Friday, August 25, 2017

மோடி ஒழிக


நீட் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் தமிழர்கள் காட்டும் ஆர்வமும் பரப்புரையும் ஆச்சரியமானதல்ல. ஈழப்பிரச்சினை முதல் இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் பின்னால் உள்ள அடித்தளம் என்வென்றே அறியாமல் இருப்பது தமிழினத்தின் சிறப்பு மட்டுமல்ல. அதுவே தான் அன்று முதல் என்றும் இருக்கும் அடையாளம். ஒவ்வொருவரும் சுட்டிக்காட்ட இங்கு ஏராளமான காரணங்கள் உண்டு. ஆனால் இங்கு இன்னமும் நாம் தமிழகக் கல்வித்துறையை எந்த அளவுக்குச் சீரழித்து வைத்துள்ளோம் என்பதனை எவரும் பொதுவிவாதமாக எடுத்துக்கொள்வதில்லை. 

ஊழல் என்பது அரசியல்வாதிகளின் பொதுக் கொள்கை. கட்சி பாரபட்சமின்றி எல்லாத்துறைகளிலும் எல்லாக் காலங்களிலும் நீக்கமற நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் ஜெ. ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை இன்றுவரையிலும் எந்த ஊடகமும் பெரிதுபடுத்தவே இல்லை என்பதோடு இன்னமும் அவருக்குப் புனிதபிம்பத்தைத் தான் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழக வாக்காள பெருமக்கள் இன்னமும் இரட்டை இலை மயக்கத்திலிருந்து வெளியே வந்து விடத் தயாராக இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஆனால் படித்த அறிவு ஜீவிகள் எக்காரணம் கொண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயலாக்கத்தில் இருக்கின்றார்கள். நடிகையாக வந்து நாடாளும் அதிர்ஷ்டம் பெற்றவர் காட்சிகளைக் காட்டி விட்டுக் குற்றவாளியாக மறைந்து விட்டார். ஆனால் ஜெ. உருவாக்கிவிட்டுச் சென்ற பாதையை இன்றும் கையில் வைத்துக் கொண்டு படம் காட்டிக் கொண்டிருப்பவர்கள் சமீபத்தில் நமக்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சி கல்வித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் பதவியை மறு உருவாக்கம் செய்து தமிழகக் கல்வித்துறையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். 

ஜெ. ஆட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு துறையும் இத்தனை லட்சங்கள் கொண்டு வந்து தோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கட்டளையின் காரணமாகக் கொள்ளையடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருக்க வேண்டிய அவல நிலை தமிழகத்தில் உருவானது. 

கடந்த 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா அமைச்சரவையில் சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச் செல்வன், கே.சி.வீரமணி ஆகிய ஐந்து பேர் அடுத்தடுத்துக் கல்வி அமைச்சராக இருந்தனர். 

2016ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானார் பெஞ்சமின். அடுத்து மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார் 

தற்போது எடப்பாடி அமைச்சரவையில், பள்ளிக் கல்வி அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன். 

இவ்வாறு 6 ஆண்டுகளில் பள்ளி கல்வித் துறை 8 அமைச்சர்களைச் சந்தித்துள்ளது. ஆனால் மாறாத ஒரே செயலாளராக இருந்தவர் சபீதா மட்டுமே, தமிழக கல்வித்துறையை ஜெ. எவ்வாறு கையாண்டார் என்பதற்கு இந்த மாறுதல்கள் உங்களுக்கு பலவற்றை புரியவைக்கக்கூடும்?

யார் இந்தச் சபீதா? 

“1988 வருடப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் குடும்பத்தில் இருந்து வந்தவர். 1991-96ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தார். 

அதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் பார்வைக்கு ஏற்ப பணியினைச் செய்து முடித்ததால் ஜெ.வின் மனதில் இடம் பிடித்தார். எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஐடியாக்களைக் கொண்டு வந்தததோடு அரசு சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் முக்கியமான இடத்தில் சபிதா இருந்தார்.. அதன் பிறகு ஜெ.வின் ஆட்சி மாறியதும் பல்வேறு இடங்களுக்குச் சபிதா மாறினார். 

மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக் கல்வித்துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா ஆட்சியில் தனிச் சிம்மாசனம் போட்டுக் கல்வித்துறையில் செயலாளர் அந்தஸ்தில் கோலோச்சியவர். ஜெயலலிதாவின் விருப்பத்தை இவர் நிறைவேற்றினாரா? அல்லது இவரின் செயல்பாடுகள் சரியானது தான் என்று ஜெ. நம்பினாரா என்று தெரியவில்லை? ஆனால் இன்று தமிழ்நாட்டின் கல்வித்தரம் கடைச்சரக்காகி ரூபாய்க்கு நான்கு டிகிரி என்று சொல்லும் அளவிற்குத் தமிழ்நாடு முழுக்கப் பட்டதாரிகள் நிரம்பி வழிகின்றனர். ஆனால் கல்வியின் தரம் அதலபாதாளத்தில் உள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையைப் பொருத்தவரை ஆசிரியர்கள் மாறுதல், புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, பாடநூல்கள் வாங்குவது முதல் பல்வேறு பொருட்கள் கொள்முதல் செய்வது, அதிகப் பணம் மழை கொட்டும் ஏரியா என்பதால் ஊழல் என்பது பொதுவானது. தமிழ்நாட்டின் வருடாந்திர நிதிநிலையில் இருபது ஆயிரம் கோடிகளுக்கு மேல் கல்வித்துறையில் கொட்டப்படுகின்றது. 14 பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டும் கூட இன்னமும் மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வந்தபாடில்லை. 

மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்ற வாதத்திற்கு ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடலாம். 

" மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)(சி)யின் படி நலிவுற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தைக் காலாவதியாக்குவதில் கல்வி அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால் ஒரு மாணவருக்குக்கூட இதன் பலன் சென்று சேரவில்லை" 

" சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2011 முதல் சட்டம் செயல்பட்டாலும், 2013-ம் ஆண்டு முதல் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால் இதன்பேரில் ஒரு இடம்கூட நிரப்பப்படுவதில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி தருவதில்லை என்று சொல்லித்தான் இவ்வளவு நாட்கள் காலம் கடத்தினார்கள். இதிலும், கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, மாநில அரசே, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வோம் எனச் சொல்லி, 97 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். இந்தப் பணத்தைக் கல்வி அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்குக் கொடுத்துவிட்டார்கள். மாணவர்களைப் போலியாகக் கணக்குக் காட்டி பள்ளி நிர்வாகமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.. 

'இத்திட்டத்தில் மோசடி செய்கிறார்கள்' எனத் தொடர்ச்சியாகப் புகார் எழுந்ததும், ஆர்.டி.இ திட்டத்திற்காகத் தனியாகக் குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு பள்ளியில் விசிட் செய்யும்போதெல்லாம், பெற்றோரைக் கூட்டி வந்து கணக்குக் காட்டுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் பெற்றோரிடம், மாணவரின் எதிர்காலத்தைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதற்கும் மேல் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் என எங்குப் புகாரை தூக்கிச் சென்றாலும், கண்டுகொள்வதில்லை. சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். ஆர்.டி.இ படி ஒரு மாணவருக்கு 9,900 ரூபாய் கட்டணத்தை அரசு வழங்குகிறது. 

முப்பதாயிரம் கட்டணம் வாங்கும் பள்ளிக்கு இதனால் இருபதாயிரம் இழப்பு ஏற்படுகிறது. சீட் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி வரும்போது, பள்ளி நிர்வாகம் சொல்லும் இடங்களில் பெற்றோர் கையெழுத்துப் போடுகிறார்கள். ஆர்.டி.இ கமிட்டி ஆய்வுக்கு வரும்போதுதான் எதற்காகக் கையெழுத்து வாங்கினார்கள் என்ற விவரமே தெரிய வருகிறது. நூதனமான முறையில் நடக்கும் இந்த மோசடிகளைப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரணம். இந்த மோசடியில் பெரும் பங்கு அவர்களுக்குப் போகிறது என்பதுதான்" 

இந்தச் சூழ்நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உதயச்சந்திரனை தனது துறைக்குச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார். 

