Friday, September 06, 2013

மரபணு மாற்ற விதைகள் - பயங்கரத்தின் கதை 3

உச்ச நீதிமன்றத்தின் வல்லுனர் குழு பலதரப்பினருடனும் கலந்தாலோசித்து, உள்நாட்டு, பன்னாட்டு விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளை விவாதித்து தனது இடைகால அறிக்கையை 2012 அக்டோபர் 7ம் தேதி அளித்தது.

இருபத்தி நாலு பக்க இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட கருத்துக்களில் முக்கியமானவைகள்

மரபணு விதைகள்- பயங்கரத்தின் கதை 1

மரபணு விதைகள்- பயங்கரத்தின் கதை 2

இந்தியாவில் தற்சமயம் உள்ள கண்காணிப்பு அமைப்புகளான GEAC மற்றும் RCGM ளில் தகுதி வாய்ந்த உயிரிப் பாதுகாப்பு (Biosafety) வல்லுனர்கள், ஆய்வாளர்கள் இல்லை. மேலும் தற்போதுள்ள இவ்விரு அமைப்புகளிலும் உள்ள 60 பேரில் முழு நேர உறுப்பினர்கள் எவருமில்லை. வேறு பணிகளை முதன்மையாக் கொண்ட இவர்களால் சமர்ப்பிக்கப்படும் (ஆயிரக்கணக்கான பக்க) ஆய்வறிக்கைகளை தீவிரமாகவும், நுணுக்கமாகவும் அலசி ஆராயும் வேலையை செய்ய இயலாது.

(இந்திய அரசால்) அனுமதி அளிக்கப்பட்ட ஒரேயொரு மரபணு மாற்றுப் பயிரான பிடி பருத்தி அனுமதிக்காக செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பல ஆய்வுகள் செய்யப்படாமல் உள்ளது. பல ஆய்வுகள் பிடி பருத்தியில் பிரச்சனை உள்ளதாகத் தெரிவிப்பினும் அவை கவனத்தில் கொள்ளப்படவேயில்லை.

இரத்த அணுக்கள், உடல் நலன், பால் சுரத்தல் உள்ளிட்ட பல வகை சோதனைகளில் இயல்பான நிலைக்கு மாறான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல தெரிந்தும் கண்டு கொள்ளப்படவில்லை.பிடி பருத்தியை அனுமதித்ததிலிருந்து தொடர் கண்காணிப்பு நடத்தியிருக்க வேண்டும் ஆனால் நடக்கவேயில்லை.

உயிரிப்பாதுகாப்பு என்பது தனி சிறப்புத் துறை. இத்துறையில் வல்லுனர்கள் இந்தியாவில் இல்லை என்பதை உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற வல்லுனர் குழு  வயல்வெளி சோதனைகள் நடத்துமிடத்தை தேர்வு செய்வதும், அவற்றைச் செய்ய உள் ஒப்பந்தம் மூலம் செய்வதும் உயிரிப் பாதுகாப்புத் தேவைகளின் படி சரியானதல்ல. அவற்றை விதை நிறுவனங்களே செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தனர்.

மரபணு மாற்றுப் பயிர்களை சிறு பாலூட்டிகளுக்குக் கொடுத்து செய்யும் ஆய்வுகளை 90 நாட்கள் ஆய்வாகச் செய்யாமல் இந்த ஆய்வு விலங்கின் பல தலைமுறைகளுக்கும் (Multi Generational Tests) நடத்த வேண்டும். அப்போது தான் இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளில் பாதிப்பு உள்ளதா என்பதை அறியமுடியும்.

கூடுதல் நச்சியல் ஆய்வுகள் (Toxicological)  நடத்தப்பட வேண்டும். மேலும் இந்திய உயிரினப் பன்மயம் (Biodiversity) மரபணுக் கலப்படத்தால் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். 

