Saturday, December 22, 2012

திரும்பி பாரடா 2012

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அடுத்த ரெண்டு மூன்று வருடங்களில் என் கையில் கிடைத்த நோட்டுக்களை டைரியாக நினைத்துக் கொண்டு  அப்போது தோன்றியதை நாட் குறிப்புகளாக நிறைய விசயங்களைப் பற்றி எழுதி இருக்கின்றேன்.

ஆனால் தொடர்ந்து என்னால்  எழுத முடிந்ததில்லை. பல நினைவுகள் மறந்து  போய் விட்டது. இப்போது கூட பழைய டைரிகளை வீட்டில் காட்டும் போது நக்கல் வார்த்தைகள் வந்து விழும்.  இந்த வலைபதிவில் நான் இதுவரைக்கும் முயற்சிக்காத ஒன்று

நண்பர் வெயிலான் உடன் இது குறித்து உரையாடிய போது ஏற்கனவே மா.சிவகுமார் இதைப் போல அன்றாட நிகழவுகளை தினந்தோறும் குறிப்புகளாக எழுதியிருப்பதாக சொன்னார். ஆனால் நான் இந்த வருடம் முழுக்க நடந்த நிகழ்வுகளை அனுபவ குறிப்புகளாக வலைபதிவில் எழுதி வைக்க முடியுமா? என்று யோசித்தன் விளைவு இது. . 

ஒவ்வொருவருக்கும் முன்று வாழ்க்கை உண்டு.

குடும்பம், தொழில் நம் தனிப்பட்ட விருப்பங்கள்.

இந்த மூன்றையும் முயற்சித்துப் பார்த்துள்ளேன். 

பதிவின் நீளம் கருதி மூன்று பதிவுகளாக வருகின்றது.. 

றிமுகமான இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து நிற்க பேச எழுத முடியாத தொழில் வாழ்க்கையில் வருடத்தின் இறுதிப் பகுதியில் தான் ஆற்றங்கரையோரம் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அமைதி வந்தது. காரணம் இந்த வருடம் செயல் இழந்து போன தமிழ்நாட்டு அரசாங்கத்தின் "அறபுத திறமையான புரிதல்" நிர்வாகத்தில் திருப்பூர் என்ற தொழில் நகரமே  ரஜினிக்காந்த் சொன்னது போல ச்சும்மா அதிர்ந்து  கலகலத்துப் போய்விட்டது.  உருவான மின்தடையில் ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் டீஸல் வாங்கி கட்டுபிடியாகவில்லை.படிப்படியான ஆட்குறைப்பு நடவடிக்கை, என்று கண் எதிரே பல கொடுமைகளை பார்க்க நேர்ந்தது. ஆனால் நமக்கு பலசமயம் ஆட்கள் தேவைப்பட்ட போதிலும் அமைதியாகவே இருந்து விடுங்க என்ற அறிவுறுத்தல் வந்த காரணத்தால் ஏராளமான ஓய்வுகளை வேதனையுடன் பார்க்கத்தான் முடிந்தது. எழுதித் தீர்க்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. ஏதாவது ஒரு சமயத்தில் இது குறித்து எழுத வேண்டும்.

று வருடமாக முடிந்தே போய்விட்டது என்ற கிடந்த ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்தியதோடு நிர்வாக மேலாண்மையில் கற்றுக் கொண்ட பாடங்களும் கிடைத்த அனுபவங்களும் ஏராளம்.

னிய வெற்றிகளை மட்டுமே நாம் விரும்புகின்றோம். வாழ்வில் எதையும் வெற்றி தோல்வி என்று மட்டுமே பார்க்கின்றோம். ஆனால் என்ன கிடைத்தது? எப்படி மாறியுள்ளோம்? என்பதை எடுத்துக் கொள்ளும் போது நான் இந்த வருடம் நிறைய மாறியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.  பண ரீதியாக இழப்பில்லை. அதே சமயத்தில் மன ரீதியான வளர்ச்சி அபரிதமானது.

