தென்கிழக்கு ஆசியா முதல் இந்தியா, தென்னிந்தியா வரைக்கும் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய போது மொத்த வரலாற்றின் போக்கும் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு ஆட்சியாளர்கள் தங்களுடைய வம்சத்தை உயர்ந்ததாக காட்டிக்கொள்ள பல் வேறு புனைக்கதைகளை உருவாக்கி பரப்பத் தொடங்கினர்.
இதன் தொடர்பாக உருவானது தான் சிங்களர்கள் "சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் " என்றொரு அசிங்கக் கதையும் நிலைபெறத் தொடங்கியது.
சிங்களர்களின் புனித நூல் என்ற சொல்லப்படும் மகாவம்சத்தில் சொல்லப்படும் அந்த புனைவு கதையின்படி விஜயன் என்ற இளவரசன் தற்போதை மேற்கு வங்க மாநிலம் பகுதியிலிருந்து இலங்கைக்கு உள்ளே சென்றதில் இருந்து தொடங்குகிறது. அப்போது இந்தியாவில் இதில் குறிப்பிடப்படும் வங்க மாநில பகுதியில் ஆண்டு கொண்டுருந்த மன்னரின் மகள் பெயர் சுபதேவி. இவளை வனராஜா சிங்கம் கடத்திக்கொண்டுச் சென்று குகையில் அடைத்து வைத்துருந்தது. சிங்கம் சுபதேவியுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்த ஆண் குழந்தை கால்களும் கைகளும் சிங்கத்தை போன்று தோற்றத்தை பெற்று சின்ஹபாஹ என்ற பெயராலும், பெண் குழந்தை சின்ஹவலி என்றும் அழைக்கப்பட்டனர்.
குகைக்குள் அடைக்கப்பட்ட தனது தாயையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு தப்பித்து வெளியேறிய சின்ஹபாஹ, தன்னுடைய சகோதரியான சின்ஹவலியையே திருமணம் செய்து கொண்டு சின்ஹபுரம் என்ற நகரை உருவாக்கிக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான்.
சினஹவலிக்கு பிறந்த இரட்டையரான ஆண் குழந்தைகளில் மூத்த ஆண் குழந்தையின் பெயர் விஜயன். இரண்டாவது சுமித்தா. வளர்ந்து கொண்டுருந்த விஜயனின் தீய குணங்களை அடக்க முடியாமல் மன்னர் சின்ஹபாஹ, விஜயனையும் துணையாக இருந்தவர்களையும் நாடு கடத்தினார். இவர்கள் மரக்கலத்தின் வாயிலாக இலங்கையில் வந்து இறங்கினர்.
இவர்கள் வந்த போது இலங்கையின் அப்போதைய பெயர் தம்பப்பன்னி. இவர்கள் குறிப்பிடும் மொத்த இந்த கதையின் மூலக்கூறு இந்தியாவின் ஓரிஸ்ஸா மற்றும் மேற்குவங்காளத்தில் (கலிங்கம், வங்கதேசம்) இருந்து தொடங்குகிறது.
இவர்கள் உள்ளே வந்த போது புத்தர் மரணமடைந்தார் என்றும் புத்தரின் வாரிசாக தங்களை அறிவித்துக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார் என்று இதன் அசிங்கம் நிறைந்த பல சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு செல்கிறது.
இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இன்றைய இலங்கையில் பிரதேச எல்லைகள் என்று எதுவும் இல்லை.
அன்று உருவாகியிருந்த வணிகத் தொடர்புகள் தான் எல்லாவகையிலும் ஆட்சி புரியத் தொடங்கியது. அதுவே ஒரு அளவிற்கு மேல் கடந்து தமிழ்நாட்டில் ஆண்டு கொண்டுருந்த குறுநில மன்னர்கள் இலங்கையில் இருந்த சிறு இனக்குழுக்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முற்பட்டு பரவலாக்கமாக மாறத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழர்களின் மொத்த ஆதிக்க இனக்குழுக்கள் வளரத் தொடங்கியது. சிங்களர்களின் தீபவம்ச நூலில் தொடக்க தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிடப்படும் ஸேன,குத்தக என்ற அநுராதபுர ஆட்சியாளர்களையும், தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த வவுனியா ( பெரிய புளிங்குளம்), மட்டக்களப்பு (ஸேருவில), அம்பாறை (குடுவில்) மாவட்ட விபரங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுருந்த இனக்குழுக்களையும், அங்கு வாழ்ந்து கொண்டுருந்த மற்ற இனக்குழுக்களின் மேல் இவர்கள் செலுத்திய ஆதிக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .
மூன்றாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் வட இந்தியாவில் பாடலிபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டுருந்த கலிங்க பேரரசுவின் மன்னரான (இன்றைய பாட்னா) அசோக பெருமன்னன் தன்னுடைய சார்பாளராக மஹிந்த மகாதேரர் என்ற புத்தபிக்குவை அனுப்பி வைத்தார்.
காரணம் அப்போது நடந்துருந்த கலிங்கப்போர் மன்னனை முழுமையாக மாற்றியிருந்தது. போருக்குப் பின்னால் பௌத்த மத தாக்கத்தினால் அமைதி வழியே செல்ல விரும்பிய அசோக மன்னரின் சார்பாக சென்றவர், ஆண்டு கொண்டுருந்த திஸ என்ற (திசையன்) மன்னன் வந்த தூதுக்குழுவினரை வரவேற்று அசோக மன்னரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டதும் நடந்தேறியது.
அசோக மன்னரின் சார்பாக செயல்பட்டு ஆட்சி புரிந்தவர்களுக்குப் பின்னால் வந்த தமிழ் மன்னர்களின் பெயர் என்று தீபவம்சம் கூறுவது எளார என்றழைக்கப்படும் தமிழ் மன்னனாகிய எல்லாளன். ஏறக்குறைய 44 ஆண்டுகள் நீதி வழுவாது ஆட்சி புரிந்து இந்த மன்னரின் தயாள, ஈகை குணங்களைப்பற்றி உச்சமாக புகழ்ந்து எழுதி உள்ளனர்,
உச்சகட்டமாக எல்லாளன் என்ற தமிழ்மன்னரைப் பற்றி, அவரது ஆட்சியில் பெய்த மழைகூட இரவில் மட்டும் பெய்தது என்கிற அளவில் எழுதி வைத்துள்ளனர்.
பயம் என்பதை பயம் கொள்ள வைத்தவர்களின் மரபில் வந்தவர்களை இன்றைய இலங்கை அரசு கடைசி வரைக்கும் நேருக்கு நேர் நின்று போரிடமுடியவில்லை..
இறுதியில் எல்லாளன், துட்டகாமிணி என்றழைக்கப்படும் காமணீ அபய என்ற தெற்கு இலங்கை சிங்கள மன்னரால் தோற்கடிக்கப்பட்ட போது எல்லாளன் என்ற தமிழ் மன்னரின் வயது 73,
போரிட்ட சிங்கள மன்னனோ இளைஞன். ஆனால் அன்றைய சூழ்நிலையில் எல்லாளன் ஆட்சியினால் பலனடைந்த சிங்கள தமிழ் தரப்பினர்கள் வைத்திருந்த மதிப்பை மாற்ற விரும்பாத சிங்கள மன்னன் எல்லாளன் சார்பாக நினைவு ஸ்தூபி ஒன்றை உருவாக்கி வழிபடுவதன் மூலம் அனைவரையும் திருப்திபடுத்தினான். இதுவே இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்னே இந்த ஸ்தூபியை சிங்கள இனவாத அடையாளமாக காட்டப்பட்டு, அமைச்சராக இருந்த அதுலத் முதலி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடும் அளவிற்கு அவரின் தமிழர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது.
ஆனால் மொத்தமாக சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் தரப்படும் மொத்த சான்றுகளும் அநுராதபுரத்தை வைத்தே கொடுக்கப்படுவதால் அந்த நகரின் சிறப்பு தொடக்கம் முதல் மேம்பட்டு இருப்பதை உணரலாம்.
இதைத் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களில் பலர் வந்து போய்க்கொண்டுருந்தாலும் சிங்கள அனுலா என்ற அரசியின் ஆட்சியும், அவரது ஒழுங்கங்கெட்ட நடவடிக்கைகளும், கணவர், காதலன் என்ற பெயரில் தன்னுடன வாழ்ந்தவர்களை நஞ்சு கொடுத்து கொன்ற காட்சிகளும் இருக்கிறது.
இதுவே காலப் போக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்தி இலங்கையின் வடக்கில் தமிழ்மொழியின் செல்வாக்கும் சைவ சமயமும், தெற்கில் சிங்கள மொழியும் பௌத்தமும் என்று மாற்றம் பெற்றது.
மொத்தமாக நாகர்கள் வாழ்ந்த நாகத்தீவு என்றே பாலி மொழி வரலாறு தெரிவிக்கின்றது.