யார் இந்த உதயச்சந்திரன்? 

பல்வேறு பதவிகளில் இருந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இயக்குநராக இருந்தவர். குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி பரிட்சை எழுதுபவர்களுக்கு வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் உருவாக்கியவதில் இவரின் சிறப்பான பணியில் ஒன்று. 

சசிகலா குடும்பத்தால் அரசியல் அனாதையாக்கப்பட்ட செங்கோட்டையன் தன்னுடைய கடைசிக் காலகட்டத்தில் செய்த உருப்படியான காரியம் உதயச்சந்திரனை தனது துறைக்குச் செயலாளராகத் தேர்ந்தெடுத்ததும், அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததும் ஆகும். 

ஆனால் உதயச்சந்திரனின் சுதந்திரமென்பது செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல. கல்வித்துறையைச் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்த லாபி வட்டத்தைப் பலமாக உலுக்கத் தொடங்கியது. வெளிப்படைத்தன்மையை எல்லா இடங்களிலும் கொண்டு வர வருமானம் பார்த்துப் பழக்கப்பட்ட கைகளுக்குச் சிரங்கு வந்தவன் கைபோல அறிக்கத் தொடங்கியது. செங்கோட்டையனுக்கு உதயச்சந்திரன் மூலம் ஒரு பக்கம் புகழ் வந்து கொண்டிருந்தாலும் வருமானம் தடைபடத் தொடங்கியது. 

வெளியே ஒவ்வொன்றும் கசியத் தொடங்கியது. கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு உதயச்சந்திரனை கல்வித்துறையில் இருந்து மாற்றக்கூடாது என்பது வரைக்கும் வந்து நின்றது. 

ஆனால் உதயச்சந்திரனை அவர் துறையில் இருந்து மாற்றக்கூடாது என்று அறிவுறுத்திய போதும் இவருக்கு மேலே முதன்மைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் பிரதீப யாதவ் என்ற அதிகாரியைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்றால் அதற்குப் பெயர் என்ன சூட்டலாம்? இனி உதயச்சந்திரன் பாடத்திட்டத்தை உருவாக்கும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். வேறு எந்த நிர்வாக வேலையும் பார்க்க வேண்டாம் என்று இந்த அரசு முடிவு செய்துள்ளது. 

உங்கள் வீட்டுக்கருகே ஆசிரியர் யாராவது இருந்தால் ஒவ்வொரு வகுப்பின் பாடத்திட்டங்கள் கடைசியாக எப்போது மாற்றப்பட்டது? என்பதனைக் கேட்டுப் பாருங்கள்? உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பாடங்களைக் கவனித்துப் பாருங்கள்? தற்போதைய உலகத்திற்கும் குழந்தைகள் படிக்கும் பாடத்திற்கும் உங்களால் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முடியும்?  

நீட் பரிட்சை மட்டுமல்ல. மாநில அளவில் நடக்கும் தேர்வுகளுக்குக்கூட நம்முடைய கல்வித்திட்டங்கள் பலன் தராது.  கோச்சிங் சென்டர் தான் கடைசி சரணாகதியாக முடியும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.  

என்ன காரணம்?

தாங்கள் வாங்கும் சம்பளத்திற்குப் பணிபுரிய விரும்பாத அரசு ஆசிரியர்கள் ஒரு பக்கம். உழைக்கத் தயாராக இருந்தும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அவலத்தை யாரிடம் போய் முறையிடுவது? என்று ஏங்கும் ஆசிரியர் கூட்டம் மறுபக்கம். இவை இரண்டையும் ஊழல் என்ற வார்த்தை தும்சம் ஆக்கியது. 

