Tuesday, November 30, 2010

அப்பா மாற்றிய பாதை

உலகத்தில் பிரபஞ்ச ரகஸ்யத்தை கூட கண்டு பிடித்துவிடுகிறார்கள்.  ஆனால் எத்தனை பேர்கள் தங்களின் அப்பாவைப் பற்றி முழுமையாக உண்மையாக புரிந்திருக்கிறார்கள்? 

பாதி காலம் பயம். மீதி கொஞ்சம் வெறுப்புமாய் வாழ்ந்து வெளியே வந்து விட்ட பிறகு தான் முழுமையான அவரவர் அப்பா குறித்த புரிதலின் ஆரம்பமே தொடங்குகிறது.   நான் அப்பாவாக ஆன பிறகு தான் என் அப்பாவைப் பற்றி முழுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். 

என் அப்பாவை விரும்பத் தொடங்கிய போது அவரும் இல்லை. அவரின் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டுருக்கின்றேன். 

ஆனால் இவர் இப்போது அப்பாவைப் பற்றி மூச்சு விடாமல் பேசத் தொடங்கிய பிறகு கொட்டித் தீர்க்கட்டும் என்று அமைதியாய் கேட்டுக் கொண்டுருந்தேன். அவரின் நீண்ட உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.   அமைதியாய் இருந்தேன்.

பேசத் தொடங்கினார்.

" நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது சில சமயம் என் அம்மா பள்ளிக்கு வருவார். நானும் அம்மாவும் பள்ளிக்கு வெளியிருக்கும் மரத்தடியில் வெகு நேரம் பேசிக்கொண்டுருப்போம்.  அப்போது தான் அவர் முகத்தில் புதிய மலர்ச்சி தெரியும். சிறையை விட்டு பறவைப் போல அவர் பேச்சில் உற்சாகம் வழிந்தோடும். 

அம்மா பொதுவாக வீட்டில் இருக்கும் போது அதிகமாக பேசமாட்டார்.  ஆனால் நான் எந்த விசயத்தைப் பற்றி அவருனுடன் பேசினாலும் அவரின் தெளிவான கருத்தை எடுத்து வைப்பார். அதிகமாக படிக்கவில்லையே தவிர அவராகவே உணர்ந்த விசயங்களை நகைச்சுவையாக எடுத்து வைப்பார். 

எங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் என் தோழிகள் " யாரிவர்?  உன்னோட அக்காவா?" என்று கேட்பார்கள். 

"அந்த அளவிற்கு அம்மா எப்போதுமே வசீகரமாய் இருப்பார்.  ஆடம்பர சேலைகளோ பெரிதான நகைகள் இல்லாத அவரின் முகம் எப்போதும் புன்னகையுடன் தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து பெரிய திலகமிட்ட பிறகே தன்னுடைய அன்றாட கடமைகளை தொடங்குவார்.  அப்பாவும் அம்மாவும் எங்கேயும் சேர்ந்து போய் நான் பார்த்ததேயில்லை. "

"அம்மாவிடம் பல முறை கேட்டுருக்கின்றேன்.  சிரித்துக் கொண்டே மழுப்பி விடுவார்.  ஆனால் குடும்ப விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களையும் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். வீட்டில் என்னுடன் அதிகமாக பேசும் நேரமே தம்பியும் அப்பாவும் இல்லாத நேரமாகத்தான் இருக்கும். என்னுடைய தம்பியை ஒரு அளவிற்கு மேல் அம்மாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை மெதுவாக புரிந்து கொண்டேன்.  காரணம் அவன் எப்போதுமே அப்பாவுக்கு பிடித்த பையனாக இருந்த காரணமே அவனிடம் ஒவ்வொரு கெட்ட பழக்கங்களும் வீடு வரைக்கும் வர ஆரம்பித்தது.. அதுவே ஏராளமான பிரச்சனைகளும் கொண்டு வந்து சேர்த்தது.  . அப்பாவிடம் இது குறித்து கேட்ட முடியாது.  அவர் ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்.  

"அவன் ஆம்பிளை அப்படித்தான் இருப்பான்." என்று சொல்லிவிடுவார்..

"எனக்கு என் அம்மாவிடம் பிடித்த விசயமே, எது குறித்தும் புலம்புவதேயில்லை.  பல சமயம் எனக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க வீட்டில் ஒன்றுமேயிருக்காது.  அவசரமாய் பக்கத்து டீக்கடையில் ஏதோ ஒன்றை வாங்கி பொட்டலத்தை என் பையில் திணித்து அனுப்பி வைத்து விடுவார். அம்மா என் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான் பல சமயம் என் பசியை போக்கியிருக்கிறது." 

"நானும் அம்மாவைப்போலவே இருக்க முயற்சிப்பேன்.  ஆனால் என் முகவாட்டம் அவருக்கு என் எண்ணங்களை காட்டி கொடுத்து விடும். பள்ளியில் மற்றவர்கள் அணிந்து வரும் உடைகளும், தோழிகளின் அலட்டல் பேச்சுக்களையும் வந்து சொல்லும் போது அம்மா ஒரே வார்த்தையில் சொல்லுவார்."

"உலகில் அனுபவிக்க வேண்டிய விசயங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நம்முடைய ஆசைகளைப் போலவே.  ஆனால் அதற்கான தகுதிகளை நீ அடைய வேண்டுமானால் நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி வேண்டும். நீ ஓரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்த சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு.  உன் கவனத்தை வேறு எதிலும் மாற்றாதே" என்பார். 

எனக்கு சற்று எரிச்சலாக இருந்தாலும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு மனதுக்குள் மறுகிக் கொள்வேன்.

"வீட்டில் அப்பா உருவாக்கும் ஒவ்வொரு சண்டைகளுக்கு வெவ்வேறு காரணங்கள்.  ஆனால் மொத்தமாக பார்த்தால் அவரின் ஆண்மையற்ற வீராப்பு தான் முதன்மையாக இருக்கும்.  ஓமக்குச்சி நரசிம்மன் போல உள்ள தோற்றத்தில் அவரின் குடியும் பீடிப்பழக்கமும் நிரந்தர நோயாளியைப் போலவே வைத்திருக்க அம்மாவின் வசீகரத்தை அவர் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்."

"எனக்கு இது மெதுவாக புரிந்தாலும் அம்மாவிடம் கேட்க முடியாது.  கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஒரே வார்த்தையில் என்னை அடக்கி விடுவார்.  

"ஆம்பிளைங்றவங்க முன்னபின்ன தான் இருப்பாங்க.  அது என்பாடு.  உன்னோட வேலை படிக்கிறது மட்டும் தான்.  அதில் மட்டும் கவனமாயிரு" என்று அது குறித்து தொடர்ந்து பேச விடமாட்டார்.  பல முறை என் தம்பியே என் புத்தகங்களை ஒழித்து கிழித்து வேறு பக்கம் தூக்கி எறிவது வரைக்கும் நாங்கள் இருவருமே வீட்டுக்குள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்தோம்.  

பலமுறை அம்மாவுடன் சண்டை போட்டுருக்கின்றேன்.  " எங்கேயாவது போய் விடுவோம்.  இந்த நரகம் போதுமென்று" அழைத்த போதிலும் அம்மா தெளிவாகச் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 

" இக்கரைக்கு அக்கறை பச்சை.  நீ நினைப்பது போல பெண்கள் தனியாக வாழ்வது சுலபமில்லை.  படிப்பது, வாசிப்பது, கேட்பது என்பதற்கும் நிஜத்திற்கும் உள்ள வித்யாசத்தை நீ போகப் போக புரிந்து கொள்வாய்" என்று அன்பாக மிரட்டி மாற்றி விடுவார். 

 "அப்பாவின் ஒரே பிரச்சனை அவரின் தாழ்வு மனப்பான்மை.  அவரால் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.  அவரின் தொடர்ச்சியான தொழில் தோல்விகளும், இழந்த சொத்துக்களும், உடல்நலம் குன்றியது என்று எல்லாநிலையிலும் அம்மா கூடவேயிருந்தார்.  ஆனால்...................."

நிறுத்திவிட்டு என்னை பார்த்து புன்னகைத்தார். 

இப்போது ரயில் இடையில் வந்து கொண்டுருந்த மற்றொரு ரயிலுக்காக இருட்டுக்குள் நின்று கொண்டுருந்ததை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கழிப்பறைக்கு செல்பவர்கள் வந்து சிலர் எங்களுடன் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுருநத்ர்கள். அவரின் பேச்சு தடைபட்டது. எங்கள் இருவரையும் கவனித்த சிலர் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டுருந்தார்கள்.  எதுவும் நடக்கின்றதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அவர்களும் தங்களின் படுக்கைக்குச் சென்றனர். 

ரயில் நகரத் தொடங்கியது.  தொடர்ந்தார்.

"ஒரு தடவை அப்பா உடம்பு சரியில்லாம வீட்டுக்குள் இருமிக்கிட்டே படுத்துருந்தார். நான் வெளியே திண்னையில் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்தேன்.  அப்பாவின் தொடர்ச்சியான இருமல் கேட்க நான் வேகமாக உள்ளே ஓட அம்மா என்னை தடுத்து படிக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.  அப்பாவின் கோப வார்த்தைகளும், அவர் இருமலை மீறி அம்மாவிடம் சண்டை போடுவது வரைக்கும் என்னால் கேட்க முடிந்தது.  சற்று நேரம் மயான அமைதி.  ஆனால் அம்மா என்னை நோக்கி வெளியே வந்த போது கையில் என்னுடைய பள்ளிக்கூட பைக்கட்டு மூட்டைகளுடன் மற்றொரு சிறிய பையில் தேவையான துணிகளும் இருந்தது..

" இனி இந்தாளுகூட வாழமுடியாது. வா நாம வேற எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்வோம்" என்று என் பேச்சை எதிர்பார்க்காமல் என் கையை பிடித்துக் கொண்டு ஏறக்குறைய தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தார்.  வந்து நின்ற பேரூந்தில் ஏறி ரயில்நிலையத்துக்கு வந்தோம். 

அது கோயமுத்தூர் செல்வதாக அருகே இருந்தவர்கள் சொன்னார்கள்.  டிக்கெட் கூட எடுக்காமல் அமர்ந்திருந்த அம்மாவை அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல பார்த்தேன். 


