த மாற்றமும் இல்லை
அப்படியானால் பிழை இல்லை என்று அர்த்தமா ?

தி.தமிழ் இளங்கோ said...

// நான் ஆறேழு வருடத்திற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த போது ஏதோவொரு தேடலில் என் கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிந்த போது நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. எந்த நாள் என்று கூடத் துல்லியமாக நினைவில்லை. இன்றும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. //

கம்ப்யூட்டர் திரையில் தமிழ் எழுத்துக்களை முதன் முதல் கண்டதும் நானும் உங்களைப் போலவே அடைந்த மகிழ்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் அளவில்லை. இன்றுவரை சுமார் 15 வருடங்களாக கம்ப்யூட்டரில் டைப் செய்கிறேன். ஆனால் கம்ப்யூட்டர் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்தது 2005 – இல் எங்கள் வீட்டிற்கு வாங்கிய போதுதான்.

நீச்சல்காரனின் நாவி உபயோகமான ஒன்றுதான். எனக்கு அதிகம் தேவைப் பட்டதில்லை.

// நம் நாட்டில் உள்ள சாதிப்பிரிவினைகளை எதிர்காலத்தில் பொருளாதரக் காரணிகள் மாற்றி விடும் என்று உறுதியாக நம்புகின்றேன். //

நிச்சயமாக. அண்மையில் ஒரு நிச்சயதார்த்தம் சென்று இருந்தேன். பெண் எஸ்சி. பையன் தேவர். இருவரும் சாப்ட்வேர் துறை. காதல் திருமணம். மணமகன் வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு நிச்சயம் செய்ய உறவினர்களோடு வந்து இருந்தார்கள்.


// நீச்சல்காரன் தமிழ்மொழி குறித்த தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகள், அவரின் ஈடுபாடு, அவர் கற்ற தொழில்நுட்பத்தை இந்த மொழிக்காகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அவரின் உழைப்புக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு இந்த மென்பொருளை பரவலாக்கம் செய்ய உதவலாமே? //

நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்! வாழ்த்துகிறேன்.!

(குறிப்பு: எனக்குள் ஒரு ஆதங்கம். எனக்கு தமிழ் டைப்ரைட்டிங் தெரியாது. இன்னும் நான் தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் PHONETIC முறையில் டைப் செய்வது குற்றவுணர்வாகவே தோன்றுகிறது. )


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நாவி பற்றி சமீபத்தில் தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிகையில் படித்தேன்.இன்னும் பயன்படுத்தியதில்லை. அரசாங்கம் மற்றும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் செய்யவேண்டிய பணியை தனி ஒருமனிதன் செய்வது பாராட்டுக்குரியது.அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதே போல அவலோகிதம் என்ற மரபுக் கவிதை சரி பார்க்கும் மென் பொருளை வினோத் ராஜன் என்பவர் உருவாக்கினார். ஓராண்டுக்கு முன்பா என் வலைப்பக்கத்தில் அம மென்பொருளை அறிமுகப் படுத்தி இருந்தேன். அதை மேம்படுத்த தகவல்களை அட்டவணை வடிவத்தில் தரமுடியுமா என்று கேட்டிருந்தார். என்னால் அது முடியவில்லை. பேராசிரியர்கள் பைகளைக் கழகங்கள் இத்தகையவர்களைக் பயன்படுத்தி இவர்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கக் வேண்டும். தொழில்நுட்பம் தொடர்பாக தமிழ்ப் பல்கலைக் கழகம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான உங்களுடய உதவி சார் இது .
சங்கடபடாமல் சொல்ல வேண்டுமென்றால் படிக்கவே இன்னும் கற்று கொள்ள வேண்டிய என்னை போலவர்கள் எழுத வந்த விபத்துக்கு முதல் உதவி செய்யும் ஒரு வழிகாட்டல் இந்த பதிவு .நன்றி

Amudhavan said...

\\ஆனால் இவர் உருவாக்கிய நாவி என்ற இந்த மென்பொருள் என்னைப் போன்ற அவசர மனிதர்களுக்கும்,தொடர்ந்து பதிவு எழுதிக் கொண்டு இருப்பவர்களுக்கும் முக்கியமாக உதவக்கூடியது. மொழிக் குழப்பம், எழுத்துப்பிழைகளை இனம் கண்டு பிடிக்கத் தெரியாமல் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் மிக மிகப் பயன் உள்ளதாக இருக்கும். நான் எழுதிய கடந்த நாலைந்து பதிவுகளை எழுதி முடித்த பிறகு இந்த நாவியில் போட்டு பரிசோதித்த பிறகே வலையில் ஏற்றுகின்றேன்.\\

