Saturday, December 31, 2022

31.12.2022

 கலங்காதே மகளே

செயற்கை முறையில் விந்தணு வங்கியில் முன் பதிவு செய்துள்ளேன்.

கணவன் என்ற பெயரில் ஆண் துணை உன்னுடன் இருப்பான்.

அவன் உதவாக்கரை என்று கத்தி விடாதே

சுபவீ கோஷ்டி உள்ளே புகுந்து விடும்.

குலம், கோத்திரம், சாதி, மதம், ஆண், பெண், ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம்
அவையெல்லாம் இனி தேவையிருக்காது.

கட்டிங் வாங்கு

கலக்காமல் முழுங்கு.

TNBJP 2022 - பத்தடி முன்னே இருபதடி பின்னே 31/12/2022

ஏன் தமிழகத்தைக் கொள்ளையடித்து தமிழகப் பொருளாதார பலத்தைச் சூறையாடும் திமுக அதிமுக மட்டும் தான் ஆட்சியில் இருக்க வேண்டும்?

தொடர்ந்து அவர்களிடம் மட்டும் தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று யார் யாரெல்லாம் விரும்புகின்றார்கள்?
திமுக, அதிமுக கட்சியில் இருப்பவர்கள் பாஜக வை வெறுப்பதை விட விரும்புவது போல நடித்து நட்பு பாராட்டி ஆனால் மனதளவில் மிக அதிக அளவு வெறுக்கும் சோ கால்டு பத்திரிக்கையுலக புத்திசாலிகள் வைத்துள்ள காரணங்கள் என்ன?

( 1 )
ஏன் காங்கிரஸ் தோற்றது என்று அண்ணாதுரை அவர்களிடம் அமெரிக்காவில் வைத்துக் கேட்ட போது நீண்ட காலம் இருந்த காரணம் என்றார்.
இது கால்வாசி உண்மை. முக்கால் வாசி பொய்.
எப்படி திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது? நிஜமான காரணங்கள் தான் என்ன?
பார்த்துப் பார்த்து பலவிதமான திட்டங்களைத் திகட்டக் திகட்ட காமராஜர் கொண்டு வந்த போதிலும் ஏன் அவர் தோற்றார்.
ஏன் பக்தவச்சலம் அவர்களின் ஆட்சி மக்களால் தூற்றப்பட்டது.
பசி கால் வாசி காரணம். அரிசி பற்றாக்குறை கால் வாசி காரணம். கருணாநிதி தொடர்ந்து இடைவிடாமல் தினமும் செய்த பச்சை அயோக்கியத்தனம் மீதி அரை வாசி காரணம்.
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் என்பது வேரடி மண்ணோடு சாய்க்கப்பட்டது என்று தான் எழுத வேண்டும். காரணம் அண்ணாதுரை அவர்களால் கூடக் காங்கிரஸ் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.
ஏன் நிகழ்ந்தது?.
முக்கியக் காரணம் காங்கிரஸ் மக்கள் மனதைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள விரும்பவில்லை. பசியால் அழுது கொண்டு இருந்தவர்களிடம் நாடு பெரிது என்று தத்துவத்தைப் போதித்தது.
காறித் துப்ப முடியாமல் சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டு இருந்தார்கள். 1967 தேர்தலில் செருப்படி விளக்குமாறு கொடுத்து காங்கிரஸ் என்ற கட்சி பாடை கட்டி அனுப்பி வைத்தனர். அண்ணாதுரை முதல்வராக அமர்ந்தார்.
ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற விழுமியங்கள் உள்ள தமிழகத்தில் காங்கிரஸ் எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் காவல்காரன் போலத்தானே இருந்தது?
மக்களின் ஆன்மீகம் முதல் அடிப்படை வாழ்க்கை கட்டுமானம் வரைக்கும் பார்த்துப் பார்த்துப் பார்த்து தானே செய்தது?
எங்கே தவறு நடந்தது?
1947 முதல் 1967 வரை இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் சார்ந்த எந்த பேச்சாளர்களும் தமிழர்கள் விரும்பக்கூடிய மொழியில் பேசவே இல்லை. மேடைப் பேச்சு முதல் நடை உடை பாவனை திட்டம் நோக்கம் கொள்கை எல்லாமே லண்டன் தனமாகவே இருந்தது.
ஆங்கிலப் பேச்சு என்பது கௌரவமாகப் பார்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் தான் பாதிப் பேர்கள் பேசினார்கள். கோவணம் கட்டி வாழ்ந்தவனுக்கு, வயல் வாழ்க்கையைப் பிரதானமாக கருதிய விவசாயிகளுக்கு, அடிப்படை தொழில் கட்டுமானம் வாழ்க்கை வாழ்ந்த தமிழர்களுக்கு அண்ணா, கருணாநிதி முதல் பல பேர்களின் பேச்சு மயக்கியது. சொக்க வைத்தது. நம்ப வைத்தது. ஓட்டமாக மாற்றியது.
மேடைப் பேச்சோ, கருத்தரங்கமோ, கேள்வி பதிலோ, பேட்டியே தமிழகத்தில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகின்றார்கள் என்றால் அந்தக் கட்சி விரைவில் பலத்த சேதாரத்தைப் பெறப் போகின்றது என்று அர்த்தம். அத்துடன் ஐம்பது சதவிகித ஓட்டளிக்கும் மக்கள் அந்தக் கட்சியைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
காங்கிரஸ் அசிங்கத்தைப் பெற்றது. திமுக அங்கீகாரத்தைப் பெற்றது.
அண்ணாமலை ஒருவர் தான் இதை தற்போது புரிந்துள்ளார்.
மக்கள் மொழியில் அவர் பேசும் பேச்சு நாளுக்கு நாள் மெருகேறி ரசிக்கும் வண்ணம் மாறிக் கொண்டே இருக்கின்றது. இதை இங்கே பல பேர்களிடம் அந்தப் பேச்சைக் கேட்க வைத்து அவர்கள் முகபாவங்கள் எப்படி மாறுகின்றது என்ற ஆராய்ச்சியையும் ஒவ்வொரு பேச்சுக்கும் செய்து வருகின்றேன்.
அண்ணாமலை அவர்கள் மிக மிக கஷ்டப்பட்டு பத்தடி முன்னால் செல்கின்றார்.
மற்றவர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் கட்சியின் வளர்ச்சியை இருபது அடி பின்னால் இழுத்தப்படியே உள்ளனர்..

Friday, December 30, 2022

2 - கோவையின் பெருமை மறைந்த இரண்டாமாண்டு ..

"1 ரூபாய்க்கு இட்லி, ரூ.18க்கு முழுச் சாப்பாடு...

தனது முகத்தை வெளி உலகுக்கு காட்டாத சமூக சேவகர்தான் கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்..
இறந்த பின்புதான் அவரைப் புகைப்படத்தில் பார்க்கிறேன். அதுவும் செல்போனில் குனிந்தபடியே எதையோ தேடிக் கொண்டிருக்கும் தோற்றம்.
அவரை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பேசியுமிருக்கிறேன். படிப்பு வாசனையற்ற அப்பாவுக்கு அவர் கடவுள் மாதிரி. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் இவரிடம் சென்றுதான் அபிப்ராயம் கேட்பார்.
நான் பிளஸ் 2 முடித்த சமயம். ‘பையனை மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்?’ என்று அப்பா கேட்டது இவரிடம்தான். கியர் பாக்ஸ் பொறியியல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர். 60 சதவீதமே இருந்த என் மதிப்பெண்ணைக் கேட்டுவிட்டுச் சொன்னார்.
‘இவன் படிச்சு என்ன ஆகப்போவுது? ஒர்க்‌ஷாப்ல விடு. வேலை பழகட்டும்!’ என்றார். அதன்பின் அங்கே நான் 3 நாள் வேலை பார்த்தது, பிறகு வேறு கம்பெனிக்குப் போனதெல்லாம் இங்கே முக்கியமில்லை.
ஆனால், அவரைப் பற்றி வரும் தகவல்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.
1980களில், தமிழக அரசியலில் எப்படி எம்.ஜி.ஆரோ? திரையுலகில் ரஜினி எப்படியோ அப்படி, கோவையில் தொழிலதிபர் என்றால் இவரே பேசப்பட்டார்.
1980 தொடக்கத்தில் இரண்டே இரண்டு பேர்தான் கோவையில் ஜப்பான் தயாரிப்பான டொயோட்டா கார் வைத்திருந்தார்கள்.
அதில் ஒன்று இவருடையது. மொழுமொழுவென்று கோழி முட்டை போலவும் கண்ணாடி போலவும் மின்னும் அந்த சந்தன நிறக் கார், சாலையில் செல்லும்போதெல்லாம் பலரையும் மயக்கும்.
அவர் கார் ஓட்டிச் செல்லும் அழகே தனி. ரோட்டில் யாசகர்கள் யாராவது தென்பட்டால் காரின் டிரைவர் சீட் கறுப்பு நிறக் கண்ணாடி சன்னமாகத் திறக்கும். அதற்குள்ளிருந்து சுண்டப்படும் நூறு ரூபாய்த் தாள் (அந்தக் காலத்தில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இல்லை) தெறித்து வந்து யாசகர்களின் காலடியில் விழும். இப்படி விழும் நாலைந்து நூறு ரூபாய்த் தாள்களை ஒரே நபர் சாலையில் கண்டெடுத்து வந்ததாகக்கூடக் காட்டியிருக்கிறார்.
இவர் கார் செல்லும் வழியெங்கும் உள்ள சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பாப்பம்பட்டி, பீடம்பள்ளி, இருகூர், அத்தப்பகவுண்டன் புதூர், குளத்தூர், நீலம்பூர், சித்தநாயக்கன் பாளையம் ஊர் மக்களுக்கு, இப்படிப் பணத்தை வீசிச் செல்லுவது சாந்தி கியர்ஸ் முதலாளிதான் என்பது தெரியும்.
1980- 90களில் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள், வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனி உதவித்தொகை வழங்கியிருக்கிறார்.
முதலில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு என ஆரம்பித்தவர், பிறகு 6-ம் வகுப்பில் இருந்தே உதவித்தொகை கொடுக்க ஆரம்பித்தார்.
ஆனால் எந்த இடத்திலும், எந்த நிகழ்ச்சிக்கும் இவர் வரமாட்டார். ஆபீஸ் சிப்பந்திகளே வருவர். அதிலும் இவரைப் பற்றிய பேச்சு, புகைப்படம், சலனப் படம் எதுவும் வராது. வரக்கூடாது.
அன்றைக்கு இவர் நடத்திய கியர் பாக்ஸ் தயாரிப்பு கம்பெனியின் ஏ, பி, சி என்று வரும் மூன்று யூனிட்டுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நவீன இயந்திரங்கள்தான் இருக்கும்.
ஒரு பக்கம் லேத்தில் கடைந்த சக்கரங்களை அடுக்கிக் கொடுத்தால் மறுபக்கம் அந்த மெஷின், அவற்றைப் பற்சக்கரங்களாக மென்று துப்பி விடும். அளந்தெடுத்தால் 0.0001 பிழைகூடக் காட்டாது.
சுண்டு விரல் அளவு பற்சக்கரங்கள் முதல் பெரிய டைனோசர் அளவு பற்சக்கரங்கள் வரை உற்பத்தியில் முன்னணி வகித்தது இவர் நிறுவனம்.
அதேபோல் இவர் ஆரம்பித்த காஸ்டிங் தொழிற்சாலையும் நவீன மயம்தான். 1980-களிலேயே பொறியியல் தொழில்நுட்பத்தில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை.
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக இருந்துகொண்டே வீட்டில் லேத் மெஷினை வைத்துப் பணி செய்து வாழ்வில் உயர்ந்தவர் என்று என் அம்மாவும் அப்பாவும் அவர் தொழில் ஆரம்பித்த அரிச்சுவடி குறித்துக் கதை, கதையாய்ச் சொன்னதுண்டு.
இவர் கம்பெனி பணியாட்களிடம் புறப்படும் இவரைப் பற்றிய ஒவ்வொரு அனுபவமும் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கும்.
ஒரு முறை பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு தானியங்கி மெஷின் பழுதாகி விட்டது. மணிக்குப் பல லட்சம் ரூபாய் உற்பத்தி கொடுக்கும் இயந்திரம். அதைச் சரிசெய்யக் குறிப்பிட்ட நாட்டிலிருந்தே பொறியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வர ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர்களும் மெஷினுடன் மல்லுக்கட்டிப் பார்த்தார்கள். வேலைக்கு ஆகவில்லை. இரண்டு நாட்கள் மொத்தம் ஆறு ஷிப்ட்டுகள். வெளிநாட்டுப் பொறியாளர்கள் தளர்ந்து விட்டனர்.
ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொழிற்சாலை வந்தவர் நிலையைப் புரிந்து கொண்டார். டிரைவரை அழைத்தார். டிக்கியில் தன் ஒர்க்கிங் டிரஸ்ஸை எடுத்து வரச்செய்து அணிந்துகொண்டு களத்தில் இறங்கினார்.
ஒரே ஒரு பயிற்சிப் பையனும், டிரைவரும் மட்டுமே உதவிக்கு. நான்கு மணி நேரம். மெஷின் இயங்க ஆரம்பித்துவிட்டது. வெளிநாட்டுப் பொறியாளர்கள் மூக்கில் விரல் வைக்காத குறைதான்.
