Saturday, April 30, 2011

கலவர பூமியில் மலர்ந்தவர்கள்

ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

நாம் இராமநாதபுர மாவட்ட வரலாற்று தொடரில் மேலே சொன்னது வலையை கழட்டி விட வாங்க என்ற தொடரின் நிறைவுப்பகுதி இது. 

இந்த தொடரின் ஆரம்ப பகுதிகளை படிக்க விரும்புவர்கள் இங்கே இருந்து பயணிக்கவும்.  

1860 ஆம் ஆண்டு ( இதில் உள்ள படங்களும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிய தொகுப்பு)


ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது. சமூகத்தில் தனியான மரியாதை முதல் தனித்துவம் வரைக்குமாய் அவரைப் பற்றிய மொத்த கருத்துக்களும் மாற்ற காரணமாக இருந்து விடுகின்றது. நேற்று அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட இப்போது அவனால் நமக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே பார்க்கக்கூடிய சமூகத்தில் இது பெரிதான ஆச்சரியமல்ல.

தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு நாட்டின் சரித்திரமே அந்த நாடு பெற்றுள்ள பொருளாதார வளத்தை வைத்து தான் மாற்றம் பெருகின்றது. நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கையென்பது என்பது முற்றிலும் மாற உதவியதும் இந்த பொருளாதாரமே. இவர்கள் பெற்ற பொருளாதாரமே பலவகையிலும் உயர உதவியாய் இருந்தது.  உயரும் போது உருவான தடைகளையும் தகர்த்தெறிய காரணமாகவும் இருந்தது.


இராமநாதபுர மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடார்கள் தங்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை  என்பது மற்ற இனமக்களுக்கு உறுத்தலாக இருந்ததை விட இவர்களை சமூகத்தில் கீழ்நிலையில் வைத்துப் பார்த்த ஆதிக்க இன மக்களுக்கு பெரும் சவாலாக இருந்ததோடு ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. இதில் முக்கியமாக பிராமணர்கள், வேளாளர்கள் கடைசியாக மறவர்கள். நாம் முன்னேற முடியவில்லை என்பதை விட முன்னேறியவர்களை எப்படி தடுப்பது?  இது தானே இன்றுவரைக்கும் நடந்து வருகின்ற நிகழ்வாக இருக்கிறது.  

இன்றைய தமிழ்நாடு அன்று வெள்ளையர்களின் ஆளுமையில் இருந்த போதிலும் அவர்களுக்கு விசுவாசமான பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள், குறுநில மன்னர்கள் என்று ஒரு அடிமை பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சி புரிய அவர்களுக்கு பெரிதான சுமைகள் இல்லை.  ஒவ்வொரு கலவரங்களும் கணக்கில்லா பிரச்சனைகள் உருவாக இருந்தாலும் கடைசியில் வெள்ளையர்கள் எடுக்கும் முடிவென்பது யாருக்குச் சாதமாக இருக்கும் என்பதை இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பல கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.

அருப்புக்கோட்டை,பாலையம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக காரணமில்லாமல் கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.  1874 ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார் வழக்கொன்றை தொடுத்தார்.  நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச் சென்ற போது என்னை பலவந்தப்படுத்தி கோவிலில் இருந்து வெளியே தள்ளினார்கள் என்று கோவில் ஊழியர்கள் மேல் வழக்கு தொடுத்தார்.  இதுவொரு தொடக்கமே. ஆனால் இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பல வழக்குக்ள வெளியே வர ஆரம்பித்தது.

1878 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முன்சீப் பதவியில் இருந்தவர் புதிய சட்டமொன்றை இயற்றினார்.  நாடார்கள் ஆலயங்களின் நுழையக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது என்றார்.  ஆனால் நாடார்கள் சாமி ஊர்வத்தை நடத்திக் கொள்ளலாம் என்று போனால் போகிறதென்று அனுமதி வழங்க இது அடுத்த அக்கப் போர்களை உருவாக்கத் தொடங்கியது. சாத்தூர் (1885) பகுதியில் இது போன்ற ஊர்வலத்தில் கலவரம் உருவாகத் தொடங்கியது. இதற்கென்று தனியாக ஒரு காரணத்தை சுட்டிக்காட்டினார்கள். நாடார்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் நடக்க வேண்டும்.  மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரக்கூடாது என்றனர். இவற்றைப் பார்த்த எட்டையபுரம் ஜமீன்தார் கழுகுமலை (1895) பகுதியில் தேரடித் தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவை முன்னமே வாங்கி வைத்துக் கொண்டார்.

நாடார் இனமக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து மேலே வந்துவிட எப்படி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே வேளார்களும், மறவர்களும் சேர்ந்து நாடார்களுக்குண்டான எந்த உரிமைகளையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.  எட்டயபுரம் ஜமீன்தாரின் அக்கிரமங்களை பொறுக்கமுடியாத நாடார் இனமக்கள் இந்த பகுதியில் கிறிஸ்துமதத்தை (கத்தோலிக்கம்) தழுவியதோடு வழிபாடு நடத்துவதற்காக என்று தேரடி தெருவில் ஒரு கடையை வாங்கினர். 

காரணம் எட்டபுரம் ஜமீன்தார் மூலம் நடத்தப்படும் தேரோட்ட நிகழ்ச்சிகள் கடைத் தெருவின் வழியே தான் வரும் கிறிஸ்துவத்திற்கு மாறிய நாடார் இன மக்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய இந்த கடைக்கு முன்னால் பந்தல் போட்டு விட்டால் வரும் தேர் முன்னேறிச் செல்ல முடியாது.  இது அடுத்த கலவரத்திற்கு அச்சாரமாய் இருக்க கல்வீச்சு முதல் தொடங்கி பெரிய கலவரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.  உருவான கலவரம் (1899) நாடார்களின் மறக்க முடியாத ஒரு பெரிய நிகழ்வாக முடிந்து விட்டது. சிவகாசியில் முதல் முறையாக களத்தில் நின்று கொண்டு மறவர்களும் நாடார்களும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.

இது போன்ற கலவரங்கள் ஏன் உருவானது? 1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது.  ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போல பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர். 

இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளார்களின் கண்ணில் கோபம் கொப்பளிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க கிடைத்த வாய்ப்பு சிவகாசி கலவரம். ஊரடங்கு உத்திரவு போடும் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த கலவரங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் மறவர் இன மக்கள். மற்றொரு காரணம் நாடார்கள் தங்களை பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதை விட ஏறக்குறைய இன போதை வந்தவர்களைப் போலவே உச்சக்கட்ட நடவடிக்கைளையும் செய்யத் தொடங்கினர். 

சிவகாசி என்பது நாடார்களின் பூர்விக நகரமல்ல. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த நகரின் மொத்த ஜனத்தொகையே 12000 பேர்கள் தான்.  ஆனால் இதே பகுதிகளில் தனியிடங்களில் வசித்த மறவர்களின் எண்ணிக்கை வெறும் 500 பேர்கள் மட்டுமே.  பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்த மறவர்களுக்கு வேறென்ன செய்ய முடியும்? இவர்களை இதுபோன்ற நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேளாளர் இனமக்களே. இவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் பிராமணர்கள். திட்டம் வகுப்பது ஒருவர். இதை கொண்டு செலுத்துவது மற்றொரு. களத்தில் இறங்குபவர்கள் மறவர்கள். நாடார்களின் பொருளாதார வாழ்க்கையைப் பார்த்து வேளார்கள் எந்த அளவிற்கு எரிச்சல் பட்டார்களோ அந்தஅளவிற்கு பிராமணர்களுக்கும் உள்ளே புகைச்சல் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.

காரணம் நாடார்களின் பொருளாதார வாழ்க்கை பிராமணர்களுக்கு பல சமயங்களில் உதவியாய் இருந்ததும் உண்மை.  நாடார்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரம் குறிப்பது முதல் பல விசயங்களுக்கு இந்த பிராமணர்களை பயன்படுத்திக் கொண்டனர்.  இதற்கு மேலாக தங்கள் நிகழ்ச்சிகளில் பல்லாக்கு தூக்குவதற்கு மறவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.  

இதே மற்வர்களைத்தான் வேளாளர்கள் அடிதடிக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.  தொடர்ந்து வந்த ஒவ்வொரு கலவரத்தின் மூலம் நாடார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு இனமும் இதே நாடார்களிடம் பலவிதங்களிலும் கடன்பட்டிருப்பது புரிய ஆரம்பித்தது. 

சமூகத்தின் பொருளாதார வாழ்வில் தங்களை விட நாடார்கள் எல்லா நிலையிலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் வேளார்களால் ஒரு அளவிற்கு மேல் நாடார்களை பணிய வைக்கமுடியாமல் தோற்க தோற்க மனதில் வெஞ்சினம் உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு கலவரமும் உருவாவதும் அதுவே மேலும் மேலும் வளர்வதற்கும் இந்த கோவில்களே முக்கிய காரணமாக இருந்தது.  

சிவகாசியில் நடுநாயமாக இருந்த சிவன் கோவிலில் நாடார்கள் நுழைய அனுமதியில்லை.  இதற்கென்று நாடார்கள் உருவாக்கியிருந்த பத்ரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மூலமே தங்களை நிலைநாட்டிக் கொள்வதும், தங்களின் கூட்டங்களை இதே கோவிலில் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நாடார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  

ஆலயங்களில் நுழைய எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று அடுத்தடுத்த ஒவ்வொன்றையும் உருவாக்கிக காட்ட நாடார்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீராத பகையை, கலவரத்தை உருவாக்கத் தொடங்கியது.  கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்திரவு போடும் அளவிற்கு பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்தது. இதுவே நாடார்களை பழிதீர்க்க, அடக்கி வைக்க சரியான தருணமென்று ஒரு பெரும் கூட்டணி உருவானது.  இந்த கூட்டணியில் முக்கியமாக இருந்தவர்கள் மறவர் குல ஜமீன்தாரர்கள், பிராமணர்கள், வேளார்கள் தலைமை வகித்தனர்.  

