Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

Wednesday, July 24, 2019

1984 சீக்கியர் கலவரம்

நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும், அரசியல்வாதிகளும் மறைந்திருப்பார்கள். நமக்கு முதலில் தோன்றுவது "ஹையா ஜாலி. இன்றைக்கு லீவு" என்று தான் சொல்லியிருப்போம்.

ஏன் இறந்தார்? எப்படி இறந்தார்? அவர் யார்? இறப்புக்குப் பின்னால் என்ன நடந்தது? என்ன மாறியது? போன்ற அரசியல் தட்ப வெப்ப நிலை குறித்து நாம் அறிந்து இருக்க மாட்டோம். காரணம் நாம் கல்லூரி வரைக்கும் அரசியல் என்பதே விலக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளோம். 

கல்லூரி முடித்து சமூக வாழ்க்கையில் உள்ளே நுழையும் போது தான் அடிப்படைக் கடமைகளுடன் நமக்குப் புரிந்த, பிடித்த அரசியலைக் கற்றுக் கொள்ளவே தொடங்குகின்றோம். காலப் போக்கில் சிலர் மேல் விருப்பு உருவாகின்றது. சிலரை நிரந்தரமாக வெறுப்பு பட்டியலிலும் வைத்து விடுகின்றோம்.

இந்திரா காந்தி எந்த சூழலில் மறைந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். ஆய்வகத்தில் விலங்கியல் ஆசிரியர் டி.குமரேசன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் அய்யா வேகமாக உள்ளே வந்தார். முதல் இருக்கையில் நான் இருந்தேன். விலங்கியல் ஆசிரியர் என் இருக்கை அருகே நின்று கொண்டு இருந்தார்.

"டேய் குமரேசா இந்திரா அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டார்களாம்?" என்று பதைபதைப்புடன் சொன்னார். நொடிப் பொழுதும் தாமதிக்காமல் அப்படியென்றால் "இன்றைக்கு லீவா சார்?" என்று கேட்டது தான் தாமதம் விலங்கியல் ஆசிரியர் கன்னத்தில் கொடுத்த அரை இன்னமும் நினைவில் உள்ளது.

அடுத்த முப்பது வருடங்களில் இந்திரா காந்தி குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. மகளுக்கு அவர் பெயரை வைக்கும் அளவிற்கு அவரின் குறைகளை மீறியும் இன்றளவும் அவரை நேசிக்க முடிகின்றது.

ஆனால் அவர் இறப்பின் போது நடந்த, உருவான, உருவாக்கப்பட்ட சீக்கியர் இனப் படுகொலை பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டு. கிண்டில் மூலமாகப் படித்துக் கொண்டு இருந்தாலும் அதில் உள்ள அன்லிமிட் உள்ளே நுழையாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஜெ. ராம்கி எழுதிய 1984 என்ற புத்தகத்தைப் பார்த்ததும் இதை வாசிக்க நிச்சயம் நாம் கடலுக்குள் குதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டுத் தான் தூங்கவே முடிந்தது.

ஆவணம் என்று சொல்லலாம். அற்புதம் என்றும் சொல்லி கடந்து விடலாம்.

ஆனால் நாம் வாழ்ந்த சமகால கொடூரங்களை அப்படியே நமக்குக் கடத்தியதில் முழுமையாக ராம்கி வெற்றி பெற்றுள்ளார்.

ராஜீவ்காந்தி தன் அம்மாவின் இறப்பை எப்படி பார்த்தார்? என்ன சொன்னார்? என்ன செய்தார்? என்ன செய்யாமல் தவிர்த்தார்? காங்கிரஸ்காரர்கள் அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்தார்கள்? இதில் பங்கெடுத்த முக்கியஸ்தர்கள் யார் யார்? அவர்கள் பின்னாளில் எந்த உயர் பதவியை அடைந்தார்கள்? வீரத்திற்குப் பெயர் சீக்கிய இனத்தை எப்படி அலங்கோலப்படுத்தினார்கள்? இன்று சொல்லப்படும் கேங் ரேப் என்பதனை எப்படிக் கூசாமல் செய்தார்கள்? காங்கிரஸ்காரர்கள் எப்படி கொள்ளையர்களாக மாறினார்கள்? உருவான விசாரணை ஆணையம் என்ன செய்தது? என்ன செய்யாமல் விட்டது?

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் அவர்களை எப்படி பாடுபடுத்தினார்கள்?

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் ஏன் வாயை பொத்திக் கொண்டு இருந்தார்?

இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? துணை ராணுவப்படை ஏன் அமைதியாக இருந்தது. சீக்கிய இனத்திலிருந்த ராணுவ உயரதிகாரிகள் கூட இந்த கலவரத்தில் எப்படி பாதிக்கப்பட்டார்கள்?

ஆறாத ரணங்களை, அதன் காயங்களை, இன்னமும் மாறாத வடுக்களை அப்படியே அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தவிர பிந்தரன்வாலே, லோங்கோவால், சீக்கிய இனத்தில் உள்ள உயர் சாதி, தாழ்ந்த சாதி, காலிஸ்தான், பாகிஸ்தான் ஊடுருவல், உருவான உருவாக்கப்பட்ட அரசியல் சதிகள் என்று கலந்து கட்டி பொளந்து கட்டியுள்ளார்.

நம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய புத்தகமிது.

குறிப்பாக மதச்சார்பின்மையை மகோத்தனமாக உச்சரிக்கும் காங்கு மக்கள் மந்திரம் போல வாசித்து தன்னைத் தானே பார்த்துத் துப்பிக் கொண்டால் தவறில்லை.

"என் நாட்டிலேயே நான் அகதியாக வாழ வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என்று ஒரு இடத்தில் வரும் வார்த்தைகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்.

காங்கு செய்த அரசியல் அலங்கோலத்தை அப்படியே நமக்கு படம் பிடித்துக் காட்டும்.

வாழ்த்துகள் ராம்கி.

#Amazon

Thursday, July 18, 2019

தெற்கிலிருந்து ஓரு சூரியன்



தெற்கில் ஒரு சூரியன் -  நூல் விமர்சனம்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி குறித்து, அவரைப் பற்றி பலரின் பார்வையை வைத்து தொகுக்கப்பட்ட புத்தகமிது.  தமிழ் தினசரியான தமிழ் இந்து வெளியிட்டுள்ளார்கள்.  இது கலைஞரின் சுயவரலாறு அல்ல.  அவரைப்பற்றி ஒரு பக்கச் சார்பாகக் கட்டுரைகள், பேட்டிகள் கொண்ட தொகுப்பிது. அவரின் அரசியல் அதிகாரத்தின் மூலம் பெற்ற வீரபராக்கிரமங்களை அவர் செய்த சாதனைகளாக நமக்கு புரிய வைக்க முயன்றுள்ளார்கள்.

ஒரு குடும்பத்தலைவர் தன்னைப் பற்றி சுயவரலாறு எழுதினால் அவரைச் சுற்றியுள்ள சின்ன வட்டத்தின் மூலம் சமூக நிகழ்வுகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்தந்த காலகட்ட வரலாற்றையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர் சார்ந்த அந்தரங்க விசயங்கள் அதிகபட்சம் அவர் உறவினர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கு மட்டுமே புத்தகத்தின் சாதகம், பாதகம் என்று இனம் கண்டு கொள்ள முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளின் கதை அப்படியா?

1964 ஆம் ஆண்டு "தனுஷ்கோடி மூழ்கிவிட்டது" என்ற செய்தியே அடுத்த நாள் தான் பத்திரிக்கைகள் வாயிலாக தமிழ்கூறும் நல்லுலகத்திற்குத் தெரிய வந்தது.  அரசாங்கம் தன் நிலை உணரவே ஆயத்த ஏற்பாடுகள் செய்யவே ஒரு நாள் ஆனது என்று படித்துள்ளோம்.  ஆனால் இன்று நிலைமை அப்படியா?

மொத்த கண்டத்தையும் ஒரு அலைபேசி அடக்கி வைத்துள்ளது. அப்படியே ஒவ்வொரு செய்திகளையும் நொடிக்கு நொடி கொட்டிக் கொண்டே இருக்கவும் செய்கின்றது. இந்த சமயத்தில் இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாழ்க்கையும் சமூக வலைதளங்களில் பந்தி விரிக்கப்படுகின்றது. பலரின் பார்வைக்குக் கொண்டு போகப்படுகின்றது. ஒவ்வொருவரும் பயமில்லாமல் கேள்விகள் எழுப்பும் போதும், விமர்சனப் பார்வையாக வைக்கும் போதும் பல மறைக்கப்பட்ட உண்மைகள் நாள் தோறும் வெளியே வந்து கொண்டே தான் இருக்கிறது.

இப்படியொரு சூழலில் இந்தப் புத்தகம் நிறுவும் முக்கிய விசயங்கள் புறக்கணிப்பட முடியாதவையாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும், அதற்குப் பின்னால் தனிமனிதர்கள் அடைந்த லாபங்களையும் கவனமாக தவிர்த்துள்ளனர்.

கலைஞர் மு. கருணாநிதி தன் வரலாற்றை "நெஞ்சுக்கு நீதி" என்ற பெயரில் பல பாகங்களாக எழுதியுள்ளார்.  தன் 45 வயதில் தமிழகத்தின் முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்து அமர்ந்தார். அடுத்த அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தின் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் அவர் இருந்துள்ளார். இன்னமும் அவர் செய்திகளின் வழியே வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்.. தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் ஒன்று கலைஞரைத்திட்ட வேண்டும் அல்லது புகழ வேண்டும்.  இந்த இரண்டுக்குள் தான் இன்னமும் தமிழக அரசியல் களம் உள்ளது.  அப்படியான ஒரு தாக்கத்தை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார்.

அவர் தன்னைப் பற்றி எழுதியது போல அவரைப் பற்றி மற்றவர்களும் எழுதியுள்ளார்கள்.  இது தவிரத் திராவிட அரசியல் என்ற பெயரில் பல ஆயிரம் புத்தகங்கள் இங்கே வெளிவந்துள்ளது.

ஆனால் இன்னமும் கலைஞரைப் பற்றிய முழு சித்திரத்தையும் தமிழகம் உணரவில்லை. அவரின் அரசியல் வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும் உண்டு. பாரபட்சமின்றி உண்மைக்கு அருகே சென்று கலைஞரைப் பற்றி எந்தவொரு நிகழ்வையும் இன்னமும் எவரும் பதிவு செய்யவே இல்லை. புகழ்ந்து அல்லது இகழ்ந்து என்ற இரு எல்லையில் தான் புத்தகங்கள் வந்துள்ளன. இந்தியச் சூழலில் குறிப்பாகத் தமிழகத்தில் எந்த அரசியல்வாதிகளைப் பற்றியும் முழுமையான சித்திரங்களை நம்மால் உணரவே வாய்ப்பில்லாமல் தான் இருந்தது.

இப்போது தான் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்பு ஒவ்வொன்றாக மாறிக் கொண்டே வருகின்றது. அந்தரங்கத்திற்குள் மட்டுமே இருந்த ஒவ்வொன்றும் இப்போது அரங்கத்திற்கு வந்து பேசு பொருளாக மாறியுள்ளது.

இது கலைஞர் குறித்த முழுமையான நூல் அல்ல.  அவரின் புகழ்பாடும் நூல் என்று எடுத்துக் கொள்ளலாம். கலைஞருடன் பழகியவர்கள், அவர் புகழை மட்டுமே பேசுபவர்கள், கலைஞர் ஆட்சியிலிருந்த போது செய்த சாதனைகள், திட்டங்கள், அதனால் விளைந்த சமூக மாற்றங்கள் என்று இதில் வந்துள்ள ஒவ்வொரு பார்வையின் மூலம் நம்மால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நூலை விமர்சனப் பார்வையில் நாம் அணுகுவதை விட இதில் உள்ள பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் என்று இரண்டு விதமாகப் பார்க்கலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மூன்று விசயங்களை அடுத்த பதிவில் தனியாக எழுதியுள்ளேன். .

நமக்கு முன்னால் வாழ்ந்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவர் மேலும் ஏராளமான விமர்சனங்கள் வைக்க உரிமையுள்ளது என்பதனைப் போல அவர்கள் உருவாக்கிய பாதையினைத் தான் நாம் இன்று சுகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதனை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இது பெரியார், அண்ணா, கலைஞர் அதற்குப் பின்னால் வந்தவர்கள் என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.  ஆனால் மொத்தத்தில் தமிழகத்தில் இதுவரையிலும் அரசியல் களத்தில் நடந்த ஊழல்கள், அதன் மூலம் தங்கள் குடும்பத்திற்குக் கொள்ளையடித்து பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்துக் கொண்டார்கள் என்பதனை குற்றச்சாட்டாக எடுத்து வைத்தாலும் நமக்குக் கிடைத்து இருப்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொஞ்சம் மிகையாகத்தான் கிடைத்துள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

இந்திய சரித்திரத்தை சுதந்திரத்திற்கு முன் சுதந்திரத்திற்குப் பின் என்று பேசுவது போல தமிழக சரித்திரத்தை பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் என்று தான் நம்மால் பார்க்க முடியும்.  காரணம் பெரியார் உருவாக்கிய தாக்கம் என்பது எப்போதும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

இந்திய அரசியல் சரித்திரத்தில் எவரும் செய்யத் துணியாக அனைத்தையும் அவர் வாழ்ந்த காலத்திலேயே செய்து முடித்து விட்டார்.   விமர்சிக்கலாம். வெறுக்கலாம். ஆதரிக்கலாம்.  ஆனால் எவரும் மறுக்க முடியாது.  கடவுளே துணை என்று வாழ்ந்த சமூகத்தை உன் அறிவே உனக்குத் துணை என்று பாதை மாற்றியவர்.

