Thursday, March 29, 2018

மேலும் சில குறிப்புகள் 8

இது புத்தகங்களின் காலம். இணையத்தில் அவ்வப்போது கிறுக்கிக் கொண்டிருப்பவர்கள் கூடத் தங்கள் எழுத்தை புத்தகமாகப் பார்க்க வேண்டும் என்று சொந்தக் காசை செலவழித்து எழுத்தாளராக மாறும் நேரமிது. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு முக்கியமான ஒருவரின் புத்தகம் அறிமுகம் ஆகியுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலத்தில் எழுதி டெல்லியில் வெளியிட்டார். இப்போது தமிழ் பதிப்பு வந்து விட்டதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான விழாவை காட்சியாகப் பார்க்க முடிந்தது. 

முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஆண்டிமுத்து ராசா எழுதியுள்ள 2 ஜி அலைக்கற்றை ஊழல் என்பதற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகள். 

விழாவில் பேசிய ஒவ்வொருவரின் பேச்சையும் கேட்டு முடித்த பின்பு எழுத வேண்டும் என்று தோன்றியது. 

காரணம் ராசா தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சட்டத்தின் பார்வையில் இருந்து வென்றவராக வெளிவந்துள்ளார். இருந்த போதிலும் 91 வது நாளுக்காகக் காத்திருந்த அமலாக்கத்துறையும், சிபிஐ யும் மேல் முறையீடு செய்து மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கி உள்ளார்கள். 

மாநில சுயாட்சி என்ற வார்த்தையை நிறுத்த வேண்டும் என்பதற்காகவா? இல்லை விரைவில் வரப்போகும் பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமா? என்று தெரியவில்லை. 

2ஜி ஊழல், ஒன்னே முக்கால் லட்சம் கோடி போன்ற பெரிய வார்த்தைகளைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. இணையம் ஒன்று மட்டும் இருந்திருக்காவிட்டால் இந்த ஊழல் இந்த அளவுக்குப் பேசப்பட்டு இருக்காது? என்பது மட்டும் நிச்சயம். ஆனால் மாறன் சகோதரர்கள் போல ராசா, கனிமொழி மற்றும் உடன் பாதிக்கப்பட்ட கூட்டாளிகள் அனைவரும் விடுதலையாகி உள்ளனர். வென்றவர்களை வாழ்த்துவது தானே தமிழ் மரபு. வாழ்த்துகிறேன். 

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் பழிவாங்கும் பகுதி என்றழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவன் என்ற முறையில் என் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் எப்படி இருந்தது? என்பது இன்றும் நினைவில் உள்ளது. ஆனால் அடுத்த 25 ஆண்டுகள் கழிந்தும் பெரம்பலூர் மாவட்டம் எப்படி இருந்தது என்பது தமிழகத்தில் வாழ்ந்தவர்களுக்கு, நடப்புகளைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களும் நன்றாகவே தெரியும். 

ஆனால் ராசா பிறந்தது 1963. அவர் பிறந்த தாழ்த்தப்பட்ட சாதியில் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்திருப்பார்? எப்படித் தன்னைக் கல்வி ரீதியான முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பார் என்பதனை இன்றும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் வியப்பாகவே உள்ளது. இவரைப் போன்ற பலருக்கும் இடஒதுக்கீடு வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இவரைப் போல எத்தனை பேர்கள் உச்சத்தைத் தொட்டு இருக்கின்றார்கள்? 

கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ராசா பேசும் அப்போது தான் வகித்த அஞ்சல்துறை அமைச்சக பொறுப்பு பற்றியும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குத் தபால் வந்தால் பாரபட்சமாக எப்படிச் சாதியின் அடிப்படையில் வழங்கப்பட்டது குறித்தும் சில தகவல்களைச் சொன்னார். இன்று கலைஞர் மூலம் அந்தத் துறைக்கே அமைச்சர் பொறுப்பில் இருப்பதையும் நெகிழ்ந்து குறிப்பிட்டார். 

அதனை நினைவில் வைத்து இந்தப் புத்தக விழாவிலும் பேசியுள்ளார். ஐம்பது வயதில் ராசா தொட்ட உயரம் அசாத்தியமானது. ராசாவின் வளர்ச்சியில் அவர் கல்வி அறிவு உதவியதைப் போல அவரின் நேரமும் உதவியது என்று தான் சொல்ல வேண்டும். 

சிலருக்குத் தொட்டது துலங்கும். சிலருக்குத் தொட நினைக்கும் போதே வந்து கையில் சிக்கும். ஆனால் ராசாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கலைஞர் மட்டுமே. கூடுதல் தகுதியாக அவரின் சாதியும் வந்து சேர்ந்தது. இதைவிட மற்றொரு முக்கியக் காரணம் அப்போது இருந்த சூழ்நிலை அவருக்குத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து அமைச்சர் பதவியை வழங்கியது. 

மாறன் சகோதர்களின் அடாவடித்தனம். கலைஞர் தன் மகள் கனிமொழி மேல் கொண்ட பாசம் இவை இரண்டுமே ராசாவிற்குப் பம்பர் லாட்டரி போல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. கலைஞர் குடும்ப முதல் வட்டத்தில் மிக விரைவாக உள்ளே நுழைந்தார். நுழைந்ததற்கான பலனையும் கொடுத்து நன்றிக்கடனையும் தீர்த்துள்ளார். 

இதற்கெல்லாம் அடுத்தபடியாகத் திமுக வின் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் நமக்கு மிக முக்கியம் என்ற சூழ்நிலையில் இருந்த மன்மோகன் சிங் அரசாங்கம். 

ஒரு சாதகமான சூழ்நிலையில் இருந்தாலே சுக்கிர திசை என்று சொல்ல முடியும். ஆனால் பல சாதகமான சூழ்நிலை ராசாவின் வாழ்க்கையில் வந்து சேர இந்தத் துறை தான் வேண்டும். அதுவும் இவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வாங்கும் அளவிற்குக் கலைஞர் காட்டில் அடை மழை தொடங்கியது. அப்புறமென்ன? விவசாயம் செழித்தது. அறுவடைக்குப் பஞ்சமா? 

கொள்கைவாதிகளைப் பற்றிப் பேசும் லஞ்சம், ஊழல் பற்றி நாம் பேசக்கூடாது என்பது அரசியலில் உள்ள பொதுவிதி. இது பெரியார் மண். பெரியார் இல்லாவிட்டால் இங்கே இது போன்ற வளர்ச்சி நடந்துஇருக்கவே வாய்ப்பில்லை. சமூக நிதீயின் ஆசான் அவர். ஆமாம். இதையெல்லாம் இன்று மேடைதோறும் முழங்குபவர்கள் யார் யார் என்றால் கொள்கை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதில் வல்லவராக இருப்பவர்கள் மட்டுமே. சமூக நீதியைப் பற்றி யார் பேசுகின்றார்கள்? தங்கள் கல்வி நிறுவனங்களில், தொழில் நிறுவனங்களைத் தவிர மற்ற இடங்களில் சமூக நீதி வர வேண்டும் என்று பாடுபடுபவர்கள் என்று பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

தவறில்லை. 

கொள்கைவாதிகளை இந்தத் தமிழகம் எங்கே மதித்துள்ளது. காமராஜரைக் கல்லூரி மாணவனை வைத்துத் தோற்கடித்த சமூகம் தானே இன்றும் அவர் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றது. கக்கனை அரசுமருத்துவமனையில் தரையில் படுக்க வைத்தவர்கள் தானே அவரைப் போல உண்டா? என்று போற்றிப் புகழ் பாடுகின்றது? 

