Thursday, April 28, 2011

கைப்புள்ள பான் கீ மூன் கதறடிக்கும் ராஜபக்ஷே

வருகின்ற 2011 மே மாதம் விடுதலைபுலிகளுடன் இலங்கை ராணுவத்தினர் போரிட்டு வென்ற இரண்டாவது ஆண்டு முடிவுக்கு வரப்போகின்றது.  மூன்றாவது படியில் ஏறும் போது பாதிக்கப்பட ஈழத்தமிழர்களுக்கு ஒரு முன்னேற்றப் படி என்று இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பலருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஆனால் இதைப் போன்ற பல படங்கள் கடந்த இரண்டு வருடத்தில் வந்து போய் இருக்கின்றது.  இப்போது வந்துள்ள இந்த அறிக்கை கோப்பு என்பது சற்று மேம்பட்ட கோர்வையான படம்.  வேறொன்றும் புதிதில்லை. இதைக் கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாதத்தை நிறுத்திவிட முடியுமா? 

இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று விடுதலைப்புலிகளை குதற காத்துக் கொண்டிருந்தது சிங்கள இனவாதம் மட்டுமல்ல. காத்திருந்த இந்தியாவும் கூட.

ஓராயிரம் காரணங்கள்?. 

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள். பழைய கடனுக்கு பழி தீர்க்கப்பட வேண்டியவர்கள். இந்தியாவிற்கு எப்போதும் இவர்களால் ஆபத்து. எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் கன்னிவெடி பூமியாக மாற்றி விடுவார்கள். 

ஆனால் அழிக்கப்பட வேண்டும் என்று நினைத்தவர்களால் அப்பாவிகளை காப்பாற்ற முடியவில்லை. அதற்கும் இன்னும் காரணங்களை தேடித் தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பாவிகளை விடுதலைப்புலிகளை கேடயமாக பயன்படுத்தியதால் தான் இந்த பேரழிவு என்று அவரவர் புத்திசாலி தனத்தை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். 

காரணங்கள் எத்தனையோ? 

மொத்தத்தில் போரின் முடிவில் வெந்து தணிந்தது வன்னி. ஆனால் அப்பாவிகளுக்கு அவலவாழ்க்கை பரிசாக தந்தவர்களுக்கு இன்னமும் கூட நல்ல வாழ்க்கை வழங்க மனமில்லை. அதைக் கேட்க கூட இங்குள்ள புத்திசாலிகளுக்கு அறிவில்லை. மரத்துப் போன மனங்களில் ஈரமென்பது எப்போதும் சுரக்காது. எதிர்பார்ப்பதும் நியாமில்லை தானே?

இந்தியாவால் போருக்குப் பின்னால் ஈழத்தில் கொண்டு போய் கொட்டப்பட்ட கோடிகள் கூட தெருக்கோடிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. மொத்ததில் இப்போது பிரபாகரன் இல்லை. எங்கள் ஆர்வமும் அக்கறையும் முடிவுக்கு வந்து விட்டது என்ற இந்தியாவின் தான்தோன்றித்தனம். 

போரின் போது அமைதியாக இருந்த ஐ.நா இப்போது தனது அதிசிய கண்டுபிடிப்பான இலங்கையின் நடத்தப்பட்ட போர்க்குற்றத்தை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. கிசுகிசு பாணியில் அறைகுறையாக பரவி இன்னும் சில நாட்களில் முழுமையாக வந்துவிடுமாம். நல்லவேளை வீட்டோ அதிகாரம் படைத்த ரஷ்யா, சீனாவை மீறி தன்னுடைய பதவியின் இறுதிக் காலத்தில் ஏனிந்த முடிவுக்கு பான் கீ மூன் தள்ளப்பட்டு இருக்கிறார் என்பதற்கு பின்னால் உள்ள விசயங்கள் என்பது சர்வதேச அரசியல் போக்கு தெரிந்தவர்களுக்கு இது ச்சும்மா என்பது புரிய வைக்கும்.  

காரணம் குற்றவாளியை விட குற்றவாளிக்கு முக்கிய கூட்டாளியாக இருந்த இந்தியாவைக் கொண்டு எங்கே நிறுத்தமுடியம்.  நிறுத்தத்தான் முடியுமா? 

