Sunday, June 30, 2013

அந்த பொம்பள

யாருக்குத்தான் ஆசையில்லை?

ஒவ்வொருவரும் தான் செய்யும் செயலுக்கு அங்கீகாரம் வேண்டும் என்று விரும்பத் தொடங்குகிறார்கள். நாளாக அது தனக்குரிய புகழாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிறகு நீடித்த புகழாக மாற்ற உழைக்கத் தொடங்கி விடுகின்றார்கள். அதற்கான தகுதி இருக்கின்றதோ இல்லையோ? எல்லோருமே புகழுக்கு ஆசைப்படுபவர்களாகவும் எந்நேரமும் அதற்கே அலைபவர்களாகவும் இருக்கின்றோம். .

இன்று புகழுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு சமூகம் மாறியுள்ளது.

ஏக்கம் வந்தால் தூக்கம் போய்விடும் பதிவில் புகழை விரும்பும் இணையதள வாசிகளைப் போல ஒவ்வொரு துறையிலும் இன்று செய்யும் கடமையை விட அதற்குண்டான உடனடி பலனை எதிர்பார்க்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால்  "புகழ் பெற்ற உலகமாக" மாறிக் கொண்டிருக்கின்றது.

எல்லோருக்கும் தெரிந்த "கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே" என்று இன்று யாரிடமாவது சொன்னால் சொன்னவரை மேலும் கீழும் பார்ப்பார்கள். அதெப்படி பலனை எதிர்பார்க்காமல் எவன் உழைப்பான்? என்பார்கள். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் "கடமையைச் செய். பலனில் பற்று வைக்காதே" என்பதாகும்.

காரணம் நாம் செய்யும் காரியத்தில் பலன் கிடைத்தால் சந்தோஷப்படுவோம். அதுவே கிடைக்காத போது பட்ட மரம் போல மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி அர்த்தப்படுத்தினார்கள்.

சில மாதங்களுக்கு முன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த ..................  

"சிலரின் சாவு என்பது வெறுமனே மரண நிகழ்ச்சி.

சிலரது சாவு பத்திரிக்கைக்கு தேவைப்படுகின்ற செய்தி.

ஆனால் சிலருக்கு இறப்பு என்பதே இல்லை. அவர்களின் மரணம் என்பது வெறுமனே அவரின் உடம்புக்கு கிடைக்கும் ஓய்வு. அவ்வளவு தான். ஆனால் அவர்களின் புகழ் என்பது பஞ்சபூதம் புகழைப் போன்றது" என்றார்.  

"புரியும்படி சொல்லுங்களேன்" என்றேன்.  

"பஞ்ச பூதங்களான பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் போன்றவைகளுக்கு என்றாவது அழிவுண்டா?" என்றார்.

"அதைப்போல இந்த உலகம் இருக்கின்ற வரைக்கும் சிலருக்கு அவர்களின் புகழுக்கு அழிவென்பதே இருக்காது" என்றார்.  

"ஆனால் இங்கே வாழும் போது அத்தனை அக்கிரமங்களையும் செய்து விட்டு தன்னுடைய பெயர் பல நூற்றாண்டுகளுக்கு இருக்க வேண்டும் என்று விரும்பிகின்ற அரசியல்வாதிகளின் புகழ் அவர்கள் விரும்பியபடி நீடித்து இருக்கின்றதா? அப்படி விரும்பி வாழ்ந்தவர்களில் இன்று எத்தனை பேர்களை நம்மால் இப்போது நினைவில் கொண்டு வரமுடிகின்றது".

"இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் எத்தனை முதலமைச்சர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர்கள் நம் நினைவில் இருக்கின்றது?  என்றார்.

அரசியலில் நேரிடையாக களத்திற்கு வராமல் ஆட்சி, அதிகாரம் இல்லாத போதும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் தங்களை அசைக்க முடியாத ஒரு தலைவராக நிலை நிறுத்தியுள்ளார்கள்? ".

"இப்போது 20 வயதுள்ள இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்.  வாழ்ந்து மறைந்த பல தலைவர்களில் இரண்டு பேர்கள் கூட அவர்கள் வாயிலிருந்து வராது

இப்போது நாற்பது வயதை கடந்து கொண்டிருப்பவர்களிடம் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.  இன்னும் நாலைந்து பேர்களைப் பற்றி சொல்லக்கூடும்.  கொஞ்சம் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏழெட்டு பெயர்களை சொல்லக்கூடும்".  

"ஆனால் காந்தியின் பெயரை இந்தியர்களின் நினைவிலிருந்து எவராலும் அகற்றி விட முடியுமா?, எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் காந்தி கண்டது அது வெறுமனே கனவாகத்தான் போய்விட்டது.  

அவரைத் தொடர்ந்து வந்த நேரு கூட இந்திய வளர்ச்சியை செயலாக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்று துடிப்பாகத்தான் முயற்சிகளை தொடங்கி வைத்தார். 

அது இன்றும் கூட முழுமையடையவில்லை. காந்தி சொன்னபடி இன்று காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போனால் நன்றாக இருக்கும் என்கிற அளவுக்குத் தான்  இன்று மாறியுள்ளது.

ஆனால் இவர்களை விட சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் தந்தை பெரியார்.  தான் மக்களின் மனதில் ஆழமாக ஊடுருவினார்கள்.

காந்தியும் நேருவும் தொடக்கம் முதல் மேம்பட்ட அரசியலில் தான் கவனம் செலுத்தினார்கள்.ஆனால் அம்பேத்காரும் பெரியாரும் அடிமட்டம் வரைக்கும் ஆழமாய் ஊடுருவினார்கள். அதனால் இன்று வரைக்கும் அவர்களால் வாழ்ந்தவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள் இருவரையும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் எந்த இடத்திலும் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. எந்த மாற்றம் வேண்டுமோ அதற்காகவே தங்களை மாற்றிக் கொண்டு அதன் பின்னே சென்றார்கள். 

அதாவது கொள்கைகளுக்காக மக்கள் அல்ல.

மக்களுக்காகத்தான் கொள்கைகள் என்கிற ரீதியில் வாழ்ந்தார்கள்." 

"அறிஞர் அண்ணா இறந்ததை நீங்கள் உங்க வயதுக்கு செய்தி தாள்களில் தான் படித்து தெரிந்திருக்க முடியும். அவரின் இறுதி ஊர்வலமென்பதை இனி எந்த தலைவர்களும் நினைத்தே பார்க்க முடியாது.  

இப்போது அவரின் நிலை என்ன? 

"அண்ணா அறிவாலயம்" என்பது இன்று "கலைஞர் அறிவாலயமாக" மாறிக்கொண்டு வருகின்றது. நாளை அது "ஸ்டாலின் அறிவாலயமாக" மாறிவிடக்கூடும்".   

அடித்தட்டு, கிராமத்து மக்களிடம் அசைக்க முடியாத இடத்தில் இருந்த எம்.ஜி.ஆரின் நிலைமை இப்பொழுது எப்படி உள்ளது?

அவர் உருவாக்கிய இரட்டை இலை கொடுத்த வாழ்க்கை ஜெயலலிதாவை உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. இன்று மாநகராட்சி குப்பைத் தொட்டி வரைக்கும் "அம்மா " என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறது. 

அதாவது அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பின்னுக்குப் போய்விட்டார்கள். முன்னுக்கு வந்தவர்கள் முடிந்தவரைக்கும் அவர்களை மறைப்பதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.  

ஓட்டரசியலை மையம் கொண்டு வைத்து செயல்படும் ஒவ்வொரு தலைவரும் காலப்போக்கில் இப்படித்தான் காணாமல் போய்விடுவது வாடிக்கையே.. ஆனால் உலக அளவிலும் சரி உள்ளூர் அரசியலிலும் சரி சமூகம் மாறுதலுக்கு காரணமாக இருந்தவர்களின் புகழை எவர் நினைத்தாலும் அத்தனை சீக்கிரம் மாற்றி விட முடியாது.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பெருந்தலைவர் காமராஜரை சொல்லலாம்.

" 9 ஆண்டுகளே தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக இருந்த காமராஜரின் புகழை எவராவது மறைத்து விட முடியுமா?   அவர்  ஒரு முதலமைச்சரைப் போல செயல்படவில்லை. சமூக சீர்சிருத்த பேராளியாகத்தான் செயல்பட்டார். சாதி ரீதியாக அடிமைப் பட்டவர்களை கல்வி மூலம் அவர்களை மேலே கொண்டு வந்தார். அப்படித்தான் தந்தை பெரியார் காமராஜரை பாராட்டினார்.

பசியினால் பள்ளி வர முடியாதவர்களை, விரும்பாதவர்களை பல திட்டங்கள் மூலம் வரவழைத்தார்.

ஊழல் என்பதை அண்டவிடவில்லை என்பது ஆச்சரியமல்ல. அவரே அதற்கு முன் உதாரணமாக இருந்து அவர் இறந்த பிறகு அவரின் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டைகளைத்தான் தமிழ்நாட்டிற்கு சொத்தாக விட்டுச் சென்றார்.

இன்று வரையிலும்  தமிழ்நாட்டில் அவர்  உருவாக்கிய மாற்றங்களைப் போல செய்ய வாய்ப்புள்ளதா? செய்யத்தான் மனம் வருமா?

ஆரம்ப பள்ளிக்கூடங்களை  இனி எந்த கிராமத்திலும் திறக்க தேவையில்லை.  வேண்டிய அளவுக்கு திறந்தாகி விட்டது. அந்த எண்ணிக்கை முடிவுக்கு வந்து விட்டது.  இனி அடுத்த கட்ட கல்விக்கூடங்களை திறக்க நாம் பாடுபட வேண்டும் என்றாரே? 

சாதிகளை ஒழிக்க தந்தை பெரியார் கத்திய போதும் மாறாத தமிழர்களை கல்வி மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்ட அத்தனை மனிதர்களையும் கல்வி மூலம் மேலே கொண்டு வந்து நிறுத்தினாரே."

தமிழ்நாட்டில் திமுக முதல் முதலாக ஆட்சியைப் பிடித்தது.

"நாம் வெற்றிவிழா கொண்டாடக்கூடாது. மாபெரும் தலைவர் காமராஜர். அவர் தோற்ற நேரத்தில் நான் விழா கொண்டாடுவது முறையல்ல" என்று அறிஞர் அண்ணா விழா கொண்டாட்டங்களை  நிறுத்தினார்.

இதற்கு மேலும் காமராஜர் குறித்து அண்ணா தன் தம்பிமார்களுக்கு சொன்ன வார்த்தை  "நான் உங்களைத் தான் வளர்த்தேன். ஆனால் காமராஜர் தான் தமிழ்நாட்டை வளர்த்தார்" என்றார்.

நேரு இறந்த போது "அவர் சவ ஊர்வலம் முடியும் வரைக்கும் எவரும் அடுத்த பிரதமர் குறித்து பேசக்கூடாது" என்று அனைவரையும் அடக்கி வைத்தவர் காமராஜர். இந்திரா காந்தி இது குறித்து பேசிய போது கூட "உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமல் வீட்டில் போய் இரு" என்றார்.

இந்திராவை பிரதமராக கொண்டு வந்ததும் காமராஜர் தான்.

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்திரா காந்தி கைது செய்ய ரொம்பவே பயந்து யோசிக்க வைத்த ஆளுமை கொண்டவர் காமராஜர்.

காமராஜரும் இந்திராவை "என்னய்யா அந்த பொம்பள இப்படியெல்லாம் செய்யுது" என்று தான் குறிப்பிடுவார்.

இன்று புகழ் தான் எப்படியெல்லாம் மாறியுள்ளது.

இறவா புகழ், நீடித்த புகழ், நிலையான புகழ் என்பது இன்று நிமிட நேர புகழ்வரைக்கும் மாறியுள்ள இந்த சூழ்நிலையிலும் இவர்களைப் போன்ற தலைவர்கள்  தான் "பஞ்சபூத புகழுக்கு" சொந்தக்காரர்" என்றார்.  


(நேரு முதல் அண்ணா ஆட்சிக்கு வந்த காலம் வரைக்கும் உள்ள அரசியல் நிகழ்வுகளோடு காமராஜரின் தனிப்பட்ட மனோதைரியத்தை தெளிவாக விளக்கும் ஒலிக்கோப்பு இது).

மொத்த தொகுப்பு அடங்கிய இந்த ஒலித்தொகுப்பு படிக்க நேரம் இல்லாதவர்களுக்கு கேட்க உதவும் தளம்.

Saturday, June 29, 2013

மெட்ராஸ் பவன் உணவகம்

திருப்பூரின் முன்னணி பதிவர்களில் ஒருவரான ஜோதிஜி(தேவியர் இல்லம்) அவர்கள் எழுதிய நூல்தான் இந்த டாலர் நகரம். நூலெனும் சொல்லுக்கு புத்தகமென்றும் பொருளென்பது நாமறிந்ததே.

ஆனால் நூல் பற்றிய செய்திகளை பிரத்யேகமாக தாங்கி வெளிவந்திருக்கும் அசல் நூல் என்பது இதன் தனிச்சிறப்பு. பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் நகரில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக அடியெடுத்து வைத்து படிப்படியாக உயர்ந்து தற்போது நிர்வாகப்பதவியில் இருக்கும் ஜோதிஜி அவர்கள் தான் கண்ட திருப்பூர் பின்னலாடை வரலாற்றை தொகுத்து டாலர் நகரமாக சமர்ப்பித்து இருக்கிறார்.

தமிழ்ச்செடி எனும் தளத்தில் தமிழ்மொழி சார்ந்த பதிவுகளை இணைய நண்பர்களுடன் வலையேற்றி வரும் தமிழ் ஆர்வலர் என்பதும் இவரது இன்னொரு சிறப்பு.

பல ஆண்டுகள் பின்னலாடை தொழில் அனுபவம் மிக்க நபர் எழுதிய புத்தகம் எனும் காரணத்திற்காக மட்டுமே இந்நூலை வாசிக்க முனைந்தேன். டாலர் நகரத்தின் முதல் சில பகுதிகளில் திருப்பூரில் வேலை தேடி அலைந்தது, சக நண்பர்கள் மற்றும் நிறுவனங்கள் வாழ்ந்து வீழ்ந்த கதைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பகிரப்பட்டு உள்ளன. 

உள்ளாடை நிறுவனங்கள், அதன் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் எப்போது வரும் என்று வாசகனாக சற்றே பொறுமை இழந்து காத்திருக்கும் நேரத்தில் அத்யாயம் 11 முதல் 18 வரை அதற்கான விடை கிடைக்கிறது.

எத்தனை வகையான நூல்கள், இயந்திரங்கள், துணிகள் ஆலைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன, ஏற்றுமதி இறக்குமதியில் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் நடக்கும் விளையாட்டுகள் என்ன, மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளால் இத்தொழில் எப்படி பின்னடைவை சந்தித்தது, தொழிலாளிகள் படும் சிரமங்கள், இடைத்தரகர்கள் செயல்பாடுகள், புதிய யுக்திகளை கையாள தடுமாறும் முதலாளிகள் நிலை  என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித்தந்து இருக்கும் ஜோதிஜி..உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்!!                                                             

19 முதல் 21-வது அத்யாயம் வரை சற்று அயர்வைத்தந்தாலும் சாயப்பட்டறைகள் குறித்து தனிக்கவனத்துடன் 22 முதல் 26 வது அத்யாயம் வரை எழுதப்பட்டு இருக்கும் பக்கங்கள் பிரமாதம்.

குடிப்பதற்கு ஏதுவான ஆறுகள் சாயக்கலப்பால் எப்படி சீரழிந்து போயின என்பதை நுட்பமாக அலசி இருக்கிறார் ஆசிரியர். இந்த அலசலால் அரசு, தனியார் நிறுவனங்கள் மீதான கறை  ஓரளவேனும் துடைக்கப்பட்டால் மகிழ்ச்சி. 

டாலர் நகரத்தின் குறை நிறைகள்:

தமிழ் ஆர்வலரான ஜோதிஜியின் இப்படைப்பில் எழுத்துப்பிழை ஆங்காங்கே இருப்பது வருத்தம். குறிப்பாக சில இடங்களில் பொருட்பிழைகள் இருப்பது உறுத்துகிறது. உதாரணம்: பக்கம் 84 நான்காவது பேராவில் உள்ள 'கோடடித்த',  பக்கம் 112 வரி மூன்றில் உள்ள 'பின்னாலாடை'. பிழை சரிபார்த்ததில் அதிக கவனம் செலுத்தாதது புருவத்தை உயர்த்த வைக்கிறது.

திருப்பூர் சார்ந்த புகைப்படங்கள் புத்தகத்தில் சரியான அளவுடன்(எண்ணிக்கையையும் சேர்த்து) இருப்பது நன்று. எனினும் உள்ளாடை தொழில் சார்ந்த சிறந்த புகைப்படங்களை தேர்ந்த புகைப்பட கலைஞர் உதவியுடன் எடுத்து இருக்கலாம்.  

முதல் சில அத்யாயங்களில் தமது தனிப்பட்ட போராட்டங்களை, ஆங்காங்கே தூவப்பட்ட தத்துவங்களை சுருக்கி பொதுப்பிரச்னைகளை மையப்படுத்தி  இருப்பின் நூலின் கோர்வை மேலும்  சிறப்பாக இருந்திருக்கும். முதல் 26 பக்கங்களுக்கு அணிந்துரை, ஏற்புரைகளே ஆக்கிரமித்து இருப்பது குறை.  'இன்டக்ஸ்' என்று அழைக்கப்படும் உள்ளடக்கம் 247 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் துவக்கத்தில் இல்லாதது ஆச்சர்யம்தான்.  

பெண் மற்றும் குழந்தை தொழிலாளிகள் உள்ளாடை உலகில் எப்படி கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சிற்சில பக்கங்களில் மட்டும் கடந்து 95% ஆண் தொழிலாளிகள் பற்றிய பகிர்வுகளே மையம் கொண்டிருப்பதும் குறைதான். அக்குறை நீங்கும் வண்ணம் அடுத்த நூலில் ஜோதிஜி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். காத்திருக்கிறேன்.

அதுபோல திருப்பூரின் பிரதான தொழில் மின்வெட்டால் எப்படி சீரழிந்து கிடக்கிறது என்பதையும் ஊறுகாய் போல ஆசிரியர் தொட்டுவிட்டு சென்றிருப்பது ஆச்சர்யமே. தற்காலத்தில் பூதாகர பிரச்னையாக இருக்கும் மின்வெட்டு குறித்து இறுதிப்பகுதிகளில் விலாவாரியாக எழுதி இருக்கலாம்.                                                                    

நிறைகள் என்று சொல்வதற்கு கணிசமான விஷயங்கள் டாலர் நகரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இயந்திர செயல்பாடுகள், பல்வேறு வகையான நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் என அள்ள அள்ள குறையாத தகவல்கள்/அனுபவங்களை ஜோதிஜி தனது வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி  இருப்பது அவரது அபார உழைப்பிற்கு எடுத்துக்காட்டு.

தளமான தாள்கள், சரியான அளவில் தகுந்த இடைவெளிகளுடன் இருக்கும் எழுத்துகள் சிறப்பு. விலை ரூ.190 என்பதால் வசதி குறைந்த வாசகர்களின் கைகளுக்கு இந்நூல் பெருமளவில் சென்று சேருமா எனும் கேள்வி  இருக்கத்தான் செய்கிறது.    

இறுதியாக...

இணையத்தில் மட்டுமே அடங்கி இருக்கவிருந்த இப்படைப்பை நூல் வடிவில் நமக்கு கொண்டு சேர்த்திருக்கும்  4 தமிழ் மீடியா இணையதளம் மற்றும் ஜோதிஜிக்கு தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களையும் மனமார பாராட்ட வேண்டும். 

நம்மில் பலர் நித்தம்(நெசமாத்தானா !?) அணியும் உள்ளாடைகளுக்கு பின்னே இருக்கும் நூற்றுக்கணக்கான பிரச்னைகள், தொழில்நுட்பங்கள், பண பரிவர்த்தனைகள் எத்தனை..எத்தனை. அதுகுறித்த போதுமான அடிப்படை அறிவை என் போன்ற சராசரி நபர்களுக்கு கற்பித்த காரணம் ஒன்றிற்காகவே   ஆசிரியருக்கு ஆளுயர பூங்கொத்தை அளிக்கலாம். நன்றிகள் பல ஜோதிஜி.

புளித்த ஏப்பம் விடும் மேட்டுக்குடிகள் பொழுது போக படிக்க ஒளிவட்ட எழுத்தாளன் எழுதித்தள்ளும் ஆகச்சிறந்த காவியமல்ல இது. 

சாமான்ய வாசிப்புத்திறன் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கு இன்னொரு பாமரன் தனது வியர்வைத்துளிகளால் நெய்திருக்கும் நூலோவியம். 

நன்றி மெட்ராஸ் பவன் சிவகுமார்

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க

ஒன்று           இரண்டு       மூன்று     நான்கு   விஜயா பதிப்பகம் கோவை.Friday, June 28, 2013

திறந்து வைப்பது நல்லதா?

ன்றாடம் நான் படிக்கும் சில பதிவுகளில் எழுதப்பட்ட எந்த வரிகளையும் அடுத்தவர் எடுக்க முடியாதபடி பூட்டு போட்டு வைத்திருப்பதை பார்த்து பல முறை வியந்திருக்கின்றேன். இது போன்று செய்துள்ள ஒரு நண்பரிடம் ஏன் இப்படி? என்று கேட்டேன்.  "அண்ணே குறிப்பிட்ட பத்திரிக்கையில் என் பதிவை உட்டலாக்கடி வேலை செய்து வெளியிட்டிருக்கின்றார்கள்.  ஒரு நன்றி கூட சொல்லவில்லை" என்று பொங்கினார். 

னால் இன்று இணைய தளங்களில் நான் பார்க்கும் பல படங்களை பத்திரிக்கையில் வார இதழ்களில் பார்க்கின்றேன்.இதே போல பத்திரிக்கையில் படித்த பல விபரங்கள் அடிப்படையில் ஜாலக்கு வேலை செய்து பதிவாக மாற்றி வெளியிட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். இணைய தளங்களில் வந்த துணுக்கு செய்திகளை அடிப்படையாக வைத்து தோரணம் கட்டுபவர்களையும் பார்க்க முடிகின்றது. தொடக்கத்தில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் நமக்கு உதவியது.  இன்று தமிழ் இணைய தளங்களே அந்த வேலையை செய்து கொண்டிருப்பது வளர்ச்சி தானே?

நான் கூகுள்ப்ளஸ் ல் தினந்தோறும் பகிர்ந்து கொள்ளும் படங்கள் திரு. சங்கர நாரயணன் என்பவர் எனக்கு அனுப்பும் படங்கள்.  இவரைப் போல வேறு சிலரும் தாங்கள் ரசித்த படங்களை அனுப்பி வைக்கின்றனர்.  அவர்களும் அவர்கள் படித்த பார்த்த தளங்களில் இருந்து தான் இந்த படங்கள் எடுக்கின்றனர்.

அவரவர் பணியின் காரணமாக சிலருக்கு முகநூலுக்குள் மட்டும் வந்து செல்லும் பழக்கத்தை வைத்திருப்பவர். சிலருக்கு கூகுள் ப்ளஸ் மட்டுமே. சிலர் ட்விட்டர். சிலரோ குறிப்பிட்ட வலைபதிவுகள் தவிர வேறு எந்தப்பக்கமும் செல்வதில்லை.  இப்படித்தான் இணையதள வாசக கூட்டம் இருக்கின்றது.  எல்லா பக்கமும் செல்லக்கூடிய வாய்ப்பிருப்பவர்கள் பார்த்த படித்தவற்றை பகிரும் போது அது பலருக்கும் செல்ல வாய்ப்பாக இருக்கின்றது.  மும்பையில் இருக்கும் வருண்கணேசன் என்பவர் நான் கூகுள் ப்ளஸ் ல் பகிரும் படங்கள் ஒரே இடத்தில் சேர்ந்துள்ள இணைப்பை எனக்கு அனுப்பி வைத்தார். சொடுக்க

ன்று எல்லா விசயங்களையும் பற்றி என்னால் எழுத முடிகின்றது. ஆனால் தொடக்கத்தில் எனது சொந்த அனுபவங்கள் குறித்து வேர்ட்ப்ரஸ் வலைபதிவில் எழுதிக் கொண்டிருந்த போது பெரிதான சரிபார்ப்பு குறித்த அக்கறை எதுவும் தேவையில்லாமல் இருந்தது. ஆனால் பல விதமான சமூகம் மற்றும் அரசியல் கட்டுரைகள் எழுதும் போது ஆண்டுகள், மாதங்கள் குறித்து எழுத கட்டாயம் இணையமோ ஏதோவொரு புத்தகமோ தேவையாய் இருக்கின்றது.  எப்படி பார்த்தாலும் எழுதத் தொடங்கி விட்டால் நிச்சயம் நமக்கு மற்றவர்களின் தேவை இருக்கத்தான் செய்கின்றது.

என்னவொன்று? சிலசமயம் நாம் படித்த பின்பு உருவாகும் தாக்கத்தை நாம் எப்படி மாற்றி எழுத்தாக மாற்றுகின்றோம் என்பதில் தான் சவாலும் நம் திறமையும் உள்ளது. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் காபி பேஸ்ட் பதிவாக வெளியிடுவர்கள் கூட பூட்டு போட்டு தான் வைத்துள்ளார்கள்.  

ஒரு வேளை வடையை மீண்டும் எண்ணெய்யில் பொறித்தால் வாடை வந்து விடும் என்ற பயமோ?

ருடல் ஓர் உயிராக பழகிய  தமிழ்மீடியா குழும ஆசிரியர் மலைநாடன் கொண்டு வந்த டாலர் நகரம் நூலை படித்தவர்கள் இன்று பலரும் பலவிதமாக பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கான முழு உரிமை கூட தினமலர் பத்திரிக்கைக்குத் தான் போய்ச் சேர வேண்டும். காரணம் இதில் வரக்கூடிய என் அனுபவம் சார்ந்த விசயங்களை விட இதில் வரக்கூடிய ஆய்த்த ஆடைகள் சார்ந்த பல்வேறு விசயங்கள் அனைத்து தினமலர் பத்திரிக்கையில் வந்த துணுக்குச் செய்திகள் முதல் பெரிய கட்டுரைகள் வரைக்கும் அனைத்தும் படித்து முடித்த பிறகு உருவான தாக்கத்தில் தான் வலைபதிவில் கட்டுரையாக எழுதினேன்.

நான் தினமலரில் படித்த கட்டுரைகளின் அடிப்படையில் எழுதாமல் அதை என் பார்வையில் என் வாழ்வில் உள்ள அனுபவங்களைக் கொண்டு எழுதினேன். இன்று டாலர் நகரம் புத்தகம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இளம் முனைவோர் பட்டம் வாங்கப்போகும் ஒரு பெண்மணி தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைக்காக என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துள்ளார்.  இந்த கட்டுரை வருகின்ற ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சமர்ப்பிக்கப் போவதாக சொல்லியுள்ளார்.  

முதன் முறையாக ஒரு பெண் என்னை பேட்டி காணப் போகின்றார்.

ருப்படியான எண்ணங்களை மக்களிடம் விதைத்து விட்டு சென்ற மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் இறப்பு குறித்து வலைபதிவில் எழுதிய போது பலருக்கும் அது போய் சேர்ந்தது.

முகநூல் முதல் பல இடங்களில் அவர் குறித்த செய்திகளை படித்தேன்.

அதற்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் பதிவைப் பார்த்தும் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்திருந்ததை பார்த்த போது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.  குறிப்பாக நான் பதிவில் கொடுக்கும் இணைப்புகள் பலரின் பார்வையில் பட்டு இணைப்பு கொடுத்த பதிவில் உள்ள முக்கிய விசயங்கள் தனியாக ஒரு தனிப்பதிவாக கட்டுரையாக இணைய தளங்களில் வரும் அளவுக்கு இருந்ததையும் ரசித்தேன்.  பகிர்தல் என்பதில் இங்கே எவரும் சொந்தம் கொண்டாட முடியாது.  

ஒரு குறிப்பிட்ட செய்தி பரவ நாமும் ஒரு காரணமாக இருக்கின்றோம் என்கிற அளவுக்கு மகிழ்ச்சியடைய வேண்டியது தான். 

ரே உலகம் தான். இன்று உலகம் தான் ஊர் என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில் வலைபதிவுக்கு மட்டுமல்ல பத்திரிக்கை உலகத்திற்கும் கூகுள் தான் எல்லாவிதங்களிலும் உதவியாக இருக்கின்றார். என் பழக்கத்தில் உள்ள நண்பர்கள் தாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் நன்றி கூகுள் மற்றும் குறிப்பிட்ட தளங்கள் பெயரைப் போட்டு எழுதுவார்கள். நான் அவ்வாறு எதையும் தொடக்கம் முதல் குறிப்பிடுவதில்லை.

காரணம் எனக்குச் சொந்தமானது என்று இங்கு எதுவுமே இல்லை.

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஒன்றை வெட்டி ஒட்டி அதை எழுதாக்கும் உழைப்பு மட்டுமே நமக்குச் சொந்தம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.  மேலும் நான் எழுதியதில் தவறு இருக்கின்றது என்று கருதுபவர்கள் அது குறித்த தளங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கும் போது அந்த துறை சார்ந்தவர்களுக்கு அது மேலும் பலன் அளிக்கக்கூடும்.  சமீபத்தில எழுதிய மிகச் சாதாரணமாக சர்க்கரை நோய் குறித்து எழுத நந்நதவனம் மற்றும் வவ்வால் இருவரும் நடத்திய சிலம்பாட்டம் இது.

இது போல அதிசயமாக பலசமயம் நடக்கும். பெரும்பாலும் நூறில் இரண்டு பேர்கள் கூட ஆர்வத்துடன் தேடுதலுடன் வலைபதிவில் படிக்க வருபவர்கள் இல்லை என்பதே நான் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை.  

நண்பர் நந்தவனம் சொன்னது போல விழியிருப்பவர்கள் ஏதோவொரு சமயத்தில் வந்து படிப்பார்கள் என்ற கருத்தில் இன்று வரையிலும் உறுதியாக இருக்கின்றேன்.

ல்லா பத்திரிக்கைகளிலும் பார்த்துக் கொண்டே தான் வருகின்றேன். பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளில் கூட இது குறித்த செய்தி வேறொரு பத்திரிக்கையில் வந்தது என்று சொல்லிவிட்டு அது குறித்த விபரங்களை குறிப்பிடுவார்கள். அது எந்த பத்திரிக்கையில் வந்தது என்று கோடிட்டி கூட காட்டமாட்டார்கள்.  அதைப்போலவே வலைபதிவுகளிலும் ஒரு கலாச்சாரம் கடைபிடித்துக் கொண்டு வரப்படுகின்றது.  தாங்கள் ரசித்த எந்த தளத்தையும் மறந்து கூட தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை உறுதியாக கடைபிடித்துக் கொண்டு வருகின்றார்கள்.  

இது கொஞ்ச காலமாக மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்க படித்த சில சிறப்பான தளங்களை இங்கு பகிர்ந்து கொண்டே வருகின்றேன்.  மற்றவர்களை அறிமுகம் செய்வதில் நமக்கு தயக்கம் இருக்கின்றது என்றால் நம் திறமையில் நமக்கே சந்தேகம் உள்ளது என்று அர்த்தம்.

நான் பார்த்த, படித்த தளங்களை கட்டுரைகளின் இடையே இணைப்பாக கொடுத்துக் கொண்டு வருகின்றேன்

இயக்குநர். மணிவண்ணன் இறப்பு குறித்து நான் பகிர்ந்த தளம் பலரின் பார்வைக்கும் சென்றது.

காரணம் அந்த கட்டுரை நிகழ்கால மக்களின் மனோபாவத்தை அழகாக சுட்டிக்காட்டியிருந்தது.

அதைப் போல நான் சமீபத்தில் படித்த வினவு தளத்தில் வந்த பாட்டில் தேசம் கட்டுரை.

இதை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்த போது ஒருவர் எழுதியிருந்தார்.  சில கட்டுரைகளை படித்து முடிக்கும் போது நிகழ்கால சந்தோஷங்கள் அத்தனையும் மறந்து ஒரு இயலாமை மனதில் வந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது என்றார்.

மாற்றம் என்பது நம்மிலிருந்து தொடங்குவது.

னோ தெரியவில்லை? வரலாற்று சம்பவங்களைப் பற்றி தேடிப்படிக்கும்  பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது.  சமீப காலமாக நான் விரும்பி படித்துக் கொண்டிருப்பது எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தும் எழுத்தாளர் எஸ்ரா என்று அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணன்.

குறிப்பாக இந்தியாவின் சரித்திரம் சார்ந்த அவரின் எழுத்து நடையும், சொல்லும் விதமும் என்னைக் கவர்வதாக இருக்கின்றது.  ஆனால் பத்திரிக்கையின் குறிப்பிட்ட பக்க அளவுக்கு வரும் அவரின் கட்டுரைகள் முழு வீச்சோடு வருவதில்லை என்ற வருத்தம் மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

யோ ஏனிந்த நிலைமை என்று யோசிக்க வைக்கின்றது. 

இந்தியாவின் சரித்திரம் சார்ந்த நிகழ்வுகள் குறித்து எவர் எழுதினாலும் கட்டாயம் சில பல ஆங்கிலப் புத்தகங்களைத்தான் எப்போதும் ஆதாரமாக காட்டுகின்றார்கள்.  நாலைந்து வருடமாக ஏன் நம்மவர்கள் எவருமே இது போன்ற விசயங்களை எழுதுவதில்லையா? என்ற குழப்பம் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.  

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் வாழ்க்கையில் அறிமுகமான பின்பு நினைத்த நேரத்தில் குறிப்பிட்ட விசயத்தைப் பற்றி புரிந்து கொள்ள அவரை அழைத்து கேட்டுக் கொள்வதுண்டு.

"வரலாற்றுச் செய்திகள் என்றால் எழுதும் நபர் அந்த நாட்டுக்கு அல்லது அந்த இடத்திற்கே சென்று வாழ்ந்து அறிந்து புரிந்து எழுத வேண்டும்.  தொடக்கம் முதல் நம்மவர்களுக்கு இது போன்ற விசயங்களில் ஆர்வம் இருப்பதில்லை என்பதோடு இன்று வரையிலும் பொருள்வாதிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பதால் மேலைநாட்டினர் மட்டுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இது போன்ற அரிய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வந்துள்ளனர்" என்றார்.

நம் நாட்டைப் பற்றி அறிய இன்னமும் நாம் அடுத்தவரைத் தான் சார்ந்துள்ளோம் என்பது தான் இன்று வரையிலும் நாம் சாதித்த சாதனை?

ப்பாரி போலவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்த பதிவுகள் கட்டுரைகள் என் பார்வைக்கு தெரிகின்றது. 

சில வாரங்களுக்கு முன்பு நரேந்திர மோடி குறித்து எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் ஒவ்வொரு பதிவுக்கும் வருகின்ற எதிர்வினைகளை பார்த்த போது அந்த ஆசையே போய்விட்டது. முகநூல் முதல் வலைபதிவுகள் வரைக்கும் ரவுண்டுகட்டி மங்கத்தா ஆட்டத்தை ரணகளமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அய்யோ இவர் வந்தால் பெரிய ஆபத்து என்கிற கூட்டம் ஒரு பக்கம்.  இவர் வந்தால் நாடு உருப்படும் என்கிற கூட்டம் மறுபக்கம்.  

ஆனால் "அரசியல் வரலாற்று சாதி சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதாதே" என்கிறார் ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி.

"அது உனக்கு எதிரிகளைத்தான் அதிகம் பெற்றுத்தரும்.  படிப்பவர்களும் அதன் நம்பகத்தன்மை குறித்தோ அதில் சொல்லப்படுகின்ற விசயங்கள் குறித்தோ எவரும் அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்கள் பார்வையில் எப்படி தெரிகின்றதோ அப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள். முஸ்லீம் என்றால் இந்துக்கு எதிரி. இந்து என்றால் முஸ்லீம்க்கு எதிரி. இது போல கிறிஸ்துவம் என்றால் அதற்கு தனியாக ஒரு கோஷ்டி" இதே போல ஒடுக்கப்பட்டடவர்கள், தாழ்த்தப்பட்டவர்களை குறித்து உன் பார்வையில் எழுதினால் நீ சாதி வெறி பிடித்தவன் என்று அடையாளம் காணப்படுவாய்? என்று தனிப்பட்ட பல நபர்கள் மூலம் உதாரணம் காட்டி அறிவுரை சொன்னார்.

"கட்டுரை இலக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மிகக்குறைவு.  உனக்கு இயல்பாகவே இது கைவந்த கலையாக இருப்பதால் அதில் மட்டும் கவனம் செலுத்து" என்கிறார்.  அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களைப் பற்றி காரண காரியத்தோடு அவர் ஆதாரப்பூர்வத்தோடு பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.  

அவர் சொன்ன அறிவுரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் ஒரு அரசியல் கட்டுரை எழுத நிச்சயம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் அடிப்படையாக வைத்து அதை செதுக்க வேண்டும். சும்மா ஜல்லியடிப்பது என்பது குப்பையில் கலந்த மற்றொரு குப்பையாகத்தான் போய்விடும் என்பதால் சமய சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றேன். ஆனால் நான் மோடி குறித்து படித்த சிறப்பான கட்டுரையில் ஒன்று எழுத்தாளர் ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரை

ஞாநி அவர்களின் மோடி குறித்த பார்வைக்கும் என் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் ஒரு அரசியல் கட்டுரையாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது இது போன்ற அற்புதமான தகவல்களின் கோர்வையில் தான் எழுத்தாளரின் வெற்றி இருக்கிறது.

ராயிரம் பார்வையை இன்றைய நம்முடைய கல்வித்திட்டங்கள் தந்து என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் சென்ற புதுக்கோட்டை பயணத்தில் நண்பர் ஒருவரை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.

ஆள் குட்டையாக கட்டையாக என் மார்பு உயர்ம் அளவே இருந்தார்.  ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதாக சொன்னபோது கிறுக்குத்தனமாக "உங்களை பசங்க கலாய்ப்பார்களே" என்று உளறி வைத்து விட்டேன்.  அவரும் கூச்சப்படாமல் "கொஞ்சம் உண்மை தான். ஆனால் நீங்க நினைப்பது போல தனியார் கல்லூரியில் மாணவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது.  ஏறக்குறைய மற்றொரு பள்ளி வாழ்க்கை தான்" என்றார்.  

காரணம் ஒவ்வொரு மாணவனின் மதிப்பெண் குறித்து ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் அதிக கவனம் வைப்பதால் ஒவ்வொரு மாணவனுக்கும் மறைமுக சிறை வாழ்க்கை தான் என்றார். "உங்கள் பணி எப்படியுள்ளது?" என்ற போது அவர் பங்குக்கு பொங்கி விட்டார்.  கல்லூரி விடுமுறை விட்டதும் பணியாற்றும் குறிப்பிட்ட கல்லூரியின் பெருமைகள் அடங்கிய மொத்த பைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு இடங்களிலும் பிள்ளை பிடிக்கப் போகின்றவர்கள் போல நிற்க வேண்டும்.

இதிலும் டார்க்கெட் போன்ற சமாச்சாரங்கள் உண்டு.  காரணம் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகி விட்டதால் ஒவ்வொரு +2 தேர்வு முடிவு வெளிவரும் சமயத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கல்லூரியும் இப்படித்தான் மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு வளைத்து உள்ளே கொண்டுவருவதாகச் சொன்ன போது என் மனதில் ஆச்சிரியமாக பல விசயங்கள் வந்து போனது. 

ஆகா நாம் படிக்கும் போது கல்லூரி வாசல் கதவு திறக்காதா? என்று தவமாய் தவம் இருந்தோம்.  விண்ணப்ப படிவம் வாங்கவே தள்ளு முள்ளு தாண்டி சென்று அதனை வாங்க வேண்டும். பூர்த்தி செய்து கொடுத்தாலும் நமக்கு கிடைக்குமா? கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தூக்கம் வராத நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. 

ஆனால் இன்று  கல்வி தெரு வரைக்கும் வந்து மாணவர்களை மரியாதையுடன் அழைத்துச் செல்வதாக மாறியுள்ளதே? என் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் மருத்துவ படிப்பும் இப்படி ஆயிடுமோ?

திறந்து வைத்தால் எல்லாமே இப்படித்தானோ?

Wednesday, June 26, 2013

(பிரிக்கப்பட்ட) திவ்யா இளவரசனுக்கு ஒரு கடிதம்

இன்று வரையிலும் அரசியல் மற்றும் சமூக தளத்தில் பலரின் கடிதங்கள் குறித்து இன்னமும் பெருமையாக பேசப்பட்டு கொண்டு தான் வருகின்றது. குறிப்பாக பண்டித ஜவர்ஹர்லால் நேரு தனது சிறைக்காலத்தில் தனது மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதப்பட்ட கடிதத்தை முக்கிய இடத்தில் வைத்து போற்றுகின்றார்கள். 

கலைஞர் கூட இன்றுவரைக்கும் தனது உடன்பிறப்புகளுக்கு மடல் தீட்டிக் கொண்டு தான் இருக்கின்றார். அந்த வகையில் சென்ற வாரம் ஒரு கடிதம் படித்தேன்.

மருத்துவர் ராமதாஸ் குறித்து எனது பார்வையை எழுதிய போது எட்டுத் திசையிலும் இருந்து ஏராளமான அம்புகள் என் மேல் வந்து தாக்கியது. அதனைத் தொடர்ந்து இந்த சாதி குறித்த பார்வையை சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரையாக எழுதிய போது கூட அது மாறவில்லை.  

ஆனால் சென்ற வாரம் கல்கி இதழில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் வன்னி அரசு அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தைப் படித்த போது அடுத்து அரை மணி நேரம் எந்த வேலையிலும் ஈடுபட முடியாத அளவுக்கு  யோசிக்க வைக்கும்படி  எழுதியிருந்தார்.  

மாற்றுப் பார்வை, மாற்றுச் சிந்தனைகள் என்று எல்லா நிலையிலும் நாம் பார்க்கும் சமூகம் நமக்கு தினந்தோறும் ஏதோவொன்றை நமக்கு கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது.

நிச்சயமாக வன்னி அரசு எழுதிய கடிதம் என்பது ஒரு ஆவணப் பொக்கிஷம். 

முக்கியமாக இந்த கடிதத்தில் சமூகத்தில் உள்ள ஆட்சி, அதிகாரம், அரசியல், நிர்வாகம், பல்வேறு சங்கங்கள் என்று எல்லா இடங்களிலும் புரையோடிப் போன இந்த சாதியின் தாக்கத்தை இதைவிட அழகாக எவரும் விவரித்து விட முடியாது.  

தனிபபட்ட கட்சி சார்ந்த ஒருவரின் பார்வையாக இந்த கடிதத்தை நீங்கள் படித்து விட்டு என் மேல் பாய்ந்தால் அறிஞர் அண்ணா சொன்ன "எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்" என்பதால் கல்லெறிபவர்களை அன்போடு வரவேற்கின்றேன். 

நிச்சயம் இந்த கடிதம் என் பதிவில் இருக்க வேண்டும் என்பதால் இன்று இதை இங்கே வெளியிடுகின்றேன்.. 
                                       ))))))))((((((((((((((

செல்லங்கொட்டாய் திவ்யாவுக்கு வணக்கம்.

திவ்யா தவறாக நினைக்க வேண்டாம். இக்கட்டான ஒரு மன நிலையில் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போது இப்படி ஒரு மடல் எழுதுவது உறுத்தலாக இருக்கலாம். இரண்டு தனி நபர்களின் காதல் திருமணமாக இருந்தால் கூட நான் இதை எழுதியிருக்க மாட்டேன். இரண்டு சமூகங்களுக்கிடையிலான மோதாலாக ஊதிப் பெருக்கப்பட்டு தலித் மக்களின் குடிசைகள் வரை எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டதால் மட்டுமே இதை எழுத வேண்டி நேர்ந்தது.

அக்டோபர் 14 (2012) ஆம் நாள் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடந்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. 

ஊராரின் குடும்ப கௌரவ பேச்சும் சாதிவெறியர்களின் நயவஞ்சகத்தையும் கொடூரமான அவமதிப்பையும் தாங்கமுடியாத உனது தந்தை நாகராஜ் மரணத்திற்குப் பிறகு, நத்தம் காலனி ரத்தச் சிவப்பாய் தீக்கிரையானதை மறந்துவிட முடியாது. 

இளவரசனோடான உங்கள் திருமணத்துக்குப் பிறகு நத்தம் காலனியிலுள்ள அத்தனை வீடுகளுமே தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டிலிருந்த டி.வி., வாசிங் மெசின், பீரோ, கட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் என அனைத்துமே உடைத்து நொறுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டன. 

வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டு எலும்புக்கூடுகளாய் நின்றுகொண்டிருந்தன. உனது ஆசைக் கணவன் இளவரசனின் வீடு பார்க்கவே பரிதாபமாய்க் கிடந்தது. கொஞ்சம் பாத்திரங்களும் பாதி எரிந்த நிலையிலிருந்த மின் விசிறிகளுமே வீடு இருந்ததற்கான சாட்சியங்களாய் இருந்தன. 

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மாற்றிக்கொள்ள துணிமணிகள்கூட இல்லாமல் மிக மோசமான நிலையில் நத்தம் காலனி மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நின்று கொண்டிருந்தார்கள். நத்தம் காலனியே சுடுகாடு போலக் காட்சியளித்ததை தொலைக்காட்சிவழி நீ பார்த்திருப்பாய்.

நத்தம் காலனி மட்டுமல்லாது, கொண்டம்பட்டி, அண்ணாநகர் காலனிகள்கூட சாதிவெறியர்களிடமிருந்து தப்பவில்லை. 

அடுத்தவேளை சாப்பிடக்கூட வழியில்லாமல் பொதுமந்தையில் கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள். சேமித்து வைத்த நெல், வரகு, கம்பு போன்ற உணவு தானியங்கள் கருகிக் கிடந்ததைப் பார்க்கும்போது 'இந்த மக்கள் செய்த பாவம்தான் என்ன?' என்று நெஞ்சுருகாதோர் இருக்க முடியாது. சேமித்து வைத்த சொத்துக்கள் எல்லாமே பறிபோய்விட்டன. 

பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர்களது சான்றிதழ்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இன்னமும் அந்த சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் எத்தனையோ பிள்ளைகள் பரிதவித்துக் கிடக்கிறார்கள். நீதிமன்றம் வழிகாட்டிய பிறகும் எந்தப் பயனும் இல்லை.

நர்சிங் படித்த உன்னைப் போன்றோருக்குக் கல்விச் சான்றிதழின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் எதற்காக நடத்தப்பட்டன என்பது உனக்கு நன்றாகவே தெரியும்! தனிப்பட்ட முறையில் உனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நீ விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்ய முடிவெடுத்ததுதான் காரணம். 

