Thursday, December 29, 2022

பள்ளிக்கல்வித்துறையின் முடிவுகளை தனியார் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள்

எடப்பாடியார் ஆட்சியில் இருந்த போது கடைசி இரண்டு வருடங்களில் கொரோனா ஒரு பக்கம் தாக்கியதைப் போலப் பள்ளிக்கல்வித்துறையில் தகுதியில்லாத அமைச்சர் இருந்த காரணத்தால் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் மனசாட்சியே இல்லாமல் செய்த காரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அமைச்சர் எதில் கையெழுத்துப் போட்டால் எத்தனை கோடி கிடைக்கும் என்பதிலேயே கடைசி வரைக்கும் இருந்தார்.

காரணம் எட்டாம் வகுப்பு முடித்து விட்டு நேரிடையாகப் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதக்கூடியவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாமல் வெளியே வந்து தனியாக எழுதக்கூடியவர்கள், இது தவிர தனியார் பள்ளிக்கூடங்கள் பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களை நகர்த்திக் கொண்டு வந்து விடுவார்கள். அனைத்து கட்டணங்களையும் வாங்கிக் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு நெருங்கும் போது ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வார்கள். அப்பா அம்மாவை வரவழைத்துப் பேசி உங்கள் மகன் நிச்சயம் தேர்ச்சி அடையமாட்டான். வெளியே தனியாக தனித்தேர்வு மூலம் எழுத வைத்து விடுங்கள் என்று சொல்லி விடுவர். யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகத் தானாகவே உடல்நிலை காரணத்தை முன்னிட்டு என் மகனைத் தனியாக எழுத வைத்துக் கொள்கின்றேன் என்று பெற்றோர்களிடம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். தமிழகத்தில் அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் இது கடந்த பத்தாண்டுகளாக அதிகம் நடந்து வருகின்றது.
காரணம் ஒருவர் தேர்ச்சி அடையாமல் இருந்தால் கூட நூறு சதவிகித தேர்ச்சி என்று ப்ளெக்ஸ் போர்டு வைக்க முடியாது அல்லவா?
இந்த பிரச்சனை என் கவனத்திற்குள் வந்தது.
காரணம் கொரோனா வந்த போது ஆல்பாஸ் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் நான் மேலே சொன்ன மூன்று வகையிலும் இருந்த மாணவ மாணவியர்கள் தனித் தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு உண்டு அரசு அறிவிக்க மிகப் பெரிய பிரச்சனை உருவானது. உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டு வெளியே வந்தவர்கள், பள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10,11,12 மூன்று வகுப்புகளுக்கும் தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்று அவசர கதியாக உத்தரவு இட்டனர்.
சொல்லி வைத்தாற் போல ஒன்றேகால் லட்சம் மாணவர்கள் எழுதியதில் பத்தாயிரம் பேர்களுக்கு அருகே தான் தேர்ச்சி பெற்றனர்.
அடுத்த வருடமும் இதே கொடுமை நடந்தது.
கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. பள்ளி மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் சென்றனர்.
எடப்பாடி ஆட்சி அள்ளிக்குவிப்பதில் தான் கவனம் செலுத்தினர். செங்கோட்டையன் அரசியல் என்பது கோபி பகுதியில் எழவு வீட்டுக்குச் சென்று தலையைக் காட்டுவது, திருமண வீட்டுக்குச் சென்று வாழ்த்துக் கூறுவது. இந்த இரண்டு மட்டும் தான். துறை குறித்தோ அறிவோ, நிஜமான அரசியல் குறித்த தரவுகளோ எதுவுமே தெரியாது.
தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலராக திரு. உதயச் சந்திரன் கொண்டு வந்த அனைத்து வகையான சீர்திருத்தங்கள் என்பது 16 வருடங்கள் கழித்து தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடந்த மாற்றங்கள் என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். காரணம் கருணாவும் சரி ஜெ வும் சரி மக்கள் எப்படி இங்கே இருந்தால் தங்களுக்கு ஓட்டளிப்பார்கள் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினார்கள்.
உதயச்சந்திரன் கொண்டு வந்த மாற்றங்கள் அனைத்தும் 75 சதவிகிதம் பள்ளிக்கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கியது.