காரணம் அவர் முகத்தில் அப்படியொரு ரௌத்திரம் தெரிந்தது.  இதுவரைக்கும் அம்மாவின் முகத்தில் நான் கோபத்தின் சாயலைக்கூட பார்த்ததில்லை, ஆனால் இப்போது முற்றிலும் புதிய மனுஷியாக தெரிந்தார். என்ன நடந்தது என்று நான் கேட்ட போது "சமயம் வரும் போது சொல்கின்றேன்" என்று தன்னை இயல்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தார். 

ரயில் ஓடத் தொடங்கியது.  எங்களின் வாழ்க்கைப் பாதையும் மாறத் தொடங்கியது.

Sunday, November 28, 2010

கதை சொல்லும் நேரமிது

நாகரிக வாழ்க்கை தோன்றியிராத ஆதிவாசிகளுக்கு உரையாடல்கள் தேவையில்லாமல் இருந்தது. அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க அவர்கள் எழுப்பிக் கொண்டுருந்த சப்தங்களே போதுமானதாக இருந்துருக்கக்கூடும்..  ஓஓஓஓஓ........ ஆஆஆ....... போன்ற சப்தங்களே அவர்களின் வாழ்க்கை முழுக்க பரவியிருந்தது. இந்த சப்தங்களே அவர்களின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான உரையாடல்களை ஒழுங்கு படுத்தியிருந்தது. 

தாங்கள் வாழ்ந்த குகை போன்ற அமைப்பில் இருந்த பெண்களுக்கு வேட்டைக்குச் சென்ற தங்களுடைய தலைவன் திரும்பி வரும் வரைக்கும் எவருடன் பேசியிருப்பார்கள்? ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்த அந்த பேரமைதி அவர்களுக்கு எதை கற்றுக் கொடுத்துருக்கும்?

உரையாடல் கலை நாகரிகத்தை விரைவுபடுத்தியிருக்கிறது என்ற உண்மையைப் போலவே அவஸ்யமற்ற உரையாடல் இரு நாடுகளை பகையாளியாகவும் மாற்றி விடுகின்றது என்பதும் உண்மை தானே? 

சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்? 

கடி எழுத்துக்களை சொந்தம் கொண்டாடும் மனிதர்கள் விரும்பும் நொடி நேர புகழ் வரைக்கும் தறி கெட்டு தனக்காக கூட்டத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படித்தான் இந்த உரையாடல் கலை இன்றைய தினத்தில் பன்முகத் தன்மையோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது. பல வித அர்த்தம் கற்பித்து தரங்கெட்டும் போகத்தொடங்கி விடுகிறார்கள்..

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உரையாடல் என்பது கலை மட்டுமல்ல.  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையை உருவாக்குவதாக இருக்கிறது.  அதுவும் எதிரெதிர் பாலினம் என்றால் கரம் சிரம் புறம் பார்க்க வேண்டியதாய் உள்ளது.  கண்கள் எங்கே கவனிக்கிறது என்பதில் தொடங்கி பேசும் கருத்துக்கள் எங்கங்கே தாவுகின்றது என்பது வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் மறைமுக கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஏறக்குறைய அவஸ்த்தை உரையாடல்களை தாண்டி தங்களுக்கான இருப்பை இருவருமே தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

பாலியல் தொழிலாளியின் மகள் என்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் என் கண்களையே பார்த்துக் கொண்டுருந்தார். எனக்கு அவர் கூறிய அந்த செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை.  நம்ப கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை.  

ஒருவரின் அந்தரங்கத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருக்கலாம்.  அத்தனையையும் கவனித்து பிறகு பழக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காட்டுக்குள் சென்று வாழ வேண்டியது.  ஆனால் என்னுடைய பார்வையில் வேறுவிதமாக தெரிந்தார்.  

ஒரு அமைப்பை உடைத்து வந்த புதிய மனுஷியாகவே தெரிந்தார்.  ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள வில்லை.  காரணம் அவர் என்னை இப்போது அதிகமாக கவனித்துக் கொண்டுருப்பது தெரிந்தது. 

அவர் நான் என்ன செல்லப் போகின்றேன் என்பதில் ஆர்வமாய் இருப்பது போல தெரிய நான் பேச்சை மாற்றுவதில் குறியாக இருந்தேன்.

"சரிங்க. அப்புறம்?" என்று பொதுவாக பேசிவைக்க அவர் முகம் மாறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பட்டென்று வெடித்தார்.

"இப்ப உங்க பார்வையில வேறுவிதமா தெரிகிறேனா? "  என்றார்.

உரையாடல் தடம் மாறிக்கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். கேட்க விருப்பமில்லையென்றாலும் பிரச்சனை.  கேட்டாலும் உச் கொட்டியே ஆக வேண்டிய அவஸ்யம்.  இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாமென்று பேசத் தொடங்கினேன்.

"நாம் ரெண்டு பேரும் கடந்த இரண்டு மணி நேரமா பேசியிருப்போம. அதற்குள் உங்களின் முப்பது வருட அனுபவத்தையும் நான் எப்படி புரிந்து கொண்டுருப்பேன்னு நினைக்கிறீங்க?" 

அவர் பதில் சொல்ல எத்தனிக்க அமைதி படுத்தி விட்டு தொடர்ந்தேன்.

"ஒரு நாடு அல்லது ஒரு தலைவனின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டால் நமக்கு எத்தனையோ விசயங்கள் கிடைக்கும்.  உங்களின் சோகம், துக்கம் போன்றவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன பெரிதான பிரயோஜனம் இருக்கப் போகின்றது.  குறைந்தபட்சம் நீங்கள் சொன்னமாதிரி ரொம்ப நாளா தேடிக்கிட்டுருந்த புரிந்துணர்வு உள்ள ஆணாக நான் தெரிவதால் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கொட்டிவிட பாக்குறீங்கன்னு நினைக்கின்றேன்."  

"நீங்களே உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் போய் சொல்லிப்பாருங்க. யாரும் நம்ப மாட்டாங்க.  நானே போய் ஒரு பெண் அறிமுகமான கொஞ்ச நேரத்தில் சொந்தக் கதை சோகக்கதையை பகிர்ந்துகிட்டார்ன்னு யார்க்கிட்டேயும் சொல்லமுடியுமா?  நான் சொன்னாக்கூட என் நண்பர்கள் என்ன சொல்வார்கள்.  பெண் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கடைசியில் என்ன நடந்தது என்று வேறு வித அர்த்தத்தில் கேட்டு அர்த்தபுஷ்டியாய் பார்ப்பார்கள்" என்றேன்.

அவரின் வேகம் மட்டுப்பட்டது போல் தெரிந்தது. 

சற்றுநேரம் வெளியே ஓடிக் கொண்டுருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டுருந்தார். மெல்லிய வெளிச்சத்தில் அவர் கண்களில் வடிந்து கொண்டுருந்த நீரைப் பார்த்து சற்று தர்மசங்கடமாக இருந்தது. 

காயப்படுத்தி விட்டோமோ? என்று ஆற்றாமையாக இருந்தது. மனம் முழுக்க இருந்த அவரின் ஆதங்கத்தை ஏதோவொரு வழியில் இறக்கிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஏராளமான அவஸ்த்தையான சிந்தனைகள் அவருக்குள் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  அவரின் கண்ணீரைக் குறித்து கேட்டாலோ அது இன்னமும் அதிகப்படுத்துவதாக மாறிவிடும். 

அழுகை என்பது எனக்குப் பிடிக்காத விசயம்.  அதுவும் பெண்கள் கண்களில் இருந்து பொல பொலவென்று வரும் கண்ணீர் எனக்கு எப்போதும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அவருக்கு ஆறுதல் சொல்ல விரும்பாமல் இருக்கைக்கு திரும்பி வந்து பைக்குள் வைத்திருந்த திண்பண்டங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.  

"எனக்கு நொறுக்குத்தீனி பழக்கமுண்டு.  உங்களுக்குண்டா?" என்றேன்.

நான் அவரை இயல்பு நிலைக்கு மாற்று விரும்புவதை புரிந்து கொண்டு சிரித்து விட்டார். நான் நீட்டியதில் இருந்து முறுக்கை எடுத்துக் கொண்டார்.

மெதுவாக அவரை இயல்பு நிலைக்கு மாற்றி முடிந்த போது அவரின் கதை சொல்லும் நேரமும் தொடங்கியது.

"நம்முடைய முன்னோர்கள் குறித்து நமக்குள் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் இருக்கும்.  ஆனால் எனக்கு முன்னால் என் குடும்பத்தில் இருந்த மூன்று தலைமுறைகளைப் பற்றி தெரிந்த போது வியப்பாகத்தான் இருந்தது. காரணம் எங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக தவறாமல் வந்து கொண்டுருந்த குடிப்பழக்கம்.


தாத்தாவின் அப்பாவுக்கு கள்ளு என்றால் கொள்ளைப்ப்ரியம். ஆனால் தாத்தாவிற்கு சாரயமே போதுமானதாக இருந்தது.  ஆனால் என் அப்பாவுக்கு விஸ்கியை குடித்தால் தான் பொழுதே விடியும். அந்த அளவிற்கு மொடாக்குடியராக இருந்தார்." 

"எங்களின் குலத்தொழிலே இந்த துணிகளோடு தான் இருந்தது. கைத்தறி சேலைகள் முதல் பட்டுப்புடவை வரைக்கும் தாங்களே வடிவமைப்பு செய்வது வரைக்கும் தொழில் ரீதியாக நல்ல நிலையில் தான் மூன்று தலைமுறையும் இருந்தது.  ஆனால் அப்பாவிடம் தொழில் வந்த போது உருவான தொழில் போட்டிகளிலிருந்து அவருக்கு மீண்டுவரத் தெரியவில்லை. அவருக்கு மற்றொரு பிரச்சனை. என் அம்மாவின் அழகு.  எங்கள் வீட்டுக்கு எவரும் எளிதில் வந்து விட முடியாது.  அப்பா தொழில் மேல் வைத்திருந்த கவலைகளை விட அம்மா குறித்து தனக்குள் வைத்திருந்த மாய பிம்பங்கள் தான் அதிகமாகயிருந்தது.  அதுவே எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்ற மாய வலைக்குள் அப்பாவை சிக்க வைத்துவிட்டது. என்னுடைய பள்ளி காலங்களில் ஒவ்வொரு நாளும் அம்மாவின் காயங்களைப் பார்த்தபடியே தான் சென்று கொண்டுருந்தேன்.  அதன் தாக்கம் என்னை பலவிதங்களிலும் படுத்தி எடுத்தது.  என்னுடைய ஒரே தம்பியிடம் கூட இவற்றை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவனும் ஏறக்குறைய அப்பாவின் மறு உருவமாகவே இருந்தான்." 

