Sunday, December 30, 2018

அங்கீகாரமென்பது வெறும் வார்த்தைகள் அல்லஇவர் பெயர் ராதாகிருஷ்ணன். திருப்பூர் முதல் தலைமுறை முதலாளி, செல்வந்தர் போன்ற பல வார்த்தைகளில் இவரைப் பெருமைப்படுத்த முடியும். வயது 70க்கு மேல் இருக்கும். நான் திருப்பூர் குறித்து எழுதிக் கொண்டிருப்பதைத் தொடக்கம் முதல் வாசித்துக் கொண்டிருக்கும் முதன்மை வாசகர். ஒரு மகன் அமெரிக்காவில், ஒரு மகன் ஆஸ்திரேலியாவில் இருக்க இரண்டு இடங்களில் மாறி மாறி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

ஆனால் இன்னமும் வேர்களை மறக்க விரும்பாதவர். கடந்த மூன்று வருடங்களில் நேரிடையாக அறிமுகம் ஆனவர். திருப்பூர் வந்தால் நேரிடையாக வீட்டுக்கு வந்துவிடுவார். தன் மகன்களை விடு கூடுதலாக ஒரு படி மேல் என் மேல் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறை செலுத்தி திக்குமுக்காட வைப்பார். இவர் மனைவியும் அந்த அளவுக்கு என் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர். 

இந்த அளவுக்கு ஒருவர் நம் மேல் மரியாதை வைக்க முடியுமா? என்று இவரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சங்கோஜப்பட்டுள்ளேன். 

+++++

சென்ற வருடமே ஒரு கிண்டில் கருவி வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.  ஆனால் (http://freetamilebooks.com/) நண்பர் சீனிவாசன் மூலம் வருடத்தின் தொடக்கத்தில் அன்பளிப்பாக என்னைத் தேடி வந்தது. மகள் பயன்படுத்துகிறார்.

நாகர்கோவில் அருகே பிறந்து வேலைக்காக இப்போது குவைத்தில் இருக்கும் தம்பி ஜோஸ் என் மின் நூலைப் படித்து, தானும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதத்தொடங்கி இன்று ஒரு புத்தகம் எழுதி இந்த வருடம் வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு மின் நூலை வெளியிட்டு என் கண் எதிரே மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ந்த மரமாக மாறியுள்ளார். இன்னமும் நேரிடையாகச் சந்திக்கவில்லை. தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றார். அவருக்கென்று சிலவிதங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளேன். அவர் மூலம் அங்குள்ள தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக என் எழுத்துக்கு விருது கிடைத்தது. இலங்கையில் நடந்த விழா என்பதால் நேரிடையாகச் செல்ல முடியவில்லை. ஆனால் விருது வீடு வந்து சேர்ந்தது. இது குறித்து இதுவரையிலும் எந்த இடத்தில் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கென்னவோ தான் வைத்திருக்கும் அலைபேசி வாயிலாகவே தமிழ் எழுதக் கற்றுக் கொண்டு இடைவிடாமல் ஃபேஸ்புக்கில் முக்கியமான கட்டுரைகளை, கதைகளை, தொடர்களை எழுதிக் கொண்டிருக்கும் ஜோஸ்க்கு உரிய விருதாகத்தான் இதைப் பார்க்கின்றேன். அவர் சார்பாக நான் வாங்கியுள்ளேன் என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். 

++++++++++++

அப்துல் ரசாக் என்பவர் சென்னையில் இருந்து ஒரு முறை மின் அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றார். பேசினேன். வெள்ளை அடிமைகள் மின் நூலைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். கேட்டுக் கொண்டேன். அவர் குடும்பத்துடன் இறக்குமதி தொழிலில் சென்னை முதல் தமிழகம் முழுக்கப் பல இடங்களில் அலுவலகம் வைத்து முக்கியமான தொழில் முனைவோராக இருப்பவர். சென்னை வந்தால் அவசியம் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அப்படியே மறந்து போய்விட்டேன். தீபாவளிக்கு சில நாள் அவர் மீண்டும் அழைத்து இருந்தார். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒருவர் உங்களைச் சந்திப்பார். எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புரியாமல் போய்ச் சந்தித்த போது தீபாவளி பரிசு என்று கீழே கொடுத்துள்ள பெட்டி வந்து சேர்ந்தது. சுப.வீ தான் பேசும் கூட்டத்தில் ஒவ்வொருமுறையும் ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறுவார். இப்போதைய இளைஞர்கள் எதையும் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைக்காதீர்கள். அவர்களின் தளம் மாறியுள்ளது. அந்தத் தளத்தை நோக்கி நாம் தான் சொல்லவேண்டும் என்பார். காரணம் அப்துல் ரசாக் என்னுடைய மின் நூல்கள் எங்கெங்கு பகிரப்படுகின்றது? அதன் வரவேற்பு என்ன? என்பதனை எனக்கு வாட்ஸ் அனுப்பிய போது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. அவரின் அன்பு விருதுக்கு மேலாகத் தெரிந்தது.