ஜோதிஜி நீங்கள் சொல்லும் நாவிக்கு இன்னமும் நான் சென்று பார்க்கவில்லை. போதுமான நேரம் கிடைக்கும்போது நிதானமாய்ப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் நீங்கள் இங்கே எழுதியிருப்பது போலவும், அபயா அருணா எழுதியிருப்பது போலவும் இந்தத் தளத்தில் பதிவுகளையோ நமது எழுத்து வடிவங்களையோ சரிப்படுத்திக்கொள்ளும் வசதிகள் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. ஏனெனில் உங்களின் இந்தப் பதிவிலேயே
\\இருந்துருக்கின்றார்கள். \\ என்ற வார்த்தையிலும்,\\ நண்பர் நீச்சல்காரனனுக்கு என் வாழ்த்துகள்.\\ என்ற வார்த்தையில் வரும் 'நீச்சல் காரனுக்கு', 'வாழ்த்துக்கள்'- என்பவற்றிலும் எழுத்துப்பிழைகள் உங்களை அறியாமல் வந்துள்ளன. இதனை அந்தத் தளம் சரி செய்யவில்லையா?
இதனைக் குறையாகச் சொல்லவில்லை. அவர் இன்னமும் முழுமையாக இவற்றையெல்லாம் செப்பனிடவில்லையோ என்ற சந்தேகத்தினை முன்வைக்கின்றேன்.

நம்பள்கி said...

நாவி சரியாக வேலை செய்யவில்லயே!
அதற்க்கு
அதற்கு
இரண்டும் சம்மதம் என்கிறது!
_________________
வாழ்க்கை
வாழ்கை
இரண்டும் சம்மதம் என்கிறது!

_____________________
நான் அப்படி ஒரு முறை எழுதினபோது, ஒருவர் ற் கரத்திற்கு அப்புறம் க் வராது என்றார்.
முன்பே நான் உபயோகித்தேன். சரியில்லை.
தவறு யார் மீது?

phantom363 said...

You are absolutely right. In their own way, many individuals are helping maintain Tamil culture and familiarity to the Tamil diaspora. Today, thanks to internet, I who live in Canada, can see within hours, all popular Tamil TV shows (I am a Neeya Naana addict hee hee) within hours after their publication in Chennai... and that too without the commercials :). I subscribe to Vikatan online, and get the benefit of all editions of Vikatan in no time. Same goes for Tamil Hindu paper along with all the Dinas - mani karan & malar. I used to use google transliteration. But for whatever reason, when it stopped working on my PC, I switched to http://tamil.changathi.com/. There are numerous such sites. My only wish, is that more books should be available in e-version or pdf. I could buy these instantaneously, instead of buying them online and delivering them to my Chennai relatives, and picking all these up once a year. Thank You.

Neechalkaran said...

அபயாஅருணா & Amudhavan,
நாவி திருத்தி, வெறும் சாதாரணச் சந்திப்பிழைகளை மட்டும்தான் திருத்த பரிந்துரை செய்யும். சந்திப் பிழை என்பது புணர்ச்சி விதிகளால் அடையாளம் காணப்படும் க,ச,த,ப ஒற்று மிகல் மட்டுமே. அதனால் தாங்கள் எதிர்பார்க்கும் சொல் திருத்தி இதுவல்ல. நாவி இன்னும் வளரவேண்டிய தூரம் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி

Neechalkaran said...

நம்பள்கி,
நீங்கள் குறிப்பிடுவது சந்திப்பிழை என்ற வகைப்பாட்டில் வராது, மரபுப்பிழை என்கிறார்கள். தற்போதைக்கு நாவி அக்மார்க் சந்திப்பிழை திருத்தி மட்டுமே. இருந்தும் மரபுப் பிழைகளை ஓரளவு கண்டுபிடிக்கும். கவனித்தால் "அதற்க்கு" என்பது மரபுப் பிழை என்று கூறும்

Yarlpavanan said...

தங்கள் எழுத்துகளை வரவேற்கிறேன்.
தனித்து எவராலும் வலைப்பூக்களில் வெல்லமுடியாது.

Neechalkaran said...

அன்புள்ள ஜோதிஜி,
தாங்கள் குறிப்பிடும்படி தமிழுக்கான பணியோ, ஆர்வலரோ என்றெல்லாம் இந்தக் கருவிகளை வைத்துச் சொல்லிவிடமுடியாது. இவை வெறும் ஜாவாஸ்கிப்ட் மூலம் செய்யப்பட்ட சின்ன விசயமே. நாளையே வேறொருவர் இதைவிடச் சிறப்பாக ஒரு கருவி செய்வார். இருந்தும் தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்.

நம்பள்கி said...

வாழ்க்கை
வாழ்கை
இரண்டும் சம்மதம் என்கிறது!

இதை சோதனை செய்யுங்களேன்!

உஷா அன்பரசு said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி! நாவி இன்னும் முழுமையாக்கப்பட்டுவிட்டால் பெரிதும் பயனாகும். தமிழ் ஆர்வமுள்ள மாத இதழ் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் சிறிது நாட்களுக்கு முன் என்னிடம் புலம்பி கொண்டிருந்தார்... தட்டச்சு செய்பவர்கள் ,எடிட் பண்ணுபவர்கள் எப்படியாவது பிழை செய்து விடுகிறார்கள்... எல்லாவற்றையும் நானே ஒரு முறை பார்த்தால்தான் திருப்தியாக இருக்கிறது... " என்று ! நாவி முழுமையாக்கப்பட்டால் பத்திரிக்கையாளர்களுக்கு அதிகமாக பயனாகும் அல்லவா?

'பரிவை' சே.குமார் said...

அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா,
நாவி முழுமை அடைந்தால் நிறைய தமிழார்வலர்களுக்கு உதவியாக இருக்கும்.

எம்.ஞானசேகரன் said...

தமிழ் குறித்த தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை. தேட சிரமமில்லாமல் இணைப்புகளையும் கொடுத்துவிடுகிறீர்கள். நீச்சல்காரனின் பல பதிவுகளை வாசித்ததுண்டு. 'நாவி'யை முயற்சித்துப் பார்க்கவேண்டும். என்னுடைய கணிணியில் NHM Writer தான் நிறுவியிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் சமீப காலமாக முரண்டு பிடிக்கிறது. தமிழ் தட்டச்சின்போது திடீரென்று வேலை செய்யாது. கணிணியை நிறுத்தி மறுதுவக்கம் செய்தால்தான் தட்டச்சு செய்ய முடிகிறது.

டிபிஆர்.ஜோசப் said...

நீங்கள் சொன்னது உண்மைதான் . நாவின் எடுத்துக். காட்ட. முடியாத பல தவறுகள். இரு க்க. வாய்ப்பு ள் ள து . குறிப்பாக சொற்பிழைகள். உஙள் பதிவில். ஒரு. இடத்தில் 'இறுதியிட்டு ' என்ற. சொல்லை பயன்படுதியுள்ளீர்கள். .அறுதியிட்டு ' எனரு. இருக்க. வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதுவதை உறுதி செய்ய மென்பொருள். கண்டுபிடிப்பது அத்தனை. எளிதானதல்ல .

ஜோதிஜி said...

நன்றிங்க. நீங்க சொன்னதும் நண்பர் நீச்சல்காரனுடன் இந்த மொழி மாற்றி குறித்து பேசி நான் தெரிந்து கொண்ட விசயங்களை இந்த இடத்தில் வைக்கின்றேன். சிலர் படித்து அது குறித்து மேற்கொண்டு விபரங்கள் தரக்கூடும்.

ஜோதிஜி said...


1. தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புக் கருவி என்று கூகிளைத் தவிர எங்கும் கேள்விகூடப் பட்டதில்லை. ஆனால் அண்மையில் தமிழ அரசு நிறுவனம் ஓன்று ஆங்கிலம்-தமிழ்-இந்தி ஆகிய மொழிகளிடையே மொழிபெயர்ப்புக் கருவியைப் படைக்க விளைவதாக அரசுத் தொடர்புள்ள ஒரு தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது செயல்பாட்டில் எப்படி வரும் என்பதை யூகிக்க முடியவில்லை.

2. கூகிளின் மொழிபெயர்ப்பு யுக்தி மேற்கத்திய ஐரோப்பிய மொழி அடிப்படையிலேயே உள்ளது. எந்த இந்திய மொழியாக இருந்தாலும் அவை அதை முதலில் ஐரோப்பிய மொழி சார்ந்த ஒரு சொல்லாக மாற்றி, பின்னர் விரும்பும் மொழியில் அதன் இணையான சொல்கொண்டு நிரப்பி, முடிவில் மாற்றும் மொழிக்குத் தேவையான சில அனுசரணையைச் செய்வதாகவே கருகிறேன். அடிப்படையில் இரு மொழிகளும் மாறுபட்ட வாக்கிய அமைப்புகளை உடையவை. முன்னதின் வினைச்சொல் இறுதியில் வராது,
இந்திய மொழிகளில் வினைச்சொல் இறுதியில் தான் வரும். எனவே இதற்கு அதிகபடியான ஆய்வுகளும், கருதுகோள்களும் வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதனுடன் ஒப்பிடுகையில் இந்தியா மொழிகளுக்குள் இத்தகைய மொழிபெயர்ப்புகள் மிக எளிது. உருபுகளும் வினைச்சொற்களும் தான் மாறு வாக்கியத்தில் சொல் வரிசை பெரிதாக மாறுவதில்லை.
3, தமிழில் பொன்விழி என்ற எழுத்துணரியை மத்திய நிறுவனம் ஓன்று வாங்கி இலவசமாகவே வழங்குகிறது. http://ildc.in/tamil/Gist/htm/ocr_spell.htm ஆனால் எல்லாவித அச்சு நூலையும் இது படிப்பதில்லை. கணினி எழுத்துரு கொண்டு அச்சிடப்பட்டவைகளுக்கானது. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் புதிய ஒரு செயலாக்கத் திட்டத்திற்குப் பலரிடம் இதுபோல எழுத்துணரி பற்றி விசாரிக்கப்பட்டது. ஆனால் எந்திர அச்சு நூல்களுக்கு என வேறு கருவிகள் எங்கும் இருப்பதாதாகத் தெரியவில்லை.