பெரியாருக்கு முன் இங்கே இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா என்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி அமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் பேசியிருக்கின்றார்கள்.  பெரியார் தான் இதனை முதல் முறையாக மாற்றுகின்றார்.

சாதியை ஒழிக்க வேண்டியது முதல் கடமை என்று தன் கடமையைத் தொடங்குகின்றார். சாதி என்ற கட்டுமானம் மதம் என்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது கடவுள் நம்பிக்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் பிராமண எதிர்ப்பைத் தொடங்குகின்றார்.

அது இங்கே பல சிதைவுகளையும், சமூக சீர்திருத்தங்களையும் அறிமுகம் செய்து வைக்கக் காரணமாக அமைகின்றது.  அதுவரையிலும் உயர் அதிகார வர்க்கத்தில் உள்ள மேல் சாதியினரின் கட்டுமானம் படிப்படியாக உடைக்கப்படுகின்றது.  உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஒதுக்கப்பட்டவர் என்ற மூன்று பிரிவுகளையும் முடிந்தவரைக்கும் சீரமைக்கக் காரணமாக அமைந்தது.  இந்தியா மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியைத் தேசத் தந்தை என்று இன்னமும் கொண்டாடுவதற்கு எத்தனை காரணங்கள் உள்ளதோ ஈ.வெ.ராமசாமி யை தந்தை பெரியார்  என்று கொண்டாடுவதற்கும் தமிழர்களுக்கு நிறைய நியாயமான காரணங்கள் உண்டு.

பெரியார் விதையை ஊன்றினார். வாக்கு அரசியலில் நம்பிக்கையற்று மக்களிடமே பேசினார். நம்பிக்கை என்பது அறிவியல் மூலம் உருவாகின்றது. மூட நம்பிக்கைகள் என்பது அதிகாரத்தை தக்க வைக்க எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பதனை அப்பட்டமாக போட்டு உடைத்தார்.

மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை மாற்ற முயன்றார். ஆனால் அண்ணா அதனைப் பராமரித்து வளர்த்து மரமாக மாற்றினார். அதிகாரத்தை அடைய, கைப்பற்ற, தக்க வைக்க வாக்கு அரசியல் முக்கியம் என்பதனை உணர்ந்து கொண்டார். சமரசம் ஒன்றே பெரிய ஆயுதம் என்பதனை கண்டு கொண்டார். தன் கொள்கைகளை இளக்கிக் கொண்டார். இறுதியாக "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதில் கொண்டு வந்து முடித்தார்.

கூடவே பெரியார் பத்திரிக்கைகள், மேடைகளை மட்டும் நம்பினார். மக்களிடம் சென்று சேர இதுவே போதும் என்று நம்பினார். ஆனால் அண்ணா மேடைப் பேச்சுடன் நாடகம், திரைப்படம், பத்திரிக்கை என்று சகலவிதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான அனைத்து திறமைகளும் அவரிடம் இருந்தன. அண்ணா தமிழ் மொழியை மாற்றினார். பேச்சு மொழியை மாற்றினார். அண்ணாவின் புதிய அலங்கார நடையில் மக்கள் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல மாறினர். குறிப்பாக இளைஞர்கள்.

ஆனால் இருவரும் தனக்காக, தங்கள் குடும்பத்திற்காக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் விட்டுச் சென்றதுமில்லை. வாழ்நாள் முழுக்க தாங்கள் நம்பிய கொள்கைக்காகவே வாழ்ந்து மடிந்தனர். பெரியார் தனக்குப் பிறகு மணியம்மை தான் என்று அடையாளம் காட்டினார்.  ஆனால் அண்ணா அதையும் செய்யவில்லை.

அண்ணா இருந்த போது அவருடன்  இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைகள் கட்சியிலிருந்தனர். அவரவருக்குண்டான தகுதியில் தன் எல்லை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருந்தனர்.  வரலாற்றில் ஐம்பெரும் தலைகள் என்று சிலர் இருந்தார்கள் என்று கூட நீங்கள் படித்து இருக்கலாம்.  ஆனால் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் வந்தார். கலைஞர் இருந்தார். கலைஞர் மட்டுமே தலைவராக வாழ்ந்தார். வளர்ந்தார். தான் வாழும் வரைக்கும் தன்னை மட்டுமே போற்றக்கூடியவர்களை மட்டுமே வளர்த்தார். ஆரோக்கியம் குறைந்த போதும், இழந்த போதும், இனி செயல்பட முடியாது என்ற போதும் என்று எல்லா நிலையிலும் தன் தன்னம்பிக்கை ஒன்றைக் கொண்டே கடைசி வரைக்கும் வாழ்ந்தார்.

பெரியார் விதையை, அண்ணாவின் மரத்தைக் கலைஞர் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். கிடைத்த பழங்களை சுவைத்தவரும், குடும்ப உறுப்பினர்களுக்கும், கூட உடன் இருந்தவர்களுக்கு சுவைக்கக் கொடுத்து அழகு பார்த்தார்.  அதாவது தடாகத்தில் வாழும் மீனின் உணவே அழுக்கு தான். மீன் அழுக்கை உண்டால் தான் தடாகம் சுத்தமாகும் என்ற புதிய தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார். இந்த தத்துவம் 1971 ல் தொடங்கியது.  2019 ல் தாடகம் முழுக்க மீன்கள் மட்டுமே கொளுத்துப் போய் உள்ளது. தண்ணீரைத் தேடி வந்தவர்கள் தாகத்துடன் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

அண்ணாவிற்குப் பிறகு அடுத்த கட்டத்திலிருந்த பல பேர்கள் எப்படிக் காணாமல் போனார்கள்?

கலைஞரை விட எல்லாவிதங்களிலும் தங்களைத் தகுதியானவர்களாக வைத்திருந்த போதும் ஏன் தோற்றார்கள்? கலைஞர் எப்படி வென்றார்? என்பதிலிருந்து தான் அவரின் உழைப்பு, திறமை, அறிவு, சாமர்த்தியம், முயற்சி, அதிர்ஷ்டம் என்று எல்லாமே கலந்து இருந்தது. எம்.ஜி.ஆர் என்றறொரு மனிதர் அன்று கருணாநிதிக்கு உதவாமல் போயிருந்தால் அவர் வாழ்க்கை முழுக்க கலைஞராக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் நிச்சயமாக முதல்வராக மாறியிருக்கவே முடியாது. அதே போல கலைஞரைத் தவிர வேறு எவர் தலைவர் பதவிக்கு வந்திருந்தாலும் திமுக என்ற கட்சி தமிழகத்தில் இல்லாமலே போயிருக்கும்.

கலைஞர் பிறந்த போது, வளர்ந்த போது சாதீய கட்டுமானம் தான் தமிழகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தது. மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் என்று யாருமில்லாத போதும் கூட நிலக்கிழார்கள் தான் சாதிய கட்டுமானத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்கள். அதில் உழன்று, அதனால் பாதிக்கப்பட்டு, வாய்க்கும் வயிற்றுக்குமே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களில் ஒன்று கலைஞரின் குடும்பமும்.  சாதீயத்தால் இழிவு சுமந்த கொடுமை ஒரு பக்கம்.  பொருளாதார பின்புலமே இல்லாமல் வாழ்க்கையின் கோரச்சுவடுகள் மறு பக்கம்.

கதைகளில் தான் கதாநாயகர்கள் இது போன்ற சூழலில் சாதித்துக் காட்ட முடியும்.  அன்றைய தமிழகத்தில் இவையெல்லாம் வாய்ப்பே இல்லை.  தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முக்கால்வாசி தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே உண்மை.  அதில் கலைஞர் குடும்பமும் ஒன்று.  ஒரு வேளை முதல் இருபது வருடத்திற்குள் அவருக்குள் இந்த பொறி தோன்றியிருக்கக்கூடும்.

"பணம் தான் இங்கே முக்கியம். அதிகாரம் அதைப் பெற்றுத் தந்து விடும்" என்ற எண்ணம் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.

அதையே கடைசி வரைக்கும் நம்பினார்.  அதை மட்டுமே நம்பியது தான் அவர் மேல் உள்ள விமர்சனங்களுக்கு முக்கியமான காரணமாகவும் அமைந்து விட்டது.

அண்ணா, கலைஞரைத் தவிரத் தமிழகத்தில் முன்னால் ஆட்சியில் அமர்ந்த முதல்வர்களுக்குச் சாதி, பணம், கட்சி என்று ஏதோவொரு வகையில் பின்புலம் இருந்தது.  அண்ணா கூட முதலியார் என்ற சாதீய சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூகத்தில் தான் பிறந்தார்.  கல்வி ரீதியாகவும் முறைப்படியான அங்கீகாரத்தையும் பெற்று இருந்தார். அந்தக் கொடுப்பினையும் கலைஞருக்கு அமையவில்லை.  அதுவே அவரை வாழும் வரைக்கும் குத்திக் கிழித்துக் காயப்படுத்தக் காரணமாகவும் அமைந்தது.

பெரியார், அண்ணா, கலைஞர் மூவரில் பெரியார் மட்டுமே பிறவி செல்வந்தர். ஆனால் கடைசி வரைக்கும் தனக்காக வாழாமல் தன் கொள்கைக்காகவே வாழ்ந்தவர். அதற்காகவே தன் சொத்துக்களைக் கொடுத்தவர். தமிழகத்தில் அன்றைய சூழலில் நினைத்துப் பார்த்தாலே அஞ்சக்கூடிய கொள்கைகளைப் பிரகடனமாக முழங்கியவர். தன் 84 வயது வரைக்கும் பாதை மாறாமல் அதற்காகவே வாழ்ந்தவர்.

ஆனால் அண்ணா பெரியார் கொடுத்த வரைபடத்தைப் பயன்படுத்திக் கொண்டார். தன் உழைப்பு, திறமையின் மூலம் தமிழகத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டார். சாமர்த்தியமாகக் காமராஜர் உருவாக்கிய அடித்தளத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டார். வாழ்வில் பெற வேண்டிய எந்த அதிகார சுகத்தையும் பெறாமல் மறைந்தார்.

கலைஞர்  உழைப்பாளி, திறமைசாலி, தந்திரசாலி என்பதனை விட மற்ற எவரையும் விட அதிர்ஷ்டசாலி என்ற வார்த்தை தான் சரியாகப் பொருந்தும்.

நாம் செய்யும் காரியங்கள் காலத்தோடு பொருந்திப் போக வேண்டும் அல்லது காலம் உணர்த்தும் காரியங்களை நாம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வர வேண்டும். அது கலைஞர் வாழ்க்கையில் இயல்பாகவே வந்தது. எத்தனை போராட்டங்கள் என்றாலும் அது கடைசியில் அவருக்குச் சாதமாகச் சூழலைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கியது.

எதிர்த்து நின்றவர்கள், எதிரியாக மாறியவர்கள், ஏளனப்படுத்தியவர்கள் எத்தனை பேர்கள் தோன்றினாலும் கடைசியில் ஒன்று செல்லாக்காசு போல மாறினார்கள். மற்றொன்று காலம் அவர்களை விரைவாக அழைத்துக் கொண்டு சென்றது. காரணம் அரசியல் என்பது திறமையின் அடிப்படையில் முப்பது சதவிகிதமும் நம் செயல்படும் விதங்களில் எழுபது சதவிகிதமும் தான் வெற்றி அடங்கியுள்ளது.  அப்படிப்பட்ட கலையைப் பெரியாரை விட, அண்ணாவை விடக் கலைஞர் கற்று வைத்திருந்த அரசியல் அறிவு என்பது கடைசி வரைக்கும் காப்பாற்றியது.

பெரியார் காசு விசயத்தில் கஞ்சனாக இருந்தார். கணக்கு விசயத்தில் பயங்கர கெடுபிடியாக இருந்தார். காலணா என்றாலும் பத்து முறை யோசித்து செலவளிப்பவர்.

ஆனால் அண்ணா ஒழுக்க விதிகளை மீறியவர்.  மக்களுடன் ஒன்று சேர, மக்களுடன் உறவாட, மக்கள் விரும்பும் மொழியை தன் மொழியாக கொள்கையாக மாற்றிக் கொண்டவர். காலப்போக்கில் தான் உருவாக்கிய மொழியே சரியென்று மக்களை நம்ப வைத்தவர். இளைஞர்களை கிறங்கடித்து பின்தொடர வைத்தவர். இதை அப்படியே கலைஞரும் பின்பற்றி தன்னை தக்க வைத்துக் கொண்டார்.  கூடவே தன் இடத்தை வேறு எவரும் பிடித்து விடக்கூடாது என்பதில் சாவு நெருங்கி விட்டது என்ற சமயத்தில் கூட சமரசமில்லா கொள்கை கொண்டவர்.

பெரியார் எதை விரும்பினாரோ? அண்ணா எதை தன் கனவாக நினைத்து வைத்திருந்தாரோ அதை முக்கால் வாசி கலைஞர் 1971 முதல் 1976 ஆட்சியில் இருந்த போதே அடித்தளமிட்டு வெற்றிக் கொடி நாட்டி தமிழகத்தின் புதிய பாதைக்கு அடிகோலிட்டவர் மு.க..   மருமகனை மீற முடியாதவராய், மகன்களை அடக்க முடியாத நிலையிலும், மகளை கண்டிக்க முடியாத சூழலிலும் மீண்டும் 1996 முதல் 2001 வரைக்கும் இருந்த ஆட்சியில் புதிய தமிழகத்திற்கு முகமளித்தவர் கலைஞர்.