பின்னால் உருவான சிங்கள மொழி என்பது ஒரு இயல்பான மொழியல்ல. கலிங்கப் பேரரசை அசோக மன்னன் ஆண்ட போது, அவரின் சார்பாளர்கள் இலங்கைக்குச் சென்ற போது வழக்கில் இருந்த சமஸ்கிருதத்தில் தொடங்கி, பாலி, கலிங்கம், தமிழ் என்பது வரைக்கும் பல மொழிகள் கலந்து உருவாக்கிய கூட்டுக் கலவை அது.
அசோக மன்னரது இலட்சினையான சிங்கமும் எலு என்பதன் எச்சமாக கருதப்படுவதும் சேர்ந்து சிங்களம் என்று மாற்றம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சமய மாற்றங்களும், வீழ்ச்சியடைந்து கொண்டுருந்த பௌத்தமும் கரையேறி பயணிக்கத் தொடங்கியது, அப்போதைய தமிழர்களும், தமிழ் மன்னர்களும் சைவ, வைணவ என்ற பிரிவின் பக்கம் சாயத் தொடங்கியதால் மகாநாம தேரர் என்பவரால் பௌத்த வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலே இன்றைய சிங்களர்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாவம்சம்.
காலமும் சூழ்நிலையும் திரிபுகளையும் இத்துடன் கொண்டு வந்து சேர்க்க கிபி 972 ஆம் ஆண்டு நான்காம் மகிந்தன் என்ற சிங்கள மன்னரால் இதை தமிழர் எதிர்ப்புணர்ச்சி என்ற நோக்கத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்ந்து பயணிப்போம்....................
27 comments:
ஜோதிஜி,
//மூன்றாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் வட இந்தியாவில் பாடலிபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டுருந்த கலிங்க பேரரசுவின் மன்னரான (இன்றைய பாட்னா) அசோக பெருமன்னன் தன்னுடைய சார்பாளராக மஹிந்த மகாதேரர் என்ற புத்தபிக்குவை அனுப்பி வைத்தார்.
//
அசோகர் காலம் கி.மு 303-232, மஹா வம்சம் சொல்லும் புராNaத்திற்கு முன்னரே , இலங்கைக்கு புத்த மதம் பரப்ப தூது அனுப்பிட்டார்.
அப்புறம் அசோகர் மகத பேரரசு,கலிங்க நாட்டின் மீது படை தான் எடுத்தார்.
நீங்க சொல்லும் கதை ஏற்கனவே இருக்கும் கதையை விட குழப்புது :-))
# மஹாவம்ச புராணமே புரட்டுனா,அதிலும் நிறைய வகை இருக்கும் போல, நீங்க சொல்லுறாப்போல கதை எதுல இருக்குனு தெரியலை.
first time disappointed writing form yu. Most of these info is already available in the wiki sites.
But you have a style and hope to see the real "jothiji" in the coming sections.
goodluck.
-Surya
சகோ ஜோதிஜி,
தொடர் நன்றாக போகிறது. இப்போது மஹாவம்ச போக்கில் கதை சொல்கிறீர்கள் என்பதையும், அதற்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்பதையும் சொல்லி விடுவது நல்லது.
மஹா வம்சம் தமிழில் இங்கே இருக்கிறது. படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம்.
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
நான் எப்போதும் சொல்வது மாற்றுக் கருதாளர்களின் ,விள்க்கத்தை அறிந்து அத்னைப் பரிசோதிக்க வேண்டும்.மஹா வம்சம் தமிழர்கள் படிப்பது பிரச்சினையில் எப்படி எதிர் பிரச்சாரம் செய்யப் பட்டது என அறிய உதவும்.
பவுத்தம் கவுதம புத்தர் என்ப்படும் சித்தார்த்தருடன் தோன்றியதாக சிங்களர் நம்புவது இல்லை. பல புத்தர்களின் தொடர்ச்சியில் அவரும் ஒருவர்.ஆனால் மிக சிறந்தவர். தேவர்களுக்கும் கடவுள்!!
அசோகரின் காலத்தில் தெற்கு ஆசியா முழுதும் கோலோச்சிய பவுத்தம், இந்தியாவின் எல்லை நாடுகளான இலங்கை,பர்மா போன்ற பகுதிகளுக்கு விரட்டப் பட்டது. அந்தக் கோபம் மகாவம்சம் முழுதும் தெரிகிறது.
***
சகோ வவ்வால்,
//# மஹாவம்ச புராணமே புரட்டுனா,அதிலும் நிறைய வகை இருக்கும் போல, நீங்க சொல்லுறாப்போல கதை எதுல இருக்குனு தெரியலை.//
நீங்கள் விரும்பிக் கேட்ட (அ!?)சிங்கக் கதை இந்த அத்தியாயத்தில் உள்ளது.
http://users.tpg.com.au/adsls4ue/mahavamsam/chapter_6.pdf
நன்றி!!!