பொதுவாகவே எந்த வணிக நிறுவனமும் மொழிசார்ந்து முதன்மை ஆய்வுகளில் ஈடுபடாது, அவர்களின் பொருட்கள் அம்மொழியினரிடம் போய் வருவாய் பெருக்கவே சில சொற்பத்தில் முதலீடு செய்யும் என்றே நினைக்கிறேன். கூகிளின் எதிர்கால இணைய ஆளுமையைப் பெருக்கவே மொழிகளில் கருவி செய்கிறார்கள். அது அவர்களின் தொழிலிற்கு முக்கியமானதும் கூட. அவ்வகையில் கல்விநிலையங்கள்,

அரசு நீங்கலாக, பதிப்பகங்கள், ஊடகங்கள் தான் முன்னேடிக்க வாய்ப்புள்ள வணிக நிறுவனங்கள். மற்ற மென்பொருட்கள் நிறுவனங்கள் எல்லாம் இவற்றின் கட்டளைக்கே வேலை செய்வார்கள், தானாகக் கருவிகள் செய்யமாட்டார்கள். மொழி நுட்பம் என்று வரும் போதுதான் மொழி ஆய்வாளர்களைத் தேடவேண்டும்,

இத்தகைய ஓ.சி.ஆர். கருவிக்கு மொழிநுட்பம் அதிகம் தேவையில்லை அதனால் அவர்கள் நினைத்தால் எழுத்துணரி கருவிகள் போன்ற மொழிநுட்பம் சாரா கருவிகள் படைப்பது எளிதே. நீங்கள் குறிப்பிடும் ஒப்பந்தம் போன்று அவர்கள் ஏற்பார்களா எனத் தெரியாது. ஆனால் நம்ம ஊரைச் சேர்ந்த நிறுவனங்கள் இதற்குச் சம்மதிக்கலாம். உதாரணத்திற்கு பொன்விழி மென்பொருளைச் செய்தது சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தான்.

ஜோதிஜி said...


தமிழ்ப்பிழை திருத்தி செய்வதற்கு மொழியாளர்களும், நுட்ப அறிவாளர்களும் கூட்டு சேர்ந்தால்தான் முடியும். இங்கே மேற்கூறிய மென்பொருள் நிறுவனங்களின் பங்கு குறுகும் அவர்கள் மொழியாளர்களைப் பணியமர்த்தி ஆய்வு செய்வது அரிது.
எனவே மொழியாளர்கள்/கல்விநிலையங்கள்/ஊடகம் தான் மென்பொருளாளர்களைப் பணியமர்த்தி காரியம் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழ்ப் பிழைத் திருத்தி என்று ஒரு மென்பொருளை முனைவர் தெய்வசுந்தரம் என்கிற பேராசிரியர் பல்கலைக் கழக மாணவர்களின் துணையுடன் முடித்துள்ளார். அது வணிக மென்பொருளாக உள்ளது. விலைக்கு விற்கப்பதால் அதனைப் பயன்படுத்திப் பார்த்ததில்லை. புத்தகக் கண்காட்சியில் கூட வைத்ததாக முனைவர். துரை மணிகண்டன் கூறினார்.

ஆனால் இந்தியா மொழிகளில் செம்மையான பிழை திருத்தி என்பது சவாலான காரியம்தான். ஆனால் செய்யமுடியாதது அன்று என்பது எனது திடமான நம்பிக்கை. அறிவுச் செல்வம் எல்லாம் மண்ணில் உள்ளது, நீங்கள் கூறியது போல அனைத்துக் கொள்ள பொருட்செல்வமே இங்கு தடை என்பது எனது பார்வை.

எனது பிழைகளைத் திருத்தத்தான் முதலில் ஒரு செயலி செய்தேன். அதற்காகக் கற்க கற்கதான் நானும், எனது செயலியும் வளர்ந்தோம். பிறகுதான் அதற்குப் பெயர் சூட்டி பொதுவில் வெளியிட்டேன். நாவிக்கு முன் நாவிக்குப் பின் என்றே எனது எழுத்துக்களைப் பார்க்கிறேன்.

எங்கெல்லாம் தமிழ் ஆர்வலர் குழுக்கள் மூலம் பணிகள் நடக்கிறது என்ற விசயங்கள் எல்லாம் அறியேன். ஆனால் அரசும், சில பல்கலைக் கழகங்களும் முனைகிறார்கள் என்று மட்டும் அறிவேன். யார் யார் அதில் பங்கு கொண்டுள்ளார்கள் என்றெல்லாம் தெரியாது. கூகிள் போல மைக்ரோசாப்ட்டும் மொழிபெயர் செயலிகள் பற்றி ஆய்வு செய்கிறது. யாஹுவும் செய்யக்கூடும். அதுதவிர மொழிபெயர்ப்பு பற்றி எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. மொழிபெயர்ப்பு பற்றிய எனது கருத்துக்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஜோதிஜி said...பிற இந்திய மொழிகள் பற்றி கொஞ்சம் அறிமுகம் இருப்பதால் நான் சொல்லக் கூடிய விசயம், இந்திய மொழிகளுக்கிடையே ஆனா மொழிபெயர்ப்புகள் எளிது. குறிப்பாக மலையாளம் என்றால் மிக எளிது. இன்னின்ன பெயர்ச் சொல்லுக்கு இன்னின்ன பெயர்ச் சொல், இன்னின்ன உருபுகளுக்கு இன்னின்ன உருபு, என்று எல்லா மொழி உறுப்புகளுக்கும் இணையான பிற மொழி உறுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

