Thursday, December 29, 2011

தினந்தோறும் மலரும் பூக்கள் 2011கடந்து போன வாழ்க்கையில் சென்னையில் ஒரு நள்ளிரவு மட்டும் இந்த ஆங்கில புத்தாண்டு வரவேற்பை மெரினா கடற்கரை கூட்டத்தில் கரைந்து போய் ரசித்தேன். ஆராவாரமும், ஆர்ப்பட்டமும் அள்ளித் தெளித்த கோலமாய் கடற்கரை மணலில் வரவேற்ற தலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. 

அந்த கூட்டம் இன்று வரை கண்களுக்குள் நிற்கிறது. கடல் அலையில் கால் நனைத்து மச்சினன் கைபிடித்து வாழ்க்கையை தேடிக் கொண்டிருந்த போது அந்த இரவு இனம் புரியா மகிழ்ச்சியைத் தந்தது.  வாழ்க்கை நகர்ந்தது,

இயல்பான வாழ்க்கையின் சூத்திரங்களின் சூட்சமங்களை கற்றுக் கொள்ளத் தெரியாத வாழ்க்கை திருப்பூருக்கு நகர்த்தியது. 

வாழ்க்கை அதன் உண்மையான அர்த்தங்களை அறிமுகம் செய்ய ஆரவாரங்கள் பின்னுக்குச் சென்று அலையில்லா கடல் போல அமைதியும் வந்தது. ஒவ்வொரு வருடத்தின் கடைசி இரவும் வந்தபடியே தான் இருக்கின்றது.. அதற்கு பிறகு வந்த ஒவ்வொரு வருடமும் ஆழ்ந்த உறக்கத்தின் ஆழத்தை காட்டிக் கொண்டிருக்கும். விடிந்து பார்க்க நேற்றைய பொழுதுகள் மறந்து இன்றைய தேவைகளுக்காக மனம் ஓடத் தொடங்கி விடுகின்றது..
எந்த வருடத்தின் தொடக்கத்திலும் நான் எந்த சபதங்களையும் எடுப்பதில்லை.
காரணம் அதுவொரு சடங்காகத்தான் முடியும்.  மீனவனின் வாழ்க்கைக்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை. அங்கே தண்ணீர். இங்கே கண்ணீர்.

அங்கே எல்லைப் பிரச்சனை.  இங்கே அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை.

ஆனால் இணையம் என்ற இந்த உலகம் அறிமுகமானதும் என்னுடைய வாழ்க்கை பலவிதங்களிலும் மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு கணமும் யோசித்து பார்த்துக் கொள்வதுண்டு. 

ஏன் எழுத வந்தோம்? என்பதும் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியும் சக்களத்தி சண்டையாய் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நள்ளிரவு தாமதமாக வந்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உருவங்களை விளக்கு போட்டு ரசிக்கும் போது மனதில் வார்த்தைகளாக வந்து மோதும். அப்பா ஏன் இன்னும் வரவில்லை? என்ற கேள்வியை கேட்டவளுக்கு அடுத்தவள் பதில் சொல்ல அவர்களின் இரவு உறக்கத்தின் தொடக்க சண்டைகள் தொடங்கும். 

வீட்டுக்குள் நுழைந்ததும், என்ன நடந்தது? என்று கேட்க எப்போதும் போல மனைவியின் விவரிப்பில் சிறிது புன்னகை என்னுள் எட்டிப் பார்க்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பெற்ற பொம்மைகள் தள்ளிக்கிடக்க கோட்டோவியமாய் வினோத வடிவில் சுருக்கிக் கொண்டு படுத்துறங்கும் அவர்களின் தூக்கத்தை பார்த்து மனதில் வார்த்தைகள் வந்து வந்து போகும். 

இந்த தலையணை தான் வேண்டும் என்று போராடிப் பெற்ற போராட்டங்கள் அர்த்தமில்லாமல் ஏதோவொரு மூலையில் கிடக்கும். அவர்களின் தலையைச் சுற்றிய போர்வைகள் மூச்சு முட்டுமே என்று நகர்த்த முற்படும் போது அவர்களின் அனிச்சை செயல்கள் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். 

அதுவே எழுதத் தூண்டும் காரணியாகவும் பல சமயம் அமைந்து விடும். 

பலசமயம் அதிகாலை விழிப்பு அவஸ்த்தையாய் வந்து விடும். காரணம் அருகில் படுத்தவள் புரண்டு வந்து நெஞ்சுக்குள் புதைந்து விட திரும்ப முடியாத உடம்பில் கோழிக்குஞ்சு சுகத்தை ரசித்துக் கொண்டே எழுந்து விடுவதுண்டு. 

பல சமயம் அலுப்பாக இருக்கும். அவர்களின் கலைந்த ஆடைகளை கவனித்து போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்து கதவு திறந்தால் குளிர் காற்று வரவேற்கும். கூடவே பக்கத்து வீட்டு பஜனை சப்தம் காதில் வந்து மோதும். அடிவாங்கி திரும்பி வந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஐயப்பனை காண வாருங்கள் என்று பாடிக் கொண்டிருப்பவர் இப்போது எங்கே இருப்பார் என்று யோசிக்க வார்த்தைகள் வந்து வந்து மோதும்.
விடியாத பொழுதில் சாலையில் ஆள் அரவமிருக்காது.  பகலில் பணம் துரத்தச் செல்லும் பறவைகள் இப்போது பாதுகாப்பான வீட்டுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். 

நடமாட்டம் இல்லாத சந்தும், ஆய்த்தப்பணியில் இருக்கும் பறவைகளும் ஏதேதோ கவிதை சொல்லும். புலராத பொழுதுகள் புதிதாய் தெரியும். காணும் காட்சிகளை வார்த்தைகளாக கோர்ப்பதற்குள் பக்கத்து வீட்டு மனிதன் எப்போதும் போல தனது பயணத்தை தொடங்குவார். டாஸ்மாக் கடையை நோக்கி செல்லும் பயணம் அது. 

அவரின் பயணத்தை பார்த்துக் கொண்டே மதுவால் அழிந்தவர்களின் பலரின் வாழ்க்கை நினைவில் வந்து தாக்கும். அழிந்து போன பல கோடி வர்த்தக ஜாம்பவான்களின் கதைகளை நினைக்கச் சொல்லும்.  பள்ளிக்குச் செல்லாமல் பாரம் சுமக்கும் அவரின் மூத்த மகன் முகம் மனதில் வந்து மோதும். . 

உருவமாய், உணர்வாய் கோர்க்க முடியாத எழுத்துக்கள் உள்ளே ஓடிக் கொண்டேயிருக்கும்.   அதிகாலையில் மடிக் கணினி உயிர் பெற உள்ளூரைப் பார்த்த மனம் உலகத்திற்கு தாவும்.  மூகமூடிகளும் மூச்சு முட்டும் விவாதங்களுமாக இணையப் பெருவழியில் படம் காட்டிக் கொண்டு இருப்பவர்களையும் பலசமயம் மனம் இனம் கண்டு கொள்ளும்.

ஏதோவொன்றை தேட, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் இந்த இணைய மேய்ச்சல் எனக்கு ஏராளமான ஆச்சரியத்தை விதைத்துக் கொண்டேயிருக்கிறது. 

எத்தனை மனிதர்கள்? எத்தனை நிறங்கள்? 

பாசாங்கு, படப்டப்பு, வன்முறை, எரிச்சல், ஏமாற்றம், குரோதம், பொதுப்புத்தி என்று துப்பிய எழுத்துக்களை பார்க்க படிக்க அங்கங்கே பயரேகைகளும் உள்ளங்கையில் இருக்கும் ரேகை போலவே படிந்துவிடுகின்றது.  விவாதங்கள் வீபரீதமாகி தனிப்பட்ட நபர்களின் வினோத உருவங்களை உள்வாங்கிக் கொண்டேயிருக்கும். படிக்கும் வார்த்தைகள் நம் மனதின் வலிமையை உணர வைத்துக் கொண்டேயிருக்கிறது.

பால்காரரின் சப்தம் மனைவியின் அன்றாட கடமையை தொடங்கி வைக்கும்.  தேநீரை உறிஞ்சிக் கொண்டே உள்வாங்கும் செய்தித்தாள்களின் சார்புத்தனமான கட்டுரைகள், செய்திகளைப் பார்த்து சலிப்பைத்தந்தாலும் குழந்தைகளின் முழிப்பு கதையில் அடுத்த அத்தியாயம் போல மாறத் தொடங்கும்.  அவர்களின் அவசர ஓட்டத்தின் என் சிந்தனைகள் மாறி அவர்களுடன் நாங்களும் ஓடத் துவங்குகின்றோம். .

அவர்களின் அவசர ஓட்டங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு புதுக்கவிதையை தந்து கொண்டு இருக்கும்.  நான் முந்தி, நீ முந்தி என்று குளியறையில் நடக்கும் கூத்தில் உலகத்தில் நாம் ஓட வேண்டிய அவசரத்தை அவர்களின் அவசரம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். இறுதியில் டார்வின் சொன்ன வலிமையானவர் குளித்துக் கொண்டிருக்க பக்கவாட்டில் அழுகை சத்தம் ஓங்காரமாய் ஒலிக்கும்.

வளர்ந்து கொண்டே இருக்கின்றோம் என்று உணர்த்தும் அவர்களின் துடுக்குத்தன பேச்சுகளில் உள்ளம் மகிழ்ந்தாலும் ஒரு மூலைக்குள் பேசியே நாட்டை ஆள வந்தவர்களின் தற்போதையை வாழ்க்கை நினைவலையில் நீந்தும். 

குளிக்க ஒரு போராட்டம், துவட்ட ஒரு போராட்டம் என்று அடுத்தடுத்து கதைக்களம் மாறிக் கொண்டேயிருக்கும். நடக்கும் பஞசாயத்தில் நான் தான் பலமுறை வாய் பேசதாக மன்மோகனாய் இருக்க வேண்டியதாக உள்ளது. அர்த்தப்பார்வையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பேன்.

கவனிக்கும் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  அவசரத்தில் அவர்கள் மாற்றிப் போட்ட ஜட்டிகளின் வினோத வடிவம் வீட்டில் சிரிப்பலையை பரப்புகின்றது. . 