"பெண் என்பவள் அடுக்களைக்குள் இருப்பவள் என்ற அவர்களின் ஆணாதிக்க கருத்தை என்னால் உடைக்க முடியவில்லை. ஆனால் அம்மாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது.  எந்த பிரச்சனைகளையையும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்." 

"அவரின் நோக்கமெல்லாம் என்னை கல்வி ரீதியாக மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். பட்ட காலிலே படும் என்பது போல பத்தாவது வந்த சேர்ந்த போது என்னைச் சுற்றி வந்து கொண்டுருந்த பையன்களின் பேச்சும் செயல்பாடுகளும் அப்பாவை ரொம்பவே யோசிக்க வைக்க என் படிப்பையும் நிறுத்தி விட்டார்."

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். 

நான் கூர்ந்து கவனிக்கிறேனோ என்பதை கவனிப்பது புரிந்தது. எந்த வியப்புக்குறியும் எனக்குள் இல்லாததைப்பார்த்து அவரின் முகத்தில் வித்யாச ரேகைகள் தெரிந்தது.  நான் கவனித்த போதிலும் வெறுமையாக போலித்தனமாக சிரித்து வைத்தேன்.  ஆறுதல் சொல்வேன் என்று நினைத்துருப்பாரா தெரியவில்லை. ஆனால் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரின் கேள்வி உணர்த்தியது.


"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார்

நான் பதில் சொல்ல முயற்சிப்பதற்குள் "என் அப்பா குணாதிசியத்தை தெரிந்து கொண்டு அப்புறம் உங்கள் கருத்தைச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அப்பாவைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

அது பாஸ்பரஸ் குண்டாக இருந்தது.

Saturday, November 27, 2010

பெண் நட்பூ

நட்பு, தோழமை, ப்ரியம், பரஸ்பர புரிந்துணர்வுகள் போன்ற பல வார்த்தைகள் சம காலத்தில் வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளர்களாக மாறி வரும் உலகில் புனிதமான உறவுகளுக்குண்டான அர்த்தங்களும் மாறிக் கொண்டே வருகின்றது..

ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் சொத்துக்காக அடித்துக் கொள்வது முதல் பாரபட்சம் காட்டும் பெற்றோர்கள் வரைக்கும் அவரவருக்குண்டான அவஸ்ய தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு போலித்தனமாக முகமூடி அணிந்து கொண்டு தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுருக்கிறார்கள். 


ஒவ்வொரு சமயத்திலும் பள்ளி முதல் கல்லூரி வரையிலுமான நான் பழகி வந்த நண்பர்களை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு.  முதல் வகுப்பு முதல் பத்து வரைக்கும் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்த கோவிந்தராஜனை விட ஒன்பதில் அறிமுகமான மாதவனுடன் அதிகம் நெருக்கமாய் பழகி ஆழமான வேருடன் கிளை பரப்பி நிற்க முடிந்துருக்கிறது.  அதுவே இருவரையும் பல நிலைகளிலும் ஒன்று சேர வைத்திருக்கிறது. இடையில் புகுந்த சிலரால் இருவரையும் பகையாளியாகவும் மாற்றி இருக்கிறது.

அற்ப காரணங்கள் இருவரையும் புரட்டிப் போட்டு தடம் மாறி வெவ்வேறு பாதையில் போய்க் கொண்டுருந்தாலும் இருவரிடத்திலும் இருக்கும் ஆழமான அன்பு மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. இருவருமே இன்று வரையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொண்டுருந்த போதிலும் கூட.

அவனுடன் கடந்த பத்து வருடங்கள் பேச்சு வார்த்தை இல்லையென்ற போதிலும் ஊரில் இப்போது கூட மற்றவர்களிடத்தில் " ஏன்டா அவன் என்னமோ எழுதிக்கிட்டு இருக்கானாம்ல" என்று மற்றவர்களிடம் கேட்டு இந்த வலைதளத்தை படிக்க முடியா சூழ்நிலையில் வேறொரு வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டுருக்கின்றான். 

மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே காட்டிக் கொள்ளாமல் அங்கலாய்ப்பது வரைக்கும் அவனின் ஏக்கம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. ஆனால் அளவாய் நிதானமாய் என்னுடன் இருந்த கோவிந்த்ன் இந்த வலை எழுத்துக்களை சமீபத்தில் உள்நுழைந்து படிக்க ஆரம்பிக்க இன்று "உன்னை நினைத்து பெருமையாய் இருக்கு" என்பது வரைக்கும் புரிந்துணர்வாய் தொடர்ந்து கொண்டுருக்கிறான். 

எந்த இடத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத போது உருவாகும் அன்பு என்பது சாகும் வரைக்கும் நம்மோடு தான் இருக்கும். சாசுவதமென்பது நம் கையில் மட்டுமே.  சாகாவரம் கூட நம்முடைய வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது..பழமொழிகள், அறிவுரைகள் என்பதைவிட ஒவ்வொருவரின் அனுபவங்கள் கொடுக்கும் பாடத்திற்கு இணையான வேறு ஏதும் உலகில் உண்டா?

இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்..  திரைப்படம், பாடல்கள், ஓவியம், அரட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், மற்ற கெட்ட பழக்கங்கள் என்று ஒரே பாதையில் இரு நபர்களை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் இருவரும் பிரிவதற்கான காரணங்களை பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது. 

நான் ரயில் பயணத்தில் சந்தித்த பெண்ணுக்கும் எனக்கும் முன் பின் பழக்கமோ வேறெந்த வகையிலும் அறிமுகமோயில்லை.அவருடன் நான் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானதற்கு முக்கிய காரணம் திருப்பூர். 

திருப்பூர் சார்ந்த நபர் என்றதும் அந்த எண்ணம் இயல்பாகத் தோன்றியது. நான் பேசத் தொடங்கியதும் அதுவே தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ச்சியாக நீட்டித்துக் கொண்டு செல்ல இந்த ஆடை உலகமே காரணமாக இருந்து.

அரட்டை என்பதில் தொடங்கி இருவருக்குள்ளும் இருந்த ஏராளமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது வரைக்கும் முடிவில்லாத நிலையாக போய்க் கொண்டுருந்தது. அவர் என்னைப் பற்றி விசாரித்து முடித்ததும் அவரின் அறிமுகம் தொடங்கியது. அப்போது தான் அவரின் தற்போதைய நிலை குறித்து புரிந்து கொள்ள முடிந்தது 

அவரின் பெயர் நாகமணி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆடைகள் பிரிவின் இந்திய பிரதிநிதியாக பணியாற்றிக் கொண்டுருக்கிறார். .உலக நாடுகளை சுற்றி வருவதென்பது இவரைப் போன்றவர்களுக்கு உள்ளூர் சுற்றுவது போல. வாங்கும் சம்பளம் பெரும்பாலும் அமெரிக்கன் டாலரில் தான் இருக்கும்.  வரி பிரச்சனையில்லாத வாழ்க்கை.  வாங்கும் சம்பளத்தை வசதிக்ளுக்காக தொலைக்க வேண்டிய அவஸ்யமில்லாமல் எல்லாவிதங்களிலும் வீடு தேடி வரும் வாழ்க்கையை பெற்றவர்.

இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்கள் போலவே இங்கு நடந்து கொள்வார்கள்.

இரண்டு காரணங்கள். 

ஒன்று இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவரைப் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.  மற்றொன்று இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஒத்ததாகவே இருக்கும்.  நம்மவர்களுக்கு பிடிக்க சொல்லவா வேண்டும்.  வாய் கொப்பளிக்கக்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேட்கும் இவர்களின் நடவடிக்கைகள் நான் ஏற்கனவே அறிந்ததே.

என்னுடைய அனுபவத்தில் வட நாட்டு இந்தியர்களைத் தான் இது போன்ற பதவிகளில் அதிகம் பார்த்துருக்கின்றேன். நம்மவர்கள் இருந்தாலும் அல்லக்கை நொல்லக்கை போலவே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரும் டெல்லி மும்பாயிலிருந்து பல ஆண்டுகள் திருப்பூர் வந்து போய்க் கொண்டு இருந்தாலும் அல்லது இங்கேயே அலுவலகம் வைத்திருந்தாலும் வாயிலிருந்த ஆங்கிலம் மட்டுமே கொப்பளித்துக் கொண்டுருக்கும்.

தமிழ் பேசத் தெரிந்தாலும் மறந்தும் கூட வந்து விடாது.  ஆனால் தனக்கான பிச்சைக்காசை கேட்கும் போது குழைவில் வரும் மழலைத் தமிழைக் கேட்க நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

ஆனர்ல் அந்த பெண்ணின் உரையாடல் அவரின் பதவி குறித்து நான் மனதில் வைத்திருந்த அத்தனைக்கும் எதிர்மாறாய் இருந்தது. 


அவர் பேசிய வார்த்தைகளில் அவஸ்யமில்லா தருணங்களைத் தவிர ஆங்கில வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு பாசாங்கு இல்லாமல் பேசிக் கொண்டுருந்தார்.

எங்களின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 

உள்ளேயிருந்த மற்ற நான்கு பேர்களும் வயதானவர்களாக இருந்த காரணத்தால் அவர்களின் உறக்கம் என்னை யோசிக்க வைத்தது. ஆனால் அவர் மடை திறந்த வெள்ளம் போல உற்சாகமாக ஒருக்களித்து படுத்தபடியே என் முகம் பார்த்து பேசிக் கொண்டுருந்தார்.  ரயில் பெட்டியின் உள்ளே எறிந்து கொண்டுருந்த மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் அவரின் கற்றை சுருள் முடிகள் புதுக் கவிதைகளை எழுதிக் கொண்டுருந்தது. அவரின் இயல்பான தமிழும் எதார்த்தமான வார்த்தைகளும் எனக்குள் இருந்த அவர் குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.  

பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் தந்திரங்கள், தரம் குறித்த எதிர்பார்ப்புகள், திருப்பூரில் வாழ்ந்தவர்களின் சரித்திரங்கள், வீழ்ந்தவர்களின் தரித்திர பட்டியலுமாய் இருவரின் பேச்சுகளும் தண்டவாள ரயில் போல ஓரே மாதிரியான சீரான வேகத்தில் ஓடிக் கொண்டுருந்தது. அவரின் உலக அறிவுக்கும் என்னுடைய உள்ளூர் அறிவுக்கும் பெரிதான இடைவெளிகள் தோன்றாமல் இருக்க இருவருமே மனதிற்குள் வியப்புக்குறியை குறித்துக் வைத்துக் கொண்டுருந்தோம். 

பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. 

சொந்த வாழ்க்கை பகிர்தல் தொடங்கியது. வெவ்வேறு பாலினமாக இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கை இருவருக்கும் பொதுவானதாக இருக்க அதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியாய் இருந்தது. 

குடும்பம், குழந்தைகள் என்று பேசத் தொடங்கிய போது அவரின் முகமும் மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் தொடர விரும்பியதும் அவராக இருந்தாலும் தொழில் குறித்து உரையாடிய போது இருந்த அவரின் வேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது.  நான் உணர்ந்து ஒதுங்க நினைத்த போதிலும் பெண் குழந்தைகள் என்றதும் அவர்களைப் பற்றி மிக ஆர்வமாய் விசாரிக்கத் தொடங்கினார். இது போன்ற குறுகிய பயணங்களில் உருவாகும் நட்பென்பது வினோதமானது.  சில சமயம் வீபரீதம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடும். 

ஜெம் கிரானைட் வீரமணி அவர்கள் ஒரு விமான பயணத்தில் தன அருகே அமர்ந்திருந்த பெண்ணுடன் உரையாடத் தொடங்கியதன் விளைவே அமெரிக்காவின் பிரபல்ய கட்டிடத்திற்கு கிரானைட் கல் பதிக்கும் ஒப்பந்தம் கிடைத்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் வாழ்க்கையில் நடந்து மற்றொருமொரு விபரீத சம்பவம் இந்த சமயத்தில் என் நினைவில் வந்து போனது. 

என்னுடைய நண்பர் நாககோவிலிருந்து திருப்பூருக்கு வந்து கொண்டுருந்தார். பேரூந்து இருக்கையில் அவர் அருகே அமர்ந்த நபரும் திருப்பூர் என்பதால் இருவரும் மிகுந்த சந்தோஷமாகவே பரஸ்பரம் பலவற்றையும் பறிமாறிக் கொண்டு வந்து இருந்திருக்கிறார்கள். . பகவான் வேறொரு வகையில் தன் விளையாட்டை தொடங்க ஆரம்பித்தது வினை. 

என்னுடைய நண்பர் பேச்சு வாக்கில் தனக்கு பிடித்த ஸ்டார் நடிகர் பெயரை வெகு சிலாக்கியமாக பேச பேரூந்தில் அறிமுகமானவருக்கும் பயங்கர சந்தோஷம்.  காரணம் அவர் அந்த நடிகரின் வெறியர்.  கேட்கவா வேண்டும்.  சொந்தக் கதை சோகக்கதையிலிருந்து தடம் மாறி அந்த ஸ்டார் நடிகரின் கதையின் உள்ளே நுழைய இருவரும் கட்டிபிடி வைத்தியர்களாக மாறிவிட்டனர். இடையே ஒரு பேரூந்து நிறுத்தத்தில் வண்டி நின்றது.  அறிமுகமான நண்பர் கட்டாயப்படுத்தி என் நண்பரை உள்ளே இருந்த டாஸ்மார்க் கடைக்கு அழைத்துச் செல்ல இருவரும் உற்சாகத்தில் மிதக்க அவர்கள் வந்த பேரூந்து இவர்களை காணாமல் கிளம்பி விட்டது.  

அடித்த மப்பில் இருவரும் நடிகரைப் பற்றி பேசிக் கொண்டே செல்ல என் நண்பர் தெரியாத்தனமாக ஒரு வார்த்தையை விட்டு விட்டார்.  ஸ்டார் நடிகரின் பழைய வாழ்க்கையில் திருச்சி விமான நிலையத்தில் அந்த நடிகர் மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை பேசத் தொடங்கி விட மப்பு உச்சத்தில் இருந்த நண்பருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. வாக்குவாதம் தொடங்கி, தொடர்ந்து முற்றி முடிந்த போது ஐந்து நிமிடத்தில் உடைத்த பீர் பாட்டில் என் நண்பரின் கையில் நுழைய உயிர் தப்பினால் போதும் என்று திருப்பூர் வந்து சேர்ந்தார். 

நான் கேட்டு முடித்த போது நண்பர் வருத்தப்படுவாரே என்று வெளியே வந்து சிரித்து விட்டு மீண்டும் மீண்டும் அடக்க முடியாமல் வாயில் தண்ணீர் குடிப்பது போல நடித்து புரையேற்றத்துடன் அவர் அருகில் நின்று ஆறுதல் சொன்னேன். இதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் வேறு விதமாக கேட்டேன். 

"உங்களுக்கு நிச்சயம் காலையில் நிறைய வேலைகள் இருக்கும்.  தூங்குங்களேன்" என்றேன்.

அதற்கு அவரின் பதில் வேறுவிதமாக இருந்தது.

"அது என்ன உங்கள் குடும்பத்தைப் பற்றி பேசி விட்டு என் குடும்பக் கதையைக் கேட்க விரும்பமில்லையா?" என்றார்.

ஆமாம் இல்லை என்று சொல்லத்தெரியாமல் மையமாக புன்னகைத்தேன்.
அவரே தொடர்ந்தார். 


"உங்களுக்கு விருப்பம் என்றால் வாசல்படிக்கு அருகே சென்று பேசலாமா?" என்றார்

பயமும் படபடப்புமாய் ரயில் பெட்டியின் இரண்டு வாசலுக்கும் நடுவில் எதிர் எதிரே நின்று கொண்டுருந்தோம்.  

ரயிலின் வேகம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. இரண்டு பக்கமும் வெளியே தெரிந்து கொண்டுருந்த வெளிச்சம் இருட்டு, ரயில் சத்தம், என்று அத்தனையும் ஒரு கணம் என் காதில் கேட்கவில்லை.  காரணம் அந்த பெண்மணி வீசிய வெடிகுண்டு.

வெடிகுண்டு வந்து என்னைத் தாக்கியது.

"என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி" என்று தொடங்கினார்..

Sunday, November 21, 2010

பெண்கள் சு...... தந்திரம்

ஏன் இப்படி?

இந்த கேள்வி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து முடிந்தபிறகு தான் நம்மை பலவிதமாக யோசிக்க வைக்கும்.

அடுத்த பதிவைக் காணவில்லையே என்று யோசித்தவர்களுக்கு மட்டும்?

திடீரென்று என்னுடைய ஒரு விரலுக்கு வந்த பிரச்சனை எனக்கு பல விதங்களிலும் உதவியது.  


கலாச்சாரம் குறித்த அத்தனை எழுத்துக்களையையும் வாசிக்க முடிந்தது. ஆனால் மொத்தத்திலும் என்னை ரொம்பவே ஆசுவாசப்படுத்தியவர் நசரேயன்.  ஹாலிவுட் பாலாவிற்குப் பிறகு அவரின் பணியை இவர் எடுத்துக் கொண்டு கலக்கிக் கொண்டுருக்கிறார். 

பெண்கள் குறித்த தலைப்பு எழுத காரணமாக இருந்தவர் ரதி கனடா.    ஆனால் முகுந்த அம்மா நான் எழுதியதை படித்து முடித்தவுடனேயே அவர் ஒரு இடுகையாகவே போட்டு விட்டார். ஆனால் சகோதரி ஜெயந்தி கலாச்சாரத்தை மட்டும் பிடித்துக் கொள்ள பதிவுலகத்தில் புயலும் சூறாவளியுமாய் மாறி அது ப்ரியமுடன் வசந்த கொடுத்த தலைப்பு வரைக்கும் வந்து நின்றது.  இன்னமும் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது.

திருப்பூருக்குள் விடாமல் கலங்கடித்துக் கொண்டுருக்கும் மழையைப் போலவே இன்னும் கரையை கடக்காமல் பயமுறுத்திக் கொண்டுருக்கிறது. "நல்லவேளை நாளை பிழைத்துக் கொண்டேன்" என்று பாட வேண்டும் போலுள்ளது.  விந்தை மனிதன் என்ற ராசா மட்டும் இதை தெளிவாக கண்டுபிடித்து நீங்க தொடங்கி வைத்தது என்று "இனம் கண்டு கொண்டு" அழைத்துச் சொன்ன போது தான் தாமதமாக புரிந்து கொண்டேன். 

எப்போதும் தேனம்மை அவசரமாக வந்து செல்பவர் கூட ரொம்ப சிந்திக்க வைத்த பதிவு என்று தடவி கொடுத்து விட்டு நாம் என்ன நீதிபதிகளா? என்று நங்கெண்று ஒரு கொட்டு வைத்து விட்டு இரண்டு மூன்று நாட்கள் யோசிக்க வைத்துவிட்டார்.

அதிக நபர்கள் விமர்சனம் அளித்து ஒவ்வொருவரும் கடைபிடித்த நாகரிகம் ரொம்பவே வியக்க வைத்தது.  பயணமும் எண்ணங்களும் இதை வேறொரு பாதையில் விடாப்பிடியாக அவரின் புரிதல்லைகளை மிகத் தைரியமாகவே இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் துணிச்சலுடன் தெரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.

இந்த இடுகை கேள்வி பதில் போல கொண்டு போக முடியும். ஆனால் அதை கடைசியாக வைத்துக் கொள்வோம். 

தெகா வசிக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தைப் பற்றி ஒரு சிறப்புக்கட்டுரை இங்குள்ள ஒரு பத்திரிக்கையில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அமெரிக்காவை பார்க்காத எனக்கு அது ஒரு செய்தி மட்டுமே. கூர்ந்து படிப்பவர்களுக்கு எழுதியவரின் வார்த்தை ஜாலங்களை மனதில் குறித்து வைத்துக் கொள்ளமுடியும்.  ஆனால் அந்த மாநிலத்தில் நீண்ட காலம் இருந்தவர்களுக்கு அந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட நம்பகத்தன்மை எளிதில் புரிந்து விடும். இந்த உதாரணத்தை வைத்துக் கொண்டு கலாச்சாரம், சுதந்திரம், பெண்கள் போன்ற வார்த்தைகளை மனதில் கொண்டு வாருங்கள். ராஜ நடராஜன் கூட ஒரு பதிலில் நீர் ஆகாரம் சாப்பிட்டு வந்து இருக்கின்றேன். நீங்க அசைவத்தைக் காட்டி பயமுறுத்துறீங்களே? என்றார். ஏன் வெளிநாட்டில்  வந்து செட்டிலாகிவிட்டேன். நான் பர்கர் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று பீலா விட வேண்டியது தானே? உள்ளும் புறமும் ஒரே மாதிரி வாழ வேண்டும் என்று நினைப்பவர்களின் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். 