ஒரு சில நேரங்களில் ஒருவார்த்தைக்கு இனமான வார்த்தையைப் பிற வார்த்தை தீர்மானிப்பதாக இருக்கும். உதாரணத்திற்கு இந்தியில் பேசுபவரின் பால்வேற்றுமையை அறிந்து கொண்டு வார்த்தைகள் இடவேண்டும். ஆண் என்றால் மேரா, பெண் என்றால் மேரி என்றால் தான் "நான்" என்ற பொருள் வரும். மேலும் அறிய எனது இந்தி மொழி விளக்கங்களைப் பாருங்கள்

https://ta.wikibooks.org/s/2em. இப்படிச் செய்தாலே ஒரு நடுநிலை தரத்துடன் ஒரு மொழிபெயர்ப்பு கிடைக்கும். இது இந்திய மொழிக் குடும்பத்தில் உள்ள எல்லா மொழிக்கும் பொருந்தும்.

சர்வதேச வெளியில் வந்தோமேயானால் அதுதான் சவால். இதற்குள்ள சவால்களை "தமிழ் - ஆங்கிலம்" என்ற பார்வையில் பார்க்கத் தேவையில்லை. ஐரோப்பிய மொழி- இந்திய மொழி என்றே பார்க்கலாம் அத்தனையும் பொதுவான சவாலே. இருந்தும் தமிழ் ஆங்கிலம் என்றே ஒப்பிட்டு எனக்குத் தெரிந்த சவால்களைப் பட்டியல் இடுகிறேன்.

1. வாக்கிய அமைப்பு. அடிப்படையில் subject+verb+object என்று ஆங்கிலத்திலும் subject+object+ verb என்று தமிழிலும் இருக்கும். இதுசார்ந்தே பெரிய தொடர்கள் அமையும். எனிவே ஒவ்வொரு தொகுதிக்கும் இணையான ஆங்கிலத் தொகுதிகளை முன்கூட்டியே தீர்மானித்து மாதிரிகள் கொள்ளவேண்டும்.

உதாரணம்:
Tamil -> subject1 + adverb1 + verb1 + conj + subject2 + adverb2 + (hidden verb2)
=
English-> conj1 + adverb1 + subject1 + verb1 + conj2 + subject2 + verb2 + adverb2
என்று உறுப்புகள் தொகுதி மாதிரிகளைத் தீர்மானித்தால் தான்
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை

ஜோதிஜி said...


=
If all wishes are enacted then god is no more
என்று கணினியால் சிறப்பாகப் பகுக்க வைக்கமுடியும். இந்தமாதிரி ஒரு மொழியில் சாத்தியப்படும் அனைத்து வாக்கிய அமைப்பையும் இனம் காணவேண்டும். அதற்கு இணையான எதிர் மொழியின் வாக்கிய அமைப்புடன் பொருத்த வேண்டும். இந்தச் சவால் தான் இந்திய மொழிகளுக்குள் பெரிதாக இல்லை.

2. அனேகமாக மொழிகளில் இணையான சொற்கள் இருப்பதில்லை. அதுவும் தனித்தமிழ்ச் சொற்கள், சடங்கு சார்ந்த சொற்கள், இந்திய பண்பாடு சார்ந்த சொற்கள் என வகைக்குட்படுத்தலாம். எளிய உதாரணம் நமது சொந்தங்களுக்கு சித்தப்பா, பெரியப்பா, மாமா என்போர் இருபார்கள்

ஆனால் ஆங்கிலத்தில் அங்கிள் மட்டும்தான் அங்கிருப்பார். அதேபோல ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச் சொற்களும் இருப்பதில்லை. உதாரணம் envy, jealousy இரண்டுக்குமான வேறுபாட்டைத் தமிழில் வழங்க முடியவில்லை.

3. தமிழில் கூட்டு வார்த்தைகள் சாத்தியம். ஆங்கிலத்தில் அறவே இல்லை. "வெளிப்படுத்தவேண்டும்" என்போம், அதை வெளிப்படுத்தல் + வேண்டும் = should inform என்று ஒரு சொல்லுக்கு இரு சொல் வழங்கவேண்டிவரும். வேண்டும் என்பதை need என்று ஒன்றுக்கு ஓன்று எனப் பொருள் கொள்ளமுடியாது.

4. இலக்கண மரபுகள் அடுத்த சவால். ஆங்கிலத்தில் எப்படி a மற்றும் an ஒரு மரபுப்படி பயன்படுத்தப் படுகிறதோ அதுபோலவே ஒவ்வொரு மொழிக்கும் சில மரபுகள் உண்டு. அவற்றிக்கு என பிரத்தியேக ஆய்வும், தீர்வும் வேண்டும். உதாரணம்: தமிழில் சந்தி இலக்கணம். ஒரு இரண்டாம் வேற்றுமை என்று வந்தால் கூடுதலாகச் சந்தி இலக்கணச் சோதனை வேண்டும்.