எனக்கு தலை சுத்துது. ஒன்னுமே புரியல. முழுமையாக விபரங்கள் தாங்க. இந்த பதிவும் அடுத்து வரும் பதிவும் சரியாக இருப்பதாகத்தான் நான் நினைத்துள்ளேன். வவ்வாலும் சார்வாகனும் வேற ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க. நீங்க வேற என்னமோ சொல்றீங்க.
//நீங்கள் விரும்பிக் கேட்ட (அ!?)சிங்கக் கதை இந்த அத்தியாயத்தில் உள்ளது?//
சகோ சார்வாள், குரங்கிலிருந்து பொறந்தவன் மனிதன் அப்படி பிரச்சாரம் பண்றவர் தாங்கள். அப்படியிருக்க, சிங்கத்திலிருந்து நாங்க பொறந்தோம்னு சிங்களவனுக சொன்னா அதை அசிங்கம் சொன்னா எப்புடி? :)
வவ்வாலின் தளத்தில் விவாதித்து போல, பாண்டியன் எக்ஸ்போர்ட் பண்ணிவிட்ட பாண்டிய பெண்களை மணந்து கொண்ட விஜயனும் அவனுடைய இனத்தவரும் பெற்ற இனம்தான் சிங்கள இனம். ஆக சிங்கள இனம் பாதி தமிழினமே. இதை மரபணு ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆக முன்பு இரு இனத்தவரும் இனரீதியாக நட்புறவுடன்/சண்டையின்றி (அதிகார சண்டை மட்டும் உண்டு என) இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தியாவில் நடந்தது போல் பெளத்தமதம் அழியாமல் காக்க விரும்பிய பிக்குகளின் சதியால் இனச்சண்டை கதைகள் மகாவம்சம் மூலம் விதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.
சிங்களர்கள் மரபணு ரீதியாக மட்டுமல்ல. எல்லாவகையிலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடையிடையே கலப்புகள் அதிகரித்து கண்றாவியாக பல நிகழ்வுகள் நடந்தேறி மனதளவில் பிறழ்வுகளாக மாறிப் போனார்களோ என்று நினைத்துக் கொள்வுதுண்டு. 1800 முதல் ஐந்து தலைமுறைகளை எடுத்துப் பார்த்தார் ஒவ்வொரு தலைமுறையிலும் அப்பா தமிழர் அம்மா சிங்கள கிராஸ் அல்லது அம்மா தமிழர் அப்பா கிராஸிலும் கிராஸ் என்று ஒரு ஜெனிட்டிக் இன்ஜினியர் வைத்து ஆராய்ச்சி செய்யும்அளவுக்கு வலை பின்னல் போலவே போய்க் கொண்டு இருக்கின்றது. ஜெயவர்த்தேனே கூட மதுரையில் இருந்து சென்ற செட்டி பரம்பரை.
நேற்று கூட ராஜபக்ஷே தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாடமுடியும் என்பதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? புத்த பிக்குகள் மூலம் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்பது தான். பாகிஸ்தான் எப்படி ஐஎஸ்ஐ மூலம் நிழல் ஆட்சி போல இங்குள்ள பிக்குகள் தான் நிழல் மனிதர்கள் போல.
அமைதியை போதித்த புத்தர் உருவாக்கிய புத்த மதம் இன்று இனவாதம் என்ற அல்வாவை கிண்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.
புரட்டு என்பது தான் பட்டவர்த்தனமாக தெரிகின்றதே. ஆதார புத்தகங்களை தனியாக எழுதி வைக்கின்றேன்.
ஜெயவர்த்தேனே கூட மதுரையில் இருந்து சென்ற செட்டி பரம்பரை.
//////////////////////
ஓ.....ஜோதிஜி அப்ப சிதம்பரம் செட்டியாருக்கு ஜெயவர்த்தனே ஒண்ணு விட்ட பங்காளியா...?பேஷ்....பேஷ்....ரொம்ப நன்னாயிருக்கு போங்கோ..!
ஜோதிஜி,
நான் படிச்ச மஹாவம்ச கதை வேறயா இருக்கவே அதை சொன்னேன்,புரட்டுனு தான் நல்லாவே தெரியுதே.
