Sunday, July 27, 2014

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......

அமெரிக்காவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்....."என்ற எனது தொடர் வெளிவரப்போகின்றது. 

ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் வெளிவரப்போகின்ற இந்தத் தொடருக்கு உங்கள் அனைவரின் ஆதரவைக் கோருகின்றேன். 

இந்தத் தொடர் எதைப் பற்றியது என்பதற்காக வலைதத்தமிழ் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் எழுதிய அறிமுகக் கட்டுரை இது. உங்கள் பார்வைக்கு. 

ணவு, உடை, உறைவிடம் என இந்த மூன்றையும் மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆதி காலத்து மனித சமூகத்தில் இந்த மூன்றுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றுமே அவரவர் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாகவே இருந்தது. காட்டில் கிடைத்த கிழங்கு வகைகளே உணவாக மாறியது. இலைகளே ஆடையாக இருந்தது.

மலைக்குகைகளே வசிக்கப் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறியது. இன்றைய சூழ்நிலையில் உணவு என்பது ருசியின் அடிப்படையிலும், ஆடைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும், உறைவிடம் அந்தஸ்தின் அங்கமாகவும் மாறியுள்ளது. ஆனால் இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டிய ஒன்று உண்டு. இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகள் பட்டினியுடன் தூங்கப் போவதும், சாலையோர குடிசைகளையே தங்கள் உறைவிடமாகக் கருதி வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.

ஆணோ, பெண்ணோ, ஏழையோ, பரமஏழையோ எவராயினும் உடைகள் இல்லாமல் வாழ முடிகின்றதா? மானத்தை மறைக்க என்கிற ரீதியில் ஒட்டுத்துணியாவது தங்கள் உடம்போடு ஒட்டிக் கொண்டு வாழ்பவர்களைத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது. அந்த உடைகளைப் பற்றித் தான் இந்தத் தொடரில் பேசப் போகின்றோம். 

நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம். 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலைகளிலும் இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட நவீன வளர்ச்சி வந்துள்ளது. மனித ஆற்றல் அதிக அளவு தேவைப்படாமல் எந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் நமக்குப் பல வசதிகளைத் தந்துள்ளது. ஆனால் பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இன்றும் மூன்று வேளை ரொட்டிக்காக மட்டுமே பணிபுரிபவர் லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். மனித மாண்புகளை உடைத்து எந்திரமாக மாற்றப்பட்ட மனிதக்கூட்டம் தான் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.

தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் சுவற்றில் காது வைத்துக் கேட்டால் நாம் விக்கித்துப் போய் நிற்கும் அளவிற்கு ஏராளமான சோகக்கதைகள் உண்டு. 

ஏனிந்த அவலம் என்பதனை நான் இருக்கும் சூழ்நிலையில், நான் பணிபுரிந்த திருப்பூர் நிறுவனங்கள் வாயிலாக உங்களுக்குச் சொல்லப்போகின்றேன். ஆடைகளை மட்டும் பேசப்போவதில்லை. ஆடைகளோடு பின்னிப்பிணைந்த நூலிழைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். நான் கடந்து வந்த பாதையை, பார்த்த, பழகிய, பாதித்த மனிதர்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

காதல், காமம்,ஏக்கம், இயலாமை, வன்மம், குரோதம்,பித்தலாட்டம் எனக் கலந்து கட்டி கதம்பம் போல் உள்ள இந்தக் கவுச்சி வாடையைத்தாண்டி கண்ணாடி ஷோரூம் வரைக்கும் பயணித்து வரும் இந்த ஆடைகளைப்பற்றிப் பேசப் போகின்றோம். 

எந்தத் தினத்தில் இருந்து இந்தத் தொடர் தொடங்கும் என்று கேட்கின்றீர்களா? வரும் ஆகஸ்ட் 1 முதல் வலைத்தமிழில் இணையத் தளத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும். உங்கள் ஆதரவை, விமர்சனத்தில் வாயிலாகத் தெரியப்படுத்தலாமே? என்னை உழைக்கத் தூண்டும் அல்லவா? உங்கள் ஆதரவினைக் கோரும். 

-ஜோதிஜி திருப்பூர். 

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் தொடரை படிக்க :

(ஒவ்வொரு வாரமும் இதே பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்)


சென்ற பதிவான ஐந்தாம் வருட நிறைவு நாளுக்காக நான் எழுதிய பதிவுக்கு விமர்சனத்தின் மூலம் ஊக்கமும், நிறை குறைகளைச் சுட்டிக் காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எழுதுவதும் ஒரு பயிற்சியே. நான் எழுத்துலகில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதை உணர்ந்தே வைத்துள்ளேன். 

நான் சார்ந்துள்ள ஏற்றுமதி தொழில் வாழ்க்கை கொஞ்சம் எழுத்து வாழ்க்கை கொஞ்சம் என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பதால் என் எழுத்து நடையில், சொல்லவரக் கூடிய கருத்துக்களில் பல சமயம் குழப்பம் கும்மியடிக்கத் தான் செய்கின்றது. நிச்சயம் இந்தத் தவற்றைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கின்றேன். இதன் காரணமாக இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆய்த்த ஆடைத்துறையில் பல வருடங்கள் இருந்து விட்டுத் தற்போது வேறு துறைக்கு மாறிவிட்ட என் நெருங்கிய நண்பர் திருத்தி தர சம்மதம் தந்துள்ளார். இதன் மூலம் மேலும் மெருகூட்டும் என்றே நம்புகின்றேன். 

ஒவ்வொரு சமயத்திலும் விமர்சனத்தின் வாயிலாக நண்பர்கள் சுட்டிக் காட்டியுள்ள பல குறைகளை இந்தத் தொடர் மூலம் சரி செய்து சரியான முறையில் எழுத முடியும் என்றே நம்புகின்றேன். 

வலைத்தமிழ் நிர்வாகத்தில் உள்ள அனைத்து அங்கத்தினர்களுக்கும் நண்பர் பார்த்தசாரதிக்கும் என் அன்பு கலந்த நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

Thursday, July 03, 2014

ஐந்தில் கற்றதும் பெற்றதும்

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது செயல்படாத நிலையில் வாழ்ந்தாலும் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. நாம் சுகமாய் இருக்கின்றோம் அல்லது சோகத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எதுவும் இங்கே மாறிவிடப்போவதில்லை. இங்கே ஒவ்வொன்றின் முடிவும் நொடிப் பொழுது மட்டுமே. அடுத்தடுத்து அதன் போக்கிலேயே நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.  இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை எனக்கு வெறுமனே செய்தி மட்டுமே. என்னை, என் குடும்பத்தை தாக்காத வரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் கடந்து போக வேண்டிய, மறுநாள் பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகவே உள்ளது.  ஒவ்வொருவருக்கும் இப்படித்தான்.  இதனால் தான் இந்தியாவில் எந்த பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக மாறாமல் துணுக்கு செய்தியாகவே மாறி விடுகின்றது.

பச்சாதாபத்திற்கோ, பரிதாபப்படுவதற்கோ எவருக்கும் நேரம் இருப்பதில்லை. எதிர்பார்ப்பதில் பலன் ஒன்றுமில்லை.  ஏமாற்றங்களை, சோகங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தால் தான் இங்கே உயிர்ப்புடன் வாழ முடியும்.  நம் தேடல் மட்டுமே நம்மை இயக்குகின்றது. தேடிச் சென்றால் மட்டுமே துன்பம் விலகுகின்றது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகின்றது. நம் ஆசைகளின் எல்லைகளையும், நமது தகுதியையும் இணைத்துப் பார்க்கும் போது மட்டுமே நம் வாழ்க்கையில் அமைதி உருவாகின்றது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான தமிழ் இணையத்தின் ஆழமும் அகலத்தையும் குறித்து அப்போது எனக்கு அதிகம் யோசிக்கத் தெரியவில்லை. நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்தது போலவே இருந்தது.  ஆனால் இன்று? பலரும் என்னை கவனித்துள்ளனர். சிலரை என் எழுத்து மூலம் திருப்திப் படுத்தி உள்ளேன். வாசித்த அந்த பத்து நிமிடத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்துள்ளேன். என் குடும்பத்தை நினைத்துள்ளேன். ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குழந்தைகளை நினைத்து ஏங்கியுள்ளேன் என்று உரையாடலில், விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர். 