இந்தியில் பால் வேற்றுமை உணர்ந்து உருபுகளைச் சேர்க்கவேண்டும். தமிழில் சில அத்தகைய மரபுகள் நவீன நடையில் மறக்கடிக்கப் பட்டும் உள்ளன. ஓர் என்பதற்கும் ஒரு என்பதற்கும் விதியுள்ளது. அது என்பதற்கும் அஃது என்பதற்கும் உள்ளது.(நாவி இதைக் கண்டுணரும்)

ஜோதிஜி said...5.ஓர் இன வார்த்தைகள். எப்படியும் ஒரு சொல்லுக்குப் பிறமொழியில் பல வார்த்தைகள் இருப்பது உறுதி. எனவே ஒரு சொல்லுக்கு இனமான வார்த்தைகளைக் கண்டுபிடித்தால்தான் அதன் பல சொற்களில் பொருத்தமானதைப் பயன்படுத்தமுடியும். "மிக" என்றால் huge, more, really போன்ற அந்நிய வார்த்தைகள் இதன் பொருள். really என்பதற்கு இன வார்த்தையாக help இருந்தால், மிக + பெரிய + உதவி என்ற தொடரை really great help என மாற்றமுடியும்.

இல்லாவிட்டால் really more help என்று அபத்தமாகும். இது உலகில் உள்ள எல்லா மொழிக்கும் பொருந்தும் பெரிய சவால். கூகிள் அதனால் தான் தனது மொழிபெயர்ப்பில் பயனர்களுக்கு இத்தகைய ஒத்த வார்த்தைகளைக் கொடுத்து பயனரே முடிவும் செய்யும் வசதியைக் கொடுக்கிறது.

மேலும் ஓர் உதாரணம்: the differences are widened during violence. என்பதில் உள்ள difference மாறும் விதங்கள்: வன்முறையால் பிரிவுகள் அதிகரித்தன, வன்முறையால் வேற்றுமைகள் அதிகரித்தன. வன்முறையால் கழித்தல்கள் அதிகரித்தன. வன்முறையால் வித்தியாசங்கள் அதிகரித்தன. என வரும் வாய்ப்புள்ளது.

6.வினைச்சொல் மற்றும் பெயர்ச் சொல் விகுதிகள். ஆங்கில வாக்கியத்தின் பெயர்ச் சொற்கள் பன்மை ஒருமைக்கு மட்டும் எழுத்துவடிவம் மாறும். வெறும் s,es, ies போன்று எண்ணிக்கைக்குள் அடங்கும் மாறுதல்கள். ஒரு வினைச்சொல் மூன்று அடிப்படை வடிவ மாற்றத்துடன் was,has என்று சில துணைச் சொல்லுடன் தான் வரும்.

எனவே எளிதில் கணினியால் பிரித்து அறியமுடியும். ஆனால் தமிழில் அப்படியில்லை ஒரு பெயர்ச் சொல் ஒருமை பன்மை மாற்றமில்லாமல் மட்டும் 25ம் க்கும் மேல் எழுத்துவடிவம் மாறும் நமது வேற்றுமை உருபுகள் எல்லாம் பெயர்ச் சொல்லுடன் சேர்ந்துவிடுகிறது. அதுபோல ஒரு வினைச்சொல் என்றால் நூற்றுக்கும் மேல் மாறுகிறது என்பது எனது கணிப்பு.

உதாரணம்:
வினைச்சொல்: பாடு = sing
மாறும் வடிவங்கள்:
பாட, பாடு, பாடிய, பாடும், பாடாத, பாடி, பாடவில்லை, பாடியும், பாடா, பாடுவது, பாடினான், பாடுவான், பாடப்படும், பாடப்பட்ட, பாடினர்,பாடினார்கள்....
இவற்றையெல்லாம் கண்டுபிடித்து, ஓழுங்கு செய்யாமல் மொழிபெயர்ப்புகள் முழுமை பெறாது.

ஜோதிஜி said...7. மொழியின் வழக்குத் தொடர்கள் (idoms and phrases) இதனை மொழிபெயர்க்கும் போது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கக் கூடாது. ஆங்கில உதாரணம் hold on, take care, look ahead. தமிழ் உதாரணம்: நான் மாடக்கூடல், அரசியல் சாக்கடை, மன ஓட்டம்

8. அடையாளப் பெயர்/வணிகப் பெயர்களையும் வார்த்தைக்கு வார்த்தை கூடாது. இதற்குச் சொல் பட்டியல்கள் கொடுக்கலாம் அல்லது விதிவிலக்காகக் கொள்ளலாம். இதை மொழிபெயர்ப்புக் கருவி நவீனம் அடையும் போது கூட செய்யலாம்.

9. மேலும் பல சவால்கள் மொழிபெயர்ப்புக் கருவியில் சோதிக்கும் போதே தோன்றும்.

ஒவ்வொன்றிக்கும் ஒரு ஆய்வுகள் அவசியம். ஆய்வுகள் இல்லாமல் கருதுகோள்கள் கொண்டு களத்தில் இறங்கினால், பாதிவளர்ச்சியில் அயர்ச்சிதான் மிஞ்சும். மொழியியல் படிக்காத நானே இவ்வளவு யூகிக்கும் போது மொழியாளர்கள் அதிகமாக சவால்களை ஆய்வு செய்யமுடியும்.