இன்று கொள்கை நீர்த்துப் போய், கொள்கை என்றால் என்னவென்றே அறியாத  கொள்ளைக்கூட்டத்திடம் வந்து திராவிட அரசியல் வந்து நிற்கின்றது

கொள்கை பின்னுக்குப் போய்விட்டது.

கொள்ளையடிப்பதே பிரதானமாகியுள்ளது.

அவன் நல்லவன்? இவன் கெட்டவன்? என்ற பேச்சு கீழ்மட்டத்திலும் "நீயும் நானும் ஒண்ணு மக்கள் வாயில் மண்ணு" என்கிற ஆட்சியதிகாரக வேட்கை மேல்மட்டத்திலும் உள்ளது.

இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பரஸ்பர புரிதல் அடிப்படையில் அவரவர் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே தெரியாத புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் அரசியல் செய்கின்றனர். அதையே தங்கள் கொள்கையாகவும் மாற்றி உள்ளனர். மேலும் மேலும் ஆசை அடங்காமல் கொள்ளையடிப்பதில் யார் திறமைசாலி என்கிற ரீதியில் தமிழகத்தின் அரசியல் களம் இன்று மாறியுள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று நம்பமுடியாத ஆச்சரியமான தலைவராக மாறியுள்ள எடப்பாடி திமுகவினருக்கு மாதப்படியளப்பு திட்டத்தில் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் முடிந்துள்ளது. உதயநிதி தான் எதிர்கால தலைவர் என்று சொன்னாலும் முணுமுணுப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ளவும் துணிந்துள்ளனர்.

மாற்றங்களை இவர்களாவது உருவாக்குவார்களா? என்று நாம் யாரை யோசிக்க நினைக்கின்றோமோ அவர்கள் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவை 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் நிறுத்தி விடுவார்களோ என்ற பயமும் வந்து கொண்டேயிருக்கின்றது.

உருவான மாற்றங்களை நம் முந்தைய தலைமுறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.  நாம் வளர்ந்த நாகரிகத்தில், வளர்ந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தைரியமாக விமர்சிக்க, கேள்வி கேட்கவும் வாய்ப்பு அமைந்துள்ளது.  இதுவே மிகப் பெரிய முன்னேற்றம் தானே?  மாற்றங்கள் இன்னமும் வரும். மாறும் என்று நம்புவோம்.

பழைய வரலாறு முக்கியம்.  நாம் எப்படி இனி வாழப் போகின்றோம் என்பதற்கு அது தான் முக்கிய ஆதாரமாக நமக்கு வழிகாட்டும்.

கடைசியாக,

வாக்கு அரசியலை நம்பி மட்டும் உச்சத்தைத் தொட்ட ஒவ்வொரு அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மக்களால் தூற்றப்படுவார்கள்.  இது மாற்ற முடியாத உண்மை.

இது இருபது வருடங்களுக்கு முன்பு மேலோட்டமான விமர்சனப் பார்வையாக இருந்தது.  இன்று தொழில் நுட்ப வளர்ச்சியில் விரைவாக மாறியுள்ளது.  இது கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்! (Tamil Edition) Kindle Edition



Thursday, July 11, 2019

நரசிம்மராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)



நரசிம்மராவ் என்ற பெயர் என் நினைவுக்கு  வரும் போதெல்லாம் எனக்கு ஆனந்த விகடனில் மதன் பணியாற்றிய போது அவர் பிரதமர் நரசிம்மராவை பேட்டி கண்டு வெளியிட்ட கட்டுரை தான் முதலில் நினைவுக்கு வரும். இதில் உள்ள சில வார்த்தைகள் அப்படியே இன்னமும் மனதில் நிற்கிறது.

"அப்போது பம்பாய் கலவரம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. நான் நரசிம்மராவ் அவர்களைச் சந்தித்த போது அவர் வெள்ளரியில் பனித்துளி இருப்பது போல இருந்தார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. அவசரமும் இல்லை. சொல்லப் போனால் வெளியே இந்தியா எரிந்து கொண்டு இருக்கின்றது என்ற எண்ணமே அங்குள்ள சூழல் எனக்கு உணர்த்தவில்லை. அப்படித்தான் பிரதமரின் பேச்சும் இருந்தது. எனக்கு வியப்பாகவே இருந்தது" என்று எழுதியிருந்தார்.

அதன் பிறகு நரசிம்மராவ் பற்றி அறிந்த தகவல்கள் தினசரி மற்றும் வார இதழ்களின் வழியே மட்டும் தான். 

குறிப்பாக ஏ1 கிரிமினல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த அலங்கோல காட்சிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது மனக்கண்ணில் வந்து போகின்றது. உச்சக்கட்டமாக நரசிம்மராவ் மகனைச் சென்னையில் வைத்துக் கொண்டு கூட்டணி அரசியல், மற்றும் தான் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க ஏ1 கிரிமினல் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட் "கூட்டிக் கொடுக்கும்" அற்புத பணியைத் தொடங்கியதும், பாதிக்கப்பட்ட நடிகைகள் முதல் பலரையும் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

தமிழகத்திற்கு அனைத்து விதமான கலாச்சார சீரழிவிற்கும் வித்திட்ட ஏ1 கிரிமினலை ஒரு தட்டிலும் மற்றொரு தட்டில் நரசிம்மராவை வைத்திருந்தேன்.

ஆனால் வினய் சீதாபதி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் ஜெ.ராம்கி மொழிபெயர்ப்பில் கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ள நரசிம்மராவ் புத்தகம் மொத்தமாக என்னைத் திருப்பி போட்டு விட்டது. திடுக்கிடவும் வைத்து விட்டது என்றால் மிகையில்லை. நாம் எத்தனை தவறான எண்ணங்களை மனதில் வைத்திருந்தோம் என்ற ஆதங்கமும் உருவானது.

ஜெ. ராம்கியின் மொழிபெயர்ப்பு என்பது நேரிடையாக தமிழில் எழுதியுள்ளதைப் போல இருப்பது தான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான வெற்றி.

தமிழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கவர்ச்சி, உணர்ச்சி இரண்டுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இது மக்களின் மனோபாவம் சார்ந்தது அல்லது மக்களை அப்படி மாற்றி வைத்து இருக்கின்றார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் தலைவர்கள் என்ற பெயருக்கு உண்டானவர்களின் தனித்திறமைகள், நிர்வாக ஆளுமைகள், அதனால் விளைந்த மொத்த சமூக மாற்றத்தையும் எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை. அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.

இதனை மனதில் வைத்துக் கொண்டு தேசிய அரசியலை மொத்த மாற்றி அமைத்தவரும், இன்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் எல்லாவித தொழில்நுட்ப வசதிகளுக்கும் பிதாமகன் என்றால் அது நரசிம்மராவ் மட்டும் தான் காரணம் என்றால் அது ஒரு துளி மிகையில்லை.

காந்தி இருந்த போது காங்கிரஸ் என்பது வேறு. நேரு ஆண்டு போது காங்கிரஸ் என்பது முழுமையாக மாறியது. எல்லாவிதமான பயிற்சிகளும் பெற்று இருந்தாலும் இந்திரா காந்தி அம்மையார் வைத்திருந்த காங்கிரஸ் ன் முகம் முழுமையாக முற்றிலும் அது வேறுவிதமாக மாறியது. அது ராஜீவ்காந்தி கைக்கு வந்து சேர்ந்த போது பனிக்கட்டி உருகி இறுதி நிலையில் இருப்பதாக இருந்தது.

உருகிக் கொண்டிருந்த கட்சியைக் கடைசி காலகட்டத்தில் முழு உருவமாக மாற்றியவர் நரசிம்மராவ். அவர் கட்சியைத் தனிப்பட்ட முறையில் வளர்க்கவில்லை. ஆனால் கட்சியின் சார்பாக, நான் வகித்த பிரதமர் என்ற பதவியின் மூலம் இந்திய நாட்டை தலைகீழாகப் புரட்டிப் போட்டார் என்பதே உண்மை.

அடுத்த மாதம் சாமியாராகப் போகிறேன் என்ற நினைப்பில் உள்ள, முழுமையாக ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கி குப்பை போல மாற்றப்பட்ட ஒருவர் வாழ்க்கையில் சரஸ்வதி சபதம் படத்தில் வருவது போல யானை மாலை போட்டு மன்னராக மாற்றினால் எப்படியிருக்கும்?

அதனை அதிர்ஷ்டம் என்பீர்களா? இந்தியாவின் நல்லூழ் என்பீர்களா? அது தான் 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்தது.

நாட்டுக்கு நல்லூழ் இருந்ததே தவிர நரசிம்மராவ் வாழ்க்கை முழுக்க தீயது மட்டுமே அவரைச் சுற்றி கடைசி வரைக்கும் சுழன்றடித்துக் கொண்டு இருந்தது.

பக்கா கிரிமினல் என்ற வார்த்தைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மாநில அரசியலில் வெற்றி பெற முடியும். ஆனால் ஆனால் பயங்கரமான புத்திசாலித்தனம் கலந்த கிரிமினல்தனம் இருந்தால் மட்டுமே இந்தியத் தேசிய அரசியலில் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதற்கு முக்கியமான முழு உதாரணம் நரசிம்மராவ் அவர்களே. வட மாநில அரசியல்வாதிகளிடம் இல்லாத பத்து மொழிகள் அறிந்த ஆளுமை இருந்தது. 

மாநில அரசியலின் இண்டு இடுக்கு என்று ஒன்று விடாமல் கற்றுத் தெளிந்த லாவகம் இருந்தது. சோசலிசம் என்ன தந்தது? என்ன தரும்? என்ற தெளிவு இருந்தது? மாநில அரசியலில் தோற்றுப் போனால் என்ன நடக்கும்? சொந்த வாழ்க்கை எப்படி மாறும்? என்ற கடந்த கால அவரின் தோல்விக்கதைகள் அவருக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்து இருந்தது. உச்சத்தில் இருப்பதும், உயரத்தில் பறப்பதும் அடுத்த மாதமே அதளபாதளத்தில் வீழ்ந்து கிடந்தாலும் கடைசி வரைக்கும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல்தான் பிரதமர் பதவி வரைக்கும் அவரைக் கொண்டு வந்தது சேர்த்தது.

18 மணி நேரம் உழைத்தே ஆக வேண்டிய பிரதமர் பதவியுடன், உடல் முழுக்க நோய்களைச் சுமந்து வாழும் ஒரு 70 வயது முதியவர் புதிதாக அறிமுகமாகி உள்ள கணினி சார்ந்த அறிவியலை கற்றுக் கொள்ள முயல்வதும், அதுவும் ஆழ அகல அதற்குள் இறங்குவதும் என்பது நாம் நினைத்தே பார்க்க முடியாது.

சிங்கம் போல நிர்வாகத்தில் இருந்துள்ளார். நரி போலப் பல சமயம் ஒதுங்கியும் உள்ளார். கோஷ்டிகளைத் தூரத்தில் வைத்துத் தேவைப்படும் போது கொம்பு சீவியும் விட்டுள்ளார். தன்னை தக்கவைத்துக் கொள்ள அத்தனை தகிடுதத்தங்களை பொறுமையாகச் செய்துள்ளார். குறிப்பாகச் சோனியா என்பவரை எங்கே வைக்க வேண்டும்? எப்படி வைக்க வேண்டும்? என்பதனை மிகத் தெளிவாக அழகாக நேர்த்தியாகச் செய்துள்ளார். வச்சு செய்வது என்ற கலையைப் பற்றி இவர் தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்த பிதாமகன்.

ரிலையன்ஸ் நிறுவனத்தை வளர்ப்பதில் மட்டுமே கடைசி வரைக்கு அக்கறை காட்டிய, அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்படாத நிறுவனராக வாழ்ந்த பிரணாப் முகர்ஜி ஒரு பக்கம், அர்ஜுன் சிங் மறுபக்கம் என்று வடமாநில அரசியல் லாபி அனைத்தையும் ஆந்திரா காரச் சட்னி போலச் சுவைத்து நக்கியுள்ளார்.

ஆனால் இந்திரா முதல் சோனியா வரைக்கும் காங்கிரஸின் முக்கியக் கொள்கை பிரகடனமாக இருக்கும் எவரையும் வளர விடக்கூடாது? எவரும் எங்களை மீறி முன்னிலைப்படுத்தக்கூடாது என்ற உயரிய தத்துவங்களை உடைத்து நொறுக்கிய பெருமகனார் நரசிம்மராவ் அவர்கள்.

அவர் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதனை விட அடுத்த நகர்வு என்ன? என்பதனை யோசிக்க முடியாத அளவிற்கு தன் ஆட்சியை மக்கள் நல ஆட்சிக்காக அர்ப்பணித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் முதல் நிழல் உலகத் தொடர்புகள் வரைக்கும் எத்தனையோ இவரைச் சுற்றி சுழன்று அடித்தாலும் எதையும் தாங்கும் இதயம் போலவே இருந்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது.

ஐந்து பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் இவர் பெற்று இருந்தாலும் மனைவியைத் தவிர்த்து மற்ற இரு பெண்களிடம் எப்படி மயங்கினார்? இவர் வயதான காலத்தில் எதனைப் பரிமாறிக் கொண்டார் என்பது புதிராகவே உள்ளது?

இவர் இறந்தபின்பு எப்படி சோனியா பழிவாங்கினார் என்பதனை முழுமையாக வாசிக்கும் போது எதை விதைத்தோமோ அதுவே தான் கிடைக்கும் என்பது சோனியாவுக்குப் புரிய நியாயமில்லை. ஆனால் நிச்சயம் ராகுலுக்கு இப்போது புரிந்திருக்கும்.