இன்னொரு சம்பவம். இவரின் பி யூனிட்டுக்கு எதிரில் ஒரு பிரபல பொறியியல் கம்பெனி. அவர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து தருவித்த இயந்திரம் பழுது. அதன் கியர் வீல் ஸ்பேர் தேவைப்பட்டது. குறிப்பிட்ட கம்பெனிக்கே எழுதிக் கேட்டார்கள். அந்த கியர் வீலின் வருகைக்காக மெஷின் இயங்காமல் இருந்தது. ஒரு மாதம் கழித்தே அந்த வீல் வந்தது. பிரித்துப் பார்த்தார்கள். அதில் Shanthi gears Made in India எனப் பொறிக்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட சுவிஸ் கம்பெனிக்கு போன் செய்து கேட்டதில், ‘உலகத்திலேயே தரமான கியர் வீல் இதுதான்!’ என்றனர்.
தன் கம்பெனி தலைவாசலில் இருக்கும் நிறுவனத்தில் தயாராகும் கியர் வீல், சுவிட்சர்லாந்து போய் அதுதான் உலகத் தரமானது என்று தன் வாசலுக்குள்ளேயே நுழைகிறதென்றால் அந்த அனுபவம் அவர்களுக்கு எப்படியானதாக இருந்திருக்கும்?
இவர் தன் தொழிலை வெவ்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தியதுடன் சேவைத் துறைகளிலும் கால் பதித்தார்.
அதில் ஒன்று கட்டுமானம். எல் அண்ட் டி போல உலகத்தரமான சாலை அமைக்க விரும்பியவர், தான் அன்றாடம் பயணிக்கும் சித்தநாயக்கன் பாளையத்திலிருந்து (இவரின் மாமியார் ஊர், அங்கே இவருக்கு நிலபுலன்கள் உண்டு) பாப்பம்பட்டி பிரிவு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அகண்ட, தரமான சாலையை முழுக்க முழுக்க அவர் செலவிலேயே அமைத்தார். இதுபோன்ற சேவையின் ஓர் உச்சம்தான் சாந்தி சோஷியல் சர்வீஸ்.
1 ரூபாய்க்கு இட்லி, தோசை, வடை பொங்கல், 18 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு.
தினசரி திருப்பதி கோயிலில் அன்னதானத்திற்கு எப்படி க்யூ நிற்குமோ அப்படியான மக்கள் வெள்ளத்தைச் சாந்தி கேன்டீனில் காணலாம்.
இங்கே முதியவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் தனி விடுதியும் உண்டு.
அதன் பக்கத்திலேயே பெட்ரோல் பங்க். மற்ற பங்க்குகளில் இல்லாத தரம், விலையும் குறைவு. மருத்துவப் பரிசோதனைகள்.. வெளியே ஒரு சி.டி ஸ்கேன் ரூ. 500 என்றால் இங்கே ரூ.100. மருந்து மாத்திரைகளும் கம்பெனி விலைக்கே.
ஒரு கட்டத்தில் தன் பொறியியல் தொழிலை விட்டுவிட்டு சோஷியல் சர்வீஸிலேயே இறங்கினார்.
கோயமுத்தூரே, சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியத்தையும் அவர் கேன்டீனைப் பற்றியுமே பேசியது.
அப்படியானவர் புகைப்படங்கள், சலனப் படங்கள் எந்த பத்திரிகை, மீடியாக்களிலும் வெளியானதில்லை. அதை அவர் விரும்பியதில்லை.
இன்று ‘சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார்!’ என்ற செய்தியுடன் முகம் தெரியாத புகைப்படம் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் காண்கிறேன்.
அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படத்தையும் அனுமதித்திருக்க மாட்டார் என்பதுதான் உண்மை."