இத்தகைய ஆய்வு அறிக்கைகள் நிச்சயம் மொழியாளர்களால் தமிழ் இணைய மாநாடுகளில் சமர்பிக்கப் பட்டிருக்கும். ஆனால் ஏன் அவை பொதுவில் வைக்கப்படவில்லை எனத் தெரியவில்லை. அப்படிக் கிடைத்தால் அதன் மூலம் புதியவர்களுக்கு ஒரு தூண்டுதலாக நிச்சயம் அமையும். எதிர்பாராத திசையில் இருந்து எல்லாம் படைப்புகள் கிடைக்கலாம்.

ஒவ்வொரு மொழிக்குள்ளும் தினமும் புதிய புதிய நடைகள், புதிய வார்த்தைகள் உருவாகிக் கொண்டேயிருக்கும். இருந்தாலும் எந்திர மொழிபெயர்ப்பு என்பது ஒரு பரவலாக அறியப்பட்ட பயன்பாட்டுக் கூறுகளுக்கு உகந்ததாக அமைக்கமட்டும் விளையலாம்.

சிலரிடம் நவீன மென்மொழிகளில் நுட்ப அறிவு கூடுதலாக இருக்கும், சிலரிடம் நிரல்கள் மூலம் சிக்கலான பகுப்பாய்வுகளைத் தீர்க்கும் திறனிருக்கும், சிலருக்கு மொழி சார்ந்து கருதுகோள்கள் வைக்க மொழியறிவு இருக்கும். இவர்களின் கூட்டணியில் தான் மொழிபெயர்ப்புக் கருவின் பிறப்பு இருக்கும். உலக மொழிகள் எல்லாம் எழுத்து வடிவமே பெறாத போதே தொல்காப்பியம்,நன்னூல் என்று இலக்கண விதிகள் வரை வளர்ந்த மொழி கொண்ட நாம் இதைச் செய்யமுடியாது என்றில்லை.

ஜோதிஜி said...

நான் எழுதத் தொடங்கிய முதல் மூன்று மாதங்கள் மட்டுமே வேறு சில தமிழ் மென்பொருளில் டைப் செய்தேன். இன்று வரையிலும் என் ஹெச் எம் பழைய டைப் ரைட்டிங் முறையில் தான் பயன்படுத்தி வருகின்றேன்.

ஜோதிஜி said...

நிச்சயம் முழுமை பெறும் என்று நம்புவோம் குமார்.

ஜோதிஜி said...

நான் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கீங்க. பத்திரிக்கைத்துறையில் இது பெரிய வரவேற்பு பெற்றதாக இருக்கும் என்றே நினைத்தேன்.

ஜோதிஜி said...

பதில் அளித்தமைக்கு நன்றி நண்பா.

ஜோதிஜி said...

நன்றி ஜீவலிங்கம்.

ஜோதிஜி said...

நீயா நானா நேயரா? கலக்குங்க. ஆனால் மின் நூல் படிப்பது எனக்கு கொஞ்சம் கொடுமையான விசயமாகத்தான் உள்ளது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இப்போதுள்ள நவீன தொழில் நுட்பத்தால் நம் கிராமத்தில் இருப்பதைப் போல உணர வளர்ந்துள்ள நவீன தொழில் நுட்பங்கள் நமக்கு உதவிக் கொண்டிருக்கின்றது என்பதும் உண்மையே.

தொடர் வாசிப்புக்கு கருத்துக்கு மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

அடுத்தடுத்த வளரும் நிலையில் குறைகள் மாறும் என்று நம்புவோம்.

ஜோதிஜி said...

இதனைக் குறையாகச் சொல்லவில்லை.

நீங்கள் எப்போதும் தைரியமாக என் எழுத்தில் உள்ள எந்த குறைகள் என்றாலும் பிழைகள் என்றாலும் இங்கே எழுதி வைக்க தயங்காதீர்கள். இது என் வேண்டுகோள்.

ஜோதிஜி said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி

ஜோதிஜி said...

அவலோகிதம் என்ற மரபுக் கவிதை சரி பார்க்கும் மென் பொருளை வினோத் ராஜன் என்பவர் உருவாக்கினார். ஓராண்டுக்கு முன்பா என் வலைப்பக்கத்தில் அம மென்பொருளை அறிமுகப் படுத்தி இருந்தேன்.

உங்கள் பதிவில் இணைப்பை இங்கே எழுதி வைங்களேன். தேடுபவர்களுக்கு உதவக்கூடும் முரளி.

ஜோதிஜி said...

உங்களைப் போன்றவர்களின் உழைப்பு தான் என்னைப் போன்றவர்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. பலசமயம் பலரிடமும் சொன்னது தான். உங்கள் வயதில் ஆரோக்கியத்தோடு எழுத முடியுமா? என்பதால் தான் முடிந்தவரைக்கும் இந்த சமயத்தில் எழுதி வைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றேன்.

உங்கள் அக்கறைக்கு நன்றிங்க.

ஜோதிஜி said...

நீச்சல்காரன் பதில் கொடுத்துள்ளார் அருணா

ஜோதிஜி said...

நீங்க பகிர்ந்தால் இன்னமும் பலருக்கும் போய்ச் சேரும் தனபாலன்.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே.

டிபிஆர்.ஜோசப் said...

