Thursday, November 30, 2017

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா


வணக்கம் -   நூல் விமர்சனம்  - 2

கலைஞரைப் பற்றி அவரின் தொடக்கக் கால வரலாற்றைப் பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசுபவர்களுக்கு இன்றைக்கும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற நூல் தான் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால் அதே கண்ணதாசன் எம்.ஜி.ஆர் குறித்து அலை ஓசை பத்திரிக்கையில் தொடராக எழுதினார் பாதியில் நிறுத்திவிட்டார். காரணம் பணம். கண்ணதாசனின் மொத்த கடன்களும் தீர்க்கப்பட்டது. அத்துடன் அந்த வருடமே கண்ணதாசன் அரசவைக் கவிஞராகவும் மாறினார். எம்.ஜி.ஆர் குறித்த தொடரும் நின்று போனது. தமிழக அரசியலை 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் இதனைப் பற்றித் தெரியும். 

எம்.ஜி.ஆர் தொடக்கம் முதல் அதிக அக்கறை காட்டிய இரண்டு விசயங்கள். ஒன்று தனது ஆரோக்கியம். மற்றொன்று தனது பிம்பம். திரைப்படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தனது மாயப் பிம்பம் கலைவதை எந்தக் காலத்திலும் சகித்துக் கொண்டேயில்லை. அந்தப் பிம்பத்திற்குள் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. ஆனால் நல்லது பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் அவருக்கு நிர்வாகம் தெரியாது, கோமாளி, மலையாளி என்ற அவப்பெயர்கள் துக்குநூறாகிப் போனது." நீ இருக்கும் வரையிலும் எங்களுக்கு நீ தான் ராஜா" என்று தமிழக மக்கள் மொத்த ஆதரவையும் வழங்கினர். 

ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் பழகிய ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவர். இவரைவிடவும் முக்கியத்துவம் பெற்று கடைசி வரைக்கும் அவர் நிழல் போல வாழ்ந்தவர்கள் பலர். எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைச் சுற்றி எப்படிப்பட்ட ஆட்கள் இருக்க வேண்டும்? அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் திட்டமிட்டு சரியாகவே செய்து வந்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கு உண்டான மதிப்பு வேறு. ஜேப்பியாருக்கு உண்டான மரியாதை வேறு. ஆனால் இருவருமே தங்கள் தலைவரை உயிரென நினைத்தனர். இதே போலப் பயில்வான்கள் முதல் பல்கலை வித்தகர் வரைக்கும் உண்டான அத்தனை பேர்களையும் அழகாக அவரருக்குண்டான மரியாதைகளுடன் வைத்திருந்தார். 

ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் குறித்து எழுதும் போதெல்லாம் எம்.ஜி.ஆரின் பலவீனங்களைச் சில வார்த்தைகளிலே சொல்லி புரிய வைத்து விடுகின்றார். "பலவீனம் என்பது மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அதில் விழுந்தால் யானை கூடப் பூனை தான்." 

ஆனாலும் எம்.ஜி.ஆரின் மொத்த பலவீனங்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றது அவரின் தயாள குணம். காரணம் அவரின் இளமைப் பருவத்தில் அவர் அடைந்த துன்பங்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவரும் அவர் குடும்பமும் பெற்ற துன்பங்களைக் கடைசி வரைக்கும் மறக்காமல் இருந்தது ஆச்சரியம். எவரைச் சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்பதும் இதனால் தான். 

எம்.ஜி.ஆரின் முதல் நாற்பது வருடங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூடக் கையேந்தும் நிலையில் வைத்த இயற்கையின் கருணைப்பார்வை அடுத்தடுத்து அவரை வளர்த்தது. நம்பமுடியாத அளவுக்குப் புகழ் வெளிச்சம் அவர் மேல் பரவி கொண்டேயிருந்தது. அஸ்தமனம் ஆகாத சூரியன் போலவே வாழ்ந்தார். அதனால் தான் அறிஞர் அண்ணா நம் சூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதே எம்.ஜி.ஆர் என்று உறுதியாக நம்பினார். இந்த நம்பிக்கை தான் அண்ணா முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது தான் தேர்ந்தெடுத்த அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆரின் பார்வைக்குக் கொடுத்து அவரின் ஒப்புதலையும் பெற வைத்தார். அவர் திருத்தியதையும் ஏற்றுக் கொண்டார். 

வளமிக்க, சக்திமிக்க, அதிகாரம் பொருந்திய மனிதராக மாற்றிய காலம் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை வெளியே சொல்ல முடியாத வெறுமையை, தனிமையை, உடல் பலகீனத்தை, நோயை பரிசாகத் தந்தது. 