+++++++++

நான் எழுதத் தொடங்கும் போது எப்போதும் போல என்னைக் கவர்ந்த சில எழுத்தாளர்களின் தொடர்பு கிடைத்தது. சிலருடன் நானே தொடர்புகளையும் உருவாக்கிக் கொண்டேன். எழுதத் தொடங்கிய போது எழுதும் விதம் குறித்த சூட்சமம் குறித்துப் பலருடனும் கேட்டுத் தெரிந்துள்ளேன். அப்போது ஒருவர் மற்றொருவருக்குக் கூறிய அறிவுரை என் காதுக்கு வந்தது. 

"மற்ற துறைகளைப் போல எழுத்துத் துறையை எவராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அது சுயமாகவே கற்றுக் கொள்ள வேண்டியது. தவழ்ந்து, நடந்து, ஓடுவது போல உண்டான பயிற்சி" என்பதாக எனக்குப் புரிந்தது. 

கடந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் பல பதிப்பக முதலாளிகளின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. சென்னையில் இருக்கும் ஒரு முதலாளி ஒரு முறை பேச்சுவாக்கில் என்னிடம் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. 

"நாங்கள் இந்தத் துறையில் நுழைந்த போது எழுத்தாளர்களைச் சீண்ட ஆட்களே இருக்காது. ஆனால் மொத்தமாக மாறிவிட்டது. எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்தாளர்களுக்குப் பலவிதங்களில் அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. எல்லோருக்கும் சினிமாதுறையில் உள்ள போட்டி பொறாமைகளைப் பற்றித்தான் தெரிகின்றது. ஆனால் எழுத்துத்துறை அதைவிட மோசமானது. ஒரு எழுத்தாளரின் புத்தகம் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் சூழல் தமிழகத்தில் உருவானால் நிச்சயம் இந்தத்துறையில் தான் அதிகமான க்ரைம் ரேட் நடக்கும். அதனால் நீ எப்போதும் விலகியே இரு" என்றார். 

அகங்காரத்தைச் சுமந்து வாழ்பவர்கள் என்று பலரையும் சந்தித்துள்ளேன். இவனைப் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களின் அரிதாரம் பூசிய வாழ்க்கை கொண்டவர்கள் பலரும் இன்னமும் வேடத்தைக் கலைக்காமல் அந்நியன் போலவே சிலர் இருக்கின்றனர். வயது, அனுபவம் என்று எதுவுமே அவர்களுக்கு எந்தப் பாடத்தையும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம். கட்சி ஆதரவு என்ற பெயரில் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் வாழ்பவர்கள் ஏதாவது ஒரு பதவி கிடைத்து விடாதா? என்ற நோக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் போது இன்னமும் என் மனதில் சிங்கமாக இருப்பவர் மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்கள். 

உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக வாழ்ந்தவர். குறிப்பாக எழுதத் தொடங்கியவர்களை மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள எவரையும் உற்சாகப்படுத்துவதில் அவருக்கு ஈடு இணை எவருமே இல்லை.

++++++++


எழுத்தாளர்கள் என்றாலே பரம ஏழைகள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் பாதி உண்மை தான் உள்ளது. சூழல் மாறியுள்ளது. ஆனால் எந்தச் சூழலிலும் ஒரு எழுத்தாளர்கள் மற்றொரு எழுத்தாளரைப் பாரபட்சமில்லாமல் ஆதரிப்பதில்லை. அதிலும் இப்போது குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப்பிழைப்பவர்கள், அதன் மூலம் உலக நாடுகள் சுற்றி தங்களை (மட்டும்) வளமாக்கிக் கொள்பவர்கள் என்று இதே போலப் பல பிரிவுகள் உண்டு. ஆனால் எழுதும் போது பாரதி முதல் பலரையும் சுட்டிக்காட்டி சுடச்சுட அறிவுரைகள் அசால்ட்டாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு எழுத்தாளர்களும் நடிகர்களைப் பார்த்து அவர்களின் வருவாய், புகழைப் பார்த்து பொறாமைப்பட்டு எழுதுவதைப் பார்த்து இருப்பீர்கள். எந்த எழுத்தாளராவது மற்றொரு எழுத்தாளருக்கு  உதவி செய்துள்ளார்கள் என்பதனை எங்கேயாவது படித்து உள்ளீர்களா? மனைவி அரசு வேலையில் இருப்பவர்கள் தொடங்கி, பல எழுத்தாளர்கள் அரசு வேலையில் இருந்து கொண்டு எழுதித்தள்ளியவர்கள், திரைப்படத் துறையில் நேரிடையாக, மறைமுகமாக பணியாற்றி வருமானத்தைப் பெறுபவர் வரைக்கும் பலரும் உண்டு.