Thursday, December 29, 2022

பள்ளிக்கல்வித்துறையின் முடிவுகளை தனியார் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள்

எடப்பாடியார் ஆட்சியில் இருந்த போது கடைசி இரண்டு வருடங்களில் கொரோனா ஒரு பக்கம் தாக்கியதைப் போலப் பள்ளிக்கல்வித்துறையில் தகுதியில்லாத அமைச்சர் இருந்த காரணத்தால் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் மனசாட்சியே இல்லாமல் செய்த காரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அமைச்சர் எதில் கையெழுத்துப் போட்டால் எத்தனை கோடி கிடைக்கும் என்பதிலேயே கடைசி வரைக்கும் இருந்தார்.

காரணம் எட்டாம் வகுப்பு முடித்து விட்டு நேரிடையாகப் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதக்கூடியவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாமல் வெளியே வந்து தனியாக எழுதக்கூடியவர்கள், இது தவிர தனியார் பள்ளிக்கூடங்கள் பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களை நகர்த்திக் கொண்டு வந்து விடுவார்கள். அனைத்து கட்டணங்களையும் வாங்கிக் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு நெருங்கும் போது ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வார்கள். அப்பா அம்மாவை வரவழைத்துப் பேசி உங்கள் மகன் நிச்சயம் தேர்ச்சி அடையமாட்டான். வெளியே தனியாக தனித்தேர்வு மூலம் எழுத வைத்து விடுங்கள் என்று சொல்லி விடுவர். யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகத் தானாகவே உடல்நிலை காரணத்தை முன்னிட்டு என் மகனைத் தனியாக எழுத வைத்துக் கொள்கின்றேன் என்று பெற்றோர்களிடம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். தமிழகத்தில் அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் இது கடந்த பத்தாண்டுகளாக அதிகம் நடந்து வருகின்றது.
காரணம் ஒருவர் தேர்ச்சி அடையாமல் இருந்தால் கூட நூறு சதவிகித தேர்ச்சி என்று ப்ளெக்ஸ் போர்டு வைக்க முடியாது அல்லவா?
இந்த பிரச்சனை என் கவனத்திற்குள் வந்தது.
காரணம் கொரோனா வந்த போது ஆல்பாஸ் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் நான் மேலே சொன்ன மூன்று வகையிலும் இருந்த மாணவ மாணவியர்கள் தனித் தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு உண்டு அரசு அறிவிக்க மிகப் பெரிய பிரச்சனை உருவானது. உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டு வெளியே வந்தவர்கள், பள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10,11,12 மூன்று வகுப்புகளுக்கும் தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்று அவசர கதியாக உத்தரவு இட்டனர்.
சொல்லி வைத்தாற் போல ஒன்றேகால் லட்சம் மாணவர்கள் எழுதியதில் பத்தாயிரம் பேர்களுக்கு அருகே தான் தேர்ச்சி பெற்றனர்.
அடுத்த வருடமும் இதே கொடுமை நடந்தது.
கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. பள்ளி மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் சென்றனர்.
எடப்பாடி ஆட்சி அள்ளிக்குவிப்பதில் தான் கவனம் செலுத்தினர். செங்கோட்டையன் அரசியல் என்பது கோபி பகுதியில் எழவு வீட்டுக்குச் சென்று தலையைக் காட்டுவது, திருமண வீட்டுக்குச் சென்று வாழ்த்துக் கூறுவது. இந்த இரண்டு மட்டும் தான். துறை குறித்தோ அறிவோ, நிஜமான அரசியல் குறித்த தரவுகளோ எதுவுமே தெரியாது.
தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலராக திரு. உதயச் சந்திரன் கொண்டு வந்த அனைத்து வகையான சீர்திருத்தங்கள் என்பது 16 வருடங்கள் கழித்து தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடந்த மாற்றங்கள் என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். காரணம் கருணாவும் சரி ஜெ வும் சரி மக்கள் எப்படி இங்கே இருந்தால் தங்களுக்கு ஓட்டளிப்பார்கள் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினார்கள்.
உதயச்சந்திரன் கொண்டு வந்த மாற்றங்கள் அனைத்தும் 75 சதவிகிதம் பள்ளிக்கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கியது.
தனித் தேர்வர்கள் அடையும் பிரச்சனை என்பது இறுதியாக தேர்வு முடிவுகள் அறிவிக்க தாமதம் ஆக்குவது என்கிற ரீதியில் இருக்க பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து அதிகாரிகளையும் அழைத்துப் பேசியும் ஒரு காரியமும் நடக்கவில்லை. கடைசியில் தந்தி தொலைக்காட்சி யில் வரவழைத்த பின்பே அசைந்து கொடுத்துத் தேர்வு முடிவை வெளியிட்டனர். ஆனாலும் பல மாணவர்களால் பள்ளிகளில் சேர முடியவில்லை.
இரண்டு வருடங்கள் தனித் தேர்வு எழுதுபவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் உதயச் சந்திரன் (அப்போது தொல்பொருள் துறை ஆணையாளராக இருந்தார்) முதல் பல அதிகாரிகள் கவனத்திற்கு (இப்போது உள்ள நந்தகுமார் வரைக்கும்) கொண்டு சென்றேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் மிகத் துல்லியமாக இந்த விசயத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி ஆச்சரியப்படும் விதமாக மாணவர்களை கண் கலங்க வைக்காமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு ஏதோவொரு மூலையில் நானும் செயல்பட்டுள்ளேன்.
மற்றொரு கிறுக்குத்தனமாக முடிவுகளை அதிகாரிகள் இந்த வருடம் எடுத்து உள்ளனர். ஓவர் ஸ்மார்ட் என்பதாக காட்டிக் கொள்ள மாணவர்களின் கல்வி வாழ்க்கை ஒரு வருடம் வீணாகக்கூடாது என்பதற்காக ஒரு காரியத்தை உருவாக்க அது எதிர்விளைவுகளை இந்த வருடம் உருவாக்கியுள்ளது.
தனித் தேர்வர்களுக்கு ஒரு வருடம் வீணாகக்கூடாது. அரசு கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு வரை (முதல் பருவம் பாடம் நடத்தி முடித்து விட்டார்கள்) சேர்க்கை நடந்து கொண்டு இருந்தது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 7ந் தேதி தேர்வு தொடங்கி தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.
ஆனால் முதல் ஆண்டு இன்னமும் தொடங்கவில்லை. எப்போது தேர்வு தொடங்குவார்கள் என்பதனை இந்த நிமிடம் வரைக்கும் அறிவிக்கவும் இல்லை.
பொன்முடி மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் தங்கள் பணியை விட மற்ற பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி செய்யக்கூடியவர்களாக இருப்பதால் அந்தந்த துறை அதிகாரிகள் தங்கள் பணியை செவ்வனே செய்து வருவதாகவே நான் கருதுகின்றேன்.
ஆனால் இன்னமும் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என்பதம் முழுமையாக தெளிவான முறையில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எவ்வித அறிவிப்புகளும் வருவதே இல்லை. இந்த ஆட்சி மட்டுமல்ல. சென்ற ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது.
கலைக்கல்லூரிகள் மொழிப் பாடங்களை வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். கண்ட கண்ட நாய்கள் கதைகள் எல்லாம் உள்ளே நிரந்தரமாக வைத்து உள்ளனர். தரம் என்பது இல்லவே இல்லை.
இறுதியாக ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன்.
12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அறிவிப்பு இன்று தான் வந்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் வருகின்ற 16 ஆம் தேதி அன்று தொடங்குகின்றது.
ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் இன்று அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது.
என்ன சொல்வீர்கள்? பள்ளிக்கல்வித்துறையின் ஒவ்வொரு முடிவுகளையும் தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். பல ஐந்தாண்டுகள் சிலபஸ் மாற்றாமல் இருந்ததற்குக் காரணம் அதுவே. அதுபோல கேள்வித் தாள் உருவாக்குவதில் அவர்கள் விருப்பம் பங்கு அதிகம் உள்ளது. அப்படித்தான் இன்று வரையிலும் நடந்து வருகின்றது. நான் சொன்ன வருடத்தில் பள்ளிக்கூடம் வழியாக எழுதிய மாணவர்களின் கேள்வித்தாள் மிக மிக எளிதாக இருந்தது.  காரணம் தனியார் பள்ளிக்கூட மாணவர்களும் பரிச்சை எழுதுகின்றார்கள். ஆனால் தனித்தேர்வர்கள் எழுதிய கேள்வித்தாள் நம்ப முடியாத அளவுக்கு கடினமாக வடிவமைத்து இருந்தார்கள். கல்லூரியில் கேட்பது போல சொந்தமாக கேட்டு இருந்தார்கள். காரணம் இதற்குப் பின்னால் பலரின் வணிக லாபம் இருந்தது என்பதனை பிறகு பலர் மூலம் தெரிந்து கொண்டேன்.


Wednesday, December 28, 2022

நான் மாட்டுக்காரன் நான் தான் திமுக குடும்ப கும்பலை எதிர்ப்பேன்

இங்கு திரையரங்க சங்கத் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் அவர்களுக்கு சொந்தமான அதி நவீன வசதிகள் அடங்கிய ஏழெட்டு தொகுப்பு போல உள்ள பல திரையரங்கம் மல்டிப்ளெக்ஸ் வளாகம் இங்கே உள்ளது. அதிக விலை. அதிக வசதிகள். மக்கள் விரும்பிச் செல்லும் அளவிற்குப் பராமரிக்கின்றார்கள்.

முக்கியமான விசேட தினங்களில் 24 மணி நேரத்தில் 23 காட்சிகள் நடக்கும். தனிப்பட்ட நபர்கள் பார்ட்டி போல வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
இதில் தான் வைகோ குறித்த ஆவணப்படத்தை அவர் மகன் வெளியிட்டு திமுக முதல் அவர் கட்சி சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். எவரும் திரையரங்கம் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வைகோ தான் வாழும் காலத்தில் தான் செய்த பாவம் அனைத்திற்கும் தற்போது தன் கண் எதிரே பார்த்து மனதளவில் நிச்சயம் புழுங்கிக் கொண்டு தான் வாழ்வார்.
மதிமுக கட்சி சார்ந்து தமிழகம் எங்கும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை காப்பாற்ற அரசியலுக்குத் தொடர்பே இல்லாத மகனைக் கொண்டு வந்தது தொடங்கி இன்று எவரை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினாரோ அவரிடம் கெஞ்சி ராஜ்ய சபா சீட் வாங்கி தன் இறுதிக் காலத்தைக் கூச்சமின்றி வாழும் வைகோ வின் குணாதிசயம் புதிதல்ல.
அவர் தொடக்கம் முதல் யாருக்குமே விசுவாசமாக இருந்தது இல்லை. அவர் பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. மனதளவில் சாதி வெறியர். அதீத கிறிஸ்துவப் பிரியர். மனதில் அடி ஆழத்திலிருந்து இந்து மதத்தை வெறுப்பவர். காரணம் இல்லாமல் காரியம் எதையும் செய்யவே மாட்டார். தனக்கு சாதகம் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். மோடி முன்னால் மட்டையாய் மடங்கி குனிந்து தீர்த்தம் வாங்கி அருந்தி விட்டு தமிழகம் வந்து மோடியே வந்து பார் என்று முழங்குவார். இது அவருடைய அடிப்படை குணாதிசயம்.

கருணாநிதி குறித்த அனைத்து விசயங்களையும் அவர்கள் குடும்பம் குறித்த அத்தனை விதமான அந்தரங்களையும் பொதுவெளியில் அதிகம் கொண்டு வந்தது வைகோ மட்டுமே.
பெரியார் வாதி என்று வெளியே சொல்லிக் கொண்டு தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏசுவின் ஊழியர்கள் என்று வெட்கமின்றிச் சொன்ன மனிதர்.

பைபிள் படிக்காமல் என்னால் தூங்கவே முடியாது என்று அறிவித்தவர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சோனியாவின் கைக்கூலியாக ரா உளவு அமைப்பின் கீழ் செயல்பட்டவர்.

தனக்குத் துணையாக திருமுருகன் காந்தி என்ற அக்மார்க் குற்றவாளியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு போராட்டத்தை நீர்த்துப் போக வைத்தவர்கள்.

பல இருட்டான விசயங்கள் உண்டு.

இப்போது கடந்த சில தினங்கள் பொது சிவில் சட்டத்தை நோக்கி ராஜ்ய சபா வில் முழக்கம் எழுப்பி இன்னமும் திருந்தாமல் வாழ்கின்ற வை கோபால்சாமி என்ற வைகோ ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டிய கோவில்பட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சு, கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி என்று தொடங்கி, தொடர்ந்து திருநெல்வேலி சுற்றிலும் கடைசியில் மார்த்தாண்டம் வரைக்கும் முழுமையாக தேசிய கட்சிகளை மட்டுமே ஆதரித்து வரக்கூடிய மனிதர்கள் இன்று வரையிலும் வாழ்கின்ற மக்களுக்கு வைகோ தன் காலத்தில் எதுவும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.
கருணா போல கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தன்னை ஆதரிப்பார்கள் என்று கனவு கண்டவர். நடக்கவே இல்லை. தன் சாதிக் காரர்கள் கூடத் தன்னை நம்பும் அளவுக்கு அவர் வாழவில்லை என்பது தான் நிஜம். தன் சகோதரர் ரவிச்சந்திரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் பெட்ரோல் விற்று சேர்த்த தொகை எத்தனை கோடி என்பதனை கட்சி சார்ந்த மற்றும் அவர் ஊர் சார்ந்த அத்தனை மக்களுக்கும் தெரியும்.
விடுதலைப்புலிகளின் இறுதிக் கட்ட அழிவுக்கு இவரும் ஒரு காரணம் என்பது முற்றிலும் உண்மையாகும்.
வைகோ பேச்சின் மூலம் சொல்லக்கூடிய அனைத்துக்கும் பின்னாலும் அவருடைய அப்பட்டமான பச்சை சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே இருக்கும்.

கருணாநிதி இவரை அடக்க உறவாடிக் கெடுத்தார்.

ஆனால் இவரோ பேசியே அழிந்தார்.

இவர் சென்ற பாதையில் தான் தற்போது திருமாவளவன் சென்று கொண்டு இருக்கின்றார். அழிவு உறுதி. இவரைப் போலவே பேர அரசியல் செய்த பிரேமலதா, மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் அப்புறப்படுத்தி விட்டால் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது பாஜக விற்கு நல்லதொரு அடிப்படைத் தளத்தை உருவாக்கி விடும் என்று நம்புகின்றேன்.

கோவில்பட்டி ஊர் சுற்றிலும் உள்ள பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அடிப்படை வாக்கு சதவிகிதம் இருக்கும் இப்பகுதியில் இனிவரும் காலங்களில் பாஜக விற்கு அடிப்படை கட்டுமானம் உருவாகும் என்றே நம்புகின்றேன்.
கோவில்பட்டியில் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சைக் கீழே இணைத்துள்ளேன்.
இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் அசிங்கத்தை மிதித்தது போலவே இருக்கப் போகின்றது.
அண்ணாமலை போன்ற இளைஞர்கள் இனி வரப்போகின்ற தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை அடைந்து கோட்டை கொத்தளத்தை ஆளும் சந்தர்ப்பம் வரும் சமயங்களில் ஓர் இடம் விடாமல் சுத்தம் செய்து மீண்டும் பூஜ்யத்தில் தொடங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.