இந்தப் புத்தகத்தின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு தலைவரைப் பற்றி எழுதும் போது அது ஒரு நபர் சார்பாகப் புகழ்ந்து அல்லது இகழ்ந்து தான் எழுதுவது தான் இங்குள்ள வாடிக்கை. காரணம் இங்குள்ள அரசியல் சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. ஆனால் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒவ்வொரு மாற்றத்தையும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எப்படிப் பார்த்தார்கள்? அவர்கள் கருத்து என்ன? என்பதில் தொடங்கி ஒரு விசயத்தை பத்து பேர்களின் பார்வையில் மிகுந்த நம்பகத்தன்மையுடன் அடுத்த நிகழ்வோடு தொடர்பு படுத்தி எழுதியுள்ளார்கள். குறிப்பாக பாப்ரிஜி மசூதி இடிக்கப்பட்ட பின்பு முன்பும் பின்பும் நடந்த ஒவ்வொரு சம்பவங்களை மிக அழகாக தொகுத்துக் கொடுத்துள்ளார்.

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் எவரெல்லாம் நம்பிக்கைத் துரோகம் செய்தார்களோ ஒருவரையும் விடாமல் நரசிம்மராவ் அவர்களை ஏதோவொரு வகையில் ஏதோவொரு இடத்தில் சிக்க வைத்தும் சென்றுள்ளார்.

அது பலரின் அரசியல் வாழ்க்கையையும் அஸ்தமனமாக்கியுள்ளது. குறிப்பாக அத்வானி.

இந்தப் புத்தகம் உங்கள் வீட்டில் கீதை போல, பைபிள் போல, குரான் போல இருந்தே ஆக வேண்டிய புத்தகம். காரணம் நரசிம்மராவ் க்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்பது குறைந்த பட்சம் அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளளவாவது வேண்டும் என்பதற்காக. 

இது நரசிம்மராவ் ன் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. முடிந்தே போய் விட்டது. திவாலாகி விட்டது என்ற உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டு இருந்த போது வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்று வீறு கொண்டு மீண்டும் எழ வைத்த இந்தியச் சரித்திரம் கொண்டாட வேண்டிய ஒரு நாயகனின் கதை மட்டுமல்ல. 

இந்தியாவை 1991 க்கு பிறகு புரிந்து கொள்ள, அதன் தொழில் நுட்ப, சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையினை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த நூல் மிக மிக முக்கியமானது. மாறாத பிரியமும் நன்றியும். Ramki J
#Amazon

Saturday, February 16, 2019

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் 

(வெற்றியின் ரகசியங்கள்) 

ஆங்கிலத்தில் எழுதியவர் , மால்கம் கிளேட்வெல் 

அற்புதமான தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் சித்தார்த்தன் சுந்தரம். 

விகடன் வெளியீடு. 

கடந்த ஆறேழு மாதங்களாக வார இதழ்கள் வாசிப்பை முழுமையாகவே நிறுத்தி விட்டேன். வேறு வழியே இல்லாமல் திருப்பூருக்குள் நடக்கும் உள்ளுர் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தினசரி பத்திரிக்கைகள் வாசித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மற்றபடி செய்திகளை அறிந்து கொள்ள அவ்வப்போது இணையத்தின் மூலம் தெரிந்து கொள்கிறேன். 

தமிழில் அக்கிரமம் என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கு இப்போது எனக்குத் தெரிந்து முதன்மையான இடத்தில் இருப்பது ஊடகத்துறை. 

தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைத் துறை என்று பாரபட்சமில்லாமல் இரண்டும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றது. ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் பலவிதமான எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வாட்ஸ்அப் என்பது நம்பகத்தன்மை இல்லாத புரளிகளை அடிப்படையாக் கொண்டு அலைபேசி என்ற சின்னதிரை வழியாக உங்களை வந்து அடைவது. 

அதுவே பெரிய திரை என்றால் தற்போதைய தொலைக்காட்சி. 

ஒரு மணி நேரம் முழுமையாக ஒரு தொலைக்காட்சியை நீங்கள் பார்க்க நேரிட்டால் உங்களுக்கு இல்லாத நோய்கள் உங்களுக்குள் வந்து விட்டது போலப் பிரமை உருவாகும். கட்சி, மதம், சாதி என்ற ஆதரவில் தங்கள் லாபவேட்டைக்கு மனிதர்களை விலங்குகள் போலவே மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 

முழுமையாகப் புறக்கணிக்க முடியாது என்றாலும் நாம் இவற்றைப் புறக்கணித்தால் நம் வாழ்க்கை ஒன்று மாறிப்போய் விடாது என்பதனை சமீப கால அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். 

தற்போதைய ஊடகங்கள் அவரவர் வாழ்க்கையில் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைகளைச் சீர்குலைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பது முற்றிலும் உண்மை. 

பொதுவாகப் போட்டிகள் அதிகமாகும் போது தனிப்பட்ட மனிதர்களும், நிறுவனங்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளத் தங்கள் திறமையை அதிகபட்சமாக வெளிக்காட்டி தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என்பதே உலக நியதி. ஆனால் குறுக்குவழிகளில் செல்வது என்பது மற்றொரு வழி. இரண்டாவது வழியைத்தான் பெரும்பாலான தற்போதைய பத்திரிக்கைகள் (ஊடகத்துறை) கடைபிடிக்கின்றன. போட்டிகள் அதிகமானதால் எது செய்தி? எது செய்தியில்லை என்ற பாரபட்சமின்றிக் கலந்து கட்டிக் கொடுக்கின்றார்கள். 

மனசாட்சி என்பதே இல்லாமல் துணுக்குச் செய்திகளை, பத்துப் பைசாவிற்கு மதிக்க முடியாத நிகழ்வுகளை , சுயநல அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் பயமுறுத்தும் இசையுடன் உங்கள் வீட்டுக்குள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. பத்திரிக்கை உலகத்திற்கென்று லாபம் என்பதற்கு அப்பாற்பட்டு சில தனியான கொள்கைகள் இருந்தன. ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் சில குறிப்பிட்ட நபர்களின் வழிகாட்டலின்படி நடந்தது. ஆனால் தற்போது எவ்வித முன் அனுபவமின்றிக் கத்துக்குட்டிகளை வைத்து, ஒப்பந்த அடிப்படையில் லாபம் என்பதனை மட்டுமே குறியாகச் செயல்படும் பத்திரிக்கை உலகத்தை இனி நாம் பேசத் தேவையில்லை. 

புறக்கணிப்பது தான் சிறந்த வழி என்ற நோக்கத்தில் புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். 

பொருட்களின் தரத்தை விட அந்தப் பொருளுக்குச் செய்யப்படும் விளம்பரமே முக்கியம் என்ற நிலையில் சமூகத்தை ஊடகத்துறை மாற்றியுள்ளனர். இதன் மூலம் மட்டுமே மக்களின் மனதை மாற்ற முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இப்போது ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

ஒவ்வொரு துறையிலும் தெளிவான, அழகான, நாகரிகமான பொய்களுடன் ரசிக்கக்கூடிய அளவில் விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தங்கள் பொருட்களின் மேல் காட்டுவதில்லை என்பது தான் எதார்த்த உண்மை. மக்கள் இதனைத்தான் விரும்புகின்றார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. 

தரம் குறைந்த பொருட்களை விலை அதிகமாகக் கொடுத்து வாங்கும் புதிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாம் தான் சுயபுத்தியுடன் செயல்பட வேண்டும். 

வயதாகும் போது எல்லாவற்றையும் குறையாகவே பார்ப்பது என்ற நோக்கத்தையும் கடந்து பலவற்றையும் யோசிக்க வைத்த புத்தகங்களை வாசிக்கத் துவங்கி உள்ளேன். இனி வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விடுமோ என்ற சூழலில் தான் ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் என்ற புத்தகம் எனக்கு அறிமுகமானது. 

பள்ளிப்பருவம் முதல் நேற்று வரை நாம் எத்தனையோ புத்தகங்கள் படித்து வந்திருப்போம். சில புத்தகங்கள் மட்டும் தான் ஆச்சரியத்தையும் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத அளவிற்குத் தாக்கத்தை உருவாக்கி நமக்குப் புதிய பாதையை அடையாளம் காட்டும். நான் சமீபத்தில் வாசித்த இந்தப் புத்தகத்தை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். 

இந்தப் புத்தகத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு தொழிலில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் நான் இதுவரையிலும் நான் இருக்கும் துறையில் பெற்ற அனுபவங்கள் மூலம் எவையெல்லாம் சாதகம்? எவையெல்லாம் பாதகம் என்று என் மனதில் பட்டியலிட்டு வைத்திருந்தேனோ அதனை இந்தப் புத்தகத்தில் படம் வரைந்து மிக அழகாகப் பாகம் குறித்துப் புரிய வைத்துள்ளார்கள். 

இங்கு வெற்றி பெற்றவர்கள் சிறிய விசயத்தைச் செய்தாலும், பேசினாலும் அது பெரிதாகப் பேசப்படும் பார்க்கப்படும். அதுவே பொருளாதார ரீதியாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர்கள் பேசக்கூடிய எந்தக் கருத்துக்கும் முக்கியத்துவம் கிடைப்பது அரிது. 

இங்கே வெற்றியாளர்கள் எவரும் தங்களுடைய வெற்றிக்கான கதையை முழுமையாகச் சொல்லிவிட மாட்டார்கள். காரணம் அதற்குள் இருக்கும் அசிங்கங்களை வெற்றி பெற்றதும் நாம் வாழும் சமூகம் சிங்கமாக மாற்றிவிடும். 

இந்தப் புத்தகத்தில் உலகப் பணக்காரர்கள் பலரையும் பற்றிப் பேசியுள்ளார்கள். 

பில்கேட்ஸ் தொடங்கிப் பல்வேறு உலக அளவில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து இருக்கின்றார் நூலாசிரியர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வளரும் போது அவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட வாய்ப்பு, அவர்கள் பயன்படுத்திய விதம், அவர்களுக்கு மட்டுமே அமைந்த சூழல் என்று தொடங்கி நாம் இதுவரையிலும் யோசித்துப் பார்க்க முடியாத அனைத்துக் கோணங்களிலும் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியுள்ளார். 

வெற்றி என்பது வெறும் உழைப்பினால், திறமையினால் மட்டும் வருவதில்லை. புறக்காரணிகள் பலவுண்டு. அதனை எவரும் எந்த இடத்திலும் சொல்வதில்லை. அதனைப் பற்றித்தான் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளனர். 

நீங்கள் வென்றவர்கள் என்ற முறையில் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். வெல்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர் என்றால் காரணக் காரியங்களைக் கோர்த்துப் பார்க்க முடியும். எந்த வகையில் பார்த்தாலும் உங்கள் மனம் சார்ந்த செயல்பாடுகளில் இந்தப் புத்தகம் முக்கியமான தாக்கத்தை உடனே உருவாக்கும் வல்லமை கொண்டது. 

நிச்சயம் தமிழில் மிக அழகாக நேர்த்தியாக எழுதிய நண்பர் சித்தார்த்தன் சுந்தரம் பாராட்டுக்குரியவர். அவர் எழுதிய எழுத்தைப் போலவே அவரும் உரையாடும் போது நமக்கு நம்பிக்கையூட்டக்கூடியவராக இருக்கின்றார். 

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் என் மனம் சார்ந்த செயல்பாடுகளில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அது குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதி வைக்க விரும்புகின்றேன். 

)()()()()(





Wednesday, November 29, 2017

வணக்கம் - நூல் விமர்சனம்


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா (1917- 2017) கொண்டாடும் நேரமிது. வைகோ அவர்களும் எம்.ஜி.ஆருக்காகச் சமீபத்தில் ஒரு விழா நடத்தியிருந்தார். எம்.ஜி.ஆருக்கான விழா என்று சொல்லாமல் தனக்கான பொன்விழா என்று காரணம்காட்டி அரசாங்கத்திடமிருந்து கலைவாணர் அரங்கைப் பெற்று இருந்தார். விழா மேடையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர் பேசும் போது "நான் இந்த மேடையில் பேசுவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் குறித்து ஏறத்தாழ நாற்பது புத்தகங்கள் பல்வேறு நபர்கள் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியதை வாசித்து விட்டுத் தான் இங்கே பேசுகின்றேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

வைகோ வும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் திசையில் இருந்து அரசியல் களத்தில் செயல்பட்டவர்கள். வைகோ அவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து நேரிடையான, மறைமுகமான, செவிவழிச் செய்திகள் ஏராளமாகத் தெரிந்திருந்த போதிலும் எம்.ஜி.ஆர் குறித்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டு விழாவில் பேசியது என்னளவில் ஆச்சரியமாகவே இருந்தது. 

வைகோவின் உரையைக் கேட்டதிலிருந்தே எம்.ஜி.ஆர் குறித்த பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது கொண்டே இருந்தது. இதுவரையிலும் எம்.ஜி.ஆர் குறித்த தகவல்கள் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாகத் தெரிந்தது மட்டுமே. 

காரணம் எம்.ஜி.ஆர் மறைந்த போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தேன். நான் இதுவரையிலும் வாசித்த வாசிப்பின் வாயிலாகவே அவரைப் பற்றிப் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. தீரா ஆச்சரியங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை குறித்த தேடல்கள் இன்னும் முழுமையடையவில்லை. நீண்ட நாளைக்குப் பின் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. 

அது வலம்புரி ஜான் எழுதிய வணக்கம். 