பிடி பருத்தி அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல பாதிப்புள்ள அம்சங்களையும், கவனிக்காமல் விடப்பட்ட அம்சங்களையும், மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் செய்யாமல் விடப்பட்ட ஆய்வுகளையும் செய்ய வேண்டும். தேவைப்படின் சர்வதேச வல்லுனர்களின் உதவியையும் பெறவேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள பிடி பருத்தியையும் நீண்ட கால ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வாமை பாதிப்புகள் (Allergenity Tests) உள்ளிட்ட பல சோதனைகள் முழுமையாக நடத்தி அதில் பிரச்சனையேதுமில்லை என்பது தெரிந்த பின்னரே வயல்வெளி சோதனைகள் நடத்த அனுமதிக்க வேண்டும். வயல்வெளி சோதனைக்களுக்காக நிரந்தமான பகுதி ஒதுக்கப்பட வேண்டும். ஆய்விற்காக அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களின் வயல்வெளி சோதனைகளை இப்பகுதிகளில் மட்டுமே நடத்த வேண்டும். விவசாயிகளின் நிலத்தில் எவ்வித சோதனைகளையும் நடத்தக் கூடாது.

கண்காணிப்பு அமைப்புகளிலும், அங்கீகாரமளிக்கும் அமைப்புகளிலும் உள்ளவர்கள் சார்பு நிலை (Conflict of interest) உள்ளாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் மரபணு மாற்றுப் பயிரை வேளாண் பொருளாதார வல்லுனர்கள், சமூக அறிவியல் வல்லுனர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுவும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு அம்சங்கள் (மரபணுக்கள் இடம் மாறுதல் மற்றும் மரபணுக் கலப்படம் குறித்த) மதிப்பீட்டை கணக்கில் கொண்ட தொழில் நுட்ப வல்லுனர் குழு இந்தியாவில் வயல் வெளி சோதனைகளுக்கு பத்தாண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 

இந்தியாவில் உரிய ஆய்வகங்கள், தேவையான தகுதிகள் உள்ள வல்லுனர்கள் வளர்த்தெடுக்கப்பட இந்த பத்தாண்டுகள் போதுமானதாக இருக்கும். ஆக அது வரை (பத்தாண்டுகளுக்கு) வயல்வெளி சோதனைகளைத் தடை செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்றது.

உச்சநீதி மன்றத்தின் வல்லுனர் குழு வயல்வெளி சோதனைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அறிக்கை மரபணு மாற்று ஆதரவாளர்களுக்கு விழிந்த மூன்றாவது அடியாக இருந்தது. 

எதிர் பார்த்தபடியே வேளாண் அமைச்சகம் ஏற்க முடியாது என்றதுடன் வல்லுனர் குழுவில் சேர மறுத்த முனைவர். சோப்ராவின் இடத்தில் முனைவர். பரோடா வை நியமிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் வேண்டியது. 

இந்த வழக்கில் வேளாண் அமைச்சகம் நேரடியாக எவ்விதத்திலும் தொடர்பில்லாமல் இருந்ததாக காட்டிக் கொண்டபோதிலும் இந்த விசயத்தில் முனைவர். பரோடா வை பரிந்துரைத்தது. ஏற்கெனவே சார்பு நில் உள்ளவர்கள் எவ்விதக் குழுவிலும் இருக்கக் கூடாது  என்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதும் வேளாண் அமைச்சகம்

அவரைப்  பற்றி முழு உண்மைகளை மறைத்து பரிந்துரைத்தது. அவரைப் பற்றிய விவரங்கள் 


நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழு மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து ஆராய்ந்தது. பல வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட இந்தக்குழு பல தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்டது. 

மான்சான்டோ உள்ளிட்ட விதை நிறுவனங்களும் தத்தமது கருத்துக்களை அளித்தன. பிடி பருத்தி விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நடந்த விதர்பா பகுதியில் சென்று விவசாயிகளிடம் நேரில் விவரங்களைக் கேட்டறிந்தது. இந்தியா செய்து கொண்ட சர்வதேச ஒப்பந்தங்கள்,பிற நாடுகளில் உள்ள கண்காணிப்பு முறைகள் என எல்லாப் பக்கங்களையும் ஆராய்ந்தது நாடாளுமன்ற நிலைக்குழு.

இரண்டரை ஆண்டுகளாக கருத்துக் கேட்பு, விதர்பா பகுதியின் யவத்மாலில் பொதுமக்கள் கருத்து கேட்பு, கள விசாரணைகள் என விவாக அலசி ஆராய்ந்த பின் நாடாளுமன்ற நிலைக்குழு 2012 ஆகஸ்டு 9 ல் மரபணு மாற்றுப் பயிர்கள் மீதான தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

அறிக்கை பெற 


அந்த அறிக்கை மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், அவை சார்ந்த பரிசோதனைகளுக்கும் மேலுமொரு இடியாக விழுந்தது. இக் குழுவின் அறிக்கையில் உள்ள சில முக்கிய பரிந்துரைகள்-

‘பி.டி கத்தரியின் தொடக்கம் முதல் மரபணு மாற்று அங்கீகாரக்குழு அனுமதித்து பின் 2010 பிப்ரவரி 9ம் தேதி அமைச்சகத்தால் தடை விதித்தது வரையுள்ள எல்லாவற்றையும் தனித்த சுதந்திரமான தகுதி வாய்ந்த விஞ்ஞானிகளால் முழுமையாக ஆராயப்படவேண்டும்.”

“மரபணு மாற்று அங்கீகாரக்குழு மற்றும் மரபணு மாற்றங்கள் குறித்த மதிப்பீட்டுக் கமிட்டி இரண்டின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பரிசீலித்து தேவைப்படும் மாற்றங்களை உருவாக்கவேண்டும்.”

“மரபணு மாற்று அங்கீகாரக்குழுவின் முடிவெடுத்தலில் சார்பு நிலை உள்ளவர்கள், ஆதரவானவர்கள் தலையீட்டை நிறுத்த வேண்டும்”.

“பி.டி பருத்தியை உண்டதால் இறந்த செம்மறி ஆடுகள் பிரச்சனையைத் தனி வல்லுனர்கள்  குழு அமைத்து மீண்டும் ஆராயவேண்டும்”.

“மரபணு மாற்று உயிரினங்களை கண்காணிக்கும் அமைப்புகள் மீதான விமர்சனங்கள், புகார்கள் அளவைப் பார்க்கும் போது அந்த அமைப்புகள் சரியாக இயங்கவில்லை என்று தெரிகிறது. அந்த அமைப்புகளைச் சரி செய்யவேண்டும்”.

@“மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் மற்றும் அவ்வுயிரினங்களை கண்காணிக்கும் தற்போதுள்ள அமைப்புகளுக்குப் பதிலாக அரசு தேசிய பல்லுயிர் பெருக்கத்திற்கான ஆணையம்  (National Biodiversity Authority) மற்றும் உயிரிப்பாதுகாப்பு ஆணையம் இரண்டையும் இணைத்த ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும்”.

@“இந்திய பல்லுயிர் பெருக்கத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க ஆணையம் பாரம்பரிய கத்தரி விதையை அனுமதியில்லாமல் மகிஹோ-மான்சான்டோவிற்கு வழங்கிய பிரச்சனையை சரியாகக் கையாளாததற்குக் காரணம் மரபணு மாற்று அங்கீகாரக்குழுவுன் தலைவரே பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவராகவும் இருந்ததே>” என நிலைக்குழு அறிக்கையில் பதிவு செய்தது.

“அரசு சில ஆண்டுகளாகவே உயிரித்தொழில் நுட்ப ஆணையம் அமைப்பது என்ற கருத்தை கூறிவருகிறது. உயிரித் தொழில் நுட்ப  பிரச்சனைக்குள் உயிரினப்பன்மயம், சுற்றுச்சூழல் மனித, கால்நடைகளின் ஆரோக்கியம், இயற்கைச்சூழல் எனப் பல படிமங்கள் உள்ளன. 

இத்தகு நுட்பத்தை ஒருங்கு முறைப்படுத்தல் செய்ய மரபணு மாற்றுப் பயிர்கள் என்ற நிலையோடு மட்டும் பார்ப்பது போதுமானதாக இருக்காது,” என்றும் இதற்கு மாறாக, “உயிரிப் பாதுகாப்பு ஆணையம் (Biosafety Authority) அமைப்பதே பொறுத்தமானதாக இருக்கும்,” எனப் பரிந்துரைத்தது.

@“விதைக் கம்பெனிகளின், உயிரித் தொழில் நுட்பக்காரர்களின் வார்த்தைகளை அரசு கிளிப்பிள்ளை போல திருப்பிக்கூறாமல் அறிவியல் அடிப்படையில், பொதுமக்களின் நலன்களுக்காக நிற்க வேண்டும்”.

@“பிடி பருத்தி இந்தியப் பருத்தி விவசாயிகளின் சமூகப்பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. உண்மையைக்கூற வேண்டுமானால் பிடி மானாவாரிப் பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது”.

@“வயல்வெளி சோதனைகளை நடத்துவதில் மாநில அரசுகளின் முடிவு அவசியம் என்றதுடன் வயல்வெளி சோதனைகளைக் கைவிட வேண்டும்”.

பாசுதேப் ஆச்சார்யா தலைமையிலான வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில்,

‘நமது உணவு, விவசாயம், நல்வாழ்வு, சுற்றுச்சூழல் மீது மரபணு மாற்றுப் பயிர்களின் தாக்கம் குறித்த (மக்களின்) அச்ச உணர்வுகள் சரியானவையே,’ என்றும், ‘இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வாகாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு கருதுகிறது,’ என்றது’.

இந்த நிலைக்குழுவில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முக்கியப் பிரமுகருமான சத்யவர்த் சதுர்வேதி உள்ளிட்ட 10 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சியின் உறுப்பினர்கள் என 31 உறுப்பினர்களும் சிறிய  கருத்து பேதம் கூடத் தெரிவிக்காது ஒரு மனதாக இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்களாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான தங்கவேலு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன் மற்றும் திமுகவின் மக்களவை உறுப்பினர் தங்கவேலு ஆகியோரும் இருந்தனர். ஆயினும் அரசு இந்த அறிக்கை மீது இன்று வரை விவாதம் நடத்தக்கூட .மனமற்று, உதாசீனப்படுத்தி வருகிறது.

தன்னிடம் அறிக்கையாகவும் பிற வடிவத்திலும் கருத்துத் தெரிவித்தவர்கள் பட்டியலில் விதை நிறுவனங்களின் அமைப்பைச் சேர்ந்த பலர் கருத்துகள் பெற்றது வல்லுனர் குழு. 

மான்சான்டோ-மகிஹோ நிறுவனமும் கருத்து தெரிவித்திருக்கிறது. இருப்பினும் உச்சநீதி மன்றத்தின் வல்லுனர் குழுவின் அறிக்கை வெளியானதும் எதிர்பார்த்தபடியே விதை நிறுவனங்கள் கடும் விமர்சனங்களை வைத்தன, தங்களைக் கலத்தாலோசிக்கவில்லை என்றது. இந்திய வேளாண்மை அமைச்சகமும் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று கூறியதுடன் உச்சநீதி மன்றத்தின் வல்லுனர் குழுவிற்கு சோப்பாரவின் இடத்திற்கு முனைவர். ஆர்.எஸ்.பரோடா-வை சேர்க்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்திடம் வேண்டியது,

உச்சநீதி மன்றம் 2012 நவம்பரில் வேளாண் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று முனைவர். பரோடா அவர்களை தொழில்நுட்ப வல்லுனர் குழுவில் ஆறாவது உறுப்பினராக நியமித்தது. 