மதம், சாதி, கட்சி மூன்றும் மற்ற துறைகளைவிட எழுத்துத்துறையில் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது நான் கடந்து வந்த பாதையில் பார்த்த உண்மை. சமூகம் எங்களை மதிப்பதே இல்லை என்ற இவர்களின் குற்றச்சாட்டு என்பது இவர்களின் அகங்காரத்திற்கு கிடைத்த பரிசு என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

++++++++++

சமீபத்தில் மறைந்த பிரபஞ்சன் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு அப்போலோவில் சேர்க்கப்பட்ட போது மொத்த ஆறு லட்சம் தொகையையும் கட்டியவர் நடிகர் சிவகுமார். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல ஒரு நாளைக்கு அவரைத் தேடி வரும் நபர்களும், கடிதங்களும் அவர்கள் குடும்ப அறக்கட்டளை தவிர்த்து, தனிப்பட்ட முறையில் அவர் செய்து கொண்டிருக்கும் உதவிகள் கணக்கில் அடங்காது. எனக்குத் தெரிந்தே நாலைந்து பெரிய எழுத்தாளர்கள் அவரிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிய ஒருவர் மீண்டும் மீண்டும் இதையே கடைப்பிடிக்கத் தொடங்க அதுவே அவருக்குப் பல சங்கடங்களையும் உருவாக்கியது.

அவர் எங்கேயும் இதைப்பற்றிச் சொல்வதே இல்லை. அமுதவன் போன்றவர்கள் கட்டாயம் இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். பிரபஞ்சன் குறித்து நான் எழுதக் காரணம் ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதிய காரணத்தால் நிச்சயம் இது தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ற காரணத்தால் இங்கே எழுதி வைக்கின்றேன். உதவி செய்தவர்கள் சொல்லாமல் இருப்பது மரபு.  ஆனால் பலன் பெற்றவர்கள் ஒரு நன்றிக்காக எழுதுவது தவறா?

எழுத்தாளர்கள் நடிகர்களாக இருக்கின்றார்கள். நடிகர்கள் தான் உண்மையிலே மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பல உண்மையான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் திரைப்பட வசனம் என்பது இது போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக மிக குறைவு.  காரணம் இவர்களின் அகங்காரம் அந்தத் துறையில் செல்லுபடி ஆகாது. பணத்திற்காக ஓவர் ஆயில் பார்ப்பவர் தான் பலர் உள்ளனர்.  இது தான் நானறிந்த உண்மை.

 +++++++++++

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் நாம் நேசித்துச் செய்யும் ஒரு விசயம் நிச்சயம் காலம் கடந்தும் நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் பலன் சிலருக்கு அவர்கள் வாழும் காலத்தில் கிடைக்கலாம். அல்லது வாழ்க்கை முடிந்த பிறகு கூட வந்து சேரலாம். அது பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கக் கூடிய முக்கிய மனிதர்களின் உதவியாகக்கூட இருக்கக்கூடும். 

குடும்பம், குழந்தைகளின் நல்வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்பதோடு உங்களுக்குப் பிடித்த ஏதோவொன்றின் மூலம் உங்கள் தடங்களை இங்கே பதிந்து விட்டுச் செல்லுங்கள். கண்களுக்குத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர்கள் அப்படிச் செய்து விட்டுப் போனதால் மட்டுமே இன்று நீங்களும் நானும் உரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.

திருப்பூரில் இருந்து கொண்டே திருப்பூர் பற்றிய உள்ளும் புறமும் உள்ள விசயங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதால் பல சங்கடங்களையும் உருவாக்கிய போதும் தொடர்ந்து எழுத்திடவே விரும்புகின்றேன். காரணம் நான் தொலையாமல் இருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் மன அழுத்தமின்றி வாழ்ந்திட முடியும்.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா

Avargal Unmaigal said...

உங்கள் எழுத்துகளை படித்து தங்கள் நேரங்களை ஒதுக்கி உங்கள் புத்தகங்களை கட்டுரைகளை விமர்சனம் செய்வது எல்லாம் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய விருதுகள் அதுதான் எல்லாவற்றையும் விட சிறந்த விருதுகள்

Rathnavel Natarajan said...

அங்கீகாரமென்பது வெறும் வார்த்தைகள் அல்ல - எழுத்துலகம் பற்றிய அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

கொல்லால் எச். ஜோஸ் said...
This comment has been removed by the author.
கொல்லால் எச். ஜோஸ் said...

உங்கள் வெள்ளை அடிமைகள் புத்தகத்தை எப்போது படித்தேனோ அப்போதே உங்கள் எழுத்தின் ரசிகன் ஆகிவிட்டேன். இப்போது நானும் கொஞ்சம் எழுத பழகி இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. உங்கள் எழுத்தின் தரம் பெரிது. உங்கள் உயரமும் பெரிது. உங்களுக்கு தகுதியானது உங்களிடம் வந்து சேர ராமனுக்கு உதவிய அணிலாய் நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சி. வரப்போகும் புதிய ஆண்டில் இன்னும் நீங்கள் நிறைய எங்கள் உள்ளம் நிறைய எழுத நல்வாழ்த்துகள் சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கக் கூடிய முக்கிய மனிதர்களின் உதவியாகக்கூட இருக்கக்கூடும். ///

100% உண்மை...