யடிச்சான் காப்பி போல வாழ்பவர்கள் வெள்ளம் வந்து விட்டது. காப்பாற்றுங்க காப்பாற்றுங்க என்று (உடன் பணிபுரிவர்கள்) தொழில் ரீதியான பிரச்சனைகளை என்னிடம் கொண்டு வரும் போது அழகாக அமைதியாக பிரித்து வைத்து அவர்களை வைத்தே அதை முடிவுக்கு கொண்டு வந்த திறமையை இந்த வருடம் வளர்த்துக் கொண்டுள்ளேன். இதற்கு காரணம் வலையுலக எழுத்துக்களே. கூர்மையாக ஒன்றை கவனிக்கும் போது அவசரத்தை விட அமைதியாக இருப்பதென்பது நம் இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது. 

லகம் நம்மை பாராட்டினாலும் நம்மிடம் உள்ள அத்தனை இயல்பான குணங்களையும் காண்பவர், சகிப்பவர், மாற்றுபவர் அவரவர் மனைவிகள் மட்டுமே. அந்த வகையில் நான் என்றுமே பாக்கியவான் தான். என்னை என் போக்கிலேயே வாழ அனுமதித்தவளுக்கு இந்த வருடம் என் அன்பை எப்போதும் போல கோபத்தோடு கொஞ்சம் கூடுதலோடு கொடுத்துளேன். வாங்கிய திட்டுக்களை விட கிடைத்த மதிப்பெண்கள் அதிகம்.

ர் உலகம் தெரிய நம்முடைய முயற்சிகளுக்கு உண்மையான பலன் கிடைக்காத போது அது கவலையை அறிமுகம் செய்கின்றது. அது உடனே சோகத்தை அறிமுகம் செய்ய இறுதியில் உடம்பில் கொண்டு போய் பதிவு செய்கின்றது. ஆனால் அது போன்ற தருணங்களில் பிடித்த விசயங்களில் ஈடுபடும் போது நம்மிடம் உள்ள அடுத்த திறமைகள் ஒவ்வொன்றும் எட்டிப்பார்க்க புதிய பாதை உருவாகின்றது. உணர்ந்த உண்மைகளும் உணர்த்தும் எதார்த்தமும் கைகோர்கக கிடைக்க அனுபவங்களை எழுத்தாக மாற்றும் போது சிலருக்கேனும் பயன் உள்ளதாக இருக்கின்றது. பல சமயங்களில் நாம் கடந்து வந்த அவசர தருணங்களை படித்துப் பார்க்கவும் உதவுகின்றது.

து குறித்து யோசித்தாலும் அதன் தொடர்பான வார்த்தைகள் தொடர்ச்சியாக தோன்ற ஆரம்பித்து விடுகின்றது. மனதிற்குள் பார்த்த, பாதித்த, படித்த, கேட்ட, யோசித்த அத்தனை விசயங்களின் கோர்வையும் நமக்கு பல புரிதலை புரிய வைக்கின்றது.  அந்த சமயத்தில் தொடர்ச்சியாக யோசனையில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் எழுத ஆரம்பித்த பிறகு அத்தனையும் மறந்து போய் புதிதான சிந்தனைகள் எழுத்தாக மாறி யோசித்ததை விட இயல்பாக ஒரே மூச்சில் எழுதி முடித்து விட முடிகின்றது.

றக்குறைய 600 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையை தலைப்பு மற்றும் மேலும் கீழும் பார்த்து படித்து விட்டு ஒரு விமர்சனத்தை உடனே எழுத முடிகின்றது. விமர்சனத்தை எழுதிய பிறகு அந்த கட்டுரையை முழுமையாக படித்து முடித்து விட்டு மீண்டும் அந்த விமர்சன வரிகளை பார்க்கும் போது பொருத்தமாகவே இருந்து விடுகின்றது.

யோ இவருக்கு எப்படி நேரம் கிடைக்கின்றது? எப்படி பெரிதாக எழுத முடிகின்றது என்ற விமர்சனங்களுக்கு எப்போதும் என் கைவசம் இருக்கும் பதில் ஒன்றே ஒன்று தான். எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தினந்தோறும் அதிகப்ட்சம் நான்கு மணி நேரமென்பது வெட்டியில் கழிப்பதாகத் தான் இருக்கும். அந்த நேரம் கூட கிடைக்காமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் சீக்கிரம் மருத்துவமனைக்குச் செல்லப் போகின்றார்கள் என்று அர்த்தம். குடும்பம், குழந்தைகள் மேல் கவனம் செலுத்தாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கக்கூடும். 