கல்வித்துறையின் சீர்கேடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் தனியார் பள்ளிக்கூடம் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்தது. இன்று தனியார் பள்ளிக்கூடம் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்ற கூப்பாடு ஒரு பக்கம். மற்றொருபுறம் எந்த நுழைவுத்தேர்வுகளிலும் நம் மாணவர்கள் வெல்ல முடியவில்லை என்ற அழுகாச்சி காவியம் மறுபக்கம். 

என்ன செய்வது? 

கல்வி என்பது மாநில உரிமையில் இருந்து மத்திய அரசிற்கு மாறிய போதே எதிர்த்து நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் இன்று எங்கள் மாநில உரிமையை மத்திய அரசு பறிக்கின்றார்கள் என்று கூக்குரலிடுவதைப் பார்த்து என்ன சொல்வீர்கள்? 

கடந்த பத்தாண்டுகளில் பெய்த மழை அனைத்தும் முறைப்படி சேர்த்து வைத்திருந்தாலே போதுமானது. அடுத்த மாநிலங்களிடம் கையேந்தியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. காரணம் பொதுப்பணித்துறை என்பது மணல் மாபியா கைகளுக்குச் சென்று சேர்ந்தது. எந்தப் புதுத்திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 

இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசைக் குற்றம் சுமத்துகின்றோம். கனிமத்துறையின் ஊழல் குறித்துச் சகாயம் கொடுத்த அறிக்கை என்னவானது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு துறையும் இப்படித்தான் இருந்தது. இதே போல இன்று கல்வித்துறை. 

பொருளாதாரத்தில் பலவீனமாக இருக்கும் குடும்பங்கள் அனைத்தும் கடைசியாக நம்பியிருப்பது கல்வித்துறையை மட்டுமே. தங்கள் குடும்பம் கரையேற வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகள் படித்து ஆளாகி உயர்நிலைக்கு வந்து விட்டால் போதும் என்று தான் ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்கள் நம்புகின்றார்கள். தான் பட்ட கஷ்டங்கள் அடுத்தத் தலைமுறை படக்கூடாது என்று ஒவ்வொரு நிலையிலும் கவனமாகச் செயல்பட்டு வந்த நம்பிக்கை நட்சத்திரம் உதயச்சந்திரனையும் இந்த அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை.  சென்ற வருடம் சகாயம் அவர்களை தூக்கி சுமந்தோம். கடைசியில் அரசியல்வாதிகள் சுடுகாட்டில் படுக்க வைத்து மரியாதை செய்தார்கள். இன்று உதயச்சந்திரன். அடுத்த வருடம் யாரோ?

இனி என்ன? நீங்கள் தைரியமாக மோடி ஒழிக என்று கூக்குரலிடலாம். அது மட்டும் தான் உங்கள் உரிமையாக இருக்கப் போகின்றது. 


தொடர்புடைய பதிவுகள்25 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

K.S.Muthubalakrishnan said...

Well said as usual.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சபீதா மீது குற்றசாட்டுகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் முதல் ஆசிரியர்கள் வரை அஞ்சி நடுங்கினார்கள் என்பது உண்மை. அவரது நிர்வாகத் திறன் அசாத்தியமானது.
கள அலுவலர்களை நேரிடையாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மிரள வைத்தார். + தேர்வு முடிவுகளை விரைந்து அறிவித்தார். தேர்வு முடிவுகள் அற்விக்கும்போது இணையதளம் திணறிக் கொண்டிருந்ததை சரி செய்தவரும் இவரே. முதல் வகுப்பில் சேரும் மாணவன் பள்ளிக் கல்வி முடிக்கும் வரை கண்காணிக்கும்போருட்டு EMIS என்ற கல்வி மேலாண்மை முறைமை உருவாக்கினார். இதன் மூலம் மாணவர்களின் பதிவை சரி செய்தார். உதவி பெரும் பள்ளிகளில் பள்ளிகளில் போலியாக சேர்க்கப் பட்ட மாணவர்கள் அகற்றப்பட்டனர். மாணவர்களின் புகைப் படங்களோடு ஆதார் எண்ணும் பதிவு செய்யப்பட்டது.ஆனால் உதய சந்திரன் அவர்கள் இந்த முயற்சியை சரியாகத் தொடரவில்லை. ஆதார் பதிவிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளிலேயே ஆதார் புகைப்படம் எடுக்கும் வசதி செய்து தரப்பட்டது, தற்போது கிட்டத்தட்ட 90% மாணவர்களின் ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கப் பட்டு வழங்கப் பட்டன. ஏராளமான கல்வித் துறை சார்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்ககைகளை மேற்கொண்டார். உதயச்சந்திரன் அவர்களின் பேச்சை கவனித்த போது ஒன்று புரிந்தது. கற்றல் கற்பித்தலை விட பயிற்சிக்கே(COACHING) முக்கியத்துவம் கொடுப்பதாகவே எனக்கு பட்டது. மற்ற ஐ ஏ. எஸ் அதிகாரிகளைப் போலவே இவரும் அரசு சொல்லும் எந்த திட்டத்தையும் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்தினார். அதில் ஒன்று பள்ளிகளுக்கே சென்று நல திட்டங்கள் வழங்குதல்.இதனால் அரசுக்கு கூடுதல் செலவு மட்டுமல்ல. பலர்சேர்ந்து எளிதில் செய்த வேண்டிய வேலையை ஒருவர் செய்தால் எப்படி இருக்கும். பல்வேறு சங்கடங்களும் இடர்ப்பாடுகளும் ஏற்பட்டன. அவதி பட்டது கீழ் நிலை அலுவ்லர்களுக்குத்தான் தெரியும். மன உளைச்சலோடு பண செலவும் வேறு. சபீதா இருந்திருந்தால் இந்த அவதிகள் இன்னும் அதிகமாகி இருக்கும் என்பதும் உண்மை. உதயச்சந்திரன் அவர்களின் பலம் நேர்மை. ஆனாலும் அவர் அளவுக்கதிகமாக புகழப்படுகிறார் என்றே கருதுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: கேரளத்திலும் தனியார் கல்விக் கூடங்கள் தற்போது வளர்ந்துவிட்டன என்றாலும் அரசின் தலையீடு உண்டு. சமீபத்தில் கூட மருத்துவப் படிப்பிற்கான தனியார் கல்லூரிகளின் கட்டணம் அதிகம் என்று அரசு தலையிட்டு கணிசமாகக் குறைத்து நிர்ணயம் செய்து சட்டம் போட்டுள்ளது. தமிழ்நாடளவிற்கு இங்கு சீர்கேடாகவில்லை....

கீதா: முதலில் கல்வி பற்றிய அழகான பதிவிற்கு வந்தனங்கள்!!! கூடவே மழை நீர் சேமிக்காததையும் பதிந்ததற்கு..

நல்ல கருத்துள்ள பதிவு...ஆனால் இங்கு இன்னமும் நாம் தமிழகக் கல்வித்துறையை எந்த அளவுக்குச் சீரழித்து வைத்துள்ளோம் என்பதனை எவரும் பொதுவிவாதமாக எடுத்துக்கொள்வதில்லை.// உண்மை உண்மை!