#ரவுண்டெல்லாம் கட்டலை ,பொதுவாகவே முரண்ப்பாடாக தெரிஞ்சால் சொல்லிவிடுவது வழக்கம், சும்மா பேச்சுக்கு நல்ல இடுகை, தொடருங்கள்னு சொல்லுற பழக்கமெல்லாம் இல்லை :-))
நீங்க எழுதுவது சரி தான் ,ஆனால் பெரும்பாலும் எல்லாம் ஏற்கனவே அறிந்த,அல்லது விக்கிப்பீடியாவில் கிடைக்கக்கூடிய தகவல்களாக இருக்கு, இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்,அவ்வளவே, சூரி என்பவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்.
உங்கமேல எதிர்ப்பார்ப்பு அதிகமானதால் வந்த வினை :-))
-----------
சார்வாகன்,
நானும் நீங்க சொன்ன"மஹாவம்சம்" தளத்தில் தான் படிச்சிருக்கேன் , உங்க சுட்டிப்போய் பார்த்த பிறகு தான் தெரிஞ்சது.
ரென்டாவது சுட்டி தான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கு.நன்றி!
நந்தவனம்,
பாண்டியன் எக்ஸ்பிரஸ் போல "பாண்டியன் எக்ஸ்போர்ட்ஸ்'னு ஒன்னு ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கே :-))
நீங்க சொன்ன பாண்டியரு கதைய மட்டும் சொன்னா போதுமா, நான் சொன்ன பல்லவர் வழி வந்த கர்நாடக "பல்லாலர்" வம்ச வழித்தோன்றல்களே சிங்களவர்கள்,என்ற கதையும் சொல்லுறது.
ஹி...ஹி சிங்களவர்களுக்கு சொல்லிக்க கதைக்கு பஞ்சமேயில்லை :-))
சிங்கள லிபியும் கனட லிபியும் கூட ஒத்துப்போகும்,அந்த அளவுக்கு தொடர்புண்டு.ஏன்னா ரெண்டுக்குமே சமஸ்கிருத தொடர்புண்டு.
சிங்களர்களுக்கு இந்திய தொப்புள் கொடி ஒட்டுறவு உண்டு, ஆனால் ஈழத்தமிழர்கள் தான் லெமுரியாவில் இருந்து வந்தோம், தமிழகத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவெல்லாம் இல்லை,வேண்டும்னா, தமிழக தமிழர்களுக்கு மூதாதையர் இலங்கை(ஈழம்) தமிழர்கள்னு தோசையை திருப்பி சுடுறாங்க :-))
# என்கிட்டே ஒரு மேட்டர் அதாவது தகவல் இருக்கு, அதை வச்சு பதிவு போட்டேன் என்றால் குத்துமதிப்பா ஒரு கூட்டம் எனக்கு தமிழீனத்துரோகினு பட்டம் கொடுத்தாலும் கொடுக்கும் :-))
-----------
ஜோதிஜி,
ஜெயவர்த்தனே ஆரம்பத்தில் கிருத்துவராக இருந்து திடீர்னு அரசியலுக்காக புத்த மதம் மாறிக்கிட்டார், இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் அப்படித்தான், புத்தமதத்தினை அரசியலுக்காகவே கையிலெடுப்பார்கள்.
ராச பக்சே கூட கிருத்துவராக இருந்தவரே!
yes that is true. Jeyawarthane originated from chetty family.Their forefathers migrated to Sri Lanka in 17th centuary.Then they converted as singhalese.with time.
Nimalan (Sri Lanka)
நந்தவனம்,
சும்மா இருக்கிற ,சகோ.சார்வாளை சொறிஞ்சுவிட்டுப்புட்டு அப்புறம் குத்துதே குடையுதேனு பொலம்ப கூடாது சொல்லிட்டேன்.
இப்போ சார்வாகன் வந்து , குரங்குக்கும் ,மனிதனுக்கும் எத்தனை சதவீதம் ஜீனோம் ஒத்து போகுது,சிங்கத்துக்கு எத்தனை சதவீதம் என சொல்லி,எவ்வாறு சிற்றினமாதல் சிங்கத்திடம் இருந்து மனிதனுக்கு நடக்காது, ஏன் இனக்கலவை சாத்தியமில்லை என்பதெல்லாம் விளக்குவார் கேட்டுக்குங்க :-))
இப்படிக்கு ஒரு ஹோமோ சேப்பியன்ஸ் வம்சாவழி :-))
oriya bengali eluththukkal mathiri singalumum ullatho?
ஒரியா, பெங்காலி, அஸ்ஸாமி சகோதர மொழிகள். சிங்களம் வேறு. பாலி மொழியின் வழிவந்தது.