தனித் தேர்வர்கள் அடையும் பிரச்சனை என்பது இறுதியாக தேர்வு முடிவுகள் அறிவிக்க தாமதம் ஆக்குவது என்கிற ரீதியில் இருக்க பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து அதிகாரிகளையும் அழைத்துப் பேசியும் ஒரு காரியமும் நடக்கவில்லை. கடைசியில் தந்தி தொலைக்காட்சி யில் வரவழைத்த பின்பே அசைந்து கொடுத்துத் தேர்வு முடிவை வெளியிட்டனர். ஆனாலும் பல மாணவர்களால் பள்ளிகளில் சேர முடியவில்லை.
இரண்டு வருடங்கள் தனித் தேர்வு எழுதுபவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் உதயச் சந்திரன் (அப்போது தொல்பொருள் துறை ஆணையாளராக இருந்தார்) முதல் பல அதிகாரிகள் கவனத்திற்கு (இப்போது உள்ள நந்தகுமார் வரைக்கும்) கொண்டு சென்றேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் மிகத் துல்லியமாக இந்த விசயத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி ஆச்சரியப்படும் விதமாக மாணவர்களை கண் கலங்க வைக்காமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு ஏதோவொரு மூலையில் நானும் செயல்பட்டுள்ளேன்.
மற்றொரு கிறுக்குத்தனமாக முடிவுகளை அதிகாரிகள் இந்த வருடம் எடுத்து உள்ளனர். ஓவர் ஸ்மார்ட் என்பதாக காட்டிக் கொள்ள மாணவர்களின் கல்வி வாழ்க்கை ஒரு வருடம் வீணாகக்கூடாது என்பதற்காக ஒரு காரியத்தை உருவாக்க அது எதிர்விளைவுகளை இந்த வருடம் உருவாக்கியுள்ளது.
தனித் தேர்வர்களுக்கு ஒரு வருடம் வீணாகக்கூடாது. அரசு கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு வரை (முதல் பருவம் பாடம் நடத்தி முடித்து விட்டார்கள்) சேர்க்கை நடந்து கொண்டு இருந்தது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 7ந் தேதி தேர்வு தொடங்கி தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.
ஆனால் முதல் ஆண்டு இன்னமும் தொடங்கவில்லை. எப்போது தேர்வு தொடங்குவார்கள் என்பதனை இந்த நிமிடம் வரைக்கும் அறிவிக்கவும் இல்லை.
பொன்முடி மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் தங்கள் பணியை விட மற்ற பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி செய்யக்கூடியவர்களாக இருப்பதால் அந்தந்த துறை அதிகாரிகள் தங்கள் பணியை செவ்வனே செய்து வருவதாகவே நான் கருதுகின்றேன்.
ஆனால் இன்னமும் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என்பதம் முழுமையாக தெளிவான முறையில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எவ்வித அறிவிப்புகளும் வருவதே இல்லை. இந்த ஆட்சி மட்டுமல்ல. சென்ற ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது.
கலைக்கல்லூரிகள் மொழிப் பாடங்களை வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். கண்ட கண்ட நாய்கள் கதைகள் எல்லாம் உள்ளே நிரந்தரமாக வைத்து உள்ளனர். தரம் என்பது இல்லவே இல்லை.
இறுதியாக ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன்.
12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அறிவிப்பு இன்று தான் வந்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் வருகின்ற 16 ஆம் தேதி அன்று தொடங்குகின்றது.
ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் இன்று அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது.
என்ன சொல்வீர்கள்? பள்ளிக்கல்வித்துறையின் ஒவ்வொரு முடிவுகளையும் தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். பல ஐந்தாண்டுகள் சிலபஸ் மாற்றாமல் இருந்ததற்குக் காரணம் அதுவே. அதுபோல கேள்வித் தாள் உருவாக்குவதில் அவர்கள் விருப்பம் பங்கு அதிகம் உள்ளது. அப்படித்தான் இன்று வரையிலும் நடந்து வருகின்றது. நான் சொன்ன வருடத்தில் பள்ளிக்கூடம் வழியாக எழுதிய மாணவர்களின் கேள்வித்தாள் மிக மிக எளிதாக இருந்தது.  காரணம் தனியார் பள்ளிக்கூட மாணவர்களும் பரிச்சை எழுதுகின்றார்கள். ஆனால் தனித்தேர்வர்கள் எழுதிய கேள்வித்தாள் நம்ப முடியாத அளவுக்கு கடினமாக வடிவமைத்து இருந்தார்கள். கல்லூரியில் கேட்பது போல சொந்தமாக கேட்டு இருந்தார்கள். காரணம் இதற்குப் பின்னால் பலரின் வணிக லாபம் இருந்தது என்பதனை பிறகு பலர் மூலம் தெரிந்து கொண்டேன்.


No comments: