Thursday, August 31, 2017

தமிழக அரசியல், கட்சி, சாதி இனி மதமும்............


அதிமுகவை விமர்சிக்கும் போது கை டைப்படிக்க வராது ஏனென்றால் அவரது படைப்பு அப்படி : திமுகவை எப்படிக் கரித்துக் கொட்டி மகிழ்ந்தார். இப்ப மயிலறகு போல் தடவி கொடுங்க. கோயில் கோயிலாகப் போகிறார்கள் என்று அதிமுகவினருக்கு வலிக்கும், இன்னும் மென்மையாக ...விமர்சிக்கவும் 

Nachiappan Narayanan 

சென்ற வருடம் வரைக்கும் திமுகவில் இருக்கும் நண்பர் அதிமுகவின "ஸ்லீப்பர் செல்" என்று என்னை அழைத்தார். அவரே சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விவாதத்தில் "பா.ஜ.க. வின் ஸ்லீப்பர் செல்" என்று அழைக்கின்றார். மற்றொரு நண்பர் "கலைஞரை முட்டுக் கொடுக்க நீங்க ஒவ்வொரு கட்டுரையிலும் ஜெயலலிதாவைத் தாக்கி எழுதிக் கொண்டே யிருக்குறீங்க" என்றார். "கருணாநிதி போன்ற நபரை எதிர்க்க ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாவது உங்களுக்குப் புரியுமா?" என்றார். மற்றொரு நண்பர் சில மாதங்களுக்கு முன் "நீங்க தனித்தமிழ் இயக்க ஆதரவாளரா?" என்றார். மற்றொருவர் "நீங்க நடுநிலை என்ற பெயரில் குறிப்பிட்ட ஜாதி ஆதரவாளராக இருக்குறீங்க?" என்றார். இதன் தொடர்ச்சியாக மேலே உள்ள விமர்சனத்தை வாசித்த போது இது குறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. 


என் அரசியல் பதிவுகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி, என் கருத்துக்கள், விமர்சனங்களைப் பார்த்து அவரவரும் ஒரு எண்ணத்தை வைத்திருக்கக்கூடும். ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்படையாகவே எழுதி வந்துள்ளேன். விருப்பங்கள், வெறுப்புகள், நம்பிக்கைகள் போன்ற அனைத்தும் தாண்டி வருவது அனைவராலும் முடியாத ஒன்று. பக்குவடைதல் என்பது அவரவர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் நிலையைப் பொறுத்தே அமைகின்றது. கல்லெறிதல் என்பது எளிதானது. நிமிட நேர வேலை. ஆத்திரம் அடங்கிவிடும். ஆனால் கல்லை எதிர்கொண்டவர் மனநிலை தான் எனக்கு முக்கியமாகத் தெரிகின்றது. சிறப்புப் பயிற்சி எதுவும் இல்லாமலே "எதிர்கொள்ளுதல்" என்பது இயல்பான பழக்கமாக எனக்குள் இருக்கிறது. எனவே அதிகாரப் போதை என்ற பதிவில் நண்பர் நாச்சியப்பன் வைத்த விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் பொருட்டு இந்தப் பதிவு. 


பதிவு என்றாலே திரைப்படம் மற்றும் அது சார்ந்த விசயங்கள், திரை விமர்சனங்களைப் பற்றித்தான் பாரபட்சமின்றி அனைவரும் எழுத விரும்புகிறார்கள். அடுத்து ஆன்மீகம். இதனைத் தொடர்ந்து அவரவர் அனுபவங்கள். இந்த மூன்றுமே எந்தப் பிரச்சனையையும் நம் வீடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடாது என்பது நிச்சயம். அரசியல் என்பது எவரும் தொட விரும்பாத துறை. ஆனால் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி ஏன் எழுதத் தயங்குகின்றோம்? 

காரணம் நம் சுயபாதுகாப்பு. எதிரிகளைச் சம்பாரித்துவிடக் கூடாது என்ற எண்ணமும் கூட. அதனால் என்ன? இறக்கும் வரையிலும் எதிரிகளும் நம்மோடு இருந்தால் தானே வாழ்க்கை. 


நான் எழுதத் தொடங்கிய முதல் நாள் தொடங்கி இன்று வரையிலும் எது குறித்தும் யோசிக்காமல் நான் பார்க்கும் சமூகத்தை எனக்குத் தெரிந்த மொழியில் எழுதிக் கொண்டு தான் வருகின்றேன். நான் வெளியிட்ட மொத்த மின் நூல்களுக்குத் தனிப்பக்கம் ஒன்று சமீபத்தில் ஒதுக்கி அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். ஒரு தளத்தின் வாயிலாக மட்டும் மொத்த நூல்களும் 1,75,000 பேர்கள் தரவிறக்கம் செய்துள்ளார்கள். இந்த அங்கீகாரம் என்பது நேர்மைக்கு, உழைப்புக்குக் கிடைத்த மரியாதை அல்லவா? இதற்காகவாவது உண்மைகளை உரத்துப் பேச வேண்டும் தானே? 

குடும்ப அரசியல் 

அப்பா இறக்கும் வரையிலும் காங்கிரஸ்காரர். ஆனால் யாரிடமும் பகிர்ந்து கொண்டு நான் பார்த்ததில்லை. கட்சி சார்ந்த விவாதங்கள் செய்து கூட இல்லை. ஆனால் அவரைத் தேடி வருபவர்கள், அவர் தொடர்பில் இருந்த அத்தனை பேர்களும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். சட்டமன்ற தேர்தலில் அவர் யாருக்கு ஓட்டளித்தார்? என்று தெரியவில்லை? ஆனால் தேர்தல் நாளில் முதல் ஆளாக ஓட்டைப் போட்டுவிட்டு அவர் அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டிருப்பார். அம்மா இன்று வரையிலும் இரட்டை இலை அபிமானி. இன்னமும் ஜெயலலிதாவை சசிகலா தான் கொன்றுவிட்டார் என்று உறுதியாக நம்புகின்றார். ஜெயலலிதா இறந்த அன்று குடும்பத்தில் ஒருவர் இறந்தது போலத் துக்கமாக இருந்தார் என்று தம்பி மனைவி அழைத்துச் சொன்னார். உடன்பிறந்தவர்கள் எவரும் தீவிர அரசியல் அபிமானிகள் இல்லை. அவர்கள் என்ன மாதிரியான கொள்கையின் அடிப்படையில் ஓட்டளிக்கின்றார்கள் என்ற நான் கேட்டுக் கொண்டதில்லை. 

என் அரசியல் 

நான் ஓட்டுப்போடத் தொடங்கியது முதல் இன்று வரையிலும் கட்சியின் அடிப்படையில் ஒட்டளித்தது இல்லை. என் தொகுதியில் நிற்கும் நபர்களின் சாதகப் பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து அவர்களின் தகுதியின் பொருட்டே என் ஜனநாயக கடமையைச் செய்கின்றேன். அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி. ஒப்பீட்டளவில் இவர் படுபாதகச் செயலை செய்து விடமாட்டார் என்ற எண்ணம் உருவாகும்பட்சத்தில் அவருக்கே என் வாக்கைச் செலுத்துகிறேன். 

என்ன காரணம்? படிப்படியாகப் பேசுவோம். 

காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். இந்த வரிசையில் ஜெயலலிதாவையும் சேர்க்க வேண்டும் என்பதே கொடுமையான உண்மை. முதல் நான்கு பேர்களும் தங்கள் ஆளுமையால், தங்களின் தனிப்பட்ட திறமை அல்லது செல்வாக்கால் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள். காமராஜரும், அண்ணாவும் மக்களே எங்கள் சொத்து என்று காலத்தோடு கரைந்தவர்கள். இன்று வரையிலும் இவர்கள் இருவரையும் பேசித் தான் இப்போதுள்ளவர்கள் அரசியல் செய்ய வேண்டியதாக உள்ளது. அதுவே தான் அவர்கள் சேர்த்த சொத்து. 

ஆனால் கலைஞரும், எம்.ஜி.ஆரையும் இந்தப் பட்டியலில் கொண்டு வர முடியாது. கலைஞரின் சொத்துக்கள் வெளிப்படையாகத் தெரிந்தது. எம்.ஜி.ஆர் வழங்கியது தான் இன்று வரையிலும் பேசுபொருளாக உள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் சர்வாதிகாரமும், ஆணவமும், செய்த சமூகச் சீர்கேடுகளும் எண்ணிடலங்கா. எப்போதும் போல ஊடகங்கள் துதிபாடுவதோடு இன்று பொதுஜனங்களுக்கு முகம் தெரியாத அத்தனை பேர்களும் அம்மா புகழ் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். 

இவர் செய்த உச்சக்கட்டம் என்பது மிடாஸ் என்ற சாராய நிறுவன வளர்ச்சி மற்றும் லாபத்திற்காக மொத்த தமிழ்நாட்டையும் குடிகார மாநிலமாக மாற்றியது தான் தமிழகத் தொழிலாளர் சமூகத்திற்குச் செய்த மிகப் பெரிய கேடு. கடைசியில் எந்த மாநில முதலமைச்சரும் பெறாத அவப்பெயரான ஏ1 குற்றவாளி என்ற பெயரோடு போய்ச் சேர்ந்து விட்டார். 

கட்சி Vs கொள்கை 

தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் அதனை எதிர்த்து உருவான திமுக. அங்கங்கே இருந்த கம்யூனிஸ்ட்.. இந்தக் கட்சியின் கொள்கைகள் தான் தமிழக அரசியலைத் தீர்மானித்தது. சிந்தாந்த ரீதியான வேறுபாடுகள். எண்ணங்கள், ஆனால் திமுக அரசியல் களத்தில் வளரத் தொடங்கிய போது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் முற்றிலும் மாறத் தொடங்கியது. கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு கூடக் கொள்கைகள் தான் இங்கு விவாத பொருளாக இருந்தது. 

ஆனால் எம்.ஜி.ஆர் அதிமுக என்று தமிழகத்தில் வேரூன்றிய பின்பு தனி நபர் வழிபாடு தொடங்கியது. கொள்கைகள் பின்னுக்குச் சென்றது. அண்ணா காணாமல் போனார். கலைஞர் என்ற பெயர் மட்டுமே மிஞ்சியது. கலைஞரா? எம்.ஜி.ஆரா? என்பது பேசு பொருளாக மாறியது. இன்று தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உள்ளது? என்ன கொள்கைகள்? அதைப்பற்றிப் பேச யாருக்கும் இங்கே நேரமில்லை. 

கட்சி Vs வேட்பாளர் 

கட்சிகள் எதன் அடிப்படையில் ஒருவரைத் தேர்வு செய்கின்றார்கள்? 

முதல் காரணம் பணம். இரண்டாவது ஜாதி. மூன்றாவது அவரின் தனிப்பட்ட செல்வாக்கு. இதற்குப் பிறகு தான் சிபாரிசு முதல் மற்றவை எல்லாமே. 

அரசியல் என்றால் சேவை தானே? என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் வாசிப்பதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது சொந்த வேலைகள் இருந்தால் சென்று விடுவது உத்தமம். காரணம் தமிழக அரசாங்கத்தின் கடன் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. விரைவில் ஐந்து லட்சம் கோடியைத் தொட்டுவிடும் என்கிறார்கள். எட்டரைக் கோடி தமிழர்களின் ஒவ்வொருவர் தலைக்கும் உண்டான கடன் தொகையை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும். 

கடன் உள்ள நிறுவனத்தை யாராவது விலைக்கு வாங்க விரும்புவார்களா? நொடித்துப் போன குடும்பத்தில் பெண் எடுக்க விரும்பும் உத்தமர்கள் நம் ஊரில் இருக்கின்றார்களா? ஆனால் "நாங்கள் வந்தால் நல்லாட்சி தருவோம்" என்ற சொல்லியே ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்றவே விரும்புகிறார்கள்? 

என்ன காரணம்? 

அதிகாரம் என்பது அனைத்தையும் வாங்க முடியும். எல்லாவற்றையும் மாற்ற முடியும். பதவி ஆசையால் சாம்ராஜ்யங்கள் அழிந்ததை வரலாற்றுச் சுவடுகளில் நாம் படித்து அறிந்து இருந்த போதிலும் இன்று வரையிலும் மனித குணம் மாறாமல் இருப்பதால் இங்கே ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. 

வேட்பாளர் Vs கட்சி 

கட்சி எதனடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றது என்பதனைப் போல ஒரு தனிப்பட்ட நபர் எதன் அடிப்படையில் அரசியலுக்கு வருகின்றார்கள்? எப்படித் தங்களுக்கான கட்சியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதனையும் பார்க்க வேண்டும். 

முதல் நிலை : அளவு கடந்து பணத்தை வைத்திருப்பவர்களுக்கு அவற்றைக் காக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் தேவைப் படுகின்றது. இது ஜனநாயக நாடு. மக்களாட்சி. யார் வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வரலாம். தகுதிகள் தேவையில்லை. தரம் குறித்துப் பேச வேண்டியதே இல்லை. இங்குள்ள அரசியலுக்கு உண்டான தனித்தன்மை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாதது. இங்கு எவரும் பரம்பரைத் தொழிலதிபர்கள் அல்ல. நேர்மையான வழியில் சம்பாரித்தவர்களும் அல்ல. 