பவுடர் பூச்சு அதிகம் பெற்ற அவர்களின் முகத்தின் வழியே நான் பார்த்த பழைய நாடக அவதாரங்கள் வந்து போகும். பள்ளிக்கருகே வீடென்பதால் இவர்களுக்கு இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் படிப்பதை விட்டு பலதையும் பேச சந்தைக்கடை போல உள்ளூர் முதல் உலகம் வரை மிதிபட்டு நசுங்குகின்றது.  

மடிக்கணினியில் இருக்கும் என் பார்வையும், அவர்களின் பேச்சுக்களை நோக்கியிருக்கும் என் காதுகளும் ஒரு கலவையான காலத்தை சுமந்து கொண்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருக்கிறது. நான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் செக்கு மாட்டுத்தனமாய் மாறிவிடுகின்றது.  

அடங்க மாட்டீங்களா? என்ற சப்தம் சமயலறையில் இருந்து வரும்.  அடங்கி விட்டார்களோ? என்று ஆச்சரியமாய் பார்த்தால் அடுத்து அணுகுண்டாய் மாற்றி அவஸ்த்தையை உருவாக்குவார்கள்..

மாட்டிய சீரூடையில் மாறிப் போன ஷுக்களின் எண்கள் புதுக்கவிதை சொல்லும். கால் ஒரு பக்கம் ஷு ஒரு பக்கம் என்று கோணி நிற்க மூவரின் வாய்களும் சிரித்து நிற்க அவசரத்தில் நிற்கும் மனைவியின் வாயில் வார்த்தைகள் வசைமாறி பொழியத் தொடங்கும். குட்டிகள் உருவாக்கிய குட்டிப் பஞ்சாயத்தில் மீண்டும் நிறுத்தப்படுவேன். கத்திப்பார்த்த மனைவியின் சொல் காற்றில் பறக்க பல சமயம் மாட்டிக் கொண்டிருக்கும் ஷுக்களும் பறக்கத் தொடங்கும்.  

அலுத்துப் போனாலும் மனதில் வார்த்தைகளாக கோர்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.  ஆழ்மன அழுத்தங்கள் அகன்று விடுகின்றது.  குதுகலமாய் அவர்களின் கொண்டாட்டங்களில் .பங்கெடுத்து அதிகாலையில் பள்ளி நோக்கிய பயணம் தினந்தோறும் தொடங்குகின்றது.


அவர்களின் பயணங்கள் எனக்கு வாழ வேண்டிய அவசிய நம்பிக்கைகளையும் விதைத்தபடியே இருக்கிறது. தெரு முனையில் கொக்குபூ மரம். தொடர்ந்த வீடுகளில் மஞசள் பூக்கள் என்று சாலையில் ஏராளமாய் இறைந்து கிடக்க இவர்களின் இரைச்சல் சப்தத்தில் வழியெங்கும் மலர்வனத்தில் மூன்று பூக்களுடன் நடந்து கொண்டே இருக்கின்றேன்.  

நம்பிக்கை செடிகளை வளர்ப்பதும் முக்கியம். 

உரமிடுவது அதைவிட அவசியம். .

கவனிக்க பழகுங்கள். அவற்றை எழுதாக்க முயற்சித்துப் பாருங்கள். 

அவரவர் வளர்த்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் நாளைய சரித்திரத்தை உருவாகக்கூடும்.
                           
                                                   +++++++++++++++++++++++++                            


அரசியல் பதிவுகளுக்கிடையே தமிழ்மண நட்சத்திர வாரத்தில் புதிய நடையில் எழுதிய ஆசைமரம் என்ற தலைப்பு அதிசயமாய் பக்கவாட்டில் மேலேறி வந்துள்ளது.

அதைப் போன்ற மற்றொரு தலைப்பு எழுத முடியுமா என்று முயற்சித்த தலைப்பு இது.

2011 வருடத்தின் இரண்டாவது நாள் எழுதிய பதிவு. தமிழ்மணம் 100 பதிவுகள் படுத்துக் கொண்டே ஜெயித்தவர். சர்ச்சையான பின்னூட்டங்கள்.


தொடரும் நண்பர்கள் அணைவருக்கும் எங்கள் இல்லத்தின் நன்றி.

Monday, December 26, 2011

வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா?

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களை கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். .

கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தை தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது.


இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.

இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.

முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்

கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.

ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.

காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.

நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது.

ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்த வார்த்தை இது. தங்களுக்கு தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் விதை நெல் கோட்டை.

இந்த கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டு சாணத்தை பூசி நன்றாக காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்த பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதை தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்க பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும்.

ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலக பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது.

உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார்.


அத்துடன் தனக்காக சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் " இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்த குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு " என்று ஆணவமாக பேசினார்.

இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார்.

"அது பகற்கொள்ளையே. அவர்கள் "பண மரத்தை" ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்."

ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்பு பணமாக பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது.

தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. .

இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள்.

                                                ++++++++++++++++++++++++++

தென்னிந்தியாவின் கதை தான் இப்படி என்றால் இந்தியாவின் அதிபர் மாளிகை எப்படி உருவானது?

1910 ஆம் ஆண்டு முதல் 1916 ஆண்டு வரைக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வேலையாட்களை, ஆங்கில கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு தேர்ந்தெடுத்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா?

14 ஆம் நூற்றாண்டில் கொடூரமான தைமூர் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மண்டை ஓடுகளைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு பிரமீடைக் கட்டியதாக சொல்லப்படுவதுண்டு. இந்த இடத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகள் சிவப்பு பாறைக் கற்களைக் கொண்டு தங்களுடைய ஆட்சிக்கு நினைவுச் சின்னங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதியையும் கட்டினார்கள். ஆனால் ஹார்டிங் பிரபுக்கு இது போன்ற வரலாற்று பின்புலம் பற்றி எதுவும் தெரியாமல் நிர்மாணித்த கட்டிடம் தான் இன்று வரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய உதவிக் கொண்டிருக்கின்றது.

சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போவதும், மீண்டும் வேறொரு வகையில் உயிர்தெழுவதுமான இந்த நிகழ்வுகள் கால வரலாற்றில் வந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது.

வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் வந்து போன சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டது. பழங்காலத்தில் தோன்றிய வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பேரரசுகள், மத்திய கிழக்கு ஆசியா, பாரசீகம், கீரிஸ்,ரோம், சிலுவைப் போர்கள், கொலம்பஸ்க்கு பிறகு வந்த ஐரோப்பிய பேரரசுகள் போன்றவற்றின் ஏகாதிப்பத்திய வளர்ச்சியே பெரும்பாலான போர்களுக்கும், உலகில் பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை உருவாக காரணமாக இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளையும் காணாமல் போகவும் வைத்தது. உலகில் அமைதியற்ற சமூகங்களை உருவாக்கிய பேரரசுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு போதைப் பழக்கத்தையும் மனோ ரீதியான பிரச்சனைகளும் உடைய நாகரிக மனிதர்களையும் தான் வளர்க்க முடிந்துள்ளது.

ஆனால் இன்று வரைக்கும் அமெரிக்கா தனது ஏகாபத்திய வாழ்க்கையை இழந்துவிட தயாராய் இல்லை என்பதை இங்கே குறிப்பிடலாம். பிரிட்டன் வரலாற்றை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.

எந்த இடத்திலும் ஒரு துளி கூட கருணை, காருண்யம், மனிதாபிமானம் என்பதை மருந்துக்குகூட பார்க்கமுடியாது. வெறிகொண்ட வேங்கை போலத்தான் வேட்டையாடி தங்களை வளர்த்துக் கொண்டே வந்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவை ஆண்டவர்கள் இன்று அமெரிக்காவை அண்டிப் பிழைப்பவர்களாக மாறியுள்ளது காலத்தின் கோலம் தானே?

உலக வரலாற்று சரித்திரத்தில் எந்த பேரரசும் நீடித்து இருந்ததாக சரித்திரமே இல்லை. இன்று வியப்பை தந்து கொண்டிருக்கின்ற அமெரிக்காவின் நிலையும் இதுவே. எந்த நாடும், தனி மனிதனும் மற்றவர்களை சுரண்டி நீண்ட காலம் வாழ்ந்ததாக இல்லை.

ஆனால் இந்தியா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஏராளமான பஞ்சம், பசி, பட்டினிகளைத் தாண்டி வந்தபோதிலும் இன்று வரையும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் தானே இருக்கிறது? எப்படி?

இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்க பரவ காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..

இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மை கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நிறுவன வர்க்கமும் அதிகார வர்க்கமும் உருவாக்கும் கூட்டணியின் மூலம் இந்த பரந்த உலகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. மேல்தட்டு மக்களை அவர்களின் வாழ்க்கையை விளம்பரங்களும், ஊடகங்களும் முன்னிறுத்துகின்றது. நடுத்தர வர்க்கத்தையம் அவ்வாறு ஒருவிதமான வாழ்க்கை வாழ் வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

உலகமயமாக்கல், தராளமயமக்கல், பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எல்லாவிதமான வசதிகளையும் பெறுவதும் பின்னால் உள்ளவர்களை சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதுமே ஆகும்.

இதன் காரணமாகவே எனக்கு என்ன லாபம்? என்ற பேராசை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரவர்க்கம் வரைக்கும் ஊடுருவிப் போனதால் எவரிடம் சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்கக முடியும். மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்குவது என்பதையே நாம் உணராமல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை.

இந்தியர்களின் பெரும்பாலனோருக்கு இருக்கும் மறுபிறவி நம்பிக்கை ஒன்று தான், நிகழ்கால அவலத்தை பொறுத்துக் கொள்ள வைக்கின்றது. விலங்குகள் போல நின்று கொண்டே மூத்திரம் போய்க்கொண்டிருக்கும் சந்தை கடந்து போய் தெரு முனையில் இருக்கும் கோவில் தரிசனத்தை பயபக்தியுடன் வணங்குவது நம்முடைய பண்பாடு..

ஒழுக்கத்தை விட நமக்கு பயமே முக்கியம். 

அந்த பயம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டேயிருப்பதால் இவ்வளவு பெரிய நாட்டை மிகக்குறைவான கண்காணிப்பு மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. 

அவரவர் மத நம்பிக்கைகளின் காரணமாகவே மதத்தால், மொழியால், ஜாதியில், குணத்தால் பிரிந்து வாழும் இந்த அகண்ட தேசம் பலவீனமாகாமல் தொடர்ந்து சிறிதளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ..

                                                                 ++++++++++++++++++++++++++

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போது கூட பெரும்பாலன மக்கள் தங்கள் அன்றாட கடமைகளில் தான் கவனமாக இருந்தார்களே தவிர எவர் ஆட்சி செய்கிறார்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அன்று தங்கள் உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள். காந்தி அழைத்தவுடன் பாரபட்சம் இல்லாது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சுதந்திர பொறியை பற்ற வைத்தார்கள்.

இப்போது தகுதியான தலைவர்கள் எவரும் இல்லாத போதும் அடிப்படை வாழ்வாதாரமே பாதிப்படைய போகின்றது என்றதும் கம்பம் பகுதியில் தன் எழுச்சியாக கேரளவுக்கு எதிர்ப்பை காட்டும் பட்சத்தில் ஒரு லட்ச மக்கள் திரண்டுள்ளார்கள்.

புரட்சி என்பது எப்போது உருவாகும்?.

இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்போகின்றது என்றதும் லட்சக்கணக்கில் திரளும் மக்கள், நாளை உணவுக்கே பஞ்சம் என்றால் எத்தனை கோடி பேர்கள் இது போன்ற புரட்சியில் இறங்கக்கூடும்?. மாற்றத்தை விரும்புவர்கள் அதிகமாகும் போது இது போன்ற தன்னெழுச்சியான நிகழ்வுகள் நடந்தே தீரும்.

நமது இந்தியாவை அதிக காலம் ஆண்டுள்ள காங்கிரஸ் வந்துள்ள பாதையில் இன்று நாடே திக்குத் தெரியாத பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது.

ஏன்?

                                                ++++++++++++++++++++++++


1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்திஜி நேருவை முன்மொழிந்தார். காந்தி தனக்குப் பதிலாக அந்த பதவிக்கு மிக பொருத்தமானவர் நேரு என்றே தீர்மானமாக நம்பினார். சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் வேறு சில செல்வாக்குள் காங்கிரஸ்கார்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மூர்க்கத்தனமான போட்டி பொறாமைகளுக்கிடையே நேரு கூட இந்த பதவியை விரும்பவில்லை. காரணம் காங்கிரஸ் கட்சியில் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு ஒத்து ஊதி காலத்தை ஓட்டிவிடலாம் என்ற மாற்றத்தை விரும்பாதவர்கள் என்ற ஆதிக்கமும் சரிக்கு சரியாக இருந்தது.


இதன் காரணமாகவே காங்கிரஸ் செயற்குழு தலைவராக இருந்த சி.ஆர். தாஸ் பதவி விலகினார். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவிற்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணிக்கை கொண்ட ஆட்சியாளர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அத்தனை நோக்கமும் ஏதோவொரு நாட்டின் மூலம் இந்த மாற்றம் இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் முடிவது தான் நாட்டின் பிரச்சனையின் தொடக்கமாக இருக்கிறது. இப்போது மன்மோகன் சிங் நம்பும் அமெரிக்கா உலகத்திற்கு சொல்ல விரும்பு செய்தியை ஒரே ஒரு உதாரணம் மூலம் நம்மால் சொல்லிவிட முடியும்.

அமெரிக்கா சமீபத்தில் ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவழித்தது. ஆனால் உலகமக்கள் அணைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது. 

உலகத்திற்கே அமைதியை போதிக்கும் அமெரிக்கா ஏன் இவ்வாறு செய்கின்றது? 

அது தான் அமெரிக்காவிற்கென்றே இருக்கும் அராஜக அரசியல்.

அமெரிக்கா இந்தியாவின் மேல் வைத்துள்ள கழுகுப்பார்வை என்பது இன்று நேற்றல்ல. சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக இருந்த நேரு காலத்தில் இருந்தே நடைபெறுகின்றது.

உலோகத் தொழில், மின்சார சக்தி உற்பத்தி, இரசாயனம், இயந்திரங்களைக் கட்டுதல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் போன்ற துறைகளை வளர்க்கப்பட வேண்டும் என்று நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டத்தைப் பார்த்து அப்போது டில்லியில் அமெரிக்க தூதராக இருந்த ஹென்ரி ஜே. கிரேடி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

"இந்தியாவை தொழில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முயற்சிப்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் "இயற்கையான போக்கை" அழிப்பதில் கொண்டு போய்விடும்" என்று பயமுறுத்தினார். மேலும் நேரு ஒரு மறைமுக கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்.

இவ்வாறு சொன்ன அமெரிக்கா நேருவை தங்கள் ப்க்கம் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று பலவித முயற்சிகளையும் செய்து பார்த்து 1948 ஆம் ஆண்டே அமெரிக்கா வரச்சொல்லி அவருக்கு அழைப்பு விடுத்தது. காலம் கடத்தி ஆனால் உறுதியான நிலைப்பாட்டுடன் அமெரிக்க சென்ற போது (1949 அக்டோபர்) வாஷிங்டன் விமான நிலையத்தில் நேருவை வரவேற்ற அதிபர் ட்ரூமன் பின்வருமாறு கூறினார்.

" உங்கள் நாட்டுக்குப் புதிய பாதையைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்கள் எங்கள் நாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது விதியின் முடிவாக இருந்தது. உங்கள் வருகை ஒரு அர்த்தத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதாக இருக்குமென்று நம்புகின்றேன்."

ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

இந்திய சுதந்திரத்தில் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க அமெரிக்காவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று வெற்றி நடை போட்டு இந்தியர்களை நம்பி இந்தியாவை வடிவமைக்கத் தொடங்கினர். ஆனால் அன்று நேரு காங்கிரஸ் தொடங்கிய பயணம் இன்று இத்தாலி காங்கிரஸ் ஆக மாறி, மறுபடியம் அதே அமெரிக்காவின் காலடியின் சமர்ப்பிப்பதில் முடிந்துள்ளது.

இதைத்தான் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்று சொல்கிறார்களோ?....

இங்கே எடுத்து நோக்கப்பட்ட விடயங்கள் எண்ணத்தில், சிந்தனையில், ஏற்றப்பட்டால் இந்தியர்கள் எல்லோர்க்கும் வாழ்வு .

இல்லையேல்.......?தொடர் பயணத்தில் பங்கெடுத்த உங்களுக்கு என் நன்றி.

4 தமிழ்மீடியாவில் தொடராக வெளிவந்தது. அதன் ஆசிரியர்  வார்த்தைகளில்.........

இவ்வாறான ஒரு தொடர் ஒரு இணைய ஊடகத்தில் வெளிவருவதனால் எவ்விதமான சாதகங்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.   பாதிக்கப்படும் விவசாயிகளில் பலரும் பாமர மக்கள். அவர்களுக்கு இணைய வாசிப்போ இது போன்ற விடயங்களோ சென்றடைந்துவிடுமா..? என்ற கேள்விக்கு இல்லையென்பதே மிகத் தெளிவான பதிலாக இருக்க முடியும்.

அப்படியானால் யாருக்காக இந்த முயற்சிகள்..?

சந்தேகமில்லை. இந்த முயற்சிகள் இணையப் பாவனையில் உள்ள நடுத்தர மற்றும் படித்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே.

ஏகாதிபத்திய சாம்ராஜ்யங்கள் இன்று இந்த நடுத்தரவர்க்கத்தையே குறிவைத்துக் காய் நகர்த்துகின்றன. தாம் சுரண்டப்படுவது தெரியாமலே  நம்பிக்கை மோசம் போய்க் கொண்டிருக்கிறது இந்த நடுத்தர வர்க்கம்.

வெள்ளந்திகளான பாமார மக்கள் பாதிப்புத் தமக்கென உணரும் போது, உணர்வோடு போராடப் புறப்பட்டுவிடுகின்றார்கள். அவ்வாறு புறப்படுபவர்களை ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளாகவோ, அல்லது வேண்டத்தகாதவர்களாகவோ உருமாற்றிக் காட்டும் போது, அதையே  உண்மையென உச்சுக் கொட்டி ஏற்றுக் கொள்ளும் ஏமாளிகளாக அல்லது எதிர்ப்பதற்கு இயலாதவர்களாக இருப்பவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தினர்.

வழங்கப்படும் ஏட்டறிவு, வேலைவாய்ப்பு, அதற்கும் மேலான பொழுது போக்குச் சுவாரசியங்கள் எல்லாமே, இதற்கெனத் திட்டமிட்ட வகையிலேயே காப்ரேட் கடவுளர்களால் படைக்கப்பட்டு, இரட்சிக்கப்படுகிறது நடுத்தரவர்க்கம். அதனால்தான் இவ்வாறான சிந்தனைகள் இணையவழியில் அவர்களிடத்தில் பகிரப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றோம்.

எல்லைகள் தாண்டிப் பயணிக்கும் இணையவழியில் இவ்வாறான செய்திகள் எண்ணற்ற பேர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அந்த விருப்பத்தின்படி ஆயிரக்கணக்கான பேர்களை இந்தத் தொடர் சென்றடைந்திருக்கின்றது. அதற்கப்பால் சில முக்கிய நிலைகளிலும் முட்டி மோதியிருக்கிறது என்பதையும் அறிவோம். ஆனால் உள்வாங்கி உணர்ந்து கொண்டோர் ஓராயிரம் பேர்களல்ல ஒரு நூறு பேராக இருந்தாலும், அதுவே  ஆரம்பம்....!

Friday, December 23, 2011

தற்கொலை தந்தை


காரல் மார்க்ஸ் சொன்ன " நிலமென்பது விவசாயிகளுக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அல்ல. அதன் வரப்புகள் விவசாயிகளின் கரங்களிலே பூட்டப்பட்டு இருக்கும் விலங்கு" என்ற கருத்து இன்று வரைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கு.  

இன்று விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் நம்முடைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய விவசாயத்தைப் பற்றி பேசும் வேறு சில விசயங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

"இந்தியாவை மானியமும் இலவசமும் தான் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது."

"சிறிய அளவில் இருக்கும் விவசாய நிலத்தினால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. இதுவே பெரிய நிலங்களாக இருக்கும் போது விவசாயத்தை ஒரு தொழிலாக செய்ய வாய்ப்பு அதிகம்."

"எந்த பயிரில் பணத்துக்கான வாய்ப்போ அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நம்முடைய விவசாய முறையில் இந்த புரிதல் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தை குறை சொல்வதில் பலன் ஒன்றுமில்லை."

நம்முடைய பொருளாதார அறிஞர்களும், படித்த மேதைகளும் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா இன்னமும் வளராமல் இருக்க இவைதான் முக்கிய காரணமா?.

ஏன் மானியம்? எதற்காக மானியம்? போன்ற எதையும் நம்மவர்கள் யோசிக் விரும்பதில்லை. 

விவசாயத்தில் ஒரு பெரிய புரட்சியே நடத்திக்கொண்டிருக்கும் மேலை நாடுகளைப் பார்த்தாயா? என்று நம் அரசாங்கமும் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மைகளை அதன் அருகே சென்று கூட எவரும் பார்க்க விருப்பப்படுவதில்லை என்பது தான் உண்மை.

ஒவ்வொரு வளர்ச்சியடைந்த நாடுகளும் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு இன்று வரைக்கும் மானியம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்.

உலக பொருளாதார கொள்கையின்படி மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் பத்து சதவிகிதம் வரைக்கும் தாரளமாக மானியம் கொடுக்கலாம். உலக நாடுகளே ஒத்துக் கொண்ட கணக்கு இது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் அவர்களின் மொத்த வளர்ச்சியில் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே. ஆனால் இதே அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் 3 கோடி விவசாயிகள் இருந்தனர்.

கார்ப்ரேட் பாணியில் விவசாயம் என்று சொல்லியே கார்ப்ரேட் நிறுவனங்கள் கைப்பற்ற இன்று அமெரிக்காவில் விவசாயம் என்பது பணக்காரர்களின் தொழிலாக மாறிப்போனது. அமெரிக்கா கொடுக்கும் மானியமும் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் போய்ச் சேருகின்றது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவருடைய ஆட்சி காலத்தில் மட்டும் மானியமாக கொடுத்த தொகையின் அளவு ஒன்னரை லட்சம் கோடி.

உலகத்தின் மொத்த சந்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருப்பதால் விலைக்கான உரிமையிலும் கை வைத்து ஒரே கல்லில் பல மாங்காய் என்று செழிப்பாக வளர்ந்து கொண்டிருப்பது விவசாயம் அல்ல இந்த விவசாயப் பணக்காரர்கள். ஒவ்வொரு பொருளும் விலையேற வளரும் நாடுகளுக்கு பேரிடியாக இருக்கிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை நம்பியே பெரும்பாலானோர் இருப்பதால் மானியத்தொகை என்பது மற்றவர்களுக்கு பூதாகரமாக தெரிகின்றது. ஆனால் இந்தியாவில் விவசாயம் என்ற துறைக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவு 2.33 சதவிகிதம் மட்டுமே. 

இந்த இடத்தில் மற்றொன்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மானியத்தொகை அப்படியே விவசாயிகளுக்கு வந்து விடுகின்றதா?

ஊழலைப்பற்றி சில வார்த்தைகள் இந்த இடத்தில் பேசிவிடலாம்.

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா வளர்நது கொண்டிருந்த சூழ்நிலையில் அங்கேயும் ஊழல் நதி போலத்தான் ஓடிக் கொண்டிருந்தது. சீனாவில் மா வோ வுக்கு பின்னால் வந்தவர்கள் முதல் இன்று வரைக்கும் அங்கேயும் ஊழல் பெருக்கெடுத்து வெள்ளம் போல பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நாடுகளில் ஊழல் செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்காக செய்கிறார்கள். அதற்கான உழைப்பையும் கொடுத்து சம்மந்தப்பட்ட துறைகளை, தொழில் அதிபர்களையும் வளர்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய அரசு எந்திரத்தில் போடப்படும் எண்ணெய் போல.

ஆனால் ஆப்ரிக்கா நாட்டில் நடக்கும் ஊழல் போலத்தான் இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. மொத்த தொகையையும் விழுங்கி ஏப்பம் விடுவதால் எந்த வேலையும் நடந்தபாடில்லை. நாடும் வளர்ச்சி அடைந்தபாடில்லை. இந்த ஊழல் தான் இந்திய விவசாயத்துறை முதல் மற்ற அத்தனை துறைகளும் வளராமல் போனதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்கு கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள்.

ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தை குறைக்க வேண்டும் என்கிறார்களே?

ஏன்?

அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தை தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூட செய்யலாம்.

இன்னும் கூட கொஞ்சம் உள்ளே நுழைந்து ஒவ்வொரு நாடும் தங்கள் விவசாயிகளுக்கு எந்த அளவு மானியத்தை கொடுக்கின்றார்கள் என்பதை பார்த்து விடலாம்.

இது ஹெக்டேர் நிலத்திற்கு கொடுக்கப்படும் மானியத்தின் அளவு.

அமெரிக்கா 32 டாலர் ஜப்பான் 35 டாலர் சீனா 30 டாலர் தென் ஆப்ரிக்கா 24 டாலர் ஆனால் நம்முடைய இந்தியா விவசாயிகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது வெறுமனே 14 டாலர் மட்டுமே. இது உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட கணக்காகும்.

மற்ற நாடுகளோடு இந்தியா போட்டுள்ள ஒப்பந்தங்களின்படி எண்ணெய் பொருட்களுக்கு பூஜ்ய வரிவிதிப்பு என்பதால் மற்ற நாடுகளில் உள்ள அத்தனை எண்ணெய்களும் இங்கே வந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் ஆலைகள் பெரும்பாலும் மூடு விழாவை நடத்தி விட்டது.

உள்நாட்டில் உள்ள பதுக்கல் மூலம் சம்பாரிப்பவர்கள் ஒரு பக்கம். உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மறுபக்கம். பயிர் செய்தவனுக்கு என்ன மிஞ்சம்? தரகு வேலையே தரமான வாழ்க்கை என்று மாறியுள்ள உலகத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் முட்டாளாகத்தான் பார்க்கப்படுவீர்கள்.

எள், கடலை சாகுபடி செய்யபவர்கள் உரிய விலை கிடைக்காமல் மாற்றுப்பயிறுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலக நாடுகளின் வற்புறுத்தலின்படி தானிய வகைகளை திறந்த அனுமதியின் வாயிலாக (Open General License) இறக்குமதி செய்து கொண்டிருப்பதால் உள்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மரியாதை எங்கே கிடைக்கும்? இது ஒரு உணவுப் பொருளின் நிலைமை. இதே போல ஒவ்வொரு பொருளையும் நினைவில் கொண்டு வரவும். காரணம் வேர்களை அழித்து விட்டு நமது அரசாங்க கொள்கைகள் விழுதுகளை தேடிச் சென்று கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக சிறு குறு விவசாயிகள் தாக்கு பிடிக்க முடியாமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் தங்களிடம் உள்ள நிலங்களை விற்று விட்டு நகர்ப்பகுதிகளுக்கு வந்து விடுகின்றனர். திருப்பூர், சிவகாசி, சென்னை என்று உள்ளே வந்து ஏதோவொரு தொழிற்சாலைக்குள் தங்களை பொருத்திக் கொள்கின்றனர்.

நாளுக்கு நாள் ஆட்களின் வரத்து அதிகமாக தொழிலாளர்களின் கூலியும், சம்பளமும் குறையத் தொடங்குகின்றது. நடுத்தரவர்க்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் காலப்போக்கில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையை எப்படி வாழப்போகின்றோம் என்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அடிப்படை விவசாயத்தை கவனிக்காமல் விட்ட அரசாங்கத்தால் எத்தனை ஊர்களில் எத்தனை தொழிற்சாலைகளை கட்டமுடியும்?

தனியார் மூதலீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமோ அது சார்ந்த சட்ட திட்டங்கள் முறைப்படுத்த முடியாத போது ஒவ்வொரு தனியார் நிறுவனங்களின் கொள்கை என்பது முடிந்தவரைக்கும் கொள்ளை என்பதாக மாறிவிடுகின்றது. முதலாளிகளை மட்டுமே ஆதரிக்கும் எந்த அரசும் நீண்ட நாட்களாக இருந்ததாக சரித்திரம் உண்டா? கண் முன்னால் பார்த்துக கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டின் கிளர்ச்சிக்கும் பின்னாலும் இயல்பான வாழ்க்கை கூட வாழ முடியாத லட்சக்கணக்கான மக்களின் கோபம் தான் வெளியே தெரிகின்றது.

இன்று உலகத்தின் மொத்த ஜனத்தொகை 700 மில்லியன் என்கிறார்கள்.

இந்த ஜனத்தொகையில் ஒரு சதவிகித மக்கள் தான் உலகத்தின் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் வைத்ததே சட்டம். அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் என்பது ஒரு கார்ப்ரேட் தொழில். ஆனால் இந்தியாவில் இது வாழ்க்கைகான ஆதாரம். இங்குள்ள விவசாயிகளுக்கு வேறு எதுவும் தெரியாது. கலாச்சார பண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தே தங்களை வாழ்க்கையை வாழ்ந்த பழகிவிட்ட இந்தியர்களுக்கு தங்கள் நிலங்களை தெய்வமாக வணங்குவதால் அவர்களால் தங்களை வெளி வாழ்க்கையோடு எளிதில் பொருத்திக் கொள்ள முடிவதில்லை.

அரசாங்கம் கூற்றுப்படி இந்திய விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டுமென்றால் நிலங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இதை முதலில் கணக்கு ரீதியாக பார்த்து விடலாம்.

அமெரிக்காவில் 7 டன் அரிசி உற்பத்தியாகும் அளவில் உள்ள நில அளவில் அதைப் போல அளவுள்ள இந்திய நிலத்தில் 2 டன் அளவுக்கே உற்பத்தியாகின்றது. இதற்கு காரணமாக மேதைகள் சுட்டிக்காட்டுவது அமெரிக்காவில் நிலங்கள் பெரிதாக இருப்பதால் இது சாத்தியமாகின்றது என்கிறார்கள்.

ஆனால் மேம்போக்காக இப்படிச் சொல்லிவிட்டு செல்பவர்கள் இந்த 7 டன் உற்பத்திக்கு அமெரிக்கா அரசாங்கம் எந்த அளவுக்கு மானியம் அளிக்கின்றது என்பதை மறைத்து விடுகிறார்கள்.

ஒரு வேளை அமெரிக்கா கொடுக்கும் மானியத்தைப் போல இந்திய விவசாயிகளிடமும் கொடுத்தால் அதை விட அதிகமாகவே எடுக்க முடியும். நாம் நாட்டின் இப்போதைய பொருளாதார அடிப்படையில் இப்போது இது சாத்தியமாக இருக்குமா? மொத்த கணக்காக பார்க்கப் போனால் அமெரிக்காவில் 1.2 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு உற்பத்தியாகும் அரிசிக்கு அந்த நாடு கொடுக்கும் மானியத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

1.4 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.

கூட்டிக் கழித்துப் பாருங்க. லாபமா? நட்டமா? காரணம் அமெரிக்கா நாடு பட்டவர்த்தமான முதலாளித்துவ நாடு. அவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு மட்டும் தானே ஆட்சி நடத்துகிறார்கள்.

ஒரு கிராமத்தில் இருக்கும் 50 விவசாயிகளின் விளைபொருட்களால் சுற்றியுள்ள 10 ஊர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது என்பதை ஒரு கணக்காக எடுத்துக் கொள்வோம். இதுவே மொத்த இந்தியாவை கணக்கில் எடுத்துக் கொண்டுப் பார்த்தால் அரசாங்கம் விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கடுமையான சட்டதிட்டஙகளை கொண்டு வரும்பட்சத்தில் ஏன் நம்முடைய விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாகாமல் போய்விடுமா?

இவர்களும் செய்யமாட்டார்கள். இடையில் இருக்கும் தரகு கும்பலும் செய்ய விட மாட்டார்கள். அதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டிருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களும் செய்யவும் விடாது. இது தான் எதார்த்தம். இதன் காரணமாகத்தான் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்திய அரசு தரப்பு தகவலின்படி 1993 முதல் 2006 வரைக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 1,50,000 பேர்கள். ஆனால் நிச்சயம் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும்.

தற்கொலை செய்து கொள்ளும் மாநிலத்தில் நம்முடைய செயல்வீரர் சரத்பவார் மாநிலமான மகாராஷ்டிரா முதன்மையான இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற கர்நாடகா மற்றும் ஆந்திரா அடுத்த இடங்களில் வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சத்திஷ்கர், மத்தியப்பிரதேசம் மாநிலங்கள் இந்த இடத்தை பிடிக்கின்றன.

தமிழ்நாடு அந்த அளவுக்கு மோசமான இடத்தை பெறாவிட்டாலும் எதிர்கால நிகழ்வுகள் எங்கே அழைத்துச் செல்லப்போகின்றது எந்த கவலை ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே வந்து போய்க் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் 23 என்பது நமது விவசாயிகள் தினம் என்று நம்முடைய பிரதமர் அறிவித்து இருக்கிறார். அவருக்கு மற்றொரு பெயரும் உண்டு.

இந்திய விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும் தந்தை என்று கூட சொல்லலாம்.

காரணம் இந்தியாவிற்கு வெள்ளைக்காரர்களின் பொருளாதார சிந்தனைகளே மேலானது என்று இன்று நமக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார மேதை விரும்பும் அந்த தத்துவம் எங்கிருந்து பிறந்தது? இந்தியாவிற்குள் முதன் முதலாக வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுமையாக இருந்த இராபர்ட் கிளைவ் என்ற புனித ஆத்மாவைப் பற்றி பார்த்து விட்டால் போதுமானது. 

இவரைத்தான் மேல் நாட்டு வரலாற்றுசிரியர்கள் " பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியர்" என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.

காரணம் நம்முடைய இந்தியா எங்கிருந்து பயணத்தை தொடங்கியதோ அங்கே போய் முடிப்பது தானே நல்லது.

அப்போது தான் உங்களுக்கு மேலும் சில விசயங்கள் புரியும்?

இந்திய விவசாயத்துறை குறித்த இந்த பார்வைப் பயணம் அடுத்த பகுதியோடு முடிவடைகின்றது.

Wednesday, December 21, 2011

ஆட்டம் முடிந்தே போய் விடுமா?


2020 ஆம் ஆண்டு. இந்தியா உலகளவில் வல்லரசாக மாறிவிடும் என்று சொல்லி நம் தலைவர்கள் நம்மை கனவு காண வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

அரைவயிற்று கஞ்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களும் கனவு இந்தியாவில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் ஒவ்வொருவரும் கனவு காணுங்கள் என்று நமது விஞ்ஞானி அப்துல் கலாம் கூட செல்லும் இடங்களிலெல்லாம் நம்பிக்கையளித்துக் கொண்டிருக்கிறார். இந்த கனவு பற்றி விதவிதமான கோஷங்கள் வேறு அங்கங்கே ஒலித்துக கொண்டிருக்கின்றது.


எதைப்பற்றி கனவு காண்பது?

ஒரு நாடு வல்லரசாக இருப்பது முக்கியமா? குடிமக்களுக்கு நல்லரசாக இருப்பது அவசியமா? இந்தியா கடந்து வந்த பாதையைப் பார்த்தாலே போதுமானது.

காரணம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் உள்ள "பன்னாட்டு உணவு கோட்டுபாடு ஆராய்ச்சிக் கழகம்" ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறது. ஆனால் வல்லரசு குறித்த கனவில் எவரும் அதைப் பற்றி கவலைப்படத் தயாராய் இல்லை.

" வந்த காலத்தை விட இந்தியா இனி வரப்போகும் அடுத்த 20 ஆண்டுகளில் தான் உணவுக்காக போராடப்போகின்றது " என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மேலும் விலைவாசி உயர்வு மற்றும் ஏழை பணக்காரனுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளியின் காரணமாக சராசரி மனிதர்களால் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண முடியுமா என்ற அவலம் விரைவில் உருவாகப் போகின்றது என்கிறார்கள்.

ஏன்?

கடந்த 8வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் 4.7 சதவிகிதமாக இருந்தது. இதுவே 9வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 சதவிகிதமாக குறைந்து இப்போது 10வது ஐந்தாண்டு திட்டத்தில் 1.8 சதவிகிதமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியுள்ளது.

இப்போது அந்நிய மூதலீட்டை எவர் எதிர்த்தாலும் உள்ளே கொண்டு வந்தே தீருவேன் என்று சூளுரைத்துள்ள மன்மோகன் சிங் இந்த சமயத்தில் வேறொன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்நிய நிறுவனங்கள் உள்ளே வரும் போது நமது விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதோடு, அவர்கள் உருவாக்கும் நவீன தொழில் நுட்ப குளிர்பதன கிடங்கால் எந்த பொருளும் வீணாகாது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் வராது என்கிறார்.

ஆனால் 60 வருட மக்களாட்சியில் இந்தியாவில் ஆண்ட தலைவர்களால் உள்ளூர் தானியங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. அந்நிய நிறுவனங்கள் தான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே? இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்.

வீணாகும் உணவுதானியப் பொருட்களைப்பற்றி இதே மன்மோகன் சிங் சொன்ன வார்த்தைகளுக்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் குட்டு வைத்ததை நாம் அணைவரும் அறிந்த போதிலும் இந்த அறிவிலிகள் சொல்வதை எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் அவரவர் அரசியல் நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கும்மி தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாமும் நமது நிலத்திற்கு உண்டான மரியாதையையும் கொடுக்க வில்லை. அந்த நிலமும் நாம் விரும்பும் மகசூலையும் தருவதில்லை. உருப்படியான ஒட்டு ரக விதைகளை நாம் உருவாக்காத காரணத்தால் ஒரு ஹெக்டேருக்கு 4700 கிலோ மகசூல் கோதுமை கொடுத்துக் கொண்டிருந்த விளைநிலங்கள் இன்றைய காலகட்டத்தில் 4000 கிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே அரிசி முதல் அத்தனை பயிர்களும் நமக்கு பயம் காட்டிக் கொண்டிருக்கிறது.

சமையல் எண்ணெய் மட்டும் கடந்த ஆண்டில் 30 000 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இருக்கிறோம். பாமாயில் என்றால் ஒரு காலத்தில் மூக்கை பொத்திக் கொண்டு கடலை எண்ணெய் பக்கம் ஓடினோம். ஆனால் இன்று கடுகு எண்ணெய் வரைக்கும் வந்துவிட்டது. சுத்திகரிக்கப்பட்டது என்ற இந்த ஒரு வார்த்தை தான் இன்று நுகர்வு கலாச்சாரத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது.

தண்ணீர் முதல் எண்ணெய் வரைக்கும் சுத்திகரித்து உண்டபோதிலும் புதுப்புது நோய்கள் நம்மை சுத்திக்கொண்டேதான் இருக்கு. உணவு பழக்க மாறுபாட்டினால் இன்று இந்தியாவில் தான் அதிக அளவு சர்க்கரை வியாதி நோயாளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் வேறு வாய்ப்பு கிடைத்தால் நிலத்தை அப்படியே போட்டு விட்டு ஓடத் தயாராக இருக்கிறார்கள். காரணம் இடைத்தரகர்கள் உண்டு கொழுக்க எத்தனை நாட்களுக்குத் தான் "உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்ற பழமொழியை சொல்லிக் கொண்டே இருக்க முடியும். வளர்ந்து கொண்டிருக்கும் இளைய சமூதாயமும் விவசாயமென்பது வேலையத்த வெட்டிப் பய பொழப்பு என்கிற ரீதியில் தகவல் தொழில் நுட்ப துறையில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் கண் விற்று சித்திரம் வாங்க ஆவலாய் பறந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று இந்தியாவில் ஏறக்குறைய 47 சதவிகித நடுத்தர விவசாயிகளும், 70 சதவிகித குறு விவசாயிகளும் இருக்கிறார்கள். எந்த விவசாயிகளாவது வங்கியில் சென்றால் உடனடியாக கடன் கிடைத்து விடுமா?

ஆனால் சாராய சாம்ராஜ்ய சக்ரவர்த்தி விஜய் மல்லையாவுக்கு பிரச்சனை என்றவுடன் அரசாங்கமே அலறுகின்றது.

இதைவிட மற்றொரு கொடுமையும் உண்டு.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மண்வளத்திற்கும் அரசாங்க அறிக்கைகளுக்கும் பெரிய முரண்பாடுகள் உள்ளதால் எந்த மாநில விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற திட்ட அறிக்கையிலேயே ஆயிரம் குளறுபடிகள். பஞ்சாப்பில் இருக்கும் விவசாயிகளுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகளுக்கு சுண்ணாம்பு என்கிற ரீதியில் தான் இந்திய விவசாய அமைச்சகத்தின் செயல்பாடுகளும் இருக்கிறது.

ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டு வந்த அற்புதமான திட்டமான "தேசிய ஊரக வேலை வாய்ப்பு " திட்டத்தின் மூலம் கொஞ்சம் ஆர்வமிருந்த விவசாய மக்களையும் அக்மார்க் சோம்பேறியாக மாற்றிவிட்டது.

வேலை எதுவும் செய்யாமலே தினந்தோறும் கூலி என்கிற நிலைக்கு இந்த "தேசிய வேலை வாய்ப்பு திட்டம்" மக்களை மாற்றியுள்ளது. உலக வங்கி கடன் சுமை இந்தியாவிற்கு அழுத்த உள் நாட்டில் சோம்பேறிகளும் அதிகமாகி விட்டார்கள்.

நமக்கு தேவைப்படும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நம்மை ஆளக்கூடிய கணவான்கள் காத்திருக்கிறார்களே? உள்ளூரில் விளையும் கோதுமைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த மத்திய அரசாங்கம் தரம் குறைந்த ஆஸ்திரேலியா கோதுமைக்கு ரூபாய் 1600 கொடுத்து இறக்குமதி செய்த கொடுமையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கை என்பது மக்களுக்காக அல்ல. இடையில் இருப்பவர்கள் உண்டு கொழுக்க மட்டுமே.

இவை விட நமக்கு வேறென்ன வேண்டும்?

ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிதி அமைப்பு அறிக்கையின்படி 2050 ஆம் ஆண்டு உலகில் சீனாவும், இந்தியாவும் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் என்கிறார்கள்.. சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய ஜனத்தொகை 161 கோடியாகவும் இருக்கும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

இதில் கூட நாம் தான் முதல் இடத்தில் இருக்கிறோம்.

ஆனால் நமக்கான உணவு பற்றாக்குறையை எப்படி சமாளிக்கப் போகின்றோம்? சீனாவும், இந்தியாவும் உணவுக்காக உலக நாடுகளில் கையேந்த தொடங்கினால் இப்பொழுதே பசியினால் இறந்து கொண்டிருக்கும் ஆப்பிரிக்கா நாடுகளின் எதிர்கால நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பார்த்து இருக்கிறோமா?

கடந்த 50 ஆண்டுகளில் வேளாண் இடு பொருட்களின் விலை 100 மடங்கு அதிகமாகி உள்ளது. ஆனால் உற்பத்தி செய்யும் வேளாண்மை பொருட்களின் விலை பத்து மடங்கு தான் அதிகமாகியுள்ளது.

எவருக்கு காலம் முழுக்க விவசாயியாக இருக்க மனம் வரும்.?

ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவன் ஐந்து வருடங்களில் மகா கோடீஸ்வராக மாற ஐம்பது ஏக்கர் வைத்திருக்கும் ஒரு விவசாயி காலம் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

வல்லரசு என்ற வார்த்தையை நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்ய வக்கில்லாமல் ஆயுத பெருக்கத்தில், அணு ஆயுத வளர்ச்சியில், அந்நிய மூதலீட்டிலும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் நமக்கு விட்டுச் செல்லப் போவது என்ன தெரியுமா? ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அனுபவித்த பசி, பட்டினி, பஞ்சத்தைத் தான ச்ந்திக்கப் போகின்றோம்.


ஆனால் அந்நிய நிறுவனங்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களின சந்ததிகள் ஏதோவொரு நாட்டில் சேர்த்து வைத்த சொத்துக்களை சொத்தைப்பல்லாகி விழும் வரைக்கும் அனுபவித்து சகல சந்தோஷங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

" உலகமயம் என்பது ஏழை மூன்றாவது நாடுகள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். ஆயுதங்களை வைத்து தான் ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டும் என்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஆடை மாற்றம், உணவு மாற்றம் என்று கலாச்சாரத்தை சிதைதாலே போதும். ஒரு நாடு நாசமாகப் போய்விடும். உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியாது. யாரை எதிர்த்துப் போராடுவீரக்ள். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மட்டும் போட்டு விட்டால் அதோட முடிந்து போகும் உங்க ஆட்டம்."

இப்படி நமக்கு சாபம் கொடுத்திருப்பது யார் தெரியுமா?

ரம்சே கிளார்க் என்னும் அமெரிக்க வக்கீல்.

மோனிகா லெவன்ஸ்கிட்ட தன்னோட திறமையைக்காட்டிய முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்ட்னை நீதி மன்றத்தில் வைத்து புரட்டி எடுத்த மனித உரிமை வக்கில்.

இப்போது ஒரு கேள்வி வர வேண்டுமே?

அரசாங்கம் கொடுக்கும் இலவசம் மற்றும் மானியத்தை நிறுத்தினாலே நம் நாடு விரைவில் முன்னேறிவிடும் என்று சொல்பவர்களா நீங்கள்? 

Monday, December 19, 2011

சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்

1995 ஆம் ஆண்டு. பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு சீன விஞ்ஞானிகள் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தனர்.அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக இந்த ஆய்வுக்கட்டுரை சீனாவில் உள்ள பல துறைகளுக்குச் சென்றது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் அந்த கட்டுரையில் உள்ள சாத்தியக்கூற்றை ஆராய்ந்தனர்.

கடைசியாக "முடியும்" என்றும் நாம் செயலில் இறங்கலாம் என்று சீன அரசாங்கம் பச்சை கொடி காட்டியது. இன்று உலகின் கண்களுக்கு மண்ணைத்தூவி விட்டு, அந்தத் திட்டத்தின் வேலைதான் விரைவாக நடந்து  கொண்டிருக்கிறது.

ஆமாம்.

சீனா தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் ஓடிவரும் சேங்போ என்றழைக்கப்படும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது. எந்த விளம்பரமும் இல்லாமல் வீண் விவாதங்கள் இல்லாமல் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சில துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிதி, விவசாயத்துறை, தொழிற்துறை. ஆனால் இந்த மூன்றும் நிலையாக இருக்க உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உள்துறை முக்கிய பங்காற்றுகின்றது.

இவற்றையெல்லாம் விட அதி முக்கியமானது வெளியுறவுத்துறை.

இந்தியாவின் நிதித்துறையை கையில் வைத்திருக்கும் பிராணாப் முகர்ஜியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் எப்படி தன்னை நான் அம்பானிக்கு பிறக்காத மகன் என்று சொல்லியிருந்தாரோ அதனைப் போலவே இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் நாட்டை விட நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கார்ப்பரேட் கனவான்களே முக்கியமானவர்கள். நிதித்துறை குளறுபடிகளை கவனிப்பதை விட எப்படி பிரதமர் பதவியை கைப்பற்றுவது என்பதில் தான் அதிக கவனமாக இருக்கிறார். எங்கே மன்மோகன் சிங்கிற்கு அடுத்து ப.சிதம்பரம் வந்து விடுவாரோ என்று அவரால் முடிந்த அத்தனை தகடுகித்த வேலையை செய்து கொண்டிருந்த போதிலும் சோனியா ஆதரவில்லாத காரணத்தால் ஒவ்வொருமுறையும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்.

கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை தொகுதியில் தோற்ற போதிலும் குளறுபடிகள் செய்து குறுக்குவழியில் சென்ற ப.சிதம்பரத்திற்கு உள்துறை அமைச்சர் பதவியென்பது வேப்பங்காய் போன்றது. அவர் எதிர்பார்த்திருந்தது நிதித்துறையே.

ஆனாலும் வேண்டா வெறுப்பாகவே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸின் முதல் ஐந்தாண்டு காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக பதவியில் இருந்து ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற பெரும்புகழை அடைந்தார். அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை பஞ்சம் பிழைக்க வைத்ததில் முக்கிய பங்காற்றினார். இப்போது கூட பாகிஸ்தானிடம், மாவோஸிட்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து தியாகச் செம்மல் சரத்பவார். இவர் பெயர் சொன்னாலே போதும். தரம் எளிதில் விளங்கும். அடுத்து 50 ஆண்டுகள் கழித்து கூட வரக்கூடிய விவசாயிகள் மறக்க முடியாத நபர்.

ஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு ஒரு திறமைசாலி தான் நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா. வெளியுறவுத்துறை என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அதிபுத்திசாலி. அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை கூட மாற்றி படித்து சிறிது கூட வெட்கப்படாமல் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அற்புதமாக கையாண்டு கொண்டிருக்கிறார்.

இதைவிட இந்தியாவிற்கு என்ன பெருமை வேண்டும். இவர்களை தேர்ந்தெடுத்த சோனியாவிற்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த கிருஷ்ணா தான நாம் சீனாவைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை பாப்பா என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சீனாவின் தொழிற் புரட்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்துடன் விவசாயத்துறையும் கூட.

உடனடி திட்டங்கள், அடுத்து வரும் திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் என்று மூன்று விதமாக பிரித்து ஒவ்வொன்றையும் உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக சீன ஆட்சியாளர்கள். செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய உணவுப் பஞ்சம் எப்படி சவாலைத் தரப்போகின்றதோ அதே சவால் சீனாவுக்கு உண்டு என்ற போதிலும் அதற்கான முயற்சியை 15 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கி விட்டனர் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஆப்ரிக்க நாடுகளில் நிலங்களை குத்தகை அடிப்படையில் வாங்கி அதில் பயிர் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் செயல்பாடுகள் அத்தனையும் நம் அமைச்சர்களுக்கு கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் இவர்களுக்கு உண்மையான வேலை பல இருக்கிறது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை.

சீனா பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் மின்சாரத்திற்கு என்றபோதிலும் இந்த திட்டத்தின் மூலம் ஆற்றின் நீரை சீனாவின் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்புவதே மற்றுமொரு நோக்கமாகும். ஆனால் இன்று வரைக்கும் இந்த செய்தியை சீனா உறுதிப்படுத்தவில்லை. ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகள் அத்தனையும் அரசல்புரசல் தான். காரணம் சீன ஆட்சி என்பது இரும்புக்கோட்டையில் இருக்கும் முரட்டுச் சிங்கம்.

எவருக்கு அருகில் சென்று பார்க்கத் தைரியம் வரும்?.

இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் 19 ஆறுகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. செமமயுங்டங் பனிப்பாறைகளில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறு சீனா, பூடான்,இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 2900 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கிற்து. திபெத்தில் யார்லாஸ் சாங்க்போ என்று அழைக்கப்படுகின்றது. உலகத்திலேயே மிக உயரத்தில் இருந்து பாயும் ஆறுகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்த ஆறு பலவிதமான நிலப்பரப்புகளையெல்லாம் கடந்து காடுகளையும் கடந்து பயிர்விளையும் நிலத்தை அடைந்து செழிக்கச் செய்கின்றது.

பிரம்மபுத்திரா டெல்டாப் பகுதி 580000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். இதில் 50 சதவிகிதம் அளவு சீனாவிலும். 33.6 சதவிகிதம் இந்தியாவிலும் 6 சதவிகிதம் பங்களாதேஷ் பகுதியிலும் 7.8 சதவிகிதம் பூடானிலும் உள்ளது.

திபெத்திலிருந்து இந்த ஆறு 3500 மீட்டர் உயரத்திலிருந்து பாய்ந்து வருகின்றது. இந்த ஆறு ஓடி வரும் மலைகளுக்கு இடையே உள்ள இடைவெளி என்பது உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்த நதி இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாஸிகட் என்ற இடத்தில் முடிவடைகின்றது.

3500 மீட்டர் உயரத்தில் இருந்து வரும் இந்த ஆறு இறுதியாக 155 மீட்டர் உயரத்திற்கு வருகின்றது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆறு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் என்ற அளவில் சாய்நது பயணித்துக் கொண்டு வருகின்றது. கவுகாத்தி பகுதியில் இதன் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு 10.செ.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த நதியை தடுத்து நீரை தங்கள் நாட்டுக்கு திருப்பி விடத்தான் சீனா இப்போது முழுமூச்சாக செயலில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே நாம் பார்த்தோமே?

கங்கை காவேரி ஆற்றுகளை இணைத்தால் தேசிய பேரழிவு என்று நம்மவர்கள் சொன்னார்களே?

அப்படி என்றால் பிரம்மபுத்திரா நதியை அதன் போக்கில் இருந்து மாற்றினால் என்ன ஆகும்?

அதனைப் பற்றி பின்னால் பார்க்கலாம்.

கங்கை காவேரி இணைப்புத்திட்டத்தில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு சவால் நிறைந்த வேலை.

எது குறித்தும் அச்சப்படாத வீரனைப் போலத்தான் இந்த நதியின் பயணமும் வேகமும் இருக்கிறது. இந்த வீரனைத் தான் சீனா அணுக்கதிர் என்ற மாயவித்தையைக் கொண்டு தன் வசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நம்மவர்களுக்கு எந்த திட்டத்தில் கைவைத்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பவர்கள். ஆனால் சீனாவில் லஞ்சம் ஊழல் இருந்தபோதிலும் ஒவ்வொன்றிலும் தன் நாட்டு நலனை முன்னிறுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.


2000வது ஆண்டில் "சீனாவின் தானியப் பிரச்சினை" என்றதொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "எதிர்கால சீன விவசாயம் மற்றும் உணவு பற்றாக்குறை" குறித்த விபரங்களை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் பார்வையில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள திபெத்க்கு சாலை வசதிகளை உருவாக்கும் பொருட்டே வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மழுப்பலாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறது.

தென் சீனப்பகுதி 700 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. அங்கு பயிரிடும் நிலப்பகுதி மூன்றில் ஒரு பங்கு என்றும் ஐந்தில் நான்கு பகுதி நீர்வளம் உள்ளதாகவும் உள்ளது. ஆனால் வடக்குச் சீனப் பகுதியில் 550 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பயிரிடும் நிலப்பரப்பு மூன்றில் இரண்டு பங்கு என்றும், நீர்வளம் ஐந்தில் ஒரு பங்கு உள்ளதாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

உலக மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி எதிர்காலத்தில் சீனாவின் ஜனத்தொகை 141 கோடி என்று கணித்துள்ளார்கள். ஆனால் சீனா எடுத்துள்ள கணக்கு 160 கோடி மக்கள். இதன் அடிப்படையில் பயிர் செய்யப்பட வேண்டிய நிலத்தின் அளவையும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய சீனாவின் குறிக்கோள். ஆகவே சீனாவின் வட மேற்குப் பகுதியின் பல பகுதிகள் (கோபிப் பாலைவனம் உட்பட) பயிரிடப்படும் நிலமாக மாற்றப்பட வேண்டும்.

ஆனால் இந்த பகுதி துரதிஷ்டவசமாக சீனாவின் மொத்தப் பரப்பளவில் 45 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நீர்வளம் 7 சதவிகித அளவுக்கு தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே சீனா தனது நாட்டின் எதிர்கால நலனுக்காக பிரம்மபுத்திரா நதியை திசை திருப்புவதற்கான திட்டத்தை தொடங்கி ஆரம்ப கட்ட பணிகளை நடத்தி வருகின்றது. இங்கு அணை கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் இமயமலையின் பல பகுதிகளை குடைநது நீர் செல்ல பாதைகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக சீன அரசு தனியாக ஒரு அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது. இவர்களின் மேற்பார்வையில் இது நடந்தேறி வருகின்றது.

யார்லஸ் சாங்க்போ அணை கட்டப்பட்டு அதில் 26 மின் உற்பத்தி சாதனங்களை அமைத்தால், ஒரு மணி நேரத்திற்கு 40 மில்லியன் கிலோ வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும். யாங்சே என்னும் இடத்தில் உள்ள மூன்று திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். இதைத்தவிர பிரம்மபுத்திரா நதியை திசைதிருப்பி விடுவதன் மூலம் வட மேற்குப் பகுதியில் உள்ள வறண்ட நிலப் பகுதிகளுக்கு நீரை அளிக்க முடியும்.

சீனப்பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இது முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் திட்டப்படி பிரம்மபுத்ர நதியை நம்சா பர்வா என்ற இடத்திற்கு முன் திசைமாற்ற முடியும் என்றும் கூறுகின்றனர். இதற்காக இமயமலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடைந்து வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

3000 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால் மின் உற்பத்தியை மிகுந்த அளவில் ஏற்படுத்த முடியும் என்பதோடு ஆற்று நீர் பயணித்து வரும் 100 கிலோ மீட்டர் தொலைவை 15 கிலோ மீட்டர் தொலைவாகவும் குறைந்துள்ளது. உபரி நீரை 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு வழங்கவும் முடியும்.

இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து வழியெங்கும் நிலவி வரும் சுற்றுச் சூழல் மற்றும் அவற்றைப் செழிப்பாகும் முறை ஆகியவை வியக்கத்தக்க வகையில் உள்ளது. சீனாவின் திட்டத்தால் மொத்தமாக மாறிவிடும். மேலும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் பருவமழை இல்லாத போது பிரம்மபுத்திரா நதியில் இருந்து வரும் நீரே ஆதாரமாக இருக்கிறது. சீனாவின்

இந்த திசை திருப்பலால் இந்த பகுதியின் மொத்த வளமும் பாதிக்கப்படும்

ஆற்றின் கீழ் மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை சீனா கண்டு கொள்ளத்தயாராய் இல்லை. சர்வதேச அளவில் நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு குறித்து எவ்விதமான சட்டங்களும் இல்லாத காரணத்தால் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் அணையினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு 200 மில்லியன் மக்களுக்கும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் எதிர்காலத்தில் உருவாகும்.

ஆனால் இந்தியா எப்போதும் போல 2020 வல்லரசு இந்தியா என்ற கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் நாம் கனவு காண பிறந்தவர்கள். சீனா கனவுகளை செயலில் காட்ட பிறந்தவர்கள்

Sunday, December 18, 2011

நதி நீர் - கனவுத் திட்டமா?


இந்தியாவில் மனித வளம், இயற்கை வளம் என்று எல்லாமே உள்ளது. ஏன் நம் கையை வெளிநாட்டிடம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உலகம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

காரணம் இது கணினி யுகம். இப்போது ஒவ்வொரு வினாடியும் அதிகபட்ச நேரமாக மனித வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அதற்குள் எத்தனையோ நடந்து முடிந்து விடும் வாய்ப்புள்ள விஞ்ஞான உலகம் இது. இந்தியாவில் தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி முதல் தரமான நிறுவனங்கள் என்பது வரைக்கும் மேல் நாட்டில் உள்ள ஏதோ ஒருவரால் (அ) ஒரு நிறுவனத்தால் சான்றிதழ் வழங்க முடிந்தால் மட்டுமே இன்றைய சூழ்நிலையில் உங்களால் சர்வதேச சமூகத்தில் போட்டியிட முடியும்.

இதைத்தான் இந்தியாவில் உள்ள இப்போதைய ஆட்சியாளர்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். நம் வளத்தை பலத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உலகளவில் எத்தனையோ மாறுதல் உருவாகிவிட்டது. அத்தனை தொழில்நுட்பங்களும் நமக்கு வந்து சேர நாளாகும். தொழில் நுட்பத்தை கொண்டு வருவதைவிட தொழில்நுட்பத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களே இந்தியாவிற்குள் வந்து விட்டாலே போதுமானது தானே.

இதைத்தான் பொம்மை பிரதமர் என வர்ணிக்கப்படும் மன்மோகன் ஆட்சிக்கு வந்தது முதல் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு மேலும் தான் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பதவிக்கு சோனியா மகன் ராகுல் பொருத்தமானவர் என்ற சான்றிதழ் வேறு கொடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமர் பதவியென்பது அந்த அளவுக்கு மலிவானதாக இருக்கிறது.

மன்மோகன் சிங் சொன்ன எதிர்கால தலைவர் தமிழகத்திற்கு வந்த போது சொன்ன வார்த்தைகள் "தேசிய நதி இணைப்பு என்பது பேரழிவாகும்" என்பது.
ஆனால் இந்தியாவில் வீணாக கடலில் கடக்கும் நீர் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இதற்கு மேல் அவ்வப்போது உருவாக்கும் இயற்கை சீற்றங்களினால் பல கோடி சொத்துக்களுடன் மக்களும் அழிந்து போய்க் கொண்டிருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.


முண்டாசு கவிஞன் பாரதி " வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்" என்று விபரம் புரியாமல் எழுதி வைத்து விட்டு சென்று விட்டார் என்று நினைத்துக் கொள்கின்றார்களோ..?

இப்போதுள்ள நடைமுறையில் அது சாத்தியம் தானா?

இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு எல்லாமே அரசியல். அது மக்களுக்கு முக்கியமானதா? முக்கியமற்றதா என்பது கூட தேவையில்லாதது. எதைச் சொன்னால் உடனடி கவனம் பெறும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

முதலில் ராகுல் சொன்ன தேசிய பேரிழிவைப் பற்றி பார்க்கலாம்.

காவிரியையும் கங்கையையும் இணைத்து விட்டால் போதும் என்று முதன் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஆங்கிலேயரான சர் ஆர்தர் காட்டன். இந்த திட்டத்தை பிரிட்டன் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது செயல்படுத்த முயற்சித்தார். 

இவர் ஒரு பொறியியலாளர்.

இந்த திட்டத்தின் மூலம் நதியின் ஊடே போக்குவரத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். ஆனால் இதைவிட ரயில் போக்குவரத்து மூலம் மிக எளிது என்று மாற்றுத் திட்டத்தில் கவனம் செலுத்த இவரின் நதி போக்குவரத்து கனவு, தொடக்க நிலையிலேயே வற்றிவிட்டது. தொடக்கத்தில் பல இடங்களில் கால்வாய் தோண்டும் பணியும் கூட நடந்தது. காலப்போக்கில் அது துர்ந்து போனது தான் மிச்சம். 

இதைத்தான் அப்போது "கால்வாய் மாலை" என்று மக்கள் நக்கலாக அழைத்தார்கள்.

ஆனால் இவர் உருவாக்கிய இந்த திட்டத்திற்கு பிரச்சனை மலைவடிவத்தில் இருந்தது. அது தான் இந்தியாவிற்கு அரணாக இருக்கும் இமயமலை. இதுவொரு முக்கிய பிரச்சனை. இவ்வளவு பெரிய உயரத்தை தாண்டி மறுபக்கம் தண்ணீரை கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய 1400 அடி உயரம். இதன் மூலம் 50 000 கன அடி நீரை கொண்டு வர வேண்டும். இதற்காக தேவைப்படும் மின்சாரம் முதல் மற்ற திட்ட மதிப்பீடுகளைப் பற்றி பிறகு பேசுவோம்.

கங்கை காவிரி இணைப்புக்கு அசாம் மாநிலத்தில் 200 கிலோ மீட்டர் தூரம், மேற்கு வங்கத்தில் 50 கிலோ மீட்டர் தூரம், மத்திய பிரதேசத்தில் 1000 கிலோ மீட்டர் தூரம், மகாராஷ்டிரத்தில் 500 கிலோ மீடடர் தூரம், ஆந்திர பிரதேசத்தில் 750 கிலோ மீட்டர், கடைசியாக தமிழகத்தில் 550 கிலோ மீட்டர் என்று மொத்தமாக 3750 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய்கள் தோண்டப்பட வேண்டும். இதன் மூலம் கங்கை, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி நதிகளை ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்த முடியும்.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த நதி நீர் இணைப்பை போர்க்கால நடவடிக்கையாக கவனம் செலுத்தி அதன் திட்ட அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் வெளியிட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் இந்த நதிநீர் இணைப்பு பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை.

1999ல் மத்திய அரசாங்கத்தின் சார்பாக "நீர் ஆதாரங்கள் தேசிய ஓருங்கிணைப்பு வளர்ச்சித் திட்டத் தேசிய ஆணையம்" ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் கூட இந்த நதி நீர் இணைப்பு பற்றி ஒன்றும் கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்திற்கும் இந்த திட்டத்தில் கைவைத்தால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை நன்கு புரிந்தே வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதிலும் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளால் உருவாக்கப்பட்ட மாநில அரசாங்கம் இருக்கும் போது இந்த திட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்றி விட முடியுமா? அவரவர் அரசியல் கொள்கையின்படி வித்யாச கொள்கைகள்.

அவை அனைத்தும் அலங்கார வார்த்தைகளால் பூசி மெழுகப்பட்ட இனவாத கொள்கைகள்.

இன்று தேசிய கட்சியாக நம் கண்களுக்கு தெரிவது ஒன்று காங்கிரஸ். மற்றொன்று பாரதிய ஜனதா கட்சி. ஆனால் இவர்களின் கொள்கை ஓரே இந்தியா, ஒரே கொள்கை. ஆனால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நடைமுறை எதார்த்தம் எப்படி இருக்கிறது?

இவர்கள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்கையை ஏன் கடைபிடிக்கின்றார்கள்?

அது தான் அரசியல்.

இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி என்று ஒற்றை சாளரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நாம் அறிந்ததே. நமக்கு அருகே இருக்கும் கேரளாவில், காங்கிரஸின் கொள்கைகள் வேறு. அதே போல கர்நாடகாவில் வேறு கொள்கைகள். காரணம் அவரவர்கள் பிழைக்கின்ற வழியை பார்க்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் டெபாஸிட் கூட அந்தந்த மாநிலங்களில் கிடைக்காது அல்லவா?

ஆண்டுவிட்டு போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வினையை போட்டு விட்டு சென்றார்கள். இன்று நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளில் உள்ள குளறுபடிகள் என்பதை நாம் தனியாக பார்க்க வேண்டும். உதாரணமாக பீகாருக்கு தங்களுக்கு கங்கை நதி திட்டத்திலிருந்து நீர் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் உண்டு. இன்று வரையிலும் "இந்திய - வங்க" தேச ஒப்பந்தத்தை மேற்கு வங்காளம் ஆர்வம் செலுவத்தில்லை. காரணம் அவர்கள் கொல்கத்தா துறைமுக வளர்ச்சியில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வளர்க்க விரும்புகிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய சூழ்நிலையில் எந்த வட மாநிலங்களும் இந்தியாவின் தெற்கு பகுதிகளுக்கு கங்கை நீரை அனுப்ப ஆர்வம் காட்டுவதே இல்லை என்பதே நிதர்சனமாகும்.

"நீர் ஆதாரங்கள் ஒருங்கிணைப்பு வளர்ச்சித் திட்ட தேசிய ஆணையம்" திட்டமிடுதலின் படி இந்த நதி நீர் இணைப்புக்கு பத்தாவது ஐந்தாண்டு கால திட்டத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய். இதுவே பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிறைவேற்றும் பட்சத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பிற்காக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தொகை 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி.

புள்ளிவிபரங்களை படிக்கும் போதே மலைப்பாக இருக்கிறதா?

இந்தியாவில் உள்ள நதி அமைப்புகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். இந்திய துணைக்கண்டத்தின் வடக்கே உள்ள நதிகளை "இமயமலைப்பகுதி" என்றும் தெற்கே உள்ள பகுதிகளை " தீபகற்ப பகுதி " அல்லது " தென்னிந்திய பகுதி" என்றும் பிரிக்கிறார்கள்.

சரி, கங்கை காவேரி இணைப்பில் தான் இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

தென்னக நதிகள் இணைப்பு என்ன ஆயிற்று?

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா இன்று வரையிலும் தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உபரி நீரை கடலில் கலந்து போகுமே தவிர உங்களுக்கு தர மாட்டோம் என்று ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் இந்த நதிகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் இந்த மாநில அரசுகளை குறை சொல்வதை விட நமது அரசியல் சட்டத்தை இன்று வரையிலும் திருத்த மனமில்லாமல் வைத்திருக்கும் நம் தலைவர்களைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.


காரணம் மாநிலங்களில் ஓடும் நதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு, நதிநீர் ஒதுக்கீடு, நீர் உரிமைகள் முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பலவிதமான சட்டப் பிரச்சினகைள் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, நீர் என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட விவகாரமாக இருக்கிறது. எனவே அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் நீர் என்ற பொருளை மத்திய அல்லது பொதுப் பட்டியலில் கொண்டுவந்து அதன் பின்னர் நீர் வளத்தை ஒருங்கிணைத்து சிக்கனமாகப் பயன்படுத்த ஒரு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இப்படி செய்தால் மட்டுமே மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். ஆனால் நீதி மன்ற ஆணைகளையே துச்சமாக மதிப்பவர்களை எப்படி மாற்ற முடியும்? பெரும்பான்மை பலத்துடன் மத்திய அரசாங்கத்தில் வந்தமரும் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. இதற்கு மேலும் இப்போது சுயமாக செயல்பட முடியாத நிலையில் இருக்கும் மன்மோகன்சிங் தலைமையில் இருக்கும் மத்திய அரசாங்கத்தில் அரசியலமைப்பு மாறுதல் என்பது நாம் நினைத்துப் பார்க்கக்கூடியதா?

சரி,

கங்கை காவேரி இணைப்புக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. இந்த திட்டத்திற்கான சாத்தியப்படாத நிதி ஆதாரம் முதல் சுற்றுப்புறம் மாசு வரைக்கும் நம் முன்னே ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் இதே போலவே லட்சம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு நம் அருகே இருக்கும் பங்காளி ஒருவர் எப்படி வேகமாக நம்மைக் காட்டிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறாரே?


நாம் பத்து வருடங்களில் கட்டக்கூடிய பாலத்தினை பத்து மாதங்களில் முடித்து வெள்ளோட்டம் விட்டு வெற்றிக் கொடி நாட்டி விடுகின்றாரே? உலகமெங்கும் அவரின் விலைமலிவு பொருட்கள் தானே சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நம்மைப் போலவே ஜனத்தொகையும் அதிகம் தானே? அவர்களின் ஜனத்தொகையும் எதிர்காலத்தில் உணவுக்காக உலக நாடுகளிடம் தட்டு ஏந்தப் போகின்றதா?

வாய்ப்புகள் குறைவு. நம்ப முடியவில்லையா?

நமக்கு அரணாக மலைப்பை தந்து கொண்டிருக்கின்ற இந்த இமயமலையை அணுக்கதிர் மூலம் பிளந்து தனக்குத் தேவையான தண்ணீரை கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் தான் திருவாளர் சீனா?