வியப்பாகவே உள்ளது.

உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள இணையத்தில் யாரோ ஒருவர் ஏதோவொரு இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் தன் கருத்து என்று ஏதோவொன்றை சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாம் விழித்திருந்தாலும், கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் தமிழ் இணையம் அதன் சுறுசுறுப்பை இழந்து விடுவதில்லை. நாளுக்கு நாள் இதன் வேகம் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது.  எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தெரியாதவர்களுக்கும், எதையாவது எழுதி மற்றவர்கள் நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட வேண்டும் என்பவர்களுக்கும் மத்தியில் தான் தமிழ் இணையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

முறைப்படி பயன்படுத்தத் தெரியாதவர்கள் படும் அவஸ்த்தைகளும், இதுவே தான் வாழ்க்கை என்பதை தப்பாக உணர்ந்தவர்களுக்கும் இடையே உள்ளவர்கள் தான் அளவோடு பயன்படுத்தி வளமோடு இருப்பவர்கள்.  இந்த இடைப்பட்ட நபராகவே இதில் இருந்து வருகின்றேன்.

பெரும் பொறுப்புகளில் இருந்து கொண்டு நம் விருப்பம் சார்ந்த செயல்பாடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டு அது நிறைவேறாத பட்சத்தில் சமூகத்தின் மீது, வாழும் வாழ்க்கையின் மீது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான தோல்விகள் அது தந்த வலிகள். ஏராளமான ஏமாற்றங்கள் அதனோடு சேர்ந்து வந்த அவமானங்கள் என்று எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன். சிறிது சிறிது என்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளேன். என் நடை,உடை,பாவனை, பேசும் விதம், உடல் மொழி என்று எல்லாவிதங்களிலும் கவனம் செலுத்தியுள்ளேன். முடிந்தவரையிலும் என்னைப் பற்றி அடுத்தவர்கள் சொல்லுகின்ற விமர்சனங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளேன். அடுத்தடுத்த நிலையை அடைய போராடியிருக்கின்றேன். அடைந்தும் உள்ளேன்.  

ஆனால் ஒவ்வொன்றையும் விருப்பப்பட்டு செய்துள்ளேன். வாழ்கின்ற ஒவ்வொரு நாளையும், அது வெற்றியோ தோல்வியோ ரசனையோடு பார்க்க, வாழப் பழகியுள்ளேன்.  ஆற்ற முடியாத காயங்களோடு வாழ்பவர்களையும், உழைக்க முடியாதவர்கள் காட்டக்கூடிய பொறாமையையும், அடக்க முடியாத இச்சைகளுடன் இருப்பவர்களையும், என்ன தான் நெருக்கமாக பழகினாலும் கட்சி, மதம், சாதி ரீதியான கொள்கை வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தோடு பார்ப்பவர்களையும் அமைதியாக கவனிக்கும் மனத்துணிவை பெற்றுள்ளேன்.

இதனை எழுத வந்த பிறகே நான் அதிகம் பெற்றுள்ளேன். இதன் காரணமாகவே இந்த எழுத்துலக பயணத்தை அதிகம் நேசிக்கின்றேன். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதனை எதிர்பார்க்காமல் நான் பார்க்கும் சமூகத்தை என் மொழியில் எழுதி வைத்து விட வேண்டும் என்பதை தீரா வெறி போல தீர்க்க வேண்டிய கடமை எனக் கருதி கடந்த ஐந்து வருடமாக எழுதி வந்துள்ளேன். 

இணையத்தில் செய்து கொண்டிருக்கின்ற "மார்க்கெட்டிங் யூக்தி"களின் மேல் கவனம் செலுத்தாமல் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து இந்த எழுத்துலக பயணத்திற்காக ஒவ்வொரு நாளின் இரவிலும் தூக்கத்தை துறந்து இஷ்டப்பட்டு உழைத்துள்ளேன். இணையம் தான் எனக்கு எழுதக் கற்றுத் தந்தது. இணையத்தில் அறிமுகமானவர்களே வழிகாட்டியாய் இருந்தார்கள். வழி நடத்தினார்கள். விமர்சித்தவர்கள் கற்றுத்தந்த பாடத்தின் மூலம் அடுத்தடுத்து நகர்ந்து வந்துள்ளேன். 

இணையத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று நான்கு மின் நூல்களை அளித்துள்ளேன். இதற்கு வாய்ப்பளித்த திரு. சீனிவாசன் மற்றும் அவருக்கும் உறுதுணையாக இருக்கும் திரு ரவி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  

கீழே குறிப்பிட்டுள்ள நான்கு மின் நூல்களும் இன்று வரையிலும் 35,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. 


தமிழர் தேசம்                                                    கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

தேவியர் இல்லம் வலைபதிவை படிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை எட்டு லட்சம். வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,000.

சென்ற வருடம் 4தமிழ்மீடியா படைப்பாய்வகம் மூலம் எனது முதல் புத்தகமான டாலர் நகரம் என்ற புத்தகம் வெளிவந்தது. விரைவில் என் அடுத்த புத்தகத்தை மற்றொரு பதிப்பகம் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர். அது குறித்து விரைவில் அறிவிக்கின்றேன்.

கடந்து போன ஐந்து வருடங்களில் நான் எழுதாமல் இருந்த இடைவெளியை கணக்கிட்டுப் பார்த்தால் முழுமையாக நான்கு வருடங்கள் இணையத்தில் செயல்பட்டுள்ளேன். இதுவரையிலும் இரண்டு தளங்களின் வாயிலாக எழுதப்பட்ட 664 பதிவுகளில் 90 சதவிகிதத்தை முறைப்படி ஆவணமாக்கி விட முடிந்துள்ளது. 

ஏனைய பிற சமூக வலைதளங்கள்,மற்றும் என் பதிவின் வாயிலாகவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் 6500 க்கும் மேற்பட்ட நட்புகளுக்கும், என் எழுத்துப் பயணத்தில் பல விதங்களிலும் எனக்கு உதவிய எண்ணிக்கையில் அடக்க முடியாத நட்புகளுக்கும் இந்த இடத்தில் என் மனமார்ந்த நன்றியுடன் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதனையும் இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

03.07.2014

தொடர்புடைய பதிவுகள்

கடந்து வந்த பாதை

Wednesday, July 02, 2014

அங்கீகாரமும் அவஸ்த்தைகளும்

மறதியென்பது மனிதனின் வரம். பலசமயம் ஒருவன் பைத்தியமாக மாறாமல் இருக்க இந்த மறதியே உதவுகின்றது. இதைப்போலத் தன்னைச் சார்ந்த பலவற்றை மறைத்துக் கொள்வதன் மூலம் சில சமயம் வளர்ச்சியும் பல சமயம் அவமானங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது. இந்த இரண்டுக்குள் தான் ஒவ்வொருவரின் அந்தரங்கமும் உள்ளது.

ஆனால் வளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்பத்தால் இனி எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் தேவையில்லை என்று சமூகம் சார்ந்த சூழ்நிலைகள் ஒவ்வொருவரையும் மாற்றிக் கொண்டே வருகின்றது. ஒரு குடும்பம் சார்ந்த அத்தனை அந்தரங்களும் இன்று சமூக வலைதளங்களில் விருப்பத்துடன் பகிரப்படுகின்றது. பிற்நத நாள், இறந்த நாள் என்று தொடங்கிக் கணவன் மனைவி அந்தரங்கள் வரைக்கும் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு எழுத்தாக வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனோநிலையோடும் காத்திருக்கின்றார்கள்.

திருப்பூரில் கடந்த இருபது வருடங்களில் ஒவ்வொரு ஐந்து வருடங்களையும் நான் முக்கியமாகக் கருதுவதுண்டு. காரணம் ஒரு ஐந்து வருடத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி, வீழ்ச்சி என்பதைச் சற்று நிதானமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள், அழிந்து போனவர்கள், அழிக்கப்பட்டவர்கள், அசாத்தியமான உயரத்தை எட்டியவர்கள் என்று ஏராளமான ஆச்சரியத்தைக் கடந்த இருபது வருடத்தில் பார்த்துள்ளேன். இதற்குப் பின்னால் எண்ணிக்கையில் அடக்க முடியாத ஒரு சமூகக்கூட்டம் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஏராளமான அனுபவங்களை உணர்ந்துள்ளேன்.