சார்பு நிலை இல்லாத சுதந்திரமாக இயங்கக் கூடியவர்களே எல்லா குழுவிலும் இருக்க வேண்டும் என்றும்  மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்குபவர்களாக, மரபணு மாற்று விதை உருவாக்கும் நிறுவனங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்காளக இருக்கக்கூடாது

உச்ச நீதி ம்ன்றமும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையும், உச்ச நீதி மன்றத்தின் தொழில் நுட்ப வல்லுனர் குழுவின் இடைகால அறிக்கையும், பி.ட்டி கத்தரிக்கு தடை விதித்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்திரவும் என்று தெரிவிக்கிறது. உச்சநீதி மன்றமே இதை பல முறை கூறியிருப்பினும் தனக்கு ஆலோசனைக்கூறக்கூடிய குழுவில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சார்பு நிலையில்லாதவரா என்பதை ஏன் கவனிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஆறாவது உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.பரோடா தனது பணிக்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரபணு மாற்று விதை நிறுவனங்களுடன்  தொடர்பில் இருந்திருக்கிறார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.

இவர் வேளாண்மை அறிவியலை முன்னெடுப்பதற்கான அறக்கட்டளை தலைவராகவும், ஆசியா பசுபிக் வேளாண்மை ஆய்ச்சி நிறுவனங்களின் சங்கம் என்ற அமைப்பின் நிர்வாகச் செயலராக இருந்திருக்கிறார்.

இவ்விரு அமைப்புகளும் மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று வருபவை. மேலும் இவர் மான்சான்டோவின் உலகளாவிய ஆலோசனைக்குழுவிலும் இருந்திருக்கிறார். 

இந்த உண்மைகளை அவரை பரிந்துரைத்த வேளாண் அமைச்சகமோ பரோடா அவர்களோ உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கவில்லை,

இன்று வரை இவர் உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவில் இருக்கிறார்.


4 comments:

எம்.ஞானசேகரன் said...

இந்தக் கட்டுரையின் எல்லா மூன்று பகுதிகளையும் சேமித்து வைத்திருக்கிறேன். பொறுமையாக படிக்க வேண்டும். மரபணு விதைகள் பற்றி ஓரளவுக்குதான் அறிந்திருக்கிறேன். தாங்கள் தகவல் களஞ்சியத்தையே கொட்டியிருக்கிறீர்கள்.
வபொறுமையாக படித்துவிட்டு கருத்து கூறுகிறேன் நண்பரே!

ஜோதிஜி said...

ஈழம் திருப்பூர் இந்திய விவசாயம் போன்ற விசயங்களுக்கு எவராவது பின்னாளில் தேடி வரும் பொழுது இது போன்ற பதிவுகள் உதவக்கூடும் என்பதற்காக இவற்றை பதிவேற்றுகின்றேன். நன்றி.

கலாகுமரன் said...

விரிவான ஆய்வு மற்றும் தகவல்கள். சில கேள்விகள் புரிதலுக்காக... இந்திய விவசாயிகள் இதை எதிர்க்கிறார்கள் ஏன்?. இந்திய அரசு இதை ஆதரிக்கிறதா ? இதனால் நிலத்தின் சத்துக்கள் உரிஞ்சப்பட்டு மலடாகும் வாய்ப்பு என்பது உண்மையா ? இது போன்ற ஒட்டு ரகத்தை இந்தியா உருவாக்க முடியாதா?

ஜோதிஜி said...

இந்தியாவில் உருவாக்கிய ரகத்தையும் வெளிநாட்டு விதை நிறுவனங்களுக்கு விற்று விட்டார்கள். தொடரை தொடர்ந்து படித்து வந்தால் புரியும்.

இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக மறைமுகமாக பல இடங்களில் நேரிடையாக ஆதரிகின்றது.

மரபணு விதைகளை ஒரு முறை பயிர் செய்தால் அடுத்த முறை அந்த செடியில் இருந்து வரும் விதைகளை வைத்து நாம் மீண்டும் பயிர் செய்ய முடியாது. அந்த விதைகள் மலடு போலவே இருக்கும் அளவுக்கு விஞ்ஞான மாற்றத்தை அந்த விதையில் உருவாக்கி வைத்து உள்ளனர்.

இன்னும் அதிக பட்சம் பத்து ஆண்டுகளிலும் நாம் உண்ணும் ஒவ்வொரு பொருளும் ஏதோவொரு பன்னாட்டு நிறுவனத்தின் விருப்பத்தின் பேரில் தான் நாம் உண்ண உறங்க உடுத்த முடியும்.