பான் கீ மூன் இந்த பதவிக்கு வருவதற்கு சீன உளவுத்துறை எந்த அளவிற்கு உதவியதோ அதற்கு கைமாறாக பான் கீ மூன் விமானத்தில் சென்று ஈழ அவலத்தை பார்த்து முடித்து விட்டு வந்து விட்டார்.  இப்போதும் கூட ஈழத்திற்குள் நுழையாமல், பாதித்த மக்களையும் கேட்க முடியாமல் கிடைத்த தகவல்களை வைத்தே அறிக்கையும் தயார் செய்தாகி விட்டது.  எவ்வளவு அடித்தாலும் தாங்கும் கைப்புள்ள வடிவேலுக்கும் நம்ம பான் கீ மூனுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

ஐ.நா. சபை இலங்கையிடம் பவ்யமாக " நீங்களே இது குறித்து முடிவு எடுத்து எங்களிடம் சொல்லுங்க" என்று கேட்ட போதும் கூட ராஜபக்ஷே சகோதரர்கள் மனமிறங்கவில்லை. "எவனாவது விசாரனைன்னு உள்ளே வந்தா கீச்சு புடுவேன் கீசி"என்று சொல்லாத குறை தான். சும்மா சொல்லக்கூடாது.  ராஜபக்ஷே பான் கீ மூன் கண்ணில் மட்டுமல்ல கண்ட இடங்களிலும் கைவிட்டு கைமா பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஈழத்திற்குள் ஐ. நா. சபைக்கு எதிராக அணைத்து தரப்பினரின் கையெழுத்து வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.. மற்றொரு புறம் உள்ளுர் அரசியல் தாதாக்களின் அநாகரிக நடவடிக்கைகள். மாமன்னர் ராஜபக்ஷே சிங்களர்களுக்கு மட்டுமல்ல தலைவர். உலகில் உள்ள ஒவ்வொரு எதிர்கால அரசியல்வாதிகளுக்குமே குருவானவர். எதை? எப்போது? எப்படி? எவரை வைத்து? செய்து காட்ட வேண்டும் என்று நடத்திக் காட்டிய கில்லாடி. இவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஐ.நா. வரலாற்று நிகழ்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய பட்டயம்.  

ஈழ அரசியல் இனி எப்போதும் தன்னைச்சுற்றியே சுழல வேண்டும் என்று நம்பியிருக்கும் ராஜபக்ஷே காட்டில் இப்போது அடைமழை தான். 

விடுதலைப்புலிகளை அழித்த போது புகழ்.  நான் தான் காரணம் என்று பங்கு கேட்டு வந்தவரை அடக்கி ஒடுக்கி உள்ளே தள்ளிய போதும் புகழ்.  ஏன் இவர்களை அழித்தார்? என்பதை விவரிக்கும் போது புகழ் என்று நகர்ந்து இன்று ஐ.நா. சபையின் செயல்பாடுகளை எதிர்க்கும் போது கூட மாமன்னர் ராஜபக்ஷேவுக்கு புகழாகத்தான் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஐ.நா சபை விடுவதாய் இல்லை. இலங்கையின் ஒத்துழைப்பு இல்லாமலேயே தாங்கள் கண்டு பிடித்த போர்க்குற்ற ஆதாரங்களை தொகுத்து கொடுத்துள்ளார்கள். சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்த படங்களையும் சேர்த்து எதிர்கால தமிழின மககளுக்கு போய்ச் சேரக்கூடிய கோப்பை பரிசாக தந்துள்ளது. 

அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிடக்கூடாது என்று சொல்லும் நல்லவர்கள் தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணம் இது.  இனி வேறென்ன வேண்டும்?

வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லாத ஈழத்தில் இப்போது தமிழர்களின் வாழ்க்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள உயிர் பிழைத்த மீதமுள்ள தமிழர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டாகிவிட்டது. கன்னிவெடி பூமி இப்போது தமிழர்களின் காதல் பூமியாகி விட்டது. சிங்கள இனவாதம் போய் தமிழர்களின் வாழ்க்கையில் சிரிப்பும் கும்மாளமாக மாறிவிட்டது. இப்போதுள்ள சிங்கள அரசியல் மூலம் அங்கு வாழும் தமிழர்களுக்கு சிக்கலில்லாத வாழ்க்கையை அறிமுகபடுத்தியாகி விட்டது. இனியேனும் சொல்லுங்கள் தமிழர்களே? 