கொள்கையைப் பற்றி உரத்துப் பேச வேண்டுமென்றால் உடம்பில் தெம்பு இருப்பது அவசியம் தானே? அந்தத் தெம்பு வர வேண்டும் என்பதற்காகத் தொழில் அதிபர்களாக, கல்வித் தந்தையாக இருப்பது தவறா? 

ஆனாலும் என் பார்வையில் ராசா அவர்களின் மொழிப்புலமை, தேர்ந்த புத்திசாலித்தனம், தன் வழக்கில் நானே வாதாடுகின்றேன் என்று கலைஞர் எதிர்ப்பையும் மீறி நின்று இன்று வென்றுள்ளார். 

மாறன் செய்தது இரண்டு காரியங்கள். வெளியே சம்பாரிக்கவும் முடிந்தது. அதன் மூலம் தங்கள் நிறுவனங்களை வளர்க்கவும் முடிந்தது. கூடுதலாக எதிரிகளை வளரமுடியாமல் தடுக்கவும் முடிந்தது. 

ஆனால் ராசா அது போன்ற கேவலமான காரியங்களைச் செய்யவில்லை. செய்யும் கடமைக்குக் கூலி வேண்டாமா? அதைத்தான் செய்தார். விரும்பிய நிறுவனங்களுக்கு, சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதில் எந்தத் தவறும் இல்லை. 

ஆனால் அவர் மோதியது யாருடன்? பாகாசூர ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன். ஆதிக்கம் செலுத்திய மற்ற நிறுவனங்களுடன். விடுவார்களா? 

ஆனால் இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் ஈழத் தமிழர் விசயத்தில் காத்திருந்து கழுத்தறுப்பது எப்படி? என்று என்னுடன் வந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று உலகத்திற்கே கற்றுக் கொடுத்த சோனியா ஒரு பக்கம். 

தமிழகத்தில் உனக்குப் பல கோடி தொண்டர்கள் இருக்கலாம்? அதற்கு நாங்கள் என்ன இனி உழைத்து உன்னைப் போல ஓடாகத் தேயவா முடியும்? காலம் முழுக்க நீங்கள் எங்களைச் சுமப்பது உங்கள் கடமை என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் உணர்த்தி முட்டுச் சந்தில் நிறுத்திய ப. சிதம்பரம் மற்றொரு பக்கம். 

ஆனால் அம்பயர் போல இருக்க வேண்டிய மன்மோகன் சிங் எப்போதும் போலக் கண்களை மூடிக் கொண்டு காதுகளைப் பொத்திக் கொண்டு இருந்த காரணத்தால் டெல்லி லாபி வச்சு வச்சு செய்த கொடுமை அனைத்தையும் தாண்டி வந்துள்ளார் ராசா. 

மறைமுகமாக ஊதிப் பெருக்கிய மாறன் சகோதரர்களை வென்றுள்ளார். 

நீ என்னை உள்ளே வைக்கக் காரணமாக இருந்தாய். இன்று உன் புள்ளை உள்ளே போயிருக்கு பார்த்தாயா? என்று வெளியே கொண்டாட முடியாத மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். 

ஆமாம் சோனியாவும், மன்மோகனுக்கு இதில் தொடர்பே இல்லையா? 

அட போங்க பாஸ். அவங்களுக்கு எப்போதும் அடியாட்கள் தான் தேவை. இல்லாவிட்டால் கலைஞர் பிரதமராக மாறி இருப்பாரே? 

Tuesday, March 27, 2018

மேலும் சில குறிப்புகள் 7Friday, March 23, 2018

மேலும் சில குறிப்புகள் 6

ஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. 

ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத் தெரியவில்லை. இப்படித்தான் இந்த விசயத்தைப் பேசி கவனத்தை தம் பக்கம் திருப்ப வேண்டும் என்று பேசியது போலத் தெரிகின்றது. தொடக்கத்தில் இயல்பாகவே பேசத் தொடங்கினார். போகப் போக வார்த்தைகள் தெறித்தது. தன்னிலை மறந்தார். உடம்பு நடுங்கியது. அவரால் அவர் நிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வார்த்தைகள் எல்லை மீறியது. இன்று எல்லாப் பக்கங்களிலும் இருந்து ராஜா குறித்து பேச வைத்து விட்டார்.

வைரமுத்து வார்த்தைகள் கவனமாகக் கோர்க்கப்பட்ட மாலை போல இருந்தது. அவர் சொல்ல வந்த விசயத்தை அமைதியாகவே தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் தன் மொழி ஆளுமையின் கீழ் தெளிவாகவே எடுத்து வைத்தார். நிச்சயம் விவாதமாக மாறும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் காத்திருந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இரண்டு பக்க எதிர்வினைகள் தேவை என்றே கருதுகின்றேன். ஆனால் அது பேச்சின் மூலம் வராமல் எழுத்தின் வாயிலாகவே வந்து இருக்க வேண்டும். நிச்சயம் நிதானம் கிடைத்து இருக்கும். கட்டுரை வந்த தினசரியில் ராஜா தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து இருக்க வேண்டும். இது குறித்து இப்போது சிங்கப்பூரில் இருக்கும் சுப. வீரபாண்டியன் அவர்களின் பேச்சு மிக மிக அற்புதமாக இருந்தது. பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் மேடையில் எப்படிப் பேச வேண்டும் என்பதனை தற்போது சுப. வீரபாண்டியன் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் கொள்கைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சொல்லும் விதம் முக்கியம். அதனை விடப் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக முக்கியம். 

வளர்ந்து கொண்டேயிருக்கும் உலகில், மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றையும் மறு சீராய்வு செய்யும் போது தான் மாற்றங்கள் உள்ளே வரும். மாற்றங்களை ஏற்காவிட்டால் மொழி வளராது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனி மனித வாழ்க்கை கூட சாக்கடை போல தேங்கி விடும் ஆபத்துள்ளது.

இங்கே புனிதம் ஒன்று இருக்கின்றதாக நம்ப வைக்கப்படுகின்றது. ஆனால் என் அனுபவத்தில் ஒவ்வொன்றையும் புனிதமா? புனிதமற்றதா? என்பதனை ஒவ்வொரு தனிமனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கின்றது.

கடவுள், மதம், நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்கின்றது. மாற்றம் ஒன்று தான் மனித வாழ்க்கையில் முன்னேற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது. ஆனாலும் நிலையாமை என்பது மனித வாழ்க்கையில் முக்கியமானது. மாற்ற முடியாதது.

"ஏம்பா அவரா கொலையைச் செய்தார்?" என்று வியப்புடன் ஒரு செய்தி உங்களை வந்து சேர்ந்தால் சம்மந்தப்பட்ட வெளியே வாழ்ந்த வாழ்க்கையைப் போல அவருக்கென்று உள்ளே ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார். ஆனால் அதனை வெளியே தெரியாதவாறு அல்லது காட்டிக் கொள்ளாமல் இரண்டு வாழ்க்கையாக வாழ்ந்து இருக்கின்றார் என்று அர்த்தம்.

அப்படித்தான் கலைஞர்களும், அரசியல்வாதிகளும். 

