Monday, December 24, 2012

திரும்பி பாரடா 2012 (2)


1.வீட்டில் இரட்டையரில் ஒருவர் தான் வைத்துள்ள லட்சியத்திற்காக கராத்தே வகுப்புக்குச் சென்று கொண்டிருப்பதோடு அதிலும் முன்னேறியுள்ளார். வகுப்பில் எப்போதும் முதல் நிலை தான். பள்ளிக்கூட அளவில் நடந்து முடிந்த ஸ்பெல் பீ என்று சொல்கின்ற ஆங்கில தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாவட்ட அளவிற்கு தயாராகியுள்ளார்.   சென்ற வருடம் முழுக்க மூவரின் தமிழ் மொழி அறிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு பல காரியங்களை செய்தேன், தூங்கத் தொடங்கும் போது சொல்லிய கதைகளின் வழியே பாடங்கள், வெளியே அழைத்துச் செல்லும் போது புரிய வைத்த விசயங்கள் என்று கிடைத்த நேரங்களில் எல்லாம் அடித்த ஆணிகள் அற்புதமாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. 

2.என் தாய் மொழியை என் குழந்தைகளுக்கும் நல்ல புரிதலோடு சொல்லிக் கொடுக்கவும் இந்த வருடத்தில் முடிந்துள்ளது. ஒருவருக்கு தமிழ்வாசிப்பு சிறுவர் மலரில் தொடங்கிய பயணம் இப்போது வெகுஜன இதழ்களில் வந்து நிற்கின்றது. பத்திரிக்கைகளில் வரும் படங்களைப் பார்த்து விட்டு மனைவி கதறினாலும் நான் கண்டு கொள்வதில்லை. தவறுகளை விட்டு வெளியே வர முதலில் அந்த தவறுகள் குறித்து புரிதல் வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன்.  

இவர் மட்டும் சற்று முரட்டுக் குதிரை. காரணம் வீட்டுக்குள் வந்து பாடங்களை படிப்பதில்லை. பள்ளியிலேயே அத்தனையும் முடித்து விட்டு இங்கே வந்து பத்து நிமிடத்திற்குள் ஒரு திருப்பி விட்டு என்னை திமிராக பார்த்து சவால் விடுகின்றார். முடிந்தவரைக்கும் உரையாடலின் மூலம் புரிய வைத்து விடுகின்றேன். மூவரும் தமிழை பிழையின்றி எழுத வாசிக்க கடிதம் எழுத கற்றுக் கொண்டு விட்டார்கள். இருவர் இந்த வருடம் தான் சிறுவர் மலருக்கு வந்துள்ளார்கள். 

3.கடைக்குட்டியின் மற்றொரு பெயர் ஜில் ஜில் ரமாமணி. காரணம் நாட்டியத்தில் தீரா ஆர்வம். அதைவிட நொறுக்குத்தீனி. படிப்பிலும் வகுப்பிலும் இவரும் முதல் நிலை தான். . ஆனால் ஒவ்வொரு காரியமும் தேர் போல மெதுவாகத்தான் நகரும். பேசத் தொடங்கி விட்டால் ஒவ்வொரு வார்த்தையும் இடி போல இறங்கும். 

மனைவியும் இவரும் அடிக்கடி பேசிக்கொள்வதை கண்டு கொள்ளாதது போல காதில் வாங்கிக் கொண்டிருப்பேன். மாமியார் மருமகள் வாக்குவாதம் போல போய்க் கொண்டிருக்கும். கடைசியில் நான் நாட்டாமையாக ஆக்கப்படுவேன்.  அந்த சமயம் தான் என் ஒன் பாத்ரூம் வருது. இருங்க வந்து விடுகின்றேன் என்று தப்பி விடுவதுண்டு.

4.இடையில் ஒருவர் இருக்கின்றார். படிப்பில் பி கிரேடு. ஆனால் சாப்பாடுச் சுவையில் என்னைப் போலவே ஏ கிரேடு. எது குறித்தும் மற்ற இருவரையும் போல ஆசைப்படுவதில்லை அலட்டிக் கொள்வதும் இல்லை. உண்ண உறங்க கொஞ்சம் படிக்க அவவ்வபோது நான் தான் மிஸ் இங்கே கொஞ்சம் வந்து உட்காருங்க என்று என்னை மிரட்ட என்று அவர் பயணம் அமைதியான நதி போல போய்க் கொண்டிருக்கின்றது.  என் அம்மாவின் அம்மா குணங்களைக் கொண்டு வந்து என்னை பலவிதங்களில் மாற்றியவர் மாற்றிக் கொண்டுருப்பவர். 