இளவரசன் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றாலும் அவனோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்து திருமணம் செய்தாய். தனிப்பட்ட உனது வாழ்க்கையை விரும்பியவனோடு அமைத்துக்கொள்ள இளவரசன் சார்ந்த சமூகம் கொடுத்த விலை சாதாரணமானதல்ல என்பதை நீ அறிவாய். அத்தனையையும் அம்மக்கள் தாங்கிக்கொண்டார்கள்.

உனது காதல் திருமணம் போலவே பல திருமணங்கள் உங்கள் பகுதிகளில் நடந்திருந்தாலும் உன்னுடைய காதலுக்கு ஏற்பட்ட நெருக்கடிபோல் யாருக்கும் ஏற்பட்டதில்லை. உன்னைக் காப்பதற்காகவே வாராது வந்த மாமணிபோல் களமிறங்கினார் மருத்துவர் இராமதாசு. 

நாடகக் காதல் செய்து உன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தார். 

ஆனாலும், அந்தப் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் நீ இளவரசனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தாய். 

உன்னுடைய ஒற்றைக் காதல் திருமணம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டது. காதல் திருமணம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு நத்தம் காலனிதான் எடுத்துக்காட்டு என்று மருத்துவர் இராமதாசு தலைமையிலான குச்சிக்கொளுத்திக் கும்பல் கொள்ளிக்கட்டைகளோடு பிரச்சாரம் செய்ததை நீ கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாய்.

இளவரசனிடமிருந்து உன்னைப் பிரிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டார்கள். உன்னைக் கெஞ்சினார்கள்; அச்சுறுத்தினார்கள். உன் தாய் தேன்மொழி, தம்பி மணிசேகரனைக் காட்டி 'பாச மிரட்டல்' செய்தார்கள். ஆனாலும் நீ எதற்கும் அஞ்சாது இளவரசனின் குடும்பத்தோடுதான் வாழ்ந்தாய். அப்போது உனக்காக இளவரசனின் குடும்பம் பட்டபாடுகள் சாதாரணமானதல்ல என்பதை உடனிருந்தே அறிந்திருப்பாய். 

வீடு கூட வாடகைக்குக் கிடைக்காமல் அலைந்த அலைச்சல் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பாய். எப்போது யார் வந்து என்ன செய்வார்களோ என்கிற பதைபதைப்பு உன்னையும் இளவரசன் குடும்பத்தையும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. 

உன்னை மட்டுமல்லாது சேரியையும் அந்தப் பதைபதைப்பு விட்டுவைக்க வில்லை. எந்தச் சேரி எந்த நேரத்தில் எரியுமோ என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது.

பயந்ததைப் போலவே, மரக்காணத்தில் வீடுகள் எரிக்கப்பட்டன. மா மரங்கள், பலா மரங்கள் எரிக்கப்பட்டன. மரக்காணம் சேரியின் காவல்தெய்வமான அங்காளம்மனைக்கூட சாதிவெறியர்கள் விட்டுவைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க எத்தனையோ பேருந்துகள் கொளுத்தப்பட்டன. சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மருத்துவர் இராமதாசு உள்ளிட்டோரைக் கைது செய்த பிறகு ஓரளவு குறைந்தது. 

ஆனாலும் பதற்றம் குறையவில்லை. இவை அத்தனைக்கும் உனது காதல் திருமணத்தையை அடிப்படைக் காரணமாகக் காட்ட முனைந்ததை நீ அறிவாய்.

பாவம், உனது காதலுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன தொடர்பு? 

தமிழகம் முழுக்க தலித் எதிர்ப்புணர்வை, தலித்துகள் மீதான காழ்ப்புணர்வைப் பரப்பிவிட்டார்கள். அனைத்து சமுதாயத்திற்கும் பொது எதிரியாக தலித்துகளைச் சித்தரித்தார்கள். ஒழுக்கமில்லாதவர்கள் என்று பொது விதியை உருவாக்க முயற்சித்தார்கள். 

ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த பொதுப்புத்தி இதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் தமிழகத்தை, மானுட நாகரிகத்தை நூறாண்டுகளுக்குப் பின் இழுத்துச் சென்றதை, படித்த உன்னால் உணராமல் இருக்க முடியாது.

இதிகாசங்களில் இலக்கியங்களில் இல்லாத காதலையா நீயும் இளவரசனும் செய்துவிட்டீர்கள்? 

மலைசாதிப் பெண்ணான வள்ளியை முருகன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பின்பும் அவனே தமிழ்க் கடவுள் என்று வணங்கினார்கள். 

ஆனால் அந்த முருகன் வழியில் நீ திருமணம் செய்தவுடன் உன்னையும் இளவரசனையும் கொல்லத் துடிக்கிறார்கள். நீ உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ஆனபோது உன் முகத்தில் அந்தக் கொலை பயத்தைப் பார்க்க முடிந்தது. 

வழக்கறிஞர்கள் புடைசூழ நீ மிரட்சியோடு வந்ததைப் பார்த்தபோது உனது நிலை என்ன என்று தெரிந்தது. உன்னை எப்படியெல்லாம் மிரட்டினார்களோ? 

தைலாபுரம் தோட்டத்தில் எத்தனை நாள் சிறை வைக்கப்பட்டாயோ? 

"கீழ்சாதிப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சாதி கவுரவத்தை குழிதோண்டிப் புதைச்சிட்டியே!" என்கிற வசைச் சொற்களால், நடைபிணமாய் நிலைகுலைந்துபோய் நீ நீதிமன்றம் வந்ததைப் பார்க்க முடிந்தது. 

செய்தியாளர்களிடம்கூட சுதந்திரமாகப் பேசவிடாமல், உன்னை இழுத்துச் சென்ற போக்கு பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு உள்ளது என்பதைத்தான் காட்டியது. அம்மா வீட்டிற்கே போவதாய் நீதிபதிகளிடம் சொல்லிவிட்டதாகத் தீர்ப்பில் சொன்னார்கள். நீ மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

சகோதரி திவ்யா, உனக்குப் பிடித்த இளவரசனோடு பத்து மாதங்கள் வாழ்ந்தாய். இப்போது உங்கள் குடும்பத்தோடு போகப்போவதாய்ச் சொல்கிறாய். யாருடன் இருப்பது என்பது உன் அடிப்படை உரிமை. தாராளமாகப் போகலாம்.

ஆனால்...நீ போகும்போது ஏனம்மா அழுதாய்?

இளவரசன் முகத்தைக்கூடப் பார்க்காமல் எப்படியம்மா போக முடிந்தது?

நீ எடுத்த முடிவு உன் சுயமான முடிவுதானா அல்லது மிரட்டலால் எடுத்த முடிவா?

அம்மா, தம்பியின் அழுகையால் எடுத்த முடிவா?

நாடகக் காதல்.. நாடகக் காதல் என்று ஊர் ஊராய்ப் புலம்பிய சாதிச் சொந்தங்களின் அழுத்தங்களால் எடுத்த முடிவா? 

அல்லது இந்தச் சமூகத்தில் வாழவே விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

தான் வாழ்ந்த காலமெல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி சமூகநீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணில் இன்னமும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

எத்தனையோ புரட்சிகரக் குழுக்கள் உருவாகி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போராடும் தமிழ் மண்ணில் விரும்பியவனோடு வாழ்வதுகூட முடியாத காரியம் என்கிற கோபத்தால் எடுத்த முடிவா?


ஜீன்ஸ் போட்டும், டி-சர்ட் போட்டும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதால்தான் தலித்துகள் இப்படி திருமணம் செய்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தபோது, பெண்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்கிற கோபத்தில்கூட பெண்ணுரிமை இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடாத போக்கால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாயா?

சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக அனைத்துச் சமுதாயப் பேரவை என்கிற பெயரில் ஊர் ஊராய் சாதிவெறியைத் தூண்டிக் கலவரம் செய்த பிறகும் அவர்களின் பிரச்சாரத்தைத் தடுக்காமல், கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவு தருகிற திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரே இப்படி முடிவெடுக்கிறாரே, 

நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயத்தினால் எடுத்த முடிவா?

'ஏனம்மா தாலியைக் கழற்றிவிட்டாய்? அம்மாவோடு தானே போகப் போகிறாய், போய்விட்டு வரவேண்டியதுதானே' என்று கேட்காமலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மவுனம்தான் இந்த முடிவுக்குக் காரணமா? 

'உன்னுடைய திருமணத்திற்குப் பிறகு தானே மூன்று சேரிகள் கொளுத்தப்பட்டன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, குடியிருக்கக்கூட வீடுகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அம்மாவுடன் போ' என்று நீதிபதிகள் சொல்லாததால்தான் உன்னால் இப்படி எளிதாக முடிவெடுக்க முடிந்ததா?

துப்பட்டாவால் உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியேறியபோது நீதியே சாதி அமைப்பு முறைக்குள் முடங்கிக் கிடக்கிறது என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்ந்ததால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததா திவ்யா?

இத்தனை அவநம்பிக்கைகளோடு வாழ முடியாதுதான். உன்னைப் போன்ற சாதாரண ஒரு பெண்ணைக்கூட பாதுகாக்க முடியவில்லையென்றால், வெறுமனே புரட்சி, பெண்ணுரிமை, சமூகநீதி, சட்டம், நீதி இவையெல்லாம் என்ன எழவுக்கு என்று கேட்கத்தான் தோன்றுகிறது.. 

உனது மனசாட்சியைப் போலவே. உன்னுடைய இயலாமையும், சாதி ஆதிக்கமும்தான் இந்த முடிவுகளுக்குக் காரணமாகிவிட்டது. 

பரவாயில்லை! 

உன்னுடைய சொந்த ஊரான செல்லங்கொட்டாய்க்குப் போகும்போது நத்தம் காலனியைக் கடந்துதான் நீ போவாய். 

உன்னுடைய காதலுக்குச் சாட்சியமாய், தியாகமாய் நின்றுகொண்டிருக்கும் அந்த நத்தம் காலனியை ஒரு முறை பார். 

உனக்காகப் பாதிப்பை ஏற்றுக்கொண்ட அந்த மக்களைப் பார். 

நானும் உன்னை துன்புறுத்த விரும்பவில்லை. 

ஆனால் உன் வாழ்வு முழுவதும் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் நெடி இருக்கத்தான் செய்கிறது. 

ஆனாலும் திவ்யா, நீ ஓணாய்களை நம்பிப் போகிறாய். 

உன் அப்பாவை சாதிவெறியர்கள் கொன்றதைப் போல, உனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. 

ஏனென்றால் நீ எங்கள் வீட்டு மருமகள். சாதி அமைப்பை உடைத்து நீ விரைவில் வருவாய் என நம்புகிறோம்.

எதிர்பார்ப்புடன்
சாதி அமைப்பை உடைக்கும் களத்தில்..
வன்னி அரசு

Tuesday, June 25, 2013

புதிய வரவுகள்

இன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்களிலும் இனி ஆங்கில வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் அரசாங்க பள்ளிக்கூடங்களை நடத்த முடியும் என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில்,

இன்றைய பதிப்பகங்கள் கட்டுரை இலக்கியங்கள் என்பதை ஆதரிக்க முடியாத பட்டியலில் சேர்ந்து விட்ட போதிலும் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் மிக தைரியமாக தமிழ் மொழி குறித்த ஆவணத்தின் மொத்த தொகுப்பாக இந்த இரண்டு நூலையும் கொண்டு வந்துள்ளார்.. 

இந்த கட்டுரைகளுக்கு என் பாராட்டுரைகள்.
.
பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இளங்கோவன் அவர்களின் கட்டுரை களஞ்சியம் மற்றும் செவ்விலக்கிய சிந்தனைப் புதையல் என்ற இரண்டு நூல் வெளி வந்துள்ளது.

இன்றைய நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பது "ஓட்டத்தை நிறுத்தாதே. பின்னால் வருபவர்கள் முந்தி விடுவார்கள்".  

இதுவே தான் காலப்போக்கில் வாழ்க்கைக்காக "காசு என்பது மாறி காசுக்காகவே வாழ்க்கை" என்று நம்மை பணம் துரத்திப் பறவைகளாக மாற்றி விடுகின்றது.  ஆனால் இந்த புத்தகங்களை படிக்கும் போது நாம் எத்தனை விசயங்களை இழந்துருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

இன்று தமிழ் மொழி அறிவியலோடு போட்டி போட முடியாது.  ஆங்கிலம் மூலமே அறிவியலைக் கற்றுக் கொள்ள முடியும் என்று மனதில் வைத்திருக்கும் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் இந்த புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் இருப்பதை அழித்து விட்டு நாம் எங்கங்கோ தேடிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் இந்த புத்தகங்கள் உணர்த்துகின்றது. 

இன்று நினைத்த நேரத்தில் வலைபதிவில் உறவாடும் உறவுக் கூட்டத்திற்கு இந்த தமிழ் எழுத்துரு உருவான கதைகள்,யூனிக்கோடு என்பதை எங்கே அங்கீகரிக்கின்றார்கள்,வெளியே தெரியாத அதன் நடைமுறைகள் என்ன? எப்படி உருவாக்கினார்கள்? தமிழ் யூனிகோடு உருவாக்கப்பட்டதற்கும், இந்த முயற்சிகளை உருக்குலைக்க காரணமாக இருந்தவர்கள் போன்ற பலவித தகவல்களையும் அழகாக விவரித்துள்ளார்.  

நம்முடைய முந்தைய தமிழ்பரம்பரைகளைப் பற்றி எவரும் நினைப்பதே தவறு என்பதை விட அது எதற்கு தேவையில்லாமல்? என்கிற சூழ்நிலையில் இன்றைய கல்விச்சூழல் நம்மை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. தமிழ்மொழிக்கு பாடுபட்டவன் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதை கொத்துக்கறியாக்கி குற்றுயிரும் குலையுறுமாக மாற்றி இன்னமும் பலர் தங்கள் மாரை அவர்களே தட்டிக் கொண்டுருக்கின்றார்கள்.  

ஆனால் உருப்படியான கல்விச்சூழல் என்பது எப்படி உள்ளது என்பதை தான் அமெரிக்காவில் இளங்கோவன் பார்த்த ஒவ்வொரு பல்கலைகழகத்தின் வாயிலாக, அங்குள்ள அறிவுப்போட்டிகளை அழகாக பதிவு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் தெலுங்கிசையே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சூழ்நிலையை 1967க்குப் பிறகு ஆட்சிக்கு திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் எப்படி செயல்பட்டார்கள்.  அதுவே தற்போதைய காலகட்டத்தில் எப்படி மாறிவிட்டது போன்ற நிகழ்கால உண்மைகளை நமக்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.  

தமிழ்மொழி அழிந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்ற எவருமே அதன் வளர்ச்சி குறித்து, வளர வேண்டிய அவசியம் குறித்தே கருத்தில் கொள்ளாமல் கண்ட கருத்துக்களையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று மொழிக்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு காசும் விரயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நிகழ் கால ஆடம்பர வாயிற் தோரணங்கள் மூலம் உதாரணம் காட்டி விளக்குகின்றார். 

இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ்மொழிக்காக கட்டும் நினைவு இல்லங்கள் ஒவ்வொன்றுமே தமிழ்மொழிக்கு கட்டப்படும் சமாதி என்பதாகத்தான் இருக்கின்றது என்பதை தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நடக்கும் அதிகார போட்டிகளை சுட்டிக்காட்டுகின்றார்.

ஒவ்வொரு நிதி ஆண்டும் மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் மொழி வளர்ச்சிக்கென குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றது.  ஒவ்வொரு மாநில அரசும் தனது நிர்வாகத்தில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரைக்கும் கல்வி வரி என்று மூன்று சதவிகிதம் வசூலித்துக் கொண்டிருந்தாலும் அந்த பணமெல்லாம் ஒவ்வொரு ஆட்சியிலும் மாயமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. 

ஆனால் இன்று தமிழ்மொழியை வளர்க்கின்றோம் என்று கருத்தரங்கம் ஏற்பாடு செய்து முதல் அதன் மூலம் எப்படி காசு பார்க்கலாம் என்கிற கும்பல் வரைக்கும் அதன் ரூபங்களை வெட்டவெளிச்சமாக்கி உள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற 90 சதவிகித ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் அரசு பள்ளியில் பணிபுரிந்தவர்களே.  ஆங்கிலவழிக்கல்விக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமை அந்த அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டு அரசு இதனைக்கூட பெருமையாக வெளிப்படையாக சொல்லிக் கொள்ள விரும்பாத நிலையில் தான் இருக்கின்றது. ஒரு வேளை மக்களின் பெரும்பான்மையான விருப்பமே மகேசனின் விருப்பமாக இருக்கக்கூடுமோ?

பூம்புகார் அகழ்வராய்ச்சி என்பது ஒரு பெரிய பூதம் போன்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆனால் இங்கு செய்யப்பட்ட எந்த ஆராய்ச்சிகளும் வெளிவருவதில்லை என்பதோடு இது சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் மேலே இருப்பவர்கள் ஊக்குவிப்பதில்லை.  

இது சார்ந்த பெரும்பாலான கொள்கைரீதியான முடிவுகள் இன்னமும் மத்திய அரசாங்கத்திடமே இருப்பதால் இது போன்ற விபரங்கள் குறித்து தெரிந்தவர்களும் குறைவு.  தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களும் இல்லை என்கிற ரீதியில் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சித் துறை இறுதி கட்ட மூச்சில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. 

மக்களும் பிழைத்தே ஆக வேண்டிய அவசியத்தில் பிழைப்பு வாதியாக மாறிப் போய்விட்டதால் சரித்திரச் சான்றுகள் என்பது ஆதரவற்று அழிந்து கொண்டேயிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தங்கள் தாய் மொழி குறித்த சிந்தனைகளும் மாறிக் கொண்டே வருகின்றது.. 

நடுத்தரவர்க்கத்திற்கு இன்று உடனடித் தேவை ஒரு வேலை.  அந்த வேலையின் மூலம் கிடைக்கப் போகும் வருமானம்.  

அதற்கு இப்போதைய சூழ்நிலையில் ஆங்கிலம் தான் உதவுவதாக இங்கே நம்பவைக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரங்களை எவரும் நம்பத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்.

வருடந்தோறும் பத்துலட்சம் பேர்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து வெளியே வருபவர்களில் எத்தனை பேர்களால் போட்டியில் ஜெயித்து தங்களை தகுதியான பதவியில் நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது என்பது குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்ளவதில்லை.  விரும்பும் ஆங்கிலத்தில் படித்து வருபவனுக்கு ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பேச முடிவதில்லை. கற்றுக் கொடுப்பவனுக்கும், கற்றுக் கொள்பவனுக்கு இந்த ஆங்கிலம் இன்றும் சவாலாக இருப்பதால் மணற் கொள்ளையரை, சாராய வியாபாரிகளை, கடத்தல் பேர்வழிகளை இன்று கல்வித் தந்தையாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை பேர்கள் பத்தாவது முடித்து பனிரெண்டாம் வகுப்பு சென்றார்கள். அதில் எத்தனை பேர்கள் கல்லூரி சென்றார்கள் போன்ற எந்த கணக்கு வழக்கும் இங்கே இல்லை.  இறுதியாக எத்தனை பேர்கள் சரியான வேலைக்குச் சென்றார்கள்?

கல்வி மட்டுமல்ல. நம் நாட்டில் எந்த துறை சார்ந்தும் உருப்படியான கணக்கு வழக்கு என்பதே இல்லை. ஒரு வேளை நீங்கள் கேட்டால் கொடுப்பார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் போது நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்பது சந்தேகமே.

பிழைக்கவே கல்வி என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில் கடைசியில் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ளாமல், கற்று வைத்திருந்த தமிழும் மறந்து அறைகுறையாகிப் போனவர்களால் இன்று தமிழ்நாடு அறிவாளியாக மாறிக் கொண்டேயிருக்கிறது. .  

தாய்மொழி குறித்த அக்கறையில்லாதவர்கள் ஆட்சியாளர்களாக வர, தினசரி வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் நாள்பட இந்த மொழி குறித்த எண்ணம் மாறிக் கொண்டேயிருக்க அழியப்போகும் மொழிப்பட்டியலில் இந்த தமிழும் வந்து விடுமோ என்கிற நிலையில் இளங்கோவன் எழுதியுள்ள இந்த நூல்கள் தமிழுக்கு வந்துள்ள பொக்கிஷத்தில்  ஒன்று.

இன்று தமிழ் இலக்கியம் படித்தால் இன்று விற்கின்ற விலையில் ஒரு இட்லி கூட வாங்கி சாப்பிட வருமானம் கிடைக்காது என்று ஆசிரியர்களே தங்களுடைய மாணவர்களுக்கு சொல்லும் அளவுக்கு நம் மொழியை நாமே பெருமையாய் பார்க்கின்றோம்.  

ஆனால் தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத் தானே காத்துக் கொண்டு ஒரு சில அறிஞர்களின் துணை கொண்டு இத்தனை ஆண்டு காலம் இன்னமும் பேச்சு மொழி, எழுத்து மொழியாக இருப்பதே மகத்தான சாதனை தான் என்பதை தான் முனைவர் மு இளங்கோவன் போன்றவர்களின் தளராத முயற்சி நமக்கு உணர்த்துகின்றது. 

ஆசிரியர் தொடர்பு எண்  94420 29 053

ஆசிரியர் மின் அஞ்சல் முகவரி muelangovan@gmail.com

நூலாசிரியரின் பிற நூல்கள்

1. பாரதிதாசன் பரம்பரை
2. வாய்மொழி இலக்கியம்
3.நாட்டுப்புறவியல்
4. இணையம் கற்போம்
5. மணல்மேட்டு மழலைகள்
6. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
7. பழையன புகுதலும்...........
8. அரங்கேறும் சிலம்புகள்
9. பொன்னி ஆசிரிய உரைகள்
10. பொன்னி பாரதிதாசன் பரம்பரை
11. இலக்கியம் அன்றும் இன்றும்
12. விடுதலைப் போராட்ட வீரர் வெ.துறையனார் அவர்கள்.
13. மாணவராற்றுப்படை
14. அச்சக ஆற்றுப்படை
15. பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு

Monday, June 24, 2013

காவியத்தலைவன் - இன்று பிறந்த நாள்.

ஏறக்குறைய கவிஞர் கண்ணதாசன் இறந்து 32 ஆண்டுகள் முடிந்து விட்டது. 

ஆனால் இன்று பலவிதமாக திரை உலகம் மாறிப் போன சூழ்நிலையில் நாம் எத்தனை பாடல்களை கேட்ட போதிலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மாற்றவே மறக்கவே முடியாத புகழுக்கு பாடலுக்குச் சொந்தகாரரான கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று.

அவர் இறந்த போது நடந்த நிகழ்வுகளை இன்று நினைவு படுத்திக் கொள்ளும் வண்ணம் அப்போது மாலை மலர் பத்திரிக்கையில் வந்த செய்தி இது. 

காரணம் இன்று பலருக்கும் மறந்து போன நிகழ்வாக இருக்கும் என்பதால் இதுவொரு திரும்பிப்பார்த்தல் பதிவு.

1981-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச்சங்க விழாவிலும், கவிஞர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக கண்ணதாசன் சென்றார். அந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகாகோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் ஜுலை 24-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். முதலில் அபாய கட்டத்தில் இருந்த அவர் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக குணம் அடைந்து வந்தார்.

உணர்வு இழந்த நிலையில் இருந்து மீண்டு கண்விழித்து பார்த்தார். உதடுகள் மட்டும் அசைந்தன. பேச முடியவில்லை. என்றாலும் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொண்டார். பூரணமாக குணம் அடைய 3 மாதம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அக்டோபர் மாத மத்தியில் கண்ணதாசன் உடல் நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. அவருடைய சிறுநீரகம் (கிட்னி) சரிவர இயங்கவில்லை. அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

என்றாலும் கண்ணதாசன் 17-10-1981 அன்று இந்திய நேரப்படி இரவு 10-45 மணிக்கு (அமெரிக்காவில் பகல் 12 மணி) மரணம் அடைந்தார். கண்ணதாசனுக்கு அப்போது வயது 54. கண்ணதாசனின் உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் எம். ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்ததால், கண்ணதாசனின் சிகிச்சைக்கான செலவுகள் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்' என்றும் எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

கண்ணதாசனின் 2-வது மனைவி பார்வதி, மூன்றாவது மனைவி வள்ளியம்மை, மகன் கலைவாணன் ஆகியோர் அமெரிக்கா சென்று கவனித்து வந்தார்கள். இதனால் கண்ணதாசன் உயிர் பிரியும்போது அவர்கள் கண்ணதாசன் அருகில் இருந்தார்கள். சென்னை தியாகராயநகரில் கண்ணதாசனின் வீட்டில் அவருடைய உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. முதல் மனைவி பொன்னம்மாளும், மற்ற உறவினர்களும் படத்தின் அருகில் அமர்ந்து, கண்ணீர் விட்டுக்கதறி அழுதவண்ணம் இருந்தனர்.

கண்ணதாசன் மறைந்த செய்தி கேட்டதும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள், திரை உலகத்தினர் துயரம் அடைந்தனர். இரங்கல் செய்தி வெளியிட்டார்கள்.

எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-

'மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார். கவிஞர் என்றால் அது கண்ணதாசன் ஒருவரையே குறிக்கும் என்ற அளவுக்கு அவருக்கு புகழ் சேர்ந்தது. நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய இலக்கியப் பணியை கண்ணதாசன் ஒருவரே செய்தார். எப்போதாவது ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்.' இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, கண்ணதாசன் வீட்டிற்கு சென்று கண்ணதாசனின் மனைவி பொன்னம்மாவுக்கும், மகன்களுக்கும் ஆறுதல் கூறினார். திரை உலகப் பிரமுகர்களும் சென்று ஆறுதல் சொன்னார்கள். அமெரிக்காவில் மரணம் அடைந்த கண்ணதாசனின் உடல் விமானம் மூலம் 21-10-1981 அன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மகன் கலைவாணன் ஆகியோரும் அதே விமானத்தில் வந்தார்கள்.

விமான நிலையத்தில் கண்ணதாசனின் அண்ணன், உறவினர்கள் மற்றும் பிரமுகர்கள் கூடியிருந்தனர். கண்ணதாசன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தியாகராயநகரில் உள்ள கண்ணதாசன் வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பல தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கண்ணதாசன் உடல் நடிகர் சங்க கட்டிடத்துக்கு கொண்டு போகப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

உடல் மீது அவர் எழுதிய 'ஏசு காவியம்' என்ற புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது. நடிகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜிகணேசன் மற்றும் திரை உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இலங்கை மந்திரி ராஜதுரை வந்திருந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மறுநாள் (22-ந்தேதி) கண்ணதாசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

`சிதை'க்கு மூத்த மனைவியின் மகன் கண்மணிசுப்பு தீ மூட்டினார். முன்னதாக சர்வமதங்கள் சார்பில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இந்தியாவின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் கண்ணதாசன். 1969-ம் ஆண்டில், 'குழந்தைக்காக' என்ற படத்துக்காக இவர் எழுதிய 'ராமன் என்பது கங்கை நதி' என்ற பாடலுக்காக, இந்த விருது கிடைத்தது. 1979-ல் 'சேரமான் காதலி' என்ற நாவலுக்காக, 'சாகித்ய அகாடமி' பரிசு பெற்றார். இவருடைய கவிதைகள் இந்தி உள்பட பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு முதலான அயல்நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்

Saturday, June 22, 2013

சொம்பு தூக்கிகள்

ந்த துறையில் நீங்கள் இருந்தாலும் உங்களின் முதல் தகுதி சிறந்த சொம்பு தூக்கியாக இருக்க வேண்டும்.  

உங்களின் திறமை உங்களை அடையாளப்படுத்தும்.  

ஆனால் உங்களின் சொம்பு தூக்கும் திறமை மட்டுமே உங்களை அந்த துறையில் நிலைப்படுத்தும்.  பழக்கமில்லாதவர்கள் அவசியம் பழகியே ஆக வேண்டும்.  விருப்பமில்லை என்ற போதும் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் என்பதால் இந்த சொம்பு தூக்குதலை கௌரவமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  

இன்று ஆட்சியில் அரசியலில், அதிகார வர்க்கத்தில் என்று தொடங்கி அத்தனை இடங்களிலும் சரியான முறையில் சொம்பு தூக்கி பழகப்பட்டவர்கள் தான் உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். 

வீட்டுக்குள் கூட சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நீங்கள் சொம்பு தூக்கியே ஆக வேண்டும்.  முரண்டுபிடித்தால் முன்னேற முடியாது என்பதை விட உங்களை முடித்துக் கட்டிவிடுவார்கள்,

ன்று பத்திரிக்கைகள் முதல் வலையுலகம் வரைக்கும் எந்தப் பக்கம் திரும்பினாலும் கலைஞர் தனது மகள் கனிமொழியின் ஒற்றை சீட்டுக்காக காங்கிரஸ், தேமுதிக என்று மாறி மாறி கூச்சப்படாமல் சொம்பு தூக்கிக் கொண்டிருப்பதைப் பற்றியே படிக்க வேண்டியதாக இருக்கின்றது. 

அப்பாவுக்கு மகளின் வெற்றி குறித்து கவலைப்பட்டு தூக்கம் வராத காரணத்தால் அண்ணன் தங்கை அரசியல் பின்னுக்குப் போய் விட்டதாக ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.  இப்போது ஸ்டாலின் கூட கனிமொழிக்காக உண்மையிலேயே தளபதியாய் சூறாவளியாய் சொம்பு தூக்கிக் கொண்டு இருக்கின்றார்.

கலைஞரின் குடும்ப பாசம் பற்றி புதிதாக எழுத ஒன்றுமில்லை. 

வலையுலகில் உள்ள தீவிர உடன்பிறப்புகள் கூட இந்த தேர்தலில் பா.ம.க எவருக்கும் ஆதரவு இல்லை என்றது போல காங்கிரஸ்ம் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்கிற ரீதியில் கொதிப்புடன் தங்கள் கருத்தை எழுதுகின்றனர்.  

மகளை அரசியலில் வளர்த்தவருக்குத்தான் அந்த பாசப் போராட்டம் தெரியும்.  கனிமொழி ஜெயிக்காமல் போனால் அடுத்தடுத்து டெல்லியிலிருந்து வரப் போகும் பிரச்சனைகளை ஒப்பிடும் போதும் மகள் ஜெயிக்க எங்க வேணுமானாலும் சொம்பு தூக்கலாம் என்கிற கலைஞரின் கொள்கையில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  

மூணாப்பு படித்த தேமுதிக உறுப்பினர்  திக்கு தெரியாத காட்டில் (டெல்லியில்) மாட்டிக் கொண்டு தேமே என்று முழிப்பதை விட கனிமொழி டெல்லிக்கு போனால் கூட அவர் வேலையை பார்த்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் மரியாதையை உருவாக்குவார். 

கலைஞரின் பொதுவாழ்க்கையில் சொம்பு தூக்குவதென்பது இது தான் முதல் முறையா?

நான் அலுவலகத்தில் தினந்தோறும் பார்க்கும் ஒவ்வொரு சொம்பு தூக்கிகளையும் ரொம்பவே ரசிப்பதுண்டு. 

விதவிதமான சொம்பு தூக்கிகள். ரசனையான அவர்களின் செயல்பாடுகள் என்று யோசிக்க ரசிக்க என்று தீனி கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

எத்தனை எத்தனை சொம்பு தூக்கிகள்?

அலுவலக செயல்பாடுகளைப் பற்றி தெரியாத காலகட்டத்தில் இவர்கள் எனக்கு சவாலாக தெரிந்தார்கள்.  வேலைக்கு வந்த தொடக்கத்தில் குழப்பாக இருந்தது. நம் இடம் எது? என்று தேடத் தொடங்கிய போது தான் ஒவ்வொரு இடங்களிலும் இருந்த இரண்டு வர்க்கத்தினைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது.

ஒன்று உழைப்பவர்கள். 

மற்றொன்று உழைக்க மறுப்பவர்கள். 

இது போக உழைக்க வாய்ப்பு இருந்தும் பல காரணங்களால் விருப்பமில்லாதவர்களாக இருப்பவர்கள். 

இவர்கள் எப்போதும்  தனி கோஷ்டியாக இருந்தனர். 

இந்த பிரிவினையில் மேலும் சில கிளைப்பிரிவுகள் பிரிகின்றது. 

உழைக்க விருப்பமில்லாதவர்களை நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாலே போதுமானதாக இருந்தது.  அவர்களால் நமக்கு ஒன்றும் பிரச்சனை வராது. 

ஆனால் உழைக்காமல் அடுத்தவர்களின் உழைப்பை தனது உழைப்பாக மாற்றிக் கொண்டு அடுத்தடுத்து விரைவாக படிகளில் ஏறியவர்களைப் பார்த்த போது தான் சமூகத்தின் உண்மையான நிலவரத்தையே புரிந்து கொள்ள முடிந்தது. 

இதிலும் ஒரு சிறப்பு பிரிவு என்று ஒன்று தனியாக உண்டு.
அவர்களுக்கு சொம்பு தூக்கிகள் என்று அழைத்தார்கள். 

காரணம் காலை முதல் இரவு வரைக்கும் சமய சந்தர்ப்பத்திற்கு கேற்றவாறு தனக்கு மேல் இருபபவர்களின் விருப்பத்திற்கேற்றவாரு விதவிதமாக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான சொம்புகளை தூக்கிக் கொண்டு கழுவ தயாராக இருந்தவர்களால் தான்  பலருக்கும் பிரச்சனைகள் உருவானது. 

தனது சொந்த திறமைகளை விட தான் தூக்கும் சொம்புகளை அதன் அளவுகளை அதிகரித்துக் கொண்டே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அவசியம் இருப்பவர்கள் தான் ஒவ்வொரு இடங்களிலும் உண்மையான உழைப்பாளிகளுக்கு சவாலாக இருக்கின்றார்கள்.  

சிலர் முதலாளிகளின் குடும்பத்துக்கு சொம்பு தூக்கப் போய் அங்கே தூக்கம் வராமல் தவிக்கும் முதலாளியம்மா அருகே செல்லும் வரைக்கும் பாக்கியத்தைப் பெற்று விடுகின்றார்கள்.  

முதலாளிக்கு சொம்பு தூக்குபவர்கள் அவர்களுக்கு மாமா என்கிற நிலை வரைக்கு உயர்ந்து விடுகின்றார்கள்.  

ஏராளமான சொம்பு தூக்கிகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டே வாழ வேண்டியிருப்பதால் இவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டதில்லை. 

லையுலகில் இருக்கும் சொம்பு தூக்கிகளை பார்க்கும் போது தான் வியப்பாக உள்ளது.  நான் உன்னை தடவிக் கொடுக்கின்றேன்.  நீ என்னை தடவிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  நானும் இருக்கின்றேன் என்பதையாவது கண்டுகொள் என்று விரும்பும் சொம்புதூக்கிகள் ரசிக்கக்கூடியவராக தெரிகின்றார்கள். 

என்ன தான் திறமையிருந்தாலும் ஒரு தடவை சொம்பு தூக்க பழகிவிட்டால் அதன் சுகம் விடாது போல.

காலம் மாறிக் கொண்ட இருக்கின்றது. 