இவர்கள் வாழ்நாள் முழுக்க இரட்டை வாழ்க்கை வாழ வரம் பெற்று வாழ வந்தவர்கள். ஒழுக்கத்தை, புனிதத்தைப் போதிப்பவர்கள் ஒரு நாளும் ஒழுக்க சீலராக வாழ்ந்ததாக எந்த வரலாறும் சொல்லவில்லை. உச்சகட்ட அயோக்கியத்தனங்கள் செய்தவன் தான் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மனம் மாறித் திருந்தி ஆன்மீகவாதியாக உருவெடுக்கின்றான். சரணாகதி என்ற நிலைக்கு மாறி விடுகின்றான்.

வாழ்க்கையின் முடிவின் எல்லைக்கு வந்து விட்டோம் என்ற பயம் உருவாகும் போது நாம் வைத்திருந்த கொள்கைகள் அனைத்தும் நம்மை விட்டு செல்லத் தொடங்கும்.

முழுமையாகக் கொள்கைகள் இல்லாமல் உயிர் பிழைத்து இருப்பது என்ற நிலைக்கு வந்து விட்டால் சாவு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்.

இது ராஜாவுக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருந்தாலும் அவரால் தமிழ் மொழி வளர்ந்துள்ளது. உலகம் முழுக்க பரவியுள்ளது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாயில் தமிழ்ப்பாடல் இன்னமும் உச்சரிப்பதற்குக் காரணங்களில் வைரமுத்துவும் ஒருவராக இருப்பார்.

ஆனால் ராஜா போல மதக்காப்பாளர்களை இந்தப் பூமி பலரையும் பார்த்து விட்டது. எவர் பெயரும் இங்கே நிலைக்கவில்லை. மதம் இது இயல்பான போக்கில், வாழ்நிலை, சூழ்நிலை பொறுத்து மாற்றம் பெற்று வளர்ந்து, வீழ்ந்து, தன்னை இளக்கிக் கொண்டு, மாறிக் கொண்டே தன் பயணத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. மதங்களை வளர்க்கத் தனி மனிதர்கள் தேவையில்லை. காரணம் மதம், கடவுள், நம்பிக்கைகள் என்பது அவரவர் மனம் சார்ந்தது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் மனத்தை அளக்க முடிகின்றது? அப்படி ஒரு கருவி இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதற்கு எதிர்வினையாகப் பேசிய மற்றவர்களின் பேச்சை விட இந்தக் காணொலியில் பாரதிராஜா பேசியது பிடித்து இருந்தது. அதனை விட அவர் இன்னமும் பக்கத்தைத் திருப்ப எச்சில் தொட்டு திருப்பும் பழக்கத்தை விடாமல் வைத்திருப்பது முக்கியமாகத் தெரிந்தது. 😀


https://www.youtube.com/watch?v=g0yRmQcGrBE

https://www.youtube.com/watch?v=P_Yx83fmJvM

https://www.youtube.com/watch?v=aGzIrdFhBHY

Saturday, March 17, 2018

மேலும் சில குறிப்புகள் 5

"கலைஞர்கள் உணர்ச்சிவசமானவர்கள். இதன் காரணமாகவே அவர்களின் சொந்த வாழ்க்கையில் பல சூறாவளி உருவாகி விடுகின்றது. அவரவர் புகழின் உச்சிக்குச் சென்றாலும் அவர்களின் சொந்த வாழ்க்கை கேள்விக்குரியதாக, கேலிக்குரியதாக மற்றவர்களால் பார்க்கப்படுகின்றது." 

நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்துறையைத் தொடக்கம் முதல் பத்திரிக்கை வாயிலாகவே பலவற்றை உள்ளும் புறமும் ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் நானே சில உத்தேச கொள்கைகளை மனதிற்குள் வைத்திருந்தேன். 

இவர் , இவர்கள் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பல விசயங்கள் சென்ற இரண்டு வருடங்களில் மாறியது. 

அதுவரையிலும் நான் நினைத்துப் பார்க்காத நம்ப முடியாத அளவிற்குப் பலவற்றை நேரில் பார்க்க வாய்ப்பு அமைந்தது. 

நான் புரிந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் திரைப்படத்துறையில் எந்த துறையாக இருந்தாலும் தன் தகுதிக்கு மீறிய பண ஆசையில் வெறி கொண்டு அலைகின்றார்கள். உண்மையான திறமை உள்ளவர்கள் பின்னால் உள்ளவர்கள் எந்த திறமையும் இல்லாத போதும் கூட அதிக பணத்தை தவறான வழியில் பெறுகின்றர்கள். தயாரிப்பாளர் என்ற ஒரு ஆலமரத்தை கிளை, இலை தொடங்கி ஆழத்தில் உள்ள ஆணி வேர் வரைக்கும் பிளந்து அவரவர்கள் எடுத்துச் சென்று விடுகின்றார்கள். 

அவர்கள் மீண்டும் அடுத்தவரை நோக்கி நகர்ந்து விடுகின்றார்கள்.  அதிசியமாக புதிய நபர் ஒருவர் சிக்கி விடுகின்றார். அவர்களின் பயணம் இப்படித் தான் தொடர்ந்து தொடங்கிக் கொண்டேயிருக்கிறது. 

இசைத்துறையும் விதிவிலக்கல்ல.

பாடகர்கள் என்றால் பள்ளிப் பருவம் முதல் இன்று வரையிலும் கொள்ளைப் பிரியம். அதுவும் பெண் பாடகர்கள் என்றார் அலாதி பிரியம். கல்லூரி வரைக்கும் வாணி ஜெயராம் தான் பிரியமானவராக இருந்தார். பிறகு அனுராதா ஸ்ரீராம் வந்தார். இவருக்குப் பின்னால் ஸ்வர்ணலதா வந்தார். ஆனாலும் இன்று வரையிலும் ஜென்சி எல்லாக் காலங்களிலும் பிரியமானவராகவே இருக்கின்றார். என் அலைபேசியில் அவரின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களைப் பதிவு செய்து வைத்துள்ளேன். இது தவிரக் கானா பாடல்கள், டப்பாங்குத்துப் பாடல்கள் என்று தனிப்பட்டியல் உண்டு. 

மனம் என் கட்டுப்பாட்டில் இருந்து நகர்கின்றது என்ற சூழ்நிலையில் இந்தப் பாடல்கள் என்னைத் தாலாட்டத் தொடங்கும். இதற்கு மேலே அடங்காத மனத்தை அலைபாயும் எண்ணங்களை நிறுத்த ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பேச்சாளர் உதவுவார். கலைஞர், வைகோ, தமிழருவி மணியன், தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன், வலம்புரி ஜான் என்று மாறிக் கொண்டேயிருப்பார்கள். 

தற்போது சுப. வீரபாண்டியன் பேச்சு என்னைக் கவர்வதாக உள்ளது. 

சுப.வீரபாண்டியன் காணொலிப்பேச்சுகளை அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று விடுவதுண்டு. மகள்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரம் வானவெளியை ரசித்துக் கொண்டு, அலுவலகத் தினசரி நிர்ப்பந்தங்களை இறக்கி வைத்து விட்டு புத்துணர்வுடன் கீழே இறங்கி வந்தால் அனைவரும் சாப்பிடத் தயாராக இருப்பார்கள். 

சுப. வீரபாண்டியன் பேச்சு ஒரு அலைக்குள் அடக்கி விட முடியாது. அவர் பல்வேறு இடங்களில் பேசிய பேச்சுக்களின் வாயிலாகப் பழைய வரலாறு, மதம், சாதி, நம்பிக்கைகள் மேல் கொண்ட மனித நம்பிக்கைகள் என்று அவர் பேசும் பேச்சில் எனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வதுண்டு. 

நேற்றும், நேற்றைய முன்தினமும் தொழிற்சாலையில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை. ஞாநி இறப்புக்குக் கூடச் செல்ல முடியாத வருத்தம் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. 