இனி ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கென்று வேறென்ன வேண்டும்? 

இம் என்றால் சிறைவாசம்?  ஏன் என்றால் நரகலோகம்.  சிங்கள பத்திரிக்கையாளர்களுக்கே டவுசர் கழடும் போது தமிழர்கள் கட்டியிருக்கும் கோவணம் என்ன ஆகும்?  தெரிந்தவர்கள் தமிழர்கள். அமைதியாய் இருந்து விடுவ்து உத்தமம்.  

தமிழர்கள் எப்போதும் அடிமையாய் வாழ்ந்துவிடுவது மொத்ததிலும் சிறப்பு.

ஆனால் நடந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த கோமகன்கள் கொண்டாடிய வெற்றி விருந்தில் குடித்த மதுபானம் நிச்சயம் கசந்திருக்க வாய்ப்பு இருந்துருக்காது?. போரை நடத்திய ராஜபக்ஷேவுக்கு உயிர்பயம். இவருக்கு மட்டுமல்ல. இவருக்கு முன்னால் வந்த அத்தனை சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இதே தான். விடுதலைப்புலிகளை அழிக்காத பட்சத்தில் அதன் எதிர்விளைவுகளை ராஜபக்ஷே சொன்ன மாதிரி ஆறடி பெட்டிக்குள் அவரை அடைக்கலப்படுத்தியிருக்ககூடும். 

ஆனால் இன்று வரையிலும் எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் இங்கிருப்பவர்களை பார்க்கும் போது ராஜபக்ஷே பரவாயில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

போரினால் ஓரே சமயத்தில் பிணமாய் மாறிப் போனவர்களுக்கு அடுத்த பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனால் உயிரோடு இருக்கும் நடைபிணங்களை வைத்து நம்மவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது இவர்களிடம் மனிதர்களுக்குரிய பகுத்தறிவும், மனசாட்சியும் இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.  

மனிதர்களில் இத்தனை நிறங்களா?

கலைஞர் தனது மகள் கனிமொழிக்காக கூட்டப்பட்ட உயர்நிலை கூட்டத்தில் போனால் போகிறதென்று ஈழத்திற்கென்று ஒரு தீர்மானத்தையும் சேர்த்து நிறைவேற்றியுள்ளார். 

"தனி ஈழம் தான் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதை நான் சொல்லவில்லை.  தந்தை செல்வா சொன்னது" என்று அசராமல் தன் கேள்வி பதில் பாணியில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். பாவம் ராசா. இது போன்ற கலைஞரின்  நிலைப்பாடுகளை கண்டு கொள்ள அவஸ்யமில்லாமல் நிம்மதியாக உள்ளேயிருந்து கொண்டு கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி"யை படித்துக் கொண்டிருக்கக்கூடும்.

"இந்தியா இனியும் மவுனம் சாதிக்கக் கூடாது" என்று ஜெயலலிதா சொன்னதோடு மற்றொரு அன்புப் பரிசையும் கொடுத்துள்ளார். "இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்" என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

அய்யா கீ.வீரமணி அடுத்த பெரிய கொய்யாவை கொடுத்துள்ளார். 

"இனி ஈழப் போராட்டங்களை முன்னெடுத்து போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவை பன்னாட்டு நீதி மன்றத்தில் நிறுத்தாமல் விடப்போவதில்லை" என்று சூளுரைத்துள்ளார். இதற்குப் பின்னால் ஸ்பெக்ட்ரம் என்ற பூதம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுவோம். காரணம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதிது புதிதாக செய்திகள் கொடுத்தால் தான் ஒன்றை மறந்து விட்டு அடுத்த விசயத்திற்கு வருவார்கள். அடுத்து மருத்துவர் ராமதாஸ் வெகுண்டு எழுந்து விட்டார். அவரின் செலக்ட்டிவ் அம்னீசியாவை அவர் மகன் வெகு விரைவில் குணப்படுத்தக்கூடும்.   திருமா ஒருவேளை அடுத்து ஈழம் குறித்து தான் எழுதப் போகும் பத்திரிக்கை தொடருக்காகவோ அல்லது நடித்து பயமுறுத்தப் போகும் திரைப்படத்திற்க்கான முக்கிய வேலையில் இருக்கக்கூடும். 

