Friday, December 28, 2018

இங்கே முகங்கள் விற்பனைக்கு உண்டு

இந்த வருடத்தின் முக்கியச் சில குறிப்புகளை மட்டும் இங்கே எழுதி வைத்திட தோன்றுகின்றது. 

"நினைவுக்குறிப்புகளைப் படமாக எடுத்து வைத்துப் பாருங்கள். அது உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். நம்பிக்கையூட்டும்" என்று சென்ற வருடம் இறுதியில் நண்பர் சொன்ன போது சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. 

பயணங்களில், மற்ற நிகழ்விடங்களில் எதிரே காணும் காட்சி சித்திரமாக மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். புகைப்படம் எடுக்கத் தோன்றாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வார்த்தைகளாக மாற்றிக் கொள்வதுண்டு. இந்த வருடம் செல்லுமிடங்களைப் புகைப்படமாக மாற்றும் எண்ணம் உருவானது. 

பத்திரிக்கைளுக்கும், மற்ற ஊடகங்களும் தினந்தோறும் ஏராளமான முகங்களைத் தினந்தோறும் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கின்றது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வெறுக்கும் முகம் என்று ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் உங்கள் எண்ணத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டேயிருக்கின்றது. இது தவிர நீங்கள் பணிபுரியும் சூழல், வாழுமிடம் போன்ற இடங்களில் உள்ள முகங்கள் மறுபக்கம். மொத்தத்தில் உங்களின் உண்மையான முகம் என்பதனை மறந்து எத்தனையோ விதவிதமான முகங்களைத் தான் உங்கள் மனம் நினைவில் வைத்துக் கொள்கிறது. 

சென்ற வருடம் நடந்த நிகழ்வுகளை நாமே மறந்து கடந்து வந்து விடும் மன அழுத்தமான உலகில் நாம் வாழ்ந்தாலும் வலைதளங்கள் ஏதோவொரு வழியில் நமக்கு அதனை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கின்றது. பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அட!, ஆமாம்!. நாம் இப்படியா இருந்தோம்? என்ற முக மாற்றங்கள் நம்மைக் கலவரப்படுத்துகின்றது. கூடிக் கொண்டேயிருக்கும் வயது, நினைவு அடுக்குகளில் இருந்து நம்மைப் புன்னகைக்க வைக்கின்றது. அதன் பொருட்டு இந்த வருடத்தின் பலவிதமான சூழலில் எடுத்த என் முகங்களை இங்கே பொருத்தி வைக்கத் தோன்றியது. மீண்டும் ஒரு சமயத்தில் இதனை வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில். 

எந்த வருடத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் இந்த வருடத்திற்கு உண்டு. ஆனால் அவை அனைத்தும் தொடராக எழுத வேண்டிய விசயமது. உடனே எழுதும் போது அதன் பக்கவிளைவுகளின் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதனை வருகின்ற வருடத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றேன். தமிழகத்தில் வந்து போன புயல்களுக்குப் பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால் அதே போலத் திருப்பூருக்குள் எல்லா மட்டத்திலும் புயல் தாக்கியது. ஆனால் யாரும் இதைப்பற்றிப் பேசவே இல்லை. திருடனுக்குத் தோள் கொட்டியது போல அமைதியாகவே இருந்து விட்டார்கள். இவை எல்லோருடைய வாழ்வையும் திருப்பிப் போட்டது. நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் விற்றார்கள், வாடகைக்கு விட்டார்கள், உள்வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தான் செய்து கொண்டிருந்த அளவை குறைத்துக் கொண்டார்கள். 

பெரிய பதவிகளுக்கு ஆட்களைத் தவிர்த்தார்கள். தரம் என்பதனை மறந்து தவித்தார்கள். பலரும் நிம்மதியிழந்தார்கள். சிலரால் பிரச்சனையின்றி இயங்க முடிந்தது. பலரும் இயங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்கள். இருக்கின்றார்கள். சக்கரம் இடைவிடாமல் சுழன்று கொண்டேயிருக்கின்றது. இதன் முக்கிய விளைவுகள் அடுத்த வருடம் இறுதியில் தெரியும்? 

90 சதவிகிதம் எதிர்மறைகளும் 10 சதவிகிதம் நேர்மறைகளும் நம்மைச்சுற்றிலும் இருக்க இதற்குள் தான் நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. நேர்மை, கை சுத்தமானவன், ஒழுக்கம்,கடின உழைப்பாளி,உதவிடும் உள்ளம் கொண்டவன், அரவணைத்துச் செல்லக்கூடியவன், தியாக மனப்பான்மை கொண்டவன். இந்த வார்த்தைகளுக்கான முழுமையான அர்த்தம் மாறிவிட்டது என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த வார்த்தைகள் போற்றப்படலாம். ஆனால் எவரும் பின்பற்றப்படக்கூடாது என்ற நிலையில் இருக்கும் வார்த்தைகளாக மாற்றம் பெற்றுள்ளது.  மற்றொருவர் நல்லவன் என்பதற்கும் வல்லவன் என்பதற்கும் உண்டான அர்த்தம் புரிந்தால் போதும்.  குழப்பம் வராது என்றார்.

இது போட்டி உலகம். உள்ளூர் போட்டியிலிருந்து இன்று உலகாளவிய போட்டி வரைக்கும் பரந்து விரிந்துள்ளது. போட்டி போடுபவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கை. ஆனால் நம் கொள்கை எந்த இடத்தில் அடி வாங்கும்? ஏன் இப்படி நடந்தது? என்று யோசிப்பதற்கு வாழ்வின் திசையே மாறிவிடும். சிந்தனை முழுக்க வணிக நோக்கம் என்பதனைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிதர்சன உலகத்தையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும். இதன் அடிப்படையில் வருடத்தின் தொடக்கம் தொடங்கியது. 

ஐந்தாவது தலைமுறையைத் தாண்டி முதல் முறையாக டாடா குழுமத்தில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கடந்த ஒரு தமிழர் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் தற்போதைய காலம் வரைக்கும் வாசித்து முடித்த போது திருப்பூர் குறித்து அதிக யோசனை வந்தது. முடிந்தவரைக்கும் அள்ளிக்கோ என்ற இங்குள்ள கட்டமைப்பு கவலையைத் தந்தது. எஸ்கார்ட்ஸ் நிறுவன சேர்மன் நந்தா அவர்களின் சுயசரிதத்தை வாசித்து முடித்துப் போது சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று அவர் கடந்து வந்த பாதையையும், ஆட்சி மாற்றங்களின் போது அவர் சந்தித்த சவால்களையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. 

மூன்றாவது தலைமுறையில் ஒருவர் உருவாக்கிய நிறுவனம் உருக்குலையாமல், நிர்வாக ரீதியாக, லாப ரீதியாக இன்னமும் சந்தையில் இருக்கும் விதத்தை, வித்தைகளையெல்லாம் பார்க்கும் திருப்பூர் சூழல் உறுத்தலாகத் தெரிந்தது.  செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் சிறிய லாபம் மட்டுமே நமக்குச் சொந்தம் என்பதற்கும் முதலீட்டில் உள்ள மொத்த பணமும் நாம் அனுபவிப்பதற்கே என்ற இங்குள்ள நடைமுறைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்று சந்தையில் நிற்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசாங்க ஊழியர்கள் போலக் கடைசி வரை நிலையாக இருப்பதும், பலர் ஓய்வு பெற்ற போதும் பணியாற்றிய நிறுவனத்திற்கு வேறொரு வகையில் உதவிடும் வகையில் தங்கள் சொந்த பொருளாதாரத்தைச் செழிப்பாக வைத்திருப்பதையும் படித்த போது தீர்க்கதரிசனம் என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.  இன்றைய சூழலில் திருப்பூரில் வட இந்திய இளையஞர்கள் ஐந்து லட்சம் இருக்கின்றார்கள்.  

தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் துடைத்து எறியப்பட்டுள்ளனர். பாதை மாறியுள்ளனர்.  வேறு துறைக்கு மாறியுள்ளனர். நம்பகத் தன்மையில்லாத நிர்வாக அமைப்பும், நம்ப முடியாத தொழிலாளர்களின் மனோபாவம் இரட்டை தண்டவாளம் போலவே இன்றும் சென்று கொண்டிருப்பதன் தாக்கம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தில் மிக அதிக யூ டியூப் வாயிலாகப் பலரின் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்க வாய்ப்பு அமைந்தது. குறிப்பாகச் சுப. வீரபாண்டியன் பேச்சுக்கள், உலக அளவில், இந்திய அளவில் உள்ள தொழில் அதிபர்களின் உரைகள் போன்றவற்றைப் பார்க்க கேட்க முடிந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் உலகத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பில்லாத ஒரு கட்டமைப்பு உருவாகி, உருவாக்கி அதையே சரியென்று நம்பவைத்துப் படித்து வருபவர்களின் சிந்தனை முழுக்கப் பாதுகாப்பு என்று வார்த்தையின் பொருட்டுக் காலம் முழுக்கக் கூலியாகவே வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்துள்ளது. 

முகம் மட்டுமே அரசியல் மற்றும் நிர்வாகம் என்கிற ரீதியில் உள்ள கட்டமைப்பு உடைபடும் நாள் எந்நாளோ அந்நாளில் உண்மையான திறமைசாலிகள் தங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். வந்து கொண்டிருக்கின்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த மாய உலகத்தை அடியோடு மாற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  அப்போது அரசியல், சமூக, தொழில் உலக மாற்றங்கள் வேறொரு திசையில் பயணிக்கக்கூடும். அப்போது இப்போது புனிதமாக பார்க்கப்படும் பலரின் முகங்கள் காலாவதி ஆனதாக இருக்கக்கூடும்.

7 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

வங்கியில் பணிபுரிந்த நாட்களில் வேறு ஒரு விபரீதமான போக்கையும் தொழில் துவங்குவோரிடத்தில் பார்த்திருக்கிறேன். சொந்த முதலைப் போடாமல் கடன்களிலேயே தொழில் தொடங்குவது! தொழில் அபரிமிதமான லாபம் பார்த்தால் கடன் கொடுத்தவர்களுக்கு வட்டியோடு அசலும் கிடைக்கும். லாபகரமாக இருந்தால் வட்டி மட்டும் குறித்த தேதியில் கட்டிவிடுவார்கள். தொழில்போட்டி , மந்தம் என்று போனால் அசலும் வராது, வட்டியும் பெயராது. ரொம்ப நெருக்கினால் , இருக்கிற சொத்துக்கள் பெண்டுபிள்ளைகள் பெயரில் இருக்கும், தைரியமாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு, முடிந்ததை பார்த்துக் கொள் என்கிறமாதிரி, குத்துக்கல்லாக இருந்துவிடுகிற டைப். இங்கே பெரும்பாலானவர்களுக்குத் தங்களுடைய தொழிலை அடுத்ததலைமுறைக்கு அப்பாலும் கொண்டுபோகவேண்டுமென்கிற உந்துதல் அறவே இருப்பதில்லை.

ஜோதிஜி said...

நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நிறைய விசயங்களை விரிவாக எழுத வேண்டும். அது பலரின் மனோபாவங்களை படம் பிடித்து காட்டும். இடைவெளி விட்டு எழுதுகிறேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

முகம் மட்டுமே அரசியல் மற்றும் நிர்வாகம் என்கிற ரீதியில் உள்ள கட்டமைப்பு உடைபடும் நாள் எந்நாளோ அந்நாளில் உண்மையான திறமைசாலிகள் தங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்

நன்று சொன்னீர் ஐயா

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்து மிகச் சரியான உண்மை...அதுதான்...

கீதா

ஜோதிஜி said...

ஒவ்வொருவரும் அவரவர் தொகுதியில் இருக்கும் நபர்களை சரியாக அடையாளம் கண்டு கட்சி அரசியலைத் தாண்டி தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கட்சித் தலைமை இயல்பாகவே சேவை மனப்பான்மை உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து நிற்பார்கள்.

ஜோதிஜி said...

முதல் முறையாக தன் தகுதிக்கு மீறி அதிக அளவு பணம் பதவி அதிகாரம் பார்த்தவர்களின் வாழ்க்கை முறையை கவனித்துப் பாருங்கள். எழுத நிறைய கிடைக்கும்.