அதைப்போலத்தான் நான் இணையத்தில் நுழைந்த போது எனக்குக் கிடைத்த அனுபவங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்கள் எனக் கற்றதும் பெற்றதையும் இந்த ஐந்தாம் ஆண்டின் இறுதியில் எழுதி வைத்துவிட வேண்டும் என்று தோன்றியது. எப்போதும் நண்பர்கள் சொல்லும் சிறிய பதிவாகக் குறிப்பிட்ட விசயங்களோடு என் சமூகம் சார்ந்த பார்வையைப் பதிவுகளாக மாற்றி வைத்து விடுகின்றேன்.

ஊருக்குச் செல்லும் போது தாத்தா வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதுண்டு. அந்த இடம் தற்பொழுது வேறொருவர் கைக்குப் போய்விட்டது. கேட்பாரற்று வேலிக்கருவைச் செடிகள் மண்டி சுற்றிலும் வேலி போட்டு இடம் என்றொரு பெயரில் வைத்துள்ளனர். பல முறை முள்கம்பிகளை ஒதுக்கி உள்ளே சென்று அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது தாத்தாவுடன் பேசிய தினங்கள், பள்ளிக்கூட ஞாபகங்கள் ஒவ்வொன்றாக என் மனதில் வரும். அது போலத்தான் வேர்ட்ப்ரஸ் ல் முதன் முதலாக எழுதிய தினமும், அன்றைய தினத்தின் மனநிலை, அப்போது என் வாழ்க்கை இருந்து சூழ்நிலை என்று ஒவ்வொன்றும் இப்போது என் நினைவுக்கு வந்து போகின்றது.



2009 ஜுன் மாதம் இறுதியில் தமிழ் இணையம் அறிமுகமானதும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் எழுதத் தொடங்கியதும் எனத் தொடங்கிய என் எழுத்துப் பயணத்தின் வயது ஐந்து. இணையம் தொடர்பு இல்லாமல் எழுத்தாளர்களாக முப்பது வருடங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், இணையத்தில் பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் என ஏராளமானோர் இங்கே இருந்தாலும் மொத்தமாக இது சார்ந்த அனுபவங்களை எவரும் இங்கே எழுதவில்லை என்றே நினைக்கின்றேன்.

தாங்கள் பார்த்த படங்கள், பயணித்த ஊர்கள், சந்தித்த மனிதர்கள் என்று அனுபவங்களைப் பகிர்பவர்கள் தாங்கள் வாழும் சமூகம் குறித்த பார்வையை எழுத எல்லோருக்கும் ஒரு சிறிய தயக்கம் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் குறிப்பாகத் தங்களின் இணையம் சார்ந்த அனுபவங்களை ஒவ்வொரும் கடந்து போகவே விரும்புகின்றனர். அவரவருக்கு அந்தச் சமயத்தில் தோன்றியதை அவரவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்து விட்டு நகர்ந்து விடுவதும், அலுப்பு வந்த போது அல்லது எழுத முடியாத சூழ்நிலை உருவாகும் போது அது ஒரு கனாக்காலம் என்று மனதிற்குள் வைத்துக் கொண்டு மருகிக் கொள்வதுமான உணர்வு தான் இங்கே பலருக்கும் இருக்கின்றது.

ஏன் எழுதுகின்றாய்? என்ற கேள்வியும் எழுதி என்ன ஆகப்போகின்றது? என்ற கேள்வியும் எனக்கு அதிக ஆச்சரியம் அளித்தது இல்லை. ஆனால் நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு. நுட்பமான உணர்வுகள் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விட்டது. ரசிப்பின் தன்மையும் ரசனைகளின் அளவுகோலும் மாறிவிட்டது.

