Friday, October 28, 2016

தண்ணீர் மனிதர்கள் (தீபாவளி 2016)


2016 தீபாவளி (29.10.2016) 
ம் வாழ்க்கையில் நெருக்கடிகள் தோன்றும் போது நாம் எப்படிச் செயல்படுகின்றோம் என்பதனை வைத்தே நம் வாழ்க்கைப் பாதை அமையும். புரிந்தவர்கள் பட்டுத் தெளிந்தவர்கள் என்று அர்த்தம்.  பணம் சம்பாரிப்பது எளிது. பதவியைக் கைப்பற்றுவது கூடச் சாத்தியம்.

ஆனால் அதைத் தொடர்ச்சியாக தக்க வைத்துக்கொள்வது தான் முக்கியம். மற்றவர்களால் போட்டி போட முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் குறுக்கு வழிகளை கடைப்பிடிக்கும் போது உயர் பதவிகளில் இருப்பவர்கள் தனக்கான தகுதியை நிர்ணயித்தே ஆக வேண்டிய கட்டாயம்

ஒவ்வொருவருக்கும் உருவாகும்.  இது திருப்பூரில் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பண்டிகை கால சமயங்களில் நடக்கும் வாழ்வா? சாவா? போராட்டம் தான். 

ஆச்சரியம் ஒன்றுமில்லை.  தொழில் வாழ்க்கையில் கருணைக்கு இடமில்லை என்பதே அடிப்படை விதி.

திறமை உள்ளவர்களுக்கும், திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பாத வர்களும் இடையே நடக்கும் தர்மயுத்தம். டார்வின் கொள்கை தான் நினைவுக்கு வருகின்றது. வாழ்நிலையில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு. அதற்குப் பிறகே இங்கே வாழ முடியும். எந்தத் தத்துவமும் எடுபடாது. 

"உயிர்பிழைத்தல்" என்பது மற்ற அனைத்தையும் விட இங்கே முக்கியமானது. 

இதைப் போலவே ஒவ்வொரு நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடக்கும் இறுதிக் கட்ட யுத்தத்தில் உண்மைகள் ஒரு ஓரமாகக் கிடக்கின்றது. மனசாட்சி என்பது பணத்தின் முன்னால் நசுங்கிப் போய் விடுகின்றது.அதை யாரும் பொருட்படுத்துவதும்

கவலைப்படுவதும் இல்லை. 

ந்தத் தொழிலாளர்களும் தங்களின் நேர்மையான உழைப்பைக் கொடுக்க தயாராக இல்லை என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்கு எந்த நிறுவனமும் தற்போதைய உலகளாவிய போட்டிச் சூழலில் லாபகரமாகச் செயல்படவில்லை என்பதும் உண்மையே.

தொழில் நுட்பம் வளர வளர இங்கே ஒவ்வொருவருக்கும் "கவனச்சிதறல்" அதிகமாக உருவாகிக் கொண்டேயிருக்கின்றது.  தன் தவறுகளை எவரும் திருத்திக் கொள்ள தயாராக இல்லை. கொண்டாட்ட மனோநிலையில் தான் ஒவ்வொருவரும் வாழ விரும்புகின்றார்கள். எளிதாக உழைப்பில்லாமல் வாழ்வது என்பது குறித்து தான் ஒவ்வொரு யோசிக்க விரும்புகின்றார்கள். 

தன் "சுயபாதுகாப்பு" குறித்தே யோசிக்கின்றார்கள். நிறுவன வளர்ச்சியோ, சமூக வளர்ச்சி என்பதே இரண்டாம் பட்சமாகவே உள்ளது. 

"என் ஆதாயம் எனக்கு" என்ற நோக்கத்தில் தான் இங்கே ஒவ்வொருவரும் செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

திருப்பூர் முழுக்க இந்த முறை அளவு கடந்த கூட்டம். அலைந்து கொண்டேயிருக்கின்றார்கள். எதையோ வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.  தனக்கான தேவை என்ன? என்பதனைப் பற்றி யோசிப்பதும் இல்லை. எதிர்காலம் குறித்து கவலைப்படவும் இங்கே யாருக்கும் நேரமும் இல்லை. 

தெளிவாக யோசிக்கத் தெரிந்தவர்கள் சமகாலத்தில் முட்டாள்கள். 

எனது 25 வருட தொழில் வாழ்க்கை அனுபவத்தில் லட்சக்கணக்கான மனிதர்களைக் கையாண்டு இருக்கின்றேன். ஆச்சரியம், அதிசயம்,அவநம்பிக்கை என்று பலதரப்பட்ட உணர்ச்சிகள் வந்த போது எந்த மனிதர்களின் மீதும் வெறுப்பை உமிழ்ந்தது இல்லை.

காரணம் மனிதன் என்பவன் "சூழ்நிலைக் கைதி" என்பதனை தெளிவாக உணர்ந்து இருப்பதால் எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி உருவானது இல்லை. 

"பச்சோந்தித்தனமாக இருக்கின்றார்கள்" என்று பலரையும் குற்றம் சாட்டுகின்றோம். ஆனால் நண்பர் சொன்னார். அவர்"தண்ணீரைப் போன்றவர்". காரணம் தண்ணீர் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் அதன் வடிவத்திற்கு ஏற்பமாறிவிடும். இதனை இந்த முறை ஒருவரைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். 

ஆனால் மனிதர்களின் அடிப்படை குணாதிசியங்கள் தெரிந்த காரணத்தால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தன்னிடம் வாங்கித் தின்று, தன்னால் ஆதாயம் பெற்ற போதும் அவர்களின் குணாதிசியத்தை மாற்ற முடியவில்லை என்ற போது தான் மற்றொரு நண்பர் சொன்ன கருத்து என் நினைவுக்கு வந்தது. 

"எப்போதும் காளை மாட்டில் பால் கறக்க முயற்சிக்காதீர்". சிலரை மாற்ற முடியாது. அது தேவையும் இல்லை என்றார். பதவிகள் என்பது சிலருக்கு அமைந்து விடும். ஆனால் நல்லகுணாதிசியங்கள் என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது என்றார். 

எதனையும் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காதீர். நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அடிப்படைவிதியாக வைத்துக் கொள்ளுங்கள். 

பட்ட பின்பு வருவது தானே ஞானம். 

ண்டிகைகள் என்பது பலரும் ஆராய்ச்சிக்குரியதாக எடுத்துக் கொண்டு பல கேள்விகளை கேட்கின்றார்கள். ஆரியர்,திராவிடர் தொடங்கி பட்டாசு வெடிக்கும் போது பறவையினங்கள் பாதிக்கப்படும் என்பது வரைக்கும் பல கேள்விகளை எழுப்புகின்றார்கள். அந்த அளவுக்கு யோசிக்கத் தேவையில்லை.

வ்வொரு பண்டிகையும் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்தப் பண்டிகைகள் வைத்தே தங்கள்வாழ்வாதாரத்தை நகர்த்துகின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பரம் செய்து தங்களை நிலை நிறுத்திக்கொண்டவர்கள் என்ற பெரிய பட்டியலை எடுத்துக் கொண்டால் இவர்கள் அத்தனை பேர்களும் வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரங்களில் மட்டுமே லாபம் பார்க்கக்கூடியவர்கள். 

அவர்களுக்காக இது போன்ற பண்டிகைகளை வரவேற்கலாம்தானே? 

குழந்தைகள் வளரும் போது பண்டிகைகள் என்பது நமக்கு அந்நியப்பட்டுப் போகின்றது. அவர்களின் விருப்பமே மேலோங்கி நிற்கின்றது. வேடிக்கை மனிதர்களாகவே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இந்த முறையும் அப்படித்தான் உள்ளது. 

உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த இரண்டு கட்டுரையை நேரம் ஒதுக்கிப் படித்துப் பாருங்கள்.

திர்காலம் குறித்து நான் பலமுறை கவலைப்பட்டதுண்டு.  எப்படி மாறுதல்கள் உருவாகப் போகின்றது என்பதனை பல விதமாக யோசித்ததுண்டு?.  இவரும் யோசித்து உள்ளார்.  நிச்சயமாக உங்கள் (கல்லூரிக்குச் செல்லும்) வீட்டில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய கட்டுரையிது.


"மாவீரன் கிட்டு" படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 04.11.2016 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.ஏராளமான பத்திரிக்கை நண்பர்கள், முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற உள்ளது.  இது குறித்த விபரங்களை விரைவில் எழுதுகின்றேன்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்.

Sunday, October 16, 2016

கேள்விகளுக்கு இங்கே பதில் உண்டு?


சில மாதங்களுக்கு முன்பு அழைத்த நண்பரின் உரையாடலில் முக்கியக் கேள்வியைக் கேட்டு இருந்தார். நீங்கள் யார்? 

தமிழர் தேசியம் ஆதரவாளரா? 

ஹிந்து மத எதிர்ப்பாளரா? 

சாதியை மறைமுகமாக ஆதரிப்பவரா? 

இன்று மற்றொரு நண்பருடன் உரையாடும் போது எனக்குள் கேட்டுக் கொண்ட விடை தெரியாத கேள்விகளுக்குச் சில வெளிச்சம் உருவானது. 

மிழர்களுக்கான தேசியம் என்பது வெறும் வார்த்தைகளாகக் கடைசி வரை வாழும். அது எழுத்தாக, விமர்சனத்துக்குரியதாக, வார்த்தைகளாக மட்டுமே வாழும். காரணம் தகுதியான தலைமைப்பண்பு உள்ளவர்கள் இங்கே எவரும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகக்கூடுமா? என்பது பற்றி எனக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இனி வரும் காலங்களின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் களங்கள் செயல்பட வாய்ப்பில்லை. 

இதை வாசிக்கும் போது உங்களுக்குள் தோன்றும் எரிச்சலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது நீங்களும் நானும் நினைத்தே பார்த்திராத அத்தனை தளங்களை உடைத்துக் கொண்டே வருகின்றது. என்னைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒட்ட வைக்கப்பட்டுள்ள ஒன்று. டெல்லியின் பார்வையில் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஏன் நாளைக்குக்கூடக் கண்ணில் விழுந்த தூசி போல எரிச்சல் தரக்கூடிய சமாச்சாரம். 

எந்த உரிமையைப் பற்றிப் பேசக்கூடாது. பேசுபவர்களை அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அமைதியாக்கிவிடுவார்கள். அது தான் தொடக்கம் முதல் நடந்து வருகின்றது. காரணம் பணம் என்ற பலவீன அடிப்படையில் இங்கே எவரும் எதைப்பற்றியும் குரல் எழுப்பத் தகுதியில்லாதவர்களாக இருக்கும் வரையிலும் நாம் வாழும் வரையிலும் கற்பனைகளை மனதில் வைத்துக் கொண்டு நம் எல்லைக் கோடுகளைப் புரிந்து கொண்டு வாழ்ந்து இறந்து விடுவோம் என்பதே எதார்த்தம். 

மாற்றங்கள் உருவாகும். நாம் அப்போது இங்கே இருக்கப் போவதில்லை. காலம் தீர்மானித்துள்ள கணக்கு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர நாம் யார்? 

தம் என்பதனை முதலில் வெறுத்தேன். கால மாற்றத்தில் விரும்பினேன். மறுபடியும் மாற்றம் நிகழ்ந்தது. இப்போது வெறுக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. அதனைப் பார்வையாளராகப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டது. 

எனக்கான அடையாளம் நான் உருவாக்கியது இல்லை. பிறக்கும் போது அது ஒட்டி வைக்கப்பட்டு இதுவே இன்று வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அதனை மாற்றவும் முடியாது. மாற்றவும் விரும்பவில்லை. அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கான சமூக வாழ்க்கையில் என் தேடலில் மதம் சார்ந்த விசயங்கள் இல்லை என்பது தான் என் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதுகின்றேன். 

நான் பணிபுரியும் நிறுவன நிகழ்ச்சிகள், உறவுக்கூட்டங்களின் முக்கிய நிகழ்வுகள் போன்ற எல்லா நிகழ்வுகளில் பங்கேற்கும் போது ஒரு வேடிக்கையாளனாக என்னைக் கருதிக்கொள்கிறேன். 

என் புத்திக்கு அப்பாற்பட்டு, என் தனிப்பட்ட திறமைகளைத் தாண்டி கால மாற்றம் என்னை வேறு பாதைக்கு நகர்த்திச் செல்லும் போது, மன ஆறுதல் தேவைப்படும் போது தேவைப்படும் தெய்வ நம்பிக்கைகள் (அல்லது) பிரபஞ்ச சக்தி (அல்லது) ஏதோவொரு அப்பாற்பட்ட சக்தி ஏதோவொன்று நம்மை இயக்குகின்றது என்று உறுதியாக நம்புகிறேன். 

அதனை மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வர விரும்புவதில்லை. மதம் எனக்கு எதனையும் கற்றுத் தரவில்லை. அதில் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லை என்பது தான் என் தனிப்பட்ட கருத்து. 

சமூகம் தான் என்னை வழிநடத்துகின்றது. நல்லது கெட்டதும் கலந்து நிறைந்த இந்த மனிதக்கூட்டம் தான் மாற்றத்தை உருவாக்குகின்றார்கள். பாடங்களை உள்ளே இருந்து எடுக்காமல் புராண, இதிகாசங்களை நோண்டி நொங்கெடுப்பது என்பது வாழ்வின் கடைசிக் காலகட்டத்தில் செயல்பட முடியுமால் இருக்கும் போது வேண்டுமென்றால் மன அமைதிக்கு எடுத்துக்கொள்ளலாமே என்பேன். 

செயல்பட வாய்ப்பு இருக்கும் அத்தனை தளங்களிலும் ஏன் நம்மால் செயல்பட முடிவதில்லை? நமக்கான சிந்தனை என்பது மாறிக் கொண்டே இருப்பது? அதனை ஏன் நாம் மாற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது? நாளைய நமது மாற்றத்தைப் பற்றி நாம் யோசிப்பதைப் விட இன்றைய ஒரு நாள் கடமையை நாம் சரியாகச் செய்துவிடலாமே? 

"மனிதன் என்பவன் மகத்தான சல்லிப்பயல்" என்பது அடிப்படை ஆதாரம். இவர்களைத்தான் நாம் கையாள வேண்டும். இவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் உருவாக்கும் மாயவலை தான் மதம் என்ற அடையாளத்தை உருவாக்குகின்றது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுகின்றதை எடுத்துக் கொள்வோம். அதற்காக அது தான் நம் முக்கியத் தேவை என்பதை முட்டாள்தனமாகக் கொள்கையை விட்டு வெளியே வந்து நின்று வாழ்ந்து பார்க்கலாமே? 

சாதீய அடையாளம் என்பது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் அழிந்து போய் விடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உறுதியாக நம்பினேன். ஆனால் இன்று பிரமாண்டமாக விஸ்வரூபம் போல வளர்ந்து வருகின்றது. பலரும் அதனை வளர்க்கவே விரும்புகின்றார்கள். மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் உயர்கல்வி கற்றவர்கள், புலம் பெயர்ந்து பல இன மக்களுடன் வாழ்பவர்கள், அதீத திறமை கொண்டவர்கள் என்று அத்தனை பேர்களும் இதனை விட்டு வெளியே வர விரும்புவதில்லை என்பதனை கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். 

சற்றுப் பயமாக உள்ளது. நெருங்கிய நட்பு உடைபட்டு விடுமோ ? என்று யோசித்துள்ளேன். மாற்றுக் கருத்து என்பதனைக் கூடத் தனிப்பார்வையாகப் பார்க்க இங்கே யாரும் தயாராக இல்லை. இதற்குப் பின்னால் உரிமைகள் என்றொரு வார்த்தைகளைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். நீ சாதியை வைத்துத் தானே உனக்கான உரிமையைப் பெற்றாய்? உன் குழந்தைகளும் அதன் வழியே தானே கல்லூரிக்குச் செல்லப் போகின்றார்கள்? அனுபவிக்கும் போது ஆரத்தழுவி விட்டு இப்போது அட அசிங்கமே? என்று ஏன் சொல்கிறாய்? இது போன்ற பல கேள்விகள் என்னைத் தாக்குகின்றது, 

சாதியப் பார்வையில் பிராமணர்களை மையப்படுத்தி வந்த ஒவ்வொரு கேள்விகளும் இன்று வலுவிழந்து போய்விட்டது. ஆனால் நம்மவர்கள் இன்னமும் அதனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

இடை நிலை சாதி என்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்களோ அப்பொழுதே நியோ பிராமின் (நவ பார்ப்பனர்கள்) என்றொரு புதிய கூட்டம் உருவாக்க தொடங்கியது. இந்தக் கூட்டம் தான் இன்று சாதியை வளர்க்கின்றார்கள். வளர்க்க விரும்புகின்றார்கள். அதன் மூலம் கிடைக்க வேண்டிய ஆதாயத்தை அறுவடை செய்கின்றார்கள். அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம் என்று அத்தனை தளங்களிலும் இது தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

இது எப்போது மாறும் என்பதனை என்னால் யூகிக்க முடியவில்லை. 

ஆனால் தனக்கான ஒரு அடையாளம் என்பதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகமும் உருவாக்கி வந்தது. இன்று அதில் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. இவர் ஆசிரியர், இவர் தலைவர், இவர் நடிகர், இவர் எழுத்தாளர் என்ற மாயப் பிம்பம் உடைபட்டு விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்தையும் உடைத்துப் போட்டு விட்டது. 

யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகப் பலருக்கும் நடுக்கம் உருவாகின்றது. என் இடத்தை இவர் பிடித்து விடுவாரோ? என்ற இடைவிடாத போராட்டத்தில் சாதீயத்தை உள்ளே கொண்டு வருகின்றார்கள். அரசியலில் தொடங்கும் இந்த வெடிகுண்டு சமாச்சாரம் படிப்படியாகக் கோவில் வரைக்கும் வந்து நிற்கின்றது. 

எனக்கான தேவையை எந்தத் தெய்வங்களும் வந்து செய்யப் போவதில்லை. எனக்கான அங்கீகாரத்தை என் சாதி தரப்போவதில்லை. அப்படியே தொடக்கத்தில் தந்தாலும் அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர்ந்து அந்தச் சாதிய அடையாளம் காப்பாற்றித் தரப் போவதில்லை. என் இருப்பு என்பதும் எனக்குத் தேவைப்படும்அங்கீகாரம் என்பது என் திறமைகளின் அடிப்படையில், நான் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டு கையாள்வதன் அடிப்படையில் தான் உருவாகும். 

இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவன் எவனோ அவனுக்கு எந்த அடையாளமும் தேவைப்படாது. 

(இரண்டு படங்களும் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு கண்ணன் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி கண்ணன்.)

Thursday, October 06, 2016

விரும்பியபடி செயல்படு - மாவீரன் கிட்டு


திரைப்படத்துறையில் சார் என்ற வார்த்தை மிக முக்கியமானது. ரஜினி சார், கமல் சார், விஜய் சார் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சார் என்ற வார்த்தை தான் நம் காதில் விழும். அவரவர் இருப்பு மற்றும் மார்கெட் நிலவரம் பொறுத்து இந்த மரியாதை கூடும் குறையும். ஒரு தயாரிப்பாளரின் பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல தரப்பட்ட நிகழ்வுகளைப் பொறுமையாக ரசித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். 

சமயம் வரும் போது "டாலர் நகரம்" போல இந்த திரைப்படத்துறையில் இது வரையிலும் வெளியே தெரியாத பல விசயங்களைப் பற்றி எழுதுவேன். 

க்டோபர் 1 2016 மாலை வேளையில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நான் பணியாற்றும் நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஏசியன் சினி கம்பைன்ஸ்" (Asian Cine Combines) முதல் தயாரிப்பான "மாவீரன் கிட்டு" படத்தின் முன்னோட்டக் காட்சி (டீசர்) வெளியிட்டு விழா நடைபெற்றது. இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உடன் படத்தில் பங்கெடுத்த அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் ஆயத்த ஆடை நிறுவன தயாரிப்பான காலர் சட்டையை 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் (SPONSOR) அணிந்து கலந்து கொண்டனர். 

வாசிக்க, எழுத நேரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் எழுத்துப் பணி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஆனால் சமீப காலமாகக் குழந்தைகளுடன், மனைவியுடன் செல்ல சண்டை போட ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி வைத்து விடுகின்றேன். விழாவில் கலந்து கொண்ட (மாவீரன் கிட்டு படத்தின் கதாநாயகி) நடிகை ஸ்ரீதிவ்யா அணிந்த வந்த "முழு கருப்பு கவுன்" குறித்து மனைவியுடன் விஸ்தாரமாகப் பேச குழந்தைகள் நக்கல் நையாண்டியுடன் என்னுடன் சேர்ந்து மனைவியை ஓரண்டை இழுக்கக் கடைசியில் நான் வெள்ளைக் கொடியை பறக்க விட வேண்டியதாகி விட்டது. 

கேரளாவின் எந்தப் பகுதிக்குள்ளும் மகிழ்வுந்து பயணத்தின் போது ரசிக்கக் காடு சார்ந்த இடங்கள் நிறைய உண்டு. ஆனால் திருப்பூர் முதல் சென்னை வரை ஆறு மணி நேரப் பயணத்தில் பகல் நேரமாக இருந்தாலும் இரவு நேரமாக இருந்தாலும் ரசிக்க ஒன்றுமே இல்லை என்பது நிதர்சனம். பொட்டல் காடுகளும், ஒழுங்கற்ற நகர்ப்பகுதிகளும், பல இடங்களில் கும்மிருட்டும், அத்துவானக்காடும் என ரசிக்க முடியாத ஊராக தமிழ்நாடு மாறிக் கொண்ட வருகின்றது. சுங்கவரி என்பது ஒவ்வொரு மனிதரையும் ரத்தம் சுண்ட வைக்கும் கொள்ளைக்கூட்ட சாம்ராஜ்யமாக உள்ளது. இது குறித்து விரிவாக எழுத வேண்டும். 

டீசர் வெளியிட்டு நிகழ்வுக்குப் பலருக்கும் அழைப்பு விடுத்து இருந்தேன். விழாவில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த காரணத்தால் முழுமையாகப் பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் வாக்குறுதியைக் காப்பாற்றிய கார்டூனிஸ்ட் பாலா, உண்மைத்தமிழன் சரவணன், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் அகலிகன், ராஜா என சிலரை அவசர நேரத்தில் சந்தித்துப் பேச வாய்ப்பு அமைந்தது. 

ருகின்ற ஆயுத பூஜை அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒரு பிரிவான புதுயுகம் நிகழ்ச்சியில் மாவீரன் கிட்டு குறித்துக் கலந்துரையாடல் படப்பிடிப்பு நடந்தது. இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரோடு எங்கள் நிறுவன நிர்வாக இயக்குநர் தயாரிப்பாளர் ஐஸ்வேர் சந்திரசாமி அவர்களும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது.


ங்கள் நிறுவன படமாக இருந்தாலும் ஏற்கனவே பாடல் பதிவின் போது கேட்ட பாடலின் அடிப்படையில் நிச்சயம் இந்தப் படத்தின் பாடல் தமிழர்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும் என்று என் பார்வையை எழுதியிருந்தேன். அதே போல டீசர் வெளியிட்டு விழாவின் போது அந்த எண்ணம் இன்னமும் வலுவானதாக மாறியது. எப்பேற்பட்ட பிரபலமாக இருந்தாலும் ஒரு சிலருடன் தான் நம்மால் உண்மையான உணர்வுடன் பேச முடியும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். அவருடன் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் அவரை புரிந்து கொண்டது இப்படித்தான்.

எண்ணமும் செயலும் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்கும்படி தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கின்றார். மேடையில் ஏறி பேசிய போதும் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.  இந்த விழா குறித்து காணொலித் தொகுப்பை விரைவில் வெளியிடுகின்றேன்.

மாவீரன் கிட்டு டீசர் குறித்து விழாவின் சிறப்பு அழைப்பாளர் மெட்ராஸ் மற்றும் கபாலி பட இயக்குநர் பா. ரஞ்சித் பின்வருமாறு கூறினார். 


"  
நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்" என்றார். 

நீங்களும் இந்த முன்னோட்டக் காட்சியை பார்க்கும் போது புரியவரும்.