//உங்கள் வீட்டுக்கருகே ஆசிரியர் யாராவது இருந்தால் ஒவ்வொரு வகுப்பின் பாடத்திட்டங்கள் கடைசியாக எப்போது மாற்றப்பட்டது? என்பதனைக் கேட்டுப் பாருங்கள்? உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பாடங்களைக் கவனித்துப் பாருங்கள்? தற்போதைய உலகத்திற்கும் குழந்தைகள் படிக்கும் பாடத்திற்கும் உங்களால் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முடியும்? // வித்தியாசங்கள் கொஞ்சம் நஞ்சமா.....அதீதமாகவே இருக்கிறது. அடிப்படைக் கேள்விகளுக்குக் கூடப் பதில் அளிக்க முடியாத நிலைமையில்தான் இருக்கிறார்கள் மாணவர்கள் என்றால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதற்கும் மேலே!
ஒரு வேளை மாணவர்கள் கேள்விகள் கேட்டுவிட்டால் பதில் தருவதற்கு அவர்களிடம் பதில் இல்லை....அப்புறம் பார்க்கலாம் அல்லது உயர் வகுப்புகளுக்குப் போகும் போது தெரிந்து கொள்வாய் அல்லது ஸ்டுப்பிட் க்வெஷன்...அடுத்து மாணவர்களுக்குக் கேள்விகள் கேட்கும் திறனைக் கூட வளர்க்காத கல்விமுறை....இது அடிப்படைக் கல்வி பெற வேண்டிய தொடக்க நிலைப் பள்ளியின் நிலைமை. எனது வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளிடம் இருந்து நான் அறிந்தது...அவர்களது ஆசிரியர்கள் குறித்தும்...

/நீட் பரிட்சை மட்டுமல்ல. மாநில அளவில் நடக்கும் தேர்வுகளுக்குக்கூட நம்முடைய கல்வித்திட்டங்கள் பலன் தராது. கோச்சிங் சென்டர் தான் கடைசி சரணாகதியாக முடியும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.// இது நான் அடிக்கடிச் சொல்லிவருவது..

Thulasidharan V Thillaiakathu said...

முரளி சகோ நான் கல்வித் துறையில் இல்லை என்றாலும் கல்வி முறைகளை எல்லாம் கூர்ந்து நோக்குபவள். அதில் ஆர்வம் இருப்பதாலும், கொஞ்சம் அதைக் குறித்துப் பேசுகிறேன்.

//உதயச்சந்திரன் அவர்களின் பேச்சை கவனித்த போது ஒன்று புரிந்தது. கற்றல் கற்பித்தலை விட பயிற்சிக்கே(COACHING) முக்கியத்துவம் கொடுப்பதாகவே எனக்கு பட்டது.// இதுதானே நம் கல்வியில் உள்ள பிரச்சனை. கற்றல், கற்பித்தல் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாததால்தானே தரம் குறைந்து போகிறது...
//உதயச்சந்திரன் அவர்களின் பலம் நேர்மை. ஆனாலும் அவர் அளவுக்கதிகமாக புகழப்படுகிறார் என்றே கருதுகிறேன்.// எனக்கும் இது தோன்றியது..

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம்முடைய ஆதங்கத்தையும், அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கையும் எதார்த்தமாகக் கூறியவிதம் அருமை.

s m swamy said...

நல்ல பகிர்வுக்கு ஏன் அமங்கலமான தலைப்பு?

RPKN said...

Arumai

Unknown said...

தலைப்பிற்கும் தங்கள் கருத்திற்கும் சம்பந்தமே இல்லையே..... ஏன்... எதற்கு எடுத்தாலும் மோடி தான் குற்றவாளியா.... நம் கண் முன்னே நடக்கும் அவலங்கள் எத்தனை எத்தனை... 2005 ஆம் ஆண்டு மாற்றிய பாடத்திட்டத்தை இது வரை மாற்றவில்லை. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லுமா நாம் ஏன் 10 ஆண்டுகள் மாற்றத்தை பாடத்திட்ட மாற்றாத்தை விரும்பவில்லை. இதற்காக எந்த ஆசிரியர்களும் போராட்ட களம் காணவி்ல்லை என்பது தான் கேள்வி. எனினும் தங்களுடைய எழுத்து மிகவும் அருமை. நன்றி

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

இருவருக்கும் நன்றி.

முரளி சபீதா குறித்து எழுத வேண்டுமென்றால் தனியாக மூன்று பதிவுகள் எழுத வேண்டும். அந்த அளவுக்கு அவர் கல்வித்துறையில் விளையாண்டு உள்ளார். வேரில் வெந்நீர் ஊற்றிய பணி அவருடையது.