எப்போதும் போல இன்று அதிகாலையில் மனதைக் கழுவ பலவற்றைப் பார்த்துக் கொண்டேயிருந்த பிரணதி என்ற குழந்தையின் காணொலித் தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது. இவர் குரலை எங்கேயோ கேட்டு இருக்கின்றோம்? என்று யோசித்த போது தான் ஆனந்த யாழை மீட்டுகின்றாய் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. 

இன்று காலை ஆறு மணிமுதல் இந்தக் குழந்தையின் மொத்த பாடல்களையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் அம்மையார் வந்து அமர்ந்திருந்ததைக் கூடக் கவனிக்கவில்லை. அந்த அளவுக்கு இந்தக் குழந்தையின் குரல் என்னை ஈர்த்தது. கடந்த பத்து நாளில் உடம்பில் சேர்த்து வைத்திருந்த சோர்வு அனைத்தையும் நீக்கி இப்போது புத்துணர்ச்சி பெற்றவனாக மாற்றியுள்ளார். கூடவே இன்று காலை அம்மையார் கொடுத்த பூண்டுக்கஞ்சி வயிற்றை சுத்தம் செய்தது.

டி.இமான் இசை கூடத்திற்குத் தொடர்ந்து சென்று வரும் வாய்ப்பு அமைந்த போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்குப் பின்னால் உள்ள அனைத்து அரசியல் சார்ந்த விசயங்களையும் கூர்வையான கவனித்தேன். பலருடனும் பேசினேன். அப்போது தெளிவான ஒரு முடிவு கிடைத்தது. 

பாடகராக, பாடகியாக வாய்ப்புக் கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்து விட்டாலும் தக்க வைத்துக் கொள்வதும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நகர்த்திச் செல்வதற்கும் வெறும் திறமை மட்டும் போதாது. 

காரணம் இன்று தினந்தோறும் ஒரு பாடகர் பாடகி அறிமுகம் ஆகிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

எவர் பெயரும் எவருக்கும் நினைவில் இருப்பதில்லை. அவர்கள் என்ன பாடினார்கள்? எந்தப் படத்தில் பாடினார்கள்? என்பது குறித்து யாரும் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. இது தவிர தொலைக்காட்சியில், திரைப்படங்களில் பாடும் பாடகர், பாடகிகள் தற்போது 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் படித்தவர்களாகவே இருக்கின்றார்கள்.  

தமிழ் மொழியின் சூட்சமம் பற்றி தெரியவில்லை.  கற்றுக் கொள்வதில்லை ஆர்வம் இல்லை.  பாடல்கள் மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கங்களை உள்வாங்கி, தனக்குள் மூழ்கி, தன்னை அந்த கதாபாத்திரமாக உருவகப்படுத்திக் கொள்வதில்லை. 

வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக் கொண்டு இயல்பாக பாடாமல் கைபேசியில் வைத்துக் கொண்டு அவஸ்த்தையுடன் தான் பாடுகின்றார்கள்.  அடுத்து என்ன வரி என்று யோசிக்கும் போது அதன் பாவனைகள், பாவங்கள் மனதில் வருவதில்லை.  நவீன தொழில் நுட்பங்கள் இவர்களின் குறைகளை நிறைகளாக மாற்றி நம்மிடம் தந்தாலும் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது. 

15 வரி பாடலை, 60 வார்த்தைகள் அடங்கிய ஒரு பாடலை 24 மணி நேரம் சில சமயம் 48 மணிநேரம் பாட வைத்து ஒலிப்பதிவு செய்யும் கொடுமைகளைக் கண்ட போது மொழியறிவு இல்லாதவர்கள் தான் இந்தத் துறைகளை ஆள்கின்றார்கள் என்ற வருத்தமே மேலோங்கியது.  

கேட்பவர்களுக்கு மொழியறிவு இல்லாத காரணத்தால் போகின்ற போக்கில் காற்றில் கரைந்து விடும் பாடல்களாகவே இப்போது வரும் பாடல்கள் அமைந்து விட்டதில் எனக்கு பெரிதான ஆச்சரியமில்லை.

ஆனால் இந்தக் குழந்தைக்கு அற்புதமான எதிர்காலம் உள்ளது என்று மனம் சொல்கின்றது. காரணம் திறமை ஒரு பக்கம். சந்தைப்படுத்தும் விதம் மற்றொரு பக்கம். இவை இரண்டையும் சரியான முறையில் கையாளத் தெரிந்தவர்கள் இவர் பின்னால் இருப்பதாகத் தோன்றுகின்றது. 

இந்தக் குழந்தைக்குச் சகலவிதமான திறமையும் உள்ளது. பல சமயம் நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. கோடியில் ஒருவருக்குத்தான் இது போன்று அமையும். 


பார்க்கலாம்?

எதிர்காலம் என்பது அடுத்த நொடி ஆச்சரியங்களைச் சுமந்து வரும். 

பாடகி ஸ்வர்ணலதா வாழ்க்கை போல முடிந்து விடக்கூடாது. 

நமக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச சக்திகள் இவரை காத்தருள வேண்டும். எஸ். ஜானகி அம்மா போல சுசிலா அம்மா போல இவரும் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். தன் நிலை உணர்ந்து தனக்கான இடத்தை அடைய உற்றவர்கள் உதவ வேண்டும் என்று வேண்டு கோளை வைக்கின்றேன்.


Friday, March 16, 2018

மேலும் சில குறிப்புகள் 4

92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் முறையாக ஆட்டோ பிடித்துக் கையில் வைத்திருந்த துண்டுச் சீட்டில் உள்ள முகவரியைச் சொல்லி வந்து இறங்கினேன். 

நான் அன்று வந்து சேர்ந்த இடம் திருப்பூரில் உள்ள கொங்கு நகர். ஒரு வருடம் அங்கே இருந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளுக்குப் பல நிறுவனங்கள் மாறிய போது கொங்கு நகர் மறந்தே போய் விட்டது. அந்தப் பக்கம் செல்ல வேண்டிய வாய்ப்புகள் இல்லாமல் போனது. என் பள்ளித் தோழன் அந்தப் பகுதியில் தான் 27 ஆண்டுகளாக இருந்து வருகின்றான். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நினைவுக்கு வரும் போது அந்தப் பக்கம் செல்வதுண்டு. 

கடந்த ஒரு மாத காலமாக அலுவலக மற்றும் தொழிற்சாலைகளைக் காணும் பொருட்டுத் தினமும் செல்ல வேண்டியதாக உள்ளது. 

சென்னையின் வட சென்னை குறித்து அறிந்திருப்பீர்கள். ஆனால் திருப்பூரில் உள்ள கொங்கு நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஏறக்குறைய வட சென்னைப் பகுதியில் வாழும் எளிய மக்கள் வாழ்க்கைத் தரத்தினைப் போலவே இருக்கும். முழுக்க முழுக்கத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். வீடு, நடைப் பாதைக் கடைகள், எளிய உணவு போன்ற அனைத்தும் திருப்பூரின் மற்ற பகுதிகளை விட வேறு விதமாக இருக்கும். 