இந்தத் தொடர் நக்கீரனில் வாரந்தோறும் வெளிவந்த காலம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்போது கல்லூரி முடித்து வெளியே வந்து வேலையில் சேர்ந்த சமயம். இடையிடையே சில அத்தியாயங்களை வாசித்துள்ளேன். அப்போது தொடர் வாசிப்பில் இல்லாத காரணத்தால் வாசிப்பு நிலையில் இருந்து தள்ளியே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அப்போது வாசித்த விசயங்களுக்கும், இப்போது வாசிக்கும் போது உண்டான மனநிலைக்கும் ஏராளமான வித்தியாசங்கள். அன்று புரியாத பல அரசியல் சூட்சமங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இவையெல்லாம் நாம் அன்றாடம் செய்தித்தாளில் வாசித்தது தானே? என்று யோசிக்க வைக்கின்றது. 

வலம்புரி ஜான் எழுதிய பல புத்தகங்களை ஊரில் இருந்த போது நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். இருபது வயது இளைஞர்களைச் சுண்டியிழுக்கும் நடையது. அருவி போல நம்மை இழுத்துக் கொண்டே சொல்லும். எந்த எழுத்தாளர்களின் நடையுடனும் ஒப்பிடவே முடியாது. அதீத புத்திசாலிகள் வரிசையில் நிச்சயம் வலம்புரி ஜான் அவர்களுக்கும் ஒரு இடமுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கரை கண்டவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், பத்திரிக்கையாளர், பாராளுமன்ற உறுப்பினர் என்று வாழ்நாள் முழுக்கக் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வாழ்ந்தவர். பல இளைஞர்களைப் பத்திரிக்கையுலகத்திற்கு அடையாளம் காட்டியவர். 

குறிப்பாக நக்கீரன் கோபால் அவர்கள் வலம்புரி ஜான் மூலமாகத்தான் முதன் முறையாகப் பத்திரிக்கை உலகத்திற்கு உள்ளே வந்தார். அப்போது வலம்புரி ஜான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாய் வார இதழில் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக நக்கீரன் கோபால் தனது பத்திரிகை உலகப் பயணத்தைத் தொடங்கினார். 

கடந்த 25 ஆண்டுகளாக வலம்புரி ஜான் அவர்களின் எந்தப் புத்தகத்தையும் வாசித்தது இல்லை. ஆனால் பல்வேறு இடங்களிலும் பேசிய பேச்சுத் தொகுப்புகளை மட்டும் இணையத்தில் அவ்வப்போது கேட்பதுண்டு. பல சமயம் வியந்து போனதுண்டு. ஞாபக சக்தி, தொடர்ந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கும் வார்த்தைகளும், பலரும் அறிந்திராத சரித்திர குறிப்புகள் முதல் நிகழ்கால அரசியல் அவலங்கள் வரைக்கும் எனக் கலந்து கட்டி கேட்பவரை திகைக்க வைப்பதில் கில்லாடியாக இருப்பார். 

வணக்கம் தொடர் நக்கீரனில் வெளிவந்த போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தது. வலம்புரி ஜானுக்கு மட்டுமல்ல. நக்கீரன் வார இதழுக்கும் சேர்த்து ஜெ பல இடைஞ்சல்களை உருவாக்கினார். நீதிமன்றம், காவல்துறை கலந்து கட்டி கபடி விளையாடியது. ஜெ. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய போது தமிழகம் புதுப்புது விசயங்களைக் கண்டது. மேற்கத்திய நாடுகள் மட்டுமே கண்ட சர்வாதிகாரம் என்பது இங்கே உள்ள மக்களாட்சியில் என்னவெல்லாம் உருவாக்க முடியும் என்பதனை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதா காலத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் நான்கு பதிப்புகள் கண்டாலும் தற்போது தான் அதீத கவனம் பெற்றுள்ளது. காரணம் இதில் சசிகலா குறித்துச் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டிருப்பது முக்கியக் காரணமாக இருந்தது. வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்திற்கென என்னுரை என்று 2002 வருடத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் முதல் பதிப்பு 2005 வந்து அதற்குப் பிறகு ஐந்து பதிப்புகள் வெளி வந்துள்ளது. 

புத்தகத்தை முதல் முறை வாசித்து விட்டு உருவான தாக்கமும், மீண்டும் மீண்டும் பலவற்றை யோசித்துக் கொண்டே புத்தகத்தில் சொல்லப்பட்ட சின்னச் சின்னக் குறிப்புகளை யோசித்துக் கொண்டே மூன்று நாட்களும் இந்தப் புத்தகமே மனதிற்குள் சுழன்றடித்துக் கொண்டேயிருந்தது. 

தற்போது ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடக் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களைப் பற்றி எழுத்தின் வாயிலாகவே தெரிந்து இருப்பார்கள். தற்போது இணைய ஊடகங்கள் ஆதிக்கம் பெற்ற பின்பு தான் பல மறைக்கப்பட்ட பல தகவல்களும், உண்மையான விசயங்களும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

காரணம் இணையத்தில் கலைஞர் குறித்து நேர்மறை எதிர்மறை விசயங்கள் அனைத்தும் கலந்து இருப்பதால் வாசிப்பில் ருசி உள்ளவர்கள் எளிதாக எது சரி? எது தவறு? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். இன்று வரையிலும் பல அரசியல்வாதிகள் கடந்த கால வாழ்க்கை, அவர்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் விவாத பொருளாகவே உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் குறித்துச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே? ஏன் என்று பலமுறை நெருங்கிய நண்பர்களிடம் விவாதிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல்தன்மையைக் காரணமாகச் சொல்லி அதற்குப் பின்னால் உள்ள அரசியல் விசயங்களை நண்பர்கள் புரியவைப்பார்கள். 

ஆனால் ஜெயலலிதா குறித்து நம்மால் அனைத்து விசயங்களையும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ள முடியும். இணைய வளர்ச்சியில் ஜெயலலிதாவின் அகங்காரம் எடுபடாமல் போய்விட்டது. 

நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிச்சயம் இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மொத்த குணாதிசியங்களையும், அவரின் அவல ஆட்சி அதிகார அவலங்களை நன்றாகவே தெரிந்து வைத்து இருப்பார்கள். தமிழக அரசியலில் இறப்புக்குப் பின்பு ஜெ வைப் போலக் கேவலப்பட்டவர்கள் எவருமே இல்லை. அதேபோல இந்திய அரசியலில் இந்த அளவுக்கு அசிங்கப்பட்டவர்களும் எவருமில்லை. 

இன்றும் அவரை ஆதரிப்பவர்களை என் பார்வையில் இரண்டு விதமாகத் தான் பிரிக்க முடியும். 

ஒன்று அவர் சாதி சார்ந்த அபிமானம்.

மற்றொன்று மாற்றிக் கொள்ள முடியாத கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாகவும் இருக்கின்றார்கள். 

எம்.ஜி.ஆர் போல நிஜமான வள்ளல் தன்மை கொண்டவரும் இல்லை. ஆனால் தனக்கு ஒன்று தேவை என்றால் அதற்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்ற கேவல அத்தியாங்களைத் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதா தான். இவரைப் பற்றித் தான் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பேசுகின்றார். அத்துடன் அவர் வாழ்ந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் நிலைமைகள், சம்மந்தப்பட்ட மனிதர்கள், ஆயுதம் ஏந்தத் தேவையில்லாத அரசியல் யுத்தத்தின் சகல பரிணாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் பாணியில் தனித்தனி கட்டுரையாகச் சொல்லியுள்ளார். 

அவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தும் வலம்புரி ஜான் குறித்தும், இந்தப் புத்தகம் குறித்தும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு பேர்கள் எழுதிய விமர்சனங்கள் என் கண்ணில் பட்டது. ஆனால் மொக்கை எழுத்தாளர்க்கு இணையத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் கூட வலம்புரி ஜான் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எந்த இடத்திலும் வலம்புரி ஜான் குறித்த முழுமையான விபரங்கள் இல்லை. 

முக நூல் வந்த பிறகு ஐம்பது வருடங்களுக்கு முன்பு துணை கதாபாத்திரங்களில் நடித்த சாதாரண நடிகை நடிகர்களைப் பற்றிக் கூட விமர்சனமாகச் சிலாகித்து எழுதும் நபர்கள் எவரும் வலம்புரி ஜான் அவர்களைப் பற்றி எழுதாமல் இருப்பது ஒரு வகையில் ஆச்சரியம் என்றால் அவரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உரியதாகவே உள்ளது. தொடர்ந்து கட்சி மாறிக் கொண்ட வந்தது முதல் எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல் நினைத்த போது நினைத்தவாறு பேசியது வரைக்கும் எல்லாமே அவரைக் கடைசியில் மரணம் வரைக்கும் துரத்தியது. அவரின் மரணமும், மரண ஊர்வலமும் சங்கடமாக முடிந்தது. 

தொலைக்காட்சியில் தினந்தோறும் அவர் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன். மருத்துவத்தின் அத்தனை பக்கங்களையும் அலசுவார். ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டேயிருப்பார். கேட்பவர்களுக்கு எதை எடுத்துக் கொள்வது? எப்படிப் பின்பற்றுவது? என்று குழப்பங்களை வரும் வரைக்கும் சரித்திர காலச் சம்பவங்களுடன் கோர்த்துச் சொல்லுவார். கடைசியில் அவர் உடம்பு நோயின் மொத்த குத்தகை கிடங்காக மாறி எலும்பும் தோலுமாக இறந்தார். இந்த இறப்பில் ஜெயலலிதாவிற்கு முக்கால்வாசி பங்குண்டு. 

ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்து வைத்த போது எம்.ஜி.ஆர் அவர்களால் ஜெ. வுக்கு ஆலோசகர் என்ற நிலையில் வலம்புரி ஜான் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார். 

இவர் தான் வாசிப்பு முதல் அரசியல் பழக்கங்கள் வரைக்கும் ஜெ. வுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால் காலம் வேறுவிதமாக நகர்த்தியது. ஜெ அதிகாரத்திற்கு வந்த போது வலம்புரி ஜான் ஆகாத மனிதராக மாறிவிடக் கைது நடவடிக்கையின் போது மெல்ல கொலும் விசயத்தை டீ யில் கொடுத்து இவர் உடல் நலன் சீர்கெட்டுப் படுக்கையில் விழும் அளவிற்குக் கொண்டு போய் நிறுத்தியது. 

இந்த வணக்கம் புத்தகத்தை வெறுமனே நூல் விமர்சனம் என்ற நிலையில் பார்க்க மனம் வரவில்லை. இதில் உள்ள முக்கியக்குறிப்புகள் இணையத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பதிவுகளாக எழுதி வைத்திட விரும்புகின்றேன். 

எம்.ஜி.ஆர். -  ஜெயலலிதா 
ஜெயலலிதா -  எம்.ஜி.ஆர். 
ஜெயலலிதா -  சசிகலா 
மூவருக்கும் மத்தியில் வாழ்ந்த வலம்புரி ஜான். 

தொடர்ந்து பேசுவோம்........... 


Sunday, June 18, 2017

நான் ரசித்த "பழைய குப்பைகள்" எனும் புத்தகம் குறித்தொரு பார்வை...

நான் ரசித்த "பழைய குப்பைகள்" எனும் புத்தகம் குறித்தொரு பார்வை...

 ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்... 

வாழ்வின் எல்லாத் தருணமும் லைக்கும், கமெண்டும் மட்டுமே முழு திருப்தியையும், மகிழ்வையும் கொடுத்துவிடுவதில்லை. சில நேரம் காரணமின்றியே ஒரு சோர்வு வரும், சோர்வு வரும் தருணங்களிலெல்லாம் மனம் தனிமையை விரும்பும். மனம் தனிமையை விரும்பும் தருணங்களில் உடன் ஒரு புத்தகம் இருந்தால் அத்தனிமையும் இனிமையாகும். அப்படியொரு தருணத்தில் என் மனதிற்கு உரமாகப் போகிறது என்று தெரியாமலே கையிலெடுத்தது தான் இப்"பழைய குப்பைகள்."

புத்தகத்தின் துவக்கத்திலே ஆசிரியர் சொல்லிவிடுகிறார் இது என் முழு சுயசரிதை அல்லவென்று. புத்தகத்தின் உட்சென்று பார்த்தபின் நமக்கும் அது புரிகிறது... புத்தகத்தினுள் இதுவரை தான் கடந்து வந்த பாதைகள் பற்றிச் சொல்கிறார். தன் அனுபவங்களைச் சொல்கிறார். தனக்குப் பிடித்ததை சொல்கிறார். தனக்குப் பிடிக்காததை சொல்கிறார். தான் ரசித்ததைச் சொல்கிறார். தனது ஊரை அறிமுகப்படுத்துகிறார். தனது நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் எனத் தான் ரசித்த அத்தனையும் சொல்கிறார். தனது வேலையைப் பற்றி சொல்கிறார். தன் குடும்பம், குழந்தைகள் பற்றி சொல்கிறார்... 

 தன் அம்மாவைப் பற்றி அறிமுகப்படுத்துகையில் "கஷ்டப்படுவதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் பெண்கள் எனும் கொள்கையை இன்றுவரையிலும் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் அம்மா" என்ற ஒற்றை வரியின் மூலம் அவர்கள் கடந்து வந்த பாதையின் மொத்த வலியையும் வாசகர்களின் இதயத்தில் இறக்கிவிட்டு நகர்கிறார்... சாதாரணமாகவே அருகில் இருக்கையில் புரிந்து கொள்ளப்படாத நபர் அப்பா. அதற்குரிய காரணத்தை விளக்கினாலும், தான் அப்பா ஆனபின் அப்பாவின் அன்பைப் புரிந்துகொண்டு. அவர் இருந்த நேரத்தில் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டிய அன்பைக் கொடுத்திருக்கலாமோ என நம்மையும் அவருடன் யோசிக்க வைத்து, ஒரு நிமிடம் நின்று இருதுளி கண்ணீர் துளிகளை அவருக்குக் காணிக்கையாக்கி கனத்த இதயத்தோடே நம்மையும் அவருடன் நகர வைக்கிறார்... 