மன்னர்கள் தங்க சொம்புகளை பயன்படுத்தினார்கள். மந்திரிகள் ஒரு வேளை வெள்ளி சொம்பை பயன்படுத்தியிருக்கக்கூடும். மக்கள் வெண்கலச் சொம்பை பயன்படுத்தினார்கள். அடுத்த பித்தளை சொம்பு வந்தது. பிறகு அலுமினியச் சொம்பு வந்தது.  ஆனால் இப்போது விதவிதமான சில்வர் சொம்பும் வந்து விட்டது.  

ஆனால் இப்போது சொம்புகளுக்கு மரியாதை இல்லை. கண்ணாடியாக மாறி இன்று உண்மையான சொம்பின் வடிவமே மாறிவிட்டது. நம் வாழ்வின் சாட்சியாக நம்மோடு வந்து கொண்டேயிருப்பதால் சொம்புகளை ஆதரிப்போம்.  

காரணம்  சொம்பு தூக்கிகள் தான் நாம் சுறுசுறுப்பாக இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துபவர்களாக இருக்கின்றார்கள். நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகளை கற்றுத் தருபவர்களாக இருக்கின்றார்கள். நாம் வளர்த்தே ஆக வேண்டிய சூழ்நிலையை உணர்த்துபவர்களாக இருக்கின்றார்கள். 

எப்போதும் ஒவ்வொரு சொம்பு தூக்கிகளும் நம்மை விழிப்பாக இருக்க வைத்துக் கொண்டிருப்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகளை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது. 

நாம் எப்போதும் சொம்பு தூக்கிகளை ஆதரிப்பது தான் சரியாக இருக்கும்.

காலப்போக்கில் காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இவர்கள் வந்து விடுவதால் இவர்களும் ஒரு வகையில் தியாகியே.

Thursday, June 20, 2013

பிரபல்யங்களின் சாவு

திரைப்பட பிரபல்யங்கள், அரசியல்வாதிகள் இறப்பு குறித்த செய்திகளை படிக்கும் பொழுது என் மனதில் எந்த பாதிப்பும் உருவாவதில்லை.  

ஊடகத்துறைக்கு பிரபல்யங்களின் சாவுகள் என்பது முக்கியமாக இருப்பதால் இவர்கள் இறக்கும் பொழுது பக்கங்களை காட்சிகளை அடைத்துக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர் அப்போதைய நிலை வைத்து செய்திதாளில் பக்கத்தை நிரப்புகின்றார்கள்.

பிரபல்யங்களின் மரணத்தை விட பழகியவர்களின் திடீர் மரணம் என்னை பாதிப்படைய வைக்கின்றது.

ந்த நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் வேறொரு துறையில் பணியாற்றினார். சென்ற வருடம் பார்த்த போது சொந்தமாக தொழில் தொடங்குவதாக சொல்லியிருந்தார்.  நான் இருந்த நிறுவனத்தில் சில ஒப்பந்தங்களை வாங்கிக் கொடுத்தேன்.  இடையில் சில முறை பேசியிருப்போம்.  தொழில் சார்ந்த சில சமூக வலைதளங்களில் அவரும் இருப்பதைப் பார்த்தேன். அவரும் வெளி நாட்டு தொடர்புகளுக்காக முயற்சித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.  35 வயதில் ஒரு இளம் தொழில் முனைவோராக எனக்குத் தெரிந்தார். சென்ற வாரத்தில் நண்பர் அழைத்து "உங்க நண்பர் சேகர் சேவூர் அருகே சாலை விபத்தில் இறந்து விட்டார்" என்ற போது மீண்டு வரவே ஒரு வாரம் ஆனது..

சில வாரங்களுக்கு முன் விருதுநகரில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டு கணவன் மனைவி தங்கள் குழந்தைகளுடன் காரில் பழநி கோவிலுக்குச் சென்று விட்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த போது நள்ளிரவில் சாலை விபத்தில் பலியாகிப் போனார்கள்.

இருவருமே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.பெண் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்.பையன் தொழில் நுட்ப படிப்பு படித்துக் கொண்டிருப்பவர். கோடை விடுமுறை முடிந்து கோவில் தரிசனத்தையும் முடித்து தாங்கள் பணிபுரியும் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த போது சாலை விபத்தில் மொத்த குடும்பமும் பலி.

பத்திரிக்கையில் படித்த போது கண்ணுக்குத் தெரியாத அந்த மொத்த குடும்பத்தையும் பற்றியே சில நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர்கள் இறந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். அதிலும் சமூகத்திற்கு பலன் உள்ள வகையில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  ஆனால் அவர்களின் இறப்பு அவர் வாழ்ந்த அடுத்த மாவட்டத்திற்குக் கூட பல சமயம் தெரியாமல் போய்விடுகின்றது.

சமீப காலமாக பணம் இருப்பவர்கள் கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் விளம்பரம் கொடுக்கும் புதிய கலாச்சாரம் உருவாகி இருப்பதால் பலரின் இறப்பு குறித்து தெரிய வருகின்றது.

ஒவ்வொரு சமயத்திலும் இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு பிரபல்யத்தின் சாவும் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நேரிடையாக பாதிப்பதால் "எப்படா இந்தாளை தூக்கிக் கொண்டு போய் சுடுகாட்டில் சேர்ப்பார்கள்?" என்பதாக தான் இருக்கின்றது.  

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடைகளை அடைத்தே ஆக வேண்டும். பேரூந்துகளை நிறுத்த வேண்டும்.  கண்ணீர் அஞ்சலி என்று தெருவில் அவர்களின் அல்லக்கைகள் மாட்டி வைக்கும் ப்ளெக்ஸ் போர்டுகளை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.

செத்த புண்ணியவான் நல்லவரா? நாணயமானவரா? என்பதை விட  அண்டியிருப்பவர்களுக்கு என்ன பலன்? என்பதில் தான் அவரின் சாவு முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சித்தலைவர் இறந்து விட்டால் அடுத்து காத்திருப்பவருக்கு கொண்டாட்டம்.  எவரிடமும் சொல்லாமல் பினாமியை மட்டும் நம்பி போட்டிருந்த முதலீட்டை வாங்கிய பினாமிக்கு அதைவிட கொண்டாட்டம்.

நான் மேல்நிலை வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது டிகே சார் விலங்கியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழாசிரியர் மீனவன் சார் வேகமாக உள்ளே நுழைந்து "டேய் டிகே இந்திரா காந்தி அம்மையாரை யாரோ சுட்டுக் கொன்னுட்டாங்களாம்" என்றார். 

முதல் பெஞ்சில் என்னுடன் அமர்ந்திருந்த சொர்ணம் என் காதைக் கடித்தான். "இன்றைக்கு சங்கர் தியேட்டர்ல புதுப்படம் போட்டுருக்காங்க. காலைக்காட்சி போயிடுவோம். வீட்டுக்கும் தெரியாது. மதியம் சாப்பிடப் போக சரியாக இருக்கும். இன்றைக்கு லீவா என்று கேள்" என்றான்.  

கூறுகெட்ட தனமாக நானும் வேகமாக "சார் இன்றைக்கு லீவா?" என்று கேட்க இரண்டு பேருமே என்னை அடிக்க பாய்நது ஓடி வர  தப்பித்து ஓடியது இப்போது நினைவுக்கு வருகின்றது. 

நான் மட்டுமல்ல. பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் எந்த மாணவர்களும் இந்த மனோநிலையில் தான் இருந்தார்கள், 

இப்போதும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.  

காரணம் அரசியலுக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் உருவாக்கப்பட்டு இன்று அரசியல் என்பது "அயோக்கியர்களின் புகலிடம்" என்பதாக மாற்றப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. 

மக்களே தான் காரணமாக இருக்கின்றார்கள்.

வீடுகளில், பள்ளிகளில் அரசியல் குறித்து பேச முடியாது என்பதை விட பேசக்கூடாது என்பது தான் சரியான வார்த்தை.  

காரணம் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நேரிடையான சம்மந்தம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஓட்டு கேட்கும் சமயத்தில் மட்டும் தலைவன் என்ற பெயர் உள்ளவரை கூட்டத்தில் தூரத்தில் இருந்து பார்க்க முடியும். இன்று குறிப்பிட்ட கட்சியில் உள்ள தீவிர தொண்டன் கூட அவன் விரும்பும் தலைவனை அத்தனை எளிதாக பார்த்து விட முடியாது.

நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். இறந்தார்.  

சென்னையில் இருந்த அக்கா வீட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ராஜீவ் காந்தி இறந்தார்.  

அந்த இரவு நேரம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மாட்டிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திரும்பி வந்து செங்கல்பட்டில் காத்திருந்து அதிகாலையில் சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் நின்று கொண்டே மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.

இதே போல ஒவ்வொரும் அவஸ்த்தைகளுடன் தங்களின் அன்றைய தினத்தினை கடந்து வந்திருப்பார்கள்.

கவிஞர் கண்ணதாசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு என்னை அதிகம் யோசிக்க வைத்த மரணம் சமீபத்தில் இறந்த பாடகர் டி.எம்.எஸ்.

91 வயதில் இறந்த பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இறந்ததை முக நூலில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார். 

"இந்த சமூகம் அவருக்கு என்ன செய்தது?".  

அவருக்கு என்ன செய்ய வேண்டும்? இல்லை டிஎம்எஸ் தான் இந்த சமூகத்திற்கு என்ன செய்தார் என்று யோசித்துப் பார்த்தேன். 

அவரின் தாய்மொழி சௌராஷ்டிரமாக இருந்தாலும் அழகான தமிழை தமிழர்களுக்கு தனது குரலால் அறிமுகப்படுத்தினார். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கையில் காலை முதல் இரவு வரைக்கும் அவரும் கூடவே வாழ்ந்தார்.  

மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், காதல், கவலை, பாசம், பக்தி, உறவு என்று எல்லா நிலையிலும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் ஊடுருவி இருந்தார். 

பெரியார் தனது 94 வயது வரைக்கும் சோர்வில்லாது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று "கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே " என்றார். 

ஆனால் டிஎம்எஸ் ஒரு சின்ன ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து கொண்டு அவர் பாடிய பக்தி பாடல்களின் மூலம் சாமி கும்பிட விருப்பமில்லாதவர்களையும் கோவில் நோக்கி ஓட வைத்தார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை தமிழர்களின் வீடுகளில் இன்னும் பல நூற்றாண்டுகள் கவிஞர் கண்ணதாசனும், டி,எம்எஸ் அவர்களும் வாழத்தான் போகின்றார்கள். 

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்பட வெற்றிக்கும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் திரைப்படம் மற்றும் அரசியல் வெற்றிக்கும் உள்ள பல காரணங்களில்  டி.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது என்பதை எவரும் மறுக்க முடியாது. 

இதை விட டி.எம்.எஸ் க்கு வேறென்ன பெருமை வேண்டும்? 

சாதாரண மனிதர்களின் சாவு என்பது இழவு வீடு. ஆனால் பிரபல்யங்களின் சாவு வீடென்பது இன்று மக்களைப் பொறுத்தவரையிலும் விரும்பியவர்களை ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பு.  

இது வளர்ந்த ஒவ்வொரு பிரபல்யமும் தனது வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய அவஸ்த்தை இது.  எழவு வீட்டில் கூட நம் புத்திசாலி மக்கள் "சார் நீங்க அந்த வசனத்தை பேசி காட்ட முடியுமா?" என்று கேட்பவர்கள் தான் அதிகம்.  

சமீபத்தில் இறந்த மணிவண்ணன் இறப்பு குறித்து நிறைய தகவல்களை படிக்க முடிந்தது. நாம் தமிழர் கட்சி மூலம் தமிழ்நாடு மூமுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வுகளை பார்த்த போது 50 படங்களை மட்டுமே அவர் இயக்கி இருந்த போதிலும் அவரின் தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் காரணமாக இன்று உலகம் முழுக்க அவரின் மரணத்திற்கு  ஒரு அங்கீகாரத்தையும் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வைத்துள்ளது.  

இவரின் மரணம் குறித்து நான் படித்த சிறப்பான பதிவுகளில் ஒன்று இது.