மதிப்புரை – ரஞ்சனி நாராயணன்
(மூன்றாவது பரிசு வாங்கிய விமர்சனம். அது குறித்து அடுத்த பதிவில்)
டாலர் நகரம்
எழுதியவர்: ஜோதிஜி
பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்
விலை: ரூ. 190
பக்கங்கள் : 247
வெளியான ஆண்டு: 2013
Dollar Nagaram
ஆசிரியர் குறிப்பு:
கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள்’ சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 10,000 + தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.
புத்தகம்: டாலர் நகரம்
டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்? இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.
ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார். புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.
தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.
நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.
திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?
சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.
மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.
‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.
அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.
உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.
26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?
மின் நூல்
9 comments:
எட்டில் ஒன்று இப்போது தான் தெரியும்... (என்கிட்டேசொல்லவே இல்லை)
அண்ணே... வாழ்த்துக்கள்...
விமர்சனம் மிக நன்றாக செய்து இருக்கிறார் ரஞ்சனிநாராயணன் அவர்கள்.
வாழ்த்துக்கள்.
ரஞ்சனிநாராயணன் அவர்களின் விமர்சனம் அருமை
வாழ்த்துக்கள் ஐயா
நேர்த்தியான விமர்சனம். வாழ்த்திக்கள் ஜோதிஜி சார்.ஈழம் வந்தார்கள் வென்றார்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.
அருமையான விமர்சனம், வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன் அவர்களே.
இயர் புக்கில் பார்த்தபோது இப்படி உங்களுக்கு வாழ்த்து கூறமுடியும் என்று நான் அறியவில்லை. வலைபூ விற்கு நன்றி!
எங்கள் ஊரில் லேத்து பட்டறை என சொல்லப்படும் நகைகளுக்கான போலி கற்கள் தொழில் நசிவடைந்த போது பெரும்பாலானோர் பிழைப்பு தேடி போன இடம் திருப்பூர்!
ஒண்டு குடித்தனம், ஓய்வில்லா வேளை என இவர்கள் படும் பாடு கொடுமை. அதனை படம்பிடித்து காட்டியிருகீர்கள். ரஞ்சனி மேடமும் அருமையாய் விமர்சனம் செய்திருக்கிறார்கள் !
அருமை.
வாழ்த்துகள்.
வல்லமை இதழில் பரிசு பெற்றுத்தந்த விமரிசனத்தை இங்கும் போட்டதற்கு எனது நன்றி, ஜி!
என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் சுருங்கச் சொல்லி விளக்கமாக அமைந்த விமர்சனம்.
Post a Comment