Sunday, June 24, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2


பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். மகள் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். என்னிடம் அழைத்துச் சொன்னார்கள். "என்ன படிக்க வைக்கப் போகின்றீர்கள்?" என்று கேட்டேன். "அது தான் எங்களுக்கும் தெரியவில்லை" என்றார். நான் எந்த ஆலோசனையும் அப்போது சொல்லவில்லை. 

ஏதாவது தேவை எனில் அழைக்கவும் என்று சொல்லியிருந்தேன். அதன் பிறகு அழைக்கவே இல்லை. 

சில மாதங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது மகள் சரியாகச் சாப்பிடுவதில்லை. தூங்கியே பல நாட்கள் ஆகி விட்டது. உடம்பு எலும்பும் தோலுமாக இருக்கின்றார் என்றார். அவர்கள் வீட்டுக்குப் பின்புறம் அரசு மேல்நிலைப்பள்ளி உண்டு. 

ஆனால் அதில் அவர்கள் சேர்க்காமல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளியில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பில் சேர்த்து இருந்தார்கள். காலையில் ஆறரை மணிக்குப் பள்ளி வாகனத்தில் சென்று இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்வார். 

காலையில் சாப்பிடுவதில்லை. மதியம் சாப்பாடு பாதி அப்படியே திரும்பி வந்து விடும். இரவு அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் பரிட்சைக்குப் படிக்க உட்கார்ந்தால் தூங்க பத்து மணிக்கு மேல் ஆகி விடும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மீண்டும் தயாராக வேண்டும். பத்தாம் வகுப்பில் தினமும் பரிட்சை. பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு என்றார்கள். மெட்ரிக் பள்ளியில் படித்தாலும் அந்தக் குழந்தைக்கு நகர்ப்புறத்தில் படிக்கும் குழந்தையைப் போல வெளிச்சம் இல்லை என்பதனை விசேடத்தில் பேசும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் அம்மா வேறுவிதமாக அலுத்துக் கொண்டார். 

இந்த வருடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் பார்த்து சொன்னேன். தயவு செய்து தனியார் பள்ளிக்கூடம் பக்கம் போக வேண்டாம். காரணம் உங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் என்ற பெயரில் கொள்ளைக்கூட்டம் போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆசிரியர்கள் எவரும் எனக்குத் தெரிந்து சிறப்பானவர்களாக இல்லை. நிர்வாகம் கொடுக்கும் 4000 சம்பளத்திற்குத் தகுந்த மாதிரி தான் ஆசிரியர்கள் இருப்பார்கள். மனமயக்கம் தேவையில்லை. 

வீட்டுக்குப் பின்னால் உள்ள பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றேன். சரி என்று சொல்லிவிட்டு சென்றவர் அதன் பிறகு அழைக்கவில்லை. நானும் மறந்து விட்டேன். 

நேற்று அழைத்து இருந்தார். அவர் மகள் படித்த தனியார் பள்ளிக்கூடமே வீட்டுக்கு வந்து 400 மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் பாதிக் கல்விகட்டணம் கட்டினால் போதும் என்று மண்டையைக்கழுவி அங்கேயே அன்றே அவர்களாகவே சேர்த்து விட்டார்கள். மொத்தத் தொகை எவ்வளவு என்றேன். பதினோராம் வகுப்பிற்கு 60,000 கட்ட வேண்டுமாம். ஆனால் இவருக்கும் 30,000 போதும் என்றார்களாம். 

அடப்பாவிகளா? திருப்பூரில் உள்ள மொத்த தொகையைப் போல இரண்டு மடங்காக இருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டேன். 

இதையெல்லாம் விடக் கொடுமை நீட் பரிட்சைக்கு இவர்களிடம் கேட்காமல் பெயரைச் சேர்த்துள்ளார்கள். 30,000 என்று சொல்லி அனுப்பி உள்ளார்கள். இவர்கள் பதறி கதறிக் கொண்டு போய் அய்யா சாமி எங்கள் புள்ள டாக்டராகப் படிக்க ஆசையில்லை. அதை எடுத்துடுங்க என்று சொல்லியிருக்கின்றார்கள். 

டாக்டர் இல்லை என்றால் என்ன? பொது அறிவு வளர வேண்டாமா? என்று சொல்லி திகிலூட்டியிருக்கின்றார்கள். 

நீதியும் பழமொழியும். 

அப்போது  - கந்தையானாலும் கசக்கி கட்டு 

இப்போது -  கௌரவம் காக்க தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு கண்ணீர் விடு.

எனது பத்தாவது மின் நூல் (தரவிறக்கம் செய்ய)

50 வயதினிலே

Friday, June 15, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்

இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்டத்தில் அங்கத்தினராக இருப்பவர்கள். 

1. அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். 24 மணி நேரமும் மொபைல் போனை நோண்டிக் கொண்டே இருக்கிறாள். சொன்னால் கேட்கவே மாட்டுறா? என்றாள். மகளைப் பார்த்தேன். நீங்களே சொல்லுங்கள்? தினமும் 1.5 ஜிபி இலவசமாகக் கொடுக்குறாங்க. வீணாப் போயிடாதா? இந்த அப்பாவுக்குப் புரியவே மாட்டுது என்றார். 
••••••• 
2. மகள் ரூபாய் 4000 க்கு அருகே உள்ளே ஆங்கில வழிக்கல்வியில் ஆசிரியையாகப் பணிபுரிகின்றார். அப்பாவுக்கும் மகளும் தினமும் சண்டை. உன்னோடு படிச்சவங்க சென்னை, பெங்களூரென்று கிளம்பிப் போய் எப்படிச் சம்பாறிக்குறாங்க. இவ இதை விட்டுக் கிளம்பவே மாட்டுறா? இவளுக்கு 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். நான் இனி மாப்பிள்ளை பார்க்கனும்ன்னா நகைக்கு எங்கே போறது? 

மகளைப் பார்த்தேன். 

+2 முடித்தவுடன் நான் விரும்பிய ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பாமல் விழுப்புரம் அருகே உள்ள பொட்டைக் காட்டுக்குள் உங்களை யார் கொண்டு போய்ச் சேர்க்கத் சொன்னது? நான் வெளியே எங்கேயும் வேலைக்குப் போக மாட்டேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு என் உயிரை எடுப்பானுங்க. எனக்கு இந்த வேலை புடுச்சுருக்கு. நிம்மதியா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்துடலாம். நீங்க மாப்பிள்ளை பாருங்கள். கஷ்டம்ன்னா சொல்லுங்கள் நானே லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறேன். 

அப்பா கத்திய கத்தலில் சென்சார் செய்யப்பட்டாலும் வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். 

•••••••••••••• 
3. மகன் விருப்பத்தை மீறி இதற்குத்தான் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்குன்னு எல்லாரும் சொல்கிறார்கள் என்று கணினி சார்ந்த துறையில் மகனைத் தனியார் கல்லூரியில் சேர்த்தார் அப்பா. மகனின் குணாதிசியம் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும். அவன் ஒரு எந்திரப் பிரியன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பைக் கில் ஏதாவது பிரச்சனை என்றால் அவனே கழட்டி மாட்டி விடுவான். அவன் மெக்கானிக்கல் விருப்பத்தையும் மீறி கணினித் துறையில் சேர்த்து விட்டார். பாதிப் படித்துப் பாதி முடியாமல் இப்போது அவனுக்குப் பிடித்த ஒர்க் ஷாப் வேலைக்குச் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றான். அப்பா தினமும் கத்திக் கொண்டிருக்கின்றார். 
•••••••••••••••• 

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் மனைவியிடம் வந்து உங்களுக்கு மேக்கப் போட பிடிக்காதா? என்று கேட்டது அந்தக் குழந்தை. எப்படி ஆடைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படி ஐ புரே தடவ வேண்டும் என்று பாடம் நடத்தியது. மிரண்டு போனேன். இத்தனைக்கும் அவர்கள் அப்போது எந்த நாகரிமும் எட்டிப் பார்க்காத கிராமம். எப்படி இந்தக் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியும்? என்று யோசித்ததுண்டு. எப்போதும் போல அப்பனும் ஆயியும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் ஈஈஈ படிப்பில் சேர்த்து விட்டார்கள். ஏழெட்டுப் தாள்களை வைத்துக் கொண்டு இப்போது சென்னையில் பணிக்குச் சென்று விட்டார். சம்பளம் பத்தாயிரம். விடுதி உணவுக்கு 4000 போக மீதிப் பணத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கின்றார். அப்பனும் ஆத்தாளும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 
••••••••••••• 

5. அவர்கள் குடும்பத்தில் அவன் தான் முதல் தலைமுறை பட்டதாரி. அப்பாவும் அம்மாவும் படிக்காதவர்கள். தன் ஊரை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். ஊருக்குள் வேலை பார்ப்பவர்கள். ஒரே மகன். ஆனால் மகனை மகள் போலவே வளர்த்துத் தொலைத்து விட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்து வேலை உடனே கிடைக்கும் என்று பாலிடெக்னிக் கொண்ட போய்ச் சேர்த்தார்கள். யாருடனும் பேச மாட்டான். வீட்டுக்கு ஓட்டமாக ஓடி வந்து விடுவான். 

மறுபடியும் ஈஈஈ யில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். உறவுக்கூட்டம் இதற்கு உதவியது. படித்து முடித்து நான் பரிட்சை எழுதி பெரிய இடத்திற்குச் சென்று விடுவேன் என்று சொன்னதை நம்பி கடன் வாங்கிக் காசை இறைத்தார்கள். ஆனால் திருச்சி தாண்டி வேறு ஊர் என்றால் செல்லமாட்டான். ஒரு முறை சென்னை சென்று விட்டு வந்தவன் மூன்று நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தானாம். காரணம் கேட்ட போது சென்னையில் பேசுற தமிழே புரியவில்லை என்றானாம். 

இப்போது நான் ஊரே விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்ற சொல்லி எல்ஐசி முகவராக மாதம் பத்தாயிரம் வருமானத்தில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார். பெண் கிடைப்பது தான் பெரிய குதிரைக்கொம்பாக இருக்கின்றது என்றார் அம்மா. 

இதை எழுதுவதற்குக் காரணம் நீட் பரிட்சை எதிர்ப்பில் ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்கள் மூலம் சுரண்டப்பட்டு இருக்கின்றது என்று. 

அப்படியே பி.ஈ பக்கம் வண்டியைத் திருப்பினால் ஒரு மாணவர் குறைந்த பட்சம் 4 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கடந்த பத்தாண்டுகளில் படித்து முடித்து வேலை இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றவர்கள், இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், முழுமையாக முடிக்காதவர்கள் என்பவர்களின் பட்டியலிட்டுப் பார்த்தால் பல லட்சம் கோடி ரூபாய் யார் வீட்டுக்குச் சென்று இருக்கும் என்பதனை ரயிலில் வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன். 

தமிழகத்தில் அரசியலில் சம்பாரித்ததை, முதலீடாக மாற்றி, கல்வித்தந்தைகள் அதிகமாகி அவர்கள் மூலம் தமிழ்க்குழந்தைகளுக்கு எளிதில் கிடைத்த பி.ஈ என்ற வார்த்தையை நான் மேலே சொன்னவர்கள் அசிங்கமாகத்தான் உச்சரிக்கின்றார்கள் என்பது தனிச் செய்தி. 

ஊருக்கு வெளியே பொட்டைக்காடு. பாதிப் பட்டா நிலம். மீதி தானாகவே இருக்கும் செல்வாக்கு வைத்து சுரண்டிக் கொண்ட நிலம். முதல் வருடம் ஒரு தளம். கல்லூரியின் கட்டமைப்புக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சம்பளம் தகுதி குறித்தும் கவலையில்லை. 

ஐந்து வருடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் போன்ற வளர்ச்சி. அடுத்தச் சில வருடங்களில் கிளைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று தொடங்கிக் குறைந்தபட்சம் 50 முதல் 500 ஏக்கர் வரைக்கும் சுனாமி போலச் சுருட்டியவர்கள் அனைவரும் இன்று இந்நாள் முன்னாள் அமைச்சர்கள். அமைச்சர்களுக்கு உதவியவர்கள், சொந்தக்காரர்கள் என்று பட்டியலிட்டால் தமிழகத்தில் ஃபேர்ப்ஸ் பத்திரிக்கைக்குத் தெரியாத பத்தாயிரம் பேர்களாவது தமிழகத்தில் இருப்பார்கள். தமிழகத்தில் கல்வி என்பது முழுமையாகச் சுரண்டல் தொழிலாக மாறி விட்டதால் முன்னே பின்னே இருக்குமே தவிர ஒருத்தனும் மாணவர் நலன் என்று பேச யோக்கியதை இல்லாதவனாகத்தான் இருக்கின்றான். 

இப்போது தான் அண்ணா பல்கலைக்கழகம் பி.ஈ படிப்பைக் கணினி வழியே ரேண்டம் எண் வழியே முறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்ததும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அலறினார்கள். காரணம் அடிமடியில் சூடு வைத்தால் பொறுக்க முடியுமா? 

பாவம் வசதியில்லாதவர்களும், கிராமப்புறம் சார்ந்த மாணவர்களும். உருவாகும் ஒவ்வொரு மாற்றமும் அவர்களைத்தான் நேரிடையாக மறைமுகமாகத் தாக்குகின்றது. அவர்கள் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக மாற்றுகின்றது. அவர்கள் மீண்டு வருவதற்குள் இங்கே மாண்டவர்களின் எண்ணிக்கை பட்டியலிட்டு பார்க்க முடியாத அளவிற்கு நீண்டதாக இருக்கப் போகின்றது. 

Thursday, May 10, 2018

50 வயதினிலே 7

நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் எப்படி மாறியுள்ளது என்பதனை எனக்குப் புரிய வைத்தது. 

சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அவர் முதலாளியின் அறைக்கு முன் காத்துக் கொண்டிருந்தார். 

அவர் கட்டாயம் மாதத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து விடுவார். பாதி நாட்களுக்கு மேல் தாமதாகத்தான் வந்து சேர்வார். பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல நிர்வாகம் இறுதி எச்சரிக்கை கொடுத்தது. அப்போது தான் அவரின் குடும்பச் சூழ்நிலை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது. 

அவர் மனைவியும் வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்க இவர் தான் அவர்களின் மகன், மகளின் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக இருந்துள்ளார். இது இயல்பானது தான். ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்குச் செல்லும் போது யாரோ ஒருவர் மற்ற பொறுப்புகளைப் பார்ப்பது இயல்பானது தான் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தைகளின் மருத்துவமனை, பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலும் இவர் மட்டும் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் மனைவி அலுவலகத்தில் விடுப்பு அனுமதிக்க மாட்டார்கள் என்றார்கள். 

எங்கேயோ பிசிறு தட்டுகின்றதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் நான் அவரிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. 

மீண்டும் ஒரு முறை பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். மதியம் தான் வருவேன் என்று அலைபேசி வாயிலாக அனுமதி கேட்ட போது நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மனைவியிடம் அழைத்துப் பேசிய அலுவலகப் பெண்மணி என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நிகழ்காலத்தின் மாறிய சூழலின் வேறொரு பரிணாமத்தை எனக்குக் காட்டியது. "என் பொண்ணும் பையனும் எனக்கிட்ட ஒட்டவே மாட்டார்கள். அவருதான் ஆரம்பத்திலேயிருந்து அவங்களைப் பார்த்துக்குறாரு. நான் கண்டு கொள்வதே இல்லை. அதனால் தான் அவர் லீவு எடுக்கிற மாதிரி ஆயிடுது" என்று அவர் சொன்ன போது தான் அம்மா என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள பாசம், பிரியம் போன்றவை எப்படி மாறியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. 

இதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் குணாதிசியங்கள் சார்ந்த பலவிசயங்கள் இருந்தாலும் முழுமையாகப் பொறுப்புகளைத் துறப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாக எனக்குத் தெரிந்தது. இதே போல மனைவி பணிபுரிய கணவன்மார்கள் வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கெட்டழியும் போக்கும் உள்ளது. 

வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரம் மிக முக்கியம். ஆனால் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றை இழந்து கொண்டே வரும் நிலையில் தற்போதைய குடும்ப வாழ்க்கை உள்ளது. 

குழந்தைகளைக் கவனிக்க முடியாமலும், கற்றுக் கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியாத போது குழந்தைகள் தீவாக வளர்கின்றார்கள். கடைசியில் பலவற்றை இழந்து சிலவற்றைப் பெறும் வாழ்க்கை அமைகின்றது. அதுவே வாழும் முறையாகவும் மாறிவிடுகின்றது. 

•••••••••• 

"என் மகனின் கணினி அறிவு பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே? அவன் ஒரு கில்லாடி சார்? என்று எப்போதும் என்னிடம் வந்து சொல்லும் அலுவலக நண்பர் அன்று சோகத்துடன் வந்து பகிர்ந்த செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள கணினியை தொடக்கத்தில் விளையாட்டு, படிப்பு என்று பயன்படுத்தி வந்தவனுக்கு நண்பர்களின் வழிகாட்டல் வழியை மாற்றியுள்ளது. நேரம் காலமின்றி நீலப்படங்களின் ரசிகனாக மாறியிருப்பதை எதிர்பாராத விதமாக நண்பரின் மனைவி கண்டறிந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டார். 

அதன்பிறகு எப்படி அவனை மீட்டார்கள் என்பது குறித்து நாம் இங்கே பேசப்போவதில்லை. 

தொழில் நுட்பங்கள் தந்த வளர்ச்சி எதுவும் தவறில்லை என்ற கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. வயதும், வளர்ச்சியும் படிப்படியாக நிகழ்பவை. ஆனால் இப்போதுள்ள சூழல் குழந்தைகளின் அடிப்படை குணாதிசியங்களை மாற்றுகின்றது. பஞ்சு போன்ற மனதில் நஞ்சு கலந்து விட வாழ வேண்டிய வயதில் கருகிவிடுகின்றார்கள். 

அவரவர் கையில் வைத்துள்ள அலைபேசி என்பது நாசகார ஆயுதமாக மாறியுள்ளது. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற புரிதல் இல்லாத காரணத்தால் அசிங்கங்களைச் சிங்கமெனக் கருதிக் கொள்கின்றார்கள். கல்விக்கென்று ஒரு வயது. கலவிக்கென்று ஒரு வயது என்பது தலைகீழாக மாறும் போது இங்கே ஒவ்வொரு நாளும் வக்கிரம் அரங்கேறுகின்றது. வயதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லாத நிலையில் அது நேரிடையாகவே குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கின்றது. 

நம் வாழ்வில் ஒரு லட்ச ரூபாய் என்பது நம் உழைப்பின் மூலம் பெற்றுச் சேமிப்பது என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால் இன்று கல்லூரி நுழைவதற்கு முன்பே மகனின் பைக் ஆசையை நிறைவேற்றுபவர் அதிகம். நரம்புகள் முறுக்கேற, நிலையில்லாத சிந்தனையோட்டத்தில் அவன் மட்டும் அழிவதில்லை. கூடவே பலரையும் காவு வாங்கி விட்டே செல்கின்றான். இந்த மாற்றங்கள் எதுவும் முன்பு எப்போதும் நிகழ்ந்தது இல்லை. 

•••••••• 

ஒரு நாள் என் மகள் எங்கள் மிஸ் அலைபேசி எண் என்று சொல்லி என் அலைபேசியில் சேமிக்கச் சொல்லியிருந்தார். எதற்காகவது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைத்தேன். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது அவரின் மிஸ் உருவாக்கிய வாட்ஸ் அப் குரூப் ல் இவரும் ஒரு அங்கத்தினராக மாறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டு நான் உள்ளே வந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு இதுவே முக்கிய வேலையாக இருந்தது. கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் எடுத்துப் பார்த்த போது ஒன்றுக்கும் உதவாத, அரட்டைச் சமாச்சாரங்களும், அவரவர் நடிகர்களின் வீர தீர பிரதாபங்களும் மீம்ஸ்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 

இவர்களைக் குறைசொல்வதை விடக் குழுமத்தில் சேர்த்த ஆசிரியை அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். அன்றொரு நாள் காலாண்டு தேர்வு முடிவுகள் என்று சொல்லி பெற்றோர் வந்து கையொப்பமிட வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நூறு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் சந்திக்க விரும்பிய ஆசிரியை அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். 

அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன். 

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால். 

அப்படியென்றால் இங்கு நல்லதே இல்லையா? என்ற கேள்வி வரும். நல்லது நிறைய உள்ளது. நம்பமுடியாத வாய்ப்புகளை வழங்கத் தயாராகவே உள்ளது. ஆனால் அதனைச் சுற்றிலும் உள்ள கெட்டவைகளை கடந்து வரவேண்டிய கட்டாயச் சூழலும் தற்போதைய குழந்தைகளுக்கு உள்ளது என்பதனை நாம் உணர்ந்து இருக்க வேண்டும். 

கல்வி பரவலாக்கப்படாமல் இருந்த காலகட்டத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விட்டு இறங்கினால் நம் குழந்தைகள் சந்திக்கும் ஒவ்வொருவரும் போட்டியாளர்களாகத்தான் தெரிகின்றார்கள். மனிதாபிமானம் அறவே தேவை இல்லை என்று ஆழ்மனதில் உருவாவது இந்த இடத்தில் தான். முறைப்படியான வாய்ப்பு வழங்காமல் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் வாழ்வில் தோற்றவர்களின் பட்டியல் இங்கு வெகு நீளம். 

குடும்ப வாழ்க்கையில் முக்கிய அங்கத்தினராக இருக்கும் மகன், மகளின் விருப்பங்கள், தேவைகள் என்று பாரபட்சமின்றி இப்போதைய பெற்றோர்களால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. இதுவே எதுவும் எளிதில் கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. கிடைக்காத போது தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள். 

பதின்ம பருவம், வளரிளம் பருவம், வளர்ந்த பருவம் என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்வோம். 

எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என்ற நிலை என்பது ஒரு இளைஞனின் வாழ்வில் முதலில் வரும். கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நானும் முயற்சித்தும் பார்ப்பேன் என்ற இரண்டாவது நிலையில் தான் அனுபவம் தன் பாடங்களை நடத்தத் தொடங்குகின்றது. மூன்றாவது நிலையில் என் அப்பா கோபக்காரர் ஆனால்? என்று தன் தந்தையைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கின்றது. 

அந்த நிலையில் நிச்சயம் கல்லூரி வாழ்க்கை முடித்து அவர்களுக்குண்டான வாழ்க்கையைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குள் பெற்றோர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவம் சரியாகத் தெரியாவிட்டால் ஒவ்வொரு நாளும் மரணக்குழிக்குள் இறங்கி ஏற வேண்டியதாக இருக்கும். 

கிராமச் சூழலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை நகர்ப்புறத்திற்கு மாறினாலும் அவர்கள் பெரும்பாலும் மனதளவில் கிராமவாசிகளாகவே வாழ்கின்றனர். சிந்தனை, நோக்கம், செயல்பாடுகள் என்று அனைத்திலும் கிராமத்தின் தாக்கத்தை ஏதோவொரு நிலையில் பார்க்க முடியும். ஆனால் கிராமம் என்றே தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையென்பது முற்றிலும் புதிது. 

வீட்டில் அரிசி சாப்பாடு என்றால் பணக்காரர் என்று பார்த்து வாழ்ந்த வாழ்க்கையில் இன்று அரிசி சாப்பாட்டை உங்கள் நோய்க்காகக் குறைத்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு உணவு முதல் உடைகள் வரைக்கும் மிதமிஞ்சி அனுபவிக்கும் நிலையில் இருக்கும் அந்தக் காலம் போல வராது. இப்ப எல்லாமே மோசம் சார்? என்பதைச் சொல்ல முடியுமா? 

ஒவ்வொரு ஐம்பது வயதுக்காரர்களும் இருபது வயதுக்குள் இருப்பவர்கள், அதனைக் கடந்து வாழ்பவர்கள் என்று அடுத்த இரண்டு தலைமுறைகளுடன் வாழ்ந்தே ஆக நிலையில் உள்ளனர். ஐம்பதைக் கடந்தவர்களின் அறிவென்பது இருபதைக் கடந்தவர்களுக்கு விளங்க முடியாததாக இருக்கும். அதுவே இருபதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.

இந்த இரண்டையும் கடந்து வரத் தெரிந்தவர்களுக்கும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை புரிந்தவர்களுக்கும் தலைமுறை இடைவெளி பெரிய அளவு பாதிப்பை உருவாக்காது. இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் சிறுசுங்க எல்லாம் எங்கே நம்ம பேச்சை கேட்குது என்ற புலம்பல் மொழி கட்டாயம் வரத்தான் செய்யும். 

இறுதியாக

இங்கு எல்லாமே என் சொந்தம். கடைசி வரைக்கும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் முன்பு குடும்பத்தை வளர்க்க உதவியது. அதுவே இப்போது குடும்பங்கள் பிரிவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 15 வயதில் என் உரிமை இது? என்று பேசத் தொடங்கும் குழந்தைகளிடம் உங்கள் உரிமைகளை வார்த்தைகளாகப் பேசாதீர்கள். உரிமை என்பதற்கும் கடமை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். செயல் தான் முக்கியம். 

என் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் குழந்தைகளிடம் உடனே எதையும் புரிய வைக்க முயலாதீர்கள். அவர்களுக்குக் காலம் கற்றுக் கொடுக்கும் நேரம் வரவில்லை என்பதனை சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். 

இப்போது நேருக்கு நேர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவரவர் குழந்தைகளின் பத்து வயதிற்குள் முடிந்து விடுகின்றது என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். சுருங்கிய உலகத்தில் மனமும் சுருங்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆசிரியர்களைத் தேடவில்லை. அறிவுரை தேவையில்லை. அவர்களுக்கான உலகத்தில் வாழ அவர்கள் தான் அவர்களின் தேவையைக் கண்டறிய முடியும். 

இவையெல்லாம் மாயம் என்பதனை அவர்கள் உணர பலசமயம் உங்கள் வாழ்க்கை முழுமையையும் அவர்களுக்காகப் பணயம் வைத்து ஆக வேண்டும். அது போன்ற சமயங்களில் அதற்காக உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து அவர்களுக்காகக் காவு கொடுத்து விடாதீர்கள். செல்வம் இருந்தாலும் ஆரோக்கியம் இழந்து நடைபிணமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள். 

காலம் மருந்து போடும். 

"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்.

( பயணம் முடிவடைந்தது. தொடர் வாசிப்புக்கு நன்றி)


50 வயதினிலே 5

50 வயதினிலே 6

Tuesday, May 08, 2018

50 வயதினிலே - 6

அப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும் நான் யோசிப்பதுண்டு. நம்பிக்கைகளுடன் தொடங்கும் திருமண வாழ்க்கை அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றி அடைந்ததாகச் சொல்லி விட முடியாது. முன்பு வெளியே தெரியாமல் இருந்தது. இப்போதும் அனைத்தும் வெளியே வந்து விடுகின்றது. 

பொருத்தங்கள் என்பதனை அவரவர் நம்பிக்கைகள் வைத்துத் திருமணத்திற்கு முன்பு பார்த்தாலும் வாழும் சூழல் என்பதும், அவரவர் வளர்ந்த விதங்களின் காரணமாகப் பொருந்திப் போவதில்லை. பணம் இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுக்காத தம்பதியினரும், எல்லாமே இருந்தும் வெவ்வேறு துருவமாக வாழும் வாழ்க்கை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம். 

தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகின் மறுபுறம் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அடுத்த நொடியில் நம் பார்வைக்கு வந்து விடும் இந்த நேரத்தில் அந்தரங்கம் என்பதே இல்லாத சூழலில் நம் அனைவரின் செயல்பாடுகளும் ஏதோவொரு வழியில் வெளியே வந்து விடுகின்றது. பொத்திப் பொத்தி பாதுகாத்த குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் ஏதோவொரு சமயத்தில் பொது வெளிக்கு வந்து விடுகின்றது. திருமணம் முடிந்து சில வருடங்களில் அவரவர் குணாதிசியங்கள் முழுமையாக வெளியே தெரியத் தொடங்கும் சமயத்தில் தான் குழந்தைகள் குடும்பத்தில் வந்து சேர்கின்றார்கள். 

அரசியல், நிறுவனம், அமைப்புத் தொடங்கிக் குடும்பம் வரைக்கும் நம் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் எவரோ? அவர்களைத் தான் நாம் விரும்பச் செய்கின்றோம். நாம் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அனுமதிக்கவும் மாட்டோம். இது நேற்று இன்றல்ல. வாழையடி வாழையாக வந்த மரபு சார்ந்த பிரச்சனை. ஆனால் உலகம் வளர்ந்ததும், வளர்ந்த உலகத்தில் மாறிய நாகரிகத்திற்கும் முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியக் காரணமென்பது மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதே. 

மற்ற நாடுகளை விட நம் குடும்ப அமைப்பு வலிமையானது, நெறிமுறையான வாழ்க்கையை நமக்குத் தந்தது என்பதனை நாம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் இந்த வலிமை என்ற வார்த்தைக்குள் வெளியே தெரியாத அடக்குமுறை இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தான் காலம் காலமாக இந்த அமைப்பைக் கொண்டு செலுத்திக் கொண்டு வந்தது. "அப்பா சொன்னது தான் இறுதி முடிவு" என்ற நிலையில் இருந்த குடும்ப வாழ்க்கை இப்போது மாறி விட்டது. "அம்மா முடிவெடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்பது இப்போது பாரபட்சமாகப் பார்க்கப்படுகின்றது. 

காலம் ஒவ்வொரு சமயத்திலும் பலவிதமான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே தான் வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழல் கடந்த எந்த நூற்றாண்டிலும் கண்டிராத மாற்றங்களை, நம்பமுடியாத ஆச்சரியங்களைக் கொண்டு வந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. கடந்து சென்ற மாற்றங்கள் அனைத்தும் மனித மூளையின் மூலம் நடந்தது. இப்போது எந்திரங்கள் மூலம் நடக்கின்றது. 

சிலருக்குப் புரட்சியாகப் பலருக்கு மிரட்சியாக உள்ளது. ஆச்சரியமாகத் தெரியும் பல மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அவலமாகவும் தெரிகின்றது.. எது சரி? எது தவறு? என்பதனையெல்லாம் மீறி இவையெல்லாம் எனக்குத் தேவை? இது என் பார்வையில் சரிதான் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றோம். நடந்த மாற்றத்திற்கு யாரோ ஒரு தலைவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதில் பொது நலம் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நபரும் மாற்றத்திற்கான காரணமாக இருக்கின்றார்கள். 

சூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது. மாற்றங்கள் என்ற பெயரில் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றிலும் உள்ள சுயநலம் உள்ளே இருப்பதைத் தெரிந்தே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் நமக்கான வாய்ப்பைத் தேடுகின்றோம். அதையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கின்றோம். இது நேரிடையாக மறைமுகமாக ஒவ்வொருவர் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை உருவாக்குகின்றது. 

இங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது. 

எதனால் இது நடந்தது? என்பதனை யோசிக்கும் முன்பு இருப்பதை இழந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. உழைப்பு என்பதின் வரையறை மாறியுள்ளது. முடிவெடுக்கும் திறனில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது என்று அறிவுரையாகப் போதிக்கப்படுகின்றது. முதல் முடிவு மாறும் போது அடுத்த முடிவுக்குச் செல்ல வேண்டும் என்று பாடங்களை உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சோர்ந்து போனவன் பின்னுக்குச் சென்றுவிடக் காரணக் காரியத்தைச் சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனின் உலகமாக மாறியுள்ளது. 

இந்த இடத்தில் தான் மற்றொரு பிரச்சனை உருவாகின்றது. நம் தாத்தா அப்பாவைக் குறை சொன்னார். அது அப்பாவின் அணுகுமுறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று நாம் மகன்,மகள்களைக் குறை சொல்கின்றோம். அது அவர்களின் மாறிய பழக்கவழக்கங்கள் குறித்தே இருக்கின்றது. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது, 

ஐம்பது வயதாகியும் கற்ற அனுபவங்கள் எதுவும் நமக்கு உதவவில்லையே? என்ற ஆதங்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமலும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒன்று சேர்ந்து அழுத்தச் சமாளிக்க முடியாமல் தடுமாறத் தொடங்குகின்றோம். 

தலைமுறை இடைவெளி என்பது எல்லாச் சமயங்களிலும் உருவாகின்ற ஒன்று தான். ஆனால் மாற்றத்தின் காரணமாக உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் பின்னாலும் ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. நான் முக்கியம். என் வாழ்க்கை மற்ற அனைத்தையும் விட முக்கியம். இந்தக் கேள்வி குடும்பத்தில் உருவாகும் போது, மகள், மகள் வாயிலிருந்து வார்த்தைகளாக வரும் போது தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தான் தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கின்றது. 

சுதந்திரம் என்ற பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. அதன் வரையறை குறித்து யாருக்கும் கவலையில்லை. 

இங்கேயிருந்து உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கையில் அதிகளவு தடுமாற வைக்கின்றது. காரணம் நம் வாழ்க்கை முறையின் அமைப்பு அந்த அளவுக்கு நேசம், பாசம் போன்ற வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கலந்திருப்பதால் அதன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் மரண வாதையாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்குரிய சொத்துக்களை மட்டும் சேர்ப்பதில்லை. அதில் ஒரு அங்கமாகக் குழந்தைகளையும் வைத்துள்ளனர். 

அவர்கள் திருமணம் ஆகி வேறோர் இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெற்றோர்களுக்கு மரணம் வரைக்கும் பழி சொல்லாகவே உள்ளது. இந்த வாழ்க்கை முறையில் தான் தற்போது உருவாகியுள்ள மாற்றங்கள் பேரிடியை நிகழ்த்தி உள்ளது. 

குறிப்பாகப் பெண்கள் குறித்த பார்வையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் சிந்தனைகள் மாறிய சூழலில் காலாவதியாகி விட்டது என்பதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். பெற்றோர்களும், கணவனும் தான் வாழ்க்கை என்ற தத்துவம் மாறி அவர்கள் கற்ற கல்வி நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலைகள் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. வட்டத்திற்குள் நின்றவர்கள் வெளியே வந்து விடச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தடுமாறத் தொடங்குகின்றார்கள். 

கூட்டுக்குள் அடங்காத பறவைகளில் பாய்ச்சல் இங்கே பலருக்கும் பயமுறுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி நான் வாழ்வது என் குழந்தைகளுக்காகவே என்று வாழ்ந்த பெற்றோர்களுக்குப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது. 

பற்றாக்குறை என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பது வயதில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 

வாங்கும் சம்பளம், கற்றுக் கொள்ள முடியாத நுட்பங்கள், விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடல் ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலும் ஏதோவொரு இடத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் பற்றாக்குறை இருந்தே தான் தீரும். முழுமை என்பது மனதோடு சம்மந்தப்பட்டது என்றாலும் அது உணர முடியாத சூழல் தான் நம்மைக் கொண்டு செலுத்துகின்றது. வெறும் வார்த்தைகளும், வாசிப்புகளும் இவற்றைத் தந்து விடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது. 

நிஜமென்பதும் எதார்த்தமென்பது சூட்றெரிக்கும். நேசித்தவற்றை விட்டு விலக முடியாமலும் நிஜமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அனுதினமும் தடுமாறும் சமயங்களில் உடன் இருக்கும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாதபட்சத்தில் நொடிக்கு நொடி மரண அவஸ்தை தான். 

ஆண், பெண்ணின் அங்கீகாரமென்பதைத் திருமணம் என்று இங்குள்ள சமூகச் சூழல் தீர்மானித்து வைத்துள்ளது. அதுவே அவரவர் வாழ்வில் குழந்தைகளின் வரவுக்குப் பிறகே முழுமையடைவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. 

தவமாய்த் தவமிருந்தேன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தருபவர்கள் பிறக்கும் குழந்தைகளை வரம் தந்த சாமி போலப் பார்க்கப்படுகின்றார்கள். மகன்களை அடைந்தவர்களின் பார்வையும் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நோக்கமும் சமூகத்தால் வேறு விதமாகப் புரிய வைக்கப்படுகின்றது. எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் அழுத்தங்கள் என்பது வாழும் வரைக்கும் படிப்படியாக அவரவர் மனதிற்குள் புகுத்தப்படுகின்றது. இதனையே இங்குள்ள கலாச்சாரம், கடமை என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. 

குழந்தைகள் வந்தவுடன் அங்கீகாரம். வளரத் தொடங்கும் போது மகிழ்ச்சி, வாழ்க்கையைத் தொடங்கும் போது கடமை நிறைவேறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு சமயத்திலும் இல்லாத தலைகீரிடத்தில் ஒரு பூ சூட்டப்படுகின்றது. பாசம் சேர்த்துப் பக்குவமாகச் சமைத்த சமையல் பலசமயம் குலைந்து போகின்ற சமயத்தில் மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையிருமாகத் துடித்துவிடுகின்றது. 

இவையெல்லாமே ஐம்பது வயதில் தாக்கும். தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றதோ இல்லையோ சமூகத்தால் கேலியாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்தவர்களின் பார்வையில் நாம் எப்படியிருக்க வேண்டும்? என்று உருவாக்கியிருந்த கட்டுமானம் உடைபடும் போது அணை உடைந்து வெளியே தாறுமாறாகப் பாயும் வெள்ளநீர் போல ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. 

நாம் வாழுமிடம் பொறுத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நாமே ஒவ்வொரு பெயர்களைக் கொடுத்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மகள், மகனின் கல்வி, குடும்ப வாழ்க்கையென்பது அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற நோக்கமே இன்னமும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாக உள்ளது. இது பெற்றோர்களின் உளவியலைச் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்துகின்றது. 

இந்தச் சமயங்களில் தான் அப்பாக்களின் ஆதிக்கம் நொறுங்கிப் போய் விடுகின்றது. அம்மாக்களின் வாழ்க்கையென்பது நான் வளர்த்த விதம் தவறா? என்று கூனிக்குறுகி விட வைக்கின்றது. 

இன்றைய சூழலில் கடினமானதும், சவாலானதும், ஒருவரை சாதனையாளராகக் காட்டுவதும் அவரவர் குழந்தைகள் வளர்ப்பு தான் என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும். 

பணம் சேர்த்து வாழ்வில் வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் குடும்பம் முதல் மிகச் சாதாரணக் குடும்பம் வரைக்கும் இன்று நீக்கமற நிறைந்திருப்பதும் சந்ததிகள் சார்ந்த பிரச்சனைகள் தான். தகுதியான வேலை கிடைக்கவில்லை என்பதில் தொடங்குகின்றது. தரமான தொடர்பில்லாமல் தரங்கெட்டு அலைகின்றானே என்பது வரைக்கும் சொல்லித் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இங்கே ஏராளமுண்டு. இதற்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் சுனாமியை உருவாக்கிக் கொண்டிருப்பது காதல் என்ற வார்த்தை. 

நம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் வென்றவர்கள் தோற்றவர்கள் நம் முன் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள். சந்தர்ப்பங்கள் மீண்டும் சரியாக அமைந்தால் மீண்டு வரக்கூடிய வாய்ப்பதிகம். மீண்டு வந்தவர்களும் நம் முன்னால் ஏராளனமான பேர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். 

ஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது? 

நாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும் நம் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் ஒப்பு நோக்கி விடுவோம். 

காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது? 

தொடர்வோம்....... 50 வயதினிலே 5

Saturday, May 05, 2018

50 வயதினிலே -5

காலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று என் நினைவில் வந்து போகும். மாறும் உடல் இயக்கச் செயல்பாடுகள் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுமா? அல்லது அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலை இயக்கும் மனத்தின் கட்டுப்பாடு மாற்றிவிடுமா? பதிலை தேடிக் கொண்டிருந்த எனக்கு இரண்டு விதமாகப் பதில் கிடைத்தது. 

வாரம் தோறும் தினமும் 16 முதல் 17 மணி நேரம் உழைத்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை. 

ஒவ்வொரு நாளும் உற்சாகமாகத்தான் வருகின்றார்கள். அவர்களின் வேலை செய்யும் திறன் மட்டுமே பாதிக்கப்படுகின்றது. செய்யும் வேலையில் தெளிவு என்பது மாறி ஏனோதானோ என்று பணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பேற்றுகின்றனர். இதையே மற்றொரு விதமாக ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பு அமைந்தது. அன்றொரு நாள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் மூலம் வேறொரு விடை கிடைத்தது. 

தீராத ஒற்றைவலியுடன் இருக்கும் அவரின் இந்தப் பிரச்சனை அலுவலகம் முழுவதும் அறிந்ததே. ஆனால் இதற்கான காரணத்தை வேறொருவர் மூலம் கண்டறிந்த போது அவர் குடும்ப வாழ்க்கை கொடுக்கும் அழுத்தம் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணவரின் வருமானத்தை மீறி ஆசைப்படும் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத அழுத்தங்கள் உள்ளே சேர்ந்து சேர்ந்து ஒவ்வொரு நோய்களாக உருவாகத் தொடங்கியுள்ளது. 

