Thursday, September 26, 2013

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

கடந்த ஒரு வருடமாக புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டுக்குள் அங்கங்கே அடைந்து கிடைக்கும் புத்தகங்களை ஒவ்வொரு முறையும் பிரித்து அடுக்கி தூசியை தட்டி வைக்கும் போது உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. புத்தகங்களை ஆசைப்பட்டு வாங்கிய போது உண்டான ஆர்வம் அதை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை என்ற நொண்டிச்சாக்கில் அடுக்கி வைக்கப்பட்ட பொருளாகவே இருந்து விடுகின்றது.  

ஆனால் இயற்கை, நமது ஆதாரமான விவசாயம், தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தேடத் தொடங்க உள்ளே இருந்த ஒவ்வொரு புத்தகத்திற்கும் மீண்டும் உயிர் வந்தது.  

நான் படித்த சில புத்தகங்களைப் பற்றி இங்கே தருகின்றேன்.

டாலர் நகரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் மருத்துவர் வெ. ஜீவானந்தம் அவர்கள். 

நிஜ வாழ்க்கையிலும் மிகச் சிறந்த சமூக சேகவர். காந்தியவாதி. ஈரோட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தமிழக பசுமை இயக்கம் மற்றும் மருத்துவ துறையில் எளிய மக்களுக்கு விளம்பரம் ஏதுமில்லாது பல சேவைகள் செய்து கொண்டிருப்பவர்.  அவரின் தந்தையும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வெங்கடாஜலம் அவர்கள் இறந்த செய்தி கிடைத்த போது அவரின் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றேன். அப்போது அவர் ஒரு புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார்.

1. இயற்கைக்குத் திரும்பும் பாதை

இது மொழிபெயர்ப்பு புத்தகம்.  மொழிபெயர்த்தவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.  

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கையின் மேல் மாறாத பற்று கொண்டு, மேலைநாடுகளுக்கு தன் கருத்துக்கள் மூலம் பல மாறுதல்களை உருவாக்கி சாதித்துக் காட்டிய மசானபு ஃபுகோகா எழுதியது.

இவரைத்தான் நம்முடைய இயற்கை வேளாண் அறிஞர் டாக்டர் கோ. நம்மாழ்வார் அவர்கள் தன்னுடைய குருவாக அடையாளம் காட்டுகின்றார்.

இந்த நூலைப் பற்றி  நம்மாழ்வார் கூறியிருப்பது............

எனக்கான என் பாதையை வகுத்துக் கொடுத்த ஞானத் தந்தை மசானபு ஃபுகோகா.  இந்த நூல் பல இரவுகள் என்னை தூங்கவிட்டதில்லை.  இதுவரை நாம் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து பெரியதோரு நம்பிக்கையை வழங்கும் வல்லமை கொண்டது இந்த நூல். அயராது சமூகத்திற்கு உழைக்கும் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது. என் தோழர்கள் தமிழில் இதனை வெளியிடுவது கூடுதல் அகமழிச்சியை உண்டாக்குகின்றது.  

நிதானமாக வாசியுங்கள்.  நிறைய நண்பர்களுக்கு பரிசளியுங்கள்.  இந்த நூலை படிப்பதும், பரப்பவதும் என்னைப் பொறுத்தவரை புண்ணியம்.  நானும் நீங்களும் சந்திக்கும் அந்த சந்திப்பில் இயற்கைக்குத் திரும்பும் பாதையைப் பற்றி உரையாடுவோம்.  அதற்காக காத்திருக்கிறேன்.

(தொடர்புக்கு இயல்வாகை பதிப்பகம் 99 65 68 89 020.  805 620 050 53)

2. கோவணாண்டி கடிதங்கள் (விகடன் பிரசுரம்)  

இந்த புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படிக்கும் போது நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது. மீண்டும் மீண்டும் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. 

கடித வடிவில் எழுதப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் படித்தவுடன் உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. நாண்டுக்கிட்டு செத்து விடலாம் என்கிற அளவுக்கு நக்கல் நையாண்டியுடன் அரசியல், அதிகாரவர்க்கத்தினரை பார்த்து பல கேள்விகளை எளிய மொழியில் பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கின்றது.

கோவணாண்டி என்ற பெயரில் எழுதுவர் யாரென்று எவருக்கும் தெரியாது. ஆனால் அவர் தன்னைப் பற்றி இவ்வாறு சொல்கின்றார்.

விவசாயிகளுக்கு என்றாவது ஒரு நாள் விடிவு வந்து சேர்ந்திடாதா? என்ற ஏக்கத்துடன் அலையும் ஏகலைவன்.

இந்த புத்தகத்தில் கேட்டுள்ள ஒரு கேள்வி.?

ஒவ்வொரு கட்சியிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. மருத்துவர் அணி, இளைஞர் அணி என்று.  எந்த கட்சியிலாவது சுற்றுச்சூழல் அணி என்று ஒன்று உள்ளதா?

3. விவசாயிகளைப் பாதுகாப்போம்.

ஈரோட்டைச் சேர்ந்தவரும், பாரதி வாசகர் வட்டம் என்ற அமைப்பை நடத்திவரும் விவசாயி திரு.  சு. சண்முகவேல் எழுதியுள்ளார். 

இந்திய விவசாயத்தைப் பற்றி படித்தவர்கள் பார்வை வேறு விதமாக உள்ளது. கார்ப்பரேட் தனமாக மாற்றி, மேலைநாடுகளில் உள்ளதைப் போல பண்ணை ரீதியான முயற்சியில், நவீன விஞ்ஞானத்தை புகுத்தினால் மட்டுமே இனி உயிர்பெறும் போன்ற வாதத்தை தனது உண்மையான உருப்படியான ஐந்து நிலை செயல்திட்டத்தினை  நூலாசிரியர் கொடுத்துள்ளார்.  

ஒரு விவசாயி விளைவிக்கும் பொருளை கடைசி வரைக்கும் சந்தைப்படுத்தும் நிலையில் என்ன சாத்தியக்கூறுகள், நமக்கான வாய்ப்புகள், அரசாங்கம் செய்ய வேண்டியது, செய்யாமல் இருப்பது போன்ற அனைத்தையும் படங்கள் மூலம் பட்டவர்த்தனமாக எழுதியுள்ளார். ஆதாரப்பூர்வமான சாத்தியக்கூறுகள்.

இவர் சொல்லியுள்ள அனைத்து வழிகளிலும் சாத்தியமானதே.  

ஆனால் நமது விவசாயத்துறையில் உள்ள அதிகாரவர்க்கத்தினரின் தூக்கம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட லாபங்களை வைத்துப் பார்க்கும் போது இது வெறுமனே கனவாகவே போய்விடுமோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

4. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்.

கோ. நம்மாழ்வார். (புத்தகதொடர்புக்கு 944 25 31 699)

இந்த புத்தகத்தை நண்பர்கள் சிலர் பலமுறை என் பார்வைக்கு கொண்டு வந்த போதிலும் பல புத்தகங்களுடன் அடுக்கி வைக்கப்பட்டதாகவே என் பார்வையில் இருந்தது.  

ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

குறிப்பாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெயரும் புகழையும் சம்பாரித்துக் கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து அங்கங்கே லேசாக சுட்டிக் காட்டிக் கொண்டே சென்றாலும் இவரைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்த போது 
எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மட்டும் ஏனிந்த சிறப்பு. இது குறித்து நம்மாழ்வார் இவரின் பின்புலம், கடந்து வந்த பாதை போன்றவற்றை சுட்டிக்காட்டிக் கொண்டே வருகின்றார்?

நம்முடைய இந்திய ஜனநாயக ஆட்சியென்பது குறிப்பிட்ட சில நிறுவனங்களால் நடத்தப்படுவது. இதுபோன்ற நபர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும் என்பதை இந்த புத்தகம் பல இடங்களில் தெளிவாக புரியவைக்கின்றது.

இந்த புத்தகத்தை படித்து முடித்த போது எனக்கு மற்றொன்று மனதில் தோன்றியது.   

குறிப்பாக அமெரிக்கா என்ற நாட்டை எல்லாவகையிலும் நாம் குற்றம் சாட்டுகின்றோம்.ஒவ்வொரு முறையும் அங்கே அதிபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். சிலர் இரண்டு முறை அதிபர் பதவியை வகிக்கின்றார்கள். 

ஆனால் அந்த நாட்டின் அதிகாரவர்க்கத்தினரின் கொள்கைகள், நோக்கங்கள் என்பது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் இருந்து அடிக்கப்படவேண்டிய கொள்ளை என்பதாக இருந்தாலும் அது ஒவ்வொரு சமயத்திலும் கவனமாக பத்திரமாக கொள்கை ரீதியாகவே கொண்டு வரப்படுகின்றது என்பது தான் மகத்தான ஆச்சரியமாக  உள்ளது.

அங்கே அரசியல் வேறு .  நாட்டு நலன் என்பது வேறு.  இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. 

அமெரிக்காவினால் உருவாக்கப்படும் எண்ணெய் அரசியல் என்பது பல நாடுகள் பாதிக்கப்பட்டு அங்கே விழும் பிணங்கள் குறித்து எந்த அமெரிக்கனும் அலட்டிக் கொள்வதில்லை என்பதைப் போல உலகில் உள்ள அத்தனை நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போன்ற அவர்களின் திட்டங்களை இந்த புத்தகங்களில் உரையாடல் பகுதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

குறிப்பாக 1952  முதல் நம் நாட்டின் விவசாயம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய மற்றும் ஆப்பிரக்க கண்டங்களின் உள்ள வளரும் நாடுகளின் மரபினி மாற்றப் பயிர்களைத் திணிக்க ஐக்கிய அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனமானது  US AID , US AGENCY FOR INTERNATIONAL DEVELOPMENT விவசாய உயிர்த் தொழில் நுட்ப ஆதரவுத் திட்டம் 2  ABSP - AGRL. BIO-TECHNOLOGY SUPPORT PROJECT II என்ற பெயரில் நிதி உதவி செய்கின்றது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்  மரபினி மாற்று நெல்லை உருவாக்க பலவித நிதி உதவிகளை பெற்று வருகின்றது.

இதில் இரண்டு நிதி உதவிகள் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேசனிலிருந்து பெறப்படுகின்றது. மரபினி மாற்றுச் சோளத்தை உருவாக்கவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நிதி பெற்றுள்ளது.

துணுக்குச் செய்திகள் போல, தனித்தனி கட்டுரைகளாக நம்மாழ்வார் எழுதியுள்ளவற்றை படிக்கும் போது நான் இந்தியாவில் அமெரிக்காவின் தயவால் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணமும், நான் உண்ணும் ஒவ்வொரு சோறும் அமெரிக்கா கொடுத்த பிச்சை என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.  

அப்படியென்றால் நம்முடைய இந்தியாவின் வேளாண்மை துறை அமைச்சகம், வேளாண் விஞ்ஞானிகளின் உழைப்பு?????????????

5. உணவு நெருக்கடி  வளர்ந்த நாடுகளின் சுரண்டல்

பாரதி புத்தகாலாயம் வெளியீட்டில் சிறிய புத்தகமாக ஏ. பாக்கியம் அவர்கள் எழுதியது. (மொத்த பக்கம் 23) படித்து முடிக்கும் போது நிச்சயம் இரண்டு நாளைக்கு நமக்குத் தூக்கம் வராது.  விலை பத்து ரூபாய் போட்டுள்ளனர். ஆனால் நிச்சயம் இதன் உண்மையான மதிப்பு இதை விட பலமடங்கு அதிகம்.

நாம் இந்தியாவை நம்ம மன்மோகன் சிங் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டார் என்று போகிற போக்கில் நிலைத்தகவலாக, பதிவுகளாக எழுதி கடந்து போய்க்கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் உலகம் முழுக்க ஏன் வளர்ந்த நாடுகளில் கூட சிறிய நிறுவனங்கள் எப்படி சந்தையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றார்கள்? 

யார் கையில் உலகத்தின் கட்டுப்பாடு இருக்கின்றது?

நிறுவனங்களின் பின்புலம் போன்றவற்றை இவர் தான் படித்த ஆங்கில கட்டுகளை ஆதாரமாக வைத்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.  

இது போன்ற விசயங்களை எழுதி, படித்து என்ன ஆகப்போகின்றது என்று எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் ஒரு நற்செய்தி.  

நம்முடைய ஆசைகளுக்கு எல்லையே இல்லை.  ஆனால் நம் வாழ்வதற்கு தேவைப்படும் உணவு, அந்த உணவை ஏற்றுக் கொள்ளும் வயிற்றுக்கு ஒரு சிறிய எல்லை மட்டுமே உண்டு.  இந்த வயிற்றின் எல்லையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருந்தபோதிலும் நாம்  கொண்டுள்ள முறையற்ற ஆசைகளே இங்கே பலரையும் வாழ விடாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எப்பேற்பட்ட வில்லாதி வில்லனும், திறமைசாலிகளும் இறந்த பின்பு தன்னை குழியில் போட்டு புதைக்கும் போது அதை அவனால் பார்க்க முடியாது.

அதையும் ஒருவர் படமாக எடுத்து இணையத்தில் போட்டு இருந்தார்.