நம் ஆசைகள் நம்மை வழிநடத்துக்கின்றது. இறுதியில் ஆசைகளே நம்மை ஆளவும் செய்கின்றது.

எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த அங்கீகாரம் எதற்காக? என்று யோசித்தால் அதனால் ஒரு பலனும் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும்.

1947க்குப் பிறகு தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபல்யங்கள், எழுத்தாளர்களில் இன்று எத்தனை பேர்களின் பெயர்களை நம்மால் நினைவு வைத்திருக்க முடிகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து மறைந்தவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தனை வேலைகளைச் செய்து இருப்பார்கள்.

ஏன் காணாமல் போனார்கள்?

காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது.

என்னை யாராவது நினைவில் வைத்திருப்பார்களா? என் எழுத்தை அடுத்தத் தலைமுறைகள் படிப்பார்களா? என்று யோசிப்பதை விட அதற்கான வழிமுறைகளை உருவாக்கி விட்டு அமைதியாக ஒதுங்கி விடுவதே உத்தமம். காரணம் அறிவை விட அறியாமை தான் மிகப் பெரிய வரம். காலம் காலமாக அறியாமையுடன் வாழ்ந்தவர்கள் தான் வாழ்க்கை முழுக்கக் குறைவான வசதிகளுடன் வாழ்ந்த போதிலும் அமைதியாய் வாழ்ந்து மடிந்துள்ளனர்.

அறிவுடன் போராடி மல்லுக்கட்டிய அத்தனை பேர்களும் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு, ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு உதவியிருக்கின்றனரே தவிரத் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி இழந்து, அங்கீகாரத்தை எதிர்பார்த்து, வாழும் போது கிடைக்காமல், மற்றவர்களால் புறக்கணிப்பட்டு மறைந்தும் போயுள்ளனர்.

அங்கீகாரத்தின் தேவையை நாம் தான் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

அமைதியான கவனிப்பு, பரவலான கவனிப்பு, ஆர்ப்பட்டமான கவனிப்பு என்ற இந்த மூன்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால் உங்கள் கடமையை அமைதியாகச் செய்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விட முடியும் தானே?

Tuesday, July 01, 2014

பாவம் அப்பாக்கள்

வாசித்து முடிக்க முடியாத பெரிய புத்தகத்தைப் போல, வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத எழுத்து நடையைப் போலத்தான் அப்பாக்கள் இருக்கின்றார்கள். 

கிராமத்து, நகர்புறங்களில் வாழும் அப்பாக்கள் என்று வகையாகப் பிரிக்கலாமே தவிரக் காலம் காலமாக அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் உண்டான 'சீனப்பெருஞ்சுவர்' இன்று வரையிலும் உடைந்த பாடில்லை. சாதாரண மனிதர்கள் முதல் வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் வரைக்கும் தங்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமென அவரவர் அம்மாக்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றார்கள். விதையாக இருக்கும் அப்பாக்கள் காலப்போக்கில் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள். 

நான் எழுதத் தொடங்கிய போது அப்பாவைப்பற்றித்தான் எழுதினேன். அது சரியா? தவறா? என்று கூடத் தெரியாமல் அவரால் உருவாக்கப்பட்ட தாக்கத்தை எழுத்தாக மாற்றி என் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினேன். எழுதி முடித்த போது நம்பிக்கை வந்தது. எழுதுவற்கு நமக்கு விசயம் இருக்கிறது என்ற எண்ணம் உருவானது. தொடர்ந்து எழுத முடிந்தது. உள்ளுற இருக்கும் ஓராயிரம் அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. 

நம்மால் முடியுமா? என்பதன் தொடர்ச்சி தான் தவறாக வந்து விடுமோ? என்ற எண்ணம். நம் தைரியமே முதல் அடியை எடுத்து வைக்க உதவும். உள்ளுற உழன்று கொண்டிருக்கும் வரையிலும் எந்தக் கருத்துக்களும் சிந்தனைகளாக மாறாது.  நம் திறமைகளும் வெளியே வருவதில்லை. 

நமக்கு இப்படி ஒரு திறமை உண்டா? என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் நம் அன்றாட நெருக்கடிகள் பலரையும் அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் உணரவே வாய்ப்பில்லாத திறமைகளை நாம் வாழ்க்கையில் உருவாகும் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் காட்டிக் கொடுத்து விடும். நம்மால் இது முடியுமா? என்ற யோசனை மாறி நாம் இத்தனை நாளும் உணராமல் இருந்துள்ளோமே? என்று வெட்கபட வைக்கும்  

அப்படித்தான் இந்த எழுத்துப் பயணம் உருவானது. 

முழுமையான மனிதர்கள் என்று இங்கு எவருமே இல்லை. எல்லோருமே ஏதோவொருவகையில் அரைகுறையாகத்தான் இருக்கின்றோம். ஆனால் நாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவரவர் சாதனைகளின் அளவுகோல் வேறானதாக இருக்குமே தவிர அதுவும் ஒரு சாதனை தான் என்பதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே. 

வாழ்வில் சாதித்தவர்களிடம் உள்ள சல்லித்தனமான புத்திகளும், வாழ்க்கை முழுக்கச் சங்கடங்களுடன் வாழ்ந்தாலும் தரமாக வாழ்க்கை நடத்துபவர்களும் என நம்மைச்சுற்றியுள்ள கூட்டுக்கலவை மனிதர்கள் மூலமே நாம் பலவற்றை கற்றுக் கொள்ள முடிகின்றது. நாம் அதனை எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம்? எப்படி உள்வாங்கியுள்ளோம்? என்பதில் தான் நம் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. 

ஒரு தனி மனிதனின் குணாதிசியங்களில் பெற்றோர்களின் அறிவுரையும் ஆலோசனைகளும் கால் பங்கு தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒருவன் வளரும் சூழ்நிலை தான் அவனை உருவாக்குகின்றது. காலம் அவனை உருவமாக்கின்றது. 

தவறான பாதைகளில் சென்றால் தான் சீக்கிரம் முன்னேற முடியும்? என்று எந்த பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்களா? எந்த ஊரில் வாழ்ந்தாலும், குழந்தைகளுக்குக் காலம் காலமாகப் புராண இதிகாசங்களையும், நன்னெறி நூல்களில் உள்ள உபதேச கருத்துக்களையும் தானே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். 

நாகரிகம் வளர்ந்துள்ளது என்று நம்பப்படும் இந்தக் காலத்தில் வக்கிர மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தானே உள்ளது. இங்குத் தான் புரிதலில், உணர்தலில் உள்ள தவறுகளும் சேர்ந்து கூட்டுக்கலவையாகி மனித எண்ணங்களாக மாறிவிடுகின்றது. 

இங்கே எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் எந்த மாறுதல்களும் உடனடியாக உருவாகவில்லையே? 

மேம்போக்கான எழுத்தை தவமாக நினைத்து எழுதுபவர்கள் எல்லாச் சமயங்களிலும் கொண்டாட்ட மனோநிலையை உருவாக்குபவர்களாக இருக்கின்றார்கள். அதையே கடைசி வரையிலும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் வாழ்வதே சரியான வாழ்க்கை என்று கருதிக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அதுவே மொத்த சமூகத்தின் எண்ணமாக மாறும் போது புகையால், குப்பையால் சூழப்பட்ட எண்ணமாக மாறிவிடுகின்றது.  

எழுதுவது எப்படி? என்று யோசிப்பவர்களும், தொடர்ந்து எழுதுவது எப்படி? என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் முதலில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி யோசித்தாலே போதுமானது. வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து "பொன்னியின் செல்வன்" கதை போல நமக்குக் கிடைக்கும். 

ஆனால் நாம் முகமூடி அணிந்து கொண்டு புது அவதாரம் எடுக்கவே விரும்புகின்றோம். புரட்சியாளராக, புதுமை விரும்பியாக நிஜவாழ்க்கையில் சாதிக்க முடியாதவற்றை எழுத்து வழியே அடைய விரும்புகின்றோம். உள்ளே இருக்கும் மனப்பிறழ்வை இறக்கி வைத்து இறுதியில் அவற்றை ரசித்துப் பழகிடவும் மாறிவிடுகின்றோம்.