அலுவலகத்தில் எந்த வேளையிருந்தாலும் தினந்தோறும் மதியம் மூன்று மணிக்கு வீட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வது வழக்கம். அந்த நேரம் பள்ளி விட்டு மூவரும் வீட்டுக்கு வரும் நேரம். ஒருவர் மட்டும் சிலசமயம் தாமதமாக வருவார். காரணம் பள்ளி விட்டதும் நேராக விளையாட்டு மைதானத்திற்குச் சென்று களைத்துப் போகும் அளவுக்கு விளையாடி விட்டு வர மற்ற இருவரும் வந்து விடுகின்றார்கள்.
பள்ளியில் ஆறாவது வகுப்புக்கு மேல் தான் மாணவர்களை விளையாட்டு மைதானம் பக்கம் அனுப்புகின்றார்கள்.
கீழே உள்ள வகுப்பிற்கு பெயருக்கென்று ஏதோவொரு விளையாட்டை விளையாடச் சொல்லிவிட்டு கண்காணிப்போடு வகுப்பறைக்கு அனுப்பி விடுகின்றார்கள். ஆனால் வீட்டில் மூத்தவருக்கு படிப்பைப் போல விளையாட்டிலும் அதீத வெறி. பன்முகத் திறமைகள் கொண்ட குழந்தைகள் உருவாவது இயற்கை தந்த வரம்.
ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கும். பயிற்சி இல்லாமலேயே அவர் காட்டும் ஆர்வமும், முயற்சியும் வியப்பில் ஆழ்த்தும். தடை சொல்லாமல் அனுமதிப்பதால் அவராகவே உருண்டு புரண்டு கொண்டிருக்கின்றார்.
அருகாமைப் பள்ளியென்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் ஆயிரமாயிரம் சந்தோஷத்தை தரக்கூடியது. பள்ளியிலிருந்து தொலைவில் இருந்து வருபவர்கள் படும் பாட்டையும், பள்ளி வாகனங்களில் வந்து போகும் குழந்தைகளின் அவஸ்த்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதால் நகர்புற வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் ஏறக்குறைய நரகத்திற்கு சமமானதே.
எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கூப்பிடு தொலைவு தான். ஐந்து நிமிடத்திற்குள் நடந்து போய் விடலாம். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அவர்களின் அலுப்பை பார்க்கும் போது தொடக்கத்தில் பாடச் சுமையின் தாக்கமோ என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் நாள்பட அவர்களின் சுகவாசி தன்மையை உணர வைத்தது.
கிராமத்து பள்ளிகளில் ஐந்து கிலோ மீட்டர் மிதிவண்டி மூலம் பள்ளிக்கு வந்தவர்களும், நீண்ட தொலைவை நடந்தே வந்தவர்களையும் பார்த்த வாழ்க்கையில் அருகே உள்ள பள்ளியின் தொலைவை கணக்கீடும் போது பெரிய தூரமில்லை தான். ஆனால் இன்று குழந்தைகளின் உடல் வலுவின் தன்மை மாறியுள்ளது. ஓடி விளையாடிய காலம் மலையேறிவிட்டது. வீடு தான் மைதானம். கணினியும், தொலைக்காட்சியும் தான் விளையாட்டுப் பொருட்கள். இதுவே குழந்தைகளின் கண்களையும், கவனத்தையும் திருடிக் கொள்ள அடிப்படை ஆரோக்கியமும் அதோகதியாகிவிட்டது.
நடுத்தர வாழ்க்கையில் குறுகிய வீடுகளும், போராட்ட வாழ்க்கையும் ஓட வைத்துக் கொண்டிருக்க நாம் விரும்பிய வாழ்க்கையை விட கிடைத்த வாழ்க்கையை தக்க வைப்பதே பெரும்பாடாக உள்ளது.
ஒரே இடத்தில் உட்கார்ந்து பழகி விட்ட குழந்தைகளிடத்தில் ஆரோக்கிமென்பது அளவாகத்தானே இருக்கும்.
"அடைகோழியாட்டாம் என்னடா வீட்டுக்குளே?" என்று கேட்டு வெளியே விரட்டிய கிராமத்து வாழ்க்கையென்பது தற்போது "வெளியே போகாதே. கண்ணு மணணு தெரியாமா வர்றவன் மோத போறான்" என்று பயந்து வாழும் வாழ்க்கையில் சிலவற்றை இழந்து தான் குழந்தைகள் வளர வேண்டியதாக உள்ளது.