கடந்த இரண்டு மாதமாகச் சூறாவளியாகச் செயல்படவேண்டி இருந்த காரணத்தால் என் உணவு பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. எக்காரணம் கொண்டு வீட்டைத் தவிர வெளியே எங்கும் சாப்பிடாமல் இருந்த எனக்கு இந்த முறை கொங்கு நகர் பகுதியில் உள்ள பிரியாணிக் கடைகள், பதநீர், இளநீர், பனங்கிழங்கு, ஆட்டுக்கால் சூப்பு, பொறித்த மீன்கள், பொறித்த கோழிக்கறி, தரமுள்ள எளிய விலையில் கிடைக்கும் கொறிக்கும் சமாச்சாரங்கள் அனைத்தும் சபதங்கள் மீறி வயிற்றுக்குச் செல்ல துவங்கியது. 

வீட்டில் வந்து தவறாமல் சொல்லிவிடுவதுண்டு. பொறுக்கி என்ற பட்டமும் கிடைத்து. போக்குவரத்து விதிகளை மீறி வயிறு வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கியது. 


காலையில் கடந்த சில வாரமாக ராகிக் கூழ் குடித்துக் கொண்டிருக்கின்றேன். மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக என்னுள் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? என்பதனை ஆவணப் படுத்தும் பொருட்டு வீட்டில் உள்ள தெனாவெட்டு பார்ட்டி நிற்க வைத்து எடுத்த படமிது. 

தேவன் மகிமை உண்டாகட்டும். உணவுகளுக்கு விசுவாசமாக இருப்போம்.

Wednesday, March 14, 2018

மேலும் சில குறிப்புகள் 3

வாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா? வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா? இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் தோன்றக்கூடிய எண்ணமாக இருக்கும்? 

இப்போது நாங்கள் இருக்கும் வாடகை வீடென்பது நான்காவது வீடு. இந்த ஆண்டோடு வெற்றிகரமாக எட்டு ஆண்டுகள் முடியப் போகின்றது. குடும்பத் தலைவி குடும்பத் தலைவரிடம் கேட்கும் அதே கேள்வி தான். எப்போது நம் சொந்த வீடு? என்ற கேள்விக்குச் சிரித்துக் கொண்டே கடந்து வந்து விடுவதுண்டு. அவர் இப்போது கேட்பதில்லை. ஆனால் மகள்கள் கேட்கத் துவங்கி விட்டார்கள். 

இவர்களைச் சமாளிக்க முடியாமல் ஊரில் என் அப்பா வைத்துள்ள வீடு மிகப் பெரியது. தோட்டத்துடன் பெரிய இடமாக உள்ளது. பத்துக் குடும்பங்கள் வசிக்க முடியும். ஆள் கேட்பாற்றுக் கிடக்கின்றது. உங்கள் குழந்தைகள் அங்கே விருப்பப்படி விளையாடலாம். இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் இருவரும் அங்கே சென்று விடுவோம் என்று சொல்லி முடிப்பதற்குள் நாங்கள் அங்கே வரமாட்டோம் என்ற பதில் தெறித்து வந்து விழும். 

காரணம் அவர்கள் விரும்பும் வசதிகள் அங்கே இல்லை. வாழ்வதற்கு வசதிகள் தேவை என்ற கொள்கை கொண்டு வாழும் மகள்களின் எண்ணத்திற்கும் எனக்கும் நிறையக் கருத்து மோதல்கள் அவ்வப்போது வீட்டில் காரசாரமாக நடக்கும். 

திருமணம் நடந்து மனைவி திருப்பூருக்கு வந்த போது நான் தனியாளாக இருந்த போது குடியிருந்த குடியிருப்பு வளாக வீட்டுக்குள் (சகல வசதிகளுடன் வைத்திருந்தேன். மாமனார் வியந்து போனார்) வந்து ஜம்மென்று பால் காய்ச்சினார். 

குழந்தைகள் வளரத் தொடங்கிய போது எல்லைப் புறத்தில் இருந்த அந்த வீட்டில் இருந்து நகர்ப்புறத்தின் உள்ளே வந்து சேர்ந்தோம். இரட்டையரைத் தொடர்ந்து உடனே அடுத்தவரும் வந்து சேர்ந்த போது சற்று வசதியான தனி மாளிகை போல இருந்த வீட்டுக்குச் சென்றோம். அந்த வீடு அமெரிக்காவில் இருந்த பெண்மணி வருடம் ஒரு முறை திருப்பூர் வரும் போது பயன்படுத்தும் வீடு. மற்ற நேரம் பூட்டிக் கிடக்கும். பாட்டியம்மா கட்டுப்பாட்டில் இருந்தது. பாட்டியைச் சந்தித்த அந்தத் தினம் இன்றும் நினைவில் உள்ளது. 

சாதி, குலம், கோத்திரம், பணிபுரியும் இடம், வாங்கும் சம்பளம் என்று ஆதி அந்தம் அனைத்தும் கேட்டு அரைகுறை மனதோடு தந்தோர். அதன் பிறகு முக்கியமான சிபாரிசு அவருக்கு வந்து சேர்ந்த போது முக்கால் மனதோடு தந்தார். ஒரு மாதம் கழித்து வீட்டைப் பார்க்க வந்தார். அம்மையார் தெளிவாக வைத்திருந்தார். ஆச்சரியப்பட்டுப் பாராட்டி விட்டுச் சென்றவர் மாதம் ஒரு முறை வாடகை வாங்க மட்டும் வருவார். கூடுதல் தகவல். அம்மையார் கொடுக்கும் தேநீர் அவருக்கும் சொர்க்கலோகத்தைக் காட்டியது. அப்புறம் இந்தத் தேநீருக்காக மாதம் இருமுறை நலம் விசாரிக்கின்றேன் என்பதனை காரணமாகச் சொல்லிக் கொண்டு இரண்டு முறை வரத் தொடங்கினார். 

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இந்த வீட்டுக்கு வரும் போது வீட்டைப் பார்த்து விட்டு உயர்தர வர்க்கத்திற்கு எப்போது வளர்ந்தாய்? என்ன தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான லாபம் கிடைக்கின்றதா? என்ற கலாய்ப்பார்கள். ஆனால் அந்த வீட்டுக்குச் சென்று வெளியே வரும் வரைக்கும் இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு எல்லாவற்றையும் இழந்தவனாக மாற்றியது. 

மற்றொரு பிரச்சனை உருவானது. 

மூவரையும் பள்ளியில் கொண்டு போய்த் தினமும் சேர்ப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மாலையில் அழைத்து வருவது அதனைவிடவும் பல பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்த்தது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் எதன் மீதும் அக்கறை செலுத்த முடியாத அளவிற்கு அந்த வீடென்பது எல்லாவகையிலும் பெருந்துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருந்தது. 

ஆனால் மற்றவர்களின் பார்வையில் மதிப்பு மிக்கதாக இருந்தது. 

இப்போது இருக்கும் வீட்டைத் தரகர் ஒருவர் காட்டிய போது அப்போது இந்த வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் இந்த வீட்டுக்கு வரப்போகின்றீர்களா? கடந்த ஒரு வருடத்தில் ஆறு பேர்கள் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வீட்டார்கள் என்று பயமுறுத்தினார். சமையல் அறை, ஒரு அறை, மற்றொரு அறை, வெளியே நடைபாதை. ஒரு பெரிய அறையை எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் வீட்டுக்குச் சொந்தக்காரர் வாடகை விட என்ற நோக்கத்தில் மட்டும் உருவாக்கியிருந்தார். வீட்டுக்கார பெண்மணி எப்போதும் போலக் குலம், கோத்திரத்தை விசாரித்தார். காரணக் காரியங்களைப் பொறுமையாக விளக்கினேன். இந்த வீட்டுக்கு உறுதியாக வந்து விட வேண்டும் என்று தீர்மானித்தற்கு முக்கியக் காரணம் வீட்டுக்கும் மகள்கள் படிக்கும் பள்ளிக்கும் 200 அடி தொலைவு தான். 