ஆனால் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க உகந்த நாளே என்று நாம் எத்தனை ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றோம்?

மொத்த நாடுகளும் நமக்கு அடிமை என்று ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகளும், வியாபாரத்தில் லாபம் தான் குறி என்று வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடி ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கும் பிணமான பின்பு இந்த வானத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா?

ஆனால் இயற்கை இடைவிடாது தனது பணியை செய்து கொண்டே தான் இருக்கின்றது.இது போன்ற புத்தகங்களும், பதிவுகளையும் நம் மூளையில் உள்ள நியூரான் நரம்புகளில் பொதிந்து வைத்திருப்போம். இயற்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்து கொண்டே இருந்தாலும் நாம் உணர்ந்து கொள்ள விரும்புவதில்லை.

நம் ஆசைகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. வழி நடத்தவும் செய்கின்றது.

எல்லையில்லா இந்த ஆசைகளைப் பற்றியும், ஆசைகளினால் உருவான வளர்ச்சிகளை, இழந்த அமைதிகளையும் உணர்ந்து கொள்ள இது போன்ற புத்தகங்கள் நமக்கு உணர்த்தும்.

காரணம் கடைசியில் நாம் செல்லுமிடமான இங்கே ஒலிக்கும் இந்த பாடலைக் கூட நாம் கேட்க முடியாது. சாம்பலமாக மாறியிருப்போம்.
விதைகள் உறங்குவதில்லை

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை  1

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை   2

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை   3

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை  4


Monday, September 23, 2013

தமிழர்கள் - பழமையானவர்களா?

ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்

தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. 

உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.


புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.

நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.

2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.

3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.

5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)

9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )

11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.

12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.

‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.

கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).

சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express - Madras - 5 August 1994)

Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”

புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. 

கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. 

பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பற்றுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பற்றுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. 

மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. 

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 

இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. 

இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. 

சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்..

நன்றி முத்தமிழ் வேந்தன் (குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை)

Sunday, September 22, 2013

வாலில் தீ - கமல்ஹாசன்


சென்ற வருடம் திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில் வழங்கப்பட்ட ஒரு காகிதத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய வாலில் தீ என்றொரு கவிதை இருந்தது.  அந்த கவிதையை தீக்கதிர் 28.09.2012 இதழிலில் வெளியிட்டு இருந்தார்கள். பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த கவிதை கண்ணில் பட்டது.  இயற்கை, வெளிநாட்டு முதலீடு, தற்போதைய இந்தியா என்று பலதளங்களில் பயணிக்கும் இந்த அருமையான கவிதையை கமல்ஹாசன் தனது முகப்பு பக்கத்தில் பதிந்துள்ளார் என்று போட்டுருந்தது.

அங்கே சென்று பார்த்த போது அங்கே கவிதையாக இல்லாமல் பத்தியாக இருந்தது. பல மாறுதல்களுடன் இருந்தது. நிச்சயம் இது பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும் என்பதால் இந்த கவிதையை இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.

ஒரு கடும் வேனல்கால மாலைப் பொழுதில்
நதிக்கரையின் முன்பு யாரோ தோண்டி வைத்திருந்த
ஊன்றுக் குழியை நோக்கியவாறு நான் நிற்கின்றேன்.
குனிந்து மண்டியிட்டு அந்த குழியிலிருந்து
தாகத்தோடு ஐந்து கை மண்ணை நான் அள்ளி
எடுத்தேன்.

மூன்றாவது தடவையிலேயே எனது கை சிறிதாக நனைந்தது.
ஆறு, ஏழு, எட்டு தண்ணீர் எட்டிப் பார்க்கிறது.
தாகத்தால் வறண்ட எனது முகத்தை பிரதிபலித்துக் கொண்டு
எனது தாகத்தை தணிக்கிறது.

மூக்கின் நுனியில் ஒட்டிய நனைந்த மணலையும் 
எனது சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும்
தட்டி விட்டு நானும் எழுந்து நிற்கின்றேன்.
கனவு கலைந்தது. எல்லாம் கனவு.

ஒரு பரமக்குடியகாரனாகிய எனது அறிவுக்கு
எட்டிய வரை
இது போன்றவொரு சம்பவம் இப்பொழுது நடைபெற
எந்தவித சாத்தியமில்லை.

பரமக்குடியைக் கடந்து செல்லும் ஆற்றின் கரைகளுக்கு
மூடுவிழா நடந்தப்பட்டு பல மாதங்கள்
ஆகிவிட்டன.
அருகாமையில் இருந்த வீடுகள் பலவும்
திருடர்களைப் போல தங்களது இடம் விட்டு நகர்ந்து
நதிக்கரை ஓரத்தில் புதிய வடிவில்
தங்களது கழிவுகளை ஆற்றில் கலக்கத்துவங்கிய
ஓன்றிரண்டு மாதங்கள் ஆகி விட்டன.

பன்றிகளைப் போலவே
மனிதர்களாகிய நாமும்
அனைத்துண்ணிகள்....
ஆகிப்போனோம்....

கழிவுகளையும் நச்சுப்
பொருட்களையும்
நமது உணவாக
மாற்றிவிட்டு
இயற்கை நமக்களித்த உணவுகளை
நாடு கடத்திக் கொண்டிருக்கின்றோம் நாம் இப்போது.

இங்கு கூறியதற்கும் வால்மார்ட் இந்தியாவில்
பிரவேசிப்பதற்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்டால்
அது குறித்து விரிவாக விவாதிக்க
நிறைய இந்தியர்கள் காத்திருக்கின்றார்கள்.

தமிழகத்தின் வாசல்கதவை தற்காலிகமாக
முதல்வர் அடைத்து வைத்திருக்கின்றார்...
அதற்காக என்னைப் போல உள்ளவர்களின்
தற்காலிக நன்றி முதல்வருக்கு உண்டு.
முதல்வர் தனது நிலையில் உறுதியாக இருந்தால்
நாங்கள் என்றென்றும் அவருக்குக் 
கடமைபட்டவர்களாக இருப்போம்.

மேலும் வரும் தலைமுறையும் முதல்வருக்கு
நன்றிக் கடன் பட்டிருக்கும்.
இந்த வால்மார்ட் என்ன செய்யும் என்று கருதி
நீங்கள் இவ்வளவு அச்சப்படுகிறீர்கள்
என்று கேட்டால்
வால்மார்ட் என்ற அமெரிக்க பன்னாட்டுக் குத்தகை
பாவம் கிராமத்தானையும்
தங்களது உபயோகிப்பாளனாக மாற்றிவிடும்.
அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது
கழுத்தில் கை வைத்து தங்களது 
பணப்பெட்டியில் காசு போடச் செய்யும்.