இரண்டு வருடமாக மறந்துபோன் இந்த தலைகளுக்கு இப்போது ஒரு வாய்ப்பு.
மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் இப்போது அதிகமாக முணுமுணுக்கும் வார்த்தை போர்க்குற்றவாளி ராஜபக்ஷே.

அன்றாடம் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற ஆயிரத்தெட்டு அக்கப் போர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில் எவ்ர் இந்த ஈழப் போரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்?  கொஞ்சம் விவரமாக பேசினாலே பின்னங்கால் பிடறி தெரிந்து ஓடும் தமிழர்களுக்கு இந்த அட்டைக்கத்தி வீரர்கள் இன்னும் சில நாட்களுக்கு செய்திகளில் நிரம்பி வழியப் போகிறார்கள். 

தினந்தோறும் இவர்களின் பேச்சு குறிப்பிட்ட செய்திதாள்களில் ஏதோவொரு மூலையில் துணுக்கு செய்திகளாக வந்து கொண்டிருக்கும். லஞ்சம், ஊழலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது என்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த பிசாசுகளால் கொஞ்சம் கொஞ்சமாக பாடையில் போய்க் கொண்டிருக்கும் இந்த தமிழ்நாட்டு தமிழர்களில் எத்தனை பேர்களுக்கு பன்னாட்டு நீதிமன்றத்தை தெரியப் போகின்றது? போங்கடா பன்னாடைகளா? என்று நகர்ந்து போய் அடுத்த இலவச அறிவிப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

ஆனால் துண்டு துணுக்கு கூட இல்லாமல் முழுமையாக எரிக்கப்படாமலும், அறைகுறை உயிரோடு அள்ளிக் கொண்டு சேர்த்த உடல்களும், எரியாமலும், புதைக்க முடியாமலும் கொத்து கொத்தாக அள்ளிக் கொண்டு போய் தள்ளிய எண்ணிக்கையில் அடங்காத இறந்த அந்த ஈழ மக்களின் ஆத்மாக்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மன்னித்து விடுமென்று நாம் நம்புவோம். 

நம்பிக்கை தானே வாழ்க்கை.


இந்திய இறையாண்மைக்கு கட்டுபட்டவன் ரசித்த பேரூந்து நிகழ்வு.  நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி.


மன்மோகன் சிங் என்பவர் யார்?

அ) பொருளாதார நிபுணர்

ஆ) இந்தியப்பிரதமர்

இ) சோனியா காந்தியின் அடிமை

ஈ) காவலாளியா(சோளக்கொல்லை பொம்மையா) இருந்துக்கிட்டு திருட்டுக்கு நான் பொறுப்பல்ல என்று தப்பித்துக்கொள்ளும் ஆசாமி

உ) அவர் நல்லமனுசன், பதவிக்காலம் முழுக்க மூக்கபிடிச்சுக்கிட்டு அதுமேலயே உக்காந்திருப்பவர்.

ஊ) அமெரிக்காவின் கூலி ஆள்

எ) இலங்கைக்கு எடுபிடி வேலை செய்ய சோனியாவால் நியமிக்கப்பட்ட அல்லக்கை

ஏ) தான் யார் என்பதையே அடிக்கடி சோனியாவிடம் கேட்டு ஞாபகம் வைத்துக்கொள்ளும் அப்பிராணி.

ஐ) மேலே உள்ள அனைத்தும்

16 comments:

saarvaakan said...

உண்மை சுடுகிறது நண்பரே,

1.தமிழ் மக்களுக்கு சம உரிமை இல்லை
2.அமைதி போராட்டம்
3.ஆயுதப் போராட்டம்(வழங்கியவை பல நாடுகள்)
4 ஆய்தப் போராட்டம் இப்போது பயங்கரவாதியாக்கப் பட்டு அதே நாடுகள் துணை கொண்டு அழிப்பு

மீண்டும் முதலில் இருந்து
___________
இதில் நம்மூர் அரசியல் கோமாளிகள் எரியும் வீட்டில் கொள்ளி திருடுகிறான்.

ஐ.நா வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.
தோழர் கலையரசனின் பதிவையும் பாருங்கள்.
____________

http://kalaiy.blogspot.com/2011/04/blog-post_28.html

Bibiliobibuli said...

ஜோதிஜி, குமுறிக் கொண்டிருக்கிறீர்கள். அது எழுத்தில் தெறிக்கிறது.