நேற்று இரவு சாம்சங் டேபில் எழுதியதால் என்னுடைய கருத்துரையிலும் கூட ஒரு சில எழுத்துப் பிழைகள் வந்துவிட்டன. ஆன்ட்ராய்டில் செல்லினம் என்றொரு தமிழ் விசைப்பலகை (மென்பொருள்) வருகிறது. அதில் நாம் ஒரு சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களை அடித்ததுமே அது தானாக அது என்னவாக இருக்கும் என்று ஊகித்து சில சொற்களை பரிந்துரைக்கிறது. அதிலுள்ளவற்றில் பொருத்தமானத்தை தெரிவு செய்துக்கொள்ளலாம். நாம் பெரும்பாலும் 'ர', 'ற', 'ன', 'ண' ஆகியவற்றில்தான் தவறு செய்கிறோம். 'பொருத்தமான' என்பதற்கு பதில் 'பொறுத்தமான' என்று உங்களுடைய பதிவிலும் உள்ளது. 'பொறுப்பு' என்பதற்கு பதில் 'பொருப்பு' என்று எழுதுபவர்களும் அதிகம். மேலும் ஒரு வார்த்தையில் வல்லின 'ற' வரவேண்டுமா அல்லது மெல்லின 'ர' வரவேண்டுமா என்கிற ஐயம் ஏற்படும்போது கூகுளில் தமிழில் டைப் செய்து பார்த்தாலும் தெரிந்துவிடும். ஆனால் அதற்கெல்லாம் நேரம் வேண்டும். அலுவலகங்களிலிருந்து எழுதுபவர்களுக்கு எழுதியதை சரிபார்க்க நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய பிழைகளை கண்டுபிடித்து திருத்தும் வகையில் ஒரு மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் தற்சமயம் இணையத்தில் அத்தகையதொரு மென்பொருள் இருப்பதாக தெரியவில்லை.

ஜோதிஜி said...

நன்றி. எழுத்துப் பிழைகளை தவிர்க்கத்தான் பார்க்கின்றேன். இன்னும் கூடுதல் கவனம் செலுத்துகின்றேன். தமிழ் எழுத்துரு வளர்ச்சி குறித்து தேடி பார்த்த போது முத்து நெடுமாறன் அவர்களைப் பற்றியும் நீங்கள் சொன்ன செல்லினம் பற்றியும் தெரிந்து கொண்டேன். இது போன்ற ஒரு மென்பொருள் வலைபதிவில் எழுத உருவாக்கப்பட்டால் என்னைப் போன்றோர்களுக்கு ரொம்ப வசதி.

நேரம் இருக்கும் போது இதை படித்துப் பாருங்க.

http://bhashaindia.com/Patrons/SuccessStories/ta/Pages/Muthu.aspx

http://bhashaindia.com/Patrons/SuccessStories/ta/Pages/index.aspx

http://ezilnila.com/archives/854#

http://tamilpcs.blogspot.in/2012/08/blog-post_3.html

http://peacecraft.tripod.com/infomining/computer-info1-TOC.pdf

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி திரு ஜோதிஜி.

எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

phantom363 said...

என்னோடு அதிர்ஷ்டம், பாக்கியம் ஐயா !! மிக்க நன்றி !!

Jegadeeswaran Natarajan said...

நாவி ஒரு சிறப்பான தொடக்கம் மட்டுமே, இதனை இறுதியென நினைக்க வேண்டாம். இதையே தொடர்ந்து நீச்சல்காரர் வலியுருத்தி வருகிறார்.

கணினி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது ஒரு பெரிய அறையை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது. இன்று நம்முடைய கைப்பேசியிலேயே கணினியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறோம். அது போல நாவி ஒரு தொடக்கமே,. நீச்சல்காரன் தனிநபரின் முயற்சி ஒரு கூட்டுழைப்பாக மாறி தமிழ் சமுகத்திற்கு நல்லதொரு நவீன கருவியாக நாவியை மேம்படுத்தி தர வேண்டும்.

பெரும் பல்கலைகழகங்களும், அரசும்தான் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இல்லை. தொழில் நுட்பம் தெரிந்த சிலரும், ஜோதிஜி போன்ற மற்றவர்களை மனதார பாராட்டுகின்ற நண்பர்களும் இதனை சாத்தியமாக்கலாம்.

வாழ்க தமிழ்!

மணிவானதி said...

நீச்சல்காரன் செய்த பணி மிகப்பெரிய பணி. தமிழுக்கு பிள்ளையார் சுழி போட்டவன் என்றால் தம்பி நீச்சல்காரந்தான். வாழ்த்துக்கள்.

soundar said...

நீச்சல் காரருக்கு வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

நன்றி சௌந்தர்.

ஜோதிஜி said...

நாவியின் மேம்பட்ட அடுத்த வெர்சன் விரைவில் வரப்போகின்றது என்று சொல்லி உள்ளார் மணி வானதி. வருகைக்கு நன்றி. நீச்சல்காரன் உங்களுக்கு ஏற்கனவே தொடர்பில் உள்ளவர் போலத் தெரிகின்றதே?

ஜோதிஜி said...

நன்றி ஜெகதீஸ்வரன்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.