//சிங்களர்களுக்கு இந்திய தொப்புள் கொடி ஒட்டுறவு உண்டு, ஆனால் ஈழத்தமிழர்கள் தான் லெமுரியாவில் இருந்து வந்தோம், தமிழகத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவெல்லாம் இல்லை,வேண்டும்னா, தமிழக தமிழர்களுக்கு மூதாதையர் இலங்கை(ஈழம்) தமிழர்கள்னு தோசையை திருப்பி சுடுறாங்க :-))//
வவ்வால்,
100- 150 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நம்ம பங்காளிகளான மலையாளிகள் கூட தமிழருக்கும் மலையாளிகளுக்குமான உறவை ஒத்துக்கொள்ளாதபோது இவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்.
@வவ்வால்
மேட்டரை வச்சிகிட்டே வஞ்சகம் பண்ணுனா எப்படி? மேட்டரை எழுதி விட்டு இது உண்மை பொய்யா தெரிலைனு ஒரு டிஸ்கி போட்டு விட்டுட்டா நாங்க புடிச்சுக்கிறோம்! உமக்கும் சமாளிக்க வசதியாயிருக்கும்.
ஜோதிஜி,
//சிங்களர்கள் மரபணு ரீதியாக மட்டுமல்ல. எல்லாவகையிலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடையிடையே கலப்புகள் அதிகரித்து கண்றாவியாக பல நிகழ்வுகள் நடந்தேறி மனதளவில் பிறழ்வுகளாக மாறிப் போனார்களோ என்று நினைத்துக் கொள்வுதுண்டு.//
சிங்களவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிங்களவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும். முதலில் இதை ஈழத்தமிழர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் தான் அக்மார்க் தமிழர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்.
எனக்கு ஒன்று தெரிலிங்க! தமிழன் என்றால் யார்? நன்றாகத் தமிழ் தெரிந்தால் தான் தமிழனா? வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழகத்தில் வாழ்வதில்லையா? அவர்கள் தமிழர்கள் இல்லையா?
Arab என்பவர் யார் என்பதற்கு
The Arab League, a regional organization of countries intended to encompass the Arab world, defines an Arab as:
An Arab is a person whose language is Arabic, who lives in an Arabic-speaking country, and who is in sympathy with the aspirations of the Arabic-speaking peoples.
இதே பொருள் தமிழருக்கும் பொருந்தும். தமிழ் பேசும், தமிழ்மண்ணில் வசிக்கும், தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள் தான்.
வவ்வால்,
//நான் படிச்ச மஹாவம்ச கதை வேறயா இருக்கவே அதை சொன்னேன்,புரட்டுனு தான் நல்லாவே தெரியுதே./7
இன்றைக்கு ஜாதி பெருமை பேசும் எல்லாரிடமும் இதுபோன்ற புராணபுருடா கதைகள் நிறைய இருக்கவே செய்கின்றன.
சகோ ஜோதிஜி,
நம் எப்போதும் சொல்வது மதகுருக்கள் அரசியலை உலக முழுதுமே கடந்த 100 வருடம் முன்புவரை தங்கள் கட்டுப் பாட்டிலேயே வைத்து இருந்தனர்.
அதன் நீட்சியாக தங்களின் அதிகாரத்தை தொடர்ந்து கைக்குள் வைக்க முயல்வதே இலங்கைப் பிரச்சினை.
என்னமோ தமிழர்கள் தனிநாடு கேட்டதால் பிரச்சினை என்பதே இதர இந்தியர்களின் கருத்தாக உள்ளது.
அதிலும் நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களின் ஏக இறைவன்[புத்தர்],இன மத மேட்டிமை கூறும் மத புத்தகம்[மகா வம்சம்], மத குருக்களின் கட்டுக் கோப்பான நிர்வாக அமைப்பு தங்களின் மேன்மை நிலையை விட்டுக் கொடுக்காது.
இந்தியாவில் ஏக இறை,ஒரே மத புத்தகம், இல்லாமையால் மத குருக்களின் பிடி [குறைந்த பட்சம் தமிழகத்தில்]தளர்ந்தது.
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின் ,சிங்கள மத குருக்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நாட்ட எதிரிகள் தேவைப்பட்டனர்.முதலில் முஸ்லிம்கள் மலையாளிகள்,மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என் ஒடுக்கி,பலரை நாட்டை விட்டு விரட்டி, உள்நாட்டிலும் பலரை ஒன்றுமில்லாதவர்கள் ஆக்கி இப்போது மீண்டும் முஸ்லிம்கள் மீது ஒடுக்குதல் என தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டது.
இலங்கைப் பிரச்சினைக்கு மகா வம்சம்தான் வித்திட்டது!!!!!!!!!!!!!!!