ஜோதிஜி said...

இது குறித்து தனியாக சமயம் வரும் போது ஒரு பதிவு விரிவாக எழுதுகிறேன்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

இந்தியாவில் என்ன பிரச்சனை என்றாலும் மோடி ஒழிக என்று தானே இங்கே பேசப்படுகின்றது?

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி

Rathnavel Natarajan said...

மோடி ஒழிக - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி.

Venugopal K said...

கெட்டவார்த்தைகளுக்கு "டிக்ஷனரி " போடும் தகுதி உள்ளவரே பாட நூல் கழக தலைவர்...எல்லாம் தலைவிதி (வேறு வழி இல்லாவிட்டால் இதைத்தானே சொல்ல வேண்டும்)

காவேரிகணேஷ் said...

மோடியை ஆதரிக்கிறீர்களா? இல்லை எதிர்கிறீர்களா? ஜோதிஜி

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஐயா! வழக்கம் போலவே அருமையாக, சீற்றத்துடன் எழுதியிருக்கிறீர்கள். கல்வித்துறையில் மாநில அரசு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே! ஆனால் அதே நேரம், மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வும் தவறுதானே? அதைப் பற்றி நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே! "கல்வி உரிமை மாநில அரசின் கையிலிருந்து நடுவணரசின் கைகளுக்குப் போனபொழுதே தடுக்காமல் இப்பொழுது கூப்பாடு போடுகிறார்கள்" என்கிற உங்கள் வாதம் சரியானதே! அந்த நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது எதிர்ப்புக் காட்டினார்களா இல்லையா எனத் தெரியாது. ஆனால், அதன் பின் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை வலுவாக எழுப்பிக் கொண்டேதானே இருக்கிறோம். இப்பொழுது கூட சமஸ் அவர்கள் மாநில அரசின் உரிமையான கல்வியை நடுவணரசு பறித்துக் கொண்டதை எதிர்த்து ஜெ., எழுதிய கடிதம் ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நாம் எவ்வளவுதான் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும் நடுவணரசினர் எங்கே மதிக்கிறார்கள்? அவர்கள் ஆட்சி அமைக்கத் தமிழ்நாட்டு நா.ம.உ-களின் ஆதரவு தேவைப்பட்டால் மட்டும்தான் மதிக்கிறார்கள். மற்றபடி, தமிழர்களுக்கும் அவர்கள் கருத்துக்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இங்கே என்ன மரியாதை இருக்கிறது? எல்லா மாநிலங்களிலும் தேசியக் கட்சிகளின் ஆட்சி! அவர்கள் எல்லோரும் நடுவணரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஒத்துப் போய் விடுகிறார்கள். தமிழ்நாடு மட்டும்தான் இந்தித் திணிப்பு முதல் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு வரை எல்லாவற்றிலும் தனித்து எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, நாம்தாம் ஏதோ இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பது போலப் பார்க்கிறார்கள். உச்சநீதிமன்றம் அண்மையில் எழுப்பியுள்ள கேள்வியைப் பார்த்தீர்களா? "எல்லா மாநிலங்களும் மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டனவே! தமிழ்நாடு மட்டும்தானே முறையீட்டுக்கு வந்திருக்கிறது?" என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆக, நாம் தொடர்ந்து நம் எதிர்ப்பைப் பதிவு செய்தே வருகிறோம். ஆனால், நடுவணரசில் ஆட்சி புரியும் எவனு/ளும் மதிப்பதுதான் இல்லை என்பதே என் கருத்து ஐயா!

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

வளர்மதி குறித்தும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். மிகச் சரியாக நினைவில் வைத்துருக்கீங்க. நன்றி

ஜோதிஜி said...

ஆதரித்தால் என்ன தவறு? எதிர்த்தால் என்ன தவறு நண்பா? கட்டுரையின் சாராம்சம் நம்மிடம் உள்ள குறைகளைப் பற்றி பேசுகிறது.

ஜோதிஜி said...

உங்களின் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி.