Wednesday, December 04, 2019

திருமதி ரவி - கண்ணீர் அஞ்சலி


"நீங்க வருத்தப்படுகிறீர்களா? பொய் சொல்லாதீர்கள். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா?" என்றார் மனைவி.  

ஆனால் அரை மணி நேரம் அவருடன் பேசாமல் வெளியே நின்று கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.  மரங்களில் வந்தமர்ந்த காக்கை, குருவி, அப்போது சரியாகப் பறந்து வந்த மயில் என ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றேன்.  கண்களில் நீர் வந்து விடுமோ? என்று தோன்றியது.  கஷ்டப்பட்டு தான் அடக்கிக் கொண்டேன். 

 பின்னால் எனக்குத் தெரியாமல் வந்து நின்ற மனைவி மீண்டும் கேட்டார்.

"உங்களைத்தான் மரணம் என்பது பாதிக்காதே? கூடப் பிறந்த அக்கா, அதுவும் உங்களுக்குப் பிடித்த, உங்கள் வாழ்க்கையோடு அதிகம் தொடர்பு கொண்டு அக்கா இறந்த போது கூட நீங்கள் கலங்கவில்லையே? இவரின் மனைவி இறந்து விட்டார் என்றவுடன் உங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு வருத்தம்?" 

"இன்னும் அவரை நேரில் கூடச் சந்தித்தது கூட இல்லை.  ஆனால் நிறையத்தான் உருகுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"அது தான் எனக்கும் புரியவில்லை?" என்றேன்.





02.12.2019

நான் அழைத்த நேரம் இன்னமும் எனக்குச் சரியாக நினைவில் உள்ளது.

மதியம் 12.21.  காரணம் என் மனம் முந்தைய தினத்தில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் சிலவற்றை வித்தியாசமாக உணர்ந்தது கொண்டேன்.  வாரத்தில் இரண்டு முறையாவது பேசிக் கொள்வோம்.  அவர் அழைப்பு வந்தாலே என் மனைவி "உங்கள் முதல் மனைவி அழைக்கின்றார்" என்பார். 

விடுமுறை தினங்களில் ஒரு மணி நேரம் பேசுவோம்.  அரசியல், சமூகம், அரசியல்வாதிகள், தொழில் என்று கலந்து கட்டி எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே வரும்.  கடந்த ஒரு வருடமாக மிக  நெருங்கி இருந்தோம்.  அவர் மகள், மகன் என்று அனைவரும் அறிமுகம் ஆனார்கள்.  அவர் மனைவி ஒரு முறை "மீன் குழம்பு நான் வைத்துத் தருகிறேன்.  நீங்க கிளம்பி வாங்க அண்ணே" என்றார்.  அந்த அளவுக்கு குடும்பம் பாச இணைப்பில் ஒன்றாக இருந்தது.  

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அவரை நான் நேரிடையாகச் சந்தித்ததில்லை.

என் எழுத்தின் வாயிலாக அறிமுகம் ஆனார்.  சில முறை விமர்சனங்கள் எழுதி உள்ளார்.  

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளுக்கு விமர்சனம் எழுதியிருந்தார்.  

ஆனால் என் ஒவ்வொரு பதிவும் வெளியான சில மணித்துளிகளில் அவர் அழைத்து விடுவார்.  அவர் மதுரையில் இருக்கின்றார்.  சி.ஏ முடித்து தணிக்கையாளர் என்ற உயர் பதவியில் உள்ளார்.  கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என்று ஆலமரம் போல வளர்ந்து நிற்கும் பாரம்பரிய நிறுவனத்தில் முக்கியப் பதவியில் உள்ளார்.  ஆனால் என் எழுத்துக்கு அவர் வாசகர் அல்ல.  அடிமை.  

காரணம் வரிக்கு வரி விமர்சிப்பார். சண்டை போட்டுக் கொள்வோம். சமாதானப்படுத்துவார். அவரை சீண்ட மோடி வாழ்க என்பேன்.  இப்படித்தான் எங்கள் உறவு தொடர்ந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக அழைக்கவில்லை.  நான் அழைத்த போது நானே அழைக்கின்றேன் என்றார்.  சரி, வேலைப்பளு என்று நினைத்துக் கொண்டு மறந்து விட்டேன்.

01.12.2019

அன்று என் தொழிலுக்கு சில ஆலோசனைகள் அவரிடமிருந்து கேட்டுப் பெற வேண்டியிருந்தது.  கட்டாயம் அழைத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.  அழைத்தேன். அப்போது தான் அருகே சில வினோத சப்தங்கள் கேட்டது. என் காதில் "சீட்டு வாங்கிக் கொள்" என்பது மட்டும் கேட்டது. நான் அப்போதே அவரிடம் கேட்டேன்.  "என்ன நடக்கின்றது?" என்று கேட்ட போது "பிறகு சொல்கிறேன்" என்று சொன்னார். 

நான் கட்டாயப்படுத்தவில்லை.  

மாலை 6 ஆறுமணிக்கு "நீங்கள் கேட்டதைச் செய்கிறேன்" என்றார். மாலை ஆறு மணி வந்தது.  அவர் சொன்னபடி அழைக்கவில்லை.  நான் தான் மீண்டும் அழைத்தேன்.  அவர் நண்பரை கான்ப்ரென்ஸ் அழைப்பில் வைத்துப் பேசி என் விருப்பத்தை நிறைவேற்றினார்.  

அப்போது கூட அவரைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. 

மீண்டும் வெளிநாட்டில் இருப்பவருடன் மீண்டும் கான்ப்ரென்ஸ் அழைப்பில் உரையாட வேண்டியிருந்தது.  அப்போது "நீங்களே அவருடன் பேசுங்கள்.  நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவர் பார்த்துக் கொள்வார்.  என்னை எதிர்பார்க்க வேண்டாம்" என்று தவிர்த்தார்.  

அப்போதும் என்னிடம் சொல்லவில்லை.  பேசி முடித்து நான் அவரை அழைத்து நன்றி சொல்லலாம் என்று நினைத்தேன்.  மறுநாள் பேசிக் கொள்வோம் என்று அழைத்தேன்.  

காலையில் முதலில் பேசிய போது அப்போது தான் முதல் முறையாக மனைவி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.  மனம் கனத்து விட்டது.  

எப்பேர்ப்பட்ட சூழலில் ஒன்றும் புரியாமல் நான் உள்ளே நுழைந்துள்ளேன் என்பதனை உணர்ந்து வெட்கப்பட்டேன்.  கடந்த சில மாதங்களாக அவர் மனைவியின் நோய்த் தன்மை அதிகமாகி இருந்ததை அப்போது தான் தெரியப்படுத்தினார்.  எனக்கு அதன் பிறகு இருப்புக் கொள்ளவில்லை.  நான் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.  

காரணம் அவர் மனைவிக்குப் பெரிய கவலையாக, தலைவலியாக இருந்த அவரின் தம்பிக்கு நான் இங்கு நல்ல வேலையும் இருப்பிடமும் அமைத்துக் கொடுத்தேன்.  என் மேல் அதிகம் அன்பு பாராட்டியவர். இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கின்றார் என்பதே கேட்கவே பயமாக இருந்தது. 

மனம் பொறுக்காமல், இருப்புக் கொள்ளாமல் மதியம் 12.21 க்கு அழைத்த போது ஒரே ரிங்கில் எடுத்தார். 

 "எனக்குத் துணைவியாக இருந்தவர் இறந்து விட்டார்" என்று வார்த்தை பிசிரின்றி சொன்னபோது ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன்.  

ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் இறந்துள்ளார்.  

இரத்த சோகை, சர்க்கரை என்று ஒவ்வொரு நோய்களும் உள்ளே வந்து ஒன்று ஒன்றோடு சேர்ந்து, 49 வயதில் 2.12.2019 மதியம் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்பதனைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

கேட்டவுடன் "நான் இப்போதே கிளம்பி வருகிறேன்" என்றேன்.  

"இல்லை காலையில் கிளம்பி வாங்க. நான் முகவரி அனுப்பி வைக்கின்றேன்" என்றார்.  

அவர் பிறந்த ஊரான "அருப்புக்கோட்டையில் தான் அடக்கம் செய்யப்படுகின்றது" என்றார்.  

03.12.2019

அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விட்டது.  கிளம்பும் போது காபி வேண்டுமா? என்று கேட்ட மனைவியிடம் மயானம் சென்று சேரும் வரைக்கும் நான் எதுவும் சாப்பிடப் போவது இல்லை. 

மனைவி என்னை வினோதமாகப் பார்த்தார். 

அருப்புக்கோட்டை சென்று சேர்ந்த போது மதியம் 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பேருந்தில் செல்லும் போது மனதில் பலவிதச் சிந்தனைகள்.

 மனைவி பார்வையில் நான் சில விசயங்களில் கொடூரமானவன்.  பாசம் என்ற வார்த்தைக்குள் சிக்காதவன்.  எனக்கு எது சரியென்று படுகின்றதோ அதனை உடனே தயங்காமல் செய்பவன்.  என்னை எந்த மரணமும் பாதிப்பதில்லை. 

குறுகிய காலத்தில் உறவினர்கள், தாத்தா, அப்பா, சித்தப்பாக்கள், தொழில் நிறுவனங்களில் நடந்த இயற்கை மற்றும் செயற்கை மரணங்கள் என்று என் வயதிற்கு நூற்றுக்கணக்கான மரணங்களைப் பார்த்தவன்.  

என் தொழில் வாழ்க்கைக்கு அதிகம் உதவிய, என் மேல் அதிகம் பாசம் கொண்ட என் இரண்டாவது அக்கா இறந்த போது அவரின் சவப் பெட்டியை வைத்த கண் வாங்காமல் ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அருகே இருந்த என் மற்ற அக்காக்காகள் அண்ணன்கள், தம்பிகள், தங்கைகள் எல்லோரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.  அந்த ஹால் முழுக்க அழுகை சத்தம் மிக அதிகமாக இருந்தது. நான் அழாமல் நின்ற கொண்டேயிருந்தேன். ஒரு அக்கா அழுடா என்றார். எனக்கு அழுகை வரவில்லை.

நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.  

"உங்களுக்குள் நீங்களே வளர்த்துக் கொண்டே நோய்க்காக நீங்கள் இன்னும் சில மாதங்கள் முன்னால் இறந்து இருந்தால் இன்னமும் மகிழ்ச்சியாகப் போய் இருப்பீர்கள் தானே?" என்று பேசாமல் உறக்க நிலையில் இருந்த அவரிடம் கேட்டுக் கொண்டேன்.  

காரணம் அந்த அளவுக்கு அவர் உடல் உபாதையில் இருந்தார்.  

53 வயதில் வயதுக்கு மீறிய சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களைப் போல அளவுக்கு மீறி நோய்களையும் வாங்கி வைத்திருந்தார்.  

அந்த நினைப்பு தான் இவரின் மனைவியை சவப் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தவரின் முகத்தைப் பார்த்து என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்னைப் பார்க்காமல் என்னோடு அலைபேசியில் பல முறை அரட்டை அடித்த நண்பரின் மகளும் மகனும் அருகருகே இருந்து சப்தம் போட்டு அழுது கொண்டிருந்தனர்.  

அது வரையிலும் பசியோடு என் உள்ளத்திற்குள் இருந்த சோகம் விடுபட்டுப் போனது.  அவருக்கு என்னன்ன பிரசச்னைகள் இருந்தது என்பதனை அறிந்து கொண்டு மொத்தச் சோகமும் என்னுள் இருந்தது விடுபட்டுப் போனது.  

அவர் இறந்தார் என்பதனை விட விடுதலையானார் என்ற மனநிலை தான் என்னுள் உருவானது.

கல்யாண வீடு, சாவு வீடு என்று எந்த இடத்திற்குச் சொன்னாலும் மனிதர்களைக் கவனிப்பது எனக்குப் பிடிக்கும்.  ஒவ்வொரு நிகழ்வுகளையும் உள் வாங்குவேன். வாய்ப்பு கிடைத்தால் அதனைப் படமாக்க முயல்வேன்.

குறிப்பாகச் சாவு வீட்டில் நடக்கும் எதிர்மறை நியாயங்களை மகள்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவணப்படுத்த விரும்புவேன்.  இறக்கும் வரையிலும் வரும் வார்த்தைகள், இறந்த பின்பு வரும் வார்த்தைகள் என்று ஒவ்வொன்றையும் சொல்வேன்.  நிலையாமை தத்துவம் குறித்து விளக்குவேன்.  மனைவி என்னைத் திட்டுவார்.  

மனம் என்ற மாயத்தை உடைக்க விரும்புவேன். 

மனிதர்கள் மற்ற உயிரினங்களை விட மகத்தானவன். அதே சமயத்தில் அவனை விட சல்லிப்பயலும் இந்த உலகில் இல்லை என்பதனை அவர்களுக்குப் புரிய வைப்பேன்.

அப்படித்தான் நண்பரின் மனைவியை மின் மயானம் வரைக்கும் சென்று அங்கே என்னுடன் இருந்தவர்கள் பேசிய உரையாடல்கள் முதல் அவர்களின் பார்வை வரைக்கும் ஒவ்வொன்றையும் உள்வாங்கிக் கொண்டு மதுரை திரும்பி திருப்பூர் வந்து என் வீட்டுக்குள் நுழைந்த போது  நள்ளிரவு 12 மணி.  நீண்ட நாளைக்குப் பின்பு தொடர்ச்சியாக 18 மணி நேரம் பட்டினியாக இருந்துள்ளேன். மதுரை வரும் வழியில் நண்பரின் நண்பர்கள் தேநீர் கடையில் நிறுத்தினார்கள். அவர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.

என் அஞ்சலியை இப்படித்தான் நண்பரின் மனைவிக்கு தெரிவித்தேன். நான் அழவில்லை. அழவும் மாட்டேன்.  அவர் முகம் இரவு தூங்கும் போது மனதிற்குள் வந்து வந்து போய்க் கொண்டேயிருந்தது.

கல்லூரி முடித்து வேலைக்குச் செல்லத் துவங்கிய மகள்.
கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மகன்.
25 வருட தாம்பத்திய வாழ்க்கை.

இனியும் நண்பருடன் இருந்திருந்தால் பூ பூப்பதை, காய் கனியாவதைப் பார்த்து இருக்க முடியும். சுவைத்து நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும்.  ஆனால் வாய்ப்பு அமையவில்லை. வாழ்க்கை முழுக்க நேர்மையாகத்தான் வாழ்வேன். அது தான் என் லட்சியம் என்று தன் வாழ்க்கையை பணயம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பரின் மனைவிக்கு மனதிற்குள் எத்தனை பிரச்சனைகள் இருந்ததோ? என்னன்ன கனவுகள் இருந்ததோ? எத்தனை புறக்கணிப்புகளை? அவமானங்களை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே வைத்துக் கொண்டு தடுமாறினாரோ? நண்பர் உணர்ந்து கொண்ட வாழ்க்கைத் தத்துவத்தை அவர் எப்படி புரிந்து கொண்டாரோ? உறவுகள், ஒதுங்கிய, ஒதுக்கப்பட்ட ஒவ்வொன்றும் அவரவர் பார்வையில் எப்படி இருந்தாரோ? வாழ்க்கையின் சூத்திரத்தை எப்படி உள்வாங்கினாரோ? 

ஆனால் எல்லாவற்றையும் தனக்குள் வைத்துக் கொண்டு நோயாக மாற்றிக் கொண்டு மறுகிக் கொண்டு விடைபெற்றுள்ளதை ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்தேன்.