இடைப்பட்ட காலம் தான் அவரின் பொற்காலம். வெறுமனே பொற்காலம் என்று சொல்லிவிட முடியாது. நாலைந்து பிறவிகள் ஒரு மனிதன் அடையவேண்டிய அத்தனை புகழையும், பெருமையையும் , வசதிகளையும் காலம் வழங்கிச் சென்றுள்ளது. பசி, பட்டினியைப் பார்த்தே வளர்ந்தவர் தன்னை நம்பியே இருந்தவர் என்றால் அவருக்குச் சிறிது கூட யோசிக்காமல் தன்னால் என்ன முடியுமோ? அனைத்தையும் வாரி வழங்கியுள்ளார். இது அவர் உடல் நலிவுற்று இருந்த சமயத்தில் கூட மாறவில்லை. சுய நினைவோடு இருந்த காலம் வரைக்கும் அவரின் வள்ளல் தன்மை மாறவே இல்லை. பேச்சுத் திறன் இழந்த நிலையிலும் அவரால் எப்படி இந்தக் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளாமல் வாழ முடிந்துள்ளது என்பதே மகத்தான ஆச்சரியம். 

அரசியலுக்காக, விளம்பரத்திற்காகச் செய்தார் என்றால் கூட அவர் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள், அருகே இருந்து பார்த்தவர்கள் என்று மொத்தமாக அவரின் இந்த ஈகை குணத்தைப் பல இடங்களில் எழுதியதை, கூட்டங்களில் பேசியதை கேட்கும் போதெல்லாம் அவரின் ஆழ்மன காயங்களை இதன் மூலம் தீர்க்க விரும்பியுள்ளார் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

"என்னை நம்பியவர் எவரும் கெட்டுப் போவதில்லை" என்பதனை பல இடங்களில் பல பேரிடம் தனது செய்கைகள் மூலம் நிரூபித்துள்ளார். எம்.ஜி.ஆரால் கெட்டுப் போனவர்களின் பட்டியலும் நீளம். அதற்குப் பின்னால் உள்ள காரணங்களும் அதிகம். வலம்புரி ஜான் அதனைப் பற்றி எந்தக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. ஆனால் ஜெயலலிதா மேல் புரிந்து கொள்ளவே முடியாத தீரா மயக்கம் இருந்தது ஏன்? என்று எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. 

எம்.ஜி.ஆர் எந்த விசயத்திலும் எவரையும் நம்புவதே இல்லை. ஒருவர் சொல்வதைப் பலபேர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேயிருப்பது அவரின் வாடிக்கையான பழக்கம். ஆனால் ஜெ குறித்த எண்ணங்களில் அவரால் மாற்ற முடியாத நிலைக்கே வாழ்ந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, போன்றவர்கள் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட பலவித அழுத்தங்கள், உருவாக்கப்பட்ட அச்சங்கள் எல்லாமே அவரின் ஆயுளை குறைக்கக் காரணமாகவும் இருந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில் இனி மாறித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் எடுத்த அடுத்த நாலைந்து மணி நேரத்தில் அப்படியே மாறிவிடுவார் என்பதனை அருகே உள்ளவர்கள் உணர்ந்திருந்த காரணத்தால் ஜெயலலிதா விசயத்தை மட்டும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. அதனையும் மீறி செயல்பட்டவர் ஆர். எம். வீரப்பன் மட்டுமே. 

ஜெயலலிதாவுக்குத் தொடக்கம் முதல் சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பனுக்கு வலம்புரி ஜான் மேல் தீரா கோபம். காரணம் அந்த அம்மையாருக்கு அரசியல் ஆசையை உருவாக்கிக் கொடுத்ததே இவர் தான் என்ற எண்ணத்தில் வீரப்பனுக்குப் பல காலம் வலம்புரி ஜான் வேண்டாத மனிதராகவே இருந்து உள்ளார். ஆனாலும் ஆர்.எம்.வீரப்பனின் நெருங்கிய நண்பராகவும் வலம்புரி ஜான் இருந்துள்ளார். இதில் ஒரு மகத்தான ஆச்சரியம் ஒன்று உண்டு. 

இன்று வரையிலும் ஜெயலலிதா குறித்துப் பேசுபவர்கள் இரண்டு விசயங்களைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகின்றார்கள். அவர் நடிகையாக இருந்தார். வசதிக்கு என்ன குறைவு? எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். இருவருக்கும் இயல்பான உறவு தொடக்கம் முதலே இருந்திருக்கும்? 

இரண்டுமே தவறு. 

ஒரு நடிகரை விட நடிகையின் ஆயுள் காலம் மிக மிகக் குறைவு. ஜெயலலிதா மாறிக் கொண்டேயிருந்த காலச் சூழலில் அவரின் படங்களும் எடுபடாமல் போனது. ஒதுக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் தொடர்பு இல்லாமல் தான் வாழ்ந்து வந்தார். 

எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்த ஆசைப்பட்டார். அது சார்ந்த முக்கியப் பொறுப்புகள் அனைத்து ஆம்.எம்.வீரப்பன் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரை நேரிடையாகத் தொடர்பு கொண்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெயலலிதா ஆம்.எம்.வீரப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாட்டியக்குழுவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அதிகாரிகள் கூட ஜெயலலிதாவை மதிக்கத் தயாராக இல்லை. அவர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி தான் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் எம்.ஜி.ஆருடன் உண்டான தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 

இது ஆரம்பம். 

இந்த ஆரம்பம் மற்றொரு விசயம் மூலம் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான தொடர்பை காலம் உருவாக்கிக் கொடுத்தது. அப்போது கலைஞர் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருக்கு எதிராகச் செயல்படக் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார் என்பதனை அதிகாரப்பூர்வமாகக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அதன் பிறகே ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது நேரிடைப் பார்வையில் கொண்டு வந்தார். இதன் பிறகே மாற்றங்கள் ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் துவங்கியது. 

பட வாய்ப்பு இல்லாமல் வருமான ரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு மறுவாழ்க்கை கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன் தான். அது எம்.ஜி.ஆரின் சாவு வரைக்கும் போய் நின்று விட்டது. எம்.ஜி.ஆரின் மரணம் ஜெயலலிதா விரும்பிய அரசியல் பாதையைக் காட்டியது. ராஜீவ் காந்தியின் மரணம் ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டக் கதவை திறந்து விட்டது. 

ஜெயலலிதாவின் குணத்தைப் பற்றி ஜான் ஒரு இடத்தில் இவ்வாறு சொல்கின்றார். 

பிராமணர்கள் வக்கிலாக, ஆசிரியராக, நீதிபதியாக, விஞ்ஞானியாகவே இருந்தாலும் அவர்கள் கடைசிவரைக்கும் முழுமையான பிரமாண குணாதிசியங்களாவே இருக்கின்றார்கள். தங்களால் வர முடியாத துறை என்றால் வந்தவர்களை மடக்கிக் கொள்ளுதல் அவர்களுக்குக் கைவந்த கலை. நடிகர் ரஜினிகாந்த வரைக்கும் உதாரணமாக அடுக்கிக் கொண்டே செல்கின்றார். 

காரணம் மத்திய அரசின் செல்வாக்கை தொடக்கத்தில் ஜெயலலிதாவிற்கு உருவாக்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். அவர் கடைசி வரைக்கும் ஜெயலலிதாவை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டு வருவதில் கர்மசிரத்தையுடன் செயல்பட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் ஜெ. வுக்குச் சாதி அபிமானம் என்ற ஒரே நோக்கத்தில் பலவிதங்களில் உதவியாக இருந்துள்ளனர். அது எந்த அளவுக்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி சென்னையில் நேரு சிலையைத் திறக்க வரும் போது ஜெயலலிதாவும் அதில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று எம்.ஜீ.ஆரை மிரட்டிப் பார்க்கும் அளவிற்கு மத்திய அரசின் லாபி வட்டம் கச்சிதமாகச் செயல்பட்டது. 

மற்ற துறைகளை விட அரசியல் என்பது வித்தியாசமான துறை. உச்சத்தை அடைந்தவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள், இவர்கள் இருவரையும் அனுசரித்துத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள். இந்த மூன்று வகையினர் தான் நம்மை மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மூன்று வட்டத்திற்குத் தொடர்பில்லாத தன் உழைப்பு தன் வாழ்க்கை என்று எப்போதும் போல மக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவரவருக்குப் பிடித்த கொள்கைகள், விருப்பங்கள் என்ற எளியத் தத்துவத்திற்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள். எம். ஜி.ஆரும் இப்படி வாழ்ந்து முடிந்து போயிருக்க வேண்டியவர் தான். ஆனால் தன் முயற்சியில் மனம் தளராத எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பயணம் என்பது தன்னம்பிக்கையின் மொத்த சாராம்சம். 

தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதனை எப்பாடுபட்டவது நிறைவேற்றி விடுவது என்ற கொள்கையில் எம்.ஜி.ஆர் கடைசி வரையிலும் உறுதியோடு வாழ்ந்துள்ளார். இன்று வரையிலும் ஈழப் போராட்டத்திற்குக் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர் செய்ய உதவிகள் அனைத்தும் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதற்கு மத்திய அரசாங்கம் விடுத்த மிரட்டலும் அதனைத் தாண்டி நான் ஏற்கனவே அவர்களுக்குப் பணம் கொடுத்து விட்டேன் என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனால் அன்று மத்திய அரசிடம் இவரின் செயல்பாடுகளைப் போட்டுக் கொடுப்பவராகத்தான் ஜெயலலிதா இருந்துள்ளார். ஈழ விசயத்தில் கடைசிவரைக்கும் நடிகையாகத் தான் வாழ்ந்துள்ளார். 

எம்.ஜி.ஆர் நடிகர் என்ற ஒரு வார்த்தையைத் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையோடு எந்த அளவுக்குக் கலந்துள்ளவர் என்பதனை சரியாகப் புரிந்து கொண்டவர் அறிஞர் அண்ணா. 1952 க்குப் பிறகு துணை நடிகர் மூலம் அண்ணாவைச் சந்தித்தார். அதுவரையிலும் காங்கிரஸ் அபிமானியாகவே இருந்தார். திமுக வில் எம்.ஜி.ஆர் வந்த பிறகே சூரியன் என்ற சின்னம் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழே உள்ள மொத்த மக்களிடமும் சென்று சேர்ந்து. அது வரையிலும் படித்தவர்கள், குறிப்பிட்ட இளைஞர்கள் கூட்டம் என்று இருந்த திராவிடக் கொள்கைகள், கட்சி, சின்னம் உழைப்பாளிகள், அடித்தட்டு மக்கள் வரைக்கும் சென்று சேர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆர் எப்போதும் சந்தேகம் கொள்பவராக இருந்துள்ளார். ஆனால் சரியான காரணம் தெரிந்தும் மீண்டும் அவரது இயல்பான குழந்தைத்தனமாக மாறுவதுமாகவும் இருந்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இதில் இருந்து வேறுபாடானவர். 

ஒவ்வொரு செயல்பாட்டிலும் வன்மமும், வக்கிரமும் கொடி கட்டிப் பறந்துள்ளது. அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துவிதமான அயோக்கியத்தனங்களையும் கூசாமல் செய்துள்ளார். தான் நினைத்ததை அடைந்த பின்பு கூட அவரால் தனது குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த போதிலும் உருவான சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் அவருக்குரியதாகவே மாறிப் போனதும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவரின் செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாற்றியது. 

தமிழக மக்களின் மாறாத மனோபாவங்கள் ஒரு புறம். அதை எந்தக் காலத்திலும் மாற்றிவிட ஆசைப்படாத ஆட்சியாளர்களின் தந்திரங்கள் மறுபுறம். இன்று வரையிலும் ஒவ்வொரு வாக்களானும் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவதன் மூலம் தாங்கள் இன்னமும் எம்.ஜி.ஆரின் விசுவாசி என்று காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கின்றார்கள்.  

ஆனாலும் காலம் அவருக்குத் தான் வாய்ப்பு வழங்கியது. 

வெற்றியாளர்களை மட்டுமே இந்தச் சமூகம் கொண்டாட விரும்புகின்றது. அப்போது அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள மோசமான விசயங்கள் அனைத்தும் மறக்கப்படுகின்றது. மாற்றப்படுகின்றது.


Wednesday, November 29, 2017

வணக்கம் - நூல் விமர்சனம்


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா (1917- 2017) கொண்டாடும் நேரமிது. வைகோ அவர்களும் எம்.ஜி.ஆருக்காகச் சமீபத்தில் ஒரு விழா நடத்தியிருந்தார். எம்.ஜி.ஆருக்கான விழா என்று சொல்லாமல் தனக்கான பொன்விழா என்று காரணம்காட்டி அரசாங்கத்திடமிருந்து கலைவாணர் அரங்கைப் பெற்று இருந்தார். விழா மேடையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர் பேசும் போது "நான் இந்த மேடையில் பேசுவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் குறித்து ஏறத்தாழ நாற்பது புத்தகங்கள் பல்வேறு நபர்கள் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியதை வாசித்து விட்டுத் தான் இங்கே பேசுகின்றேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

வைகோ வும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் திசையில் இருந்து அரசியல் களத்தில் செயல்பட்டவர்கள். வைகோ அவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து நேரிடையான, மறைமுகமான, செவிவழிச் செய்திகள் ஏராளமாகத் தெரிந்திருந்த போதிலும் எம்.ஜி.ஆர் குறித்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டு விழாவில் பேசியது என்னளவில் ஆச்சரியமாகவே இருந்தது. 

வைகோவின் உரையைக் கேட்டதிலிருந்தே எம்.ஜி.ஆர் குறித்த பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது கொண்டே இருந்தது. இதுவரையிலும் எம்.ஜி.ஆர் குறித்த தகவல்கள் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாகத் தெரிந்தது மட்டுமே. 

காரணம் எம்.ஜி.ஆர் மறைந்த போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தேன். நான் இதுவரையிலும் வாசித்த வாசிப்பின் வாயிலாகவே அவரைப் பற்றிப் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. தீரா ஆச்சரியங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை குறித்த தேடல்கள் இன்னும் முழுமையடையவில்லை. நீண்ட நாளைக்குப் பின் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. 

அது வலம்புரி ஜான் எழுதிய வணக்கம்

இந்தத் தொடர் நக்கீரனில் வாரந்தோறும் வெளிவந்த காலம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்போது கல்லூரி முடித்து வெளியே வந்து வேலையில் சேர்ந்த சமயம். இடையிடையே சில அத்தியாயங்களை வாசித்துள்ளேன். அப்போது தொடர் வாசிப்பில் இல்லாத காரணத்தால் வாசிப்பு நிலையில் இருந்து தள்ளியே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அப்போது வாசித்த விசயங்களுக்கும், இப்போது வாசிக்கும் போது உண்டான மனநிலைக்கும் ஏராளமான வித்தியாசங்கள். அன்று புரியாத பல அரசியல் சூட்சமங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இவையெல்லாம் நாம் அன்றாடம் செய்தித்தாளில் வாசித்தது தானே? என்று யோசிக்க வைக்கின்றது. 

வலம்புரி ஜான் எழுதிய பல புத்தகங்களை ஊரில் இருந்த போது நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். இருபது வயது இளைஞர்களைச் சுண்டியிழுக்கும் நடையது. அருவி போல நம்மை இழுத்துக் கொண்டே சொல்லும். எந்த எழுத்தாளர்களின் நடையுடனும் ஒப்பிடவே முடியாது. அதீத புத்திசாலிகள் வரிசையில் நிச்சயம் வலம்புரி ஜான் அவர்களுக்கும் ஒரு இடமுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கரை கண்டவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், பத்திரிக்கையாளர், பாராளுமன்ற உறுப்பினர் என்று வாழ்நாள் முழுக்கக் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வாழ்ந்தவர். பல இளைஞர்களைப் பத்திரிக்கையுலகத்திற்கு அடையாளம் காட்டியவர். 

குறிப்பாக நக்கீரன் கோபால் அவர்கள் வலம்புரி ஜான் மூலமாகத்தான் முதன் முறையாகப் பத்திரிக்கை உலகத்திற்கு உள்ளே வந்தார். அப்போது வலம்புரி ஜான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாய் வார இதழில் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக நக்கீரன் கோபால் தனது பத்திரிகை உலகப் பயணத்தைத் தொடங்கினார். 

கடந்த 25 ஆண்டுகளாக வலம்புரி ஜான் அவர்களின் எந்தப் புத்தகத்தையும் வாசித்தது இல்லை. ஆனால் பல்வேறு இடங்களிலும் பேசிய பேச்சுத் தொகுப்புகளை மட்டும் இணையத்தில் அவ்வப்போது கேட்பதுண்டு. பல சமயம் வியந்து போனதுண்டு. ஞாபக சக்தி, தொடர்ந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கும் வார்த்தைகளும், பலரும் அறிந்திராத சரித்திர குறிப்புகள் முதல் நிகழ்கால அரசியல் அவலங்கள் வரைக்கும் எனக் கலந்து கட்டி கேட்பவரை திகைக்க வைப்பதில் கில்லாடியாக இருப்பார். 

வணக்கம் தொடர் நக்கீரனில் வெளிவந்த போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தது. வலம்புரி ஜானுக்கு மட்டுமல்ல. நக்கீரன் வார இதழுக்கும் சேர்த்து ஜெ பல இடைஞ்சல்களை உருவாக்கினார். நீதிமன்றம், காவல்துறை கலந்து கட்டி கபடி விளையாடியது. ஜெ. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய போது தமிழகம் புதுப்புது விசயங்களைக் கண்டது. மேற்கத்திய நாடுகள் மட்டுமே கண்ட சர்வாதிகாரம் என்பது இங்கே உள்ள மக்களாட்சியில் என்னவெல்லாம் உருவாக்க முடியும் என்பதனை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதா காலத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் நான்கு பதிப்புகள் கண்டாலும் தற்போது தான் அதீத கவனம் பெற்றுள்ளது. காரணம் இதில் சசிகலா குறித்துச் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டிருப்பது முக்கியக் காரணமாக இருந்தது. வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்திற்கென என்னுரை என்று 2002 வருடத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் முதல் பதிப்பு 2005 வந்து அதற்குப் பிறகு ஐந்து பதிப்புகள் வெளி வந்துள்ளது. 

புத்தகத்தை முதல் முறை வாசித்து விட்டு உருவான தாக்கமும், மீண்டும் மீண்டும் பலவற்றை யோசித்துக் கொண்டே புத்தகத்தில் சொல்லப்பட்ட சின்னச் சின்னக் குறிப்புகளை யோசித்துக் கொண்டே மூன்று நாட்களும் இந்தப் புத்தகமே மனதிற்குள் சுழன்றடித்துக் கொண்டேயிருந்தது. 

தற்போது ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடக் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களைப் பற்றி எழுத்தின் வாயிலாகவே தெரிந்து இருப்பார்கள். தற்போது இணைய ஊடகங்கள் ஆதிக்கம் பெற்ற பின்பு தான் பல மறைக்கப்பட்ட பல தகவல்களும், உண்மையான விசயங்களும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

காரணம் இணையத்தில் கலைஞர் குறித்து நேர்மறை எதிர்மறை விசயங்கள் அனைத்தும் கலந்து இருப்பதால் வாசிப்பில் ருசி உள்ளவர்கள் எளிதாக எது சரி? எது தவறு? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். இன்று வரையிலும் பல அரசியல்வாதிகள் கடந்த கால வாழ்க்கை, அவர்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் விவாத பொருளாகவே உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் குறித்துச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே? ஏன் என்று பலமுறை நெருங்கிய நண்பர்களிடம் விவாதிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல்தன்மையைக் காரணமாகச் சொல்லி அதற்குப் பின்னால் உள்ள அரசியல் விசயங்களை நண்பர்கள் புரியவைப்பார்கள். 

ஆனால் ஜெயலலிதா குறித்து நம்மால் அனைத்து விசயங்களையும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ள முடியும். இணைய வளர்ச்சியில் ஜெயலலிதாவின் அகங்காரம் எடுபடாமல் போய்விட்டது. 

நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிச்சயம் இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மொத்த குணாதிசியங்களையும், அவரின் அவல ஆட்சி அதிகார அவலங்களை நன்றாகவே தெரிந்து வைத்து இருப்பார்கள். தமிழக அரசியலில் இறப்புக்குப் பின்பு ஜெ வைப் போலக் கேவலப்பட்டவர்கள் எவருமே இல்லை. அதேபோல இந்திய அரசியலில் இந்த அளவுக்கு அசிங்கப்பட்டவர்களும் எவருமில்லை. 

இன்றும் அவரை ஆதரிப்பவர்களை என் பார்வையில் இரண்டு விதமாகத் தான் பிரிக்க முடியும். 

ஒன்று அவர் சாதி சார்ந்த அபிமானம்.

மற்றொன்று மாற்றிக் கொள்ள முடியாத கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாகவும் இருக்கின்றார்கள். 

எம்.ஜி.ஆர் போல நிஜமான வள்ளல் தன்மை கொண்டவரும் இல்லை. ஆனால் தனக்கு ஒன்று தேவை என்றால் அதற்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்ற கேவல அத்தியாங்களைத் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதா தான். இவரைப் பற்றித் தான் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பேசுகின்றார். அத்துடன் அவர் வாழ்ந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் நிலைமைகள், சம்மந்தப்பட்ட மனிதர்கள், ஆயுதம் ஏந்தத் தேவையில்லாத அரசியல் யுத்தத்தின் சகல பரிணாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் பாணியில் தனித்தனி கட்டுரையாகச் சொல்லியுள்ளார். 

அவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தும் வலம்புரி ஜான் குறித்தும், இந்தப் புத்தகம் குறித்தும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு பேர்கள் எழுதிய விமர்சனங்கள் என் கண்ணில் பட்டது. ஆனால் மொக்கை எழுத்தாளர்க்கு இணையத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் கூட வலம்புரி ஜான் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எந்த இடத்திலும் வலம்புரி ஜான் குறித்த முழுமையான விபரங்கள் இல்லை. 

முக நூல் வந்த பிறகு ஐம்பது வருடங்களுக்கு முன்பு துணை கதாபாத்திரங்களில் நடித்த சாதாரண நடிகை நடிகர்களைப் பற்றிக் கூட விமர்சனமாகச் சிலாகித்து எழுதும் நபர்கள் எவரும் வலம்புரி ஜான் அவர்களைப் பற்றி எழுதாமல் இருப்பது ஒரு வகையில் ஆச்சரியம் என்றால் அவரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உரியதாகவே உள்ளது. தொடர்ந்து கட்சி மாறிக் கொண்ட வந்தது முதல் எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல் நினைத்த போது நினைத்தவாறு பேசியது வரைக்கும் எல்லாமே அவரைக் கடைசியில் மரணம் வரைக்கும் துரத்தியது. அவரின் மரணமும், மரண ஊர்வலமும் சங்கடமாக முடிந்தது. 

தொலைக்காட்சியில் தினந்தோறும் அவர் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன். மருத்துவத்தின் அத்தனை பக்கங்களையும் அலசுவார். ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டேயிருப்பார். கேட்பவர்களுக்கு எதை எடுத்துக் கொள்வது? எப்படிப் பின்பற்றுவது? என்று குழப்பங்களை வரும் வரைக்கும் சரித்திர காலச் சம்பவங்களுடன் கோர்த்துச் சொல்லுவார். கடைசியில் அவர் உடம்பு நோயின் மொத்த குத்தகை கிடங்காக மாறி எலும்பும் தோலுமாக இறந்தார். இந்த இறப்பில் ஜெயலலிதாவிற்கு முக்கால்வாசி பங்குண்டு. 

ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்து வைத்த போது எம்.ஜி.ஆர் அவர்களால் ஜெ. வுக்கு ஆலோசகர் என்ற நிலையில் வலம்புரி ஜான் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார். 

இவர் தான் வாசிப்பு முதல் அரசியல் பழக்கங்கள் வரைக்கும் ஜெ. வுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால் காலம் வேறுவிதமாக நகர்த்தியது. ஜெ அதிகாரத்திற்கு வந்த போது வலம்புரி ஜான் ஆகாத மனிதராக மாறிவிடக் கைது நடவடிக்கையின் போது மெல்ல கொலும் விசயத்தை டீ யில் கொடுத்து இவர் உடல் நலன் சீர்கெட்டுப் படுக்கையில் விழும் அளவிற்குக் கொண்டு போய் நிறுத்தியது. 

இந்த வணக்கம் புத்தகத்தை வெறுமனே நூல் விமர்சனம் என்ற நிலையில் பார்க்க மனம் வரவில்லை. இதில் உள்ள முக்கியக்குறிப்புகள் இணையத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பதிவுகளாக எழுதி வைத்திட விரும்புகின்றேன். 

எம்.ஜி.ஆர். -  ஜெயலலிதா 
ஜெயலலிதா -  எம்.ஜி.ஆர். 
ஜெயலலிதா -  சசிகலா 
மூவருக்கும் மத்தியில் வாழ்ந்த வலம்புரி ஜான். 

தொடர்ந்து பேசுவோம்........... 


Wednesday, November 22, 2017

திருமண நாள்


குழந்தைகள் மகள்களாக மாறிக் கொண்டிருக்கும் தருணமிது. மகள்களின் யாரோ ஒருவர் தான் முதலில் தெரியப்படுத்துவார். அடுத்தடுத்து மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள். மனைவியின் முறைப்பை உள்ளே உருளும் பாத்திர ஓசையின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

திருமண நாள், பிறந்த நாள் என்று எதுவும் நினைவில் இருப்பதில்லை. வயது கூடும் போது இரண்டு விசயங்கள் நமக்குள் நடக்கும். ஒன்று மறதி மற்றொன்று கொண்டாட்ட மனோ நிலை மாறும். 

நம் வயது கூடும் போது, நம் எண்ணங்களின் நோக்கம் வேறுவிதமாகப் போய்விடுகின்றது. நோக்கங்கள் மாறிக் கொண்டேயிருப்பதால் முக்கியமான பல விசயங்கள் மறந்துவிடுகின்றது. நமக்குள் இருக்கும் குழந்தைத் தனம் படிப்படியாகப் பலராலும் திருடப்பட்டு இருக்கும். நமக்கென பிரத்யோகமாக இருந்த பல ரசனைகள் மழுங்கடிக்கப்பட்டு இருக்கும். ஆழ்ந்த வாசிப்பு மாறி அவசர கதியில் உள்ளே நுழைந்த பலவும் குழப்பங்களைப் பந்தி போட்டு வரவேற்றுக் கொண்டிருக்கும். 

என்னைப் போலவே மகள்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். மாறவே மாட்டேன் என்ற மனைவியும் அவரின் எளிய விருப்பங்களும் பல சமயம் சவாலாக உள்ளது. 

திருமண நாள் வரும் சமயங்களில் அதுவும் ஒரு நாள் தானே? என்ற எண்ணத்தை மாற்றியவர் மனைவி. அவருக்கு அது தான் அவர் வாழ்வின் முக்கியமான நாள் என்பதனை உணரவே பல வருடங்கள் எனக்கு ஆனது. தொடக்கத்தில் மகள்களின் பிறந்தநாளில் தெரிந்த ஆராவாரம் இப்போது மெதுமெதுவாக அடங்கி இன்று பெரிதான சுவராசியம் இல்லாமல் மாறிவிட்டது. ஆனால் இவற்றை விட மற்றொன்றை எப்போதும் நான் நினைத்துக் கொள்வதுண்டு. 

இறந்தவர்களின் நினைவு நாளை ஏன் நம்மால் சரியாக நினைவில் கொண்டுவரமுடிவதில்லை என்று? 

அப்பாவின் இறந்த நாள் சரியான அவர் இறந்த அடுத்த மாதங்களில் தான் நினைவில் வருகின்றது. அதுவும் ஊரில் இருந்து யாராவது அழைத்துச் சொன்னால் தான். தாத்தா, பாட்டி இறந்த நாள் எந்த நாள் என்பதே மறந்தே போய்விட்டது. பழகிய பலரின் நினைவு தினமும் இப்படியாகத்தான் உள்ளது. 

அன்றாட அழுத்தங்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்க, முக்கிய நினைவுகள் அனைத்தும் மறந்து போய் வாழ்வின் அன்றைய தேவைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் கட்டாயம் ஒரு கணக்கு எடுத்துப் பார்ப்பதுண்டு. மாறிய எண்ணங்கள், மாறிக் கொண்டே வரும் ஆரோக்கியம், விலகிய நண்பர்கள், இழந்தவைகள், கற்ற பாடங்கள், படிப்பினைகள், பெற்ற நிந்தனைகள் என்று பட்டியலிட்டு பார்ப்பதுண்டு. 

சுருங்கிய உறுப்புகள், அடம்பிடிக்கும் ஆரோக்கியம், விட முடியாத பழக்கவழக்கங்கள் என்று கணக்கில் கொண்டு வந்தாலும் கண் கட்டி வித்தை போலவே நீ இன்னமும் திருந்த வேண்டும் என்றே காலம் மிரட்டிக் கொண்டேயிருக்கின்றது? வளரும் போது ஒவ்வொன்றும் மறையும் அல்லது குறையும். ஆனால் ருசி குறையாமல் இருக்கும் போது அது ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் விலையாக உள்ளது. வாயைத் திறக்காமல் இருக்க வேண்டிய சமயங்களில் திறந்த காரணங்களால் பெற்ற இழப்புகள் ஒவ்வொன்றும் பக்கவாட்டில் நின்று கொண்டு பாடங்களை நடத்திக் கொண்டேயிருக்கின்றது. 

இனியாவது திருந்துவாயா? என்று ஆசிரியர் போலக் காலம் தன் கைகளில் பிரம்புகளால் விளாசிக் கொண்டேயிருந்தாலும் எத்தனை முயற்சித்தாலும் மாற்றிக் கொள்ள முடியாத நம் அடிப்படை குணாதிசியங்கள் நமக்கே பழிப்பு காட்டும். 

இவற்றை எல்லாம் நாம் அடைய வேண்டும் என்ற பெரிய பட்டியல் தூசி அடைந்து கிடைக்க மூச்சு இறைக்க ஓடி வந்த களைப்பு பட்டியலை மறந்து அடுத்த நாள் பயத்தை தந்து விடுகின்றது. 

இன்று இரவு படுத்தவுடன் தூக்கம் வந்தால் போதும் என்ற எளிய விருப்பத்தில் எல்லாமே மறந்து போய் அடுத்த நாள் விழிப்பில் சாதாரண எளிய மனித வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டிருக்கின்றேன். இப்படியே ஒவ்வொரு சமயத்திலும் காலம் என்னை நகர்த்திக் கொண்டு இருக்கின்றது. 

அடுத்த நாள் ஆச்சரியம் என்னவாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் உள்ளே இருக்கும் நம்பிக்கைகள் விழிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றது. இப்படித்தான் ஒவ்வொரு சமயத்திலும் என்னைச் சுற்றிப் படரும் அவநம்பிக்கை கொடிகளை வெட்டி சாய்த்துக் கொண்டே என் மரத்தை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் மரத்தின் ஆணி வேர் என்ற ஆரோக்கியம் பழுது படாமல் இருப்பதால் எல்லா நிலைகளிலும் இயல்பாக வாழ முடிகின்றது. 


 (
படம்
நன்றி)
       Henk Oochappan

உங்கள் வாசிப்புக்கு 


Monday, November 06, 2017

தனுஷ்கோடி - அந்த ஒரு நாள்


மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை ஆசான் அவர்களுடன் சென்ற சுற்றுப் பயணத்தில் தனுஷ்கோடி பக்கமும் முதல் முறையாக செல்ல வாய்ப்பு அமைந்தது.  அப்போது அது சார்ந்த பயணக்கட்டுரையை எழுதி வைத்தேன். தற்போது அறுபது வயதை நெருங்கியவர்கள் அப்போது அந்தப் பதிவில் தனுஷ்கோடி கோரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.  இன்று இந்த செய்தி முகநூலில் கிடைத்தது. பதிவில் இருந்தால் இந்த வரலாற்றுக் கொடுமை பலருக்கும் சென்று சேரும் என்பதற்காக இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.

மணலுக்கு கீழே பிணங்கள் (பயணக்கட்டுரை)

♥#தனுஷ்கோடி 

#நடந்தது_என்ன? ஒரு அற்புத பதிவு,,,

♥டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.

♥கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

♥அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

♥புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.

♥ரயில் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.

♥ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.

♥இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

♥தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.

♥டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.

♥எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்.

♥அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........

♥ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர்.

♥ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

♥ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.

♥'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.

♥தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

♥தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,

♥''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.

♥நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

♥இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்.

♥அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள்.

♥இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.

♥அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும்.

♥இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....

♥ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது .

♥ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது.

♥ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.

♥தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது.

♥எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.

♥இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.

♥அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

♥மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

♥புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 

♥விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.

♥இந்திய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது.

♥இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

♥அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
♥''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

♥எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

♥மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.

♥மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.

♥இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.

♥பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார்.

♥தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.

♥தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னாரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.

♥விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 

♥''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.

♥நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது.

♥டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.

♥'அன்றைய இரவுப் பொழுது தனுஷ்கோடியில் இருக்க வேண்டும்' என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை.

♥சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

♥புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

♥"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது.

♥சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."

♥"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது.

♥அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்

♥அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.

♥அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

♥மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.

♥தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

♥ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

♥தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

♥ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.

♥மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.

♥இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.

♥"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர்.

♥சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

♥அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.

♥சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.

♥மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.

♥வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

♥சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், 'மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

♥வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நன்றி: ரிப்போர்ட்டர் அண்ணாதுரை
Via: ஆந்தை ரிப்போர்ட்டர்



எனது ஒன்பதாவது மின் நூல் சில ரகசிய குறிப்புகள்.