நாம் தான் காரணம்.
இதுவும் ஒருவகையில் நாம் உருவாக்கி வைத்துக் கொண்ட வசதிகளை யோசிக்க வைக்கின்றது. எது நமக்குத் தேவை? என்பதை விட நம் குழந்தைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஒவ்வொன்றாக சேர்த்து வைக்க அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாகவும் மாறிவிடுகின்றது.
காலை எழுந்தது முதல் எப்போதும் போல பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பல சமயம் கரையை கடக்கப் போகும் புயலைப் போல ஒவ்வொரு நிமிடமும் திகிலாக நகரும். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துக்களில் நான் கலந்து கொள்வதில்லை. காரணம் நாம் தான் கடைசியில் ப்யூஸ் போன பல்பு போல மாறிவிடும் அபாயமிருப்பதால் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.
வீட்டுக்குள் மூன்று பேர்கள் இருக்கின்றார்கள் என்று தான் பெயரே தவிர முப்பது பேர்கள் இருப்பதைப் போலவே ஒவ்வொரு முறையும் களேபரபடுத்துகின்றார்கள். ஓயாத பேச்சும், நிறுத்த முடியாத சண்டைகளும், விடாத கேள்விகளுமாய் காலையில் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டுக்குள் ஒரு போர்க்கள சூழலை கொண்டு வந்து விடுகின்றார்கள்.
பத்து வயதில் நாமெல்லாம் இப்படியா இருந்தோம்? என்ற வயதானவர்கள் எப்போதும் சொல்லும் கேள்விகள் மனதிற்குள் வந்து போனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டே வருவதுண்டு.
என்ன செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றார்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் தினந்தோறும் ஏராளமான பதில்களும் உடனடியாக கிடைத்து விடுகின்றது.
மூவரும் காலை எழுந்தது முதல் பள்ளிக்குச் செல்வது வரைக்கும் உண்டான ஒவ்வொரு அடியிலும் எவரோ ஒருவரின் சப்தம் ஓங்கியிருக்கும். தேவையிருக்கின்றதோ இல்லையோ எவரோ ஒருவர் மற்றொருவருடனும் வம்பிழுப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.
நிறுத்தவும் முடியாது.
அறிவுரையாகச் சொன்னாலும் எடுபடவும் செய்வதில்லை.
"வலுத்தவான் வாழ்வான்" என்று நினைத்துக் கொண்டு கவனித்தாலும் கடைசியில் அதுவும் தோற்றுப் போய்விடுகின்றது. சண்டைகள் உக்கிரமாகி என்னவோ நடக்கப் போகின்றது என்று யோசிக்கும் தருணத்தில் சம்மந்தமில்லாமல் வெள்ளைக்கொடி பறப்பதும், எதிர்பாராத சமயத்தில் வாள சண்டையின் ணங் டங் என்ற சப்தம் கேட்பதும் வாடிக்கை என்றாலும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்க்க வேண்டியதாக உள்ளது.
எதிர்பாராத சமயத்தில் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். உள்ளே நுழைந்த நாம் தான் பல்பு வாங்க வேண்டியதாக உள்ளது.
"என் பென்சிலை பார்த்தீங்களா?"
"என்னுடைய ஹோம் ஒர்க் நோட்டை காணல"
என்று தொடங்கி கடைசியில் "என் ஜட்டியை இவள் போட்டுக்கிட்டாள்" என்பது வரைக்கும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.
வெறும் கேள்விகளாக வந்துகொண்டிருக்கும் அவர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுக்கும் நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் திட்டுக்கள் வரும். நான் கண்டு பிடித்து தருகின்றேன் என்றாலும் "ஆமா நீங்க கண்டு பிடித்து தருவதற்குள் எங்க பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடுவாங்க" என்று நோ பால் ஆக்கும் தந்திரமும் நடக்கும்.
அவர்கள் தேடுகின்ற அனைத்தும் அருகே தான் இருக்கும். ஆனால் செயல்களின் அவசரமும், பொறுமையின்மையும் களேபரப்படுத்த நமக்கு அதிக கோபத்தை உருவாக்கினாலும் மூவரும் பள்ளிக்குச் சென்றதும் வீட்டைக் கவனித்ததால் வீட்டுக்குள் நிலவும் அமைதியென்பது நமக்கு தாங்க முடியாத வெறுமையை உருவாக்குகின்றது.