பன நொங்கு குடிக்கும் என்னைப் போன்ற 
பழைய ஆட்களுக்கு பாட்டிலில்
பன நொங்கை விற்கும்
இந்த வால்மார்ட்.............

ஒன்றும் சொல்ல முடியாது.

மீனுக்கு வாலும் பாம்பிற்குத் தலையும்
காட்டி மயக்கும் தந்திரத்தைக் கற்ற
இத்தகைய அமெரிக்க வியாபாரக் குத்தகைகள்
கிராமோத்யோக் பவனின் காந்தியக்
கொள்கைகளையும்
அனுமதியில்லாமல் அபகரிக்கும்.

நெல்,கப்பைக் கிழங்கு என்னவென்று தெரியாத
இந்தியக் குழந்தைகள்
பீட்சா தான் நமது பராம்பரிய உணவு
என்று நினைத்துக் கொள்வார்கள்.
நினைத்துக் கொள்ளட்டும்.
இதில் என்ன தவறு என்று
சிலர் கேட்கக்கூடும்.

சிந்தித்துப் பார்த்தால் ஒரு நஷ்டமும் இல்லை.
கம்யூனிசமும், ஜனநாயகமும் இறந்து போனாலும்
நெல்லும் கப்பைக்கிழங்கும் உயிருடன் இருக்கும்.

ரோம் சாம்ராஜ்யம் உண்டாவதற்கு
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,
மகாவீரர், தீர்த்தங்கரர் ஆகியோருக்கு முந்தைய 
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இந்த தேசத்தை பசுமை படரச் செய்த
மண்ணும் மரங்களும் இறக்காது.

மனிதர்களெல்லாம் இறந்து
மண்ணுக்குள் புதைந்து பலர்
நூற்றாண்டுகளில் மரங்கள்
உயிர்த்தெழுந்து காடாகும்.
நதிக்கரைகளில் இருக்கும்
இன்றைய வீடுகளெல்லாம்
மண்ணோடு புதைந்து புதிய காடு வளர்ந்து
நதிக்கரையாகும்.

இவையெல்லாம் முன்பு மனிதர்களும்
வீடுகளும் நிறைந்திருந்த இடங்கள் தான் என்று
நினைத்துப் பார்க்கக்கூட ஒரு ஜீவனும் இருக்காது.

நாம் அழிவோம். ஆனால் உலகம் அழியாது.

நாம் உலகின் அச்சாணி அல்ல.
சுழலும் அந்த சக்கரத்தின் 
சரித்திரப் புத்தகத்தில் வரும் 
ஒரு சிறு வாக்கியத்தின் இறுதியில் வரும் 
ஒரு சிறு புள்ளி மட்டுமே.

நடிகர் கமல்ஹாசன்

இன்று மாறிய கலாச்சாரத்தில் வயதான பெற்றோர்களுகளின் நிலையை பழனிச்சாமி என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார்.  கடந்த ஜுலை மாதத்தில் எனது கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து கொண்ட இந்த கவிதை ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாக இருப்பதால் படத்துடன் அந்த கவிதை இங்கே.


ஆசையாய் பெயரிட்டு
மெல்ல நடை பழக வைத்து
சிந்திய சோற்று பருக்கைகளை
சிரித்தவாறு சாப்பிட்டு
"கக்கா" வை மிதிக்காதே என்று
அதை கையினால் எடுத்ததும்

பல முறை தூக்கத்தை
கெடுத்துக் கொண்டு
நெஞ்சின் மேல் தாலாட்டியதையும்
பள்ளியில் சேர்பதற்கு
பல மணி நேரம்
வரிசையில் நின்றதும்

மானத்தை விற்று
கடன் வாங்கி
இரு சக்கர வாகனம்
வாங்கி கொடுத்தும்
தினமும் துடைத்து அதற்கு
பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும்

இருந்த நிலத்தை விற்று
கல்லூரிக்கு அனுப்பியதும்
கண் பார்வை மங்கிய பின்னும்
அதிகாலை எழுந்து
பால் வாங்கி வந்ததும்
இல்லாத பரிச்சைக்கு பணம் கொடுத்ததும்

வேலைக்கு சேர்வதற்கு
வீட்டை வித்து பணம் கொடுத்ததும்
தலைக்கு மேல் கடனை வாங்கி
கல்யாணம் செய்து வைத்ததும்
சம்பளம் இல்லா வேலைக்காரனாய்
அனு தினமும் உழைத்ததும்

கொஞ்சம் கூட நினைவில் இல்லை
உன்னை முதியோர் இல்லத்தில்
ஓர் அகதியாய் விட்டு விட்டு
வந்த பின்னும் .... 

எப்போதும் ரசிக்கக்கூடிய என் கணினியில் வால்பேப்பராக இருக்கும்  படம்.


நம் இந்திய பொருளாதார மேதைகளின் மூலம் நாம் பெற்ற பலன்கள் பல இருந்தாலும் இந்த ஒரு படம் சொல்லும் செய்திகள் ஏராளம்.Saturday, September 21, 2013

மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று..........

இன்று படித்தவர்கள் முதல் பலரும் நாம் இனிமேலும் பழங்கதைகளைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. பிழைப்பதற்கான வழிகளைப் பற்றியே நாம் பேச வேண்டும். காரணம் இங்கே வெள்ளையர்கள் வந்த பிறகே தொழில் நுட்ப வசதிகளும், முன்னேற்றப் பாதைகளும் நமக்கு கிடைத்தன. இன்றும் கூட அவர்கள் மூலம் கிடைக்கும் உலகளாவிய வாய்ப்புகள் மூலம் தான் நாம் வளர்ந்து கொண்டு இருக்கின்றோம்.

குறைகள் சொல்லி புண்ணியமில்லை. நாம் வாழ்வதற்கான வழிகளை தேடிக் கொள்ள வேண்டும். வாழ உதவும் மொழியும், வசதிகளை உருவாக்கும் தொழிலும் தான் நமக்குத் தேவை. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வராமல் இருந்தால் இன்னமும் நாம் இருண்ட காலத்திற்குள் தான் இருந்திருப்போம் என்பதே.

இன்று இந்தியாவில் விவசாயம் என்பது லாபம் இல்லாத தொழில். மேலும் வருடந்தோறும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த போது, இங்குள்ள விவசாயம் எப்படியிருந்தது?

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த ஜான் அகஸ்டஸ் என்ற வெள்ளையர் அன்று ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த அறிக்கை.

தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்வது எங்கும் உள்ளதுதான்.  இந்தியாவில் செய்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மிகப்பெரிய அறிவுபூர்வமான செயல்பாடு இது. அதுபோலவே ஏராளமான மக்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது.