சிங்களர்களும் மதகுருக்களால் சுரண்டப்படுவதும் உண்மைதான்.
மனிதன் மதத்தை தாங்கி பிடிக்கும் வரை இன மத சிக்கலுக்கு தீர்வு வராது!!
மத புத்தக விமர்சனம், மத புத்தக கதைகளுக்கு சான்றுகள் இல்லாமை என்பதை அனைத்து தளங்களிலும் முன் எடுக்க வேண்டும்.
தமிழகம் தன் ஆதரவை தொடர்வது மட்டும் அல்ல. இன்னும் இதர மாநில அரசியல் தலைகளின்,இயக்கங்களின் ஆதரவு பெற முயற்சி செய்து இதனை இந்தியாவின் குரலாக மாற்றினால் தீர்வு வரும்!!
நன்றி!
ஜோதிஜி,
இந்தப் பதிவே சூரைத் தேங்காய் போட்டதுபோல இருக்கிறது. ஒருவேளை நீங்களும் நான்லீனியராக எழுத ஆரம்பிச்சிட்டிங்களா?
//இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இன்றைய இலங்கையில் பிரதேச எல்லைகள் என்று எதுவும் இல்லை. //
எதோ நேற்று நடந்தது போல, "2300 ஆண்டுகளுக்கு முன்னால் கூட" என்று சொல்கிறீர்கள். அப்போது தமிழகம் எப்படி இருந்தது என்பதே சந்தேகம். அதற்கே பெரிய சான்றுகள் இல்லை.
//இதன் தொடர்பாக உருவானது தான் சிங்களர்கள் "சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் " என்றொரு அசிங்கக் கதையும் நிலைபெறத் தொடங்கியது.//
உலகத்தில் உள்ள பழங்குடி இனங்களில் விலங்குகளின் தோன்றல்களாக சொல்லி புனைக்கதைகள் உருவாது புதிதல்ல. அமெரிக்க பழங்குடிகள் ஓநாயின் தோன்றல்களாக சொல்லிக்கொள்வதுண்டு.
//தென்கிழக்கு ஆசியா முதல் இந்தியா, தென்னிந்தியா வரைக்கும் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய போது//
தெற்காசியா முடுக்க சமஸ்கிருதம் பரவி ஆட்சி செலுத்தியதற்கு அத்தாட்சிகள் உள்ளனவா?
//பாடலிபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டுருந்த கலிங்க பேரரசுவின் மன்னரான (இன்றைய பாட்னா) அசோக பெருமன்னன்/7
ரொம்ப குழம்பி இருக்கிங்க.
//தீபவம்சம் கூறுவது எளார என்றழைக்கப்படும் தமிழ் மன்னனாகிய எல்லாளன். //
பொய் என்றால் முற்றிலும் பொய் எனலாம். அதைவிடுத்து நமக்கு தோதானவற்றை மட்டும் உண்மை என எடுத்துக்கொள்ள இயலாது.
//அவரின் சார்பாளர்கள் இலங்கைக்குச் சென்ற போது வழக்கில் இருந்த சமஸ்கிருதத்தில் தொடங்கி, பாலி, கலிங்கம், தமிழ் என்பது வரைக்கும் பல மொழிகள் கலந்து உருவாக்கிய கூட்டுக் கலவை அது. /7
இங்கயும் சமஸ்கிருதம் ஏற்கனவே இலங்கையில் இருந்ததாக கூறியுள்ளீர்கள்.
நிச்சயம் குட்டிப்பிசாசு உங்களின் கேள்விகளுக்கு பதில் தருகின்றேன்.
வாங்க நிமிலன். ஒரு அத்தியாயத்தில் இதைப்பற்றி முழுமையாக விபரங்கள் உள்ளது.
சிங்கள எழுத்து கிரந்த எழுத்தின் மாதிரி .. மணிபிராவளத்தை எழுத பவுத்தர்களால் உருவாக்கப்பட்ட கிரந்தத்தில் இருந்து வந்தது துளு - அதன் ஒரு பிரிவே சிங்கள எழுத்து. துளு எழுத்து இன்று மலையாள எழுத்தாக மாற்றப்பட்டு விட்டது .. ! பெங்காலி - அசாமி எழுத்துக்கள் வேறு வகையறா, ஒடியா மொழி வேறு வகையறா சிங்கள - மலையாளா - துளு - தமிழ் பிராமி ஒரு வகையறா !!!
விஜயனின் கதை உண்மையில்லை, அது அவ்வாறே உண்மையாக இருந்தால் கூட அது முழு சிங்களவருக்காமன கதையல்ல, மாறாக அரச பரம்பரையினருக்கு மட்டுமே பொருந்தும். மகாவம்சத்தில் தமிழரை விரோதிகளாகக் காட்டும் எந்த இடத்திலும் சோழர்கள் மட்டுமே எதிரிகளாக காட்டப்படுகின்றனர். எந்த இடத்திலும் பாண்டியர்களோ, சேரர்களோ பகைவர்களாக காட்டப்படவில்லை. ஒவ்வொரு முறை பாண்டியர் மீது படையெடுக்கப்படும் போது, பாண்டி மன்னர்கள் தமது முடியை சிங்கள நாட்டில் பதுக்கிவிடுவார்கள், அதனால் தான் சிங்களவர் மீது சோழர்கள் படையெடுப்பது வழக்கம் .. !
இந்த பகைக் கதையே பின்னாளில் தமிழ் - சிங்கள விரோதக் கதையாக அனகாரிக தருமபாலரால் மாற்றப்பட்டது... !
கண்ணகிக்கு கோட்டம் எழுப்பிய சேரன் செங்குட்டுவேன் அழைப்பில் விருந்தினராக வந்தவன் கஜபாகு என்ற சிங்கள மன்னன். நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் சிங்கள இனம் என்பது கிறித்துவுக்கு முன்னரே பரிணமித்துவிட்டது, அன்று அது எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை யாம் அறியோம், ஆனால் சிங்களவர் இலங்கைத் தீவில் நீக்கமற ஆளுமை செலுத்தியுள்ளார்கள்,....
ஆனால் இலங்கைத் தீவில் நீண்ட தமிழ் குடியிருப்புக்கள் இருந்தனவா என்பது ஐயமே !!! இடையிடையே உருவாகி வளர்ந்து மறைந்து கலந்தும் பிரிந்தும் தமிழர்கள் இருந்துள்ளனர்..
உதா. தொல்காப்பியம் தமிழர்கள் எல்லை வகுக்கும் போது வட வேங்கடம் - தென் குமரி இருமருங்கில் கடல் என்று கூறுகின்றதே ஒழிய, ஈழத் தீவு தமிழகத்தின் அங்கமாக காட்டாதது குழப்புகின்றது.. மணிமேகலை மணிப்பல்லவத்தை குறித்த போதும் அங்கு பேசிய மொழி எதுவெனக் கூறவே இல்லை .. ! இது எல்லாம் ஐயத்தை மேலும் எழுப்புகின்றது ..
சிங்களவர் தென்னாட்டில் இருந்து கிளைத்த ஒரு இனமாகவும், பின்னாளில் அது சிங்கள மொழியாகவும் பரிணமித்துள்ளது. இன்றைய ஈழத் தமிழர்கள் பலரும் சோழர்காலத்தில் குடியேறியவர்களின் வழித்தோன்றலாக இருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.
வடக்கில் இன்றளவும் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்கள் குறித்து தமிழர்களிடம் எவ்வித ஆழமான பதில்கள் இல்லை .. பெரும்பாலான சிங்கள ஊர்ப்பெயர்கள் தமிழ் மயப்படுத்தப்பட்டுள்ளது .. வெலிகம என்பது வலிகாமம் என்பது ஒரு உதாரணம்.
நான் இங்கு சிங்களவருக்கோ, தமிழருக்கோ வக்கலாத்து வாங்கவில்லை. வரலாற்றை அணுகும் போது நாம் தமிழர் என்றோ, சிங்களவர் என்றோ , இந்து என்றோ, பவுத்தம் என்றோ அடையாளங்களை கழட்டிவிட்டு நடுநிலையோடு ஆராய வேண்டியுள்ளது ..
இலங்கையின் மிகப் பழமையான இந்துக் கோவில் பொலன்னறுவாயில் உள்ளது. அதுவும் சோழர்கள் கட்டியது ...
திருக்கேதிஸ்வரம், கோணேஸ்வரம் அதனின் பழமை எனக் கூறுவது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. அதன் கட்டட அமைப்புக்கள் விஜயநகர பாணியில் உள்ளன. பின்னாளில் எழுப்ப பட்டவை. அதே போல சம்பந்தரும், அப்பரும் கேதிஸ்வரம், கோணேஸ்வரம் போகவே இல்லை. ராமேஸ்வரத்தில் நின்று பதிகம் பாடினார்கள், ஏன் போகவில்லை என்ற வினாவும் எழுகின்றது. இப் பதிகங்கள் பிற்கால இணைப்பா ? என்ற வினாவும் எழுகின்றது .
மேலும் பல விடயங்கள் !!!
Post a Comment