இல்லாத போது?

நண்பர் சொன்னமாதிரி கூகுள்காரன் காசு கேட்காத வரைக்கும் தோன்றியவற்றையெல்லாம் எழுதி "சேவை" செய்து கொண்டுருக்க வேண்டியது தான்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பலருக்கும் அடிப்படையான குணாதிசியங்கள் ஏன் மாறமாட்டேன் என்கிறது. காரணம் நம்முடைய வேர்கள் எவ்வாறு ஊன்றி இருக்கிறதோ அது தான் இந்த கலாச்சாரம்,பெண்கள் சம்மந்தப்பட்ட புரிதல்கள்.

நான் இருக்கும் நாட்டில் எத்தனை புரிந்துணர்வுடன் இருக்கிறார்கள்? கொஞ்சம் மேலே வாங்கப்பா? என்று சொல்லிக்கொண்டுருப்பவர்களுக்கு மட்டும் ஒரு செய்தி.

சற்று நேரத்திற்கு முன் குழந்தைகளுடன் தொலைக் காட்சியில் பிதாமகன் படத்தை பார்த்தேன். பல முறை பார்த்திருந்த போதிலும் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போலவே இருக்கும். குழந்தைகள் படத்தில் வந்த சூர்யா இறந்து போனபிறகு வரும் காட்சி தொடர்பாக மூன்று பேர்களும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே யிருந்தார்கள்.  இறப்பு, துக்கம், சடங்கு, எறியூட்டல், மயானம், பிணம், மனித வாழ்க்கை போன்ற பல விசயங்களை பொறுமையாக புரியவைத்தேன். 

சில மாதங்களுக்கு முன்பு வன்முறை காட்சிகளை பார்த்து விட்டு குழந்தைகள் மாறி மாறி நடு இரவில் அலறிய நிகழ்ச்சிகளும் நடந்ததுண்டு.  அவர்களின் சுதந்திரத்தை தடை செய்ய விரும்பாமல் அதே சமயத்தில் அசந்தர்ப்பவிதமாக பல விதங்களிலும் அவர்கள் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாலும் அந்த காட்சிக்குப் பின்னால் நடிப்பவர்கள் எந்த விதமாக தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள்? நடிப்பு என்பது என்ன?  அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம்?  நாம் ஏமாறுவது எப்படி? போன்ற பல விசயங்களை புரியவைத்த பிறகு இப்போது சற்று மட்டுப்பட்டு இயல்பாக பார்த்துக் கொண்டே அப்பா டூப்பு சாயத்தை போட்டுக் கொண்டு தானே நம்மை ஏமாற்றுகிறார்கள்? என்று சிரித்துக் கொண்டு சொல்லும் அளவிற்கு அவர்களை மாற்ற முடிந்ததுள்ளது.  

இவர்களே மறுநாள் பள்ளியில் குழந்தைகளுகளுடன் உரையாடும் போது இதில் பெரிதான பிரச்சனை வர வாய்ப்பு இருக்காது.  ஆனால் மேலை நாட்டினரைப் போல நானும் என் குழந்தைகளுக்கு பாலியல் விசயங்களை புரியவைக்கின்றேன் என்று முயற்சிக்கும் போது?

அவர்களுக்கு புரிகின்றதோ இல்லையோ அவர்கள் எத்தனை பேர்களுடன் உரையாடி இதனால் எந்த விதமான பிரச்சனைகள் உருவாகும் என்பதை நினைத்துப் பார்க்கமுடிகிறதா?  குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விசயங்களை புரிந்து கொண்டாலே போதுமானது. 

எல்லாவற்றையும் புரிய வைக்க முயற்சிக்கும் போது தலைகீழ் விதிகள் தான் இடுகை வரைக்கும் வந்து நிற்கும்.

காரணம் இது தமிழ்நாடு.

இங்குள்ளவர்களைப் பற்றி, இங்குள்ள வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி யோசிக்கும் போது எல்லாவிதங்களையும் யோசித்துதான் எழுத வேண்டியதாய் இருக்கிறது.  பெரும்பாலும் மனதில் வக்கிர சிந்தனைகள் அதிகமாக இருப்பவர்கள் தங்களை பரிசுததமானவர்களாகத்தான் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மட்டும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இதைப் போலத்தான் கலாச்சாரம் என்ற கருமாந்திரமும்.

ஒவ்வொருவரும் பதிவின் வாயிலாக இப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை விட என் பார்வையில் என்னுடைய குழந்தைகளுக்கு கல்வி அறிவைப் போல வாழும் சமூகத்தோடு எவ்வாறு இசைந்து வாழ பழகிக் கொள்கிறார்கள் என்பதில் அவர்களின் வெற்றியும் இருக்கிறது என்பதை பல விதங்களிலும் 
புரிய வைக்க முயற்சிக்கின்றேன்.


அவர்களின் வாழ்க்கை எந்த நாடு என்பதில் பிரச்சனையில்லை? அவர்களின் அடிப்படை வேர்களை புரிந்து இருந்தால் வாழும் வரைக்கும் பிரச்சனை இல்லை.  குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியமானது. இதில் ஆணாதிக்கம் என்ற அரைவேக்காட்டுத்தனத்திற்கு என்னிடம் பதில் இல்லை.

கெட்டுச் சீரழிய புதிதாக எவரேனும் சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டுமா? 

வாழ்ந்த கிராமத்தில் ஒரு விதமாகவும் வந்து சேர்ந்த தொழில் நகரத்தில் ஒரு விதமாகவும் வாழ்ந்து கொண்டுருக்கும் பல ஆயிரம் பெண்களை பார்த்துக் கொண்டு இருப்பதால் இதை எழுதி வைக்கத் தோன்றுகிறது.

ரதி நீங்கள் கேட்ட" உங்கள் பார்வையில் பட்ட பெண்கள் என்றால் இந்த கட்டுரை சிறப்பானது" என்று கலாய்த்த விதத்திற்கு இவ்வாறு தான் என்னால் யோசிக்க முடிகின்றது.  நான் வாழ்ந்து கொண்டுருக்கும் ஊரின் மற்றொரு சிற்ப்பு என்ன தெரியுமா? 

இந்தியாவில் உள்ள மொத்த மாநில மக்களையும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களையையும் பார்த்துக் கொண்டுருப்பது மட்டுமல்ல. தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் பல சமயங்களில் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் பழகி வர வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். இங்கு சமீப காலமாக பெண்களை மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வது  என்பது ஒரு கலாச்சாரமாக மாறிக் கொண்டுருக்கிறது. 

எங்கெங்கு காணிணும் பெண்களே" என்பது போல ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களும் பெண்களால் நிரம்பி வழிந்து கொண்டுருக்கிறது. . ஒரு பத்திரிக்கையாளர் தேடிச் சென்று பெறுகின்ற அனுபவத்தை அன்றாட வாழ்க்கையில் இவர்கள் இத்தனை பேர்களும் எனக்கு தந்து கொண்டுருக்கிறார்கள். இதன் தாக்கம் தான் பெண்களைப் பற்றி யோசிக்க உதவியது. இதைவிட உரைகல் வேறு எதுவும் வேண்டுமா? 

இது குறித்து பல விசயங்களையும் கடைசியாக பேசுவோம். 

சென்னையிலிருந்து திருப்பூருக்கு வருவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். முன் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டி திறப்பதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது. என் கையிலிருந்த புத்தக சுவாரஸ்யத்தில் என்னருகே வந்து அமர்ந்த பெண்னை நான் கவனிக்க வில்லை. வினோதமான நறுமணம் என் நாசியைத் தாக்க மெதுவாக நிமிர்ந்து பார்த்தேன். அவருடைய இளமையும் முக வசீகரமும் கவர்வதாய் இருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்த போது லேசாக முறுவலித்தார். நானும் புன்னகைத்து விட்டு மறுபடியும் புத்தகத்தில் மூழ்கிப் போனேன். இடைவிடாமல் கைபேசியில் பேசிக் கொண்டேயிருந்தார்.


அவர் வைத்திருந்த இரண்டு தொலைபேசிகளிலிருந்தும் மாறி மாறி அழைப்புகள் அவருக்கு வந்தபடியே இருந்தது.  என்னுடைய முழுக் கவனத்தையும் வாசிப்பில் கொண்டு போக முடியவில்லை. எனக்கு அறிமுக மில்லாதவர்களுடன் பேசும் பழக்கமில்லை. அவரை அசுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டேயிருந்த என்க்கு திருப்பூரிலுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை சொல்லி " அவர்கள் எப்போது நம்முடைய சாம்பிள் பீஸ் தருவார்கள்?" என்ற போது தான் அவரை முழுமையாக கவனிக்கத் தொடங்கினேன். நான் கையில் வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேறு பக்கம் திருப்பி வேடிக்கை பார்ப்பது போல் அவர் உரையாடலை கவனிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து அவர் பேசிக் கொண்டுருந்த தொலைபேசி உரையாடலில் திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட டையிங் நிறுவன பெயரை சுட்டிக் காட்டி பேசிய போது நேரிடையாகவே அவருடன் பேசிவிட வேண்டுமென்ற ஆவல் உருவானது. பெண் என்பதால் யோசித்துக் கொண்டுருந்த போது ரயில் பெட்டி திறக்கப்பட என்னுடைய படுக்கை இருக்கையில் போய் அமர்ந்த போது மற்றொரு அதிர்ஷ்டம் என்னைப் பார்த்து சிரித்தது. அந்த பெண்ணின் இருக்கையும் எனக்கு நேர் பக்கம் இருந்தது.

அவர் மடிக்கணினியை திறந்து அரைமணி நேரம் பார்த்து முடித்து விட்டு அலைபேசிகளை கொண்டுவந்திருந்த பையில் வைத்து விட்டு என்னை நோக்கினார். நீங்களும் திருப்பூரா? என்ற அவரின் கேள்வி எனக்கு திகைப்பாய் இருந்தது.  என்னுடைய பதிலை எதிர்பார்க்காமலேயே " நீங்கள் மனைவியுடன் உரையாடியதை வைத்தே கண்டு கொண்டேன்.  காரணம் அந்த நேரத்தில் திருப்பூரில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்." என்றார்.  

எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் இருந்தது.  தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டே தன்னருகே சுற்றிலும் உள்ள விசயங்களையும் கூர்மையாக கவனிக்கும் அவர் எனக்கு சற்று வினோதமாக தெரிந்தார். 

பாலு மகேந்திரா கதாநாயகிகளைப் போல இயல்பான கருப்பு நிறமும் வெள்ளை நிற சுடிதாருமாய் பக்கத்து விட்டு பெண்மணி போலவே தெரிந்தார். உடைகளில் பேச்சில் தெளிவும் நாகரிகமும் இருந்தது.  என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டுருந்த போதே அவரே உரையாடலை தொடங்கினார்.  

Friday, November 12, 2010

பெண்fகள், குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரம்

" பெண்களுக்கு சம உரிமை " என்ற கருத்து குறித்து எவராவது உங்களிடம் வந்து கேட்டால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?.

என்னால் தைரியமாகவே சொல்ல முடியும்.

 " முதலில் அவர்களுக்கு உரிமை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்.  அதன் பிறகு அவர்களின் உரிமையைப் பற்றி யோசிக்கலா மென்பேன்". இதை படிக்கும் பெண்களுக்கு கோபம் வருகின்றதா?
வாருங்கள் ஒவ்வொரு படியாக மேலே செல்வோம்.

இந்த கட்டுரை எழுத காரணமாக இருந்த கனடாவில் வாழும் ரதியே இப்போது தான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.  இதுவரைக்கும் கூர்மையான விமர்சனங்களால் ஆச்சரியப்படுத்தியவர் கொடுத்த தாக்கமே இந்த பதிவு.

நான் கடந்து வந்த பாதையில் பெண்கள் கொடுத்த தாக்கம் அதிகமானது.  முதல் இருபது வருடங்கள் என்னைச் சுற்றி ஏதோவொரு வகையில் பெண்கள் தான் அதிகமாகயிருந்தனர். அம்மா, சின்னம்மாக்கள்,, பாட்டி, அக்கா, தங்கை, என்று தொடங்கி பள்ளி, கல்லூரி வரைக்கும் பெண்களுடன் வாழ்ந்த வாழ்க்கை யென்பது இயல்பானதாகவே இருந்தது. 

கடைசியில் தட்டெழுத்துப் பயிலகத்தில் என்னை வைத்துக் கொண்டு கும்மியடித்த அக்காக்கள் வரைக்கும் இருந்தார்கள். கல்லூரியில் கூட எனக்கு முந்தைய வருடத்தில் படித்துக் கொண்டுருந்த பெண்கள் பேருந்தில் நல்ல பழக்கமாகியிருந்தார்கள். திருப்பூர் வந்து சேர்ந்த போது ஒவ்வொரு இடத்திலும் பெண்களுடன் பழக வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். எந்த இடத்திலும் நான் எல்லை மீறியதில்லை. வழிந்து கொண்டு என்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை.

பெண்களும் இயல்பானவர்களே என்று என் சிந்தனைகளும் மாறியிருந்த காரணத்தால் எந்த வித எதிர்மறை ஈர்ப்பும் உருவாகவில்லை. இந்த அடிப்படை பழக்கமே இன்றைய தொழில் வாழ்க்கையில் இழப்புகள் இல்லாமல் தாண்டி மேலேறி வர முடிந்துள்ளது. காதல், காமம் மீறி பெண்களை இயல்பாய் நேசிக்க முடிந்தது. விகல்பம் இல்லாமல் பழக முடிந்தது. 

இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. என்றபோதிலும் நான் பெண்களின் சுதந்திரத்தை ஆதரிக்க மாட்டேன்.  காரணம் நான் பார்த்தவரையிலும் பெண்களுக்கு சுதந்திரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இங்கே நான் சந்திக்கும் பெண்கள் மூன்று வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள். தகுதிக்கு மீறிய ஆசைகள், உல்லாசத்தை விரும்பு பவர்கள், அடிப்படை கடமைகளுக்கும் எதார்த்த நடைமுறைகளுக்கும் வித்யாசம் தெரியாத வர்கள்.  இப்படித்தான் இருக்கிறார்கள்.  இதில் ஏழை பணக்காரர் என்ற வித்யாசம் இல்லை. இங்குள்ள பாதிக்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களில் தங்களின் கணவனின் முறையற்ற வாழ்க்கையை எந்தவொரு முதலாளிமார்களின் மனைவிகளும் கண்டு கொள்வதில்லை. காரணம் அவரும் அதே போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார் ஏற்கனவே போடப்பட்ட  ஒப்பந்தம் போலவே இருவருமே வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். பணம் என்ற எல்லைக்கோடு இருவரையும் பிரித்து வைத்துருக்கின்றது. அதுவே அவர்கள் சேர்ந்து வாழவும் காரணமாக இருக்கின்றது.

நான் இங்கு சந்திக்கும் ஒவ்வொரு பெண்களும் தங்களின் சுதந்திரத்தை ஒரு சிறிய வட்டத்திற்குள் முடித்துக் கொண்டு விடுகிறார்கள். கண் புருவத்தை அழகு படுத்துவது. அளவு தெரியாத உதட்டுச் சாயத்தை அப்பிக் கொள்வது, உள்ளாடைகள் தெரியும் ஆடைகளில் அக்கறை காட்டுவது. உன் குத்தமா? என் குத்தமா என்று வீட்டில் சண்டை போட தயாராய் இருப்பது. தங்களால் சாதிக்க முடியாததை தங்கள் குழந்தைகளின் மேல் திணிப்பது. தங்களை மேல்தட்டு வர்க்கமாகவே மாற்றிக் கொள்ள அவசரப்படுவது, தொலைக்காட்சி பெட்டியின் முன் தவமிருப்பது போன்ற நூறு குற்றச்சாட்டுகளை என்னால் சுமத்த முடியும்.. கிரண்பேடி, இந்திரா நூயி, அருந்ததி ராய், அர்ச்சனா ராமசுந்தரம், மாலதி போன்ற பெண்கள் யாரென்று சமகாலத்து பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்?  கிடைக்கும் பதில்?????

அரசியல் குறித்து, ஆட்சி அதிகாரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவஸ்யமில்லை என்று கருதும் பெண்கள் தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமாக இருக்கிறார்கள். அரசியலில் பங்கெடுத்த பெண்களும்கூட கைப் பொம்மையாகத்தான் இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் சின்ன வட்டத்திற்குள் உழன்று கொண்டு பெரிய ஆசைகளுக்கு ஆசைப்படுபவர்கள் தான் இன்றைய பெண்கள். இவர்களிடத்தில் உண்மையான் உழைப்புமில்லை. உருப்படியான நோக்கங்களும் இல்லை.
பெண் என்பவளுக்கு இயற்கையாக அழகுணர்ச்சிகளில் ஆர்வமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் அளவு தெரியாத அவர்களின் செயல்பாடுகள் தான் எரிச்சலை உருவாக்குகின்றது. பெண் என்பவள் அப்பாவுக்கு, கணவனுக்கு, குழந்தைகளுக்கு மிக முக்கிய மானவள். இவர்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில் தான் அவளின் ஒவ்வொரு ஈடுபாடும் இருக்க வேண்டும். எத்தனையோ மனிதர்களின் தியாகங்களால் தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டுருக்கும் நவீனங்கள் நம்மை வந்து அடைந்துள்ளது. அதுபோலத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழந்த ஒவ்வொரு பெண்களின் தியாகங்கள் தான் பல குடும்பங்களின் ஆதாரமான ஆணி வேர்களை பாதிப்பாகாமல் இருக்க வைத்துக்கொண்டுருக்கின்றது.

ஒவ்வொரு பெண்களின் முதிர்ச்சியற்ற சிந்தனைகள் அவரை மட்டுமல்ல அவரை சார்ந்துள்ள கணவன் குழந்தைகள் முதல் அடுத்த தலைமுறை வரைக்கும் பாதிப்பை உருவாக்குகின்றது. அப்படியென்றால் ஆண்கள் ரொம்ப யோக்கியமா? என்ற கேள்வி வருமே? ஆண் என்பவன் சமூக வாழ்க்கையில் அண்ணன், தம்பி, அப்பா, கணவன் என்று தொடங்கி குடிகாரன், காமாந்தகன், பொறுப்பற்றவன், திருடன், ஏமாற்றுக்காரன் என்று எத்தனை பாத்திரங்கள் வகித்தாலும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெண்ணின் பாதிப்பு நிச்சயம் இருக்கும்.  நாம் நடந்து வந்த பாதையில் வெறுக்கக்கூடிய அளவில் வாழ்ந்த ஆண்களின் வாழ்க்கையை அவரவர் மனத்திரையில் கொண்டு வாருங்கள்.

ஒன்று அன்புக்காக ஏங்கியவன். அல்லது கிடைக்காத போது மாறியவன்.

எப்படி வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளுங்கள்.  எந்த இடத்திலும் ஆண் என்பவன் வெறும் ஜடம் மட்டுமே. ஆண்கள் தலைவர், அரசியல்வாதி, தொழில்திபர், பணியாளர், தொழிலாளர் என்ற எத்தனை சமூக அந்தஸ்தில் இருந்தாலும் அவனின் தொடக்கமும் முடிவும் ஏதோவொரு வகையில் இந்த பெண்களுடன் தான் இருக்கிறது, ஒவ்வொரு ஆணணும் முதன் முதலாக அம்மா என்ற பெண்ணின் கரங்கள் பட்டது முதல் மனைவி என்ற பெணணின் கைகளை தொடும் வரைக்கும் அவனின் சிந்தனைகள் ஒவ்வொன்றும் ஏதேவொரு பெண்களால் தான் மாற்றம் பெற்றுக் கொண்டே வருகின்றது.

நம்முடைய பார்வையில் ஒரு ஆண் தறுதலையாகவே அல்லது தரமான மனிதனாகவே இருந்தால் நிச்சயம் அதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் கைங்கர்யம் இருந்தே தீரும். நம்பக் கடினமாக இருக்குமே?  இது தான் உண்மை.

பெண்கள் என்றால் ஒவ்வொருவரும் அவரவர் அம்மாவிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் நான் என்னுடைய சகோதரிகளிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

என் அம்மா என்பவர் உழைக்க மட்டுமே பிறந்தவர்.  அப்பாவின் மறைவுக்குப் பிறகு தான் அவர் வெளியுலகத்தைப் பார்த்தவர். ஓய்வில்லாத வேலைகளிடையே அடுத்தடுத்து வந்து கொண்டுருக்கும் குழந்தைகளை கொஞ்சுவதற்கு கூட நேரமில்லாமல் அவர் வாழ்ந்த வாழ்க்கையென்பது நேர்த்திக்கடன் போலவே வாழ்ந்தவர். பெரிய குடும்பம்.  கூட்டுக் குடித்தனம்.  நிறைய நபர்கள்.  வேலைகளும் அதிகம்.  கல்லூரி முடிக்கும் வரையிலும் அம்மா மனம் விட்டு யாருடனும் பேசி நான் பார்த்தது இல்லை.

இன்று வரையிலும் அவர் உலகமே தனி தான்.  மூன்று நேர சாப்பாடு. முடிந்தால் தரையில் அப்படியே கால் நீட்டி சரிந்து கொள்ளும் எளிமை.  ஆடம்பரம் இல்லாத அவஸ்யத்திற்கு மேல் விரும்பாத அவரின் வாழ்க்கை இன்று வரையிலும் எனக்கு ஆச்சரியம் தான்.  காரில் சொன்று அழைத்து வந்தாலும் வரும் போது பெட்ரோல் செலவை கண்க்கை வைத்துக் கொண்டு திட்டும் அவரை நான் திருத்த முயற்சிப்பதில்லை.

சிக்கனம் தான் வாழ்க்கை என்பதை தன் வாழ்க்கை மூலம் இன்று வரையிலும் உணர்த்திக் கொண்டுருக்கிறார்.  அவரின் ஒவ்வொரு தியாகமும் இன்று எங்களை உயரத்தில் வைத்திருக்கின்றது. ஊர் முழுக்க இருக்கும் பெயரை காப்பாற்றி வைத்திருக்கின்றது.  நானே பலமுறை அம்மாவிடம் கலாய்த்திருக்கின்றேன்.

 " உன்னைப் போல நான் பெண்ணாக வாழ்ந்துருந்தால் வேறுவிதமாகத்தான் வாழ்ந்திருப்பேன் " என்று சொல்லியிருக்கின்றேன்.

ஆனால் நம்ம முடியாத அம்மாவின் சகிப்புத்தன்மை இன்றைய சூழ்நிலையில் ஒரு மிகப் பெரிய ஆலமரத்தை உருவாக்கியுள்ளது. பேத்தி பேரன்கள் என்று தொடங்கி அவர் குடும்ப வாழ்க்கையில் பெற்ற மொத்த ஆதரங்கத்தையும் மறக்கடித்துள்ளது.

நான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையில் எந்த அடிப்படை வசதிகளுக்கும் குறைவில்லை.  ஒரே ஒரு குறையைத் தவிர.  இன்று என் குழந்தைகள் வாழுகின்ற எந்த சுதந்திரத்தை நான் மட்டுமல்ல நான் பழகிய என்னுடைய எந்த நண்பர்களும் கூட பெற்றதில்லை.  நண்பர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் விதவிதமான நடைமுறைப் பழக்கம் இருந்ததே தவிர எவர் வீட்டிலும் கூடி அமர்ந்து குதுகலமாய் பேசிப் பழகி நான் பார்த்ததில்லை. அதிகப்பிரசங்கி என்று அடக்கி விடுவார்கள். இன்னும் கொஞ்சம் நாம் மீறினால் சேரக்கூடாதவன் என்ற பட்டியலில் சேர்த்து விடுவார்கள். .

சுதந்திரம் என்பது சுற்றித் திரிவதல்ல. சுகத்தை தேடி அலைவதும் அல்ல. நம்முடைய எண்ணங்களை தைரியமாக பகிரிந்து கொள்ள முடிந்தால் அதுவே பெரிய சுதந்திரம் தானே?  நான் என் அப்பாவின் முன்னால் நின்று பேசியது மிகக் குறைவு. அக்காக்கள் வழியாகவே ஒவ்வொரு செய்திகளும் கடத்தப்படும். இந்திய நாடென்பது ஜனநாயகப் பாதையில் இருந்தாலும் எத்தனை குடும்பங்களில் முழுமையான ஜனநாயகம் இருக்கின்றது? எத்தனை குழந்தைகள் முழுமையான தெளிவான சிந்தனைகளுடன் வளர முடிகின்றது. எந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முழுமையான புரிதல்களை சுட்டிக் காட்டி வளர்க்கின்றார்கள்?

கிராமத்து பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் உரையாடுவது குறைவு.  ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளின் ஒழுக்கத்தை கவனித்த அளவிற்கு அவர்களின் அறிவுக்கூர்மை எந்த அளவிற்கு வளர்கின்றது? என்பதை கவனித்துப் பாரத்து இருப்பார்களா என்பது சந்தேகமே. கிராம பள்ளி ஆசிரியர்கள் கூட மாணவர்களின் அதிகப்படியான கேள்விகளை விரும்பியதில்லை. பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரே வட்டத்திற்குள் உழன்று கொண்டுருநதே முக்கிய காரணம்.

ஆனால் இன்று அத்தனையும் உடைபட்டு விட்டது. ஒழுக்க விதிகளும் தளர்ந்து விட்டது.  இன்றைய சுதந்திரமென்பது உல்லாம் என்பதன் மறுபெயராக இருக்கிறது. ஆண்களைப் போலவே நாங்களும் சரி நிகர் சமானமே என்ற பெண்கள் கூட்டமும் பெருகி விட்டது.  படித்த பெண்களின் பொருளாதார சுதந்திரம் இன்று அடிப்படை வாழ்க்கையின் தன்மையையே மாற்றியுள்ளது. அடங்க மறுப்போம் அத்து மீறீவோம் என்று மாறியுள்ளார்கள். ஆண்களின் பிரச்சனைகளை விட இங்கு பெண்களால் உருவாகும் பிரச்சனைகள் பெரிய பஞ்சாயத்தாக முடிகின்றது.
அர்ச்சனா ராமசுந்தரம்
பெண்கள் பெற்ற பொருளாதார சுதந்திரம் என்பது இன்று பெரும் புயலாக உருவெடுத்துள்ளது. 

இது சரியா தவறா என்பதைவிட ஒவ்வொரு பெண்களும் தங்களை தகுதியான வர்களாக மாற்றிக் கொண்டுருக்கிறார்களா? அறிவு சுதந்திரத்தை மறந்து விட்டு உடுத்தும் ஆபாச உடைகளில், அலங்காரங்களின், பேசும் விதங்களில், ஒழுக்கம் மாறிய பாதைகளில் இன்று ஒவ்வொரு பெண்களும் தங்களின் பரிபூரண சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள்.

விதிவிலக்குகளைத் தவிர..

முக்கியமாக இன்றைய ஊடகமென்பது பெண்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.  ஒவ்வொரு விளம்பரங்களும் பெண்களை குறிவைத்தே உருவாக்கப்படுகின்றது. அழிந்து போய்க்கொண்டுருக்கும் குடும்பங்களில் ஆண்களின் மதுப்பழக்கம் எந்த அளவிற்கு காரணமாகயிருக்கிறதோ அதே அளவிற்கு பெண்களின் ஆடம்பர சிந்தனைகளும் முக்கியமாக இருக்கிறது.  தலைமுறைகளின் தடுமாற்றம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.

எந்த கிராமத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்குள் முன் அறையில் இருந்ததில்லை. படுக்கைறை காட்சிகளை லஜ்ஜையில்லாமல் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்த்ததுமில்லை. வீட்டுக்கு வரும் எந்த வார பத்திரிக்கைகளிலும் அரை நிர்வாண படங்களும் இல்லை. பரபரப்பு செய்திகள் என்பது மிக அரிது.  எந்த தலைவராவது இறந்தால் தான் படபடப்பு செய்தியாக வரும்.  ஒவ்வொரு மாணவனின் அறிவென்பது அவன் படிக்கும் பாடப் புத்தகங்களை சார்ந்தே தீர்மானிக்கப்பட்டது. அதிலும் வாங்கி வரும் மதிப்பெண்கள் தான் சமூக அங்கீகாரமாக இருந்தது. எந்த வகையில் பார்த்தாலும் கிராமத்து மனிதர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இயல்பான வாழ்க்கையாகவே இருந்தது.
கிரண்பேடி

இந்த வாழ்க்கையில் வாழ்ந்த மாணவர்களின் வாழ்க்கை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்?  நான் எதிர்காலத்தில் என்னவாகப் போகின்றேன் என்ற கேள்வியே எவரும் கேட்டு இருப்பார்களா? என்பதே சந்தேகம் தான். இப்படி படித்த பெண் குழந்தைகள் எந்த உயரத்தை அடைந்திருக்க முடியும்? ஆனால் என் அக்காக்களுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது. அவர்கள் பள்ளி கல்லூரியில் வாங்கிய மதிப்பெண்களை விட, அதனால் அடைந்த உயரங்களை விட தனக்கு விரைவில் திருமணம் ஆகி விட வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாகயிருந்தது.

காரணம் வயது அதிகமாக தெருவில் சந்திக்கும் கேள்விகளை தவிர்க்க வேண்டும் உட்கார்ந்திருக்கும் பதவிகளில் கை நிறைய வாங்கும் சம்பளம் முக்கியமில்லை. கைபிடித்தவனுடன் வாழ்க்கை என்பதில் தான் குறியாய் இருந்தார்கள். இன்னும் உனக்கு மாப்பிள்ளை வரவில்லையா? என்ற கேள்விகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இதைத்தான் தங்களின் முக்கிய லட்சியமாக வைத்திருந்தார்கள். நான் வெளியே பழகிய மற்ற அக்காக்களின் விருப்புங்களும் இப்படித்தான் இருந்தது. திருமணம் என்பது பெண்களுக்கு ஒரு வகையில் விடுதலை. பெற்றோர்களும் பாரம் குறைவு. மற்றொரு வகையில் குடும்ப அங்கீகாரம்.

கிராமத்துப் பெண்கள் இப்படித்தான் கருதினார்கள்.  ஆனால் இன்று?

ஆனால் கடந்த மாதங்களில் நான் சந்தித்த பெண்கள் என்னை ரொம்பவே பாதிப்படையச் செய்தார்கள். இதுபோன்ற பெண்கள் குறித்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களால் தான் என்னுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான சுதந்திரத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.


பெண்ணே நீ யார்? தொடர்ந்து பேசுவோம்.......................

Tuesday, November 02, 2010

கிராமத்து தீபாவளி

பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஓராயிரம் அர்த்தங்கள்.  எந்த மதமாகயிருந்தாலும் கொண்டாடப்படும் விசேடங்கள் பல உறவுச் சங்கிலிகளை இணைத்து வைத்துக் கொண்டு இருந்தது.  ஆனால் இப்போது இது போன்ற நாட்கள் நுகர்வோர் கலாச்சாரத்தின் விளைவாக உருவாகும் விலைவாசிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. எப்போதும் மாவட்டத் தலைநகரங்களில் எந்த பண்டிகைகளுக்கும் உண்மையான முக்கியத்துவம் கிடைப்பதில்லை. தலையா? இல்லை கடல் அலையா? என்று சொல்லும் தி நகர் சாலைகள் முதல் சராசரி நகர்புறங்கள் வரைக்கும் மக்களுக்கு தேவையோ தேவையில்லையோ உற்சாகமாய் தங்கள் வேட்டையை தொடங்குவது போலவே மாறிவிடுகிறார்கள்.

தினந்தோறும் நெரிசலுடன் வாழும் நகர்புற மக்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பண்டிகை தினமென்பது மற்றொருமொரு விடுமுறை தினம். ஆனால் நான் வாழ்ந்த கிராமத்து பண்டிகை காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கும் போது இயல்பான மனித பழக்கவழக்கங்கள் காலமாற்றத்தில் மாறிப் போயிருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது.

விவசாய வேலைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமத்து வாழ்க்கையும், அந்த கிராம மக்களின் விளைச்சல் பொருட்களுக்கு ஆதார சந்தையாய் விளங்கும் அருகே உள்ள சிறிய நகர்ப்பகுதிகளுக்கும் இந்த பண்டிகைகள் மிக முக்கியமானது. கிராமத்து தமிழர்களின் வாழ்க்கையில் பொங்கல் பண்டிக்கைக்கு உள்ள முக்கியத்துவம் போல தீபாவளிக்கும் முக்கியத்துவம் உண்டு.  

சேமித்த பணத்தை செலவழிக்க வைத்தது.  உறவுகளை தேடிப்போக வைத்தது. உணர்வுகளை பறிமாற வாய்ப்புகளை உருவாக்கியது. வாக்குவாதம், விவாதம், முட்டல், மோதல் என்ற ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளுக்குள் இருந்தாலும் எல்லாநிலையிலும் விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய அவஸ்யத்தை மறைமுகமாக உணர்த்த வைப்பதில் இந்த பண்டிகைகள் முக்கிய காரணமாக இருந்தது. 

நான் வாழ்ந்த கிராமத்து பள்ளியில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்கள்.  கிறிஸ்துவம் என்று பார்த்தால் பணிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஒற்றை இலக்கத்தில் இருந்தார்கள். கல்லூரிக்கு வந்த போது தான் இந்த மத மாச்சரியங்களின் வித்யாசங்களே தெரிய ஆரம்பித்தது. ஊருக்குள் இருந்த சின்ன‘ பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் என்று இரண்டு தொழுகைக்கான இடங்களும் சுற்றிலும் உள்ள இஸ்லாமிய மக்களும் இயல்பாக வாழ்ந்த காலம் 

இன்று அத்தனையும் மாறிவிட்டது. ஊருக்குள் இருந்த சில கிறிஸ்துவ குடும்பங்களும் பணி மாறுதல் காரணமாக வந்த அரசாங்க ஊழியர்களாக இருந்தனர்.  ஒவ்வொரு ஞாயிறு அன்று பக்கத்தில உள்ள காரைக்குடிக்கு தான் சென்று கொண்டுருந்தனர். மற்றபடி பழக்கவழக்கங்கள், பார்வைகளில் உள்ள வித்யாசங்கள் எதையும் நான் பார்த்தது இல்லை.

என்னுடைய பள்ளி நண்பர்கள் அணைவருக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள அர்த்தங்கள் தெரியாமல் எப்போதும் போல கூடுதல் விடுமுறை தினம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது. 


வீட்டில் பண்டிக்கைக்கு தேவைப்படும் பலகார வகைகளின் தயாரிப்புகள் மும்முரமாய் நடந்து கொண்டுருக்கும்.  ஒவ்வொரு தீபாவளிக்கு மூன்று நாளைக்கு முன்பே முக்கிய எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்து அத்தனையும் ஒவ்வொரு தூக்கு வாளியில் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும். தொட அனுமதி கிடைக்காது.  "சாமிக்கு படைத்த பிறகே சாப்பிடவேண்டும்" என்ற வாக்கியத்தை கேட்டு விட்டு குறுக்கு வழி யோசித்து சமயம் பார்த்து காத்திருப்பது உண்டு. குறிப்பிட்ட அறையில் ஆட்கள் போகாத நேரம் பார்த்து டவுசர் பைக்குள் அடைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விடுவதுண்டு. யாரும் பார்க்காத இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து தின்று முடிக்கும் போது எதையோ வென்ற திருப்தியாய் இருக்கும்.,

மொத்தமாக துவைக்க போட்டுருக்கும் துணிகளில் எண்ணெய் வாடை பார்த்து குதறிப்போட்ட எலிகளை வைத்தே நம் திருட்டுத் தனம் வெளியே வரும். தீபாவளி நாளில் காலை ஐந்து மணிக்கு அப்பா போட்ட சப்தத்தில் அலறியடித்துக் கொண்டு வரிசையாக நிற்க எண்ணெய் அபிஷேகம் நடந்து கோவணத்துடன் குளித்த வெந்நீர் குளியல் கண்களில் உள்ள பாதி தூக்கத்தை போக்கியிருக்கும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் சாமி படத்தின் முன் படையலுடன் வைக்கப்பட்ட புதிய பள்ளிச்சீருடைகளை அணிந்த பிறகு தான் அன்றைய தினத்தின் உற்சாகம் தொடங்கும். 

குடும்பத்தினரை பொறுத்தவரையில் காலையில் சாமி கும்பிட்டு காலைச் சாப்பாடு முடிந்தவுடன் பாதி தீபாவளி முடிந்து விடும். திருடித் தின்ற அத்தனை பலகாரங்களும் இலையில் இருந்தாலும் வெளியே ஒலித்துக் கொண்டுருக்கும் விடாத வெடிச்சத்தங்கள் இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கும்.  வாங்கி வைத்துள்ள வெடிக்கட்டு இரவு தான் பிரித்துக் கொடுப்பார்கள். புஸ்வாணம், கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை என்று ஆபத்தில்லாத மொத்த வெடிகளும் அப்போது தான் பார்வைக்கு வரும். அன்றைய தினத்தின் பொழுது மாறி அடுத்த நாள் கறிச்சாப்பாடு முடிந்ததும் தீபாவளியும் காணாமல் போய்விடும்.  எப்போதும் போல பள்ளிச்சீருடை கழட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும்.

நம்முடைய விருப்பங்கள் எதுகுறித்தும் தெரிந்து கொள்ளாமலேயே எத்தனையோ பண்டிகைகள் கடந்து போய்விட்டது. ஒவ்வொரு விசேடத்தின் போதும் வீட்டுக்கு வந்து போயக் கொண்டுருக்கும் ஒவ்வொருவருக்கும் படித்துக் கொண்டுருக்கும் கல்வியைப் பற்றி ஒப்பிக்க வேண்டிய சூழ்நிலை பலவற்றையும் உணர்த்திக் காட்டியது.  ஆனால் இன்று அப்பாவாய் வாழும் போது வருடத்திற்கு இரண்டு முறை இந்த தீபாவளி வரக்கூடாதா?  என்று கேட்ட குழந்தைகளின் கேள்விகள் தான் யோசிக்க வைத்துக் கொண்டுருக்கிறது. 


வீட்டில் குழந்தைகள் மூவருக்கும் மூன்று பாதைகள்.  .  ஒருவர் என்னைப் போல ஆடைகளில் பெரிதான ஆர்வம் இல்லாதவர்.  ஆனால் மற்ற இருவரும் ஆள் உயர கண்ணாடி முன்னால்  நின்று கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆர்வத்தை ஒளிந்து நின்று பார்க்கும் போது சிரிப்பாய் வருகின்றது.  அதிலும் கடைக்குட்டி எல்லாவிசயத்திலும் கரை தேர்ந்தவர்.  கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து தன்னுடைய விண்ணப்பத்தை எடுத்து வைக்கும் போதே அது உறுதிப்படுத்தப்பட்டதாகவே மாறிவிடும். இவரிடமிருந்து மீள முடியவில்லை அல்லது இயல்பாகவே ஏமாந்து விடுவது போல் நடித்து விடுகின்றேன்.


ஆடைகள் எடுக்க துணிக்கடைக்குள் நுழைந்து நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்த போது தனக்குத் தேவையான நாகரிக உடைகளை கொண்டு வந்து காட்டும் புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது?  மானத்திற்கான உடைகள் இன்று மனதுக்கு பிடித்து உடைகள் என்று மாறிவிட்டது. குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளுக்குப் பின்னாலும் ஒவ்வொரு ஊடக விளம்பரத்தின் தாக்கம் அதிகமாகவே இருப்பதை உணர முடிகின்றது.

இன்றைய தொலைக்காட்சி இல்லாத கிராமத்து மக்களின் வாழ்க்கையில் பேசிப் பழக நிறைய நேரம் இருந்தது.  ஆசைகாட்டும் ஊடக விளம்பர மோகம் இல்லை. எவருக்கும் தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய வருமானத்தை உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையே இன்று மாறியுள்ளது. காலமாற்றமும், விஞ்ஞான வளர்ச்சிகளும் விசேடங்களை தந்துள்ளதைப் போலவே பல விபரீதங்களையும் தந்துள்ளது.

வருமானம் இல்லாத போதும் கூட வட்டிக்கு வாங்கி செலவழிக்கும் ஆசைகள் இல்லாமல் ஒவ்வொரு மனிதர்களும் இயல்பான பழக்கத்தில் தனது தகுதியை உணர்ந்து வாழ்ந்து கொண்டுருந்த சூழ்நிலையும் மாறிவிட்டது.

கடன் வாங்கியாவது தங்களது கௌரவத்தை நிலைநாட்டும் பண்டிகைகளின் முழுமையான அர்த்தமும் இன்று வேறு விதமாக தெரிகின்றது. 

எண்ணெய் பார்க்காத தலைகளும், காலை குளியல் மறந்து, உணவுகளை தவிர்த்து ஒவ்வொரு மனிதனும் எந்திரமாகவே மாறிப் போன உலகில் தற்போதைய பண்டிகைகள் என்பது நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக தெரிகின்றது. 


நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் " என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது.  தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள்.  இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.

நண்பர்கள் அணைவருக்கும் தீப ஓளி திருநாள் வாழ்த்துகள்.