அவரின் அலுவலகப் பாரங்கள் என்பது அடுத்த நாள் தீர்ந்து விடக்கூடியது. ஆனால் மனம் சார்ந்த தீராப் பிரச்சனைகள் ஆரோக்கியத்தைக் காவு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் மனம் என்பது ஆரோக்கியத்தில் இங்கே முக்கியப் பங்காற்றுகின்றது என்பதனை உணர்ந்த நாளது. 

பொருத்தங்கள் பார்த்து, கௌரவம் சேர்த்து மனங்களைச் சேர்த்து வைத்து உருவாக்கப்படும் திருமணத்தின் வரையறை இன்று மாறியுள்ளது. இரண்டு பக்கத்திலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. விருப்பங்களின் நோக்கங்கள் முற்றிலும் திசை மாறியுள்ளது. திருமணத்திற்கான வயதும் மாறியுள்ளது. இவை அனைத்தும் வாழும் சூழலே தீர்மானிக்கின்றது. இவற்றைப் போலவே குடும்ப வாழ்க்கையின் தற்போதைய இலக்கணம் முழுமையாகப் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. 

சரியான வயதில் திருமணம் முடிந்திருந்தாலும், முப்பது வயதுக்குள் பரஸ்பரம் உடல் இச்சைகள் தீர்ந்து விட உடனே வந்து சேரும் குழந்தைகள் மூலம் கவலைகளும், கடமைகளும் வரவேற்கின்றது. பேச்சு குறைகின்றது. வாழ்க்கை தடம் மாறுகின்றது. இருவரின் உள்ளார்ந்த விருப்பங்கள் வெளியே நிற்கின்றது. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கடைசி வரையிலும் சேர்ந்தே வாழ்ந்து ஆக வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் அழுத்தி வைக்கின்றது. 

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது வீட்டில் யாரோ ஒருவர் தான் பேசும்படி வாழ்க்கை மாறுகின்றது. அது பெரும்பாலும் மனைவியாகத்தான் இருக்கின்றார்கள். கணவனின் எண்ணமும் நோக்கமும் வேறு பாதையில் செல்கின்றது. இது பணம் சார்ந்ததாகவும், தனிப்பட்ட மனம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. 

இங்கிருந்து தான் ஆணின் மனம் ஊர் மேயத் தொடங்குகின்றது. 

இந்தச் சமயத்தில் தான் இருவரிடத்திலும் ஒரே ஆதங்கம் வெளிவரும். 

"நான் யாருக்காக இந்த அளவு பாடுபடுறேன்?"

"நான் யார்?" "நீ யார்?" என்ற ஈகோ விஸ்வரூபம் எடுக்கின்றது. 

உள்ளார்ந்த புரிதலின்றிப் பேசத் தொடங்கும் போதே வாதங்கள் திசைமாறி வாக்குவாதத்தில் சென்று நிற்கும். இனியும் ஏன் நான் பேச வேண்டும்? என்ற எண்ணம் ஒருவனுக்குத் தோன்றும் போது நாய் போல நாற்பது வயதில் மனம் அலைபாயத் தொடங்கும். கட்டுப்பாடு என்ற வார்த்தையை மதிப்பவர்கள் உள்ளும் புறமும் உருவாகும் இழப்புகளை மீறி தங்கள் கடமையை உணர்கின்றனர். எல்லைக் கோடுகளைத் தாண்டி வாழ நினைப்பவர்களின் வாழ்க்கை அதற்குப் பிறகு முட்டுச் சந்தில் போய் நிற்பதைத் தவிர்க்க இயலாது. 

இவை இங்கே சகல வசதிகளுடன் இருப்பவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு என்று பாரபட்சமில்லாமல் நடக்கும் நிகழ்விது. மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் கணவனும், மனைவியும் பேசாமல் வாழும் கொடுமை, காமத்தை நோயாக மாற்றிக் கொண்டவர்கள் என்று சுட்டிக் காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உண்டு. 

"மூன்று மணிக்கு முழிப்பு வந்து விடும். வாரத்தில் ஏதோவொரு நாள் தான் வீட்டில் முழுமையாகத் தங்கும் நிலையில் அருகே படுத்திருக்கும் மனைவியை எழுப்பிப் பேசத் தொடங்கினால் பத்து நிமிடத்தில் வாக்குவாதமாக மாறி நிற்கும். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு வந்து நிற்கும்." 

தொழில் வாழ்க்கையில் வென்று கோடீஸ்வராக இருக்கும் முதலாளி சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. 

தொழில் உலகில் கடைபிடிக்கும் அதிகாரம் என்பது தான் நம் அடையாளம் என்பதனை கருதிக் கொள்பவர்கள் அதனைக் குடும்ப வாழ்க்கையிலும் காட்ட முற்படும் போது குடும்பத்தில் குதுகலம் மறைந்து விடுகின்றது. உருவாகும் காயங்கள் அனைத்தும் மனதை ஆற்ற முடியாத ரணங்களாக மாற்றி விடுகின்றது. பணக்கார தோரணையில் கௌரவத்தைச் சுமந்து கொண்டு வாழும் வரைக்கும் வெளியே சொல்ல முடியாத சோகங்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து முடிக்க வேண்டியது தான். 

பதவி உயரும் போது வார்த்தைகளைக் குறைத்துக் கொள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அதை விட முக்கியம் வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசும் போது அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் வார்த்தைகளும் மனதளவில் நிரந்தர விலகலை கணவன் மனைவி இருவரிடமும் உருவாக்கி விடுகின்றது. இதற்கு மேல் தான் இரண்டு பக்கமும் நடிப்பு வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது. 

"என்ன செய்தாய்? என்ன இழந்தாய்? என்ன சாதித்தாய்? உனக்கு என்ன தகுதியிருக்கு? ஏன் இவை உன்னால் முடியவில்லை?" 

இந்தப் பஞ்ச சீல கொள்கைகள் குடும்ப வாழ்க்கையைப் பணால் ஆக்கும். நம் குடும்பத்துக்குள் அன்றாடம் நடக்கும் உரையாடலாக மாறும் போது குடும்ப வாழ்க்கை தெருவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். மேலே சொன்ன ஐந்துக்கும் அடிப்படை பணம். ஐந்திலும் நுழைய மறுப்பது மனம். கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. 

"குழந்தைகளுக்காகத் தான் பொறுத்துக்கிட்டு வாழ்றேன். குழந்தைகள் இல்லைன்னா எங்கேயாவது போய்த் தொலைந்திருப்பேன்." 

இரண்டு பக்க வசனமும் வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையைத் தொழில் போல நினைத்து வாழ விரும்புபவர்களின் லாப நட்ட கணக்கு இது. 

பணம் படைத்தவர்கள், அதிகாரம், புகழ் அடைந்தவர்கள் என்று எவராயினும் குடும்பக் கோட்டுக்குள் வந்து நிற்பவர்கள் சிலவற்றை இழந்து தான் சிலவற்றைப் பெற முடியும். வெளியே நம் முகம் ஒவ்வொருவர் பார்வையிலும் வெவ்வேறு விதமாகத் தெரியும். ஆனால் நம்முடைய மொத்த முகத்தையும் ஒன்றாக அறிந்தவர் மனைவி மட்டுமே. நம் ராஜதந்திரங்கள் எல்லாச் சமயங்களிலும் வென்றிடாது. தயக்கத்தை உடைத்து மயக்கமின்றிச் சரணாகதி தத்துவம் தான் உதவும். 

வீட்டில் நம் பத்து வயது குழந்தை கேட்கும் கேள்வியென்பது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்து விடலாமா? என்று எண்ணத் தோன்றும். ஏன் கேட்டாய்? என்று கேட்க முடியாது. புரிய வைக்கலாம். ஆனால் நம் நிலையைப் புரிந்தும், புரியாதது போலக் கேட்கும் மனைவியின் வார்த்தைகளைத் தனியாகப் பிரித்துப் பார்த்து நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். 

விழித்திருக்கும் மனநிலையில் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தனித்திருக்கத் தான் வேண்டும். இவை இரண்டையும் கடந்து வந்தாலும் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டில் கோபத்தில் சாப்பிட முடியாத நேரத்தில் பசித்திரு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் எல்லாவற்றுக்கும் காலத்திடம் மருந்து உண்டு. காத்திருக்கத்தான் வேண்டும். 

வாழ்ந்த காலம் முழுக்கக் கிடைக்காத அங்கீகாரம், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடலுறுப்புகள் என்பதோடு, நமக்கு வாழ்நாளில் கிடைத்தது வெறும் அனுபவங்கள் மட்டுமே என்று எண்ணம் கொண்டவரா நீங்கள்? இறக்கும் வரையிலும் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி உங்கள் எதிர்கால விருப்பங்களுக்குத் திறமை இருந்தும் காலம் ஒத்துழைக்கவில்லை என்ற ஆதங்கம் கொண்டவரா நீங்கள்? 

உங்களுக்குத் தெரிந்த பிரபல்யங்கள், தொழிலதிபர்களின் இறுதி நாட்களில் அவர்கள் பேசியுள்ள வார்த்தைகளை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். அவை உங்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதல்ல. காலம் உங்களுக்கு வழங்கிய வட்டத்திற்குள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கணக்கீடு செய்யாது? எப்படிப் பயன்படுத்திக் கொண்டாய் என்று தீர்மானம் செய்யும். 

அந்தத் தீர்மானம் தான் உங்கள் அடுத்தத் தலைமுறைக்குப் பாடமாக மாற்றப்படுகின்றது. இவர் வாழ்க்கை எப்போது முடியும்? என்று குடும்ப உறுப்பினர்களே காத்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர் எதனை வென்றவர்? எதில் தோற்றவர்? 

என் சுதந்திரம் எனக்கு முக்கியம் என்று கருதி கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்கள். என் ஆதிக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று கடைசி வரைக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத ஆண்கள் என்று பரஸ்பரம் உருவாக்கிக் கொண்ட யுத்தத்திற்கான பெயர் இல்வாழ்க்கை எனில் வாழ்க்கை முழுக்க எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை எப்படிச் சொல்வீர்கள்? 

"வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" என்று வாழ்ந்தவர்கள் அவரவர் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றது கொலையும், தற்கொலைகளும் மட்டுமே. மனதில் காயத்தை உருவாக்கி விட்டுச் சென்ற அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் சந்ததிகளுக்கானது மட்டுமல்ல. சந்ததிகள் சேர்ந்து வாழப்போகும் சமூகத்திற்கும் உரியது. சிலவற்றை மாற்ற முடியும். சிலரை எந்நாளும் மாற்றவே முடியாது என்பதனை உணர்ந்திருந்தால் உங்களின் ஐம்பது வயதில் கூட இளைஞரைப் போலவே மனதாலும் உடலாலும் வாழமுடியும் என்ற எளிய தத்துவத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்தியிருக்கும். 

நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம். 

வென்றோம். தோற்றுவிட்டோம் என்று. 

அவரவருக்கான வேஷம் கலையும் நேரம் வரும் போது கூட்டம் கலைந்து விடும். வெட்ட வெளி ஆகாயம் போல எல்லாமே மாறி விடும். இயற்கையோடு கலந்தார் என்று வாசிக்கும் போது அதுவரையிலும் செயற்கையாய் செய்த செய்கைகள் அனைத்தும் சிரிப்பாய் சிரிக்கும். 

நம் வாழ்க்கையும் அடுத்தவரின் சிரிப்புக்குப் பலியாக வேண்டுமா? 

தொடர்வோம்....... 

Thursday, May 03, 2018

50 வயதினிலே - 4


"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்குள் சிரிப்பு வந்தது. 

வெளிப்படையாகச் சிரித்தால் அது விபரீதமாகப் பார்க்கப்படும் என்பதால் "மருத்துவரை போய்ப் பாருங்கள்" என்றேன். 

நான் மனதிற்குள் சிரித்ததற்குக் காரணம் அலுவலகம் முடிந்தவுடன் தினந்தோறும் மது அருந்தாமல் அவர் வீட்டுக்குச் செல்வதில்லை. ஒரு முறை அவர் வயதைச் சுட்டிக்காட்டி "கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்" என்ற போது நாய் போலக் குறைத்து நக்கல் செய்தவருக்கு இப்போது ஆரோக்கியம் குறித்துக் கவலை வந்துள்ளது. 

இவர் மட்டுமல்ல. வேறெந்த பழக்கமும் இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியம் குறித்து அதிக ஆர்வம் வந்துள்ளது. அது பயமாகவும் மாறியுள்ளது. இயற்கை உணவுகள் குறித்த அக்கறை அதிகமாகவே உள்ளது. நாம் வாழும் சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் சாதகமாக மாற்ற முடியுமா? என்று அவசரம் எல்லோருக்கும் உருவாகியுள்ளது. எது உடனடி நிவாரணம்? என்பதில் தொடங்குகின்றது. ஒவ்வொன்றாக முயற்சித்துக் கடைசியில் யோகா, தியான வகுப்புகள் வரைக்கும் பணம் இருப்பவர்களால் கூட்டம் நிரம்பி வழிகின்றது. 

காலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த வளர்ச்சி இப்போது தலைகீழ் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இனி நம்மால் செயற்கையை விட்டு வெளியே வர முடியாது. 

மனிதர்களின் கோணல் புத்தி வித்தியாசமானது மட்டுமல்ல. ஆச்சரியமானதும் கூட. எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தை வெட்டிய வீட்டுக்காரம்மா சொன்ன காரணம் "தினமும் கூட்டி முடிப்பதற்குள் இடுப்பு கழன்று விடுதுப்பா?" என்றார். 