முறையற்ற வழியில் சம்பாரிக்கும் பணத்திற்கு இன்றைய சமூகம் வைத்துள்ள பெயர் சாமர்த்தியம், சமயோசிதம், புத்திசாலித்தனம், யாரோ ஒருவருக்கு வாய்ப்பு அமைந்து விடும். அப்படி அமைவதின் மூலம் தன் குடும்பம் மட்டுமல்ல. தன் குடும்பத்தோடு சார்ந்த அத்தனை உறவுகளுக்கும் சொத்து சேர்க்க வாய்ப்புகள் இங்கு உருவாக்க முடியும். அப்படித்தான் இங்கு ஒவ்வொருவரும் உருவாக்கினார்கள். பிறகு? சம்பாரித்த பணம் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டுமே? 

பணம் இல்லாதவர்களும் அரசியலுக்கு வந்து கொண்டு தானே இருக்கின்றார்கள்? என்ற உங்கள் கேள்வி புரிகின்றது. இங்குத் தான் அரசியல் அதிகாரத்தின் மூலம் இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ளவும் அல்லது இல்லாததை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்ற புதிய தத்துவம் உருவாகின்றது. 

பணம் Vs வாழ்க்கை 

மேலை நாடுகளில் வாழ்க்கை என்பது அன்றாட வாழ்க்கை வாழ்வதில் சுகம் பெற முடியும் என்று நம்புகிறார்கள். நம் நாட்டில் சேர்த்த சொத்துக்களின் அடிப்படையில், வைத்துள்ள பணத்தின் மூலம் கௌரவம், அந்தஸ்து, புகழ், பெருமை போன்றவை கிடைக்கின்றது என்பதனை உறுதியாக நம்புகிறார்கள். இதன் காரணமாகப் பணம், மேலும் பணம் என்று சேர்க்கவே விரும்புகின்றார்கள். அனுபவித்தல் என்பது சேர்த்த சொத்துக்களைக் காப்பது மட்டுமே. 

உடல் நலம் குன்றி, செயல்படமுடியாத நிலைக்கு வந்து சேர்ந்தாலும் தான் வைத்துள்ள சொத்துக்கள் என்னவாகும்? என்று எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கடைசிவரைக்கும் மாறுவதும் இல்லை. நம் வாழ்க்கை அமைப்பு இப்படித்தான் காலம் காலமாக உள்ளது. 

இதன் காரணமாக அவர்கள் நேரிடையாக அதிகாரத்திற்கு வருகின்றார்கள். அல்லது அவர்கள் விரும்பும் நபரை அதிகாரம் செய்யும் இடத்திற்கு அனுப்புகிறார்கள். இது மாதிரியான ஆட்களைக் குறிப்பிட்ட கட்சி தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கட்சியின் வேலை பாதிக் குறைந்து விடுகின்றது. குறிப்பிட்ட நபர் வெல்வதற்கான எல்லா வேலைகளையும் அவரே செய்து விடமுடியும். அப்போது நிலவும் மாநில அரசியல் தட்பவெப்பம் மாறாமல் இருந்தாலே போதுமானது. கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் வேட்பாளருக்கு வலு சேர்க்கும். கட்சி கொடுத்த வாக்குறுதிகள் வலிமையாக்கும். குறிப்பிட்ட பகுதியிலும் பரவியிருக்கும் எல்லா ஜாதியில் இருக்கும் முக்கியமான நபர்களுக்கு அளிக்கப்படும் பணம் என்பது பலவற்றை மாற்ற உதவும். மொத்தத்தில் அடி முதல் நுனி வரையிலும் செலவழிக்கப்படும் பணம் என்பது பாதாளம் வரைக்கும் பாயும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பணம் தேர்தலில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதாக இருந்தது. இன்று வாக்களிக்கும் ஒவ்வொருக்கும் வழங்கப்பட வேண்டியதாக இருப்பதால் அதிகமான பணம் அதிகமான ஓட்டு என்கிற நிலையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் இனி வரும் காலகட்டத்தில் இங்கு மதமும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் உள்ளதை என்பதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டாவது நிலை 

தனி நபர்களின் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்ட பிரச்சனைகள் கலவரமாக மாறும். அல்லது மாற்றப்படும். இயல்பாகவே தமிழர்களின் நீக்க முடியாத ஜாதி அபிமானம் உள்ளுற அதனை விரும்பும். அவர் நல்லவர் கெட்டவர் என்பதனைத் தான் நம்ம ஜாதிக்காரன் என்கிற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும். இது போன்ற சமயங்களில் யாரோ ஒருவர் முன்னிறுத்தப்படுகின்றார். அவர் பாதிக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் செயல்படாமல் அங்குச் செல்வாக்கு செலுத்தும் ஜாதி அடிப்படையில் செயல்படும் போது இயல்பாகவே அங்கே ஒரு தனிக்கூட்டம் உருவாகிவிடுகின்றது. 

அதற்குப்பிறகு நான் ஆண்ட பரம்பரை என்று தொடங்கி ஆள வேண்டிய பரம்பரைக்கு மாறத் தயாராக இருக்கின்றார்கள். இதனைச் சமய சந்தர்ப்பம் பார்த்துத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்பவர்(கள்) குறிப்பிட்ட ஜாதிக்காரனுக்குக் காவலனாக மாறுகின்றான். இந்த வெறித்தீ அணையாமல் ஒவ்வொரு சமயத்திலும் பார்த்துக் கொள்கிறார்கள். 

குறிப்பிட்ட பகுதியில் ஜாதி ரீதியான செல்வாக்கில் உள்ளவர்களுக்கு மாநிலம் சார்ந்த செல்வாக்குத் தேவைப்படுகின்றது. கட்சி இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இவர்கள் கட்சியை வைத்துக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்கின்றார்கள். 

மூன்றாவது நிலை. 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சாதி சார்ந்தவர்களின் பண்ணையார்தனம் இருந்தது. கேள்வி கேட்கவே முடியாத சமூக அமைப்பு. அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு கொடிகட்டி பறந்தது. சொன்னது தான் சட்டம். செய்வது தான் கடமை. தனிப்பட்ட செல்வாக்கில் இருந்தவர்களின் செயல்பாடுகளினால் அவரவர் சார்ந்த கூட்டம் அப்படியே வழிவழியாக வந்து கொண்டிருந்தது. ஆதிக்கம் செலுத்தியவர்கள் கடைசி வரைக்கும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டேயிருந்தார்கள். அடிமைப்பட்டவர்கள் எழவே முடியாத அளவிற்கு வைத்திருந்தார்கள். இன்று உடைந்து விட்டது. 

மேலும் இப்போது நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனாலும் இன்றும் அடக்குவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். முன்பு செய்திகள் பரவலாக்கப்படவில்லை. இன்றோ அடுத்த நொடியில் எல்லாமே வெட்டவெளிச்சமாக மாறி விவாத பொருளாக மாறிவிடுகின்றது. 

இன்றும் ஒவ்வொரு தொகுதியிலும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் அவர்களைப் பணம் என்ற மந்திரம் அடிபணிய வைத்து விடுகின்றது. அதிகப்படியான செல்வாக்கு உள்ளவர்களை எந்த அரசியல் கட்சியும் விரும்புவதில்லை. தேவையானதைக் கொடுத்து தேவைப்பட்டதை வாங்கிக் கொள்ளும் கொடுக்கல் வாங்கலாகவே வைத்துக் கொள்ள விரும்புகின்றார்கள். எந்தக்கட்சி என்றாலும் பாரபட்சமின்றி இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றது. 

நமது ஜாதிக்காரன் வந்தால் நமக்குப் பாதுகாப்பு தானே என்று நினைக்கக்கூடிய ஒவ்வொருவரும் இரண்டு வகையில் உதவுகின்றார்கள். ஒன்று பணம். மற்றொன்று ஒட்டளித்தல். ஜாதிக் காவலன் தேர்தலில் வென்ற பிறகு பிறகு சமூகக் காவலனாக மாறிவிடுகின்றார். 

மேலே சொன்ன எந்த இடத்திலும் நாடு நலம் பெற என்ற லட்சியம் சார்ந்த ஆசைகள் தேர்தலில் பங்கெடுக்கும் வேட்பாளர் மனதில் இருப்பதில்லை. அது பொதுக்கூட்டங்களில் பேசப்படும் வார்த்தையாகவே உள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எழுத்துக்களாகவே உள்ளது. 

ஏன் மாறியது? 

தனக்கென்று குடும்பம் இல்லாத தலைவர்களும் நம் நாட்டில் இருந்தார்கள். தங்கள் குடும்பத்தையே கண்டு கொள்ளாதவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு நிர்ப்பந்தம் எந்த வகையிலும் கடைசிவரையிலும் உருவாகவில்லை. நினைத்ததைச் சாதிக்க முடிந்தது. தொடக்கத்தில் சாதி என்பதனை ஒவ்வொருவரும் மனதிற்குள் மட்டும் வைத்திருந்தார்கள். அதனை அரசியலுக்குள் எவரும் கொண்டு வரவில்லை. மைனாரிட்டி, மெஜாரிட்டி போன்ற வார்த்தைகள் எவரும் பயன்படுத்தியதில்லை. எல்லா இடங்களிலும் எல்லோரும் நீக்கமற நிறைந்திருந்தார்கள். 

இந்த அமைப்பு இப்போது முழுமையாக மாறிவிட்டது. கொள்கைகள் விமர்சிக்கப்பட்டது. அது கொலை வரை செல்லாமல் இருந்தது. இன்று கொலையில் தான் ஒவ்வொன்றும் தொடங்குகின்றது. போராட்டம் என்பது பொதுஜன விருப்பத்தின் அடிப்படையில் தொடங்கியது. இப்போது போராட்டத்தின் வடிவம் முழுமையாக மாறிவிட்டது. 

மாறிய மக்களின் எண்ணங்கள் 

மக்கள் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கக் தொடங்கி விட்டார்கள். அத்துடன் நல்லவர்கள் எவரையும் ஆதரிக்க விரும்புவதில்லை. உனக்கேன் வேண்டாத வேலை? என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு அரசியல் என்பது தனித்தீவாக ஒதுக்கப்பட்டு விட்டது. அரசியலுக்கென்று தனி வரையறை உருவாக்கப்பட்டு விட்டது. தனிநபர்கள் பார்த்து ஆதரிப்பவர்கள் அவர்களின் செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. இங்குள்ள அரசியல் களமென்பது கடைசி நேர நிகழ்வை வைத்துத் தான் முடிவெடுக்கப்படுகின்றது. 

இதன் காரணமாகப் போன மாதம் வரைக்கும் எதிரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் தேர்தல் சமயத்தில் கூட்டணி வைத்துக் கொண்டாலும் ஆதரிக்கும் கூட்டம் கேள்வி எதுவும் கேட்பதில்லை. காரணம் கொள்கை ரீதியான விசயங்கள் அடிபட்டுத் தனி நபர் சார்ந்து விருப்பு வெறுப்புகள் தான் இங்கே முன்னிலை வகிக்கின்றது. 

என்ன செய்கின்றது ஊடகங்கள்? 

சாதிக்கொரு சங்கம், கட்சி இருப்பது போல இன்று கட்சிக்கொரு ஊடகம் இருப்பதால் எது உண்மை? எது பொய் என்றே எவராலும் தீர்மானிக்க முடியாத அளவுக்குக் காட்சிகள் காட்டப்படுகின்றது. படிக்கும் பாடங்களிலும், பேசும் உரையாடல்களிலும் அரசியல் என்பது கிசுகிசு பாணியாகவே இருப்பதால் அரசியல் தெளிவு என்பது தமிழர்களிடத்தில் எந்தக் காலத்திலும் இல்லை என்பதோடு இதுவே தான் தமிழர்களின் தனிக்குணம் என்பதனையும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தெளிவாகப் புரிந்தே வைத்துள்ளார்கள். 

இனி என்ன ஆகும்? 

ஃபேஸ்புக் வந்தபின்பு உரையாடல் களமாக மாறியுள்ளது. வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்ற பயம் நீங்கியுள்ளது. வாட்ஸ்அப் என்ற தொழில் நுட்பம் நல்லதும் கெட்டதுமான அத்தனை விசயங்களையும் அள்ளி வந்து கொட்டிக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அடிப்படையில் தெளிவான சிந்தனைக்குப் பயிற்சி இல்லாத தமிழினத்தில் எத்தனை தொழில் நுட்பம் வந்த போதிலும் திரைப்படக் கவர்ச்சியில் இருந்து அவனால் மீண்டு வரவே முடியாது என்பது தான் கடந்த காலம் நமக்குத் தரும் படிப்பினை. 

சமகால அரசியல் அசிங்கங்களை நாம் பார்த்துக் கொண்டு இருக்கத்தானே முடிகின்றது. நம்மால் என்ன செய்ய முடிகின்றது? அதிகாரங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு மேல் அதிகாரம் வைத்திருப்பவரிடம் மண்டியிட அத்தனை அயோக்கியத்தனமும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. 

புரட்சி வருமா? 

இங்கு வாழும் ஒவ்வொரு தனி மனிதனுக்குச் சுய பாதுகாப்பு முக்கியமாக உள்ளது. நம் குடும்ப அமைப்பு அதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலும் மேலும் வலுவாக்கிக் கொண்டேயிருக்கிறது. அதிகாரத்திற்குத் தேவைப்படும் கல்வித் திட்டங்கள் மட்டுமே இங்குப் பாடமாக உள்ளது. அதனைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்ற போது தெளிவு என்பது எங்கேயிருந்து வரும்? குழந்தைகளுடன் அரசியல் பேசாதே? உண்மையான அரசியல் அவர்களுக்குத் தெரிய வேண்டிய தேவையில்லை? என்று சொல்லியே வளர்க்கப்பட்டோம். 

இன்று மறுக்கப்பட்ட அத்தனை விசயங்களும் தொழில் நுட்பம் கொண்டு வந்து கொட்டுகின்றது. தடுமாற்றத்தில் முடிவு எடுக்க முடியாமல் சோர்ந்து போய் விட்டோம். நமக்கான அடிப்படை விசயங்கள் தான் போராடித்தான் பெற வேண்டியதான சூழ்நிலையை அதிகாரவர்க்கம் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக உருவாக்கி வைத்துள்ளது. அதைப் பெறுவதற்கே அலையும் நிலையில் எங்கே போய்ப் புரட்சியைப் பற்றி யோசிப்பது. நான் இங்கே பிழைக்க என்ன வழி? என்று மொத்தமாக உச்சக்கட்ட சுயநலவாதியாக மாற்றியுள்ளது. நுகர்வு கலாச்சாரமும், வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பமும் உழைக்காமல் வாழ்வது எப்படி? என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டே வருகின்றது. 

நாம் என்ன செய்யலாம்? 

தமிழன் என்ற சொல்லுக்கும் ஒற்றுமை என்பதற்கும் வெகு தொலைவு. ஆனால் எந்த சூழ்நிலையிலும் வென்று தனித்தன்மையைக் காட்டும் இனம் நம் தமிழினம். ராஜேந்திர சோழனின் கடற்படையும், அவர்களின் கடல்தாண்டி நாடுபிடித்த வரலாற்றையும் படித்துப் பாருங்கள்.  எல்லாவிதமான நுட்பங்களையும் தாமே வளர்த்துக் கொண்ட இனம் நம் மூதாதையர்கள். ஆனால் இன்று? அரசியல்வாதிகளின் பகடைக்காயாக சிக்கி சின்னாபின்னமாகி தடுமாறிக் கொண்டிருக்கின்றோம்.

உலக வரலாற்றில் நாம் பார்த்த, வாசித்த இனங்களில் யூதர்கள் போலத் துன்பப்பட்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் காரணமாக இன்று உலகை அவர்கள் எல்லாவிதங்களிலும் ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். உணர்ச்சியைப் பின்னுக்குத்தள்ளி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். 

நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாடார் இன சமூக மக்கள், தங்களின் சாதி இழுக்கைக் களைந்து தனக்கென ஒரு சமூக வாழ்க்கை மற்றும் அங்கீகாரம் என்று இன்று நம் முன்னால் ஆலமரம் போல வளர்ந்து நிற்பதற்குக் காரணமும் கல்வியும் பொருளாதாரத்திலும் அவர்கள் காட்டிய அக்கறை தான். நாம் போட்டி போட அஞ்சிக் கொண்டிருந்தால் காலங்கள் மாறும். கண்ணீர் தான் மிஞ்சும். 

உங்களின் உரிமை பறிபோகின்றது? என்று அலறும் இன்றைய அரசியல்வாதிகளின் குழந்தைகள் எங்கே படித்து எங்கே வாழ்கின்றார்கள் என்பதனை உற்றுக் கவனித்துப் பார்த்தாலே போதுமானது. எல்லாவற்றையும் நம்மால் யோசித்துக் கொண்டே இருக்க முடியாது. முடிவெடுக்க வேண்டிய தருணமிது. 

நீங்கள் எந்தக் கட்சியின் ஆதரவாளராக வேண்டுமானாலும் இருங்கள். தவறில்லை. அதற்கு எத்தனையோ நியாயமான காரணங்கள் உங்களுக்கு இருக்கக்கூடும். தவறில்லை. குறைந்தபட்சம் உங்கள் தொகுதியில் நிற்பவரைத் தேர்ந்தெடுப்பதிலாவது உங்கள் அரசியல் அறிவு வேலை செய்யட்டும். அதன் மூலம் நிச்சயம் அரசியல் மாற்றம் உருவாக வாய்ப்புண்டு. நம் அரசியல் தெளிவை தொடங்கி வைப்போம். அதனைக் குழந்தைகளுக்கும் புரியவைப்போம். 

நம் வசிக்கும் பகுதிக்கு சரியான நபர்களை நாம் தேர்ந்தெடுக்காவிட்டால் நாம் புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை. எந்த அரசியல் கட்சியையும் விமர்சனம் செய்ய நமக்கும் அருகதையும் இல்லை. சரியான வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுக்காவிட்டால் நம்மால் இந்த முறை அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்று ஒரு கட்சி எப்போது யோசிக்கின்றதோ அன்று தான் மாற்றத்தின் முதல்படி ஆரம்பம். அது நம்மால் முடியும். கட்சி, அதன் கொள்கைகளைத் தாண்டி நபர்கள் முக்கியம். நல்ல கொள்கைகளை மோசமான நபர்கள் மூலம் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா? 

உங்களால் முடிந்தால் அன்று தான் நமது மாநிலத்தின் அரசியல் மாற்றத்தின் முதல் படியாக இருக்கும்.

Friday, August 25, 2017

மோடி ஒழிக


நீட் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் தமிழர்கள் காட்டும் ஆர்வமும் பரப்புரையும் ஆச்சரியமானதல்ல. ஈழப்பிரச்சினை முதல் இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் பின்னால் உள்ள அடித்தளம் என்வென்றே அறியாமல் இருப்பது தமிழினத்தின் சிறப்பு மட்டுமல்ல. அதுவே தான் அன்று முதல் என்றும் இருக்கும் அடையாளம். ஒவ்வொருவரும் சுட்டிக்காட்ட இங்கு ஏராளமான காரணங்கள் உண்டு. ஆனால் இங்கு இன்னமும் நாம் தமிழகக் கல்வித்துறையை எந்த அளவுக்குச் சீரழித்து வைத்துள்ளோம் என்பதனை எவரும் பொதுவிவாதமாக எடுத்துக்கொள்வதில்லை. 

ஊழல் என்பது அரசியல்வாதிகளின் பொதுக் கொள்கை. கட்சி பாரபட்சமின்றி எல்லாத்துறைகளிலும் எல்லாக் காலங்களிலும் நீக்கமற நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் ஜெ. ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை இன்றுவரையிலும் எந்த ஊடகமும் பெரிதுபடுத்தவே இல்லை என்பதோடு இன்னமும் அவருக்குப் புனிதபிம்பத்தைத் தான் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழக வாக்காள பெருமக்கள் இன்னமும் இரட்டை இலை மயக்கத்திலிருந்து வெளியே வந்து விடத் தயாராக இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஆனால் படித்த அறிவு ஜீவிகள் எக்காரணம் கொண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயலாக்கத்தில் இருக்கின்றார்கள். நடிகையாக வந்து நாடாளும் அதிர்ஷ்டம் பெற்றவர் காட்சிகளைக் காட்டி விட்டுக் குற்றவாளியாக மறைந்து விட்டார். ஆனால் ஜெ. உருவாக்கிவிட்டுச் சென்ற பாதையை இன்றும் கையில் வைத்துக் கொண்டு படம் காட்டிக் கொண்டிருப்பவர்கள் சமீபத்தில் நமக்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சி கல்வித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் பதவியை மறு உருவாக்கம் செய்து தமிழகக் கல்வித்துறையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். 

ஜெ. ஆட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு துறையும் இத்தனை லட்சங்கள் கொண்டு வந்து தோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கட்டளையின் காரணமாகக் கொள்ளையடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருக்க வேண்டிய அவல நிலை தமிழகத்தில் உருவானது. 

கடந்த 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா அமைச்சரவையில் சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச் செல்வன், கே.சி.வீரமணி ஆகிய ஐந்து பேர் அடுத்தடுத்துக் கல்வி அமைச்சராக இருந்தனர். 

2016ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானார் பெஞ்சமின். அடுத்து மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார் 

தற்போது எடப்பாடி அமைச்சரவையில், பள்ளிக் கல்வி அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன். 

இவ்வாறு 6 ஆண்டுகளில் பள்ளி கல்வித் துறை 8 அமைச்சர்களைச் சந்தித்துள்ளது. ஆனால் மாறாத ஒரே செயலாளராக இருந்தவர் சபீதா மட்டுமே, தமிழக கல்வித்துறையை ஜெ. எவ்வாறு கையாண்டார் என்பதற்கு இந்த மாறுதல்கள் உங்களுக்கு பலவற்றை புரியவைக்கக்கூடும்?

யார் இந்தச் சபீதா? 

“1988 வருடப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் குடும்பத்தில் இருந்து வந்தவர். 1991-96ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தார். 

அதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் பார்வைக்கு ஏற்ப பணியினைச் செய்து முடித்ததால் ஜெ.வின் மனதில் இடம் பிடித்தார். எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஐடியாக்களைக் கொண்டு வந்தததோடு அரசு சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் முக்கியமான இடத்தில் சபிதா இருந்தார்.. அதன் பிறகு ஜெ.வின் ஆட்சி மாறியதும் பல்வேறு இடங்களுக்குச் சபிதா மாறினார். 

மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக் கல்வித்துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா ஆட்சியில் தனிச் சிம்மாசனம் போட்டுக் கல்வித்துறையில் செயலாளர் அந்தஸ்தில் கோலோச்சியவர். ஜெயலலிதாவின் விருப்பத்தை இவர் நிறைவேற்றினாரா? அல்லது இவரின் செயல்பாடுகள் சரியானது தான் என்று ஜெ. நம்பினாரா என்று தெரியவில்லை? ஆனால் இன்று தமிழ்நாட்டின் கல்வித்தரம் கடைச்சரக்காகி ரூபாய்க்கு நான்கு டிகிரி என்று சொல்லும் அளவிற்குத் தமிழ்நாடு முழுக்கப் பட்டதாரிகள் நிரம்பி வழிகின்றனர். ஆனால் கல்வியின் தரம் அதலபாதாளத்தில் உள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையைப் பொருத்தவரை ஆசிரியர்கள் மாறுதல், புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, பாடநூல்கள் வாங்குவது முதல் பல்வேறு பொருட்கள் கொள்முதல் செய்வது, அதிகப் பணம் மழை கொட்டும் ஏரியா என்பதால் ஊழல் என்பது பொதுவானது. தமிழ்நாட்டின் வருடாந்திர நிதிநிலையில் இருபது ஆயிரம் கோடிகளுக்கு மேல் கல்வித்துறையில் கொட்டப்படுகின்றது. 14 பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டும் கூட இன்னமும் மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வந்தபாடில்லை. 

மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்ற வாதத்திற்கு ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடலாம். 

" மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)(சி)யின் படி நலிவுற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தைக் காலாவதியாக்குவதில் கல்வி அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால் ஒரு மாணவருக்குக்கூட இதன் பலன் சென்று சேரவில்லை" 

" சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2011 முதல் சட்டம் செயல்பட்டாலும், 2013-ம் ஆண்டு முதல் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால் இதன்பேரில் ஒரு இடம்கூட நிரப்பப்படுவதில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி தருவதில்லை என்று சொல்லித்தான் இவ்வளவு நாட்கள் காலம் கடத்தினார்கள். இதிலும், கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, மாநில அரசே, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வோம் எனச் சொல்லி, 97 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். இந்தப் பணத்தைக் கல்வி அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்குக் கொடுத்துவிட்டார்கள். மாணவர்களைப் போலியாகக் கணக்குக் காட்டி பள்ளி நிர்வாகமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.. 

'இத்திட்டத்தில் மோசடி செய்கிறார்கள்' எனத் தொடர்ச்சியாகப் புகார் எழுந்ததும், ஆர்.டி.இ திட்டத்திற்காகத் தனியாகக் குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு பள்ளியில் விசிட் செய்யும்போதெல்லாம், பெற்றோரைக் கூட்டி வந்து கணக்குக் காட்டுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் பெற்றோரிடம், மாணவரின் எதிர்காலத்தைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதற்கும் மேல் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் என எங்குப் புகாரை தூக்கிச் சென்றாலும், கண்டுகொள்வதில்லை. சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். ஆர்.டி.இ படி ஒரு மாணவருக்கு 9,900 ரூபாய் கட்டணத்தை அரசு வழங்குகிறது. 

முப்பதாயிரம் கட்டணம் வாங்கும் பள்ளிக்கு இதனால் இருபதாயிரம் இழப்பு ஏற்படுகிறது. சீட் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி வரும்போது, பள்ளி நிர்வாகம் சொல்லும் இடங்களில் பெற்றோர் கையெழுத்துப் போடுகிறார்கள். ஆர்.டி.இ கமிட்டி ஆய்வுக்கு வரும்போதுதான் எதற்காகக் கையெழுத்து வாங்கினார்கள் என்ற விவரமே தெரிய வருகிறது. நூதனமான முறையில் நடக்கும் இந்த மோசடிகளைப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரணம். இந்த மோசடியில் பெரும் பங்கு அவர்களுக்குப் போகிறது என்பதுதான்" 

இந்தச் சூழ்நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உதயச்சந்திரனை தனது துறைக்குச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார். 

யார் இந்த உதயச்சந்திரன்? 

பல்வேறு பதவிகளில் இருந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இயக்குநராக இருந்தவர். குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி பரிட்சை எழுதுபவர்களுக்கு வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் உருவாக்கியவதில் இவரின் சிறப்பான பணியில் ஒன்று. 

சசிகலா குடும்பத்தால் அரசியல் அனாதையாக்கப்பட்ட செங்கோட்டையன் தன்னுடைய கடைசிக் காலகட்டத்தில் செய்த உருப்படியான காரியம் உதயச்சந்திரனை தனது துறைக்குச் செயலாளராகத் தேர்ந்தெடுத்ததும், அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததும் ஆகும். 

ஆனால் உதயச்சந்திரனின் சுதந்திரமென்பது செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல. கல்வித்துறையைச் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்த லாபி வட்டத்தைப் பலமாக உலுக்கத் தொடங்கியது. வெளிப்படைத்தன்மையை எல்லா இடங்களிலும் கொண்டு வர வருமானம் பார்த்துப் பழக்கப்பட்ட கைகளுக்குச் சிரங்கு வந்தவன் கைபோல அறிக்கத் தொடங்கியது. செங்கோட்டையனுக்கு உதயச்சந்திரன் மூலம் ஒரு பக்கம் புகழ் வந்து கொண்டிருந்தாலும் வருமானம் தடைபடத் தொடங்கியது. 

வெளியே ஒவ்வொன்றும் கசியத் தொடங்கியது. கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு உதயச்சந்திரனை கல்வித்துறையில் இருந்து மாற்றக்கூடாது என்பது வரைக்கும் வந்து நின்றது. 

ஆனால் உதயச்சந்திரனை அவர் துறையில் இருந்து மாற்றக்கூடாது என்று அறிவுறுத்திய போதும் இவருக்கு மேலே முதன்மைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் பிரதீப யாதவ் என்ற அதிகாரியைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்றால் அதற்குப் பெயர் என்ன சூட்டலாம்? இனி உதயச்சந்திரன் பாடத்திட்டத்தை உருவாக்கும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். வேறு எந்த நிர்வாக வேலையும் பார்க்க வேண்டாம் என்று இந்த அரசு முடிவு செய்துள்ளது. 

உங்கள் வீட்டுக்கருகே ஆசிரியர் யாராவது இருந்தால் ஒவ்வொரு வகுப்பின் பாடத்திட்டங்கள் கடைசியாக எப்போது மாற்றப்பட்டது? என்பதனைக் கேட்டுப் பாருங்கள்? உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பாடங்களைக் கவனித்துப் பாருங்கள்? தற்போதைய உலகத்திற்கும் குழந்தைகள் படிக்கும் பாடத்திற்கும் உங்களால் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முடியும்?  

நீட் பரிட்சை மட்டுமல்ல. மாநில அளவில் நடக்கும் தேர்வுகளுக்குக்கூட நம்முடைய கல்வித்திட்டங்கள் பலன் தராது.  கோச்சிங் சென்டர் தான் கடைசி சரணாகதியாக முடியும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.  

என்ன காரணம்?

தாங்கள் வாங்கும் சம்பளத்திற்குப் பணிபுரிய விரும்பாத அரசு ஆசிரியர்கள் ஒரு பக்கம். உழைக்கத் தயாராக இருந்தும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அவலத்தை யாரிடம் போய் முறையிடுவது? என்று ஏங்கும் ஆசிரியர் கூட்டம் மறுபக்கம். இவை இரண்டையும் ஊழல் என்ற வார்த்தை தும்சம் ஆக்கியது. 

கல்வித்துறையின் சீர்கேடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் தனியார் பள்ளிக்கூடம் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்தது. இன்று தனியார் பள்ளிக்கூடம் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்ற கூப்பாடு ஒரு பக்கம். மற்றொருபுறம் எந்த நுழைவுத்தேர்வுகளிலும் நம் மாணவர்கள் வெல்ல முடியவில்லை என்ற அழுகாச்சி காவியம் மறுபக்கம். 

என்ன செய்வது? 

கல்வி என்பது மாநில உரிமையில் இருந்து மத்திய அரசிற்கு மாறிய போதே எதிர்த்து நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் இன்று எங்கள் மாநில உரிமையை மத்திய அரசு பறிக்கின்றார்கள் என்று கூக்குரலிடுவதைப் பார்த்து என்ன சொல்வீர்கள்? 

கடந்த பத்தாண்டுகளில் பெய்த மழை அனைத்தும் முறைப்படி சேர்த்து வைத்திருந்தாலே போதுமானது. அடுத்த மாநிலங்களிடம் கையேந்தியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. காரணம் பொதுப்பணித்துறை என்பது மணல் மாபியா கைகளுக்குச் சென்று சேர்ந்தது. எந்தப் புதுத்திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 

இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசைக் குற்றம் சுமத்துகின்றோம். கனிமத்துறையின் ஊழல் குறித்துச் சகாயம் கொடுத்த அறிக்கை என்னவானது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு துறையும் இப்படித்தான் இருந்தது. இதே போல இன்று கல்வித்துறை. 

பொருளாதாரத்தில் பலவீனமாக இருக்கும் குடும்பங்கள் அனைத்தும் கடைசியாக நம்பியிருப்பது கல்வித்துறையை மட்டுமே. தங்கள் குடும்பம் கரையேற வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகள் படித்து ஆளாகி உயர்நிலைக்கு வந்து விட்டால் போதும் என்று தான் ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்கள் நம்புகின்றார்கள். தான் பட்ட கஷ்டங்கள் அடுத்தத் தலைமுறை படக்கூடாது என்று ஒவ்வொரு நிலையிலும் கவனமாகச் செயல்பட்டு வந்த நம்பிக்கை நட்சத்திரம் உதயச்சந்திரனையும் இந்த அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை.  சென்ற வருடம் சகாயம் அவர்களை தூக்கி சுமந்தோம். கடைசியில் அரசியல்வாதிகள் சுடுகாட்டில் படுக்க வைத்து மரியாதை செய்தார்கள். இன்று உதயச்சந்திரன். அடுத்த வருடம் யாரோ?

இனி என்ன? நீங்கள் தைரியமாக மோடி ஒழிக என்று கூக்குரலிடலாம். அது மட்டும் தான் உங்கள் உரிமையாக இருக்கப் போகின்றது. 


தொடர்புடைய பதிவுகள்







Thursday, August 24, 2017

அதிகார போதை


பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராகப் புகழ்பெற்றிருந்த அவரை அவர் வீட்டில் சென்றாண்டு சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சம்பாரித்த காசில் பெரிய வீடு, அடிப்படை வசதிகளுக்குப் பெரிய பிரச்சனையில்லை. மொட்டை மாடியில் அவருக்கென்று ஒரு அறை. அதில் அவருக்கென்று ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தை அமைத்து இருந்தார். தினமும் அவர் ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார். 

அவருக்கு ஜாதக நம்பிக்கை அதிகம். மகன் நிச்சயம் திரைப்பட உலகில் பெரிய ஆளாக வருவார் என்ற நம்பிக்கையில் பல காரியங்கள் செய்து கொண்டிருக்கின்றார். பல மணி நேரம் அந்த வீட்டில் இருந்த போது நான் உணர்ந்தது ஒன்றே ஒன்று தான். அடிப்படை ஆதார வசதிகள் இருந்த போதும் புகழ் என்ற வெளிச்சம் இல்லாமல் அவர் மனதளவில் படும்பாடு சொல்லி மாளாது. ஏக்கம் கலந்த வார்த்தைகள். நிச்சயம் வாய்ப்பு மீண்டும் வரும் என்று நம்புகிறேன் என்றார். 



அரசியல்வாதிகள் நிலைமை இதைவிட மோசமாகத்தான் இருக்கும். முக்கியமான பதவிகளில் இருந்தது ஆள், அம்பு, சேனை, மாலை, மரியாதை, அதிகாரிகளின் கவனிப்பு, நினைத்தவற்றை நினைத்த நேரத்தில் சாதிக்கும் வாய்ப்புகள் போன்ற அனைத்தும் பதவி இல்லாத போது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் நடைப்பிணமாகத்தானே வாழ முடியும்? அரசியல்வாதிகள் பலரின் தற்போதைய வாழ்க்கையைச் செவிவழிச் செய்தியாகத் தினமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றேன். மது, மாது போதையை விட அதிகாரப் போதை மிகப் பெரியது. 

சசிகலா முதல் முறையாகப் போயஸ் தோட்டத்தில் உள்ளே நாள் முதல் சிறைக்குச் சென்ற நாள் வரைக்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கை, அனுபவித்த சுகங்கள், அவரிடம் மண்டியிட்டவர்கள், அவர் சட்டங்களை வளைத்தவிதம் சாமானியன் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. இன்று அவர் சிறையில் இருந்து வெளியே செல்கின்றார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் இருந்தார் என்ற செய்திகளையெல்லாம் வாசிக்கும் போது அவரின் மனவொட்டம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். பணத்தால் என்ன வசதிகள், வாய்ப்புகள் அவரால் பெறமுடிந்தாலும் எதையும் சாதித்தே பழக்கப்பட்ட அதிகாரபோதை இப்போது அவர் உடல், மன நிலையை எப்படிப் பாதிக்கும்? 

@@@

திருப்பூருக்குள் இருப்பவர்களின் பணப்போதையும் அதிகாரப் போதைக்குச் சமமாகவே உள்ளது. உள்ளன்போடு பேச, பழக முடியாது. இழந்து விடுவோம் என்ற பயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மனோரீதியான தாக்கத்தில் அத்தனை விதமான பைத்தியக்காரத்தனமான செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள். நமக்கு இவர்களின் செயல்கள் அனைத்தும் வினோதமாக இருக்கும். ஆனால் சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைக் கோவில் கோவிலாகத் தினமும் சுற்ற வைத்துக் கொண்டேயிருக்கின்றது. இங்குள்ள ஒவ்வொரு முதலாளிகளும் ஒரு 23ம் புலிகேசி போலவே எனக்குத் தெரிகின்றார்கள். 

காரணம் வியாபாரம் என்பது தற்போதைக்குச் சர்வதேச சமூகமாக மாறியுள்ளது. போட்டிகள் அதிகம். ஆண்டான் அடிமை போல இருந்த தொழிலாள வர்க்கத்தின் எண்ணம் முழுமையாக மாறிவிட்டது. என்னுடைய உரிமை இது என்று அவர்களால் பட்டியலிடப்படும் விசயங்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன் முதலாளிகளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதததாக இருந்தது. இன்று கொடுக்கப்படும் வசதிகள் பொறுத்தே தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திற்கு அமைகின்றார்கள். வியாபார நிர்வாகம் என்பதனை தனி மனித வெறுப்பு விருப்புகளில் அடிப்படையில் ஒவ்வொன்றையும் செய்தே பழக்கப்பட்டவர்கள் இன்றைய நிலையில் அதிகளவில் தடுமாறுகின்றார்கள். காரணம் அதிகாரத்தின் மூலம் சாதித்தே பழக்கப்பட்டவர்களால் நிர்வாகம் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். கடைசியில் நிறுவனத்தை நடத்த முடியாமல், இருப்பதை இழந்து வங்கிக்குப் பயந்து வாழ்க்கை வாழும் சூழ்நிலை அமைந்து விடுகின்றது, 

@@@


ஒவ்வொரு நிறுவனத்திலும் இருந்து பல்வேறு காரணங்களில் அடிப்படையில் மாறும் போது ஒன்றைக் கவனித்துள்ளேன். புதிய சூழ்நிலையை, புதுச் சவால்களை எவரும் விரும்புவதில்லை. ஆழ்மன பயங்கள் அவர்களை ஆட்டிப்படைக்கின்றது. அலறுகின்றார்கள். அதிகாரம் செலுத்தும் பதவியில் இருந்தவர்கள் நிமிட நேரத்தில் அவர்களின் வாழ்க்கைத் தடம் மாறும் போது நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள். கூனிக் குறுகி தன்னம்பிக்கை இழந்தவர்களாக மாறிவிடுகின்றார்கள். 

என்ன காரணம்? 

அதிகாரத்தின் ருசியும், புகழுக்கு அடிமையானவர்களும் உள்ளுற பார்த்துப் பழக்கம் இல்லாமல் எல்லாவற்றையும் வெளியே உள்ள சம்பவங்களுடன் தொடர்புப் படுத்தியே ஒவ்வொன்றையும் கட்டமைத்து விடுகின்றார்கள். கோபுரத்தில் இருந்து பார்த்துப் பழகியவர்களுக்கு ஒவ்வொன்றும் புள்ளிகளாகத்தான் தெரியும். கோபுரம் சரிந்து மொத்தமும் நிலைகுலைத்த பின்பு என்ன நடக்கும்? மரணம் எப்போது வரும்? என்று உடம்பு பாரமாக மாறும்.