5.பத்து வருடமாக எனக்கு ஒரே மருத்துவர் தான். வருடத்தில் தவிர்க்கவே முடியாமல் இரண்டு தடவை செல்வது வழக்கம். எனக்கு பெரிதான எந்த நோயுமில்லை. குடும்பத்தில் இருந்த இருக்கும் சர்க்கரை நோய் கூட அண்டவில்லை. ஆனால் திருப்பூர் நகரம் தரும் தூசியும், மாறும் பருவ நிலையும், அலைச்சலும் தரும் ஒவ்வாமை என்பது தான் சளியில் தொடங்கும். காய்ச்சலை வரவழைக்கும். வண்டி நகராது.  

மருத்துவரிடம் சென்ற பிறகு தான் ஒரு கட்டுக்குள் வந்து நிற்கும்.  உடம்பில் எதிர்ப்பு சக்தியும் வருடத்திற்கு வருடம் இழந்து கொண்டே இருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வருடத்தின் பாதிக்கு மேல் தான் இயற்கை மருத்துவத்தின் பக்கம் சென்றே ஆக வேண்டும் என்று தோன்றி வெற்றிகரமாக குடும்பம் கடந்த ஆறு மாதங்களில் ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வர முடிந்துள்ளது. 

6. இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் மின்வெட்டு திருப்பூரில் உள்ள நெருக்கமான பழக்கத்தில் உள்ள, பார்த்த, பழகிய பலரின் வாழ்க்கையையும் சூறையாடி விட்டது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடும்பத்திற்கென்று உருவாக்கிக் கொடுத்த வசதிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கவில்லை.

பாதிப்பு என்று பார்த்தால் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய உண்மையான வருமானங்கள் பாதியாக கிடைத்தது மட்டுமே. அத்துடன் உழைக்க வேண்டிய தருணங்கள் இன்றி அமைதியாக வேடிக்கை பார்க்க வைத்தது தான் கொடுமை.

7.வசதிகளை பொருட்படுத்தாமல் இயல்பான கிராமது சிந்தனைகளில் வாழ்க்கை வாழ பழகிக் கொண்டதால், குடும்பத்தையும் அதன்படியே வழி நடத்துவதால் எந்த இடர்பாடுகளும் பெரிய அளவில் பாதிப்பதில்லை., குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதற்கு கிடைக்கும் பலன்கள், கிடைக்காத போது செய்ய வேண்டிய உண்மையான அக்கறை சார்ந்த உழைப்பு என்று இந்த வருடம் முழுக்க இனிய நாட்களாகவே இருந்தது.

8.ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வலைதளத்தை சோதனையாக எடுத்துக கொண்டு அதனை முழுமையாக உள்வாங்க முயற்சிப்பதுண்டு. எழுத தொடங்கிய முதல் தலைப்பு முதல் நேற்று எழுதியது வரைக்கும் பார்ப்பேன்.

இந்த வருடம் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தை பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். அவர் மேல் உள்ள விமர்சனங்கள், ஆதரவு, எதிர்ப்பு, வசவுகள், பாராட்டுரைகள் என்று அனைத்தையும்  உள் வாங்க முடிந்தது.  

9.அவரும் தினந்தோறும் விரிவாக தான் நினைப்பதை எந்தவித சமரசமின்றி எழுதுகின்றார். அளவு எதையும் வைத்துக் கொள்ளாத போதும் கூட அது அவசியமான கட்டுரையாகவே இருக்கின்றது. அதைவிட அவரின் தள வடிவமைப்பு தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் எழுதிய எதைப் பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான உழைப்பின் மூலம் சாத்தியமாக்கி இருக்கின்றார்.  எழுதுவதைப் போல அதை கொண்டு சேர்த்தலும் அவசியம் என்பதை அவரின் தளம் எனக்கு உணர்த்தியுள்ளது. 

10.பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் உள்ள நாட்களில் மேடைப் பேச்சுகளில் கலந்து பல பரிசுகளையும் பெற்றுள்ளேன். அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் வாசிப்பு மட்டுமே. பேய்த்தனமான வாசிப்பு முதல் பொழுதுபோக்கு வாசிப்பு வரைக்கும் எந்த பாரபட்சமும் இல்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில் தான் எழுத முடிகின்றது என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. ஆனால் இந்த வருடம் தமிழ்ச்செடி விழாவில் தான் முதன் முதலாக பேசினேன்.

அலுவலக ரீதியான மனித வள மேம்பாட்டுத்துறையில் வாரந்தோறும் உரையாடல் நடக்கும். தமிழ்ச்செடி விழாவில் பேசுவதற்கு முன்பு முதல் நிமிடம் வரைக்கும் எது குறித்து பேசப்போகின்றோம் என்று எதுவும் தெரியாமல் கோவை மு சரளா மற்றும் மெட்ராஸ் பவன் சிவா இவர்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு மையமாக நான் பேசினேன். நண்பர்கள் எழுதும் எழுத்துக்களைப் போல பேசும் பேச்சும் தெளிவாக அற்புதமாக உள்ளது என்றனர். காரணம் பொதுவாக எழுதுபவர்களுக்கு நன்றாக பேச வராது என்பார்கள். இது இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த அங்கீகாரத்தில் ஒன்று..

அடுத்த பதிவில் முடிகின்றது.

திரும்பி பாரடா 2012  1

16 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...

அழகாக திரும்பிப் பார்த்திருக்கிறீர்கள்...

Anonymous said...

Arumai

- Bodinayakanur Karthikeyan from Phoenix, Arizona

இராஜராஜேஸ்வரி said...

, குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதற்கு கிடைக்கும் பலன்கள், கிடைக்காத போது செய்ய வேண்டிய உண்மையான அக்கறை சார்ந்த உழைப்பு என்று இந்த வருடம் முழுக்க இனிய நாட்களாகவே இருந்தது.

வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..

ஜோதிஜி said...

வாழ்த்துகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.

ஜோதிஜி said...

கார்த்திக் எனது இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள். வருகின்ற வருடம் உங்களின் இனிதான எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி குமார்

Ranjani Narayanan said...

உங்களது திரும்பிப் பார்த்தல் சுவையுடன் சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகள் பற்றி அலசல் அருமை.அதுவும் மாமியார் மருமகள் வாக்குவாதம் மிகவும் ரசித்தேன்.
குழந்தைகளுக்கும் மனைவிக்கும் ஆசிகளும் அன்பும்.

அவர்களுக்குத் தமிழ் படிக்கச் சொல்லிக் கொடுத்த உங்கள் முயற்சியை எல்லாப் பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும்.ஒரே தலைமுறையில் அடுத்த தலைமுறை தமிழ் தெரிந்த குழந்தைகளாக உருவெடுக்கும். பெற்றோர்கள் மனது வைக்க வேண்டும்.

Anonymous said...

குழந்தைகளைப்பற்றிய நல்ல சுவையான அனுபவ பதிவுக்கு நன்றி.---செழியன்.

ஜீவன் சுப்பு said...

//தவறுகளை விட்டு வெளியே வர முதலில் அந்த தவறுகள் குறித்து புரிதல் வேண்டும் //

யோசிக்கவைக்கிற வரிகள் .... ! நன்றிண்ணா ...

ஜோதிஜி said...

எவரும் மொழி குறித்து உணரத் தயாராய் இல்லை என்பதே உண்மை.

ஜோதிஜி said...

தொடர்ந்து உள்ளே குடியிருந்துருப்பீங்க போலிருக்கே.நன்றி செழியன்.

ஜோதிஜி said...

உண்மை தானே சுப்பு. தவறின் எல்லைகளைப் பற்றி தெரியாதவன் வாழ்க்கையில் கடைசி வரைக்கும் அந்த தவறுகள் தாக்கிக் கொண்டே தான்இருக்கும். வெளியே வர முடியாது.

Anonymous said...

நிச்சயமாக, திருப்பூரில் வேலை பார்த்தவன்,ஏற்கனவே தங்கள் பதிவுகளுக்கு வேறு பெயரில் கருத்திட்டுள்ளவன்,தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசித்து உன்னிப்பாக கவனித்து வருபவன் தமிழ் பதிவுலகில் நம்பர் 1 என தங்களை மதிப்பிட்டுள்ளவன்,இப்படி ஒரு பதிவரா என்பதையும் அறிந்து கொண்டவன் என்பதை கூடுதலாக தெரிந்துகொள்ளவும். கூடிய விரைவில், தங்களை நேரில் சந்திக்க கூடிய வாய்ப்பு இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்.

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு நன்றி. தரவரிசைப்பட்டியல் வேண்டாம். இது ஆற்றுத் தண்ணீர். ஆனால் கையில் எடுக்கும் அளவு தான். நிச்சயம் சந்திக்கின்றேன். ஜனவரி மாதம் இது குறிதத விபரங்களை தெரிவிக்கின்றேன் செழியன்.

Ravichandran Somu said...

தேவியர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் !!!

ஜோதிஜி said...

புதிய ஆண்டுக்கான எங்கள் வாழ்த்துகள் ரவி. மிக்க நன்றி.