பல்வேறுபட்ட உயிர் சூழலமைப்புகள் நிலவுகின்றன. இவற்றுக்கு ஏற்ப நீர்பாசன அமைப்புகளை ஏற்படுத்தி இருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. மாபெரும் ஏரிகள், மிகப்பெரும் அணைகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் இப்படி அவர்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கி இருந்தார்கள். அவற்றுக்குப் பெயரும் வைத்துள்ளார்கள்.

மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வித்தியாசமாகச் செய்திருந்தார்கள். கற்பாறைகளை அடுக்கி கால்வாய் அமைத்தார்கள். சில இடங்களில் புவிஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தியுள்ளார்கள்.  ஏரி, குளங்கள் சின்னதும் பெரியதுமாக இருந்தாலும் மிகச்சிறிய ஏரி மூலம் குறைந்தது 50 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ந்தது.  நடுத்தட்டுக் குளங்களில் இருந்து 100 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்தது.

மிகப்பெரிய ஏரி நீரைக் கொண்டு 500 ஏக்கர் வரை பயிர் வைக்க முடிந்தது.  ஏரி குளங்களை ஏற்படுத்த எப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்தார்கள்?

இரண்டு குன்றுகள் கூடுகின்ற இடத்தில் ஏரி ஒன்றை அமைத்தார்கள்.  அந்த குன்றுகள் மீதும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெய்யும் மழைநீர் முழுவதும் ஏரியில் வந்து தேங்குகிறது. மலையடிவாரத்தில் மட்டுமல்லாது ஆறுகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளிலும் ஏரிகளை அமைத்தார்கள்.

அது மட்டுமல்ல, தண்ணீர் இல்லாத வட்டாரத்தில் ஏரிகளையும், குளங்களையும் வெட்டினார்கள்,  கால்வாய்களை வெட்டி இந்த ஏரி குளங்களை ஆற்றோடும் பெரிய நதியோடும் இணைத்தார்கள்.  கல்லும் முள்ளும் நிறைந்த இடங்கள் நெல்லும், மணியும் விளையும் நிலங்களாக மாற்றப்பட்டன.

ஒரு ஏரியை அமைப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகாலம் பிடித்தது.  மக்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்தார்கள். வெட்டுவதற்கு 100 வண்டிகளில் கருங்கற்களை ஏற்றி சென்றார்கள்.  வேலைகளை மேற்பார்வை செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  வேலைகளைச் செய்து முடிப்பதற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டது.

உழைத்த மக்கள் அடைந்த பயன் என்ன?

ஏரி குளங்களை ஏற்படுத்துவதில் ஈடுபட்ட மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இறையிலி நிலம் வழங்கப்பட்டது.

அதாவது பொதுப்பணிகளில் ஈடுபடுவோருக்கு நிலவரி செலுத்தாமல் பயிர் வைக்கும் உரிமை வழங்கப்பட்டது.  ஏரி வெட்டுவதில் ஈடுபட்டவர்களுக்கு அந்த ஏரி நீர்ப்பாசன நிலம் கட்டுக் குத்தகைக்கு விடப்பட்டது.  விளைச்சலில் நாலில்  ஒரு பங்கை நில உரிமையாளரும், மூன்று பங்கை உழுதவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக்கால ஆங்கிலேயர் ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாகப் பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்ததைப் பதிவு செய்துள்ளன.

தென்னிந்தியாவில் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகைகள் வளம் மிகுந்தவை. இவை போன்று செங்கற்பட்டு மாவட்டம் வளம் மிகுந்த பகுதி அல்ல.  ஆனால் இங்கு கூட உழவர்கள் உயர்ந்த அளவு விளைச்சல் பெற்று வந்தனர்.

1910 கிராமங்களுக்குள் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் கிடைத்துள்ளன. 1500 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொரு வருடத்திற்கு சராசரியாக 5 டன் (5000 கிலோ) உணவு தானியம் பெற்றது.  65 கிராமங்கள் ஒரு வருடத்திற்குச் சராசரியாக 5000 கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து வந்தன. (ஒரு கலம் என்பது 125 கிலோ கிராம்) நெல் உயர் விளைச்சல் தரும் கிராமங்களின் சராசரி விளைதிறன் மாநிலத்தின் சராசரி விளை திறனைப் போல இரு மடங்காகும்.

இந்த 65 கிராமங்களுக்கு சிலவற்றின் சராசரி விளைதிறன் மிக அதிகமாக இருந்துள்ளது.  அதாவது காணிக்கு 35 கலம் வரை விளைந்துள்ளது.  இந்த விளைச்சல் எக்டருக்கு 9 டன் ( ஏக்கருக்கு 3600 கிலோ) 1 ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( 75 கிலோ மூட்டை) விளைச்சல் ஆகும்.

சிங்கப்பெருமாள் கோயிலையும், ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டு ஆவணங்களின்படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில்  சிறப்புற்று உயர்விளைச்சல் கண்டது.

1764 இல் வடக்குப்பட்டி கிராமத்தில் 368 எக்டர் நிலப்பரப்பில் (920 ஏக்கர்) 1500 டன் உணவு உற்பத்தியானது.  1762 முதல் 1766 வரையான 5 வருடங்களில் வடக்குப்பட்டின் சராசரி விளை திறன் எக்டருக்கு 4 டன் ( ஏக்கருக்கு 1600 கிலோ).

பார்னார்டு என்பவர் 1774 ஆம் வருடம் நவம்பர்  எழுதிய தனது கடிதத்தில் 1772ல்தான் இது போன்று  கிராமக் கணக்கு ஆவணங்களைத் தாம் சேகரிக்கத் தொடங்கி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

1100 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800 கிலோ விளைந்ததாக கல்வெட்டு கூறுகிறது.

1325 ஆம் ஆண்டு ராமநாதபுரத்திற்கு ஏக்கருக்கு 8000 கிலோ விளைந்ததாக கல்வெட்டு கூறுகிறது. 1807 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200 கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கின்றது.

(அடுத்த பதிவோடு இந்த தொடர் முடிவடைகின்றது. எழுத உதவிய புத்தகங்கள் குறித்து விரிவாக பேசுவோம்)

தொடர்புடைய பதிவுகள்

அட்சய பாத்திரம் -- இங்கே விற்பனைக்கு உண்டு

                                                                                                         

Thursday, September 19, 2013

சீனா -- கண்ணீரில் தொடங்கும் வளர்ச்சி

"காம்ரேட்ஸ், இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் கூடுங்கள்.  நாம் பேச வேண்டும்."