இப்போது அவர் தன் மகள்களுடன் நம்மையும் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறார் கோயில், குளம், சிதிலமடைந்திருக்கும் கோயில் தேர், நமக்கெதிரே எதிர்படும் அவருக்குத் தெரிந்த முகங்கள் அத்தனையும் நமக்கும் அறிமுகப்படுத்திவிட்டு அவர்களின் ஊர் ரயில்வே ஸ்டேசனுக்கும் அழைத்துச் செல்கிறார். அழைத்துச் சென்றவர் நமது கரங்களை விட்டுவிட்டார். இப்போது அவர் கரங்களில் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டார் வழக்கமாக அவர் அமர்ந்து படிக்கும் இடத்தில் உட்கார்ந்து படிக்க துவங்கிவிட்டார்... 

 இப்போது அவர் அமைதியாகிவிட்டார். 

ஆனால் இதுவரை அவர் புத்தகம் மூலம் பேசியது அத்தனையும் நம்முடன் பேச துவங்குகிறது. நீ, உன்னை, உன் வாழ்வை, உன் சுற்றத்தை, உன் வேலையை, உன் நண்பர்களை, உன் ஆரோக்கியத்தை, உன் குடும்பத்தை, உன்னைச் சுற்றி நிகழும் மாற்றத்தை எல்லாம் கூர்ந்து கவனிக்கிறாயா? அவற்றையெல்லாம் ரசிக்கிறாயா? இல்லை பணம் என்ற காகிதத்தின் பின்னால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறாயா? என்னைப்பற்றி என்னால் எழுத முடியும் போது, உன்னைப் பற்றி உன்னால் ஏன் எழுத முடியாது? என அவரது கேள்விகள் நமை நோக்கி ஆக்டோபஸ் கரங்களால் நீள்கிறது... 

 ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது வாசகனின் சிந்தனையை தூண்டுவது, அவனை யோசிக்க வைப்பது, அவனைச் செயல்பட வைப்பதாகவே தானே இருக்க வேண்டும். அந்த வகையில் ஜோதிஜி திருப்பூர் இம்முறையும் ஜெயித்திருக்கிறார்... 

ஒரு எழுத்தாளன் என்பவன் தேனீ போல் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். அவன் தேடித்தேடி தகவல்களைச் சேகரித்து தன் வாசகனிடம் சேர்ப்பிக்க வேண்டும். முதலில் "வெள்ளை அடிமைகள்" புத்தகத்தில் இந்திய வரலாறும், அடிமைகளாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறும். பின்பு "ஈழம் வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் இலங்கையைக் குறித்த ஏழாயிரம் வருட வரலாறு துவங்கி பிரபாகரன் வீழ்ந்தது வரை ஜோதிஜி திருப்பூர் அவர்களும் அதையே தான் சுணக்கமின்றி செய்திருக்கிறார்கள்... 

ஒரு எழுத்தாளன் என்பவன் வாசம் வீசும் பூ போல் இருக்க வேண்டும். தன் எழுத்துக்களை சுற்றியே வாசகர்களை வட்டமிடச் செய்ய வேண்டும் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" புத்தகத்தைப் படித்த பின் தானே நமை "பழைய குப்பைகள்" எனும் இப்படைப்பையும் தேடிவர செய்திருக்கிறது அவரது எழுத்து... என் எழுத்துகள் விற்பனைக்கு அல்ல அது என் ஆத்ம திருப்திக்கு என்று சொல்லுவதோடு நின்று விடாமல். "டாலர் நகரம்" எனும் தன் முதல் படைப்பை தவிர்த்து மற்ற படைப்புகள் அத்தனையும் இலவசமாக படித்துக் கொள்ளுங்கள் என வலைத்தளத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு. தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுபவர்களைத் தூரத்தில் நின்று ரசிக்கும் தாயின் மனநிலையில் தன் எழுத்துக்கள் பிறரால் வாசித்துச் சிலாகிக்கப்படுவதை ஓரமாக நின்று கொண்டு ரசிப்பதில் தானே தெரிகிறது அவரது வெற்றி... 

இன்னும் சில கட்டுரைகள் மூலமாகவும் பேசுகிறார் ஆன்மீகம் பற்றி நம்முடன் அளவளாவுகிறார். தெளிவான தனது கருத்தைப் பதிய வைக்கிறார். பத்து கேள்வி பதில்களாகப் பலருக்கும் பயன்படும் வகையில் தனது அனுபவத்துடன், ஆசையையும் பகிர்கிறார். புத்தகம் படித்தவர்களுக்கு இப்பழைய குப்பைகள் மனதிற்கு உரமாவது மட்டும் திண்ணமே...

ஜோதிஜி திருப்பூர் அவர்களின் சிறப்புகளில் சில, தேவியர் இல்லம் (deviyer illam) என்ற தனது பிளாக்ல் எழுதிக் குவித்திருக்கும் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள். மொத்தம் எட்டு புத்தகங்கள். அவை ஒன்றே முக்கால் லட்சத்திற்கு மேற்பட்டோர் கரங்களில் இதுவரை போய் சேர்ந்திருக்கிறது. புதிய தலைமுறை இதழில் கவர் ஸ்டோரியாய் வந்திருக்கும் கட்டுரை. 2013, 2014 ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாய் தேர்வு செய்யப்பட்ட "டாலர் நகரம்" எனும் புத்தகம் என்ற பல சிறப்போடு எழுத்துலகில் பயணப்பட்டு கொண்டிருக்கும் உங்கள் எழுத்துகள் இன்னும் பல லட்சம் பேர்களின் கரங்களைப் போய் சேரட்டும், சேரும் என்ற பிரார்த்தனையும் வாழ்த்துக்களோடும்,

 உங்கள் வாசகனாய் 

அன்புடன், H. ஜோஸ்...









Monday, January 16, 2017

கருப்புக்குதிரை


கருப்புக்குதிரை நூல் விமர்சனம் மற்றும் சில பார்வைகள் 

சென்ற வாரத்தில் என் நெருங்கிய நண்பர் என்னை அலைபேசியில் அழைத்திருந்தார். என் எழுத்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று ஆசைப்படுபவர். என் மின் நூல்கள் மற்றும் பதிவுகளைப் பாரபட்சமின்றி விமர்சிப்பவர். அவருக்கு நரேன் ராஜகோபாலன் எழுதிய "கருப்புக்குதிரை" கிடைக்கப்பெற அதனைப் படித்துக் கொண்டிருந்த போதே என்னை அழைத்துப் பேசினார். புத்தகத்தில் உள்ளக் கருத்துக்களுக்கு எதிரணியில் இருப்பவர்கள் பாராட்டுவது என்பது மிகச் சிறந்த அங்கீகாரம். மனதார பாராட்டினார். எப்படி எழுத வேண்டும்? என்பதற்கும் எந்தவொரு விசயமாக இருந்தாலும் எழுதுபவனின் திறமை பொறுத்து எப்படி எழுத முடியும் என்பதற்கும் இந்த நூல் உதாரணம் என்றார். 

அவர் தான் ரசித்துப் படித்த புத்தகம் முக்கியமானவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று அவர் கொடுத்திருந்த குறிப்பிட்ட நண்பர்களின் பட்டியலின் அடிப்படையில் சென்னையில் இருந்து எனக்கும் இந்நூல் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.  நண்பருக்கு நன்றி.

பார்வை 1 

மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்த அணிந்துரை வார்த்தைகள் என்பது இன்னமும் எனக்கு மனப்பாடமாக உள்ளது. "இந்தப் புத்தகம் போலப் பள்ளிக்கூடங்களில் வரலாற்றுப் பாடங்கள் இருந்திருந்தால் நான் இன்னமும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்" என்று எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்திற்கும் அந்த வார்த்தைகளை அப்படியே பொருத்தி விடலாம். பொருளாதாரம் சார்ந்த விசயங்களை இப்படியொரு நடையில், இது போன்ற எளிமையில் நான் வாசிப்பது இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு ஆச்சரியம், பிரமிப்பும் கலந்து கட்டியுள்ளது. 

பார்வை 2 

வரலாறு, பொருளாதாரம் சார்ந்த துறைகள் என்பது கல்லில் நார் உறிக்கும் சமாச்சாரம். காலப்போக்கில் வரலாறு பின்னோக்கிப் போய்விட்டது. அதற்குப் பதிலாகத் தற்பொழுது பொருளாதாரம் சார்ந்த துறைகள் முன்நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இணையம் அறிமுகமான பின்பு புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் இளையர் பட்டாளம் மிகச் சரியாகக் கையாள்கின்றார்கள். எதனையும் சொல்கின்ற விதத்தில் சொன்னால் சுவராசியப்படுத்த முடியும் என்கிற அளவில் பல பேர்கள் இத்துறையில் கவன ஈர்ப்பு பெறுகின்றார்கள். தற்போது நட்சத்திரமாக மாறியிருப்பவர் நரேன் ராஜகோபாலன். 

பார்வை 3 

நான் பிறந்த குடும்பம் என்பது பொருளாதாரத்தில் அதிகக் கவனம் செலுத்தும் வாழ்க்கையை வாழ்ந்த, வாழும் குடும்ப அமைப்புக் கொண்டது. ஆனால் என் பாதை மட்டும் தொடக்கம் முதலே தப்பித் தவறி வேறுபாதையில் பயணிக்கத் தொடங்கியதால் பொருளாதாரம் குறித்துப் பள்ளிக்கூடப் பாடங்களிலும் கவனம் செலுத்தவில்லை. அதன் பாதிப்பு வாழ்க்கையிலும் இன்று வரையிலும் எதிரொலிக்கின்றது. ஆனால் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தவுடன் பணம் சார்ந்த ஆசைகளே போய்விட்டது. பண ரீதியாக உச்சத்தை அடைந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் பின்னால் உள்ள எச்சங்களை அப்படியே தோலுரித்துக் காட்டுகின்றது. அத்துடன் எப்படியெல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதமாக மாற்றிக் கொண்டு பணம் சம்பாரிக்கும் குறுக்கு வழிப்பாதைகளைப் படம் வரைந்து பாகம் குறித்தும் காட்டுகின்றது. 

பார்வை 4 

இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும், அதிகப் பணம் சம்பாரிக்கும் வாழ்க்கையைக் கொண்டவர்கள், அந்தப் பணத்தை எப்படியெல்லாம் சம்பாரிக்க முடியும் போன்ற குறுக்கு நெடுக்கு வெட்டுத் தோற்றத்தை தோலுரித்துக் காட்டுகின்றது. திருப்பூரில் கோடிகள் என்கிற விதத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு வியப்பாகத் தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தில் குறைந்தபட்சமே அமெரிக்கன் டாலரில் மில்லியனில் இருந்து தான் தொடங்குகின்றது. நமக்குப் பில்லியன், ட்ரில்லியன் போன்றவற்றைத் தாண்டிச் செல்லும் கணக்கு வாத்தியார் பாடம் நடத்தும் போது வந்த கொட்டாவி போல வாயைப் பிளக்க வைக்கின்றது. 

பார்வை 5 

கருப்புப்பணம் என்று ஒற்றை வார்த்தையில் அதற்குப் பின்னால் உள்ள கிரகசாரங்களை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருட் ஜோதியை விலாவாரியாக விஸ்தாரமாக விவரித்துக் கொண்டே சென்றாலும் என் மனதில் தோன்றியது ஒரே விசயம் தான். இப்படியெல்லாம் எளிமையாக எழுத முடியுமா? என்பது தான். 

அத்துடன் வாழ்க்கை முழுக்க எழுத்தே தன் பணி என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்குக்கூட இப்படிப்பட்ட வாக்கிய அமைப்பு கைகூடுமா? பொருளாதாரத்தைப் பற்றிப் படிக்கின்றோமா? அல்லது துப்பறியும் கதையை நாம் படிக்கின்றோமா? என்று யோசிக்க வைத்த நடையில் அமைந்த புத்தகமிது. 

பார்வை 6 

வலைப்பதிவுகள் உருவாக்கிய மாயவித்தையிது. எழுத்தே தன் வாழ்க்கை. எழுத்துலகம் தன் ஆதாரம் என்று வாழ்நாள் முழுக்க வாழ்ந்த எழுத்தாளர்கள் என்று கீரிடம் சுமந்து ஒளிவட்டம் காட்டிக் கொண்டிருந்தவர்களை இணைய உலகம் பல மாயப் பிம்பங்களை உடைத்து சுக்குநூறாக உடைத்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். 

எவ்வித எழுத்துப் பயிற்சியும் இல்லாத சாதாரணமானவர்கள் எங்களாலும் எந்தத் துறை குறித்தும் தெளிவாக அழகாகச் சுவராசியமாக எழுத முடியும் என்று சொன்னதோடு மட்டுமல்லாது செயல்படுத்தியும் காட்டியுள்ளதற்கு இந்தப் புத்தகம் முக்கிய உதாரணம். நரேன் சொல்லியுள்ள பிரதமர் மோடி கொடுத்த துல்லிய தாக்குதலை விட இவர் கொடுத்துள்ள வார்த்தை பிரயோக தாக்குதல் என்பது வாசிக்கும் ஒவ்வொருக்கும் பிரமிப்பைத் தரும். 

பார்வை 7 

பத்திரிக்கையில் வணிகச் செய்திகளை வாசிப்பவர்கள் தமிழக வாசக பரப்பில் நூற்றில் ஐந்து பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். மேலும் வணிகம் சார்ந்த ஆங்கிலப் பத்திரிக்கைகள் படிப்பதென்பது மிக மிகக் குறுகிய வட்டமாகவே இருக்க முடியும். ஆனால் வணிகம் அதற்குப் பின்னால் உள்ள தில்லாலங்கடி வேலைகள், ஷேர் மார்க்கெட் என்ற மாயமந்திரங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கும் கண்கட்டி வித்தைகள், ஹவாலா தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் அல்வா கிண்டும் பெருந்தனக்காரர்களைப் போற போக்கில் தோலுரித்துக் காட்டிக் கொண்டே செல்கின்றார். ஆனால் இவை அனைத்தும் அரசாங்க சட்டதிட்டத்தின் படி நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் கற்பனையில் வைத்துள்ள பல கோடீஸ்வரர்கள் எப்படிச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தும் புத்தகமிது. 

பார்வை 8 

இன்னமும் வியப்பாக உள்ளது. பள்ளி, கல்லூரி சமயங்களில் வேதியியல், இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் போன்றவற்றை நினைத்தாலே காய்ச்சல் வந்த காலகட்டத்தை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். ஒன்றுக்குப் பயந்து மற்றொன்று மாறி, அதையும் தாக்குப் பிடிக்க முடியாமல் கடைசியில் தாவரவியல் படித்துக் கல்லூரியை கடனே என்று முடித்து வந்தவனுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது ஒரே ஒரு விசயம் தான். 

தவறு என் மேல் இல்லை. நரேன் போன்றவர்களைப் பாடப்புத்தகங்களை எழுத அனுமதித்து இருந்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கக்கூடும். உங்கள் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு முடித்து மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் இருந்தால் அதிலும் குறிப்பாக வணிகவியல் சார்ந்த படிப்புகள் படித்துக் கொண்டிருப்பவர்கள் எவராக இருந்தாலும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசாகக் கொடுங்கள். ஒன்று பாடப்புத்தகம் என்பதனை எந்த அளவுக்குச் சுமையாக மாற்றியுள்ளார்கள் என்பதனை உணர முடியும். ஒரு துறையை எப்படியெல்லாம் எளிமையாகச் சொல்ல முடியும் என்பதனையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். 

பார்வை 9 

புத்தகத்தின் பிற்பகுதியில் பிரதமர் மோடி உருவாக்கிய பணமதிப்பு இழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை நரேன் விஸ்தாரமாக விவரிக்கின்றார். குறிப்பாகக் காங்கிரஸ் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றார். பல புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிக்கின்றார். பல இடங்களில் நரேனுக்குச் "செலக்ட்டீவ் அம்னிசீயா" வேறு வந்துவிடுகின்றது. காங்கிரஸ் அரசாங்கத்தில் பாலும் தேனும் இந்தியா முழுக்க ஓடியதாகக் கதைவிடுகின்றார். 

சோனியா, ராகுல், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் இவர்களையெல்லாம் நினைத்தாலே, மனதிற்குள் கொலைவெறி வந்து போகின்றது. எப்படியோ நாடு தப்பித்தாகி விட்டது என்று தான் தோன்றுகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த அலேங்கோலங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மோடி உருவாக்கியது இழப்பு அல்ல. மாற்றத்திற்கான முதல்படி. நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலும் வந்தமர்ந்த பிரதமர்கள் எவரும் தனக்கான ஆதாயம், தான் விரும்பியவர்களுக்கான ஆதாயம் என்பதிலேயே தங்கள் பதவிக் காலத்தைக் கழித்தவர்கள். 

பொருளாதாரப்புலி என்றழைக்கப்படும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களுக்குப் பின்னால் இரண்டு விசயங்கள் இருந்தன. ஒன்று எவ்வித அறநெறியும் தேவைப்படாமல் நாட்டை அப்படியே மற்றவர்களுக்கு விற்பது. ஆதாயம் பெற காத்திருந்தவர்களுக்குத் தனது கள்ள மௌனத்தின் மூலம் ஆதரவு அளித்தது. சிறுபான்மை உரிமை என்ற பெயரில் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் இங்கே அனுமதிக்காமல் இருந்தது. வெளிப்படைத்தன்மையை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் தான் சார்ந்த, தாங்கள் விரும்பும் நபர்கள் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஊழல் என்பது தேசிய வார்த்தையாக மாறியிருந்தது. 

எந்த அரசியல்வாதியும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் தானே மீண்டும் மீண்டும் அந்தப் பதவியில் சாகும் வரையிலும் இருக்க வேண்டும் என்று தான் இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் விரும்பும் சூழ்நிலையில் பிரதமர் மோடி தனது பதவிக்கான சுருக்குக்கயிற்றைத் தானே உருவாக்கியுள்ளார். தன்னால் மீண்டு வர முடியுமா? அல்லது மீண்டும் பிரதமர் பதவி கிடைக்குமா? போன்றவற்றைப் பற்றிச் சிறிது கூடக் கவலைப்படாமல் ஒரு புதிய பாதையை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். உச்சக்கட்டமாய்த் தன் பதவிக்கான அத்தனை ஆதாரங்களை அழிக்கவல்ல அஸ்திரங்களைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டவர் பிரதமர் மோடி. 

இறுதியான என் பார்வை 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி முதல் பெரிய எதிர்ப்பும் மிகப் பெரிய சுனாமி போன்ற மக்கள் திரளுமாக மோடி அரசாங்கத்திற்கு எதிராகத் திரள்வார்கள் என்று அநேகம் பேர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஏமாற்றமடைந்தது தான் மோடிக்குக் கிடைத்த வெற்றி. எந்த அரசியல்வாதியும் பணமதிப்பு விவகாரத்தை வைத்து பெரிய அளவுக்கு எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்க முடியாத அளவுக்கு அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அவரவர் சேர்த்து வைத்துள்ள ஊழல் பணங்களை மாற்ற வேண்டிய அவசியம். திருடனுக்குத் தோள் கொட்டியது போல அவஸ்தையான காலக் கட்டமிது. பணமதிப்பு விவகாரத்தால் மக்கள் அடைந்த துன்பங்களை விட அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும் கற்றதும் பெற்றதும் ஏராளம். என்னவொன்று அவையெல்லாம் ஊடகங்களில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு வெறும் வாய்ச்சவடால்களாக நின்று விட்டது. 

இட ஒதுக்கீடு, மானியம், சிறுபான்மை நலன், போன்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல்வாதிகளின் வாழ்க்கையை வட்டத்திற்குள் சிக்க வைத்த பெருமை மோடிக்கு வந்து சேர்ந்துள்ளது. முதல் முறையாகச் செயல்படும் பிரதமர் அலுவலகமாக மாறியுள்ளது. 

இனி வரும் காலங்களில் முறைப்படியான கணக்கு மூலம் மட்டுமே வியாபாரங்கள் செய்ய முடியும் என்பதற்கான தொடங்க புள்ளியை இந்த மாற்றங்கள் உருவாக்கும். அதிகப்படியாகச் சேர்க்கும் பண ஆசையில் ஒரு நிதானம் வந்து சேரும். முறையற்ற வழியில் சேரும் பணத்தில் ஒரு பயம் நிரந்தரமாக இருக்கக்கூடும். 

திருப்பூரில் உள்நாட்டு வியாபாரத்தில் வாரம் நூறு கோடி வியாபாரம் செய்பவர்கள் துண்டுச்சீட்டு வழியாகவே வர்த்தகம் செய்கின்றார்கள். ஏற்றுமதி வியாபாரத்தில் செய்யப்படும் தந்திரங்கள் மூலம் தனியாக வந்து சேரும் அத்தனை பணமும் படுக்கை அறையில் மெத்தையில் அடுக்கி வைக்கப்பட்டுப் பூதம் போலக் காவல் காக்கப்படுகின்றது. ஒரு நாளில் தான் பெறும் லட்சக்கணக்கான பணத்தை மருத்துவர்கள் முதல் பல துறையில் உள்ளவர்கள் எவ்வித கணக்கு வழக்கும் காட்ட அவசியமில்லாமல் அடுத்தடுத்து பண ஆசையில் மேலும் மேலும் பணத்தை முடக்கி வைத்துக் கொண்டே செல்கின்றார்கள் . எது தேவை? எது தேவையில்லை? என்பதெல்லாம் மாறி நுகர்வு என்பது பெரும் கலாச்சாரமாக மாறியுள்ளது. பணத்தை தவிர இங்கு வேறெதும் தேவையில்லை என்கிற புதிய வாழ்க்கை முறை உருவாகி பல ஆண்டுகள் ஆனதால் எல்லாத் தவறுகளும் இங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.

ஏக்கர் ஆயிரம் ரூபாய் மதிப்பில்லாத அத்தனை நிலங்களும் லட்சத்திற்குத் தாவி சராசரி மனிதனின் வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு ஏற்றத்தாழ்வு என்பது எட்ட முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உருவான தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு தனி மனிதனின் வாழ்க்கையில் பணம் என்பது அகோர பிசாசு போலக் கோர தாண்டவம் ஆடும் தற்போதைய சூழலில் பணம் என்பது வெறும் காகிதமாக மாறிய சூழலை இந்தப் பணமதிப்பு விவாகாரம் என் பார்வையில் மனமதிப்பு நிலை பெற உதவி செய்யக்கூடியதாகவே இருக்கும் என்று நம்புகின்றேன் . 

மனம் முழுக்கக் கார்ப்பரேட் வாழ்க்கையை விரும்பும் நடுத்தர வர்க்க மனிதர்கள். தகுதியானவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை, மானியங்களைத் தாங்களும் தங்கள் குடும்ப வாரிகளுமே பெறுகின்றோம் என்ற கூச்ச உணர்வு இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு மோடி உருவாக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளுமே துல்லிய தாக்குதல்களாகத்தான் தெரியும். உருவாகும் மாற்றங்களைக் கண்டு பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கை கொண்ட நம் சமூகத்தில் இது போன்ற துல்லிய தாக்குதல் என்பது அவசியம் தேவையே. 

உங்களின் பணம் சார்ந்த எண்ணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அரசாங்கங்கள் அவவ்போது கொண்டு வரும் திட்டங்கள் யாருக்கு பயன் தந்து கொண்டிருக்கின்றது? உங்களைச் சுற்றியுள்ள பணம் படைத்தவர்களின் வாழ்க்கையை, அவர்கள் பணம் ஈட்டும் முறைகளை, அதற்கு நமது அரசாங்கம் எப்படியெல்லாம் உதவுகின்றது என்பதனையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு புரியவைக்கக்கூடும். .

இது போன்ற விஸ்தாரமான விளக்கங்கள் உங்களுக்கு புரியும் சமயத்தில் மோடி உருவாக்கியுள்ள பணமதிப்பு விவகாரம் குறித்து நீங்களே உங்களுக்குள் ஒரு முடிவு தேடிக் கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவக்கூடும்.

கருப்புக்குதிரை புத்தகம் பெற

நவி பதிப்பகம்.
விலை ரூபாய் , 150./

திரு. அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி

Face Book   https://www.facebook.com/aravindan.krishnamoorthy

வாட்ஸ் அப் எண்  81 05 88 20 22

ஆன் லைன் வாயிலாக பெற 


Monday, December 19, 2016

வெட்டிக்காடு - விழாத் துளிகள்


ரவி இணையம் மூலம் அறிமுகமானவர். அவரின் இணைய முகவரி வெட்டுக்காடு. தான் பிறந்த ஊரையே தளத்திற்கு வைத்திருப்பவர். நாங்கள் இருவரும் சந்தித்ததே இல்லை. குறுகிய காலத்தில் பழகி, அலைபேசி உரையாடலின் வழியே நெருக்கமானவர்.

குடும்ப உறுப்பினர் அளவில் நெருங்கியவர். பரஸ்பரம் குடும்பம் தொடர்பான விசயங்கள் முதல் அரசியல் வரைக்கும் இருவருக்கும் ஒரே கருத்தோட்டம் மற்றும் அலைவரிசை இருப்பதால் ஒவ்வொரு உரையாடலும் முடிவற்றதாகவே இருக்கும். சமவயது. எந்த நாட்டில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அழைத்துப் பேசி விடுவார். 

"டாலர் நகரம்" புத்தக வெளியிட்டு விழாவில் வந்து கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தவர். எனக்குத் தெரிந்தவரையில் ரவி மேடையில் பேசச் தொடங்கியது என் புத்தக வெளியீட்டு விழாவில் இருந்து தான் என்று நினைக்கின்றேன். ஆனால் இன்று படிப்படியாக வளர்ந்து தான் வசிக்கும் சிங்கப்பூரில் பட்டிமன்றம் நிகழ்வில் கலந்து கொள்ளும் அளவிற்குப் பேச்சாற்றலில் வளர்ந்து கொண்டிருப்பவர். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அவரையும் அவர் என்னையும் பரஸ்பரம் எழுத்து ரீதியாகக் கவனித்துக் கொண்டிருப்பதால் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் இடைவெளி இல்லாமல் இருக்கின்றது. 

நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தன்னுடைய "வெட்டிக்காடு" மற்றும் அவர் மனைவி எழுதிய "கீதா கஃபே" என்ற நூலில் வெளியிட்டு விழா தஞ்சாவூரில் நடக்க இருப்பதைச் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் இணையத்தில் எழுதத் தொடங்கியது முதல் கவனித்து வருபவன் என்ற முறையில் மகிழ்ச்சியைத் தந்தது. 18.12.2016 ஞாயிற்றுக் கிழமை என்பதால் கலந்து கொள்ள முடிவு செய்து அன்றே ரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தேன். 

விழா அரங்கில் மதியம் நான் தான் முதலில் நுழைந்தேன். நான் பயணித்து வந்த சதாப்தியில் ஈரோடு கதிரும் வந்திருந்தார். ஆனால் இருவரும் சந்திக்கவில்லை. அவர் நேரிடையாகத் தங்கும் விடுதிக்குச் சென்று விட்டார். அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை ரவியுடன் சாப்பிட்டுவிட்டு ஏற்பாடு செய்து இருந்த விடுதிக்கு வந்து விட்டேன். சற்று நேரத்தில் புதுகை அப்துல்லா மற்றும் ஓஆர்பி ராஜா இருவரும் விடுதிக்கு வந்து தங்களைத் தயார் படுத்திக் கொண்டு அரங்கத்திற்குச் சென்று விட்டனர். என் அறைக்கு அருகே இருந்த மணிஜி, கேஆர்பி செந்தில், கேபிள் சங்கர், போன்றோர்களுடன் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். 

வாழும் ஊர் அருகருகே இருந்தாலும் ஈரோடு கதிருடன் அரங்கத்தில் முதல் முறையாக அப்போது தான் சந்தித்துப் பேசினேன். நண்பர் பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வந்து சேர்ந்தார். அப்பொழுதே அரங்கத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்குக் கூட்டம் இருந்தது. அரங்கத்தில் மருத்துவர் புருனோ மற்றும் அரவிந்தன் கிருஷ்ணமூர்த்திப் போன்றோரை சந்தித்தேன். ஜாக்கி சேகர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்திருந்தார். அவர் தான் காணொளி தொடர்பான அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். 

விழா தொடங்கியதுமே விழா அரங்கம் நிரம்பியது. வந்திருந்த அத்தனை பேர்களும் மொத்தமாக அனைவரும் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். புத்தக விழா என்றால் எத்தனைப் பேர்கள் தற்போதைய சூழ்நிலையில் கலந்து கொள்வார்கள் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?. ரவியின் புத்தக வெளியீட்டு விழாவில் 400 பேர்களுக்குக் குறைவில்லாமல் கலந்து கொண்டார்கள். என்னை ஆச்சரியப்படுத்திய புத்தக வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருக்கும். 

பதிவர்கள் சார்பாக அப்துல்லா, கதிர், முனைவர் இளங்கோவன், ஓஆர்பி ராஜா போன்றோர் பேசினார்கள். நிகழ்ச்சியைச் சுரேகா சுந்தர் தொகுத்து வழங்கினார். 

ஆனால் விழாவில் கூடுதல் சிறப்பம்சமாக ரவியின் தொடக்கப் பள்ளிக்கூட ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பேசினார்கள். தொடக்கப் பள்ளியில் ரவிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரே ரவியின் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. 

விழாவின் சிறப்பு அழைப்பாளராக நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்களும் பேசினார். அதே போலக் கீதா அவர்களின் ஆசான், வழிகாட்டி அவர்களும் பேசினார்கள். தஞ்சாவூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் பேசினார்கள். இவர்கள் என்ன பேசினார்கள்?. 

நான் ரவி குறித்து மனதிற்குள் வைத்திருந்த சில விசயங்களை அங்கே இருந்த ஒவ்வொருவரும் பேசிய போது எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த அளவிற்கு ரவி பலரையும் பாதித்துள்ளார். 

சராசரி மனிதர்கள் நம்ப முடியாத அளவிற்குத் தொடக்கம் முதல் தன்னைத் தெளிவாக வடிவமைத்து வளர்ந்துள்ளார். "கல்வியே பெரிய சொத்து" என்பதனை தனது 3 வயதில் அடையாளம் கொண்டு அதன்படியே வளர்ந்து வாழ்ந்து இன்று அவர் அடைந்துள்ள உச்சம் என்பது பெருமைப்படக்கூடியதாகவே உள்ளது.  இன்று சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் தொலைத் தொடர்புத் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றார்.

இவர் எப்படிக் கிராமத்தில் படித்த போது அண்ணா யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து அங்கே போய்ச் சேர்ந்தார்? 

இவர் எப்படி நாடு நாடாகச் சுற்றிக் கொண்டு எழுத உட்கார முடிகின்றது? 

ஒவ்வொரு தனி மனிதர்களுடன் பழகும் போதும் அவர்களுக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு சிறிது கூடச் சுயகௌரவம் பார்க்காமல் பண ரீதியான உதவி முதல் நினைவில் வைத்துத் தொடர்ந்து தொடர்பில் வைத்திருந்து தன் நட்பு வட்டத்தைப் பேணிக் கொண்டு வருதல் என்பது நிச்சயம் தற்போதைய சூழ்நிலையில் வாய்ப்பில்லை என்று தான் கருதுவோம். 

ஆனால் இவர் மட்டுமல்ல இவர் மனைவி கீதா அவர்களும் அவர் நட்பு வட்டாரம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் என்கிற ரீதியில் பெரிய கூட்டமே வந்து கலந்து கொண்டார்கள். பல ஊர்கள். பல பெரிய பதவிகள் தொடங்கிச் சாதாரணமானவர்கள் என்பது வரைக்கும் இருவருக்கும் பெரிய பட்டியல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். 

குடும்ப விழா, நண்பர்கள் விழா என்று பலமுகமாக இந்த விழா இருந்தாலும் எண்ணமும் சொல்லும் ஒரேமாதிரியாக வாழ நினைப்பவர்களுக்கு ரவி இந்த விழாவின் மூலம் முன் உதாரணமாக இருந்தார். 

இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள், நானும் எழுத்தாளன் தான் போட்டியில் இருப்பவர்கள் என்ற பெரும் படைபட்டாளங்கள் நடத்தும் விழாவில் காண முடியாக ஒழுக்கமும் நேர்த்தியும் உண்மையும் இந்த விழாவில் இருந்தது. 

அரங்கத்தில் இருந்த நண்பர் சொன்ன வாசகம் இது. "இதுவே எழுத்தாளர்கள் விழா என்றால் அரங்கத்தில் பத்துக் கூட்டங்கள் தனித்தனியாக நடந்து கொண்டிருக்கும். இந்த விழாவில் மட்டும் தான் விழாவை நோக்கிய அனைவர் பார்வையும் இருக்கின்றது" என்றார். அது உண்மையும் கூட. 

ரவியின் அம்மா முதல் ஆசிரியர்கள், முக்கிய விருந்தினர்கள் என்று அனைவருக்கும் ரவியும் கீதாவும் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றனர். ரவி தனது அம்மா அவர்கள் காலில் விழுந்து வணங்கிய போது மகனுக்கும் மகளுக்கும் ஆசிர்வாதம் செய்து உடனே இருவர் கையில் ஆசிர்வாத பணம் கொடுத்ததும் அதே போல ரவியின் மாமனார் (தஞ்சையின் பிரபல மருத்துவர்) மகளுக்கும் மருமகனுக்குத் தங்க மோதிரம் மாட்டி ஆசிர்வாதம் செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

எனக்குத் தெரிந்தவரையில் ரவி கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் தான் பிறந்த கிராமம் முதல் கல்விக்காகக் கஷ்டப்படும் பல மாணவர்கள் வரைக்கும், பல துறைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே பண உதவி செய்து வருபவர். அதனை விழாவில் ஓஆர்பி ராஜா குறிப்பிட்டு பேசியது சிறப்பான அங்கீகாரமாக இருந்தது. 

அரங்கத்தில் வெளியிட்ட புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்? அதே சமயத்தில் அந்தப்பணம் தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ரீதியான செயல்பாட்டுக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அதனையே விழாவில் செயல்படுத்திக் காட்டினார்.  

இதனைத் தொடர்ந்து கல்வி செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு அறக்கட்டளை தொடங்க எண்ணம் இருப்பதை வெளிப்படுத்தினார்.  கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த வள்ளல் அழகப்பச் செட்டியார் போல வாழ நினைக்கும் ரவி எண்ணம் ஈடேற வேண்டும்.

அப்துல்லா வரவேற்பு நிகழ்ச்சியில் பேசும் போது நான் என்ன மனதில் நினைத்து இருந்தேனோ? அதனைச் சுருக்கமாக அழகாகப் பேசினார். பொய் பேச விரும்பாத அரசியல்வாதியைத் தமிழகம் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோடு கதிர் கீதா கஃபே புத்தகத்தை வெளியிட்டுத் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போலவே பேசியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. 

ரவி என்னிடம் நவம்பர் மாதம் விழா குறித்துத் தகவல் தெரிவித்து விட்டு வெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே புத்தக வடிவத்தை அனுப்பி ஒரு பார்வை பார்த்து விடுங்கள் என்றார். இரண்டு நாட்கள் பார்த்து படித்து விட்டு அவரை நான் அழைத்துச் சொன்ன வார்த்தைகள் இது. 

"இது இலக்கியமில்லை. நேர்ந்த எழுத்தாளர் நடையில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வந்த முக்கியமான புத்தகம் இது. குறிப்பாகத் தமிழகக் கிராமங்களின் வாழ்க்கை முறைகளை எதிர்காலத்தில் எவராவது ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் புத்தகம் நிச்சயம் உதவி புரியக்கூடியதாக இருக்கும்" என்று சொல்லி தொடர்ந்து அவரிடம் பேசிய போது ரவி கூச்சத்தில் நெளிந்தார்.  

ஆனால் இந்த வார்த்தைகளை அப்படியே மாறாமல் முனைவர் இளங்கோவன் பேசிய போது தெரிவித்தார்,

இப்போது சொல்லுங்கள் ரவி. நான் உங்களிடம் என்ன சொன்னேன் என்பது உங்கள் நினைவில் இருக்கும் தானே? நான் சொன்னவற்றைத்தான் வேல ராமமூர்த்தி அவர்கள் வரைக்கும் அவரவர் பாணியில் பேசினார்கள். 

வாழ்த்துகள் ரவி. 

தொழில் வாழ்க்கையில் வென்றவர்கள் குடும்ப வாழ்க்கையில் தோற்றுவிடுவதுண்டு. ரவியின் மகள் இங்கிலாந்து சர்வதேச பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகின்றார். அவர் விழாவில் கடைசியாகப் பேசினார். மகன் சிங்கப்பூரில் சர்வதேச பள்ளியின் பயின்று வருகின்றார். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் வென்றவர். இதில் இரண்டிலும் வென்றவர்கள் தங்கள் வந்த பாதையை மறந்து விடுவார்கள். ரவி தான் பிறந்த மண்ணை, கிராமத்தை, ஆசிரியர் எவரையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. 

விழாவில் தன் கிராமம் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள், பழக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் வரவழைத்து மரியாதை செய்து இருந்தார். மூன்றிலும் வென்றவர். கடைசியாக நட்புலகத்தைப் பேணுவதில்லை. நமக்கென்ன? என்ற எண்ணம் இயல்பாக உருவாகி விடும். ஆனால் இதிலும் நேர்த்தியாக நட்புலகத்தை வடிமைத்த ரவி ஆச்சரியப்படக்கூடிய வகையில், பெருமைப் படத்தக்கவராக எனக்குத் தெரிகின்றார். 

மொத்தத்தில் ரவி அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டவர். லட்சத்தில் ஒருவருக்குத் தான் இது போன்ற வாழ்க்கை அமையும். நான் பார்த்த வரைக்கும் நடிகர் சிவகுமார் அவர்களுக்குப் பின் ஆச்சரியப்பட்ட மனிதர் ரவி என்றால் அது மிகையல்ல. 

எழுத்துலகத்தில் நாம் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் உண்மை என்று சொல்ல முடியாது. சில சமயம் சிலர் மட்டும் உண்மைக்கு அருகே சென்று முயற்சிப்பதுண்டு. ஆனால் ரவி தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை பேர்களும் உயிருடன் வந்திருந்து வாழ்த்தியது ஆச்சரியம் என்றால் அத்தனை பேர்களும் ரவி சொன்ன மாதிரியே இருந்தது அதைவிட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

விழாவின் கடைசி வரைக்கும் கூட்டம் கலையாமல் இருந்தது முதல் ஆச்சரியம். அதுவே விழா முடிந்து கடைசியில் கூட்டத்தினர் விழா நாயகன் நாயகிக்கு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அன்பு செலுத்த மொத்த கூட்டம் முண்டியடித்ததைப் பார்த்துக் கொண்டே நானும் கதிரும் அவசரமாக ரயில் நேரம் பார்த்து ஓடி வந்தோம். 

ரவி அரங்கத்தில் தனிப்பட்ட உரையாடலில் பேசும் போது இந்த விழாவை சிங்கப்பூரில் நடத்துவதாக இருந்தது என்ற எண்ணத்தைச் சொன்னார்.  ஆனால் காலம் என்பது மிகச் சரியாக யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதனை உணர்த்திவிடும். உங்களின் சரியான நேர்த்தியான, தெளிவான வாழ்க்கைக்கு இந்த விழா மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் ரவி,  

பிறந்த ஊரில், பழகிய மனிதர்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைப்பது என்பது தமிழ்நாட்டில் குதிரைக் கொம்புக்குச் சமமானது.  ஆனால் அது உங்களுக்கு இயல்பாக கிடைத்துள்ளது. என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரின் எண்ணமும் இதுவாகவே இருந்தது.