Saturday, June 29, 2013

மெட்ராஸ் பவன் உணவகம்

திருப்பூரின் முன்னணி பதிவர்களில் ஒருவரான ஜோதிஜி(தேவியர் இல்லம்) அவர்கள் எழுதிய நூல்தான் இந்த டாலர் நகரம். நூலெனும் சொல்லுக்கு புத்தகமென்றும் பொருளென்பது நாமறிந்ததே.

ஆனால் நூல் பற்றிய செய்திகளை பிரத்யேகமாக தாங்கி வெளிவந்திருக்கும் அசல் நூல் என்பது இதன் தனிச்சிறப்பு. பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் நகரில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக அடியெடுத்து வைத்து படிப்படியாக உயர்ந்து தற்போது நிர்வாகப்பதவியில் இருக்கும் ஜோதிஜி அவர்கள் தான் கண்ட திருப்பூர் பின்னலாடை வரலாற்றை தொகுத்து டாலர் நகரமாக சமர்ப்பித்து இருக்கிறார்.

தமிழ்ச்செடி எனும் தளத்தில் தமிழ்மொழி சார்ந்த பதிவுகளை இணைய நண்பர்களுடன் வலையேற்றி வரும் தமிழ் ஆர்வலர் என்பதும் இவரது இன்னொரு சிறப்பு.

பல ஆண்டுகள் பின்னலாடை தொழில் அனுபவம் மிக்க நபர் எழுதிய புத்தகம் எனும் காரணத்திற்காக மட்டுமே இந்நூலை வாசிக்க முனைந்தேன். டாலர் நகரத்தின் முதல் சில பகுதிகளில் திருப்பூரில் வேலை தேடி அலைந்தது, சக நண்பர்கள் மற்றும் நிறுவனங்கள் வாழ்ந்து வீழ்ந்த கதைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பகிரப்பட்டு உள்ளன. 

உள்ளாடை நிறுவனங்கள், அதன் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் எப்போது வரும் என்று வாசகனாக சற்றே பொறுமை இழந்து காத்திருக்கும் நேரத்தில் அத்யாயம் 11 முதல் 18 வரை அதற்கான விடை கிடைக்கிறது.

எத்தனை வகையான நூல்கள், இயந்திரங்கள், துணிகள் ஆலைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன, ஏற்றுமதி இறக்குமதியில் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் நடக்கும் விளையாட்டுகள் என்ன, மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளால் இத்தொழில் எப்படி பின்னடைவை சந்தித்தது, தொழிலாளிகள் படும் சிரமங்கள், இடைத்தரகர்கள் செயல்பாடுகள், புதிய யுக்திகளை கையாள தடுமாறும் முதலாளிகள் நிலை  என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித்தந்து இருக்கும் ஜோதிஜி..உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்!!                                                             

19 முதல் 21-வது அத்யாயம் வரை சற்று அயர்வைத்தந்தாலும் சாயப்பட்டறைகள் குறித்து தனிக்கவனத்துடன் 22 முதல் 26 வது அத்யாயம் வரை எழுதப்பட்டு இருக்கும் பக்கங்கள் பிரமாதம்.

குடிப்பதற்கு ஏதுவான ஆறுகள் சாயக்கலப்பால் எப்படி சீரழிந்து போயின என்பதை நுட்பமாக அலசி இருக்கிறார் ஆசிரியர். இந்த அலசலால் அரசு, தனியார் நிறுவனங்கள் மீதான கறை  ஓரளவேனும் துடைக்கப்பட்டால் மகிழ்ச்சி. 

டாலர் நகரத்தின் குறை நிறைகள்:

தமிழ் ஆர்வலரான ஜோதிஜியின் இப்படைப்பில் எழுத்துப்பிழை ஆங்காங்கே இருப்பது வருத்தம். குறிப்பாக சில இடங்களில் பொருட்பிழைகள் இருப்பது உறுத்துகிறது. உதாரணம்: பக்கம் 84 நான்காவது பேராவில் உள்ள 'கோடடித்த',  பக்கம் 112 வரி மூன்றில் உள்ள 'பின்னாலாடை'. பிழை சரிபார்த்ததில் அதிக கவனம் செலுத்தாதது புருவத்தை உயர்த்த வைக்கிறது.

திருப்பூர் சார்ந்த புகைப்படங்கள் புத்தகத்தில் சரியான அளவுடன்(எண்ணிக்கையையும் சேர்த்து) இருப்பது நன்று. எனினும் உள்ளாடை தொழில் சார்ந்த சிறந்த புகைப்படங்களை தேர்ந்த புகைப்பட கலைஞர் உதவியுடன் எடுத்து இருக்கலாம்.  

முதல் சில அத்யாயங்களில் தமது தனிப்பட்ட போராட்டங்களை, ஆங்காங்கே தூவப்பட்ட தத்துவங்களை சுருக்கி பொதுப்பிரச்னைகளை மையப்படுத்தி  இருப்பின் நூலின் கோர்வை மேலும்  சிறப்பாக இருந்திருக்கும். முதல் 26 பக்கங்களுக்கு அணிந்துரை, ஏற்புரைகளே ஆக்கிரமித்து இருப்பது குறை.  'இன்டக்ஸ்' என்று அழைக்கப்படும் உள்ளடக்கம் 247 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் துவக்கத்தில் இல்லாதது ஆச்சர்யம்தான்.  

பெண் மற்றும் குழந்தை தொழிலாளிகள் உள்ளாடை உலகில் எப்படி கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சிற்சில பக்கங்களில் மட்டும் கடந்து 95% ஆண் தொழிலாளிகள் பற்றிய பகிர்வுகளே மையம் கொண்டிருப்பதும் குறைதான். அக்குறை நீங்கும் வண்ணம் அடுத்த நூலில் ஜோதிஜி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். காத்திருக்கிறேன்.

அதுபோல திருப்பூரின் பிரதான தொழில் மின்வெட்டால் எப்படி சீரழிந்து கிடக்கிறது என்பதையும் ஊறுகாய் போல ஆசிரியர் தொட்டுவிட்டு சென்றிருப்பது ஆச்சர்யமே. தற்காலத்தில் பூதாகர பிரச்னையாக இருக்கும் மின்வெட்டு குறித்து இறுதிப்பகுதிகளில் விலாவாரியாக எழுதி இருக்கலாம்.                                                                    

நிறைகள் என்று சொல்வதற்கு கணிசமான விஷயங்கள் டாலர் நகரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இயந்திர செயல்பாடுகள், பல்வேறு வகையான நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் என அள்ள அள்ள குறையாத தகவல்கள்/அனுபவங்களை ஜோதிஜி தனது வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி  இருப்பது அவரது அபார உழைப்பிற்கு எடுத்துக்காட்டு.

தளமான தாள்கள், சரியான அளவில் தகுந்த இடைவெளிகளுடன் இருக்கும் எழுத்துகள் சிறப்பு. விலை ரூ.190 என்பதால் வசதி குறைந்த வாசகர்களின் கைகளுக்கு இந்நூல் பெருமளவில் சென்று சேருமா எனும் கேள்வி  இருக்கத்தான் செய்கிறது.    

இறுதியாக...

இணையத்தில் மட்டுமே அடங்கி இருக்கவிருந்த இப்படைப்பை நூல் வடிவில் நமக்கு கொண்டு சேர்த்திருக்கும்  4 தமிழ் மீடியா இணையதளம் மற்றும் ஜோதிஜிக்கு தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களையும் மனமார பாராட்ட வேண்டும். 

நம்மில் பலர் நித்தம்(நெசமாத்தானா !?) அணியும் உள்ளாடைகளுக்கு பின்னே இருக்கும் நூற்றுக்கணக்கான பிரச்னைகள், தொழில்நுட்பங்கள், பண பரிவர்த்தனைகள் எத்தனை..எத்தனை. அதுகுறித்த போதுமான அடிப்படை அறிவை என் போன்ற சராசரி நபர்களுக்கு கற்பித்த காரணம் ஒன்றிற்காகவே   ஆசிரியருக்கு ஆளுயர பூங்கொத்தை அளிக்கலாம். நன்றிகள் பல ஜோதிஜி.

புளித்த ஏப்பம் விடும் மேட்டுக்குடிகள் பொழுது போக படிக்க ஒளிவட்ட எழுத்தாளன் எழுதித்தள்ளும் ஆகச்சிறந்த காவியமல்ல இது. 

சாமான்ய வாசிப்புத்திறன் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கு இன்னொரு பாமரன் தனது வியர்வைத்துளிகளால் நெய்திருக்கும் நூலோவியம். 

நன்றி மெட்ராஸ் பவன் சிவகுமார்

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க

ஒன்று           இரண்டு       மூன்று     நான்கு   விஜயா பதிப்பகம் கோவை.5 comments:

'பரிவை' சே.குமார் said...

சாமான்ய வாசிப்புத்திறன் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கு இன்னொரு பாமரன் தனது வியர்வைத்துளிகளால் நெய்திருக்கும் நூலோவியம்.

அருமையா சொல்லியிருக்கீங்க...

வவ்வால் said...

Jo,

i know this madras bhavan hotel, very famous for "set dosa &vada curry" n degree filter coffee. The owner of the hotel "sivakumar" very humourus person.

Thnks for sharing!

சாய்ரோஸ் said...

இதுவரை உங்கள் தளத்திற்கு வந்தபோதெல்லாம் 'டாலர் நகரம்' நூல் எப்படியிருக்கும், எதனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்று சில யோசனைகள் வந்தாலும், யோசித்திருக்கிறேன். இப்போது மெட்ராஸ் பவன் சிவாவின் விமர்சனத்தின் மூலம் எனக்கும் அதைப்படிக்கும் ஆவல் வந்திருக்கிறது. விரைவில் படித்துவிட்டு வருகிறேன்...

ஜோதிஜி said...

காத்திருக்கின்றேன்.

ஜோதிஜி said...

வாரக்கடைசி உச்சிக்கு ஏறி விட்டதோ?