ஒலிபெருக்கியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகின்றது. அரசாங்கம் தீர்மானித்தபடி, கிராமத்திற்கு வந்துள்ள சார்பாளர் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த பகுதியின் தலைவர் வந்து கிராமத்து மக்களிடம் பேச்சு வார்த்தையை தொடங்குகின்றார்.

முட்டல் மோதல், பரஸ்பரம் வாக்குவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.

"நாங்கள் எங்கள் இடத்தை விட்டுத்தர மாட்டோம்."

"அரசாங்கம் உரிய இழப்பீடு தரவில்லை."

"எங்களுக்கு விருப்பமில்லை."

"காவல்துறை எங்கள் கிராமத்தை சுற்றி வளைத்து எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது."

ஆனால் காட்சிகள் மாறத் தொடங்குகின்றது.

"நான் இந்த ஊரில் வாழ விரும்பவில்லை."

"எனக்கு பணம் அதிகம் தேவைப்படுகின்றது."

"நிறைய பன்றிகள் வளர்த்தால் நிறைய பணம் கிடைக்கும்."

"என் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்க விரும்புகின்றேன்.  இந்த ஊரில் இருந்தால் அந்த வாய்ப்பு எனக்கில்லை. நான் ஏதாவது ஒரு பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்து நிறைய சம்பாரிக்க விரும்புகின்றேன்."

"நான் என் ஆண் நண்பருடன் பெரு நகரங்களுக்குச் செல்ல விரும்புகின்றேன். இரவு டிஸ்கோத்தே வுக்கு அவனுடன் செல்ல முடியும்."

"நான் இந்த விவசாய வேலையை விட்டு வெளியே வர விரும்புகின்றேன். அதிகாலையில் எழுந்து இரவு வரைக்கும் உழைக்க வேண்டிய இந்த வேலையை விட்டு வெளியே வர விரும்புகின்றேன்."

மேலே உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் இந்த ஆவணப் படத்தில் ஒவ்வொரு இடத்திலும் வந்து போகின்றவர்கள் பேசிய வார்த்தைகள்.

இந்தியாவின் அருகே இருக்கும் சீனா டிராகுலா போல விஸ்வரூபம் எடுத்து விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது என்பதை படிக்கும் போது, மாறிய சீனா இன்று பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்க்கும் போது நாம் நம் அரசியல் தலைகளின் கையாலாத்தனத்தை அங்கலாய்ப்புடன் பேசிக் கொள்கின்றோம்.  

ஆனால் சீனாவின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்ணீரில் தான் தொடங்குகின்றது.  

ஒரு கிராமத்தை பலிகிடாவாக்கி, அந்த மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஆசை வார்த்தைகள் காட்டி, நுகர்வோர் சக்தியைச் சொல்லி, விவசாய பூமியாக இருக்கும் பொழுது உண்டான விலையை தொழிற்சாலையாக மாறிய பின்பும் உருவாகும் விலை என்று கிராமத்து வாழ்க்கையில் ஆசைகளை உருவாக்க அங்கே ஒவ்வொரு குடும்பத்திற்குள் அடிதடி உருவாகி விடுகின்றது.

ஒவ்வொன்றையும் சொல்லியே அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி குறுகிய காலத்திற்குள் புதிய நகராக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

"தானும் படுக்க மாட்டார்கள். தள்ளியும் படுக்க மாட்டார்கள்" என்று கம்யூனிஸ்ட் கொள்கைகளை இன்று வரைக்கும் கிண்டலடிக்கும் நபர்களை சீனாவின் பொருளாதார கொள்கைகளைப் பார்த்தால் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளக்கூடும்.  

வேர் என்பது மட்டும் கம்யூனிஸ்ட் சிந்தாந்தம்.  ஆனால் தரைக்கும் மேல் தெரியும் மரத்தில் உள்ள அத்தனையும் அக்மார்க்க மேற்க்கித்திய கலாச்சார சாயல் கொண்ட பொருளாதாரம்.  

அனைத்தையும் மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அரசாங்கத்தின் கரங்கள் ஒவ்வொரு கிராமத்தையும் காங்கீரிட் காடுகளாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

ஏழைகளின் கண்ணீர் சாம்ராஜ்யத்தை கவிழ வைக்கும் என்பது பழைய பழமொழி.  ஆனால் இன்று எப்படி மாறியுள்ளது தெரியுமா?  

இழந்தவற்றை மறக்க பிறந்த நாள் கொண்டாட்டம், இரவு நேர ஆட்டம், தூரத்தில் மகன் மகள் கொண்டாடும் சந்தோஷங்களை ஸ்கைபே வழியாக பார்த்துக் கொள்ளும் குடும்பத்தினர் மனதில் எந்த பழமொழியும் தோன்றுவதில்லை.  

பழசை மறந்து புதிய மனிதர்களாக மாறி விடுகின்றனர்.

சம்பாரிக்க என்ன வழி? என்ற மொழியை சீன அரசு தேசிய மொழியாக மாற்றியுள்ளதால் சீனர்களின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை அவர்களே உணர நேரமிருக்காமல் ஓடிக்கொண்டிருக்க பழகி விட்டார்கள்.

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல. 

வளர்ச்சி என்ற வார்த்தைகள் எல்லா நாடுகளிலும் மந்திர வார்த்தை போல உலகமெங்கும் ஒவ்வொருவரையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது.

முந்தினால் முன்னேறிவிடுவாய்.

யோசித்தால் ஒதுக்கப்பட்டுவிடுவாய்.

இது நாட்டுக்கு மட்டுமல்ல.  

இன்று தனி மனிதர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் மாறியுள்ளது.
தொடர்புடைய பதிவுகள்

சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்

Wednesday, September 18, 2013

அட்சய பாத்திரம் -- இங்கே விற்பனைக்கு உண்டு

வர்த்தக ஒப்பந்தகங்களிலிருந்து உணவு தானியங்கள் விலக்கி வைக்கப்பட்ட சகாப்தத்தை 1986ல் டெல்லியில் நடைபெற்ற உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.  அதைத் தொடர்ந்து 1994, 1995 களில் ஏற்பட்ட விவசாய ஒப்பந்தம் விவசாய விளை பொருட்களுக்காக சுதந்திர சந்தையை தீவிரமாக்கின.  இதன் உச்சக்கட்டமாக 1996ல் உலக உணவு உச்சி மாநாடு (WORLD FOOD SUMMIT ) ரோமில் நடைபெற்றது.  

இதில் கலந்து கொண்ட அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அதிலும் சுதந்திர வர்த்தகம் அவசியம் என வலியுறுத்தின.  அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து இதை ஏற்க வைத்தன.

உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அடிப்படை என்பதை நாங்கள் ஏற்கிறோம். எங்களது உற்பத்தியாளர்களும், நுகர்வாளர்களும் பொருளாதார ரீதியில் பலமுடைய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் நாங்கள் உணவு வர்த்தகத்தையும் இதர வர்த்தக கொள்கைகளையும் கடைப்பிடிப்போம் என்று சொல்லிக் கொண்டு கையழுத்திட்டனர்.,  

ஆனால் உணவு பாதுகாப்பிற்காக கூடி மாநாடு அதற்கான தீர்மானத்தை இயற்றியதுடன், உணவு நெருக்கடிக்கும் விலையேற்றத்திற்குமான வழி வகையுமே துரதிர்ஷடவசமாக உருவாக்கி விட்டது.  

எனவே உணவு பாதுகாப்பிற்காக உள்நாட்டில் இருந்த தடைகளும், நாடுகளுக்கு இடையேயான தடைகளும் உடனடியாக நீக்கப்பட்டன.

இன்றைய உணவுச் சந்தையை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தான் கட்டுப்படுத்துகின்றன.  இவர்களின் இளைய கூட்டாளிகளாக ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகள் உள்ளன.  இந்நாடுகளின் பெரும் நிறுவனங்கள் இச்சந்தைகளில் கோலோசசுகின்றன.  இந்த நாடுகள் இருவகைகளில் உலக சந்தையை கைப்பற்றுகின்றன.  

ஒன்று உணவு தானியங்களுக்கு கூடுதலான மானியங்கள் கொடுப்பது மூலம் ஏழைநாடுகளை போட்டிலிருந்து வெளியேற்றுகின்றனர். இரண்டாவது தொழில் மயமான இறைச்சி உற்பத்தி முறையால் சுதந்திரமான மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் அழியும் நிலையை உருவாக்கி விடுகின்றனர்.

அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் மாட்டிறைச்சிக்கு கூடுதல் மானியம் வழங்கி உலகச் சந்தைக்கு கொண்டு வந்ததால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இறைச்சி வணிகம் துடைத்தெறியப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிகமானிய உதவியுடன் ஏற்றுமதி செய்ததால் கானா நாட்டில் 90 சதவிதமும், செனகல் நாட்டில் 70 சதவீதமும் கோழிப்பண்ணை தொழில் அழிந்தது.  

இதே காரணத்திற்க்காக இங்கு பருத்தி வளர்ப்போர்களின் சாகுபடி வீழ்ந்து, பருத்தி விவசாயத்திலிருந்து பலர் விரட்டப்பட்டனர்.

இறைச்சி உணவு தயாரிப்பில் நவீனத் தொழில்மய முறைகளை பெரும் நிறுவனங்கள் புகுத்துகின்றன.  இதற்கான கால்நடை வளர்ப்பு இதர வசதிகளை அருகாமையில் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  அமெரிக்காவில் உள்ள நான்கு பெரும் நிறுவனங்கள் 2005ம் ஆண்டில் மாட்டிறைச்சியை 83.5 சதவீதம் கட்டுப்படுத்தின.

டைசன் (TYSON)  நிறுவனம் நாளைக்கு 36000 மாடுகளை வெட்டுகின்றது. இதே போல கார்கில் (CARGILLS) 28300 மாடுகளையும் ஸ்விப்ட் அண்ட் கோ (SWIFT & CO.)   16759 மாடுகளையும் நேஷனர் பீப் பேக்கர்ஸ் (NATIONAL BEEF PACKERS & CO.) 13000 மாடுகளையும் வெட்டுகின்றன.  

பன்றி இச்சியில் ஸ்மித்பீல்ட் (SMITHFIELD FOODS)  என்ற அமெரிக்க நிறுவனம் ஏகபோகமாக உள்ளது.  ஒரு நாளைக்கு இரு நிறுவனங்களும் 102900 பன்றித் தலைகளை வெட்டுகின்றன. இதனுடன் டைசன், கார்கில், ஸ்விப்ட் சேர்த்து 64 சதவீதம் சந்தையை கட்டுப்படுத்துகின்றன. 

இதனால் அமெரிககாவிலேயே சிறிய இறைச்சி உற்பத்தியாளர்கள் சந்தையிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்னனர்.  ஸ்மீபீல்ட்    என்ற அமெரிக்க நிறுவனம் கிழக்க ஐரோப்பிய நாடுகளுக்கு தனது திட்டத்தை விரிவுபடுத்தியது.  அங்கு பெரும் இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டதால் ருமேனிய  நாட்டின் 90 சதவீதமும், போலந்து நாட்டின் 56 சதவீதமும் உற்பத்தியாளர்கள் பன்றி, மாடு, கோழி தொழிலிருந்து விரப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்மீத்பீல்ட் நிறுவனம் போலந்து அரசிடமிருந்து ஏற்றுமதி மானியத்தை பெற்றுக் கொண்டு பன்றிக்கறிகளை லைபீரியா, கினியா, ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர் விலையை விட சரிபாதி குறைத்து கொடுக்கிறது.  இதனால் அந்நாட்டு தொழில்கள் படுத்து விட்டன.

இந்த சுதந்திர வணிகத்தால் 90ம் ஆண்டுகளில் மெக்சிகோ விவசாயிகள் 15 கோடி பேர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சுதந்திர வணிகத்தால் கடந்த பல ஆண்டுகளில் மூன்று கோடி விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்.

இந்த உலகச் சந்தையில் வளரும் நாடுகள் வளர்ந்து நாடுகளுடன் சமமமாக போட்டியிட முடியுமா?  அனைத்து வளரும் நாடுகளிலும் வளர்ந்து நாடுகளின் பெரும் நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட் மூலமாக ஊடுருவி வருகின்றன. உலகில் சூப்பர் மார்க்கெட் மூலம் விற்பனையாகும் பலசரக்குகளில் 50 சதவீதத்தை ஐந்து நிறுவனங்கள் வைத்துள்ளன.  

இதில் வால்மார்ட் பிரதானமானது.  உலக சில்லரை வர்த்தகத்தை பத்துக் கம்பெனிகள் வைத்துள்ளன.

அதிலும் குறிப்பாக வால்மார்ட், குரேகர் (KROGER)  பிரெஞ்சு கம்பெனி கேரிபோர் (CARREFOUR) பிரிட்டிஷ் கம்பெனி டெஸ்கோ ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம்.

உலகில் விதை விற்பனையில் 47 சதவீத விதைகளின் உரிமை மன்சேட்ட, டுபான்ட், சைசென்டா கம்பெனிகளுக்கு சொந்தமானது.  

2007ம் ஆண்டு நெஸ்ட்லே(NESLTLE)உணவு கம்பெனியின் லாபம் 9.7 பில்லியன் டாலர் ஆகும்.  இது 65 ஏழைநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட    அதிகம்.  

