Tuesday, November 29, 2011

அந்நியன் தரும் அல்வா துண்டுகள்


இந்த கட்டுரை 4 தமிழ் மீடியா தளத்தில் சிறப்பு கட்டுரையாக இரண்டு பகுதியாக வெளியிடப்பட்டது.

" பா.ஜ.க போன்ற மதவாத கட்சி வேண்டாம்.  எங்களுக்கு காந்திஜி சொன்ன மிதவாதமாக இருக்கும் காங்கிரஸே போதுமானது "

பிடிவாதமாக இரண்டாவது முறையாகவும் காங்கிரஸை அரியணையில் அமர வைத்த இந்தியர்களின் தலையில் விழுந்து கொண்டிருப்பது அடியல்ல. இடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

‘பொருளாதார புலி’ மன்மோகன் சிங்கின் சமீப பரிசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் 51 சதவிகித முதலீடு. 

அதாவது சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது 

சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் விவசாய அமைச்சருமான சரத்பவாரை ஒரு அறை தான் கொடுத்தார். ஆனால் மன்மோகன் சிங் 120 கோடி இந்தியர்களின் வயிற்றில் ஒரே அடியாக அடித்துள்ளார்.


மன்மோகன் சிங் பல விதங்களிலும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கிறார். எவருக்கும் புரிந்தபாடில்லை.

“எங்கம்மா தெருவோர காய்கறி கடை வச்சு தான் என்னை படிக்க வச்சாங்க” 

இனி எந்த நடுத்தர வர்க்க மாணவனும் சொல்ல முடியாது.  காரணம் இனிமேல் தெருவோர கடைகள் இருந்தால் தானே பிரச்சனை?

மொத்தமாக ஒரு ஊருக்கு ஒரு வால்மார்ட், கே மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்து விட்டால் நமக்கு பிழைக்க வழி பிறந்து விடாதா? 

ஏன் வேகாத வெயிலிலும், மழையிலும் துன்பப்பட வேண்டும்?

வேலை தேடுபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆத்மார்த்தமாக உதவி செய்ய இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் எதற்காகவும் அலைய வேண்டிய அவசியமிருக்காது. கருவேப்பிலையை கூட குளு குளு வசதி கடையில் போய் வாங்கி வரலாம். 

காரணம் நம் பொருளாதார மேதைகள் இந்த நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் தான் வாங்க வேண்டும் என்று சொல்லி இந்தியர்களின் வாயில் பாலூற்றி இருக்கிறார்கள்?

பன்னாட்டு நிறுவனங்கள உள்ளே வந்து விட்டால் நாட்டின் அந்நிய செலவாணி நிரம்பி வழியும்.  என்னவொன்று நாளுக்கு நாள் உள்ளூரில் பஞ்சம் பிழைக்க முடியாமல் நடுத்தர வர்க்கமும் அவதிபட, களவாணிகளும் பெருகிக் கொண்டே தான் இருப்பார்கள்.

இதைத்தான் நமது பொருளாதார மேதைகள் இப்போது செய்துள்ளார்கள்.

இந்த சில்லறை வியாபாரத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 20 கோடி பேர்கள். இதன் மூலம் 25 லட்சம் கோடி பணம் புழங்குகின்றது. இவர்களின் அன்றாடங்காய்ச்சி முதல் அகாயசூரர்கள் வரைக்கும் உண்டு. தெருமுனையில் வண்டியில் வந்து விற்பவர் முதல் அண்ணாச்சி நடத்தும் மொத்த கொள்முதல் வரைக்கும் உண்டு. 

இதில் தான் இப்போது காங்கிரஸ் அரசாங்கம் கை வைத்துள்ளது. கைக்கு ஓட்டுப் போட்டவர்கள் கண்ணீர் விட்டு கதற முடியாது. 

2014 வரைக்கும் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஜனதா அரசாங்கம் இருந்த போது விரட்டியத்த பெப்ஸி கோக் நிறுவனங்களை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றவர்களும் நம் தலைவர்களே.  ஆனால் இவர்கள் தான் இப்போது ஆளுக்கொரு பக்கமாய் நின்றுகொண்டு முதலைக் கண்ணீர் விடுகிறார்கள். இப்போதல்ல எப்போதுமே இந்தியாவில் ஒன்றல்ல? ஓராயிரம் பூதங்கள் உண்டு. ஆனால் மன்மோகன் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு பூதங்கள் அத்தனைக்கும் வலிமையான பலம் கிடைக்க ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே வந்து தங்கள் சேவைகளை இந்தியாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னால் பெயரளவில் பெப்ஸி,கோக் குளிர்பானங்கள் இருந்தது.  ஆனால் இன்றோ இதுவொரு கௌரவம் சார்ந்த விசயம் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.  தொடக்கத்தில் மூன்று ரூபாய்க்கு கடையில் கிடைத்தது.  அவ்வாறு விற்றால் கடைக்காரருக்கு 80 பைசா கிடைக்கும்.  ஆனால் இன்று அதன் விலை 12 ரூபாய். 

3000 அடிக்கு மேலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்ட நம்முடைய நிலத்தடி நீரை எடுத்து ஜாலக்கு வித்தை சேர்த்து இன்று நாம் 12 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  விளம்பரங்கள் செய்யும் மாயவித்தைகளால் நாமும் மதிமயங்கி நாகரிக மனிதராக நம்மை காட்டிக்கொண்டிருக்கிறோம். 

எல்லா வியாபாரிகளும் லாபத்தை நோக்கி தானே ஓடுவார்கள்?

இப்போது தமிழ்நாட்டில் தயாராகும் ஒரு சிமெண்ட் மூட்டை (50 கிலோ) யின் விலை ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.  ஆனால் இதன் லாபத்தோடு கூடிய அடிப்படை விலையென்பது இதில் பாதிக்கு பாதி.  கடந்த முறை திமுக அரசாங்கம் விலை குறைப்பை வலியுறுத்திய போதும் எவரும் குறைக்கத் தயாராய் இல்லை என்பது தான் இதில் மிகப் பெரிய ஆச்சரியம்.  அடுத்த ஜெ அரசாங்கமும் வந்து விட்டது.  ஆனால் அதே விலை.  காரணம் அரசியல்வாதிகள் போகும் கட்டிங் என்றுமே நிரந்தரம்.

இதே சிமெண்ட் விலை பக்கத்து மாநிலத்தில் வேறொரு விலை. அங்கிருந்து இங்கே கொண்டு வர முடியாத அளவுக்கு சிண்டிகேட் வைத்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்குமதி சிமெண்ட் என்பது இன்னமும் மலிவானது.  யாருக்கு பாதிப்பு?.  

விலை உயர்வால் கதறியழுவது திருவாளர் பொதுஜனமே.

இது சிமெண்ட் துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலுமே இது போன்று இந்திய தொழிலதிபர்கள் அவரவர்களுக்கு வசதிப்படி சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப் போகும் சிண்டிகேட் என்பது இவர்களின் டவுசர் கழன்று போய்விடும் அளவுக்கு இருப்பது தானே முறையாகும். அது தான் இனிமேல் நடக்கப் போகின்றது. இந்திய தொழில் அதிபர்களுக்கே சவாலாக இருந்தால் சாதாரண பொதுஜனத்தின் பாடு?

பன்னாட்டு நிறுவனங்கள் அதிலும் சற்று வித்யாசனமானவர்கள். 

லாபத்தை போலவே லாபத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்களையம் ஒழித்துக் கட்டுவது. 

இன்று தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த காளிமார்க், டொரினோ போன்ற உள்நாட்டு குளிர்பான தயாரிப்புகள் ஏறக்குறைய இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் பெப்ஸியும், கோக்கும்,  இவர்கள் கொடுக்கும் குளிர்சாதன பெட்டி தானே நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியதோடு மற்றொரு காரியத்தையும் தவறாமல் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளூர் குளிர்பான பாட்டில்களையும் கைப்பற்றி உடைத்து நொறுக்கிக் கொண்டே வர இன்று பாட்டில் இல்லாத உள்ளூர் நிறுவனங்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இத்தனை நாளும் மறைமுகமாக பலவகையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி முன்வாசல் வழியாகவே உள்ளே வரலாம் என்று மன்மோகன் சிங்கிள் மேன் ஆர்மியாக செயல்படுத்தி சாதித்திருக்கிறார்.

"உலகத்தோடு ஒத்து வாழ்" என்ற முதுமொழியை கடைபிடிப்பதில் மன் மோகன் சிங்கிற்கு முதல் தகுதியுண்டு.  காரணம் இந்திய பிரச்சனைகளை தீர்ப்பதற்கே வருடத்தில் பாதி நாட்கள் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றிக்  கொண்டிருக்கிறார்.

 பறந்து பறந்து தாக்குவதை படத்தில் தான் பார்த்துருப்பீங்க.  நம்ம பிரதமரும் கூட அப்படித்தான்.  இந்தியப் பிரச்சனைகளையே விமானத்தில் தான் பேட்டியாக கொடுத்து விட்டு அடுத்த நாட்டுக்கு பறந்து போய்விடுகிறார்.

இவர் மூளையில் உதித்த ஒவ்வொரு கொள்கைகளும் எந்த இந்தியனும் மறக்க கூடாத ஒன்றாகும்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டியதில்லை.  15 நாளைக்கு ஒரு முறை தங்கள் விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் விளைவாக காங்கிரஸ் முதன் முறையாக பதவிக்கு வந்தது முதல் இன்று வரைக்கும் பெட்ரோல் விலை நூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது.


எதிர்கால வளமான இந்தியாவிற்கு மின்சாரம் அவசியமாகும். எனவே கூடங்குளம் திட்டம் இந்தியாவிற்கு தேவை. ஆனால் இதற்கு தேவைப்படும் தரமான யுரேனியம் எளிதில் கிடைக்கும் கனடாவை விட்டு அமெரிக்கா மூலம் பெறுவதே எப்போதும் சிறப்பானதாகும். தேவைப்படும் யுரேனியமும் ஒரே சமயத்தில் அமெரிக்கா கொடுக்காது.  அவ்வப்போது நடைபெறும் திட்ட செயலாக்கத்தின்படி வழங்கப்படும். எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு.  ஆனால் நிர்வாக கட்டுப்பாடு எப்போதும் அமெரிக்காவின் கைகளில் இருக்கும். அமெரிக்காவுக்கு திடீரென்று சந்தேகம் வந்தால் எவர் வேண்டுமானாலும் எந்த அனுமதியின்றி இங்கே வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.  சந்தேகம் என்றால் அப்துல்கலாமை தேட மாட்டார்கள். இழுத்து மூடிவிட்டு போய்க்கிட்டே இருப்பார்கள்.

முன்பேர சந்தைக்கு அனுமதி (ஆன் லைன் வர்த்தகம்) கொடுத்தன் விளைவாக நாட்டில் உள்ள அடிப்படையான அத்தனை பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி விலைவாசி உச்சத்தில் போய்விட்டது.  குறிப்பாக இந்த முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) கொடுத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 23 நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது. 


இந்த நிறுவனங்கள் அதிகளவில் தங்கம், வெள்ளி போன்ற சந்தையிலும் அடுத்தபடியாக விவசாயம் சார்ந்த விளைபொருட்களிலும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்கும் இந்த நிறுவனங்களின் செயல்பாடு 99 லட்சத்து 16 ஆயிரத்து 52 கோடி ரூபாய். ஏறக்குறைய 100 லட்சம் கோடியை அட்டகாசமாக கடந்துள்ளது.  பாடுபட்டு உழைப்பவன் ஒரு பக்கம்.  ஆனால் ஏதோவொரு மூலையில் குளிர்சாதன அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நோகாமல் நோம்பி கொண்டாடுபவர்களை உருவாக்கி விட்டவரும் நம்முடைய பொருளாதாரப் புலியே. 

ஆன் லைன் வர்த்தகத்தை அனுமதித்ததே போதே இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. 

உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு இங்கே கொட்டாம்பட்டியில் விளையும் பயிறுக்கு விலை நிர்ணயம் செய்யும் கொடுமை இந்த ஆன் லைன் யுக பேரத்தில் நடந்து கொண்டிருப்பதால் விளைவித்தவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் விரலை சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு வருடத்திலும் எந்த துறையில் பற்றாக்குறை வரும் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு பேரம் மூலம் விலையை நிர்ணயம் செய்யும் போது எல்லாமே தலைகீழாகப் போய்விடுகின்றது. 

இந்த யுக பேரங்களுக்கு பின்னால் இருக்கும் அத்தனை பேர்களும் வெளிநாட்டு முதலீட்டார்களே.  

அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள். எவருக்கோ லாபமாக கடல் கடக்கும் 

இந்த லாபங்கள் நாட்டில் விலைவாசியாக மாறி சாதாரண மனிதன் தலையில் வந்து விழுகின்றது.

நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரைக்கும் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய முதலீடுத் தொகை 2,550 கோடி டாலர். (1 லட்சத்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்)  கடந்த 2010 ஆம் ஆண்டை விட 41 சதவிகிதம் அதிகம். ஆனாலும் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியை நிறுத்தமுடியவில்லை.  காரணம் நவம்பர் 22 அன்று வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்கன் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 52.30.

ஏனிந்த குளறுபடி?

இன்றைய சூழ்நிலையில் இந்தியா வைத்துள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 31,960 கோடி டாலர் (15 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்) 

நான் வளர்கிறேனே அம்மா என்பதாக நம் நாட்டின் கடன் தொகையும் மாதத்திற்கு மாதம் எகிறிக் கொண்டேயிருகிறது.

அமெரிக்காவில் ஓபாமா பதவியேற்றதும் வீட்டு வசதி கடனில் சிக்கிய வங்கிகள் பட்டபாடுகள் உலகம் முழுக்க எதிரொலித்தது. 

அமெரிக்க வங்கிகளுக்கான தர வரிசை குறியீட்டை மாற்றியதும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தும்மலும் சளியும் வந்த கதை நம் அணைவருக்கும் தெரிந்தது தானே.  அதைப்போலவே இந்தியாவிலும் நடந்தது. 

ஆனால் எத்தனை பேர்களுக்கு தெரிந்துருக்கும்?. 

இயல்பாகவே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் அணைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால் வங்கியில் போடப்படும் பணமும் கிடைக்கும் சொற்ப வட்டி என்றாலும் இன்று வரையிலும் இந்தியர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மேல் உள்ள மோகம் குறைந்தபாடில்லை. 

ஆனால் வங்கிகளின் செயல்பாடுகள் அத்தனையும் வருடத்திற்கு வருடம் வராக்கடனாகவே போய்க் கொண்டிருக்கிறது.

உலகளவில் இந்தியாவில் உள்ள வங்கியின் தரமென்பது ‘எத்தகு இடர்பாடுகளையும் தாண்டி வரக்கூடியது’ என்கிற நிலையில் சர்வதேச சமூகம் கணக்கில் வைத்திருந்தது. 

2004 ஆம் ஆண்டு மூடிஸ் நிறுவனம் பி.ஏ.ஏ 3 என்ற தரக்குறியீட்டை வழங்கியது. ஆனால் வருடந்தோறும் வசூலிக்க முடியாத கடன்களின் அளவை வைத்து அண்மையில் இந்த குறியீட்டை ஒரு படி குறைத்து ‘இடர்பாடு காண வாய்ப்புள்ளதாக’ மாற்றியுள்ளது. சென்ற செப்டம்பர் வரைக்கும் வசூலிக்க முடியாத கடன் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தொகையென்பது 1.07 லட்சம் கோடி.

நம்முடைய தலைவர்கள் சொல்லும் மற்றொரு கருத்தையும் இப்போது எடுத்துக் கொள்வோம். 

உற்பத்தி அளவுக்கும் நம்முடைய தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.  பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் இரண்டு வகையில் இந்தியாவிற்கு நல்லது.  

ஒன்று இந்திய பண் மதிப்பின் நிலை ஸ்திரமாக இருக்கும். 

அதே சமயம் இந்திய நுகர்வோர் சந்தையில் பணப்புழக்கம் இன்னும் அதிகமாகும். இதற்கு மேலாக தேவைப்படும் பொருட்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கே வந்து சேரும் என்பதே. 


ஆனால் ஒரு கிராமத்து விவசாயி தனக்கு அருகே உள்ள சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் லாபமோ நட்டமோ என்று நடையைக் கட்டி விட்டு வந்து விடலாம்.  ஆனால் நிறுவன பாங்கில் செயல்படப் போகும் பன்னாட்டு சட்டதிட்டங்கள் எத்தனை விவசாய சிந்தனைகளை மாற்ற முடியும்?

சில்லறை வணிகமென்பது அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல.  கிராமத்து மக்களின் நலவாழ்வு என்று தொடங்கி, நாட்டின் உணவு பாதுகாப்பு வரைக்கும் வந்து நிற்கின்றது.  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலாச்சார பாதுகாப்பு முதல் அந்தந்த ஊர் அமைதி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கக்கூடியது. இயல்பாகவே இந்திய கிராம மக்கள் அமைதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இது போன்ற அடிப்படை கிராமங்களின் மேல் கையை வைத்து விட்டால் வேறென்ன வேண்டும். 

தொடக்கத்தில் 30 சதவிகிதம் வாங்க வேண்டும் என்று உத்திரவு போட்டுள்ள அரசாங்கத்தின் காற்றில் பறக்கும்.  காரணம் இங்குள்ள விலையை விட சீனப் பொருட்கள் குவியத் தொடங்கும். 

வேறென்ன வேண்டும்? 

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் பருத்தி விவசாயத்தை ஒழித்துக் கட்டியதைப் போலவே இப்போது சில்லறை வணிகத்தின் மூலம் இந்திய சமூக கட்டமைப்பை செல்லறிக்கப் போகின்றார்கள்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொன்ன காந்தி தாத்தா சொன்ன வாசகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எட்டவில்லை போதும். ஆனால் இவர்களின் நோக்கம் அத்தனையும் கிராமப் பொருளாதரத்தை அழிப்பதிலே குறியாகவே இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம் தான் இப்போது முடிவெடுத்துள்ள அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி. 

கிராமப்புறங்களும் விவசாயமும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.  மாற்றுப் பொருளாதார சிந்தனைகளைப் பற்றி செயல்படுத்த வேண்டாம்.  குறைந்தபட்சம் அதை யோசிக்கக்கூட நம் தலைவர்களுக்கு மனமில்லை.  கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய நடுத்தரவர்ககத்தினைப் போலவே ஏறக்குறைய இந்தியாவும் இப்போதுள்ள சூழ்நிலையில் இருக்கிறது. 

பொருளாதார கொள்கைகளை விவசாயம் சார்ந்து மாற்றியமைக்காத வரை இந்தியாவால் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீள்வது சாத்தியமேயில்லை.


இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க கொள்கைகளை தீர்மானிப்பவர்கள் கார்ப்ரேட் கணவான்களே.  இது பணம் படைத்தவர்களுக்கான உலகம். உண்பது, குடிப்பது முதல் அணியும் உடைகள் வரைக்கும் எவரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகின்றது. 

அதிலும் இந்திய அரசியல் என்பது அடிவருடிகளின் உலகமாக இருப்பதால் வெற்றிகரமாக இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற தகுதியை நான்காவது ஆண்டாக முகேஷ் அம்பானி (2,260 கோடி டாலர்) யும், இரண்டாவது இடத்தில் இரும்பு மனிதர் ( என்ன பட்டம்டா சாமி?) லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) மூன்றாவது இடத்தில் அசீம் ப்ரேம்ஜி (1,300 கோடி டாலர்) பெற்றுள்ளனர்.

இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்.  

நம்முடைய நிதியமைச்சர் பிரணாப் இதைப் பற்றி தெளிவாகவே சொல்லியுள்ளார். 

“எந்த அரசாங்கமும் தொழில் அதிபர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் “ 

ஆனால் இவர்களைப் போன்ற இந்தியாவில் உள்ள கார்ப்ரேட் கணவான்கள் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன்களைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் வாயே திறப்பதில்லை. உலகில் தற்போதும் பெட்ரோல் முதலான பல பொருட்களுக்கு டாலர் அடிப்படையிலான வியாபாரமே நடந்து வருவதால், இந்தியா தன்னுடைய டாலர் கையிருப்பைக் குறைக்கும்பட்சத்தில், வரும் காலத்தில் இந்தியாவில் எரிபொருள் முதலான வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறும். இது இந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக சிதைக்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்த பொருளாதார கொள்கையினை சீரமைக்காமல் இந்தச் சரிவிலிருந்து இந்தியா மீள்வது கடினம்.  நம்மை விட லஞ்சம் ஊழல் எண்ணிக்கையில் 86 நாட்கள் முன்ணணியில் இருக்கிறார்கள். 

சர்வதேச நிறுவனம் ஒன்ற கணக்கெடுத்துள்ளது.  

இந்தியா 87வது இடத்தில் உள்ளதாம். அந்தஅளவுக்கு சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்க.

நடப்பு (2011 - 12) நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரைக்கும் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 3 லட்சம் கோடி. 

உங்களுக்கு வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்க. 


அதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக உள்ளே வரப்போகிறார்களே?  

நமக்கு கூட்டிப் பெருக்குற வேலை கூட கிடைக்காத என்ன? 

நம்முடைய பொருளாதார மேதைகளின் கூட்டல் கணக்கில் கடைசியாக நமக்கு கிடைக்கப் போவது இந்த பெருக்கிற வேலை தானே?. 

சற்று முன் கிடைத்த செய்தி 

எக்காரணம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். 


கடைசி காலத்தில் இவருக்கு பிடித்துள்ள அமெரிக்கா பைத்தியத்தை எந்த மாரியத்தா கோவிலில் கொண்டு போய் குலையடித்து திருத்த முடியம்?


கவலைவிடுங்க ஸ்வீட் எடுங்க.  கொண்டாடுங்க.

அடுத்த ஆட்சி வரும்.

இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பிக்கை வைப்போம்.  

Tuesday, November 22, 2011

விழா தரும் போதை


விழாக்கள் என்பது உறவுகளை ஒரே இடத்தில் கூடுவதற்காகத் தான் இருந்து வருகின்றது. அது ஊர் சம்மந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட குடும்ப விழாக்களாக இருந்தாலும் தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல மொத்த சமூகத்திலும் இப்படித்தான் இருந்தது.  ஆனால் இப்போது விழாக்களின் முகம் முற்றிலும் மாறிவிட்டது. 

ஊரில் திருவிழா என்றால் அது உற்சாகம் பெருகெடுத்து ஓடும் நாள். 


ஆன்மீகம் சம்மந்தப்பட்டதாக மட்டுமல்ல அத்தனை உறவுகளையும் இதன் காரணமாக ஒன்று சேர்க்க உதவியது. தமிழர்களின் கலை, பண்பாட்டு, கலாச்சாரத்தையும் வளர்க்க உதவியது. தெருக்கூத்து, நாடகம் என்று தொடங்கி அடித்தட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க உதவியது.  

அய்யனார், மாடசாமியை நட்டு வைத்து கல் வடிவத்தில் வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கற்சிலை அறிமுகமாக அத்தனையும் மாறத் தொடங்கியது. இதில் தெய்வங்கள் உள்ளே நுழைந்து மனிதர்களின் எண்ணங்களை மாற்றியது கற்சிலையில் புகுத்தபட்ட சாஸ்திர சம்பிரதாய ரூபங்கள் மனிதர்கள் அணைவரும் சமம் என்பதையும் மாற்றியது. 

கோவில் கட்ட உதவியர்கள் அத்தனை பேர்களும் உழைக்க பிறந்தவர்கள் என்று மாற்றம் பெற வீதியில் நின்று வணங்கி அவர்களின் அடிப்படை கலாச்சாரத்தையே வேறறுத்து வெட்ட வெளியில் நிறுத்தியது.  மன்னர்கள் காலம் முதல் இன்று ஆட்சி செய்யும் மடையர்கள் காலம் வரைக்கும் விழாக்கள் என்பது தனிமனித துதிகளைத்தான் முன்னிறுத்துகிறது.  சமூகம் நம்மை புறக்கணித்து விடும் என்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்களும் ஆட்டுமந்தையாக இதன் வழியே வந்து கொண்டேயிருகிறார்கள்.

அமைதியை உருவாக்க வேண்டிய தத்துவங்களில் அவரவர்களின் சுயநலங்கள் கலந்து போக இன்றைய சூழ்நிலையில் மொத்தமாக மாறி வன்முறைகளை வளர்க்க உதவும் ஒரு களமாக மாறியுள்ளது. மதம் என்ற சொல்லில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத காரணத்தால் அதுவே பிரிந்து பிரிந்து இன்று ஜாதியாக மாறியுள்ளது.  அதுவும் இன்றும் பிரிந்து கொண்டே செல்கின்றது.  ஒவ்வொரு நிலையிலும் யாரோ ஒருவர் இதை தெளிவாக புரிந்து கொண்டு குறிப்பிட்ட மக்களை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு மெதுமெதுவாக இறுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.  புரிந்து கொள்ள முடியாமலே அவர்களை பின்பற்றி சென்று கொண்டேயிருக்கிறார்கள். 

எந்த நாளும் கொண்டாடப்பட வேண்டிய நாளாக இருக்க வேண்டியதே என்பதை உணர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் நாம் குறிப்பிட்ட நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.  அடுத்த மாதம் மகளுக்கு பிறந்த நாள், அடுத்த வாரம் மனைவிக்கு பிறந்த நாள் என்று ஒவ்வொரு நாளுக்கும் தவமாய் தவமிருக்கின்றோம். குறிப்பிட்ட நாளில் அதீத அன்பும் தொடர்ந்து வரும் நாட்களில் புரிதல் இல்லாத வாழ்க்கையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நாகரீகம் தான் நல்ல நாகரிகம்?

பிறந்த நாள், இறந்த நாள், நினைவு நாள் என்று போய்க் கொண்டிருந்த இந்த கொண்டாட்டங்கள் இன்று அப்பா தினம், அம்மா தினம் என்று மாறி ஒவ்வொன்றுக்கும் ப்ளக்ஸ் போர்டு கலாச்சாரமாக மாறியுள்ளது.  இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேவை என்பதாக கருதிக் கொண்டு நாம் நம்மை அவசரமாக மாற்றிக் கொள்ள ரொம்பவே அவசரப்படுகின்றோம். அடுத்த சந்துக்கு அரசியல்வாதிகள் வருவதைக்கூட அலங்காரமாக காட்டிக் கொள்ள விரும்புவதால் தினந்தோறும் கொண்டாட்டங்களின் காலமாக உருமாறியுள்ளது. நாமும் நம் அளவுக்கு அவர்களுடன் போட்டி போடவே விரும்புகின்றோம்.

ஆனால் தங்களுடைய பிறந்த நாளை அரசியல்வாதிகள் வசூலிக்கும் நாளாக மாற்றவிடுவதில் வல்லவர்கள். ஆனால் எந்த அதிகாரி வர்க்கமும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.  அதற்குப் பதிலாக குழந்தைகளின் பிறந்த நாள், புதுமனை புகுவிழா என்று தொடங்கி ஒவ்வொன்றுக்கு ஒரு காரணத்தைத் தேடி கொண்டாடும் மனநிலைக்கு மாறியள்ளார்கள். 

சமீபத்தில் ஒரு மாசுகட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி வேறெரு வகையில் ஒரு சிறப்பான நாளை கொண்டாடினார். அவரின் மூத்த மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்து இருந்தார்.  இதன் மூலம் வசூலித்த தொகை உத்தேசமாக திருப்பூர் சாயப்பட்டறை சங்கங்கள் மூலம் வசூலித்த தொகை மட்டும் 13.25 லட்சம். 

இது தவிர மற்ற தங்க காசு சமாச்சாரங்கள் தனி. மொத்தத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு.  எந்த காரணமாக இருந்தாலும் அத்தனைக்குள்ளும் பணம் உண்டு. உங்கள் தகுதியை நிரூபிக்க இது போன்ற விழாக்கள் உதவும்.  நீங்கள் செல்லும் இடங்கள் உங்கள் சமூக அந்தஸ்த்தை மற்றவருக்கு புரியவைக்கும்.  சமூகத்தில் உங்கள் பழக்கவழக்கங்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியவர்களுக்கும் உணர்த்தும்.

அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணத்துக்கு முந்திய வருடத்தில் பிள்ளையார் பட்டியில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அறுபதாம் வயது திருமண நிகழ்ச்சியை இராமேஸ்வரத்தில் நடத்தினார்கள். அநேகம் பேர்கள் ஆசிர்வாதம் வாங்கினார்கள். அம்மா அன்று கூட அமைதியாகத்தான் இருந்தார். காரணம் நான் பார்த்தவரைக்கும் அம்மாவின் அந்த அளவுக்கு அதிகமான அமைதியே அப்பாவின் முரட்டுத்தனத்தை ஈடு செய்வதாக இருந்தது. அடங்கியே வாழ்ந்தவருக்கு சமூகம் சூட்டியிருந்த பெயர் சௌந்தரம் அமைதியானவள் என்பதே. ஏறக்குறைய மூளை ஒரு குறிப்பிட்ட விசயத்திற்கு பழகி விட்டால் இது இறப்பது வரைக்கும் மாறாது போல. 

இப்படியே பழகிப்போனவரின் வாழ்க்கை இன்று வரைக்கும் தைரியத்தின் அருகே கூட செல்லமுடியாமல் ரொம்ப வேகப்படாதடா என்பதே அவர் பேசும் தராக மந்திரமாக உள்ளது. 

பலமுறை யோசித்துள்ளேன். 

ஒவ்வொரு வருடத்தில் வரும் அவரின் திருமண நாளும் அம்மாவுக்கு தெரியுமா? அன்றாவது அவர்கள் இருவருக்கும் உண்டான புரிதலை மேம்படுத்துவார்களா? என்று யோசிப்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. 

நகர்புற வாழ்க்கையில் தான் இந்த கொண்டாட்டங்கள் பெரிதாக எண்ணப்படுகின்றதோ என்று நினைத்துக் கொளவ்துண்டு. ஒருவரின் பிறந்த நாள் முக்கியம்.  அதைவிட அவரின் வயதும் அதற்கேற்ற எண்ண வளர்ச்சியம் அதைவிட முக்கியம்.  ஆனால் தற்போது இவை முக்கியமல்ல.  இந்த நாளை எப்படி எங்கே கொண்டாடுவது? என்பது தான் மிக முக்கியமாக இருக்கிறது.  கவலைக்கு ஒரு சரக்கு.  உற்சாகத்திற்கு மற்றொரு சரக்கு. 

மொத்தத்தில் நுகர்வு கலாச்சாரத்தில் மனிதனே ஒரு கடைச்சரக்கு தானே.

குழந்தைகளின் பிறந்த நாளைப் போல வளர்ந்தவர்கள் கொண்டாடப்பட வேண்டிய நாள் திருமண நாள்.  காரணம் இரு வேறு துருவமாக எங்கங்கோ பிறந்த வளர்ந்து, எண்ணங்களாலும் செயல்களாலும் மாற்றுக் கருத்துக் கொண்டு நாம் இனி இணைந்தே வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சேரும் பந்தம் இந்த திருமணம்.  சமகாலத்தில் எந்த அளவுக்கு இதற்கு மதிப்பு இருக்கிறது என்பதை விட இந்த உறவுக்கு நாம் எப்படி மதிப்பளிக்கின்றோம் என்பதில் தான் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கின்றோம். 

நம்மால் சிலவற்றை மாற்றிவிட முடியாது என்பது எத்தனை உண்மையோ நாம் பலவிசயங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே. 

நுகர்வு கலாச்சாரத்தை நமது கலாச்சாரமாக நம்மை மாற்றிக் கொள்ளும் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய அடிப்படையான கலாச்சாரம் மெதுமெதுவாக செல்லறித்துக் கொண்டிருக்கிறது.  மகன் ஒரு பக்கம். மகள் வேறொரு பக்கம்.  விருப்பத்தை நிறைவேற்றாத கணவன்,. வரவேற்க விரும்பாத மனைவி. 

நான்கு முனை சுவர்களைப் போல யாருக்கு யார் உறவு? என்பதாக மாறியுள்ளது. 

அப்பா,கணவன் என்ற பாத்திரத்திற்குள் தேங்கிய தண்ணீராக கண்ணீருடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடித்தே அழிப்பவனை அன்றாடம் சமாளித்து ஜெயித்தாலே இன்றைய சூழ்நிலையில் பல பெண்களுக்கு தினந்தோறும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. 


நினைத்து அடைந்தால் சமூக அங்கீகாரம்.  இல்லாவிட்டால் பிழைக்கத் தெரியாதவன் என்கிற மாயவலைக்குள் சிக்கி நமக்கு என்ன தேவை என்பது கூட தெரியாத அளவுக்கு மனரீதியான உளைச்சலுடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

பரஸ்பரம் வாழ்த்துகளை கூட நம்மால் பரிமாறிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.  நீண்ட நேரம் எவருடனும் பேச முடியவில்லை. அவசரமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். பல சமயம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகின்றது.  பேசினாலும் அர்த்தம் இல்லாதவைகள் தான் உரையாடலில் வந்து விழுகின்றது.  

தெளிந்த நீராக வெளியே தெரிந்தாலும் கசடுகளை மறைத்துக் கொண்டே வாழ பழகிக் கொண்டிருக்கின்றோம்.  

Wednesday, November 09, 2011

''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை; யாருக்கும் மனசாட்சியுமில்லை!'' அற்புதம் அம்மாள் நேர்காணல்

07 நவம்பர் 2011, 22:22 க்கு Samanilai Samudhayamஆல்


''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;
யாருக்கும் மனசாட்சியுமில்லை!''

அற்புதம் அம்மாள் நேர்காணல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வழியாகவும் நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்.

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் The Great Mother என்று பாராட்டப்பட்ட அவர், பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வாரத்தில் ஒருநாளேனும் தனது மகனைக் காண சிறைக்கூடம் செல்கிறார். தூக்குக் கயிற்றின் நிழலில் வாடும் தனது மகனுக்காக இந்தத் தாய் சந்தித்த வேதனைகளையும், கண்ணீர்க் கதையையும், நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இது வெறும் நேர்காணல் அல்ல; கடந்த 20 ஆண்டுகளாக மகனுக்காக ஒரு தாய் நடத்திவரும் போராட்டத்தின் வரலாறு.

சந்திப்பும் உரையாடலும் : அனுஸ்ரீ

''விசாரணை நடத்திவிட்டு மறுநாளே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்ததன் பேரில், 1991 ஜூன் 11 ஆம் தேதி நீங்களும் அப்பாவும் சேர்ந்துதானே பேரறிவாளனை போலீஸிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால், அதன் பிறகு போலீஸ் அவரைக் கைது செய்ததாக பத்திரிகைச் செய்திகள் வந்தன. உண்மையில் அன்று என்னதான் நடந்தது?

ஜோலார்பேட்டையில் வசிக்கும் மிகச் சாதாரண குடும்பம் எங்களுடையது, எனது கணவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு அன்புமணி, பேரறிவாளன் (அறிவு), அருட்செல்வி என மூன்று பிள்ளைகள்.

1991 இல் எலக்ட்ரானிக்கில் டிப்ளமோ பெற்றபின், பார்ட் டைம் என்ஜினியரிங் படிக்க, அறிவு சென்னை சென்றான். எங்கள் குடும்பம் திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் தி.க.வின் சென்னை அலுவலகத்தில் அவன் தங்கி, விடுதலை நாளிதழில் வேலை பார்த்து வந்தான்.

1991, மே மாதம் 21 ஆம் தேதி நாட்டை உலுக்கிய அந்த துயரச் சம்பவம் நடந்தது. - ராஜீவ்காந்தி படுகொலை.  நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; மகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் குடும்பத் திற்கும்கூட அந்த நாள்தான் ஒரு துயர நாள் என்று அன்றுவரை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

1991, ஜூன் பத்தாம் நாள் இரவு 12 மணி இருக்கும்; முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. யாரோ கதவைத்  தட்டும் சத்தம் கேட்டு நாங்கள் திறந்து பார்த்தபோது, வெளியே போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்தனர். ''நாங்க சென்னையிலிருந்து வர்றோம். உங்க வீட்டை சோதனையிட வேண்டும்'' என்றனர். இதைக் கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம். ''இந்த நடு ராத்திரியில எங்க வீட்டை சோதனை நடத்த வேண்டிய தேவை என்ன?'' என்று கேட்டபோது, உங்க வீடு மட்டுமல்ல; ஈழ ஆதரவாளர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறோம்'' என்று பதிலளித்தனர்.

முதலில் அவர்கள் டிவி மேலிருந்த பிரபாகரன் படத்தை எடுத்துப் பார்த்தனர். பிறகு எனது கணவரை விசாரித்தனர். அவருக்கு வந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் பரிசோதித்தனர். அதில் பாக்கியநாதன் என்பவரின் கடிதத்தை நீண்டநேரம் ஆய்வு செய்தனர். பின்னர் ''பாக்கியநாதனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு'' என்று கேட்டனர். திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுக்கவரும் சுபா சுந்தரம் என்பவரது நண்பர் என்ற முறையில் பாக்கியாநாதன் எங்களுக்கு அறிமுகமானார். மேலும், சுபா சுந்தரம் சொல்லி தான் பாக்கியநாதனுக்கு ஓர் அச்சகம் இருக்கிறது என்ற செய்தி எங்களுக்கே தெரியும்'' என்றோம்.

எனது கணவர் கவிதைகள் எழுவார். அந்தக் கவிதைகளை நான் பதிப்பித்து வெளியிடுகிறேன் என்று அவரேதான் எங்களிடம் கேட்டார். அன்றுவரை ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியின் அண்ணன்தான் இந்த பாக்கியநாதன் என்பது எங்களுக்கே தெரியாது. எனது கணவரின் கவிதைகளைப் பதிப்பிப்பது தொடர்பாக வந்த கடிதங்களைத்தான் அதிகாரிகள் பரிசோதித்தனர். நாங்களும் போலீஸாரிடம் அந்த கடிதங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டோம். வாசித்துப் பார்த்தபோது கடிதத்திலும் அந்த செய்திதான் இருந்தது என்று அவர்களுக்குப் புலப்பட்டது. ''இந்தக் கடிதங்களை நாங்க எடுத்துச் செல்லட்டுமா'' என்று அவர்கள் கேட்டபோது, நாங்களும்  சரி என்றோம். ஆனால், இன்று இவ்வளவு பெரிய வழக்குகள் எங்கள் தலையில் இடியாய் வந்து இறங்குமென்றும், இக்கடிதங்களும் அதற்கு ஓர் ஆதாரமாகு மென்றும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

அதன் பிறகு ''உங்கள் மகன் எங்கே'' என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் எங்களுக்குள் ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது. ''பயப்படாதீங்க! சும்மா சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான்''  என்று அவர்கள் சொன்னதை நாங்கள் நம்பினோம்.

அவன் சென்னையில் உள்ள தி.க. அலுவலகத்தில் இருப்பதாக நாங்கள் கூறினோம். ''நாளை அறிவையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா வருவாங்க.  எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்க'' என என் கணவர் கேட்டபோது, 'மல்லிகை' யின் முகவரியைத் தந்தனர். மல்லிகை என்பது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி.யின்  தலைமையகம் ஆகும். ''அவனையும் அழைத்துக்கொண்டு நாளை நாங்கள் அங்கு வந்து விடுகிறோம்'' என்று என் கணவர் அதிகாரிகளிடம் கூறினார்.

மறுநாள் காலையிலேயே அறிவை அழைத்து வருவதற்காக நான் சென்னை புறப்பட்டேன். ஆனால், அன்றும் எஸ். ஐ.டி. அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 11 பேர் இருந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் எனது சிறிய மகள் மட்டுமே இருந்தாள். அவளிடம் எதுவும் கூறாமல் வீட்டை சோதனையிடுவதாகச் சொல்லி மொத்த வீட்டையும் கலைத்துப்போட்டனர்.

அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. பயந்துபோன மகள் ஓடிசென்று எனது கணவரை அழைத்து வந்தாள். இதையெல்லாம் கண்டபோது அவருக்கும் ஏதோ ஒருவித அச்சம் ஏற்பட்டது. அப்போதே அதிகாரிகளுடன் அவரும் சென்னை வந்தார். இந்த சமயத்தில் நான் தி.க. அலுவலகத்திற்கு வந்து அறிவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னேன்.

''நாளை நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்று வந்தால் போதும்'' என்று அலுவலக நண்பர்களும் கருத்துத் தெரிவித்தனர். அப்படியானால் விசாரணை நடத்திவிட்டு அன்று மாலையே அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து நானும் அறிவும் கடைவீதிக்குச் சென்று ஷாப்பிங் பண்ணினோம். நாங்கள் திரும்பி வரும்போது தி.க. அலுவலகத்தில் எனது கணவர் இருந்தார். கூடவே போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.

அப்பாதான் அறிவை போலீஸாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே ''நாங்க இன்று அறிவை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவனிடம் சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை காலை நீங்கள் வந்து அவனை அழைத்து செல்லலாம்'' என்று போலீஸார் கூறினர். "இங்கேயே வைத்து விசாரிக்கலாமே'' என்று தி.க. அலுவலகத்தில் உள்ளவர்களும் கேட்டனர்.

ஆனால் அறிவிடம் எந்தவித பயமும் தெரியவில்லை. ''நாளை காலை நீங்கள் அழைத்துச் செல்ல வந்தால் போதும்'' என்று அவன்தான் எங்களைச் சமாதானப்படுத்தினான். இதெல்லாம் நடந்தது, ஜூன் 11 தேதி. பின்னர் ஜூன் 18 ஆம் நாள் அவனைக் கைது செய்திருப்பதாக எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அறிவித்தனர்.

மறுநாள் நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்றபோது அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர்?

அதிகாரிகள் சொன்னதை நம்பி, மறுநாள் அறிவை அழைப்பதற்காக நாங்கள் மல்லிகை அலுவலகம் சென்றோம். ஆனால், அவனைச் சந்திக்கக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. ''இன்னிக்கு விட்டுவிடுவோம் என்று சொல்லித்தானே அவனை அழைத்துச் சென்றீர்கள்'' என்று நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இன்னும் விசாரணை முடியல; நாளைக்கு முடிஞ்சுடும்'' என்று பதில் சொன்னார்கள். மறுநாளும் போனோம். ஆனால், அவனைச் சந்திக்கக் கூட முடியவில்லை.

இறுதியில், போலீஸார் ''நீங்க ஏதாவது வக்கீலை அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்று சொன்னபோது, நாங்கள் உண்மையிலேயே பலத்த அதிர்ச்சியடைந்தோம். ''விசாரித்துவிட்டு உடனே அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லித்தானே அவர்கள் அறிவை அழைத்துச் சென்றார்கள். இப்போது ஏன் வழக்கறிஞரை அழைத்து வாருங்கள்'' என்று சொல்கிறார்கள் என அப்போது எங்களுக்கும் புரியவில்லை.

எங்களிடம் அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை. எதை எதையோ சொல்லி எங்களை ஏமாற்றினர். ஏமாந்துபோன நாங்கள் பின்னர் பத்திரிகைச் செய்தி வழியாகத்தான் விபரங்களை தெரிந்துகொண்டோம். அதன் பிறகு மல்லிகை அலுவலகம் சென்றபோதெல் லாம் எங்களை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.

அதன் பிறகு உங்களுக்குக் கிடைத்த சட்ட ஆலோசனைகள் என்னென்ன?

திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமிதான் இந்த வழக்கிற்குப் பொறுப்பேற்றார். அவரைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. தி.க. தலைவர் கி. வீரமணி அப்போது அமெரிக்காவில் இருந்தார். அவர் வரும்வரை காத்திருக்குமாறு வழக்கறிஞர் துரைசாமி எங்களைக் கேட்டுக்கொண்டார். ஒருவாரம் முடிந்தது. கண்ணீரோடும், மன வேதனையோடும் எப்படியோ அந்த வாரத்தைக்  கடத்தினோம்.

அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து வீரமணி திரும்பி வந்தார். எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு ''நம்ம பிள்ளை எப்படியும் திரும்பி வந்துவிடுவான்'' என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. கோர்ட்... கேஸ்… வக்கீல் என்று எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே எங்களால் யூகிக்க முடியவில்லை.

அறிவு மீது தடா சட்டம் பாய்ந்திருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்தால் கூட எதுவும் செய்ய இயலாது என்றும் துரைசாமி சென்னார். வழக்கறிஞர் சொல்வதையெல்லாம் நம்பி நாங்களும் தலையாட்டிக்கொண்டிருந்தோம். இதை தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாதே. எல்லாவற்றையும் வீரமணி பார்த்துக்கொள்வார் என்று நாங்களும் நம்பியிருந்தோம்.

அதேநேரம், மற்றொருபுறம் எங்கள் பிள்ளை கொடிய துன்புறுத்தலுக்கும், சித்தரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தான். அவனைக் கட்டாயப்படுத்தித்தான் அவனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றனர் என்று அவனது நூலில் எழுதியுள்ளான். அறிவு எழுதிய புத்தகத்தை வாசித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியானால் அவன் சொல்வதெல்லாம் உண்மை என்றுதானே பொருள்.

உன் குடும்பத்தைப் பற்றி மோசமாக சித்தரிப்போம் என்றும், சகோதரிகளை அவமானப்படுத்துவோம் என்றும் அதிகாரிகள் மிரட்டி வந்தார்களாம். அவன் என்ன செய்வான் பாவம்? 19 வயது சின்னப் பையன் அல்லவா? அங்கு அவனுக்கு போலீஸாரைத் தவிர வேறு யாரும் கண்ணுக்கும் தென்படவில்லை. கூடவே சித்தரவதைகள் வேறு. என் குழந்தை என்னமா கஷ்டப்பட்டிருப்பான் (அழுகிறார்).

''உனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லிவிடு. உன்னை சும்மா விட்டுறோம்'' என்று அவர்கள் சொல்லி வந்தார்களாம். ''எனக்கு எதுவுமே தெரியாது'' என்று அவன் சொல்லும்போதெல்லாம் அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான். இவ்வாறு மிரட்டியும் அச்சுறுத்தியும், துன்புறுத்தியும்தான் அதிகாரிகள் அவனிடமிருந்து கையொப்பம் வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒரே இரவில் 17 பேரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெற்றுத்தாளில் அதிகாரிகள் கையொப்பம் வாங்கியுள்ளனர். இந்த விஷயங்களையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகுதான் அவன் என்னிடம் சொன்னான்.

அதன் பிறகு எப்போது அறிவைச் சந்தித்தீர்கள்?

சென்னையிலேயே தங்கியிருந்து எந்தப் பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜோலார்பேட்டைக்கே திரும்பினோம். அறிவை முதல் தடவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பதை பத்திரிகை வழியாகத்தான் நாங்கள் அறிந்தோம். எங்கள் வழக்கறிஞருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. இரண்டாவது முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். அவரும் எங்களுக்குத் தெரிவித்தார்.

உடனே நாங்கள் ஏராளமான உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்தோம். நீதிமன்றத்தில் வைத்து அறிவைப் பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை. முகத்தில் கறுப்புத் துணி அணிவித்த நிலையில் அவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான். நேராக மேலே உள்ள நீதிமன்ற அறைக்குப் போலீஸார் அவனைக் கொண்டுசென்றனர். வெளியே நின்றிருந்த
நாங்கள் அனைவரும் அறிவு! அறிவு!' என்று சப்தமாக அழைத்தோம். சிலர் கூச்சல் போட்டனர். சிலர் கதறி அழுதனர். ஆனால், போலீஸார் எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அவனை வேகமாக அழைத்துச் சென்றனர். ராபர்ட் பைஸ், அறிவு, கோடிகரை சண்முகம் இவர்கள் மூவரைத்தான் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாங்கள் அறிவு என்று நினைத்து சப்தம் போட்டது, கோடிகரை சண்முகத்தைப் பார்த்துத்தான் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டோம். ஏனெனில், முகத்தில் கறுப்புத் துணி போடப்பட்டிருந்ததால் யார் அறிவு என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

எப்படியாவது அறிவைச் சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞரிடம் நான் மன்றாடினேன். வக்கீல் சொன்னபடி மல்லிகைக்கு சென்று அவனைப் பார்க்க அனுமதி கிடைத்தது. நாங்கள் மல்லிகை சென்றோம். வாசலிலேயே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்றிருந்தனர். அச்சமூட்டும் சூழல்... திடீரென, ஆக தளர்ந்த நிலையில் எனக்கு முன்னால் அறிவு கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் சந்திப்பு அது. நான் அவனது கைகளைப் பிடித்தேன். அந்த ஸ்பரிசம் வழியாக அவனுக்குள் இருந்த பயம், அச்சம், நடுக்கம் அனைத்தையும் நான் உணர்ந்து கொண்டேன்.

அவனுக்கு ஏற்பட்ட சித்தரவதைகள் பற்றி அவன் எங்களிடம் எதையுமே சொல்லவில்லை. ஏனெனில், சுற்றிலும் போலீஸார் நின்றிருந்தனர். அனைத்தையும் அவன் எழுதிய புத்தகம் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன். 'தைரியமா இருங்க' என்று மட்டும்தான் அன்று அவன் என்னிடம் சொன்னான். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் அன்றைய பத்திரிகைகள் மிக மோசமாக எழுதி வந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம். எங்களால் எதிர்க்கவோ, மறுப்புத் தெரிவிக்கவோ முடியவில்லை. ஏனெனில், நாங்கள் எந்த எதிர்ப்பைத் தெரிவித்தாலும் உடனே 'தடா' என்ற வார்த்தையைச் சொல்லி எங்கள் வாயை அடைத்துவிடுவர்.

பிறகு வழக்குகள் எப்படி நடந்தன?

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. சிறையிலிருந்தே நேரடியாக நீதிமன்றத்திற்கு வர முடியும். பூந்தமல்லி சிறைக்கு உள்ளேயே நீதிமன்றமும் இயங்கி வந்தது. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ''அறிவு என்ன தப்பு செய்தான் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகையால் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் காண எங்களை அனுமதிக்க வேண்டும்'' என்று புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்தமனிடம் நான் கோரிக்கை வைத்தேன். ''அதெல்லாம் நடக்காது. இது தடா கோர்ட். உங்க வக்கீலுக்கு மட்டும்தான் நீதிமன்றத்திற்கு வர அனுமதி கிடைக்கும்'' என்று அவர் மறுத்துவிட்டார்.

ஏறக்குறைய 8 ஆண்டுகள்… விசாரணை நடைபெற்ற ஆரம்ப நாட்களில் அவனைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டோம். ஆனாலும், எப்போதெல்லாம் அவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் சிறைக்குச் செல்வேன். பல சந்தர்ப்பங்களில் அவனைச் சந்திக்கவே இயலாது. அவனைப் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்று பிடிவாதமாக நான் அங்கேயே இருப்பேன். சில நாட்களில் கூச்சல் போடுவேன். அடம்பிடிப்பேன். அழுவேன்; அவர்களைத் திட்டுவேன். ஆனால், விசாரணை நடைபெறும் நாட்களில் அவனைக் காண இயலாது. ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட்டு, பலமுறை சென்னை வந்தும் அவனைக் காண முடியாமல் மன பாரத்தோடும், கவலையோடும் திரும்பிச் சென்ற சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.

திராவிடர் கழகத்தின் தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லையா?

இந்த விஷயத்தில் தி.க. தரப்பிலிருந்துதான் எங்களுக்கு பலத்த அடி கிடைத்தது. தி.க. எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. பேரறிவாளனுக்கும், திராவிடர் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கி.வீரமணி விடுதலையில் தலையங்கமே எழுதினார்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எனது கணவர் 8 வயது முதல் தி.க.வில் இயங்கிவருகிறார். எங்கள் திருமணத்திற்குப் பிறகு நானும் தி.க.வில் இணைந்து பணியாற்றிவந்தேன். வீரமணியும், அவரது துணைவியார் மோகனாவும்தான் எங்கள் திருமணத்தையே நடத்திவைத்தனர். எனது மூத்த மகளுக்கு அன்புமணி என்று பெயர் சூட்டியதே தந்தை பெரியார்தான்.

அறிவின் தந்தை மட்டுமல்ல; எங்கள் குடும்பமே தி.க.வின் தீவிர தொண்டர்களாக இயங்கிவந்தோம். நாங்கள் கழகத் தலைமையிடம் எங்கள் பிரச்சினைகளையெல்லாம் எடுத்துச்சொன்னோம். ஆனால், அறிவுக்கு ஆதரவாகப் பேசினால் அமைப்பைத் 'தடை' செய்துவிடுவார்கள் என்பதே அவர்களது ஒரே பதிலாக இருந்தது. நாங்கள் மிகுந்த மனவருத்தம டைந்தோம். ஒரு நெருக்கடியான சூழலில் இப்படி தனித்து விடப்பட்டோமே என்று எங்களது கையறு நிலையை எண்ணி வருந்தினோம்.

கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நாங்கள் சென்றுவருவது வழக்கம். கன்னியகுமரி முதல் திருத்தணி வரை தி.க. மேற்கொண்ட பிரச்சார ஊர்வலத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை நானும், கணவரும் பங்கெடுத்திருந்தோம். 'பேரறிவாளன் வழக்கு நிதி' என்ற பெயரில் அவனது வழக்கை நடத்துவதற்காக பலரும் நன்கொடை வழங்கினர். ஆனால், எனது மகனுக்காக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. ஆனாலும், ஒட்டுமொத்த கழகமும் அவனுக்குப் பின்னால் இருப்பதாகவும் அவனுக்கு எதுவும் நேராது என்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

அறிவு கைது செய்யப்பட்ட பின்னரும் தொடர்ந்து 4 வருடங்கள் நாங்கள் கழகத்திலேயே தொடர்ந்தோம். ''கழகத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் தேவை அல்லவா? அதனால்தான் இந்த வழக்கில் தலைமை தீவிரமாக ஆர்வம் காட்டுவதில்லை'' என்று எனது கணவர் அடிக்கடி ஆறுதல் சொல்வார். மேலும், ''தந்தை பெரியார் கடும் தியாகங்களைச் சந்தித்து கழகத்தை வளர்த்தார். உங்கள் மகனின் பிரச்சினையால் அவரது முயற்சிகள் வீணாகிவிடக் கூடாதே'' என்று தலைவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, 'ஆமாம்! ஆமாம்!' என்று நாங்கள் தலையாட்டுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

வழக்கு வலுவாக வலுவாக… கழகம் பின்வாங்கிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு அறிவின் அப்பா பற்றியும் அவதூறு பரப்பினர். அவர் கழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்பது அவர்களது பிரதான குற்றச்சாட்டு. கடைசியில் நாங்களாகவே கழகத்திலிருந்து வெளியேறிவிடுவோம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

இவ்விஷயத்தில் கழகம் எங்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துவிட்டது. இப்பிரச்சனையில் நாங்கள்  தலையிட்டு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று அவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டி வந்தனர் என்பதே உண்மை.

தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

என் பிள்ளையிடமிருந்துதான். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஏனெனில், அவனால் ஒரு சின்ன தவறுகூட செய்ய இயலாது. யாரிடம் பேசும்போதும் முகம் கோணும் விதமாக நடந்துகொள்வதை அவன் விரும்ப மாட்டான். யாருடைய முகமும் வாடிப்போவதை அவன் சகித்துக்கொள்ள மாட்டான். யாருக்கும் எந்த தொந்தரவும் தரக் கூடாது என்று அவன் எப்போதும் எங்களிடம் சொல்வான்.

நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணி. கணவர் மற்றும் குழந்தைகளுக்குச் சமைத்துப்போடுவதை தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. இப்படியொரு வழக்கை சந்திக்கும் வரை நான் தனியாக எங்கும் பயணித்ததில்லை. இப்போது தமிழகத்தின் பல இடங்களுக்கும் குறிப்பாக, சென்னையில் வழக்குத் தொடர்பாக தன்னந்தனியாக அலைகிறேன். ஒவ்வொருவரிடமும் வழிகேட்டு அந்தந்த இடங்களுக்குப் போய் சேருகிறேன். பல்வேறு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என எல்லா இடங்களுக்கும் நான் தனியாளாகவே சென்று வருகிறேன். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. நாங்கள் பணக்காரர்கள் அல்லவே? நாங்களும் வாழணும் இல்லையா? அதனால் அறிவின் அப்பா வேலைக்குப் போகிறார். அவரால் விடுப்பு எடுத்து என்னைப்போல் அலைய முடியாது என்பதால், வழக்கு தொடர்பாக நானே தனியாக எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன். அம்மாவின் இந்த தனிமனிதப் போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறீர்கள்?

இந்த 20 வருடங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் விமர்சனங்களையும், தாக்குதல்களையும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

திராவிடர் கழகம் தவிர அனைவரும் எங்களுக்கு உதவினர். பொதுமக்களிடமிருந்து நாங்கள் எந்த நிதியுதவியும் பெறுவதில்லை. மற்ற அனைத்து உதவிகளையும் ஏற்றுக்கொண்டோம். பிற வழிகளில் உதவி செய்ப வர்களையும், செய்து கொண்டிருப்பவர்களையும் எங்களால் ஒருபோதும் மறக்க இயலாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி தவிர உள்ள தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, எப்படியாவது என் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் மன்றாடி வருகிறேன். அவர்களில் பலரும் எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர்.

ஆனால், சிறப்பு புலானாய்வுத்துறை அதிகாரிகளோ யாரையும் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அனைத்து உண்மைகளையும் மூடி மறைத்தனர். அவர்கள் எழுதிய திரைக்கதையை ஏற்று நடித்தவர்களை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 'முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றம்… தடா நீதிமன்றம்…' என்று சொல்லிச் சொல்லியே அவர்கள் எல்லோரையும் மிரட்டி வந்தனர்.

இவர்களைப் பார்த்து நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். முன்னாள் பிரதமரின் கொலை வழக்கை ஏன் நீங்கள் ஒரு திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது? இவர்கள் செய்த குற்றம் என்னவென்று அனைவருக்கும் தெரியட்டும். எனது பிள்ளை என்ன தவறு செய்தான் என்பதை அறியும் உரிமை எனக்கும் உண்டல்லவா? திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்துங்கள் என்பது மட்டுமே இப்போதைய எனது ஒற்றைக் கோரிக்கை.

அறிவை சந்திக்கவோ, பேசவோ முடியாமல் எத்தனை வருடங்கள் கழித்தீர்கள்? பின்னர் என்று முதல் மீண்டும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது?

விசாரணை முடியும் வரை…  அதாவது எட்டு வருடங்கள். இத்தனை வருடங்களில் நாங்கள் எவ்வாறு நாட்களைக் கடத்தினோம் என்று எங்களுக்கே தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவனைக் காண முடியாமல்… நான் சுயநினைவு இழந்தவளைப்போல் நடந்துகொண்டுள்ளேன். அவனைக் காண சிறைக்குச் செல்லும்போதெல்லாம் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்துள்ளேன். அந்த அவமானங்களையெல்லாம் என் பிள்ளைக்காக நான் சகித்துக்கொண்டேன்.

வரும்போது புத்தகங்கள் மட்டும் கொண்டுவந்தால் போதும் என்பான் அறிவு. ஆனால், நான் பழங்கள், பிஸ்கெட், மாத - வார இதழ்களையும் கொண்டுவருவேன். அதனை இரண்டு மூன்று முறை சோதனை போடுவார்கள். சிலர் கொடுத்து விடுகிறோம் என்பார்கள். சிலர் தர முடியாது என்று மறுத்துவிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் சிறை அதிகாரிகளோடு நான் சண்டை போடுவேன். சிலபோது சப்தமிட்டு அழுவேன்.  சோதனை முடிந்து, உள்ளே சென்று அறிவைப் பார்த்து விட்டுத் திரும்பி வரும்போது மீண்டும் சோதிப்பார்கள். நான் அப்படியே அவமானத்தால் கூனிக்குறுகிப் போய்விடுவேன்.

கைது செய்தவுடன் அவனை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். அங்கேயே அறிவிற்கு சிறைக் கைதிகளுக்கான (convicted prisoners) உடை  தந்துவிட்டிருந்தனர்  (white and white). முதன் முறையாக அந்த உடையில் அவனைப் பார்த்தபோது என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. என்னையும் அறியாமல் நான் அழுதுவிட்டேன். நான் சொன்ன பிறகுதான் இவ்விஷயம் எங்கள் வக்கீலுக்கே தெரியும். அதற்காக ஒரு வழக்கு தொடர்ந்த பிறகுதான் சாதாரண உடை அணிய அனுமதி கிடைத்தது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நான் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது.

அதன் பிறகு அவன் பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கு அவனைக் காணச் சென்றபோது, பைபர் கிளாஸால் ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் நின்றுதான் அவனைப் பார்க்க முடியும். முழுசா தெரியாது. நிழல் மட்டும்தான் தெரியும். தொலைபேசி வழியாகத்தான் இருவரும் பேச முடியும். வழக்கறிஞர் கூட தொலைபேசி வழியாகத்தான் பேசுவார். அதற்கும் ஒரு வழக்கு தொடுத்தோம். அப்போது பைபர் கிளாஸ் தடுப்புச் சுவரில் ஒரு சின்ன  துவாரம் போட்டார்கள். அது வழியாக ரொம்பவும் சிரமப்பட்டு, அவனது விரலை மட்டுமே என்னால் தொட முடிந்தது. மறுபடியும் கேஸ் கெடுத்தோம். அதன் பிறகு வழக்கறிஞர் மட்டும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி கிடைத்தது.

செங்கல்பட்டு சிறையில் சிறை அதிகாரியின் அறைக்கு மேல்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பி வழியாக கீழே எட்டிப் பார்த்து என் பிள்ளை என்னிடம் பேசுவான். நான் எக்கி எக்கி மேலே அண்ணாந்து பார்த்து அவனுடன் பேசுவேன்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு...?

விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வந்தது. எல்லா குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பிறகு அனைவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அப்போதுதான் ரிவ்யூ பெட்டிஷன் கொடுத்தோம். தீர்ப்பில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த அதே நீதிபதியிடம்தான் ரிவ்யூ பெட்டிஷனும் கொடுக்கப்பட வேண்டும். வேறொரு நீதிபதியிடம் மனு கொடுத்திருந்தால் ஒருவேளை  தீர்ப்பு மாறி வந்திருக்க வாய்ப்பு இருந்தது.

குண்டுவெடிக்கச் செய்ய சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதானே அறிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால், ரவிச்சந்திரன் என்ற மற்றொரு குற்றவாளியும் சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், ''ரவிச்சந்திரனுடையது அல்ல; அறிவு கொடுத்த பேட்டரிதான் குண்டுவெடிக்க பயன்படுத்தப்பட்டது'' என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள்? ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அது ஏன் அறிவுக்குப் பொருந்தாதா? என்பதே எனது கேள்வி.

ரிவ்யூ பெட்டிஷன் கொடுக்கும்போதும், கருணை மனு கொடுக்கும்போதும் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்குமே? எல்லா தீர்ப்புகளும் அறிவுக்கு முற்றிலும் எதிராகத்தானே இருந்தன?

ஆறு முறை… இதுவரை ஆறு முறை அவன் தூக்குமேடைக்குச் சென்று திரும்பியுள்ளான். அவனுடைய மனு பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு முறையும் நான் நம்பிக்கையோடு காத்திருப்பேன். முதன் முறையாக விசாரணை என்ற பெயரில் அவனை அழைத்துச் சென்ற அந்த நாள் முதல் இந்த நிமிடம் வரை நான் அவனுடைய விடுதலைக்காக போராடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தீர்ப்பும் எனக்கான மரண தண்டனைதான்.

இதோ இந்த நிமிடம்வரை நான் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறேன். அறிவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம் நான் பயங்கர மன உளைச்சலிலும், பதற்றத்திலும் தத்தளிப்பேன். ரிவ்யூ பெட்டிஷன் விசாரணைக்கு வரும் நாளில், எங்கள் வழக்கறிஞரின் தொலைபேசி அழைப்புக்காக ஆவலோடு காத்திருப்பேன். கடைசிவரை போன் வரவே இல்லை.

பொறுமையிழந்து நானே அவரை அழைத்தபோது, 'மனு தள்ளுபடி செய்யப்பட்ட'தாகச் சொன்னார். இதை எப்படி என்னிடம் தெரிவிப்பது என்று தயங்கித்தான் வாக்கறிஞர் கூட என்னை அழைக்காமல் இருந்திருக்கிறார். 'அடுத்த முறை பார்க்கலாம் என்று வக்கீல் சொல்லும்போதுதான் இந்த முறை நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்' என்பதே எனக்குத் தெரியும் (அழுகிறார்).

இப்படி எத்தனை முறை…? அந்த வேதனைகளையெல்லாம் என்னால சொல்லிப் புரியவைக்க முடியாதும்மா. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. அனுப விச்சாதான் அந்த வலியும், வேதனையும் எவ்வளவு கொடூரமானது என்பது தெரியும்.

சமீபத்தில், வேலூர் மத்தியச் சிறையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "செப்டம்பர் 9 ஆம் நாள், உங்கள் மகனைத் தூக்கிலிடப் போகிறோம். உடலை நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கடிதம் வந்தது. (பேச முடியாமல் அழுகிறார்)  "… உன்னைத் தூக்குல போடப் போறோம். உடலை யார் கிட்ட கொடுக்க வேண்டுமென்று'' அதிகாரிகள் அறிவிடம் கேட்டார்களாம். அவன்தான் "எங்க அம்மா கிட்ட கொடுத்துடுங்க'' என்று கையொப்பம் இட்டுள்ளான். (பேச முடியாமல் அழுகிறார்).

அழாதீங்கம்மா... அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. ப்ளீஸ்... அழாதீங்க...

இல்லம்மா… 

எனக்கு இப்போ எதுலயும் நம்பிக்கை இல்லம்மா. இங்கு நீதியுமில்லை; நியாயமுமில்லை. யாருக்கும் மனசாட்சியும் இல்லை. 

நன்றி முகப்பு நூலில் பகிர்ந்த ராஜமாணிக்கம்.