Showing posts with label தமிழ்மணம் நட்சத்திர வாரம். Show all posts
Showing posts with label தமிழ்மணம் நட்சத்திர வாரம். Show all posts

Sunday, October 03, 2010

ஓராயிரம் பார்வைகளும் விடைபெறும் நேரமும்

அந்த கண நேர நிமிடத்தை என்னைப் போலவே கணக்கில் வைத்து காத்திருந்து பாசக்கார பய புள்ள ரவி முதல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட நண்பர்கள் பலரும் தொடர தொடங்கிய இந்த நட்சத்திர வாரம் முடியும் நேரம் இது.
ஆச்சரியப்படுத்திய மணி மகுடம் வரைக்கும் சூட்டிய தோழமைகளுக்கும் கூகுள் பஸ் வரைக்கும் லைக்கிய பெருந்தலைகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இது தான் எல்லை என்று எண்ணத்தில் வைத்துக்கொள்ளாமல் எப்பொழுதோ எங்கேயோ பெற்ற அனுபவம் அரசியல் சமூகம் வரைக்கும் அத்தனையும் எழுதிப் பார்த்தாகி விட்டது. கற்றுக் கொள்ள இன்னமும் ஆசையிருப்பதால் இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈழம் குறித்து உருவான ஆர்வமே இன்று வரைக்கும் என்னுடைய தேடலை அதிகப்படுத்தியிருக்கிறது.  இந்த குட்டித்தீவை யோசிக்கும் போது உருவான தாக்கம் தான் பலரும் கொடுத்த வாழ்த்துரைகள்.

உற்சாகமாய் உறவாய் பல பேர்கள் தொடர்ந்து வந்தார்கள்.  கட்டுரைகள் நீண்டதாய் இருந்தாலும் பல தளங்களை தொட்டு கொண்டு போனதற்கு முக்கிய காரணம் துளசிதளம் திருமதி துளசி கோபால்.  அவர்களுக்குத் தான் வாசிப்பாளர்கள் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் சொன்னபடியே உண்டு உறங்கி விடு. செரித்துவிடும் என்ற தலைப்பு பலருக்கும் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

என்னை யாரென்று தெரியாமல், முகமோ முகவரியோ அறிந்திராமல் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அவர்களைப்பற்றி நான் எழுதுவதை தேவியர்கள் என்றாவது ஒரு நாள் எழுதக்கூடும். என் அப்பா உருவாக்கிய தாக்கம் என்னை எழுத வைத்தது.  ஆனால் என் குழந்தைகள் தங்கள் எட்டு வயதிற்குள் வாழும் இந்த சுதந்திர வாழ்க்கை நான் அறியாத ஒன்று. 

கடைசி நான்கு கட்டுரைகள் இரட்டையரில் மூத்தவள் வெளியிட்டு விமர்சனத்தை தகுந்த நேரத்தில் வெளியிட்ட விதத்தை நான் எழுதி வைத்தால் நம்ப முடியாத ஒன்றாக பலருக்கும் தெரியும். பள்ளி விடுமுறையில் வீட்டுக்குள் சேர சோழ பாண்டிய போர்க்களத்தை உருவாக்கிய அவர்களை மாற்ற மனைவி எடுத்த இறுதி ஆயுதம் இது.  டீச்சர் நீங்கள் எளிதாக சொல்லி விட்டீர்கள்.  அடங்காதவரை அடக்க வந்த ஆயுதமென்று. ஆனால் சுந்தர் சொன்ன பெண் குழந்தைகள் தேவியின் மறு உருவம் என்பதை பல சமயம் பத்ரகாளியாய் காட்டுகிறார்கள்.

ஊன்றிக்கவனித்தல் என்பது எழுதத் தொடங்கியதற்கு பிறகு தான் அதிகம் பழக்கத்தில் வந்துள்ளது. இதுவே வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகம் உருவாக்கி பல சங்கடங்களில் இருந்து மீட்டெடுத்துள்ளது. இடுகை என்பதை எந்த மகாராசன் கண்டுபிடித்தாரோ அவருக்குத் தான் நன்றி என்பதை நாலு பதிவில் எழுதி வைக்கனும். கூகுள் தரும் வரைப்படத்தில் கடலுக்கு நடுவே இருக்கும் பெயர் தெரியாத அந்த குட்டித் தீவில் இருந்து கொண்டு இந்த இடுகையை எவரோ ஒருவர் படித்துக் கொண்டுருக்கிறார் என்பதை யோசிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. 

இதனாலேயே அதிக அக்கறை கொண்டு தூங்கும் நேரத்தை தியாகம் செய்ய வேண்டியதாய் உள்ளது.

எழுதிய சட்டம் என்பதை தமிழ்மணத்தில் இப்படி தெரிவித்து உள்ளார்கள்.             

" கடைசி பதிவை 12 மணி நேரத்திற்கு முன் வெளியிட்டால் அனைவருக்கும் சென்று அடையும் " .நண்பர் தவறு சுட்டிக்காட்டியபடி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை குறிப்பாக ஏப்ரல் 2009 பொதுமக்கள் பட்ட துயரத்தை வார்த்தை களாக கோர்த்து வைத்து இருந்ததை நிறுத்தி வைத்து விட்டேன். 

இந்த வாரத்தில் வெளியிட்டுள்ள எந்த கட்டுரைகளும் அவசரமாய் எழுதியது அல்ல. தமிழ்மண அழைப்பு வந்த போது பாதி முடித்து டீச்சரிடம் குட்டு வாங்கி கோர்த்து வைத்து இருந்தேன். ஈழம் தொடர்பான கட்டுரைகளைக்கூட திருப்பூரில் நடந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது எழுதியது. வாக்கியத்தை மீள் ஆய்வு செய்ய முடியாமல் கந்தசாமி அய்யா சொன்ன பொருத்தமான எதிர்மறை விமர்சனம் வரைக்கும் அவசரப் பணிகளும், ஒத்துழைக்காத இணைய வேகமும் கடைசி வரைக்கும் படுத்தி எடுத்துவிட்டது.

ஏராளமான பார்வைகள்.  சாப்பாட்டில் வெஜ், நான்வெஜ் என்பது போல் வலைப்பூக்களில் இப்போது வினவு நான்வினவு என்பது போல இரண்டாக இருக்கிறது. நான் ஈழம் தொடர்பாக எழுதிய பல கட்டுரைகளுக்கு ஆதாரமான பல புத்தகங்களை அளித்தவர்கள் வினவுத் தோழர்கள்.  அந்த காலகட்டத்தில் தோழர்களை யாரென்றே தெரியாது. 

வலை தளத்தில் போட்டுருந்த கைபேசி எண்ணுக்கு அழைத்து என் எண்ணத்தை சொன்ன போது மூன்றாவது நாளில் நகல் எடுக்கப்பட்ட பத்தாண்டு கட்டுரைகள் என் வீட்டை வந்து அடைந்த போது என்னால் நம்ப முடியவில்லை.  அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன்.  

சமீபத்தில் நண்பர் முகிலன் எழுதிய கட்டுரையில் இடையே இரண்டு வரிகள் வந்தது.  வினவு தளத்தின் கட்டுரைகள் சரியாக வாசகனை உணர வைக்கும்.. ஆனால் கடைசியில் கட்டுரை தடம் மாறி குறிப்பிட்ட காழ்புணர்ச்சியை  கொண்டு நிறுத்துவார்கள் என்று எழுதியிருந்தார்.  உண்மையும் கூட.  தோழர் களிடம் வாதாடி இருக்கின்றேன்.  வம்புச்சண்டை கூட போட்டு இருக்கின்றேன்
  
இப்போது தான் வெளியிடும் விமர்சனத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். இதைப் போலவே பலரும் சொல்லிக் கொண்டுருக்கும் தாக்கத்தை உணரக் கூடும்.   வெகுஜன ஊடகம் மறந்து கொண்டுருக்கும் பல விசயங்களை இன்று வலைதளத்தில் கொண்டு வந்து கொண்டுருப்பவர்கள் அவர்கள் மட்டுமே.   வினவு தளம் என்பதை சமூக விசயங்களை எழுதிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பு உள்ளவர்களுக்கு அதுவொரு என்சைக்ளோபீடியா. 

ஐயோ என்று எழுதாமல் அதென்ன ஐய்யோ என்று ரதி வருத்தம் தெரிவித்து இருந்தார். உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒரு அழுத்தம் வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சின்னப்புள்ளத்தனமான விளையாட்டு. கூர்மையாக தலைப்புகளை கவனித்து வந்தவர்களுக்கு இந்த அரிச்சுவடி எழுதுக்கள் புரிந்துருக்கும்.

ஒரே பதிவில் சொல்லாமல் ஏன் இந்த நழுவல்?  ராஜநடராஜன் கேட்ட கேள்வியை மகளிடம் கேட்டேன். அவசரத்தில் மாறி வந்து விட்டது என்றார். ஆனால் அதுவே ஒரு முடிச்சு போல வாசித்தவர்களை மூச்சடைக்க வைத்துள்ளது. மகள் அவரை அறியாமல் உருவாக்கிய மாய வித்தை அது. தங்களுக்கு பிடித்த டோரா, சோட்டா பீன் தளங்களை ஒலி ஒளியாக பார்த்துக் கொண்டுருப்பவர்களுக்கு எதிர்காலம் எந்த மாதிரியான புரிந்துணர்வை வைத்துள்ளதோ?
ஓராயிரம் தளங்களை கடந்த 15 மாதங்களில் பார்த்து இருப்பேன். நூறு தளங்களை முடிந்த வரை உள்வாங்கியிருக்கலாம். எந்த இடத்திலும் பெயரை மறைத்துக் கொண்டு பின்னூட்டமிட்டது இல்லை. எவர் தளத்தில் மைனஸ் ஓட்டு போட்டதும் இல்லை. கருத்துக்களின் எதிர்மறை நியாயங்களை சரியான முறையில் எடுத்து வைக்க தயங்கியதும் இல்லை. அவர்களின் வசவு, வார்த்தைகள் எனக்குத் தேவை. வாங்கி இருக்கின்றேன். நான் வளர வேண்டுமென்றால் தர்க்க வாத பிரதிவாதங்கள் எனக்கு ரொம்பவும் முக்கியம்.

ஓளரங்கசீப் காலம் முதல் இன்றைய ராஜபக்ஷே காலம் மறைக்கும் தமிழினம் எதிர்பார்க்கும் மற்றவர்களுக்கு அடிமையாக இருந்து விடுவது சிறப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை. மனதில் உள்ள இந்த தமிழினம் குறித்த ஆச்சரிய வரலாற்று உண்மைகள் தமிழர் தேசம் என்ற நீண்ட நெடிய பயணம் ஏதோவொரு சமயத்தில் தொடங்கலாம். நம்மவர்கள் நம்மை ஆண்டால் தான் வெட்டு குத்து அடிதடி.  அடுத்தவன் என்றால் அத்தனை பேர்களும் அது தான் சரியென்று அட்டகாசமாக ஒத்துழைப்போம். 

என்னுடைய பார்வையில் மகாகவி பாரதி, தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா தமிழனாக பிறந்தது அவர்களின் துரதிஷ்டம். மற்ற இனத்தில் பிறந்திருந்தால் அவர்களின் புகழும், அவர்களுக்கு கிடைத்துருக்க வேண்டிய அங்கீகாரமும் வெகு எளிதாக கிடைத்து இருக்கக்கூடும். 

வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகியாக சித்தரித்து எழுதப்பட்ட கட்டுரையில் ஒருவர் எழுதிய விமர்சனம் எனக்கு நிறையவே நம்பிக்கை அளித்தது.

" விம்பங்களுக்கப்பால் பிரபாகரனை தேடி, கட்டுரையாளர் எழுப்பியிருந்த கேள்வி பிரபாகரனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை, தீமைபற்றி ஆராய முற்படுவதாக தெரிகிறது. கருத்து எழுதுபவர்கள், அவரவர் உணர்ச்சிகளுக்கும் மனப்பண்புகளுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்கிறதே அன்றி, தமிழின விடுதலைக்கு வேண்டிய பாதையை சீர்படுத்துவதற்கோ. அன்றி புதிய பாதையை அமைப்பதற்கான யுக்திகளையோ வெளியிட்டு ஓர் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு ஒன்றிப்போகும் இணக்கத்தை ஏற்படுத்துவதையோ காணமுடியவில்லை. திட்டமிட்டு மக்களை குழப்புவதற்கான கருத்துகள் எழுதுபவர்களையும் இங்கு தாரளமாக காணமுடிகிறது.

பிரபாகரனின் விடுதலைப்போராட்டம் இன்று அழிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் அழிக்கப்பட்டதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன, என்பது ஆராயப்பட வேண்டும். தீமைபற்றி தேவையில்லை பல ஊடகங்களும், இணையதளங்களும் அதுபற்றி நிறையவே எழுதிவருகின்றன. தமிழினத்திற்கு கிடைத்த நன்மையைப்பற்றி இதுவரை எந்த ஊடகமோ, அல்லது இணைய தளமோ செய்தி வெளியிடவில்லை. நன்மை என்றால் அதன் தன்மையை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும் "

ஔவைப் பாட்டி முதல் கண்ணதாசன் வரைக்கும் எத்தனையோ அறிவுரைகள், ஆலோசனைகள் நமக்கு தந்து இருந்த போதிலும் 3000 ஆண்டு கால தமிழர்கள் எப்போது விரும்பும் கலை ஆர்வம் மட்டும் இன்னமும் குறைந்தபாடில்லை. இணையத்தில் தமிழ் வார்த்தைகளை அடித்து சோதித்துப் பாருங்கள்.  வந்து விழும் 20 தலைப்புகளில் பத்து தலைப்புகள் திரைப்பட உரையாகவே இருக்கிறது.  

தமிழ்நாட்டின் பிரபல்ய சிமெண்ட நிறுவனத்தில் பணிபுரியும் உறவினர் சொன்ன கருத்துப்படி எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் ஒரு மூட்டை சிமெண்ட் 130 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய அவஸ்யமே இல்லை.  அதுவே கொழுத்தலாபம்.  

ஆனால் இன்றைய விலை 270 ரூபாய். உண்மையிலேயே நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தானே?  இதுவே எது வரைக்கும் கொண்டு செலுத்துகிறது?  அடுத்த மாநிலத்தில் இருந்த இங்கே கொண்டு வந்தவர்களை மிரட்டும் அளவிற்கு இருக்கிறது.  இப்போது சொல்லுங்கள் நாம் எது குறித்து கவலைப்பட்டு மனதை உடம்பையும் சோர்வடையச் செய்ய வேண்டும்?

ஃ அக்கன்னா என்று எழுதும் போதே அப்பாடா என்ற பெருமூச்சு வருகிறது.

உணவு, இருப்பிடம் இரண்டுக்கும் இடையே நமக்குத் தேவையான உடை என்று ஒன்று உண்டு. மூன்றுமே மனித வாழ்வில் முக்கியமானது.  பஞ்சு உற்பத்தி செய்பவர்களுக்கும் அதை விற்று கொழுத்த லாபம் பார்ப்பவர் களுக்கும் உள்ள வித்யாசம் என்ன தெரியுமா தோழர்களே?

அதிகமில்லை 14,000 ரூபாய்.  கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.  எத்தனை பொதிகள்.. எத்தனை ஏற்றுமதி சமாச்சாரங்கள்.  எங்கே யாரிடம் போய்ச் சேருகிறது இந்த கோடி கோடி சமாச்சாரங்கள்.  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்து எதிர்ப்பை காட்டினார்கள். அதிலும் இங்கே அரசியல்.

காலம் முழுக்க தமிழர்களுக்கு புரியாத அரசியல். 
நடப்பு செய்திகளை முந்தி தந்துகொண்டுருக்கும் 4 தமிழ் மீடியாவுக்கு வணக்கம்&வாழ்த்துகள். அற்புத படங்கள் தந்தது மனமே வசப்படு.

விடைபெறும் நேரத்தில் வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாக குழுவினருக்கு நன்றியை தெரிவித்து, என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டுருக்கும் எழுத்தாளர் பா.ராகவன் வார்த்தைகளுடன் முடிக்கின்றேன்.

" புகழோடு வாழுங்கள். அதற்காக உழையுங்கள். விமர்சனத்தை மறுக்காதீர்கள். முறையற்ற விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவஸ்யமில்லை. வாழ்வின் இறுதிப் பகுதியில் நினைத்துப் பார்க்க ஏதோவொன்று தேவையாய் இருக்கக்கூடும். அதற்காகவாவது உங்களுக்குப் பிடித்த துறையில் உங்கள் கவனம் இருக்கட்டும்".

Saturday, October 02, 2010

ஒரு வாரிசு உருவாகிறது

மறுநாள் காலை.

தினசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ரூபன் அறையில் இருந்து முத்து முருகேசனுக்கு அழைப்பு வந்தது.

நேற்று நடந்ததை மறந்து விட்டு ஆசிரியர் அறைக்குள் நுழைகிறார்.

இவ்ர் எப்போதும் ஒரு நிகழ்வு நடந்து விட்டால் அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை.  கவலைப்படுவதும் இல்லை.  இந்த குணாதிசியமே இவரின் குடும்ப வாழ்க்கையில் நடந்த பல போராட்டங்களை வென்று எடுக்க காரணமாக இருந்தது. 

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விசயம் ஒன்று உண்டு.

அன்பு,அஹிம்சை, சத்தியம், நேர்மை, தர்மம் போன்ற எந்த காலத்திற்கும் ஒத்து வராத பல குணாதிசியங்கள் இவரிடம் நிறையவே உண்டு. 

எந்த அளவிற்கு முன் கோபம் வருமோ அந்த அளவிற்கு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் மேஜையில் தயாராக இருக்கும் ஜோல்னா பையை எடுத்துக் கொண்டு அப்பொழுதே வெளியே கிளம்பி விடுவார். பணம், புகழ் குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.  இவருடைய வாரிசுகள் இன்று வரைக்கும் இவர் மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே இது மட்டும் தான்.

இவரின் பத்திரிக்கையுலக அனுபவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விசயங்கள் குறித்து எழுத வேண்டாம் என்று வந்த பல அன்புக்கட்டளைகளை மீறியதும் உண்டு.  அதனால் இழந்த பல விசயங்கள் இவரின் குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு முறையும் சூறைக்காற்றில் சிக்க வைப்பது வாடிக்கையாகவே இருந்தது.  

முமு மனைவி இறப்பு வரைக்கும் இவரை ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசியதில்லை.  புலம்பிக்கூட நான் பார்த்து இல்லை.  மகன் மகள்கள் அத்தனை பேர்களையும் மனைவி தான் வளர்த்தார். மிகப் பெரிய அளவில் ஒவ்வொருவரும் வளராத போதும் கூட நடுத்தரவர்க்க வாழ்க்கையில் இன்று அணைவருமே நல்ல நிலைமையில தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். .

ஆசிரியர் ரூபன் அழைத்து “ இன்று முதல் நீங்கள் எழுதிக் கொண்டுருக்கும் இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை கட்டுரையை நிறுத்தி விடுங்கள்” என்றதும் இவர் காரணம் கேட்க உருவானது வாக்குவாதம். உரையாடல் முடிந்து இவர் அறையை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் இவரை மீண்டும் அழைக்க முமு சாலையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டுருக்கிறார்.

பிறகு தான் என்ன நடந்தது என்று  புரிந்து கொள்ள முடிந்தது.

பிரபாகரன் கிறிஸ்துவ மக்களின் மேல் கொண்டுருந்த மரியாதையும், கிறிஸ்துவ பாதிரியார்கள் தொடக்க காலம் முதல் யாழ்பாண வளர்ச்சியில் பங்கெடுத்த விபரங்களும் ஈழம் குறித்து படித்த மற்றும் உள்ளே வாழ்ந்தவர்களுக்கு நன்றாகவேத் தெரியும. 

பிரபாகரன் வளர்ச்சியில் எத்தனை காரணங்கள் இருக்கிறதோ அதில் முதல் பத்து காரணங்களில் இந்த பாதிரியார்களின் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. இதுவே குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.  பிரபாகரன் சென்னையில் இருந்த முக்கிய பாதிரியாரிடம் தகவல் தெரிவிக்க ஜேம்ஸ்ப்ரெட்ரிக் மூலம் கட்டுரை நிறுத்தப்பட்டாகி விட்டது. 

நாற்பது ஐம்பது ஆயிரங்களை கடந்து கொண்டுருந்த பத்திரிக்கை முமு வெளியேறியதும் சட் என்று பத்திரிக்கையின் விற்பனை நான்கு இலக்க எண்களுக்கு வரத் தொடங்கியது,

மறுபடியும் தினசரி நிர்வாகத்தில் இருந்து அழைப்பு வந்த போதும் கூட கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விட்டார். இதன் தொடர்ச்சியாக தினமணி அதிபர் மனோஜ்குமார் செந்தாலியாவிடம் அழைப்பு வந்தது.   காரணம் அப்போது நாகபட்டிணம் பதிப்புக்கு ஆள் தேடிக் கொண்டுருந்தார்கள். தினமணி நிர்வாகத்திற்கு தனிப்பட்ட குணாதிசியங்கள் உண்டு. சென்னை அலுவலகத்தில் ஒருவர் தொடக்கத்தில் பணியில் சேர அறிமுகம் ஆகும் போது நடக்கும் நேர்முகத் தேர்வுகள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போன்றவை. 

ஆனால் இவர் இது போன்ற சடங்குகளில் கலந்து கொள்ள விரும்ப மாட்டார். 

“ எனக்கு எழுதத் தெரியும். என்னுடைய உரிமைகள் பாதிக்காத வரைக்கும் எழுதிக் கொண்டு இருப்பேன்.  வேறு என்ன வேண்டும்? “  ஒரே வார்த்தையில் முடித்து  விடுவார். நிர்வாகத்தினர் இவருடைய வார்த்தைகளுக்கு சரி என்று சொன்னால் அந்த நிமிடமே தன்னுடைய கடமைகளை தொடங்கி விடுவார்.

மனோஜ் செந்தாலியாவிடம் அறிமுகம் செய்தவர்கள் இவரின் இந்த குணாதிசியங்களையும் சேர்த்துச் சொல்ல இவருக்காகவே “ அது எதுவும் வேண்டாம். வந்து சேருங்கள்”  என்று அழைப்பு விடுத்தார்.  ஆனால் இவருக்கு மதுரையை விட்டுச் செல்ல மனமில்லை.  குடும்பம் மற்றும் இவருடைய ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும். அதற்கு மேலும் “போதுமடா இந்த பொழப்பு ” என்று மொத்தமாக ஓதுங்கி தன்னுடைய ஆராய்ச்சி சார்ந்த விசயங்களில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தார்.

1990 க்குப் பிறகு முழுமையாக இறங்கி சேகரித்த மொத்த தகவல்களை ஆராய்ச்சிகளை அப்துல் கலாம், போன்றவர்கள் தொடங்கி வெளியே இங்கு குறிப்பிட முடியாத பல பிரபலங்கள் பாராட்டினாலும் இவரின் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதை காசாக்கி பார்க்க எண்ணம் இல்லாமல் இயல்பான வாழ்க்கையில் ஒன்றிப் போயிருந்தார். இவரை சந்தித்த ஒவ்வொருவரும் உயர்ந்தார்கள். எப்போதும் போல இவர் ஏணிப்ப்டியாக ஆரோக்கியமாக வாழ்வின் இறுதி கட்டத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறார். பலரும் சொல்லிப்பார்த்த இவரின் ஆவணங்கள் நிறைந்த கட்டுரைகள் என்றாவது ஒரு நாள் வெளிவரும். தொடக்கத்தில் நான் வாழ்ந்து கொண்டுருந்த வீட்டுக்குள் இவர் வரும் போது இவருடன் சில புத்தக பைகளும் உடன் பயணித்து வரும். 

குறுகிய அறைக்குள் அதுவும் அடைந்து கிடைக்கும்.  இதுவே சற்று வசதியான வீட்டில் குழந்தைகளின் பள்ளிக்காக மாறிய போது திடீர் என்று ஒரு வேனில் வந்து இறங்கினார். அவர் திடீரென்று என்று வந்து இறங்குவது எனக்கு ஆச்சரியமல்ல. 

வந்து விட்டார் என்றால் குடும்பத்தில் ஏதோ நடந்து இருக்கும் என்று அர்த்தம்.  நான் எதையும் கேட்டுக் கொள்வதும் இல்லை. அவருடன் வரும் அத்தனைப் பொருட்களும் என்னை விட என் மனைவிக்கு எரிச்சல் மிகுந்த சமாச்சாரங்கள்.  ஓட்டை ஒடசல் ஈயம் பித்தளைக்கு போட வேண்டிய சமாச்சாரங்கள்.  அத்துடன் பல சாக்குகள் நிறைந்த புத்தகங்கள்.

காந்தி பிர்லா மாளிகையில் இருந்த போது அவர் பயன்படுத்திய கரண்டி கூட ஓட்டையாக இருந்தாலும் அதை கம்பி கட்டி வைத்து பயன்படுத்தியது போலவே இவரிடம் பல வினோதமான சமாச்சாரங்கள் உண்டு.  ஆனால் நான் எதையும் கண்டு கொள்வதில்லை.  அதற்குண்டான இடங்களை ஒதுக்கி கொடுத்து விட்டு  ஒதுங்கி விடுவேன்.

“ வீட்டில் கோவித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். இனிமேல் இங்கே தான் இருக்க வேண்டும்.  நான் காலையில் சென்றால் இரவு தான் வருகின்றேன்.  வீட்டில் துணை யாருமில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லப் போகிறார்கள். உங்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் அவர்களுக்குத் தேவை ” என்று அவர் பாணியில் கெஞ்சி வெற்றிகரமாக 11 மாதங்கள் தொடர்ச்சியாக தங்க வைத்து விட்டேன். 

அதன் பிறகு இரண்டு முறை வெளியேறி சென்னை மதுரை அலைந்து விட்டு வருவார்.  அவருடன் மொத்த பார்சலும் பயணிக்கும். எனக்கு எரிச்சலாகக்கூட வரும். சொன்னாலும் கேட்காதவரை என்ன செய்ய முடியும்.  கடைசி வரைக்கும் அந்த குப்பை போன்ற சமாச்சாரங்களுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கத் தோன்றவில்லை.  காரணம் நான் பணத்தை துரத்திக் கொண்டுருந்த போது அதை கவனித்துப் பார்க்க நேரம் அமையவில்லை. 

அவராக வந்து என்னுடைய முக பாவனைகள் பார்த்து பேசத் தொடங்குவார்.  எப்போதும் நான் கோபமாக உள்ளே வந்தால் சற்று நேரம் வெளியே சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதன் பிறகே குழந்தைகளிடம் வருவேன். அதன் பிறகு சமயம் பார்த்து என்னிடம் பேச ஆரம்பிப்பார். 

தொழில் வாழ்க்கை உச்சத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. இடைஇடையே சில அறிவுரைகள் ஆலோசனைகள் தருவார். இருவரும் பேசத் தொடங்கினால் கடைசியில் சண்டையில் தான் முடியும். 

பல முறை இரண்டு நாட்கள் நான் பேசாமல் இருந்து விடுவேன்.  ஆனால் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் முதல் பக்தி பாடல்கள் வரைக்கும் பாடி முடித்து நான் தாமதமாக எழுந்தாலும் திருநீறை வைத்துக் கொண்டு என் முன்னால் நிற்கும் போது வெட்கப்பட்டுக் கொண்டு அப்போது தான் குளிக்க ஓடுவேன்.  என்னுடைய வயதும் அவருடைய அனுபவ வயதும் ஒன்றாக இருக்க அவர் இளைஞர் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டுருப்பார்.

இவருக்கு பயந்து கொண்டே பல பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.  திட்டாமல் ஒரு பார்வையில் உள்ளே வரும் போது கொன்று போட்டு விடுவார். மறுபடியும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்க வேண்டியதாய் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் ஈழம் சார்ந்த விசயங்களை பேசத் தொடங்கினால் பெரிய ரணகளத்தில் முடியும். அப்போது என்னிடம் கோவித்துக் கொண்டு வெளியேறி சற்று நேரம் கழித்து உள்ளே வருவார்.

நான் என்னுடைய கருத்துக்களை விட்டுக் கொடுப்பதே இல்லை.  ரணில் விக்ரமசிங்கே ஆட்சி முடிவுக்கு வந்த போது அப்பொழுதே என்னிடம் சொல்லிய விஷயம்.  “ நீ விரும்பும் தலைவரின் இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டுருக்கிறது.  அவர் விரும்பும் சுபாஷ் சந்திரபோஸ் போலவே அவரின் இறுதிக் காலம் மர்மமாகவே இருக்கும். பார்க்கிறாயா?”  என்றார்.

நான் ஒரு முறை முறைத்து விட்டு நகர்ந்து விடுவேன்.

காலங்கள் மாறிய போது எதிரபார விதமாக எழுதத் தொடங்கிய போது சில கட்டுரைகளை அவருக்கு வரவழைத்து கொடுத்துப் பார்த்த போது “ உன்னை விட முட்டாள் உலகில் வேறு எவரும் இல்லை. படிப்பவர்களை முதலில் பாமரர்களாக நினைத்து எழுதிப் பழகு”  என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

ஈழம் சார்ந்த விசயங்களை நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட போது அப்போது தான் முழுமையாக அவரிடம் பேசத் தொடங்கினேன்.  அப்போது 3000 வருட தமிழர்களின் வாழ்க்கையை பத்து தலைப்பில் பிரித்து வைத்து எழுதி இருந்த போது படித்து பார்த்து மனம் மகிழ்ந்து அந்த குப்பை போன்ற புதையலை தோண்டி பல புத்தகங்களை கொடுத்தார். வெகுஜனம் அறியாத பல முக்கிய ஆதாரங்கள்.

ஈழப் போராட்டங்களில் பங்கெடுத்த அத்தனை நபர்களின் அவர்களின் நேரிடையான வாக்கு மூலங்கள் பேட்டிகள், ஆதாரங்கள் போன்ற திடுக்கிட வைக்கும் பல சமாச்சாரங்கள் இருந்தது.  பல செல்லறித்து கவனிக்காமல் போய் இருந்தது.  பல ஆண்டுகள் உள்ளே கிடந்த பொக்கிஷங்கள். எனக்கே வெட்கமாக இருக்க மெதுவாக உள்வாங்க ஆரம்பித்தேன். 

அப்போது அவர் சொன்ன அறிமுகம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

“ உன்னுடைய கொள்கை விடுதலைப்புலிகள் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்காத பட்சத்தில் சிங்களர்களை ஜெயிக்க முடியாது என்கிறாய். நான் அது குறித்து உனக்கு புரியவைக்க முடியாது. உலகில் ஆயுத பலத்தால் எந்த நாடும் தன்னுடைய சுதந்திரத்தை அடைந்ததாக சரித்திரம் எதுவும் சொல்லவில்லை. நீ உனக்குப் பிடித்த விசயங்களை மட்டுமே தேடிப் படித்துக் கொண்டுருக்கிறாய்.  எழுதுபவனுக்கு பிடித்த பிடிக்காத என்று எதுவுமே இருக்கக்கூடாது.  எதிர்மறை நியாயங்களை எப்படி எடுத்து வைக்கிறார்கள் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.  அதைத்தான் நீ கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தினாலும் மக்களை ஒன்று சேர்த்து அவர்களுடன் ஒன்றிணைந்து வென்று எடுக்க வேண்டும். இதுபோக ஈழத்தில் உள்ள தமிழர்களே பல்வேறு கூறுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

தமிழர்களுக்கு சிங்களர்கள் எதிரிகளாக இருப்பதை விட தமிழர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் உருவான தலைவர்கள் தங்களை காப்பாறிக் கொள்ள தமிழர்களை பலி கொடுத்தார்கள். இப்போதும் அந்த பலி மட்டும் தான் நடந்து கொண்டுருக்கிறது. இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் உள்ளே இருக்கும் தமிழர்கள் ஒன்றாக சேராத வரைக்கும் அவர்களுக்கு விமோசனம் என்பதே இல்லை.

இங்கு காந்தி இருந்தார். அணைவரும் ஒன்று சேர்ந்தார்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஈழம் போல் பல குளறுபடிகள் இருந்தாலும் இறுதியில் வெற்றி அடைய முடிந்தது. ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன் இது நடக்கவில்லை. காரணம் ஈழ மக்களின் முரண்பாடு பழக்கவழக்கங்கள் நோக்கங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டு எழுத ஆரம்பி. 
நான் பார்த்தவரைக்கும் பிரபாகரன் போல் ஒரு தனிப்பட்ட ஆச்சரிய மனிதனை நான் பார்த்ததும் படித்ததும் இல்லை. 


என்னை சந்தித்த பலரும் அவருக்கு எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட நபர்கள் அத்தனை பேர்களும் அவருடைய கொள்கைகளைத்தான் குறை சொல்லி இருக்கிறார்களே தவிர அவருடைய தனிப்பட்ட ஓழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை குறை சொன்னதே இல்லை. 


எனக்கே அது தான் கடைசி வரைக்கும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் நான் சந்திக்காத  அரசியல்வாதிகளே இல்லை.  அவர்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் தெரிந்த எனக்கு பிரபாகரன் ஆச்சரியமான நபரே. 


ஏன் இன்று ஜெயிக்க முடியாமல் இத்தனை பெரிய பேரழிவு.


அரசியல் தலைவர்களின் வெற்றி என்பது அந்தந்த தலைவர்களின் கொள்கைகள் தீர்மானிப்பது இல்லை.  எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் தந்திரமும், சமயோஜிதமும் தான் தீர்மானிக்கிறது. உனக்கு பிடித்தவரை உயர்த்தி எழுதுவதை விட எதிர்மறை நியாயங்களையும் சேர்த்து எழுது. 


புகழ்பாடும் எந்த எழுத்துக்களையும் சரித்திரம் ஏற்றுக் கொள்ளாது”

சமீபத்தில் என்னை அழைத்து பெருமைப்படுத்திய நண்பர் சொன்ன விசயத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் அவர் சொன்ன விடயங்களை இங்கு எழுதினால் சுயவிளம்பரமாக மாறிவிடும். காரணம் முக்கிய அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகள் தேவியர் இலலம் இடுகைக்கு வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை அப்போது தான் புரிந்து கொள்ள முடிந்தது.  

விக்கித்து வியர்த்துப் போனேன். முழுக்க முழுக்க முமுவுக்குத்தான் அந்த பெருமை சேரும். ஒரு வருட இறுதிக்குள் புத்தகமாகவும் மாறிவிட்டது.

பதிப்பகத்தில் இருந்து பிழை திருத்த அனுப்பிய சமாச்சாரங்களை நான் மதிக்கும் சிலருக்கு அனுப்பி விட்டு அதை திருத்தி தர, ஆலோசனை சொல்ல இவரிடம் ஓப்படைத்து விட்டு ஒதுங்கி விட்டேன். 

அவரின் கொள்கைகள் நோக்கங்கள் அஹிம்சை தத்துவங்கள் அத்தனைக்கும் நான் எதிரான கருத்து கொண்டவன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் என் அப்பாவை விட நூறு மடங்கு அக்கறையாய் கொண்டு செலுத்தியவர். முக்கியமாக பிரபாகரன் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான கருத்து கொண்டவர். என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டு அழைக்காமல் இருந்து மிகுந்த தயக்கத்தோடு சென்று பார்த்தேன்.

அவர் சொல்லி விமர்சனம்

"அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஆவணமாக கருதப்படும்.  இந்த தாக்கம் மறைய எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படும்.". 

Friday, October 01, 2010

ஐய்யோ போச்சே....

1983 -84

27 நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜேம்ஸ் பெட்ரிக் தான் வெகு நாளாக நினைத்துக் கொண்டுருந்த ஆசையை நிறைவேற்றத் தொடங்கிய போது அவரின் நினைவுக்கு வந்த பெயர் இந்த முமு.  ஆமாம்.  தினசரி என்ற பத்திரிக்கையை தொடங்கி இவரை முக்கிய செய்தியாளராக போட்டு ஆரம்பித்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த நிர்வாண பூஜையை தனி நபராகச் சென்று காவலில் இருந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினருக்கும் தண்ணீர் காட்டிவிட்டு எதிர்பாரதவிதமாக அவர்களின் வாகனத்திலேயே குறிப்பிட்ட இடத்திற்கு பயணம் செய்து இவர் எழுதிய கட்டுரை அன்று இவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. இவரின் பெயர் தனித்தன்மையான தெரிய ஆரம்பித்த காலம் அது.

இலங்கையில் ஜெயவர்த்னே ஆட்சி. இவரின் தனிப்பட்ட தேடல்களும், இலங்கையில் இருந்து வந்து கொண்டுருக்கும் மக்களைப் பற்றி சிறு செய்திகளாக போட்டுக் கொண்டுருப்பதும் அன்றாட கடமையாக இருந்தது.  இவர் எப்போதும் கட்டுரை எழுதத் தொடங்க தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நேரம் இரவு 10 மணி. குடித்த டீ உற்சாகத்தைக் கொடுக்க அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிக் கொண்டுருககும் ஒவ்வொரு தாளையும் பிரிண்டரில் இருப்பவர்கள் வந்து எடுத்துக் கொண்டு படித்துக் கொண்டே சென்று சேர்த்து விடுவர்.

அப்போது மண்டப முகாமில் இருந்து வந்த கடிதமொன்று தனது வாழ்க்கையை மறுபடியும் திசை திருப்பி விடப் போகிறது என்பது தெரியாமல் படிக்கத் தொடங்கினார்.  எத்தனையோ விசயங்களைப் பற்றி எழுதிக் கொண்டுருக்கிறீர்கள்? ஏன் எங்கள் பிரச்சனையைப் பற்றி எழுதுவது இல்லை? கடித வரிகள் சுருக்கமாக இருந்தாலும் அப்போது தான் அதுவரைக்கும் தேடலின் விளைவாக சேகரித்த தகவல்கள் ஒவ்வொன்றும் உதவத் தொடங்கியது.

விதி வலியது. மறுநாள் இரவு இரண்டு பேர்கள் சரியான நேரத்தை தெரிந்து கொண்டு இவர் அமர்ந்து இருந்த மேஜைக்கு அருகே வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தனர். வந்தவர்கள் இருவரும் இஸ்லாமிய பெரியவர்கள். முல்லை மார்க்கெட் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பேசிய பேச்சகள், காட்டிய ஆதாரங்கள், கண்ணீர் அத்தனையும் இரண்டு நாட்கள் தடுமாற வைக்க கட்டுரை ஆரம்பமானது.

கட்டுரையின் தலைப்பு " இரத்தால் நனையும் தமீழீழ கொள்கை"

இவரிடம் மற்றொரு பிடிவாத குணம் ஒன்று உண்டு. 

பத்திரிக்கை தர்மம் என்பதை அச்சு பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்.  கூட்டம் முடிந்தவுடன் அரசியல் கட்சிகள் கொடுக்கும் அன்பளிப்புகளைக்கூட வாங்க மாட்டார்.  எவருடனும் பகைமை பாராட்ட மாட்டார்.  ஆனால் தான் நினைத்த கருத்துக்களை அச்சு பிறழாமல் கட்டுரையாக்கி கதிகலங்க வைத்து விடுவார். உடன் பணியாற்றும் மற்ற நிருபர்கள் கூட இவரின் கட்டுரையின் சராம்சத்தை எதிர்பார்த்து இருப்பார்கள்.

இவர் எழுத நினைத்த இரத்தத்தால் நனையும் தமீழழ கொள்கை கட்டுரையின் நோக்கம் இலங்கை என்ற தீவின் தொடக்கத்தை லேசாகத் தொட்டு, முக்கியமாக சமூக வாழ்க்கையில் தொடக்கத்தில் இருந்த தலைவர்கள் செய்யாமல் விட்ட காரியங்களை சுட்டிக் காட்டி விடுதலைப்புலி இயக்கத்தின் வளர்ச்சியையும் அவர்களின் தொடக்க கால விசயங்களையும் தொட ஆரம்பித்த போது அனல் பறக்க ஆரம்பித்தது.  இவரின் நோக்கம் விடுதலைப்புலிகளையும் அவர்களின் நோக்கத்தையும் தவறு என்று சொல்வதை விட ஏன் தவறாக இருக்கிறது என்பதை எதிர்மறை நியாயங்களுடன் பேச ஆரம்பிக்க எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக வரத் தொடங்கியது.  சரியான நேரம் பார்த்து இலங்கையில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அப்துல் மஜீத் கொல்லப்பட் இயக்கத்தில் இருந்த 800 முஸ்லீம் இளைஞர்கள் வெளியேற ஒவ்வொன்றும் இவரின் கட்டுரைகளை கரை தாண்ட வைத்துக் கொண்டுருந்தது.

தினசரி பத்திரிககைகள் வந்த சில நிமிடங்களில் போதவில்லை என்று ஒவ்வொரு இடங்களிலும் செய்திகள் வந்து கொண்டுருந்தாலும் இவரின் பொருளாதார வாழ்க்கையிலேயோ அல்லது இதை வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லாமல் எப்போதும் போல அத்துவான காட்டில் பயணிப்பவர் போலவே இவர் அலுவலகத்திற்கு வருவதும் போவதும் எவருக்குமே தெரியாது.  பத்திரிக்கை ஆசிரியர் ரூபனுக்கு இவரின் குணாதிசியங்கள் நன்றாகத் தெரிந்த காரணத்தால் எவரும் எதையும் எளிதாக இவரிடன் வந்து பேசி விட மாட்டார்கள்.

இப்போது மற்றொன்றும் நடந்துகொண்டுருந்தது.  பத்திரிக்கை அடித்து முடித்து டெலிவரி செய்ய வெளியே வேனில் ஏறற வரும் போது ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் தனியாக பயணிக்கத் தொடங்கியது.  இந்த விசயமே பின்னாளில் தான் இவருக்குத் தெரிந்தது.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், இன்று புத்தகத்தின் வாயிலாக படித்துக் கொண்டுருப்பவர்களுக்கும் ஜெயவர்த்னே குறித்து நன்றாகவே தெரியும். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்த பல காரியங்கள் முஸ்லீம் மக்களுக்கு சாதமாகத் தெரிய அதையே வந்தவர்களும் அவரின் அருமை பெருமைகளை புகழ்பாட பலபேரிடம் அதை உறுதிபடுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தார்.  

தொடர் போல் வந்து கொண்டுருந்த கட்டுரையின் இப்போதைய தலைப்பு அரசியல் ஞானி ஜெயவர்த்னே.

பகவான் வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தவன் இப்போது சோம்பல் முறித்து கண் திறந்த பார்க்க ஒரு நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு வந்தது.

அழைத்தவர் பழ.நெடுமாறன்.  கொடுத்த தகவல் " தம்பி உங்களைப் பார்கக வேண்டும் என்கிறார் ". 

காரணம் அப்போது பிரபாகரன் பழ நெடுமாறன் அவர்களுடன் தான் இருந்து இருக்கிறார.  மரியாதையின் பொருட்டு அனுமதியோடு வர வேண்டும் என்று அனுமதி கேட்க இவர் கொடுத்த பதில் " எனக்கு தம்பிகளோடு தொடர்பு விட்டு பல வருடம் ஆகி விட்டதே?" என்றார்.

காரணம் இவரின் சகோதர்ர்களில் ஒருவர் தினமலரிலும் மற்றொரு அத்தான் முறையில் உள்ளவர் ஹிண்டுவிலும் பணியாற்றிக் கொண்டுருந்தவர்கள்.  தினமலரில் முக்கியப் பொறுப்பில் கோவிந்தசாமி.  ஹிண்டுவில் இராமநாதன்.  பிராமணர் அல்லாத இவர்கள் இருவரும் இந்த இரண்டு நிறுவனங்களில் சாதித்த சாதனைகள் மிக அதிகம். 

இதில் மற்றொரு ஆச்சரியம் கோவிந்தசாமி. 

எம்.ஜி.ஆர் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டுமென்றால் கோவிந்தசாமி வந்து இருக்காரா? என்று கேட்டு பார்த்து விட்டு தான் ஆரம்பிப்பார்.  ஆனால் அவர்களின் எந்த செல்வாக்கையும் முமு தனக்காக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை.  அவர்களுடன் அதிகப்படியான தொடர்புகளும் வைத்துக் கொள்வதும் இல்லை.

மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்று பிரபாகரன் அந்த இரவு நேரத்தில் வந்து இறங்கி விட்டார். 

இவர் பிரபாகரனை புகைப்படத்தில் பார்த்து இருக்கிறாரே தவிர பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் புரிந்து கொண்டதும் இல்லை.        செல்லும் முக்கிய இடங்களுக்கு பிரபாகரன் எப்படிச் செல்வாரோ தெரியவில்லை?  ஆனால் இப்போது நாலு முழ வேஷ்டி, அரைக்கைச சட்டை, ஒரு ஜோல்பை. 

கை மட்டும் ஜோல்னா பைக்குள் இருக்க இவர் இருந்த மேஜையின் முன்னால் வந்து நின்றார்.

பிரபாகரன் இருபுறம் துப்பாக்கி ஏந்திய இரு புலி வீரர்கள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.  அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சென்று விட இவர் மட்டும் அன்றைய பிரிண்ட் ஆக வேண்டிய கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.  அலுவலகத்திற்கு பின்புறம் பிரிண்டர் மக்கள் வேலை பார்க்க மொத்தத்தில் அந்த இடத்தில் இவர்கள் நான்கு பேர்களைத் தவிர வேறு எவரும் இல்லை.

கரகரத்த குரலில் பிரபாகரன் தான் ஆரம்பிததார்.

" உண்மையான ஈழத்தமிழன் ஜெயவர்த்னேவை அரசியல் ஞானி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.ஒரு தமிழனாக இருந்து கொண்டு ஜெயவர்த்னேவை அரசியல் ஞானி என்று எப்படி எழுதுகிறீர்கள்?"

"நீங்கள் யார்?"

அருகில் இருந்தவர்கள் " தலைவரை யார் என்று கேட்ட முதல் நபர் நீங்கள் தான் " என்றவுடன் அப்போது தான் இவருக்கு லேசாக புரிபடத் தொடங்கியது.  வந்து இருப்பவர் தான் பிரபாகரன்.  

எந்த பதட்டமும் இல்லாமல் " உட்கார்ந்து பேசலாமே " என்று சொன்னவரை மறுத்து விட்டு பிரபாகரன் நடந்த நிகழ்வுகளை பேச ஆரம்பிக்க பதிலுக்கு முமு " உங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லுங்க.  அதையும் நான் கட்டுரையாக கொண்டு வருகின்றேன்.  ஆனால் என்னை எழுதக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.  பாருங்கள் இந்த மேஜையில் இருக்கும் கடிதங்களை. அத்தனை பேர்களும் அவர்களின் அனுபவங்களை சொல்லியதை வைத்து தான் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்."

பிரபாகரனுக்கு புரிந்து விட்டது.  இவர் மசியக்கூடய ஆள் இல்லை  

மேஜையில் இருந்த அத்தனை கடிதங்களையும் அப்படியே அள்ளி தன்னுடைய ஜோல்னாபையில் போட்டுக் கொண்டு வநத வழியே திரும்பி விட்டார்.  அத்தனை கடிதங்களிலும் எழுதியவர்களின் முகவரியும் இருந்தது. 

பிரபாகரன் சற்று முன்னால் சென்றதும் பின்னால் வந்த அந்த இரண்டு புலி வீரர்கள் ஒரு பார்வையும் சில வாசகங்களையும் சொல்ல அதற்கு பதில் பேசாமல் அமைதி காத்தவர் எப்போதும் போல கடிதங்கள் அத்தனையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டாரே என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு.....

எங்கே முமு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய சகாவாக இருந்த முத்து விஜயன் என்ற நிலகிழாருக்கு மகனாக இருந்த முருகேசன் தான் தன்னுடைய பத்திரிக்கை உலக வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் முத்து முருகேசனாக மாறினார். இராமநாதபுர மாவட்டத்தில் அபிராமம் அருகே உள்ள நகரத்தார் குறிச்சி என்ற கிராமமே இவருடைய பிறந்த ஊர்.  இது பசும்பொன் அருகே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.

சொந்த ஊரில் இவர்களுக்குச் சொந்த நிலமென்பது காலஞ்சென்ற கருப்பையா மூப்பனார் வைத்திருந்ததைப் போலவே சற்று பொறாமை படக்கூடிய அளவில் இருந்தது.

ஆதிக்கக்காரர்களுக்கு மகனாக பிறந்தாலும் சிறுவயதில் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பல வித தேடல்கள் இயல்பாகவே உருவாகி இருக்க அதுவே. பள்ளிப் படிப்போடு காடு மலை வனாந்திரம் என்று சுற்ற வைத்தது. அப்பாவின் கவலை அதிகமானது. இதற்கு மேல் குடும்பத்திற்கு ஆதாரமான அறிவுரை சொல்லும் இடத்தில் இருந்தவர்கள் இவரைப் பற்றி எதிர்கால கணிப்பு என்று சொன்ன பல விசயங்களை கவனித்து இவர் மேல் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இருந்த சொத்துக்கள் ஒவ்வொன்றும் அப்பாவின் இறப்புக்குப் பின்பு ஒவ்வொருவரும் கைப்பற்றி கடைசியில் ஒரு பிடி மண் நிலம் கூட இல்லாத வாழ்க்கையில் தான் மதுரை வந்து சேர்ந்து இருந்தார். சகோதர்கள் மற்றும் சார்ந்த உறவினர்கள் அத்தனை பேர்களும் சலிப்பாய் பார்க்க எப்போதும் போலவே நூலகமே வாழ்க்கையாக மாறி விட்டது.  எதிர்க்க வேண்டும் தன்னுடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றாமல் எப்போதும் போல புத்தக வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்தார்.

குடும்பம் குழந்தைகள் உருவான போது கூட புலனுக்கு விளங்காத அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்திக் கொண்டுருந்தவர் கடைசி வரைக்கும் குடும்பத்தின் மேல் எந்த அக்கறையும் செலுத்தவில்லை.

காரணம் நண்பர் வீட்டில் திடீர் என்று பார்த்த பண்டிட் சேதுராமன் எழுதிய அதிர்ஷ் விஞ்ஞானம் என்ற எண் கணிதம் குறித்த புத்தகம் கண்களுக்கு தென்பட அது குறித்து ஆராய்ச்சியை சேர்த்துக் கொண்டு அலைய ஆரம்பித்தார்.

மேலே சொன்ன தேடல்கள் அத்தனைக்கும் ஒரு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

இவரின் தாய்வழி பாட்டன் பரம்பரையைச் சார்ந்த அத்தனை பேர்களும் இலங்கையில் வாழ்ந்தவர்கள்.  ஒவ்வொருவரும் லண்டன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்று மலையகப் பிரதேசத்தில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட எஸ்டேட் ஆள் அம்பு சேனைகள் அதிகாரங்கள் அதற்கும் மேலாக ஆங்கியேர்களின் ஆட்சியில் உயர்ந்த இடத்தில் இருந்த பதவிகள்.  அவர்கள் வாழ்ந்த கண்ணாடி மாளிகை வாழ்க்கையும், பொறாமைப்படக்கூடிய திரைப்பட சமாச்சாரம் போல் இருந்த அன்றாட நிகழ்வுகளுக்கு ஒரு நாள் முடிவு வந்தது.

1962 ல் மிஞ்சியிருந்த உயிரை கையில் பிடித்துக்கொண்டு மானாமதுரைக்கு வந்து சேர பயணச்சீட்டுக்கு வழியில்லாமல் வந்து நின்ற வாழ்க்கை இவரின் மொத்த சிந்தனைகளை யையும் அப்போது தான் மாற்றியது.  அதன் பிறகு அரை குறையாய் தேடிக் கொண்டுருந்த தேடல்களை வாழ்க்கையில் முதன்மையாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

அவர்களைப் பற்றிய ஜாதக ஆராய்ச்சி முதல் ஒவ்வொரு கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் கோர்த்து தன்னுடைய அன்றாட கடமைகளில் ஒன்றாக வைத்துக் கொண்டு மறுபடியும் அலையத் தொடங்கினார்.  உறவினர்கள் பெற்ற துன்பங்கள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் இலங்கை மக்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் உருவாக இயல்பாகவே மண்டப முகாமிற்கு செல்வதும், தன்னுடைய ஊருக்கு அருகே இலங்கை சார்ந்த எவராவது வந்தால் அவர்களைப் பற்றி விசாரிப்பதும் என்று ஒவ்வொருவரின் துன்பங்களையும் உள்வாங்க ஆரம்பித்தார்.

அப்போது தான் இலங்கைக்குள் இருந்த தமிழர்களின் வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், ஜாதி ரீதியான தாக்கம், பொருளாதார ரீதியான மனோபாவம், மலையகத் தமிழர்களின் தவிப்பான வாழ்க்கை என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது..  ஒரு மனிதன் எந்த சூழ்நிலையில் எவ்வாறு வாழ்கிறான்? எப்படி மாறுகின்றான்? எது மாற்றுகிறது?  ஆரம்பம் என்ன? முடிவு என்ன? ஏன்? எதற்கு? இது போன்ற கேள்விகளை சுமந்து கொண்டு எவரையும் பொருட்படுத்தாமல் நண்பர்கள் உதவியுடன் வாழ்ந்து கொண்டுருந்தவரின் வாழ்க்கையில் வேறொரு மனிதர் அறிமுகம் ஆகின்றார்.

1973

முத்து முருகேசனின் மற்றொரு பொழுது போக்கு நாள் முழுக்க புத்தகங்கள் படித்துக் கொண்டுருப்பது.  படித்த ஆங்கில தமிழ் புததகங்கள் குறித்து அதன் விமர்சனத்தை சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்துவது.

அப்போது இவர் படித்துக் கொண்டுருந்த பல புத்தகங்களில் ஒன்று காஷ்மீர் பிரச்சனைகள் குறித்த ஒரு புத்தகம்.( Chesterbowles அமெரிக்க அதிபர் கென்னடி அரசாங்கத்தில் வெளி விவகார அமைச்சராக இருநத்வர்). படித்து முடித்த பிறகு நூலாசிரியருக்கு காரசாரமாய் எழுதிய விமர்சனத்தில் தான் மாற்றிக் கொண்ட முத்து முருகேசன் என்ற பெயரை வைத்துக் கொள்ளத் தொடங்க நூலாசிரியரிடமிருந்து மிகப் பெரிய பண்டல் போல் புத்தக மூட்டையும் அன்பளிப்பும் கடிதமும் வந்து சேர்ந்தது.

இப்போது உள் அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் தொடக்க கால ஆலோசகர் வீ திருநாவுக்கரசு அப்போது தமிழ்நாடு அரசாங்கத்தில் மக்கள் செய்தி தொடர்பு துறையில் முக்கிய பதவியில் வகித்தவர். பின்னால் தூதர்ஷன் இயக்குநராக பணியாற்றியவர். அப்போது அறிமுகம் ஆக உங்கள் திறமை நாட்டுக்குத் தேவை என்று சொல்லாமல் கொண்டு போய் சேர்த்த இடம் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம். அப்போது இவருக்கு வயது 36.

1973 ல் கலைஞர் தமிழ் முரசு என்ற பத்திரிக்கையை மதுரையில் ஆரம்பிக்க மற்றொரு முக்கிய காரணம் இன்றைய உரத்துறை அமைச்சர்.(?)

வீ. திருநாவுக்கரசு இவரை அழைத்துக் கொண்டு தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே இருந்த அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே கலைஞருடன் இருந்தவர் காலஞ்சென்ற திரு. தென்னரசு. கலைஞருக்கு வலதுகரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.

முத்து முருகேசன் எப்போதும் வெளியே சென்றாலும் நெற்றி நிறைய பட்டை அத்துடன் சந்தனம் கலந்த குங்குமபொட்டு கதர் ஜிப்பா நாலு முழ வேட்டி இத்துடன் ஒரு ஜோல்னா பை. காரணம் காந்தியை தெய்வமாக மதித்தவர். .  நேரு குடும்பத்தின் மேல் அலாதி பிரியம் வைத்து இருந்தவர்.

ஆனால் இப்போது இவர் பார்க்க காத்துக் கொண்டுருப்பது கலைஞர் அவர்களை. 

அங்கே இருந்த மற்றவர்கள் இவரை வினோதமாக பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அவர்களுக்காக காத்துக் கொண்டுருந்தார். 

இவர் முறை வந்ததும் உள்ளே சென்று திருநாவுக்கரசு அறிமுகம் செய்து வைக்க கலைஞர் இவர் தோற்றத்தை மேலும் கீழும் பார்த்து விட்டு அமைதியாக கவனிக்கத் தொடங்கினார்.

இவரிடம் பேசியது தென்னரசு மட்டுமே. அவர்களின் பகுத்தறிவு கொள்கைகளுக்கும் இவரின் காந்தியவாதிய கொள்கைகளுக்கும் எந்த பெரிதான வாக்குவாதம் உருவாகமல் போனது மிகப் பெரிய ஆச்சரியமே. 

அதிலும் கலைஞர் ஒருவரை கவனிப்பதில் எப்போதுமே தனித் திறமை மிக்கவர்.

கலைஞர் பேசத் தொடங்கி விட்டால் அது முடிவாகத்தான் இருக்கும்.  

தென்னரசு இவருடன் பேசி முடித்த போது " உங்களுக்கு பத்திரிக்கை உலகில் இதுவரைக்கும் எந்த அனுபவமும் இல்லைன்னு சொல்றீங்க.  ஆனால் வேலை கேட்டு வந்து இருக்கீங்க.  எந்த நம்பிக்கையில்?" என்று கேட்க இவர் சொன்ன பதில் "என் தன்னம்பிக்கை அடிப்படையில் அதற்கு மேலும் நான் இப்போது துறை மாறி வேலைச் செயய வேண்டும் என்பது என் விதியின் கட்டாயம்" என்று சொல்ல தென்னரசுவுக்கு அதற்கு மேலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அறிமுகம் செய்தவருக்காக தென்னரசு மீண்டும் "வேறு ஏதும் உங்களுக்கு அனுபவம் இருக்கா?" என்று கேட்க அப்போது தான் அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் அனுப்பிய அந்த பாராட்டுக் கடிதத்தை அவரிடம் காட்ட அதுவரைக்கும் பேசாமல் இவரையே பார்த்துக் கொண்டுருந்த கலைஞர் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து விட்டு" எப்போது நீங்க வேலைக்குச் சேர முடியும்?" என்றார். குறிப்பிட்ட காலத்திற்குள் எங்கே முமு கட்டுரை? என்று கலைஞர் கேட்கும் அளவிற்கு இவருடைய கட்டுரைகள் பிரசித்தமாகத் தொடங்கியது.

Thursday, September 30, 2010

ஏணிப்படிகளின் தொடக்கம்

முத்து முருகேசன் தன்னுடைய பத்திரிக்கை வாழ்க்கையை தொடங்கிய ஆண்டு 1973, கலைஞரின் தமிழ்முரசு  பத்திரிக்கையில் ரிப்போர்டர் வேலை.

கலைஞரின் கையெழுத்துப் பற்றி தெரியாதவர் எவருமே இருக்கமாட்டார்கள்.  அடித்தல் திருத்தல் இருக்காது.  வினோதமான நெளி போல வளைந்து போய்க் கொண்டுருக்கும்.

வாக்கியங்கள் வார்த்தைகள் மாறும் போது அதை சமய சந்தர்ப்பத்திற்கேற்ற அப்படியே கோர்ப்பதில் வல்லவர். அடித்தல் திருத்தல் இன்றி அப்படியே கோர்த்து முடித்து விடுவார். இந்த இடத்தில் இப்படி மாறி  வர வேண்டுமே என்று எவராலும் எண்ணத் தோன்றாது. அவரைப் போலவே இவரின் கையெழுத்தும் எத்தனை பக்கங்கள் தொடச்சியாக எழுதிக் கொண்டே இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய கல்வெட்டு போலவே இருக்கும். இன்று வரைக்கும் சேகரித்த அத்தனை தாள்களையும் பொக்கிஷம் போலவே பாதுகாத்துக் கொண்டுருக்கிறார்.

அப்போது மதுரையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டுருந்த பத்திரிக்கைகள் தினந்தந்தி, தினமணி. அந்த 3000 பிரதிகளை இவரின் தனிப்பட்ட சமூக கட்டுரைகள் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு மேடேறி ஓட ஆரம்பித்தது.  இவருடைய மற்ற ஆராய்ச்சிகள் எப்போதும் போல ஓடிக் கொண்டே இருந்தது. இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பல தரப்பட்ட மக்களின் பிரச்சனைகள், காரண காரியங்கள், பிரபலங்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் கோடு கிழித்துப் பார்க்க பழக ஒவ்வொன்றாக புரிபட ஆரம்பித்தது.

முமு எவருடனும் அதிகம் பேசுவதில்லை.  எவர் குறித்தும் மற்றவர்களிடம் உரையாடுவதும் இல்லை.  செய்திகள் சேகரிக்கச் செல்லும் போது அடித்தட்டு மக்களிடம் முதலில் பேச்சை ஆரம்பித்து கடைசியில் தான் பொதுக்கூட்ட மேடைக்கு செல்லக்கூடியவர். குறிப்பிட்ட தலைவர்கள் இவரிடம் மக்களின் நாடி எப்படி உள்ளது என்று கேட்டதெல்லாம் உண்டு. இதைப் போலவே தனக்குத் தெரிந்து ஒருவரின் அந்தரங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை.  கோடு கிழித்துக் கொண்டு ஒரே மாதிரியான வாழ்க்கை. இன்று வரைக்கும் அப்படித்தான்.

இவருடைய நிர்ப்பந்தம் தாங்க முடியாமல் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் வீட்டுக்குள் இருக்கும் சாமி படங்களை பார்த்து கையை உயர தூக்கி சப்தமாக " அப்பா பாத்துக்கப்பா.............." என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக நகர்ந்து போய் விடுவதுண்டு. ஆனால் விட மாட்டார். பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். அவருடைய வாழ்வில் அதிகபட்சமாக பேசிய ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன்.  சிந்திப்பது, எழுதுவது கொஞ்சம் யாரும் கேள்வி கேட்காமல் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டீ குடித்துக் கொண்டேயிருப்பது.  இது தான் முக்கியப் பிரச்சனையே.

இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா சட்டம் கலைஞரின் தமிழ்முரசு பத்திரிக்கையை மூட வைக்க மறுபடியும் இவரின் வாழ்க்கை முட்டுச் சந்தில் போய் நின்றது.

மறுபடியும் இன்றைய உரத்துறை அமைச்சருக்காகவே (?) மதுரையில் (1980) முரசொலி ஆரம்பிக்க கலைஞர் முதலில் தேடிய ஆள் எங்கே முமு?  கடந்த கால அத்தனை அனுபவங்களையும் மொத்தமாக தீவிர கட்டுரைகளாக எழுதித் தள்ள முரசொலி முன்னேறத் தொடங்கியது.  விதி சும்மா விடுமா?  இவர் எந்த இடத்திற்கும் நேரிடையாகவே சென்று செய்திகள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்.  இன்றைய " இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம்" என்பதை அன்றே ஆரம்பித்தவர்.

ஒரு அரசு போக்குவரத்து நிறுவன ஊழல் சம்மந்தமான விசயத்தில் தலையிட்டு சேகரித்த செய்திகள் மிகுந்த களேபரத்தை உருவாகத் தொடங்கியது. அசைக்க முடியாத ஆதாரங்கள் அத்தனையும் இவரின் கைகளுக்கு வந்து விட அதுவே கட்டுரையாக மாறி பிரிண்டர் வரைக்கும் வந்து விட்டது. அஞ்சா நெஞ்சன் அதை வெளியிட வேண்டாம் என்று சொல்ல உருவான பனிப்போரில் இவர் தலை உருளத் தொடங்கியது. 

இவரிடம் இரண்டு கொள்கைகள் எப்போதுமே உண்டு.  எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்யக்கூடாது.  எக்காரணம் கொண்டும் அந்த கட்டுரைகள் பதிப்புக்கு போகாமல் இருக்கக்கூடாது. மிகப் பெரிய ஆச்சரியம் கலைஞர் அவர்கள் இவரின் எழுத்துக்கு கொடுத்த மகத்தான அங்கீகாரம்.  கலைஞர் டெல்லியில் இருந்தாலும் காலையில் அவர் கேட்பது முமு கட்டுரை என்னாச்சு?

காரணம் கலைஞருக்குப் பிறகு பெயர் போட்டு வரும் அளவிற்கு இவரின் கட்டுரைகள் அப்போது பிரசித்தம்.

அஞ்சா நெஞ்சன் அவர்களுடன் உருவான் மனக்கசப்பில் வெளியேறி விட்டார்.  வெளியேறும் போது மற்றொன்றையும் செய்து விட்டே வெளியே வந்தார்.  என்ன நடந்தது? ஏன் நடந்தது? போன்ற பின்னால் உள்ள விவகாரங்களை கடிதமாக கலைஞருக்கு எழுதி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து விட கலைஞர் செய்த உடனடி காரியம் மதுரை முரசொலியை ஒரு மே தினத்தில் மூடவைத்தது.  

கண்டிப்பு, கறார், உண்மை, உழைப்பு, அசாத்தியமான திறமை போன்ற அத்தனையும் ஒரு மனிதருக்கு இருந்தால் இந்த உலகம் எப்படி வாழவைக்கும்? எப்படி தூற்றும்? என்ன மாதிரியான விமர்சனங்கள் வரும்? போன்ற கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த நபர் முத்து முருகேசன். 

நான் பார்க்காமல் படித்த வாயிலாக உணர்ந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 

இவர்கள் இருவருமே இரண்டு துருவங்கள். 

இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது..

ஊரும் வாழ்வும்

என்னுடைய வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் எத்தனை ஆச்சரியங்கள் தந்ததோ அந்த அளவிற்கு தினந்தோறும் சந்தித்துக் கொண்டுருககும் மனிதர்கள் எப்போதுமே ஏராளமான ஆச்சரியங்களை தந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  நான் இருக்கும் ஏற்றுமதித் துறையில் புழங்கிக் கொண்டுருக்கும் யூரோ, அமெரிக்கன் டாலர், பிரிட்டன் பவுண்ட் இது போக மற்ற நாட்டு பண பரிவர்த்தனைகள் அத்தனையும் கையாண்டு கொண்டுருப்பது எவரும் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல.  பெரும்பாலும் ஒவ்வொருவரும் அவர்களின் சிறு வயதில் திருவிழாக்களில் விரும்பிய டாலர் செயின் கூட வாங்க முடியாமல் தவித்தவர்கள் தான்.  

ஒவ்வொரு நாளின் காலை முதல் இரவு வரைக்கும் உள்ளூர் தொடர்புகளும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் சர்வதேச தொடர்புகளுமாய் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கை என்பது மிக அழகானது.  டென்ஷன், கோபம், எரிச்சல், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, குரோதம் என்று எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் இவை அத்தனையும் தினமும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போதும் ஊருக்குச் செல்லும் போது அங்கே உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் இருப்பிடம், உறக்கம், உணவு இது மூன்றுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.  ஆனால் 300 கிமீ தொலைவில் எத்தனை எத்தனை மாற்றங்கள்?. மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஏராளமான அனுபவங்களை உள்வாங்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

தன்னம்பிக்கை, உழைப்பு, தொடங்கி அதிர்ஷடம்,ஜோதிடம், எண்கணிதம்,கைரேகை போன்ற பல கண்களுக்கு தெரியாத சக்திகளை நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை அனுபவம் மூலமாக உணர்த்திக் கொண்டுருக்கிறார்கள். .

நண்பர் சொன்னது போல "ஏதோ ஒன்று". ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் இன்று பலருக்கும் முதலீடு போடச் தேவையில்லாத லாபம் கொழிக்கும் தொழில்.  இன்று நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தலைநகர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டுருப்பவர்கள் முதல் கலைஞர் குடும்பம் முதல் வளர்ந்து கொண்டுருக்கும் கஞ்சா கருப்பு வரைக்கும் இத்தனையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை வெகு ஜனம் அறியாத ஒன்று. எல்லோருமே இறுதியில் சொல்லும் ஒரே வார்த்தை "உழையுங்கள் முன்னேறலாம்.", ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  அவரவர்களுக்கு தெரிந்தவகையில். ஆனால் நான் இருக்கும் ஊரில் தன்னுடைய குழந்தைகளுக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழ் வாங்க பல வாரம் காத்து இருக்க வேண்டிய கொடுமையும் உண்டு. தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் வரையிலும் நாம் அடைந்து கொண்டு இருக்கும் துன்பம் அளவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது.  அது போன்ற சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு இறுதியில் இந்த நம்பிக்கைகள் தான் வாழ்க்கையின் வழித்துணையாக மாறிவிடுகின்றது.


இது போன்ற கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு.  இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு.

தொடக்கத்தில் எதையும் கவனிக்கத் தேவையில்லாமல் காலங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. காரணம் வறுமையில்லாத இளமைப் பருவம்., அதுவே வாழ்ந்து கொண்டு இருந்த சமூக அனுபவங்களை கவனிக்கத் தெரியாமல் கடந்து வந்தாகி விட்டது. 


என்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள அவசரமாய் கடக்க வேண்டியதாய் இருந்தது. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை, 


விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் மிக ஆழமாக உள்வாங்கும் இந்த சூழ்நிலையில் மனதில் இருக்கும் வியப்பு மாறாமல் தான் இருக்கிறது.

முதல் இருபது வருடங்களில் குடும்பத்தினர் என் மேல் வைத்திருந்த பல கவலைகளில் என்னுடைய இறை மறுப்புக் கொள்கை.  அது வெறும் கொள்கையாக இருந்தாலும் கூட பராவாயில்லை.  இறை கொலையாக இருந்த காரணத்தால் நான் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் குடும்பத்தினரின் சமூக அந்தஸ்து மிகவும் பாதிக்கப்பட்டது. 

வந்து சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேர்களும் கொண்டு வரக்கூடிய முக்கிய குற்றச்சாட்டு கூட்டாளி நாதாரிகளுடன் சேர்ந்து கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காய் எடுத்து தின்று கொண்டு இருக்கின்றான். 

அவர்களைப் பொறுத்தவரையிலும் அது தோஷம் கழித்த ஒரு நிகழ்வு.  அதுவே என்னுடைய பார்வையில் தின்று தீர்க்க வேண்டிய ஒன்று.  என்னுடன் இருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான் திக்கு தெரியாமல் திரிந்தோம். ஊருக்குள் இருக்கும் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தோம்.   கொள்கை கொண்ட அத்தனை பேர்களும் இன்று மாறிவிட்டார்கள். தாமதமாக என்றாலும் நானும் கூட மாறித்தான் போயுள்ளேன். காரணம் அனுபவங்கள். 

சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை விட, கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட இந்த அனுபவங்கள் தான் ஒருவரை தலைவராக மற்றொருவரை தறுதலையாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. 

ஆனால் ஆரம்பம் முதல் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோவிந்த ராஜன் இன்று தென்னக ரயில்வேயில் உயர்பதவியில் இருந்தாலும் தான் வைத்திருந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அவன் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.  அவன் பத்தாவது படிக்கும் போது சொன்ன தத்துவம் இன்றும் கூட மனதில் பசுமையாக நிற்கிறது.

" உன்னை கடவுள் என்பவர் ஏதாவது கேட்டாரா?  உன்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாரா? வந்து படையல் வை என்று வீட்டுக்குள் வந்து கேட்டாரா? போடா....... போய் வேலையைப் பாருங்கடா................"

அறிவுரை யாருக்கும் சொல்ல மாட்டான்.  ஏன்?  யாரிடமும் அளவுக்கு அதிகமாகக்கூட பேசமாட்டான்.  அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சடங்ககுகளில் கூட கடமைக்கு என்று நின்று கொண்டு இருப்பான்.  திருநீறு பூசி விட்டு எப்போதும் போல அவன் இயல்பான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டுருப்பான்.  இறை குறித்து எந்த வாக்கு வாதமும் செய்து பார்த்தது இல்லை.  அவர்கள் குடும்பத்தினர் கவலைப்பட்டாலும் தொந்தரவு இல்லாத அவன் கொள்கை இன்று வரையிலும் தடுமாறாமல் நல்ல உயர்ந்த பதவியில் இருக்கின்றான். அவன் தான் எங்கள் செட்டில் கடைசியாக திருமணம் செய்து கொண்டவன். 

40 வயதில் கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் எந்த தவறும் செய்யாமல் அல்லது விரும்பாமல் இன்று வரைக்கும் எனக்கு அதிக ஆச்சரியத்தை தந்து கொண்டு இருப்பவன். பத்தாவதுக்குப் பிறகு தொழில் நுட்ப கல்லூரி முடித்து சென்னையில் உறவினர் வீட்டீல் அவமானத்துடன் தங்கியவன். எதையும் பொருட்படுத்தாமல் தங்கியிருந்த இடத்தில் இருந்து சைக்கிள் ரயில் மீண்டும் சைக்கிள் மூலமாக பயணம் செய்து தொடக்கத்தில் 350 ரூபாய்க்கு ரெட்ஹில்ஸ்லில் வேலை செய்தவன். ரயில்வே பரிட்சை எழுதி ஒவ்வொரு படியாக உயர்ந்து வந்தவன். திருமணம் குறித்து கவலைப்படாமல் இருந்தவனைப் பார்த்து குடும்பத்தினர் தான் தேடி அலைந்து கடைசியாக விசாகபட்டினத்தில் இருந்து பெண் பார்த்து திருமணம் முடித்தார்கள்.

நான் முன்னோடிகளாக வைத்து இருப்பவர்களில் அவனுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. ரயில்வே துறையில் ஐ ஆர் எஸ் என்ற உயர் பதவிக்கு பரிட்சை எழுத அவனுக்கு முக்கிய தகுதிகள் அத்தனையும் உண்டு.  அவன் எழுதினால் கூட ஒரே தடவையில் தேர்ச்சி பெற்று வரக்கூடியவன்.  செய்ய மாட்டான்.  காரணம் இந்த பகுதியில் இடையே பார்க்கலாம்.

திரு. முத்து முருகேசன்.(MUTHU MURUGESON), எப்போதுமே தன்னுடைய பெயரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். இந்த பெயர் தான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பிய பெயர்,

2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் தங்கியிருந்த அறைக்கு உள்ளே வந்தவர் அறிமுகப்படுத்திய நபர்.  அப்போது இவர் மதுரையில் திருநகரில் தன்னுடைய வீட்டில் வாழ்ந்து கொண்டுருந்தார்.  நம்பிக்கைகளுக்கும் உழைப்புக்கும் இடையே போராடிக் கொண்டுருந்த என்னுடைய அன்றைய திருப்பூர் வாழ்வில் எதிர்பாரா திடீர் திருப்பமாக இவருடைய அறிமுகம் கிடைத்தது.

" உங்கள் மனக்குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இவரைப் போய்ப் பாருங்கள் " என்று நண்பர் ஒரு முகவரியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.  கல்லூரி சமயத்தில் ஒரே ஒரு சமயம் தொலைந்து போன பரிட்சைத் தாளை தேடி வந்த மதுரைக்கு இப்போது இரண்டாவது முறையாக திருப்பூரில் இருந்து பயணம்.  முகவரி கண்டு பிடித்து வீட்டுக்குள் நுழைந்த போது கதர் ஜிப்பா மற்றும் நாலு முழ வேட்டி அணிந்துருநத அந்த ஒல்லியான உருவம் என்னை வரவேற்றது. வீடு முழுக்க புத்தக குவியல் தான் அதிகம் தெரிந்தது. அவர் மனைவி காபி கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார்.

திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டிக் கொண்டுருந்தவர்களை மீற முடியாமலும் என்னுடைய லட்சியங்கள் பாதி அளவில் இருந்த காரணத்தாலும் ஒரு வழிகாட்டல் தேவையாய் இருந்தது. ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களும், இந்த “ உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது ” என்பதை உணர்ந்து கொண்டு இருந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். மூன்று முறை தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணங்கள் தட்டிப் போய்விட், மூதலிடு போட்டு உட்கார வைத்து அழகு பார்க்க காத்துருந்தவர் தடுமாறி நின்று விட் இதே போல் அடுத்தடுத்து சூறைக் காற்றும் சூறாவளியும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருக்க யோசித்த தருணங்கள் அது.

அவரின் வழிகாட்டல் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கத் தொடங்கியது.

அவருடன் பேசி முடித்து விட்டு, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் கொடுத்த நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு வந்த என்னை எப்போதும் போல திருப்பூர் வாழ்க்கை மறக்கடித்து விட்டது.   திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து பெயர் வைக்கும் சூழ்நிலையில் தான் மறுபடியும் அழைத்தேன். எவர் அழைத்தாலும் அத்தனை சீக்கிரம் வெளியே சென்று விடாத மனுஷன், மறு நாள் திருப்பூருக்கே வருகின்றேன் என்று வீட்டுக்குள் வந்தவர் என்னுடைய மறுமலர்ச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பககங்களை எழுதத் தொடங்கினார்.

அப்போது தான் அவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது. ஓய்வு கிடைத்த ஒரு சனி ஞாயிறு முழுக்க உரையாடலில் தான் கழிந்தது...அவர் கற்று வைத்திருந்த வித்தைகளை விட அவர் பேசி மடக்கி அவர் வழியில் கொண்டு செலுத்த ஆரம்பித்தார்.  என்னுடைய அறிவியல் கருத்துக்கள் சற்று மூச்ச வாங்க ஆரம்பிக்க வாழ்க்கை ஆணிவேரின் பிடிமான்ம் அன்று முதல் தான் ஆழமாய் ஊன்றத் தொடங்கியது. அரசியல் இரும்புகளையே கரைத்துப் பார்த்தவர். என்னைக் கரைக்க அதிக நாள் எடுத்துக் கொள்ளவில்லை.

என்னை அவருக்குப் பிடித்ததை விட நான் எப்போதும் விரும்பும் அரசியல் துறை ஆசானாக அமைந்த காரணத்தால் வந்தவரை ஒரு வாரம் தங்க வைக்க மனைவி என்னை வினோதமாக பார்த்தார்.  நட்பு வட்டாரம் என்பது முழுவதும் நின்று குழந்தைகள் மட்டுமே உலகமாக வாழ்ந்து கொண்டுருந்த வனுக்கு அவர் மேல் நான் காட்டிய அக்கறையும் மரியாதையும் அவளை ஆச்சரியப் படுத்தியது.

இரட்டைக்குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டுருந்தவளுக்கு இவர் அடிக்கடி விரும்பும் தேநீர் பழக்கம் எரிச்சலைத்தந்தாலும் என்னை சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுருந்தவளுக்கு இவரையும் சகித்தே ஆக வேண்டிய சூழ்நிலை., காரணம் எனக்கும் அதே பழக்கம்.

அதுவரைக்கும் அத்தனை அரசியல் விசயங்களையும் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்துக் கொண்டு ஒரு விதமான உத்தேச கொள்கையோடு வாழ்ந்து கொண்டுருந்த எனக்கு இவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளராக இருந்த காரணத்தால் என்னை அவரிடம் மிக நெருக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

அப்போது தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் வேலை முடித்து சோர்வோடு வந்த பொழுதெல்லாம் முழு ராத்திரி முழுக்க இவருடன் பேசி விட்டு மறுநாள் தூங்காமலேயே அலுவலகத்திற்கு சென்று விடும் பழக்கமும் உருவாகத் தொடங்கியது.  .

அக்மார்க் காந்தியவாதி.  இன்று வரையிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு தமிழ் திரைப்படத்திற்கு தேவைப்படும் அத்தனை சுவாரஸ்யங்களும் திடீர் திருப்பங்களும் இவரது வாழ்க்கையில் உண்டு. இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு தனி மனித ஆளுமையால் மொத்த வாழ்க்கையும் மாறிப்போய் 1990க்குப் பிறகு தான் நேசித்த பத்திரிக்கை உலகத்தை மொத்தமாக கை கழுவி விட்டு இன்று திருப்பூரில் மகன் வீட்டில் வசித்துக் கொண்டுருக்கிறார்.

இவரால் உயர்ந்தவர்களும், இவர் நெருக்கமாக சந்தித்த இந்திரா காந்தி,எம்.ஜீ.ஆர்,கலைஞர் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு.  ஆனால் அத்தனையும் விட  ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை இயக்கம் சார்ந்த நபர்களும் அடங்குவர். ஈழத்தின் 1970 க்குப் பிறகு சிறிது பெரிதுமாக அடுத்த ஏழு ஆண்டு ஏறக்குறைய 36 இயக்கங்கள் உண்டு என்பதை படித்தவர்களும் களத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் தெரியும். அதில் பல இயக்கங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இடம் கிடைக்காமல் மூழ்கிப் போனவர்களும் உண்டு.  அதில் பல பேர்கள் இவரின் எழுத்துக்கு ஆதரவாளர்.  சிறீ சபாரெத்தினம், பாலகுமார்,உமா மகேஸ்வரன் போன்றவர்கள் இவருடன் மதுரையில் இரண்டு நாட்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தங்கியிருந்தவர்கள்.

இதுவரைக்கும் ஈழம் குறித்து எழுதிய 70 சதவிகித எழுத்தாளர்கள்கள் பெரும்பாலும் புத்தக அறிவு மூலமாகத்தான் தங்களது படைப்புகளை எழுதியிருப்பர்.

ஆனால் இவர் எழுதிய "இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை" என்ற கட்டுரைகள் (1988) அன்றைய தினத்தில் விளம்பரம் இல்லாமல் விற்றுத் தீர்த்த பத்திரிக்கையின் செல்வாக்கு பழைய பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியக்கூடும். எந்த வித புத்தக அறிவும் இல்லாமல் அத்தனையும் சந்தித்த நபர்களின் வாக்குமூலங்களை வைத்தே உருவாக்கியவர். இவரை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கையில் இருந்து வந்தவர்கள் அநேகம் பேர்கள். அதிலும் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தொடக்கத்தில் உருவான சர்ச்சை நிறைந்த ஆளுமையின் காரணமாக பல நூறு முஸ்லீம் மக்கள் தினமும் இவரை வந்து சந்திப்பது அன்றாட வாடிக்கை.

ஒரு நாட்டின் வராலாற்றுப் புத்தகத்தை படித்தால் அந்த நாட்டில் வாழ்ந்து கழித்த அனுபவத்தை படிப்பவர்களுக்கு தரக்கூடும். அதைப் போலவே இவரின் மொத்த வாழ்க்கையையும் தெரிந்து கொள்பவர்களுக்கு வேறு சில அனுபவங்களைத் தரக்கூடும்.