வ்வொரு நாளும் இணையத்தோடு வாழ கடமைப்பட்ட தொழில் உள்ளவர்களுக்கு இன்னமும் கூடுதலாக கிடைக்கும்.நான்கு மணி நேரமென்பது என்னால் 600 வார்த்தைகள் உள்ள கட்டுரை 3  எழுத முடியும். எழுதுவதை விட வடிவமைப்புக்குள் கொண்டு வருவதற்கான சவாலில், எழுத்துப் பிழைகளை திருத்த இன்னமும் நான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.

ராயிரம் சிந்தனைகளை நாம் எழுத்தில் எழுதினாலும் நம் குடும்ப வாழ்க்கையில் ஓரளவுக்கு மேல் ஏமாற்றி விட முடியாது. பொதுவாக எழுத்தாளர்களை,எழுத ஆசைப்படுவர்களை இந்த சமூகம் ,வாசிப்பாளர்கள் கொண்டாடுகின்றதோ இல்லையோ முக்கியமாக அவரவர் வீட்டில் மதிப்பு கிடைப்பதில்லை. எளிதான காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எழுத்து மூலம் சிந்தனைகளை வளர்க்க முடியும்.  குடும்பத்தினர் ஆசைப்படும் எதையும் அத்தனை எளிதாக கொண்டு வர முடியாது. ஆனால் எனக்கு அந்த பிரச்சனை இதுவரைக்கும் வந்ததில்லை. இரண்டு தண்டவாளமாக வைத்துக் கொண்டிருப்பதால் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஓளவையார் குறித்து படிக்கும் போதெல்லாம், அவர் சொல்லிவிட்டுச் சென்ற பாடல்களை படித்து முடிக்கும் போது ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரும் இந்த பாட்டியின் திறமையும் சுண்டக் காய்ச்சிய பாலின் சுவையை உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். எழுத்துப் பயணத்தில் நாம் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.

 பணம், மனம், எழுத்து இது மூன்றிலும் முடிவும் இருக்காது. அதன் எல்லையை வாழ்வின் இறுதி வரைக்கும் நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆகா நாம் நன்றாக எழுதியிருக்கின்றோம் என்று யோசிக்கும்  போது நாம் வாசித்த ஒரு சிறிய கவிதை அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விடும். உடலில் ஆரோக்கியம் இருக்கும் வரையிலும் இந்த எழுத்துப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் தீரா ஆசை. 

மீதி அடுத்த பதிவில்..................

சென்ற ஆண்டு 2011  (தினந்தோறும் மலரும் பூக்கள்) அதிகம் பேரால் பாராட்டப்பட்ட தலைப்பு.

9 comments:

வவ்வால் said...

ஜோதிஜி,

திருப்பூரின் வியாபாரகாந்தம் ஆனப்பின்பும், நோட்டில் டயரி எழுதினேன்னு ஒரு டச்சிங் டயலாக்கு :-))

உங்க விலாசம் சொல்லுங்க 4 டயரி அனுப்புறேன், ஆசை தீற எழுதித்தள்ளுங்க ,

ஹி...ஹி 2011,12 டயரிலாம் கூட புதுசா அப்படியே இருக்கு, 2013 டயரியும் அப்படி தான் இருக்கும், எல்லாத்தையும் மூட்டை கட்டி பார்சல் அனுப்பவா?

//.நான்கு மணி நேரமென்பது என்னால் 600 வார்த்தைகள் உள்ள கட்டுரை 3 எழுத முடியும். //

ஓ இதான் உங்க தொழில் ரகசியமா?

எனக்கு ஒரு பதிவுக்கு ஒருவாரம் தேவைப்படுது,நான் என்னிக்கு 4 மணி நேரத்தில் 3 பதிவு போடுற அளவுக்கு வளரப்போறேன்?
----------

மா.சி, ஆரம்பத்தில் தினமும், பால் பாக்கெட் வாங்கியது, ஒட்டடை அடித்தது, இட்லி மாவு வாங்கி இட்லி சுட்டது என தினசரி செய்ததை எல்லாம் எழுதினார், நானும் அதுக்கு பின்னூட்டம் போடுவேன் :-))

இப்போ பிசியாகிட்டார் போல!

ஜோதிஜி said...

வவ்வுஜி

எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனை தமிழ் தட்டெழுத்துப் பயிற்சி. 90 சதவிகித மக்கள் கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற பல சமாச்சாரங்களில் தான் பொறுமையாக உட்கார்ந்தது தட்டு தட்டுன்னு தட்டுறாங்க. ஆனால் ஒரே சமயத்தில் ஆங்கிலம் தமிழ் என்று மின் அஞ்சலுடன் உறவாடிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலை காரணமாக மழை பெய்வது போல பல சமயம் இருக்கும். பழகிப் போய்விட்டது என்பதை அது பிடித்த விசயமாக இருக்கும் போது சற்று கூடுதல் ஆர்வம்இருக்கத்தானே செய்யும்.

இந்த வருடம் நான் சந்தித்த அற்புத மனிதர்களில் மா. சிவகுமாரும் ஒருவர்.

saidaiazeez.blogspot.in said...

//முயற்சிகளுக்கு உண்மையான பலன் கிடைக்காத போது அது கவலையை அறிமுகம் செய்கின்றது. அது உடனே சோகத்தை அறிமுகம் செய்ய இறுதியில் உடம்பில் கொண்டு போய் பதிவு செய்கின்றது//
//வாழ்வில் எதையும் வெற்றி தோல்வி என்று மட்டுமே பார்க்கின்றோம்//
//அவசரத்தை விட அமைதியாக இருப்பதென்பது //
//என் அன்பை எப்போதும் போல கோபத்தோடு கொஞ்சம் கூடுதலோடு கொடுத்துளேன். வாங்கிய திட்டுக்களை விட கிடைத்த மதிப்பெண்கள் அதிகம்//
//எழுத்து மூலம் சிந்தனைகளை வளர்க்க முடியும்.//
//இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது//

மௌனமான புன்னகையுடன்

Ranjani Narayanan said...

எனக்கும் கூட டைரி எழுதும் பழக்கம் இருந்தது.
அ முதல் ஔ வரை உங்கள் மன ஓட்டங்களை மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
சித்திரமும் கைப் பழக்கம் என்பதுபோல எழுத்தும் எழுத எழுத, நம் எண்ணங்களை கோர்வையாக ஒரேமூச்சில் எழுத முடிகிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
மனைவியை புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பது நிறைவான விஷயம்.

மா. சிவகுமார் அவர்களின் வலைத்தளம் இருக்கிறதா?
இணைப்பு கொடுக்க முடியுமா?


பாராட்டுக்கள் ஜோதிஜி!

Anonymous said...

படித்தேன்,ரசித்தேன்,சிந்தித்தேன்,நன்றி ஜோதிஜி ஐயா!!!!!!--செழியன்.

ஜோதிஜி said...

உங்களின் கடைசி வரியைக் கண்டு புன்னகைத்தேன்.

ஜோதிஜி said...

நன்றி அம்மா.

http://masivakumar.blogspot.in/2009/09/blog-post_14.html

ஜோதிஜி said...

எனக்கு நாற்பது ப்ளஸ் தான் ஆகின்றது. அய்யா என்றுசொல்லி பயமுறுத்தாதீங்க செழியன்.

ஊரான் said...

"பொதுவாக எழுத்தாளர்களை,எழுத ஆசைப்படுவர்களை இந்த சமூகம் ,வாசிப்பாளர்கள் கொண்டாடுகின்றதோ இல்லையோ முக்கியமாக அவரவர் வீட்டில் மதிப்பு கிடைப்பதில்லை".

ஏன் என பரிசீலிக்க வைக்கும் வரிகள்.