நேர்மை என்பது ஆயுதமல்ல. அதுவொரு வாழ்க்கை நெறி.  வாழ்பவர்களுக்குத்தான் அது புரியும்.  தன் வாழ்க்கையில் கடைபிடித்தே ஆக வேண்டிய கொள்கையிது என்பதனை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும். ஆனால் என் நண்பர் நினைத்து இருந்தால் மற்றவர்களைப் போல நொடிப் பொழுதில் அவர் வகிக்கும் பதவியின் மூலம் உயர உயர பறந்து இருக்க முடியும்.  வாழ்க்கைத் தத்துவங்களை அவர் வெளியே தேடவில்லை.  என் வாழ்க்கை. என் செய்தி என்பது தான் மகளுக்கும் மகனுக்கும் கொடுத்து வளர்த்துள்ளார். இன்று இருவரும் கம்பீரமாக மலர்ந்துள்ளனர். அவர்கள் மூலம் நந்தவனம் உருவாகும்.  

பூக்கள் மலரும். அப்பா விரும்பிய அப்பாவிற்கு இதுவரையிலும் கிடைக்காத அனைத்து அங்கீகாரங்களையும் மகளும் மகனும் கொடுப்பார்கள். காரணம் அப்பா மகள் மகனை வளர்க்கவில்லை. சக்தி வாய்ந்த ஆயுதமாக மாற்றியுள்ளார். 

அப்பாவிற்கு அவர் வாழ்நாளுக்குள் பெருமை சேர்ப்பார்கள்.  அம்மாவிற்கு அதன் மூலம் உண்மையான அஞ்சலி செலுத்துவார்கள்.  மகனின் மகளின் அழுகையை நான் வேடிக்கைப் பார்த்தேன்.  ஆமாம் வேடிக்கை தான் பார்த்தேன்.  என் வயதுக்கு அவர்கள் வரும் போது என்னை விட மனத்திடத்துடன் இருப்பார்கள்.  அப்போது நான் வாழ்நாளின் இறுதியில் இருப்பேன்.  அப்போது அவர்களுக்குப் புரியும்.  எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டால் எப்படியிருக்கும்? என்பதனை ஒரு நாள் உணர்வார்கள்.  அப்போது இந்த எழுத்துக்கள் அவர்களுக்கு இன்னமும் பலவற்றையும் உணர வைப்பதாக இருக்கும்.  

நள்ளிரவில் வீட்டுக்கு நான் வந்தவுடன் அவருக்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்தேன். காலையில் பதில் அளித்தார்.

இரண்டு வருடமாக முகம் தெரியாது. முகவரி தெரியாது. ஆனால் பிறந்தது முதல் பள்ளித் தோழன் போல சமவயது என்பதால் இரண்டு பேரும் பழகியிருந்தோம். 

நான் எழுதும் பதிவுகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் உள்வாங்கி அதனை எப்படி எடுத்துக் கொண்டார் என்று பலவற்றோடு ஒப்பிட்டு ஒவ்வொரு நாளும் என் நலத்தை விரும்பி, என் ஒவ்வொரு அசைவிலும் தொடர்பு கொண்டு, என் தொழில் வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவியாய் இருந்தவரை மனைவி இறந்த போது தான் சந்திக்க வேண்டும் என்ற விதியின் சூத்திரத்தை இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

நண்பர் நான் இருக்கும் வரையிலும் அழவில்லை. 

மனைவியை மயானத்திற்கு வண்டியில் ஏற்ற முயன்ற போது மகளிடம் அவர் சொன்னது இன்னமும் என் மனதில் வந்து போகின்றது.

நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனத்துப் போய்விட்டது

Rathnavel Natarajan said...

அதிர்ச்சியாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்

SENTHIL KUMARAN said...

என்ன சொல்வது எனக்கு தெரியவில் லை

ஜோதிஜி said...

நானே அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியாமல் இருக்கிறேன்.