இதற்காகவே இவர்கள் மேற்கு இராமநாதபுரம், வடக்கு திருநெல்வேலி, தெற்கு மதுரைப் பகுதிகளில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த மறவர்கள், கள்ளர்கள், பள்ளர்களை கொண்டு வந்து இறக்கினர். சிவகாசி மற்றும் சுற்றிலும் உள்ள நாடார் வீடுகளை சூறையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதிகளாக முடித்து சிவகாசிக்குள் நுழைந்த போது வேளார்களும் மற்ற சமூகத்தினர்களும் சொல்லிவைத்தாற் போல ஊரில் இருந்து வெளியேறி விட நாடார் சமூகத்தினர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

Thursday, April 28, 2011

கைப்புள்ள பான் கீ மூன் கதறடிக்கும் ராஜபக்ஷே

வருகின்ற 2011 மே மாதம் விடுதலைபுலிகளுடன் இலங்கை ராணுவத்தினர் போரிட்டு வென்ற இரண்டாவது ஆண்டு முடிவுக்கு வரப்போகின்றது.  மூன்றாவது படியில் ஏறும் போது பாதிக்கப்பட ஈழத்தமிழர்களுக்கு ஒரு முன்னேற்றப் படி என்று இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பலருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஆனால் இதைப் போன்ற பல படங்கள் கடந்த இரண்டு வருடத்தில் வந்து போய் இருக்கின்றது.  இப்போது வந்துள்ள இந்த அறிக்கை கோப்பு என்பது சற்று மேம்பட்ட கோர்வையான படம்.  வேறொன்றும் புதிதில்லை. இதைக் கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாதத்தை நிறுத்திவிட முடியுமா? 

இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று விடுதலைப்புலிகளை குதற காத்துக் கொண்டிருந்தது சிங்கள இனவாதம் மட்டுமல்ல. காத்திருந்த இந்தியாவும் கூட.

ஓராயிரம் காரணங்கள்?. 

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள். பழைய கடனுக்கு பழி தீர்க்கப்பட வேண்டியவர்கள். இந்தியாவிற்கு எப்போதும் இவர்களால் ஆபத்து. எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் கன்னிவெடி பூமியாக மாற்றி விடுவார்கள். 

ஆனால் அழிக்கப்பட வேண்டும் என்று நினைத்தவர்களால் அப்பாவிகளை காப்பாற்ற முடியவில்லை. அதற்கும் இன்னும் காரணங்களை தேடித் தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பாவிகளை விடுதலைப்புலிகளை கேடயமாக பயன்படுத்தியதால் தான் இந்த பேரழிவு என்று அவரவர் புத்திசாலி தனத்தை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். 

காரணங்கள் எத்தனையோ? 

மொத்தத்தில் போரின் முடிவில் வெந்து தணிந்தது வன்னி. ஆனால் அப்பாவிகளுக்கு அவலவாழ்க்கை பரிசாக தந்தவர்களுக்கு இன்னமும் கூட நல்ல வாழ்க்கை வழங்க மனமில்லை. அதைக் கேட்க கூட இங்குள்ள புத்திசாலிகளுக்கு அறிவில்லை. மரத்துப் போன மனங்களில் ஈரமென்பது எப்போதும் சுரக்காது. எதிர்பார்ப்பதும் நியாமில்லை தானே?

இந்தியாவால் போருக்குப் பின்னால் ஈழத்தில் கொண்டு போய் கொட்டப்பட்ட கோடிகள் கூட தெருக்கோடிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. மொத்ததில் இப்போது பிரபாகரன் இல்லை. எங்கள் ஆர்வமும் அக்கறையும் முடிவுக்கு வந்து விட்டது என்ற இந்தியாவின் தான்தோன்றித்தனம். 

போரின் போது அமைதியாக இருந்த ஐ.நா இப்போது தனது அதிசிய கண்டுபிடிப்பான இலங்கையின் நடத்தப்பட்ட போர்க்குற்றத்தை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. கிசுகிசு பாணியில் அறைகுறையாக பரவி இன்னும் சில நாட்களில் முழுமையாக வந்துவிடுமாம். நல்லவேளை வீட்டோ அதிகாரம் படைத்த ரஷ்யா, சீனாவை மீறி தன்னுடைய பதவியின் இறுதிக் காலத்தில் ஏனிந்த முடிவுக்கு பான் கீ மூன் தள்ளப்பட்டு இருக்கிறார் என்பதற்கு பின்னால் உள்ள விசயங்கள் என்பது சர்வதேச அரசியல் போக்கு தெரிந்தவர்களுக்கு இது ச்சும்மா என்பது புரிய வைக்கும்.  

காரணம் குற்றவாளியை விட குற்றவாளிக்கு முக்கிய கூட்டாளியாக இருந்த இந்தியாவைக் கொண்டு எங்கே நிறுத்தமுடியம்.  நிறுத்தத்தான் முடியுமா? 

பான் கீ மூன் இந்த பதவிக்கு வருவதற்கு சீன உளவுத்துறை எந்த அளவிற்கு உதவியதோ அதற்கு கைமாறாக பான் கீ மூன் விமானத்தில் சென்று ஈழ அவலத்தை பார்த்து முடித்து விட்டு வந்து விட்டார்.  இப்போதும் கூட ஈழத்திற்குள் நுழையாமல், பாதித்த மக்களையும் கேட்க முடியாமல் கிடைத்த தகவல்களை வைத்தே அறிக்கையும் தயார் செய்தாகி விட்டது.  எவ்வளவு அடித்தாலும் தாங்கும் கைப்புள்ள வடிவேலுக்கும் நம்ம பான் கீ மூனுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

ஐ.நா. சபை இலங்கையிடம் பவ்யமாக " நீங்களே இது குறித்து முடிவு எடுத்து எங்களிடம் சொல்லுங்க" என்று கேட்ட போதும் கூட ராஜபக்ஷே சகோதரர்கள் மனமிறங்கவில்லை. "எவனாவது விசாரனைன்னு உள்ளே வந்தா கீச்சு புடுவேன் கீசி"என்று சொல்லாத குறை தான். சும்மா சொல்லக்கூடாது.  ராஜபக்ஷே பான் கீ மூன் கண்ணில் மட்டுமல்ல கண்ட இடங்களிலும் கைவிட்டு கைமா பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஈழத்திற்குள் ஐ. நா. சபைக்கு எதிராக அணைத்து தரப்பினரின் கையெழுத்து வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.. மற்றொரு புறம் உள்ளுர் அரசியல் தாதாக்களின் அநாகரிக நடவடிக்கைகள். மாமன்னர் ராஜபக்ஷே சிங்களர்களுக்கு மட்டுமல்ல தலைவர். உலகில் உள்ள ஒவ்வொரு எதிர்கால அரசியல்வாதிகளுக்குமே குருவானவர். எதை? எப்போது? எப்படி? எவரை வைத்து? செய்து காட்ட வேண்டும் என்று நடத்திக் காட்டிய கில்லாடி. இவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஐ.நா. வரலாற்று நிகழ்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய பட்டயம்.  

ஈழ அரசியல் இனி எப்போதும் தன்னைச்சுற்றியே சுழல வேண்டும் என்று நம்பியிருக்கும் ராஜபக்ஷே காட்டில் இப்போது அடைமழை தான். 

விடுதலைப்புலிகளை அழித்த போது புகழ்.  நான் தான் காரணம் என்று பங்கு கேட்டு வந்தவரை அடக்கி ஒடுக்கி உள்ளே தள்ளிய போதும் புகழ்.  ஏன் இவர்களை அழித்தார்? என்பதை விவரிக்கும் போது புகழ் என்று நகர்ந்து இன்று ஐ.நா. சபையின் செயல்பாடுகளை எதிர்க்கும் போது கூட மாமன்னர் ராஜபக்ஷேவுக்கு புகழாகத்தான் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஐ.நா சபை விடுவதாய் இல்லை. இலங்கையின் ஒத்துழைப்பு இல்லாமலேயே தாங்கள் கண்டு பிடித்த போர்க்குற்ற ஆதாரங்களை தொகுத்து கொடுத்துள்ளார்கள். சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்த படங்களையும் சேர்த்து எதிர்கால தமிழின மககளுக்கு போய்ச் சேரக்கூடிய கோப்பை பரிசாக தந்துள்ளது. 

அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிடக்கூடாது என்று சொல்லும் நல்லவர்கள் தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணம் இது.  இனி வேறென்ன வேண்டும்?

வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லாத ஈழத்தில் இப்போது தமிழர்களின் வாழ்க்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள உயிர் பிழைத்த மீதமுள்ள தமிழர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டாகிவிட்டது. கன்னிவெடி பூமி இப்போது தமிழர்களின் காதல் பூமியாகி விட்டது. சிங்கள இனவாதம் போய் தமிழர்களின் வாழ்க்கையில் சிரிப்பும் கும்மாளமாக மாறிவிட்டது. இப்போதுள்ள சிங்கள அரசியல் மூலம் அங்கு வாழும் தமிழர்களுக்கு சிக்கலில்லாத வாழ்க்கையை அறிமுகபடுத்தியாகி விட்டது. இனியேனும் சொல்லுங்கள் தமிழர்களே? 

இனி ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கென்று வேறென்ன வேண்டும்? 

இம் என்றால் சிறைவாசம்?  ஏன் என்றால் நரகலோகம்.  சிங்கள பத்திரிக்கையாளர்களுக்கே டவுசர் கழடும் போது தமிழர்கள் கட்டியிருக்கும் கோவணம் என்ன ஆகும்?  தெரிந்தவர்கள் தமிழர்கள். அமைதியாய் இருந்து விடுவ்து உத்தமம்.  

தமிழர்கள் எப்போதும் அடிமையாய் வாழ்ந்துவிடுவது மொத்ததிலும் சிறப்பு.

ஆனால் நடந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த கோமகன்கள் கொண்டாடிய வெற்றி விருந்தில் குடித்த மதுபானம் நிச்சயம் கசந்திருக்க வாய்ப்பு இருந்துருக்காது?. போரை நடத்திய ராஜபக்ஷேவுக்கு உயிர்பயம். இவருக்கு மட்டுமல்ல. இவருக்கு முன்னால் வந்த அத்தனை சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இதே தான். விடுதலைப்புலிகளை அழிக்காத பட்சத்தில் அதன் எதிர்விளைவுகளை ராஜபக்ஷே சொன்ன மாதிரி ஆறடி பெட்டிக்குள் அவரை அடைக்கலப்படுத்தியிருக்ககூடும். 

ஆனால் இன்று வரையிலும் எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் இங்கிருப்பவர்களை பார்க்கும் போது ராஜபக்ஷே பரவாயில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

போரினால் ஓரே சமயத்தில் பிணமாய் மாறிப் போனவர்களுக்கு அடுத்த பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனால் உயிரோடு இருக்கும் நடைபிணங்களை வைத்து நம்மவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது இவர்களிடம் மனிதர்களுக்குரிய பகுத்தறிவும், மனசாட்சியும் இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.  

மனிதர்களில் இத்தனை நிறங்களா?

கலைஞர் தனது மகள் கனிமொழிக்காக கூட்டப்பட்ட உயர்நிலை கூட்டத்தில் போனால் போகிறதென்று ஈழத்திற்கென்று ஒரு தீர்மானத்தையும் சேர்த்து நிறைவேற்றியுள்ளார். 

"தனி ஈழம் தான் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதை நான் சொல்லவில்லை.  தந்தை செல்வா சொன்னது" என்று அசராமல் தன் கேள்வி பதில் பாணியில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். பாவம் ராசா. இது போன்ற கலைஞரின்  நிலைப்பாடுகளை கண்டு கொள்ள அவஸ்யமில்லாமல் நிம்மதியாக உள்ளேயிருந்து கொண்டு கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி"யை படித்துக் கொண்டிருக்கக்கூடும்.

"இந்தியா இனியும் மவுனம் சாதிக்கக் கூடாது" என்று ஜெயலலிதா சொன்னதோடு மற்றொரு அன்புப் பரிசையும் கொடுத்துள்ளார். "இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்" என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

அய்யா கீ.வீரமணி அடுத்த பெரிய கொய்யாவை கொடுத்துள்ளார். 

"இனி ஈழப் போராட்டங்களை முன்னெடுத்து போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவை பன்னாட்டு நீதி மன்றத்தில் நிறுத்தாமல் விடப்போவதில்லை" என்று சூளுரைத்துள்ளார். இதற்குப் பின்னால் ஸ்பெக்ட்ரம் என்ற பூதம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுவோம். காரணம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதிது புதிதாக செய்திகள் கொடுத்தால் தான் ஒன்றை மறந்து விட்டு அடுத்த விசயத்திற்கு வருவார்கள். அடுத்து மருத்துவர் ராமதாஸ் வெகுண்டு எழுந்து விட்டார். அவரின் செலக்ட்டிவ் அம்னீசியாவை அவர் மகன் வெகு விரைவில் குணப்படுத்தக்கூடும்.   திருமா ஒருவேளை அடுத்து ஈழம் குறித்து தான் எழுதப் போகும் பத்திரிக்கை தொடருக்காகவோ அல்லது நடித்து பயமுறுத்தப் போகும் திரைப்படத்திற்க்கான முக்கிய வேலையில் இருக்கக்கூடும். 

இரண்டு வருடமாக மறந்துபோன் இந்த தலைகளுக்கு இப்போது ஒரு வாய்ப்பு.
மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் இப்போது அதிகமாக முணுமுணுக்கும் வார்த்தை போர்க்குற்றவாளி ராஜபக்ஷே.

அன்றாடம் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற ஆயிரத்தெட்டு அக்கப் போர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில் எவ்ர் இந்த ஈழப் போரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்?  கொஞ்சம் விவரமாக பேசினாலே பின்னங்கால் பிடறி தெரிந்து ஓடும் தமிழர்களுக்கு இந்த அட்டைக்கத்தி வீரர்கள் இன்னும் சில நாட்களுக்கு செய்திகளில் நிரம்பி வழியப் போகிறார்கள். 

தினந்தோறும் இவர்களின் பேச்சு குறிப்பிட்ட செய்திதாள்களில் ஏதோவொரு மூலையில் துணுக்கு செய்திகளாக வந்து கொண்டிருக்கும். லஞ்சம், ஊழலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது என்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த பிசாசுகளால் கொஞ்சம் கொஞ்சமாக பாடையில் போய்க் கொண்டிருக்கும் இந்த தமிழ்நாட்டு தமிழர்களில் எத்தனை பேர்களுக்கு பன்னாட்டு நீதிமன்றத்தை தெரியப் போகின்றது? போங்கடா பன்னாடைகளா? என்று நகர்ந்து போய் அடுத்த இலவச அறிவிப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

ஆனால் துண்டு துணுக்கு கூட இல்லாமல் முழுமையாக எரிக்கப்படாமலும், அறைகுறை உயிரோடு அள்ளிக் கொண்டு சேர்த்த உடல்களும், எரியாமலும், புதைக்க முடியாமலும் கொத்து கொத்தாக அள்ளிக் கொண்டு போய் தள்ளிய எண்ணிக்கையில் அடங்காத இறந்த அந்த ஈழ மக்களின் ஆத்மாக்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மன்னித்து விடுமென்று நாம் நம்புவோம். 

நம்பிக்கை தானே வாழ்க்கை.


இந்திய இறையாண்மைக்கு கட்டுபட்டவன் ரசித்த பேரூந்து நிகழ்வு.  நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி.


மன்மோகன் சிங் என்பவர் யார்?

அ) பொருளாதார நிபுணர்

ஆ) இந்தியப்பிரதமர்

இ) சோனியா காந்தியின் அடிமை

ஈ) காவலாளியா(சோளக்கொல்லை பொம்மையா) இருந்துக்கிட்டு திருட்டுக்கு நான் பொறுப்பல்ல என்று தப்பித்துக்கொள்ளும் ஆசாமி

உ) அவர் நல்லமனுசன், பதவிக்காலம் முழுக்க மூக்கபிடிச்சுக்கிட்டு அதுமேலயே உக்காந்திருப்பவர்.

ஊ) அமெரிக்காவின் கூலி ஆள்

எ) இலங்கைக்கு எடுபிடி வேலை செய்ய சோனியாவால் நியமிக்கப்பட்ட அல்லக்கை

ஏ) தான் யார் என்பதையே அடிக்கடி சோனியாவிடம் கேட்டு ஞாபகம் வைத்துக்கொள்ளும் அப்பிராணி.

ஐ) மேலே உள்ள அனைத்தும்

Sunday, April 24, 2011

மெல்லச் சுழலுது காலம் - (தமிழ்மணம் இரா.செல்வராசு) புத்தக விமர்சனம்

எப்போது நாமும் இந்த சமூகத்தில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று தோன்றக்கூடும்? 

நல்ல மனிதர் என்ற வார்த்தையில் அவரவருக்கு உண்டான புரிதல்களை இட்டு நிரப்பிக் கொள்ளலாம். பெற்றோர்க்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டுகாரர்களுக்கு, பணிபுரியும் அலுவலகத்தில் என்று பல பாத்திரங்களில் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டாலும் நமக்கு பூரண திருப்தி வந்து விடுமா? என்னளவில் எனக்குத் தெரிந்தவரையில் என் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்பவர்களால் அதை எழுத்தாக கொண்டு வரமுடியுமா?  

முடியும் என்று சொல்லி சாதித்து உள்ளார் இரா,செல்வராசு.


ஒரு முறை செல்வராசு எழுதியுள்ள மெல்லச் சுழலுது காலம் புத்தகத்தை படித்துப் பாருங்களேன். இந்த புத்தகம் வெளிவந்த போது செல்வநாயகி ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தார். பதிவுலகில் கொஞ்சமாக எழுதும் செல்வநாயகி முன்னுரையில் ஒரு கதக்களி ஆட்டத்தையே ஆடிக்காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தான் செல்வநாயகி வாழ்வின் மொழியும் கூட.

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ரசித்து வாழவேண்டியதன் அவஸ்யத்தை அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள் என்ற இந்த புத்தகம் உங்களுக்கு உணர்த்தக்கூடும். இவரின் வலைதளத்தை விரும்பி படித்தவன் என்ற முறையில் இந்த புத்தகத்தை தேடி, துரத்தியும் சிக்காத இந்த புத்தகம் எனக்கு நான் வாங்கிய தமிழ்மண விருதின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. 

ஆத்தாவும் தொலைபேசியும் என்று முதல் தலைப்பில் தொடங்கி 51 ஆவது தலைப்பாக வசந்தம் என்பதோடு முடித்துள்ளார்.  

வாசித்து முடிக்கும் போது நமக்குள்ளும் நாம் வாழ்ந்த வசந்த நினைவுகள் நமக்குள் சுற்றி சுழலத்தான் செய்கின்றது. இவர் வாழ்ந்த ஊர் ஈரோடு அருகே என்ற போதிலும் கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம மனிதர்களின் வாழ்க்கை என்பதும் ஒரே மாதிரி தானே? 

இவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா வாழ்க்கையை விஸ்தாரமாக விவரிக்காமல் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களைத் தான் எழுத்தின் மூலம் படமாக காட்டுகிறார். ஆசிரியர் தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தையும் வாசிக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. குழந்தை தனது மரணத்தைப் பற்றி இயல்பாக உரையாட முடிகின்றது. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்று வரும் போது உண்டான பிரிவுகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமும், மகள், நானும் உங்களுடன் மடியில் உட்கார்ந்து கொண்டு வந்தால் டிக்கெட் பிரச்சனையில்லை தானே? என்று திருப்பி கேட்டு திக்குமுக்காட வைப்பதும் என்று அங்கங்கே சின்னச் சினன சிருங்கார சிதறல்கள். கட்டுப்படுத்தாத சுதந்திர எல்லைகளை இவர் தனது குழந்தைகளுடன் உரையாடும் உரையாடல்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் தொடர்ச்சி இல்லாவிட்டாலும் கூட இவர் கடந்து வந்த பாதையை, இளமைப் பருவ தாக்கத்தை, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து திரும்பி செல்லும் போது, என்று ஒவ்வொரு நிகழ்வுகளில் உள்ள விசயங்களை வியப்புக்குறிகளோடு நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறார். மொத்தத்தில் சுயசரிதம் என்பது போலில்லாமல், சொறிய கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளாமல் வயலும் வாழ்க்கையும் போல ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் கொஞ்சம் கவிதை, சிறிது சுவராஸ்யம், மேலான நகைச்சுவை என்று கலந்து கட்டி ஒவ்வொரு கட்டுரையும் பொங்கல் சோறாக இருககிறது. . 

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள விசயங்களை நம்மால் பல இடங்களில் பொருத்திக் கொள்ள முடிகின்றது. நான் வெளிநாட்டு வாழ்க்கையை பார்த்தவன் என்ற முறையிலும் வெளியுலகமே தெரியாத கிராமத்து மனிதர்களின் அப்பாவிகளுடன் பழகிக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இரண்டு எதிர் துருவங்களையும் இயல்பாக ஒரே அச்சில் இவர் எழுத்தின் மூலம் எளிதாக பார்க்க முடிகின்றது. இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சுவையாய் ஆசிரியர் ரசித்து எழுதிய வாசகங்கள் வாசிப்பவனுக்கு தன்னிலை மறக்கச் செய்யும். அவரவர் வாழும் வாழ்க்கையை வாசிப்பவர்களுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. 

சமகாலத்தில் ஆங்கில வார்த்தை கலக்காமல் எழுதுவது ஒரு சவாலாக கருதுபவர்கள், இவரின் பாசாங்கு இல்லாத மொழிநடையை வாசிக்கும் போது  ஆச்சரியப்படக்கூடும். ஒவ்வொரு கட்டுரைகளும் கிறங்கடிக்கும்.துள்ளல் நடையில் அமைந்துள்ளது மெலிதான நகைச்சுவை என்று எல்லா நிலையிலும் அனுபவமிக்க முழு நேர எழுத்தாளர் போலவே நகர்த்தியுள்ளார். ஆனால் அறிமுகத்தில் அவையடக்கமாய் இவர் கூறுவதை நம்ப முடியவில்லை. 

ஒரு தனி மனிதரின் டைரிக்குறிப்புகளை உரிமையோடு அனுமதியோடு படிக்கும் மகிழ்ச்சியை இந்த புத்தகம் தருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளாக செல்வராசு எழுதியுள்ள வலையில் எழுதிய அனுபவ பகிர்வுகள். இவரின் எழுத்தின் பிரதிபலிப்பு உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். இதன் மூலம் எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் அதிக அக்கறை காட்டுபவர் என்றால் அவஸ்யம் இவர் கொடுத்துள்ள பரிந்துரைகளை முரடாய் மிரட்டாதே என்ற தலைப்பில் உள்ள விசயங்களை படித்துப் பாருங்கள்.

கிராமத்து கோவில் திருவிழாக்களின் முஸ்தீபுகள், குழந்தைகளை வளர்க்க முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உன்னை நீ நம்பு என்ற ஆதார வாக்கியம், கவிதை துணை கொண்டு எழுத்தில் வடித்த வறண்ட குளத்து வாத்துக்கள், உறங்கா நிலவு என்று ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய நடையில் படைத்துள்ளார். தன் எழுத்தில் எத்தனை விதமாக எழுதிப் பார்க்கமுடியுமோ அத்தனை விதமாகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தான் வாழ்ந்த மணணின் மணத்தை, கிராமத்தை, பெற்றோரை, அவர்களின் சிந்தனைகளை சரம் போல் கோர்த்து மாலையாக மாற்றியுள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. இவர் அம்மா வீட்டு குடிசையில் சொருகி வைத்த கடிதம் முதல் ரயில் நிலையத்தில் அப்பாவுடன் உரையாடும் உரையாடல் வரைக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள்.  உணர்ந்தவர்களுக்கு பொக்கிஷம். 

குறிப்பாக கிராமத்து வாழ்க்கையை அனுபவித்துவிட்டு புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் அடி மனதில் நீக்க முடியாமல் இருக்கும் பொக்கிஷ நினைவுகளை இந்த புத்தகம் சுருதி லயம் மாறாமல் மீட்டெடுக்கின்றது. குறை என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில இடங்களில் அச்சுக் கோர்ப்பு எழுத்துப் பிழைகளும், புத்தக அட்டை வடிவமைப்பு என்று எரிச்சல் வரவைக்கின்றது. இப்போதுள்ள நவீன (லே அவுட்) அட்டைவடிவ முன்னேற்றத்தில் பதிப்பக மக்கள் செய்துள்ள வடிவமைப்பு மட்டும் தூங்கி வழிவது போல் இருக்கின்றது. பின் அட்டையில் உள்ள ஆசிரியரின் உருவ இளமையைப் போலவே படித்து முடிக்கும் போது நமக்குள்ளும் ஒரு இளமை பரவக்கூடும். 

இளமையாய் உங்கள் நினைவுகள் மாறக்கூடும். 

உண்மையான உழைப்பும், உறுதியான கல்வியும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் தோற்றுப் போனதில்லை. இந்த புத்தகத்தை படிக்கும் போது செல்வராசு உணர்த்துவதும் இதே தான்.  என்னவொன்று உங்கள் கல்வியினால்  நீங்கள் பெற்ற உயர்பதவிகளும், கிடைக்கும் செல்வங்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் உங்களால் கூட உங்கள் பழைய நினைவுகளை இது போல எழுத முடியும்.

புத்தகத்தின் பெயர் -  மெல்லச் சுழலுது காலம் 
(அயலகத் தமிழினின் அனுபவக்குறிப்புகள்)
ஆசிரியர் இரா. செல்வராசு

பக்கங்கள் 208
விலை .:  160.00

54./ 13 10 வது தெரு
டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம்,
சென்னை 24
தொலைபேசி 044 43 54 03 58
மின் அஞ்சல் sales.vadali.gmail.com

பின்குறிப்பு புத்தக ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் வாசிங்டன் டிசி அருகே வர்ஜீனியாவில் உள்ள ஃபேர்ஃபேக்சு நகரில் தற்போது மனைவி, இரு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவண் ஆய்வு மற்றும் பொறியியல் பிரிவில் வேதிப் பொறிஞராகப் பணிபுரிந்து வருகின்றார். 

Wednesday, April 20, 2011

வெறி தீர்த்த ராஜபக்ஷே உள்ளே சிக்குவாரா?

புது மாப்பிள்ளைபோல உலக நாடுகளை வலம் வந்த இலங்கை அதிபர்

ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்! 
ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல்  ஒரு குழுவை அமைத்தார்,

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு. ''அந்த மூவர் குழு நாட்டுக்குள் வந்தால், அவர்களை அனுமதிக்க மாட்டோம்!'' எனப் பகிரங்கமாகவே சொன்னார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
இந்த மிரட்டலுக்கு ஐ.நா. தரப்பில் குறிப்பிடும்படியான பதில் எதுவும் தரப்படவில்லை. இலங்கைக்குள் போகாம​லேயே விசாரணையை முடித்தது மூவர் குழு!

கடந்த 12-ம் தேதி பான் கி மூனிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடு​வதற்கு முன்பே, இலங்கை அரசுக்கு அனுப்பிவைத்​தார் பான் கி மூன். முறைப்படி அறிவிக்கப்படும் முன்பே, கொழும்பு பத்திரிகை மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது.

''இலங்கை ராணுவம் செய்தது போர்க் குற்றம்தான்!'' என அடித்துச் சொல்லும் இந்த அறிக்கை, ''2008 செப்​டம்பர் முதல் 2009 மே 19 வரை வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான குண்டு வீச்சுகளை நடத்தியதில், ஏராளமான பொது மக்களைக் கொன்று குவித்துள்ளது. வன்னியின் 3.3 லட்சம் மக்களை​யும் போரினால் சுருங்கிய குறுகிய பிரதேசத்தில் மொத்தமாக ஒதுங்கச் செய்தனர்.

'தாக்குதலற்ற பகுதி இது’ என்று அறிவித்துவிட்டு, ஒட்டுமொத்தமாக அங்கு குவிந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். 

மருத்துவமனைகள் எனத் தெரிந்தும் அரச படைகள் அவற்றின் மீது குறிவைத்து, எறிகணைகள், மோர்ட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. அவையின் உணவு, உதவி முகாம்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள், உதவிக் கப்பல்களும் அரசப் படைகளின் குண்டுவீச்சுகளுக்குத் தப்பவில்லை. சில மருத்துவமனைகள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலால் படுகாயம் அடைந்த மக்களுக்கு உயிர்த் தேவையான அடிப்படை சிகிச்சைகூடக் கிடைக்கவிடாமல், மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது இலங்கை அரசு.

2009 ஜனவரி முதல் மே வரை மட்டுமே பத்தாயிரக்​கணக்கில் மக்கள் இப்படி அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். சண்டைப் பிரதேசத்தில் இருந்து தப்பியவர்​களிடம், அரசுத் தரப்பு மிக மோசமாக நடந்துகொண்டது. விடுதலைப் புலிகள் என சந்தேகப்​பட்டவர்களை எல்லாம் ரகசியமாகக் கொண்டு​போய், கணிசமானவர்களைக் கொன்றுபோட்டது ராணுவம். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகத் தெரிகிறது. 

தப்பியவர்கள் அனைவரும் முகாம்களில் நெருக்கடியாக அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆளா​னவர்கள், கடுமையாக சித்ரவதை செய்யப்​பட்டனர். புலி என சந்தேகிக்கப்​பட்டவர்கள் வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவாறு சொல்லவொண்​ணாத சித்ர​வதைத் துன்பங்களுக்கு ஆளாக்கப்​பட்டனர்!'' எனக் குற்றம் சாட்டும் ஐ.நா. நிபுணர்கள், புலிகள் மீதும் போர்க் குற்றம் சுமத்தியுள்ளனர்.

''போர்ப் பிரதேசத்தில் பொது மக்களைக் கேடயங்களாகப் பிடித்து​வைத்து, விடுதலைப் புலிகள் அங்கிருந்து நகரவிடாமல் செய்தனர். 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களையும் அவர்கள் கட்டாய​மாகப் படையில் சேர்த்தனர். பிப்ரவரி மாத காலத்தில் தப்பிச் செல்லும் பொது மக்களையும் அவர்கள் தாக்கினர்'' என்றும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை அடுத்து, நல்லிணக்க ஆணைக் குழு என்ற ஒன்றை இலங்கை அரசு அமைத்தது. சண்டை நிறுத்தம் தொடங்கிய 2002 முதல் 2009 மே வரையிலான இனப் பிரச்னை குறித்து விசாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவைப்பற்றியும், ஐ.நா. நிபுணர்கள் காட்டமாக விமர்சித்து இருக்கின்றனர். 

''இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழு, சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை. இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதுபற்றி நேர்மையாக விசாரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட துயரத்தில் இருப்பவர்களை மரியாதையாக நடத்தாததுடன், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கவில்லை. ஏற்கெனவே, பான் கி மூனும் ராஜபக்ஷேவும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக, இந்த நல்லிணக்க ஆணைக் குழு பெரும் தவறைச் செய்துவிட்டது!'' என்றும் நிபுணர் குழுவினர் குற்றம் சாட்டினர்.
ஆனால், வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும். 

இந்த விசாரணையைக் கண்காணிப்பதற்கான சர்வதேச முறை ஒன்றை பான் கி மூன் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது அறிக்கை.
மேலும், ''இலங்கை அரசு மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் நிலைமை தொடர்பாக உடனடியாக அரசுத் தரப்பு புலன்விசாரணையை நடத்த வேண்டும். புலி என சந்தேகிக்கப்படுவோர் உள்பட பிடித்துவைக்கப்பட்டு உள்ள அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருடனும், வழக்கறிஞர்​களுடனும் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும். பிடித்துவைக்கப்​பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக வாதாடவும் அனுமதிக்க வேண்டும். 

மக்களைப் பய பீதியில் ஆழ்த்தி, சுதந்திரத்தைத் தடுக்கும் அனைத்து வித அரச வன்முறைகளையும் நிறுத்த வேண்டும். கடைசிக் கட்டப் போரின்போது ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் அரசின் பங்குபற்றி பகிரங்கமாக விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும். போரின்போதும், அதன் பின்பும், இலங்கையில் ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகள்பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்!'' என்றும் மூவர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தமிழ் மக்களைப் படுகொலை செய்து சிங்களப் படை செய்த போர்க் குற்றத்தை, ஐ.நா. நிபுணர் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ''சர்வதேச விசாரணைக் குழுவை பான் கி மூன் அமைத்து, போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த ராஜபக்ஷே, ''ஐ.நா-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள்!'' என்று சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுள்ளார். ''உறுப்பு நாடு என்கிற முறையில் இலங்கையை ஐ.நா. காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகார​முள்ள சீனா, ரஷ்யாவின் உதவியை நாடுவோம்!'' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகளோ, ''முக்கியமான சில உண்மைகளை இந்தக் குழு ஒப்புக்​கொண்டுள்ளது. போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா. அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுபற்றி இதில் எந்தக் குறிப்பும் இல்லையே! எமது மக்களைத் துடிக்கத் துடிக்க சிங்களப் படை கொன்று குவித்தபோது, தடுத்திருக்க வேண்டிய ஐ.நா., இனி மேல் நீதியைத் தரும் என்று நம்பிவிட முடியாது!'' என்று பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்து உள்ளன.

வெள்ளைக் கொடி ஏந்திச் சென்ற நடேசன் குழுவினரைப் படுகொலை செய்தது தொடர்பாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான பாலித கோகன்ன மீது வழக்கு தொடுத்துள்ளது, சுவிஸ் ஈழத் தமிழர் அவை. அவையின் சட்ட ஆலோசகரும் இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவருமான லதான் சுந்தரலிங்கத்திடம் இந்த அறிக்கைபற்றிக் கேட்டபோது, சட்ட நுணுக்கங்களை விவரித்தவர், ''சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது!'' என்றார் உறுதியுடன்.

அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?! 

 நன்றி- இரா.தமிழ்க்கனல்-

Sunday, April 17, 2011

மன்மதன் இல்ல மன்மதர் கடாபி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல்வேறு சமஸ்தானங்கள் மூலம் ஆண்டு வந்த மன்னர்களின் கதைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இப்போது விக்கிலீக்ஸ் தந்து கொண்டிருக்கும் பரபரப்புகளைப் போலவே அப்போதும் ஒவ்வொரு மன்னர் ஆண்ட பகுதிகளிலும் சார்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர்களின் முக்கிய பணியே அந்த குறிப்பிட்ட மன்னர்களின் செயல்பாடுகள், அவர்களின் அந்தரங்க விசயங்கள், பலம் மற்றும் பலவீனமான செயல்பாடுகளை இங்கிலாந்துக்கு கடத்திக் கொண்டிருந்தார்கள். 

பெரும்பாலும் பெண் பித்தகர்களாக இருந்தவர்கள் தான் இந்த மன்னர்கள். ஒவ்வொரு மன்னர்களின் ஆட்டத்தை இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் படேல் மூலம் மென்னி முறிக்கப்பட்டு ஒரே நாடு இந்தியா என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்த போது சிறுகுழந்தைகள் போல் மூச்சா போய் அழுத மன்னர்களும் உண்டு.  

அங்கங்கே ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுடன் இருந்த ஆங்கிலேய பிரதிநிதிகள் தாங்கள் சேகரித்து வைத்திருந்த கோப்புகள் அத்தனையும் சர்வஜாக்கிரதையாக பல டன் காகிதங்களையும் தீயிட்டு அழித்து முடித்து தங்கள் விசுவாசத்தை மன்னர்களுக்கு காட்டினார்கள். 

ஒரு சின்ன உதாரணத்திற்கு கூச்சப்படமா இதை சொடுக்கி படித்துப் பாருங்க.

ஒரு வேளை அன்று இணையம் இருந்திருந்தால் நாம் செக்ஸ் கதைகளை படிக்க அலைய வேண்டியதில்லை.  ஆனால் சமீப காலமாக உலகத்தில் உள்ள பல தலைவர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவில் இதுவொரு பிரச்சனையே இல்லை. 

இதுவும் ஒரு கௌரவமாகிப் போய்விட்டது.  

அமெரிக்கா ஏறக்குறைய 270 தூதரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்கள் மூலமாக அந்தந்த நாடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளை கர்மசிரத்தையாக வாஷிங்டனுக்கு அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு நம் இந்தியாவிற்கும் ஒரு வித்யாசம் உண்டு.  மற்ற நாடுகளில் அமெரிக்கர்கள் விசயங்களை கறக்க சற்று மெனக்கெட வேண்டும்.  இங்கு அந்த பிரச்சனையேயில்லை.  ஒரு குவார்ட்டர் போதும். உளற ஆரம்பித்து விடுவார்கள்.  புத்திசாலி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கூட வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தவறில்லை என்று சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரக மக்களிடம் உளறிக் கொட்டியதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது. 

இந்த விக்கிலீக்ஸ் சேகரித்துள்ள 2 50 000 ஆவணங்களில் 11 000 ஆவணங்கள் மிக மிக ரகஸ்யமானது.  இதிலும் 9 000 ஆவணங்கள் ஒவ்வொரு நாடுகளின் டவுசர்களை கழட்டி அம்மணமாக்கும் வல்லமை உடையதாம். புண்ணியவான் அசாஞ்சே எப்போது கழட்ட போகிறாரோ?

மது பிரியராக இருப்பவர்களுக்குக்கூட சமூகம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவன் ஒரு குடிகாரப்பய என்று நகர்ந்து போய்விடுகிறார்கள். அதற்கு மேல் நடிகர் வடிவேல் போல அல்லக்கை சிக்கினால் சற்று கூடுதலாக கும்மி தட்ட வைக்கலாம்.  ஆனால் மாது தொடர்பு என்றால் அதுவும் தலைவர்களுக்கு இந்த தொடர்பு என்றால் கேட்கவே வேண்டாம்.  பத்திரிக்கைகளுக்கு செம கொண்டாட்டம்.  பத்தி பத்தியாக பந்தி வைத்து விட மாட்டார்களா?  

பிரான்ஸ் நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை ‘ஆடையில்லாத பேரரசர்’ என்று அமெரிக்கா அதிகார வட்டத்திற்குள் அழைக்கப்படுவாராம்..

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி இவர் ஒரு ராக்கோழி. இரவு விருந்தும் அப்போது இவரின் உழைப்பும் மகத்தானது. இது போன்ற விசயங்களில் ஓய்வில்லாமல் உழைக்கக்கூடியவர். 

ஆனால் இவர்களை விட சமீப காலமாக செய்திகளில் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருப்பவர் லிபியா அதிபர் கடாபி. 

இவரின் முழு பெயர் முவாம்மர் அல் கடாபி. 

எனது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையில் இந்த லிபியா என்ற நாடு மறக்க முடியாத நாடு. அதிபர் கடாபி ஏறக்குறைய 41 வருடங்களாக லிபியாவை தன் இரும்பு பிடிக்குள் வைத்திருப்பவர்.  இதையே இவர் அன்பு பிடி என்கிறார்.  ஆனால் இவரின் அன்பு பிடியில் இருக்கும் ஏராளமான பெண்கள் குறித்து நிறைய சுவராஸ்ய தகவல்கள் உண்டு. முழுமையாக எழுதினால் அது 18+ ஆகிவிடும். கையில் போட்டு இருக்கும் கையுறை மூலமே மற்றவர்களை தொடுவார். கிருமிகள் தாக்கி விடும் என்ற அச்சமே முக்கிய காரணமாம். தினந்தோறும் மூன்று உடுப்புகளுக்கு மேல் மாற்றக்கூடியவர். ஐ.நா சபையில் இவர் உளறிக் கொட்டியதைப் போல வேறு எந்த தலைவரும் உளறியதில்லை.  ஒரே விசயத்தில் மட்டும் கவனம் இருந்தால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது போல,

இவரைப் பார்த்தாலே இவர் வில்லனா காமெடியானா என்று தெரியாமல் ஒதுங்குபவர்கள் தான் அதிகம். மொத்தத்தில் காமநெடி மனிதர். 

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துக்கு இதெல்லாம் முக்கியமா என்ன?  பெட்ரோல் இருக்கா?  வண்டிய கட்டு.  கூட்டுப் படையை கிளப்பு. லிபியா மக்கள் கடாபி ஆட்சியில் கஷ்டப்படுகிறார்கள் என்று உரிமையை கிளப்பு.  அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கு. 

சொல்ல முடியாது.  இவரும் சதாம் உசேன் மாதிரி எந்த பொந்துக்குள் இருந்து வெளியே வரப்போறாரோ? அப்போது தனியா வருவாரா? இல்லை அப்போதும் பக்கத்தில் பெண்கள் இருப்பார்களா?

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா இல்லாமல் பெண்களை அதிரடி படைவீரர்களாகவும், தனக்கு அந்தரங்க காரியதரிசியாக வைத்துள்ள கடாபி என்ற 'கடப்பாறை' மனிதரின் படங்கள் உங்கள் பார்வைக்கு.   


கூட்டுப்படை தாக்குறாங்களா?  அட போங்கப்பா.... எப்பவும் நான் தான் ராஜாநீங்க இத்தாலி.  நான் லிபியா.  ஆனா நம்ம ரெண்டு பேரையும் இணைத்தது?


என் உருவத்தைத்தான் மந்திரித்து கழுத்துல டாலரா போட்டுருக்காங்க. இதை விட ஒரு அதிபர் நாட்டு மக்களுக்கு பெரிதாக வேறென்ன செய்து விட முடியும்?
வேற வழியில்லாம இந்த மாதிரி இடங்களில் இந்த உடைகளையும் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு?

ராத்திரி பகல்ன்னு நான் சௌக்கியமாத்தான் இருக்கேன். எனகென்ன கவலை மக்களே?  நீங்க எல்லாரும் சௌக்கியம் தானே?பாருங்க.... எந்த நாட்ல என்னை மாதிரி பெண்களுக்கு இத்தனை உரிமைங்க கொடுத்து இருக்காங்க?  சொல்லுங்க பார்க்கலாம்?ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரம தல பராக் பராக்...

                      சரி சரி அந்தஅனுபவத்தை வெளியே சொல்லிடாதே. 

Tuesday, April 12, 2011

நான் ஓட்டுப் போட்டா நாடு திருந்திடுமா?

ஏப்ரல் 13 2011 

நாளைய பொழுது இந்நேரம் பலரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துருக்கும்.  ஆனால் அத்தனையும் ஒரு சின்ன பொட்டிக்குள் இருக்கும். பாவம் இந்த மக்கள் சேகவர்கள். கடுமையான உழைப்பு.  அயராத பணி. குளிர்சாதன வண்டிக்குள் இருந்து கொண்டு சுற்றி வந்து உழைத்துக் களைத்த மக்கள் சேவகர்கள் சற்று பயத்தோடு ஓய்வு எடுக்கக்கூடும். 


தேர்தல் ஆணையத்தின் புண்ணியத்தால் அதிக அளவு வெளியே கொண்டுவர முடியாத பணமூட்டைகள் எங்கேயோ பதுங்கி பலரின் பாவத்திற்கும் ஆளாகியிருக்கும்.  மேலிடத்தில் இருந்து செலவுக்கென்று ஒதுக்கிய பணத்தைப் பெற்று தேர்தல் ஆணைய கெடுபிடிகளின் காரணமாக எங்களால் வெளியே கொண்டுவரமுடியவில்லை என்று சொல்பவர்கள் தேர்தல் முடிந்ததும் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். 

ஆத்துல போற தண்ணிய அய்யா கொஞ்சம் அம்மா கொஞ்சம் அள்ளிக் குடித்ததைப் போல தொண்டர்களும், நம்பியவர்களும் பிழைத்துப் போகட்டுமே?

ஆனால் நாளை அரசு மற்றும் தனியார் (எத்தனை நிறுவனங்கள் கொடுப்பார்களோ?)ஊழியர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம்.  இந்த விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட சுற்றுலா கொண்டாட்டங்கள், குறுந்தகடுகள் வாங்கி உல்லாசமாக இருக்கப்போகும் நண்பர்களுக்கும், சரக்கு தரமாட்டார்கள் என்ற இருப்பில் வைத்திருக்க சில தினங்களுக்கு முன்பே வீட்டில் வாங்கி வைத்துள்ள குடிமகன்களுக்கும் நல்வாழ்த்துகள். 

நான் இப்போதுள்ள அரசியல் களத்தை கவனித்தவரைக்கும் இந்த முறை கலைஞர் சற்று தடுமாற்றமாக இருப்பது போல் தெரிகின்றது.  தேர்தல் ஆணையத்தை (எதிர்கட்சியை ஆளுங்கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்), தமிழ்நாட்டு காவல்துறை (நான் இவர்களுக்கு எத்தனையோ நல்லது செய்து இருக்கின்றேன். மறந்து விட்டார்கள்) குறித்து புலம்பித் தள்ளிவிட்டார். இதற்கு மேலாக உங்கள் வீட்டு வேலைக்காரனாக செயல்பட விரும்புகின்றேன் என்று பலபடிகள் இறங்கி வந்துள்ளார்.  ஏன் இத்தனை நலத்திட்டங்கள் செய்தவர்கள் இந்த அளவுக்கு புலம்ப வேண்டுமா?  ஒரு பக்கம் வரிப்புலியே வா?  மறுபக்கம் இனமான உணர்வு மிக்க தமிழா?  கலைஞர் மேல் எத்தனை விமர்சனம் வைத்தாலும் நேற்று வந்த விஜயகாந்திற்கு தொண்டை கட்டி விட்டதாம்.  பாருங்கள்......... இவருக்கு கணீர் கணீர் தான்...............

ஆசையோ? அக்கறையோ? பயமோ?  மொத்தில் பாராட்டியே ஆக வேண்டிய அபாரமான உழைப்பாளி.  நடிகர் சிவகுமாருக்கு மார்க்கண்டேயன் என்று பட்டம் கொடுத்ததைப் போலவே இவருக்குக்கூட அந்த பட்டத்தை இரவலாக கொடுக்கலாம்.

என்னுடைய பார்வையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருகின்றதோ இல்லையோ கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் திமுகவின் மற்ற வேட்பாளர்களை விட கலைஞர் மிக அதிக வித்யாசத்தில் ஜெயிக்க வேண்டும். எப்போதும் உள்ளூரில் மாடு விலைபோகாது என்பார்கள். அவ்வாறு கலைஞர் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் ஜெயித்தால் மட்டுமே திமுக வெற்றி பெற்றதாக கருதமுடியும்.  காரணம் நான் தான் மூத்த தலைவர். பெரியார் வழியில் வந்தவன், அண்ணா பாடத்தை கற்றவன். இது எனக்கு கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞருக்கு அவர் சொந்த மண் மக்கள் எவ்விதம் மரியாதை செய்யப் போகிறார்கள்?

இத்தனை ஆண்டு காலம் பொதுவாழ்க்கை கண்டவன், தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்தவன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டு வரும் கலைஞருக்கு கிடைக்கும் வாக்கு வித்யாசத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். 


காரணம் இந்த முறை நடைபெறப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த அனுதாப அலையும் இல்லை. அதற்கு மேல் அழகிரி மேல் தேர்தல் ஆணையம் வைத்துள்ள 'சிறப்புக் கண்' மொத்த அரசியல் நோக்கர்களாலும் உற்று நோக்கப்படுவதால் மொத்த உடன் பிறப்புகளுக்கும் வால் ஆப்புக்குள் சிக்கிக் கொண்ட வேதனை. 

தேர்தல் ஆணைய கெடுபிடிதனத்தால் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் சொன்ன மாதிரி இந்த முறை தமிழ்நாட்டு அரசியல் களமென்பது எழவு வீடு போலவே உற்சாசமின்றி படு ஆச்சரியமாக இருக்கிறது.  

இதற்கெல்லாம் காரணம் புண்ணியவான் தேர்தல் ஆணைய கதாநாயகன் குரோஷியா அல்லது அவருக்கு பின்னால் இருக்கும் சக்தியா?  

மொத்தத்தில் ஆளுங்கட்சிக்கு ஏராளமான இடைஞ்சல் என்பது மட்டும் உண்மை.  தமிழ்நாட்டு காவல்துறை டம்மியாக இருக்க அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தட்டிய கும்மிக்கு நடனமாட வேண்டிய சூழ்நிலை.  ஆனால் கலைஞர் பல களம் கண்ட வேங்கை.  நாளைய தினத்தின் ஓட்டுப் பதிவு முடியப் போகும் கடைசி ஒரு மணி நேரத்தில் 'விஞ்ஞான ரீதியான மாறுதல்' உருவானால் ஆச்சரியப்படாதீர்கள். 

காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நடந்த கடைசி ஒரு மணி நேர கூத்துக்களை அத்தனை உபிகளும் நன்கு அறிந்து இருப்பார்கள்.  இந்த முறை அந்த வாய்ப்பு உண்டா தெரியவில்லை?


இந்த முறை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கெடுபிடிகள் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆலோசனை நடத்தியவர்கள் கொடுத்தபடி நடந்து கொண்டிருக்கும் தேர்தல் ஆணைய கெடுபிடிகள் மொத்தத்தில் அரசியல் கட்சிகளுக்கு கெட்ட விசயமாக இருந்தாலும் திருவாளர் பொதுஜனத்திறகு மகா நிம்மதி. 

இது இன்னும் கூட சற்று நீட்சி அடைந்தால் நன்றாகயிருக்கும். கற்பனை காண சொல்லித்தந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாமுக்கு நன்றி.

1.தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் ஆளும் அரசாங்கம் அந்த திட்டங்களையும் வெளியிடக்கூடாது என்பதைப் போலவே குறைந்த பட்சம் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பாக முதல் அமைச்சர் முதல் அமைச்சர்களின் அதிகாரங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து காபந்து அரசாங்கம் போல் தேர்தல் ஆணையமே எடுத்துக் கொண்டு விட்டால் பாதி அதிகார துஷ்பிரயோகம் காணாமல் போய்விடும்.

2. அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடும் போது அவர்கள் சமர்பிக்கும் சொத்து ரீதியான அத்தனை சான்றிதழ்களையும், அவர்களின் பினாமி சொத்துக்களை கட்சி பாகுபாடு இல்லாமல் கண்ணில் விளக்கெண்ய் ஊற்றிக் கொண்டு வெளியே கொண்டு வந்தாலே பாதி பேருக்கு டர் ஆகி விடும்.  பின்னங்கால் பிடறி தெறிக்க கொல்லைபுற வாசல் வழியாக நான் போட்டியிட விரும்பவில்லை என்று ஓடிவிடக்கூடும். போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் உண்மையான சொத்து நிலவரங்களை மிகச் சாதாரண குடிமகன்களுக்கே நன்றாக தெரிகின்றது. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பு மட்டும் காலங்காலமாக ஒரு சடங்காகவே இருக்கிறது.  

3.  எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்களோ அந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுநல ஆர்வலர்கள் என்ற பொதுஅமைப்பின் மூலம் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடம் குறைந்த பட்சம் அந்த தொகுதி குறித்த அடிப்படை அறிவு இருக்கிறதா? அவர்கள் பதிவிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை கூட்டப்படும் கூட்டத்தின் முன்பாக கேட்டு அதை தொலைக்காட்சியில் கட்டாயம் நேரலை வாயிலாக அணைவரும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தால் இந்த மக்கள் சேகவர்களின் அறிவு குறித்து அணைவருக்கும் புரியக்கூடும்.

4.  தேர்தல் பணியில் கட்டாயம் அரசு ஊழியர்களை பயன்படுத்தவே கூடாது.  இங்கே தான் வில்லங்கம் தொடங்குகின்றது.  பிடித்தவர், பிடிக்காதவர், நமக்கு ஏன் வம்பு என்ற மூன்று ஜாதிகள் இதில் இருப்பதால் விடை ஜீரோதான்.
படித்த இளைஞர்களை பயிற்சி கொடுத்து பயன்படுத்த முடியும். 


5. ஆயிரத்தெட்டு நொள்ளை காரணங்களை சுட்டிக் காட்டும் தேர்தல் ஆணையம் முதலில் அந்த தொகுதி வாக்காளர்கள் அணைவருக்கும் பூத் சிலிப் போய் சேர்ந்துள்ளதா என்பதை பல முறை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்ற எளிதில் இனம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் நபர்களை அந்தந்த துறையின் அழுத்தம் காரணமாக கட்டாயமாக வாக்குச் சாவடிக்கு வரவழைக்க வேண்டும்.  இது ஜனநாயக நாடு என்ற ஈரவெங்காய புடலங்காயை ஓரமாக காய வைத்து விட்டு வாக்களிப்பது என்பது கட்டாயத்தின் தொடக்கமாக இதை கொண்டு வந்தே ஆக வேண்டும்.காரணம் இந்திய தேர்தலின் முக்கிய வாக்காளர்கள் என்பவர்களே அன்றாடங்காய்ச்சிகளே ஆவார். 

6.  ஒவ்வொரு வாக்காள அடையாள அட்டையில் இருக்கும் எண் கொண்டு தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் இருப்பவர்கள் அவர் தொகுதிக்கு வாக்களிக்கும் ஆன் லைன் முறை கொண்டு வந்து விட்டால் வாக்கு சதவிகிதம் நிச்சயம் உயரும்.  ஊருக்கு போக சோம்பேறிபடுபவர்கள், பல காரணங்களால் பயந்து கொண்டு பின்வாங்குபவர்கள் என்று ஒரு பெரிய ஜனத்தொகையே இதற்குள் அடங்கி இருக்கிறது.

7. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற நமது இந்திய ஜனநாயக கேலிக்கூத்துக்களை தவிர்க்க ஓட்டளிப்பவர்கள் கட்டாயம் தங்களது கட்டைவிரல் அடையாளத்தை வாக்களிக்கும் எந்திரத்தில் ஓற்றிவிட்டு வரும்படி செய்து விட்டால், ஒருவரே பலரின் ஓட்டுக்களை போடுவதை தவிர்க்க உதவலாம். ஏற்கனவே ஒருவர் நமக்கான அடையாள அட்டையை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாவம் அரசியல்வியாதிகளிடம் சிக்கி அவருக்கு என்னவித வியாதிகள் வந்துள்ளதோ?

8. வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை முறியடிக்க வாக்குச் சாவடிக்குள் பொருத்தப்பட்ட புகைப்பட கருவிகள் மூலம் வாக்குப்பதிவு நடக்கும் மொத்த நேரத்தையும் நேரலை மூலம் அந்தந்த பகுதியில் வாழும் (குறைந்தபட்சம்) பொது மக்களும் கவனிக்கும்படி உருவாக்கினால் பலரும் பீதியடைந்து பின்வாங்கி விடக் விடக்கூடும்.  

9.  29 சதவிகிதம் வாங்கிய கட்சி எதிர்கட்சியாகவும் 32 சதவிகிதம் வாங்கியவர் ஆளுங்கட்சியாக அரசாங்கத்திற்கு வரும் கொடுமை இந்த இந்தியாவில் தான் உண்டு.  மீதியுள்ள சதவிகிதம்?  ஐயோ பாவம்?

10.  வெளிநாட்டில் வாழ்பவர்கள் அணைவரும் ஒவ்வொரு தேர்தல் மூலமும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகளை எளிதாகவே செய்ய முடியும். தபால் ஓட்டுக்களைப் போலவே முறைப்படுத்தப்பட்ட பல விசயங்களை ஒழுங்காக செயல்படுத்தினால் நிச்சயம் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் சாத்தியமே.  வாக்கு சதவிகிதம் அதிகமாகும் போது தான் உண்மையான நிலவரம் என்பது நமக்கு புரியக்கூடும்.  

இன்னும் நிறைய ஐடியாக்கள் என் கைவசம் உண்டு. நான் இப்போது சொன்னால் கலைஞர் காப்பி அடித்து விடுவார்.

நன்றி விஜயகாந்த்.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தல்ல.  அது கேடு கெட்டவர்கள் ஆட்சிக் வருவதால் உருவாக்கப்படும் சின்னபுள்ளத்தனமாக விளையாட்டுக்களை கண்டு நொந்து போய் நாளை ஏப்ரல் 13 2011 வாக்களிக்க மறந்து விடாதீர்கள். தலைவர் நல்லக்கண்ணு அய்யா சொன்னது போல்

 'எந்த அரசியல் அதிகாரம் ஒருவரை உயரத்திற்கு கொண்டு போய் நிறுத்தி  வைத்து அழகு பார்க்கின்றதோ அதே அதிகாரம் அவரை அதளபாதாளத்திற்கும் கொண்டு போய் தள்ளிவிடும். அது தான் அரசியல்..' 

பத்துவருடங்களுக்கு முன்பு துடிப்போடு செயல்பட்ட அரசியல்வியாதிகள் பலரும் இப்போது களத்தில் இல்லை. இப்போது நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சு கொல ஆறுமுகம் என்று சொல்லப்படும் வீரபாண்டியார் போல வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்கள் தான் இப்போது களத்தில் இருக்கிறார்கள்.  2016 தேர்தலில் இவர்களும் போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள்............


இன்றைய அமெரிக்கா பெற்றுள்ள வளர்ச்சி ஏறக்குறைய பல நிறைகுறைகளை தாண்டிய 400 வருட சரித்திர பின்ணணியைக் கொண்டது.  நாம் சுதந்திரம் பெற்று முழுமையாக 100 வருடங்கள் கூட தொடுவதற்கு இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது.  நம் இந்தியாவை, இந்திய மக்களை, இந்திய அரசியல்வாதிகளை மானாவாரியாக திட்டிப் தீர்ப்பதே தனது கொள்கையாக கொண்டிருந்த புண்ணியவான் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது (இந்தியர்களுக்கு உண்மையான அதிகாரம் பற்றி புரிந்து கொள்ளவே 100 வருடங்கள் தேவைப்படும்) பலிக்கட்டுமே?

நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.

Friday, April 08, 2011

அன்னா ஹசாரே -- ப்ளாக்மெயில் பேர்வழி

அன்னா ஹசாரே - 'இவர் ஒரு ப்ளாக்மெயில் பேர்வழி. '

இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களைப் பற்றி கடைசியாக பார்ககலாம். 

அதற்கு முன்னால் சில விசயங்கள்.

நம்மால் இன்றைய சூழ்நிலையில் எந்த அளவிற்கு நேர்மையாக வாழ முடியும்? அன்றாட வாழ்க்கையில் லஞ்சம் கொடுக்காமல் நம் தேவைகளை நிறைவேற்றிட முடியுமா? 

முடியாது என்று சொன்னால் நீங்க எதார்த்தவாதி. 

முடியும்..... ஆனால் என்று இழுத்துக் கொண்டு தொடர்ந்து வார்த்தையாக சொல்ல நினைத்தால் மாற்றத்திற்கான ஒரு ஏக்கம் உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது என்று அர்த்தம். 

இந்த முடியும் என்ற வார்த்தைக்கு இப்போது சற்று நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் இந்த அனனா ஹசாரே. 72 வயது நிரம்பிய இந்த தாத்தாவை விட அதிகமான வயது உள்ள அரசியல்வாதிகள் இந்தியாவில் நிறைய உண்டு. பதவியை விட முடியாதவர்கள், வார்த்தை ஜாலத்தில் வாழ்க்கை கடத்திக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கைக்குப் பிறகும் தேவைப்படும் இறவா புகழுக்காக ஆசைப்பட்டு மற்றவர்களை அவஸ்த்தை படுத்திக் கொண்டிருப்பவர்கள் என்ற இந்த பட்டியல் நீளும்.

தயை கூர்ந்து நம்முடைய அரசியல்வாதிகளை தலைவர்கள் என்று எவரும் அழைக்காதீர்கள். தலைவன் என்பவன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாய் திகழ்பவர்கள். இப்போதுள்ளவர்கள் அரசியல்வியாதிகள். இந்த வியாதிகளுக்கு ஏராளமான ஆசைகள் உண்டு. காரணம் வியாதிகளுக்கு மட்டுமே ஓய்வு உறக்கம் இருக்காது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அதுபாட்டுக்கு பரவிக் கொண்டேயிருக்கும். கொள்ளுப் பேரனுக்கு தொடங்கி அதன் நீட்சியாக எள்ளுப் பேரன் வரைக்கும் தேவைப்படும் பணத்துக்காக அலையும் பிசாசுகள். கடைசியில் இறக்கும் தருவாயில் வாயில் போடும் எள்ளுகூட என்ன சுவை என்று தெரியாது முடிந்து போகும் கதைக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். தேவைப்படும் பணத்தை சம்பாரித்து வைத்தாலும் இவர்களின் ஆசைகள் அடங்குவதில்லை. இது ஒரு விதமான மனோவியாதி. 

நம்முடைய ஜனநாயக அமைப்பில் பரம்பரை பரம்பரையாக இயல்பாகவே பணக்காரர்களாக இருந்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.  பத்து காசுக்கு லாட்டரி அடித்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்தவர்களும் இன்று அரசியல் தலைகளாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இந்த இருவரும் ஒரே முனையில் சேர்ந்து விடுகிறார்கள். அது தான் தன்னம்பிக்கை முனை. இந்த முனைக்கு மற்றொரு பெயரும் உண்டு. பணப்பேய் என்று பெயரிட்டும் அழைக்கலாம். 

அடுத்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து எழவு விழுந்தால் கூட கவலையில்லை. ஒரு மாவட்டமே பஞ்சத்தில் மடிந்து மொத்த மக்களும் இறந்தால் கூட அது குறித்து அக்கறைபட வேண்டியதில்லை. நம் நாட்டு பணம் வெளிநாட்டில் கேட்பாராற்று கிடக்கும் லட்சம், கோடி பணத்தை கொண்டு வர இந்த கேடிகளுக்கு தோன்றாது.  ஒவ்வொரு வருடமும் அரசாங்க கஜானாவிற்கு வராத வராக்கடன்கள் குறித்து மூச்சு விட வேண்டியதில்லை. ஒவ்வொரு தாலி அறும் சப்தத்தில் இவர்களின் தலைமுறைகளின் வளர்ச்சி என்பது மேலேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளின் தேவைகளை விட அன்னா ஹாசரேவின் தனிப்பட்ட ஆசைகள் மிக மிகக் குறைவு. இவருடைய சிந்தனைகள் செயல்பாடுகள் அத்தனையும் இந்தியா என்ற பெரிய நாட்டின் நலன் குறித்தே இருப்பதால் இவரைச் சுற்றிய கூட்டமும் குறைவு. இவருக்கு வங்கி கணக்கு இல்லை. தங்க உருப்படியான வீடு கூட இல்லை.  தன்னுடைய உணவுத் தேவைக்கு கூட தன்னுடைய ஜோல்னா பையில் யாராவது போடும் காசு தான் உதவுகின்றது. முக்கியமாக குடும்பம் என்பது இல்லவே இல்லை. 

இவர் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது ஏன் பெரிசு உனக்கு தேவையில்லாத வேலை? என்று எவராவது நாலு சாத்து சாத்தினால் இறந்து போகக்கூட தயாராய் இருப்பதால் எவரும் இவர் அருகிலும் வந்து தொலைப்பதில்லை. ஒரு வேளை அடித்து தொலைத்தால் நம்முடைய மொத்த வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றித் தொலைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் அரசியல் தலைகள் அதிகம்.  

இது தான் அன்னா ஹாசரேவின் முக்கிய பலம்.  இந்த பலம் தான் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியா முழுக்க இவர் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. 

இவரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த சிவசேனா பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இரண்டு அமைச்சர்களையே நீக்க வேண்டியதாகி விட்டது.  2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டியதாகி விட்டது. இவரின் அஹிம்சை போராட்டங்களைப் பார்த்து வெறுத்துப் போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்ய உச்சகட்டமாக இன்றைய விவசாய அமைச்சரான சரத்பவார் பால்தாக்ரே கூட்டணி தான் இவரை ப்ளாக்மெயில் பேர்வழி என்று கூறினார்கள். 

பால் தாக்கரே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இறுதிப்பால் ஊற்றியவர். இவரைப் பற்றி இங்கே அறிமுகமே தேவையில்லை. ஆனால் சரத்பவார் பற்றி அவஸ்யம் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். 

இந்தியா என்ற நாடு பெற்ற பல பாவங்களில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருக்கும் சரத்பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட செத்துப் போன (விதர்பா) விவசாய குடும்பங்களின் ஆத்மா சரத்பவாரின் குடும்ப வாரிசுகளை இன்னும் எத்தனை தலைமுறைக்கு கொண்டு செல்லுமோ?  


இந்தியாவில் விளைந்த பஞ்சு பொதிகளை அப்படியே பொத்துனாப்ல லவட்டி கடல் கடக்க வைத்ததில் முக்கிய பங்கி வகித்தவர். ஏற்றுமதிக்கான காலக்கெடுவை வ்வொரு முறையும் நீடிக்க வைத்து லட்சக்கணக்கான குடும்பங்களை இன்று நடுத்தெருவில் நிறுத்திய பெருமை அன்னாரையேச் சேரும். காரணம் நாம் ஏற்றுமதி செய்தால் தான் அந்நியச் செலவாணி இந்தியாவிற்ககு கிடைக்கும். அதன் மூலம் தான் இந்த வியாதிகள் நிறைய களவாணித்தனம் செய்ய முடியும்.  

அன்னா ஹசாரே வலியுறுத்தும் உழலற்ற லஞ்சமற்ற அரசாங்கம் என்பதை நாம் ஒரு கனவாக எடுத்துக் கொண்டு விடலாம்.  ஆனால் இதற்கு முன்னால் சில கேள்விகள் நம் முன்னால் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த லஞ்சம், ஊழல் என்ற வார்த்தைகள் எங்கிருந்து தோன்றுகிறது?

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படி இந்தியாவை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அதைப்போல தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் தான் நமக்கு அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இது தான் மூலகாரணம். நம்முடைய இந்தியாவில் பல ஆச்சரியங்கள் உண்டு.  இவற்றில் முக்கியமானது, எவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே தெரியாமல் அவருக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி. 

காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்த கூட்டணியின் காரணமாக இதன் தலைவரான சரத்பவாருக்கு விவசாயத்துறை அமைச்சர் பதவி.. விவசாயத்தை அதிக அளவு நம்பி வாழும் இந்தியாவிற்கு மன்மோகன் சிங் கொடுத்த அன்புப் பரிசு தான் விவசாய அமைச்சரான சரத்பவார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆத்மாக்களோ, இவரால் வெளிச்சந்தை ஏற்றுமதி மூலம் கொண்டு செல்லப்பட்ட பருத்தி மற்றும் ஏனைய பொருட்களோ நமக்கு முக்கியமில்லாமல் போகலாம்.  ஆனால் இவரைப் போன்றவர்களின் கோபம் தான் இந்த தாத்தாவிற்கு மறைமுக ஆதரவை பல்முனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.  

ஏன் இவர்கள் இருவருக்கும் இந்த அன்னா ஹசாரே மேல் இத்தனை கோபம்?  காரணம் இவர்கள் மட்டுமல்ல. அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னாலும் ஹாசரே கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் அடிவயிற்றில் அமிலம் போல சுரக்க வைக்கின்றது.
  

அப்படி என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார்?

இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மக்களாட்சி என்றால் அதற்கு மறைமுகமான அர்த்தம் ஒன்று உண்டு. ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அவர்கள் நினைப்பதை எளிதாக சாதித்துக் கொள்ள வேண்டும். எவரும் கேள்வி எதுவும் கேட்கவும் கூடாது.  கொள்ளுப் பேரன் வரைக்கும் இருக்கும் அத்தனை உருப்படிகளையும் ஒன்று சேர்த்து நிற்க வைத்து சேர்த்த பணத்தை தலையில் கொட்டி தீயை வைத்து கொளுத்தினால் கூட இன்னும் பணம் சேர்க்கும் ஆசை இவர்களை விட்டு போய்விடாது.  மக்களும் கொடுக்கும் இலவச எலும்புத்துண்டுகளை சுவைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

தற்போதை அரசியல் என்பது ஒரு பெரும் தொழிலுக்கான முதலீடு. சம்பாரித்தே ஆகவேண்டும். அது தான் இப்போது இந்திய அரசியல்வாதிகளால் செயலில் காட்டிக் கொண்டிருக்கும் விசயமாகும். எண்ண முடியாத அளவில் எல்லாத் துறையிலும் லஞ்சம். எல்லாவற்றிலும் ஊழல். 

ஊழல் துறைக்கு தலைமைப் பொறுப்புக்கு வருபவரே கேவலமான நபராக இருந்தால் மொத்த துறையும் எப்படியிருக்கும்?  அவரையும் நான் பரிந்துரை செய்தேன்.  அதன் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஒரு பிரதமரே சொன்னால் மொத்த நிர்வாக லட்சணம் எப்படியிருக்கும்?

நம் இந்தியாவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் இந்திய தண்டணைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்பது 1860 மற்றும் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிகாரவர்க்கத்தில் உள்ள ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் இன்றைய சிபிஜ (மத்திய புலனாய்வு துறை) போன்றவர்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றது.  இவர்கள் மூலம் நாம் கேள்வி கேட்க முடியும். இவர்கள் பதில் தருவதற்குள் அல்லது தீர்ப்பு வருவதற்கள் நமக்கு ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். இல்லை இவர்கள் திருப்பி தரும் ஆப்பை வாங்கிக் கொள்ள நாம் தகுதியான நபராக இருக்க வேண்டும். 

இந்தியா பார்க்காத ஊழலும் இல்லை.  இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பெயர்கள் கூட பலருக்கும் மறந்து போயிருக்கும்.  


காரணம் பன்றிகள் வாழும் சாக்கடையில் இருக்கும் ஜீவன்களுக்கு சராசரி மனிதர்களை விட மணம் திடம் குணம் நிரம்ப இருப்பதால் எதுவும் தாக்குவதில்லை.  தாக்க தயாராய் இருப்பவர்களும் நீடீத்து இருப்பதும் இல்லை. ஏன் சாதிக் பாட்சா இறந்தார் என்றால் அதன் முனை திஹார் சிறைச்சாலை வரை போய் நிற்கும். எவராவது இத்தனை தூரம் தொடர்ந்து போய் கேள்வி கேட்க தெம்பு இருக்குமா?  

இது போன்ற ஊழல்களை தடுக்கத்தான் அன்னா ஹாசரே உருவாக்க நினைக்கும் லோக்பால் என்ற விதை உருவாகின்றது. நம்முடைய அரசியல்வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மேல் கொண்டுவரப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனியாக ஒரு ஆணையம் தேவை.  அது எவரும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பாக இருக்க வேண்டும். 

பிரதமர், முதல் நீதிபதிகள் என்று எல்லோருமே இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள்.  அடிப்படை குடிமகன்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்க கடமைப்பட்டது.  இதையெல்லாம் மீறி வழக்கு என்று வரும்பட்சத்தில் ஒரு வருடத்திற்கும் முடிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் இருந்து மொத்த இழப்பீடுகளை பெற்று அரசாங்கத்திடம் சேர்க்க வேண்டும்.


எந்த அரசியல்வியாதிகளும் தங்களுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா? 1968 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் என்பது தேவையில்லை என்பதாக தள்ளிப் போய் இன்று 2011 ல் வந்து நிற்கின்றது.  

இந்தியாவில் இப்போது தான் அன்னா ஹாசரே என்ற பெயர் இப்போது தான் மெதுவாக மேலேறி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவரைப் பற்றி முழுமையாக தமிழ்நாட்டில் தெரியாமல் இருப்பது தமிழர்கள் செய்துள்ள மகா புண்ணியம்.  

காரணம் இது தேர்தல் சமயம். 

வாக்காளப் பெருமக்களுக்கு வேறு சில முக்கிய வேலைகள் இருக்கிறது.  எவர் பணம் தர வருவார்?  எப்போது வருவார்?  அல்லது தர வருபவர்களை தடுக்க நினைப்பவர்களை எப்படி தாக்கலாம்? போன்ற பல்வேறு எண்ணங்களில் குழப்பிப் போய் இருப்பவர்களிடம் போய் அன்னா ஹசாரே என்றால் அடிக்க வந்து விட மாட்டார்களா?  சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோனி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் இளையர்களுக்குத் தேவையில்லாத பெயர் அன்னா ஹாசரே. 

இன்றைய வாழ்க்கையின் சந்தோஷங்களை திகட்ட திகட்ட அனுபவிக்க விரும்புவர்களுக்கு எப்போதும் நாளைய குறித்த கவலை ஏதும் இருப்பதில்லை. சமூக அக்கறை என்றாலே சாக்கடையை தாண்டி வருவது போல கடந்து விந்து விடுவதால் இந்நாள் இனிய நாளே. எல்லோருக்கும் என்ன நடக்குமோ அதுவே நமக்கும் வந்து சேரும். நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இளைய சமுதாயமும் ஒதுங்கிக் கொண்டேயிருக்க இவரைப் போன்ற 72 வயது இளைஞர் தான் இந்தியாவிற்கு தேவைப்படும் மாற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்.


நம்முடைய தேவைகளும், ஆசைகளும் மிக குறைவாக இருந்தால் நம்மாலும் இந்த அன்னா ஹசாரே போலவே மாற்றத்தை உருவாக்க முடியும்.