புலிகளுக்கும், புலிகள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கும் இதைவிட கொடுமையான தண்டனை என்ன கொடுக்கமுடியும்.

புலிகளுக்கு உச்சபட்ச தண்டனையை ஏற்கனவே வழங்கிவிட்டார்கள் இலங்கையோடு சேர்ந்து இந்தியாவும், சர்வதேசமும்.

இப்போ புலிகளும் போய், அவர்கள் லட்சியமும் இழிவுபடுத்தப்பட்டாகிவிட்டது. இனி எஞ்சியுள்ள தமிழனுக்காக என்ன நீதியை புதிதாய் தேடிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

ஈழம் என்கிற சொல்லை வைத்து இன்னும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் உண்மையிலேயே வியக்கவைக்கிறார்கள்.

சுடுதண்ணி said...

ஐ.நா சபை ஒரு செத்த பாம்பு :(

நிகழ்காலத்தில்... said...

அரசியல்வாதிகளின் அலம்பல் மே 13 வரைதான், அதன் பின்னர் ஈழத்தமிழரை யாரும் நினைக்க மாட்டார்.

ஒரு வேளை தனி ஈழம் வேண்டும் என்பதே தான் அதற்கு முதலமைச்சராகினால் நன்றாக இருக்கும் என்ற கலைஞரின் எண்ணத்தினால்தான் என நான் நினைக்கிறேன்.

ரோஸ்விக் said...

சக்தி கல்வி மையம் said...

உங்களின் ஆதங்கம் பதிவில் தெரிகிறது..

தமிழ்மலர் said...

தனிஈழம் ஒன்று தான் மனித உயிர்களை குடித்த ராசபட்சேவுக்கு கொடுக்கும் உச்சகட்ட தண்டனையாக இருக்க முடியும்.

Anonymous said...

நம்பிக்கை தான் வாழ்க்கை. பீனிக்ஸ் பறவைகளாக மீண்டும் எழுவோம். இன்னும் இந்த நம்பிக்கை உள்ளது. ஆயினும் எம்மை எமது கண்ணீரில் உல்லாசக் கப்பல் விடும் இந்திய அரசியல் வியாதிகளை நினைத்தால் அச்சம் ஏற்படுகின்றது. இவர்களின் கோமாளிக் கூத்துகளால் மறுபடியும் பிணக் குவியலுக்குள் நின்று அவலக் குரல் எழுப்பும் நிலைவருமோ என்று.

தமிழ் உதயம் said...

இன்னும் சில தினங்களில் தெரிந்து விடுமே... இது நாடகமா... நிஜமா என்று.

http://rajavani.blogspot.com/ said...

"இம் என்றால் சிறைவாசம்? ஏன் என்றால் நரகலோகம்."

இங்கேயும் அப்படிதானே அன்பின் ஜோதிஜி.ஈழத்து பிரச்சனையை பொறுத்தவரையில்...

இளங்கோ said...

//ஆனால் இதைப் போன்ற பல படங்கள் கடந்த இரண்டு வருடத்தில் வந்து போய் இருக்கின்றது. இப்போது வந்துள்ள இந்த அறிக்கை கோப்பு என்பது சற்று மேம்பட்ட கோர்வையான படம். வேறொன்றும் புதிதில்லை.//
ஆமாம் ஜோதிஜி... இதுதான் உண்மை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
This comment has been removed by the author.
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு நன்று ஜோதிஜி!
பகிர்தலுக்கு நன்றி!

சத்ரியன் said...

செந்தில் ,

என் பதில் “ஐ”.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!தற்போதைய நிலையில் தமது தேவைக்கேற்ப ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளே மத்திய காங்கிரஸ் அரசை விட ஆபத்தானவர்களோ என்ற சந்தேகம் வந்து தொலைக்கிற படி தனித்தனியே குரல் கொடுக்கிறார்கள்.

ஒன்றாக சேர்ந்து துடுப்பு ஓட்டுவோம்.அலையைக் கடப்போம் என்கிற பொது அறிவு ஒருத்தருக்கு கூட வரமாட்டேங்குதே:)

Unknown said...

நடந்த அனைத்திற்க்கும் அனைவரும் காரணம்..இதில் ராஜபக்சே என்ன,கருணாநிதி என்ன,புலிகள் என்ன..தற்போதுள்ள தமிழன் எப்போதும் அடிமையாக இருக்கத்தான் சரியானவன்.