மனிதர்களின் நிறை குறைகளை மீறி இயற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் சமநிலையை உருவாக்கி விடுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்க முன்னால் உருவான நோய்கள் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. இப்போது சற்று வித்தியாசம். எல்லாவற்றையும் கையாள அறிவியல் கற்றுக் கொடுத்து விட்டது. 

இப்போது நோய்கள் மரணத்தைத் தருவதில்லை. ஆயுளை நீட்டித்து ஒவ்வொருவரையும் நுகர்வோராக மாற்றியுள்ளது. உயிருடன் இருக்கும் வரைக்கும் மருந்து தேவை. செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி தந்த பரிசு. 

மற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது. அதற்குப் பெயர் இயற்கைப் பொருட்கள். 

"இயற்கை முறையிலானது", "ஹெர்பல்" என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இன்றைய வியாபார உலகில் கோடிகளைக் கொட்டும் மந்திர வார்த்தைகள். 

இயற்கைக்கு மாறிவிட்டால் ஆயுள் கூடும் என்று நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் இந்தக் காலம். ஆனால் நடைமுறை எதார்த்தம் எப்படியுள்ளது? 

காலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு படுக்கச் செல்லும் போது பயன்படுத்தும் மெத்தை வரைக்கும் ஒரு நாளில் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களில் என்பது சதவிகிதமென்பது செயற்கை தான். இது தான் இப்போதைய வாழ்க்கை. 

இங்கே மாற்றம் என்பதை நாம் வாழும் சமூகச் சூழல் தான் தீர்மானிக்கின்றது. 

முன்பு உங்களுக்கு என்ன தேவை? என்பதனை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தீர்மானித்தார்கள். இப்போது விளம்பரங்கள் அதனைத் தீர்மானிக்கின்றது. முன்பு உடலுக்கான தளர்ச்சி என்பது வயோதிகத்தின் தொடர்ச்சியாக இருந்தது. இப்போது கருவில் தொடங்குகின்றது. வாலிப பருவத்தில் தொடர்கின்றது. வாழத் தொடங்கும் வயதில் செயல்படாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றது. இதற்குள் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது தான் முக்கியம். 

நன்றாகக் கவனித்துப் பாருங்கள். ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படுபவர்கள் அனைவரும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றார்கள். ஐம்பது வயதில் உள்ளவர்கள் அலறத் தொடங்குகின்றார்கள். அறுபது வயதென்றால் விட்டேற்றி மனப்பான்மை வந்து விடுகின்றது. இனி இருந்து என்ன ஆகப் போகுது என்ற தத்துவம் கூடவே வந்து விடும். 

சர்க்கரை நோய் என்பது அது நோயா? இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா? யாருக்கும் தெரியாது? இன்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறிப் பல காரணங்கள் சொல்கின்றனர். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்குப் பின்னால் இருப்பது பல நூறு மில்லியன் டாலர் வர்த்தகம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

சமீபகாலமாக முப்பது வயதில் இருப்பவர்களுக்குச் சர்க்கரை என்பதனைக் கேள்விப்படும் போது அது இனிப்பாக இல்லை. மாத்திரை, மேலும் மாத்திரை என்று சுழலுக்குள் சிக்கித் தவிப்பவர்கள் கோடான கோடி பேர்கள். நிரந்தரத் தீர்வு இல்லை என்று தெரிந்தும் இந்த மாயச் சுழல் நம்மைச் சுழல வைத்துக் கொண்டேயிருக்கின்றது. 

அவரவர் பணிபுரியும் வேலைக்கான சூழல் என்பது முற்றிலும் மாறிப் போனதால் 24 மணி நேரமென்பது முழுமையாக உழைப்பதற்கான நேரமாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தைச் சுருங்கிய உலகின் வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் வயோதிகத்தில் சுருக்கமடையும் நம் உறுப்புகள் வெகு விரைவில் அதன் தரத்தை இழப்பதால் தகுதியான ஆரோக்கியத்தைத் தடம் மாறித்தான் நாம் பெற வேண்டியதாக உள்ளது. 

நான் வாங்கும் சம்பளம் லட்சம் என்று சொல்பவர்களின் வாழ்க்கை ஆயுளும் நாற்பதுக்குள் முடிந்து விடுகின்றது. அதிகபட்சம் ஐம்பதைத் தொடும் போதே இரத்தம் அழுத்தம், ஆஞ்சியோகிராம், பை பாஸ் சர்ஜரி, சிறுநீரகக் கோளாறு, முட்டு வலி, முதுகு வலி, தீராத ஒற்றைத்தலைவலி என்று நீண்ட பட்டியலிட்டு காட்ட வேண்டிய நோய்கள் பயமுறுத்துகின்றது. 

நாம் வாழ்க்கையைத் தொடங்கும் போது நமக்கு என்ன தேவை என்பதனை நம் மனம் தீர்மானிக்கின்றது. காலத்தின் பிற்பகுதியில் உனக்கு இது தான் தேவை என்பதனை உடல் ஆரோக்கியம் அப்பட்டமாக உணர்த்துகின்றது. 

இந்த வயதில் உள்ளவர்களுடன் உரையாடத் தொடங்கும் போதே இப்படித்தான் தொடங்கும். 

"என்னப்பா ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இருக்கா?" கடைசியில் இப்படி முடியும்? "லிக்யூட் கேஸ் எவ்வளவு வைத்திருக்கின்றாய்? "

இந்த இரண்டுக்குள் அடக்கப்படும் வார்த்தைகளுக்குள் சொல்லப்படும் பதில் மூலம் உங்களுக்கான பாதி மரியாதை தீர்மானிக்கப்படுகின்றது. 

மீதி மரியாதையும் வேண்டு மென்றால் "சொந்த வீடு தானே?" என்பதில் முடிந்து விடும். 

வரும் வருமானத்திற்குண்டான வாழ்க்கை என்பது குறித்து இங்கே யாருக்கும் அக்கறையில்லை. இவற்றையெல்லாம் அடைந்து விட்டாயா? என்பதில் தான் மொத்த வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் இங்கே தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் இதைப் பற்றியே பேசிப்பேசி உங்களை மாற்றி மனரீதியான உளைச்சலை உருவாக்கும் போது உங்களை இழந்து விட்டால் அதற்குப் பிறகு உருவாவது தான் நரகம். 

ஒப்பீடு தொடங்கும். உள்ளம் தடுமாறும். நாம் தோற்று விட்டோமோ? என்று எண்ணத் தோன்றும். ஏன் நம்மால் முடியவில்லை? என்று நடு ராத்திரியில் தூக்கமில்லாமல் தவிக்கத் தோன்றும். அடுத்த வருடமாவது அதிர்ஷ்டம் நம் வீட்டை எட்டிப் பார்க்குமா? என்று நிஜத்தை உணர மறுக்கும். 

இதுவொரு தொடர் சங்கிலி. யாரோ ஒருவர் ஒரு முனையில் பற்ற வைத்துப் போய் விடுவார். அது ஒவ்வொரு கண்ணியாக வெடித்துச் சிதறி உங்கள் உள்ளத்தையும் அதன் மூலம் ஆரோக்கியத்தையும் காவு வாங்கி விடும். 

விரும்பியதை அடையாத போது உள்ளம் தவிக்கும் தவிப்பென்பது உங்களின் அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கெடுக்கும். நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும் நிச்சயமாய் இது கிடைக்குமா? என்ற ஏக்கத்தைத் தொலைக்க முடியாமலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆரோக்கியம் எப்படி நிலையாக இருக்கும்? 

இப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பெரும்பான்மையினர் இன்று பெரிய மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளராக இருக்கின்றனர். பலரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 

அனைவரும் நம்மை இயக்கும் அளவிற்கு வாழ்க்கை வாழ்ந்தால் அதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல. அடுத்தவர்களின் அறிவுரை என்பது காற்று போலானது. தூசிகளையும், துர்நாற்றங்களையும் காற்று சுமந்து வரும் போது நாம் நாசியைப் பொத்திக் கொண்டால் தவறில்லை. மற்றவர்களின் புலம்பல் மொழிகளைப் பொருட்படுத்த தேவையில்லை. துணிச்சல் என்பது தேவை. செயல்பாட்டில் மட்டுமல்ல தேர்ந்தெடுப்பதிலும். 

இங்குத் தான் நம் மனம் விழித்துக் கொள்ள வேண்டும். 

நமக்கான பக்குவம் செயல்பட வேண்டும் நம் பக்குவம் என்பது வயதோடு சம்மந்தப்பட்டது என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எதையும் துச்சமாக மதிக்கும் இருபது வயது. மோதித்தான் பார்த்து விடுவோம் என்ற முப்பது வயது. நம்மால் முடியுமா? என்று யோசிக்க வைக்கும் நாற்பது வயதைத்தாண்டி ஐம்பது அருகே வந்து நிற்கும் போது பலருக்கும் மூச்சு வாங்கத் தொடங்குகின்றது. நாம் இதைச் செய்யத்தான் வேண்டுமா? என்று யோசிக்க வைக்கின்றது. காரணம் குடும்பம். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் ஆடம்பரத் தேவைகளின் வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளாதவர்களின் வாழ்க்கையென்பது வாழும் போதே நரகத்தின் பாதையில் பயணிக்கின்றார்கள் என்று அர்த்தம். 

தற்போதைய நடுத்தரவர்க்கத்தின் முக்கியக் கவலையும் மிகப் பெரிய சுமையும் குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகள். இது முன்பு இருந்ததில்லை. கல்லூரி வரைக்கும் எந்தக் குடும்பமும் குதியாட்டம் போட்டதில்லை. சென்றார்கள். வந்தார்கள் என்று தான் இருந்தது. தனியார் முன்னுக்கு வர அரசாங்கம் பின்னுக்குச் செல்ல இங்கு ஐம்பது வயதைக் கடக்கும் ஒவ்வொருவரும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு குழந்தைகளின் கல்விக்குச் செலவளிக்கத் தனியாகச் சம்பாரிக்க வேண்டியதாக உள்ளது. 

இத்துடன் மாதம் தோறும் செலவளிக்க வேண்டிய மருத்துவச் செலவு என்று பட்டியலில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் என்ன மிஞ்சும்? 

முன்பு வானொலியுடன் மின்விசிறியும் அதிகபட்சமாக இருந்த வீடுகளின் முகம் இப்போது மாறிவிட்டது. வசதிகள் தான் வாழ்க்கை என்று ஒவ்வொரு நவீன கருவிகளும் வீட்டுக்குள் வந்து விட்டது. இவையெல்லாம் வாங்க எவ்வளவு சம்பாரித்தாலும் போதவில்லை என்கிற நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஆசைகள் தவறில்லை. 

நம் விருப்பங்கள் முக்கியம். ஆனால் நம் தேவைக்கு மீறிய ஆசைகளும், விருப்பங்களும் நம் வயதுக்கு மீறிய வயோதிகத்தை, ஆரோக்கிய இழப்பை நம் முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றது என்பது உணர்ந்து இருப்போமா? 

நம்முடன் கவலைகள் இருக்கட்டும். அதை ஒரு கலையாக வைத்திருங்கள். ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப் பார்த்தீர்கள் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ விடாமல் செய்யும் மோகினி போல உங்களுடன் உறவாடத் தொடங்கும். 

வாழ்ந்த வாழ்க்கைக்குரிய அங்கீகாரம் தேவை. அதை அனுபவிக்கவும் வேண்டும் என்றால் எது வேண்டுமோ அதை மட்டும் கவலையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தீர்மானமாக மாற்றிக் கொள்ளுங்கள். 

தொடர்வோம்.......

Monday, April 30, 2018

50 வயதினிலே - 3

இங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல்லாம் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் பேசக்கூடியதாக இருக்கும். வயது, பதவி, பணம், அதிகாரம் போன்ற முக்கியக் காரணிகள் இருந்தாலும் காலாவதி என்ற சொல் நிச்சயம் தன் வலிமையைக் காட்டவே செய்யும். எல்லையைக் கடக்கும் போது இங்கு எல்லாமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

மோடி வளர அத்வானி தான் காரணம். இது உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால் காலம் அவரை இன்று எங்கே நிறுத்தியுள்ளது. மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பல பதவிகள் பார்த்து அனுபவம் இருந்தாலும் எடப்பாடிக்குக் காலம் வழங்கிய வாய்ப்பு ஸ்டாலினுக்கு வழங்கவில்லையே?

சமூகத்தையே மாற்றக்கூடியவர்களுக்கே இந்தக் கதியென்றால் தனி மனிதன் வாழ்க்கை எம்மாத்திரம்? அதிர்ஷ்டம், சூட்சமம், விதி, எல்லையின் முடிவு என்ற ஏதோவொரு வார்த்தையும், அந்த வார்த்தைக்குள் அடங்கிய தத்துவத்தை அவரவர் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எடுத்துக் கொள்ள முடியும்.

சிலவற்றுக்கு காரணங்களை கண்டு கொள்ள முடியாது. காரணங்களை சொல்லவும் தெரியாது. அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நீங்கள் வாசித்த, சந்தித்த பிரபல்யங்களின் ஒவ்வொரு கால கட்ட வாரிசுகளின் வாழ்க்கையைப் பாருங்கள். ஓராயிரம் ஆச்சரியங்களையும் கேள்விகளும் உங்களுக்குள் தோன்றக்கூடும். நமக்குக் கிடைக்காத அனைத்தும் இவர்களுக்குக் கிடைக்கும். எதையும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே கைக்கெட்டும் தூரம் தான். ஆனாலும் எத்தனை பேர்களால் அவரவர் தந்தை, தாய்ப் பெற்றிருந்த புகழின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடிந்துள்ளது? சமூகம் பாராட்டும் வெற்றியாளர்களாக வர முடிகின்றது?

நாடே கொண்டாடிய நடிகர் திலகத்தின் மகனுக்கு விளம்பரப்படங்களில் நடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்று வாழ்க்கை அமைந்துள்ளது. மொழியை வைத்தே வளர்ந்த கலைஞரின் மகனுக்கு வாழ்வின் இறுதி வரைக்கும் வார்த்தைகளே வசப்படவில்லையே?.

எதிர்மறை நியாயங்கள் தான் இங்கே நேர்மறை எண்ணங்களுக்கு ஆதாரம். ஏன் இப்படி? என்று உங்கள் எண்ணத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையென்பது இனிதான வாழ்க்கை என்பதனை உணர முடியும்? நம் பார்வை முக்கியம்? பார்வையில் உணர்தல் அதைவிட முக்கியம்.

மேடு என்பது ஒரு வழிப்பாதை. சிலர் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும். சென்றவர்கள் அருகில் மற்றவர்கள் நிற்க முடியாத அளவிற்குக் குறுகலாக இருக்கும். ஆனால் பள்ளம் என்பது பாதையின் தொடக்கமாக இருக்கும். நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளம் என்பது குழி அல்ல. அதுவொரு வழி. இதுபோன்ற சமயங்களில் உங்கள் மனம் ஆசானாக இருக்க வேண்டும்.

ஆசான் என்பவர் அறிவுரை சொல்பவர் அல்ல. வழிகாட்டியாக இருப்பவர். இந்தச் சமயங்களில் தான் காலாவதி என்ற வார்த்தையை உணர்ந்திருக்க வேண்டும். காரணம் நாம் காலாவதியாகி விட்டோம் என்பதனை குறிப்பிட்ட சில சம்பவங்கள் நமக்கு உணர்த்தும்.

திருமண வாழ்க்கை தொடங்கி வைக்கும். குழந்தைகள் வளரும் போது புரிய வைக்கும். மகள்கள் மகன்களாக மாறி கல்லூரிக்கு நுழையும் போது காலமும் வயதும் நீ காலாவதியாகக்கூடிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளாய் என்பதனை அறிவுறுத்தும்.

புரிந்து கொண்டவர்கள் எப்படித் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள்?

விவாதத்தைத் தவிர்த்து விடு. விதண்டாவாதம் என்பது எப்போதும் கூடாது. ஆக்ரோஷம் அறவே கூடாது. மன உளைச்சல் உருவாக்கும் காட்சிகளை உள்வாங்க முடியாத போது உனக்கு நீயே திரையிட்டுக் கொள். இனியும் சூரத்தனம் தேவையில்லை. மொக்கைத்தனம் தவறில்லை. அமைதிப்படுத்த ஆன்மீகத்தை நாடு. அது தேவையில்லை எனில் உன்னை உனக்கே உணர்த்தும் வாசிப்பை அதிகப்படுத்து. உரையாடலைக் குறைத்து விடு.

உள்ளர்த்தம் தரும் வார்த்தைகளில் கவனம் செலுத்து. மொத்தத்தில் உன் ஆரோக்கியத்தை அடுத்தவர் அழிக்க அனுமதிக்காதே. நீயே உருவாக்கிக் கொள்ளாதே. ஒரு நாளில் ஒரு நேரம் பட்டினி கிடப்பது தவறல்ல. ஆனால் நாள் முழுக்கப் பட்டினியால் மட்டுமே வந்த நோயைப் போக்க முடியும் என்ற நிலையில் வாழ்க்கை அமைவது கொடுமை என்பதனை உணரும் வயது நிச்சயம் ஐம்பதுக்கு அருகே வந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மனைவியின் விருப்பங்கள் ஒரு பக்கம். வளரும் குழந்தைகளின் தேவைகள் மறுபக்கம் என்று காலம் நடத்துப் பாடங்களில் ஒவ்வொரு மாதமும் மர்மக்கதை போலவே இருக்கும். பக்கங்கள் நகர நகரப் படபடப்பு மாறி பயம் உருவாகத் தொடங்கும். காலம் வாசிக்கச் சொல்லும் கதையின் தலைப்புப் பணம்.

எந்த அறிவுரைக்குள்ளும் அடக்க முடியாததும் எவ்விதக் கொள்கைக்குள் அடங்காததும் பணம் என்ற மூன்றெழுத்து. எப்படிச் சேர்ந்தது? என்று சேர்ந்தவர்களுக்கும் விவரிக்கத் தெரியாது. ஏன் இழந்தோம்? என்பதனை இழந்த பின்பு கூட விவரிக்கத் தெரியாதவர்களால் சூழ்ந்த உலகத்திற்குள் நாமும் இருக்கின்றோம். ஆனால் இந்த பணத்தைத் தேடி தான் நாமும் நம்மை இழந்து கொண்டிருக்கின்றோம்.

ஐம்பது வயதில் நம்மை அதிகம் தாக்கும் பிரச்சனைகள் இரண்டு. ஒன்று பாதுகாப்பின்மை. மற்றொன்று பயம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய தோழர்கள். நம் குடும்பத்துக்கு யார் பாதுகாப்பு? நாம் இல்லாது போனால் என்னவாகும்? என்ற கேள்விகளை அதிகம் எதிர்கொள்வது இந்த வயதில் தான். இப்போது தான் பயம் என்ற பூதம் நம் முன்னால் பிரமாண்டாக நிற்கின்றது.

பயமென்பது எளிதில் பரவக்கூடியது. அனுமதிப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. கவலையே ஆறுதல் என்று கருதிக் கொள்பவர்களால் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்க முடியாது. நம்மையறியாமல் நம்முள் பரவசமாய்ப் பரவும் கவலைகள் தான் ஆரோக்கியத்தை விலையாகக் கேட்கின்றது.

தேவையானது தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காமல் கவலைப்படுவது என்பது சிந்திக்க வைப்பது என்று நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவலைகள் என்பது காலாவதியாகிப் போன காசோலை. அதனை வைத்து இருப்பவர்களுக்கும் பிரயோஜனமில்லை. கொடுத்துச் சென்றவர்களும் அதனைக் கண்டு கொள்வதுமில்லை.

அதுவொரு காகிதம். நாளாகச் செல்லரித்துப் போய்விடும். உண்மை தான். நம் உள்ளுறுப்புகள் செல்லரிக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுவதே இந்தக் கவலைகள் தான். அப்போது தான் நம் உள்ளம் குறித்து, உள்ளத்திற்குள் உள்ள நேர்மையைக் குறித்து யோசிக்கத் தொடங்குகின்றோம்.

நம்மிடம் உள்ள நேர்மையைப் பற்றி அப்போது கவலைப்படுபவர்கள் நம் முன்னால் யாரும் இருக்கப் போவதில்லை.

அதுவரையிலும் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த நேர்மை என்ற வார்த்தையே காலாவதியாகி விடும். நம் வாழ்க்கையின் நீள அகலத்தையும் சந்திக்கின்ற ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பொருளாக எடுத்துக் கொள்ளத் தொடங்குகின்றார்கள். சிலர் அறிவுரையை அள்ளிக் கொடுத்து விட்டு அகன்று விடுவர். பலர் வீழ்ந்த பள்ளத்தை எட்டிப் பார்த்து மனதிற்குள் கணக்கீடு செய்து கொள்வர்.

தனி மனித வாழ்வின் வளர்ச்சி என்பதற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்ற கல்விக்குரிய மரியாதை அதன் மூலம் கிடைக்கும் வேலை மூலம் தான் ஒவ்வொருவருக்கும் இங்கே அங்கீகாரம் கிடைக்கின்றது. ஆனால் மக்கள் தொகைப் பெருக பெருக எல்லாவற்றின் மதிப்பு மாறிக் கொண்டேயிருக்க ஒவ்வொன்றின் கொள்கையும் மாறிவிடுகின்றது.

எவையெல்லாம் நீதிக்குப் புறம்பானதாகச் சொல்லப்பட்டதோ அவையெல்லாம் இங்கே அவரவர் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கின்றது. ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றம் பெறுகின்றனர். ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அப்போது தான் வயது காரணமாகக் காட்டப்படுகின்றது. திறமையில் உள்ள நம்பிக்கையின்மை குறித்துப் பேசப்படுகின்றது. இனியாவது அடங்கிப் போய்விடு என்று அறிவுரை அடுத்தடுத்துத் தாக்குகின்றது. மொத்தத்தில் உள்ளார்ந்த கருத்துக்களை உள்ளே வைத்துக் கொள். பெரும்பான்மையினர் சொல்லும் பாதையில் நடக்கப் பழகிக் கொள் என்பதான வாழ்க்கை தத்துவம் உருவாகின்றது.

தன்னை மாற்றிக் கொள்ள முடியாதவர்களின் அன்றாட வாழ்க்கை என்பது திண்டாட்டமாகப் போய்விடுகின்றது. குடும்ப வாழ்க்கையில் தனி மனிதனின் மனதுக்கும் உடலுக்கும் உண்மையான போராட்டமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. பிறகெப்படி பக்குவத்தைப் பற்றிப் பேச முடியும்?

கடன் கழுத்தை நெறிக்கின்றது. சேமிப்பு அறவே இல்லை. பணிபுரியும் வேலையோ உத்தரவாதம் இல்லை. அடுத்த மாதம் வேலை இருந்தால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி. இல்லையேல் உருவாகும் பிரச்சனைகள் ஏராளம். அடிப்படைத் தேவைகளுக்கே இங்கே அல்லாட வேண்டியுள்ளது. இதையும் மீறி பக்குவநிலையை எட்ட முடியுமா?

இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர்கள் நிரந்தரமற்று தான் வாழ்கின்றார்கள். சொந்த வீடு இல்லாமல், நிரந்த வேலையில்லாமல், படித்த கல்விக்குத் தொடர்பில்லாத ஏதோவொரு வேலையில், வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் வாழ்கின்றார்கள். அப்படியென்றால் இப்போது இங்கே நாம் பார்க்கும் வளர்ச்சியென்பது?

வளர்ச்சி என்பதனை நாம் தவறாகவே புரிந்து வைத்துள்ளோம். தொழில் நகர வளர்ச்சி என்பது வளரும் ஜனத்தொகை கொண்ட நாட்டுக்கும் அவசியம் தேவை என்பதனை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டாலும் இங்கு நடக்கும் வளர்ச்சி என்பது வேறு விதமாக உள்ளது. ஒரு தொழிற்சாலை பத்தாயிரம் பேர்களுக்கு நேரிடையாக மறைமுகமாக வேலை அளித்து அவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தாலும் சுற்றிலும் உள்ள ஒரு லட்சம் மக்களின் ஆரோக்கியத்தை விலை பேசும் காரியத்தைக் கண ஜோராகச் செய்கின்றது.

மேற்கித்திய சமூகத்தில் நடக்கும் தொழிற் புரட்சி என்பது வேறு. இங்கே லஞ்சம் உழலில் திளைத்து குறிப்பிட்ட அதிகார வர்க்கம் மட்டும் சுகமாக வாழ உருவாக்கப்படும் செயல்பாடுகள் என்பது வேறு. நாம் தான் உணர்ந்து கொள்வதே இல்லை. அன்றாட வாழ்க்கைக்கே ஆளாய் பறக்கும் மனிதனுக்குத் தன் ஆரோக்கியத்தை விலை வைத்துத் தான் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது அவன் எந்தப் பக்குவத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

இதனால் தான் இனி இங்கே வாழ முடியாது. நன்றாகப் படி. தேர்வில் முந்து. வெளிநாட்டுக்கு ஓடி விடு என்ற இடைவிடாத சூட்சம பாடத்தைப் பள்ளிக்கூடத்தில் இருந்தே போதிக்கப்படுகின்றது. போக முடியாதவர்களுக்குப் போக்கிடம் எங்கே? இங்கே தான் தொடங்க வேண்டும்? இங்கே தான் தொடர வேண்டும்.

வாழவே முடியாத நாடல்ல. தேவைக்கும் விருப்பத்திற்கும் உண்டான இடைவெளியை உணர்ந்து கொண்டாலே போதுமானது. அடிப்படைத் தேவைகளை மீறி ஆடம்பரத் தேவைகளை எதிர்பார்த்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த நாடல்ல, எந்த நாடும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

கடல் கடந்து, தனிமையை உறவாக்கி, உள்ளம் வேறு. உடம்பு வேறாகப் பிழைப்பதற்காக மட்டுமே வாழும் வெளிநாட்டு வாசிகளிடம் கேட்டுப் பாருங்கள்? பணம் இருந்தும் அடைய முடியாத அனைத்தையும் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டு காட்டுவார்கள்.

ஆரோக்கியத்தை விலையாகக் கொடுத்து அடுத்தத் தலைமுறைக்கு ஏணியாக இருந்தவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதும் உங்களாலும் என்னாலும் உணரப்படாத கண்ணீர் கறை படிந்தே இருக்கும். அது அவர்களின் சொந்த நாட்டை விட்டுப் பிரித்து வைத்திருக்கும் கடலில் உள்ள உப்பை விட அதிகமாகவே இருக்கும்.

நம் தேவைகள் அதிகமாக நாம் தொலைக்க வேண்டியதும் அதிகமாகவே இருக்கும் என்பதனை உங்களால் உங்கள் குடும்பத்துக்கே புரிய வைக்க முடியாது? பிறகெப்படி நீங்கள் வாழும் சமூகத்திற்குப் புரிய வைக்க முடியும்?

புரிந்தவர்கள் இரண்டு விதங்களில் வாழ்கின்றார்கள்.

மற்றவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. அதனால் கடைசி வரையிலும் புழுங்குவதே இல்லை. இந்தப் பக்குவத்தை அடைய முடிந்தவர்கள் வாழும் போதே சொர்க்கத்தைக் கண்டவர்கள்.

தொடர்வோம்....... 
Thursday, April 26, 2018

50 வயதினிலே - 2

ஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா? உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்டும் வெளியுலகத் தொடர்பின்றி உணர்வின்றி உள்ளும் புறமும் ஒன்றும் அறியாது ஓய்வெடுக்க முடிகின்றதா? ஆழ்ந்த உறக்கத்தின் முடிவில் அதிகாலையில் இயல்பாகவே குறிப்பிட்ட நேரத்தில் எழ முடிகின்றதா? உங்களின் உண்மையான ஆரோக்கியத்தை உடல் கழிவுகள் சிக்கலின்றி நகர்வதை வைத்து கண்டு கொள்ள முடிகின்றதா?. 

அதிகாலை வேளையில் ஆள் ஆரவமில்லா சாலையில் சிங்கம் போலக் கம்பீரமாக நடக்க முடிகின்றதா? கை வீசி நடக்கும் போது உடல் பாகங்கள் வலியில்லாமல் இருக்கின்றதா? நடக்கும் போது உங்களால் சுற்றியுள்ளதை ரசிக்க முடிந்துள்ளதா? இரை தேடிச் செல்லும் பறவைகளைப் பார்த்து உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா? சாலையோர மரங்களில் கூட்டமாக வசிக்கும் பறவைகளின் இரைச்சலை ரசனையுடன் நின்று கவனித்ததுண்டா? பார்க்கும் ஒவ்வொன்றையும் விலகி நின்று பார்க்கும் பழக்கம் உருவாகியுள்ளதா? சாலையில் பார்க்கும் வீடுகள், வாகனங்கள் என் ஒவ்வொன்றும் உங்களுக்குள் உணர்த்தும் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் உருவாகியுள்ளதா? 

பார்வையில் படுகின்ற ஒவ்வொன்றும் எந்தப் பாதிப்பையும் உங்களுக்குள் உருவாக்காமல் இருக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையின் நிலை குறித்த உண்மையான புரிதலை மனம் பெற்றுள்ளதா? நாள் தோறும் உழைக்கும் உழைப்பிற்கும் கிடைக்காத பலனுக்கும் உண்டான சமூக விதிகள் சொல்லும் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துள்ளீர்களா? 

தொழில் உலகத்திற்குத் தேவைப்படாத நேர்மையைக் கட்டிக் கொண்டு வாழும் போது உருவாகும், உருவாக்கப்படும் அரசியலை அங்குலம் அங்குலமாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு நீங்களே குருவாக மாறியிருக்கின்றீர்களா? 

நடைபயிற்சி முடிந்து வீட்டுக்குள் உள்ளே நுழையும் போது நேரம் மறந்து தூங்கும் மனைவி, குழந்தைகளை அவர்கள் நிலையில் நின்று ரசிக்க முடிந்துள்ளதா? முதல் நாள் இரவு குழந்தைகள் படித்த புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்க அதைத் தாண்டிச் சென்று கோபப்படாமல் சிதறிக்கிடக்கும் மற்றவற்றையும் குறிப்பிட்ட இடங்களில் அமைதியாய் அடுக்கி வைத்து விட்டு வாய் விட்டுச் சிரிக்க முடிந்துள்ளதா? 

அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் மனைவி சொல்லும் முதல் நாள் பிரச்சனைகளைத் தொடரும் போட்டுத் தொடங்கும் சமயத்தில் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசனைத் தலைவனையாய் வாழ்ந்ததுண்டா? அலுவலக அரசியலை அங்கேயே விட்டு விட்டுப் பிடித்த பாடலை உரக்கச் சொல்லிக் கொண்டே உலகம் பிறந்தது எனக்காக? என்று வீட்டுக்கு வரும் பழக்கம் உண்டா? அன்றாடம் உருவாகும் அழுத்தங்கள் அனைத்தையும் பிரித்து வைத்து மழுங்காத சிந்தனையைப் பெற்றதுண்டா? 

வாழ்க்கையில் வாசிப்பைத் தொலைக்காமல் இருந்ததுண்டா? வாசிக்கும் ஒவ்வொன்றிலும் எழுதியவரின் பெயரைத் தாண்டி எழுதிய விதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உள்ளே ஆராய்ந்து பார்த்ததுண்டா? போக்குவரத்து நெரிசலில் நசுங்கிச் சென்றாலும் அமைதியான காட்டில் இருக்கும் அமைதியை மனம் பெற்று அவசர மனிதர்களை ஆச்சரியமாகப் பார்க்கும் மனோநிலையைப் பெற்றதுண்டா? சுற்றியுள்ள அனைவரும் மோசம். இதுவொரு குப்பை வாழ்க்கை என்ற உணர்தலை விட்டு வெளியே வந்ததுண்டா? 

இவையெல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் பக்குவம் என்ற நிலையை எட்டியிருப்பீர்கள். பணம் தேவை என்பதற்கும் பணம் மட்டும் தான் தேவை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்று அர்த்தம். உங்கள் ஆரோக்கியத்திற்கு வெளியே உள்ள எந்த மருந்துகளும் தேவையில்லை. நீங்களே மருத்துவராக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளவராக இருப்பீர்கள். 

நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பணத்தைத்தாண்டி உங்களுக்கான உலகத்தில் நீங்கள் உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம். கடவுள் என்ற வார்த்தையைத் தூர வைத்து உங்கள் உள்ளத்தையே கோவிலாக மாற்றியுள்ளீர்கள் என்று அர்த்தம். 

உங்கள் வயது ஐம்பதாக இருக்கலாம். இதனையும் தாண்டி கடந்து வந்து கொண்டு இருப்பவராக இருக்கலாம். ஆன்மீக எண்ணங்கள் என்னை வழி நடத்துகின்றது என்ற நம்பிக்கையுள்ளவராக இருக்கலாம். இல்லை அதையும் மீறி நான் வளர்த்துக் கொண்டுள்ள எண்ணங்களின் வலிமையே என்னை வழிகாட்டும் குருவாக உள்ளது என்று யோசிக்கத் தெரிந்தவராகவும் இருக்கலாம். இங்கு எல்லாமே முக்கியம். ஆனால் எல்லாவற்றையும் விட எண்ணங்கள் முக்கியம். நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கை என்று உணர்வது மிக முக்கியம். 

எண்ணங்களுக்குத் தனிக்குணம் உண்டு. எந்நாளும் நடித்துக் கொண்டேயிருக்க முடியாது. நடித்தாலும் ஏதோவொரு சமயத்தில் காட்டிக் கொடுத்து விடும். எதன் அடிப்படையில் நம்மைக் கவனிக்கின்றார்கள் என்பதனை அவர்களை அறியாமல் காட்டிக் கொடுத்து விடும். நம்மிடம் அளவு கடந்த பணம் இருக்கின்றது என்பதைக் கௌரவமாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்களும் தங்களைத் தனித்தீவாக மாற்றிக் கொள்கின்றார்கள். தாம் சேர்க்க முடியாத பணத்தை நினைத்துக் கொண்டே பலரிடமிருந்து ஒதுங்கி வாழ நினைப்பவர்களும் தீவு போலத்தான் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கின்றார்கள். இரண்டு பேர்களும் தங்களுக்கான வாழ்க்கையைக் கடைசி வரைக்கும் வாழ முடியாதவர்கள். 

மற்ற அனைத்தையும் விடப் பணம் அளவு கடந்த தன்னம்பிக்கையைத் தரவல்லது. அந்த நம்பிக்கை செலுத்தும் பாதை தான் கேள்விக்குரியது. பணத்தை மட்டுமே தகுதியாக நினைத்துக் கொள்பவர்களின் மனவலிமை என்பது ஏதோவொரு சமயத்தில் இறக்கப் பாதையில் இறக்கி விடும். அது பணம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அவர்களின் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கக்கூடும். இதனை உணர்பவர்கள் குறைவு. இவற்றை உணர்ந்தவர்களுக்கு இங்கே எல்லாமே வேடிக்கையாக மாறிவிடும். வேடிக்கையாளனாக வாழத் தெரிந்தவனுக்கு வெயில், மழைக் காலம் என்பது எல்லாமே ஒன்று தான். 

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளப் பழகியிருப்பின் நிச்சயம் எந்தக் கதவும் முடியிருக்காது. ஏதோவொரு வகையில் திறந்தே தான் தீரும். சூழ்நிலையும் மாறலாம். பொறுத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். அதுவரையிலும் வாங்கிய கடனும், இனி வாங்க வேண்டிய கடனும் பாடங்கள் நடத்தலாம். 

அடுத்த மாதம் வேலையில்லையே? மாத சம்பளம் இல்லாவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற அழுத்தம் உங்கள் அசைத்துப் பார்த்தாலும் இவைகள் எதுவும் உங்கள் உள்ளுறுப்புகளைப் பாதிக்காது என்று நிச்சயம் சொல்ல முடியும். கவலைகள் என்பது கற்றுக் கொடுக்கும். தெளிவான பாதையை அடையாளம் காட்டும். ஆனால் அதுவே உங்களை உடல் ரீதியாகப் பாதிப்படையச் செய்தால் அதற்குப் பெயர் உங்கள் திறமையை இதுநாள் வரைக்கும் உணராமல் வாழ்ந்து இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். 

இருபது வயது வரைக்கும் உண்டான வளர்ச்சியென்பது வேறு. நாற்பது வயதுக்கு மேலே நாம் காணும் வளர்ச்சியென்பது வேறுவிதமானது. முதலில் உடல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்குப் பின்னால் வருவதெல்லாம் உள்ளம் சார்ந்ததாகவே இருக்கும். அதுவே இறக்கும் வரையிலும் தொடர்கின்றது. 

உள்ளத்தை அடக்கத் தெரிந்தவனின் உடல் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. ஆரோக்கியம் உள்ளவனுக்குக் காலம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த கூடியதாகவே இருக்கும். அது எழுபது வயதாக இருந்த போதிலும். இதைப் பற்றிச் சொன்னாலே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? என்று நம்மவர்கள் நம் எண்ணத்தை அசைத்துப் பார்க்கக்கூடும்? 

ஐம்பதுக்கு முன்னால் அனுபவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் உடலை சுகப்படுத்துவதாக இருக்கும். ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் பாதிக்கு மேல் வரும் வசதிகளும் வாய்ப்புகளும் உண்டான குணம் வேறு விதமானது. நாம் இறக்கும் வரையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நம்மைச் சார்ந்துள்ள மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அடுத்த கட்ட அமைதியான வாழ்க்கைக்கும் உதவக்கூடியதாக இருக்கும். 

இளமையில் வறுமை என்பதனை விட முதுமையில் வறுமை என்பது தான் கொடூரமாக இருக்கும். உதவி செய்ய ஆட்கள் இல்லாத போது நம்மிடம் இருக்கும் செல்வம் உதவி செய்ய ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால் பக்குவம் இல்லாத நிலையில் வந்து சேர்ந்த செல்வம் நம்மைச் செல்லாக்காசாகத்தான் மாற்றுகின்றது என்பதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள முடியுமே? 

புரிந்தவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தப் புத்திசாலிகளுக்குத் தற்காலச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். அதனால் என்ன? பிழைப்புவாதிகள் உருவாக்கிய சமூகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய போட்டி, பொறாமை, வன்முறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். உருவாக்கிய ஒவ்வொருவரும் கடைசியில் ஏதோவொரு பெரிய மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்து இந்த உடலில் இருந்து என் உயிரைப் பிரித்து விடு இறைவா? என்று கெஞ்சுவதையும் பத்திரிக்கையில் படிக்கத்தானே செய்கின்றோம். 

நம் வாழ்க்கையின் தீர்மானங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொழிலில் வெற்றி, வசதியுடன் கூடிய வாழ்கையில் அனுபவித்தே தீர வேண்டிய வீடு, வாகனங்கள், செல்வாக்கு, அந்தஸ்து, அதிகாரம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லாமே இருந்தாலும் இவற்றைக் கடைசி வரைக்கும் அனுபவிக்க நம் ஆரோக்கியம் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. 

இல்லாவிட்டால் எல்லாமே இருக்கும். ஆனால் அவையனைத்தும் நம் அருகே இருப்பவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கை பார்ப்பவர்களாகக் காலம் மாற்றும். அப்போது உருவாகும் மன அழுத்தம் வேறொரு பாடத்தை நடத்தத் தொடங்கும். 

"நீ வாழ்ந்த வாழ்க்கையென்பது உனக்காக வாழவில்லை. உன்னைச் சார்ந்து இருந்தவர்களுக்காகவே வாழ்ந்து இருக்கின்றாய்?" என்று கண் எதிரே நடக்கும் வித்தியாசமான வாழ்க்கையின் அலோங்கலங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் உருவாகும் மன அழுத்தமென்பது மரணப் பாதையை விரைவு படுத்தும். வெற்றி ராஜ்யத்தை உருவாக்கிய அனைவரும் இந்த இடத்தில் தான் பூஜ்யமாக மாறத் தொடங்குகின்றார்கள். 

பணத்தை மனதோடு சேர்த்து யோசிப்போம். மனம் தான் உடலை இயக்குகின்றது. இயக்குநர் சரியான நபராக இல்லாவிடின் நடிகரின் நடிப்பு நன்றாக இருக்குமா? 

தொடர்வோம்.......Tuesday, April 24, 2018

50 வயதினிலே

"நீங்க எப்படிச் சார் முடிவு செய்ய முடியும்? ஐம்பது வயசாச்சுன்னா சுறுசுறுப்பா வேலை செய்ய முடியாதென்று?" 

என் முன்னால் அமர்ந்திருந்தவர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு நான் பணியில் இருக்கும் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு துறைக்குப் பல நபர்கள் வந்து கொண்டேயிருந்தனர். பல முகங்கள். பல பேச்சுகள். பலவிதமான எதிர்பார்ப்புகள். நிறுவனம் அறிவுறுத்தி இருந்த அடிப்படை விசயங்களை வைத்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் ஆட வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் குறைவான சம்பளத்தில் அதிக உழைப்புக்குத் தயாராக இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும். 

இது போன்ற நேர்முகத்தேர்வில் நிச்சயம் ஒன்றைப் பார்க்க முடியும். நிகழ்கால இளைஞர் சமூகத்தின் மொத்த அவலத்தையும் வருகின்றவர்கள் மூலம் கண்டறிய முடியும். கல்லூரி முடித்து வெளியே வந்தவர்கள் தொடங்கி அறுபது வயது வரைக்கும் உள்ளவர்கள் இன்னமும் வேலை தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். 

இப்போது என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகள் நமக்கு முக்கியம்? 

"எங்களைப் போன்ற அனுபவசாலிகள் இந்த உலகத்திற்குத் தேவையில்லையா?" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.

நேர்முகத் தேர்வில் கடைசி நபராக அவர் உள்ளே வந்தார். தோற்றமும், பேச்சும் அவரின் முதிர்ச்சியை உணர்த்தியது. 

அவரின் வயது 51 கடந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால் வார்த்தைகளில் இளைஞனின் வேகம் இருந்தது. அவர் பேசிய ஐந்து நிமிடத்திலும் நான் குறுக்கிடவே இல்லை. அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தேன். 

நிறுவனம் எதிர்பார்த்த திறமைகள் அவரிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதே அளவுக்குக் கோபமும் ஆதங்கமும் கொப்பளித்து. ஒவ்வொரு இடங்களிலும் அவரைப் புறக்கணித்த வலியின் வேதனைகள் அவர் வார்த்தைகளில் சினமாகச் சீறியது. 

நான் எப்போதும் போல "இறுதிகட்ட தேர்வுக்கு உங்களை அழைப்பார்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தேன். 

அடுத்து சில நாட்கள் அவர் பேசிய ஒவ்வொன்றும் என் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஐம்பது வயது என்பது தொழில் உலகத்தில் ஒதுக்கப்பட வேண்டிய வயதா? வாழ்க்கையில் ஒதுங்கியிருக்க வேண்டிய வயதா? இன்னும் இது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. 

காரணம் என் வயதை ஒற்றிய நபர்களின் வாழ்க்கையை அதிகம் கவனித்துக் கொண்டிருப்பதால் ஐம்பது வயது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. 

விவசாயம் சார்ந்த வேலைகளும், அதற்கு உதவக்கூடியதாக இருந்த துணை வேலைகளும் சமூக மாற்றத்தில் காணாமல் போய்விட்டது. மக்கள் தொகை பெருகவில்லை. பிதுங்கி எல்லையைத்தாண்டி வெளியே வந்து விட்டது. கிராமங்களின் முகம் மாறிவிட்டது. மாறாத இடங்களை அரசாங்கமே கூறு போட்டுக் கொள்கை ரீதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கையும் நெல்லிக்காய் போலச் சிதறிக் கிடக்கின்றது. ஏதோவொரு ஊர். ஏதொவொரு இடமென உலகமே சுருங்கிவிட்டது. 

தற்போது ஐம்பது வயதைத் தொட்டவர்கள் பிறந்த போது இருந்த ஜனத்தொகை என்பது அப்படியே இரட்டிப்பாக மாறியுள்ளது. உருவான, உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்பது வேறொரு தளத்திற்குச் சென்று விட்டது. விரும்பிய வாழ்க்கை கிடைக்காதவர்களும், விருப்பமில்லாமலே வாழும் வாழ்க்கையை வாழ்பவர்களும் தான் இங்கே அதிகம். 

ஆட்கள் தேவையில்லை. எந்திரங்கள் போதும் என்ற சூழலில் உருவான தலைகீழ் மாற்றங்கள் சமூக விதிகளையே புரட்டிப் போட்டு விட்டது. இங்குத் தான் வளர்ச்சியும் அதற்குப் பின்னால் உள்ள மனங்களின் வீழ்ச்சியும் தொடங்கியது. 

அரசு வேலைகள், அரசு சார்ந்த வேலைகள், முறைப்படுத்தப்பட்ட பெரிய தனியார்கள் நிறுவனங்கள், இதனைச் சார்ந்து செயல்படும் துணை நிறுவனங்கள் தாண்டி மீதி இருப்பது சிறு, குறு தொழில்கள் மட்டுமே. சுய பொருளாதாரக் காவு கொடுக்கப்பட்டு விட்டது. தன் சுயத்தையே இழந்து சுகமாய் வாழ்வது எப்படி? என்பதே இங்கே முக்கியமாக மாறியுள்ளது. 

இங்கேயிருந்து தான் பிரச்சனை தொடங்குகின்றது. அந்தப் பிரச்சனை விஸ்ரூபமாக எடுத்து நிற்பது அவரவர் ஐம்பது வயதில் தான் தெரியத் தொடங்குகின்றது. 

அரசு சார்ந்த நிறுவனங்களில் அறுபது வயதுக்கு அருகே வந்தவர்களைச் சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கின்றார்கள். அவரவர் சம்பளத்தில் பிடித்து வைத்துள்ள பாக்கித் தொகையைக் கொடுத்து "இனி உன் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொள்" என்பது போன்று வழியனுப்பி வைக்கின்றார்கள். 

ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் கதி? முறைப்படுத்தப்பட்டு இருக்கும் தனியார் நிறுவனங்கள் என்பது வேறு. சிறு, குறு தொழிற்சாலைகளின் நிர்வாக அமைப்பு என்பது வேறு. சக்கை போலப் பிழியப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் குப்பையாக வெளியே எறியப்படுகின்றார்கள். 

இப்படியொரு நிலைதான் ஆயத்த ஆடைத்துறையும். 

ஆயத்த ஆடைத்துறையில் தேவைப்படும் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தேவைப்படும் தகுதியை குறிப்பிட்டு வயதையும் குறிப்பிடும் பழக்கம் உண்டு. அதிக பட்சம் நாற்பது வயதுக்கு மேல் வேண்டாம் என்று குறிப்பிடுவார்கள். சில விதிவிலக்குள் உண்டு. ஆனால் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொது விதிகள் மாறுவதில்லை. இந்த இடத்தில் தான் நான் வாழும் சமூகத்தின் நிகழ்காலப் போக்கின் கொடுமைகளும் கொடூரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒருவரின் இளமைப் பருவம் எப்போது முடிகின்றது? நாற்பதா? ஐம்பதா? ஏதேனும் வரையறை உண்டா? 

வாழும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லோராலும் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை மீறிச் சேமிக்க முடிவதில்லை. அவரவர் அடிப்படை வாழ்க்கை வாழ்விற்கே சம்பாரிக்கும் பணம் சரியாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் சவாலாகவே உள்ளது? தங்கள் ஓய்வு காலத்திற்கெனச் சேமிக்க முடியாத பணப் பிரச்சனைகளின் காரணமாக மீதி காலமும் உழைத்துத் தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முழுமையாக எழுதிப் புரிந்து வைத்து விட முடியாது. அதுவொரு நரக வாழ்க்கையின் தொடக்கம். 

வயதின் காரணமாகத் திறமை இருந்தாலும் மதிப்பு இருக்காது. மதிப்பு இருந்தாலும் ஆரோக்கியம் ஒத்துழைக்காது. 

இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள் துறை சார்ந்த கல்வித்திறமையை வைத்துக் குறிப்பிட்ட சிலருக்குத் தான் தொழில் வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி கிடைத்து ஏற்றப் பாதை தொடங்குகின்றது. படிப்படியாக வளர்கின்றார்கள். தொடர்ந்து திருமணம், சேமிப்பு, விரும்பிய வீடு வசதிகள் அமைகின்றது. குழந்தைகளின் கல்வியும் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற பாதையையும் உருவாக்க முடிகின்றது. வழிகாட்டியாக இருந்து செயல்பட முடிகின்றது. இந்த நிலைக்கு வரும் போதே ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு அருகே வாழ்க்கை வந்து நிற்கும். 

ஆனால் இங்கே எல்லோருக்கும் இந்த வாழ்க்கை அமைவதில்லை. கல்வி வாழ்க்கை முடிந்து அடுத்த ஐந்து வருடங்களில் சரியான பாதை அமையாதவர்களுக்கும், அமைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கும் கடைசி வரைக்கும் நித்தமும் பிரச்சனை தான். எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுவே சமூகத்தில் கேலிப்பார்வையில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. 

ஐம்பது வயதுக்கு அருகே வந்தவர்களும், கடந்து சென்று கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது?அவர்களின் மனநிலை, வாழ்நிலை அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சூழ்நிலைகள் எப்படி உள்ளது? 

தனி மனித வாழ்க்கையில் பொருளாதாரப் பலம் என்பது முக்கியமானது. இதுவே முதன்மையானது. ஆனால் இதிலும் சில ஆச்சரியங்கள் உண்டு. பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டு தன் வாழ்க்கையில் தேடிக் கொண்டு இருப்பவர்களும், தேவையான பணத்தைச் சேர்த்து அதனைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே வாழ்க்கை என்பதாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்க்கும் போது பல கேள்விகள் என்னுள் எழுகின்றது. 

கடந்த சில மாதங்களாகப் பல தளங்களில் இருந்து அவரவர் வாழ்க்கையின் வாயிலாகக் கவனிக்கும் ஆர்வம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என்று தொடங்கி நான் தினந்தோறும் சந்திக்கும் தொழிலாள வர்க்கம் வரைக்கும் பலரையும் பார்த்தேன். பேசினேன். பலவற்றையும் உள்வாங்கிக் கொண்டேன். 

அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சனையில்லாமல் வாழ்பவர்கள் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் வாழும் விதங்களை அலசி ஆராய முடிந்தது. 

உடல்நலம், மனநலம், மாறும் சிந்தனை மாற்றங்கள், ஆரோக்கியம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்த போது சில ஆச்சரியங்களும் பல அதிர்ச்சிகளும் கிடைத்து. குடும்பமும், சுற்றியுள்ள சமூகமும் கொடுக்கும் அழுத்த விதிகள் தற்போதைய சமூகச் சூழலில் எந்த அளவுக்கு ஐம்பது வயதில் இருப்பவர்களைப் பாதிக்கின்றது? அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றது? வாழ்வுக்கும் சாவுக்கும் உண்டான மெல்லிய கோட்டில் அவர்கள் பயணம் செய்யும் வித்தைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகளில் கூட முதியோர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு இருந்த போதிலும் அவர்கள் மன, உடல் ரீதியாக அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்கா. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் கல்லூரி முடித்து வெளியே வந்த பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் செயல்பாட்டிலும் வெளியே தெரியாத இரத்தக் கசிவு கட்டாயம் இருக்கும். 

ஆனால் இந்தியாவில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மனநலம் குன்றியவர்கள் போன்ற வகையில் வரும் அத்தனைபேர்களும் இங்கே எந்நாளும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையைத் தான் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. 

இதனையும் தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் சந்திக்கும் ஐம்பது வயது பிரச்சனைகள் ஏராளம். 

ஐம்பது வயதென்பது வெறும் வயதல்ல. நாம் அதுவரையிலும் சரியான நேரத்தில் எடுக்காத முடிவுகள் தந்த பரிசு. தன் கொள்கைகள் தான் பெரிது என்று தன்மானத்தைக் கடைப்பிடித்த பிடிவாதம் தந்த வெகுமானம் . மனைவி ஒரு பக்கம். வளரும் குழந்தைகள் மறுபக்கம் என அவர்களின் தேவைகள் தரும் அழுத்தம் என்று மொத்தமாக நம்மை மூழ்கடித்து நமக்குள் உருவாகும் ரசாயன மாற்றங்களில் தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. கடைபிடித்த கொள்கைகள் காற்றில் கலந்து விடுகின்றது. காணும் காட்சிகளில் அதுவரையிலும் பார்த்த பார்வைகளின் எண்ணமும் மாறுகின்றது. நாம் விரும்பிய அனைத்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகின்றது. விரும்பாத அனைத்தும் நம் தோளில் வந்து அமர்ந்து விடுகின்றது. 

மொத்தமாக வாழும் சமூகத்தின் சராசரி பிரதிபலிப்பாக நாமும் மாறத் தொடங்குகின்றோம். 

இதுவரையிலும் இந்தச் சமூகத்துடன் எப்படி வாழ்ந்தோம்? என்பதற்கு இந்தச் சமூகம் தரும் கேள்வித்தாளை அப்போது தான் வாசிக்கத் தொடங்குகின்றோம். சிலருக்கு முதியோர் கல்வித்திட்டம் போன்று தோன்றலாம். பலருக்கு முதிர்ந்த ஞானத்திற்குப் பிறகு உருவாகும் வெற்றியின் தொடக்கப் பாதையாகவும் மாறலாம். 

இந்த வயதில் குறைந்தபட்சம் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் அதுவே பெரிய வரமாக இருக்கும். காரணம் அதுவரையிலும் கற்று வைத்திருந்த பழக்கங்கள், விட முடியாத கொள்கைகள், நிராசை கனவுகள் என ஒவ்வொன்றும் பலருக்கும் முகத்தின் வழியாகத் தெரியும். சிலருக்கு அவரவர் உடல் ஆரோக்கியத்தின் வாயிலாகத் தெரியும். 

இந்த வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இது போன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதனை பலவிதங்களில் யோசித்த போது இந்தத் தொடரை எழுத வேண்டும் என்று தோன்றியது. 

ஐம்பது வயதென்பது சாதிக்க முடியாத வயதா? இல்லை வாழ்நாள் ஆசையின் முடிவா? 

தொடர்வோம்............