2009 ஜனவரி 31 முடிய வால்மாட் கம்பெனியின் லாபம் 13.3 பில்லியன் (1 பில்லியன் 100 கோடி) டாலராகும்.  இது 88 ஏழைநாடுகளின் (உலகில் சரிபாதி நாடுகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட (GDP)அதிகம்.  

இந்த நிலைமையில் உலகச் சந்தையில் ஏழைநாடுகள் எப்படி போட்டியிட முடியும்?

வளர்ந்த நாடுகளும் அதன் ஏகபோக நிறுவனங்களும், வளரும் நாடுகளின் சந்தையை கைப்பற்றி கொள்ளை லாபமடித்து, உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் எற்படுத்துகின்றன.  இதே காலத்தில் நீண்ட கால நோக்குடன் வளரும் நாடுகளின் உணவு முறையை தங்களது உற்பத்திகளை உண்ணும் உணவு பழக்கத்திற்கு மாற்றி அமைத்திடும் காரியங்களையும் இந்நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன.

விலை உயர்வுக்கும் உணவு நெருக்கடிக்கும் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது உயிரியியல் எரிசக்தி தயாரிப்பாகும்.  உணவு கணிசமான அளவு தானியங்களை எத்தனால் மற்றும் பயோ டீசல் தயாரிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் திருப்பிவிட்டன.

2007ம் ஆண்டு அமெரிக்கா தனது நாடாளுமன்றத்தில் எரிசக்தி சட்டத்தை   (ENERGY INDEPENDENCE AND SECURITY ACT) நிறைவேற்றியது.  எதிர்காலத்தில் 20 சதம் எரிசக்தியை இந்தி உயிரியில் எரிசக்தியிலிருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தது.

2008ம் ஆண்டு மட்டும் சோள உற்பத்தியில் 30 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கீடு செய்தது.  சுமார் 135 க்கும் மேற்பட்ட உயிரியியல் எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.  மேலும் 74 ஆலைகள் உடனடியாக அமைக்கப்பட்டு வருகின்றன.  ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் எண்ணெய் வித்துக்களை உயிரியியல் எரிசக்தி தயாரிக்க திருப்பிவிட்டுள்ளன. பிரேசில் தனது கரும்பு உற்பத்தியில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க பய்னபடுத்துகின்றது.

இதற்காக கரும்பு விளைச்சலை அதிகப்படுத்த அமேசான்காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

உயிரியில் எரிசக்திக்கு உணவு தானியங்களை திருப்பிவிட்டது.  கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தியது.  இதை முதலில் அமெரிக்கா மூடிமறைத்தது. அமெரிக்கா இதனால் விலை உயர்வு முப்பது சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது.  ஐஎம்எப் 20 முதல் 30 சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது.  ஆனால் உலக வங்கியின் இரகசிய அறிக்கை மூலம் 141 சதவீதம் விலை உயர்வில், அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த எரிசக்தி திட்டத்தால் மூன்றில் ஒரு பகுதி விலை ஏற்றம் ஏற்பட்டது என்று அம்பலப்பட்டது.

வளர்ந்த நாடுகளின் இந்தப் போக்கு எதிர்காலத்தில் வளரும் நாட்டு மக்களை பட்டினிக்குத் தள்ளிவிடும்.  ஏற்கனவே அமெரிக்காவில் எக்சான்மொபில் (EXXON MOBIL)  ஆர்ச்சர் டேனியல் மிட்லேன்ட்(ADM)  கார்கில் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளத்தை பயிரிட்டு உயிரி எரிசக்திக்கு வழங்குகின்றன.  தற்போது வளரும் ஏழைநாடுகளின் நிலங்களை எல்லம் வளைத்துப் போடும் (LAND LEASE SYSTEM OF RIGHT PURCHASE)  தொழில் வேகமாக பரவி உள்ளது.  2006ம் ஆண்டு முதல் இதுவரை 2 கோடி ஹெக்டேர் நிலங்கள் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் விற்பனை ஆகியுள்ளது.

இது ஜெர்மனியின் மொத்த விவசாய நிலத்தைவிட இருமடங்கு அதிகமாகும். தென்கொரியாவின் தேவூ என்ற நிறுவனம் ஆப்பிரிக்காவின் மடகாகஸ் நாட்டில் 99 வருட வாடகைக்கு 30 லட்சம் ஏக்கர் வாங்கியது.  இதில் உயிரி எரிசக்திக்கான பயிர்களை பயிரிட திட்டமிட்டு, தற்போது அந்நாட்டு மக்களின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்படுள்ளது.

ஐக்கிய அரபு எமிரட்ஸ் மற்றும் பிலிப்பைன்சில் ஒரு லட்சம் ஏக்கம் நிலத்தை வாங்கியுள்ளது.  எகிப்து மற்றும் உகாண்டாவில் 20 லட்சம் ஏக்கரில் சோளம், கோதுமை விளைவிக்க நிலம் வாங்கி உள்ளது.  இந்தியாவின் 80 முதலாளிகள் எத்தியோப்பியாவில் 75 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வாங்கி உணவு தானியத்தை பயிட்டு பல நாடுகளில் விற்கின்றனர்.

பல நாடுகளில் இந்த நிலத்தை வாங்கினாலும் இதில் குறிப்பாக பெரும் பங்குதாரர்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே உள்ளன.

SUNLAM OIVATE EUITY (USA)  நிறுவனம், சவுதி  MUA ZEPHYR FUND   நிறுவனமும், பிரிட்டனின்  CDC நிறுவனமும் முக்கிய பங்குதாரர்களாகும். இந்த நிலம் வாங்கும் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்துவது  EMERGENT ASSETS MANAGEMENT என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் நிறுவனம் தான்.

ஆப்பிரிக்காவில் வாங்கியுள்ள நிலத்தில் எரிசக்தி தயாரிக்க தேவையான தாவர எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளனர்.  ஆப்பிரிக்காவில் அதிக குறைவான விலையில் நிலமும் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள், போக்குவரத்திற்கு சுலபமான கடல் மார்க்கம் என்பதால் தான் அங்கு இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் நிலைத்தை பெருமளவில் வாங்குகின்றன.

எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா முதல் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அனைத்தும் மேலும் பட்டினியால் சாகும். அமெரிக்கா ஐரோப்பா எரிசக்தி உபரியில் மிதக்கும்.

(எழுத உதவிய ஆதாரப்புத்தகங்கள் குறித்து இந்த தொடரின் கடைசி பதிவில் வெளியிடப்படும்)

தொடர்புடைய பதிவுகள்

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 5