மேலைநாடுகளில் அருகாமைப் பள்ளியென்பது பெற்றோர்களுக்கு வரம் போல இருக்கும் வாழ்க்கையைக் கொண்டது. ஆனால் இங்கே எல்லாமே தலைகீழ். பள்ளியென்பது கௌரவம் சார்ந்தது. அதனால் உருவாகும் பிரச்சனைகளை எழுத்தில் எழுதி விட முடியாது. ஆனாலும் அதனைத் தான் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள் என்பது ஆச்சரியத்தின் உச்சமாக உள்ளது. பள்ளியில் மணியடிக்கும் நேரத்தில் வாகனங்களின் சீற்றங்களைப் பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

ஆனால் இந்த வீட்டுக்கு வந்த பின்பு மகள்கள் குறித்த எந்தப் பயமும் இல்லை. நான் அக்கறைப்பட்டுக் கொள்வதே இல்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சுகமாக வாழ்கின்றார்கள். மகள்கள் வளர வளர மற்றொரு பிரச்சனைகள் உருவாகின்றது. பெண்கள் என்பதால் அதுவும் நான்கு பெண்கள் என்பதால் அவர்களின் மாதந்திர தேவைகள் உந்தித் தள்ளும் போது அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து குளியல் அறையை, கழிப்பறையைப் பயன்படுத்தும் போது நான் அந்தப் பக்கம் செல்லவே முடியாது. 

குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் எனக்கு ஒதுக்குவார்கள். அவர்கள் ஒதுக்கும் நேரத்தை நான் பயன்படுத்தாமல் நான் கணினியில் அமர்ந்திருப்பேன். திடீரென்று ஞானோதயம் உருவாகி வயிறு வலிக்கக் கத்திக் கொண்டு ஓடுவேன். அந்த நேரத்தில் சரமாரியாக என்னைத் தாக்க வருகின்றார்கள். 

நிதானமாகக் குளிக்க முடியவில்லை. சோப்பு போட்டுக் கொண்டிருக்கும் போது வெளியே தட தடதடவென்று தட்டி களேபரத்தை உருவாக்குகின்றார்கள். 

அவர்கள் வாழ்க்கையை அவர்கள் ரசனையுடன் சுகவாசியாக வாழ்கின்றார்கள், 

நான் அவர்களிடம் கேட்டுக் கேட்டு, திட்டு வாங்கிக் கொண்டு, இன்னமும் திருந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

Tuesday, March 13, 2018

மேலும் சில குறிப்புகள் 2

நேற்று மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்த போது அம்மையார் பழைய பாடல்களின் தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்த போது செய்திக்கு மாற்றட்டுமா? என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டுஅவர் பார்த்துக் கொண்டிருந்த பாடலை நானும் சிறிது நேரம் பார்த்தேன். 

எம்.ஜி.ஆர். சிவாஜி தத்துவபாடல்கள். வார்த்தைகள் பசுமரத்தாணி போல உள்ளே பாய்ந்தது. ஆனால் என்னால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. சிறிது நேரம் ஓய்வு எடுக்கப் படுக்கையில் சாய்ந்த போது கூடத் தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்வரிகள் காதுகளை வந்தடைந்து கொண்டேயிருந்தது. 

அப்போது அந்தப் பாடல்களை ஊரில் இருந்த போது கேட்ட காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து போனது. 

இதே போலப் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரைக்கும் என் காதுகளில் ஒலித்த இசைஞானியின் பாடல்களை ஒவ்வொருமுறையும் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அதைக் காதில் வாங்காமல் கடந்து சென்று விடுவதுண்டு. காரணம் ஒரு பாடல் ஒலிக்கும் போது எனக்குக் கூடவே அப்போதைய நினைவுகள், நல்லது, கெட்டது, சோகம், பிரச்சனைகள் எல்லாமே நினைவுக்கு வந்து நிலைகுலைய வைத்துவிடும். 

டூரிங் டாக்ஸியில் தொடக்கத்தில் எந்தப் பாடலை ஒலிக்கவிடுவார்கள். டிக்கெட் கொடுக்கும் போது எந்தப் பாடல் ஒலிக்கும், டிக்கெட் கொடுத்து முடித்தாகிவிட்டது. படம் போட போகின்றோம் என்பதனை அறிவிக்கும் பொருட்டு ஒரு பாடலைப் போடுவார்கள். அதே போல ஊரில் ஒருவர் சிங்கப்பூரில் சம்பாரித்த சொத்தை வைத்து நவீன திரையரங்கம் கட்டினார். அந்தத் திரையரங்கத்தில் வேறு விதமான பாடல்கள் வரும். 

வீட்டுக்கு அக்காவிடம் ட்டியூன் படிக்க வந்த பெண் மீதி கொண்ட காதல் சமயத்தில் விரும்பிய பாடல்கள், கல்லூரி முடித்து முதல் ஆறு மாதங்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் படாமல் சுவர் ஏறி குதித்துப் பின்பக்கமாக உள்ளே நுழையும் போது பக்கத்து டீக்கடையில் ஒலித்த பாடல் என்று ஒவ்வொன்றும் இப்போது கேட்கும் பாடலை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும். 

நினைவுகள் சுகமானவை. ஒருவருக்கு நினைவு தான் முழுமையான சொத்து. ஆனால் அளவு கடந்து இருக்கும் போது, அது நிரம்பி வழிந்து பாத்திரத்தில் நிற்காத அளவுக்கு அனுபவங்கள் இருக்கும் போது அது சுமையாகத்தான் இருக்கும். இதன் காரணமாக மறதி வரமாக எனக்குத் தெரிகின்றது. 
இன்று காலையில் இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது இளையராஜா குறித்துப் பல எண்ணங்கள் வந்து போனது. 


எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால் அதனை உள்வாங்கத் தெரியும். இசைக்கோர்வைகளின் சூட்சமம் தெரியாது. ஆனால் அது எங்கே தொடங்கி எங்கே தொடர்ந்து எங்கே முடிகின்றது? முடியும் போது எந்த இசைக்கருவி மீண்டும் தொடங்க வைக்கின்றது என்பதனை அனுமானிக்கத் தெரியும். பாடல் வரிகளுக்கு இடையே சின்னச் சின்ன வாத்தியக்கருவிகள் செய்யும் மாய ஜால வித்தைகளை உணரத் தெரியும். இதை அனைத்தையும் இசைஞானியிடம் தான் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். 

பலமுறை பிஜிஎம் என்ற கோர்வைகளைத் தனியாக எடுத்துக் கேட்பதுண்டு. நிச்சயம் கோடியில் ஒருவருக்குத் தான் இந்தத் திறமை வாய்க்கும். இளையராஜா தமிழகத்தில் பிறந்தது நமக்கான பெருமை. 

இளையராஜா குறித்துச் சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய தகவலைக்கூடப் பகிர்ந்திருந்தேன். அது முழுமையான உண்மை தான். கற்பனை உலகத்தில் உலாவுபவர்கள் நிஜவாழ்க்கையில் நிஜமனிதர்களைக் கையாளமுடியாமல் போய்விடுகின்றது. அதற்கு முழு உதாரணமாக இளையராஜாவை எடுத்துக் கொள்ள முடியும் என்று எழுதத் தான் எனக்கும் ஆசை. ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

என் காதுக்கு வந்த சில தகவல்கள். 

எச். ராஜா மூலம் விஜய் ன் படமான மெர்சல் படம் குறித்து அதன் வெற்றி தோல்வி குறித்து, அதன் தாக்கம் குறித்து இணையதளங்கள், இந்து மதத்தை மட்டும் விமர்சித்து விட்டு மற்ற மதங்களை விமர்சிக்கத் தயங்கும் போராளிக்கூட்டங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நான் மற்றொரு விசயத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். 

இராம நாராயணன் மகன் யார் யாரிடம் இந்தப் படத்திற்கு நிதி பெற்றுள்ளார்? எப்படி ஹைப் உருவாக்குகின்றார்கள்? யார் பின்புலத்தில் இருக்கின்றார்கள்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? என்பதனை கவனித்த போது இரண்டு பேர்கள் அதிகப் பதட்டத்தில் இருந்தார்கள். ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அடிப்படையில் வியாபாரி. அவர் மேல் எந்தத் தவறும் இல்லை. நிதி உதவி செய்து உள்ளார். நம்ப முடியாத மீட்டர் வட்டி. அதற்கான பலனைப் பெற்றார். இரண்டாவது நபர் இசைஞானி. அவரும் இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்துள்ளார். அவருக்குண்டான பலனும் கிடைத்து விட்டது. 

மற்றொரு தகவல். 

இளையராஜாவுக்கு விருது கிடைத்தபிறகு தகுதியானவருக்குக் கிடைத்த மரியாதை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் தகுதியின் மீது எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதற்காகவும் அவர் உழைத்துள்ளார். அவருக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான மரியாதைக்குக்கூட லாபி வட்டத்திற்குள் நுழைந்து அதற்கான விலையைக் கொடுத்து தான் பெற்றுள்ளார். 

இது சார்ந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. 

எப்போதும் இசைஞானிக்கும் பத்திரிக்கையாளர்களும் ஏழாம் பொருத்தம். அவர்கள் குண்டக்க மண்டக்கக் கேள்வி கேட்பார்கள். இவரோ தத்துவ ஞானத்தைப் பாடமாகப் புகட்டுவார். அவர்கள் டர் ஆகி வேறு பாதையில் வண்டியைத் திருப்புவார்கள். இது எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருப்பது தான். நான் கூடப் பத்திரிக்கையாளர் மேல் தான் தவறு தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

விருது கிடைப்பதற்கு முன் சில மாதங்களுக்கு முன் தேசிய தொலைக்காட்சி (தனியார்) சேனல் நிர்வாகம் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க ஒப்புதல் பெற்றது. அந்தப் பேட்டி பல பிரபலங்களை எல்லாத் துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் தோட்டத்தில் அல்லது வெளியிடங்களில் நடந்து கொண்டே இயல்பாக உரையாடிக் கொண்டே செல்வது என்கிற ரீதியில் இருக்கும். இது தொடர்ந்து நடந்து வருகின்றது. 
ஒப்புதல் பெற்ற தினத்தில் பேட்டி எடுக்கும் குழுவினர் வந்த பிறகு முக்கியமான நபர் இருவரையும் விருந்தளித்து அவர்களிடம் இந்தப் பேட்டி வேண்டாம் என்று ஞானி காரணக் காரியங்களை விளக்கி உள்ளார். 

காரணம் அவர்கள் எப்படிக் கேள்வி கேட்பார்கள்? என்று இவர் நன்றாகவே உணர்ந்தவர். தப்பிக்க முடியாது. அவர்கள் மத்திய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள். மிரட்ட முடியாது. அடிபணிந்து தான் போக முடியும். அன்பாகவே பேசி வழியனுப்பி வைத்து விட்டார். யாரை மிரட்ட முடியும் என்பதனையும் யாரிடம் அடிபணிந்து போக வேண்டும் என்ற கலையையும் இசைஞானி தெளிவாகவே கற்று வைத்துள்ளார். 

அவரின் வாழ்நிலை, சூழ்நிலையில் வைத்துப் பார்த்தால் இது எனக்குச் சரியாகவே படுகின்றது? 

அப்புறம் ஏன் ஈரவெங்காயம் தத்துவ விசாரம்? 

இரட்டை வாழ்க்கை வாழ்வது எளிதல்ல. அதுவும் ஆன்மீகம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது எல்லாம் தற்போது காலத்தில் நடைமுறைக்கு ஒவ்வொது. எப்படியும் பல்லிளிக்க வைத்து விடும். இயல்பாக வாழ முடியாதவர்கள் மட்டும் தான் அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு வாழ முடியும். 

காரணம் இசைஞானி என்ற பட்டம் கலைஞர் காரைக்குடியில் வைத்துதான் கொடுத்தார். நிகழ்ச்சி நடப்பதற்கு முன் மதியம் முதல் அந்தப் பெரிய செட்டியார் வீட்டில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் அனைவரும் கூடியிருந்தனர். அந்தக்கூட்டத்தில் ஒரு பல்கலைகழகத் துணைவேந்தரும் இருந்தார். ஜமாபந்தி ஒன்று கூடும் போது ஆர்வக்கோளாரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவது இயல்பு தான். 

அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரியாத்தனமாக இசைஞானியிடம் பழைய பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டி வேறு சில தகவல்களைச் சொல்லி (அவர் தமிழ் ஆர்வலர்) பேச இசைஞானி அவரைப் பிலுபிலு வென்று பிடித்து உலுக்கி விட்டார். 

நடிகர் சிவகுமார், வைகோ, முரசொலிமாறன் தொடங்கி அத்தனை பேர்களுக்கும் தர்மசங்கடமாகிவிட்டது. தயவு தாட்சண்யம் இல்லாமல், கொஞ்சம் கூட யோசிக்காமல் துணைவேந்தரை இசைஞானி துவைத்து எடுத்து விட்டார். அவர் முகம் வாடிவிட்டது. அப்புறம் துணைவேந்தரை சமாதானப்படுத்தி வேறு பக்கம் நகர்த்தி விட்டனர். 

அந்தக் கூட்டத்தில் அவர்களுடன் இருந்த நண்பர் சில மாதங்களுக்கு இளையராஜாவுக்கு விருது கிடைத்த போது இந்தத் தகவலையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

ஆழ்ந்த திறமையும், புலமையும் கொண்டவர்களின் மனம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ? அந்த மனதிற்குள் இருக்கும் அடிப்படை வக்கிரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிறிதளவாவது கிடைத்த அனுபவங்கள் வாயிலாக மாறும் என்பதே சமூக விதி சொல்லும் பாடம். 

ஆனால் இசைஞானி விசயத்தில் நான் இன்று வரையிலும் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்குண்டு.

Sunday, March 11, 2018

மேலும் சில குறிப்புகள்............தொழிற்சாலையின் விரிவாக்கம் தொடர்பாகக் கடந்த ஏழெட்டு வாரங்களாகத் திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகம் செல்ல வேண்டியிருந்தது. 

தொழிலாளர்களை வரவழைப்பது, அவர்களுக்குத் தங்க வைக்க இடத்தை அடையாளம் காண்பது, வீட்டு உரிமையாளருடன் பேசி தங்கப் போகும் தொழிலாளர்களைப் பற்றித் தகவல் தெரிவிப்பது என்று மனிதவளத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்ததால் இதுவரையிலும் நான் செல்லாமல், பார்க்காமல் இருந்து திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளை அனைத்தையும் இந்தத் தருணத்தில் தான் பார்த்தேன். 

பல அனுபவங்கள் கிடைத்தது. 

குறிப்பிட்ட சமயத்தில் ஐந்து சென்ட், பத்துச் சென்ட் இடத்தை மிகக் குறைந்த விலையில் வாங்கிப் போட்டவர்கள் இன்று மாதம் தோறும் பல லட்சம் சம்பாரிக்கும் லட்சாதிபதியாக மாறியுள்ளனர். பத்துக்குப் பத்து அறை. பத்து அறை. ஒரு அறைக்கு 2000 முதல் 3000 ரூபாய் வாடகை. முன் தொகை பத்து மாதம் என்று நோகாமல் பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள். 

எனக்கு இவையெல்லாம் பெரிய ஆச்சரியமாகத் தெரியவில்லை. 

எனக்குத் தெரிந்து பல சிறிய பெரிய முதலாளிகள் வாடகை மூலமாக மட்டும் மாதம் தோறும் 50 லட்சம் வருமானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பலரையும் நான் அறிவேன். எதுவும் கணக்கில் வராது. மோடிஅரசாங்கம் கொண்டு வந்துள்ள பல கட்டுப்பாடுகளின் காரணமாகப் பாதிப் பணத்தைக் காசோலை மூலமாக மீதிப் பணத்தை ரொக்கமாக வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். 

புறநகர்ப் பகுதிகளில் தொழிலாளர்களுக்காகக் கட்டியுள்ள தீப்பெட்டி அளவுள்ள வீடுகளில் பத்து வீடுகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை வசதி. நான் திகைத்துப் போய்விட்டேன். ஒரு அறையில் நான்கு பேர்கள் தங்கினால் கூட 40 பேர்கள் எப்படி இதனைப் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படை அறிவு இவர்களுக்கு இருக்காதா? என்று யோசித்துக் கொண்டு வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் கேட்டேன். 

சார் தண்ணீர் அதிகமாகச் செலவாகும். நாங்கள் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குச் செல்கின்றோம் என்கிறார். 

அவருக்கு வாடகை வருமானம் மட்டும் மாதம் ஐந்து லட்சம் வருகின்றது. 
பணம் சேரச் சேர மனம் குறுகிக் கொண்டேயிருக்கின்றது என்பதனை கடந்த ஏழெட்டு வாரங்களில் முதலாளி, தொழிலாளி என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்துப் பேர்களிடமும் பார்த்த போது ஆள் இல்லாத திரையரங்கில் நான் மட்டுமே உட்கார்ந்து கொண்டு படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போல வினோத ஜந்துவாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமோ? என்று தோன்றுகின்றது. 

சமூகம் வேறொரு பாதையில் பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றது. 

எங்கே செல்லும் இந்தப் பாதை?

+++++++++++++++++

நான்கு மாதங்களுக்கு முன் பெரிய பெரிய புத்தகங்களாக தொடந்து படித்துக் கொண்டேயிருந்தேன். 

மூன்று மாதங்களுக்கு முன் திரைப்படங்களாக தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். 

இரண்டு மாதங்களுக்கு முன் உள்ளே சேகரித்து வைத்திருந்த நான் படிக்காமல் இருந்த வாரப் பத்திரிக்கைகள், தினசரி என்று தொடர்ந்து நேரம் ஒதுக்கி படித்துக் கொண்டேயிருந்தேன். 

கடந்த ஒரு மாதமாக எதையும் படிக்க, பார்க்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கின்றேன். 

நேற்று கூட மகள் ஒருவர் கேட்டார் அப்பா இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருப்பீர்களா? என்று. நிச்சயம் இருப்பேன் என்றேன். 

எனக்கான குடும்ப அமைப்பு வலுவாக உள்ளது. வருமானம் உள்ளது. குழந்தைகளைக் கவனிக்க வீட்டில் மனைவி இருக்கின்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் தொழிற்சாலைக்குள் சென்று வெளியே வரும் போது பகல் பொழுது, இரவுப் பணி, பல சமயம் நள்ளிரவு பணி என்று தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களைப் பார்க்கும் போதும், குறிப்பாக பெண்களைப் பார்க்கும் போது இவர்கள் எப்படி குடும்ப வாழ்க்கை முடியும்? கணவன் தேவைகள், குழந்தைகளின் விருப்பங்கள் போன்றவற்றை எப்படி இவர்கள் நிறைவேற்றுவார்கள்? என்பதனை பல முறை யோசித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. 

பாலின ஈர்ப்பு என்பது வயது மாறும் போது அது வேறொரு விதமாக மாறி விடுகின்றது. காதல் என்பதன் வரையறை வேறொரு நிலையில் பயணிக்கத் தொடங்கி விடுகின்றது. இந்த காணொலித் துண்டை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். இன்றும் பார்த்த போது எந்தக் கிளர்ச்சியும் உருவாகவில்லை. ஆனால் இந்தப் பருவத்தையும் நாம் தாண்டி வந்துள்ளேன் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்தது. 

ஆனாலும் தமிழ் திரைப்படம் என்பது காதல் தவிர இங்கே பேசுவதற்கு, எழுதுவதற்கு வேறு எதுவும் இல்லை என்கிற ரீதியில் தான் படமாக எடுத்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். உண்மையான காதல் என்பதன் அர்த்தம் மாறிவிட்டது. குறிப்பாக காதலைப் பற்றி அக்கறைப் பட்டுக் கொள்ளவும் எவரும் தயாராக இல்லை. 

ஒரு பெண்மணி போன வாரம் பேசிய போது சொன்ன வாசகம். 

என் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பகல் இரவு என்று தொடர்ந்து இங்கே வேலை செய்கின்றேன். ஆனால் என் புருசன் பக்கத்து வீட்டுக் காரியை நான் வந்தவுடன் தொடர்பு வைத்துக கொள்கின்றார். எனக்கும் தெரியும். என் பிள்ளைகளுக்காக அதனை பொறுத்துக் கொண்டு தான் வாழ்கிறேன். 

ஏம்மா புருசனும் தானே சம்பாரிக்கின்றார். அப்புறம் ஏன் இரவுப் பணி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே? என்றேன். 
சார் காசு நிறைய இருந்தா சந்தோஷம் தானே? 

கண்களை விற்று சித்திரம் வாங்க நினைக்கும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் வந்து விட்டேன்.

Thursday, March 01, 2018

ஞாநி -- தாயுமானவன்

கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். 
புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். 
நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
நான் இதுவரையிலும் வெளியிட்டுள்ள மின் நூலுக்கு அட்டைப்படத்தை பல்வேறு நண்பர்கள் இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.  குறிப்பாக என் இனிய நண்பர் மதுரைத் தமிழன் ( தற்போது அமெரிக்காவில் வசிப்பவர்)மிக விரைவாக வடிவமைத்துக் கொடுப்பார்.  மாறுதல் சொன்னால் உடனே மனம் கோணாமல் திருத்தி அனுப்பி வைப்பார்.  ஞாநி மின் நூலுக்கும் அவரே தான் வடிவமைத்து இருந்தார்.
திடீரென்று ஒரு நாள் மயிலாடுதுறையில் இருந்து நண்பர் சுரேஷ் மின் அஞ்சல் வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டார்.  அவர் தொடர்ச்சியாக என் மின் நூல்களை படித்து கவரப்பட்டு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டு இருந்தார். அவர் மயிலாடுதுறையில் புகைப்பட கலைஞராக உள்ளார்.  அவர் வரைந்த அட்டைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  நண்பர் சுரேஷ் க்கு நன்றியும் அன்பும்.